1. கடைசியானோர் முதன்மையாவர்
யோர்தானுக்கு அப்பால் இயேசுவின் நற்செய்தி பெரேயா கிபி 32
யோர்தானுக்கு அப்பால், யோவான் முதலில் திருமுழுக்குக் கொடுத்துவந்த இடத்திற்கு, இயேசு மீண்டும் சென்று, அங்குத் தங்கினார். பலர் அவரிடம் வந்தனர். ’யோவான் அரும்-அடையாளம் எதையும் செய்யவில்லை; ஆனால் அவர் இவரைப்பற்றிச் சொன்னதெல்லாம் உண்மையாயிற்று’ என, அவர்கள், பேசிக்கொண்டனர். அங்கே, பலர் அவரிடம் நம்பிக்கை கொண்டனர்.
கடைசியானோர் முதன்மையாவர்; முதன்மையானோர் கடைசியாவர்
இயேசு நகர்கள், ஊர்கள் தோறும் கற்பித்துக்கொண்டே எருசலேம் நோக்கிப் பயணம் செய்தார். அப்பொழுது ஒருவர் அவரிடம், ’ஆண்டவரே, மீட்புப் பெறுவோர் சிலர்-மட்டும்தானா?’ என்று கேட்டார்.
அதற்கு அவர் அவர்களிடம் கூறியது: ’இடுக்கமான வாயில் வழியாக நுழைய வருந்தி-முயலுங்கள். ஏனெனில், பலர் உள்ளேசெல்ல முயன்றும், இயலாமற்போகும்.’
’வீட்டு உரிமையாளரே, எழுந்து கதவைத் திறந்துவிடும்’ என்று கேட்பீர்கள். அவரோ, நீங்கள் எங்கிருந்து வந்தவர்கள் என எனக்குத் தெரியாது’ எனப் பதில் கூறுவார். அப்பொழுது, ’நாங்கள் உம்மோடு உணவு உண்டோம், குடித்தோம். நீர் எங்கள் வீதிகளில் கற்பித்தீரே’ என்று நீங்கள் சொல்வீர்கள். ஆனாலும் அவர், ’நீங்கள் எவ்விடத்தாரோ எனக்குத் தெரியாது. தீங்கு செய்வோரே, அனைவரும் என்னைவிட்டு அகன்று போங்கள்’ என உங்களிடம் சொல்வார்.
ஆபிரகாமும், ஈசாக்கும், யாக்கோபும், இறைவாக்கினர் யாவரும் இறையாட்சிக்கு உட்பட்டிருப்பதையும், நீங்கள் புறம்பே தள்ளப்பட்டிருப்பதையும் பார்க்கும்போது அழுது அங்கலாய்ப்பீர்கள்.
இறையாட்சியின்போது கிழக்கிலும் மேற்கிலும் வடக்கிலும் தெற்கிலுமிருந்து மக்கள் வந்து பந்தியில் அமர்வார்கள். ஆம், கடைசியானோர் முதன்மையாவர்; முதன்மையானோர் கடைசியாவர்.’
எருசலேமுக்கு வெளியே நான் மடிவதில்லை
அந்நேரத்தில் பரிசேயர் சிலர் இயேசுவிடம் வந்து, ’இங்கிருந்து போய்விடும்; ஏனெனில் ஏரோது உம்மைக் கொல்லவேண்டும் என்றிருக்கிறான்’ என்று கூறினார்.
அதற்கு அவர் கூறியது: ’இன்றும் நாளையும் பேய்களை ஓட்டுவேன்; பிணிகளைப் போக்குவேன்; மூன்றாம் நாளில், என் பணி நிறைவுபெறும் என, நீங்கள் போய் அந்த நரியிடம் கூறுங்கள். இன்றும், நாளையும், அதற்கடுத்த நாளும் நான் தொடர்ந்து சென்றாகவேண்டும். ஏனெனில், இறைவாக்கினர் ஒருவர் எருசலேமுக்கு வெளியே மடிவது என்பதை நினைத்துக்கூடப் பார்க்க முடியாதே!
’எருசலேமே, எருசலேமே, இறைவாக்கினரைக் கொல்லும் நகரே! உன்னிடம் அனுப்பப்பட்டோரைக் கல்லால் எறிகிறாயே! கோழி தன் குஞ்சுகளைத் தன் இறக்கைக்குள் கூட்டிச் சேர்ப்பதுபோல, நானும் உன் மக்களை அரவணைத்துக்கொள்ள எத்தனையோ முறை விரும்பினேன்; உனக்கு விருப்பமில்லையே!
இதோ, உங்கள் இறை இல்லம் கைவிடப்படும். ’ஆண்டவரின் பெயரால் வருபவர் ஆசி பெற்றவர்’ என நீங்கள் கூறும்-நாள் வரும்வரை என்னைக் காணமாட்டீர்கள் என நான் உங்களுக்குச் சொல்கிறேன்.’
2. வெளிவேடப் பரிசேயர்களுக்கு இயேசுவின் அறிவுரை
ஒய்வுநாளில் நன்மை செய்யுங்கள்
ஓய்வுநாள் ஒன்றில், பரிசேயர்-தலைவர் ஒருவருடைய வீட்டிற்கு இயேசு உணவருந்தச் சென்றிருந்தார். அங்கிருந்தோர் அவரைக் கூர்ந்து கவனித்தனர். அங்கே நீர்க்கோவை நோயுள்ள ஒருவர் அவர்முன் இருந்தார்.
இயேசு திருச்சட்ட அறிஞரையும் பரிசேயரையும் பார்த்து, ’ஓய்வுநாளில் குணப்படுத்துவது முறையா, இல்லையா?’ என்று கேட்டார். அவர்கள் அமைதியாய் இருந்தனர். இயேசு அவரது கையைப் பிடித்து அவரை நலமாக்கி அனுப்பிவிட்டார்.
பிறகு அவர்களை நோக்கி, ’தம் பிள்ளையோ, மாடோ கிணற்றில் விழுந்தால், ஓய்வுநாள் என்றாலும், உங்களுள் ஒருவர் அதனை உடனே தூக்கிவிடமாட்டாரா?’ என்று கேட்டார். அதற்குப் பதில்சொல்ல அவர்களால் இயலவில்லை.
கடைசி இடத்தில் அமருங்கள்
விருந்தினர்கள், பந்தியில் முதன்மையான இடங்களைத் தேர்ந்துகொண்டதை நோக்கிய இயேசு, அவர்களுக்குக் கூறிய அறிவுரை:
தற்பெருமையால் வெட்கம் அடைவீர்கள்
’ஒருவர் உங்களைத் திருமண-விருந்துக்கு அழைத்திருந்தால், பந்தியில் முதன்மையான இடத்தில் அமராதீர்கள்.
ஒருவேளை, உங்களைவிட மதிப்பிற்குரிய வேறுஒருவரையும் அவர் அழைத்திருக்கலாம். உங்களையும் அவரையும் அழைத்தவர், உங்களிடத்தில் வந்து, ’இவருக்கு இடத்தை விட்டுக்கொடுங்கள்’ என்பார். அப்பொழுது, நீங்கள் வெட்கத்தோடு கடைசி-இடத்திற்குப் போக வேண்டியிருக்கும்.
தாழ்மையால் பெருமை அடைவீர்கள்
நீங்கள் அழைக்கப்பட்டிருக்கும்போது, கடைசி-இடத்தில் போய் அமருங்கள். அப்பொழுது, உங்களை அழைத்தவர், உங்களிடம் வந்து, ’நண்பரே, முதல் இடத்திற்கு வாரும்’ எனச் சொல்லும்பொழுது, உங்களுடன் பந்தியில் அமர்ந்திருப்பவர்கள் யாவருக்கும் முன்பாக நீங்கள் பெருமை அடைவீர்கள்.
தம்மைத்தாமே உயர்த்துவோர் யாவரும் தாழ்த்தப்பெறுவர்; தம்மைத்தாமே தாழ்த்துவோர் உயர்த்தப்பெறுவர்.’
உறவினர்களுக்கு அல்ல, ஊனமுற்றோருக்கே விருந்தளியுங்கள்
பிறகு, தம்மை விருந்துக்கு அழைத்தவரிடம் இயேசு கூறியது: ’நீர் பகல்-உணவோ, இரவு-உணவோ அளிக்கும்போது, உம் நண்பர்களையோ, சகோதரர்-சகோதரிகளையோ, உறவினர்களையோ, செல்வம்படைத்த அண்டை-வீட்டாரையோ அழைக்க வேண்டாம். அவ்வாறு அழைத்தால், அவர்களும் உம்மைத் திரும்ப அழைக்கலாம். அப்பொழுது, அதுவே உமக்குக் கைம்மாறு ஆகிவிடும்.
மாறாக, நீர் விருந்து அளிக்கும்போது, ஏழைகளையும், உடல்-ஊனமுற்றோரையும், கால்-ஊனமுற்றோரையும், பார்வையற்றோரையும் அழையும். அப்போது, நீர் பேறுபெற்றவர் ஆவீர்.
ஏனென்றால், உமக்குக் கைம்மாறு-செய்ய அவர்களிடம் ஒன்றுமில்லை. நேர்மையாளர்கள் உயிர்த்தெழும்போது உமக்குக் கைம்மாறு கிடைக்கும்’.
இயேசுவோடு பந்தியில்-அமர்ந்தவர்களுள் ஒருவர் இவற்றைக் கேட்டு, அவரிடம், ’இறையாட்சி-விருந்தில் பங்குபெறுவோர் பேறுபெற்றோர்’ என்றார். இயேசு அவரிடம் கூறியது:
பெரிய விருந்து – கடவுளின் புதிய உடன்படிக்கை உவமை
’ஒருவர் பெரிய விருந்து ஒன்றை ஏற்பாடுசெய்து, பலரை அழைத்தார்.
விருந்து-நேரம் வரவே, அவர் அழைப்புப் பெற்றவர்களிடம் தம் பணியாளரை அனுப்பி, ’வாருங்கள், எல்லாம் ஏற்கெனவே ஏற்பாடு செய்தாகிவிட்டது’ என்று சொன்னார். (இயேசுவின் புதிய உடன்படிக்கையே, யூதர்களுக்குக் கடவுள் ஏற்பாடுசெய்த பெரிய விருந்து)
இயேசுவின் புதிய உடன்படிக்கைக்கு யூதர்களின் சாக்குப்போக்கு
அவர்கள் எல்லாரும் ஒருவர்பின் ஒருவராய்ச் சாக்குப்போக்குச் சொல்லத் தொடங்கினர். முதலில் ஒருவர், ’வயல் ஒன்று வாங்கியிருக்கிறேன்; அதை நான் கட்டாயம் போய்ப் பார்க்கவேண்டும். என்னை மன்னிக்க வேண்டுகிறேன்’ என்றார்.
’நான் ஐந்து ஏர்-மாடுகள் வாங்கியிருக்கிறேன்; அவற்றை ஓட்டிப்பார்க்கப் போகிறேன். என்னை மன்னிக்க வேண்டுகிறேன்’ என்றார் வேறொருவர்.
’எனக்கு இப்போதுதான் திருமணம் ஆயிற்று; ஆகையால் என்னால் வர முடியாது’ என்றார் மற்றொருவர்.
(யூதர்கள் கடவுளின் அழைப்பை புறக்கணித்தார்கள். இயேசுவிடம் குறைகளைத் தேடி, இவன் ஒய்வுநாளைக் கைக்கொள்ளாதவன், பாவிகளுடன் உண்பவன், கை கழுவாதவன் என்று குறைகூறி, இயேசுவின் புதிய உடன்படிக்கையை குருக்களும், பரிசேயரும், மறைநூல் அறிஞரும் புறக்கணித்தனர்.)
வரிதண்டுவோரும் பாவிகளும் பிற இனத்தாரும் ஏற்கப்பட்டனர்
வீட்டு உரிமையாளர் சினமுற்றுத் தம் பணியாளரிடம், ’நீர் நகரின் வீதிகளுக்கும் சந்துகளுக்கும் விரைந்துசென்று, ஏழையர், உடல் ஊனமுற்றோர், பார்வையற்றோர், கால் ஊனமுற்றோர் ஆகியோரை இங்கே கூட்டிவாரும்’, என்றார். (இயேசு வரிதண்டுவோரையும் பாவிகளையும் அழைத்தார்)
பின்பு பணியாளர், ’தலைவரே, நீர் பணித்தபடி செய்தாயிற்று; இன்னும் இடமிருக்கிறது’ என்றார். தலைவர் தம் பணியாளரை நோக்கி, ’நீர் வழியோரங்களிலும் நடைபாதைகளிலும் போய், எனது வீடு நிரம்பும்அளவுக்கு மக்களை வற்புறுத்திக் கூட்டிவாரும். (பிற இனத்தவருக்கும் புதிய உடன்படிக்கையை ஏற்றுக்கொண்டனர்)
அழைக்கப்பெற்றவர்களுள் எவரும் என்னுடைய விருந்தைச் சுவைக்கப்போவதில்லை என உமக்குச் சொல்கிறேன்’ என்றார்.’ (அழைக்கப்பட்ட யூதர்கள் இயேசுவின் பாவமன்னிப்பை இழந்தார்கள்)
3. உடைமையை விட்டுவிடாதவர் என் சீடராய் இருக்க முடியாது
இயேசுவின் சீடராகத் தகுதி
பெருந்திரளான மக்கள் இயேசுவோடு சென்றுகொண்டிருந்தனர். அவர் திரும்பிப் பார்த்து, அவர்களிடம் கூறியது: ’என்னிடம் வருபவர், தம் தந்தை, தாய், மனைவி, பிள்ளைகள், சகோதரர் சகோதரிகள் ஆகியோரையும், ஏன்? தம் உயிரையுமே என்னைவிட மேலாகக் கருதினால், அவர் என் சீடராயிருக்க முடியாது. தம் சிலுவையைச் சுமக்காமல் என் பின் வருபவர், எனக்குச் சீடராய் இருக்கமுடியாது.
செலவை கணிக்காமல் கோபுரம் கட்டமுடியாது
’உங்களுள் யாராவது ஒருவர் கோபுரம் கட்ட விரும்பினால், முதலில், உட்கார்ந்து, அதைக் கட்டிமுடிக்க ஆகும் செலவைக் கணித்து, அதற்கான பொருள்-வசதி தம்மிடம் இருக்கிறதா எனப் பார்க்கமாட்டாரா? இல்லாவிட்டால், அதற்கு அடித்தளமிட்ட பிறகு, அவர் கட்டி முடிக்க இயலாமல் இருப்பதைப் பார்க்கும் யாவரும், ஏளனமாக, ’இம்மனிதன் கட்டத் தொடங்கினான்; ஆனால், முடிக்க இயலவில்லை’ என்பார்களே! (இயேசுவின் சீடர்கள் தன்னலத்தைத் துறக்கவேண்டும்)
பலத்தை அறியாமல் போர் தொடுக்க முடியாது
’வேறு ஓர் அரசரோடு போர்-தொடுக்கப்போகும் அரசர் ஒருவர், இருபதாயிரம் பேருடன் தமக்கு எதிராக வருபவரைப் பத்தாயிரம் பேரைக் கொண்டு எதிர்க்க முடியுமா என்று, முதலில் உட்கார்ந்து சிந்தித்துப் பார்க்கமாட்டாரா? எதிர்க்க முடியாதெனில், அவர் தொலையில் இருக்கும்போதே தூதரை அனுப்பி, அமைதிக்கான வழியைத் தேடமாட்டாரா?
அப்படியே, உங்களுள் தம் உடைமையையெல்லாம் விட்டுவிடாத எவரும் என் சீடராய் இருக்கமுடியாது.
உவர்ப்பற்ற உப்பு பயனற்றது
’உப்பு நல்லது; ஆனால், அது உவர்ப்பற்றுப் போனால், எதைக் கொண்டு அதை உவர்ப்புள்ளதாக்க முடியும்? அது நிலத்துக்கோ எருக்குழிக்கோ பயனற்றது. அது வெளியே கொட்டப்படும். கேட்கச் செவியுள்ளோர் கேட்கட்டும்.' (இயேசுவின் சீடர்கள் உலகுக்கு உப்பாகவும் ஒளியாகவும் இருக்கவேண்டும்)
4. நேர்மையாளர் அல்ல, பாவிகள் என்று அறிபவரே இறையாட்சி பெறுவர்
பாவிகளை வரவேற்று உணவருந்துவது ஏன்?
வரிதண்டுவோர், பாவிகள் யாவரும் இயேசு சொல்வதைக் கேட்க அவரிடம் நெருங்கிவந்தனர். பரிசேயரும், மறைநூல் அறிஞரும், ’இவர் பாவிகளை வரவேற்று அவர்களோடு உணவருந்துகிறாரே’ என்று முணுமுணுத்தனர். அப்போது அவர், அவர்களுக்கு இந்த உவமையைச் சொன்னார்:
காணாமற்போன ஆடு உவமை (ஒரு பாவியைத் தேடியே உலகில் வந்த இயேசு)
’உங்களுள் ஒருவரிடம் இருக்கும் நூறு ஆடுகளுள் ஒன்று காணாமற்போனால், அவர் தொண்ணூற்றொன்பது ஆடுகளையும் பாலை நிலத்தில் விட்டுவிட்டு, காணாமற்போனதைக் கண்டுபிடிக்கும்வரை தேடிச் செல்லமாட்டாரா?
கண்டுபிடித்ததும், அவர், அதை மகிழ்ச்சியோடு தம் தோள்மேல் போட்டுக்கொள்வார்; வீட்டுக்கு வந்து, நண்பர்களையும் அண்டை வீட்டாரையும் அழைத்து, ‘என்னோடு மகிழுங்கள்; ஏனெனில் காணாமற்போன என் ஆட்டைக் கண்டுபிடித்துவிட்டேன்’ என்பார்.
அதுபோலவே, மனம்மாறத் தேவையில்லாத் தொண்ணூற்றொன்பது நேர்மையாளர்களைக் குறித்து உண்டாகும் மகிழ்ச்சியை விட, மனம்மாறிய ஒரு பாவியைக் குறித்து விண்ணுலகில் மிகுதியான மகிழ்ச்சி உண்டாகும் என நான் உங்களுக்குச் சொல்கிறேன். (தம்மைப் பாவி என்று அறிந்து மனம்மாறுவோர் இறையாட்சி பெறுவர். தம்மை நேர்மையாளர் என்றும மனம் மாறத் தேவையில்லை என்றும் நம்புவோர் இயேசுவின் மீட்பை இழப்பர்)
காணாமற்போன திராக்மா உவமை (பாவிகளைத் தேடி உலகில் வந்த இயேசு)
'பெண் ஒருவரிடம் இருந்த பத்துத் திராக்மாக்களுள் ஒன்று காணாமற் போய்விட்டால், அவர் எண்ணெய் விளக்கை ஏற்றி, வீட்டைப் பெருக்கி, அதைக் கண்டுபிடிக்கும்வரை கவனமாகத் தேடுவதில்லையா?
கண்டுபிடித்ததும், அவர், தோழியரையும் அண்டை வீட்டாரையும் அழைத்து, ‘என்னோடு மகிழுங்கள், ஏனெனில், காணாமற்போன திராக்மாவைக் கண்டுபிடித்துவிட்டேன்’ என்பார்.
அவ்வாறே, மனம்-மாறிய ஒரு பாவியைக் குறித்துக் கடவுளின் தூதரிடையே மகிழ்ச்சி உண்டாகும் என உங்களுக்குச் சொல்கிறேன்.’ (பாவிகளில் ஒருவர்கூட கெட்டுப்போக்க்கூடாது என்பதே கடவுளின் விருப்பம்)
காணாமற்போன மகன் உவமை (இயேசுவை ஏற்றுக்கொண்ட வரிதண்டுவோரும் பாவிகளும்)
மேலும் இயேசு கூறியது: ’ஒருவருக்கு இரண்டு புதல்வர்கள் இருந்தார்கள். (கடவுளே தந்தை. இஸ்ரயேலில் வாழ்ந்த பரிசேயர் மூத்த மகன், பாவிகள் இளைய மகன்)
அவர்களுள் இளையவர் தந்தையை நோக்கி, ’அப்பா, சொத்தில் எனக்குரிய பங்கைத் தாரும்’ என்றார். அவர் சொத்தை அவர்களுக்குப் பகிர்ந்து அளித்தார். (பாவிகள் தந்தையின் சொத்தாகிய திருச்சட்டத்தை கைக்கொள்ள விரும்பவில்லை)
சில நாள்களுக்குள் இளைய மகன் எல்லாவற்றையும் திரட்டிக்கொண்டு, தொலை நாட்டிற்கு நெடும் பயணம் மேற்கொண்டார்; அங்குத் தாறுமாறாக வாழ்ந்து தம் சொத்தையும் பாழாக்கினார். அனைத்தையும் அவர் செலவழித்தார். (இஸ்ரயேலில் வாழ்ந்த பாவிகள் மனம்போனபோக்கில் வாழ்ந்து, தந்தையாகிய கடவுளின் சொத்தாகிய திருச்சட்டத்தைப் பாழாக்கினார்கள்)
பின்பு அந்த நாடு முழுவதும் கொடிய பஞ்சம் ஏற்பட்டது. அப்பொழுது அவர் வறுமையில் வாடினார்; (இஸ்ரயேல் தேசம் உரோமரால் கைப்பற்றப்பட்டது, பாவிகள் பணத்திற்காக ஏங்கினார்கள்)
எனவே அந்நாட்டுக் குடிமக்களுள் ஒருவரிடம் அண்டிப் பிழைக்கச் சென்றார். அவர் அவரைப் பன்றி மேய்க்கத் தம் வயல்களுக்கு அனுப்பினார். (பாவிகள் பணஆசையால் எதிரிகளாகிய உரோமரிடம் அண்டிப் பிழைக்கச் சென்றார்கள். உரோமர் அவர்களை யூதரிடம் வரிவசூல் செய்யும்படி வரிதண்டுவோராக அனுப்பினார்கள். எதிரிகளுக்காக தம் மக்களிடம் வரிவசூலித்தார்கள். இதுவே கேவலமான பன்றிமேய்க்கும் தொழில்.)
அவர் பன்றிகள் தின்னும் நெற்றுகளால் தம் வயிற்றை நிரப்ப விரும்பினார். ஆனால் அதைக்கூட அவருக்குக் கொடுப்பார் இல்லை. (வரிதண்டுவோர் தம் சொந்த மக்களிடம் கூடுதலாக வரிவசூலித்து செல்வர்களானார்கள். பன்றியின் உணவாகிய இலஞ்சப் பணத்துக்கு ஏங்கினார்கள்)
அவர் அறிவு தெளிந்தவராய், ‘என் தந்தையின் கூலியாள்களுக்குத் தேவைக்கு மிகுதியான உணவு இருக்க, நான் இங்குப் பசியால் சாகிறேனே! ( இக்காலத்தில் இயேசுவின் சீடர்கள் நற்செய்தியை அறிவித்தார்கள். வரிதண்டுவோர் அறிவு தெளிந்து, தாம் பாவத்தில் செத்துக்கொண்டிருப்தை அறிந்தார்கள்.)
நான் புறப்பட்டு என் தந்தையிடம் போய், ’அப்பா, கடவுளுக்கும் உமக்கும் எதிராக நான் பாவம் செய்தேன்; இனிமேல் நான் உம்முடைய மகன் எனப்படத் தகுதியற்றவன்; உம்முடைய கூலியாள்களுள் ஒருவனாக என்னை வைத்துக் கொள்ளும் என்பேன்’ என்று சொல்லிக்கொண்டார்.’
உடனே அவர் புறப்பட்டுத் தம் தந்தையிடம் வந்தார். தொலையில் வந்துகொண்டிருந்தபோதே அந்தத் தந்தை அவரைக் கண்டு, பரிவு கொண்டு, ஓடிப்போய் அவரைக் கட்டித் தழுவி முத்தமிட்டார். (தந்தையாகிய கடவுள், இயேசு என்ற மனிதராக விண்ணகத்திலிருந்து இறங்கிவந்து, பாவிகளாகிய வரிதண்டுவோரை தம் புதிய உடன்படிக்கையில் ஏற்றுக்கொண்டார்)
மகனோ அவரிடம், ’அப்பா, கடவுளுக்கும் உமக்கும் எதிராக நான் பாவம் செய்தேன்; இனிமேல் நான் உம்முடைய மகன் எனப்படத் தகுதியற்றவன்’ என்றார். (வரிதண்டுவோர் நாசரேத் இயேசுவை மெசியாவாகவும் கடவுளாகவும் ஏற்றுக்கொண்டார்கள், தங்கள் பாவங்களை அவரிடம் அறிக்கையிட்டார்கள்)
வரிதண்டுவோருடன் இயேசுவின் இறையாட்சி விருந்து
தந்தை தம் பணியாளரை நோக்கி, ’முதல்தரமான ஆடையைக் கொண்டுவந்து இவனுக்கு உடுத்துங்கள்; இவனுடைய கைக்கு மோதிரமும், காலுக்கு மிதியடியும் அணிவியுங்கள்; கொழுத்த கன்றைக் கொண்டு வந்து அடியுங்கள்; நாம் மகிழ்ந்து விருந்து கொண்டாடுவோம். ஏனெனில் என் மகன் இவன் இறந்துபோயிருந்தான்; மீண்டும் உயிர் பெற்று வந்துள்ளான். காணாமற்போயிருந்தான்; மீண்டும் கிடைத்துள்ளான்’ என்றார். அவர்கள் மகிழ்ந்து விருந்து கொண்டாடத் தொடங்கினார்கள். (கொழுத்தக் கன்றை அடித்த விருந்து என்பது இயேசுவின் புதிய உடன்படிக்கையின் பாவமன்னிப்பு. இயேசு வரிதண்டுவோரின் பாவங்களை தம்மீது ஏற்றுக்கொண்டார்.)
இயேசுவிடம் குறைகளைத் தேடி, தம்மை உயர்த்தியப் பரிசேயர்
’அப்போது மூத்த மகன் வயலில் இருந்தார். அவர் திரும்பி வீட்டை நெருங்கி வந்துகொண்டிருந்தபோது, ஆடல் பாடல்களைக் கேட்டு, ஊழியர்களுள் ஒருவரை வரவழைத்து, ’இதெல்லாம் என்ன?’ என்று வினவினார். ( மூத்த மகனாகிய பரிசேயர்கள் தங்கள் கடவுளும் இறையாட்சியும் அருகில் இருப்பதை அறியவில்லை.)
அதற்கு ஊழியர் அவரிடம், ’உம் தம்பி வந்திருக்கிறார். அவர் தம்மிடம் நலமாகத் திரும்பி வந்திருப்பதால் உம் தந்தை கொழுத்த கன்றை அடித்திருக்கிறார்’ என்றார். அவர் சினமுற்று உள்ளே போக விருப்பம் இல்லாதிருந்தார். (இயேசுவையும் அவருடைய புதிய உடன்படிக்கையையும் பரிசேயர் அறிந்துகொள்ளவோ கடைப்பிடிக்கவோ விரும்பவில்லை)
தற்பெருமையால் இறையாட்சியை இழந்த பரிசேயர்
உடனே அவருடைய தந்தை வெளியே வந்து, அவரை உள்ளே வருமாறு கெஞ்சிக் கேட்டார். (இயேசு, பரிசேயரையும் மனம்மாறி தம் புதிய உடன்படிக்கையை ஏற்றுக்கொள்ள அழைத்தார்)
அதற்கு அவர் தந்தையிடம், ’பாரும், இத்தனை ஆண்டுகளாக நான் அடிமைபோன்று உமக்கு வேலை செய்துவருகிறேன். உம் கட்டளைகளை ஒருபோதும் மீறியதில்லை. ஆயினும், என் நண்பரோடு நான் மகிழ்ந்துகொண்டாட ஓர் ஆட்டுக்குட்டியைக்கூட என்றுமே நீர் தந்ததில்லை. ஆனால் விலைமகளிரோடு சேர்ந்து உம் சொத்துகளையெல்லாம் அழித்துவிட்ட இந்த உம் மகன் திரும்பி வந்தவுடனே, இவனுக்காகக் கொழுத்த கன்றை அடித்திருக்கிறீரே!’ என்றார். (பரிசேயர் கடவுளின் திருச்சட்டங்களையும், பழைய உடன்படிக்கையையும் தாங்கள் மட்டுமே கைக்கொள்வதாக நம்பினார்கள். பாவிகளுடன் உண்பதைக் குறைகூறி தங்கள் தந்தையாகிய இயேசுவையும் கண்டித்தார்கள். வெளிவேடம் என்ற பாவத்தில் தாங்கள் செத்திருப்பதை அறியவில்லை. )
அதற்குத் தந்தை, ’மகனே, நீ எப்போதும் என்னுடன் இருக்கிறாய்; என்னுடையதெல்லாம் உன்னுடையதே. (பரிசேயர் திருக்கோவிலில் தவறாமல் வேண்டுதல் செய்தார்கள். திருச்சட்டங்களைக் கைக்கொள்வதுபோல் நடித்தார்கள் (மத்தேயு அதிகாரம் 23). தங்களுக்கே நிலைவாழ்வு என்று நம்பினார்கள்)
இப்போது நாம் மகிழ்ந்துகொண்டாடி இன்புற வேண்டும். ஏனெனில் உன் தம்பி இவன் இறந்து போயிருந்தான்; மீண்டும் உயிர்பெற்றுள்ளான். காணாமற்போயிருந்தான்; மீண்டும் கிடைத்துள்ளான்’ என்றார்.’ (பாவத்தில் இறந்துபோயிருந்த வரிதண்டுவோர், இயேசுவின் புதிய உடன்படிக்கையின் மன்னிப்பைப் பெற்று இறையாட்சியில் இணைந்தார்கள். தம்மை நேர்மையாளர் என்று எண்ணிய வெளிவேடக்காரப் பரிசேயர், தாம் இறந்துகொண்டிருப்பதை அறியவில்லை. எனவே, இயேசுவின் மீட்பை இழந்தார்கள்)
5. ஏழைகளுக்குத் தர்மம் செய்து விண்ணுலகில் நண்பர்களைப் பெறுவீர்
இயேசு தம் சீடருக்குக் கூறியது: ’தலைவர் ஒருவருக்கு வீட்டுப் பொறுப்பாளர் ஒருவர் இருந்தார். (உலகச் செல்வமாகிய நிலம், தானியம், பணம், அறிவு, உடல் நலம் அனைத்தும் தலைவராகிய கடவுளுக்கே உரியது. உலகில் சில மனிதருக்கு தம் சொத்துக்களை கடவுள் மிகுதியாக அளிக்கிறார். அவர்களே பொறுப்பாளர்கள்.
அவர் தம் தலைவரின் உடைமைகளைப் பாழாக்கியதாக, அவர்மீது பழி சுமத்தப்பட்டது. (பொறுப்பாளராகிய செல்வர், கடவுள் தம்மிடம் ஒப்படைத்தச் செல்வங்களை தமக்குரிய செல்வமாக எண்ணி, தன்னலத்துடன் வாழ்ந்தார். )
தலைவர் அவரைக் கூப்பிட்டு, ’உம்மைப்பற்றி நான் கேள்விப்படுவது என்ன? உம் பொறுப்பிலுள்ள கணக்கை ஒப்படையும். நீர் இனி வீட்டுப் பொறுப்பாளராய் இருக்க முடியாது’ என்று அவரிடம் கூறினார்.
(கடவுள் பொறுப்பாளருக்கு மரணத்தை அறிவித்தார். அதற்குமுன்னர்,அவரிடம் ஒப்படைக்கப்பட்ட செல்வங்களுக்குக் கணக்கு ஒப்பிவிக்கும்படி ஆணையிட்டார். அவருக்கு ஒருநாள் தவணை கொடுக்கப்பட்டது)
அந்த வீட்டுப் பொறுப்பாளர், ’நான் என்ன செய்வேன்? வீட்டுப் பொறுப்பிலிருந்து என் தலைவர் என்னை நீக்கி விடப்போகிறாரே! தன்னலத்துடன் வாழ்ந்தபடியால், மரணத்திற்குப்பின் செல்வருக்கு நிலைவாழ்வில் இடமில்லை.
மண்வெட்டவோ என்னால் இயலாது; இரந்து உண்ணவும் வெட்கமாய் இருக்கிறது. விண்ணுலகில் எவரும் உழைத்துப் பிழைக்க இயலாது. பிச்சைபோடுவதற்கு விண்ணுலகில் அவருக்கு நண்பர்களும் இல்லை.
வீட்டுப் பொறுப்பிலிருந்து என்னை நீக்கிவிடும்போது பிறர் என்னைத் தங்கள் வீடுகளில் ஏற்றுக்கொள்ளும்படி நான் என்ன செய்யவேண்டும் என எனக்குத் தெரியும்’ என்று அவர் தமக்குள்ளே சொல்லிக்கொண்டார். (கடவுளின் சொத்துக்கள் அவருடைய பொறுப்பில் இருந்தபடியால், அதைக் கொடுத்து, நிலைவாழ்வில் தமக்கு உதவிசெய்யும் நண்பர்களைப் பெறுவதற்கு, அன்று இரவே திட்டம் தீட்டினார்.)
பின்பு அவர் தம் தலைவரிடம் கடன்பட்டவர்களை ஒவ்வொருவராக வரவழைத்தார். முதலாவது வந்தவரிடம், ’நீர் என் தலைவரிடம் எவ்வளவு கடன்பட்டிருக்கிறீர்?’ என்று கேட்டார். அதற்கு அவர், ’நூறு குடம் எண்ணெய்’ என்றார். வீட்டுப் பொறுப்பாளர் அவரிடம், ’இதோ உம் கடன் சீட்டு; உட்கார்ந்து ஐம்பது என்று உடனே எழுதும்’ என்றார். பின்பு அடுத்தவரிடம், 'நீர் எவ்வளவு கடன்பட்டிருக்கிறீர்?’ என்று கேட்டார். அதற்கு அவர், 'நூறு மூடை கோதுமை’ என்றார். அவர், 'இதோ, உம் கடன் சீட்டு; எண்பது என்று எழுதும்’ என்றார்.
(பொறுப்பாளர், தம் கடைசிநாளில், தம் அருகிலிருந்த ஏழைகளுக்கும், ஊனமுற்றவர்களுக்கும் உதவிசெய்து அவர்கள்படும் துன்பங்களை குறைத்தார்..)
(அவரது உதவியைப் பெற்ற ஏழைகளும் நோயுற்றவர்களும், ஊனமுற்றவர்களும் அவருடைய நண்பர்களானார்கள். தீர்ப்புநாளில், அவர் செய்த உதவியை கடவுளுக்கு அறிவித்தார்கள்.)
நேர்மையற்ற அந்த வீட்டுப் பொறுப்பாளர் முன்மதியோடு செயல்பட்டதால், தலைவர் அவரைப் பாராட்டினார். (இறுதிநாளில் மனம்மாறி, நல்ல நண்பர்களைப் பெற்ற பொறுப்பாளரைக் கடவுள் பாராட்டி, நிலைவாழ்வில் ஏற்றுக்கொண்டார்.)
ஏனெனில், ஒளியின் மக்களைவிட இவ்வுலகின் மக்கள் தங்கள் தலைமுறையினரிடத்தில் மிக்க முன்மதியுள்ளவர்களாய் நடந்துகொள்ளுகிறார்கள். (ஒளியின் மக்கள் இந்த முன்மதியைப் பெறவேண்டும் என்று இயேசு அறிவித்தார்.)
’ஆகையால், நான் உங்களுக்குச் சொல்கிறேன்: நேர்மையற்ற செல்வத்தைக்கொண்டு உங்களுக்கு நண்பர்களைத் தேடிக்கொள்ளுங்கள். அது தீரும்பொழுது அவர்கள் உங்களை நிலையான உறைவிடங்களில் ஏற்றுக் கொள்வார்கள்.
(இதுவே நமக்கு இயேசு கூறும் முன்மதி. உலகச் செல்வம் நமக்குரியதல்ல. இறைவனுக்குரியது. சிறிதுகாலம் நம்மிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. அது மரணத்தோடு நம்மைவிட்டு நீங்கிவிடும். எனவே அது நேர்மையற்ற செல்வம் என்று இயேசு அறிவித்தார். ஆனால், அச்செல்வத்தால் ஏழைகளுக்கு உதவிசெய்யும்போது, அவர்கள் நம் நண்பராக ஆகிறார்கள். தீர்ப்புநாளில் அவர்கள் நமக்குச் சாட்சி சொல்வர்கள்.)
தன்னலமின்றி உலகில் வாழ்வோரே நிலைவாழ்வில் ஏற்கப்படுவார்கள்
மிகச் சிறியவற்றில் நம்பத் தகுந்தவர் பெரியவற்றிலும் நம்பத் தகுந்தவராய் இருப்பார். மிகச் சிறியவற்றில் நேர்மையற்றவர் பெரியவற்றிலும் நேர்மையற்றவராய் இருப்பார்.
நேர்மையற்ற செல்வத்தைக் கையாளுவதில் நீங்கள் நம்பத்தகாதவராய் இருந்தால் யார் உங்களை நம்பி உண்மைச் செல்வத்தை ஒப்படைப்பார்?
பிறருக்கு உரியவற்றைக் கையாளுவதில் நீங்கள் நம்பத்தகாதவர்களாய்ப் போனால் உங்களுக்கு உரியவற்றை உங்களுக்குக் கொடுப்பவர் யார்?
எவரும் கடவுளுக்கும் செல்வத்துக்கும் பணிவிடை செய்யமுடியாது
’எந்த வீட்டு வேலையாளும் இரு தலைவர்களுக்குப் பணிவிடை செய்யமுடியாது; ஏனெனில், ஒருவரை வெறுத்து மற்றவரிடம் அவர் அன்பு கொள்வார்; அல்லது ஒருவரைச் சார்ந்து கொண்டு மற்றவரைப் புறக்கணிப்பார். நீங்கள் கடவுளுக்கும் செல்வத்துக்கும் பணிவிடை செய்யமுடியாது.’ (உலகச் செல்வம் நமக்கே உரியது என்று எண்ணித் தன்னலத்துடன் வாழ்வோர் நிலைவாழ்வை இழப்பர்)
பரிசேயரின் ஏளனம்
பணஆசைமிக்க பரிசேயர் இவற்றையெல்லாம் கேட்டு இயேசுவை ஏளனம் செய்தனர்.
அவர் அவர்களிடம் கூறியது: ’நீங்கள் உங்களை மக்கள்முன் நேர்மையாளராகக் காட்டிக் கொள்கிறீர்கள். கடவுள் உங்கள் உள்ளங்களை அறிவார். நீங்கள் உங்களை மக்கள்முன் உயர்ந்தவர்களாகக் காட்டிக்கொள்வது கடவுள் பார்வையில் அருவருப்பாகும்.
பழைய உடன்படிக்கை யோவானோடு முடிந்தது, இறையாட்சியே புதிய உடன்படிக்கை
திருச்சட்டமும் இறைவாக்கினர்களும் யோவான் காலம் வரையிலும்தான். அதுமுதல் இறையாட்சி பற்றிய நற்செய்தி அறிவிக்கப்படுகிறது. யாவரும் இறையாட்சிக்குட்பட நெருக்கியடித்துக்கொண்டு வருகிறார்கள்.
பரிசேயரின் தவறுகள்
திருச்சட்டத்திலுள்ள ஓர் எழுத்தின் கொம்பு அழிவதைவிட விண்ணும் மண்ணும் ஒழிவது எளிதாகும். தன் மனைவியை விலக்கிவிட்டு வேறொரு பெண்ணை மணப்பவன் எவனும் விபசாரம் செய்கிறான். கணவனால் தள்ளப்பட்ட பெண்ணை மணப்பவனும் விபசாரம் செய்கிறான்.
6. கடவுளுக்கும் செல்வத்துக்கும் எவரும் பணிவிடை செய்யமுடியாது
’செல்வர் ஒருவர் இருந்தார். அவர் விலையுயர்ந்த மெல்லிய செந்நிற ஆடை அணிந்து, நாள்தோறும் விருந்துண்டு இன்புற்றிருந்தார். (செல்வர் பரிசேயருக்கு அடையாளம். பரிசேயர்கள் தங்கள் வாசகப்பட்டைகளை அகலமாக்கி, தங்கள் அங்கியின் குஞ்சங்களைப் பெரிதாக்கி, விருந்துகளில் முதன்மையான இடங்களையும், ஜெப ஆலயங்களில் முதன்மையான ஆசனங்களையும், விரும்பினார்கள்:)
இலாசர் என்னும் பெயர்கொண்ட ஏழை ஒருவரும் இருந்தார். அவர் உடல்-முழுவதும் புண்ணாய் இருந்தது. அவர் அச்செல்வருடைய வீட்டு-வாயில் அருகே கிடந்தார். (ஏழைகளும், உடல் ஊனமுற்றவர்களும், மனநலம் குன்றியவர்களும், நோயால் வருந்துபவர்களும், நீதியின் பொருட்டு துன்புறுத்தப்படுவோரும், இலாசராக உவமையில் கூறப்படுகிறார்கள்).
அவர் செல்வருடைய மேசையிலிருந்து விழும் துண்டுகளால் தம் பசியாற்ற விரும்பினார். நாய்கள் வந்து அவர் புண்களை நக்கும். (நாய் லாசரின் புண்களை நக்கி நன்மை செய்தது. ஆனால் செல்வரோ தம் உணவுக் கழிவுகளைக்கூட இலாசருக்குக் கொடுக்கவில்லை.)
அந்த ஏழை இறந்தார். வானதூதர்கள் அவரை ஆபிரகாமின் மடியில் கொண்டுபோய்ச் சேர்த்தார்கள். செல்வரும் இறந்தார். அவர் அடக்கம் செய்யப்பட்டார்.
தீர்ப்பு நாள்
அவர் பாதாளத்தில் வதைக்கப்பட்டபோது, அண்ணாந்து பார்த்துத் தொலையில் ஆபிரகாமையும் அவரது மடியில் இலாசரையும் கண்டார். அவர், ’தந்தை ஆபிரகாமே, எனக்கு இரங்கும்; இலாசர் தமது விரல்நுனியைத் தண்ணீரில் நனைத்து எனது நாவைக் குளிரச்செய்ய அவரை அனுப்பும். ஏனெனில், இந்தத் தீப்பிழம்பில் நான் மிகுந்த வேதனைப்படுகிறேன்’ என்று உரக்கக் கூறினார்.
அதற்கு ஆபிரகாம், ’மகனே, நீ உன் வாழ்நாளில் நலன்களையே பெற்றாய்; அதே வேளையில், இலாசர் இன்னல்களையே அடைந்தார். அதை நினைத்துக்கொள். இப்பொழுது அவர் இங்கே ஆறுதல் பெறுகிறார்; நீயோ மிகுந்த வேதனைப்படுகிறாய். அன்றியும், எங்களுக்கும் உங்களுக்கும் இடையே பெரும் பிளவு ஒன்று உள்ளது. ஆகையால், இங்கிருந்து ஒருவர் உங்களிடம் வர விரும்பினாலும், கடந்துவர இயலாது. அங்கிருந்து நீங்கள் எங்களிடம் கடந்து வரவும் இயலாது’ என்றார்.
(பரிசேயர்களுக்கு, அவர்களின் தந்தையாகிய ஆபிரகாம் வாயிலாகவே இயேசு தீர்ப்பளித்தார்.
இலாசர் மேலே சென்று தந்தையாகிய ஆபிரகாமுடன் நிலைவாழ்வில் இளைப்பாறினார். பரிசேயரோ கீழே சென்று, முடிவில்லா மனவருத்தம் என்ற தீப்பிளம்பில் வேதனைப்பட்டார்.
தீர்ப்புக்குமுன் பரிசேயருக்கும் லாசருக்கும் நடுவே சிறிய இடைவெளியே இருந்தது. பரிசேயர் அதை கடந்துசென்று உதவிசெய்ய விரும்பவில்லை. எனவே, தீர்ப்புக்குப்பின், அந்தச் சிறிய இடைவெளி கடக்கமுடியாத பெரும் பிளவாக மாறியது
தீர்ப்புக்குமுன் உணவுக் கழிவுகளைக்கூட பரிசேயர் இலாசருக்குக் கொடுக்கவில்லை. எனவே, தீர்ப்புக்குப்பின் தம் வாய்க்கு ஒரு சொட்டுநீர் கூட பரிசேயர் பெறமுடியவில்லை.)
பரிசேயர்கள் மனம்மாறுவது கடினம்
செல்வர், ’அப்படியானால் தந்தையே, அவரை என் தந்தைவீட்டுக்கு அனுப்புமாறு உம்மிடம் வேண்டுகிறேன். எனக்கு ஐந்து சகோதரர்கள் உண்டு. அவர்களும் வேதனைமிகுந்த இந்த இடத்திற்கு வராதவாறு, அவர் அவர்களை எச்சரிக்கலாமே’ என்றார்.
அதற்கு ஆபிரகாம், ’மோசேயும் இறைவாக்கினர்களும் அவர்களுக்கு உண்டு. அவர்களுக்குச் செவிசாய்க்கட்டும்’ என்றார்.
அவர், ’அப்படியல்ல, தந்தை ஆபிரகாமே, இறந்த ஒருவர் அவர்களிடம் போனால் அவர்கள் மனம்மாறுவார்கள்’ என்றார்.
ஆபிரகாம், ’அவர்கள் மோசேக்கும் இறைவாக்கினருக்கும் செவிசாய்க்காவிட்டால், இறந்த ஒருவர் உயிர்த்தெழுந்து அவர்களிடம் போனாலும் நம்பமாட்டார்கள்’ என்றார்.'
7. எவரையும் பாவத்திற்கு வழிநடத்தாதீர்
இயேசு தம் சீடரை நோக்கிக் கூறியது: ’பாவத்தில் விழுவதைத் தவிர்க்கமுடியாது. ஆனால் ஐயோ! அதற்குக் காரணமாய் இருப்பவருக்குக் கேடு! அவர் இச்சிறியோருள் எவரையாவது பாவத்தில் விழச்செய்வதைவிட, அவ்வாறு செய்பவரது கழுத்தில் ஓர் எந்திரக்கல்லைக் கட்டி, அவரைக் கடலில் தள்ளிவிடுவது அவருக்கு நல்லது.
மன்னிப்புக்கு அளவில்லை
எனவே, நீங்கள் எச்சரிக்கையாய் இருங்கள். உங்களுடைய சகோதரர் சகோதரிகளுள் ஒருவர் பாவம்செய்தால், அவரைக் கடிந்துகொள்ளுங்கள். அவர் மனம்மாறினால் அவரை மன்னியுங்கள். ஒரே நாளில், அவர் ஏழுமுறை உங்களுக்கு எதிராகப் பாவம்செய்து, ஏழுமுறையும் உங்களிடம் திரும்பிவந்து, ’நான் மனம்மாறிவிட்டேன்’ என்று சொல்வாரானால் அவரை மன்னித்துவிடுங்கள்.’
நம்பிக்கையின் பலம்
திருத்தூதர்கள் ஆண்டவரிடம், ‘எங்கள் நம்பிக்கையை மிகுதியாக்கும்’ என்று கேட்டார்கள்.
அதற்கு ஆண்டவர் கூறியது: ’கடுகளவு நம்பிக்கை உங்களுக்கு இருந்தால், நீங்கள் இந்த காட்டு-அத்திமரத்தை நோக்கி, ’நீ வேரோடே பெயர்ந்துபோய்க் கடலில் வேரூன்றி நில்’ எனக் கூறினால், அது உங்களுக்குக் கீழ்ப்படியும்.
தாழ்மையான பணியாளர் உவமை
’உங்கள் பணியாளர் உழுதுவிட்டோ, மந்தையை மேய்த்துவிட்டோ வயல்வெளியிலிருந்து வரும்போது அவரிடம், ’நீர் உடனேவந்து உணவருந்த அமரும்’ என்று உங்களில் எவராவது சொல்வாரா?
மாறாக, ‘எனக்கு உணவு ஏற்பாடுசெய்யும்; உம் இடையை வரிந்துகட்டிக்கொண்டு, நான் உண்டுகுடிக்கும்வரை எனக்குப் பணிவிடைசெய்யும்; அதன்பிறகு நீர் உண்டுகுடிக்கலாம்’ என்று சொல்வாரல்லவா? தாம் பணித்ததைச் செய்ததற்காக அவர் தம் பணியாளருக்கு நன்றி கூறுவாரோ?
அதுபோலவே, நீங்களும் உங்களுக்குப் பணிக்கப்பட்ட யாவற்றையும் செய்தபின், ’நாங்கள் பயனற்ற பணியாளர்கள்; எங்கள் கடமையைத்தான் செய்தோம்’ எனச் சொல்லுங்கள்.
8. என்னிடம் நம்பிக்கை கொள்பவர் இறப்பினும் வாழ்வார்
பெத்தானியாவில் வாழ்ந்துவந்த இலாசர் என்னும் ஒருவர் நோயுற்றிருந்தார். அவ்வூரில்தான் மரியாவும், அவருடைய சகோதரியான மார்த்தாவும் வாழ்ந்துவந்தனர். இந்த மரியாதான் ஆண்டவர்மேல் நறுமணத்தைலம் பூசித் தமது கூந்தலால் அவரின் காலடிகளைத் துடைத்தவர். நோயுற்றிருந்த இலாசர் இவருடைய சகோதரர்.
இலாசரின் நோய் இயேசுவுக்கு மாட்சி
இலாசரின் சகோதரிகள் இயேசுவிடம் ஆளனுப்பி, ’ஆண்டவரே, உம் நண்பன் நோயுற்றிருக்கிறான்’ என்று தெரிவித்தார்கள். அவர் இதைக் கேட்டு, ’இந்நோய் சாவில்போய் முடியாது. கடவுளின் மாட்சி விளங்கவே இவன் நோயுற்றான். இதனால் மானிடமகனும் மாட்சிபெறுவார்’ என்றார்.
மார்த்தாவிடமும், அவருடைய சகோதரியான மரியாவிடமும், இலாசரிடமும் இயேசு அன்புகொண்டிருந்தார். இலாசர் நோயுற்றிருந்ததைக் கேள்விப்பட்ட பிறகு, தாம் இருந்தஇடத்தில் இன்னும் இரண்டுநாள் அவர் தங்கியிருந்தார்.
இலாசர் தூங்குகிறான், அவனை எழுப்புவதற்குப் போகிறேன்
பின்னர் தம் சீடரிடம், ’மீண்டும் யூதேயாவுக்குப் போவோம், வாருங்கள்’ என்று கூறினார்.
அவருடைய சீடர்கள் அவரிடம், ’ரபி, இப்போதுதானே யூதர்கள் உம்மேல் கல்லெறிய முயன்றார்கள்; மீண்டும் அங்குப் போகிறீரா?’ என்று கேட்டார்கள்.
இயேசு மறுமொழியாக, ’பகலுக்குப் பன்னிரண்டு-மணி நேரம் உண்டு அல்லவா? பகலில் நடப்பவர் இடறி விழுவதில்லை; ஏனெனில், பகல்-ஒளியில் பார்க்க முடிகிறது. ஆனால், இரவில் நடப்பவர் இடறிவிழுவார்; ஏனெனில், அப்போது ஒளி இல்லை’ என்றார்.
இவ்வாறு கூறியபின், ’நம் நண்பன் இலாசர் தூங்குகிறான்; நான் அவனை எழுப்புவதற்காகப் போகிறேன்’ என்றார்.
அவருடைய சீடர் அவரிடம், ’ஆண்டவரே, அவர் தூங்கினால் நலமடைவார்’ என்றனர். இயேசு அவருடைய சாவைக் குறிப்பிட்டே இவ்வாறு சொன்னார். வெறும் தூக்கத்தையே அவர் குறிப்பிட்டதாக அவர்கள் நினைத்தார்கள்.
அப்போது இயேசு அவர்களிடம், ’இலாசர் இறந்துவிட்டான்’ என்று வெளிப்படையாகச் சொல்லிவிட்டு, ’நான் அங்கு இல்லாமல்போனது பற்றி உங்கள்பொருட்டு மகிழ்கிறேன்; ஏனெனில் நீங்கள் என்னை நம்புவதற்கு இது ஒரு வாய்ப்பாகிறது. அவனிடம் போவோம், வாருங்கள்’ என்றார்.
திதிம் என்னும் தோமா, தம் உடன்சீடரிடம், ’நாமும் செல்வோம், அவரோடு இறப்போம்’ என்றார்.
பெத்தானியா, யூதேயா கிபி 32
உயிர்த்தெழுதலும் வாழ்வும் நானே
இயேசு அங்கு வந்தபோது, இலாசரைக் கல்லறையில் வைத்து ஏற்கெனவே நான்குநாள் ஆகியிருந்தது. பெத்தானியா, எருசலேமுக்கு அருகில் ஏறக்குறைய மூன்று கிலோமீட்டர் தொலையில் இருந்தது. சகோதரர் இறந்ததால், மார்த்தா, மரியா இவர்களுக்கு ஆறுதல்சொல்லப் பலர் அங்கே வந்திருந்தனர்.
இயேசு வந்துகொண்டிருக்கிறார் என்று கேள்விப்பட்டதும், மார்த்தா அவரை எதிர்கொண்டு சென்றார்; மரியா வீட்டில் இருந்துவிட்டார்.
மார்த்தா இயேசுவை நோக்கி, ’ஆண்டவரே, நீர் இங்கே இருந்திருந்தால் என் சகோதரன் இறந்திருக்க மாட்டான். இப்போதுகூட நீர் கடவுளிடம் கேட்பதையெல்லாம் அவர் உமக்குக் கொடுப்பார் என்பது எனக்குக் தெரியும்’ என்றார்.
இயேசு அவரிடம், ’உன் சகோதரன் உயிர்த்தெழுவான்’ என்றார். மார்த்தா அவரிடம், ’இறுதிநாள் உயிர்த்தெழுதலின்போது அவனும் உயிர்த்தெழுவான் என்பது எனக்கு தெரியும்’ என்றார்.
இயேசு அவரிடம், ’உயிர்த்தெழுதலும் வாழ்வும் நானே. என்னிடம் நம்பிக்கை கொள்பவர் இறப்பினும் வாழ்வார். உயிரோடு இருக்கும்போது என்னிடம் நம்பிக்கைகொள்ளும் எவரும் என்றுமே சாகமாட்டார். இதை நீ நம்புகிறாயா?’ என்று கேட்டார்.
மார்த்தா அவரிடம், ’ஆம் ஆண்டவரே, நீரே மெசியா! நீரே இறைமகன்! நீரே உலகிற்கு வரவிருந்தவர் என நம்புகிறேன்’ என்றார்.
இவ்வாறு சொன்னபின், மார்த்தா, தம் சகோதரியான மரியாவைக் கூப்பிடச் சென்றார்; அவரிடம், ’போதகர் வந்துவிட்டார்; உன்னை அழைக்கிறார்’ என்று காதோடு-காதாய்ச் சொன்னார். இதைக் கேட்டதும் மரியா விரைந்தெழுந்து இயேசுவிடம் சென்றார். இயேசு அதுவரையிலும் ஊருக்குள் வரவில்லை. மார்த்தா தம்மைச் சந்தித்த இடத்திலேயே இன்னும் இருந்தார்.
வீட்டில் மரியாவுக்கு ஆறுதல் சொல்லிக்கொண்டிருந்த யூதர்கள், அவர் விரைந்தெழுந்து வெளியே செல்வதைக் கண்டு, அவர் அழுவதற்காகக் கல்லறைக்குப் போகிறார் என்று எண்ணி, அவர் பின்னே சென்றார்கள்.
இயேசு கண்ணீர்விட்டு அழுதார்
இயேசு இருந்த இடத்திற்கு மரியா வந்து, அவரைக் கண்டதும் அவர் காலில்விழுந்து, ’ஆண்டவரே, நீர் இங்கே இருந்திருந்தால் என் சகோதரன் இறந்திருக்கமாட்டான்’ என்றார்.
மரியா அழுவதையும், அவரோடு வந்த யூதர்கள் அழுவதையும் கண்டபோது இயேசு உள்ளங்குமுறிக் கலங்கி, ’அவனை எங்கே வைத்தீர்கள்?’ என்று கேட்டார். அவர்கள் அவரிடம், ’ஆண்டவரே, வந்துபாரும்’ என்றார்கள். அப்போது இயேசு கண்ணீர்விட்டு அழுதார்.
அதைக்கண்ட யூதர்கள், ’பாருங்கள், இலாசர்மேல் இவருக்கு எத்துணை அன்பு!’ என்று பேசிக்கொண்டார்கள். ஆனால், அவர்களுள் சிலர், ’பார்வையற்றவருக்குப் பார்வையளித்த இவர், இவரைச் சாகாமலிருக்கச் செய்ய இயலவில்லையா?’ என்று கேட்டனர்.
நீ நம்பினால் கடவுளின் மாட்சிமையைக் காண்பாய்
இயேசு மீண்டும் உள்ளம்-குமுறியவராய்க் கல்லறைக்கு அருகில் சென்றார். அது ஒரு குகை. அதை ஒரு கல் மூடியிருந்தது.
’கல்லை அகற்றி விடுங்கள்’ என்றார் இயேசு. இறந்துபோனவரின் சகோதரியான மார்த்தா அவரிடம், ’ஆண்டவரே, நான்குநாள் ஆயிற்று; நாற்றம் அடிக்குமே!’ என்றார்.
இயேசு அவரிடம், ’நீ நம்பினால் கடவுளின் மாட்சிமையைக் காண்பாய் என, நான் உன்னிடம் கூறவில்லையா?' என்று கேட்டார். அப்போது அவர்கள் கல்லை அகற்றினார்கள்.
இயேசு அண்ணாந்துபார்த்து, ’தந்தையே, நீர் என் வேண்டுதலுக்குச் செவிசாய்த்ததற்காக உமக்கு நன்றிகூறுகிறேன். நீர் எப்போதும் என் வேண்டுதலுக்குச் செவிசாய்க்கிறீர் என்பது எனக்குத் தெரியும். எனினும் நீரே என்னை அனுப்பினீர் என்று சூழ்ந்துநிற்கும் இக்கூட்டம் நம்பும்பொருட்டே இப்படிச் சொன்னேன்’ என்று கூறினார்.
இவ்வாறு சொன்னபின், இயேசு உரத்தகுரலில், ’இலாசரே, வெளியே வா’ என்று கூப்பிட்டார்.
இறந்தவர் உயிரோடு வெளியே வந்தார். அவருடைய கால்களும் கைகளும் துணியால் சுற்றப்பட்டிருந்தன. முகத்தில் துணி சுற்றப்பட்டிருந்தது.
’கட்டுகளை அவிழ்த்து அவனைப் போகவிடுங்கள்’ என்று இயேசு அவர்களிடம் கூறினார்.
இயேசுவைக் கொலைசெய்யத் திட்டம்
மரியாவிடம் வந்திருந்த யூதர்பலர், இயேசு செய்ததைக் கண்டு, அவரை நம்பினர். ஆனால், அவர்களுள் சிலர் பரிசேயரிடம் சென்று, இயேசு செய்ததைத் தெரிவித்தனர்.
தலைமைக் குருக்களும், பரிசேயரும் தலைமைச் சங்கத்தைக் கூட்டி, ’இந்த ஆள் பல அரும்-அடையாளங்களைச் செய்துகொண்டிருக்கிறானே, என்ன செய்யலாம்? இவனை இப்படியே விட்டுவிட்டால், அனைவரும் இவனிடம் நம்பிக்கை கொள்வர். அப்போது உரோமையர் வந்து, நம் தூயஇடத்தையும், நம் இனத்தையும் அழித்துவிடுவார்களே!’ என்று பேசிக்கொண்டனர்.
கயபா என்பவர் அவர்களுள் ஒருவர். அவர் அவ்வாண்டின் தலைமைக்குருவாய் இருந்தார். அவர் அவர்களிடம், ’உங்களுக்கு ஒன்றும் தெரியவில்லை. இனம் முழுவதும் அழிந்துபோவதைவிட, ஒரு மனிதன்மட்டும் மக்களுக்காக இறப்பது நல்லது என்பதை நீங்கள் உணரவில்லை’ என்று சொன்னார். இதை அவர் தாமாகச் சொல்லவில்லை. அவர் அவ்வாண்டின் தலைமைக்குருவாய் இருந்ததால், இயேசு தம் இனத்திற்காவும், தம் இனத்திற்காக மட்டுமின்றி, சிதறிவாழ்ந்த கடவுளின்-பிள்ளைகளை ஒன்றாய்ச் சேர்க்கும் நோக்குடன், அவர்களுக்காகவும் இறக்கப்போகிறார் என்று இறைவாக்காகச் சொன்னார்.
ஆகவே, அன்றிலிருந்தே அவர்கள் இயேசுவைக் கொன்றுவிடத் திட்டம் தீட்டினார்கள். அதுமுதல், இயேசு யூதரிடையே வெளிப்படையாக நடமாடவில்லை. அவர் அவ்விடத்தினின்று அகன்று, பாலைநிலத்திற்கு அருகிலுள்ள பகுதிக்குப் போனார்; அங்கு, எப்ராயிம் என்னும் ஊரில் தம் சீடருடன் தங்கியிருந்தார்.
9. மானிடமகனுடைய நாள்
சமாரியா / கலிலேயா கிபி 32
அன்னியராகிய உம்மைத்தவிர மற்ற ஒன்பதுபேர் எங்கே?
இயேசு எருசலேமுக்குப் போய்க்கொண்டிருந்தபோது, கலிலேய, சமாரியப் பகுதிகள் வழியாகச் சென்றார். ஓர் ஊருக்குள் வந்தபொழுது, பத்து தொழுநோயாளர்கள் அவருக்கு எதிர்கொண்டுவந்து, தூரத்தில் நின்றுகொண்டே, ’ஐயா! இயேசுவே, எங்களுக்கு இரங்கும்’ என்று உரக்கக் குரலெழுப்பி வேண்டினார்கள்.
அவர் அவர்களைப் பார்த்து, ’நீங்கள் போய் உங்களைக் குருக்களிடம் காண்பியுங்கள்’ என்றார். அவ்வாறே அவர்கள் புறப்பட்டுப் போகும்போது, அவர்கள் நோய் நீங்கிற்று.
அவர்களுள் ஒருவர், தம் பிணி தீர்ந்திருப்பதைக் கண்டு, உரத்த குரலில் கடவுளைப் போற்றிப் புகழ்ந்துகொண்டே இயேசுவிடம் திரும்பி வந்தார்; அவருடைய காலில் முகங்குப்புற விழுந்து அவருக்கு நன்றி செலுத்தினார். அவரோ ஒரு சமாரியர்.
இயேசு, அவரைப் பார்த்து, ’பத்துப் பேர்களின் நோயும் நீங்கவில்லையா? மற்ற ஒன்பது பேர் எங்கே? கடவுளைப் போற்றிப்புகழ, அன்னியராகிய உம்மைத் தவிர வேறு எவரும் திரும்பிவரக் காணோமே!’ என்றார்.
பின்பு அவரிடம், ’எழுந்து செல்லும், உமது நம்பிக்கை உமக்கு நலமளித்தது’ என்றார்.
இறையாட்சி உங்கள் நடுவேயே செயல்படுகிறது
’இறையாட்சி எப்போது வரும்?’ என்று பரிசேயர் இயேசுவிடம் கேட்டனர்.
அவர் மறுமொழியாக, ’இறையாட்சி கண்களுக்குப் புலப்படும் முறையில் வராது. இதோ, இங்கே! அல்லது அதோ, அங்கே! எனச் சொல்லமுடியாது. ஏனெனில், இறையாட்சி உங்கள் நடுவேயே செயல்படுகிறது’ என்றார்.
மானிடமகனுடைய நாள்
பின்பு அவர் சீடர்களை நோக்கிக் கூறியது: ’ஒரு காலம் வரும்; அப்போது மானிடமகனுடைய நாள்களில் ஒன்றையாவது காண நீங்கள் ஆவலாய் இருப்பீர்கள். ஆனால் நீங்கள் காணமாட்டீர்கள். அவர்கள் உங்களிடம், ’இதோ, இங்கே! அல்லது அதோ, அங்கே!’ என்பார்கள். ஆனால் நீங்கள் போகவேண்டாம்; அவர்களைப் பின்தொடரவும் வேண்டாம்.
வானத்தில், மின்னல், ஒருபக்கத்திலிருந்து மறுபக்கம் வரைக்கும் பளீரென மின்னி ஒளிர்வதுபோல, மானிடமகனும், தாம் வரும்நாளில் தோன்றுவார். ஆனால், முதலில் அவர் பல துன்பங்கள்பட்டு, இந்தத் தலைமுறையினரால் உதறித் தள்ளப்படவேண்டும்.
மக்கள் அறியாமல் இருப்பார்கள்
நோவாவின் காலத்தில் நடந்ததுபோலவே மானிடமகனுடைய காலத்திலும் நடக்கும். நோவா பேழைக்குள் சென்ற நாள்வரை, எல்லாரும் திருமணம் செய்துகொண்டும், உண்டும், குடித்தும் வந்தார்கள். வெள்ளப்பெருக்கு வந்து அவர்கள் அனைவரையும் அழித்தது.
அவ்வாறே, லோத்தின் காலத்திலும் நடந்தது. மக்கள் உண்டார்கள், குடித்தார்கள்; வாங்கினார்கள், விற்றார்கள்; நட்டார்கள், கட்டினார்கள். லோத்து சோதோமைவிட்டுப் போன நாளில், விண்ணிலிருந்து பெய்த தீயும், கந்தகமும் எல்லாரையும் அழித்தன. மானிடமகன் வெளிப்படும் நாளிலும் அப்படியே நடக்கும்.
உயிரைக் காக்க வழிதேடாதீர்
’அந்நாளில் வீட்டின் மேல்தளத்தில் இருப்பவர், வீட்டிலுள்ள தம் பொருள்களை எடுக்கக் கீழே இறங்கவேண்டாம். அதுபோலவே, வயலில் இருப்பவர் திரும்பி வரவேண்டாம். லோத்தின் மனைவியை நினைத்துக்கொள்ளுங்கள். தம் உயிரைக் காக்க வழிதேடுவோர் அதை இழந்துவிடுவர்; தம் உயிரை இழப்பவரோ அதைக் காத்துக்கொள்வர்.
நான் உங்களுக்குச் சொல்கிறேன்: அந்த இரவில், ஒரே கட்டிலில் இருவர் படுத்திருப்பர். ஒருவர் எடுத்துக்கொள்ளப்படுவார்; மற்றவர் விட்டுவிடப்படுவார். இருவர் சேர்ந்து மாவரைத்துக்கொண்டிருப்பர். ஒருவர் எடுத்துக்கொள்ளப்படுவார்; மற்றவர் விட்டுவிடப்படுவார். (இருவர் வயலில் இருப்பர். ஒருவர் எடுத்துக்கொள்ளப்படுவார்; மற்றவர் விட்டுவிடப்படுவார்.)’
அவர்கள் இயேசுவைப் பார்த்து, ’ஆண்டவரே, இது எங்கே நிகழும்?’ என்று கேட்டார்கள். அவர் அவர்களிடம், ’பிணம் எங்கே இருக்கிறதோ அங்கேயே கழுகுகளும் வந்து கூடும்’ என்றார்.
சமாரியா, / பெரேயா கிபி 32
மனந்தளராத கைம்பெண் உவமை
அவர்கள் மனந்தளராமல் எப்பொழுதும் இறைவனிடம் மன்றாடவேண்டும் என்பதற்கு இயேசு ஓர் உவமை சொன்னார்.
’ஒரு நகரில் நடுவர் ஒருவர் இருந்தார். அவர் கடவுளுக்கு அஞ்சி நடப்பதில்லை; மக்களையும் மதிப்பதில்லை.
அந்நகரில் கைம்பெண் ஒருவரும் இருந்தார். அவர் நடுவரிடம் போய், ‘என் எதிரியைத் தண்டித்து, எனக்கு நீதிவழங்கும்’ என்று கேட்டுக்கொண்டேயிருந்தார். நடுவரோ, நெடுங்காலமாய் எதுவும் செய்ய விரும்பவில்லை.
பின்பு அவர், ’நான் கடவுளுக்கு அஞ்சுவதில்லை; மக்களையும் மதிப்பதில்லை. என்றாலும், இக்கைம்பெண் எனக்குத் தொல்லை கொடுத்துக்கொண்டிருப்பதால், நான் இவருக்கு நீதி வழங்குவேன். இல்லையானால், இவர் என் உயிரை வாங்கிக்கொண்டேயிருப்பார்’ என்று தமக்குள்ளே சொல்லிக்கொண்டார்.’
கடவுள் விரைவில் நீதி வழங்குவார், நம்பிக்கையை இழக்காதீர்
பின், ஆண்டவர் அவர்களிடம், ’நேர்மையற்ற நடுவரே இப்படிச் சொன்னாரென்றால், தாம் தேர்ந்துகொண்டவர்கள் அல்லும் பகலும் தம்மை நோக்கிக் கூக்குரலிடும்போது, கடவுள் அவர்களுக்கு நீதி வழங்காமல் இருப்பாரா? அவர்களுக்குத் துணைசெய்யக் காலம் தாழ்த்துவாரா? விரைவில் அவர்களுக்கு நீதி வழங்குவார் என நான் உங்களுக்குச் சொல்கிறேன்.
ஆயினும், மானிடமகன் வரும்போது மண்ணுலகில் நம்பிக்கையைக் காண்பாரோ?’ என்றார்.
10. தம்மை நேர்மையாளர் என்று நம்புவோர் கைவிடப்படுவார்
சமாரியா / கலிலேயா கிபி 32
தாங்கள் நேர்மையானவர் என்று நம்பி, மற்றவர்களை இகழ்ந்து ஒதுக்கும் சிலரைப் பார்த்து இயேசு இந்த உவமையைச் சொன்னார்:
பரிசேயரும் வரிதண்டுபவரும் செய்த வேண்டுதல்
’இருவர் இறைவனிடம் வேண்டக் கோவிலுக்குச் சென்றனர். ஒருவர் பரிசேயர், மற்றவர் வரிதண்டுபவர்.
பரிசேயர் நின்று கொண்டு, இவ்வாறு இறைவனிடம் வேண்டினார்:’கடவுளே, நான் கொள்ளையர், நேர்மையற்றோர், விபசாரர் போன்ற மற்றமக்களைப் போலவோ, இந்த வரிதண்டுபவரை போலவோ இல்லாததுபற்றி உமக்கு நன்றி செலுத்துகிறேன்; வாரத்தில் இருமுறை நோன்பிருக்கிறேன்; என் வருவாயில் எல்லாம் பத்திலொரு பங்கைக் கொடுக்கிறேன்.
’ஆனால் வரிதண்டுபவர் தொலையில் நின்றுகொண்டு, வானத்தை அண்ணாந்து பார்க்கக்கூடத் துணியாமல், தம் மார்பில் அடித்துக்கொண்டு, ’கடவுளே, பாவியாகிய என்மீது இரங்கியருளும்’ என்றார்.’
இயேசுவின் தீர்ப்பு
இயேசு, ’பரிசேயரல்ல, வரிதண்டுபவரே கடவுளுக்கு ஏற்புடையவராகி வீடு திரும்பினார். ஏனெனில் தம்மைத்தாமே உயர்த்துவோர் தாழ்த்தப்பெறுவர்; தம்மைத்தாமே தாழ்த்துவோர் உயர்த்தப்பெறுவர் என நான் உங்களுக்குச் சொல்கிறேன்’ என்றார்.
11. கணவர் மனைவியர் உறவுநிலை
பெரேயா, யூதேயா கிபி 32
இயேசு இவ்வாறு உரையாற்றி முடித்தபின்பு, கலிலேயாவை விட்டு அகன்று, யூதேயப்-பகுதிகளுக்கும், யோர்தான் அக்கரைப்-பகுதிகளுக்கும் வந்தார். பெருந்திரளான மக்கள் அவரைப் பின்தொடர்ந்தனர். அவரும் வழக்கம்போல மீண்டும் அவர்களுக்குக் கற்பித்தார். அவர்களை அவர் அங்கே குணமாக்கினார்.
பரிசேயர் அவரை அணுகி, அவரைச் சோதிக்கும் நோக்குடன், ’ஒருவர் தம் மனைவியை எக்காரணத்தையாவது முன்னிட்டு விலக்கிவிடுவது முறையா?’ என்று கேட்டனர்.
அவர் அவர்களிடம் மறுமொழியாக, ’மோசே உங்களுக்கு இட்ட கட்டளை என்ன?’ என்று கேட்டார். அவர்கள், ’மோசே மணவிலக்குச் சான்றிதழ் எழுதி, அவரை விலக்கிவிடலாம் என்று அனுமதி அளித்துள்ளார்’ என்று கூறினார்கள்
அதற்கு இயேசு அவர்களிடம், ’உங்கள் கடின உள்ளத்தின்-பொருட்டே, அவர் இக்கட்டளையை எழுதிவைத்தார். ’படைப்பின் தொடக்கத்திலேயே, கடவுள், ″ஆணும் பெண்ணுமாக அவர்களைப் படைத்தார்″ என்று நீங்கள் மறைநூலில் வாசித்ததில்லையா?’ என்று கேட்டார்.
மேலும் அவர், ’இதனால், கணவன் தன் தாய்-தந்தையை விட்டுவிட்டுத் தன் மனைவியுடன் ஒன்றித்திருப்பான். இருவரும் ஒரே உடலாய் இருப்பர். இனி அவர்கள் இருவர் அல்ல; ஒரே உடல். எனவே கடவுள் இணைத்ததை, மனிதர் பிரிக்காதிருக்கட்டும்.’ என்றார்.
அவர்கள் அவரைப் பார்த்து, ’அப்படியானால், மணவிலக்குச் சான்றிதழைக் கொடுத்து மனைவியை விலக்கிவிடலாம் என்று மோசே கட்டளையிட்டது ஏன்?’ என்றார்கள்.
அதற்கு அவர், ’உங்கள் கடின உள்ளத்தின் பொருட்டே, உங்கள் மனைவியரை விலக்கிவிடலாம் என்று மோசே உங்களுக்கு அனுமதி அளித்தார். ஆனால், தொடக்கமுதல் அவ்வாறு இல்லை. பரத்தைமையில் ஈடுபட்டதற்காக அன்றி, வேறு எக்காரணத்தையாவது முன்னிட்டுத் தன் மனைவியை விலக்கிவிட்டு, வேறொரு பெண்ணை மணப்பவன் எவனும் விபசாரம் செய்கிறான் என நான் உங்களுக்குச் சொல்கிறேன்' என்றார்.
சீடர்களுக்கு விளக்கம்
பின்னர், வீட்டில் இதைப்பற்றி மீண்டும் சீடர் அவரைக் கேட்டனர். இயேசு அவர்களை நோக்கி, ’தன் மனைவியை விலக்கிவிட்டு, வேறொரு பெண்ணை மணப்பவன் எவனும் அவருக்கு எதிராக விபசாரம் செய்கிறான். தன் கணவரை விலக்கிவிட்டு, வேறொருவரை மணக்கும் எவளும் விபசாரம் செய்கிறாள்' என்றார்.
அவருடைய சீடர்கள் அவரை நோக்கி, ’கணவர் மனைவியர் உறவு நிலை இத்தகையது என்றால், திருமணம் செய்து கொள்ளாதிருப்பதே நல்லது’ என்றார்கள்.
அதற்கு அவர், ’அருள்கொடை பெற்றவரன்றி, வேறு எவரும் இக்கூற்றை ஏற்றுக்கொள்ள முடியாது. சிலர் பிறவியிலேயே மண உறவுகொள்ள முடியாதவராய் இருக்கின்றனர். வேறு சிலர், மனிதரால் அந்நிலைக்கு ஆளாக்கப்படுகின்றனர். மற்றும் சிலர், விண்ணரசின்பொருட்டு அந்நிலைக்குத் தம்மையே ஆளாக்கிக் கொள்கின்றனர். இதை ஏற்றுக்கொள்ளக் கூடியவர் ஏற்றுக்கொள்ளட்டும்’ என்றார்.
சிறுபிள்ளைகளைப் போன்றவர்க்கே விண்ணரசு உரியது
சிறு பிள்ளைகளை இயேசு தொடவேண்டுமென்றும், தம் கைகளை வைத்து வேண்டுதல் செய்யுமாறும், அவர்களைச் சிலர் அவரிடம் கொண்டுவந்தனர். இதைக் கண்ட சீடர், அவர்களை அதட்டினர்.
.இயேசு இதைக் கண்டு, கோபம் கொண்டு, அவர்களைத் தம்மிடம் வரவழைத்து, ’சிறு பிள்ளைகளை என்னிடம் வரவிடுங்கள். அவர்களைத் தடுக்காதீர்கள். ஏனெனில், இறையாட்சி இத்தகையோருக்கே உரியது.
இறையாட்சியைச் சிறு பிள்ளையைப்போல் ஏற்றுக்கொள்ளாதோர் அதற்கு உட்படமாட்டார் என உறுதியாக உங்களுக்குச் சொல்கிறேன்’ என்று சீடர்களிடம் கூறினார்..
பிறகு, அவர் அவர்களை அரவணைத்து, தம் கைகளை அவர்கள்மீது வைத்து ஆசி வழங்கினார். பின்பு அவர் அவ்விடத்தைவிட்டுச் சென்றார்.
12. செல்வர் இறையாட்சிக்கு உட்படுவது மிகவும் கடினம்
பெரேயா கிபி 32
நிலைவாழ்வைப் பெற நான் என்ன செய்யவேண்டும்?
இயேசு புறப்பட்டுச் சென்றுகொண்டிருந்தபோது, வழியில், தலைவர் ஒருவர் அவரிடம் ஓடிவந்து, முழந்தாள்படியிட்டு, ’நல்ல போதகரே, நிலைவாழ்வை உரிமையாக்கிக்கொள்ள நான் என்ன செய்ய வேண்டும்?’ என்று அவரைக் கேட்டார்.
அதற்கு இயேசு அவரிடம், ’நான் நல்லவன் என ஏன் சொல்கிறீர்? கடவுள் ஒருவரைத் தவிர நல்லவர் எவருமில்லையே. நீர் வாழ்வடைய விரும்பினால் கட்டளைகளைக் கடைப்பிடியும்’ என்றார்.
அவர் ‘எவற்றை?’ என்று கேட்டார்.
இயேசு, ’கொலை செய்யாதே; விபசாரம் செய்யாதே; களவு செய்யாதே; பொய்ச்சான்று சொல்லாதே; வஞ்சித்துப் பறிக்காதே, தாய்-தந்தையை மதித்து நட. மேலும், உன்மீது நீ அன்புகூர்வதுபோல் உனக்கு அடுத்திருப்பவர்மீதும் அன்பு கூர்வாயாக’ என்று கூறினார்.
அந்த இளைஞர் இயேசுவிடம், ’போதகரே, இவை அனைத்தையும் நான் என் இளமையிலிருந்தே கடைப்பிடித்து வந்துள்ளேன். இன்னும் என்னிடம் குறைபடுவது என்ன?’ என்று கேட்டார்.
இயேசுவின் அறிவுரை - விண்ணகத்தில் செல்வராக மாறுங்கள்
அப்போது இயேசு அன்பொழுக அவரைக் கூர்ந்துநோக்கி, ’உமக்கு இன்னும் ஒன்று குறைபடுகிறது. நிறைவுள்ளவராக விரும்பினால், நீர் போய், உமக்குள்ள உடைமைகளை விற்று ஏழைகளுக்குக் கொடும். அப்போது விண்ணகத்தில் நீர் செல்வராய் இருப்பீர். பின்பு வந்து, என்னைப் பின்பற்றும்’ என்று அவரிடம் கூறினார்.
இயேசு சொன்னதைக் கேட்டதும், அந்த இளைஞர் முகம்வாடி வருத்தத்தோடு சென்றுவிட்டார். ஏனெனில், அவர் மிகுந்த செல்வம் உடையராய் இருந்தார்.
சீடர்களின் திகைப்பு
அவர் மிகவும் வருத்தமுற்றதைப் பார்த்த இயேசு, சுற்றிலும் திரும்பிப் பார்த்துத் தம் சீடரிடம், ’செல்வர் இறையாட்சிக்கு உட்படுவது மிகவும் கடினம்’ என்றார்.
சீடர்கள் அவர் சொன்னதைக் கேட்டுத் திகைப்புக்கு உள்ளானார்கள்.
மீண்டும் இயேசு அவர்களைப் பார்த்து, ’பிள்ளைகளே, செல்வர்கள் இறையாட்சிக்கு உட்படுவது மிகவும் கடினம் என, நான் உங்களுக்கு உறுதியாகச் சொல்கிறேன். செல்வர் ஒருவர் இறையாட்சிக்கு உட்படுவதைவிட, ஊசியின் காதில் ஒட்டகம் நுழைவது எளிது’ என்றார்
சீடர்கள் மிகவும் வியப்பில் ஆழ்ந்தவர்களாய், ’பின் யார்தாம் மீட்புப்பெற முடியும்?’ என்று தங்களிடையே பேசிக்கொண்டார்கள்.
இயேசு அவர்களைக் கூர்ந்து நோக்கி, ’மனிதரால் இது இயலாது. ஆனால் கடவுளுக்கு அப்படியல்ல, மனிதரால் இயலாதவற்றைக் கடவுளால் செய்ய இயலும்’ என்றார்.
13. இயேசுவின் புதிய உடன்படிக்கை - கடைசியானோர் முதன்மையாவர், முதன்மையானோர் கடைசியாவர்
சீடர்களுக்கு என்ன கிடைக்கும்? பெரேயா கிபி 32
அதன்பின்பு பேதுரு இயேசுவைப் பார்த்து, 'பாரும், நாங்கள் எல்லாவற்றையும் விட்டுவிட்டு, உம்மைப் பின்பற்றியவர்களாயிற்றே; எங்களுக்கு என்ன கிடைக்கும்?’ என்று கேட்டார்.
அதற்கு இயேசு, ’புதுப்படைப்பின் நாளில், மானிடமகன் தமது மாட்சிமிகு அரியணையில் வீற்றிருப்பார். அப்போது, என்னைப் பின்பற்றிய நீங்களும், இஸ்ரயேல் மக்களின் பன்னிரு-குலத்தவர்க்கும் நடுவர்களாய், பன்னிரு அரியணைகளில் வீற்றிருப்பீர்கள் என உறுதியாக உங்களுக்குச் சொல்லுகிறேன்.
மேலும், என்-பொருட்டும், நற்செய்தியின்-பொருட்டும், வீடுகளையோ, சகோதரர்களையோ, சகோதரிகளையோ, தாயையோ, தந்தையையோ, பிள்ளைகளையோ, நிலபுலன்களையோ விட்டுவிட்ட எவரும், இம்மையில் நூறு மடங்காக வீடுகளையும், சகோதரர்களையும், சகோதரிகளையும், தாயையும், நிலபுலன்களையும், இவற்றோடுகூட இன்னல்களையும், மறுமையில் நிலைவாழ்வையும் பெறாமல் போகார்.
ஆனால் முதன்மையானோர் பலர் கடைசி ஆவர்; கடைசியானோர் முதன்மை ஆவர்’ என்றார்.’
திராட்சைத் தோட்ட வேலையாள்கள் உவமை
விண்ணரசைப் பின்வரும் நிகழ்ச்சிக்கு ஒப்பிடலாம்:
காலை 6 மணிக்கு வந்த வேலையாள்
நிலக்கிழார் ஒருவர் தம் வேலையாள்களை வேலைக்கு அமர்த்த விடியற்காலையில் வெளியே சென்றார். அவர் நாளொன்றுக்கு ஒரு தெனாரியம் கூலி என வேலையாள்களுடன் ஒத்துக்கொண்டு அவர்களைத் தம் திராட்சைத் தோட்டத்துக்கு அனுப்பினார். (சீனாய் மலையில் இஸ்ரயேலருக்கு மோசேயின் திருச்சட்டங்கள் கொடுக்கப்பட்டு முதல் உடன்படிக்கை செய்யப்பட்டது. திருச்சட்டத்தைக் கைக்கொண்டு கடவுளுக்கு ஏற்புடையவராக வாழ்வதே அவர்களுக்குக் கொடுக்கப்பட்ட வேலை. இதற்குக் கூலியாக ஒரு தெனாரியம் (நிலைவாழ்வு) ஒப்பந்தம் செய்யப்பட்டது.)
காலை 9 மணி முதல் பிற்பகல் 3 மணிவரை வந்த வேலையாள்
ஏறக்குறைய காலை ஒன்பது மணிக்கு அவர் வெளியே சென்ற பொழுது சந்தை வெளியில் வேறுசிலர் வேலையின்றி நிற்பதைக் கண்டார். அவர்களிடம், ’நீங்களும் என் திராட்சைத் தோட்டத்துக்குப் போங்கள்; நேர்மையான கூலியை உங்களுக்குக் கொடுப்பேன்’ என்றார். அவர்களும் சென்றார்கள்.
மீண்டும், ஏறக்குறைய பன்னிரண்டு மணிக்கும், பிற்பகல் மூன்று மணிக்கும் வெளியே சென்று அப்படியே செய்தார். (மக்களை நேர்வழியில் நடத்துவதற்காக ஒவ்வொரு காலத்திலும், எலியா, ஏசாயா, போன்ற இறைவாக்கினர்களை இறைவன் அனுப்பினார். திருமுழுக்கு யோவானே இஸ்ரயேலருக்கு அனுப்பப்பட்ட கடைசி இறைவாக்கினர்.)
மாலை 5 மணிக்கு வந்த வேலையாள் ஏறக்குறைய ஐந்து மணிக்கும் வெளியே சென்று வேறு சிலர் நிற்பதைக் கண்டார். அவர்களிடம், ’நாள் முழுவதும் வேலை செய்யாமல் ஏன் இங்கே நின்று கொண்டிருக்கிறீர்கள்?’ என்று கேட்டார். அவர்கள் அவரைப் பார்த்து, ‘ எங்களை எவரும் வேலைக்கு அமர்த்தவில்லை’ என்றார்கள். அவர் அவர்களிடம், ’நீங்களும் என் திராட்சைத் தோட்டத்துக்குப் போங்கள்’ என்றார். (இறுதியாக, இறைமகனாகிய இயேசு விண்ணிலிருந்து இறங்கிவந்தார் திருச்சட்டத்தை நிறைவேற்றி, பாவமன்னிப்பின் புதிய உடன்படிக்கையை அறிவித்தார். யூத சமுதாயத்தால் விலக்கப்பட்டிருந்த வரிதண்டுவோரும் பாவிகளும் விலைமகளிரும் தங்கள் பாவங்களை அறிந்து இயேசுவின் புதிய உடன்படிக்கையை ஏற்றுக்கொண்டார்கள்.)
தீர்ப்புநாள்
மாலையானதும் திராட்சைத்தோட்ட உரிமையாளர் தம் மேற்பார்வையாளரிடம், ’வேலையாள்களை அழைத்துக் கடைசியில் வந்தவர் தொடங்கி முதலில் வந்தவர்வரை அவர்களுக்குரிய கூலி கொடும்’ என்றார். எனவே ஐந்து மணியளவில் வந்தவர்கள் ஒரு தெனாரியம் வீதம் பெற்றுக் கொண்டனர். (வரிதண்டுவோரும் பாவிகளும் இறையாட்சியில் முதலில் ஏற்கப்பட்டனர்)
யூதர், பரிசேயர் மறைநூல் அறிஞர்களின் வெளிவேடம்
அப்போது முதலில் வந்தவர்கள் தங்களுக்கு மிகுதியாகக் கிடைக்கும் என்று எண்ணினார்கள். ஆனால் அவர்களும் ஒரு தெனாரியம் வீதம்தான் பெற்றார்கள்.
அவர்கள் அதைப் பெற்றுக் கொண்டபோது, அந்நிலக்கிழாருக்கு எதிராக முணுமுணுத்து, கடைசியில் வந்த இவர்கள் ஒருமணி நேரமே வேலை செய்தார்கள். பகல் முழுவதும் வேலைப்பளுவையும் கடும் வெயிலையும் தாங்கிய எங்களோடு இவர்களையும் இணையாக்கி விட்டீரே’ என்றார்கள்.
கடைசியானோர் முதன்மையாவர்
அவரோ அவர்களுள் ஒருவரைப் பார்த்து, ’தோழரே, நான் உமக்கு அநியாயம் செய்யவில்லை. நீர் என்னிடம் ஒரு தெனாரியம் கூலிக்கு ஒத்துக்கொள்ளவில்லையா? உமக்குரியதைப் பெற்றுக்கொண்டு போய்விடும். உமக்குக் கொடுத்தபடியே கடைசியில் வந்த இவருக்கும் கொடுப்பது என் விருப்பம். எனக்குரியதை, நான் என் விருப்பப்படி கொடுக்கக் கூடாதா? அல்லது நான் நல்லவனாய் இருப்பதால் உமக்குப் பொறாமையா?’ என்றார். இவ்வாறு கடைசியானோர் முதன்மையாவர். முதன்மையானோர் கடைசியாவர்’ என்று இயேசு கூறினார்.
(எருசலேம் தேவாலயத்தில் இயேசு தம் தீர்ப்பை அறிவித்தார். வரிதண்டுவோரும் விலைமகளிரும் உங்களுக்கு முன்பாகவே இறையாட்சிக்கு உட்படுவர் என உறுதியாக உங்களுக்குச் சொல்கிறேன். ஏனெனில் யோவான் நீதிநெறியைக் காட்ட உங்களிடம் வந்தார். நீங்களோ அவரை நம்பவில்லை. மாறாக வரி தண்டு வோரும் விலைமகளிரும் அவரை நம்பினர். அவர்களைப் பார்த்த பின்பும் நீங்கள் உங்கள் எண்ணத்தை மாற்றிக்கொள்ளவுமில்லை. அவரை நம்பவுமில்லை" என்றார். (மத்தேயு 21 31,32). இவ்வாறு, பிந்தினோர் முந்தினோராய் இருப்பார்கள், முதன்மையானோர் கடைசியாவர் என்ற பொன்மொழி நிறைவேறியது.)
14. பெரியவராக இருக்க விரும்புகிறவர் தொண்டராய் இருக்கட்டும்
எருசலேமுக்குக் கடைசிப் பயணம் பெரேயா கிபி 32
அவர்கள் எருசலேமுக்குப் போகும் வழியில் சென்றுகொண்டிருந்தார்கள். இயேசு அவர்களுக்குமுன் போய்க்கொண்டிருந்தார். சீடர் திகைப்புற்றிருக்க, அவரைப் பின்பற்றிய ஏனையோர் அச்சம் கொண்டிருந்தனர்.
இயேசு தம் சாவை மூன்றாம்முறை முன்னறிவித்தார்
அவர் மீண்டும் பன்னிருவரையும் தம் அருகில் அழைத்துத் தமக்கு நிகழவிருப்பவற்றைக் குறித்துப் பேசத்தொடங்கினார்.
அவர், ’இப்பொழுது நாம் எருசலேமுக்குச் செல்கிறோம். மானிடமகனைப்பற்றி இறைவாக்கினர் வாயிலாக எழுதப்பட்டவை யாவும் நிறைவேறும். மானிடமகன் தலைமைக் குருக்களிடமும், மறைநூல்-அறிஞர்களிடமும் ஒப்புவிக்கப்படுவார்; அவர்கள் அவருக்கு மரணதண்டனை விதித்து, அவரைப் பிறஇனத்தவரிடம் ஒப்புவிப்பார்கள்; அவர்கள் ஏளனம் செய்து, அவர் மீது துப்பி, சாட்டையால் அடித்து அவரைக் கொலைசெய்வார்கள். ஆனால், மூன்றாம் நாளில் அவர் உயிர்த்தெழுவார்’ என்று அவர்களிடம் கூறினார்.
இவற்றில் எதையும் அவர்கள் புரிந்துகொள்ளவில்லை. அவர் கூறியது அவர்களுக்கு மறைபொருளாக இருந்தது. ஏனெனில், அவர் சொன்னது என்னவென்று அவர்களுக்குத் தெரியவில்லை.
உமது அரியணையின் அருகில் இடம் தாரும்
செபதேயுவின் மக்கள், யாக்கோபும், யோவானு்ம், தங்கள் தாயுடன், ஒரு வேண்டுகோள் விடுக்குமாறு இயேசுவிடம் வந்து, பணிந்து நின்றார். அவர்கள் அவரை அணுகிச்சென்று, ’போதகரே, நாங்கள் கேட்பதை நீர் எங்களுக்குச் செய்யவேண்டும் என விரும்புகிறோம்’ என்றார்கள்.
அவர் அவர்களிடம், ’நான் என்ன செய்யவேண்டும் என்று நீங்கள் விரும்புகிறீர்கள்?’ என்று கேட்டார்.
அவர்கள் அவரை நோக்கி, நீர் அரியணையில் இருந்து ஆட்சிபுரியும்போது, எங்களுள் ஒருவர் உமது அரியணையின் வலப்புறமும், இன்னொருவர் இடப்புறமும் அமர்ந்துகொள்ள எங்களுக்கு அருளும்’ என்று வேண்டினார்கள்.
இயேசுவோ அவர்களிடம், ’நீங்கள் என்ன கேட்கிறீர்கள் என உங்களுக்குத் தெரியவில்லை. நான் குடிக்கும் துன்பக்கிண்ணத்தில் உங்களால் குடிக்க இயலுமா? நான் பெறும் திருமுழுக்கை உங்களால் பெற இயலுமா?’ என்று கேட்டார்.
அவர்கள் அவரிடம், ‘எங்களால் இயலும்’ என்றார்கள்.
இயேசு அவர்களை நோக்கி, ’ஆம், நான் குடிக்கும் கிண்ணத்தில் நீங்கள் குடிப்பீர்கள். நான் பெறும் திருமுழுக்கையும் நீங்கள் பெறுவீர்கள். ஆனால், என் வலப்புறத்திலும் இடப்புறத்திலும் அமரும்படி அருளுவதோ எனதுசெயல் அல்ல; மாறாக, அவ்விடங்களை என் தந்தை யாருக்கு ஏற்பாடு செய்திருக்கிறாரோ, அவர்களுக்கே அவை அருளப்படும்’ என்று கூறினார்.
இதைக் கேட்டுக்கொண்டிருந்த பத்துப் பேரும், யாக்கோபுமீதும் யோவான்மீதும் கோபங்கொள்ளத் தொடங்கினர்.
பெரியவராக இருக்க விரும்புகிறவர் தொண்டராய் இருக்கட்டும்
இயேசு அவர்களை வரவழைத்து, அவர்களிடம், ’பிறஇனத்தவரிடையே, தலைவர்கள் எனக் கருதப்படுகிறவர்கள் மக்களை அடக்கி ஆளுகிறார்கள். அவர்களுள் பெரியவர்களான உயர்குடிமக்கள், அவர்கள்மீது தங்கள் அதிகாரத்தைக் காட்டுகிறார்கள். இதை நீங்கள் அறிவீர்கள். ஆனால் உங்களிடையே அப்படி இருக்கக்கூடாது.
உங்களுள் பெரியவராக இருக்க விரும்புகிறவர், உங்கள் தொண்டராய் இருக்கட்டும். உங்களுள் முதன்மையானவராக இருக்க விரும்புகிறவர், அனைவருக்கும் பணியாளராக இருக்கட்டும். இவ்வாறே, மானிடமகன் தொண்டு-ஏற்பதற்கு அல்ல, மாறாகத் தொண்டு-ஆற்றுவதற்கும், பலருடைய மீட்புக்கு ஈடாகத் தம் உயிரைக் கொடுப்பதற்கும் வந்தார்’ என்று கூறினார்.
15. வரிதண்டுவோரின் தலைவர் சக்கேயுவின் மீட்பு
எரிகோ கிபி 32
பார்வை பெற்ற பர்த்திமேயு
இயேசுவும், அவருடைய சீடரும் எரிகோவுக்கு வந்தனர். அவர்கள் எரிகோவை விட்டு வெளியே சென்றபோது, பெருந்திரளான மக்கள் அவரைப் பின்தொடர்ந்தனர். அப்பொழுது, திமேயுவின் மகன் பர்த்திமேயு வழியோரம் அமர்ந்திருந்தார். பார்வையற்ற அவர் பிச்சை எடுத்துக்கொண்டிருந்தார். (பார்வையற்ற இருவர் என்று மத்தேயு நற்செய்தியில் கூறப்பட்டுள்ளது)
மக்கள்கூட்டம் கடந்து போய்க்கொண்டிருந்ததைக் கவனித்த அவர், ’இது என்ன?’ என்று வினவினார். நாசரேத்து இயேசு போய்க்கொண்டிருக்கிறார் என்று அவருக்குத் தெரிவித்தார்கள்.
’தாவீதின் மகனே, எனக்கு இரங்கும்
நாசரேத்து இயேசுதாம் போகிறார் என்று அவர் கேள்விப்பட்டதும், ’இயேசுவே, தாவீதின் மகனே, எனக்கு இரங்கும்’ என்று கூக்குரலிட்டார். முன்னே சென்றுகொண்டிருந்தவர்கள் அமைதியாய் இருக்குமாறு அவரை அதட்டினார்கள். ஆனால் அவர், ’தாவீதின் மகனே, எனக்கு இரங்கும்’ என்று இன்னும் உரக்கக் கத்தினார்.
இயேசு நின்று, அவரைத் தம்மிடம் கூட்டிக்கொண்டுவரும்படி ஆணையிட்டார்.
அவர்கள், பார்வையற்ற அவரைக் கூப்பிட்டு, ’துணிவுடன் எழுந்துவாரும், இயேசு உம்மைக் கூப்பிடுகிறார்’ என்றார்கள். அவரும் தம் மேலுடையை எறிந்துவிட்டு, குதித்தெழுந்து இயேசுவிடம் வந்தார்.
அவர் நெருங்கி வந்ததும், ’நான் உமக்கு என்ன செய்யவேண்டும் என விரும்புகிறீர்’ என்று இயேசு கேட்டார். அதற்கு அவர், ’ஆண்டவரே, நான் மீண்டும் பார்வைபெற வேண்டும்’ என்றார்.
பர்த்திமேயு இயேசுவைப் பின்பற்றி வழிநடந்தார்
இயேசு அவரிடம், ’பார்வைபெறும் உமது நம்பிக்கை உம்மை நலமாக்கிற்று’ என்றார். அவர் உடனே பார்வைபெற்று, கடவுளைப் போற்றிப் புகழ்ந்துகொண்டே இயேசுவைப் பின்பற்றி, அவருடன் வழிநடந்தார். இதைக்கண்ட மக்கள் யாவரும் கடவுளைப் புகழ்ந்தனர்.
இயேசுவைப் பார்க்க விரும்பிய சக்கேயு எரிகோ கிபி 32
இயேசு எரிகோவுக்குச் சென்று, அந்நகர்-வழியே போய்க்கொண்டிருந்தார்.
அங்கு சக்கேயு என்னும் பெயருடைய செல்வர் ஒருவர் இருந்தார். அவர் வரிதண்டுவோருக்குத் தலைவர். இயேசு யார்? என்று அவர் பார்க்கவிரும்பினார்;
மக்கள் திரளாய்க் கூடியிருந்தால் அவரைப் பார்க்கமுடியவில்லை. ஏனெனில், சக்கேயு குட்டையாய் இருந்தார். அவர் முன்னே ஓடிப்போய், அவரைப் பார்ப்பதற்காக ஒரு காட்டு-அத்தி மரத்தில் ஏறிக்கொண்டார். இயேசு அவ்வழியேதான் வரவிருந்தார்.
உமது வீட்டில் நான் தங்கவேண்டும்
இயேசு அந்த இடத்திற்கு வந்தவுடன், அண்ணாந்து பார்த்து, அவரிடம், ’சக்கேயு, விரைவாய் இறங்கிவாரும்; இன்று, உமது வீட்டில் நான் தங்கவேண்டும்’ என்றார்.
அவர் விரைவாய் இறங்கிவந்து, மகிழ்ச்சியோடு அவரை வரவேற்றார்.
இதைக்கண்ட யாவரும், ’பாவியிடம் தங்கப்போயிருக்கிறாரே இவர்’ என்று முணுமுணுத்தனர்.
சக்கேயுவின் மனமாற்றமும் மீட்பும்
சக்கேயு எழுந்துநின்று, ’ஆண்டவரே, என் உடைமைகளில் பாதியை ஏழைகளுக்குக் கொடுத்துவிடுகிறேன்; எவர் மீதாவது பொய்க்குற்றம் சுமத்தி, எதையாவது கவர்ந்திருந்தால், நான் அதை நான்கு-மடங்காகத் திருப்பிக் கொடுத்துவிடுகிறேன்’ என்று அவரிடம் கூறினார்.
இயேசு அவரை நோக்கி, ’இன்று இந்த வீட்டிற்கு மீட்பு உண்டாயிற்று; ஏனெனில், இவரும் ஆபிரகாமின் மகனே! இழந்து-போனதைத் தேடி மீட்கவே மானிடமகன் வந்திருக்கிறார்’ என்று சொன்னார்.
16. இரண்டாம் வருகையில் இயேசுவின் தீர்ப்பு
எருசலேம் கிபி 32
இயேசு எருசலேமை நெருங்கி வந்துகொண்டிருந்தார். அவர் சொன்னதைக் கேட்டுக்கொண்டிருந்தவர்கள், இறையாட்சி உடனடியாகத் தோன்றப்போகிறது என்று நினைத்தார்கள். அப்போது இயேசு, மேலும் ஓர் உவமையைச் சொன்னார்:
மினா நாணய உவமை (இறையாட்சியின் நற்செய்தி)
’உயர்குடிமகன் ஒருவர், ஆட்சியுரிமை பெற்றுவரத் தொலைநாட்டிற்குப் போகப் புறப்பட்டார். அப்போது அவர், தம் பணியாளர்கள் பத்துப்பேரை அழைத்து, பத்து மினாக்களை அவர்களிடம் கொடுத்து, அவர்களை நோக்கி, 'நான் வரும்வரை இவற்றைவைத்து வாணிகம் செய்யுங்கள்’ என்று சொன்னார். (இயேசு விண்ணுலகம் செல்வதற்கு முன்னர், இறையாட்சியின் நற்செய்தியை அறிவிக்குமாறு தம் சீடர்களுக்கு ஆணையிட்டார்)
அவருடைய குடிமக்களோ, அவரை வெறுத்தனர். எனவே, ’இவர் அரசராக இருப்பது எங்களுக்கு விருப்பமில்லை’ என்று சொல்லித் தூது அனுப்பினர். (இஸ்ரயேலர் இயேசுவை தங்கள் அரசராக ஏற்றுக்கொள்ளவில்லை,. சீசரே எங்கள் அரசர் என்றார்கள். இயேசுவைச் சிலுவையில் அறைந்தார்கள்.)
இருப்பினும் அவர் ஆட்சியுரிமை பெற்றுத் திரும்பிவந்தார். (இயேசு, விண்ணுலகம் சென்று, சிறிது காலம் கடந்தபின், அரசராகத் திரும்பிவந்தார்.)
இயேசுவின் தீர்ப்புநாள்
பின்னர், தம்மிடம் பணம் வாங்கியிருந்த பணியாளர் ஒவ்வொருவரும் ஈட்டியது எவ்வளவு? என்று அறிய, அவர் அவர்களைக் கூப்பிட்டு அனுப்பினார். (நற்செய்தியை அறிவித்த சீடர்களிடம் கணக்குக் கேட்கப்பட்டது. )
இறையாட்சியை சொல்லாலும் செயலாலும் அறிவித்தவர்கள்
முதலாம் பணியாளர் வந்து, ’ஐயா, உமது மினாவைக்கொண்டு பத்து மினாக்களைச் சேர்த்துள்ளேன்’ என்றார். அதற்கு அவர் அவரிடம், ’நன்று, நல்ல பணியாளரே, மிகச்சிறிய பொறுப்புகளில் நம்பிக்கைக்கு உரியவராய் இருந்தீர். எனவே, பத்து நகர்களுக்கு அதிகாரியாய் இரும்’ என்றார். இரண்டாம் பணியாளர் வந்து, ’ஐயா உமது மினாவைக்கொண்டு ஐந்து மினாக்களை ஈட்டியுள்ளேன்’ என்றார். அவர், ‘எனவே, நீர் ஐந்து நகர்களுக்கு அதிகாரியாய் இரும்’ என்று அவரிடமும் சொன்னார். (இறையாட்சியை ஏற்றுக்கொண்டு, தம் சொல்லும் செயலாலும் மற்றவர்களுக்கும் அறிவித்தவர்கள் நிலைவாழ்வில் பரிசளிக்கப்பட்டார்)
கேட்டும் செயல்படுத்தாமல் வாழ்பவர்
வேறொருவர் வந்து, ’ஐயா, இதோ உமது மினா. ஒரு கைக்குட்டையில் முடிந்து வைத்திருக்கிறேன். ஏனெனில், நீர் கண்டிப்புள்ளவர் என்று உமக்கு அஞ்சி இப்படிச் செய்தேன். நீர் வைக்காததை எடுக்கிறவர்; நீர் விதைக்காததை அறுக்கிறவர்’ என்றார். (ஒருவர் இறையாட்சியின் நற்செயத்தியைக் கேட்டாலும். அதை அறிந்துகொள்ளவோ, அதன்படி செயல்படவோ, அதை அறிவிக்கவோ விரும்பவில்லை.)
அதற்கு அவர் அவரிடம், ’பொல்லாத பணியாளே, உன் வாய்ச் சொல்லைக்கொண்டே உனக்குத் தீர்ப்பிடுகிறேன். நான் கண்டிப்பானவன்; வைக்காததை எடுக்கிறவன்; விதைக்காததை அறுக்கிறவன் என உனக்குத் தெரியுமல்லவா? அப்படியானால், ஏன் என் பணத்தை வட்டிக்கடையில் கொடுத்து வைக்கவில்லை? நான்வந்து அதை வட்டியோடு சேர்த்துப் பெற்றிருப்பேனே’ என்றார். (இறையாட்சியை காதால் கேட்டும், அதை அறியாமலும், கைக்கொள்ளாமலும், அதை அறிவிக்காமலும், தன்னலத்துடன் உலகில் வாழ்ந்தவர் தம் வாழ்வை வீணாக்கினார்.)
பின்பு அருகில் நின்றவர்களிடம், ’அந்த மினாவை அவனிடமிருந்து எடுத்து, பத்து மினாக்கள் உள்ளவருக்குக் கொடுங்கள்’ என்றார். அதற்கு அவர்கள், ’ஐயா, அவரிடம் பத்து மினாக்கள் இருக்கின்றனவே’ என்றார்கள். அவரோ, ’உள்ளவர் எவருக்கும் கொடுக்கப்படும். இல்லாதோரிடமிருந்து உள்ளதும் எடுக்கப்படும்’ என உங்களுக்குச் சொல்கிறேன்’ என்றார். (இறையாட்சியை அறிந்து,, தம் சொல்லாலும் செயலாலும் அதை ஆர்வத்துடன் அறிவிப்போருக்கு இறைவனின் பரிசு காத்திருக்கிறது. )
மேலும் அவர், ’நான் அரசனாக இருப்பதை விரும்பாத என் பகைவர்களை இங்குக்கொண்டுவந்து என்முன் படுகொலை செய்யுங்கள்’ என்று சொன்னார். (இயேசுவின் நற்செய்தியை ஏற்காத இஸ்ரயேலர்களும், குருக்களும் தலைவர்களும் பழைய உடன்படிக்கையின் பேறுகளை இழந்தார்கள்)