1.கடவுளை வெளிப்படுத்தும் இறைமகன் இயேசு
கடவுளின் மகனாகிய இயேசு கிறிஸ்துவைப்பற்றிய நற்செய்தியின் தொடக்கம்.
தொடக்கத்தில் வாக்கு இருந்தது; அவ்வாக்கு கடவுளோடு இருந்தது; அவ்வாக்கு கடவுளாயும் இருந்தது. வாக்கு என்னும் அவரே தொடக்கத்தில் கடவுளோடு இருந்தார்.
அனைத்தும் அவரால் உண்டாயின; உண்டானது-எதுவும் அவரால் அன்றி உண்டாகவில்லை.
அவரிடம் வாழ்வு இருந்தது; அவ்வாழ்வு மனிதருக்கு ஒளியாய் இருந்தது; அந்த ஒளி இருளில் ஒளிர்ந்தது; இருள் அதன்மேல் வெற்றிகொள்ளவில்லை.
அனைத்து-மனிதரையும் ஒளிர்விக்கும் உண்மையான ஒளி உலகிற்கு வந்துகொண்டிருந்தது.
வாக்கு மனிதர் ஆனார்; நம்மிடையே குடிகொண்டார். அவரது மாட்சியை நாங்கள் கண்டோம். அருளும் உண்மையும் நிறைந்துவிளங்கிய அவர், தந்தையின் ஒரேமகன் என்னும்நிலையில், இம்மாட்சியைப் பெற்றிருந்தார்.
இவரது நிறைவிலிருந்து, நாம் யாவரும் நிறைவாக அருள் பெற்றுள்ளோம். திருச்சட்டம் மோசே-வழியாகக் கொடுக்கப்பட்டது; அருளும் உண்மையும் இயேசுகிறிஸ்து-வழியாய் வெளிப்பட்டன.
கடவுளை யாரும் என்றுமே கண்டதில்லை; தந்தையின் நெஞ்சத்திற்கு நெருக்கமானவரும் கடவுள்தன்மை கொண்டவருமான ஒரேமகனே அவரை வெளிப்படுத்தியுள்ளார்.
ஒளியான அவர் உலகத்தில் இருந்தார். உலகு அவரால்தான் உண்டானது, ஆனால், உலகு அவரை அறிந்துகொள்ளவில்லை. அவர் தமக்குரியவர்களிடம் வந்தார். அவருக்கு உரியவர்கள் அவரை ஏற்றுக்கொள்ளவில்லை.
அவரிடம் நம்பிக்கை-கொண்டு, அவரை ஏற்றுக்கொண்ட ஒவ்வொருவருக்கும், அவர், கடவுளின்-பிள்ளைகளாகும் உரிமையை அளித்தார். அவர்கள் இரத்தத்தினாலோ, உடல்-இச்சையினாலோ, ஆண்மகன் விருப்பத்தினாலோ பிறந்தவர்கள் அல்ல; மாறாகக் கடவுளால் பிறந்தவர்கள்.
2. திருமுழுக்கு யோவானின் பிறப்பு
இயேசுவுக்கு சான்றுபகருமாறு வந்த திருமுழுக்கு யோவான்
கடவுள் அனுப்பிய ஒருவர் இருந்தார்; அவர் பெயர் யோவான். அவர் சான்றுபகருமாறு வந்தார். அனைவரும் தம்வழியாக நம்புமாறு, அவர் ஒளியைக்குறித்துச் சான்றுபகர்ந்தார். அவர் அந்த ஒளி அல்ல; மாறாக, ஒளியைக் குறித்துச் சான்றுபகர வந்தவர்.
நற்செய்தியாளர் லூக்காவின் முன்னுரை
(மாண்புமிகு தியோபில் அவர்களே, நம்மிடையே நிறைவேறிய நிகழ்ச்சிகளை முறைப்படுத்தி, ஒரு வரலாறு எழுதப் பலர் முயன்றுள்ளனர்: தொடக்கமுதல் நேரில் கண்டும், இறைவார்த்தையை அறிவித்தும்வந்த ஊழியர் நம்மிடம் ஒப்படைத்துள்ளவாறே எழுத முயன்றனர்.
அதுபோலவே, நானும் எல்லாவற்றையும் தொடக்கத்திலிருந்தே கருத்தாய் ஆய்ந்து, நீர் கேட்டறிந்தவை உறுதியானவை எனத் தெரிந்துகொள்ளும் பொருட்டு, அவற்றை ஒழுங்குப்படுத்தி, உமக்கு எழுதுவது நலமெனக் கண்டேன்.)
திருமுழுக்கு யோவானின் பெற்றோர் எருசலேம் கிமு3
யூதேய நாட்டில் ஏரோது அரசனாக இருந்த காலத்தில், அபியா வகுப்பைச் சேர்ந்த செக்கரியா என்னும் பெயர்கொண்ட குரு ஒருவர் இருந்தார். அவர் மனைவி, ஆரோனின் வழிவந்தவர்; அவர் பெயர் எலிசபெத்து.
கடவுள்பார்வையில், அவர்கள் இருவரும் நேர்மையானவர்களாய் விளங்கினார்கள். ஆண்டவருடைய அனைத்துக் கட்டளைகளுக்கும் ஒழுங்குகளுக்கும் ஏற்பக் குற்றமற்றவர்களாய் நடந்துவந்தார்கள். அவர்களுக்குப் பிள்ளை இல்லை; ஏனெனில், எலிசபெத்து கருவுற இயலாதவராய் இருந்தார். மேலும், அவர்கள் வயது-முதிர்ந்தவர்களாயும் இருந்தார்கள்.
யோவான் பிறப்பை தூதர் அறிவித்தார்
தம்முடைய பிரிவின்முறை வந்தபோது, செக்கரியா கடவுளின் திருமுன் குருத்துவப்பணி ஆற்றிவந்தார். மரபுக்கு ஏற்ப, ஆண்டவரின் திருக்கோவிலுக்குள் சென்று தூபம்-காட்டுவது யாரென்று அறியச் சீட்டுக் குலுக்கிப் போட்டபோது, அது செக்கரியா பெயருக்கு விழுந்தது. அவர் தூபம்காட்டுகிற வேளையில், மக்கள்-கூட்டத்தினர் அனைவரும் வெளியே இறைவனிடம் வேண்டிக்கொண்டிருந்தனர்.
அப்பொழுது ஆண்டவருடைய தூதர் ஒருவர், தூப-பீடத்தின் வலப்பக்கத்தில் நின்றவாறு அவருக்குத் தோன்றினார். அவரைக் கண்டு செக்கரியா அச்சமுற்றுக் கலங்கினார்.
வானதூதர் அவரை நோக்கி, 'செக்கரியா, அஞ்சாதீர், உமது மன்றாட்டு கேட்கப்பட்டது. உம் மனைவி எலிசபெத்து உமக்கு ஒரு மகனைப் பெற்றெடுப்பார்; அவருக்கு யோவான் எனப் பெயரிடுவீர்.
நீர் மகிழ்ந்து பேருவகை கொள்வீர். அவரது பிறப்பால் பலரும் மகிழ்ச்சியடைவர். அவர் ஆண்டவர் பார்வையில் பெரியவராய் இருப்பார்; திராட்சை மதுவோ, வேறு எந்த மதுவோ அருந்த மாட்டார்; தாய் வயிற்றில் இருக்கும்போதே தூயஆவியால் முற்றிலும் ஆட்கொள்ளப்படுவார்.
அவர், இஸ்ரயேல் மக்களுள் பலரைத் தம் கடவுளாகிய ஆண்டவரிடம் திரும்பிவரச் செய்வார். எலியாவின் உளப்பாங்கையும் வல்லமையையும் உடையவராய், அவருக்கு முன் செல்வார்; தந்தையரும் மக்களும் உளம் ஒத்துப்போகச் செய்வார்; நேர்மையாளர்களின் மனநிலையைக் கீழ்ப்படியாதவர்கள் பெறச்செய்வார்; இவ்வாறு, ஆண்டவருக்கு ஏற்புடைய ஒரு மக்களினத்தை ஆயத்தம் செய்வார்’ என்றார்.
செக்கரியா வானதூதரிடம், 'இது நடைபெறும் என எனக்கு எப்படித் தெரியும்? நான் வயதானவன். அதுபோல் என் மனைவியும் வயது-முதிர்ந்தவராயிற்றே’ என்றார்.
அதற்கு வானதூதர் அவரிடம், 'நான் கபிரியேல்; கடவுளின் திருமுன் நிற்பவன்; உம்மோடு பேசவும், இந்த நற்செய்தியை உமக்கு அறிவிக்கவும் அனுப்பப்பட்டேன். இதோ பாரும், உரிய காலத்தில் நிறைவேற இருக்கும் என்னுடைய வார்த்தைகளை நீர் நம்பவில்லை. ஆதலால், அவை நிறைவேறும்வரை நீர் பேச்சற்றவராய் இருப்பீர்; உம்மால் பேசவே இயலாது’ என்றார்.
மக்கள் செக்கரியாவுக்காகக் காத்திருந்தனர். திருக்கோவிலில் அவர் காலந்தாழ்த்துவதைக் குறித்து அவர்கள் வியப்படைந்தார்கள். அவர் வெளியே வந்தபோது அவர்களிடம் பேசமுடியாமல் இருந்தார். ஆதலால், அவர் திருக்கோவிலில் ஏதோ காட்சி கண்டிருக்கவேண்டும் என அவர்கள் உணர்ந்துகொண்டார்கள். அவர், அவர்களிடம், சைகைகள்-வாயிலாக உரையாடிவந்தார்; பேச்சற்றே இருந்தார். அவருடைய திருப்பணிக்காலம் முடிந்ததும் அவர் வீடுதிரும்பினார்.
அதற்குப்பின்பு, அவர் மனைவி எலிசபெத்து கருவுற்று, ஐந்து-மாதமளவும் பிறர் கண்ணில் படாதிருந்தார். 'மக்களுக்குள் எனக்கிருந்த இகழ்ச்சியை நீக்க, ஆண்டவர் என்மீது அருள்கூர்ந்து இந்நாளில் இவ்வாறு செய்தருளினார்’ என்று தமக்குள் சொல்லிக்கொண்டார்.
3. இயேசுவின் பிறப்பு முன்னறிவிப்பு
கபிரியேல் மரியாவுக்கு தோன்றுதல் நாசரேத்து கிமு 2
ஆறாம் மாதத்தில், கபிரியேல் என்னும் வானதூதரைக் கடவுள் கலிலேயாவிலுள்ள நாசரேத்து என்னும் ஊரிலிருந்த ஒரு கன்னியிடம் அனுப்பினார். அவர் தாவீது குடும்பத்தினராகிய யோசேப்பு என்னும் பெயருடைய ஒருவருக்கு மண ஒப்பந்தமானவர். அவர் பெயர் மரியா.
வானதூதர் மரியாவுக்குத் தோன்றி, 'அருள்மிகப் பெற்றவரே வாழ்க! ஆண்டவர் உம்மோடு இருக்கிறார்’ என்றார். இவ்வார்த்தைகளைக் கேட்டு அவர் கலங்கி, இந்த வாழ்த்து எத்தகையதோ என்று எண்ணிக்கொண்டிருந்தார்.
வானதூதர் அவரைப் பார்த்து, 'மரியா, அஞ்சவேண்டாம்; கடவுளின் அருளைக் கண்டடைந்துள்ளீர். இதோ, கருவுற்று ஒரு மகனைப் பெறுவீர்; அவருக்கு இயேசு என்னும் பெயரிடுவீர்.
அவர் பெரியவராயிருப்பார்; உன்னத கடவுளின் மகன் எனப்படுவார். அவருடைய தந்தை-தாவீதின் அரியணையை, ஆண்டவராகிய கடவுள் அவருக்கு அளிப்பார். அவர் யாக்கோபின் குடும்பத்தின்மீது என்றென்றும் ஆட்சிசெலுத்துவார். அவருடைய ஆட்சிக்கு முடிவே இராது’ என்றார்.
அதற்கு மரியா வானதூதரிடம், 'இது எப்படி நிகழும்? நான் கன்னி ஆயிற்றே!’ என்றார்.
வானதூதர் அவரிடம், 'தூயஆவி உம்மீது வரும். உன்னத கடவுளின் வல்லமை உம்மேல் நிழலிடும். ஆதலால், உம்மிடம் பிறக்கப்போகும் குழந்தை தூயது. அக்குழந்தை இறைமகன் எனப்படும். உம் உறவினராகிய எலிசபெத்தும், தம் முதிர்ந்த-வயதில், ஒரு மகனைக் கருத்தரித்திருக்கிறார். கருவுற-இயலாதவர் என்று சொல்லப்பட்ட அவருக்கு இது ஆறாம் மாதம். ஏனெனில், கடவுளால் இயலாதது ஒன்றுமில்லை’ என்றார்.
பின்னர் மரியா, 'நான் ஆண்டவரின் அடிமை; உம்சொற்படியே எனக்கு நிகழட்டும்’ என்றார். அப்பொழுது வானதூதர் அவரைவிட்டு அகன்றார்.
மரியா-எலிசபெத்து சந்திப்பு
அதன்பின் மரியா புறப்பட்டு, யூதேய மலைநாட்டிலுள்ள ஓர் ஊருக்கு விரைந்து சென்றார். அவர் செக்கரியாவின் வீட்டை அடைந்து, எலிசபெத்தை வாழ்த்தினார். மரியாவின் வாழ்த்தை எலிசபெத்து கேட்டபொழுது, அவர் வயிற்றிலிருந்த குழந்தை மகிழ்ச்சியால் துள்ளிற்று.
எலிசபெத்து தூயஆவியால் முற்றிலும் ஆட்கொள்ளப்பட்டார். அப்போது அவர் உரத்த குரலில், 'பெண்களுக்குள் நீர் ஆசிபெற்றவர்; உம் வயிற்றில் வளரும் குழந்தையும் ஆசிபெற்றதே! என் ஆண்டவரின் தாய் என்னிடம் வர நான் யார்? உம் வாழ்த்துரை என் காதில் விழுந்ததும், என் வயிற்றினுள்ளே குழந்தை பேருவகையால் துள்ளிற்று. ஆண்டவர் உமக்குச் சொன்னவை நிறைவேறும் என்று நம்பிய நீர் பேறுபெற்றவர்’ என்றார்.
மரியாவின் பாடல்
அதைக் கேட்ட மரியா பின்வருமாறு கூறினார்: 'ஆண்டவரை எனது உள்ளம் போற்றிப் பெருமைப்படுத்துகின்றது. என் மீட்பராம் கடவுளை நினைத்து எனது மனம் பேருவகை கொள்கின்றது. ஏனெனில், அவர் தம் அடிமையின் தாழ்நிலையைக் கண்ணோக்கினார். இதுமுதல், எல்லாத் தலைமுறையினரும் என்னைப் பேறுபெற்றவர் என்பர். ஏனெனில், வல்லவராம் கடவுள் எனக்கு அரும்பெரும் செயல்கள் செய்துள்ளார். தூயவர் என்பதே அவரது பெயர்.
அவருக்கு அஞ்சி நடப்போருக்குத் தலைமுறை தலைமுறையாய் அவர் இரக்கம் காட்டி வருகிறார். அவர் தம் தோள்வலிமையைக் காட்டியுள்ளார்; உள்ளத்தில் செருக்குடன் சிந்திப்போரைச் சிதறடித்து வருகிறார். வலியோரை அரியணையினின்று தூக்கி எறிந்துள்ளார்; தாழ்நிலையில் இருப்போரை உயர்த்துகிறார். பசித்தோரை நலன்களால் நிரப்பியுள்ளார்; செல்வரை வெறுங்கையராய் அனுப்பிவிடுகிறார். மூதாதையருக்கு உரைத்தபடியே, அவர் ஆபிரகாமையும், அவர்தம் வழி-மரபினரையும் என்றென்றும் இரக்கத்தோடு நினைவில் கொண்டுள்ளார்; தம் ஊழியராகிய இஸ்ரயேலுக்குத் துணையாக இருந்து வருகிறார்’.
மரியா, ஏறக்குறைய மூன்று மாதம் எலிசபெத்தோடு தங்கியிருந்தபின்பு, தம் வீடு திரும்பினார்.
4. திருமுழுக்கு யோவான் பிறந்தார்
மலைநாட்டு ஊர் கிமு 2
எலிசபெத்துக்குப் பேறுகாலம் நெருங்கியது. அவர் ஒரு மகனைப் பெற்றெடுத்தார். ஆண்டவர் அவருக்குப் பெரிதும் இரக்கம் காட்டினார் என்பதைக் கேள்விப்பட்டு, சுற்றி-வாழ்ந்தோரும், உறவினரும் அவரோடு சேர்ந்து மகிழ்ந்தனர்.
எட்டாம் நாளில், குழந்தைக்கு விருத்தசேதனம் செய்ய அவர்கள் வந்தார்கள்; செக்கரியா என்ற அதன் தந்தையின் பெயரையே அதற்குச் சூட்ட இருந்தார்கள். ஆனால், அதன் தாய் அவர்களைப் பார்த்து, 'வேண்டாம், அதற்கு யோவான் எனப் பெயரிடவேண்டும்’ என்றார்.
அவர்கள் அவரிடம், 'உம் உறவினருள் இப்பெயர் கொண்டவர் எவரும் இல்லையே’ என்று சொல்லி, ’குழந்தைக்கு என்ன பெயரிடலாம்? உம் விருப்பம் என்ன?’ என்று தந்தையை நோக்கிச் சைகை-காட்டிக் கேட்டார்கள்.
அதற்கு அவர், எழுதுபலகை ஒன்றைக் கேட்டு வாங்கி, 'இக்குழந்தையின் பெயர் ‘யோவான்’ என்று எழுதினார். எல்லாரும் வியப்படைந்தனர். அப்பொழுதே அவரது வாய் திறந்தது; நா கட்டவிழ்ந்தது; அவர் கடவுளைப் போற்றிப் புகழ்ந்தார்.
இதைப்பற்றிக் கேள்விப்பட்டு, சுற்றி வாழ்ந்தோர் அனைவரும் அஞ்சினர். இச்செய்தி, யூதேய மலை-நாடெங்கும் பரவியது. கேள்விப்பட்ட யாவரும் இச்செய்தியைத் தங்கள் உள்ளங்களில் இருத்தி, 'இக்குழந்தை எப்படிப்பட்டதாக இருக்குமோ?’ என்று சொல்லிக்கொண்டார்கள். ஏனெனில், அக்குழந்தை ஆண்டவருடைய கைவன்மையைப் பெற்றிருந்தது.
செக்கரியாவின் பாடல்
பிள்ளையின் தந்தையாகிய செக்கரியா, தூயஆவியால் ஆட்கொள்ளப்பட்டு உரைத்த இறைவாக்கு: 'இஸ்ரயேலின் கடவுளாகிய ஆண்டவரைப் போற்றுவோம். ஏனெனில், அவர் தம் மக்களைத் தேடிவந்து விடுவித்தருளினார். தொடக்கமுதல், தம் தூய இறைவாக்கினரின் வாயினால் அவர் மொழிந்தபடியே, வல்லமை உடைய மீட்பர் ஒருவரைத் தம் ஊழியராகிய தாவீதின் குடும்பத்தில், நமக்காகத் தோன்றச் செய்தார்; நம் பகைவரிடமிருந்தும், நம்மை வெறுப்போர் அனைவரின் பிடியிலிருந்தும் நம்மை மீட்பார்.
அவர், நம் மூதாதையருக்கு இரக்கம்காட்டி, தமது தூய உடன்படிக்கையையும், நம் தந்தையாகிய ஆபிரகாமுக்கு அவர் இட்ட ஆணையையும் நிறைவேற்ற நினைவுகூர்ந்தார். இவ்வாறு, நாம் பகைவரின் பிடியிலிருந்து விடுவிக்கப்பட்டுத் தூய்மையோடும், நேர்மையோடும், வாழ்நாளெல்லாம் அச்சமின்றி அவர் திருமுன் பணிசெய்யுமாறு வழிவகுத்தார்.
குழந்தாய், நீ உன்னத-கடவுளின் இறைவாக்கினர் எனப்படுவாய்; ஏனெனில் பாவமன்னிப்பால் வரும் மீட்பை அவர்தம் மக்களுக்கு அறிவித்து, ஆண்டவருக்கான வழியைச் செம்மைப்படுத்த, அவர் முன்னே செல்வாய். இருளிலும், இறப்பின் பிடியிலும் இருப்போர்க்கு ஒளிதரவும், நம்முடைய கால்களை அமைதியின் வழியில் நடக்கச்செய்யவும், நம் கடவுளின் பரிவுள்ளத்தாலும் இரக்கத்தாலும் விண்ணிலிருந்து விடியல் நம்மைத் தேடிவருகிறது.
5. இயேசு பிறந்தார்
யோசேப்புக்கு கடவுளின் தூதர் அறிவிப்பு நாசரேத்து கிமு 2
இயேசு கிறிஸ்துவின் பிறப்பையொட்டிய நிகழ்ச்சிகள்: அவருடைய தாய் மரியாவுக்கும் யோசேப்புக்கும் திருமண-ஒப்பந்தம் செய்யப்பட்டிருந்தது. அவர்கள் கூடிவாழும் முன், மரியா கருவுற்றிருந்தது தெரியவந்தது. அவர் தூயஆவியால் கருவுற்றிருந்தார். அவர் கணவர் யோசேப்பு நேர்மையாளர். அவர் மரியாவை இகழ்ச்சிக்கு உள்ளாக்க விரும்பாமல், மறைவாக விலக்கிவிடத் திட்டமிட்டார்.
அவர் இவ்வாறு சிந்தித்துக் கொண்டிருக்கும்போது, ஆண்டவரின் தூதர் அவருக்குக் கனவில் தோன்றி, 'யோசேப்பே, தாவீதின் மகனே, உம் மனைவி மரியாவை ஏற்றுக்கொள்ள அஞ்சவேண்டாம். ஏனெனில் அவர் கருவுற்றிருப்பது தூய-ஆவியால்தான். அவர் ஒரு மகனைப் பெற்றெடுப்பார். அவருக்கு இயேசு எனப் பெயரிடுவீர். ஏனெனில், அவர் தம் மக்களை அவர்களுடைய பாவங்களிலிருந்து மீட்பார்’ என்றார்.
'இதோ! கன்னி கருவுற்று ஓர் ஆண்மகவைப் பெற்றெடுப்பார். அக்குழந்தைக்கு இம்மானுவேல் எனப் பெயரிடுவர்’ என்று இறைவாக்கினர் வாயிலாக ஆண்டவர் உரைத்தது நிறைவேறவே இவை யாவும் நிகழ்ந்தன. இம்மானுவேல் என்றால் 'கடவுள் நம்முடன் இருக்கிறார்’ என்பது பொருள்.
யோசேப்பு தூக்கத்திலிருந்து விழித்தெழுந்து, ஆண்டவரின் தூதர் தமக்குப் பணித்தவாறே, தம் மனைவியை ஏற்றுக்கொண்டார். மரியா தம் மகனைப் பெற்றெடுக்கும்வரை, யோசேப்பு அவரோடு கூடி வாழவில்லை.
பெத்லகேம் கிமு2
அக்காலத்தில் அகுஸ்து சீசர், தம் பேரரசு முழுவதும் மக்கள் தொகையைக் கணக்கிடுமாறு கட்டளை பிறப்பித்தார். அதன்படி, சிரியா நாட்டில் குரேனியு என்பவர் ஆளுநராய் இருந்தபோது முதன்முறையாக மக்கள் தொகை கணக்கிடப்பட்டது. தம் பெயரைப் பதிவு செய்ய, அனைவரும் அவரவர் ஊருக்குச் சென்றனர்.
தாவீதின் வழிமரபினரான யோசேப்பும், பெயரைப் பதிவுசெய்ய, தமக்கு மண-ஒப்பந்தமான மரியாவோடு, கலிலேயாவிலுள்ள நாசரேத்து ஊரிலிருந்து யூதேயாவிலுள்ள பெத்லகேம் என்ற தாவீதின் ஊருக்குச் சென்றார்.
இயேசு பிறந்தார்
மரியா கருவுற்றிருந்தார். அவர்கள் அங்கு இருந்தபொழுது மரியாவுக்குப் பேறுகாலம் வந்தது. அவர் தம் தலைமகனைப் பெற்றெடுத்தார். விடுதியில் அவர்களுக்கு இடம் கிடைக்கவில்லை. எனவே பிள்ளையைத் துணிகளில் பொதிந்து தீவனத் தொட்டியில் கிடத்தினார்.
இயேசுவின் பிறப்பு இடையர்களுக்கு அறிவிப்பு
அப்பொழுது, அப்பகுதியில் உள்ள வயல்வெளியில் இடையர்கள் தங்கி, இரவெல்லாம் தங்கள் கிடையைக் காவல்-காத்துக்கொண்டிருந்தார்கள். திடீரென்று ஆண்டவருடைய தூதர் அவர்கள்முன் வந்து நின்றபோது, ஆண்டவரின் மாட்சி அவர்களைச் சுற்றி ஒளிர்ந்தது; மிகுந்த அச்சம் அவர்களை ஆட்கொண்டது.
வானதூதர் அவர்களிடம், 'அஞ்சாதீர்கள், இதோ, எல்லா மக்களுக்கும் பெரும் மகிழ்ச்சியூட்டும் நற்செய்தியை உங்களுக்கு அறிவிக்கிறேன். இன்று ஆண்டவராகிய மெசியா என்னும் மீட்பர் உங்களுக்காகத் தாவீதின் ஊரில் பிறந்திருக்கிறார். குழந்தையைத் துணிகளில் சுற்றித் தீவனத் தொட்டியில் கிடத்தியிருப்பதைக் காண்பீர்கள்; இதுவே உங்களுக்கு அடையாளம்’ என்றார்.
உடனே விண்ணகத் தூதர்-பேரணி அந்தத் தூதருடன் சேர்ந்து, ’உன்னதத்தில் கடவுளுக்கு மாட்சி உரித்தாகுக! உலகில் அவருக்கு உகந்தோருக்கு அமைதி உண்டாகுக!’ என்று கடவுளைப் புகழ்ந்தது.
வானதூதர் அவர்களைவிட்டு விண்ணகம் சென்றபின்பு, இடையர்கள் ஒருவரையொருவர் நோக்கி, 'வாருங்கள், நாம் பெத்லகேமுக்குப் போய், ஆண்டவர் நமக்கு அறிவித்திருக்கின்ற இந்த நிகழ்ச்சியைப் பார்ப்போம்’ என்று சொல்லிக்கொண்டு, விரைந்து சென்று, மரியாவையும் யோசேப்பையும் தீவனத் தொட்டியில் கிடத்தியிருந்த குழந்தையையும் கண்டார்கள்.
பின்பு அந்தக் குழந்தையைப்பற்றித் தங்களுக்குச் சொல்லப்பட்ட செய்தியைத் தெரிவித்தார்கள். அதைக் கேட்ட யாவரும், இடையர்கள் தங்களுக்குச் சொன்னவற்றைக் குறித்து வியப்படைந்தனர். ஆனால் மரியா இந்நிகழ்ச்சிகளையெல்லாம் தம் உள்ளத்தில் இருத்திச் சிந்தித்துக் கொண்டிருந்தார்.
இடையர்கள், தாங்கள் கேட்டவை, கண்டவை அனைத்தையும் குறித்துக் கடவுளைப் போற்றிப் புகழ்ந்து பாடிக்கொண்டே திரும்பிச் சென்றார்கள். அவர்களுக்குச் சொல்லப்பட்டவாறு எல்லாம் நிகழ்ந்திருந்தது.
எருசலேம் கோவிலில் இயேசு அர்ப்பணிப்பு
குழந்தைக்கு விருத்தசேதனம் செய்யவேண்டிய எட்டாம் நாள் வந்தது. தாயின் வயிற்றில் உருவாகுமுன்பே வானதூதர் சொல்லியிருந்தவாறு, அதற்கு இயேசு என்று பெயரிட்டார்கள். யோசேப்பு அம்மகனுக்கு இயேசு என்று பெயரிட்டார்.
மோசேயின் சட்டப்படி தூய்மைச் சடங்கை நிறைவேற்றவேண்டிய நாள் வந்தபோது, குழந்தையை ஆண்டவருக்கு அர்ப்பணிக்க, அவர்கள் எருசலேமுக்குக் கொண்டுசென்றார்கள். ஏனெனில், 'ஆண் தலைப்பேறு அனைத்தும் ஆண்டவருக்கு அர்ப்பணிக்கப்படும்’ என்று அவருடைய திருச்சட்டத்தில் எழுதியுள்ளது. அச்சட்டத்தில் கூறியுள்ளவாறு, இரு மாடப்புறாக்கள் அல்லது இரு புறாக்குஞ்சுகளை அவர்கள் பலியாகக் கொடுக்க வேண்டியிருந்தது.
சிமியோன் ஆசி
அப்போது எருசலேமில் சிமியோன் என்னும் ஒருவர் இருந்தார். அவர் நேர்மையானவர்; இறைப்பற்றுக் கொண்டவர்; இஸ்ரயேலுக்கு வாக்களிக்கப்பட்ட ஆறுதலை எதிர்பார்த்திருந்தவர்; தூயஆவியை அவர் பெற்றிருந்தார். 'ஆண்டவருடைய மெசியாவைக் காணுமுன் அவர் சாகப்போவதில்லை’ என்று தூயஆவியால் உணர்த்தப்பட்டிருந்தார். அந்த ஆவியின் தூண்டுதலால் அவர் கோவிலுக்கு வந்திருந்தார்.
பிற இனத்தாருக்கு ஒளி, இஸ்ரயேலுக்குப் பெருமை
திருச்சட்ட-வழக்கத்திற்கு ஏற்பச் செய்யவேண்டியதைக் குழந்தை இயேசுவுக்குச் செய்துமுடிக்க, பெற்றோர் அதனை உள்ளே கொண்டுவந்தபோது. சிமியோன் குழந்தையைக் கையில்-ஏந்திக் கடவுளைப் போற்றி, 'ஆண்டவரே, உமது சொற்படி, உம் அடியான் என்னை, இப்போது அமைதியுடன் போகச்செய்கிறீர். ஏனெனில், மக்கள் அனைவரும் காணுமாறு, நீர் ஏற்பாடு செய்துள்ள உமது மீட்பை என் கண்கள் கண்டுகொண்டன. இம்மீட்பே பிற இனத்தாருக்கு வெளிப்பாடு-அருளும் ஒளி; இதுவே உம் மக்களாகிய இஸ்ரயேலுக்குப் பெருமை’ என்றார். குழந்தையைக் குறித்துக் கூறியவை-பற்றி, அதன் தாயும் தந்தையும் வியப்புற்றனர்.
சிமியோன் அவர்களுக்கு ஆசிகூறி, அதன் தாயாகிய மரியாவை நோக்கி, 'இதோ, இக்குழந்தை, இஸ்ரயேல் மக்களுள் பலரின் வீழ்ச்சிக்கும் எழுச்சிக்கும் காரணமாக இருக்கும்; எதிர்க்கப்படும் அடையாளமாகவும் இருக்கும். இவ்வாறு பலருடைய மறைவான எண்ணங்கள் வெளிப்படும். உமது உள்ளத்தையும் ஒரு வாள் ஊடுருவிப் பாயும்’ என்றார்.
அன்னா ஆசி
ஆசேர் குலத்தைச் சேர்ந்த பானுவேலின் மகளாகிய அன்னா என்னும் இறைவாக்கினர் ஒருவர் இருந்தார். அவர் வயது-முதிர்ந்தவர்; மணமாகி ஏழு ஆண்டுகள் கணவரோடு வாழ்ந்தபின் கைம்பெண் ஆனவர்; அவருக்கு வயது எண்பத்து நான்கு. அவர் கோவிலைவிட்டு நீங்காமல், நோன்பிருந்து, மன்றாடி, அல்லும் பகலும் திருப்பணி செய்துவந்தார்.
அவரும் அந்நேரத்தில் அங்கு வந்து, கடவுளைப் புகழ்ந்து, எருசலேமின் மீட்புக்காகக் காத்திருந்த எல்லாரிடமும் அக்குழந்தையைப்பற்றிப் பேசினார்.
ஆண்டவருடைய திருச்சட்டப்படி எல்லாவற்றையும் செய்துமுடித்தார்கள்.
6. யூதர்களின் அரசராகப் பிறந்திருக்கிறவர் எங்கே?
கிழக்கு ஞானிகள் வருகை எருசலேம் கிமு1
ஏரோது அரசன் காலத்தில், யூதேயாவிலுள்ள பெத்லகேமில் இயேசு பிறந்தார். அப்போது, கிழக்கிலிருந்து ஞானிகள் எருசலேமுக்கு வந்து, 'யூதர்களின் அரசராகப் பிறந்திருக்கிறவர் எங்கே? அவரது விண்மீன் எழக்கண்டோம். அவரை வணங்க வந்திருக்கிறோம்’ என்றார்கள்.
இதைக் கேட்டதும் ஏரோது அரசன் கலங்கினான். அவனோடு எருசலேம் முழுவதும் கலங்கிற்று. அவன் எல்லாத் தலைமைக் குருக்களையும், மக்களிடையே இருந்த மறைநூல்-அறிஞர்களையும் ஒன்றுகூட்டி, மெசியா எங்கே பிறப்பார் என்று அவர்களிடம் விசாரித்தான்.
அவர்கள் அவனிடம், 'யூதேயாவிலுள்ள பெத்லகேமில் அவர் பிறக்கவேண்டும். ஏனெனில், ″யூதா நாட்டுப் பெத்லகேமே, யூதாவின் ஆட்சிமையங்களில் நீ சிறியதே இல்லை; ஏனெனில், என் மக்களாகிய இஸ்ரயேலை ஆயரென ஆள்பவர்-ஒருவர் உன்னிலிருந்தே தோன்றுவார்″ என்று இறைவாக்கினர் எழுதியுள்ளார்’ என்றார்கள்.
பின்பு ஏரோது, யாருக்கும் தெரியாமல் ஞானிகளை அழைத்துக் கொண்டுபோய், விண்மீன் தோன்றிய காலத்தைப் பற்றி விசாரித்து உறுதி செய்துகொண்டான். மேலும் அவர்களிடம், 'நீங்கள் சென்று, குழந்தையைக் குறித்துத் திட்டவட்டமாய்க் கேட்டு, எனக்கு அறிவியுங்கள். அப்பொழுது, நானும் சென்று அக்குழந்தையை வணங்குவேன்’ என்று கூறி, அவர்களைப் பெத்லகேமுக்கு அனுப்பி வைத்தான். அரசன் சொன்னதைக் கேட்டு, அவர்கள் புறப்பட்டுப் போனார்கள்.
இதோ! முன்பு எழுந்த விண்மீன் தோன்றி, குழந்தைஇருந்த இடத்திற்குமேல் வந்து நிற்கும்வரை, அவர்களுக்கு முன்னே சென்றுகொண்டிருந்தது. அங்கே நின்ற விண்மீனைக் கண்டதும், அவர்கள் மட்டில்லாப் பெருமகிழ்ச்சி அடைந்தார்கள்.
வீட்டிற்குள் அவர்கள் சென்று, குழந்தையை அதன்தாய், மரியா, வைத்திருப்பதைக் கண்டார்கள்; நெடுஞ்சாண்கிடையாய் விழுந்து, குழந்தையை வணங்கினார்கள்; தங்கள் பேழைகளைத் திறந்து, பொன்னும் சாம்பிராணியும் வெள்ளைப்போளமும் காணிக்கையாகக் கொடுத்தார்கள். ஏரோதிடம் திரும்பிப் போகவேண்டாம் என்று, கனவில் அவர்கள் எச்சரிக்கப்பட்டதால், வேறுவழியாகத் தங்கள்நாடு திரும்பினார்கள்.
யோசேப்பு எகிப்துக்குச் சென்றார்
அவர்கள் திரும்பிச் சென்றபின், ஆண்டவருடைய தூதர் யோசேப்புக்குக் கனவில் தோன்றி, 'நீர் எழுந்து, குழந்தையையும் அதன் தாயையும் கூட்டிக்கொண்டு, எகிப்துக்குத் தப்பி ஓடிச்செல்லும். நான் உமக்குச் சொல்லும்வரை, அங்கேயே இரும். ஏனெனில், குழந்தையை ஏரோது கொல்வதற்காகத் தேடப்போகிறான்’ என்றார்.
யோசேப்பு எழுந்து, குழந்தையையும் அதன் தாயையும் கூட்டிக்கொண்டு, இரவிலேயே எகிப்துக்குப் புறப்பட்டுச் சென்றார். ஏரோது இறக்கும்வரை அங்கேயே இருந்தார். இவ்வாறு, 'எகிப்திலிருந்து என் மகனை அழைத்து வந்தேன்’ என்று இறைவாக்கினர் வாயிலாக ஆண்டவர் உரைத்தது நிறைவேறியது.
குழந்தைகள் படுகொலை
ஞானிகள் தன்னை ஏமாற்றியதை ஏரோது கண்டு, மிகுந்த சீற்றங்கொண்டான். அவன் அவர்களிடம் கருத்தாய்க் கேட்டறிந்ததற்கு ஏற்ப, காலத்தைக் கணக்கிட்டு, பெத்லகேமிலும், அதன் சுற்றுப்புறமெங்கும், ஆள்களை அனுப்பி, இரண்டு வயதும் அதற்கு உட்பட்டவையுமான எல்லா ஆண்-குழந்தைகளையும் கொன்றான்.
அப்பொழுது 'ராமாவிலே ஒரு குரல் கேட்கிறது; ஒரே புலம்பலும் பேரழுகையுமாய் இருக்கிறது; இராகேல் தன் குழந்தைகளுக்காக அழுதுகொண்டிருக்கிறார்; ஆறுதல்பெற அவர் மறுக்கிறார்; ஏனெனில் அவர் குழந்தைகள் அவரோடு இல்லை’ என்று இறைவாக்கினர் எரேமியா உரைத்தது நிறைவேறியது.
ஏரோது இறந்தார், யோசேப்பு நாசரேத்துக்குத் திரும்பினார்
ஏரோது காலமானதும், ஆண்டவருடைய தூதர் எகிப்தில் யோசேப்புக்கு கனவில் தோன்றி, 'நீர் எழுந்து, குழந்தையையும் அதன் தாயையும் கூட்டிக்கொண்டு, இஸ்ரயேல் நாட்டுக்குச் செல்லும். ஏனெனில், குழந்தையின் உயிரைப் பறிக்கத் தேடியவர்கள் இறந்துபோனார்கள்’ என்றார். எனவே, யோசேப்பு எழுந்து, குழந்தையையும் அதன் தாயையும் கூட்டிக்கொண்டு, இஸ்ரயேல் நாட்டுக்கு வந்துசேர்ந்தார்.
ஆனால், யூதேயாவில் அர்க்கெலா தன் தந்தைக்குப்பின் அரசாளுவதாகக் கேள்விப்பட்டு, அங்கே போக அவர் அஞ்சினார்; கனவில் எச்சரிக்கப்பட்டுக் கலிலேயப் பகுதிகளுக்குப் புறப்பட்டுச் சென்றார். பின்பு, அவர்கள் கலிலேயாவிலுள்ள தங்கள் ஊராகிய நாசரேத்துக்குத் திரும்பிச் சென்றார்கள். இவ்வாறு, ″நசரேயன்″ என அழைக்கப்படுவார்’ என்று இறைவாக்கினர்கள் உரைத்தது நிறைவேறியது.
குழந்தையும் வளர்ந்து, வலிமை பெற்று, ஞானத்தால் நிறைந்து, கடவுளுக்கு உகந்ததாய் இருந்தது.
பாஸ்கா விழாவில் பன்னிரண்டு வயது இயேசு எருசலேம் கிபி12
ஆண்டுதோறும், இயேசுவின் பெற்றோர் பாஸ்கா விழாவைக் கொண்டாட எருசலேமுக்குப் போவார்கள்; இயேசுவுக்குப் பன்னிரண்டு வயது ஆனபோது, வழக்கப்படி விழாவைக் கொண்டாட, எருசலேம் சென்றனர்.
விழா-நாள்கள் முடிந்து அவர்கள் திரும்பியபோது, சிறுவன் இயேசு எருசலேமில் தங்கிவிட்டார். இது அவருடைய பெற்றோருக்குத் தெரியாது; பயணிகள் கூட்டத்தில் அவர் இருப்பார் என்று எண்ணினர்.
ஒருநாள்-பயணம் முடிந்தபின்பு, உறவினரிடையேயும் அறிமுகமானவர்களிடையேயும் அவரைத் தேடினர்; அவரைக் காணாததால், அவரைத் தேடிக்கொண்டு எருசலேமுக்குத் திரும்பிச் சென்றார்கள்.
மூன்று நாள்களுக்குப்பின், அவரைக் கோவிலில் கண்டார்கள். அங்கே, அவர் போதகர்களின் நடுவில் அமர்ந்து, அவர்கள் சொல்வதைக் கேட்டுக்கொண்டும், அவர்களிடம் கேள்விகளை எழுப்பிக்கொண்டும் இருந்தார். அவற்றைக் கேட்ட அனைவரும், அவருடைய புரிந்துகொள்ளும் திறனையும், அவர் அளித்த பதில்களையும் கண்டு, மலைத்துப் போயினர். அவருடைய பெற்றோரும் அவரைக்கண்டு வியப்பில் ஆழ்ந்தனர்.
அப்பொழுது, அவருடைய தாய் அவரை நோக்கி, 'மகனே, ஏன் இப்படிச் செய்தாய்? இதோ பார், உன் தந்தையும் நானும், உன்னை மிகுந்த கவலையோடு தேடிக்கொண்டிருந்தோமே’ என்றார். அவர் அவர்களிடம், ″நீங்கள் ஏன் என்னைத் தேடினீர்கள்? நான் என் தந்தையின் அலுவல்களில் ஈடுபட்டிருக்கவேண்டும் என்பது, உங்களுக்குத் தெரியாதா?″ என்றார். அவர் சொன்னதை, அவர்கள் புரிந்து கொள்ளவில்லை.
பின்பு அவர், அவர்களுடன் சென்று, நாசரேத்தை அடைந்து, அவர்களுக்குப் பணிந்து நடந்தார். அவருடைய தாய், இந்நிகழ்ச்சிகளையெல்லாம் தமது உள்ளத்தில் பதித்து வைத்திருந்தார்.
இயேசு ஞானத்திலும், உடல்வளர்ச்சியிலும் மிகுந்து, கடவுளுக்கும் மனிதருக்கும் உகந்தவராய் வாழ்ந்து வந்தார்.
7. இயேசுவின் மூதாதையர் பட்டியல்
லூக்காவின் பட்டியல்
இயேசு கிறிஸ்துவின் மூதாதையர் பட்டியல்:
கடவுளின் மகன் ஆதாம்; ஆதாமின் மகன் சேத்து; சேத்தின் மகன் ஏனோசு; ஏனோசின் மகன் கேனான்; கேனானின் மகன் மகலலேல்; மகலலேலின் மகன் எரேது; எரேதின் மகன் ஏனோக்கு; ஏனோக்கின் மகன் மெத்துசேலா; மெத்துசேலாவின் மகன் இலாமேக்கு; இலாமேக்கின் மகன் நோவா; நோவாவின் மகன் சேம்; சேமின் மகன் அர்பகசாது. அர்பகசாதின் மகன் காயனாம்; காயனாமின் மகன் சேலா; சேலாவின் மகன் ஏபேர்; ஏபேரின் மகன் பெலேகு; பெலேகின் மகன் இரகு; இரகுவின் மகன் செரூகு; செரூகின் மகன் நாகோர்; நாகோரின் மகன் தெராகு. தெராகின் மகன் ஆபிரகாம்;
ஆபிரகாமின் மகன் ஈசாக்கு; ஈசாக்கின் மகன் யாக்கோபு; யாக்கோபின் புதல்வர்கள் யூதாவும் அவர் சகோதரர்களும். யூதாவுக்கும் தாமாருக்கும் பிறந்த புதல்வர்கள் பெரேட்சும் செராகும்; பெரேட்சின் மகன் எட்சரோன்; எட்சரோனின் மகன் இராம். இராமின் மகன் அம்மினதாபு; அம்மினதாபின் மகன் நகசோன்; நகசோனின் மகன் சல்மோன். சல்மோனுக்கும் இராகாபுக்கும் பிறந்த மகன் போவாசு; போவாசுக்கும் ரூத்துக்கும் பிறந்த மகன் ஓபேது; ஓபேதின் மகன் ஈசாய். ஈசாயின் மகன் தாவீது அரசர்;
தாவீதுக்கு உரியாவின் மனைவியிடம் பிறந்த மகன் சாலமோன். சாலமோனின் மகன் ரெகபயாம்; ரெகபயாமின் மகன் அபியாம்; அபியாமின் மகன் ஆசா. ஆசாவின் மகன் யோசபாத்து; யோசபாத்தின் மகன் யோராம்; யோராமின் மகன் உசியா. உசியாவின் மகன் யோத்தாம்; யோத்தாமின் மகன் ஆகாசு; ஆகாசின் மகன் எசேக்கியா. எசேக்கியாவின் மகன் மனாசே; மனாசேயின் மகன் ஆமோன்; ஆமோனின் மகன் யோசியா. யோசியாவின் புதல்வர்கள் எக்கோனியாவும் அவர் சகோதரர்களும். இவர்கள் காலத்தில்தான் யூதர்கள் பாபிலோனுக்குச் சிறைப்பிடித்துச் செல்லப்பட்டார்கள்.
பாபிலோனுக்குச் சிறைப்பிடித்துச் செல்லப்பட்ட பின்பு எக்கோனியாவுக்குப் பிறந்த மகன் செயல்தியேல்; செயல்தியேலின் மகன் செருபாபேல். செருபாபேலின் மகன் அபியூது; அபியூதின் மகன் எலியாக்கிம்; எலியாக்கிமின் மகன் அசோர். அசோரின் மகன் சாதோக்கு; சாதோக்கின் மகன் ஆக்கிம்; ஆக்கிமின் மகன் எலியூது. எலியூதின் மகன் எலயாசர்; எலயாசரின் மகன் மாத்தான்; மாத்தானின் மகன் யாக்கோபு. யாக்கோபின் மகன் மரியாவின் கணவர் யோசேப்பு. மரியாவிடம் பிறந்தவரே கிறிஸ்து என்னும் இயேசு.
ஆக மொத்தம் ஆபிரகாம் முதல் தாவீது வரை தலைமுறைகள் பதினான்கு; தாவீது முதல் பாபிலோனுக்குச் சிறைப்பிடித்துச் செல்லப்பட்டவர்கள் வரை தலைமுறைகள் பதினான்கு; பாபிலோனுக்குச் சிறைப்பிடித்துச் செல்லப்பட்டவர்கள் முதல் கிறிஸ்து வரை தலைமுறைகள் பதினான்கு.
மத்தேயுவின் பட்டியல்
இயேசு யோசேப்பின் மகன் என்று கருதப்பட்டார். யோசேப்பு ஏலியின் மகன்; ஏலி மாத்தாத்தின் மகன்; மாத்தாத்து லேவியின் மகன்; லேவி மெல்கியின் மகன்; மெல்கி யன்னாயின் மகன்; யன்னாய் யோசேப்பின் மகன்; யோசேப்பு மத்தத்தியாவின் மகன்; மத்தத்தியா ஆமோசின் மகன்; ஆமோசு நாகூமின் மகன்; நாகூம் எஸ்லியின் மகன்; எஸ்லி நாகாயின் மகன்; நாகாய் மாத்தின் மகன்; மாத்து மத்தத்தியாவின் மகன்; மத்தத்தியா செமேயின் மகன்; செமேய் யோசேக்கின் மகன்; யோசேக்கு யோதாவின் மகன்; யோதா யோவனானின் மகன்; யோவனான் இரேசாவின் மகன்; இரேசா செருபாபேலின் மகன்; செருபாபேல் செயல்தியேலின் மகன்;
செயல்தியேல் நேரியின் மகன்; நேரி மெல்கியின் மகன்; மெல்கி அத்தியின் மகன்; அத்தி கோசாமின் மகன்; கோசாம் எல்மதாமின் மகன்; எல்மதாம் ஏரின் மகன்; ஏர் ஏசுவின் மகன்; ஏசு எலியேசரின் மகன்; எலியேசர் யோரிமின் மகன்; யோரிம் மாத்தாத்தின் மகன்; மாத்தாத்து லேவியின் மகன்; லேவி சிமியோனின் மகன்; சிமியோன் யூதாவின் மகன்; யூதா யோசேப்பின் மகன்; யோசேப்பு யோனாமின் மகன்; யோனாம் எலியாக்கிமின் மகன்; எலியாக்கிம் மெலேயாவின் மகன்; மெலேயா மென்னாவின் மகன்; மென்னா மத்தத்தாவின் மகன்; மத்தத்தா நாத்தானின் மகன்; நாத்தான் தாவீதின் மகன்;
தாவீது ஈசாயின் மகன்; ஈசாய் ஓபேதின் மகன்; ஓபேது போவாசின் மகன்; போவாசு சாலாவின் மகன்; சாலா நகசோனின் மகன்; நகசோன் அம்மினதாபின் மகன்; அம்மினதாபு அத்மினின் மகன்; அத்மின் ஆர்னியின் மகன்; ஆர்னி எட்சரோனின் மகன்; எட்சரோன் பெரேட்சின் மகன்; பெரேட்சு யூதாவின் மகன்; யூதா யாக்கோபின் மகன்; யாக்கோபு ஈசாக்கின் மகன்; ஈசாக்கு ஆபிரகாமின் மகன்;