1. இயேசுவுக்கு வழியை ஆயத்தம்செய்த யோவான்
குழந்தையாயிருந்த யோவான் வளர்ந்து, மனவலிமை பெற்றார். இஸ்ரயேல் மக்களுக்குத் தம்மை வெளிப்படுத்தும் காலம்வரை, அவர் பாலைநிலத்தில் வாழ்ந்து வந்தார்.
திபேரியு சீசர் ஆட்சி செய்துவந்த பதினைந்தாம் ஆண்டில், பொந்தியு பிலாத்து யூதேயாவின் ஆளுநராக இருந்தார். ஏரோது கலிலேயப் பகுதிக்கும், அவன் சகோதரராகிய பிலிப்பு இத்துரேயா, திரக்கோனித்துப் பகுதிகளுக்கும், லிசானியா அபிலேன் பகுதிக்கும் குறுநில மன்னர்களாக இருந்தனர். அன்னாவும் கயபாவும் தலைமைக் குருக்களாய் இருந்தனர்.
பாலை நிலத்தில் குரல் யோர்தான் கிபி 29
அக்காலத்தில், செக்கரியாவின் மகன் யோவான், யூதேயாவின் பாலைநிலத்தில் வாழ்ந்துவந்தார். அவர் கடவுளின் வாக்கைப் பெற்றார். 'பாவமன்னிப்பு அடைய, மனம்மாறித் திருமுழுக்குப் பெறுங்கள், ஏனெனில் விண்ணரசு நெருங்கி வந்துவிட்டது’ என்று யோர்தான்-ஆற்றை அடுத்துள்ள பகுதிகள் அனைத்துக்கும் சென்று, அவர் பறைசாற்றிவந்தார்.
இதைப்பற்றி : 'இதோ, என் தூதனை உமக்குமுன் அனுப்புகிறேன்; அவர் உமக்கு வழியை ஆயத்தம் செய்வார். பாலைநிலத்தில் குரல்ஒன்று முழங்குகிறது; ’ஆண்டவருக்காக வழியை ஆயத்தமாக்குங்கள்; அவருக்காக பாதையைச் செம்மையாக்குங்கள்; பள்ளத்தாக்குகள் எல்லாம் நிரப்பப்படும்; மலை, குன்றுயாவும் தாழ்த்தப்படும்; கோணலானவை நேராக்கப்படும்; கரடு முரடானவை சமதளமாக்கப்படும். மனிதர் அனைவரும் கடவுள் அருளும் மீட்பைக் காண்பர்″. என்று இறைவாக்கினர் எசாயாவின் நூலில் எழுதப்பட்டுள்ளது
இந்த யோவான், ஒட்டக முடியாலான ஆடையை அணிந்திருந்தார்; தோல் கச்சையை இடையில் கட்டி இருந்தார்; வெட்டுக்கிளியும் காட்டுத்தேனும் உண்டு வந்தார்.
எருசலேமிலும், யூதேயா முழுவதிலும், யோர்தான் ஆற்றை அடுத்துள்ள பகுதிகளனைத்திலும் இருந்தவர்கள் அவரிடம் சென்றார்கள். அவர்கள் தங்கள் பாவங்களை அறிக்கையிட்டு, யோர்தான் ஆற்றில், அவரிடம் திருமுழுக்குப் பெற்றுவந்தார்கள்.
திருமுழுக்கு யோவானின் முழக்கம்
பரிசேயர்-சதுசேயருள் பலர் தம்மிடம் திருமுழுக்குப் பெறப் புறப்பட்டு வருவதைக் கண்டு, அவர், அவர்களை நோக்கி, 'விரியன்பாம்புக் குட்டிகளே, வரப்போகும் சினத்திலிருந்து தப்பிக்கஇயலும் என உங்களிடம் சொன்னவர் யார்? மனம்மாறியவர்கள் என்பதை, அதற்கேற்ற செயல்களால் காட்டுங்கள்;. ″ஆபிரகாம் எங்களுக்குத் தந்தை″ என உங்களிடையே சொல்லிப் பெருமைகொள்ள வேண்டாம். இக்கற்களிலிருந்தும் ஆபிரகாமுக்குப் பிள்ளைகளைத் தோன்றச்செய்யக் கடவுள் வல்லவர் என உங்களுக்குச் சொல்கிறேன். ஏற்கெனவே மரங்களின் வேர்அருகே கோடரி வைத்தாயிற்று. நற்கனி தரா மரங்கள் எல்லாம் வெட்டப்பட்டுத் தீயில் போடப்படும்’ என்றார்.
திருமுழுக்கு யோவானின் ஆயத்தப்பணி
அப்போது, 'நாங்கள் என்ன செய்ய வேண்டும்?’ என்று கூட்டத்தினர் அவரிடம் கேட்டனர். அதற்கு அவர் மறுமொழியாக, 'இரண்டு அங்கிகளை உடையவர் இல்லாதவரோடு பகிர்ந்துகொள்ளட்டும்; உணவை உடையவரும் அவ்வாறே செய்யட்டும்’ என்றார்.
வரிதண்டுவோரும் திருமுழுக்குப்பெற வந்து, 'போதகரே, நாங்கள் என்ன செய்யவேண்டும்?’ என்று அவரிடம் கேட்டனர். அவர், 'உங்களுக்குக் குறிக்கப்பட்ட தொகைக்கு அதிகமாக எதையும் தண்டாதீர்கள்’ என்றார்.
படைவீரரும் அவரை நோக்கி, 'நாங்கள் என்ன செய்ய வேண்டும்?’ என்று கேட்டனர். அவர், 'நீங்கள் எவரையும் அச்சுறுத்திப் பணம்-பறிக்காதீர்கள்; யார்மீதும் பொய்க்குற்றம் சுமத்தாதீர்கள்; உங்கள் ஊதியமே போதும் என்றிருங்கள்’ என்றார்.
அக்காலத்தில், மக்கள் மீட்பரை எதிர்பார்த்துக் கொண்டிருந்தார்கள். 'ஒருவேளை யோவான் மெசியாவாக இருப்பாரோ' என்று எல்லாரும் தங்களுக்குள் எண்ணிக்கொண்டிருந்தார்கள்.
2. இயேசுவின் திருமுழுக்கு
யோர்தான் கிபி 29
இயேசு தம் பணியைத் தொடங்கியபோது, அவருக்கு வயது ஏறக்குறைய முப்பது.
யோவானிடம் திருமுழுக்குப் பெற, இயேசு கலிலேயாவிலிருந்து யோர்தானுக்கு வந்தார். யோவான், 'நான்தான் உம்மிடம் திருமுழுக்குப் பெற வேண்டியவன்; நீரா என்னிடம் வருகிறீர்?’ என்று கூறித் தடுத்தார்.
இயேசு, 'இப்பொழுது விட்டுவிடும். கடவுளுக்கு ஏற்புடையவை அனைத்தையும் நாம் நிறைவேற்றுவதுதான் முறை’ எனப் பதிலளித்தார். அதற்கு யோவானும் இணங்கினார்.
கடவுளின் அன்பு மகன்
மக்களெல்லாரும் திருமுழுக்குப்பெறும் வேளையில், இயேசுவும் திருமுழுக்குப் பெற்று, இறைவனிடம் வேண்டிக்கொண்டிருந்தபோது, வானம் திறந்தது. தூயஆவி, புறா-வடிவில் தோன்றி, அவர்மீது இறங்கியது அப்பொழுது, 'என் அன்பார்ந்த மகன் நீயே, உன்பொருட்டு நான் பூரிப்படைகிறேன்’ என்று வானத்திலிருந்து ஒரு குரல் ஒலித்தது
நீஇயேசு சோதிக்கப்பட்டார் யூதேய பாலைநிலம் கிபி 29
இயேசு, தூயஆவியால் ஆட்கொள்ளப்பட்டு, யோர்தான் ஆற்றை விட்டுத் திரும்பினார். அதன்பின் இயேசு, அலகையினால் சோதிக்கப்படுவதற்காகப் பாலைநிலத்திற்குத் தூயஆவியால் அழைத்துச் செல்லப்பட்டார். அங்குக் காட்டுவிலங்குகளிடையே இருந்தார். அவர் நாற்பதுநாள் அலகையினால் சோதிக்கப்பட்டார். அந்த நாற்பதுநாள் இரவும் பகலும் நோன்பிருந்தார். அதன்பின் அவர் பசியுற்றார்.
வாழ்வைத்தருவது கடவுளின் வார்த்தையே
சோதிக்கிறவன் அவரை அணுகி, 'நீர் இறைமகன் என்றால், இந்தக் கற்கள் அப்பமாகும்படி கட்டளையிடும்’ என்றான்.
இயேசு மறுமொழியாக, 'மனிதர் அப்பத்தினால்மட்டும் வாழ்வதில்லை. மாறாக, கடவுளின் வாய்ச்சொல் ஒவ்வொன்றாலும் வாழ்வர்’ என மறைநூலில் எழுதியுள்ளதே’ என்றார்.
கடவுளை சோதிக்கவேண்டாம்
பின்னர், அலகை அவரை எருசலேம் திருநகரத்திற்குக் கூட்டிச் சென்றது. கோவிலின் உயர்ந்த பகுதியில் அவரை நிறுத்தி, 'நீர் இறைமகன் என்றால், இங்கிருந்து கீழே குதியும்; 'உம்மைப் பாதுகாக்கும்படி, கடவுள் தம் தூதருக்கு உம்மைக்குறித்துக் கட்டளையிடுவார். உமது கால், கல்லில் மோதாதபடி, அவர்கள் தங்கள் கைகளில் உம்மைத் தாங்கிக் கொள்வார்கள்’ என்று மறைநூலில் எழுதியுள்ளது’ என்று அலகை அவரிடம் சொன்னது.
இயேசு அதனிடம் மறுமொழியாக, ’″உன் கடவுளாகிய ஆண்டவரைச் சோதிக்கவேண்டாம்″ எனவும் எழுதியுள்ளதே’ என்று சொன்னார்.
உலக வாழ்வா, நிலைவாழ்வா?
மறுபடியும், அலகை அவரை மிக உயர்ந்த ஒரு மலைக்குக் கூட்டிச் சென்று, உலகத்தின் அரசுகள் அனைத்தையும், அவற்றின் மேன்மையையும் ஒரு நொடிப்பொழுதில் அவருக்குக் காட்டி, அவரிடம், 'இவற்றின்மேல் முழு அதிகாரத்தையும், இவற்றின் மேன்மையையும் உமக்குக் கொடுப்பேன். இவை யாவும் என்னிடம் ஒப்படைக்கப்பட்டிருக்கின்றன; நான் விரும்பியவருக்கு இவற்றைக் கொடுப்பேன். நீர் நெடுஞ்சாண் கிடையாக விழுந்து என்னை வணங்கினால் இவை அனைத்தையும் உமக்குத் தருவேன்’ என்றது.
அப்போது இயேசு அதனைப் பார்த்து , 'அகன்று போ, சாத்தானே, ″உன் கடவுளாகிய ஆண்டவரை வணங்கி, அவர் ஒருவருக்கே பணி செய்வாயாக″ என்றும் மறைநூலில் எழுதியுள்ளது’ என்றார்.
அலகை, சோதனைகள் அனைத்தையும் முடித்தபின்பு, அவரைவிட்டு அகன்றது. உடனே வானதூதர் வந்து அவருக்குப் பணிவிடை செய்தனர்.
3. இயேசுவுக்கு சான்றுபகர்ந்த யோவான்
யோர்தான் கிபி 29
எருசலேமிலுள்ள யூதர்கள், குருக்களையும் லேவியர்களையும் யோவானிடம் அனுப்பி, 'நீர் யார்?’ என்று கேட்டபோது, அவர், 'நான் மெசியா அல்ல’ என்று அறிவித்தார். இதை அவர் வெளிப்படையாகக் கூறி, மறுக்காமல் ஒப்புக்கொண்டார். அப்போது, 'அப்படியானால் நீர் யார்? நீர் எலியாவா?’ என்று அவர்கள் கேட்க, அவர், 'நானல்ல’ என்றார். 'நீர் தாம் வர வேண்டிய இறைவாக்கினரா?’ என்று கேட்டபோதும், அவர், 'இல்லை’ என்று மறுமொழி கூறினார்.
அவர்கள் அவரிடம், 'நீர் யார்? எங்களை அனுப்பியவர்களிடம் நாங்கள் மறுமொழி சொல்லியாக வேண்டும்; எனவே, உம்மைப்பற்றி என்ன சொல்கிறீர்?’ என்று கேட்டார்கள். அதற்கு அவர், ’″ஆண்டவருக்காக வழியைச் செம்மையாக்குங்கள் எனப் பாலைநிலத்தில் குரல் ஒன்று கேட்கிறது″ என்று இறைவாக்கினர் எசாயா உரைத்தது என்னைப்பற்றியே’ என்றார்.
யோவானின் சான்று 1 இயேசுவே தூயஆவியால் திருமுழுக்கு கொடுப்பவர்
பரிசேயரால் அனுப்பப்பட்ட அவர்கள், அவரிடம், 'நீர் மெசியாவோ, எலியாவோ, வர வேண்டிய இறைவாக்கினரோ அல்லவென்றால், ஏன் திருமுழுக்குக் கொடுக்கிறீர்?’ என்று கேட்டார்கள்.
யோவான் அவர்களிடம், 'நீங்கள் மனம்மாறுவதற்காக நான் தண்ணீரால் உங்களுக்குத் திருமுழுக்குக் கொடுக்கிறேன்; ஆனால் என்னைவிட வலிமைமிக்க ஒருவர் வருகிறார். நீங்கள் அறியாத ஒருவர் உங்களிடையே நிற்கிறார்; அவர் எனக்குப் பின் வருபவர். குனிந்து அவருடைய மிதியடி வாரை அவிழ்க்கவோ, அவருடைய மிதியடிகளைத் தூக்கிச் செல்லவோ எனக்குத் தகுதியில்லை. அவர் தூயஆவி என்னும் நெருப்பால் உங்களுக்குத் திருமுழுக்குக் கொடுப்பார்.
யோவானின் சான்று 2 - இயேசுவே தீர்ப்பளிப்பவர்
அவர் சுளகைத் தம் கையில் கொண்டு, கோதுமையையும் பதரையும் பிரித்தெடுப்பார். கோதுமையைத் தம் களஞ்சியத்தில் சேர்ப்பார்; பதரையோ அணையா நெருப்பிலிட்டுச் சுட்டெரிப்பார்’ என்றார். மேலும் பல அறிவுரைகள் கூறி, மக்களுக்கு நற்செய்தியை அறிவித்தார்.
இவை யாவும் யோர்தான் ஆற்றுக்கு அக்கரையிலுள்ள பெத்தானியாவில் நிகழ்ந்தன. அங்குதான் யோவான் திருமுழுக்குக் கொடுத்துக் கொண்டிருந்தார்.
யோவானின் சான்று 3 – உலகின் பாவத்தை போக்கும் ஆட்டுக்குட்டி
மறுநாள் இயேசு தம்மிடம் வருவதைக் கண்ட யோவான், 'இதோ! கடவுளின் ஆட்டுக்குட்டி! ஆட்டுக்குட்டியாம் இவரே உலகின் பாவத்தைப் போக்குபவர். எனக்குப்பின் வரும் இவர், என்னைவிட முன்னிடம் பெற்றவர்; ஏனெனில் ‘எனக்கு முன்பே இருந்தார்’ என்று நான் இவரைப்பற்றியே சொன்னேன்.
தொடர்ந்து யோவான் சான்றாகக் கூறியது: ‘இவர் யாரென்று எனக்கும் தெரியாதிருந்தது. ஆனால் இஸ்ரயேல் மக்களுக்கு இவரை வெளிப்படுத்தும் பொருட்டே நான் வந்துள்ளேன்; தண்ணீரால் திருமுழுக்குக் கொடுக்கும்படி என்னை அனுப்பியவர் 'தூயஆவி இறங்கி யார்மீது இருப்பதைக் காண்பீரோ, அவரே தூயஆவியால் திருமுழுக்குக் கொடுப்பவர்’ என்று என்னிடம் சொல்லியிருந்தார். தூயஆவி புறாவைப்போல வானிலிருந்து இறங்கி, இவர்மீது இருந்ததை நானும் கண்டேன்; இவரே இறைமகன் எனச் சான்றும் கூறிவருகிறேன்.'‘
4. இயேசுவின் முதல் ஐந்து சீடர்கள்
அந்திரேயாவும் மற்றோருவரும் சீடரானார்கள் யோர்தான் கிபி 29
மறுநாள், யோவான் தம் சீடர் இருவருடன் மீண்டும் அங்கு நின்று கொண்டிருந்தார். இயேசு அப்பக்கம் நடந்து சென்று கொண்டிருந்தார். யோவான் அவரைக் கூர்ந்து பார்த்து, 'இதோ! கடவுளின் ஆட்டுக்குட்டி’ என்றார். அந்தச் சீடர் இருவரும் அவர் சொன்னதைக் கேட்டு இயேசுவைப் பின்தொடர்ந்தனர்.
இயேசு திரும்பிப் பார்த்து, அவர்கள் தம்மைப் பின் தொடர்வதைக் கண்டு, 'என்ன தேடுகிறீர்கள்?’ என்று அவர்களிடம் கேட்டார். அவர்கள், 'ரபி, நீர் எங்கே தங்கியிருக்கிறீர்?’ என்று கேட்டார்கள். அவர் அவர்களிடம், 'வந்து பாருங்கள்’ என்றார். அவர்களும் சென்று, அவர் தங்கியிருந்த இடத்தைப் பார்த்தார்கள். அப்போது ஏறக்குறைய மாலை நான்கு மணி. அன்று அவர்கள் அவரோடு தங்கினார்கள்.
யோவான் சொன்னதைக் கேட்டு, இயேசுவைப் பின்தொடர்ந்த இருவருள் அந்திரேயா ஒருவர். அவர் சீமோன் பேதுருவின் சகோதரர்.
சீமோன் பேதுரு
அந்திரேயா போய், முதலில் தம் சகோதரரான சீமோனைப் பார்த்து, 'மெசியாவைக் கண்டோம்’ என்றார். 'மெசியா’ என்றால் அருள்பொழிவு பெற்றவர் என்பது பொருள்.
பின்பு அவர் சீமோனை இயேசுவிடம் அழைத்து வந்தார். இயேசு அவரைக் கூர்ந்து பார்த்து, 'நீ யோவானின் மகன் சீமோன். இனி 'கேபா’ எனப்படுவாய்’ என்றார். 'கேபா’ என்றால் 'பாறை’ என்பது பொருள்.
பிலிப்பு, நத்தனியேல் சீடரானர்
மறுநாள் இயேசு கலிலேயாவுக்குச் செல்ல விரும்பினார். அப்போது அவர் பிலிப்பைக் கண்டு, 'என்னைப் பின்தொடர்ந்து வா’ எனக் கூறினார். பிலிப்பு பெத்சாய்தா என்னும் ஊரைச் சேர்ந்தவர். அந்திரேயா, பேதுரு ஆகியோரும் இவ்வூரையே சேர்ந்தவர்கள்.
பிலிப்பு நத்தனியேலைப் போய்ப் பார்த்து, 'இறைவாக்கினர்களும் திருச்சட்ட நூலில் மோசேயும் குறிப்பிட்டுள்ளவரை நாங்கள் கண்டுகொண்டோம். நாசரேத்தைச் சேர்ந்த யோசேப்பின் மகன் இயேசுவே அவர்’ என்றார். அதற்கு நத்தனியேல், 'நாசரேத்திலிருந்து நல்லது எதுவும் வர முடியுமோ?’ என்று கேட்டார். பிலிப்பு அவரிடம், 'வந்து பாரும்’ என்று கூறினார்.
நத்தனியேல் தம்மிடம் வருவதை இயேசு கண்டு, 'இவர் உண்மையான இஸ்ரயேலர், கபடற்றவர்’ என்று அவரைக் குறித்துக் கூறினார். நத்தனியேல், 'என்னை உமக்கு எப்படித் தெரியும்?’ என்று அவரிடம் கேட்டார். இயேசு, 'பிலிப்பு உம்மைக் கூப்பிடுவதற்கு முன்பு, நீர் அத்திமரத்தின்கீழ் இருந்தபோதே நான் உம்மைக் கண்டேன்’ என்று பதிலளித்தார்.
நத்தனியேல் அவரைப் பார்த்து, 'ரபி, நீர் இறை மகன்; நீரே இஸ்ரயேல் மக்களின் அரசர்’ என்றார்.
அதற்கு இயேசு, 'உம்மை அத்திமரத்தின்கீழ் கண்டேன் என்று உம்மிடம் சொன்னதாலா நம்புகிறீர்? இதைவிடப் பெரியவற்றைக் காண்பீர்’ என்றார்.
மேலும், 'வானம் திறந்திருப்பதையும், கடவுளின் தூதர்கள் மானிடமகன்மீது ஏறுவதையும் இறங்குவதையும் காண்பீர்கள் என மிக உறுதியாக உங்களுக்குச் சொல்கிறேன்’ என்று அவரிடம் கூறினார்.
5, இயேசு செய்த முதல் அரும் அடையாளம்
கானா கிபி 29
மூன்றாம் நாள், கலிலேயாவில் உள்ள கானாவில் திருமணம் ஒன்று நடைபெற்றது. இயேசுவின் தாயும் அங்கு இருந்தார். இயேசுவும் அவருடைய சீடரும் அத்திருமணத்திற்கு அழைப்புப் பெற்றிருந்தனர்.
திருமண விழாவில் திராட்சை இரசம் தீர்ந்துபோகவே, இயேசுவின் தாய் அவரை நோக்கி, ″திராட்சை இரசம் தீர்ந்துவிட்டது″ என்றார். இயேசு அவரிடம், 'அம்மா, அதைப்பற்றி நாம் என்ன செய்யமுடியும்? எனது நேரம் இன்னும் வரவில்லையே’ என்றார். இயேசுவின் தாய் பணியாளரிடம், 'அவர் உங்களுக்குச் சொல்வதெல்லாம் செய்யுங்கள்’ என்றார்.
யூதரின் தூய்மைச் சடங்குகளுக்குத் தேவையான ஆறு கல்தொட்டிகள் அங்கே இருந்தன. அவை ஒவ்வொன்றும் இரண்டு மூன்று குடம் தண்ணீர்கொள்ளும். இயேசு அவர்களிடம், 'இத்தொட்டிகளில் தண்ணீர் நிரப்புங்கள்’ என்று கூறினார். அவர்கள் அவற்றை விளிம்புவரை நிரப்பினார்கள். பின்பு அவர், 'இப்போது மொண்டு, பந்தி-மேற்பார்வையாளரிடம் கொண்டு போங்கள்’ என்று அவர்களிடம் கூறினார். அவர்களும் அவ்வாறே செய்தார்கள்.
பந்தி-மேற்பார்வையாளர் திராட்சை இரசமாய் மாறியிருந்த தண்ணீரைச் சுவைத்தார். அந்த இரசம் எங்கிருந்து வந்தது என்று அவருக்குத் தெரியவில்லை; தண்ணீரை மொண்டுவந்த பணியாளருக்கே தெரிந்திருந்தது.
ஆகையால், பந்தி-மேற்பார்வையாளர் மணமகனைக் கூப்பிட்டு, 'எல்லாரும் நல்ல திராட்சை இரசத்தை முதலில் பரிமாறுவர்; யாவரும் விருப்பம்போலக் குடித்தபின்தான் தரம்குறைந்த இரசத்தைப் பரிமாறுவர். நீர் நல்ல இரசத்தை இதுவரை பரிமாறாமல் ஏன் வைத்திருந்தீர்?’ என்று கேட்டார்.
இதுவே இயேசு செய்த முதல் அரும்அடையாளம். இது கலிலேயாவில் உள்ள கானாவில் நிகழ்ந்தது. இதன்வழியாக, அவர் தம் மாட்சியை வெளிப்படுத்தினார். அவருடைய சீடரும் அவரிடம் நம்பிக்கை கொண்டனர்.
இதன்பிறகு, அவரும், அவர் தாயும், சகோதரர்களும், அவருடைய சீடரும் கப்பர்நாகும் சென்று, அங்குச் சிலநாள்கள் தங்கியிருந்தனர்.
பந்தி-மேற்பார்வையாளர் திராட்சை இரசமாய் மாறியிருந்த தண்ணீரைச் சுவைத்தார். அந்த இரசம் எங்கிருந்து வந்தது என்று அவருக்குத் தெரியவில்லை; தண்ணீரை மொண்டுவந்த பணியாளருக்கே தெரிந்திருந்தது. ஆகையால், பந்தி-மேற்பார்வையாளர் மணமகனைக் கூப்பிட்டு, 'எல்லாரும் நல்ல திராட்சை இரசத்தை முதலில் பரிமாறுவர்; யாவரும் விருப்பம்போலக் குடித்தபின்தான் தரம்குறைந்த இரசத்தைப் பரிமாறுவர். நீர் நல்ல இரசத்தை இதுவரை பரிமாறாமல் ஏன் வைத்திருந்தீர்?’ என்று கேட்டார்.
இதுவே இயேசு செய்த முதல் அரும்அடையாளம். இது கலிலேயாவில் உள்ள கானாவில் நிகழ்ந்தது. இதன்வழியாக, அவர் தம் மாட்சியை வெளிப்படுத்தினார். அவருடைய சீடரும் அவரிடம் நம்பிக்கை கொண்டனர்.
இதன்பிறகு, அவரும், அவர் தாயும், சகோதரர்களும், அவருடைய சீடரும் கப்பர்நாகும் சென்று, அங்குச் சிலநாள்கள் தங்கியிருந்தனர்.
6. பாஸ்கா விழாவில் இயேசு
தந்தையின் இல்லத்தைச் சந்தை ஆக்காதீர் எருசலேம் கிபி30
யூதர்களுடைய பாஸ்காவிழா விரைவில் வரவிருந்ததால், இயேசு எருசலேமுக்குச் சென்றார்; கோவிலில் ஆடு, மாடு, புறா விற்போரையும், அங்கே உட்கார்ந்திருந்த நாணயம்-மாற்றுவோரையும் கண்டார்; அப்போது, கயிறுகளால் ஒரு சாட்டை பின்னி, அவர்கள் எல்லாரையும் கோவிலிலிருந்து துரத்தினார்; ஆடுமாடுகளையும் விரட்டினார்; நாணயம்-மாற்றுவோரின் சில்லறைக் காசுகளைக் கொட்டிவிட்டு, மேசைகளையும் கவிழ்த்துப்போட்டார்.
அவர் புறா விற்பவர்களிடம், 'இவற்றை இங்கிருந்து எடுத்துச் செல்லுங்கள்; என் தந்தையின் இல்லத்தைச் சந்தை ஆக்காதீர்கள்’ என்று கூறினார். அப்போது அவருடைய சீடர்கள் 'உம் இல்லத்தின் மீதுள்ள ஆர்வம் என்னை எரித்துவிடும்’ என்று மறைநூலில் எழுதியுள்ளதை நினைவு கூர்ந்தார்கள்.
மூன்று நாளில் கோவிலைக் கட்டிஎழுப்புவேன்
யூதர்கள் அவரைப் பார்த்து, 'இவற்றையெல்லாம் செய்ய உமக்கு உரிமை உண்டு என்பதற்கு, நீர் காட்டும் அடையாளம் என்ன?’ என்று கேட்டார்கள். இயேசு மறுமொழியாக அவர்களிடம், 'இக்கோவிலை இடித்துவிடுங்கள். நான் மூன்று நாளில் இதைக் கட்டிஎழுப்புவேன்’ என்றார். அப்போது யூதர்கள், 'இந்தக் கோவிலைக் கட்ட நாற்பத்தாறு ஆண்டுகள் ஆயிற்றே! நீர் மூன்றே நாளில் இதைக் கட்டி எழுப்பிவிடுவீரோ?’ என்று கேட்டார்கள்.
ஆனால், அவர், தம் உடலாகிய கோவிலைப்பற்றியே பேசினார். அவர் இறந்து உயிருடன் எழுப்பப்பட்டபோது, அவருடைய சீடர், அவர் இவ்வாறு சொல்லியிருந்ததை நினைவுகூர்ந்து, மறைநூலையும் இயேசுவின் கூற்றையும் நம்பினர்.
எருசலேமில் இயேசு செய்த அரும் அடையாளங்கள்
பாஸ்கா விழாவின்போது, இயேசு எருசலேமில் இருந்த வேளையில், அவர் செய்த அரும் அடையாளங்களைக் கண்டு, பலர் அவரது பெயரில் நம்பிக்கை வைத்தனர். ஆனால் இயேசு அவர்களை நம்பிவிடவில்லை; ஏனெனில், அவருக்கு அனைவரைப் பற்றியும் தெரியும். மனிதரைப் பற்றி அவருக்கு யாரும் எடுத்துச் சொல்லத் தேவையில்லை. ஏனெனில், மனித உள்ளத்தில் இருப்பதை அவர் அறிந்திருந்தார்.
7. மறுபடியும் பிறக்காவிட்டால் இறையாட்சிக்கு உட்படமுடியாது
எருசலேம் கிபி 30
பரிசேயர் ஒருவர் இருந்தார்; அவர் பெயர் நிக்கதேம். அவர் யூதத் தலைவர்களுள் ஒருவர். ஓர் இரவில் அவர் இயேசுவிடம் வந்து, 'ரபி, நீர் கடவுளிடமிருந்து வந்த போதகர் என்பதை நாங்கள் அறிவோம். கடவுள் தம்மோடு இருந்தாலன்றி, நீர் செய்யும் இவ்வரும் அடையாளங்களை யாரும் செய்ய இயலாது’ என்றார்.
மறுபடியும் பிறக்கவேண்டும்
இயேசு அவரைப் பார்த்து, 'மறுபடியும் பிறந்தாலன்றி எவரும் இறையாட்சியைக் காண இயலாது என மிக உறுதியாக உமக்குச் சொல்லுகிறேன்’ என்றார். நிக்கதேம் அவரை நோக்கி, 'வயதானபின் ஒருவர் எப்படிப் பிறக்கமுடியும்? அவர் மீண்டும் தாயின் வயிற்றில் புகுந்து பிறக்கமுடியுமா?’ என்று கேட்டார்.
தூயஆவியால் பிறக்கவேண்டும்
இயேசு அவரைப் பார்த்து, 'ஒருவர் தண்ணீராலும் தூயஆவியாலும் பிறந்தாலன்றி, இறையாட்சிக்கு உட்பட இயலாது என்று மிகஉறுதியாக உமக்குச் சொல்கிறேன். மனிதரால் பிறப்பவர் மனிதஇயல்பை உடையவர். தூயஆவியால் பிறப்பவர் தூயஆவியின் இயல்பை உடையவர்.
தூயஆவியின் வாழ்வே
நீங்கள் மறுபடியும் பிறக்கவேண்டும் என்று நான் உமக்குக் கூறியதுபற்றி நீர் வியப்படைய வேண்டாம். காற்று விரும்பிய திசையில் வீசுகிறது. அதன் ஓசை உமக்குக் கேட்கிறது. ஆனால் அது எங்கிருந்து வருகிறது என்றும் எங்குச் செல்கிறது என்றும் உமக்குத் தெரியாது. தூயஆவியால் பிறந்த அனைவருக்கும் இது பொருந்தும்’ என்றார்.
நிக்கதேம் அவரைப் பார்த்தது, 'இது எப்படி நிகழ முடியும்?’ என்று கேட்டார்.
அதற்கு இயேசு கூறியது: 'நீர் இஸ்ரயேல் மக்களிடையே போதகராய் இருந்தும் உமக்கு இது தெரிவில்லையே! எங்களுக்குத் தெரிந்ததைப்பற்றியே பேசுகிறோம்; நாங்கள் கண்டதைப்பற்றியே சான்று பகர்கிறோம். எனினும் எங்கள் சான்றை நீங்கள் ஏற்றுக்கொள்வதில்லை என உறுதியாக உமக்குச் சொல்கிறேன்.
இயேசுவின் மரணம்- கடவுளின் அன்பு- நிலைவாழ்வு
மண்ணுலகு சார்ந்தவைபற்றி நான் உங்களுக்குச் சொன்னதை நீங்கள் நம்பவில்லை என்றால் விண்ணுலகு சார்ந்தவைபற்றிச் சொல்லும்போது எப்படி நம்பப்போகிறீர்கள்?
விண்ணகத்திலிருந்து இறங்கிவந்துள்ள மானிடமகனைத் தவிர வேறுஎவரும் விண்ணகத்திற்கு ஏறிச்சென்றதில்லை. பாலைநிலத்தில் மோசேயால் பாம்பு உயர்த்தப்பட்டதுபோல, மானிடமகனும் உயர்த்தப்படவேண்டும். அப்போது அவரிடம் நம்பிக்கைகொள்ளும் அனைவரும் நிலைவாழ்வு பெறுவர். தம் ஒரே மகன்மீது நம்பிக்கை கொள்ளும் எவரும் அழியாமல் நிலைவாழ்வு பெறும் பொருட்டு அந்த மகனையே அளிக்கும் அளவுக்குக் கடவுள் உலகின் மேல் அன்பு கூர்ந்தார்.
உலகிற்குத் தண்டனைத் தீர்ப்பளிக்க அல்ல, தம் மகன் வழியாக அதை மீட்கவே கடவுள் அவரை உலகிற்கு அனுப்பினார். அவர்மீது நம்பிக்கை கொள்வோர் தண்டனைத் தீர்ப்புக்கு ஆளாவதில்லை;
ஒளியைவிட இருளையே விரும்புவோர் நிலைவாழ்வை இழப்பர்
ஆனால், நம்பிக்கை கொள்ளாதோர் ஏற்கெனவே தீர்ப்புப் பெற்றுவிட்டனர். ஏனெனில் அவர்கள் கடவுளின் ஒரே மகனிடம் நம்பிக்கை கொள்ளவில்லை.
ஒளி உலகிற்கு வந்திருந்தும், தம் செயல்கள் தீயனவாய் இருந்ததால், மனிதர் ஒளியைவிட இருளையே விரும்பினர். இதில்தான் அவர்களுக்கு எதிரான தண்டனைத் தீர்ப்பு அடங்கியுள்ளது. தீங்குசெய்யும் அனைவரும் ஒளியை வெறுக்கின்றனர். தங்கள் தீச்செயல்கள் வெளியாகிவிடும் என அஞ்சி, அவர்கள் ஒளியிடம் வருவதில்லை.
உண்மைக்கேற்ப வாழ்பவர்கள் ஒளியிடம் வருகிறார்கள். இதனால் அவர்கள் செய்யும் அனைத்தையும் கடவுளோடு இணைந்தே செய்கிறார்கள் என்பது வெளியாகும்.
8. அவர் பெருகவேண்டும் நான் குறையவேண்டும்
அயினோன் கிபி 30
இவற்றுக்குப் பின்பு, இயேசுவும் அவர்தம் சீடரும் யூதேயப் பகுதிக்குச் சென்றனர். அங்கே அவர் அவர்களோடு தங்கித் திருமுழுக்குக் கொடுத்துவந்தார். யோவானும், சலீம் என்னும் இடத்துக்கு அருகில் உள்ள அயினோனில் திருமுழுக்குக் கொடுத்துக் கொண்டிருந்தார். ஏனெனில், அங்குத் தண்ணீர் நிறைய இருந்தது. மக்கள் அங்கு சென்று திருமுழுக்குப் பெற்றுவந்தார்கள்.
யோவானைவிட இயேசுவிடம் பலர் திருமுழுக்கு பெற்றனர்
யோவான் சிறையில் அடைக்கப்படுமுன் இவ்வாறு நிகழ்ந்தது. ஒருநாள் யோவானின் சீடர் சிலருக்கும், யூதர் ஒருவருக்கும் இடையே தூய்மைச்சடங்குபற்றி விவாதம் எழுந்தது. அவர்கள் யோவானிடம் போய், 'ரபி, யோர்தான் ஆற்றின் அக்கரைப் பகுதியில் உம்மோடு ஒருவர் இருந்தாரே! நீரும் அவரைக்குறித்துச் சான்றுபகர்ந்தீரே! இப்போது அவரும் திருமுழுக்குக் கொடுக்கிறார். எல்லாரும் அவரிடம் செல்கின்றனர்’ என்றார்கள்.
யோவான் அவர்களைப் பார்த்து, 'விண்ணிலிருந்து அருளப்படாவிட்டால் எவரும் எதையும் பெற்றுக்கொள்ள முடியாது. ’நான் மெசியா அல்ல; மாறாக அவருக்கு முன்னோடியாக அனுப்பபப்பட்டவன்’ என்று நான் கூறியதற்கு நீங்களே சாட்சிகள்.
யோவானின் இறுதிச் சான்று- 4. இயேசுவே மணமகன், இறைமகன்
மணமகள் மணமகனுக்கே உரியவர். மணமகனின் தோழரோ அருகில் நின்று, அவர் சொல்வதைக் கேட்கிறார்; அதில் அவர் பெருமகிழ்ச்சி அடைகிறார். என் மகிழ்ச்சியும் இதுபோன்றது. இம்மகிழ்ச்சி என்னுள் நிறைந்துள்ளது. அவரது செல்வாக்குப் பெருகவேண்டும்; எனது செல்வாக்குக் குறையவேண்டும்’ என்றார்.
மேலிருந்து வருபவர், அனைவரையும்விட மேலானவர். மண்ணுலகிலிருந்து உண்டானவர் மண்ணுலகைச் சேர்ந்தவர். மண்ணுலகு சார்ந்தவைபற்றியே அவர் பேசுகிறார். விண்ணுலகிலிருந்து வருபவர், அனைவருக்கும் மேலானவர். தாம் கண்டதையும் கேட்டதையும்பற்றியே அவர் சான்றுபகர்கிறார். எனினும் அவர் தரும் சான்றை எவரும் ஏற்றுக்கொள்வதில்லை. அவர் தரும் சான்றை ஏற்றுக்கொள்பவர் கடவுள் உண்மையானவர் என்பதை உறுதிப்படுத்துகிறார்.
கடவுளால் அனுப்பப்பெற்றவர் கடவுளின் வார்த்தைகளைப் பேசுகிறார். கடவுள் அவருக்குத் தம் ஆவிக்குரிய கொடைகளை அளவின்றிக் கொடுக்கிறார். தந்தை மகன்மேல் அன்புகூர்ந்து அனைத்தையும் அவர்கையில் ஒப்படைத்துள்ளார். மகனிடம் நம்பிக்கை கொள்வோர் நிலைவாழ்வைப் பெறுவர். நம்பிக்கை கொள்ளாதோர் வாழ்வைக் காணமாட்டார். மாறாகக் கடவுளின் சினம் அவர்கள்மேல் வந்துசேரும்’ என்றார்.
ஏரோது யோவானைச் சிறையில் அடைத்தார்
குறுநிலமன்னன் ஏரோது தன் சகோதரனான பிலிப்பின் மனைவி ஏரோதியாவை மனைவியாக்கிக் கொண்டிருந்தான்; தன் சகோதரன் மனைவியை வைத்திருந்ததன் பொருட்டும், அவன் இழைத்த மற்ற எல்லாத் தீச்செயல்கள் பொருட்டும், யோவான் அவனைக் கண்டித்தார்.
எனவே அவன், தான்செய்த தீச்செயல்களெல்லாம் போதாதென்று, ஏரோதியாவின் பொருட்டு, ஆளனுப்பி யோவானைப் பிடித்துக் கட்டிச் சிறையில் அடைத்தான்.
இயேசு யூதேயாவில் தம் தொடக்கப்பணியை முடித்தார்
யோவான் கைதுசெய்யப்பட்டதை கேள்விப்பட்டு, இயேசு கலிலேயாவுக்குப் புறப்பட்டார். யோவானைவிட இயேசு மிகுதியான சீடர்களைச் சேர்த்துக் கொண்டு திருமுழுக்குக் கொடுத்துவருகிறார் என்று பரிசேயர் கேள்வியுற்றனர். இதை அறிந்த இயேசு, யூதேயாவை விட்டகன்று கலிலேயாவுக்குச் சென்றார். ஆனால் உண்மையில் திருமுழுக்குக் கொடுத்தவர் இயேசு அல்ல; அவருடைய சீடர்களே.
9. ஆலயம் அல்ல, நம் உள்ளமே கடவுள் இருக்குமிடம்
சிக்கார், சமாரியா கிபி 30
சமாரியா வழியாக கலிலேயாவுக்கு இயேசு செல்லவேண்டியிருந்தது. அவர் சமாரியாவில் உள்ள சிக்கார் என்னும் ஊருக்கு வந்துசேர்ந்தார். யாக்கோபு தம் மகன் யோசேப்புக்குக் கொடுத்த நிலத்துக்கு அருகே அந்த ஊர் இருந்தது. அவ்வூரில் யாக்கோபின் கிணறும் இருந்தது.
பயணத்தால் களைப்புற்றிருந்த இயேசு, கிணற்று ஓரமாய் அமர்ந்தார். அப்போது ஏறக்குறைய நண்பகல். அவருடைய சீடர் உணவு வாங்குவதற்காக நகருக்குள் சென்றிருந்தனர்.
சமாரியப் பெண் ஒருவர் தண்ணீர் மொள்ள வந்தார். இயேசு அவரிடம், 'குடிக்க எனக்குத் தண்ணீர் கொடும்’ என்று கேட்டார். அச்சமாரியப் பெண் அவரிடம், 'நீர் யூதர்; நானோ சமாரியப் பெண். நீர் என்னிடம் குடிக்கத் தண்ணீர் கேட்பது எப்படி?’ என்று கேட்டார். ஏனெனில் யூதர்கள் சமாரியரோடு பழகுவதில்லை.
நிலைவாழ்வைத் தரும் தண்ணீர்
இயேசு அவரைப் பார்த்து, 'கடவுளுடைய கொடை எது' என்பதையும், 'குடிக்கத் தண்ணீர் கொடும்’ எனக் கேட்பவர் யார்’ என்பதையும் நீர் அறிந்திருந்தால், நீரே அவரிடம் கேட்டிருப்பீர்; அவரும் உமக்கு வாழ்வுதரும் தண்ணீரைக் கொடுத்திருப்பார்’ என்றார்.
அவர் இயேசுவிடம், 'ஐயா, தண்ணீர்மொள்ள உம்மிடம் ஒன்றுமில்லை; கிணறும் ஆழமானது. அப்படியிருக்க வாழ்வு-தரும் தண்ணீர் உமக்கு எங்கிருந்து கிடைக்கும்? எம் தந்தை யாக்கோபைவிட நீர் பெரியவரோ? அவரே எங்களுக்கு இக்கிணற்றை வெட்டித் தந்தார். அவரும், அவருடைய மக்களும், கால்நடைகளும் இதிலிருந்துதான் தண்ணீர்குடிப்பது வழக்கம்’ என்றார்.
நிலைவாழ்வை அளிக்கும் தண்ணீர்
இயேசு அவரைப் பார்த்து, 'இந்தத் தண்ணீரைக் குடிக்கும் ஒவ்வொருவருக்கும் மீண்டும் தாகம் எடுக்கும். நான் கொடுக்கும் தண்ணீரைக் குடிக்கும் எவருக்கும் என்றுமே தாகம் எடுக்காது; நான் கொடுக்கும் தண்ணீர், அதைக் குடிப்பவருக்குள் பொங்கிஎழும் ஊற்றாக மாறி, நிலைவாழ்வு அளிக்கும்’ என்றார்.
அப்பெண் அவரை நோக்கி, 'ஐயா, அத்தண்ணீரை எனக்குக் கொடும்; அப்போது எனக்குத் தாகமும் எடுக்காது; தண்ணீர்மொள்ள நான் இங்குவரத் தேவையும் இருக்காது’ என்றார்.
இயேசு அவரிடம், 'நீர் போய், உம் கணவரை இங்கே கூட்டிக்கொண்டு வாரும்’ என்று கூறினார். அப்பெண் அவரைப் பார்த்து, 'எனக்குக் கணவர் இல்லையே’ என்றார். இயேசு அவரிடம், 'எனக்குக் கணவர் இல்லை’ என நீர் சொல்வது சரியே. உமக்கு ஐந்து கணவர்கள் இருந்தார்கள் என்றாலும், இப்போது உம்முடன் இருப்பவர் உம் கணவர் அல்ல. எனவே நீர் கூறியது உண்மையே’ என்றார்.
கடவுள் எங்கு இருக்கிறார், மலையிலா? கோவிலிலா?
அப்பெண் அவரிடம், 'ஐயா, நீர் ஓர் இறைவாக்கினர் எனக் கண்டுகொண்டேன். எங்கள் முன்னோர் இம்மலையில் வழிபட்டுவந்தனர். ஆனால், நீங்கள் எருசலேமில்தான் வழிபடவேண்டும் என்கிறீர்களே’ என்றார்.
கடவுள் இருக்குமிடம் நம் உள்ளமே
இயேசு அவரிடம், 'அம்மா, என்னை நம்பும். இதோ காலம் வருகிறது. அப்போது நீங்கள் தந்தையை இம்மலையிலோ, எருசலேமிலோ வழிபடமாட்டீர்கள். யாரை வழிபடுகிறீர்கள் எனத் தெரியாமல் நீங்கள் வழிபடுகிறீர்கள். ஆனால், நாங்கள் தெரிந்து வழிபடுகிறோம். யூதரிடமிருந்தே மீட்பு வருகிறது.
காலம் வருகிறது; ஏன், வந்தேவிட்டது! அப்போது உண்மையாய் வழிபடுவோர் தந்தையை அவரது உண்மை இயல்புக்கேற்ப உள்ளத்தில் வழிபடுவர். தம்மை வழிபடுவோர் இத்தகையோராய் இருக்கவே தந்தை விரும்புகிறார். கடவுள் உருவமற்றவர். அவரை வழிபடுவோர், அவரது உண்மை இயல்புக்கு ஏற்ப, உள்ளத்தில்தான் வழிபட வேண்டும்’ என்றார்.
இயேசு தம்மை மெசியா என்று அறிவித்தார்
அப்பெண் அவரிடம், 'கிறிஸ்து எனப்படும் மெசியா வருவார் என எனக்குத் தெரியும். அவர் வரும்போது அனைத்தையும் எங்களுக்கு அறிவிப்பார்’ என்றார். இயேசு அவரிடம், 'உம்மோடு பேசும் நானே அவர்’ என்றார்.
அந்நேரத்தில் இயேசுவின் சீடர் திரும்பி வந்தனர். பெண் ஒருவரிடம் அவர் பேசிக்கொண்டிருப்பதைக் கண்டு அவர்கள் வியப்புற்றனர். எனினும் 'என்ன வேண்டும்?’ என்றோ, 'அவரோடு என்ன பேசுகிறீர்?’ என்றோ எவரும் கேட்கவில்லை.
மெசியாவை பார்க்க வாருங்கள்
அப்பெண் தம் குடத்தை விட்டுவிட்டு, ஊருக்குள் சென்று, மக்களிடம், 'நான் செய்த எல்லாவற்றையும் என்னிடம் சொன்ன மனிதரை வந்து பாருங்கள். அவர் மெசியாவாக இருப்பாரோ!’ என்றார். அவர்கள் ஊரிலிருந்து புறப்பட்டு இயேசுவிடம் வந்தார்கள்.
நிலைவாழ்வுக்கு மக்களைச் சேர்ப்பதே இயேசுவின் உணவு
அதற்கிடையில் சீடர், 'ரபி, உண்ணும்’ என்று வேண்டினர். இயேசு அவர்களிடம், 'நான் உண்பதற்குரிய உணவு ஒன்று உண்டு. அது உங்களுக்குத் தெரியாது’ என்றார். 'யாராவது அவருக்கு உணவு கொடுத்திருப்பார்களோ’ என்று சீடர்கள் தங்களிடையே பேசிக்கொண்டார்கள். இயேசு அவர்களிடம், 'என்னை அனுப்பியவரின் திருவுளத்தை நிறைவேற்றுவதும், அவர் கொடுத்த வேலையைச் செய்து முடிப்பதுமே என் உணவு.
″நான்கு மாதங்களுக்குப் பின்தான் அறுவடை″ என்னும் கூற்று உங்களிடையே உண்டே! நிமிர்ந்து வயல்வெளிகளைப் பாருங்கள். பயிர் முற்றி அறுவடைக்குத் தயாராய் உள்ளது. அறுப்பவர் கூலி பெறுகிறார்; நிலைவாழ்வு பெறுவதற்காக மக்களைக் கூட்டிச் சேர்க்கிறார். இவ்வாறு விதைப்பவரும் அறுப்பவரும் ஒருமிக்க மகிழ்ச்சியடைகின்றனர். நீங்கள் உழைத்துப் பயிரிடாததை அறுவடைசெய்ய நான் உங்களை அனுப்பினேன். மற்றவர்கள் உழைத்தார்கள்; ஆனால் நீங்கள் அந்த உழைப்பின் பயனை அடைந்தீர்கள். இவ்வாறு 'விதைப்பவர் ஒருவர்; அறுவடை செய்பவர் வேறு ஒருவர்’ என்னும் கூற்று உண்மையாயிற்று’ என்றார்.
உலகின் மீட்பரை சமாரியர் அறிந்தனர்
'நான் செய்தவை அனைத்தையும் என்னிடம் சொன்னார்’ என்று சான்றுபகர்ந்த பெண்ணின் வார்த்தையை முன்னிட்டு, அவ்வூரிலுள்ள சமாரியர் பலர் இயேசுவிடம் நம்பிக்கைகொண்டனர்.
சமாரியர் அவரிடம் வந்தபோது, அவரைத் தங்களோடு தங்குமாறு கேட்டுக்கொண்டனர். அவரும் அங்கு இரண்டு நாள் தங்கினார். அவரது வார்த்தையை முன்னிட்டு இன்னும் பலர் அவரை நம்பினர். அவர்கள் அப்பெண்ணிடம், 'இப்போது உன் பேச்சைக் கேட்டு நாங்கள் நம்பவில்லை; நாங்களே அவர் பேச்சைக் கேட்டோம். அவர் உண்மையிலே உலகின் மீட்பர் என அறிந்துகொண்டோம்’ என்றார்கள்.
அந்த இரண்டு நாளுக்குப் பிறகு இயேசு சமாரியாவிலிருந்து கலிலேயாவுக்குச் சென்றார். தம் சொந்த ஊரில் இறைவாக்கினருக்கு மதிப்பு இராது என்று அவரே கூறியிருந்தார்.