https://www.google.com/intl/ta/inputtools/try/
---------------------------------------------------
கடந்த பற்பல ஆண்டு்களில் , தமிழ்நாட்டின் இளைய தலைமுறையில்,மிகப் பெரும்பான்மையானவர்களுக்கு
கர்நாடக இசையில் , சிறிதளவு கூட ஆர்வம் இல்லாதது 'ஏன் 'என்பது குறித்து யோசித்திருக்கிறேன் .
சாஸ்திரீய கர்நாடக இசை , மேட்டுக்குடி , அதிலும் குறிப்பாக பார்ப்பனர்களின் குறியீடு என்பதுதான், அன்றிலிருந்து இன்றுவரை இளம் வயதினரின் கருத்தாக இருந்து வந்திருக்கிறது. அதற்கு பல காரணங்கள் உண்டு.
சினிமாவைத் தவிர கடந்த முப்பது ஆண்டுகளுக்கு முன் , இளைஞர்களுக்கு இசை பற்றி அறிய வாய்ப்பு ஏதும் இல்லை. - குறிப்பாக கிராமத்து மக்களுக்கு. நகர்ப்புற இளைஞர்களுக்கும் ரேடியோ தான் ஒரே வழி. மிகவும் படித்த இளைஞர்கள் கூட ரேடியோவில் ஒலிபரப்பான கர்நாடக இசைக் கச்சேரிகளை கேட்பதில் நாட்டமில்லாமல்தான் இருந்திருக்கின்றனர். ரேடியோ கூட வசதி மிக்க குடும்பங்களில்தான் இருந்தது.
முறையாக கர்நாடக சங்கீதம் பயில இன்று கூட அனைத்து மாணவர்களுக்கும் வசதி இல்லை. மேலும், கர்நாடக இசைப் பாடல்கள் பெரும்பாலும் தெய்வங்கள் பற்றி இருந்தன . இறை நம்பிக்கை இல்லாதவர்களுக்கு இது பிடிக்கவில்லை. அல்லது, கர்நாடக இசையின் சற்றே மெல்லிசைப் பாட்டுக்கள் , யாராவது ஒரு ப்ரபுவைப் புகழ்ந்து , ஒரு யுவதி பாடுவது போல் அமைந்தன. நடனமாதுக்களின் பாட்டுக்களாக இருந்தன.
இரண்டாவதாக , தெலுங்கு தான் கர்நாடக இசையின் மொழியாக நேர்ந்துவிட்டது.
நாடகமும், சினிமாவும்தான், சிறிதேனும் , கர்நாடக இசை ராகங்களை , பொது ஜனங்களுக்கு கொண்டு செல்லும் சாதனங்களாக அமைந்தன,
-
ஹிந்தி சினிமாவுக்கு 1950 முதல் 1966 வரை, இசை அமைத்தவர்கள் பெரும்பாலும் முறையாக ஹிந்துஸ்தானி சாஸ்திரிய இசையில் பயிற்சி பெற்றவர்களாக இருந்தனர். அவர்களுக்கு கிடைத்த வரமாக, லதா மங்கேஷ்கர் என்ற இளம் குயிலும் 1948ல் வந்து சேர்ந்தார். இதனால், பல அருமையான ஹிந்துஸ்தானி ராக மெட்டுக்கள், ஹிந்தி தெரியாதவர்களும் மெய்மறந்து கேட்கக் கிடைத்தன. அவை யாவும் ரேடியோ மூலம் நாடெங்கும் பரவின. ஆனால், ஹிந்தி வெறுப்பு தமிழ்நாட்டில் பரவி வென்றதால் , இளைய சமுதாயம் ஹிந்தி பாடல்களை வெறுத்து ஒதுக்கியது.
--
போதாக்குறைக்கு, இங்குள்ள சங்கீத வித்வான்களும், தமிழில் பாடுவதை எகத்தாளம் செய்தனர்.
மேட்டிமை சிந்தனை இன்றும் மறையவில்லை.
1945 ம் ஆண்டில், தமிழிசை இயக்கம் சீரிய பணியாற்றியது. கல்கி, தி.கே. சிதம்பரநாத முதலியார், சதாசிவம், ராஜாஜி போன்றோர் வழிகாட்ட, ஸ்ரீமதி எம்.எஸ்., ஸ்ரீமதி டி.கே.பட்டம்மாள் , ஸ்ரீமதி என்.சி.வசந்தகோகிலம் , தண்டபாணி தேசிகர், மதுரை மணி அய்யர், போன்றோர் தங்களது ஒப்புயர்வற்ற இனிய குரலில், அருமையான ராகங்களில் நிறைய இசைத் தட்டுக்கள் கொடுத்து , தமிழ் இசைக்கு தங்கள் பணியை செவ்வனே செய்தனர்.
இன்றும் கூட, இந்த இசைத் தட்டுக்கள் இணையில்லாத பொக்கிஷங்களாக விளங்குகின்றன
---
அனைத்தும் அருமையான தமிழில் அமைந்துள்ளன,
இவற்றை அன்றாடம் சிறிது நேரமாவது கேட்டு மனதில் பதியவைத்தால், குறைந்தது 80 ராகங்கள் நமக்கு நினைவில் நின்றுவிடும்.
அது போதும்.
இனி வரும் பக்கங்களில் , அந்த இசையை , பாடல் வரிகளோடு தர முயற்சி செய்யப்பட்டுள்ளது. உங்களது நண்பர்கள் மற்றும் சுற்றத்தில் ,இவற்றைப் பகிர்ந்து இசையின்பம் பெற வாழ்த்துக்கள்.