மன்றாடுவோமாக! என்றென்றுமுள்ள எல்லாம் வல்ல இறைவா, இக்குருத்தோலைகளை உமது + ஆசியால் புனிதப் படுத்தியருளும்; அதனால் கிறிஸ்து அரசரை அக்களிப்புடன் பின்பற்றும் நாங்கள் அவர் வழியாக நிலையான எருசலேமுக்குள் வந்து சேர ஆற்றல் பெறுவோமாக.
என்றென்றும் வாழ்ந்து ஆட்சி செய்கின்ற அவர் வழியாக உம்மை மன்றாடுகின்றோம். ஆமென்!
அல்லது
மன்றாடுவோமாக! இறைவா, உம்மை எதிர்நோக்கியிருப்போரின் நம்பிக்கையை வளர்த்து உம்மை வேண்டுவோரின் மன்றாட்டுகளைக் கனிவுடன் கேட்டருளும்; அதனால் வெற்றி வீரரான கிறிஸ்துவின் திருமுன் இன்று குருத்தோலைகளை ஏந்தி வருகின்ற நாங்கள் அவர் வழியாக நற்செயல்களின் பயன்களை உமக்கு அளிப்போமாக.
என்றென்றும் வாழ்ந்து ஆட்சி செய்கின்ற அவர் வழியாக உம்மை மன்றாடுகின்றோம். ஆமென்!
-----------------------------------------
மன்றாடுவோமாக! என்றென்றுமுள்ள எல்லாம் வல்ல இறைவா, தாழ்மையின் எடுத்துக்காட்டை மனித இனம் பின்பற்ற, எங்கள் மீட்பரை மனித உடல் எடுக்கவும் சிலுவையை ஏற்றுக்கொள்ளவும் செய்தீரே; அதனால் நாங்கள் அவரது பொறுமையைக் கற்றுக்கொண்டு அவரது உயிர்ப்பில் பங்கேற்கத் தகுதி பெறுமாறு எங்களுக்குக் கனிவாய் அருள்வீராக.
உம்மோடு தூய ஆவியாரின் ஒன்றிப்பில் இறைவனாய் என்றென்றும் வாழ்ந்து ஆட்சி செய்கின்ற அவர் வழியாக உம்மை மன்றாடுகின்றோம். ஆமென்!
-----------------------------------------
மன்றாடுவோமாக! எல்லாம் வல்ல இறைவா, எங்கள் வலுவின்மையினால் நாங்கள் தவறி வீழ்கின்றோம்; உம் ஒரே திருமகனுடைய பாடுகளின் ஆற்றலினால் நாங்கள் மீண்டும் புத்துயிர் பெற்று எழுந்திட அருள்புரிவீராக.
உம்மோடு தூய ஆவியாரின் ஒன்றிப்பில் இறைவனாய் என்றென்றும் வாழ்ந்து ஆட்சி செய்கின்ற அவர் வழியாக உம்மை மன்றாடுகின்றோம். ஆமென்!
-----------------------------------------
மன்றாடுவோமாக! என்றென்றுமுள்ள எல்லாம் வல்ல இறைவா, ஆண்டவருடைய பாடுகளின் மறைநிகழ்வுகளை நாங்கள் கொண்டாடச் செய்தருளும்; இவ்வாறு நாங்கள் மன்னிப்பைப் பெற்றுக்கொள்ளும் தகுதி பெற அருள்வீராக. உம்மோடு. காணிக்கைமீது மன்றாட்டு ஆண்டவரே, உமது குடும்பத்தின் பலிப்பொருள்களைக் கனிவுடன் கண்ணோக்கியருள உம்மை வேண்டுகின்றோம்: அதனால் புனிதக் கொடைகளில் எங்களைப் பங்குபெறச் செய்யும் நீர் அவற்றின் நிறைவுக்கும் நாங்கள் வந்து சேரச் செய்தருள்வீராக.
எங்கள் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து வழியாக உம்மை மன்றாடுகின்றோம். ஆமென்!
-----------------------------------------
மன்றாடுவோமாக! இறைவா, எங்களுக்காக உம் திருமகன் சிலுவைச் சுமையை ஏற்றுக்கொள்ளத் திருவுளம் கொண்டீரே; அதனால் எதிரியின் ஆதிக்கத்தை எங்களிடமிருந்து அகற்றி உம் அடியார்களாகிய நாங்கள் உயிர்ப்பின் அருளை அடையச் செய்வீராக.
உம்மோடு தூய ஆவியாரின் ஒன்றிப்பில் இறைவனாய் என்றென்றும் வாழ்ந்து, ஆட்சி செய்கின்ற எங்கள் ஆண்டவரும் உம் திருமகனுமாகிய இயேசு கிறிஸ்து வழியாக உம்மை மன்றாடுகின்றோம். ஆமென்!
-----------------------------------------
மன்றாடுவோமாக! இறைவா, உம் திருமகன் சாவுக்குத் தம்மைக் கையளிக்கும் வேளையில் நிலைத்து நிற்கும் அன்பின் புதிய பலியையும் திருவிருந்தையும் தமது திரு அவைக்கு அளித்தார்; அதனால் இப்புனிதமிக்க திரு உணவில் அடிக்கடி பங்குகொள்ளும் நாங்கள் இத்துணை மேலான மறைநிகழ்விலிருந்து அன்பின் முழுமையையும் வாழ்வின் நிறைவையும் பெற்றுக்கொள்ள அருள்புரிவீராக.
உம்மோடு தூய ஆவியாரின் ஒன்றிப்பில் இறைவனாய் என்றென்றும் வாழ்ந்து, ஆட்சி செய்கின்ற எங்கள் ஆண்டவரும் உம் திருமகனுமாகிய இயேசு கிறிஸ்து வழியாக உம்மை மன்றாடுகின்றோம். ஆமென்!
-----------------------------------------
மன்றாடுவோமாக! ஆண்டவரே, உம் திருமகன் கிறிஸ்து தமது இரத்தத்தைச் சிந்தி, உம் அடியார்களுக்காகப் பாஸ்கா மறைநிகழ்வை ஏற்படுத்தினார்; உமது இரக்கத்தை நினைவுகூர்ந்து நிலையான பாதுகாப்பால் அவர்களைப் புனிதப்படுத்துவீராக.
என்றென்றும் வாழ்ந்து ஆட்சி செய்கின்ற அவர் வழியாக உம்மை மன்றாடுகின்றோம். ஆமென்!
அல்லது
மன்றாடுவோமாக! இறைவா, பழைய பாவத்தின் விளைவாக எல்லாத் தலைமுறைக்கும் தொடர்ந்த சாவை எங்கள் ஆண்டவரும் உம் திருமகனுமாகிய கிறிஸ்துவின் பாடுகளால் அழித்தீர்; இவ்வுலக மனிதரின் சாயலை இயற்கையின் நியதியால் பெற்றுள்ளது போல நாங்கள் அவருக்கு ஏற்றவர்களாய் இருப்பதால் விண்ணகத்தின் சாயலை உமது அருளின் புனிதத்தால் பெற்றுக்கொள்ள அருள்புரிவீராக.
எங்கள் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து வழியாக உம்மை மன்றாடுகின்றோம். ஆமென்!