மத்தேயு மாற்கு லூக்கா யோவான் நற்செய்திகளின் தொகுப்பு
1. உம்மை வெளிப்படுத்த நீர் யூதேயா செல்லும்
இயேசு கலிலேயாவில் நடமாடிவந்தார். யூதர்கள் அவரைக் கொல்ல வழிதேடிக் கொண்டிருந்ததால், அவர் யூதேயாவில் நடமாட விரும்பவில்லை. யூதர்களின் கூடார விழா அண்மையில் நிகழவிருந்தது.
இயேசு மறைவாக யூதேயா சென்றார்
இயேசுவின் சகோதரர்கள் அவரை நோக்கி, ’நீர் இவ்விடத்தை விட்டு யூதேயா செல்லும். அப்போது, உம் சீடர்கள் நீர் புரியும் செயல்களைக் காணமுடியும். ஏனெனில், பொதுவாழ்வில் ஈடுபட விரும்பும் எவரும் மறைவாகச் செயல்புரிவதில்லை. நீர் இவற்றையெல்லாம் செய்வதால், உலகுக்கு உம்மை வெளிப்படுத்தலாமே!’ என்றனர். ஏனெனில், அவருடைய சகோதரர்கள்கூட அவரிடம் நம்பிக்கை கொள்ளவில்லை.
இயேசு அவர்களிடம், ’எனக்கு ஏற்ற நேரம் இன்னும் வரவில்லை; உங்களுக்கு எந்த நேரமும் ஏற்ற நேரம்தான். உலகு உங்களை வெறுக்க இயலாது; ஆனால் என்னை வெறுக்கிறது. ஏனெனில் உலகின் செயல்கள் தீயவை என்பதை நான் எடுத்துக்காட்டி வருகிறேன். நீங்கள் திருவிழாவுக்குப் போங்கள்; நான் வரவில்லை. ஏனெனில், எனக்கு ஏற்ற நேரம் இன்னும் வரவில்லை’ என்றார். அவ்வாறு சொன்ன அவர், கலிலேயாவிலேயே தங்கிவிட்டார்.
தம் சகோதரர்கள் திருவிழாவிற்குப் போனபின், இயேசுவும் சென்றார். ஆனால் அவர் வெளிப்படையாக அன்றி, மறைவாகச் சென்றார்.
சமாரியர் ஒத்துழைக்கவில்லை சமாரியா கிபி 32
இயேசு விண்ணேற்றம் அடையும் நாள் நெருங்கி வரவே, எருசலேமை நோக்கிச் செல்லத் தீர்மானித்து, தமக்கு முன் தூதர்களை அனுப்பினார். அவருக்கு இடம் ஏற்பாடு செய்வதற்காக, அவர்கள் சமாரியருடைய ஓர் ஊருக்குப் போய்ச் சேர்ந்தார்கள். அவர் எருசலேம் செல்லும் நோக்கமாயிருந்ததால், அவர்கள் அவரை ஏற்றுக் கொள்ளவில்லை.
அவருடைய சீடர்கள் யாக்கோபும் யோவானும் இதைக் கண்டு, ’ஆண்டவரே, வானத்திலிருந்து தீ வந்து, இவர்களை அழிக்குமாறு செய்யவா? இது உமக்கு விருப்பமா?’ என்று கேட்டார்கள். அவர், அவர்கள் பக்கம் திரும்பி, அவர்களைக் கடிந்து கொண்டார். பின்பு அவர்கள் வேறோர் ஊருக்குச் சென்றார்கள்.
இயேசுவைப் பின்பற்ற விரும்பியவர்கள்
அவர்கள் வழிநடந்தபோது (மறைநூல் அறிஞர்) ஒருவர் அவரை நோக்கி, ’நீர் எங்கே சென்றாலும் நானும் உம்மைப் பின்பற்றுவேன்’ என்றார். இயேசு அவரிடம், ’நரிகளுக்குப் பதுங்குக் குழிகளும், வானத்துப் பறவைகளுக்குக் கூடுகளும் உண்டு, மானிடமகனுக்கோ தலை சாய்க்கக்கூட இடமில்லை’ என்றார்.
இயேசு சீடருள் ஒருவரை நோக்கி, ’என்னைப் பின்பற்றிவாரும்’ என்றார். அவர், ’முதலில் நான் போய், என் தந்தையை அடக்கம் செய்துவிட்டுவர அனுமதியும்’ என்றார். இயேசு அவரைப்பார்த்து, ’இறந்தோரைப் பற்றிக் கவலை வேண்டாம். அவர்கள் அடக்கம் செய்யப்படுவார்கள். நீர் போய் இறையாட்சியைப்பற்றி அறிவியும்’ என்றார்.
வேறொருவரும், ’ஐயா, உம்மைப் பின்பற்றுவேன்; ஆயினும், முதலில் நான் போய், என் வீட்டில் உள்ளவர்களிடம் விடைபெற்று வர அனுமதியும்’ என்றார். இயேசு அவரை நோக்கி, ’கலப்பையில் கை வைத்தபின், திரும்பிப் பார்ப்பவர் எவரும் இறையாட்சிக்கு உட்படத் தகுதியுள்ளவர் அல்ல’ என்றார்.
2. நீதியோடு தீர்ப்பளியுங்கள்
எருசலேம் கிபி 32
திருவிழாவின்போது, ’அவர் எங்கே?’ என்று, யூதர்கள் இயேசுவைத் தேடினார்கள். மக்கள் கூடியிருந்த இடங்களிலெல்லாம் இயேசுவைப் பற்றிக் காதோடு காதாய்ப் பலவாறு பேசிக்கொண்டனர். சிலர், ’அவர் நல்லவர்’ என்றனர். வேறு சிலர், ’இல்லை, அவர் மக்கள்-கூட்டத்தை ஏமாற்றுகிறார்’ என்றனர். ஆனால் யூதர்களுக்கு அஞ்சியதால், எவரும் அவரைப் பற்றி வெளிப்படையாகப் பேசவில்லை.
நான் கொடுக்கும் போதனை கடவுளுடையது
பாதித் திருவிழா நேரத்தில், இயேசு கோவிலுக்குச் சென்று, கற்பிக்கத் தொடங்கினார். ’படிப்பற்ற இவருக்கு இத்துணை அறிவு எப்படி வந்தது?’ என்று யூதர்கள் வியப்புற்றார்கள்.
இயேசு மறுமொழியாக, ’நான் கொடுக்கும் போதனை என்னுடையது அல்ல; அது என்னை அனுப்பியவருடையது. அவருடைய திருவுளத்தின்படி நடக்க விரும்புவோர், இப்போதனை கடவுளிடமிருந்து வருகிறதா? அல்லது அதனை நானாகக் கொடுக்கிறேனா என்பதை அறிந்து கொள்வர்.
தாமாகப் பேசுபவர், தமக்கே பெருமை தேடிக்கொள்கிறார். தம்மை அனுப்பியவருடைய பெருமையைத் தேடுபவர் உண்மையுள்ளவர்; அவரிடத்தில் பொய்ம்மை இல்லை.
ஒய்வுநாளில் நான் நன்மை செய்வது தவறா?
’மோசே உங்களுக்குத் திருச்சட்டத்தைக் கொடுத்தார் அல்லவா? எனினும் உங்களுள் யாரும் அச்சட்டத்தைக் கடைப்பிடிப்பதில்லை. இப்போது என்னையும் கொல்லப்பார்க்கிறீர்களே!’ என்றார்.
மக்கள் மறுமொழியாக, ’யார் உன்னைக் கொல்லப்பார்க்கிறார்? உனக்குப் பேய் பிடித்திருக்கிறது’ என்றனர்.
இயேசு அவர்களைப் பார்த்து, ’ஓய்வுநாளில் நான் செய்த ஒரேஒரு செயலைப்பற்றி நீங்கள் அனைவரும் வியப்புறுகிறீர்கள். மோசே கொடுத்த விருத்தசேதனச் சட்டப்படி, நீங்களே ஓய்வுநாளில் விருத்தசேதனம் செய்கிறீர்கள்! - உண்மையில் விருத்தசேதனம் மோசேயிடமிருந்து வந்தது அல்ல; அது நம் மூதாதையர் காலத்திலிருந்தே உள்ளது.
ஒருவர் ஓய்வுநாளில் விருத்தசேதனம் செய்தாலும் ஓய்வுநாள் சட்டம் மீறப்படுவதில்லையானால், அதே ஓய்வுநாளில் நான் முழு-மனிதனையும் நலமாக்கியதற்காக நீங்கள் சினம் கொள்வதேன்? வெளித்தோற்றத்தின்படி தீர்ப்பளியாதீர்கள். நீதியோடு தீர்ப்பளியுங்கள்’ என்றார்.
மக்களின் எண்ணங்கள்
எருசலேம் நகரத்தவர் சிலர், ’இவரைத்தானே கொல்லத் தேடுகிறார்கள்? இதோ! இங்கே இவர் வெளிப்படையாய்ப் பேசிக்கொண்டிருக்கிறாரே! யாரும் இவரிடம் எதுவும் சொல்லவில்லையே! ஒருவேளை, இவரே மெசியா என்று, தலைவர்கள் உண்மையாகவே உணர்ந்துகொண்டார்களோ? ஆனால், மெசியா எங்கிருந்து வருவார் என்பது, யாருக்கும் தெரியாதே! இவர் எங்கிருந்து வருகிறார் என்பது நமக்குத் தெரியுமே’ என்று பேசிக் கொண்டனர்.
இயேசுவைப் பிடிக்க முயன்றார்கள்
ஆகவே, கோவிலில் கற்பித்துக் கொண்டிருந்தபோது, இயேசு உரத்த குரலில், ’நான் யார்? நான் எங்கிருந்து வந்தேன் என்பவை உங்களுக்குத் தெரியும். ஆயினும் நானாக வரவில்லை. என்னை அனுப்பியவர் உண்மையானவர். அவரை உங்களுக்குத் தெரியாது. எனக்கு அவரைத் தெரியும். நான் அவரிடமிருந்து வருகிறேன். என்னை அனுப்பியவரும் அவரே’ என்றார்.
இதைக் கேட்ட அவர்கள் இயேசுவைப் பிடிக்க முயன்றார்கள். எனினும் அவருடைய நேரம் இன்னும் வராததால், யாரும் அவரைத் தொடவில்லை.
இயேசுவைப் பிடித்துவர காவலர்களை அனுப்பினார்கள்
கூட்டத்திலிருந்த பலர், இயேசுவிடம் நம்பிக்கை கொண்டனர். அவர்கள், ’மெசியா வரும்போது, இவரைவிடவா மிகுதியான அரும்-அடையாளங்களைச் செய்யப் போகிறார்?’ என்று பேசிக்கொண்டார்கள்.
இயேசுவைப்பற்றி மக்கள் இவ்வாறெல்லாம் காதோடு-காதாய்ப் பேசுவதைப் பரிசேயர் கேள்விப்பட்டனர். எனவே, அவர்களும், தலைமைக் குருக்களும் அவரைப் பிடித்துவரும்படி காவலர்களை அனுப்பினார்கள்.
எனவே இயேசு, ’இன்னும் சிறிது காலமே உங்களோடு இருப்பேன்; பின்னர், என்னை அனுப்பியவரிடம் செல்வேன். நீங்கள் என்னைத் தேடுவீர்கள்; ஆனால் காணமாட்டீர்கள். நான் இருக்கும் இடத்திற்கு உங்களால் வரவும் இயலாது’ என்றார்.
இதை கேட்ட யூதர்கள், ’நாம் காணமுடியாதவாறு இவர் எங்கே செல்வார்? ஒருவேளை, கிரேக்கரிடையே சிதறி வாழ்வோரிடம் சென்று, கிரேக்கருக்கு கற்றுக்கொடுக்கப் போகிறாரோ? ″நீங்கள் என்னைத் தேடுவீர்கள்; ஆனால் காணமாட்டீர்கள். நான் இருக்கும் இடத்திற்கு உங்களால் வரவும் இயலாது″ என்றாரே! இதன் பொருள் என்ன?’ என்று தங்களிடையே பேசிக்கொண்டார்கள்.
தூயஆவியாரே வாழ்வைத் தரும் தண்ணீர்
திருவிழாவின் இறுதியான பெருநாளில் இயேசு எழுந்து நின்று, உரத்த குரலில், ’யாரேனும் தாகமாய் இருந்தால் என்னிடம் வரட்டும்; என்னிடம் நம்பிக்கை கொள்வோர் பருகட்டும். மறைநூல் கூறுவது போல், அவருடைய உள்ளத்திலிருந்து வாழ்வைத்தரும் தண்ணீர் ஆறாய்ப் பெருக்கெடுத்து ஓடும்’ என்றார். தம்மிடம் நம்பிக்கை கொண்டிருப்போர் பெறப்போகும் தூய ஆவியைக்குறித்தே அவர் இவ்வாறு சொன்னார். தூயஆவி இன்னும் அருளப்படவில்லை. ஏனெனில் இயேசு மாட்சிப்படுத்தப்படவில்லை.
மக்களிடையே பிளவு ஏற்பட்டது
கூட்டத்தில் சிலர் இவ்வார்த்தைகளைக் கேட்டு, ’வரவேண்டிய இறைவாக்கினர் உண்மையில் இவரே’ என்றனர். வேறு சிலர், ’மெசியா இவரே’ என்றனர்.
மற்றும் சிலர், ’கலிலேயாவிலிருந்தா மெசியா வருவார்? தாவீதின் மரபிலிருந்தும், அவர் குடியிருந்த பெத்லகேம் ஊரிலிருந்தும் மெசியா வருவார் என்றல்லவா மறைநூல் கூறுகிறது?’ என்றனர். இப்படி அவரைக் குறித்து மக்களிடையே பிளவு ஏற்பட்டது.
சிலர் அவரைப் பிடிக்க விரும்பினர். ஆனால் யாரும் அவரைத் தொடவில்லை.
இவரைப்போல் எவரும் என்றும் பேசியதில்லை
தலைமைக் குருக்களும் பரிசேயர்களும் அனுப்பியிருந்த காவலர்கள் அவர்களிடம் திரும்பி வந்தார்கள். அவர்கள் காவலர்களிடம், ’ஏன் அவனைப் பிடித்துக்கொண்டு வரவில்லை?’ என்று கேட்டார்கள். காவலர் மறுமொழியாக, ’அவரைப்போல எவரும் என்றுமே பேசியதில்லை’ என்றனர்.
பரிசேயர் அவர்களைப் பார்த்து, ’நீங்களும் ஏமாந்து போனீர்களா? தலைவர்களிலாவது, பரிசேயர்களிலாவது அவனை நம்புவோர் யாராவது உண்டா? இந்த மக்கள்-கூட்டத்துக்குத் திருச்சட்டம் தெரியாது. இவர்கள் சபிக்கப்பட்டவர்கள்’ என்றனர்.
நிக்கதேமின் கேள்வி
அங்கிருந்த பரிசேயருள் ஒருவர் நிக்கதேம். அவரே, முன்பு ஒருநாள், இயேசுவிடம் வந்தவர். அவர் அவர்களிடம், ’ஒருவரது வாக்குமூலத்தைக் கேளாது, அவர் என்ன செய்தாரென்று அறியாது, ஒருவருக்குத் தீர்ப்பளிப்பது நமது சட்டப்படி முறையாகுமா?’ என்று கேட்டார்.
அவர்கள் மறுமொழியாக, ’நீரும் கலிலேயரா என்ன? மறைநூலைத் துருவி ஆய்ந்துபாரும். அப்போது, கலிலேயாவிலிருந்து இறைவாக்கினர் யாரும் தோன்றுவதில்லை என்பதை அறிந்துகொள்வீர்’ என்றார்கள். (அவர்கள் ஒவ்வொருவரும் அவரவர் வீட்டுக்குச் சென்றார்கள்.)
3. பாவம் இல்லாதவர் இப்பெண்மேல் கல் எறியட்டும்
எருசலேம் கோவில் கிபி 32
(இயேசு ஒலிவமலைக்குச் சென்றார். பொழுது விடிந்ததும், அவர் மீண்டும் கோவிலுக்கு வந்தார். அப்போது, மக்கள் அனைவரும் அவரிடம் வந்தனர். அவரும் அங்கு அமர்ந்து, அவர்களுக்குக் கற்பித்தார்.
இயேசுவின்மேல் குற்றம் சுமத்த பரிசேயரின் திட்டம்
மறைநூல்-அறிஞரும் பரிசேயரும், விபசாரத்தில் பிடிபட்ட ஒரு பெண்ணைக் கூட்டிக்கொண்டு வந்து, நடுவில் நிறுத்தி, ’போதகரே, இப்பெண் விபச்சாரத்தில் கையும் மெய்யுமாகப் பிடிப்பட்டவள். இப்படிப்பட்டவர்களைக் கல்லால் எறிந்து கொல்ல வேண்டும் என்பது, மோசே நமக்குக் கொடுத்த திருச்சட்டத்திலுள்ள கட்டளை. நீர் என்ன சொல்கிறீர்?’ என்று கேட்டனர்.
அவர்மேல் குற்றம்சுமத்த ஏதாவது வேண்டும் என்பதற்காக, அவர்கள் இவ்வாறு கேட்டுச் சோதித்தார்கள்.
இயேசு குனிந்து, விரலால் தரையில் எழுதிக்கொண்டிருந்தார்.
ஆனால், அவர்கள் அவரை விடாமல் கேட்டுக்கொண்டிருந்ததால், அவர் நிமிர்ந்து பார்த்து, ’உங்களுள் பாவம் இல்லாதவர் முதலில் இப்பெண்மேல் கல் எறியட்டும்’ என்று அவர்களிடம் கூறினார். மீண்டும் குனிந்து தரையில் எழுதிக் கொண்டிருந்தார்.
அவர் சொன்னதைக் கேட்டதும், முதியோர் தொடங்கி, ஒருவர் பின் ஒருவராக, அவர்கள் யாவரும் அங்கிருந்து சென்று விட்டார்கள்.
இறுதியாக, இயேசு மட்டுமே அங்கு இருந்தார். அப்பெண்ணும் அங்கேயே நின்று கொண்டிருந்தார்.
இயேசு நிமிர்ந்து பார்த்து, ’அம்மா, அவர்கள் எங்கே? நீர் குற்றவாளி என்று எவரும் தீர்ப்பிடவில்லையா?’ என்று கேட்டார். அவர், 'இல்லை, ஐயா’ என்றார்.
இயேசு அவரிடம், 'நானும் தீர்ப்பு அளிக்கவில்லை. நீர் போகலாம். இனிப் பாவம் செய்யாதீர்’ என்றார்.)
4. இருக்கிறவர் நானே
எருசலேம் கோவில் கிபி 32
உலகின் ஒளி நானே
மீண்டும் இயேசு மக்களைப் பார்த்து, ’உலகின் ஒளி நானே; என்னைப் பின்தொடர்பவர் இருளில் நடக்கமாட்டார்; வாழ்வுக்கு வழிகாட்டும் ஒளியைக் கொண்டிருப்பார்’ என்றார்.
பரிசேயர் அவரிடம், ’உம்மைப்பற்றி நீரே சான்றுபகர்கிறீர்; உம் சான்று செல்லாது’ என்றனர்.
அதற்கு இயேசு, ’என்னைப்பற்றி நானே சான்றுபகர்ந்தாலும், என் சான்று செல்லும். ஏனெனில், நான் எங்கிருந்து வந்தேன், எங்குச் செல்கிறேன் என்பது எனக்குத் தெரியும். நான் எங்கிருந்து வருகிறேன், எங்குச் செல்கிறேன் என்பது உங்களுக்குத் தெரியாது.
நீங்கள் உலகப்போக்கின்படி தீர்ப்பு அளிக்கிறீர்கள். நான் யாருக்கும் தீர்ப்பு அளிப்பதில்லை. ஆனால், நான் தீர்ப்பு வழங்கினால், அத்தீர்ப்புச் செல்லும். ஏனெனில், நான் தனியாகத் தீர்ப்பு வழங்குவதில்லை; என்னை அனுப்பிய தந்தையும் என்னோடு இருக்கிறார். இருவருடைய சான்று செல்லும் என்று உங்கள் சட்டத்தில் எழுதியுள்ளது அல்லவா? என்னைப்பற்றி நானும் சான்று-பகர்கிறேன்; என்னை அனுப்பிய தந்தையும் சான்று-பகர்கிறார்’ என்றார்.
என்னைத் தெரிந்தால், என் தந்தையையும் அறிவீர்கள்
அப்போது அவர்கள், ’உம் தந்தை எங்கே இருக்கிறார்?’ என்று கேட்டார்கள்.
இயேசு மறுமொழியாக, ’உங்களுக்கு என்னையும் தெரியாது; என் தந்தையையும் தெரியாது. என்னை உங்களுக்குத் தெரிந்திருந்தால், ஒருவேளை என் தந்தையையும் தெரிந்திருக்கும்’ என்றார்.
கோவிலில் காணிக்கைப்பெட்டி அருகிலிருந்து இயேசு கற்பித்துக்கொண்டிருந்தபோது இவ்வாறு சொன்னார். அவரது நேரம் இன்னும் வராததால், யாரும் அவரைப் பிடிக்கவில்லை.
நான் உலகத்தைச் சார்ந்தவன் அல்ல
இயேசு மீண்டும் அவர்களிடம், "நான் போனபின், நீங்கள் என்னைத் தேடுவீர்கள்.
நான் போகுமிடத்திற்கு உங்களால் வர இயலாது. நீங்கள் பாவிகளாகவே சாவீர்கள் என்றார்”.
"'நான் போகுமிடத்திற்கு உங்களால் வர இயலாது' என்று சொல்கிறாரே, ஒருவேளை தற்கொலை செய்து கொள்ளப் போகிறாரோ?" என்று யூதர்கள் பேசிக்கொண்டார்கள்.
இயேசு அவர்களிடம், "நீங்கள் கீழிருந்து வந்தவர்கள்; நான் மேலிருந்து வந்தவன்.
நீங்கள் இவ்வுலகைச் சார்ந்தவர்கள். ஆனால், நான் இவ்வுலகைச் சார்ந்தவன் அல்ல. ஆகவேதான், நீங்கள் பாவிகளாகவே சாவீர்கள் என்று உங்களிடம் சொன்னேன். 'இருக்கிறவர் நானே' என்பதை நீங்கள் நம்பாவிடில், நீங்கள் பாவிகளாய்ச் சாவீர்கள் என்றார்.
அவர்கள், "நீர் யார்?" என்று அவரிடம்கேட்டார்கள்.
அவர், "நான் யாரென்று தொடக்கத்திலிருந்தே சொல்லிவந்துள்ளேன். உங்களைப்பற்றிப் பேசுவதற்கும், தீர்ப்பிடுவதற்கும் பல உண்டு. ஆனால், என்னை அனுப்பியவர் உண்மையானவர். நானும் அவரிடமிருந்து கேட்டவற்றையே உலகுக்கு எடுத்துரைக்கிறேன்” என்றார்.
தந்தையைப்பற்றியே அவர் பேசினார் என்பதை அவர்கள் உணர்ந்து கொள்ளவில்லை.
இயேசு அவர்களிடம், "நீங்கள் மானிடமகனை உயர்த்திய பின்பு, 'இருக்கிறவர் நானே'; நானாக எதையும் செய்வதில்லை; மாறாக, தந்தை கற்றுத்தந்ததையே நான் எடுத்துரைக்கிறேன் என்பதை அறிந்துகொள்வீர்கள். என்னை அனுப்பியவர் என்னோடு இருக்கிறார். அவர் என்னைத் தனியாக விட்டுவிடுவதில்லை. நானும் அவருக்கு உகந்தவற்றையே எப்போதும் செய்கிறேன்’ என்றார்.
அவர் இவற்றைச் சொன்னபோது, பலர் அவரிடம் நம்பிக்கை கொண்டனர்.
5. புதிய உடன்படிக்கையின் நிலைவாழ்வை இயேசு அறிவித்தார்
உண்மை உங்களுக்கு விடுதலை அளிக்கும்
இயேசு, தம்மை நம்பிய யூதர்களை நோக்கி, ’என் வார்த்தைகளை நீங்கள் தொடர்ந்து கடைப்பிடித்து வந்தால், உண்மையில் என் சீடர்களாய் இருப்பீர்கள்; உண்மையை அறிந்தவர்களாயும் இருப்பீர்கள். உண்மை உங்களுக்கு விடுதலை அளிக்கும்’ என்றார்.
பாவம் செய்பவர் பாவத்திற்கு அடிமை
யூதர்கள் அவரைப் பார்த்து, ″உங்களுக்கு விடுதலை கிடைக்கும″ என நீர் எப்படிச் சொல்லலாம்? நாங்கள் யாருக்கும், ஒருபோதும் அடிமைகளாய் இருந்ததில்லை. நாங்கள் ஆபிரகாமின் வழிமரபினர் ஆயிற்றே!’ என்றார்கள்.
அதற்கு இயேசு, ’பாவம் செய்யும் எவரும் பாவத்திற்கு அடிமை என உறுதியாக உங்களுக்குச் சொல்கிறேன். வீட்டில் அடிமைக்கு நிலையான இடம் இல்லை; மகனுக்கு அங்கு என்றென்றும் இடம் உண்டு. மகன் உங்களுக்கு விடுதலை அளித்தால், நீங்கள் உண்மையிலே விடுதலை பெற்றவர்களாய் இருப்பீர்கள்.
நீங்கள் ஆபிரகாமின் வழிமரபினர் என்பது எனக்குத் தெரியும். ஆனால், என் வார்த்தை உங்கள் உள்ளத்தில் இடம்பெறாததால், நீங்கள் என்னைக் கொல்ல முயலுகிறீர்கள்.
நான் என் தந்தையிடம் கண்டதைச் சொல்கிறேன். நீங்கள் உங்கள் தந்தையிடமிருந்து கேட்டதைச் செய்கிறீர்கள்’ என்றார்.
அவர்கள் அவரைப்பார்த்து, ’ஆபிரகாமே எங்கள் தந்தை’ என்றார்கள்.
சாத்தானே உங்கள் தந்தை
இயேசு அவர்களிடம், ’நீங்கள் ஆபிரகாமின் மக்கள் என்றால், அவரைப்போலச் செயல்படுவீர்கள். ஆனால், கடவுளிடமிருந்து கேட்டறிந்த உண்மையை, உங்களுக்கு எடுத்துரைத்த என்னை, நீங்கள் கொல்ல முயலுகிறீர்கள். ஆபிரகாம் இப்படிச் செய்யவில்லையே! நீங்கள், உங்கள் தந்தையைப்போலச் செயல்படுகிறீர்கள்’ என்றார்.
அவர்கள், ’நாங்கள் பரத்தைமையால் பிறந்தவர்கள் அல்ல; எங்களுக்கு ஒரே தந்தை உண்டு; கடவுளே அவர்’ என்றார்கள்.
இயேசு அவர்களிடம் கூறியது: ’கடவுள் உங்கள் தந்தையெனில், நீங்கள் என்மேல் அன்புகொள்வீர்கள். நான் கடவுளிடமிருந்தே இங்கு வந்துள்ளேன். நானாக வரவில்லை; அவரே என்னை அனுப்பினார். நான் சொல்வதற்குச் செவிசாய்க்க உங்களால் இயலவில்லை. எனவேதான் நான் சொல்வதை நீங்கள் கண்டுணர்வதில்லை.
சாத்தானே உங்களுக்குத் தந்தை. உங்கள் தந்தையின் ஆசைப்படி நடப்பதே உங்கள் விருப்பம். தொடக்கமுதல் அவன் ஒரு கொலையாளி. அவனிடம் உண்மை இல்லாததால், அவன் உண்மையைச் சார்ந்து நிற்கவில்லை. அவன் பொய்பேசும்போதும், அது அவனுக்கு இயல்பாக இருக்கிறது. ஏனெனில், அவன் பொய்யன், பொய்ம்மையின் பிறப்பிடம். நான் உண்மையைக் கூறுவதால் நீங்கள் என்னை நம்புவதில்லை.
என்னிடம் பாவம் உண்டு என்று உங்களுள் யாராவது என்மேல் குற்றம்சுமத்த முடியுமா?
நான் உங்களிடம் உண்மையைக் கூறியும், நீங்கள் ஏன் என்னை நம்புவதில்லை? கடவுளைச் சார்ந்தவர் கடவுளிள் சொல்லுக்குச் செவிசாய்க்கிறார்; நீங்கள் கடவுளைச் சார்ந்தவர்கள் அல்ல. ஆதலால், அவர் சொல்லுக்குச் செவி சாய்ப்பதில்லை.’
இயேசு புதிய உடன்படிக்கையின் நிலைவாழ்வை அறிவித்தார்
யூதர்கள் இயேசுவைப் பார்த்து, ’நீ சமாரியன், பேய்-பிடித்தவன்’ என நாங்கள் சொல்வது சரிதானே?’ என்றார்கள்.
அதற்கு இயேசு, ’நான் பேய் பிடித்தவன் அல்ல; என் தந்தைக்கு மதிப்பளிப்பவன். ஆனால், நீங்கள் என்னை அவமதிக்கிறீர்கள். நான் எனக்குப் பெருமை தேடுவதில்லை. அதை எனக்குத் தேடித்தருபவர் ஒருவர் இருக்கிறார். அவரே தீர்ப்பளிப்பவர்.
என் வார்த்தையைக் கடைப்பிடிப்போர் என்றுமே சாகமாட்டார்கள் என உறுதியாக உங்களுக்குச் சொல்கிறேன்’ என்றார்.
யூதர்கள் அவரிடம், ’நீ பேய்-பிடித்தவன்தான் என்பது இப்போது தெரிந்துவிட்டது. ஆபிரகாம் இறந்தார்; இறைவாக்கினர்களும் இறந்தார்கள். ஆனால், என் வார்த்தையைக் கடைப்பிடிப்போர் என்றுமே சாகமாட்டார் என்கிறாயே! எங்கள் தந்தை ஆபிரகாமைவிட நீ பெரியவனோ? ஆபிரகாம் இறந்தார்; இறைவாக்கினரும் இறந்தனர். நீ யாரென்று நினைத்துக் கொண்டிருக்கிறாய்?’ என்றார்கள்.
ஆபிரகாம் ஆவலோடு எதிர்பார்த்த இறைமகன் நானே
இயேசு மறுமொழியாக, ’நானே என்னைப் பெருமைப்படுத்தினால், அது எனக்குப் பெருமை இல்லை. என்னைப் பெருமைப்படுத்துபவர் என் தந்தையே. அவரையே நீங்கள், உங்கள் தந்தை என்றும் சொல்கிறீர்கள். ஆனால் அவரை உங்களுக்குத் தெரியாது; எனக்குத் தெரியும். எனக்கு அவரைத் தெரியாது என நான் சொன்னால் உங்களைப்போல நானும் பொய்யனாவேன். அவரை எனக்குத் தெரியும். அவருடைய வார்த்தையையும் நான் கடைபிடிக்கிறேன்.
உங்கள் தந்தை ஆபிரகாம், நான் வரும் காலத்தைக் காணமுடியும் என்பதை முன்னிட்டுப் பேருவகை கொண்டார்; அதனைக் கண்டபோது மகிழ்ச்சியும் கொண்டார்’ என்றார்.
யூதர்கள் அவரை நோக்கி, ’உனக்கு இன்னும் ஐம்பது வயது கூட ஆகவில்லை; நீ ஆபிரகாமைக் கண்டிருக்கிறாயா?’ என்று கேட்டார்கள்.
இயேசு அவர்களிடம், ’ஆபிரகாம் பிறப்பதற்கு முன்பே நான் இருக்கிறேன் என உறுதியாக உங்களுக்குச் சொல்கிறேன்’ என்றார்.
இயேசுமேல் எறியக் கற்களை எடுத்தார்கள்
இதைக் கேட்ட அவர்கள், அவர்மேல் எறியக் கற்களை எடுத்தார்கள். ஆனால் இயேசு மறைவாக நழுவிக் கோவிலிலிருந்து வெளியேறினார்.
6. கண்ணிருந்தும் நாம் குருடாய் இருக்கிறோமா?
எருசலேம் கிபி 32
கடவுளின் செயல் வெளிப்படும் பொருட்டு குருடாய் பிறந்தவர்
இயேசு சென்றுகொண்டிருக்கும்போது பிறவியிலேயே கண்-பார்வையில்லாத ஒருவரைக் கண்டார்.
’ரபி, இவர் பார்வையில்லாதவராகப் பிறக்கக்காரணம் இவர் செய்த பாவமா? இவர் பெற்றோர் செய்த பாவமா?’ என்று இயேசுவின் சீடர்கள் அவரிடம் கேட்டார்கள்.
அவர் மறுமொழியாக, ’இவர் செய்த பாவமும் அல்ல; இவர் பெற்றோர் செய்த பாவமும் அல்ல; கடவுளின் செயல் இவர் வழியாக வெளிப்படும்பொருட்டே இப்படிப் பிறந்தார்.
பகலாய் இருக்கும்வரை என்னை அனுப்பியவரின் செயலை நாம் செய்ய வேண்டியிருக்கிறது. இரவு வருகிறது; அப்போது யாரும் செயலாற்ற இயலாது. நான் உலகில் இருக்கும்வரை நானே உலகின் ஒளி 'என்றார்.
பார்வையில்லாதவர் பார்வை பெற்றார்
இவ்வாறு கூறியபின், அவர் தரையில் உமிழ்ந்து, உமிழ்நீரால் சேறு உண்டாக்கி, அச்சேற்றைப் பார்வையற்றவரின் கண்களில் பூசி, ’நீர் சிலோவாம் குளத்துக்குப் போய்க் கண்களைக் கழுவும்’ என்றார். சிலோவாம் என்பதற்கு’அனுப்பப்பட்டவர்’ என்பது பொருள்.
அவரும் போய், கழுவிப் பார்வைபெற்றுத் திரும்பிவந்தார்.
எப்படி பார்வை பெற்றீர்?
அக்கம் பக்கத்தாரும், அவர் பிச்சையெடுத்துக் கொண்டிருந்ததை முன்பு பார்த்திருந்தோரும் ’இங்கே அமர்ந்து பிச்சையெடுத்துக் கொண்டிருந்தவர் இவர் அல்லவா?’ என்று, பேசிக்கொண்டனர்.
சிலர், ’அவரே’ என்றனர்; வேறு சிலர்’அவரல்ல; அவரைப்போல் இவரும் இருக்கிறார்’ என்றனர். ஆனால் பார்வை-பெற்றவர், ’நான்தான் அவன்’ என்றார்.
’உமக்கு எப்படிப் பார்வை கிடைத்தது?’ என்று அவர்கள் அவரிடம் கேட்டார்கள்.
அவர், அவர்களைப் பார்த்து, ’இயேசு எனப்படும் மனிதர் சேறு உண்டாக்கி, என் கண்களில் பூசி, ’சிலோவாம் குளத்துக்குப் போய்க் கண்களைப் கழுவும்’ என்றார். நானும் போய்க் கழுவினேன்; பார்வை கிடைத்தது’ என்றார்.
’அவர் எங்கே?’ என்று அவர்கள் கேட்டார்கள். பார்வை பெற்றவர், ‘எனக்குத் தெரியாது’ என்றார்.
இயேசுவக்குறித்து பரிசேயரின் குழப்பம்
முன்பு கண்தெரியாத அவரை, அவர்கள், பரிசேயரிடம் கூட்டிவந்தார்கள்.
இயேசு, சேறு உண்டாக்கி, அவருக்குப் பார்வை-அளித்தநாள் ஓர் ஓய்வுநாள். எனவே, ‘எப்படிப் பார்வை பெற்றாய்?’ என்னும் அதே கேள்வியைப் பரிசேயரும் கேட்டனர்.
அதற்கு அவர், ″இயேசு என் கண்களில் சேறு பூசினார்; பின், நான் கண்களைக் கழுவினேன்; இப்போது என்னால் பார்க்க முடிகிறது″ என்றார்.
’ஓய்வுநாள் சட்டத்தைக் கடைப்பிடிக்காத இந்த ஆள், கடவுளிடமிருந்து வந்திருக்க முடியாது’ என்று, பரிசேயருள் சிலர் பேசிக் கொண்டனர். ஆனால் வேறு சிலர், ’பாவியான ஒரு மனிதரால் இத்தகைய அரும் அடையாளங்களைச் செய்ய இயலுமா?’ என்று கேட்டனர். இவ்வாறு அவர்களிடையே பிளவு ஏற்பட்டது.
அவர்கள் பார்வையற்றவரிடம், ’உனக்குப் பார்வையளித்த அந்த ஆளைக் குறித்து நீ என்ன சொல்கிறாய்?’ என்று மீண்டும் கேட்டனர்.
’அவர் ஓர் இறைவாக்கினர்’ என்றார் பார்வை பெற்றவர்.
யூதர்கள் நம்பவில்லை
பார்வையற்ற அவர், இப்போது பார்வை பெற்றுள்ளார் என்பதை, அவருடைய பெற்றோரைக் கூப்பிட்டுக் கேட்கும்வரை, யூதர்கள் நம்பவில்லை.
’பிறவியிலேயே கண்தெரியாதவர் என நீங்கள் கூறும் உங்கள் மகன் இவன்தானா? இப்போது இவனுக்கு எப்படிக் கண்தெரிகிறது?’ என்று கேட்டார்கள்.
பெற்றோரின் அச்சம்
அவருடைய பெற்றோர் மறுமொழியாக, ’இவன் எங்களுடைய மகன்தான். இவன் பிறவியிலேயே கண்பார்வை அற்றவன்தான். ஆனால், இப்போது எப்படி அவனுக்குக் கண் தெரிகிறது என்பதோ, யார் அவனுக்குப் பார்வை அளித்தார் என்பதோ எங்களுக்குத் தெரியாது. அவனிடமே கேளுங்கள். அவன் வயது-வந்தவன்தானே! நடந்ததை அவனே சொல்லட்டும்’ என்றனர்.
யூதர்களுக்கு அஞ்சியதால்தான் அவருடைய பெற்றோர் இப்படிக் கூறினர். ஏனெனில், இயேசுவை மெசியாவாக ஏற்றுக்கொள்ளும் எவரையும், தொழுகைக் கூடத்திலிருந்து விலக்கிவிடவேண்டும் என்று யூதர்கள் ஏற்கெனவே தங்களிடையே உடன்பாடு செய்திருந்தார்கள்.
அதனால் அவருடைய பெற்றோர், ’அவன் வயது-வந்தவன்தானே! அவனிடமே கேட்டுக்கொள்ளுங்கள்’ என்றனர்.
இரண்டாம்முறை விசாரணை
கண் தெரியாமலிருந்த அவரை யூதர்கள் இரண்டாம் முறையாகக் கூப்பிட்டு, அவரிடம், 'உண்மையைச் சொல்லிக் கடவுளை மாட்சிப்படுத்து. இம்மனிதன் ஒரு பாவி என்பது எங்களுக்குத் தெரியும்’ என்றனர்.
பார்வை-பெற்றவர் மறுமொழியாக, ’அவர் பாவியா இல்லையா என்பது எனக்குத் தெரியாது. ஒன்று மட்டும் எனக்குத் தெரியும்; நான் கண்-தெரியாதவனாய் இருந்தேன்; இப்போது கண்-பார்வை பெற்றுள்ளேன்’ என்றார்.
அவர்கள் அவரிடம், ’அவன் உனக்கு என்ன செய்தான்? எப்படிப் பார்வை அளித்தான்?’ என்று கேட்டார்கள்.
அவர் மறுமொழியாக, ’ஏற்கெனவே நான் உங்களிடம் சொன்னேன். அப்போது நீங்கள் கேட்கவில்லை. இப்போது, மீண்டும் ஏன் கேட்க விரும்புகிறீர்கள்? ஒருவேளை, நீங்களும் அவருடைய சீடர்கள் ஆகும்படி விரும்புகிறீர்களோ?’ என்று கேட்டார்.
அவர்கள் அவரைப் பழித்து, ’நீ அந்த ஆளுடைய சீடனாக இரு. நாங்கள் மோசேயின் சீடர்கள். மோசேயோடு கடவுள் பேசினார் என்பது எங்களுக்குத் தெரியும்; இவன் எங்கிருந்து வந்தான் என்பதே தெரியாது’ என்றார்கள்.
குருடாய் இருந்தவரின் நம்பிக்கை
அதற்கு அவர் ’இது வியப்பாய் இல்லையா? எனக்குப் பார்வை அளித்திருக்கிறார்; அப்படியிருந்தும், அவர் எங்கிருந்து வந்தவரெனத் தெரியாது என்கிறீர்களே! பாவிகளுக்குக் கடவுள் செவிசாய்ப்பதில்லை; இறைப்பற்றுடையவராய்க் கடவுளின் திருவுளப்படி நடப்பவருக்கே அவர் செவிசாய்க்கிறார் என்பது நமக்குத் தெரியும். பிறவியிலேயே குருடாயிருந்த ஒருவர் பார்வை-பெற்றதாக வரலாறே இல்லையே! இவர் கடவுளிடமிருந்து வராதவர் என்றால், இவரால் எதுவுமே செய்திருக்க இயலாது’ என்றார்.
அவர்கள் அவரைப்பார்த்து, ’பிறப்பிலிருந்தே பாவத்தில் மூழ்கிக்கிடக்கும் நீயா எங்களுக்குக் கற்றுத் தருகிறாய்?’ என்று சொல்லி அவரை வெளியே தள்ளினர்.
யூதர்கள் அவரை வெளியே தள்ளிவிட்டதைப்பற்றி இயேசு கேள்விப்பட்டார்; பின் அவரைக் கண்டபோது, ’மானிடமகனிடம் நீர் நம்பிக்கை கொள்கிறீரா?’ என்று கேட்டார்.
அவர் மறுமொழியாக, ’ஐயா, அவர் யார்? சொல்லும். அப்போது நானும் அவரிடம் நம்பிக்கை கொள்வேன்’ என்றார்.
இயேசு அவரிடம், ’நீர் அவரைப் பார்த்திருக்கிறீர். உம்மோடு பேசிக்கொண்டிருப்பவரே அவர்' என்றார்.
அவர், ’ஆண்டவரே, நம்பிக்கைகொள்கிறேன்’ என்று கூறி அவரை வணங்கினார்.
இயேசுவின் தீர்ப்பு
அப்போது இயேசு, ’தீர்ப்பு அளிக்கவே நான் இவ்வுலகிற்கு வந்தேன்; கண்ணில்லாதோர் பார்வை-பெறவும், கண்ணுடையவர் குருடாய் ஆகவுமே வந்தேன்’ என்றார்.
அவரோடு இருந்த பரிசேயர் இதைக் கேட்டபோது, ’நாங்களுமா குருடர்?’ என்று கேட்டனர்.
நாம் கண்ணிருந்தும் குருடாய் இருப்பதை அறிகிறோமா?
இயேசு அவர்களிடம், ’நீங்கள் குருடாய் இருந்திருந்தால், உங்களிடம் பாவம் இராது. ஆனால் நீங்கள் ″எங்களுக்குக் கண் தெரிகிறது″ என்கிறீர்கள். எனவே நீங்கள் பாவிகளாகவே இருக்கிறீர்கள்’ என்றார்.
7. அறிஞர்களுக்கு மறைத்து, குழந்தைகளுக்கு வெளிப்படுத்தினீர்
யூதேயா கிபி 32
இதற்குப்பின்பு, ஆண்டவர், வேறு எழுபத்திரண்டு பேரை நியமித்து, அவர்களைத் தாம் போகவிருந்த எல்லா ஊர்களுக்கும், இடங்களுக்கும், தமக்கு முன்னே இருவர்-இருவராக அனுப்பினார்.
நற்செய்தியாளருக்கு இயேசுவின் அறிவுரை
அப்போது அவர் அவர்களை நோக்கிக் கூறியது: ’அறுவடை மிகுதி; வேலையாள்களோ குறைவு. ஆகையால் தமது அறுவடைக்குத் தேவையான வேலையாள்களை அனுப்பும்படி அறுவடையின் உரிமையாளரிடம் மன்றாடுங்கள்.
புறப்பட்டுப் போங்கள்; ஓநாய்களிடையே ஆட்டுக்குட்டிகளை அனுப்புவதுபோல் உங்களை நான் அனுப்புகிறேன்.
பணப்பையோ, வேறு பையோ, மிதியடிகளோ, எதுவும் நீங்கள் எடுத்துச் செல்ல வேண்டாம்; வழியில் எவருக்கும் வணக்கம் செலுத்த வேண்டாம். நீங்கள் எந்த வீட்டுக்குள் சென்றாலும், ’இந்த வீட்டுக்கு அமைதி உண்டாகுக!’ என முதலில் கூறுங்கள். அமைதியை விரும்புபவர் அங்கு இருந்தால், நீங்கள் வாழ்த்திக் கூறிய அமைதி அவரிடம் தங்கும்; இல்லாவிட்டால் அது உங்களிடமே திரும்பிவிடும்.
அவர்களிடம் உள்ளதை நீங்கள் உண்டு, குடித்து, அந்த வீட்டிலேயே தங்கியிருங்கள். ஏனெனில், வேலையாளர் தம் கூலிக்கு உரிமை உடையவரே; வீடுவீடாய்ச் செல்ல வேண்டாம்.
நீங்கள் செல்லும் ஊரில் உங்களை ஏற்றுக்கொண்டால், உங்களுக்குப் பரிமாறுவதை உண்ணுங்கள். அங்கு உடல்நலம் குன்றியோரைக் குணமாக்கி, ‘இறையாட்சி அவர்களை நெருங்கி வந்துவிட்டது’ எனச் சொல்லுங்கள்.
நீங்கள் செல்லும் ஊரில் உங்களை ஏற்றுக் கொள்ளாவிட்டால், அதன் வீதிகளில் சென்று, ’எங்கள் கால்களில் ஒட்டியுள்ள உங்கள் ஊர்த் தூசியையும் உதறிவிடுகிறோம். ஆயினும், இறையாட்சி நெருங்கி வந்து விட்டது என்பதை அறிந்து கொள்ளுங்கள்’ எனச் சொல்லுங்கள். அந்தநாளில் அவ்வூர் பெறும் தண்டனை, சோதோம் நகரினர் பெறும் தண்டனையைவிட கடினமாகவே இருக்கும் என உங்களுக்குச் சொல்கிறேன்.
உங்களுக்குச் செவி சாய்ப்பவர், எனக்குச் செவிசாய்க்கிறார்; உங்களைப் புறக்கணிப்பவர், என்னைப் புறக்கணிக்கிறார். என்னைப் புறக்கணிப்பவர், என்னை அனுப்பினவரையே புறக்கணிக்கிறார்.’
திருந்த மறுத்த நகரங்களை இயேசு கண்டித்தார்
இயேசு வல்லசெயல்கள் பல நிகழ்த்திய நகரங்கள் மனம்மாறவில்லை. எனவே, அவர் அவற்றைக் கண்டிக்கத் தொடங்கினார்.
’கொராசின் நகரே, ஐயோ! உனக்குக் கேடு! பெத்சாய்தா நகரே, ஐயோ! உனக்குக் கேடு! ஏனெனில், உங்களிடையே செய்யப்பட்ட வல்லசெயல்கள் தீர், சீதோன் நகரங்களில் செய்யப்பட்டிருந்தால், அங்குள்ள மக்கள் முன்பே சாக்கு-உடை உடுத்திச் சாம்பல்-பூசி மனம்மாறியிருப்பர்.
தீர்ப்புநாளில் தீருக்கும் சீதோனுக்கும் கிடைக்கும் தண்டனையைவிட, உங்களுக்குக் கிடைக்கும் தண்டனை கடினமாகவே இருக்கும் என நான் உங்களுக்குச் சொல்கிறேன்.
கப்பர்நாகுமே, நீ வானளாவ உயர்த்தப்படுவாயோ? இல்லை, பாதாளம்வரை தாழ்த்தப்படுவாய். ஏனெனில், உன்னிடம் செய்யப்பட்ட வல்லசெயல்கள் சோதோமில் செய்யப்பட்டிருந்தால், அது இன்றுவரை நிலைத்திருக்குமே!
தீர்ப்புநாளில் சோதோமுக்குக் கிடைக்கும் தண்டனையைவிட, உனக்குக் கிடைக்கும் தண்டனை கடினமாகவே இருக்கும் என நான் உங்களுக்குச் சொல்கிறேன்.’
நற்செய்தியாளரின் பெயர்கள் விண்ணகத்தில் எழுதப்பட்டன
பின்னர், எழுபத்திரண்டு-பேரும் மகிழ்வுடன் திரும்பிவந்து, 'ஆண்டவரே, உமது பெயரைச் சொன்னால், பேய்கள்கூட எங்களுக்கு அடிபணிகின்றன’ என்றனர்.
அதற்கு அவர், ’வானத்திலிருந்து சாத்தான் மின்னலைப்போல விழக்கண்டேன். பாம்புகளையும் தேள்களையும் மிதிக்கவும், பகைவரின் வல்லமை அனைத்தையும் வெல்லவும் உங்களுக்கு அதிகாரம் கொடுத்திருக்கிறேன். உங்களுக்கு எதுவுமே தீங்கு விளைவிக்காது.
ஆயினும், தீயஆவிகள் உங்களுக்கு அடிபணிகின்றன என்பதுபற்றி மகிழவேண்டாம். மாறாக, உங்கள் பெயர்கள் விண்ணகத்தில் எழுதப்பட்டிருக்கின்றன என்பதுபற்றியே மகிழுங்கள்’ என்றார்.
ஞானிகளுக்கு மறைத்து, குழந்தைகளுக்கு வெளிப்படுத்தினீர்
அந்நேரத்தில் இயேசு தூயஆவியால் பேருவகையடைந்து, ’தந்தையே, விண்ணுக்கும் மண்ணுக்கும் ஆண்டவரே, உம்மைப் போற்றுகிறேன். ஏனெனில் ஞானிகளுக்கும் அறிஞர்களுக்கும் இவற்றை மறைத்து, குழந்தைகளுக்கு வெளிப்படுத்தினீர். ஆம், தந்தையே, இதுவே உமது திருவுளம்’ என்றார்.
’என் தந்தை எல்லாவற்றையும் என்னிடத்தில் ஒப்படைத்திருக்கிறார். தந்தையைத் தவிர, வேறு எவரும் மகனை அறியார். தந்தை யாரென்று மகனுக்குத் தெரியும்; மகன் யாருக்கு வெளிப்படுத்த விரும்புகிறாரோ அவருக்கும் தெரியும். வேறு எவரும் தந்தையை அறியார்’ என்று கூறினார்.
சீடர்கள் பெற்ற பேறு
பின்பு, அவர் தம் சீடர்பக்கம் திரும்பி அவர்களிடம் தனியாக, ’நீங்கள் காண்பவற்றைக் காணும் வாய்ப்புப்பெற்றோர் பேறுபெற்றோர்.
ஏனெனில் பல இறைவாக்கினர்களும், அரசர்களும் நீங்கள் காண்பவற்றைக் காண விரும்பினார்கள். ஆனால், அவர்கள் காணவில்லை. நீங்கள் கேட்பவற்றைக் கேட்க விரும்பினார்கள்; ஆனால் அவர்கள் கேட்கவில்லை என நான் உங்களுக்குச் சொல்கிறேன்’ என்று கூறினார்.
இயேசுவின் நுகமே இளைப்பாறுதலை அளிக்கும்
மேலும் அவர், ’பெருஞ்சுமை சுமந்து சோர்ந்திருப்பவர்களே, எல்லாரும் என்னிடம் வாருங்கள், நான் உங்களுக்கு இளைப்பாறுதல் தருவேன். நான் கனிவும் மனத்தாழ்மையும் உடையவன்.
ஆகவே, என் நுகத்தை உங்கள்மேல் ஏற்றுக்கொண்டு என்னிடம் கற்றுக்கொள்ளுங்கள். அப்பொழுது உங்கள் உள்ளத்திற்கு இளைப்பாறுதல் கிடைக்கும். ஆம், என் நுகம் அழுத்தாது; என் சுமை எளிதாயுள்ளது’ என்றார்.
8. நான் என்னைப்போலவே யாரை அன்புகூரவேண்டும்?
யூதேயா கிபி 32
திருச்சட்ட அறிஞர் ஒருவர் எழுந்து, அவரைச் சோதிக்கும் நோக்குடன், ’போதகரே, நிலைவாழ்வை உரிமையாக்கிக்கொள்ள, நான் என்ன செய்ய வேண்டும்?’ என்று கேட்டார்.
அதற்கு இயேசு, ’திருச்சட்ட நூலில் என்ன எழுதியிருக்கிறது? அதில் நீர் என்ன வாசிக்கிறீர்?’ என்று அவரிடம் கேட்டார்.
அவர் மறுமொழியாக, ’உன் முழு இதயத்தோடும், முழு உள்ளத்தோடும், முழு ஆற்றலோடும், முழு மனத்தோடும் உன் கடவுளாகிய ஆண்டவரிடம் அன்புகூர்வாயாக. உன்மீது நீ அன்புகூர்வதுபோல், உனக்கு அடுத்திருப்பவர் மீதும் அன்புகூர்வாயாக’ என்று எழுதியுள்ளது’ என்றார்.
இயேசு, ’சரியாய்ச் சொன்னீர்; அப்படியே செய்யும்; அப்பொழுது வாழ்வீர்’ என்றார்.
நான் அன்புகூரவேண்டிய அடுத்திருப்பவர் யார்?
அவர், தம்மை நேர்மையாளர் எனக் காட்ட விரும்பி, ‘எனக்கு அடுத்திருப்பவர் யார்?’ என்று இயேசுவிடம் கேட்டார்.
அதற்கு இயேசு மறுமொழியாகக் கூறிய உவமை: ’ஒருவர் எருசலேமிலிருந்து எரிகோவுக்குப் போகும்போது கள்வர் கையில் அகப்பட்டார். அவருடைய ஆடைகளை அவர்கள் உரிந்துகொண்டு, அவரை அடித்துக் குற்றுயிராகவிட்டுப் போனார்கள்.
குரு ஒருவர் தற்செயலாய் அவ்வழியே வந்தார். அவர், அவரைக் கண்டதும் மறுபக்கம் விலகிச்சென்றார்.
அவ்வாறே லேவியர் ஒருவரும் அவ்விடத்துக்கு வந்து, அவரைக் கண்டதும் மறுபக்கமாய் விலகிச்சென்றார்.
ஆனால், அவ்வழியே பயணம்-செய்துகொண்டிருந்த சமாரியர் ஒருவர், அருகில் வந்து அவரைக் கண்டபோது, அவர்மீது பரிவு கொண்டார். அவர், அவரை அணுகி, காயங்களில் திராட்சை மதுவும் எண்ணெயும் வார்த்து, அவற்றைக் கட்டி, தாம் பயணம்செய்த விலங்கின் மீது ஏற்றி, ஒரு சாவடிக்குக் கொண்டுபோய், அவரைக் கவனித்துக் கொண்டார்.
மறுநாள், இருதெனாரியத்தை எடுத்து, சாவடிப் பொறுப்பாளரிடம் கொடுத்து, 'இவரைக் கவனித்துக் கொள்ளும்; இதற்குமேல் செலவானால், நான் திரும்பி வரும்போது உமக்குத் தருவேன்’ என்றார்.
உம் கண்ணெதிரே துன்புறுவோருக்கு உதவுங்கள்
’கள்வர் கையில் அகப்பட்டவருக்கு, இம்மூவருள் எவர் அடுத்திருப்பவர் என உமக்குத் தோன்றுகிறது?’ என்று இயேசு கேட்டார்.
அதற்கு திருச்சட்ட அறிஞர், ’அவருக்கு இரக்கம் காட்டியவரே’ என்றார்.
இயேசு, ’நீரும் போய் அப்படியே செய்யும்’ என்று கூறினார்.
(நம் அருகில் துன்பத்தில் தவிப்போரே நாம் அன்புகூரவேண்டிய அடுத்தவர். அவர்களுக்கு நம்மால் இயன்ற உதவியைச் செய்வதால், நாம் விண்ணுலகில் செல்வம் சேர்க்கிறோம், விண்ணுலகில் நண்பர்களைப் பெறுகிறோம்)
9. தூய ஆவியை இறைவனிடம் கேட்டுப்பெறுங்கள்
இயேசுவை ஏற்றுக்கொண்ட மார்த்தாவும் மரியாவும் பெத்தானியா
அவர்கள் தொடர்ந்து சென்று கொண்டிருந்தார்கள். அப்போது இயேசு ஓர் ஊரை அடைந்தார். அங்கே பெண் ஒருவர், அவரைத் தம் வீட்டில் வரவேற்றார். அவர் பெயர் மார்த்தா. அவருக்கு மரியா என்னும் சகோதரி ஒருவர் இருந்தார்.
மரியா ஆண்டவருடைய காலடி அருகில் அமர்ந்து, அவர் சொல்வதைக் கேட்டுக் கொண்டிருந்தார்.
ஆனால் மார்த்தா, பற்பல பணிகள்-புரிவதில் பரபரப்பாகி, இயேசுவிடம் வந்து, ’ஆண்டவரே, நான் பணிவிடைசெய்ய, என் சகோதரி என்னைத் தனியே விட்டுவிட்டாளே, உமக்குக் கவலையில்லையா? எனக்கு உதவிபுரியும்படி அவளிடம் சொல்லும்’ என்றார்.
ஆண்டவர் அவரைப் பார்த்து, ’மார்த்தா, மார்த்தா! நீ பலவற்றைப்பற்றிக் கவலைப்பட்டுக் கலங்குகிறாய். ஆனால், தேவையானது ஒன்றே. மரியாவோ நல்ல பங்கைத் தேர்ந்தெடுத்துக் கொண்டாள்; அது அவளிடமிருந்து எடுக்கப்படாது’ என்றார்.
யூதேயா
இறைவனிடம் இறையாட்சியை வேண்டுங்கள்
இயேசு ஓரிடத்தில் இறைவனிடம் வேண்டிக்கொண்டிருந்தார். அது முடிந்ததும், அவருடைய சீடர்களுள் ஒருவர் அவரை நோக்கி, ’ஆண்டவரே, யோவான் தம் சீடருக்கு இறைவனிடம் வேண்டக் கற்றுக்கொடுத்தது போல், எங்களுக்கும் கற்றுக்கொடும்’ என்றார்.
அவர் அவர்களிடம், ’நீங்கள் இறைவனிடம் வேண்டும்பொழுது இவ்வாறு சொல்லுங்கள்;
தந்தையே, உமது பெயர் தூயதெனப் போற்றப்பெறுக! உமது ஆட்சி வருக! எங்கள் அன்றாட உணவை, நாள்தோறும் எங்களுக்குத் தாரும். எங்களுக்கு எதிராகக் குற்றம்-செய்வோர் அனைவரையும் நாங்கள் மன்னிப்பதால், எங்கள் பாவங்களையும் மன்னியும். எங்களைச் சோதனைக்கு உட்படுத்தாதேயும். (தீயோனிடமிருந்து எங்களை விடுவித்தருளும்)’ என்று கற்பித்தார்.
நண்பர்களைவிட இறைவன் மேலானவர்
மேலும், அவர் அவர்களை நோக்கிப் பின்வருமாறு கூறினார்: ’உங்களுள் ஒருவர், தம் நண்பரிடம் நள்ளிரவில் சென்று, ’நண்பா, மூன்று அப்பங்களை எனக்குக் கடனாகக் கொடு. என்னுடைய நண்பர் ஒருவர் பயணம் செய்யும் வழியில் என்னிடம் வந்திருக்கிறார். அவருக்குக் கொடுக்க என்னிடம் ஒன்றுமில்லை’ என்று சொல்வதாக வைத்துக் கொள்வோம்.
உள்ளே இருப்பவர், ‘எனக்குத் தொல்லை கொடுக்காதே; ஏற்கெனவே கதவு பூட்டியாயிற்று; என் பிள்ளைகளும் என்னோடு படுத்திருக்கிறார்கள். நான் எழுந்திருந்து உனக்குத் தரமுடியாது’ என்பார்.
எனினும், அவர் விடாப்பிடியாய்க் கதவைத் தட்டிக்கொண்டேயிருந்தால், அவர் தம் நண்பர் என்பதற்காக எழுந்து கொடுக்காவிட்டாலும், அவரது தொல்லையின் பொருட்டாவது எழுந்து, அவருக்குத் தேவையானதைக் கொடுப்பார் என நான் உங்களுக்குச் சொல்கிறேன்.
’மேலும் நான் உங்களுக்குச் சொல்கிறேன்: கேளுங்கள், உங்களுக்குக் கொடுக்கப்படும்; தேடுங்கள், நீங்கள் கண்டடைவீர்கள்; தட்டுங்கள், உங்களுக்குத் திறக்கப்படும். ஏனெனில் கேட்போர் எல்லாரும் பெற்றுக்கொள்கின்றனர்; தேடுவோர் கண்டடைகின்றனர்; தட்டுவோருக்குத் திறக்கப்படும்.
(நம் நண்பர்கள் நடுஇரவில் உதவிசெய்யத் தயங்கினாலும் நமக்குத் தேவையானதை கொடுக்காமல் இருக்கமாட்டார்கள். இறைவனோ நம் நண்பரைவிட மேலானவர். கேட்பவருக்கும், தேடுபவருக்கும், தட்டவோருக்கும் உடனே உதவிசெய்ய காத்திருக்கிறார் )
உலகத் தந்தையிலும் மேலானவர் இறைவன்
பிள்ளை மீனைக் கேட்டால் உங்களுள் எந்தத் தந்தையாவது மீனுக்குப்பதிலாகப் பாம்பைக் கொடுப்பாரா? முட்டையைக் கேட்டால், அவர் தேளைக் கொடுப்பாரா?
தீயோர்களாகிய நீங்களே உங்கள் பிள்ளைகளுக்கு நற்கொடைகள் அளிக்க அறிந்திருக்கிறீர்கள். அப்படியானால், விண்ணகத் தந்தை தம்மிடம் கேட்போருக்குத் தூயஆவியைக் கொடுப்பது எத்துணை உறுதி!’
(தீயோர்களாகிய நாம், நம் பிள்ளைகளுக்கு மகிழ்ச்சியான உலகச் செல்வங்களை அளிக்க விரும்புகிறோம். இறைவனோ தந்தையிலும் மேலானவர். தம்மிடம் கேட்போருக்கு, நிலைவாழ்வை அளிக்கும் தூயஆவியை அளிப்பது உறுதி)
10. இயேசுவின் புதிய உடன்படிக்கை- உடையை அல்ல, உள்ளத்தை முதலில் சுத்தம் செய்யுங்கள்
இயேசு பேசிக்கொண்டிருந்தபோது, தம்மோடு உணவருந்தும்படி, பரிசேயர் ஒருவர் அவரைக் கேட்டுக்கொண்டார். அவரும் போய், பந்தியில் அமர்ந்தார். உணவு அருந்துமுன்பு, அவர் கை-கழுவாததைக் கண்டு, பரிசேயர் வியப்படைந்தார்.
வெளிவேடப் பரிசேயரே, ஐயோ உங்களுக்குக் கேடு
ஆண்டவர் அவரை நோக்கிக் கூறியது: ’பரிசேயரே, நீங்கள் கிண்ணத்தையும் தட்டையும் வெளிப்புறத்தில் தூய்மையாக்குகிறீர்கள். ஆனால், உங்களுக்கு உள்ளே, கொள்ளையும், தீமையும் நிறைந்திருக்கின்றன. அறிவிலிகளே, வெளிப்புறத்தை உண்டாக்கியவரே உட்புறத்தையும் உண்டாக்கினார் அல்லவா! உட்புறத்தில் உள்ளவற்றைத் தர்மமாகக் கொடுங்கள். அப்பொழுது உங்களுக்கு அனைத்தும் தூய்மையாயிருக்கும். (உள்ளத்தை முதலில் சுத்தம் செய்வீர், அப்போது உடலும் தூய்மையாகும்)
’ஐயோ! பரிசேயரே உங்களுக்குக் கேடு! நீங்கள் புதினா, கறியிலை மற்றும் கீரைச் செடிவகைகள் எல்லாவற்றிலும் பத்தில் ஒரு பங்கை, காணிக்கையாகப் படைக்கிறீர்கள். ஆனால், நீதியையும், கடவுளின் அன்பையும் பொருட்படுத்துவதில்லை. இவற்றைத்தான் கடைப்பிடித்திருக்க வேண்டும்; ஆனால் அவற்றையும் விட்டுவிடலாகாது.″ (காணிக்கையை அல்ல, நீதியையும் அன்பையும் முதலில் கடைப்பிடியுங்கள்)
’ஐயோ! பரிசேயரே, உங்களுக்குக் கேடு! தொழுகைக்கூடங்களில் முதன்மையான இருக்கைகளையும், சந்தைவெளிகளில் மக்கள் வணக்கம் செலுத்துவதையும் விரும்புகிறீர்களே. (தற்பெருமையை நாடாதீர்)
ஐயோ! உங்களுக்குக் கேடு! ஏனெனில், நீங்கள் அடையாளம் தெரியாத கல்லறைகள்போல் இருக்கிறீர்கள். மக்களும், கல்லறைகள் எனத் தெரியாமல், அவற்றின்மீது நடந்து போகிறார்கள்.’ (வெளியே அழகு, உள்ளே நாற்றம்)
திருச்சட்ட அறிஞரே, ஐயோ உங்களுக்குக் கேடு
திருச்சட்ட அறிஞருள் ஒருவர் அவரைப் பார்த்து, ’போதகரே, இவற்றைச் சொல்லி, எங்களை இழிவுபடுத்துகிறீர்’ என்றார்.
அதற்கு அவர், ’ஐயோ! திருச்சட்ட அறிஞரே, உங்களுக்கும் கேடு! ஏனென்றால் நீங்கள், தாங்கமுடியாத சுமைகளை மக்கள்மேல் சுமத்துகிறீர்கள்; நீங்களோ, அந்தச் சுமைகளை ஒரு விரலால்கூடத் தொடமாட்டீர்கள்.’ (நீங்கள் திருந்தாமல், ஊருக்கு உபதேசம் செய்யாதீர்)
’ஐயோ! உங்களுக்குக் கேடு! ஏனெனில் நீங்கள் இறைவாக்கினருக்கு நினைவுச் சின்னங்கள் எழுப்புகிறீர்கள். ஆனால், அவர்களைக் கொலைசெய்தவர்கள் உங்கள் மூதாதையர்களே. உங்கள் மூதாதையரின் செயல்களுக்கு நீங்கள் சாட்சிகளாய் இருக்கிறீர்கள்; அவற்றுக்கு உடன்பட்டும் இருக்கிறீர்கள். அவர்கள் கொலைசெய்தார்கள்; நீங்கள் நினைவுச் சின்னம் எழுப்புகிறீர்கள். (முதலில் கொலை, பின்பு நினைவுச்சின்னமா?)
உங்களிடம் கணக்குக் கேட்கப்படும்
இதை முன்னிட்டே கடவுளின் ஞானம் இவ்வாறு கூறுகிறது: நான் அவர்களிடம் இறைவாக்கினரையும், திருத்தூதரையும் அனுப்புவேன். அவர்களுள் சிலரைக் கொலைசெய்வார்கள்; சிலரைத் துன்புறுத்துவார்கள். ஆபேலின் இரத்தம்முதல், பலிபீடத்திற்கும் தூயகத்திற்கும் நடுவே சிந்தப்பட்ட சக்கரியாவின் இரத்தம்வரை, உலகம் தோன்றியதிலிருந்து சிந்தப்பட்ட இறைவாக்கினர்-அனைவரின் இரத்தத்திற்காக, இந்தத் தலைமுறையினரிடம் கணக்குக் கேட்கப்படும். ஆம், நான் உங்களுக்குச் சொல்கிறேன், இந்த தலைமுறையினரிடம் கணக்குக் கேட்கப்படும்.
’ஐயோ! திருச்சட்ட அறிஞரே, உங்களுக்குக் கேடு!
ஏனெனில் அறிவுக் களஞ்சியத்தின் திறவுகோலை நீங்கள் எடுத்துக்கொண்டீர்கள். நீங்களும் நுழைவதில்லை; நுழைவோரையும் தடுக்கிறீர்கள்' என்றார். (உண்மையை நீங்களும் அறிவதில்லை, மக்களையும் அறியவிடுவதில்லை)
இயேசு அங்கிருந்து புறப்பட்டபோது, மறைநூல்-அறிஞரும் பரிசேயரும் பகைமையுணர்வு மிகுந்தவராய், அவரது பேச்சில் அவரைச் சிக்கவைக்குமாறு பல கேள்விகளைக் கேட்டனர்.
சீடருக்கு இயேசுவின் அறிவுரை
ஒருவரையொருவர் மிதிக்கும்-அளவுக்கு, ஆயிரக்கணக்கான மக்கள் திரண்டு வந்திருந்தபோது, இயேசு, முதலில் தம் சீடரோடு பேசத் தொடங்கினார்.
அவர் அவர்களிடம் கூறியது: ’பரிசேயருடைய வெளிவேடமாகிய புளிப்பு-மாவைக் குறித்து நீங்கள் எச்சரிக்கையாய் இருங்கள்.
வெளிப்படாதவாறு மூடப்பட்டிருப்பது ஒன்றும் இல்லை; அறியப்படாதவாறு மறைந்திருப்பதும் ஒன்றும் இல்லை. ஆகவே, இருளில் நீங்கள் பேசியவை ஒளியில் கேட்கும். உள்ளறைகளில் நீங்கள் காதோடு காதாய்ப் பேசியவை, வீடுகளின் மேல்தளத்திலிருந்து அறிவிக்கப்படும். (வெளிவேடம் போடாதீர், உங்கள் உள்ளத்தை இறைவன் அறிவார்)
மனிதருக்கல்ல கடவுளுக்கே அஞ்சுங்கள்
என் நண்பர்களாகிய உங்களுக்கு நான் சொல்கிறேன்: உடலைக் கொல்வதையன்றி, வேறுஎதுவும் செய்ய இயலாதவர்களுக்கு அஞ்சவேண்டாம்.
நீங்கள் யாருக்கு அஞ்சவேண்டுமென நான் உங்களுக்கு எடுத்துக்காட்டுகிறேன். கொன்றபின், நரகத்தில் தள்ள அதிகாரமுள்ளவருக்கே அஞ்சுங்கள்; ஆம், அவருக்கே அஞ்சுங்கள் என நான் உங்களுக்குச் சொல்கிறேன்.
இரண்டு காசுக்கு, ஐந்து சிட்டுக்குருவிகள் விற்பதில்லையா? எனினும், அவற்றில் ஒன்றையும் கடவுள் மறப்பதில்லையே. உங்கள் தலைமுடி எல்லாம்கூட எண்ணப்பட்டிருக்கின்றன. அஞ்சாதீர்கள்; சிட்டுக்குருவிகள் பலவற்றைவிட நீங்கள் மேலானவர்கள்.
என் வார்த்தையை சொல்லாலும் செயலாலும் மக்களுக்கு அறிவியுங்கள்
’நான் உங்களுக்குச் சொல்கிறேன்: மக்கள் முன்னிலையில் என்னை ஏற்றுக்கொள்பவரை, மானிடமகனும், கடவுளின் தூதர் முன்னிலையில் ஏற்றுக் கொள்வார். மக்கள் முன்னிலையில் என்னை மறுதலிப்பவர், கடவுளின் தூதர் முன்னிலையிலும் மறுதலிக்கப்படுவார்.
மானிடமகனுக்கு எதிராய் ஏதாவது ஒரு வார்த்தை சொல்லிவிட்டவரும் மன்னிக்கப்படுவார். ஆனால், தூயஆவியாரைப் பழித்துரைப்பவர் மன்னிப்புப் பெறமாட்டார்.
தொழுகைக்-கூடங்களுக்கும், ஆட்சியாளர், அதிகாரிகள் முன்னும் உங்களைக் கூட்டிக்கொண்டு போகும்போது, எப்படிப் பதிலளிப்பது, என்ன பதிலை அளிப்பது, என்ன பேசுவது என, நீங்கள் கவலைப்படவேண்டாம். ஏனெனில், நீங்கள் பேசவேண்டியவற்றைத் தூயஆவியார், அந்நேரத்தில், உங்களுக்குக் கற்றுத் தருவார்.
11. பேராசைக்கு இடங்கொடாதீர்
யூதேயா கிபி 32
சொத்தைப் பங்கிட்டுக்கொடுக்க இயேசுவை அழைத்தவர்
கூட்டத்திலிருந்து ஒருவர் இயேசுவிடம், ’போதகரே, சொத்தை என்னோடு பங்கிட்டுக்கொள்ளுமாறு என் சகோதரருக்குச் சொல்லும்’ என்றார். அவர், அந்த ஆளை நோக்கி, ’என்னை உங்களுக்கு நடுவராகவோ, பாகம்-பிரிப்பவராகவோ அமர்த்தியவர் யார்?’ என்று கேட்டார்.
பின்பு அவர் அவர்களை நோக்கி, ’எவ்வகைப் பேராசைக்கும் இடங்கொடாதவாறு எச்சரிக்கையாயிருங்கள். மிகுதியான உடைமைகளைக் கொண்டிருப்பதால் ஒருவருக்கு வாழ்வு வந்துவிடாது’ என்றார்.
நீண்டநாள் வாழவிரும்பியவன் - உவமை
அவர்களுக்கு அவர் ஓர் உவமையைச் சொன்னார்: ’செல்வனாயிருந்த ஒருவனுடைய நிலம் நன்றாய் விளைந்தது. அவன், ’நான் என்ன செய்வேன்? என் விளை பொருள்களைச் சேர்த்து வைக்க இடமில்லையே!’ என்று எண்ணினான்.
’ஒன்று செய்வேன்; என் களஞ்சியங்களை இடித்து, இன்னும் பெரிதாகக் கட்டுவேன்; அங்கு, என் தானியத்தையும் பொருள்களையும் சேர்த்து வைப்பேன்’. பின்பு, ‘என் நெஞ்சமே, உனக்குப் பல்லாண்டுகளுக்கு வேண்டிய பலவகைப் பொருள்கள் வைக்கப்பட்டுள்ளன; நீ ஓய்வெடு; உண்டு குடித்து, மகிழ்ச்சியில் திளைத்திடு’ எனச் சொல்வேன்’ என்று தனக்குள் கூறிக்கொண்டான்.
ஆனால், கடவுள் அவனிடம், ’அறிவிலியே, இன்றிரவே உன் உயிர் உன்னைவிட்டுப் பிரிந்துவிடும். அப்பொழுது நீ சேர்த்து-வைத்தவை யாருடையவையாகும்?’ என்று கேட்டார்.
கடவுள்-முன்னிலையில் செல்வம் இல்லாதவராய், தமக்காகவே செல்வம் சேர்ப்பவர் இத்தகையோரே.’
(நீண்டகாலம் வாழ்வதற்கு ஒருவர் விரும்பினார். உலகில் மிகுதியாகச் செல்வத்தைச் சேமித்தார். ஆனால், செல்வத்தைச் சேமித்த அன்று இரவில், உலக வாழ்வை மட்டுமல்ல, நிலைவாழ்வையும் இழந்தார். அவர் சேமித்தச் செல்வம் அவருக்குப் பயன்படவில்லை. எனென்றால்,. மிகுதியான செல்வம் இருந்தும், ஏழைகளுக்கு உதவி செய்யவில்லை.
உலகச் செல்வம் அனைத்தும் கடவுளுடையது. நாம் சிறிதுகாலம் அந்தச் செல்வத்திற்குப் பொறுப்பாளராக இருக்கிறோம். தன்னலமின்றி, நேர்மையாகச் செயல்படவேண்டும் நல்ல வாய்ப்பு இருந்தும், விண்ணுலகில் செல்வத்தைச் சேர்க்காதபடியால், இயேசு அவரை அறிவிலி என்று அறிவித்தார்.)
உலகில் உண்பதையும் உடுப்பதையும் விரும்பி, நிலைவாழ்வை இழந்துவிடாதீர்
இயேசு தம் சீடரை நோக்கிக் கூறியது: ’ஆகவே நான் உங்களுக்குச் சொல்கிறேன், உயிர்வாழ எதை உண்பது என்றோ, உடலுக்கு எதை உடுத்துவது என்றோ கவலை கொள்ளாதீர். உணவைவிட உயிரும், உடையைவிட உடலும் உயர்ந்தவை அல்லவா? (உயிர் இருந்தால்தான் உணவை உண்ணமுடியும், உடல் இருந்தால்தான் உடையை அணியமுடியும். உயிரும் உடலும் கடவுளுக்குரியது)
கவலைப்படுவதால் உங்களுள் எவர் தமது உயரத்தோடு ஒரு முழம் கூட்ட முடியும்? ஆதலால் மிகச் சிறிய ஒரு செயலைக் கூடச் செய்யமுடியாத நீங்கள் மற்றவை பற்றி ஏன் கவலைப்படுகிறீர்கள்?
காகங்களுக்கும் கடவுள் உணவளிக்கிறார்
காகங்களைக் கவனியுங்கள்; அவை விதைப்பதுமில்லை, அறுப்பதுமில்லை; அவற்றுக்குச் சேமிப்பறையுமில்லை, களஞ்சியமுமில்லை. கடவுள் அவற்றுக்கும் உணவு அளிக்கிறார். நீங்கள் பறவைகளைவிட மேலானவர்கள் அல்லவா?
செடிகளுக்கும் கடவுள் ஆடை அணிவிக்கிறார்
காட்டுச்செடிகள் எப்படி வளர்கின்றன எனக் கூர்ந்து கவனியுங்கள்; அவை உழைப்பதுமில்லை, நூற்பதுமில்லை; ஆனால், சாலமோன்கூடத் தம் மேன்மையிலெல்லாம் அவற்றில் ஒன்றைப்போல் அணிந்திருந்ததில்லை என நான் உங்களுக்குச் சொல்கிறேன்.
’நம்பிக்கை குன்றியவர்களே, இன்றைக்கு இருந்து, நாளைக்கு அடுப்பில் எறிப்படும் காட்டுப்புல்லுக்குக் கடவுள் இவ்வாறு அணிசெய்கிறார் என்றால், உங்களுக்கு இன்னும் மிகுதியாகச் செய்வார் அல்லவா!
முதலில் இறையாட்சியைத் தேடுங்கள்
ஆதலால் எதை உண்பது, எதைக் குடிப்பது என நீங்கள் தேடிக்கொண்டிருக்க வேண்டாம்; கவலை-கொண்டிருக்கவும் வேண்டாம். ஏனெனில், உலகு-சார்ந்த பிறஇனத்தவரே இவற்றையெல்லாம் தேடுவர். உங்களுக்கு இவை தேவையென உங்கள் தந்தைக்குத் தெரியும். நீங்கள் அவருடைய ஆட்சியை நாடுங்கள்; அப்பொழுது இவை உங்களுக்குச் சேர்த்துக் கொடுக்கப்படும்.’
விண்ணுலகில் செல்வத்தைச் சேருங்கள்
’சிறு மந்தையாகிய நீங்கள் அஞ்சவேண்டாம்; உங்கள் தந்தை உங்களைத் தம் ஆட்சிக்கு உட்படுத்தத் திருவுளம் கொண்டுள்ளார். உங்கள் உடைமைகளை விற்றுத் தர்மம் செய்யுங்கள்; இற்றுப்போகாத பணப்பைகளையும், குறையாத செல்வத்தையும், விண்ணுலகில் தேடிக்கொள்ளுங்கள்; அங்கே திருடன் நெருங்குவதில்லை; பூச்சியும் அரிப்பது இல்லை.
உங்கள் செல்வம் எங்கு உள்ளதோ அங்கே உங்கள் உள்ளமும் இருக்கும்.
12. விழித்திருக்கும் பணியாளர்
விழித்திருக்கும் பணியாளர் யூதேயா கிபி 32
இயேசு தம் சீடரை நோக்கிக் கூறியது: உங்கள் இடையை வரிந்துகட்டிக் கொள்ளுங்கள். விளக்குகளும் எரிந்து கொண்டிருக்கட்டும். திருமண விருந்துக்குப் போயிருந்த தம் தலைவர் திரும்பிவந்து தட்டும்போது, உடனே அவருக்குக் கதவைத்திறக்கக் காத்திருக்கும் பணியாளருக்கு ஒப்பாய் இருங்கள்.
தலைவர் வந்து பார்க்கும்போது, விழித்திருக்கும் பணியாளர்கள் பேறுபெற்றவர்கள். அவர், தம் இடையை வரிந்து-கட்டிக்கொண்டு, அவர்களைப் பந்தியில் அமரச்செய்து, அவர்களிடம் வந்து, பணிவிடைசெய்வார் என உறுதியாக உங்களுக்குச் சொல்கிறேன்.
தலைவர் இரவின் இரண்டாம் காவல்-வேளையில் வந்தாலும், மூன்றாம் காவல்-வேளையில் வந்தாலும், அவர்கள் விழிப்பாயிருப்பதைக் காண்பாரானால் அவர்கள் பேறுபெற்றவர்கள்.
நினையாத நேரத்தில் இயேசு வருவார்
எந்த நேரத்தில் திருடன் வருவான் என்று வீட்டு உரிமையாளருக்குத் தெரிந்திருந்தால், அவர் தம் வீட்டில் கன்னமிட விடமாட்டார் என்பதை அறிவீர்கள். நீங்களும் ஆயத்தமாய் இருங்கள்; ஏனெனில், நீங்கள் நினையாத நேரத்தில் மானிடமகன் வருவார்.’
பேதுருவின் கேள்வி
அப்பொழுது பேதுரு, ’ஆண்டவரே, நீர் சொல்லும் இந்த உவமை எங்களுக்கா? அல்லது எல்லாருக்குமா?’ என்று கேட்டார்.
இறையாட்சியை வளர்க்கும் போதகர்கள்
அதற்கு ஆண்டவர் கூறியது: ’தம் ஊழியருக்கு வேளாவேளை படியளக்கும்படி தலைவர் அமர்த்திய, நம்பிக்கைக்கு உரியவரும் அறிவாளியுமான வீட்டுப்பொறுப்பாளர் யார்?
தலைவர் வந்து பார்க்கும்போது தம் பணியைச் செய்துகொண்டிருப்பவரே அப்பணியாளர். அவர் பேறுபெற்றவர். அவரைத் தம் உடைமைக்கெல்லாம் அதிகாரியாக அவர் அமர்த்துவார் என உண்மையாக உங்களுக்குச் சொல்கிறேன்.
கள்ளப் போதகர்களுக்குத் தண்டனை
ஆனால், அதே பணியாள், தன் தலைவர் வருவதற்குக் காலந்தாழ்த்துவார் எனத் தன் உள்ளத்தில் சொல்லிக்கொண்டு, ஆண்-பெண் பணியாளர்கள் அனைவரையும் அடிக்கவும், மயக்கமுற உண்ணவும், குடிக்கவும் தொடங்கினான் எனில், அப்பணியாள் எதிர்பாராத நாளில், அறியாத நேரத்தில், அவனுடைய தலைவர் வந்து, அவனைக் கொடுமையாகத் தண்டித்து, நம்பிக்கைத் துரோகிகளுக்குரிய இடத்திற்குத் தள்ளுவார்.
பேதுருவின் கேள்விக்கு இயேசுவின் பதில்
தன் தலைவரின் விருப்பத்தை அறிந்திருந்தும், ஆயத்தமின்றியும் அவர் விருப்பப்படி செயல்படாமலும் இருக்கும் பணியாள் நன்றாய் அடிபடுவான். ஆனால், அவர் விருப்பத்தை அறியாமல், அடிவாங்கவேண்டிய முறையில் செயல்படுபவன், அவரது விருப்பத்தை அறியாமல் செயல்படுவதால் சிறிதே அடிபடுவான்.
மிகுதியாகக் கொடுக்கப்பட்டவரிடம் மிகுதியாகவே எதிர்பார்க்கப்படும். மிகுதியாக ஒப்படைக்கப்படுபவரிடம் இன்னும் மிகுதியாகக் கேட்கப்படும்.
மண்ணுலகில் பிளவு உண்டாகவே வந்தேன்
’மண்ணுலகில் தீ-மூட்ட வந்தேன். அது இப்பொழுதே பற்றி எரிந்துகொண்டிருக்க வேண்டும் என்பதே என் விருப்பம். ஆயினும் நான் பெறவேண்டிய ஒரு திருமுழுக்கு உண்டு. அது நிறைவேறுமளவும் நான் மிகவும் மன நெருக்கடிக்குள்ளாகி இருக்கிறேன்.
மண்ணுலகில் அமைதியை ஏற்படுத்த வந்தேன் என்றா நினைக்கிறீர்கள்? இல்லை, பிளவு உண்டாக்கவே வந்தேன் என உங்களுக்குச் சொல்கிறேன்.
இது முதல், ஒரு வீட்டிலுள்ள ஐவருள், இருவருக்கு எதிராக மூவரும், மூவருக்கு எதிராக இருவரும் பிரிந்திருப்பர். தந்தை மகனுக்கும், மகன் தந்தைக்கும், தாய் மகளுக்கும், மகள் தாய்க்கும், மாமியார் தன் மருமகளுக்கும், மருமகள் மாமியாருக்கும் எதிராகப் பிரிந்திருப்பர்.’
படித்து அறிந்தும் நேர்மை எதுவென அறியாமலிருப்பது ஏன்?
இயேசு மக்கள் கூட்டத்தைப் பார்த்து, ’மேற்கிலிருந்து மேகம் எழும்புவதை நீங்கள் பார்த்ததும், மழைவரும் என்கிறீர்கள்; அது அப்படியே நடக்கிறது. தெற்கிலிருந்து காற்று அடிக்கும்பொழுது, மிகுந்த வெப்பம் உண்டாகும் என்கிறீர்கள்; அதுவும் நடக்கிறது.
வெளிவேடக்காரரே, நிலத்தின் தோற்றத்தையும் வானின் தோற்றத்தையும் ஆய்ந்து பார்க்க அறிந்திருக்கும்போது, இக்காலத்தை நீங்கள் ஆய்ந்து பாராமல் இருப்பது எப்படி? நேர்மையானது எதுவென நீங்கள் தீர்மானிக்காமல் இருப்பதேன்?
எதிரியோடு ஒப்புரவாகுங்கள்
நீங்கள் உங்கள் எதிரியோடு ஆட்சியாளரிடம் போகும்போது, வழியிலேயே உங்கள் வழக்கைத் தீர்த்துக் கொள்ள முயற்சி செய்யுங்கள். இல்லையேல் அவர் உங்களை நடுவரிடம் இழுத்துக்கொண்டு போக, நடுவர் உங்களை நீதிமன்ற அலுவலரிடம் ஒப்புவிப்பார்; நீதிமன்ற அலுவலர் உங்களைச் சிறையிலடைப்பார். கடைசிக் காசுவரை நீங்கள் திருப்பிச் செலுத்தாமல் அங்கிருந்து வெளியேறமாட்டீர்கள் என உங்களுக்குச் சொல்கிறேன்.
13. மனம் மாறாவிடில் அழிவீர்கள்
அவ்வேளையில் சிலர் இயேசுவிடம் வந்து, பலி செலுத்திக் கொண்டிருந்த கலிலேயரைப் பிலாத்து கொன்றான் என்ற செய்தியை அறிவித்தனர்.
இறப்போர் குற்றவாளிகள் அல்ல
அவர் அவர்களிடம் மறுமொழியாக, ’இக்கலிலேயருக்கு இவ்வாறு நிகழ்ந்ததால், இவர்கள் மற்றெல்லாக் கலிலேயரையும் விடப் பாவிகள் என நினைக்கிறீர்களா? அப்படி அல்ல என உங்களுக்குச் சொல்கிறேன். மனம் மாறாவிட்டால் நீங்கள் அனைவரும் அவ்வாறே அழிவீர்கள்.
சீலோவாமிலே கோபுரம் விழுந்து பதினெட்டுப்பேரைக் கொன்றதே. அவர்கள் எருசலேமில் குடியிருந்த மற்ற எல்லாரையும்விடக் குற்றவாளிகள் என நினைக்கிறீர்களா? அப்படி அல்ல என உங்களுக்குச் சொல்கிறேன். மனம் மாறாவிட்டால் நீங்கள் அனைவரும் அப்படியே அழிவீர்கள்’ என்றார்.
மூன்று ஆண்டுகளாகக் கனிதராத அத்திமரம் - உவமை
மேலும், இயேசு இந்த உவமையைக் கூறினார்: ’ஒருவர் தம் திராட்சைத் தோட்டத்தில் அத்திமரம் ஒன்றை நட்டு வைத்திருந்தார். அவர் வந்து அதில் கனியைத் தேடியபோது எதையும் காணவில்லை.
எனவே அவர் தோட்டத் தொழிலாளரிடம், ’பாரும், மூன்று ஆண்டுகளாக இந்த அத்தி மரத்தில் கனியைத் தேடிவருகிறேன்; எதையும் காணவில்லை. ஆகவே இதை வெட்டிவிடும். இடத்தை ஏன் அடைத்துக்கொண்டிருக்க வேண்டும்?’ என்றார்.
தொழிலாளர் மறுமொழியாக, ’ஐயா, இந்த ஆண்டும் இதை விட்டுவையும்; நான் இதைச் சுற்றிலும் கொத்தி எருபோடுவேன். அடுத்த ஆண்டு கனி கொடுத்தால் சரி; இல்லையானால் இதை வெட்டிவிடலாம்’ என்று அவரிடம் கூறினார்.’
(இயேசு யூதர்களின் மனமாற்றத்திற்காக இறைவனிடம் தவணை கேட்டார் )
கூன்விழுந்த பெண் ஓய்வுநாளில் குணமடைந்தார்
ஓய்வுநாளில் இயேசு தொழுகைக்கூடம் ஒன்றில் கற்பித்துக்கொண்டிருந்தார். பதினெட்டு ஆண்டுகளாகத் தீயஆவி பிடித்து, உடல்நலம் குன்றிய பெண் ஒருவர் அங்கு இருந்தார். அவர் சிறிதும் நிமிர முடியாதவாறு, கூன் விழுந்த நிலையில் இருந்தார்.
இயேசு அவரைக் கண்டு அருகே கூப்பிட்டு, ’அம்மா, உமது நோயிலிருந்து நீர் விடுவிக்கப்பட்டுள்ளீர்’ என்று கூறி, தம் கைகளை அவர்மீது வைத்தார். உடனே அவர் நிமிர்ந்து, கடவுளைப் போற்றிப் புகழ்ந்தார்.
இயேசு ஓய்வுநாளில் குணமாக்கியதைக் கண்ட தொழுகைக்கூடத் தலைவர், கோபம்கொண்டு, மக்கள் கூட்டத்தினரைப் பார்த்து, ’வேலைசெய்ய ஆறு நாள்கள் உண்டே; அந்நாள்களில் வந்து குணம் பெற்றுக்கொள்ளுங்கள்; ஓய்வுநாளில் வேண்டாம்’ என்றார்.
ஆண்டவரோ அவரைப் பார்த்து, ’வெளிவேடக்காரரே, நீங்கள் ஒவ்வொருவரும் ஓய்வுநாளில் தம் மாட்டையோ, கழுதையையோ தொழுவத்திலிருந்து அவிழ்த்துக் கொண்டுபோய், தண்ணீர் காட்டுவதில்லையோ? பாருங்கள், ஆபிரகாமின் மகளாகிய இவரை, பதினெட்டு-ஆண்டுகளாகச் சாத்தான் கட்டி-வைத்திருந்தான். இந்தக் கட்டிலிருந்து, இவரை, ஓய்வுநாளில் விடுவிப்பது முறையில்லையா?’ என்று கேட்டார்.
அவர் இவற்றைச் சொன்னபோது, அவரை எதிர்த்த அனைவரும் வெட்கப்பட்டனர். திரண்டிருந்த மக்கள் எல்லாரும், அவர் செய்த மாட்சிக்குரிய செயல்கள் அனைத்தையும் குறித்து, மகிழ்ச்சி அடைந்தனர்.
கடுகு விதை உவமை
பின்பு இயேசு, ’இறையாட்சி எதற்கு ஒப்பாயிருக்கிறது? அதை நான் எதற்கு ஒப்பிடுவேன்? அது ஒரு கடுகு விதைக்கு ஒப்பாகும். ஒருவர் அதை எடுத்துத் தம் தோட்டத்தில் இட்டார். அது வளர்ந்து மரமாயிற்று. வானத்துப் பறவைகள் அதன் கிளைகளில் தங்கின’ என்று கூறினார். (இயேசுவின் நற்செய்தி முதலில் அற்பமாகத் தோன்றினாலும், அதை உள்ளத்தில் ஏற்றுக்கொள்ளும்போது, அது பெரிதாக வளர்ந்து, பலருக்கும் பயன்தரும் இறையாட்சியாக நிறைவுபெறுகிறது)
புளிப்பு மாவு உவமை
மீண்டும் அவர், ’இறையாட்சியை எதற்கு ஒப்பிடுவேன்? அது புளிப்புமாவுக்கு ஒப்பாகும். பெண் ஒருவர் அதை எடுத்து மூன்று மரக்கால் மாவில் பிசைந்து வைத்தார். மாவு முழுவதும் புளிப்பேறியது’ என்றார். (உலகில் அற்பமாக எண்ணப்படும் நற்செய்தியை நம் உள்ளத்தில் பதிக்கும்போது, அது பெருகி, நம் வாழ்வை நிலைவாழ்வாக மாற்றுகிறது)
14. நல்ல ஆயன் நானே
எருசலேம் திருக்கோவில் கிபி 32
’நான் உறுதியாக உங்களுக்குச் சொல்கிறேன்; ஆட்டுக் கொட்டிலில் வாயில் வழியாக நுழையாமல், வேறு வழியாக ஏறிக்குதிப்போர் திருடர் அல்லது கொள்ளையராய் இருப்பர். வாயில் வழியாக நுழைபவர் ஆடுகளின் ஆயர். அவருக்கே காவலர் வாயிலைத் திறந்துவிடுவார். ஆடுகளும் அவரது குரலுக்கே செவிசாய்க்கும்.
அவர், தம்முடைய சொந்த ஆடுகளைப் பெயர் சொல்லிக் கூப்பிட்டு, வெளியே கூட்டிச் செல்வார். தம்முடைய சொந்த ஆடுகள் அனைத்தையும் வெளியே ஓட்டி வந்தபின், அவர் அவற்றிற்கு முன் செல்வார். ஆடுகளும் அவரைப் பின்தொடரும். ஏனெனில், அவரது குரல் அவற்றுக்குத் தெரியும். அறியாத ஒருவரை அவை பின்தொடரா. அவரை விட்டு அவை ஓடிப்போகும். ஏனெனில், அவரது குரல் அவற்றுக்குத் தெரியாது.’
இயேசு அவர்களிடம் உவமையாக இவ்வாறு சொன்னார். ஆனால் அவர் சொன்னதை அவர்கள் புரிந்துகொள்ளவில்லை.
நானே வாயில்
மீண்டும் இயேசு கூறியது: ’உறுதியாக உங்களுக்குச் சொல்கிறேன்; ஆடுகளுக்கு வாயில் நானே. எனக்கு முன்பு வந்தவர் அனைவரும் திருடரும் கொள்ளையருமே. அவர்களுக்கு ஆடுகள் செவிசாய்க்கவில்லை. நானே வாயில். என் வழியாக நுழைவோருக்கு ஆபத்து இல்லை. அவர்கள் உள்ளே போவர்; வெளியே வருவர்; மேய்ச்சல் நிலத்தைக் கண்டுகொள்வர்.
நிலைவாழ்வை அளிப்பதற்கே நான் வந்துள்ளேன்
திருடுவதற்கும், கொல்வதற்கும், அழிப்பதற்குமன்றித் திருடர் வேறெதற்கும் வருவதில்லை. ஆனால் நான், ஆடுகள் வாழ்வைப் பெறும்பொருட்டு, அதுவும் நிறைவாகப் பெறும்பொருட்டு வந்துள்ளேன்.
நானே நல்ல ஆயன்
நல்ல ஆயன் நானே. நல்ல-ஆயர், ஆடுகளுக்காகத் தம் உயிரைக் கொடுப்பார். ’கூலிக்கு மேய்ப்பவர், ஓநாய் வருவதைக் கண்டு, ஆடுகளை விட்டுவிட்டு ஓடிப்போவார். ஏனெனில், அவர் ஆயரும் அல்ல; ஆடுகள் அவருக்குச் சொந்தமும் அல்ல; ஓநாய், ஆடுகளைப் பற்றி-இழுத்துக்கொண்டுபோய் மந்தையைச் சிதறடிக்கும். கூலிக்கு மேய்ப்பவருக்கு ஆடுகளைப்பற்றி கவலை இல்லை.
நல்ல ஆயன் நானே. தந்தை என்னை அறிந்திருக்கிறார்; நானும் தந்தையை அறிந்திருக்கிறேன். அதுபோல, நானும் என் ஆடுகளை அறிந்திருக்கிறேன்; என் ஆடுகளும் என்னை அறிந்திருக்கின்றன. அவைகளுக்காக எனது உயிரைக் கொடுக்கிறேன்.
பிறஇனத்தார்
இக்கொட்டிலைச் சேரா வேறு ஆடுகளும் எனக்கு உள்ளன. நான் அவற்றையும் நடத்திச் செல்லவேண்டும். அவையும் எனது குரலுக்குச் செவி சாய்க்கும். அப்போது ஒரே மந்தையும் ஒரே ஆயரும் என்னும் நிலை ஏற்படும்.
என் உயிரைக் கொடுக்கிறேன்
தந்தை என்மீது அன்பு செலுத்துகிறார். ஏனெனில், நான் என் உயிரைக் கொடுக்கிறேன்; அதை மீண்டும் பெற்றுக்கொள்ளவே கொடுக்கிறேன். என் உயிரை என்னிடமிருந்து யாரும் பறித்துக்கொள்வதில்லை. நானாகவே அதைக் கொடுக்கிறேன். உயிரைக் கொடுக்கவும் எனக்கு அதிகாரம் உண்டு; அதை மீண்டும் பெற்றுக்கொள்ளவும் அதிகாரம் உண்டு. என் தந்தையின் கட்டளைப்படியே நான் இப்படிச் செய்கிறேன்.’
யூதரிடையே பிளவு
இவ்வாறு இயேசு சொன்னதால், யூதரிடையே மீண்டும் பிளவு ஏற்பட்டது. அவர்களுள் பலர், ’அவனுக்குப் பேய்பிடித்துவிட்டது; பித்துப்பிடித்து அலைகிறான்; ஏன் அவன் பேச்சைக் கேட்கிறீர்கள்?’ என்று பேசிக் கொண்டனர்.
ஆனால் மற்றவர்கள், ’பேய் பிடித்தவனுடைய பேச்சு இப்படியா இருக்கும்? பார்வை-அற்றோருக்கு, பேயால், பார்வை அளிக்க இயலுமா?’ என்று கேட்டார்கள்.
15. ஏன் கல்லெறியப் பார்க்கிறீர்கள்?
எருசலேமில் கோவில்-அர்ப்பண விழா நடந்துகொண்டிருந்தது. அப்போது குளிர்காலம். கோவிலின் சாலமோன் மண்டபத்தில், இயேசு நடந்து கொண்டிருந்தார்.
நீர் மெசியாவா?
யூதர்கள் அவரைச் சூழ்ந்துகொண்டு, ’இன்னும் எவ்வளவு காலம் நாங்கள் காத்திருக்க வேண்டும்? நீர் மெசியாவானால் அதை எங்களிடம் வெளிப்படையாகச் சொல்லிவிடும்’ என்று கேட்டார்கள்.
இயேசு மறுமொழியாக, ’நான் உங்களிடம் சொன்னேன்; நீங்கள்தான் நம்பவில்லை. என் தந்தையின் பெயரால் நான் செய்யும் செயல்களே, எனக்குச் சான்றாக அமைகின்றன. ஆனால், நீங்கள் நம்பாமல் இருக்கிறீர்கள். ஏனெனில், நீங்கள் என் மந்தையை சேர்ந்தவர்கள் அல்ல.
என் ஆடுகள், எனது குரலுக்குச் செவிசாய்க்கின்றன. எனக்கும் அவற்றைத் தெரியும். அவையும் என்னைப் பின்தொடர்கின்றன. நான் அவற்றிற்கு நிலைவாழ்வை அளிக்கிறேன். அவை என்றுமே அழியா. அவற்றை எனது கையிலிருந்து யாரும் பறித்துக் கொள்ளமாட்டார்.
அவற்றை எனக்கு அளித்த என் தந்தை அனைவரையும்விடப் பெரியவர். அவற்றை, என் தந்தையின் கையிலிருந்து யாரும் பறித்துக்கொள்ள இயலாது. நானும் தந்தையும் ஒன்றாய் இருக்கிறோம்’ என்றார்.
அவர்மேல் எறிய யூதர்கள் மீண்டும் கற்களை எடுத்தனர்.
எச்செயலுக்காக என்மேல் கல்லெறியப் பார்க்கிறீர்கள்?’
இயேசு அவர்களைப் பார்த்து, ’தந்தையின் சொற்படி பல நற்செயல்களை உங்கள்முன் செய்துகாட்டியிருக்கிறேன். அவற்றுள் எச்செயலுக்காக என்மேல் கல்லெறியப் பார்க்கிறீர்கள்?’ என்று கேட்டார்.
யூதர்கள் மறுமொழியாக, ’நற்செயல்களுக்காக அல்ல, இறைவனைப் பழித்துரைத்ததற்காகவே உன்மேல் கல்லெறிகிறோம். ஏனெனில், மனிதனாகிய நீ உன்னையே கடவுளாக்கிக் கொள்கிறாய்’ என்றார்கள்.
என் செயல்களே எனக்குச் சான்று
இயேசு அவர்களைப் பார்த்து, ’″நீங்கள் தெய்வங்கள் என நான் கூறினேன்″ என்று உங்கள் மறைநூலில் எழுதியுள்ளது அல்லவா? கடவுளுடைய வார்த்தையைப் பெற்றுக்கொண்டவர்களே தெய்வங்கள் என்று சொல்லப்படுகிறார்கள். மறைநூல் வாக்கு என்றும் அழியாது.
அப்படியானால், தந்தையால் அர்ப்பணிக்கப்பட்டு, அவரால் உலகுக்கு அனுப்பப்பட்ட நான், என்னை ″இறை மகன்″ என்று சொல்லிக்கொண்டதற்காக, ’இறைவனைப் பழித்துரைக்கிறாய்’ என நீங்கள் எப்படிச் சொல்லலாம்?
நான் என் தந்தைக்குரிய செயல்களைச் செய்யவில்லை என்றால், நீங்கள் என்னை நம்பவேண்டாம். ஆனால், நான் அவற்றைச் செய்தால், என்னை நம்பாவிடினும், என் செயல்களையாவது நம்புங்கள்; அதன்மூலம், தந்தை என்னுள்ளும், நான் அவருள்ளும் இருப்பதை அறிந்துணர்வீர்கள்’ என்றார்.
அவர்கள் இதைக் கேட்டு, அவரை மீண்டும் பிடிக்க முயன்றார்கள். ஆனால், அவர்கள் கையில் அகப்படாமல், அவர் அங்கிருந்து சென்றார்.