தியானம் என்றால் என்ன?

தியானம் செய்வது எப்படி? முகப்பு

தியானம் செய்வது எப்படி?

புதிதாகத் தியானப் பயிற்சி தொடங்குவோருக்கு அமைதிக்கு எடுத்துச் செல்லும் வழிகாட்டி

யுத்ததம்மோ பிக்கு

How To Meditate:

A Beginner's Guide to Peace

Yuttadhammo Bhikkhu

தியானத்தில் சற்று அனுபவமுள்ளவர்களுக்கும், அல்லது அனுபவமே இல்லாதோருக்கும், மற்ற தியான முறைகளைப் பயின்று புதியதோர் முறையைக் கற்க விரும்புவோருக்கும் தியானம் எப்படிச் செய்ய வேண்டும் என்பதற்கு ஒரு அறிமுக உபதேசமாக உள்ளது இந்நூல். முதல் அதிகாரத்தில் தியானம் என்றால் என்ன என்பதையும் அதனை எவ்வாறு பயில வேண்டும் என்பதையும் விளக்குகிறேன்.

அதிகாரம் ஒன்று: தியானம் என்றால் என்ன?

Chapter One: What is Meditation?

English Version Video

முதலில் தியானம் என்ற வார்த்தை வெவ்வேறு மக்களுக்கு வெவ்வேறு பொருள் கொண்டதாகத் தோன்றுகிறது. ஒரு சிலருக்குத் தியானம் என்றால் மனதை அமைதியாக்குவது, அமைதியான அல்லது இன்பமான நிலையை உண்டாக்குவது அல்லது சாதாரண எதார்த்த நிலையிலிருந்து தப்பிச்செல்வது என்று பொருள் படுகிறது. வேறு சிலருக்கு விசேடமான அனுபவங்கள் அல்லது மந்திரகரமான மனநிலைகளைக் குறிக்கின்றது. இந்த நூலில் நான் அதன் இயல்பான பொருளைக் கொண்டே விளக்க விரும்புகிறேன். (ஆங்கிலத்தில்) "தியானம்" என்ற வார்த்தையின் அடித்தலமும் "மருந்து" என்ற வார்த்தையின் அடித்தலமும் ஒன்றே. [1]

மருந்து எவ்வாறு உடலின் நோயைக் குணப் படுத்துகிறதோ அதே போலத் தியானம் என்பது மனத்தின் நோயைக் குணப் படுத்துகிறது. மருந்தை, தற்காலிக இன்ப நிலைகளுக்கு எடுத்துச்செல்வதற்கான ஒரு கருவியாக நாம் பயன்படுத்துவதில்லை. மேலும் மருந்தை, போதைப் பொருட்கள் தற்காலிக இன்பம் தந்து விட்டு மீண்டும் போதை தெளிந்த பின் பழைய நோய் கொண்ட நிலையிலேயே விட்டுச் செல்வதைப்போல நாம் நினைப்பதில்லை. மருந்தின் நோக்கம் உடலை நிரந்திரமாகக் குணப்படுத்தித் தன் இயல்பான ஆரோக்கிய நிலைக்கு எடுத்துச் செல்வதேயாகும்.

அதுபோலவே தியானம் செய்வதற்கான காரணமும் தற்காலிகமான அமைதி நிலைக்கு எடுத்துச் செல்லாமல் கவலையும், அழுத்தங்களும், செயற்கையாக நாம் கற்றுக் கொண்ட பழக்க தோஷங்களும் உள்ளடங்கிய மனத்தை இயல்பாக அதன் ஆரோக்கியமான அமைதி நிலைக்கு நிரந்தரமாக எடுத்துச் செல்வதே ஆகும்.

எனவே இந்தப் புத்தகத்தில் உள்ளபடி நீங்கள் தியானப்பயிற்சி செய்வீர்களென்றால் அது உங்களை எப்போதும் அமைதியான அல்லது இன்பமான நிலையிலேயே வைத்திருக்கும் என்று நீங்கள் கருதிவிடக் கூடாது. ஆழமாக மனத்தில் பதிந்திருக்கும் அழுத்தங்கள், கவலை, கோபம்போன்ற துர்ப்பழக்கங்கள் ஆகியவற்றை அறிந்து அவற்றை அகற்ற முயல்வது என்பது சில சமயம் துன்பமான ஒரு செயற்றொடராக இருக்கக் கூடும். குறிப்பாக மனத்தின் திறனற்ற நிலைகளை ஆராய நாம் விரும்புவதில்லை. பெரும்பாலான நேரங்களில் திறனற்ற பழக்கங்களைப் பற்றி நினைப்பதைத் தவிர்க்கவோ அல்லது அவற்றை மறைக்கவோ நாம் விரும்புகின்றபடியால் அவற்றைப் பிரதிபலிக்கும் போது அது இன்பகரமான உணர்ச்சிகளைத் தூண்டுவதில்லை.

சில சமயம் தியானம் செய்வதால் அமைதியோ மகிழ்ச்சியோ கிடைப்பதாகத் தெரிவதில்லை; இதன் காரணமாகவே நாம் தியானம் என்பது ஒரு போதைப்பொருளை உட்கொள்வது போன்றதல்ல என்பதைத் தெளிவாக்கு கின்றோம். பயற்சி செய்யும் போது இன்ப நிலையும், அதை முடித்த பின்னர் பழைய துன்ப நிலைக்கே இட்டுச்செல்வதல்ல தியானப் பயிற்சி. உலகின் மீதான நமது பார்வையில், கருத்தில் உண்மையான மாற்றத்தை உண்டாக்குவதே தியானத்தின் நோக்கம். தியானத்தால் மனம் தனது இயற்கையான தெளிவான நிலைக்கு எடுத்துச் செல்லப் படுகிறது. உண்மையான, நீடித்த அமைதிக்கும், மகிழ்ச்சிக்கும் எடுத்துச்செல்லத் தியானம் வழி வகுக்க வேண்டும். வாழ்க்கையில் இயற்கையாகத் தோன்றும் துன்பங்களைத் திறமையான வழிகளில் கையாள அது உதவ வேண்டும்.

நாம் இந்த மாற்றத்தை உண்டாக்கப் பயன்படுத்தும் அடிப்படையான தியானமுறை தெளிவான அறிநிலையை உருவாக்குவதே. தோன்றும் ஒவ்வொரு அனுபவத்தையும் நாம் தெளிவாகக் காண வேண்டும். மேலும் அது தோன்றும் நேரத்திலேயே அதைக் கவனிக்க வேண்டும். தியானிக்கவில்லையென்றால் ஒரு அனுபவம் உண்டான பின் உடனே அது "நல்லது", "தீயது", "நான்", "எனது" போன்று நினைக்கத் தோன்றும். அதன் விளைவு கவலையும், துன்பமும், மன நோயுமே. ஒரு பொருளைத் தெளிவாகப் பார்க்கும் போது அதைப் பற்றி இப்படிப்பட்ட தீர்ப்புகளுக்குப் பதிலாக அந்தப் பொருளை உள்ளது உள்ளபடி மட்டுமே காண்கிறோம். ஒரு பழங்கால, ஆனால் நன்கு உணரப்பட்ட "மந்திரம்" என்ற தியானக் கருவியைப் பயன்படுத்தித்தான் இந்தத் தெளிவான அறிநிலையை நாம் உணர்கிறோம்.

"மந்திரம்" என்பது ஒரு பொருள் மீது மனத்தைப் பதியவைக்கும் ஒரு வார்த்தையை அல்லது சொற்றொடரைக் குறிக்கும். பொதுவாக அந்தப் பொருள் தெய்வீகம் சம்பந்தப்பட்டதாக இருக்கும். ஆனால் இங்கு நாம் சாதாரண எதார்த்த நிலைமீது மனத்தைப் பதிய வைக்கவே மந்திரத்தைப் பயன்படுத்துகிறோம். நமது அனுபவங்களைத் தெளிவாக உள்ளது உள்ளபடி பார்க்க வேண்டும். தேவையற்ற விஷயங்களைச் சேர்த்தோ அல்லது அவற்றைப்பற்றித் தீர்ப்புக் கூறியோ பார்க்கக் கூடாது. இவ்வாறு நமது அனுபவங்கள் சம்பந்தப்பட்ட பொருட்களை மந்திரங்களைப் பயன்படுத்தி அறியும் போது அவற்றைத் தெளிவாகவும் அவற்றோடு விருப்போ, வெறுப்போ இல்லாமலும் அறிந்து கொள்ள முடிகிறது.

உதாரணமாக நாம் உடலை நகர்த்தும் போது அந்த அனுபவத்தைத் தெளிவாகக் காண நாம் ஒரு மந்திர வார்த்தையைப் பயன்படுத்த வேண்டும். அந்த அசைவின் சாராம்சத்தைக் குறிக்க "நகர்கிறது" அல்லது "அசைகிறது" என்று நினைத்துக் கொள்ளலாம். ஓர் உணர்ச்சியை அனுபவிக்கும் போது "உணர்வு" என்று சொல்லிக் கொள்ளலாம். யோசிக்கும்போது "நினைவு" என்றும், மனத்தில் கோபம் தோன்றும் போது "சினம்" என்றும் உடலில் வலி உண்டானால் "வலி" என்றும் நமக்கு நாமே நினைவு படுத்திக் கொள்ள வேண்டும். நமது அப்போதைய அனுபவத்தைத் தெளிவாக விளக்கும் வார்த்தையை நினைவு கூர்ந்து அந்த அனுபவத்தை ஏற்றுக் கொள்ள அந்த வார்த்தையைப் பயன்படுத்த வேண்டும். அந்த அனுபவத்தைப் பற்றி வேறு எந்த எண்ணங்களையும் ஏற்படுத்தக் கூடாது. அந்த அனுபவத்தின் மீது தீர்ப்பளிக்கக் கூடாது. ‘நல்லது, தீயது, நான், எனது’ போன்ற எண்ணங்களை எழவிடக் கூடாது. அந்த மந்திரம் வாயிலோ, தலையிலோ இல்லாமல் அந்தப் பொருளை உள்ளது உள்ளபடி தெரிந்து கொள்ளும் தெளிவான அறிநிலையாக இருக்க வேண்டும். ஆக மனத்தில் தோன்றும் அந்த வார்த்தை அந்த அனுபவம் எங்கு தோன்றுகிறதோ அதே இடத்தில் தோன்ற வேண்டும். எந்த வார்த்தையை நாம் தேர்ந்தெடுக்கிறோம் என்பது முக்கியமில்லை. மனத்தில் அந்த அனுபவத்தை உள்ளது உள்ளபடி அறிந்து கொள்ள அது மனத்திற்கு உதவினால் போதும்.

எண்ணற்ற பல அனுபவங்களை நாம் அனுபவிக்கக் கூடுமென்பதனால் அவ்வனுபவங்களை எளிமையாகச் சீர்ப்படுத்த அவற்றை நான்கு பகுதிகளாக வகைப் படுத்திக் கொள்ளலாம். (இவை பௌத்தத்தில் மனக்கவனத்தின் நான்கு அடித்தலங்கள் என்று குறிப்பிடப் படுகின்றன. இவற்றைப் பற்றி விரிவான விளக்கங்களை மற்ற புத்தங்களில் படிக்கலாம். இப்புத்தகத்தில் ஓர் எளிமையான அறிமுகம் மட்டுமே தேவைப் படுகிற அளவுக்குத் தரப்பட்டுள்ளது.) நமது அனைத்து அனுபவங்களும் இந்த நான்கு பகுதியின் ஒன்றினுள் அடங்கி விடும்; நமது பயிற்சியை ஒழுங்கு படுத்தி எது வாய்மை எது வாய்மையற்றது என்பதை விளக்கி உள்ளதை உள்ளபடி பார்க்க உதவுகிறது.

இந்த நான்கு பிரிவுகளையும் முதலில் மனனம் செய்த பின்னரே தியானப் பயிற்சி செய்யத் தொடங்குவது பொதுவான வழக்கம்.

1. உடல் - உடலின் நிலைகளும், அதன் அசைவுகளும்.

2. உணர்ச்சிகள் - உடலின், மனத்தின் உணர்ச்சிகள் - துன்பம், இன்பம், அமைதி போன்றவை..

3. மனம் - மனத்தில் தோன்றும் எண்ணங்கள் - கடந்த காலம் அல்லது எதிர் காலம் பற்றியது, நல்லதும், தீயதும்;

4. தம்மங்கள் [2] - தியானிப்போர் விரும்பும் மனத்தின், உடல் சம்பந்தப்பட விஷயங்கள். நம் தெளிவான பார்வையைக் குழப்ப வைக்கும் மன மாசுக்களும், எதார்த்தத்தை அனுபவிக்க உதவும் ஆறு புலன்களும், மற்றவையும் இவற்றுள் அடங்கும்.

இந்த நான்கு பிரிவுகளான உடல், உணர்ச்சிகள், மனம், தம்மங்கள் ஆகியவையே தியானப் பயிற்சியின் நான்கு அடித்தலங்கள் ஆகும். இவற்றைப் பயன்படுத்தியே நாம் இந்தக் கனத்தைத் தெளிவாகப் பார்க்கிறோம்.

உடலைப் பொருத்தவரை அது சம்பந்தப்பட்ட ஒவ்வொரு அனுபவத்தையும் குறிக்க நாம் முற்பட வேண்டும். உதாரணமாக, கையை நீட்டும் போது மனதில் அமைதியாக "கையை நீட்டுகிறோம்" என்று சொல்லிக் கொள்ள வேண்டும். அசைவில்லாமல் அமர்ந்திருக்கும் போது "அமர்ந்திருக்கிறோம்" என்றும், நடந்து செல்லும்போது "நடக்கிறோம்" என்றும் கூறிப்பிட்டுக் கொள்ள வேண்டும். உடல் எந்த நிலையில் இருந்தாலும் அந்த நிலையை மனத்தில் குறித்துக் கொள்ள வேண்டும். எந்த அசைவு உண்டானாலும் அதன் இயற்கைக் குணத்தை மந்திரங்களைப் பயன்படுத்தி உள்ளதை உள்ளபடி குறித்துக் கொள்ள வேண்டும். இவ்வாறு உடலைப் பயன்படுத்தி எதார்த்தத்தைத் தெளிவாகக் கவனிக்கக் கற்றுக் கொள்ள வேண்டும்.

அடுத்து உடலிலும் மனத்திலும் தோன்றும் உணர்ச்சிகளை ஆராய்வோம். உடலில் வலி தோன்றினால் நமக்குள் நாமே "உடல் வலி" என்று கூறிக் கொள்ள வேண்டும். இவ்விடத்தில் திரும்பத் திரும்ப அதே மந்திர வார்த்தையைச் சொல்லிக் கொள்ளலாம் "உடல் வலி.. உடல் வலி.. உடல் வலி.." இவ்வாறு கோபமோ, எரிச்சலோ எழுவதைத் தடுத்து அந்த உடல் வலி ஒரு உணர்ச்சி மட்டுமே என்பதைப் பார்க்க வேண்டும். உடல் வலி என்பது ஒன்று, அதன் மீது பொதுவாகத் தோன்றும் எரிச்சல் என்பது வேறு என்பதைத் தெரிந்து கொள்கிறோம்; உடல் வலி என்பது தீயது என்றும் பார்ப்பதில்லை, மேலும் நம்மால் அதைக் கட்டுப்படுத்தவோ மாற்றவோ முடியாது என்பதால் அது "நம்முடையதும்" அல்ல என்பதைத் தெரிந்து கொள்கிறோம்.

அதே போல மகிழ்ச்சியாக இருக்கும் போதும் அதையும் அவ்வாறே ஏற்றுக் கொள்ள வேண்டும். அந்த அனுபவத்தை, "மகிழ்ச்சி.. மகிழ்ச்சி.. மகிழ்ச்சி.." என்று நமக்கு நாமே சொல்லிக் கொள்ள வேண்டும். அந்த இன்ப உணர்ச்சியை நாம் ஒதுக்க வேண்டும் என்பதில்லை. அதனோடு பற்றுக் கொள்ளாமல் இருக்க வேண்டும் என்பதே நமது நோக்கம். ஒட்டிக் கொள்வதால் உண்டாவது, அந்த இன்பத்துக்கு அடிமைப்படுவதும், பற்றுக் கொள்வதும், அதற்காக ஏங்குவதுமே. உடல் வலியைப் போலவே மகிழ்ச்சி நிலையும், அதன் மீது உண்டாகும் பிடிப்பும் வேவ்வேறு நிலையானவை என்பதை அறிகிறோம். மேலும் மகிழ்ச்சி நிலை இயற்கையாக "நல்லதும்" இல்லை. அதனோடு பற்றுக் கொள்வதால் அது நீடிப்பதும் இல்லை. மாறாக அது மறைந்த பின் அதிருப்தியும் துக்கமுமே மிஞ்சுகிறது.

அமைதியான மனநிலை இருக்கும் போது நமக்கு நாமே சொல்லிக் கொள்ள வேண்டியது: "அமைதி.. அமைதி.. அமைதி..". இப்படித் தெளிவாகப் பார்க்க வேண்டும். அதே சமயம் அந்த அமைதி நிலைகள் தோன்றும் போதும் அவற்றோடு பற்றுக் கொள்ளாமலும் இருக்க வேண்டும். இவ்வாறு அமைதி நிலைகளோடு பற்று, குறையக் குறைய நமது அமைதி நிலையும் மேன்மேலும் அதிகரிக்கும்.

மூன்றாம் அடித்தலம் நமது எண்ணங்கள் சம்பந்தப்பட்டது. இறந்த காலத்தைப் பற்றி எண்ணங்கள் தோன்றினால் அவை இன்பமூட்டினாலும் சரி, துன்பமுறச் செய்தாலும் சரி நாம் நினைக்க வேண்டியது "நினைவு.. நினைவு.." என்று தான். பற்றோ, வெறுப்போ எழவிடாமல் எண்ணங்களை எண்ணங்கள் என்று மட்டுமே தெரிந்து கொள்ள வேண்டும். எதிர்காலத்தைப் பற்றி நினைக்கும் போதும், ஊகிக்கும் போதும் நாம் நினைத்துக் கொண்டிருக்கிறோம் என்பதை மட்டும் அறியவேண்டும். அந்த எண்ணங்கள் மீது விருப்போ, வெறுப்போ கொள்ளக் கூடாது. இவ்வாறு அவற்றோடு கூட வரும் பயம், கவலை, துன்பம் ஆகியவற்றிடமிருந்தும் நாம் விலகிக் கொள்ளலாம்.

நான்காம் அடித்தலம் "தம்மங்கள்" என்றழைக்கப்படும். மனம் மற்றும் உடல் சம்பந்தப்பட்ட நடவடிக்கைகளின் பகுப்புகள் இவை.

முதலாவது தம்ம வகுப்பு ஐந்து மாசுக்களை உள்ளடக்கியது. மனத்தெளிவுக்கு இடைஞ்சலாகவும், நமது பயிற்சிக்குத் தடங்கலாகவும் உள்ள அவை: பேராசை, வெறுப்பு, சோம்பல், அலைக்கழிப்பு மற்றும் ஐயம். மனத்தெளிவுக்கு இடைஞ்சலாக இருப்பது மட்டுமல்லாமல் இவையே நமது வாழ்கையில் உண்டாகும் எல்லாத் துன்பங்களுக்கும், துக்கங்களுக்கும் காரணம். நமது நன்மைக்காகக் கூர்ந்து நோக்கி முயன்று இந்த மாசுக்களை அறிந்து அவற்றை மனத்திலிருந்து நீக்க வேண்டும். ஏனெனில் இதுவே தியானம் செய்வதின் முக்கிய நோக்கம். எனவே அவாவை உணரும் போது, இல்லாததை விரும்பும் போது, அல்லது உள்ளதோடு பற்றுக் கொள்ளும் போது அப்படித் தோன்றும் விருப்பம் அல்லது ஆசை உள்ளதை அறிந்திருக்க வேண்டும். அந்த ஆசையைத் தொடர்ந்து சென்று அதை ஒரு தேவையாக மாற்றிவிடுவது தவறான பாதையாகும். அந்த மனவெழுச்சியை உள்ளபடி தெரிந்து கொண்டு "வேட்கை.. வேட்கை.. விருப்பம்.. விருப்பம்.." என்று நமக்கு நாமே நினைவு படுத்திக் கொள்ள வேண்டும். ஆசையும், பற்றும் துக்கத்தை உண்டாக்குவன என்றும், எதிர் காலத்தில் வேண்டியது கிடைக்காமல் போனாலும், உள்ளதை இழந்து விட்டாலும் ஏமாற்றம் உண்டாகக் காரணமாகின்றன என்பதையும் தெரிந்து கொள்ள வேண்டும்.

தொல்லையான மனம் மற்றும் உடல் அனுபவங்கள் தோன்றியதன் காரணத்தினால் அல்லது விரும்பிய அனுபவம் தோன்றாததன் காரணத்தால் கோபம் உண்டாகும் போதும் இதை அறிந்து "கோபம்.. கோபம்" அல்லது "வெறுப்பு.. வெறுப்பு.." என்று சொல்லிக் கொள்ள வேண்டும். சோகமான நேரத்திலும், எரிச்சலான அதிருப்தியான, பயமான, நொந்துபோன நிலைகளிலும் அந்த நிலைகளை அறிந்து உள்ளதை உள்ளபடி நமக்கு நாமே மந்திர வார்த்தைகளால் நினைவுறுத்திக் கொள்ள வேண்டும், "சோகம்.. சோகம் .. எரிச்சல் எரிச்சல்".. போன்ற வார்த்தைகளைச் சொல்லி அந்தத் திறனற்ற மனநிலைகளை ஊக்குவிப்பதால் நமக்கு நாமே உண்டாக்கிக் கொள்ளும் துக்கத்தையும் மனவழுத்தத்தையும் புரிந்து கொள்ள வேண்டும். கோபத்தின் துன்பமான வினைப்பயனைப் பார்த்த பின்னர் நாம் இயற்கையாகவே எதிர்காலத்தில் அதைத் தவிர்க்க முற்படுவோம்.

சோம்பலாக உள்ள போது நமக்கு நாமே சொல்லிக் கொள்வது "சோம்பல்.. சோம்பல்.." அல்லது "கலைப்பு.. கலைப்பு" என்று. இவ்வாறு சொல்வதாலேயே நமது இயற்கையான சக்திகளை மீண்டும் பெற முடியும்.

அலைக்கழிக்கப் பட்டிருக்கும் போதும், கவலையோ, அழுத்தநிலையோ இருந்தாலும் "குழப்பம்.. குழப்பம", "கவலை.. கவலை.." அல்லது "அழுத்தம்.. அழுத்தம்.." என்று சொன்னாலே நமது கவனம் மேலும் வலுப்பெறுவதை அறியலாம். குழப்பமோ, என்ன செய்வதென்று தெரியாத நிலையோ ஏற்பட்டால் நாம் சொல்லவேண்டியது "ஐயம்.. ஐயம்" அல்லது "குழப்பம்..குழப்பம்.." என்று. இப்படிச் சொல்லிக் கொள்வதால் குழப்பம் குறைவதை உணரலாம்.

இந்த நான்கு அடித்தலங்களைத் தெளிவாக அறிந்து கொள்வதே நமது தியானப்பயிற்சியின் அடிப்படைச் செயல்முறை என்பதை இனி மேல்வரும் அத்தியாயங்கள் விளக்குகின்றன. எனவே இந்த நான்கு அடித்தலங்களைப் புரிந்து கொண்ட பின்னர் தியானப் பயிற்சியைத் தொடங்க வேண்டும். நமது அனுபவங்களால் பெற்றவைகளைத் தெளிவாகப் புரிந்து கொண்டு அப்பொருட்கள் மீது நல்லது, தீயது என்ற கருத்துக்களையும், தீர்ப்புகளையும் விலக்குவதே தியானம் செய்ய நாம் எடுக்க வேண்டிய முதற்படி.

விளக்கம்:

[1] According to etymonline.com, both words come “from PIE base *med- 'to measure, limit, consider, advise'”.

[2] தம்மம் என்றால் வாய்மைகள் – உண்மை நிலைகள் என்று பொருள்படும். தியானிப்போருக்குப் பல வாய்மைகளில் அக்கறை உண்டு. ஆனால் தொடக்க நிலையில் உள்ள தியானிப்போருக்கு முதலாவதான மன மாசுக்களே மிகவும் முக்கியமானது என்பதால் அதைப் பற்றி மட்டுமே இந்தக் கலந்துரையாடலில் விவரிக்கப் போகிறோம்.

* * *