மத்தேயு மாற்கு லூக்கா யோவான் நற்செய்திகளின் தொகுப்பு
1. ஒருவர் மற்றவருடைய கால்களைக் கழுவுங்கள்
எருசலேம் மேல்மாடி கிபி 33 வியாழன்
புளிப்பற்ற-அப்பவிழாக் கொண்டாடும் முதல் நாளும் வந்தது. அன்றுதான் பாஸ்கா-ஆடு பலியிடப்படவேண்டும்.
இயேசு பேதுருவிடமும் யோவானிடமும், ’நாம் பாஸ்கா விருந்துண்ண நீங்கள் போய் ஏற்பாடு செய்யுங்கள்’ என்று சொல்லி அனுப்பினார். அதற்கு அவர்கள், ’நாங்கள் எங்கே ஏற்பாடு செய்யவேண்டுமென நீர் விரும்புகிறீர்?’ என்று கேட்டார்கள்.
எருசலேம் மேல்மாடி
இயேசு அவர்களிடம், ’நீங்கள் புறப்பட்டு நகருக்குள் செல்லுங்கள். மண்குடத்தில் தண்ணீர் சுமந்துகொண்டு, ஓர் ஆள் உங்களுக்கு எதிரே வருவார். அவர் பின்னே செல்லுங்கள். அவர் செல்லும் வீட்டிற்குள் நீங்களும் சென்று, அந்த வீட்டின் உரிமையாளரிடம், எனது நேரம் நெருங்கி வந்து விட்டது. ’நான் என் சீடர்களோடு பாஸ்காவிருந்து உண்பதற்கான அறை எங்கே? என்று போதகர் உம்மிடம் கேட்கச்சொன்னார்’ எனக் கூறுங்கள். அவர் மேல்மாடியில், ஒரு பெரிய அறையைக் காட்டுவார். அது தேவையான வசதிகளோடு தயார்நிலையில் இருக்கும். அங்கே நமக்கு ஏற்பாடு செய்யுங்கள்’ என்றார்.
சீடர்கள் சென்று, நகரை அடைந்து, தங்களுக்கு அவர் சொல்லியவாறே அனைத்தையும் கண்டு, பாஸ்கா விருந்துக்கு ஏற்பாடு செய்தார்கள்.
நம்மில் பெரியவர் யார்?
மாலைவேளையானதும், இயேசு பன்னிரு திருத்தூதரோடு வந்து பந்தியில் அமர்ந்தார். பாஸ்காவிழா தொடங்கவிருந்தது.
தாம் இவ்வுலகத்தை விட்டுத் தந்தையிடம் செல்வதற்கான நேரம் வந்துவிட்டது என்பதை இயேசு அறிந்திருந்தார். உலகில் வாழ்ந்த தமக்குரியோர்மேல் அன்புகொண்டிருந்த அவர், அவர்கள்மேல் இறுதிவரையும் அன்பு செலுத்தினார்.
இயேசுவைக் காட்டிக்கொடுக்கும் எண்ணத்தை, அலகை, சீமோனின் மகனாகிய யூதாசு இஸ்காரியோத்தின் உள்ளத்தில் எழச் செய்திருந்தது.
மேலும், தங்களுக்குள்ளே பெரியவராக எண்ணப்படவேண்டியவர் யார்? என்ற விவாதம் சீடர்களிடையே எழுந்தது.
இயேசு சீடரின் கால்களைக் கழுவினார்
தந்தை அனைத்தையும் தம் கையில் ஒப்படைத்துள்ளார் என்பதையும், தாம் கடவுளிடமிருந்து வந்ததுபோல், அவரிடமே திரும்பச் செல்லவேண்டும் என்பதையும் இயேசு அறிந்தார். இரவுணவு வேளையில், பந்தியிலிருந்து எழுந்து, தம் மேலுடையைக் கழற்றி வைத்துவிட்டு, ஒரு துண்டை எடுத்து இடுப்பில் கட்டிக்கொண்டார்.
பின்னர், ஒரு குவளையில் தண்ணீர் எடுத்து, சீடர்களுடைய காலடிகளைக் கழுவி, இடுப்பில் கட்டியிருந்த துண்டால் துடைக்கத் தொடங்கினார்.
சீமோன் பேதுருவிடம் இயேசு வந்தபோது, அவர், ’ஆண்டவரே, நீரா என் காலடிகளைக் கழுவப்போகிறீர்?’ என்று கேட்டார். இயேசு மறுமொழியாக, ’நான் செய்வது இன்னதென்று இப்போது உனக்குப் புரியாது; பின்னரே புரிந்து கொள்வாய்’ என்றார்.
பேதுரு அவரிடம், ’நீர் என் காலடிகளைக் கழுவ விடவேமாட்டேன்’ என்றார். இயேசு அவரைப் பார்த்து, ’நான் உன் காலடிகளைக் கழுவாவிட்டால், என்னோடு உனக்குப் பங்கு இல்லை’ என்றார்.
சீமோன் பேதுருவிடம் இயேசு வந்தபோது, அவர், ’ஆண்டவரே, நீரா என் காலடிகளைக் கழுவப்போகிறீர்?’ என்று கேட்டார். இயேசு மறுமொழியாக, ’நான் செய்வது இன்னதென்று இப்போது உனக்குப் புரியாது; பின்னரே புரிந்து கொள்வாய்’ என்றார்.
பேதுரு அவரிடம், ’நீர் என் காலடிகளைக் கழுவ விடவேமாட்டேன்’ என்றார். இயேசு அவரைப் பார்த்து, ’நான் உன் காலடிகளைக் கழுவாவிட்டால், என்னோடு உனக்குப் பங்கு இல்லை’ என்றார்.
அப்போது சீமோன் பேதுரு, ’அப்படியானால் ஆண்டவரே, என் காலடிகளை மட்டும்-அல்ல, என் கைகளையும் தலையையும்கூடக் கழுவும்’ என்றார்.
இயேசு அவரிடம், ’குளித்துவிட்டவர், தம் காலடிகளைமட்டும் கழுவினால் போதும். அவர் தூய்மையாகிவிடுவார். நீங்களும் தூய்மையாய் இருக்கிறீர்கள். ஆனாலும் அனைவரும் தூய்மையாய் இல்லை’ என்றார். தம்மைக் காட்டிக்கொடுப்பவன் எவன் என்று அவருக்கு ஏற்கெனவே தெரிந்திருந்தது. எனவேதான், ’உங்களுள் அனைவரும் தூய்மையாய் இல்லை’ என்றார்.
நீங்களும் ஒருவர் மற்றவருடைய கால்களைக் கழுவுங்கள்
அவர்களுடைய காலடிகளைக் கழுவியபின், இயேசு தம் மேலுடையை அணிந்துகொண்டு, மீண்டும் பந்தியில் அமர்ந்து அவர்களிடம் கூறியது:
’நான் உங்களுக்குச் செய்தது என்னவென்று உங்களுக்குப் புரிந்ததா? நீங்கள் என்னைப் ’போதகர்’ என்றும் ’ஆண்டவர்’ என்றும் அழைக்கிறீர்கள். நீங்கள் அவ்வாறு கூப்பிடுவது முறையே. நான் போதகர்தான், ஆண்டவர்தான்.
ஆகவே, ஆண்டவரும் போதகருமான நான் உங்கள் காலடிகளைக் கழுவினேன் என்றால், நீங்களும், ஒருவர் மற்றவருடைய காலடிகளைக் கழுவக் கடமைப்பட்டிருக்கிறீர்கள். நான் செய்ததுபோல நீங்களும் செய்யுமாறு, நான் உங்களுக்கு முன்மாதிரி காட்டினேன்.
யார் பெரியவர்? பந்தியில் அமர்ந்திருப்பவரா? அல்லது பணிவிடைபுரிபவரா? பந்தியில் அமர்ந்திருப்பவர் அல்லவா? நான் உங்கள் நடுவே பணிவிடைபுரிபவனாக இருக்கிறேன்.
பணியாளர், தலைவரைவிடப் பெரியவர் அல்ல; தூது அனுப்பப்பட்டவரும், அவரை அனுப்பியவரைவிடப் பெரியவர் அல்ல என உறுதியாக உங்களுக்குச் சொல்கிறேன்.
நான் அனுப்புகிறவரை ஏற்றுக்கொள்பவர், என்னையே ஏற்றுக்கொள்கிறார். என்னை ஏற்றுக்கொள்பவர், என்னை அனுப்பியவரையே ஏற்றுக்கொள்கிறார் என உறுதியாக உங்களுக்குச் சொல்கிறேன்.
உங்களுள் பெரியவர் சிறியவராக மாறவேண்டும்
இயேசு அவர்களிடம், ’பிறஇனத்தவரின் அரசர்கள், மக்களை அடக்கி ஆளுகின்றார்கள்; அதிகாரம் காட்டுகின்றவர்கள் நன்மைசெய்பவர்கள் என அழைக்கப்படுகின்றார்கள். ஆனால், நீங்கள் அப்படிச் செய்யலாகாது. உங்களுள் பெரியவர் சிறியவராகவும், ஆட்சிபுரிபவர் தொண்டு-புரிபவராகவும் மாறவேண்டும்.
நீங்கள் அரியணையில் அமர்வீர்கள்
நான் சோதிக்கப்படும்போது என்னோடு இருந்தவர்கள் நீங்களே. என் தந்தை எனக்கு ஆட்சியுரிமை கொடுத்திருப்பதுபோல, நானும் உங்களுக்குக் கொடுக்கிறேன். ஆகவே, என் ஆட்சி வரும்போது, நீங்கள் என்னோடு பந்தியில் அமர்ந்து, உண்டுகுடிப்பீர்கள்; இஸ்ரயேலின் பன்னிரு-குலத்தவருக்கும் தீர்ப்பு-வழங்க அரியணையில் அமர்வீர்கள்.
உங்களுள் ஒருவன் என்னைக் காட்டிக்கொடுப்பான்
இவற்றை நீங்கள் அறிந்து, அதன்படி நடப்பீர்கள் என்றால், நீங்கள் பேறுபெற்றவர்கள்.
’உங்கள் அனைவரையும்பற்றி நான் பேசவில்லை. நான் தேர்ந்துகொண்டவர்கள் யாரென எனக்குத் தெரியும். எனினும், ‘என்னோடு உண்பவனே என்மேல் பாய்ந்தான்’ என்னும் மறைநூல்வாக்கு நிறைவேறியாக வேண்டும். அது நிறைவேறும்போது, ’இருக்கிறவர் நானே’ என்று நீங்கள் நம்புமாறு, இப்போதே, அது நிறைவேறுமுன்பே, அதுபற்றி உங்களுக்குச் சொல்லிவைக்கிறேன்’
பாஸ்கா விருந்து
அப்போது அவர் அவர்களை நோக்கி, ’நான் துன்பங்கள்படுமுன், உங்களோடு இந்தப் பாஸ்கா விருந்தை உண்பதற்கு மிகமிக ஆவலாய் இருந்தேன். ஏனெனில், இறையாட்சியில் இது நிறைவேறும்வரை, இதை நான் உண்ணமாட்டேன் என்று உங்களுக்குச் சொல்கிறேன்’ என்றார்.
பின்பு, அவர் கிண்ணத்தை எடுத்து, கடவுளுக்கு நன்றி செலுத்தி, அவர்களிடம், ’இதைப் பெற்று, உங்களுக்குள்ளே பகிர்ந்துகொள்ளுங்கள். ஏனெனில், இதுமுதல் இறையாட்சி வரும்வரை, திராட்சைப்பழ இரசத்தைக் குடிப்பதில்லை என, நான் உங்களுக்குச் சொல்கிறேன்’ என்றார்.
இப்படிச் சொன்னபின், அவர்கள் பந்தியில் அமர்ந்து உண்டுகொண்டிருந்த பொழுது, இயேசு உள்ளம் கலங்கியவராய், ’உங்களுள் ஒருவன் என்னைக் காட்டிக்கொடுப்பான் என உறுதியாக உங்களுக்குச் சொல்கிறேன்’ என்று திட்டவட்டமாகக் கூறினார்.
யாரைப்பற்றி அவர் இப்படிக் கூறினார்? என்று தெரியாமல், சீடர்கள் குழப்பமுற்று ஒருவரை-ஒருவர் நோக்கினார்கள்.
அதற்கு அவர், ‘அவன் பன்னிருவருள் ஒருவன்; என்னுடன் பாத்திரத்தில் தொட்டு உண்பவனே என்னைக் காட்டிக்கொடுப்பான். மானிடமகன் தம்மைப்பற்றி மறைநூலில் எழுதியுள்ளவாறே போகிறார். ஆனால் ஐயோ! அவரைக் காட்டிக்கொடுக்கிறவனுக்குக் கேடு! அம்மனிதன் பிறவாதிருந்தால் அவனுக்கு நலமாய் இருந்திருக்கும்’ என்றார்.
ஆண்டவரே அது நானோ?
அப்பொழுது அவர்கள், ’நம்மில் இச்செயலைச் செய்யப்போகிறவர் யார்?’ என்று தங்களுக்குள்ளே கேட்கத்தொடங்கினார்கள். அவர்கள் மிகவும் வருத்தமுற்றவர்களாய், ’ஆண்டவரே, அது நானோ?’ என ஒவ்வொருவரும் அவரிடம் கேட்கத்தொடங்கினார்கள்.
அவரைக் காட்டிக்கொடுத்த யூதாசும், ’ரபி, நானோ?’ என அவரிடம் கேட்க, இயேசு, ’நீயே சொல்லிவிட்டாய்’ என்றார்.
இயேசுவின் அன்புச்சீடரிடம் பேதுரு சைகை
இயேசுவின் சீடருள் ஒருவர், அவர் அருகில், அவர் மார்புப் பக்கமாய்ச் சாய்ந்திருந்தார். அவர்மேல் இயேசு அன்புகொண்டிருந்தார். சீமோன் பேதுரு அவருக்குச் சைகை காட்டி, ’யாரைப்பற்றிக் கூறுகிறார் எனக்கேள்’ என்றார்.
இயேசுவின் அருகில், அவர் மார்புப் பக்கமாய்ச் சாய்ந்திருந்த அவர், ’ஆண்டவரே அவன் யார்?’ என்று கேட்டார்.
இயேசு மறுமொழியாக, ’நான் யாருக்கு அப்பத்துண்டைத் தோய்த்துக் கொடுக்கிறேனோ அவன்தான்’ எனச் சொல்லி, அப்பத்துண்டைத் தோய்த்துச் சீமோன் இஸ்காரியோத்தின் மகனாகிய யூதாசுக்குக் கொடுத்தார்.
அவன் அப்பத்துண்டைப் பெற்றதும், சாத்தான் அவனுக்குள் நுழைந்தான். இயேசு அவனிடம், ’நீ செய்யவிருப்பதை விரைவில் செய்’ என்றார்.
இயேசு ஏன் அவனிடம் இப்படிக் கூறினார்? என்பதைப் பந்தியில் அமர்ந்திருந்தோர் யாரும் புரிந்துகொள்ளவில்லை. பணப்பை யூதாசிடம் இருந்ததால், திருவிழாவுக்குத் தேவையானதை வாங்கவோ, ஏழைகளுக்கு ஏதாவது கொடுக்கவோ, இயேசு அவனிடம் கூறியிருக்கலாம் என்று சிலர் நினைத்துக்கொண்டனர்.
யூதாசு, அப்பத்துண்டைப் பெற்றுக் கொண்டவுடன் வெளியே போனான். அது இரவு நேரம்.
2. இயேசுவின் திருவிருந்து
இயேசுவின் திருவிருந்து எருசலேம் மேல்மாடி கிபி 33 வியாழன்
அவர்கள் உணவருந்திக்கொண்டிருந்தபொழுது, இயேசு அப்பத்தை எடுத்துக் கடவுளுக்கு நன்றிசெலுத்தி, அதைப் பிட்டுச் சீடருக்குக் கொடுத்து, ’இதைப் பெற்று உண்ணுங்கள்; இது உங்களுக்காகக் கொடுக்கப்படும் எனது உடல் ’இதை என் நினைவாகச் செய்யுங்கள்’ என்றார்.
அப்படியே, உணவு-அருந்திய பின்பு, அவர் கிண்ணத்தை எடுத்துக் கடவுளுக்கு நன்றி செலுத்தி, அவர்களுக்குக் கொடுத்து, 'இதில் உள்ளதை அனைவரும் பருகுங்கள்; ஏனெனில், இந்தக் கிண்ணம் உங்களுக்காகச் சிந்தப்படுகிற எனது இரத்தத்தால் நிலைப்படுத்தப்படும் புதிய உடன்படிக்கை. பலருடைய பாவமன்னிப்புக்காக சிந்தப்படும் இரத்தம். இதில் உள்ளதை அனைவரும் பருகுங்கள் என்றார். அனைவரும் அதிலிருந்து பருகினர்.
இனிமேல், என் தநதையின் இறையாட்சி வரும் அந்நாளில்தான் நான் உங்களோடு திராட்சைப்பழ இரசத்தைக் குடிப்பேன். அதுவரை ஒருபோதும் குடிக்கமாட்டேன் என நான் உங்களுக்குச் சொல்கிறேன் என்றார்.
3. மும்முறை நீ என்னை மறுதலிப்பாய்
இயேசுவின் மரணம் இயேசுவின் மாட்சி
யூதாசு வெளியேபோனபின் இயேசு, ’இப்போது மானிடமகன் மாட்சி-பெற்றுள்ளார். அவர்வழியாகக் கடவுளும் மாட்சி-பெற்றுள்ளார். கடவுள் அவர்வழியாக மாட்சி-பெற்றாரானால், கடவுளும் தம்வழியாய் அவரை மாட்சிப்படுத்துவார்; அதையும் உடனே செய்வார்.
பிள்ளைகளே, இன்னும் சிறிதுகாலமே உங்களோடு இருப்பேன். நீங்கள் என்னைத் தேடுவீர்கள். ஆனால், நான் போகும் இடத்திற்கு உங்களால் வர இயலாது. இதையே யூதர்களுக்குச் சொன்னேன்; இப்போது உங்களுக்கும் சொல்கிறேன்.
புதிய கட்டளை
’ஒருவர் மற்றவரிடம் அன்புசெலுத்துங்கள்’ என்னும் புதிய கட்டளையை நான் உங்களுக்குக் கொடுக்கிறேன். நான் உங்களிடம் அன்புசெலுத்தியது போல, நீங்களும், ஒருவர் மற்றவரிடம் அன்புசெலுத்துங்கள்.
நீங்கள், ஒருவர் மற்றவருக்குச் செலுத்தும் அன்பிலிருந்து, நீங்கள் என் சீடர்கள் என்பதை எல்லாரும் அறிந்துகொள்வர்’ என்றார்.
மும்முறை நீ என்னை மறுதலிப்பாய்
சீமோன் பேதுரு இயேசுவிடம், ’ஆண்டவரே, நீர் எங்கே போகிறீர்?’ என்று கேட்டார். இயேசு மறுமொழியாக, ’நான் போகுமிடத்திற்கு என்னைப் பின்தொடர்ந்து வர, இப்போது உன்னால் இயலாது; பின்னரே என்னைப் பின்தொடர்வாய்’ என்றார்.
பேதுரு அவரிடம், ’ஆண்டவரே, ஏன் இப்போது நான் உம்மைப் பின்தொடர இயலாது? உமக்காக என் உயிரையும் கொடுப்பேன்’ என்றார்.
இயேசு அவர்களிடம், ’இன்றிரவு, நீங்கள் அனைவரும் என்னைவிட்டு ஓடிப்போவீர்கள். ஏனெனில், ’ஆயரை வெட்டுவேன், அப்போது, மந்தையிலுள்ள ஆடுகள் சிதறடிக்கப்படும்’ என்று மறைநூலில் எழுதியுள்ளது. ஆனால், நான் உயிருடன் எழுப்பப்பட்டபின்பு, உங்களுக்கு முன்பே கலிலேயாவுக்குப் போவேன்’ என்றார்.
அதற்குப் பேதுரு அவரிடம், ‘எல்லாரும் உம்மைவிட்டு ஓடிப்போய்விட்டாலும், நான் ஒருபோதும் ஓடிப்போக மாட்டேன்’ என்றார்.
இயேசு, ’சீமோனே, சீமோனே, இதோ கோதுமையைப்போல் உங்களைப் புடைக்கச் சாத்தான் அனுமதி கேட்டிருக்கிறான். ஆனால், உனது நம்பிக்கை தளராதிருக்க, நான் உனக்காக மன்றாடினேன். நீ மனந்திரும்பியபின் உன் சகோதரர்களை உறுதிப்படுத்து’ என்றார்.
அதற்கு பேதுரு, ’ஆண்டவரே, உம்மோடு சிறையிடப்படுவதற்கும் ஏன், சாவதற்கும் நான் ஆயத்தமாய் உள்ளேன்’ என்றார்
இயேசு அவரைப் பார்த்து, ’எனக்காக உயிரையும் கொடுப்பாயோ? பேதுருவே, இன்றிரவில் ″என்னைத் தெரியாது″ என, மும்முறை நீ மறுதலிக்குமுன் சேவல் கூவாது என உறுதியாக உனக்குச் சொல்கிறேன். சேவல் இருமுறை கூவுமுன், மும்முறை நீ என்னை மறுதலிப்பாய்’ என்றார்.
பேதுரு அவரிடம், ’நான் உம்மோடு சேர்ந்து இறக்கவேண்டியிருந்தாலும், உம்மை ஒருபோதும் மறுதலிக்கமாட்டேன்’ என்று மிக அழுத்தமாகச் சொன்னார். அவ்வாறே சீடர்கள் அனைவரும் சொன்னார்கள்.
கொடியவருள் ஒருவராகக் கருதப்பட்டார்
இயேசு சீடர்களிடம், ’நான் உங்களைப் பணப்பையோ, வேறு பையோ, மிதியடியோ எதுவுமில்லாமல் அனுப்பியபோது, உங்களுக்கு ஏதாவது குறை இருந்ததா?’ என்று கேட்டார். அவர்கள், ’ஒரு குறையும் இருந்ததில்லை’ என்றார்கள்.
அவர் அவர்களிடம், ’ஆனால், இப்பொழுது, பணப்பை உடையவர் அதை எடுத்துக்கொள்ளட்டும்; வேறு பை உடையவரும் அவ்வாறே செய்யட்டும். வாள் இல்லாதவர், தம் மேலுடையை விற்று, வாள் வாங்கிக்கொள்ளட்டும். ஏனெனில், நான் உங்களுக்குச் சொல்கிறேன்: ’கொடியவருள் ஒருவராகக் கருதப்பட்டார்’ என்று மறைநூலில் எழுதப்பட்டுள்ளது, என் வாழ்வில் நிறைவேற வேண்டும். என்னைப்பற்றியவை எல்லாம் நிறைவேறி வருகின்றன’ என்றார்.
அவர்கள் ’ஆண்டவரே, இதோ! இங்கே இரு வாள்கள் உள்ளன’ என்றார்கள். இயேசு அவர்களிடம், ’போதும் 'என்றார்.
4. வழியும் உண்மையும் வாழ்வும் நானே
எருசலேம் மேல்மாடி கிபி 33 கிபி 33 வியாழன்
வழியும் உண்மையும் வாழ்வும் நானே
மீண்டும் இயேசு, ’நீங்கள் உள்ளம் கலங்கவேண்டாம். கடவுளிடம் நம்பிக்கை கொள்ளுங்கள். என்னிடமும் நம்பிக்கை கொள்ளுங்கள். தந்தை வாழும் இடத்தில் உறைவிடங்கள் பல உள்ளன. அப்படி இல்லையெனில், ’உங்களுக்கு இடம் ஏற்பாடுசெய்யப்போகிறேன்’ என்று சொல்லியிருப்பேனா? நான் போய் உங்களுக்கு இடம் ஏற்பாடுசெய்தபின், திரும்பிவந்து, உங்களை என்னிடம் அழைத்துக்கொள்வேன். அப்போது, நான் இருக்கும் இடத்திலேயே நீங்களும் இருப்பீர்கள். நான் போகுமிடத்துக்கு வழி உங்களுக்குத் தெரியும்’ என்றார்.
தோமா அவரிடம், ’ஆண்டவரே, நீர் எங்கே போகிறீர் என்றே எங்களுக்குத் தெரியாது. அப்படியிருக்க, நீர் போகுமிடத்துக்கான வழியை நாங்கள் எப்படித் தெரிந்துகொள்ள இயலும்?’ என்றார்.
இயேசு அவரிடம், 'வழியும் உண்மையும் வாழ்வும் நானே. என் வழியாய் அன்றி எவரும் தந்தையிடம் வருவதில்லை.
’நீங்கள் என்னை அறிந்திருந்தால் என் தந்தையையும் அறிந்திருப்பீர்கள். இது முதல் நீங்கள் தந்தையை அறிந்திருக்கிறீர்கள். அவரைக் கண்டுமிருக்கிறீர்கள்’ என்றார்.
தந்தை என்னுள் இரக்கிறார்
அப்போது பிலிப்பு, அவரிடம், ’ஆண்டவரே, தந்தையை எங்களுக்குக் காட்டும்; அதுவே போதும்’ என்றார்.
இயேசு அவரிடம் கூறியது: ’பிலிப்பே, இவ்வளவு காலம் நான் உங்களோடு இருந்தும், நீ என்னை அறிந்துகொள்ளவில்லையா? என்னைக் காண்பது தந்தையைக் காண்பது ஆகும். அப்படியிருக்க, ’தந்தையை எங்களுக்குக் காட்டும்’ என்று நீ எப்படிக் கேட்கலாம்? நான் தந்தையினுள்ளும் தந்தை என்னுள்ளும் இருப்பதை நீ நம்புவதில்லையா? நான் உங்களுக்குக் கூறியவற்றை நானாகக் கூறவில்லை. என்னுள் இருந்துகொண்டு செயலாற்றுபவர் தந்தையே. நான் தந்தையுள் இருக்கிறேன்; தந்தை என்னுள் இருக்கிறார். நான் சொல்வதை நம்புங்கள்; என் வார்த்தையின் பொருட்டு நம்பாவிட்டால் என் செயல்களின் பொருட்டாவது நம்புங்கள்.
நான் செய்யும் செயல்களை என்னிடம் நம்பிக்கை கொள்பவரும் செய்வார்; ஏன், அவற்றைவிடப் பெரியவற்றையும் செய்வார். ஏனெனில் நான் தந்தையிடம் போகிறேன் என உறுதியாக உங்களுக்குச் சொல்கிறேன். நீங்கள் என் பெயரால் கேட்பதையெல்லாம் நான் செய்வேன். இவ்வாறு, தந்தை மகன்வழியாய் மாட்சி பெறுவார். நீங்கள் என்பெயரால் எதை கேட்டாலும் செய்வேன். நீங்கள் என்மீது அன்புகொண்டிருந்தால் என் கட்டளைகளைக் கடைப்பிடிப்பீர்கள்.
5. தூய ஆவியார் உங்களுக்குள் இருக்கும் துணையாளர்
கிபி 33 வியாழன்
″உங்களோடு என்றும் இருக்கும்படி, மற்றொரு துணையாளரை உங்களுக்கத் தருமாறு நான் தந்தையிடம் கேட்பேன். தந்தை அவரை உங்களுக்கு அருள்வார். அவரே உண்மையை வெளிப்படுத்தும் தூய ஆவியார்.
உலகம் அவரை ஏற்றுக்கொள்ள இயலாது. ஏனெனில், அது அவரைக் காண்பதுமில்லை, அறிவதுமில்லை. நீங்கள் அவரை அறிந்திருக்கிறீர்கள். ஏனெனில், அவர் உங்களோடு தங்கியிருக்கிறார்; உங்களுக்குள்ளும் இருக்கிறார்.
நான் உங்களைத் திக்கற்றவர்களாக விடமாட்டேன். உங்களிடம் திரும்பி வருவேன். இன்னும் சிறிதுகாலத்தில் உலகம் என்னைக் காணாது. ஆனால் நீங்கள் என்னைக் காண்பீர்கள். ஏனெனில், நான் வாழ்கிறேன்; நீங்களும் வாழ்வீர்கள். நான் தந்தையுள்ளும், நீங்கள் என்னுள்ளும், நான் உங்களுள்ளும் இருப்பதை அந்நாளில் நீங்கள் அறிந்துகொள்வீர்கள். என் கட்டளைகளை ஏற்றுக் கடைப்பிடிப்பவர், என்மீது அன்புகொண்டுள்ளார். என்மீது அன்பு கொள்பவர்மீது, தந்தையும் அன்புகொள்வார். நானும் அவர்மீது அன்புகொண்டு, அவருக்கு என்னை வெளிப்படுத்துவேன்.
″யூதா - இஸ்காரியோத்து யூதாசு அல்ல, மற்றவர் - அவரிடம், ’ஆண்டவரே, நீர் உம்மை உலகிற்கு வெளிப்படுத்தாமல், எங்களுக்கு வெளிப்படுத்தப் போவதாகச் சொல்கிறீரே, ஏன்?’ என்று கேட்டார்.
அதற்கு இயேசு பின்வருமாறு கூறினார்: ’என்மீது அன்புகொண்டுள்ளவர் நான் சொல்வதைக் கடைப்பிடிப்பார். என் தந்தையும் அவர்மீது அன்புகொள்வார். நாங்கள் அவரிடம் வந்து, அவருடன் குடிகொள்வோம். என்மீது அன்பு கொண்டிராதவர் நான் சொல்வதைக் கடைப்பிடிப்பதில்லை. நீங்கள் கேட்கும் வார்த்தைகள் என்னுடையவை அல்ல; அவை என்னை அனுப்பிய தந்தையுடையவை. உங்களோடு இருக்கும்போதே இவற்றையெல்லாம் உங்களிடம் சொல்லிவிட்டேன்.
என் பெயரால் தந்தை அனுப்பப்போகிற தூயஆவியாராம் துணையாளர், உங்களுக்கு அனைத்தையும் கற்றுத்தருவார்; நான் கூறிய அனைத்தையும் உங்களுக்கு நினைவூட்டுவார்.
அமைதியை உங்களுக்கு விட்டுச் செல்கிறேன்; என் அமைதியையே உங்களுக்கு அளிக்கிறேன். நான் உங்களுக்குத் தரும் அமைதி, உலகம் தரும் அமைதி போன்றது அல்ல. நீங்கள் உள்ளம் கலங்க வேண்டாம்; மருள வேண்டாம்.
’நான் போகிறேன், பின் உங்களிடம் திரும்பி வருவேன்’ என்று நான் உங்களிடம் சொன்னதைக் கேட்டீர்களே! நீங்கள் என்மீது அன்புகொண்டிருந்தால், நான் தந்தையிடம் செல்வதுபற்றி மகிழ்ச்சி அடைவீர்கள். ஏனெனில் தந்தை என்னைவிடப் பெரியவர்.
இவை நிகழும்போது நீங்கள் நம்புமாறு இப்போதே, இவை நிகழுமுன்பே, சொல்லிவிட்டேன். இனி நான் உங்களோடு மிகுதியாக பேசப்போவதில்லை; ஏனெனில், இவ்வுலகின் தலைவன் வந்துகொண்டிருக்கிறான். அவனுக்கு என்மேல் அதிகாரம் இல்லை. ஆனால், நான் தந்தையின்மீது அன்பு கொண்டுள்ளேன் என்பதையும், அவர் எனக்குக் கட்டளையிட்டபடி செயல்படுகிறேன் என்பதையும் உலகு தெரிந்துகொள்ள வேண்டும்.
’எழுந்திருங்கள், இங்கிருந்து போவோம்’
இயேசு அங்கிருந்து புறப்பட்டுத் தம் வழக்கப்படி ஒலிவமலைக்குச் சென்றார். சீடர்களும் புகழ்ப்பாடல் பாடிவிட்டு அவரைப் பின்தொடர்ந்தார்கள்.
6. நானே திராட்சைச் செடி, நீங்கள் கொடிகள்
ஒலிவமலை கிபி 33 கிபி 33 வியாழன்
’உண்மையான திராட்சைச் செடி நானே. என் தந்தையே அதை நட்டு வளர்ப்பவர். என்னிடமுள்ள கனிகொடாத கொடிகள் அனைத்தையும் அவர் தறித்துவிடுவார். கனிதரும் அனைத்துக் கொடிகளையும் மிகுந்த கனி தருமாறு கழித்துவிடுவார். நான் சொன்ன வார்த்தைகளால் நீங்கள் ஏற்கெனவே தூய்மையாய் இருக்கிறீர்கள்.
நான் உங்களோடு இணைந்து இருப்பதுபோல, நீங்களும் என்னோடு இணைந்து இருங்கள். கொடி திராட்சைச்செடியோடு இணைந்து இருந்தாலன்றித் தானாக கனிதர இயலாது. அதுபோல, நீங்களும் என்னோடு இணைந்திருந்தாலன்றிக் கனிதர இயலாது.
நானே திராட்சைக் செடி; நீங்கள் அதன் கொடிகள். ஒருவர் என்னுடனும், நான் அவருடனும் இணைந்திருந்தால், அவர் மிகுந்த கனி தருவார். என்னைவிட்டுப் பிரிந்து உங்களால் எதுவும் செய்ய இயலாது. என்னோடு இணைந்து இராதவர், கொடியைப் போலத் தறித்து எறியப்பட்டு, உலர்ந்து போவார். அக்கொடிகள் கூட்டிச் சேர்க்கப்பட்டு நெருப்பிலிட்டு எரிக்கப்படும்.
நீங்கள் என்னுள்ளும், என் வார்த்தைகள் உங்களுள்ளும் நிலைத்திருந்தால், நீங்கள் விரும்பிக் கேட்பதெல்லாம் நடக்கும். நீங்கள் மிகுந்த கனி தந்து, என் சீடராய் இருப்பதே என் தந்தைக்கு மாட்சி அளிக்கிறது.
என் தந்தை என்மீது அன்பு கொண்டுள்ளதுபோல, நானும் உங்கள்மீது அன்பு கொண்டுள்ளேன். என் அன்பில் நிலைத்திருங்கள். நான் என் தந்தையின் கட்டளைகளைக் கடைப்பிடித்து, அவரது அன்பில் நிலைத்திருப்பது போல, நீங்களும் என் கட்டளைகளைக் கடைப்பிடித்தால் என் அன்பில் நிலைத்திருப்பீர்கள்.
என் மகிழ்ச்சி உங்களுள் இருக்கவும் உங்கள் மகிழ்ச்சி நிறைவு பெறவுமே இவற்றை உங்களிடம் சொன்னேன்.
’நான் உங்களிடம் அன்பு கொண்டிருப்பதுபோல, நீங்களும் ஒருவர் மற்றவரிடம் அன்பு கொண்டிருக்க வேண்டும்’ என்பதே என் கட்டளை.
’உலகு உங்களை வெறுக்கிறதென்றால் அது உங்களை வெறுக்குமுன்னே என்னை வெறுத்தது என்பதைத் தெரிந்து கொள்ளுங்கள். நீங்கள் உலகைச் சார்ந்தவர்களாக இருந்திருந்தால், தனக்குச் சொந்தமானவர்கள் என்னும் முறையில், உலகு உங்களிடம் அன்பு செலுத்தியிருக்கும். நான் உங்களை உலகிலிருந்து தேர்ந்தெடுத்து விட்டேன். நீங்கள் உலகைச் சார்ந்தவர்கள் அல்ல. எனவே உலகு உங்களை வெறுக்கிறது.
பணியாளர் தலைவரைவிடப் பெரியவர் அல்ல என்று நான் உங்களுக்குக் கூறியதை நினைவில் வைத்துக்கொள்ளுங்கள். என்னை அவர்கள் துன்புறுத்தினார்கள் என்றால் உங்களையும் துன்புறுத்துவார்கள். என் வார்த்தையைக் கடைப்பிடித்திருந்தால்தானே உங்கள் வார்த்தையையும் கடைப்பிடிப்பார்கள்! என் பெயரின் பொருட்டு உங்களை இப்படியெல்லாம் நடத்துவார்கள். ஏனெனில் என்னை அனுப்பியவரை அவர்கள் அறிந்து கொள்ளவில்லை.
உங்களைத் தொழுகைக்கூடத்திலிருந்து விலக்கி வைப்பார்கள். உங்களைக் கொல்லுவோர் கடவுளுக்குத் திருப்பணி செய்வதாக எண்ணும் காலமும் வருகிறது. தந்தையையும் என்னையும் அவர்கள் அறியாமல் இருப்பதால்தான் இவ்வாறு செய்வார்கள். ’நீங்கள் நம்பிக்கை இழந்துவிடாதிருக்க இவற்றையெல்லாம் உங்களிடம் சொன்னேன்.
’நான் வந்து அவர்களிடம் பேசியிராவிட்டால் அவர்களுக்குப் பாவம் இராது. ஆனால், இப்போது அவர்கள் தங்கள் பாவத்துக்குச் சாக்குப்போக்குச் சொல்ல வழியில்லை. என்னை வெறுப்போர் என் தந்தையையும் வெறுக்கின்றனர்.
வேறு யாரும் செய்திராத செயல்களை நான் அவர்களிடையே செய்யவில்லையென்றால் அவர்களுக்குப் பாவம் இராது. ஆனால் இப்போது அவர்கள் என்னையும் என் தந்தையையும் கண்டும் வெறுத்தார்கள். ’காரணமின்றி என்னை வெறுத்தார்கள்’ என்று அவர்களுடைய திருச்சட்டத்தில் எழுதியுள்ளது இவ்வாறு நிறைவேறிற்று.
7. தூய ஆவியார் உங்களை வழிநடத்துவார்
கிபி 33 வியாழன்
தந்தையிடமிருந்து நான் உங்களுக்கு அனுப்பப்போகிற துணையாளர் வருவார். அவரே தந்தையிடமிருந்து வந்து, உண்மையை வெளிப்படுத்தும் தூய ஆவியார். அவர் வரும்போது என்னைப்பற்றிச் சான்றுபகர்வார். நீங்களும் சான்றுபகர்வீர்கள். ஏனெனில் நீங்கள் தொடக்கமுதல் என்னோடு இருந்துவருகிறீர்கள்.
இவை நிகழும்-நேரம் வரும்போது, நான் உங்களுக்கு இவைபற்றி முன்பே சொன்னதை நினைவுபடுத்திக்கொள்ளுங்கள். இதற்காகவே இவற்றை உங்களிடம் கூறினேன்.
’தொடக்கத்திலேயே நான் இவற்றை உங்களிடம் சொல்லவில்லை; ஏனெனில், நான் உங்களோடு இருந்தேன். இப்போது என்னை அனுப்பியவரிடம் போகிறேன்; ஆனால் உங்களுள் எவரும் ’நீர் எங்கே போகிறீர்?’ என்று என்னிடம் கேட்காமலேயே நான் சொன்னவற்றைக்குறித்து துயரத்தில் மூழ்கியுள்ளீர்கள்.
நான் உங்களிடம் சொல்வது உண்மையே. நான் போவதால் நீங்கள் பயனடைவீர்கள். நான் போகாவிட்டால் துணையாளர் உங்களிடம் வரமாட்டார். நான் போனால் அவரை உங்களிடம் அனுப்புவேன்.
அவர் வந்து, பாவம், நீதி, தீர்ப்பு ஆகியவைபற்றி உலகினர் கொண்டுள்ள கருத்துகள் தவறானவை என எடுத்துக்காட்டுவார். பாவம் பற்றிய அவர்கள் கருத்து தவறானது; ஏனெனில் என்னிடம் அவர்கள் நம்பிக்கைக் கொள்ளவில்லை. நீதி பற்றிய அவர்கள் கருத்து தவறானது; ஏனெனில் நான் தந்தையிடம் செல்கிறேன்; நீங்களும் இனி என்னைக் காண மாட்டீர்கள். தீர்ப்பு பற்றிய அவர்கள் கருத்து தவறானது; ஏனெனில் இவ்வுலகின் தலைவன் தண்டனை பெற்றுவிட்டான்.
’நான் உங்களிடம் சொல்ல வேண்டியவை இன்னும் பல உள்ளன. ஆனால் அவற்றை இப்போது உங்களால் தாங்க இயலாது. உண்மையை வெளிப்படுத்தும் தூய ஆவியார் வரும்போது அவர் முழு உண்மையைநோக்கி உங்களை வழிநடத்துவார்.
அவர் தாமாக எதையும் பேசமாட்டார்; தாம் கேட்பதையே பேசுவார்; வரப்போகிறவற்றை உங்களுக்கு அறிவிப்பார்.
அவர் என்னிடமிருந்து கேட்டு உங்களுக்கு அறிவிப்பார். இவ்வாறு அவர் என்னை மாட்சிப்படுத்துவார். தந்தையுடையவை யாவும் என்னுடையவையே. எனவேதான் ’அவர் என்னிடமிருந்து பெற்று உங்களுக்கு அறிவிப்பார்’ என்றேன்.
8. உங்கள் துயரம் மகிழ்ச்சியாக மாறும்
கிபி 33 வியாழன்
இன்னும் சிறிதுகாலத்தில் நீங்கள் என்னைக் காணமாட்டீர்கள்; மீண்டும் சிறிதுகாலத்தில் என்னைக் காண்பீர்கள்.’
அப்போது அவருடைய சீடருள் சிலர், ’இன்னும் சிறிதுகாலத்தில் நீங்கள் என்னைக் காணமாட்டீர்கள்; மீண்டும் சிறிதுகாலத்தில் என்னைக் காண்பீர்கள்’ என்றும், ’நான் தந்தையிடம் செல்கிறேன்’ என்றும் சொல்லுவதன் பொருள் என்ன?’ என்று தங்களிடையே பேசிக்கொண்டனர். ’இந்தச் ’சிறிதுகாலம்’ என்பது என்ன? அவர் பேசுவது நமக்குப் புரியவில்லையே’ என்றும் பேசிக்கொண்டனர்.
அவர்கள் தம்மிடம் கேள்விகேட்க விரும்பவதை அறிந்த இயேசு அவர்களிடம் கூறியது: ’இன்னும் சிறிதுகாலத்தில் நீங்கள் என்னைக் காணமாட்டீர்கள்; மீண்டும் சிறிதுகாலத்தில் என்னைக் காண்பீர்கள்’ என்று நான் சொன்னதைப்பற்றி உங்களிடையே சிந்தித்துக் கொண்டிருக்கிறீர்கள்.
உறுதியாக உங்களுக்குச் சொல்கிறேன்: நீங்கள் அழுவீர்கள், புலம்புவீர்கள்; அப்போது உலகம் மகிழும். நீங்கள் துயருறுவீர்கள்; ஆனால் உங்கள் துயரம் மகிழ்ச்சியாக மாறும்.
பிள்ளையைப் பெற்றெடுக்கும்போது, தாய், தனக்குப் பேறுகாலம் வந்துவிட்டதால் வேதனை அடைகிறார். ஆனால், பிள்ளையைப் பெற்றெடுத்தபின்பு, உலகில் ஒரு மனிதஉயிர் தோன்றியுள்ளது என்னும் மகிழ்ச்சியால், தம் வேதனையை அவர் மறந்துவிடுகிறார்.
இப்போது நீங்களும் துயருறுகிறீர்கள். ஆனால், நான் உங்களை மீண்டும் காணும்போது, உங்கள் உள்ளம் மகிழ்ச்சி அடையும். உங்கள் மகிழ்ச்சியை யாரும் உங்களிடமிருந்து நீக்கிவிட முடியாது.
அந்நாளில் நீங்கள் என்னிடம் எதையும் கேட்கமாட்டீர்கள். நீங்கள் என் பெயரால் தந்தையிடம் கேட்பதைஎல்லாம் அவர் உங்களுக்குத் தருவார் என உறுதியாக உங்களுக்குச் சொல்கிறேன். இதுவரை நீங்கள் என் பெயரால் எதையும் கேட்டதில்லை. கேளுங்கள்; பெற்றுக் கொள்வீர்கள். அப்போது உங்கள் மகிழ்ச்சியும் நிறைவடையும்.
’நான் உங்களிடம் உருவகமாகவே பேசிவந்துள்ளேன். ஆனால் காலம் வருகிறது. அப்போது, உருவகங்கள் வாயிலாய்ப் பேசாமல், தந்தையைப்பற்றி வெளிப்படையாய் எடுத்துரைப்பேன்.
அந்நாளில் நீங்கள் என் பெயரால் வேண்டுவீர்கள். அப்போது ’உங்களுக்காகத் தந்தையிடம் கேட்கிறேன்’ என நான் சொல்லமாட்டேன். ஏனெனில் தந்தையே உங்கள்மீது அன்பு கொண்டுள்ளார். நீங்கள் என்மீது அன்புகொண்டு, நான் கடவுளிடமிருந்து வந்தேன் என்று நம்புவதால்தான் தந்தையும் உங்கள் மீது அன்பு கொண்டுள்ளார்.
நான் தந்தையிடமிருந்து உலகிற்கு வந்தேன். இப்போது உலகைவிட்டுத் தந்தையிடம் செல்கிறேன்.’
இதைக் கேட்ட அவருடைய சீடர்கள், ’இப்போதுதான் உருவகம் எதுவுமின்றி வெளிப்படையாகப் பேசுகிறீர். உமக்கு அனைத்தும் தெரியும். யாரும் உம்மிடம் கேள்வி கேட்கத் தேவையில்லை என்பது எங்களுக்கு இப்போது புரிகிறது. இதிலிருந்து நீர் கடவுளிடமிருந்து வந்தவர் என்பதை நம்புகிறோம்’ என்றார்கள்.
இயேசு அவர்களைப் பார்த்து, ’இப்போது நம்புகிறீர்களா! இதோ! காலம் வருகிறது; ஏன், வந்தேவிட்டது. அப்போது நீங்கள் சிதறடிக்கப்பட்டு ஒவ்வொருவரும் அவரவர் வீட்டுக்கு ஓடிப்போவீர்கள்; என்னைத் தனியே விட்டு விடுவீர்கள்.
ஆயினும் நான் தனியாய் இருப்பதில்லை. தந்தை என்னோடு இருக்கிறார். என் வழியாய் நீங்கள் அமைதி காணும் பொருட்டே நான் இவற்றை உங்களிடம் சொன்னேன். உலகில் உங்களுக்குத் துன்பம் உண்டு, எனினும் துணிவுடன் இருங்கள். நான் உலகின் மீது வெற்றி கொண்டுவிட்டேன்’ என்றார்.
9. சீடருக்காக இயேசுவின் வேண்டுதல்
கிபி 33 வியாழன்
இவ்வாறு பேசியபின் இயேசு வானத்தை அண்ணாந்து பார்த்து வேண்டியது: ’தந்தையே, நேரம் வந்து விட்டது. உம் மகன் உம்மை மாட்சிப்படுத்துமாறு, நீர் மகனை மாட்சிப்படுத்தும். ஏனெனில், நீர் அவரிடம் ஒப்படைத்தவர்கள் அனைவருக்கும் அவர் நிலைவாழ்வை அருளுமாறு மனிதர் அனைவர்மீதும் அவருக்கு அதிகாரம் அளித்துள்ளீர்.
உண்மையான ஒரே கடவுளாகிய உம்மையும், நீர் அனுப்பிய இயேசு கிறிஸ்துவையும் அறிவதே நிலைவாழ்வு.
நான் செய்யுமாறு நீர் என்னிடம் ஒப்படைத்திருந்த வேலையைச் செய்துமுடித்து, நான் உம்மை உலகில் மாட்சிப்படுத்தினேன். தந்தையே, உலகம் தோன்றும் முன்பே நீர் என்னை மாட்சிப்படுத்தியுள்ளீர். இப்போது உம் திருமுன் அதே மாட்சியை எனக்குத் தந்தருளும்.
நீர் இவ்வுலகிலிருந்து தேர்ந்தெடுத்து என்னிடம் ஒப்படைத்த மக்களுக்கு, நான் உமது பெயரை வெளிப்படுத்தினேன். உமக்கு உரியவர்களாய் இருந்த அவர்களை, நீர் என்னிடம் ஒப்படைத்தீர். அவர்களும் உம் வார்த்தைகளைக் கடைப்பிடித்தார்கள்.
நீர் எனக்குத் தந்தவை அனைத்தும் உம்மிடமிருந்தே வந்தவை என்பது, இப்போது அவர்களுக்குத் தெரியும். ஏனெனில், நீர் என்னிடம் சொன்னவற்றையே நான் அவர்களிடமும் சொன்னேன். அவர்களும் அதை ஏற்றுக்கொண்டு, நான் உம்மிடமிருந்து வந்தேன் என்பதை உண்மையில் அறிந்துகொண்டார்கள். நீரே என்னை அனுப்பினீர் என்பதையும் நம்பினார்கள்.
அவர்களுக்காக நான் வேண்டுகிறேன். உலகிற்காக அல்ல, மாறாக, நீர் என்னிடம் ஒப்படைத்தவர்களுக்காகவே வேண்டுகிறேன். அவர்கள் உமக்கு உரியவர்கள். ’என்னுடையதெல்லாம் உம்முடையதே; உம்முடையதும் என்னுடையதே. அவர்கள் வழியாய். நான் மாட்சி பெற்றிருக்கிறேன்.
இனி நான் உலகில் இருக்கப்போவதில்லை. அவர்கள் உலகில் இருப்பார்கள். நான் உம்மிடம் வருகிறேன். தூய தந்தையே! நாம் ஒன்றாய் இருப்பது போல் அவர்களும் ஒன்றாய் இருக்கும்படி, நீர் எனக்கு அளித்த உம் பெயரின் ஆற்றலால் அவர்களைக் காத்தருளும்.
நான் அவர்களோடு இருந்தபோது, நீர் எனக்கு அளித்த உம் பெயரின் ஆற்றலால் அவர்களைக் காத்து வந்தேன்; நன்கு பாதுகாத்தேன். அவர்களுள் எவரும் அழிவுறவில்லை. மறைநூலில் எழுதியுள்ளது நிறைவேறும் வண்ணம், அழிவுக்குரியவன் மட்டுமே அழிவுற்றான்.
’இப்போது உம்மிடம் வருகிறேன். என் மகிழ்ச்சி அவர்களுள் நிறைவாக இருக்கும்படி, நான் உலகில் இருக்கும்போதே இதைச் சொல்கிறேன். உம் வார்த்தையை நான் அவர்களுக்கு அறிவித்தேன்.
நான் உலகைச் சார்ந்தவனாய் இல்லாததுபோல், அவர்களும் உலகைச் சார்ந்தவர்கள் அல்ல. ஆதலால் உலகம் அவர்களை வெறுக்கிறது. அவர்களை உலகிலிருந்து எடுத்துவிட வேண்டுமென்று நான் வேண்டவில்லை; தீயோனிடமிருந்து அவர்களைக் காத்தருள வேண்டுமென்றே வேண்டுகிறேன்.
நான் உலகைச் சார்ந்தவனாய் இல்லாததுபோல் அவர்களும் உலகைச் சார்ந்தவர்கள் அல்ல. உண்மையினால் அவர்களை உமக்கு அர்ப்பணமாக்கியருளும். உமது வார்த்தையே உண்மை.
நீர் என்னை உலகிற்கு அனுப்பியதுபோல, நானும் அவர்களை உலகிற்கு அனுப்புகிறேன். அவர்கள் உண்மையினால் உமக்கு உரியவர் ஆகும்படி அவர்களுக்காக என்னையே உமக்கு அர்ப்பணமாக்குகிறேன்.’
’அவர்களுக்காக மட்டும் நான் வேண்டவில்லை; அவர்களுடைய வார்த்தையின் வழியாக என்னிடம் நம்பிக்கை கொள்வோருக்காகவும் வேண்டுகிறேன். எல்லாரும் ஒன்றாய் இருப்பார்களாக!
தந்தையே, நீர் என்னுள்ளும் நான் உம்முள்ளும் இருப்பதுபோல் அவர்களும் ஒன்றாய் இருப்பார்களாக! இதனால் நீரே என்னை அனுப்பினீர் என்று உலகம் நம்பும். நாம் ஒன்றாய் இருப்பதுபோல் அவர்களும் ஒன்றாய் இருக்குமாறு, நீர் எனக்கு அருளிய மாட்சியை நான் அவர்களுக்கு அளித்தேன்.
இவ்வாறு, நான் அவர்களுள்ளும் நீர் என்னுள்ளும் இருப்பதால், அவர்களும் முழுமையாய் ஒன்றித்திருப்பார்களாக. இதனால் நீரே என்னை அனுப்பினீர் எனவும், நீர் என்மீது அன்பு கொண்டுள்ளதுபோல் அவர்கள்மீதும் அன்பு கொண்டுள்ளீர் எனவும் உலகு அறிந்து கொள்ளும்.’
’தந்தையே, உலகம் தோன்றுமுன்னே நீர் என்மீது அன்புகொண்டு, எனக்கு மாட்சி அளித்தீர். நீர் என்னிடம் ஒப்படைத்தவர்கள் என் மாட்சியைக் காணுமாறு அவர்களும் நான் இருக்கும் இடத்திலேயே என்னோடு இருக்க வேண்டும் என விரும்புகிறேன்.
நீதியுள்ள தந்தையே, உலகு உம்மை அறியவில்லை; ஆனால் நான் உம்மை அறிந்துள்ளேன். நீரே என்னை அனுப்பினீர் என அவர்களும் அறிந்து கொண்டார்கள். நான் அவர்களோடு இணைந்திருக்கவும் நீர் என்மீது கொண்டிருந்த அன்பு அவர்கள் மீது இருக்கவும் உம்மைப் பற்றி அவர்களுக்கு அறிவித்தேன்; இன்னும் அறிவிப்பேன்.
10. அந்த நேரம் விலகுமாறு வேண்டினார்
கெத்சமனி கிபி 33 கிபி 33 வியாழன்
இவற்றைக் கூறியபின், இயேசு தம் சீடர்களோடு கெதரோன் என்னும் நீரோடையைக் கடந்து சென்றார். அங்கே கெத்சமனி என்னும் பெயர் கொண்ட ஒரு தோட்டம் இருந்தது. தம் சீடர்களோடு இயேசு அதில் நுழைந்தார். அவரைக் காட்டிக் கொடுத்த யூதாசுக்கு அந்த இடம் தெரியும். ஏனெனில், இயேசுவும் அவருடைய சீடர்களும் அடிக்கடி அங்குக் கூடுவர்.
அங்கே அவர் தம் சீடரிடம், ’நான் இறைவனிடம் வேண்டும்வரை நீங்கள் இங்கே அமர்ந்திருங்கள்’ என்று கூறி, பேதுருவையும், செபதேயுவின் மக்கள் யாக்கோபு, யோவான் இருவரையும் தம்முடன் கூட்டிச் சென்றார்.
அந்த இடத்தை அடைந்ததும் அவர் அவர்களிடம், ’சோதனைக்கு உட்படாதிருக்க விழித்திருந்து இறைவனிடம் வேண்டுங்கள்,‘ என்றார்.
அப்போது அவர் துயரமும் மனக்கலக்கமும் அடையத் தொடங்கினார். அவர், ’எனது உள்ளம் சாவு-வருமளவுக்கு ஆழ்துயரம் கொண்டுள்ளது. நீங்கள் என்னோடு இங்கேயே தங்கி விழித்திருங்கள்’ என்று அவர்களிடம் கூறினார்.
பிறகு, அவர் அவர்களை விட்டுக் கல்லெறிதூரம் விலகிச் சென்று, முழந்தாள்படியிட்டு, தரையில் முகங்குப்புற விழுந்து, முடியுமானால் அந்த நேரம் தம்மைவிட்டு விலகுமாறு இறைவனிடம் வேண்டினார்
'என் தந்தையே எல்லாம் உம்மால் இயலும். உமக்கு விருப்பமானால் இத்துன்பக் கிண்ணத்தை என்னிடமிருந்து அகற்றும். ஆனாலும் என் விருப்பப்படி அல்ல; உம் விருப்பப்படியே நிகழட்டும்’ என்று கூறினார்.
(அப்போது விண்ணகத்திலிருந்து ஒரு தூதர் அவருக்குத் தோன்றி அவரை வலுப்படுத்தினார். அவரோ மிகுந்த வேதனைக்குள்ளாகவே, உருக்கமாய் இறைவனிடம் வேண்டிக் கொண்டிருந்தார். அவரது வியர்வை பெரும் இரத்தத் துளிகளைப் போலத் தரையில் விழுந்தது.)
அவர் இறைவேண்டலை முடித்துவிட்டு எழுந்து சீடர்களிடம் வந்தபோது, அவர்கள் துயரத்தால் சோர்வுற்றுத் தூங்கிக்கொண்டிருப்பதைக் கண்டார். அவர்கள் உறங்கிக்கொண்டிருப்பதைக் கண்டு, பேதுருவிடம், ’சீமோனே, உறங்கிக்கொண்டா இருக்கிறாய்? ஒருமணிநேரம் கூட என்னோடு விழித்திருக்க உங்களுக்கு வலுவில்லையா? உங்கள் மனம் ஆர்வம் உடையதுதான்; ஆனால் உடல் வலுவற்றது. எனவே சோதனைக்கு உட்படாதிருக்க, விழித்திருந்து இறைவனிடம் வேண்டுங்கள்’ என்றார்.
குடித்தாலன்றி துன்பக்கிண்ணம் அகலாது
மீண்டும் சென்று, ’என் தந்தையே, நான் குடித்தாலன்றி இத்துன்பக்கிண்ணம் அகல முடியாதென்றால், உமது திருவுளப்படியே ஆகட்டும்’ என்று இரண்டாம் முறையாக இறைவனிடம் வேண்டினார்.
அவர் திரும்பவும் வந்தபோது, அவர்கள் உறங்கிக் கொண்டிருப்பதைக் கண்டார். அவர்களுடைய கண்கள் தூக்கக்கலக்கமாய் இருந்தன. அவருக்கு என்ன மறுமொழி கூறுவது என்றே அவர்களுக்குத் தெரியவில்லை.
அவர் அவர்களைவிட்டு மீண்டும் சென்று, மறுபடியும் அதே வார்த்தைகளைச் சொல்லி, மூன்றாம்முறையாக இறைவனிடம் வேண்டினார்.
அவர் மூன்றாம்முறை சீடர்களிடம் வந்து, அவர்களை நோக்கி, ’இன்னும் உறங்கி ஓய்வெடுக்கிறீர்களா? போதும், நேரம் வந்துவிட்டது. மானிடமகன் பாவிகளின் கையில் ஒப்புவிக்கப்படப்போகிறார். எழுந்திருங்கள், போவோம். இதோ, என்னைக் காட்டிக்கொடுப்பவன் நெருங்கி வந்துவிட்டான்’ என்று கூறினார்.