மன்றாடுவோமாக! ஆண்டவரே, புனிதக் கொடைகளால் நிறைவு பெற்ற நாங்கள் உம்மைப் பணிவுடன் வேண்டுகின்றோம்: அதனால் நாங்கள் நம்புவதை உம் திருமகனின் இறப்பினால் எதிர்நோக்கியிருக்கச் செய்த நீர் நாங்கள் நாடுவதை அவரது உயிர்ப்பினால் வந்தடையச் செய்வீராக..
எங்கள் ஆண்டவராகிய கிறிஸ்து வழியாக உம்மை மன்றாடுகின்றோம். ஆமென்!
மக்கள் மீது மன்றாட்டு:
ஆண்டவரே, உம்முடைய இந்தக் குடும்பத்துக்காக எங்கள் ஆண்டவர் இயேசு கிறிஸ்து துன்புறுத்துவோருக்குத் தம்மைக் கையளிக்கவும் சிலுவையின் கொடுமையைத் தாங்கிக்கொள்ளவும் தயங்கவில்லை; நீர் இக்குடும்பத்தைக் கண்ணோக்கி அருள்புரிவீராக.
எங்கள் ஆண்டவராகிய கிறிஸ்து வழியாக உம்மை மன்றாடுகின்றோம். ஆமென்!
-----------------------------------------
மன்றாடுவோமாக! ஆண்டவரே, தூய மறைநிகழ்வுகளால் நீர் சந்தித்துப் புனிதப்படுத்திய மக்களின் இதயங்களை என்றுமுள்ள உமது அருள் காவலால் காத்திட உம்மை வேண்டுகின்றோம்: இவ்வாறு உமது பரிவிரக்கத்தால் பெற்றுக்கொண்ட நிலையான மீட்பின் உதவிகளை உமது ஆதரவால் அவர்கள் காத்துக்கொள்வார்களாக.
எங்கள் ஆண்டவராகிய கிறிஸ்து வழியாக உம்மை மன்றாடுகின்றோம். ஆமென்!
மக்கள் மீது மன்றாட்டு:
ஆண்டவரே, மனத்தாழ்மையுடையோருக்கு உமது பாதுகாப்புக் கிடைக்கவும் உம்மை நம்பினோரை உமது இரக்கத்தால் என்றும் காக்கவும் உம்மை வேண்டுகின்றோம்: அதனால் பாஸ்கா விழாவை அவர்கள் கொண்டாட உடல் ஒறுத்தலால் மட்டும் அல்லாமல், அதற்கும் மேலாக உள்ளத் தூய்மையும் கொண்டிருப்பார்களாக.
எங்கள் ஆண்டவராகிய கிறிஸ்து வழியாக உம்மை மன்றாடுகின்றோம். ஆமென்!
-----------------------------------------
மன்றாடுவோமாக! ஆண்டவரே, மீட்பு அளிக்கும் கொடைகளால் நிறைவு பெற்ற நாங்கள் உமது இரக்கத்தை இறைஞ்சிக் கேட்கின்றோம்: அதனால் இம்மை வாழ்வில் இந்த அருளடையாளத்தால் எங்களுக்கு உணவூட்ட விரும்பிய நீர் நாங்கள் முடிவில்லா வாழ்வில் பங்கேற்கச் செய்வீராக.
எஎங்கள் ஆண்டவராகிய கிறிஸ்து வழியாக உம்மை மன்றாடுகின்றோம். ஆமென்!
மக்கள் மீது மன்றாட்டு:
இறைவா, உமக்குப் பணிந்து வாழும் மக்களை எல்லாப் பழைய தவறுகளிலிருந்தும் உமது இரக்கம் தூய்மைப்படுத்துவதாக; புனிதமான புதிய வாழ்வுக்கு எங்களைத் தகுதியுள்ளவர்கள் ஆக்குவதாக.
எங்கள் ஆண்டவராகிய கிறிஸ்து வழியாக உம்மை மன்றாடுகின்றோம். ஆமென்!
-----------------------------------------
மன்றாடுவோமாக! எல்லாம் வல்ல இறைவா, எங்கள் உள்ளத்து உணர்வுகளை வலுப்படுத்தியருளும்; இவ்வாறு வணக்கத்துக்கு உரிய மறை நிகழ்வுகள் குறித்துக்காட்டும் உம் திருமகனுடைய இம்மைச் சாவால் எங்களுக்கு நீர் முடிவில்லா வாழ்வு தந்துள்ளீர் என நம்புவோமாக.
எங்கள் ஆண்டவராகிய கிறிஸ்து வழியாக உம்மை மன்றாடுகின்றோம். ஆமென்!
மக்கள் மீது மன்றாட்டு:
ஆண்டவரே, பாஸ்கா அருளடையாளங்களை இடைவிடாது பெற்றுக்கொள்ளவும் வரவிருக்கும் கொடைகளை விரும்பி எதிர்நோக்கவும் உம் நம்பிக்கையாளருக்கு அருள்புரிய உம்மை வேண்டுகின்றோம்: அதனால் தங்களுக்குப் புதுப் பிறப்பு அளித்த மறைநிகழ்வுகளில் அவர்கள் நிலைத்திருந்து இச்செயல்களால் புது வாழ்வுக்கு அழைத்துச் செல்லப்படுவார்களாக.
எங்கள் ஆண்டவராகிய கிறிஸ்து வழியாக உம்மை மன்றாடுகின்றோம். ஆமென்!
-----------------------------------------
மன்றாடுவோமாக! எல்லாம் வல்ல இறைவா, எங்களுக்கு அருள்புரிவீராக; உம் திருமகனின் இரவு விருந்தினால் இவ்வுலகில் ஊட்டம் பெறும் நாங்கள் என்றென்றும் நிறைவு அடையத் தகுதி பெறுவோமாக.
எங்கள் ஆண்டவராகிய கிறிஸ்து வழியாக உம்மை மன்றாடுகின்றோம். ஆமென்!
-----------------------------------------
மன்றாடுவோமாக! என்றென்றுமுள்ள எல்லாம் வல்ல இறைவா, உம்முடைய கிறிஸ்துவின் பாடுகளினாலும் புனித இறப்பினாலும் உயிர்ப்பினாலும் எங்களை மீட்டருளினீர்; உமது இரக்கத்தால் நீர் ஆற்றிய இம்மீட்புச் செயல் எங்களில் நிலைத்திருக்கச் செய்தருளும்: இவ்வாறு இம்மறைபொருளில் பங்கேற்பதன் வழியாக முடிவில்லா இறைப்பற்றுடன் வாழ்வோமாக.
எங்கள் ஆண்டவராகிய கிறிஸ்து வழியாக உம்மை மன்றாடுகின்றோம். ஆமென்!
மக்கள் மீது மன்றாட்டு:
ஆண்டவரே, தங்களது உயிர்ப்பின் நம்பிக்கையில் உம் திருமகனின் சாவை நினைவுகூர்ந்துள்ள உம் மக்கள் மீது உமது ஆசி நிறைவாய் இறங்கிட உம்மை வேண்டுகின்றோம்: அவர்களுக்கு மன்னிப்பு கிடைப்பதாக; அவர்கள் ஆறுதல் அடைவார்களாக; புனித நம்பிக்கை வளர்வதாக; நிலையான மீட்பு உறுதி பெறுவதாக.
எங்கள் ஆண்டவராகிய கிறிஸ்து வழியாக உம்மை மன்றாடுகின்றோம். ஆமென்!
-----------------------------------------
மன்றாடுவோமாக! ஆண்டவரே, உமது அன்பின் ஆவியை எங்கள் மீது பொழிந்தருளும்; இவ்வாறு பாஸ்கா அருளடையாளங்களால் நிறைவு பெற்ற நாங்கள் உமது பரிவிரக்கத்தால் ஒருமனப்பட்டிருக்கச் செய்வீராக.
எங்கள் ஆண்டவராகிய கிறிஸ்து வழியாக உம்மை மன்றாடுகின்றோம். ஆமென்!
மக்கள் மீது மன்றாட்டு:
எல்லாம் வல்ல இறைவன், இன்றைய பாஸ்கா பெருவிழாவின் கொண்டாட்டத்தால் உங்களுக்கு ஆசி வழங்கி பாவத்தின் தாக்குதல்கள் அனைத்திலிருந்தும் இரக்கத்துடன் காப்பாராக. ஆமென்!
அவருடைய ஒரே திருமகனின் உயிர்ப்பினால் நிலைவாழ்வுக்கு உங்களைத் தகுதி பெறச் செய்த இறைவன், அழியா வாழ்வின் கொடைகளால் உங்களை நிரப்புவாராக. ஆமென்!
ஆண்டவருடைய பாடுகளின் நாள்களுக்குப்பின் பாஸ்கா விழாவை மகிழ்ச்சியோடு கொண்டாடும் நீங்கள் முடி வற்ற விண்ணகப் பாஸ்கா விழாவுக்கு அக்களிப்புடன் அவரது அருளால் வந்து சேர்வீர்களாக. ஆமென்!
-----------------------------------------
மன்றாடுவோமாக! இறைவா, உமது திரு அவையை என்றும் கனிவுடன் காத்தருளும்; இவ்வாறு பாஸ்கா மறைநிகழ்வுகளால் அது புதுப்பிக்கப் பெற்று உயிர்ப்பின் பேரொளிக்கு வந்து சேர்வதாக.
எங்கள் ஆண்டவராகிய கிறிஸ்து வழியாக உம்மை மன்றாடுகின்றோம். ஆமென்!