துறவிக்கு ஒரு கேள்வி 1

துறவிக்கு ஒரு கேள்வி

Question for the monk

அஜான் சோணா

Ajahn Sona

* * * * * *

தமிழில் / Translation:

பா. இ. அரசு P. I. Arasu Toronto, Canada

பிழை திருத்தம் / Proof Reading

திரு. பா. கா. இளங்கோ. எம். ஏ., ஈரோடு Mr. P. K. Ilango M. A., Erode

1. சொர்க்கம் புகுதலும் ஞானம் பெறலும். Top

பௌத்தப் பார்வையில் சொர்க்கத்துக்குச் செல்வது அப்படி ஒன்றும் கடினமான செயலன்று. அதற்கு அதிக முயற்சியும் தேவையில்லை. ஒரு நல்ல அறச் செயலைச் செய்தாலும், மிதமான ஒழுக்கத்தை வாழ்க்கையில் கடைப்பிடித்தாலுமே சொர்க்கத்தை அடைந்து விடலாம். அந்த அறச்செயலை நாம் மிக்க மகிழ்வோடும், மன நிறைவோடும் செய்திருக்க வேண்டும். நல்ல நோக்கத்திற்காக நாம் செய்த உதவியை எப்போது நினைத்தாலும் அது நமக்கு மகிழ்ச்சி அளிக்கும். மரணமுறும் நேரத்தில் அந்த நற்செயலின் தோற்றம் மனத்தில் எழுந்து நமது வாழ்வின் அடுத்த கட்டத்தை நிர்ணயிக்க உதவும். மிக எளிதாக அடையக்கூடிய நிலை அது. தியானம் கூடச் செய்ய வேண்டிய அவசியமில்லை. ஓரளவு நன்னடத்தையும், பரந்த மனத்தோடு தயாளச் செயல்களும் செய்தாலே போதும்.

ஞானம் பெறுவதோ வேறு விஷயம். அதற்குக் கடினமான பயிற்சி தேவைப்படும். மேன்மேலும் முயற்சி செய்ய வேண்டியிருக்கும். ஆனால் முன்னர் போதுமான பயிற்சி செய்திருந்தால், அதன் விளைவாக அதுவும் எளிதான செயலாகி விடும். அவ்வளவு கஷ்டமான காரியமாகத் தோன்றாது.

Getting into Heaven Vs. Getting Enlightened

It doesn't take much to get into heaven. Actually from a Buddhist point of view getting into heaven is not a difficult matter. One good gift and a life of moderate virtue. One good gift that you were really so happy to give. A gift to a noble cause that you recall and every time you think about it, it makes you happy. And at the moment of death that happiness, the vision of that gift will arise and that will be the sign or symbol of the next station of your consciousness. Very easy to get to. Doesn't require any meditation. A modest attempt to behave oneself and good hearted generosity.

Enlightenment is a different matter. It is a little more demanding. Can be. Although if you practiced a lot in the past it could be very easy. Doesn't have to be so hard.

2. கேள்வி: நீங்கள் மிகவும் வெறுக்கும் ஐந்து பொருள்கள் எவை? Top

பதில்: உம்... நான் வெறுப்பவை: உருளைக் கிழங்கு சிப்ஸ், கரடிகள், திறமையற்று நடந்து கொள்ளும் பெண் துறவிகள், இஞ்சி மரப்பா...

(சிரிப்பு). இல்லை..இல்லை.. வேடிக்கைக்காகக் கூறினேன்.

மூன்று அடிப்படையான செய்திகளோடு துவங்குவோம்:

எனக்கு வெறுப்பின் மீது விருப்பமில்லை.

எனக்குப் பேராசையின் மீது விருப்பமில்லை.

எனக்கு அறியாமையின் மீது விருப்பமில்லை.

இந்தப் பட்டியலை மேலும் விரிவாக்க வேண்டுமானால், கீழ்க்காணும் ஐந்து ஒழுக்கங்களை மனிதர்கள் மீறுவதில் எனக்கு விருப்பமில்லை: அதாவது,

· பிற உயிர்களை வேண்டுமென்றே கொல்வது.

· மற்றவரின் பொருளைத் திருடுவது.

· மற்றவரோடு உள்ள உறவில் முறை தவறி நடந்து கொள்வது.

· மற்றவரை ஏமாற்றுவது.

· தங்கள் மனத்தைப் படிப்படியாகக் குழப்பி இருள் படியச் செய்வது.

இவற்றை நான் வெறுக்கின்றேன். ஆனால் வெறுப்பு என்பது மிகவும் கடுமையான வார்த்தை. மற்றவர்கள் இவ்வாறு நடந்து கொள்ளும் போது அது என்னைத் துக்கத்தில் ஆழ்த்துவது இல்லை. இத்தகைய விஷயங்களால் பாதிக்கப்படுவதை, நான் எப்போதும் அனுமதிப்பதில்லை. என் மனத்தை எதேனும் உறுத்தினால் அது என்னுடைய பிரச்சனை மட்டுமே. அந்த மன வருத்ததிற்கு நியாயமான காரணம் இருப்பதாக நான் ஏற்றுக் கொள்ள மாட்டேன். (அதாவது என் மனத்தில் எரிச்சல் உண்டானால் அதற்காக எந்தச் சூழ்நிலையிலும் நான் மற்றவர்களைக் குறைகூற மாட்டேன்.) எதற்காகவும் மனச்சஞ்சலம் கொள்வதும், வெறுப்புக் கொள்வதும் இலாபகரமான செயல் அல்ல.

Q: What are the five things that you are most averse to?

Well, I am averse to potato chips, bears, nuns who misbehave, ginger ale ... (laughter) no no...

The five things I am averse to are basically the five violations.

Let us start with the 3 basics. I am averse to hatred. I am averse to greed. I am averse to delusion. If we want to expand the list we could say that I am averse to

transgressions of these five things:

When beings kill other beings intentionally.

When they steal from other beings.

When they violate relationships with other beings.

When they deceive other beings.

And when they systematically cloud their own minds.

I am averse to those. However averse is too strong a word. It doesn't make me suffer when other beings do these things. I refuse to suffer over the matter.

If I ever experience anything that irritates me, then it is my problem. I don't regard that as legitimate. I don't regard any irritability in myself as legitimate. It is not profitable to get upset about anything, averse to anything.

3. எல்லையற்ற பார்வை Top

எனக்கு முன்னர் நிகழ்ந்த பல நிகழ்ச்சிகளின் மேல், வெறுப்பு இருந்தது. இளம் வயதில் வியட்னாம் போர் என்னை மிகவும் பாதித்தது. அமெரிக்காவில் அறுபதுகளில் (அதாவது 1960 திலிருந்து 1969க்குள்) நடைபெற்ற இனவாத அநீதிகள் (கறுப்பு இனத்தினர் மீது நடைபெற்ற அநீதிகள்) என்னைப் பாதித்தன. இரண்டாம் உலகப்போரைப் பற்றிப் படிக்கும் போது அது என்னை மிகவும் பாதித்தது. இந்தக் காரணங்கள் தான் என்னைப் பௌத்தத்தின் பக்கம் திருப்பின. இந்த மனப்பாதிப்புகளிலிருந்து விடுதலை தேடினேன். ஆனால் இது போன்ற அநீதிகள் உலகில் என்றும் முடிவுறப் போவதில்லை. இவற்றிலெல்லாம் பாதிக்கப்பட்டால் நாம் என்றும் பாதிக்கப்படவராகவே இருப்போம். இப்படிப் பாதிக்கப்பட்டுக் கொண்டே வாழ்வது இன்பமான வாழ்வாகத் தெரியவில்லை, இல்லையா?

முதன் முதலில் எனக்குச் சற்று நிவாரணம் அளித்த நிகழ்ச்சி இன்னும் எனது நினைவில் இருக்கிறது. அப்போது டொராண்டோ நகரில் உள்ள ஒரு திபெத்தியக் கோவிலுக்கு, அங்கு தங்கியிருந்த ஒரு திபெத்தியத் துறவியைத் தேடிச் சென்றேன். அது 1977 ஆம் ஆண்டு. அதற்குச் சில நாட்கள் முன்னர் தான் அவரிடம் நான் தியானம் பயிலத் துவங்கியிருந்தேன். அதற்கு முன் பௌத்தப் புத்தகங்களைப் படித்திருந்தும் தியானம் செய்ய வேண்டும் என்ற எண்ணம் எனக்குத் தோன்ற வில்லை. தியானம் செய்து கொண்டிருக்கும் போது அவரிடம் பேச வாய்ப்புக் கிடைத்தது.

அவரிடம் நான் கேட்டேன், "நாம் இங்கு உட்கார்ந்து தியானம் செய்து கொண்டிருக்கும்போது யாராவது இந்தக் கோவிலின் மீது ஒரு குண்டை வீசினால் நம் கதி என்னவாகும்? இந்தத் தியானம் நமக்கு எப்படி உதவப் போகிறது? இப்படித் தியானம் செய்வது சரியா?"

அதற்கு அவர்: "ஓ! இது (நம் மீது குண்டு வீசப்படுவது) ஏற்கனவே பல முறை நிகழ்ந்திருக்கிறது. உலகங்கள் தோன்றி மறைந்திருக்கின்றன. சில சமயம் தீயினாலும் அழிவுற்றிருக்கிறோம்," என்றார். (சிரிப்பு)

அது மிகவும் மாறுபட்ட பார்வை. எனது பார்வைக்கு வரையறை இருந்தது. அவரது பார்வையில் இப்படி (குண்டு, தீ போன்றவற்றால் நிகழும் பாதிப்புகள்) எந்நேரமும் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன. மண்டலங்கள் தோன்றி மறைகின்றன. உலகங்கள் தோன்றி மறைகின்றன. எனவே நாம் தியானம் செய்து ஆழமான பிரச்சனைகளைத் தீர்க்க முயல வேண்டும்.

அது உலகங்கள் பற்றிய மிகவும் மாறுபட்ட பார்வை. ஆழமான, விரிவான பார்வை. எனது பார்வையோ குறுகிய பார்வையாக இருந்தது. அவரது பார்வையில் எல்லைகள் இல்லை. மிகவும் விசாலமான காற்றோட்டமான பார்வை. எல்லையற்ற விரிந்த பார்வை. நல்ல, குளிர்ச்சியான, விசாலமான பார்வை. குறுகிய பார்வையில் உங்கள் முகம் எப்போதும் தீர்க்க முடியாத சமூகப் பிரச்சனைகளில் பதிந்தபடி இருக்கிறது (உடனடிப் பிரச்சனைகளுக்கு அப்பால் நம்மால் பார்க்க முடிவதில்லை). இப்படிக் காரணமில்லாமல் சீழ்ப் பிடித்த புண்களை ஏன் உண்டாக்கிக் கொள்ள வேண்டும்?

கேள்வி: அப்படியென்றால் சமூகப் பிரச்சனைகளைத் தீர்க்க எடுக்கும் முயற்சிகளை நீங்கள் நிராகரிக்கின்றீர்களா?

இல்லை. அப்படித் தேவையில்லாமல் உங்கள் மின்கலத்தின் சக்தியை (battery) வீணடித்து விட வேண்டாம் என்று கூறுகிறேன். அதன் விளைவாக உங்கள் சத்தி தேவையில்லாமல் வீணாவதில்லை. நீங்கள் செய்ய விரும்புவதைச் செய்ய உங்களுக்கு அச்சக்தி தேவைப்படும். ஆனால் சிலசமயம் எவ்வளவு முயன்றாலும் உங்களால் அளவான பாதிப்புக்களையே உண்டாக்க முடியும் என்பதை நீங்கள் நினைவில் கொண்டிருக்க வேண்டும். சரியான காலக்கட்டத்தில் உங்கள் முயற்சிக்குப் பெரும் பயன்தரும் விளைவுகள் கிடைக்கலாம். காந்தியையோ, மார்டின் லூதர் கிங்கையோ (Martin Luther King) நினைக்கும் போது அவர்கள் இவ்வுலகில் மாபெரும் மாற்றங்கள் செய்தவர்களாகத் தோன்றும். ஆனால் அவர்களுக்கு முன்னரே மற்றவர்கள் அதற்காகச் செய்ய வேண்டிய ஏராளமான வேலைகளைச் செய்து முடித்திருந்தனர். பெரும் மாற்றம் உண்டாகப் போகும் நேரத்தில் அவர்கள் தோன்றித் தலைமை ஏற்றார்கள். பின் அவர்களின் செய்கைகள் சரியான காலக்கட்டத்தில் நடைபெற்றதால் அவர்களே அந்த மாபெரும் மாற்றத்தைச் செய்ததாக மக்களுக்குத் தோன்றியது.

Unlimited view

I used to be averse to many things. When I was young I was bothered by the Vietnam war, the racial injustices in America in the sixties. Reading about the WWII bothered me. That was one of the reasons I turned to Buddhism, looking for release from the aggravations, insufferable aggravations you are going to experience as long as you are ... because there is never going to be justice on Earth. we are never going to finish with this stuff. As long as you are going to be bothered by it, you are going to be bothered. And that doesn't seem to be a fun way to live, does it?

One of the first times I got some relief: I remember I was at a Tibetan Buddhist temple in Toronto. A Tibetan monk lived there and I managed to find my way there. That was 1977. I had just started meditating with him. I had been reading books on Buddhism some years before that but it never occurred to me to meditate. I was sitting there meditating with him and we had an opportunity to talk. I asked him, "We are all sitting here on our ass and meditating and all that.

What if they drop a bomb on us. What is this (meditation) going to do for us? Should we be doing this?" And he says.. "Oh! It has happened many times before. Worlds come and go. And by fire sometimes." (laughter)

it was a very different view. My view was limited. From their point of view it happens all the time. Universes come and go. World systems come and go. This way and that way. So we better meditate and solve the deeper problem. Whole different perspective cosmologically. Much wider dimension, perspective. Deeper, wider. I had a limited view. His was an unlimted view. That is a very spacious, airy kind of view to take. Unlimited view is nice and cool and spacious. Limited view is when you have your nose pressed up against these intractable social problems. All you are doing is getting yourself an ulcer for absolutely no reason. Uselessly.

Q: Does that mean you negate the view of social activism?

No, it means your batteries don't get run down - for nothing. You got energies left to do whatever you want. But be prepared to realize that sometimes it has limited effect. If the time is right it can have great effect. Gandhi and Martin Luther King, We may thing that they overturned things. But actually huge amount of work had already been

done and it was right on the edge of transformation any way. They did things at the right time so it seems they caused major change.

4. தீயனவற்றின் வேர்களை வெட்டுவது Top

ஹென்றி டேவிட் தொரோ (Henry David Thoreau) சொன்ன அழகான பொன்மொழியொன்று நினைவிற்கு வருகிறது: "தீயனவற்றின் வேர்களை வெட்டும் ஒவ்வொருவருக்கும் ஈடாக அதன் கிளைகள வெட்ட ஆயிரக்கணக்கானோர் இருக்கின்றனர்."

ஆக மனத்தைப் பக்குவப்படுத்துவதும் (தியானம் செய்வதும்), சுய முன்னேற்றத்தில் ஈடுபடுவதும் தீயனவற்றின் வேர்களை - அதாவது நமது அறியாமையை - வெட்டுவதற்குச் சமம். குழம்பிய மனத்தில் தோன்றும் சில சிக்கல்களை மட்டுமே தீர்க்க முற்படுவது அதன் கிளைகளை வெட்டுவதற்கு ஒப்பாகும். இது புண்ணுக்குத் மருந்துக் கட்டுப் (bandage) போடுவது போல. அதில் தவறு இல்லை, ஆனால் ஆயிரக்கணக்கானோர் அதனைச் செய்து கொண்டிருக்கின்றனர். (உதாரணம்: ஒரு கலவரத்தைத் தடுப்பது வேரை வெட்டுவது போல. கலவரத்தால் பாதிக்கப்பட்டோருக்கு உதவுவது கிளைகளை வெட்டுவது போல.) எத்தனை பேர் வேரை வெட்டுகின்றனர்? நாம் தீயனவற்றின் வேரை நமது மனத்தில் கண்டறிந்த பின் மற்றவர்களும் தங்கள் மனத்தில் உள்ள பிரச்சனையைத் தீர்த்துக் கொள்ள அவர்களைத் தூண்டும் வாய்ப்பு நமக்குக் கிடைக்கிறது. அப்படிச் செய்தால் தீயன உருவாக இருந்த ஆழமான காரணிகளை நாம் வேரோடு களைந்து விடுகிறோம். அவை தோன்றாமல் இருக்க என்ன செய்ய வேண்டும் என்றும் தெரிந்து கொள்கிறோம். உங்கள் சக்திகளை எங்கு, எப்படிப் பயன் படுத்துவது என்பதை நீங்களே முடிவு செய்ய வேண்டும். வேர்களை வெட்டும்போது சிலர், "ஏன் அங்கு வெட்டுகிறாய்? இதோ இந்தக் கிளைகளை வெட்டு," என்று கூறலாம். ஆனால் வேர்களை வெட்டுவதாலேயே இறுதியில் பெரும் பலன் கிடைக்கும்.

Cutting the roots of evil

Remember a beautiful saying by Thoreau (Henry David) - "There are thousands hacking at the branches of evil for everyone that is hacking at the root."

So meditation and self development is to hack at the root of evil. ie. your own ignorance. Hacking at the branches is addressing the symptomatic upwelling of the distorted mind. Handing out bandages, which is fine, but there are thousands of people doing that. How many are addressing the root? Until you address the root of it in yourself then you have an opportunity to encourage others to address the root of it in themselves. Then you are addressing very very deep causal depths of these things. You have to decide where you want to place your energies. If you dig at the roots some people may say, "What are you doing over there? Hack at these branches," the ultimate result will be far greater if you dig at the roots.

5. மாற்றம் Top

நமது உடலையும், பிற உடல்களையும் அகத்திலும், புறத்திலும் கவனிக்கும் போது அவற்றின் நிலையற்ற தன்மையை நாம் அறிந்து கொள்கிறோம். அதனால் நமக்குத் தெளிவு பிறக்கிறது. எல்லாம் மாறிக் கொண்டே இருக்கிறது என்பதையும், எதனையும் பிடித்து வைத்து, நிலையாக நிறுத்த முடியாது என்பதையும் அறியும் போது அனைத்துக் கருத்துக்களின் மீதும் நாம் கொண்டிருக்கும் மனப்போக்கில் மாற்றம் உண்டாகிறது.

உலக வாழ்வில் ஈடுபடுவோர் இன்னும் கனவுலகில் வாழ்வது போலும், கற்பனை உலகில் இருப்பது போலும் தோன்றுகிறது. பொருட்களை, செயல்களைப் பிடித்துப் பாதுகாத்துக் கொள்ள முடியும், உறுதிப் படுத்த முடியும், கைப்பற்ற, அடக்க முடியும் என்றும் தாங்கள் உட்படப் பொருட்களைக் கெட்டியாகவும் நிரந்தரமாகவும் வைத்திருக்க முடியும் என்றும் நினைப்பது ஒரு கற்பனை உலகம்தான். இவற்றையெல்லாம் பிரதிபலிக்கும் போது, இந்த மாயா ஜாலத்தின் மீது இருக்கும் ஆசை, தீவிர மையல், மோகம், வசப்படுத்தப்பட்ட நிலை எல்லாம் சிறுவராக இருந்து பெரியவராக வளரும் போது ஏற்படும் மாற்றம் போல உதிர்ந்து விடுகிறது. சிறு வயதில் நம்மை வசப்படுத்தியவை, இப்போது அப்படி நம்மை வியக்க வைப்பதில்லையல்லவா?

இது நன்மைக்கே.

இதனால் நாம் சோர்வடைந்த மன நிலையில் இருக்கிறோம் என்றோ, சலிப்படைந்த இளைஞர்கள் என்றோ நீங்கள் நினைத்துவிட வேண்டாம். இல்லை. அந்தச் சலிப்படைந்த இளைஞனும் இன்னும் அறியாமையில் தான் உழல்கிறான். இது சுதந்திரமாக இருப்பது சம்பந்தப்பட்டது. மனம் இலேசாகவும் சுதந்திரமாகவும் உள்ளது. சிறையில் அடைக்கப் படவில்லை. மோகப் படவில்லை. மிகவும் மகிழ்ச்சியாகவும், பாரமில்லாமலும் இருக்கிறது. ஆகவே அந்தக் கட்டுக்களிலிருந்து நாம் விடுபட விரும்ப வேண்டும்.

Transformation

You look at the body internally and bodies externally and you see that they are all impermanent and this gives you insight. With the realiztion that everything is changing and you can't grab on to any thing and make it stay then you have experienced a transformation of your attitude to everything all your eager graspings... People who are still involved in the world seem to be dreaming or caught up in fantasy and so forth. The fantasy that they can hold and preserve things, stabilize things, grab things, make things including themselves solid and lasting. As you look at this stuff your desire and infatuation and enchantment with all this magic show around you withers just like growing up from when you were a kid. Stuff that used to grab your attention and wonderful now doesn't do.

And that is not bad.

Don't think of it as depressed or think you are a bored young man. No. The bored young man is still deluded. It is about being free. The mind is light and free. Not trapped not infatuated any more, very happy, very light. We want to undo those fetters.

6. மறுபிறப்பு Top

கேள்வி: இறந்த பின்னர் வாழும் வாழ்க்கையைப் பற்றியும், மறுபிறப்பைப் பற்றியும் பௌத்தம் என்ன கூறுகிறது?

ஒரு வாழ்க்கையைத் தொடர்ந்து அடுத்த வாழ்க்கை, பின் அதற்கடுத்த வாழ்க்கை என்று வாழ்க்கை தொடர்ந்து கொண்டே செல்கிறது. சொல்லப்போனால் இறப்பு என்பதே இல்லை. மறுபிறப்பெடுப்பது என்றால் என்ன? மறுபிறப்பெடுப்பது ‘நீங்கள்’ இல்லை. ஒரு தொடர் ஓட்டமான காரணிகளும், நிலைமைகளுமே. வாழ்க்கை காரண காரியத் தொடர்புள்ள ஒரு தொடர் ஓட்டம். ஓர் இடத்திலிருந்து மறு இடத்திற்கு ஓடும் ஒரு சிற்றாறு போல. மரணமுறும் நேரத்தில் உள்ள மனத்தின் நிலை, அடுத்த வாழ்க்கையின் முதற் கட்டத்தை நிர்ணயிக்கும் காரணியாகிறது. இந்த இரண்டு நிலைகளுக்கும் நடுவே இடைவெளி எதுவும் இல்லை. ஒன்று மற்றதைத் தொடர்கிறது.

இது வாழ்க்கையில் நடைபெறுவது போலவே உள்ளது. இதைப் புரிந்து கொள்வதில் சிரமமில்லை. ஒரு வயதிலிருந்து நூறு வயதுக்குச் செல்லும் நிலையான 'ஒருவர்' இல்லை. ஒரே ஆள் இல்லை. பத்து வயதான சிறுவன் மறைந்து விட்டான். அந்த நிலை முடிந்தது. அந்தப் பத்து வயது நிலையை விட்டால் தானே பதினொரு வயதான சிறுவனாக முடியும், இல்லையா? ‘நீங்கள்’ யார்? அந்த மூன்று வயதுப் பாலகனா அல்லது தாயின் வயிற்றிலிருந்து பிறந்த பச்சைக் குழந்தையா? அல்லது ஐந்தடி உயரமானவரா? யார் உண்மையான ‘நீங்கள்’? இந்த எவரும் ‘நீங்கள்’ இல்லை. இந்த ஒவ்வொரு நிலையும் மற்றொரு நிலைக்குப் பதிலாகத் தோன்றியதே. பத்து வயதானவனால் உண்டாக்கப்பட்ட காரணிகள் தான் பதினோரு வயதானவனை உண்டாக்கின. திடீரென்று மர்மமாகப் பதினொருவயதானவன் உருவாகவில்லை. இவற்றையெல்லாம் ஒரு கெட்டியான, நிலையான பொருளாக நினைக்கக் கூடாது. இது ஒரு ஓட்டம், நகர்வு. அவ்வளவே.

Life after Death

What is the Theravada belief and approach to life after death and reincarnation?

Life after life after life after life. Actually there is no death. What is it that is reborn? Not you. But a steady stream of causes and conditions. A causal flux. Like a stream flowing in a causal way from one place to another. The last moment of the consciousness of this life lays down the conditions for the arising of the first moment of the next life. There is no dead time in between. One thing follows another. Just as it does in this life. Not hard to understand. There is not a one you that goes from being a one year old to a hundred year old. Not the same you. The ten year old is gone. Gone, gone, gone. You have to let go of the ten year old to beச்ome eleven, right? Which one are you? The 3 year old or the one that just comes out of the womb. Or six feet tall? Which one is the real you? None of them is the real you. One thing replaces the other. The conditions set down by the ten year old is the influence that causes the arising of the eleven year old. A sudden mysterious eleven year old does not appear. We don't want to understand them as a solid unit. It is a flow, a motion.

7. மறுபிறப்பு - II Top

கேள்வி: மறுபிறப்பில் (மறுமையில்) எங்கு பிறப்போம் என்பதைக் கன்மம் எவ்வாறு தீர்மானிக்கிறது?

இந்த வாழ்க்கையின் இறுதிக் கணத்தில் தான் அது தீர்மானிக்கப் படுகிறது. இந்த வாழ்க்கையில் என்ன செய்தீர்கள் என்பதை மட்டும் அது பொருத்ததில்லை. மரணமுறும் நேரத்தில் மனத்தில் எழும் வல்லமை உள்ள உணர்வே அடுத்த கட்டத்தை நிர்ணயிக்கிறது. இது வரிசையாகவும் நேராகவும் ஒன்றுக்கொன்று அருகிலும் நிறுத்தி வைக்கப் பட்டிருக்கும் பலகைகளைப் போல. ஒரு பலகை விழும் போது அடுத்த பலகையை அது தட்டி விடுகிறது. முதல் பலகை வேறு, அடுத்த பலகை வேறு. ஆனால் விழும் போது முதல் பலகையின் சக்தி, அடுத்த பலகைக்குச் சென்று விடுகிறது. அதன் விளைவாகவே இரண்டாம் பலகை சாய்ந்தது. அடுத்த கணத்திற்கு முன் உள்ள பலகை அடுத்த பலகை எந்தத் திசையில் செல்லும் என்பதைத் தீர்மாணிக்கிறது.

அடுத்த கணத்தில் மனத்தில் எப்படிப்பட்ட உணர்வு இருக்கும்? அந்த உணர்வு நாம் செய்த ஒரு நற்காரியம், நமக்கு மிகுந்த மகிழ்ச்சி தந்த ஒரு செயலினால் நிர்ணயிக்கப் படலாம். மறுமையை அச்செயல் தீர்மானிக்கலாம். அல்லது நாம் செய்த மனவேதனை தரும் ஒரு தீய காரியமாக இருக்கலாம். அச்சமயத்தில் நாம் செய்த ஒரு தீய காரியம் நமது மனத்தில் வலுப் பெற்றிருக்கலாம். இப்படிப் பட்ட பெரும் நற்செயலோ, தீயசெயலோ நமக்குத் தோன்றா விட்டால், நாம் பழக்கதோஷத்தில் செய்யும் ஏதேனும் ஒரு காரியம் நினைவுக்கு வரலாம்.

(நோயின் காரணமாகவோ ஒரு விபத்தின் காரணமாகவோ) கிட்டத்தட்ட இறந்து பிழைத்தவர் களுக்குச் சில சகுனங்கள் மனத்தில் தோன்றும். அவற்றை நிமித்தம் என்று சொல்வார்கள். சில சமயம் தீயைக் காண்பார்கள் (நரகம்) அல்லது மாளிகைகளைக் காண்பார்கள் (சொர்க்கம்) அல்லது வனங்களைக் காண்பார்கள் (பூவுலகம்). இப்படிப்பட்ட சகுனங்கள் மனத்தில் தோன்றும். இவை எதிர்வரும் பிறப்புக்கான அறிகுறி. சில சமயம் பாலைவனங்களைக் காண்பார்கள். தாகம் என்பது பூதமண்டலம். பூதநிலையில் தீர்க்க முடியாத தாகம் இருக்கும். மாளிகைகள் சொர்க்கத்தைக் குறிக்கும். ஏனென்றால் அவை கட்டப் பட்டவை. உங்கள் வாழ்க்கையை நல்ல விதத்தில் அழகாகக் கட்டி இருக்கின்றீர்கள். உங்கள் வாழ்க்கைதான் மாளிகை. மனித மண்டலம் இயற்கைக்கு ஒப்ப இருக்கும். எனவே வனங்கள் சகுனத்தில் தோன்றினால் மறுமை இந்தப் பூவுலகில் இருக்கும் என்று பொருள் கொள்ளலாம். கனவுகளைப்போல இந்தச் சகுனங்களும் பல உருவெடுக்கலாம்.

புத்தர் இந்த மன உணர்விற்கு ஒரு உவமானம் தந்தார்:

"துறவிகளே, இந்தக் கல்லை எடுத்துத் தண்ணீரின் மீது வைத்து, "கல்லே மித, மித," என்று சொல்லுகிறேன் என்று வைத்துக் கொள்ளுங்கள். பின் அதனைக் கையிலிருந்து விட்டு விட்டால் என்னவாகும்?

அது மூழ்கி விடும்.

பின் ஓர் எண்ணெய் நிறைந்த கூஜாவை நீரின் அடியில் வைத்துப் பின் அந்தக் கூஜாவை உடைத்து விடுகிறேன் என்று வைத்துக் கொள்ளுங்கள். அந்த எண்ணெய் என்ன வாகும்?

அது நீரின் மேற்பரப்புக்கு மிதந்து வந்து விடும்."

இவை மன உணர்வின் இரண்டு வகை. ஒன்று பாரமான உணர்வு. நீங்கள் எவ்வளவுதான் மிதக்க வேண்டும் என்று விரும்பினாலும் அது கல்லைப் போல மூழ்கிவிடும். எண்ணெய் மன உணர்வுக்கு ஒரு உவமானம். கூஜா உடலுக்கு உவமானம். சுற்றியுள்ள பூதங்களைவிட அது இலகுவாக இருந்தால் அது மேலுலகத்திற்கு மிதந்து சென்று விடும். உணர்வு, இருட்டாகவும் பாரமாகவும் இருந்தால் அது கீழ் உலகத்தை நோக்கி அமிழ்ந்து மூழ்கிவிடும். இதுவே மன உணர்வின் தன்மை. அது இயற்கையாகச் செல்லக் கூடிய இடம் நோக்கிச் சென்று விடுகிறது.

எனவே இலேசாக இருங்கள். மனத்தில் பாரம் வேண்டாம்.

Karma and rebirth

How does karma determine which realm we may find ourselves, the next time around?

The determination is made at the last moment of this life. It is not made by what you did in this life. It is the dominant consciousness at the time of death that sets up the next domino in he line that falls down. You lineup the dominoes and they fall along. It is the last one before the next moment that determines the direction of the next domino. What will be the content of that consciousness? The content could be determined by one single incident of enormous joy and good incident that can determine your next birth. Or one single bad thing that appears in the consciousness, a weighty negative act that overwhelms consciousness at that time. If there is no heavy positive or negative action in ones life then the next level will be habitual - positive or negative. That will take the place.

People who have near death experience have visions or signs or nimitha. Sometimes they see fire (hell) or mansions (heaven) or forests (human) appearing before them. They see visions. This is the nimitha sign of the next realm coming up. Appearing before them. Sometime they see deserts. Thirst is the ghost realm. Ghostly condition is a terrible thirst that cannot be fulfilled. The mansion is a sign of heaven. Because it is constructed. You have made your life in an architecturally beautiful way. Your life is the mansion, the structure that you built. Humanness tends to be more naturalistic. Like dream imagery. It can take various form.

The Buddha illustrated this consciousness thus:

"Monks, let us say I take this rock here and put it on top of this water and I say, 'Float rock, float.' And then I let it go. What will happen? It will sink. Then I take a jar of oil and put it in the bottom of the stream and then I break that jar. Where does the oil go? It floats to the surface."

These are the two types of consciousness. One is heavy consciousness. You can wish all you want that it stay on the surface. But it goes down just like a rock. Down to the bottom. The oil is the simile for consciousness. The jar is a simile for the body. If it is lighter than the elements then it floats up into the heavens. Lightness of consciousness is heavenly consciousness. It arises. Dark and heavy sinks. That is the nature of consciousness . It goes where it is naturally inclined to go.

So stay light. Be light. Don't be heavy.

8. புத்தரின் அடையாளம் Top

கேள்வி: புத்தரைக் குறிக்கப் பாதச் சுவடுகளும், சேகிதமும், தாமரையும் பயன்படுத்தப் பட்டதாகக் கேள்விப் பட்டேன். புத்தர் தனக்குச் சிலைகள் செய்ய வேண்டாமென்று குறிப்பிடுள்ளாரா? இன்றைய சூழலில் புத்தரைச் சிலைகள் வைத்துக் குறிப்பதால் விக்கிரக வழிபாடு உண்டாவதற்கான ஆபத்து இருக்கிறது அல்லவா? (அதாவது சிலையை ஒரு கடவுள் என்று நம்பும் எண்ணம் உண்டாகலாமல்லவா?)

பதில்: புத்தரைக் குறிக்கப் பயன்படுத்தப்பட்ட சின்னங்களில் வெற்று நாற்காலியும் ஒன்று. புத்தர் வாழ்ந்த காலத்தில் சில விகாரைகளில் அவர் அமருவதற்கென்று ஓர் தனி இடம் ஒதுக்கி வைக்கப் படுவதுண்டு. அவர் உயிருடன் இருக்கும்போது அவர் எப்போது விகாரைக்கு வருவார் என்று கூற முடியாது அல்லவா? எனவே அவருக்கென்று ஒரு விசேட அமரும் இடம் ஒதுக்கப்பட்டிருந்தது. அவர் இறந்த பின் அவர் நினைவாக ஒரு விசேடமான தனி ஆசனம் தொடர்ந்து வைக்கப்பட்டது. பாதச் சுவடுகளும் பயன்படுத்தப் பட்டன. தனது அணுக்கத் தொண்டரான ஆனந்தரிடம் ஒரு அடையாளச் சின்னமாகப் புத்தர் குறிப்பிட்டுச் செய்யச் சொன்னது தம்மச் சக்கரத்தை மட்டும் தான். அது விகாரையின் வாசலில் வைக்கப்பட்டது. அந்தச் சக்கரத்தில் ஆறு அல்லது எட்டு அல்லது பன்னிரண்டு ஆரைகள் இருக்கும்.

அக்காலத்தில் புத்தருக்கு உருவச்சிலைகள் எதுவும் வடிக்கப்படவில்லை. புத்தருக்கு உருவச்சிலைகள் வைக்கும் பழக்கம் பிற்காலத்தில் தான் தோன்றியது. வட இந்தியாவில் (கிரேக்க மன்னன் அலக்சாண்டர் படையெடுத்து வந்த பின்) கிரேக்கச் செல்வாக்கின் காரணமாகத்தான் சிலை வடிக்கும் முறை தோன்றியது. கிரேக்கர்கள் பளிங்குக் கற்களில் மனித உருவங்களைப் படைப்பதில் திறமைசாலிகளாக இருந்தனர். அதனால் புத்தருக்கும் சிலைகள் வடிக்கத் தொடங்கினர். ஆக புத்தர் உருவச் சிலையும் அதனோடு உள்ள உறவும் விளக்க உரைகளில் (அதாவது புத்தர் வாழ்ந்த காலத்திற்குப் பின்னர்) மட்டுமே காணமுடிகிறது. புத்தர் சிலைக்குமுன் மூன்று முறை வணங்குவது போன்ற வழிபாடுகள் பற்றித் திரிபிடகங்களில் எங்கும் குறிப்பிடப் படவில்லை. ஏனென்றால் அப்போது புத்தர் உருவச்சிலைகளே வடிக்கப் படவில்லை. மூன்று முறை வணங்குவது புத்தருக்கும், தம்மத்திற்கும் சங்கத்திற்கும் தான்.

எனக்குத் தனி நாற்காலியை ஒரு அடையாளக் குறியாக வைப்பது பிடித்திருக்கிறது. உருவச் சிலைகளினால் ஒரு சில கபடமில்லா மக்கள் அந்தச் சிலைகளுக்கு ஒரு ஆன்மா இருப்பதாகவோ, அவற்றுக்கு உயிர் இருப்பதாகவோ நம்பக் கூடும். சில சிலைகளுக்கு மனிதரைப் பாதிக்கும் சக்தியும் இருக்கலாம். இல்லை என்று சொல்வதற்கில்லை. ஆனால் அது புத்தர் இல்லை. புத்தர் இறக்கும் போது, பரிநிப்பாண சூத்திரத்தில் தான் இறந்த பின் தேவர்களும், மனிதர்களும் அவரைக் காண முடியாது என்று குறிப்பிட்டிருக்கிறார். அவர் நிப்பாண நிலைக்குச் சென்று விட்டார். சம்சார சக்கரத்துக்கு அப்பால் சென்றுவிட்டார். எனவே மறுபடியும் அவர் தோன்றப் போவதில்லை.

புத்தர் தம்மத்தைக் காண்போர் தம்மைக் காண்பார்கள் என்றும், தம்மைக் காண்போர் தம்மத்தைக் காண்பார்கள் என்றும் கூறினார். இக்காலத்தில் அவரைக் காணப் போவதில்லை, எனவே அவரைத் தம்மத்தின் வழியேதான் காண முடியும். அதுவே சிறந்த வழியும் கூட.

அவர் வாழ்ந்த போது ஒரு சீடர் அவர் அருகில் சுற்றிச் சுற்றி வந்து அவரையே பார்த்துக் கொண்டிருந்தாராம். புத்தர் கம்பீரமான தோற்றமுடையவர் - அரச குடும்பத்தில் பிறந்தவர். எனவே அந்தச் சீடர் அவரையே பார்க்க விரும்பினார் போலும். ஆனால் புத்தர் அவரிடம், 'என்னைப் பார்ப்பதில் பயன் ஒன்றும் இல்லை, சென்று அறத்தைப் பயில்,' என்று அறிவுறுத்தி அனுப்பினார்.

புத்தர் மிகவும் உடல் நலமின்றி இறக்கும் தறுவாயில் ஒருவர் அவரைச் சந்திந்துச் சீடரானார். அவரிடம் சில போதனைகளைக் கேட்டு விட்டு அதன் பின் அவருக்கு ஒத்தாசையாக அருகில் நின்று கொண்டிருக்காமல் உடனே தியானம் செய்யச் சென்று விட்டார் அந்தப் புதிய சீடர். சில துறவிகள் அவருக்குப் புத்தர் மீது அக்கறை இல்லாததால் தியானம் செய்யச் சென்று விட்டார் என்று குறை கூறினர். ஆனால் புத்தர், 'இல்லை, அவரே உண்மையான சீடன். இதைத்தான் உண்மையான சீடன் செய்ய வேண்டும். நான் இறந்து கொண்டிருக்கையில் என்னைப் பார்த்தபடி என்னைச் சுற்றி நின்று கொண்டிருப்பதில் என்ன பயன்? என்னைக் கவனிக்க, எனக்கு மருந்தளிக்கப் போதுமான துறவிகள் இருக்கின்றனர். எனவே வெளியே சென்று அவரவர் செய்ய வேண்டிய கடமைகளைப் பார்க்க வேண்டும். சென்று தியானம் பயில வேண்டும்," என்றார்.

ஆனால் இவையெல்லாம் (உருவச் சிலைகள், மும்முறை வணங்குவது போன்ற செயல்கள்) இப்போது இரண்டாயிரத்து ஐந்நூறு ஆண்டுகளாகத் தொடர்ந்து நிகழ்கின்றன. அவை அவசியமற்றவை யென்றாலும் நமது கலாச்சாரம் சார்ந்த பழக்கங்களாகி விட்டன. எனவே பௌத்தக் கலாச்சாரத்தோடு ஒத்துப் போக வேண்டுமென்றால் இதுபோன்ற மரியாதை செலுத்தும் வழிகளை நமக்குப் பயன் தரும் வழியில் ஏற்றுக் கொள்ள வேண்டும். (அதே சமயம் அவற்றோடு பற்றுக் கொள்ள வேண்டியதில்லை.)

Representing the Buddha

Q: I have read that the first symbols used for representing the Buddha were foot prints, the stupa, the lotus. I wondered if the Buddha indicated that he did not want idols be made of him. And is there a danger of idolatry in the present because of the use of statues to represent the Buddha?

One of the things used to represent the Buddha was also an empty chair. In some monasteries in India at the time of the Buddha they kept a special seat for him. You never knew when he would show up when he was alive. They kept a special seat for him. After he died that was one of the ways they kept the memory of the Buddha. They had a special seat but it was empty. They also had the footprint. The only specifically indicated symbol that the Buddha asked Ananda to make was the Dhamma Chakra - the wheel of becoming. And that was to be placed at the entrance to a monastery. It was just an abstract circle with spokes on it - with 8 or 12 or 6 spokes.

There were no images of the Buddha at the time. The Buddha statues came in much later - from North India from Greek influence (post Alexander’s arrival in India). The Greeks were great statue carvers beautiful workers in marble and they liked to carve the human form so they carved the image of the Buddha. So the Buddha image and the relationship to the Buddha image is a purely commentarial thing. The three bows to the Buddha image and everything - you cannot find any reference to it in the entire Pali Cannon because they did not have any Buddha images. The three bows is actually to the Buddha, the Dhamma and the Sangha.

I like the symbolism of an empty chair. When you make it concrete like that (making a statue) it is quite possible that naive people are thinking that there is kind of a spirit in the statue or something special is hanging around in the statue. Who knows? May be some of these statues take on a special vibe - but it is not the Buddha. The Buddha does say while he was dying in the Parinibbana sutta that after my death neither gods nor humans will see me. So don't be looking out. I am not in heaven or anywhere. He is gone to Nibbana. He is out of Samsara for further appearances.

The Buddha said that whoever sees the Dhamma sees me and whoever sees me sees the Dhamma. Of course you are not going to see him these days so you have to see him through the Dhamma and of course that is the better way.

There was one disciple who was hanging around and kept gazing at his form. He was a very impressive man - royalty, very perfectly formed. The disciple just wanted to look at him. And the Buddha said never mind looking at me just go off and look at the Dhamma.

Remember that one of his last disciples visited the Buddha when he was dying, very sick. The Buddha gave him brief instructions and instead of hanging around trying to be there attending or waiting, he went off to meditate. Some of the monks thought he didn't care about the Buddha since he went off to meditate. The Buddha said, 'No, he is a true disciple. That is what he should be doing. What is staring at me or hanging about while I am dying going to do? There are enough monks to give me some medicine. Get off and do your business. Go and mediate.'

But these things (the statues, the bowing and other practices) are now in place and have been for 2500 years. So it means that though they are not necessary they have now become culturally enshrined. So if you want to be in harmony with Buddhist culture at this time, you pick up these (ways of paying) respects and you try to make use of them. (But no need to get attached to them.)

9. சிலை வணக்கம் Top

புத்தர் சிலைகளை வணங்குவது பற்றி:

இந்த வழி அல்லது அந்த வழி என்று ஏதாவது ஒரு வழியில் பற்றுக் கொண்டு விடுகிறோம். 'நான் வணங்க விரும்பவில்லை, எனக்குச் சிலைகள் பிடிக்காது' - இப்படி நினைப்பதுவும் ஒரு பற்றுத் தான். உங்களுக்குச் சிலைகள் மிகவும் பிடிக்கும். அதை வணங்குவது இப்படித்தான் இருக்க வேண்டும் அல்லது அப்படித்தான் இருக்க வேண்டும் என்று நினைப்பதும் ஒரு பற்றுத் தான். ஆக பற்று இரு வகையில் வரும் - விருப்பு அல்லது வெறுப்பு. இவை இரண்டும் பற்றுத் தான்.

நிராகரிப்பது: (வட அமரிக்காவில்) அறுபதுகளில் (அதாவது 1960-1969 வரை) பெரும் சமூக மாற்றங்கள் ஏற்பட்டன. சமூகத்தால் ஏற்கப் பட்டிருந்த பல மரபுகள் நிராகரிக்கப் பட்டன. அப்படி நிராகரிப்பதும் ஒரு பற்றுத் தான். எந்த மரபுகளையும் ஒழுகக் கூடாது என்பதன் மீதான பற்று அது. அந்தக் காலத்திற்கு முன் இப்படித்தான் ஒழுக வேண்டும் என்று சமூக மரபுகளின் மீது பற்று இருந்தது.

முதன் முதலில் தாய்லாந்துக்கு அறத்தைக் கற்க வந்த மேற்கத்தியர்கள் சமூக மரபுகளை நிராகரிக்கும் தலைமுறையைச் சேர்ந்தவர்கள். ஆனால் தாய்லாந்து மக்களோ மரபுகளுக்கு மிகவும் முக்கியத்துவம் தருபவர்கள். எல்லோரும் முறைப்படி நடந்து கொள்ள வேண்டும் என்பது அவர்கள் விருப்பம். மேற்கத்தியர்களுக்கோ இப்படி ஏன் நடந்து கொள்ள வேண்டும் என்ற குறை. அவர்கள் மரபுவழிகளை நிராகரிப்பதின் மீது பற்றுக் கொண்டவர்கள். தாய் மக்கள் மரபு வழிகளின் மீது பற்றுக் கொண்டிருந்தனர். ஆனால் இந்த இரண்டுமே பாராட்டத்தக்க வழிகள் இல்லை.

அஜான் சா இந்த இரண்டு முரண்பாடுகளைக் கொண்டு விளையாடுவார். தாய் மக்கள், மேற்கத்தியர் சரியாக உட்காருவதில்லை என்று குறை கூறுவார்கள். காலைப் புத்தர் சிலையை நோக்கி வைக்கின்றனர் என்று குறை கூறுவர் அல்லது மேற்கத்தியர் தங்களைவிட அதிகத் துறவு நிலை கொண்ட ஒருவரைக் காட்டிலும் உயரமான இருக்கையில் அமர்ந்தால் தாய் மக்களுக்கு வருத்தம் ஏற்படும். அஜான் சா அவர்களுக்கு உள்ள பற்றினைச் சுட்டிக் காட்டுவார். பின் மேற்கத்திய துறவிகளிடம் - குறிப்பாக இளைய துறவிகளிடம் அவர்கள் குறைகளும் பற்றுத் தான் என்பதைச் சுட்டிக் காட்டுவார். 'நான் ஏன் என் விருப்பப்படி செய்யக் கூடாது, ஏன் சீவர ஆடையை இப்படி உடுத்த வேண்டும்,' என்று அவர்கள் குறைகூறும் போது அவர்களிடம், 'இதோ நீங்கள் துக்கம் அனுபவிக்கின்றீர்கள். தனிமனிதன் என்ற எண்ணம் உங்களுக்கு. இப்படிச் செய்ய வேண்டும், அப்படிச் செய்ய வேண்டும் என்பதின் மீது பற்று,' என்று கூறுவார்.

இது போன்ற பற்றுகளெல்லாம் மேலோட்டமானவை. எனவே, இரண்டோடும் இணைந்து வசதியாக இருக்கக் கற்றுக் கொள்ளுங்கள். இரண்டு வழிகளும் உங்களைப் பெருமளவில் மாற்றப் போவதில்லை. இதைப் பெரிய பிரச்சனை ஆக்க வேண்டாம். இரண்டு பற்றுகளும் உங்களை ஞான நிலைக்குக் கொண்டு சேர்க்கப் போவதில்லை.

Regarding bowing to Buddha statues:

You get attached one way or the other. If you don't want to bow, you don't like statues - this and that, that is an attachment. And if you love statues and the bow has got to be this way and it has to be perfect and this and that then you are attached. So attachment comes in two ways - attraction and repulsion. They are both attachments. Rejections: In the sixties (in North America) we were rejecting all the forms. Formalities of the culture. That was an attachment. Got attached to being informal. And maybe the culture before that was attached to formality.

So typically in Asia when young westerners first came they were usually from the hippy generation and they were anti-formal by bias. And the Thais are an extremely formal culture. They were attached to their forms. They would get all upset if we did not do everything exactly, formally perfect. And the westerners were always upset because of the forms. They were attached to the informality and the Thais were attached to formality. And neither of these is very lofty.

Ajahn Chah would play with both of this. He would watch the Thais getting upset because the farang (word for foreigner in Thai) was not sitting properly. His leg was not here or he was holding his head above somebody (more senior). He would lecture them about their attachment to form. Then he would talk to the western monks specially when they were first there - Anagarika's or novices. They would be wanting to do something. How come we have to do this or can we go and do that or why do have to wear it like this or can we just do our own thing. He'd just say, 'Now you see you are suffering. Attached to that idea that you want to be individual. You want to do it this way and that way that is why you suffer.'

Attachment to conformity and non-conformity: These attachments are very superficial. So allow yourself to be alright with both. Neither will make you this way or that too much. Don't make a thing about it. Neither will get you enlightened.

10. பேச்சும் நடத்தையும் Top

மற்றவரை ஆராய்வதைப் பொருத்தவரை புத்தர் இதனைக் கூறுகிறார்: "ஒரு ஆணையோ பெண்ணையோ எப்படிப் புரிந்து கொள்வது? அவர்களின் பேச்சையும் நடத்தையையும் கவனித்துத்தான் புரிந்து கொள்ள வேண்டும். வேறு எப்படிப் புரிந்து கொள்வது?" ஆக மற்றவர் மனத்தில் என்ன ‘’எண்ண ஓட்டம்’’ இருக்கின்றது என்று நினைத்துப் பார்க்க வேண்டாம். அவர்கள் பேச்சையும் நடத்தையையும் கவனித்து அவர்களைத் தெரிந்து கொள்ளுங்கள். அவ்வளவு தான். அவர்கள் மனத்தின் போக்கைப் புத்தர் போன்றவர்களிடம் விட்டு விடுங்கள். நம் போன்றவர்களால் மற்றவர் மனத்தைத் தெரிந்து கொள்ள முடியாது என்பதால் அவர்கள் பேச்சையும் நடத்தையையும் வைத்துத்தான் அவர்களைப் புரிந்து கொள்ள முடியும்.

கேள்வி (பெண்): சில சமயம் அவர்கள் பேச்சு கேட்பதற்கு நன்றாக இருக்கிறது. ஆனால எப்போதும் அவர்கள் நடத்தை சரியாகப் படவில்லை. அங்கு தான் எனக்குக் குழப்பம் உண்டாகிறது.

பதில்: புத்தர் ஒரு அழகான உவமானம் தருகிறார். வாய்மையைப் பேசி, ஆனால் அந்தப் பேச்சுக்கு நிகராக நடந்து கொள்ளாத ஒருவன் நறுமணம் இல்லாத அழகான பூவைப் போல. ஆனால் வாய்மையைப் பேசி அதற்கு ஒப்ப நடந்து கொள்பவன் நறுமணம் உள்ள அழகான பூவைப் போல.

அப்படிப் பேச்சிலும், நடத்தையிலும் வாய்மையோடு நடந்து கொள்பவர்களிடம் ஒரு தனிச்சிறப்பு இருப்பது தெரிகிறது. அதனால் அப்படிப் பட்டவர்கள் சமூகத்தில் சிறந்த விளைவுகளை உண்டாக்குகின்றார்கள். காந்தியும், அன்னை தெரேஸாவும் பேசிய சில வார்த்தைகளுக்கு ஒப்ப ஒரு போலித் தன்மையற்ற வாழ்க்கையை நடத்தினார்கள். அப்படி நடந்து கொள்வதில் மிகுந்த செல்வாக்கும் சக்தியும் இருக்கிறது.

Speech and action

As far as judging others The Buddha said this: "A man or a woman is known by their speech and by their actions. How else?" So don't try to guess behind their mind. Just look at their speech and their action and that is how you know them. And that is all. Leave it up to a Buddha to embrace their mind if there is something incongruient about it all. But for us if we do not know their mind directly then you must presume to judge on the basis of their speech and action.

Question: If an individual's speech resonates at times for many people but their action is not always right but in some areas not appropriate. That's when I get confused.

The Buddha has this beautiful simile. Like a beautiful flower that has no perfume are the words of a man who speaks the truth but does not act in accord with them. But like a beautiful flower with perfume are the words of one who speaks the truth and acts in accord with them. And that has a rare and special quality. So people who are in line with the words, when they speak it had a special impact. Like Gandhi and Mother Terasa speaking a few words and having some sort of authentic life attached to these things. It has a lot of power.

Next