மத்தேயு மாற்கு லூக்கா யோவான் நற்செய்திகளின் தொகுப்பு
1. தூய ஆவியைப் பழிப்போருக்கு மன்னிப்பு இல்லை
இயேசுவின் பெண் சீடர்கள் கலிலேயா கிபி 31
அதற்குப்பின் இயேசு, நகர்-நகராய், ஊர்-ஊராய்ச் சென்று, இறையாட்சிபற்றிய நற்செய்தியைப் பறைசாற்றி வந்தார். பன்னிருவரும் அவருடன் இருந்தனர். பொல்லாத ஆவிகளினின்றும், நோய்களினின்றும் குணமான பெண்கள் சிலரும், ஏழு பேய்கள் நீங்கப்பெற்ற மகதலா மரியாவும், ஏரோதுவின் மாளிகையின் மேற்பார்வையாளர் கூசாவின் மனைவி யோவன்னாவும், சூசன்னாவும், மேலும் பல பெண்களும் அவரோடு இருந்தார்கள். இவர்கள் தங்கள் உடைமைகளைக் கொண்டு அவருக்குப் பணிவிடை செய்துவந்தார்கள்.
அதன்பின் இயேசு வீட்டிற்குச் சென்றார். மீண்டும் மக்கள் கூட்டம் வந்து கூடியதால், அவர்கள் உணவு அருந்தவும் முடியவில்லை. அவருடைய உறவினர் இதைக் கேள்விப்பட்டு, அவரைப் பிடித்துக் கொண்டுவரச் சென்றார்கள். ஏனெனில், அவர் மதிமயங்கி இருக்கிறார் என்று மக்கள் பேசிக் கொண்டனர்.
இயேசு தாவீதின் மகனா? பெயல்செபூலா?
ஒருநாள், பேய்பிடித்த ஒருவரை இயேசுவிடம் கொண்டுவந்தனர். அவர் பேச்சற்றவராக (பார்வையற்றவராகவும்) இருந்தார். இயேசு அவரைக் குணமாக்கினார். பேய் வெளியேறவே, பேச்சற்ற அவர் பேசவும் (பார்வையற்ற அவர் பார்க்கவும்) முடிந்தது. திரண்டிருந்த மக்கள் யாவரும் மலைத்துப்போய், ’தாவீதின் மகன் இவரோ?’ என்று பேசிக்கொண்டனர்.
ஆனால், அவர்களில் சிலரும், பரிசேயரும், எருசலேமிலிருந்து வந்திருந்த மறைநூல்-அறிஞரும் “இவனைப் பெயல்செபூல் பிடித்திருக்கிறது” என்றும், “பேய்களின் தலைவனாகிய பெயல்செபூலைக் கொண்டே இவன் பேய்களை ஓட்டுகிறான்” என்றும் சொல்லிக்கொண்டிருந்தனர்.
சாத்தானுக்கு எதிரி சாத்தான் அல்ல
இயேசு, அவர்களுடைய சிந்தனைகளை அறிந்து, அவர்களைத் தம்மிடம் வரவழைத்து, அவர்களுக்கு உவமைகள் வாயிலாகக் கூறியது: 'தனக்கு எதிராகத் தானே பிளவுபடும் எந்த அரசும் பாழாய்ப்போகும். அவ்வாறே தனக்கு எதிராகத் தானே பிளவுபடும் எந்த நகரமும், வீடும் நிலைத்து நிற்காது. விழுந்துவிடும்.
சாத்தான் சாத்தானையே ஓட்டினால், அவன் தனக்கு எதிராகத் தானே பிளவுபட்டுப் போவான். அப்படியானால், அவனது அரசு எப்படி நிலைத்து நிற்கும்? அதுவே அவனது அழிவு.
பெயல்செபூலைக் கொண்டு நான் பேய்களை ஓட்டுகிறேன் என்கிறீர்களே. நான் பெயல்செபூலைக் கொண்டு பேய்களை ஓட்டுகிறேன் என்றால் உங்களைச் சேர்ந்தவர்கள் யாரைக் கொண்டு பேய் ஓட்டுகிறார்கள்? ஆகவே அவர்களே உங்கள் கூற்று தவறு என்பதற்குச் சாட்சிகள்.
தூயஆவியால்மட்டுமே சாத்தானை ஒட்டமுடியும்
நான் கடவுளின் ஆவியைக் கொண்டே பேய்களை ஓட்டுகிறேன் என்றால் இறையாட்சி உங்களிடம் வந்துள்ளது அல்லவா?
வலியவர் ஆயுதம் தாங்கித் தம் அரண்மனையைக் காக்கிறபோது அவருடைய உடைமைகள் பாதுகாப்பாக இருக்கும். அவரைவிட மிகுந்த வலிமையுடையவர் ஒருவர் வந்து, அவர் நம்பியிருந்த எல்லாப் படைக்கலங்களையும் பறித்துக் கொண்டு, அவரைக் கட்டிவைத்த பிறகுதான் அவருடைய வீட்டிலுள்ள கொள்ளைப் பொருளையும் பங்கிடுவார். (மக்களின் உள்ளத்தில் சாத்தான் வலிமையுடன் ஆட்சிசெய்கிறான். மிகுந்த வலிமையுடைய தூயஆவியால் மட்டுமே சாத்தானை விரட்டி, இறையாட்சியை நம் உள்ளத்தில் கொண்டுவரமுடியும்)
மக்களை சிதறடிக்கும் போதகர்களுக்கு மன்னிப்பில்லை
என்னோடு இராதவர் எனக்கு எதிராக இருக்கிறார். என்னோடு இணைந்து மக்களைக் கூட்டிச் சேர்க்காதவர் அவர்களைச் சிதறச் செய்கிறார்.
எனவே நான் உங்களுக்குச் சொல்கிறேன்: தூயஆவிக்கு எதிரான பழிப்புரை மன்னிக்கப்படாது. மக்களுடைய மற்றப் பாவங்கள், அவர்கள் கூறும் பழிப்புரைகள் அனைத்தும் அவர்களுக்கு மன்னிக்கப்படும். மானிட மகனுக்கு எதிராய் ஏதாவது ஒரு வார்த்தை சொல்லி விட்டவரும் மன்னிக்கப்படுவார். ஆனால், தூயஆவிக்கு எதிராகப் பேசுவோர் எவரும் இம்மையிலும் மறுமையிலும் எக்காலத்திலும் மன்னிப்புப் பெறமாட்டார். அவர் என்றென்றும் தீராத பாவத்திற்கு ஆளாவார்.
'இவனைத் தீய ஆவி பிடித்திருக்கிறது' என்று தம்மைப்பற்றி அவர்கள் சொல்லி வந்ததால் இயேசு இவ்வாறு கூறினார்.
உங்கள் வார்த்தைகளே உங்களுக்குத் தீர்ப்பளிக்கும்
மரம் நல்லது என்றால் அதன் கனியும் நல்லதாக இருக்கும். மரம் கெட்டது என்றால் அதன் கனியும் கெட்டதாக இருக்கும். மரத்தை அதன் கனியால் அறியலாம். விரியன் பாம்புக் குட்டிகளே, தீயோர்களாகிய நீங்கள் எவ்வாறு நல்லவை பேச முடியும்?
உள்ளத்தின் நிறைவையே வாய் பேசும். நல்லவர் நல்ல கருவூலத்திலிருந்து நல்லவற்றை வெளிக் கொணர்வர். தீயவரோ தீய கருவூலத்திலிருந்து தீயவற்றையே வெளிக்கொணர்வர். மனிதர் பேசும் ஒவ்வொரு வீண் வார்த்தைக்கும் தீர்ப்பு நாளில் கணக்குக் கொடுக்கவேண்டும் என உங்களுக்குச் சொல்கிறேன் உங்கள் வார்த்தைகளைக் கொண்டே நீங்கள் குற்றமற்றவர்களாகக் கருதப்படுவீர்கள்; உங்கள் வார்த்தைகளைக் கொண்டே குற்றவாளிகளாகவும் கருதப்படுவீர்கள்.’
தூயஆவிக்குரிய கனிகளால் உள்ளத்தை நிரப்பாதவர் அழிவர்
ஒருவரைவிட்டு வெளியேறுகின்ற தீயஆவி வறண்ட இடங்களில் அலைந்துதிரிந்து, இளைப்பாற இடம் தேடும். இடம் கண்டுபிடிக்க முடியாமல், ’நான் விட்டுவந்த எனது வீட்டுக்குத் திரும்பிப் போவேன்’ எனச் சொல்லும்.
திரும்பிவந்து, அவ்வீடு கூட்டி அழகுபடுத்தப்பட்டு, யாருமின்றி இருப்பதைக் காணும். மீண்டும் சென்று, தன்னைவிடப் பொல்லாத வேறு ஏழு ஆவிகளைத் தன்னோடு அழைத்துவந்து, அவருள் புகுந்து, அங்கே குடியிருக்கும். அவருடைய பின்னைய நிலைமை, முன்னைய நிலைமையைவிடக் கேடுள்ளதாகும். இத்தலைமுறைக்கும் இவ்வாறே நிகழும்.’
இயேசுவிடம் அடையாளம் கேட்ட பரிசேயர்
அப்பொழுது மறைநூல்-அறிஞர் சிலரும், பரிசேயர் சிலரும் இயேசுவுக்கு மறுமொழியாக, ’போதகரே, நீர் அடையாளம் ஒன்று காட்ட வேண்டும் என விரும்புகிறோம்’ என்றனர். வேறுசிலர், அவரைச் சோதிக்கும் நோக்குடன், வானத்திலிருந்து ஏதேனும் அடையாளம் காட்டுமாறு அவரிடம் கேட்டனர்.
நானே கடவுள் அனுப்பிய யோனா
மக்கள் வந்து கூடக்கூட இயேசு கூறியது: ’இந்தத் தீய விபசாரத் தலைமுறையினர் அடையாளம் கேட்கின்றனர். இவர்களுக்கு, இறைவாக்கினரான யோனாவின் அடையாளத்தைத் தவிர வேறு அடையாளம் எதுவும் கொடுக்கப்படமாட்டாது. யோனா, நினிவே மக்களுக்கு அடையாளமாய் இருந்ததைப் போன்று, மானிடமகனும் இந்தத் தலைமுறையினருக்கு அடையாளமாய் இருப்பார்
நினிவே மக்கள் உங்களுக்குத் தீர்ப்பளிப்பார்கள்
யோனா மூன்று பகலும் மூன்று இரவும் ஒரு பெரிய மீனின் வயிற்றில் இருந்தார். அவ்வாறே மானிட மகனும் மூன்று பகலும் மூன்று இரவும் நிலத்தின் உள்ளே இருப்பார்.
தீர்ப்பு-நாளில் நினிவே மக்கள் இத்தலைமுறையினரோடு எழுந்து, இவர்களைக் கண்டனம் செய்வார்கள். ஏனெனில் யோனா அறிவித்த செய்தியைக் கேட்டு அவர்கள் மனம் மாறியவர்கள். ஆனால், இங்கிருப்பவர் யோனாவைவிடப் பெரியவர் அல்லவா!
தென்னாட்டு அரசி உங்களுக்குத் தீர்ப்பளிப்பார்
தீர்ப்பு நாளில் தென்னாட்டு அரசி இத்தலைமுறையினரோடு எழுந்து இவர்களைக் கண்டனம் செய்வார். ஏனெனில் அவர் சாலமோனின் ஞானத்தைக் கேட்க, உலகின் கடைக் கோடியிலிருந்து வந்தவர். ஆனால் இங்கிருப்பவர் சாலமோனிலும் பெரியவர் அல்லவா!
இயேசுவே உலகின் ஒளி, ஆனால், நம் கண்கள் நலமாயிருக்கிறதா?
எவரும் விளக்கை ஏற்றி நிலவறையிலோ மரக்காலுக்குள்ளோ வைப்பதில்லை; மாறாக அறையின் உள்ளே வருவோர்க்கு ஒளி கிடைக்கும்படி அதை விளக்குத் தண்டின்மீது வைப்பர்.
உங்கள் கண்தான் உடலுக்கு விளக்கு. உங்கள் கண் நலமாயிருந்தால் உங்கள் உடல் முழுவதும் ஒளி பெற்றிருக்கும்; அது கெட்டுப்போனால் உங்கள் உடல் இருளாய் இருக்கும். ஆகையால் உங்களுக்கு ஒளி தரவேண்டியது இருளாயிராதவாறு பார்த்துக் கொள்ளுங்கள். உடலின் எப்பகுதியிலும் இளுளின்றி உங்கள் உடல் முழுவதும் ஒளியாய் இருந்தால், விளக்குச் சுடர் முன் நீங்கள் ஒளிமயமாய் இருப்பதுபோல் அனைத்தும் ஒளிமயமாய் இருக்கும்.
இயேசுவுக்குத் தாய் யார்? சகோதரர்கள் யார்?
இவ்வாறு மக்கள் கூட்டத்தோடு இயேசு பேசிக்கொண்டிருந்தபோது, இயேசுவின் தாயும், சகோதரர்களும் அவரிடம் பேசவேண்டும் என்று, வெளியே நின்றுகொண்டிருந்தார்கள். ஆனால், அவரைச் சூழ்ந்து, மக்கள் திரளாக இருந்த காரணத்தால் அவரை அணுகமுடியவில்லை. வெளியே நின்றுகொண்டு, அவரை வரச்சொல்லி ஆள் அனுப்பினார்கள்.
ஒருவர் இயேசுவை நோக்கி, 'அதோ, உம்தாயும் சகோதரர்களும், உம்மோடு பேசவேண்டும் என்று, வெளியே நின்றுகொண்டு இருக்கின்றார்கள்’ என்றார்.
இறைவார்த்தையின்படி செயல்படுபவரே இயேசுவின் தாய், சகோதரர்
இதைத் தம்மிடம் கூறியவரைப் பார்த்து, இயேசு ’என் தாய் யார்? என் சகோதரர்கள் யார்?’ என்று கேட்டார். பின், தம் சீடர்களையும், தம்மைச் சூழ்ந்து அமர்ந்திருந்தவர்களைச் சுற்றிலும் பார்த்து, ’இதோ என் தாயும் சகோதரர்களும் இவர்களே.
இறைவார்த்தையைக் கேட்டு, அதன்படி செயல்பட்டு, விண்ணகத்திலுள்ள என் தந்தையின் திருவுளத்தை நிறைவேற்றுபவரே என் சகோதரரும், சகோதரியும், தாயும் ஆவார்’ என்றார்.
2. இயேசுவின் உவமைப் பொழிவு
கலிலேயக் கடல் கிபி 31
அதே நாளில், இயேசு வீட்டிற்கு வெளியே சென்று கடலோரத்தில் அமர்ந்தார். எல்லா ஊர்களிலிருந்தும் மக்கள் பெருந்திரளாய் அவரிடம் ஒன்றுகூடி வந்தனர். ஆகவே, அவர் படகில் ஏறி அமர்ந்தார். திரண்டிருந்த மக்கள் அனைவரும் கடற்கரையில் நின்றுகொண்டிருந்தனர். அவர் உவமைகள் வாயிலாகப் பலவற்றை அவர்களுக்குக் கற்பித்தார்.
i) நிலங்களும் விளைச்சலும் உவமை
’’இதோ, கேளுங்கள், விதைப்பவர் ஒருவர் விதைக்கச் சென்றார். அவர் விதைக்கும்பொழுது, சில விதைகள் வழியோரம் விழுந்து, மிதிபட்டன. வானத்துப் பறவைகள் வந்து, அவற்றை விழுங்கி விட்டன.
வேறுசில விதைகள், மிகுதியாக மண்ணில்லாப் பாறைப்-பகுதிகளில் விழுந்தன. அங்கே, மண் ஆழமாக இல்லாததால், அவை விரைவில் முளைத்தன; ஆனால், கதிரவன் மேலே எழ, ஈரமில்லாததால் அவை காய்ந்து, வேரில்லாமையால் கருகிப்போயின.
மற்றும் சில விதைகள் முட்செடிகளின் இடையே விழுந்தன. கூடவே வளர்ந்த முட்செடிகள், அவற்றை நெருக்கிவிட்டன. அவை விளைச்சலைக் கொடுக்கவில்லை.
ஆனால், இன்னும்சில விதைகளோ, நல்ல நிலத்தில் விழுந்தன. அவை முளைத்து, வளர்ந்து, அவற்றுள் சில நூறு மடங்காகவும், சில அறுபது மடங்காகவும், சில முப்பது மடங்காகவும் விளைச்சலைக் கொடுத்தன.
இவ்வாறு சொன்னபின், ‘கேட்கச் செவியுள்ளோர் கேட்கட்டும்’ என்று உரக்கக் கூறினார்.
இயேசு உவமைகளைக் கூறுவது ஏன்?
அவர் தனிமையான இடத்தில் இருந்தபோது, அவரைச் சூழ்ந்து இருந்தவர்கள், பன்னிருவரோடு சேர்ந்து கொண்டு, அவரருகே வந்து, ’ஏன் அவர்களோடு உவமைகள் வாயிலாகப் பேசுகின்றீர்? இந்த உவமையின் பொருள் என்ன?’ என்று கேட்டார்கள்.
அதற்கு இயேசு அவர்களிடம் மறுமொழியாகக் கூறியது: ’இறையாட்சியின் மறைபொருளை அறிய உங்களுக்குக் கொடுத்து-வைத்திருக்கிறது; புறம்பே இருக்கிறவர்களுக்கோ, எல்லாம் உவமைகளாகவே இருக்கின்றன. அவர்கள், கண்டும் காண்பதில்லை. கேட்டும் புரிந்துகொள்வதில்லை. இதனால்தான், நான் அவர்களோடு உவமைகள் வாயிலாகப் பேசுகிறேன்.
இவ்வாறு, எசாயாவின் பின்வரும் இறைவாக்கு அவர்களிடம் நிறைவேறுகிறது: ’நீங்கள், உங்கள் காதால் தொடர்ந்து கேட்டும், கருத்தில் கொள்வதில்லை. உங்கள் கண்களால் பார்த்துக்கொண்டேயிருந்தும், உணர்வதில்லை. இம்மக்களின் நெஞ்சம் கொழுத்துப்போய்விட்டது; காதும் மந்தமாகிவிட்டது. இவர்கள், தம் கண்களை மூடிக்கொண்டார்கள்; எனவே, கண்ணால் காணாமலும், காதால் கேளாமலும், உள்ளத்தால் உணராமலும், மனம் மாறாமலும் இருக்கின்றார்கள். நானும் அவர்களைக் குணமாக்காமல் இருக்கிறேன்.’
இயேசுவின் சீடர்கள் பெற்ற பேறு
உங்கள் கண்களோ பேறுபெற்றவை; ஏனெனில் அவை காண்கின்றன. உங்கள் காதுகளும் பேறுபெற்றவை; ஏனெனில் அவை கேட்கின்றன. நான் உறுதியாக உங்களுக்குச் சொல்கிறேன்; பல இறைவாக்கினர்களும் நேர்மையாளர்களும் நீங்கள் காண்பவற்றைக் காண ஆவல் கொண்டிருந்தார்கள். ஆனால், அவர்கள் காணவில்லை. நீங்கள் கேட்பவற்றைக் கேட்க விரும்பினார்கள்; ஆனால் அவர்கள் கேட்கவில்லை.
உண்மையை வெளிப்படுத்துவதற்கே இயேசு உவமையைக் கூறினார்
இயேசு அவர்களிடம் "எவரும் விளக்கை ஏற்றி, அதை ஒரு பாத்திரத்தால் மூடுவதில்லை; கட்டிலின்கீழ் வைப்பதுமில்லை. மாறாக, உள்ளே வருவோருக்கு ஒளி கிடைக்கும்படி அதை விளக்குத்தண்டின் மீது வைப்பர்.
வெளிப்படாது மறைந்திருப்பது ஒன்றுமில்லை; அறியப்படாமலும் வெளியாகாமலும் ஒளிந்திருப்பதும் ஒன்றுமில்லை. கேட்கச் செவியுள்ளோர் கேட்கட்டும்” என்றார். (உண்மையை மறைப்பது உவமையின் நோக்கமல்ல. மாறாக, கேட்போருக்கு உண்மையை வெளிப்படுத்தவே உவமையை இயேசு கூறினார். )
ஆர்வம் உள்ளோரே உவமையை அறியமுடியும்
மேலும் அவர், ”நீங்கள் எத்தகைய மனநிலையில் கேட்கிறீர்கள் என்பது பற்றிக் கவனமாயிருங்கள். நீங்கள் எந்த அளவையால் அளக்கிறீர்களோ அதே அளவையால் உங்களுக்கும் அளக்கப்படும்; இன்னும் கூடுதலாகவும் கொடுக்கப்படும்.
ஏனெனில், உள்ளவருக்குக் கொடுக்கப்படும்; அவர் நிறைவாகப் பெறுவார். இல்லாதவரிடமிருந்து தமக்கு உண்டென்று அவர் நினைப்பதும் எடுத்துக்கொள்ளப்படும்." ( ஆர்வம் உள்ளோர் உண்மையை மிகுதியாக அறிவர், ஆர்வம் இல்லாதவர் தவறாக அறிவார் )
நிலங்களும் விளைச்சலும் உவமையின் விளக்கம்
மேலும் அவர் அவர்களை நோக்கி, ’இந்த உவமை உங்களுக்குப் புரியவில்லையா? பின்பு எப்படி மற்ற உவமைகளையெல்லாம் நீங்கள் புரிந்துகொள்வீர்கள்?
இந்த உவமையின் பொருள் இதுவே. விதை, இறைவார்த்தை. விதைப்பவர் இறைவார்த்தையை விதைக்கிறார்.
1.வார்த்தையைக் கேட்பார், ஆனால் அறிந்துகொள்ள விரும்பமாட்டார் வழியோரம் விழுந்த விதைகள், அவ்வார்த்தைகளைக் கேட்பவர்களுள் சிலரைக் குறிக்கும். அவர்கள், இறையாட்சியைக் குறித்த இறைவார்த்தையைக் கேட்டும் புரிந்து கொள்ளமாட்டார்கள். அவர்கள் நம்பி மீட்புப் பெறாதவாறு, சாத்தான் வந்து அவ்வார்த்தையை அவர்கள் உள்ளத்திலிருந்து எடுத்துவிடுகிறான்.
2. இன்னலால், வார்த்தையின்படி செயல்படமாட்டார்
பாறைமீது விழுந்த விதைதகள், இறைவார்த்தையைக் கேட்டவுடன் அதை மகிழ்ச்சியோடு ஏற்றுக்கொள்பவர்களைக் குறிக்கும். ஆனால், அவர்கள் வேரற்றவர்கள். எனவே, அவர்கள் சிறிது காலமே அவ்வார்த்தையை நம்புவார்கள். இறைவார்த்தையின் பொருட்டு வேதனையோ இன்னலோ நேர்ந்த உடனே தடுமாற்றம் அடைவார்கள். சோதனைக் காலத்தில் நம்பிக்கையை விட்டுவிடுவார்கள்.
3. உலக ஆசைக்கே முதலிடம் கொடுப்பார்
முட்செடிகளுக்கு இடையில் விழுந்த விதைகள், இறைவார்த்தையைக் கேட்டும், உலகக் கவலை, செல்வம், வாழ்வில்வரும் இன்பங்கள், ஏனைய தீயஆசை போன்றவற்றால் நெருக்கப்படுவதால், முதிர்ச்சி அடையாமல், பயன் அளிக்காதவர்களைக் குறிக்கும்.
4. வார்த்தையின்படி செயல்படுவோர்
நல்ல நிலத்தில் விழுந்த விதைகளோ, சீரிய நல்உள்ளத்தோடு இறைவார்த்தையைக் கேட்டுப் புரிந்து, அதை ஏற்றுக் கொண்டு, காத்து, மன உறுதியுடன் பயன் அளிப்பவர்களைக் குறிக்கும். இவர்களுள் சிலர் நூறு மடங்காகவும், சிலர் அறுபது மடங்காகவும் சிலர் முப்பது மடங்காகவும் பயன் அளிப்பர்.’
ii) தானாக வளரும் விதை
தொடர்ந்து இயேசு, ’இறையாட்சியைப் பின்வரும் நிகழ்ச்சிக்கு ஒப்பிடலாம்: நிலத்தில் ஒருவர் விதைக்கிறார். அவர் எதுவும் செய்யாமலே நாள்கள் நகர்ந்து செல்கின்றன. அவருக்குத் தெரியாமல் விதை முளைத்து வளருகிறது. முதலில் தளிர், பின்பு கதிர், அதன் பின் கதிர் நிறைய தானியம் என்று நிலம் தானாகவே விளைச்சல் அளிக்கிறது. பயிர் விளைந்ததும் அவர் அரிவாளோடு புறப்படுகிறார்; ஏனெனில் அறுவடைக் காலம் வந்துவிட்டது’ என்று கூறினார்.
(இயேசுவின் நற்செய்தியை நம் உள்ளத்திலும் பிறர் உள்ளத்திலும் விதைப்பதே நாம் செய்ய வேண்டியது. நற்செய்தி தானாகவே உள்ளத்தில் வளர்ந்து நிலைவாழ்வை அளிக்கிறது)
iii) கடுகு விதை உவமை
இயேசு அவர்களுக்கு எடுத்துரைத்த வேறு ஓர் உவமை: ’இறையாட்சியை எதற்கு ஒப்பிடலாம்? அல்லது எந்த உவமையால் அதை எடுத்துச் சொல்லலாம்? அது கடுகு விதைக்கு ஒப்பாகும்.
'ஒருவர் கடுகு விதையை எடுத்துத் தம் வயலில் விதைத்தார். அது நிலத்தில் விதைக்கப் படும்பொழுது உலகிலுள்ள எல்லா விதைகளையும்விடச் சிறியது. ஆனாலும், அது விதைக்கப்பட்டபின் முளைத்தெழுந்து வளரும்போது, மற்றெல்லாச் செடிகளையும் விடப் பெரியதாகும். வானத்துப் பறவைகள் அதன் கிளைகளில் வந்து தங்கும் அளவுக்குப் பெரிய மரமாகும். விண்ணரசு இக்கடுகு விதைக்கு ஒப்பாகும்.
(உலகில் செல்வம், கல்வி, பதவி போன்றவே உயர்வாக எண்ணப்படுகின்றன. இயேசுவின் நற்செய்தி அற்பமாக எண்ணப்பட்டாலும், அதை உள்ளத்தில் விதைக்கும்போது, வளர்ந்து இறையாட்சியாக மாறி அவருக்கும் சுற்றியுள்ளோருக்கும் நிலைவாழ்வை அளிக்கிறது.)
vi) புளிப்பு மாவு உவமை
அவர் அவர்களுக்குக் கூறிய வேறு ஓர் உவமை: ’பெண் ஒருவர் புளிப்புமாவை எடுத்து மூன்று மரக்கால் மாவில் பிசைந்து வைத்தார். மாவு முழுவதும் புளிப்பேறியது. விண்ணரசு இப்புளிப்புமாவுக்கு ஒப்பாகும்.’
(இயேசுவின் நற்செய்தி அற்பமாகத் தோன்றினாலும், அதை விரும்பி நம் உள்ளத்தில் ஏற்கும்போது, நாம் அறியாமலே அது வளர்ந்து இறையாட்சியாக நிறைவடைகிறது)
v) புதையல் உவமை
’ஒருவர் நிலத்தில் மறைந்திருந்த புதையல் ஒன்றைக் கண்டுபிடிக்கிறார். அவர் அதை மூடி மறைத்து விட்டு மகிழ்ச்சியுடன் போய்த் தமக்குள்ள யாவற்றையும் விற்று அந்த நிலத்தை வாங்கிக்கொள்கிறார். விண்ணரசு இப்புதையலுக்கு ஒப்பாகும்.
(இயேசுவின் நற்செய்தியில் நிலைவாழ்வு மறைந்திருக்கிறது. இதை அறிபவர்கள், உலகச் செல்வங்களை இழந்து, மகிழ்ச்சியுடன் நிலைவாழ்வைப் பெறுகிறார்கள்)
ivi) முத்து உவமை
’வணிகர் ஒருவர் நல்முத்துகளைத் தேடிச் செல்கிறார். விலை-உயர்ந்த ஒரு முத்தைக் கண்டவுடன், அவர் போய்த் தமக்குள்ள யாவற்றையும் விற்று, அதை வாங்கிக்கொள்கிறார். விண்ணரசு அந்நிகழ்ச்சிக்கு ஒப்பாகும்.
(வாழ்வின் நோக்கத்தை அறிந்துகொள்ள பலவற்றை கற்று அறிந்தார். ஒருநாள் இயேசுவின் நற்செய்தியைப் படித்தார். அவருடைய தேடல் முடிவுபெற்றது. அனைத்தையும் விட்டுவிட்டு, இறையாட்சியைக் கைக்கொண்டு நிலைவாழ்வைப் பெற்றார்.)
தீர்ப்புநாள் உவமைகள்
i) கோதுமையும் களைகளும் உவமை
இயேசு அவர்களுக்கு எடுத்துரைத்த வேறு ஓர் உவமை: ’விண்ணரசைப் பின்வரும் நிகழ்ச்சிக்கு ஒப்பிடலாம்.
ஒருவர் தம் வயலில் நல்ல விதைகளை விதைத்தார். அவருடைய ஆள்கள் தூங்கும்போது, அவருடைய பகைவன் வந்து கோதுமைகளுக்கிடையே களைகளை விதைத்துவிட்டுப் போய்விட்டான். பயிர் வளர்ந்து கதிர்-விட்டபோது களைகளும் காணப்பட்டன.
நிலக்கிழாருடைய பணியாளர்கள் அவரிடம் வந்து, ’ஐயா, நீர் உமது வயலில் நல்ல விதைகளை அல்லவா விதைத்தீர்? அதில் களைகள் காணப்படுவது எப்படி? என்று கேட்டார்கள்.
அதற்கு அவர், ’இது பகைவனுடைய வேலை’ என்றார். உடனே பணியாளர்கள் அவரிடம், ’நாங்கள் போய் அவற்றைப் பறித்துக் கொண்டு வரலாமா? உம் விருப்பம் என்ன?’ என்று கேட்டார்கள். அவர், ″வேண்டாம், களைகளைப் பறிக்கும்போது அவற்றோடு சேர்த்துக் கோதுமையையும் நீங்கள் பிடுங்கிவிடக்கூடும். அறுவடைவரை இரண்டையும் வளர விடுங்கள்.
அறுவடை நேரத்தில், அறுவடை செய்வோரிடம், ’முதலில் களைகளைப் பறித்துக் கொண்டுவந்து எரிப்பதற்கெனக் கட்டுகளாகக் கட்டுங்கள். கோதுமையையோ என் களஞ்சியத்தில் சேர்த்துவையுங்கள்’ என்று கூறுவேன்″ என்றார்.'
உலகத் தோற்றமுதல் மறைந்திருப்பவை வெளிப்பட்டது
இவற்றையெல்லாம் இயேசு மக்கள் கூட்டத்துக்கு உவமைகள் வாயிலாக உரைத்தார். அவர்களது கேட்டறியும் திறமைக்கு ஏற்ப, அவர் இத்தகைய பல உவமைகளால் இறைவார்த்தையை அவர்களுக்கு எடுத்துரைத்து வந்தார் உவமைகள் இன்றி அவர் அவர்களோடு எதையும் பேசவில்லை. ஆனால் தனிமையாக இருந்தபோது தம் சீடருக்கு அனைத்தையும் விளக்கிச் சொன்னார். ’’நான் உவமைகள் வாயிலாகப் பேசுவேன்; உலகத் தோற்றமுதல் மறைந்திருப்பவற்றை விளக்குவேன்’ என்று இறைவாக்கினர் உரைத்தது இவ்வாறு நிறைவேறியது.
கோதுமையும் களைகளும் உவமையின் விளக்கம்
அதன்பின்பு இயேசு மக்கள் கூட்டத்தினரை அனுப்பிவிட்டு வீட்டுக்குள் வந்தார். அப்போது அவருடைய சீடர்கள் அவரருகே வந்து, ’வயலில் தோன்றிய களைகள்பற்றிய உவமையை எங்களுக்கு விளக்கிக் கூறும்’ என்றனர்.
அதற்கு அவர் பின் வருமாறு கூறினார்: ’
நல்ல விதைகளை விதைப்பவர் மானிடமகன்;
வயல், இவ்வுலகம்;
நல்ல விதைகள், கடவுளின் ஆட்சிக்குட்பட்ட மக்கள்;
களைகள், தீயோனைச் சேர்ந்தவர்கள்; அவற்றை விதைக்கும் பகைவன், அலகை;
அறுவடை, உலகின்முடிவு;
அறுவடை செய்வோர், வானதூதர்.
எவ்வாறு களைகளைப் பறித்துத் தீக்கிரையாக்குவார்களோ, அவ்வாறே உலக முடிவிலும் நடக்கும். மானிட மகன் தம் வானதூதரை அனுப்புவார். அவர்கள் அவருடைய ஆட்சிக்குத் தடையாக உள்ள அனைவரையும், நெறிகெட்டோரையும் ஒன்று சேர்ப்பார்கள்; பின், அவர்களைத் தீச்சூளையில் தள்ளுவார்கள். அங்கே அழுகையும் அங்கலாய்ப்பும் இருக்கும். அப்போது நேர்மையாளர், தம் தந்தையின் ஆட்சியில், கதிரவனைப்போல் ஒளிவீசுவர். கேட்கச் செவியுள்ளோர் கேட்கட்டும்.’
ii) வலை உவமை
விண்ணரசு, கடலில் வீசப்பட்டு எல்லா வகையான மீன்களையும் வாரிக்கொண்டுவரும் வலைக்கு ஒப்பாகும். வலை நிறைந்ததும், அதை இழுத்துக்கொண்டு போய்க் கரையில் உட்கார்ந்து, நல்லவற்றைக் கூடைகளில் சேர்த்துவைப்பர்; கெட்டவற்றை வெளியே எறிவர்.
இவ்வாறே உலக முடிவிலும் நிகழும். வானதூதர் சென்று, நேர்மையாளரிடையேயிருந்து தீயோரைப் பிரிப்பர்; பின் அவர்களைத் தீச்சூளையில் தள்ளுவர். அங்கே அழுகையும் அங்கலாய்ப்பும் இருக்கும்.’
இவற்றையெல்லாம் புரிந்து கொண்டீர்களா?’ என்று இயேசு கேட்க, அவர்கள், ’ஆம்’ என்றார்கள்.
பின்பு அவர், 'ஆகையால் விண்ணரசு பற்றிக் கற்றுக்கொண்ட எல்லா மறைநூல்-அறிஞரும், தம் கருவூலத்திலிருந்து புதியவற்றையும் பழையவற்றையும் வெளிக்கொணரும் வீட்டு உரிமையாளரைப்போல் இருக்கின்றனர்’ என்று அவர்களிடம் கூறினார்.
3. என் பெயர் இலேகியோன்
உங்கள் நம்பிக்கை எங்கே? கலிலேயக் கடல் கிபி 31
அன்றொரு நாள் மாலை நேரம். இயேசு சீடர்களை நோக்கி, ’ஏரியின் அக்கரைக்குச் செல்வோம், வாருங்கள்’ என்றார். அவர்கள், மக்கள் கூட்டத்தை அனுப்பிவிட்டு, படகில் இருந்தவாறே அவரைக் கூட்டிச் சென்றார்கள். வேறு படகுகளும் அவருடன் சென்றன.
படகு போய்க்கொண்டு இருந்தபோது, அவர் ஆழ்ந்து தூங்கிவிட்டார். அப்பொழுது ஒரு பெரும் புயல் அடித்தது. . கடலில் பெருங்கொந்தளிப்பு ஏற்பட்டது. அலைகள் படகின்மேல் தொடர்ந்து மோத, அது தண்ணீரால் நிரம்பிக் கொண்டிருந்தது. அவர்கள் ஆபத்துக்கு உள்ளானார்கள். அவரோ, படகின் பிற்பகுதியில் தலையணை வைத்து, ஆழ்ந்துத் தூங்கிக்கொண்டிருந்தார்.
சீடர்கள் அவரிடம் வந்து, ’ஆண்டவரே, காப்பாற்றும், சாகப்போகிறோமே! உமக்குக் கவலையில்லையா?’ என்று சொல்லி அவரை எழுப்பினார்கள்.
அவர் விழித்தெழுந்து, காற்றையும் நீரின் கொந்தளிப்பையும் கடிந்துகொண்டார். கடலை நோக்கி, ’இரையாதே, அமைதியாயிரு’ என்றார். உடனே அவை ஓய்ந்தன; மிகுந்த அமைதி உண்டாயிற்று.
பின் அவர் அவர்களை நோக்கி, "ஏன் அஞ்சுகிறீர்கள்? "உங்கள் நம்பிக்கை எங்கே?" என்று கேட்டார்.
அவர்கள் அச்சமும் வியப்பும் நிறைந்தவர்களாய், "இவர் காற்றுக்கும் நீருக்கும் கட்டளையிடுகிறார். அவை இவருக்குக் கீழ்ப்படிகின்றனவே, இவர் யாரோ? எத்தகையவரோ? என்று ஒருவரோடு ஒருவர் பேசிக்கொண்டார்கள்.’
தீய ஆவி பிடித்த கொடியவர் கெரசேனர் பகுதி கிபி 31
அவர்கள் கலிலேயாவுக்கு எதிரே கடலுக்கு அக்கரையில் கதரேனர் வாழ்ந்த கெரசேனர் பகுதியை நோக்கிப் படகைச் செலுத்தினார்கள். இயேசு படகைவிட்டு இறங்கிய உடனே அந்நகரைச் சேர்ந்த, தீய ஆவி பிடித்த ஒருவர் (மத்தேயு நற்செய்தியின்படி இருவர்) கல்லறைகளிலிருந்து அவருக்கு எதிரே வந்தார்.
பேய்பிடித்த அவர், நெடுநாளாய் ஆடை அணிவதில்லை; வீட்டில் தங்காமல், கல்லறைகளில் தங்கிவந்தார். அவ்வழியே யாரும் போகமுடியாத அளவுக்கு அவர் கொடியவராய் இருந்தார். அவரை எவராலும், ஒருபொழுதும், சங்கிலியால்கூடக் கட்டிவைக்க முடியவில்லை. ஏனெனில், அவரைப் பலமுறை விலங்குகளாலும் சங்கிலிகளாலும் கட்டியிருந்தும், அவர் சங்கிலிகளை உடைத்து, விலங்குகளைத் தகர்த்து எறிந்தார். எவராலும் அவரை அடக்க இயலவில்லை.
அது மட்டுமல்ல, தீயஆவி அவரைப் பாலை-நிலத்திற்கும் இழுத்துச் செல்லும். அவர் இரவு-பகலாய் எந்நேரமும் கல்லறைகளிலும், மலைகளிலும் கூச்சலிட்டுக் கொண்டிருந்தார்; தம்மையே கற்களால் காயப்படுத்திவந்தார். அவ்வழியே யாரும் போகமுடியாத அளவுக்கு, அவர் மிகவும் கொடியவராய் இருந்தார்.
கடவுளின் மகனே, என்னை வதைக்கவேண்டாம்
அவர் தொலையிலிருந்து இயேசுவைக் கண்டதும், கத்திக்கொண்டு ஓடிவந்து, அவர்முன் பணிந்து விழுந்து, ’இயேசுவே, உன்னத கடவுளின் மகனே, உமக்கு இங்கு என்ன வேலை? குறித்த காலம் வரும்முன்னே எங்களை வதைக்கவா இங்கே வந்தீர்? கடவுள்மேல் ஆணை, என்னை வதைக்கவேண்டாம் என உம்மிடம் மன்றாடுகிறேன்’ என்று உரத்த குரலில் கூறினார். ஏனெனில், இயேசு அவரிடம், 'தீய ஆவியே, இந்த மனிதரை விட்டுப் போ’ என்று கட்டளையிட்டிருந்தார்.
நாங்கள் பலர்
இயேசு அவரிடம், 'உம் பெயர் என்ன?’ என்று கேட்க, அவர், ''என் பெயர் ″இலேகியோன்″, ஏனெனில் நாங்கள் பலர்’ என்றார். ஏனெனில் பல பேய்கள் அவருக்குள் புகுந்திருந்தன. அவை, அந்தப் பகுதியிலிருந்து தங்களை அனுப்பிவிட வேண்டாமென்றும், பாதாளத்துக்குள் போகப் பணிக்கவேண்டாமெனவும் அவரை வேண்டின.
அங்கே, அவர்களிடமிருந்து சற்றுத் தொலையில், மலைப்பகுதியில், பன்றிகள் பெருங் கூட்டமாய் மேய்ந்து கொண்டிருந்தன. பேய்கள் அவரிடம் ’நீர் எங்களை ஓட்டுவதாயிருந்தால், நாங்கள் அப்பன்றிக் கூட்டத்திற்குள் புகும்படி எங்களை அங்கே அனுப்பிவிடும்’ என்று அவரை வேண்டின. அவர் அவற்றிடம், ’போங்கள்’ என்று அனுமதி கொடுத்தார்.
பேய்கள் அவரைவிட்டு வெளியேறிப் பன்றிகளுக்குள் புகுந்தன. ஏறக்குறைய இரண்டாயிரம் பன்றிகள் அடங்கிய அந்தக் கூட்டம் செங்குத்துப் பாறையிலிருந்து கடலில் பாய்ந்து, நீரில் வீழ்ந்து மூழ்கியது.
பன்றிகளை மேய்த்துக்கொண்டிருந்தவர்களோ நடந்ததைக் கண்டு ஓடிப்போய், நகரிலும் நாட்டுப்புறத்திலும், பேய்-பிடித்தவரைப்பற்றிய செய்தியையும், நடந்த அனைத்தையும் அறிவித்தார்கள்.
நடந்தது என்னவென்று பார்க்க, மக்கள் வந்தனர். அவர்கள் இயேசுவிடம் வந்தபோது, பேய் பிடித்திருந்தவர், அதாவது இலேகியோன் பிடித்திருந்த அவர், ஆடையணிந்து, அறிவுத் தெளிவுடன், இயேசுவின் காலடியில் அமர்ந்திருப்பதைக் கண்டு அச்சமுற்றார்கள்.
நடந்ததைப் பார்த்தவர்கள், பேய்பிடித்தவர் எப்படி விடுவிக்கப்பட்டார் என்பதையும், பேய்பிடித்தவருக்கும் பன்றிகளுக்கும் நேரிட்டதையும் அவர்களுக்கு எடுத்துரைத்தார்கள்.
அப்பொழுது, கெரசேனரைச் சுற்றியுள்ள பகுதிகளிலிருந்து திரண்டு வந்திருந்த மக்கள் அனைவரும், அச்சம் மேலிட்டவர்களாய், தங்கள் பகுதியை விட்டுப் போய்விடுமாறு இயேசுவை வேண்டிக்கொண்டார்கள். அவர் படகேறித் திரும்பிச் சென்றார்.
பேய்நீங்கப்பெற்றவர் இயேசுவை அறிவித்தார்
அப்போது, பேய்கள் நீங்கப்பெற்றவர், தம்மைக் கூட்டிச்செல்லும்படி இயேசுவிடம் மன்றாடினார்.
ஆனால், அவர் அதற்கு இசையாமல், அவரைப் பார்த்து, ’உமது வீட்டிற்குப் போய், கடவுள் உம்மீது இரக்கங்கொண்டு, உமக்குச் செய்ததையெல்லாம் உம் உறவினருக்கு அறிவியும்’ என்றார். அவர் சென்று, தெக்கப்பொலி நாட்டில் நகரெங்கும் போய், இயேசு தமக்குச் செய்ததையெல்லாம் அறிவித்து வந்தார். அனைவரும் வியப்புற்றனர்.
4. தலித்தா கூம்
தொழுகைக்கூடத் தலைவர் யாயிர் கப்பர்நாகும் கிபி 31
இயேசு படகிலேறி, கடலைக் கடந்து, மீண்டும் மறுகரையை அடைந்ததும், அங்கே திரண்டு அவருக்காகக் காத்திருந்த மக்கள் அவரை வரவேற்றனர். அவர் கடற்கரையில் இருந்தார்.
அப்போது தொழுகைக்கூடத் தலைவர் ஒருவர் இயேசுவிடம் வந்தார். அவர் பெயர் யாயிர். பன்னிரண்டு வயதுடைய அவருடைய ஒரே மகள் சாகும் தறுவாயிலிருந்தாள்.
அவர் இயேசுவின் காலில் விழுந்து, ’என் மகள் சாகுந்தறுவாயில் இருக்கிறாள். நீர் வந்து அவள்மீது உம் கைகளை வையும். அப்போது அவள் நலம் பெற்றுப் பிழைத்துக்கொள்வாள்’ என்று அவரை வருந்தி வேண்டினார்.
இயேசு எழுந்து அவர் பின்னே சென்றார். இயேசுவின் சீடர்களும் அவரைப் பின் தொடர்ந்தனர்.
ஆடையைத் தொட்டாலே நலம் பெறுவேன்
இயேசு அங்குச் செல்லும் வழியில், மக்கள்-கூட்டம் அவரை நெருக்கிக் கொண்டிருந்தது. அப்போது, பன்னிரு ஆண்டுகளாய் இரத்தப்போக்கினால் வருந்திய பெண்-ஒருவர் அங்கு இருந்தார். மருத்துவர் பலரிடம் அவர் தம் சொத்து முழுவதையும் செலவழித்தும், எவராலும் அவரைக் குணமாக்க இயலவில்லை. அவர் நிலைமை, வர வர மிகவும் கேடுற்றது.
அவர் இயேசுவைப்பற்றிக் கேள்விப்பட்டு, மக்கள் கூட்டத்துக்கிடையில், அவருக்குப் பின்னால் வந்து, அவரது மேலுடையின் ஓரத்தைத் தொட்டார். ஏனெனில், ’நான் அவருடைய ஆடையைத் தொட்டாலே நலம் பெறுவேன்’ என்று அப்பெண் தமக்குள் சொல்லிக்கொண்டார். தொட்ட உடனே அவருடைய இரத்தப் போக்கு நின்று போயிற்று. அவரும், தம் நோய் நீங்கி, நலம் பெற்றதைத் தம் உடலில் உணர்ந்தார்.
உடனே இயேசு, தம்மிடமிருந்து வல்லமை வெளியேறியதைத் தம்முள் உணர்ந்து, மக்கள் கூட்டத்தைத் திரும்பிப் பார்த்து, ’என் மேலுடையைத் தொட்டவர் யார்?’ என்று கேட்டார். அனைவரும் மறுத்தனர்.
பேதுரு, ’ஆண்டவரே, மக்கள்-கூட்டம் சூழ்ந்து நெருக்கிக்கொண்டிருக்கிறதே’ என்றார். அவருடைய சீடர்கள் அவரிடம், ’இம்மக்கள்-கூட்டம் உம்மைச் சூழ்ந்து நெருக்குவதைக் கண்டும், ‘என்னைத் தொட்டவர் யார்?’ என்கிறீரே!’ என்றார்கள்.
அதற்கு இயேசு, ’யாரோ ஒருவர் என்னைத் தொட்டார்; என்னிடமிருந்து வல்லமை வெளியேறியதை உணர்ந்தேன்’ என்றார். அவர், தம் மேலுடையைத் தொட்டவரைக் காணும்படி, சுற்றிலும் திரும்பிப் பார்த்துக் கொண்டிருந்தார்.
அப்போது அப்பெண், தாம் இனியும் மறைந்திருக்க முடியாதென்று கண்டு, அஞ்சி நடுங்கிக்கொண்டே வந்து, அவர்முன் விழுந்தார. தாம் அவரைத் தொட்ட காரணத்தையும், உடனே தமது பிணி நீங்கியதையும்பற்றி மக்கள் அனைவர் முன்னிலையிலும் அறிவித்தார்.
இயேசு அவரிடம், ’மகளே துணிவோடிரு; உனது நம்பிக்கை உன்னை நலமாக்கியது. அமைதியுடன் போ, நீ நோய் நீங்கி நலமாயிரு’ என்றார்.
மகள் இறந்துவிட்டாள்
அவர் தொடர்ந்து பேசிக்கொண்டிருந்தபோது, தொழுகைக்கூடத் தலைவருடைய வீட்டிலிருந்து ஆள்கள் வந்து, அவரிடம், ’உம்முடைய மகள் இறந்துவிட்டாள். போதகரை ஏன் இன்னும் தொந்தரவு செய்கிறீர்?’ என்றார்கள்.
அவர்கள் சொன்னது இயேசுவின் காதில் விழுந்ததும், அவர் சிறுமியின் தந்தையைப் பார்த்து, ’அஞ்சாதீர், நம்பிக்கையோடு மட்டும் இரும், அவள் பிழைப்பாள்’ என்று கூறினார்.
அவர்கள் தொழுகைக்கூடத் தலைவரின் வீட்டிற்குச் சென்றார்கள். வீட்டுக்குள் வந்ததும், பேதுரு, யோவான், யாக்கோபு, சிறுமியின் தாய், தந்தை ஆகியோரைத் தவிர, எவரையும் அவர் தம்மோடு உள்ளே வர அனுமதிக்கவில்லை.
அங்கே குழல் ஊதுவோரையும், கூட்டத்தினரின் அமளியையும், மக்கள் அழுது ஓலமிட்டுப் புலம்புவதையும் இயேசு கண்டார். அவளுக்காக, அனைவரும் மாரடித்துப் புலம்பி அழுதுகொண்டிருந்தார்கள்.
அவர் உள்ளே சென்று, ’ஏன் இந்த அமளி? ஏன் இந்த அழுகை? சிறுமி இறக்கவில்லை, உறங்குகிறாள் என்றார். அவள் இறந்துவிட்டாள் என்று அறிந்திருந்ததால், அவரைப் பார்த்து அவர்கள் நகைத்தார்கள்.
தலித்தா கூம்
ஆனால் அவர் அனைவரையும் வெளியேற்றியபின், சிறுமியின் தந்தையையும் தாயையும், தம்முடன் இருந்தவர்களையும் கூட்டிக் கொண்டு, அச்சிறுமி இருந்த இடத்திற்குச் சென்றார்.
சிறுமியின் கையைப் பிடித்து அவளிடம், ’தலித்தா கூம்’ என்றார். அதற்கு, ’சிறுமி, உனக்குச் சொல்லுகிறேன், எழுந்திடு’ என்பது பொருள். உயிர்மூச்சுத் திரும்பி வரவே, உடனே அச்சிறுமி எழுந்து நடந்தாள். அவள் பன்னிரண்டு வயது ஆனவள். இயேசு அவளுக்கு உணவு கொடுக்கப் பணித்தார்
அவளுடைய பெற்றோர் மலைத்துப் போயினர். மக்கள் பெரிதும் மலைத்துப்போய் மெய்மறந்து நின்றார்கள். "இதை யாருக்கும் தெரிவிக்கக் கூடாது" என்று அவர் அவர்களுக்குக் கண்டிப்பாய்க் கட்டளையிட்டார்; இச்செய்தி அந்நாடெங்கும் பரவியது.
பார்வையற்றோர் இருவர் பார்வை பெற்றார்
இயேசு அங்கிருந்து சென்றபோது பார்வையற்றோர் இருவர், ’தாவீதின் மகனே, எங்களுக்கு இரங்கும்’ என்று கத்திக்கொண்டே அவரைப் பின்தொடர்ந்தனர். அவர் வீடு வந்து சேர்ந்ததும், அந்தப் பார்வையற்றோரும் அவரிடம் வந்தனர்.
இயேசு அவர்களைப் பார்த்து, ’நான் இதைச் செய்யமுடியும் என நம்புகிறீர்களா?’ என்று கேட்டார். அதற்கு அவர்கள், ’ஆம், ஐயா’ என்றார்கள். பின்பு அவர், அவர்களின் கண்களைத் தொட்டு, ’நீங்கள் நம்பியபடியே உங்களுக்கு நிகழட்டும்’ என்றார். உடனே அவர்களின் கண்கள் திறந்தன.
இயேசு அவர்களை நோக்கி, ’யாரும் இதை அறியாதபடி பார்த்துக் கொள்ளுங்கள்’ என்று மிகக் கண்டிப்பாகக் கூறினார். ஆனால், அவர்கள் வெளியேபோய், நாடெங்கும் அவரைப்பற்றிய செய்தியைப் பரப்பினார்கள்.
பேச்சிழந்தவர் பேசினார்
அவர்கள் சென்றபின், பேய்-பிடித்துப் பேச்சிழந்த ஒருவரைச் சிலர் அவரிடம் கொண்டு வந்தனர். பேயை அவர் ஓட்டியதும், பேச இயலாத அவர் பேசினார்.
மக்கள் கூட்டத்தினர் வியப்புற்று, ’இஸ்ரயேலில் இப்படி ஒருபோதும் கண்டதில்லை’ என்றனர். ஆனால் பரிசேயர், ’இவன் பேய்களின் தலைவனைக் கொண்டு பேய்களை ஓட்டுகிறான்’ என்றனர்.
5. இவர் தச்சருடைய மகன் அல்லவா?
நாசரேத்து கிபி 31
அவர் அங்கிருந்து புறப்பட்டுத் தமது சொந்த ஊருக்கு வந்தார். அவருடைய சீடரும் அவரைப் பின்தொடர்ந்தனர். ஓய்வுநாள் வந்தபோது, அவர் தொழுகைக்கூடத்தில் கற்பிக்கத் தொடங்கினார்.
அதைக் கேட்ட பலர் வியப்பில் ஆழ்ந்தனர். அவர்கள், “எங்கிருந்து இந்த ஞானம் இவருக்கு வந்தது? எப்படி இந்த வல்ல செயல்களைச் செய்கிறார்? இவர் தச்சர் அல்லவா! இவர் தச்சருடைய மகன் அல்லவா? மரியாவின் மகன்தானே! யாக்கோபு, யோசே, யூதா, சீமோன் ஆகியோர் இவருடைய சகோதரர் அல்லவா? இவர் சகோதரிகள் எல்லாரும் இங்கு நம்மோடு இருக்கிறார்கள் அல்லவா? பின் இவருக்கு இவையெல்லாம் எங்கிருந்து வந்தன?’ என்றார்கள்.
இவ்வாறு அவரை ஏற்றுக் கொள்ள அவர்கள் தயங்கினார்கள்.
இறைவாக்கினர் சொந்த ஊரில் மதிப்புப் பெறுவதில்லை
இயேசு அவர்களிடம், ’சொந்த ஊரிலும், சுற்றத்திலும், தம் வீட்டிலும் தவிர, மற்றெங்கும் இறைவாக்கினர் மதிப்புப் பெறுவர்’ என்றார்.
அவர்களுக்கு நம்பிக்கை இல்லாததால், அவர் அங்குப் பல வல்லசெயல்களைச் செய்யவில்லை. அங்கே உடல் நலமற்றோர் சிலர்மேல் கைகளை வைத்துக் குணமாக்கியதைத் தவிர, வேறு வல்லசெயல் எதையும் அவரால் செய்ய இயலவில்லை.
அவர்களது நம்பிக்கையின்மையைக் கண்டு அவர் வியப்புற்றார். அவர் சுற்றிலுமுள்ள ஊர்களுக்குச் சென்று கற்பித்துவந்தார்.