நமது கதைகள்

நமது கதைகள்

தணிசாரோ பிக்கு

Our stores during Meditation

Thanissaro Bhikkhu

English version follows Tamil translation

தியானத்தின் போது நமது பழங்கதைகளையெல்லாம் நாம் நினைவுக்குக் கொண்டு வருகிறோம். சில சமயம் பயனுள்ள கதைகள், சிலசமயம் பயனற்ற கதைகள் அவை. புத்தரும்கூடத் தியானத்தின்போது அவரது கதைகளைக் கொண்டு வந்தார். அவர் ஞானம் பெற்ற அன்று இரவில் தோன்றிய முதல் அறிவு அவரது கதை. முந்தைய பல பிறவிகளில் தொடர்ந்து நிகழ்ந்த நிகழ்ச்சிகளின் கதை அது. அந்த ஒவ்வொரு பிறவியிலும் நடந்த முக்கிய நிகழ்வுகள், அவரது பெயர், அவர் தோற்றம், அவர் உண்ட உணவு, அவர் அனுபவித்த இன்பமும் துன்பமும், இறுதியில் அவர் மறைந்தது. அவ்வளவு தான். உயிரினங்களின் வாழ்வு: பெயர், தோற்றம், உணவு, இன்பம், துன்பம், மறைவு ஆகிய இவைகளுள் அடங்கிவிடுகிறது. ஆனால் இவற்றை நாம் பெரிய நிகழ்வுகளாக மாற்றி விடுகிறோம். வாழ்நாள் முழுவதும் அவற்றை விரிவாக ஆராய்கிறோம், அக்கதைகளில் நிகழ்ந்த சில நிகழ்ச்சிகள், குறிப்பாகத் துன்ப நிகழ்ச்சிகள் மனத்தில் சுழன்று கொண்டே இருக்கின்றன. அல்லது முன் தோன்றிய இன்ப உணர்ச்சிகளை எண்ணி எண்ணி நாம் ஏங்கிக் கொண்டே இருக்கிறோம். அதன் மூலம் முன்பு நடந்த இன்பத்தையும் இன்றைக்குத் துன்பமாக மாற்றி விடுகிறோம்.

புத்தர் அவரது கதைகளிருந்து விடுபட இரண்டு வழிமுறைகளைக் கண்டறிந்தார். ஒரு வழி அவற்றைப் பொதுவான அனுபவமாகக் கருதுவது, அதாவது எல்லா உயிரினங்களுக்கும் பொதுவான அனுபவமாகக் கருதுவது: இதுவே அவரது இரண்டாம் அறிவு. அவருக்குத் தோன்றிய கேள்வி: தனக்குப் பல முற்பிறவிகள் இருந்ததென்றால் மற்ற உயிரினங்களுக்கும் அத்தகைய முற்பிறவிகள் இருந்திருக்கும் அல்லவா? மற்ற உயிர்களைக் கவனித்தால் அவற்றின் பொதுவான இயல்புகள் தெரியவரும் என்று எண்ணினார். அவ்வாறே நடந்தது. எல்லா உயிர்களும் இறந்த பின் மறுபிறப் பெடுக்கின்றன என்பதை உணர்ந்தார். இந்த மேலான பார்வையிலிருந்து ஒரு முக்கிய செய்தி அவருக்குப் புலப்பட்டது: அவற்றின் மறுபிறப்பு உயர் நிலையில் அமைகிறதா அல்லது தாழ் நிலையில் அமைகிறதா என்பது அவற்றின் செயல்களிலிருந்தும் அவற்றின் நோக்கத்தின் தரத்திலிருந்தும், அவற்றின் கருத்திலிருந்தும் உண்டாகிறது என்பதை அறிந்து கொண்டார். இதன் தொடர்ச்சியாக அவர் மூன்றாம் அறிவை உணர்ந்தார். அந்த இரண்டாம் அறிவில் அவர் உணர்ந்த காரண காரியத் தொடர்பை நிகழ் காலத்திற்கு ஈடுபடுத்திப் பார்த்தார்: நிகழ் காலத்தில் அவரது கருத்துக்களையும், நோக்கங்களையும் கவனித்து அவற்றைப் பிரித்து எடுத்தார். இவ்வாறு தான் புத்தர் தமது கதைகளிலிருந்து முழுமையாக விடுபட்டார்.

நாம் தியானம் செய்யும் போது புத்தர் கண்ட தொடர்பினை நாமும் காணவேண்டும். நமது மனக்கதைகளை விட்டு வெளியே வரவேண்டும். இல்லாவிட்டால் நம்மை அக்கதைகள் பித்துப் பிடிக்க வைத்துவிடும். அதே பழைய சினிமாப் படத்தைத் திரும்பத் திரும்பப் பார்ப்பது போல - உங்கள் கதையை சினிமா எடுத்துத் திரையில் வெளியிட்டால் நீங்கள் அதைக் காசு கொடுத்துப் பார்க்க மாட்டீர்கள். இருந்தாலும் 'என்', 'நான்' என்று இருப்பதால் - என் துன்பம், என் இன்பம், என் தோற்றம், என் உணவு - அந்தப் படத்தை நாம் திரும்பத் திரும்ப மனத் திரையில் பார்த்துக் கொண்டே இருக்கிறோம். நமது தியானம் முன்னேற வேண்டுமென்றால், அந்தத் தூண்டிலின் பிடியிலிருந்து நீங்கள் விடுபட வேண்டும்.

முதலில் அதைப் பொதுவாகப் பார்க்கத் தொடங்க வேண்டும். உலகில் உள்ள எல்லா உயிர்களையும் - தங்கள் தோற்றத்தைப் பிடிக்காத, பிடிக்காத உணவை உண்ணும், பிடித்த உணவு கிடைக்கவில்லையே என்று ஏங்கும், இன்பமும் துன்பமும் அனுபவித்த உயிர்களனைத்தையும் - நினைத்துப் பாருங்கள். நீங்கள் மட்டும் தான் அப்படி அனுபவம் கொண்டவரா? இல்லை. இதனை அடிக்கடி நினைத்துப் பாருங்கள். நமது குறிப்பிட்ட தோற்றமும், நாம் உண்ணும் உணவும், நமது இன்பமும், துன்பமும் நம்மைக் கட்டுப் படுத்தலாம், ஆனால் பொதுவாகப் பார்க்க வேண்டும். இவ்வாறு அனைவரது அனுபவங்களையும் கவனிக்கும் போது, வருவது போவது, பிடித்தது, பிடிக்காதது எல்லாம் பெரிய விஷயமாகத் தோன்றாது. பொதுவாக மற்றவர் அனுபவங்களையும் கணக்கில் கொள்ளும்போது நமது தனிப்பட்ட கதையில் நமக்குச் சுவாரசியம் இல்லாமல் போய்விடும். பின் நிகழ்காலத்தில் கவனத்தைச் செலுத்தித் துன்பத்தை உண்டாக்க நாம் இப்போது என்ன செய்து கொண்டிருக்கின்றோம் என்பதைக் கவனித்து அதை விட்டுவிடக் கற்றுக் கொள்ளலாம்.

இந்தக் கணத்தில் உங்களிடம் என்ன இருக்கிறது? உங்களிடம் நோக்கங்கள் இருக்கின்றன. வேறு வார்த்தைகளில் சொல்ல வேண்டுமானால் செயற்பாடுகள் உள்ளன. எது போன்ற செயற்பாடுகள்?

உங்களிடம் மூச்சு உள்ளது; அது உடலின் செயற்பாடு.

மன நினைவுகளும் கணக்கீடுகளும் உள்ளன; அவை சொற் செயற்பாடு.

பின் உணர்ச்சிகளும் கருத்துக்களும், பாவனையும் உள்ளன; அவை மனத்தின் செயற்பாடு.

இவற்றை நாம் புரிந்து கொள்ள வேண்டும்.

அச்செயற்பாடுகளை நன்கு அறிந்து கொண்டபின் நாம் அவற்றைப் புரிந்து கொள்ளலாம். அம்மூன்றையும் ஒன்று சேர்க்கலாம் - நாம் மூச்சின் மீது கவனம் செலுத்தும் போது செய்வதுபோல. அவற்றை அறிந்து கொள்வது ஒரு திறனை வளர்த்துக் கொள்வது போல. மூச்சை எப்படிச் சிறந்த முறையில் விடுவது? அதனைப் பற்றி நினைத்துக் கணக்கிடுவதை எப்படித் திறமையாகச் செய்வது? மூச்சைப் பற்றிய கருத்துக்கள் எத்தகைய திறமை கொண்டதாக இருக்க வேண்டும்? மூச்சினால் எப்படிப்பட்ட பயனுள்ள உணர்ச்சிகளை வளர்த்துக் கொள்ள வேண்டும்?

இத்தகைய கேள்விகளைப் பற்றி நாம் அதிகம் சிந்திக்கும் போது நமது கதைகளிடமிருந்து வெளியேற அவை உதவுகின்றன. நான் தாய்லாந்தில் துறவியாக இருந்த முதல் ஆண்டில் உங்களிடம் இருப்பதைவிட என்னிடம் நிறையத் தனிமையாக இருக்க நேரம் இருந்தது. அப்போது, சொல்லவே வேண்டியதில்லை, எனது பழைய கதைகள் பலவும் தோன்றித் தோன்றி மறைந்தன. நடுநிலைப் பள்ளிக்குச் சென்ற காலம், மேல் நிலைப் பள்ளிக்குச் சென்ற காலம், கல்லூரி, குடும்பம் பற்றிய நிகழ்வுகள் திரும்பத் திரும்பத் தோன்றின. அவற்றை நினைத்து நினைத்துப் பித்து பிடிக்காமல் இருந்ததற்குக் காரணம் நிகழ் காலத்தில் எனக்குச் செய்வதற்கு ஒரு சுவாரசியமான பொழுது போக்கு இருந்தது: அதுவே மூச்சு. மூச்சின் மீது அதிகம் கவனம் செலுத்தச் செலுத்த, அதன் மீது ஒரு பிடிப்பு ஏற்பட்டது. எனது பழைய கதைகளின் மீது இருந்த எனது மோகத்தின் வலுவும் குறைந்தது. எனக்கு ஒரு முக்கியமான அறிவு கிடைத்தது. எனது பழைய கதைகளினால் எனக்கு இப்போது உண்டாகும் துன்பங்களை நான் புரிந்து கொள்ள வேண்டுமானால் இதோ இந்தக் கணத்தில் நான் மேலும் துன்பங்களை உண்டாக்க என்ன செய்கிறேன் என்பதைத் தெரிந்து கொள்ள வேண்டும். மூச்சைக் கவனிப்பது இதற்கு ஒரு சிறந்த முறை. மூச்சின் மீது நாம் கொள்ளும் ஆர்வத்தினால் நமது கதைகளிடமிருந்து தப்பித்து, உண்மையான பெரிய செயல்கள் மீது நமது கவனத்தைச் செலுத்தலாம்: நாம் ஏன் இப்போது நமக்குத் துன்பமும் அழுத்தமும் விளைவித்துக் கொள்கிறோம்? நாம் ஒன்றும் செய்ய முடியாதவர்களல்ல. வேறு யாரோ தயாரித்த ஒரு தொலைக் காட்சி நாடகத்தை நாம் பார்த்துக் கொண்டிருக்கவில்லை. நாமே தாயரித்துக் கொண்டிருக்கும் நாடகமே இது. இந்த நாடகம் போகும் திசையை நம்மால் மாற்றி அமைக்க முடியும்.

Excerpts from "Levels of the Breath" by Thanissaro Bhikkhu

We all bring our stories to the meditation. Sometimes they're helpful stories, sometimes they're not. Even the Buddha brought his stories to the meditation. That first knowledge on the night of his awakening was basically his story stretching back over many lifetimes. The big issues in each lifetime were his name, his appearance, his food, his experience of pleasure and pain, and how he passed away. That's pretty much it. The life of living beings: name, appearance, food, pleasure, pain, death. Not much of a story. And yet we can elaborate these things into all kinds of issues and spend whole lives going over the details, certain incidents in the stories, especially the painful ones. Or we can look back on the pleasures we once had but that we're missing now, which can turn those past pleasures into present pain.

The Buddha found two ways to get out of his stories. One was to generalize, to think about all living beings as a whole: That was his second knowledge. The question arose: If he had previous lifetimes, how about other beings? Maybe looking at other beings, he would begin to see some general patterns. And that's precisely what happened. He saw how all beings died and then were reborn, and in taking the larger view he saw an important pattern: The quality of their rebirth was based on their actions, on the quality of their intentions, shaped by their views. From there he went to the third knowledge, which took the pattern he saw in the second knowledge and applied it to the present moment: looking at his views and his intentions in the present moment, taking them apart. That was how he got out of his stories altogether.

So as we meditate, we want to think about the pattern the Buddha found. We've got to get out of our narratives, our stories. Otherwise they drive us crazy. You go through the same old movies over and over again — movies that, if they were put up on the screen, you wouldn't pay to watch. Yet because of the "I" and the "me" — my pain, my pleasure, my appearance, my food — you get hooked into watching them over and over again. If you want your meditation to go anywhere, you've got to get yourself off the hook.

The first step is to start generalizing. Think of all the beings in the world who had appearances they didn't like, or food they didn't like, or missed the food that they once had that they did like, or suffered both pleasure and pain. You're not the only one. Think about that often. These are situations we all undergo. And the particulars of our appearance and food and pain and pleasure may enthrall us, but you've got to look at the general pattern. When you do, you find that the comings and goings of good and bad, likes and dislikes, start seeming inconsequential. As the general pattern takes the sting or the allure out of your own personal narrative, you can come to the present moment and see more clearly what you're doing in the present moment that's creating pain that doesn't have to be there.

What do you have in the present moment? You've got intentions, or in other words, fabrications. What kind of fabrications do you have here? You've got the breath; that's the bodily fabrication. You've got directed thought and evaluation; those are verbal fabrications. And you've got feelings and perceptions and the intentional element fashioning them; that's mental fabrication. These are the things you want to understand.

You understand them by learning how to master them, bringing them all together — as we're doing right now when we focus on the breath — and approaching their fabrication as a skill. What's the most skillful way to breathe? What's the most skillful way to think about and evaluate your breath? What are the most skillful perceptions to apply to the breath? What kinds of feelings are useful to develop out of the breath?

As you get more and more absorbed in these questions, they really help you get out of your narratives. During my first year as a monk back in Thailand I had a lot of time by myself, a lot more than you do here. And sure enough, a lot of my old narratives from grade school, high school, college, and my family, kept coming back, coming back, coming back. The one thing that kept me from going crazy was the fact that I had something interesting to explore in the present moment: the breath. As I got more of a handle on the breath, got more absorbed in the breath, the fascination with the old narratives began to wane. The understanding began to arise that if I really wanted to comprehend why I was suffering from those old past narratives, I should try to see how I was causing suffering for myself right now in the present moment. The breath was a good way to explore that. Getting absorbed in the breath is a very important way of getting out of those narratives and into the really big issue: Why are you causing stress and suffering for yourself right now? You're not a passive observer. You're not here watching a TV show that somebody else has pre-packaged. You're actively creating the show. It's an interactive game.