ஸ்ரீ சங்கர அக்ஷரமாலை

-     ம. சத்ய ப்ரஸாத்        (நவம்பர், 1997. கனடா)

--- 

காப்பு (வெண்பா)

தந்தமுடைத்து வ்யாஸருக் குதவவந்த கரிமுகனைச்

சிந்தைபிசகாது நினைத்துருகி, விந்தையெனக் கணத்தில்

துதிப்போர்தம் முன்வினைப்பிணி யகற்றவல்ல கணபதியென்னும்

துதிக்கை யுடையானைப் பணிவோமே!

 ---

காப்பு (குறள் வெண்பா)

சீறுடன்வாழச் சிறுமையகற்றிச் சிந்தைசீர் திருத்தவல்ல

அருணகிரி வாழ்சத் குருவேதுணை

 ---

நூல் (அகவல்)

அன்பினாலாட் கொண்டுவருண் மழைவெள்ளம் பொழிகின்ற,

உன்திருவி ழியினாலே கவர்ந்திட்ட பெருமானே!

ஞானமேது மில்லாம லலையுமென துள்ளத்தை

ஞாயிரொளி போலநீயுங் கதிர்வீசச் செய்வாயே.

---

ஆசையுட னோடிவந்துன் மலரடிதொ ழூதவென்,

பூசையின்சி றப்புணர்ந்து கடைக்கண்பார் வைகாட்டி,

ஓசையற்ற தக்ஷிணா மூர்த்தியான யிறையோனே!

ஓங்காரப் பொருளுணர்த்த விக்கணமே வருவாயே.

---

இன்சொலினு றைவிடமாய் தவக்கோல மாயமர்ந்து,

இருமாப்பே யில்லாஅத் வைதமுழுப் பொருளோனே!

வருவாய்க்கடி பணிந்தென்போ லறியாம லுழல்வோரை,

வருவாய்யென் றழைத்துஞான வமுதூட்ட வேண்டுகிறேன்.

---

ஈனமாய்வாழ் வார்க்கும்பல தருமமெடுத் துரைத்து,

ஈன்றதாய்போ லன்புடன்நல் வழியினையே காட்டும்,

உண்மையினுரு வானதிருக் கைலயின் நாதராம்,

உமையொருபா கம்கொண்ட வன்பதம்ப ணிந்தேனே!

--- 

உறுதியுட னோடிவந்துன் தாடைந்த வெளியோனைச்,

சிறிதும்சோதி யாமலுன்னு ளைக்கியமாக் கிக்கோண்டு,

ஈராறாண் டுகளாய்யான் கட்டும்மனக் கோவிலுள்ளே,

ஓராறுமுக னேபுகுபின் கட்டுவேலை பூரணமே!

--- 

ஊக்கமளித் தொன்றுமறி யாப்பேதை பக்திக்கு,

ஊன்றுகோலா யுன்னுபதே சம்துணையி ருந்துமென்,

ஊர்சுற்றும் குருவிபோல்நி லையறியா மனந்தன்னில்,

ஊற்றுநீர்போல் பொங்குபக்தி வந்தடைவ தெந்நாளோ?

--- 

எட்டும்தூர மிருந்தால்சூரி யனேசுடுவா னென்பதாலே,

எட்டுகோடி ஞாயிறென்ற இருமாப்பி னால்பிரிந்து,

கிட்டாத்தொ லைவில்நீயும் எட்டியேயி ருந்தாலும்,

ஒட்டுமெந்தன் பக்தியுன்னை இறுகக்கட்டி யிழுத்திடுமே!

--- 

ஏங்கிப்பரித வித்திரையருளிற் குக்காத்திருக்கும் குற்

ஏவலனைக்கை விடாமல்நற்கா வலனாய்விரைந் தோடி,

ஏமாற்றாமல் யெப்பொழுதுமரு கிருந்துகீழோ னெனை,

ஏணிபோலமே லேற்றநின்தாள் சரணமடைந் தேனே!

--- 

ஐம்புலத்தை யுன்னிடத்தி லொப்படைக்கிறேன்; மாற்றாய்,

அறுசுவையு ணவினுமருஞ் சுவைநினதருள் தந்து,

எழுபிறப்பிலு முனைமறவா நிலைக்கிட்டுச் சென்று,

எட்டுத்திக்கிலு முனதழகிய வடிவொன்றே காட்டு.

--- 

ஒப்பற்ற பரம்பொருளே, பற்றற்ற தவச்சுடரே!

துப்பற்ற வெனைக்கழுகெ னக்கவர்ந்த முதலோனே!

ஊழ்வினைதீர்க் கத்தறிகெட் டோடுமெந்தன் மனந்தன்னை,

உள்திருப்பி யெனையறிய வழிசெய்வாய் ஐயனே!

--- 

ஓடியா டிப்பாடித் துள்ளிமகிழ்ந் துலவினாலும்,

ஓலமிட் டொடுங்கிவெம்மி யழுதுபு ரண்டாலும்,

பிறவிக்க டல்கடக்கு மோடமான குருநாதா,

பிரியாம லருகிருக்க ஓடோடி நீவாவா!

--- 

ஔடதம்நின் கருணையா மறியாமை போக்குமது,

ஔவைக்குக் கொடுத்துமெய் யழகுமெய் கெடுத்துப்பின்

கூனுடன்தேன் போன்றினிய கவியைத்தந் தோனே,நீ,

கூறுவதெது வோவஃதே தொண்டர்தமக் காணை!

--- 

நீர்நிறை கங்கை வாழி!

நீருடல் சங்கரர் வாழி!

நீரக்ஷரமாலை ஓதி வாழி!

--- 

திருச்சிற்றம்பலம்!

-x-


 

 

Back to table of contents