இயேசுவின் கதை III கலிலேயாவில் முதற்சுற்று
மத்தேயு மாற்கு லூக்கா யோவான் நற்செய்திகளின் தொகுப்பு
11. இறையாட்சி நெருங்கி வந்துவிட்டது
கலிலேயா கிபி 30
இயேசு, கடவுளின் நற்செய்தியைப் பறைசாற்றிக்கொண்டே, தூய ஆவியின் வல்லமை உடையவராய்க் கலிலேயாவுக்குத் திரும்பிப் போனார். அதுமுதல் இயேசு "காலம் நிறைவேறிவிட்டது. இறையாட்சி நெருங்கி வந்து விட்டது; மனம் மாறி நற்செய்தியை நம்புங்கள்" என்று கூறினார்.
அவர் கலிலேயா வந்தபோது, கலிலேயர் அவரை வரவேற்றனர். ஏனெனில் அவர்கள் திருவிழாவுக்குச் சென்றிருந்தபோது, எருசலேமில் அவர் செய்தவை அனைத்தையும் கண்டிருந்தனர். அவரைப்பற்றிய பேச்சு சுற்றுப்புறம் எங்கும் பரவியது. அவர் அவர்களுடைய தொழுகைக்கூடங்களில் கற்பித்து வந்தார். எல்லாரும் அவரைப்பற்றிப் பெருமையாகப் பேசினர்.
அரச அலுவலர் மகன் பிழைத்தான் கானா கிபி 30
கலிலேயாவில் உள்ள கானாவுக்கு இயேசு மீண்டும் சென்றார். அங்கேதான் அவர் தண்ணீரைத் திராட்சை இரசம் ஆக்கியிருந்தார்.
கப்பர்நாகுமில் அரசஅலுவலரின் மகன் ஒருவன் நோயுற்றிருந்தான். யூதேயாவிலிருந்து கலிலேயாவுக்கு இயேசு வந்திருப்பதாகக் கேள்விப்பட்ட அரசஅலுவலர், அவரிடம் சென்று, சாகும் தறுவாயிலிருந்த தம் மகனை நலமாக்க வருமாறு வேண்டினார். இயேசு அவரை நோக்கி, 'அடையாளங்களையும் அருஞ்செயல்களையும் கண்டாலன்றி நீங்கள் நம்பவேமாட்டீர்கள்’ என்றார்.
அரச அலுவலர் இயேசுவிடம், 'ஐயா, என் மகன் இறக்குமுன் வாரும்’ என்றார். இயேசு அவரிடம், 'நீர் புறப்பட்டுப்போம். உம் மகன் பிழைத்துக் கொள்வான்’ என்றார். அவரும் இயேசு தம்மிடம் சொன்ன வார்த்தையை நம்பிப் புறப்பட்டுப் போனார்.
அவர் போய்க்கொண்டிருக்கும்போதே, அவருடைய பணியாளர்கள் அவருக்கு எதிர்கொண்டுவந்து, மகன் பிழைத்துக்கொண்டான் என்று கூறினார்கள். 'எத்தனை மணிக்கு நோய் நீங்கியது?’ என்று அவர் அவர்களிடம் வினவ, அவர்கள், 'நேற்றுப் பிற்பகல் ஒருமணிக்கு காய்ச்சல் நீங்கியது’ என்றார்கள். 'உம் மகன் பிழைத்துக்கொள்வான்’ என்று இயேசு அந்நேரத்தில்தான் கூறினார் என்பதை அவன் தந்தை நினைவுகூர்ந்தார்.
அவரும் அவர்-வீட்டார் அனைவரும் இயேசுவை நம்பினர். யூதேயாவிலிருந்து கலிலேயாவுக்கு வந்தபிறகு இயேசு செய்த இரண்டாவது அரும் அடையாளம் இதுவே.
2. சொந்த ஊரில் இறைவாக்கினர் ஏற்கப்படுவதில்லை
நாசரேத்து கிபி 30
இயேசு, தாம் வளர்ந்த ஊராகிய நாசரேத்துக்கு வந்தார். தம் சொந்த ஊரில் இறைவாக்கினருக்கு மதிப்பு இராது என்று அவரே கூறியிருந்தார்.
தமது வழக்கத்தின்படி, ஓய்வுநாளில் தொழுகைக் கூடத்திற்குச் சென்று வாசிக்க எழுந்தார். இறைவாக்கினர் எசாயாவின் சுருளேடு அவரிடம் கொடுக்கப்பட்டது.
மறைநூல் வாக்கு நிறைவேறிற்று
அவர் அதைப் பிரித்தபோது கண்ட பகுதியில் இவ்வாறு எழுதியிருந்தது; 'ஆண்டவருடைய ஆவி என்மேல் உளது; ஏனெனில், அவர் எனக்கு அருள்பொழிவு செய்துள்ளார். ஏழைகளுக்கு நற்செய்தியை அறிவிக்கவும், சிறைப்பட்டோர் விடுதலை அடைவர், பார்வையற்றோர் பார்வைபெறுவர் என முழக்கமிடவும், ஒடுக்கப்பட்டோரை விடுதலைசெய்து அனுப்பவும், ஆண்டவர் அருள்தரும் ஆண்டினை முழக்கமிட்டு அறிவிக்கவும் அவர் என்னை அனுப்பியுள்ளார்.’
பின்னர், அந்த ஏட்டைச் சுருட்டி ஏவலரிடம் கொடுத்துவிட்டு அமர்ந்தார். தொழுகைக்கூடத்தில் இருந்தவர்களின் கண்கள் அனைத்தும், அவரையே உற்று நோக்கியிருந்தன. அப்பொழுது அவர் அவர்களை நோக்கி, 'நீங்கள் கேட்ட இந்த மறைநூல் வாக்கு இன்று நிறைவேறிற்று’ என்றார்.
அவர் வாயிலிருந்து வந்த அருள்மொழிகளைக் கேட்டு வியப்புற்று, 'இவர் யோசேப்பின் மகன் அல்லவா?’ எனக்கூறி எல்லாரும் அவரைப் பாராட்டினர்.
அவர் அவர்களிடம், 'நீங்கள் என்னிடம், 'மருத்துவரே உம்மையே நீர் குணமாக்கிக்கொள்ளும்’ என்னும் பழமொழியைச் சொல்லி, 'கப்பர்நாகுமில் நீர் செய்ததாக நாங்கள் கேள்விப்பட்டவற்றை எல்லாம் உம் சொந்தஊராகிய இவ்விடத்திலும் செய்யும்’ எனக் கண்டிப்பாய்க் கூறுவீர்கள். ஆனால், நான் உறுதியாக உங்களுக்குச் சொல்கிறேன். இறைவாக்கினர் எவரும் தம் சொந்த ஊரில் ஏற்றுக்கொள்ளப்படுவதில்லை.
எலியாவை ஏற்றுக்கொண்ட சீதோன் தேசத்துக் கைம்பெண்
உண்மையாக நான் உங்களுக்குச் சொல்கிறேன்; எலியாவின் காலத்தில் மூன்றரை ஆண்டுகளாக வானம் பொய்த்தது; நாடெங்கும் பெரும் பஞ்சம் உண்டானது. அக்காலத்தில் இஸ்ரயேலரிடையே கைம்பெண்கள் பலர் இருந்தனர். ஆயினும், அவர்களுள் எவரிடமும் எலியா அனுப்பப்படவில்லை; சீதோனைச்சேர்ந்த சாரிபாத்தில் வாழ்ந்த ஒரு கைம்பெண்ணிடமே அனுப்பப்பட்டார்.
எலிசாவை நம்பிய சிரியா தேசத்து நாமான்
மேலும், இறைவாக்கினர் எலிசாவின் காலத்தில், இஸ்ரயேலரிடையே தொழு நோயாளர்கள் பலர் இருந்தனர்; ஆயினும், அவர்களுள் எவருக்கும் நோய் நீங்கவில்லை. சிரியாவைச் சார்ந்த நாமானுக்கே நோய் நீங்கியது’ என்றார்.
சொந்த ஊரில் இறைவாக்கனருக்கு மதிப்பு இராது
தொழுகைக்கூடத்தில் இருந்த யாவரும் இவற்றைக் கேட்டபோது, சீற்றங் கொண்டனர்; அவர்கள் எழுந்து, அவரை ஊருக்கு வெளியே துரத்தி, அவ்வூரில் அமைந்திருந்த மலைஉச்சியிலிருந்து கீழே தள்ளிவிட இழுத்துச் சென்றனர். அவர், அவர்கள் நடுவே நடந்து சென்று, அங்கிருந்து போய்விட்டார்.
3. உங்களை மனிதரைப் பிடிப்பவர் ஆக்குவேன்
இயேசு கப்பர்நாகூமில் குடியிருந்தார். கிபி 30
இயேசு நாசரேத்தைவிட்டு அகன்று, செபுலோன், நப்தலி ஆகிய இடங்களின் எல்லையில் கடலோரமாய் அமைந்திருந்த கப்பர்நாகுமுக்குச் சென்று குடியிருந்தார். ஓய்வு நாள்களில் மக்களுக்குக் கற்பித்து வந்தார்.
இறைவாக்கினர் எசாயா உரைத்த பின்வரும் வாக்கு இவ்வாறு நிறைவேறியது: 'செபுலோன் நாடே! நப்தலி நாடே! பெருங் கடல்வழிப் பகுதியே! யோர்தானுக்கு அப்பாலுள்ள நிலப்பரப்பே! பிற இனத்தவர் வாழும் கலிலேயப் பகுதியே! காரிருளில் இருந்த மக்கள் பேரொளியைக் கண்டார்கள். சாவின் நிழல் சூழ்ந்துள்ள நாட்டில் குடியிருப்போர் மேல் சுடரொளி உதித்துள்ளது.’
சீமோன், அந்திரேயா, யாக்கோபு, யோவான் முழுநேரச் சீடரானார்கள்
கெனசரேத்து கிபி 30
ஒரு நாள் இயேசு கெனசரேத்து ஏரிக்கரையில் நின்றுகொண்டிருந்தார். அவர் கலிலேயக் கடலோரமாய்ச் சென்றபோது, சீமோனையும் அவர் சகோதரரான அந்திரேயாவையும் கண்டார். மீனவர்களான அவ்விருவரும், கடலில் வலைவீசி முடித்தபின், படகைவிட்டு இறங்கி, வலைகளை அலசிக்கொண்டிருந்தனர்.
அங்கிருந்து சற்று அப்பால் சென்றபோது, வேறு இரு சகோதரர்களைக் கண்டார். அவர்கள் செபதேயுவின் மகன்களாகிய யாக்கோபும், அவர் சகோதரரான யோவானும் ஆவார்கள். அவர்கள், தங்கள் தந்தை செபதேயுவுடன் படகில் வலைகளைப் பழுதுபார்த்துக் கொண்டிருந்தார்கள்.
திரளான மக்கள் இறைவார்த்தையைக் கேட்பதற்கு அவரை நெருக்கிக் கொண்டிருந்தனர். அப்போது, ஏரிக்கரையில் இரண்டு படகுகள் நிற்கக் கண்டார். அப்படகுகளுள் ஒன்று சீமோனுடையது. அதில் இயேசு ஏறினார். அவர் கரையிலிருந்து அதைச் சற்றே தள்ளும்படி அவரிடம் கேட்டுக் கொண்டு, படகில் அமர்ந்தவாறே மக்கள் கூட்டத்துக்குக் கற்பித்தார்.
பெருந்திரளான மீன்களைப் பிடித்த பேதுரு (முதன்முறை)
அவர் பேசி முடித்த பின்பு, சீமோனை நோக்கி, 'ஆழத்திற்குத் தள்ளிக்கொண்டுபோய், மீன்பிடிக்க உங்கள் வலைகளைப் போடுங்கள்’ என்றார். சீமோன் மறுமொழியாக, 'ஐயா, இரவு முழுவதும் நாங்கள் பாடுபட்டு உழைத்தும், ஒன்றும் கிடைக்கவில்லை; ஆயினும், உமது சொற்படியே வலைகளைப் போடுகிறேன்’ என்றார்.
அப்படியே அவர்கள் செய்து, பெருந்திரளான மீன்களைப் பிடித்தார்கள். வலைகள் கிழியத்தொடங்கவே, மற்றப் படகிலிருந்த தங்கள் கூட்டாளிகளுக்குச் சைகை காட்டித் துணைக்கு வருமாறு அழைத்தார்கள். அவர்களும் வந்து, இரு படகுகளையும் மீன்களால் நிரப்பினார்கள். அவை மூழ்கும் நிலையிலிருந்தன.
இதைக் கண்ட சீமோன் பேதுரு, இயேசுவின் கால்களில் விழுந்து, 'ஆண்டவரே, நான் பாவி, நீர் என்னை விட்டுப் போய்விடும்’ என்றார். அவரும், அவரோடு இருந்த அனைவரும், மிகுதியான மீன்பாட்டைக் கண்டு திகைப்புற்றனர்.
சீமோனும் அந்திரேயாவும் இயேசுவைப் பின்பற்றினார்கள்
இயேசு, சீமோனையும், அவர் சகோதரரான அந்திரேயாவையும் பார்த்து, 'என் பின்னே வாருங்கள்; நான் உங்களை மனிதரைப் பிடிப்பவர் ஆக்குவேன்' என்றார். அவர்கள், தங்கள் படகுகளைக் கரையில் கொண்டுபோய்ச் சேர்த்தபின், அனைத்தையும் விட்டுவிட்டு அவரைப் பின்பற்றினார்கள்.
யாக்கோபு, யோவான் இயேசுவைப் பின்பற்றினர்
சீமோனுடைய பங்காளிகளான, செபதேயுவின் மக்கள் யாக்கோபும் யோவானும் அவ்வாறே திகைத்தார்கள். இயேசு அவர்களையும் அழைத்தார். அவர்களும் தங்கள் தந்தை செபதேயுவைக் கூலியாள்களோடு படகில் விட்டுவிட்டு, அவர் பின் சென்றார்கள்.
4. நகர் முழுவதும் வீட்டு வாயில்முன் கூடியிருந்தது
கப்பர்நாகும் கிபி 30
இயேசுவும் சீடர்களும் கப்பர்நாகும் ஊரில் நுழைந்தார்கள். ஓய்வு நாள்களில் இயேசு தொழுகைக்கூடத்திற்குச் சென்று கற்பித்து வந்தார். அவருடைய போதனையைக் குறித்து அவர்கள் வியப்பில் ஆழ்ந்தார்கள். ஏனெனில், அவர் மறைநூல்-அறிஞரைப் போலன்றி, அதிகாரத்தோடு அவர்களுக்குக் கற்பித்து வந்தார்.
தீய ஆவி பிடித்தவரைக் குணப்படுத்தினார்
அப்போது, அவர்களுடைய தொழுகைக்கூடத்தில் தீயஆவி-பிடித்திருந்த ஒருவர் இருந்தார். அவரைப் பிடித்திருந்த ஆவி, 'நாசரேத்து இயேசுவே, உமக்கு இங்கு என்ன வேலை? எங்களை ஒழித்துவிடவா வந்தீர்? நீர் யார் என எனக்குத் தெரியும். நீர் கடவுளுக்கு அர்ப்பணமானவர்’ என்று கத்தியது.
'வாயை மூடு; இவரை விட்டு வெளியே போ’ என்று இயேசு அதனை அதட்டினார். அப்பொழுது, அத்தீய ஆவி, அம்மனிதருக்கு வலிப்பு உண்டாக்கி, அவர்கள் நடுவே விழச்செய்து, பெருங்கூச்சலிட்டு அவரைவிட்டு வெளியேறிற்று.
அவர்கள் அனைவரும் திகைப்புற்று, ’இது என்ன? இது அதிகாரம்கொண்ட புதிய போதனையாய் இருக்கிறதே! இவர் தீயஆவிகளுக்கும் கட்டளையிடுகிறார்; அவையும் இவருக்குக் கீழ்ப்படிகின்றனவே!’ என்று தங்களிடையே பேசிக் கொண்டனர். அவரைப் பற்றிய செய்தி உடனே கலிலேயாவின் சுற்றுப்புறமெங்கும் பரவியது.
சீமோன் பேதுருவின் மாமியார் குணமடைந்தார்
பின்பு, அவர்கள் தொழுகைக் கூடத்தை விட்டு வெளியே வந்து, யாக்கோபு யோவானுடன், சீமோன்-அந்திரேயா ஆகியோரின் வீட்டிற்குள் சென்றார்கள். சீமோனின் மாமியார் கடுங்காய்ச்சலால் துன்புற்ற நிலையில் இருந்தார். அவர்கள் அவருக்காக இயேசுவிடம் வேண்டினார்கள்.
இயேசு, அவரருகில் சென்று, கையைப் பிடித்து அவரைத் தூக்கினார். இயேசு காய்ச்சலைக் கடிந்துகொள்ள, அது அவரைவிட்டு நீங்கிற்று. உடனே, அவர் எழுந்து அவர்களுக்குப் பணிவிடை செய்தார்.
நகர் முழவதும் வீட்டு வாயிலில் கூடியிருந்தது
மாலை வேளையில், கதிரவன் மறையும் நேரத்தில், நோயாளர்கள், பேய்பிடித்தவர்கள் அனைவரையும், மக்கள் அவரிடம் கொண்டுவந்தார்கள். நகர் முழுவதும் வீட்டுவாயிலின் முன் கூடியிருந்தது. அவர் ஒவ்வொருவர்மேலும் தம் கைகளை வைத்து, அவர்களைக் குணமாக்கினார். பேய்களும், "நீர் இறைமகன்" என்று கத்திக்கொண்டே, பலரிடமிருந்து வெளியேறின. அவர் மெசியா என்று பேய்கள் அறிந்திருந்தபடியால், அவர் அவற்றை அதட்டி, பேசவிடாமல் தடுத்தார்.
அடுத்த ஊர்களிலும் இறையாட்சி பறைசாற்ற வேண்டும்
இயேசு, பொழுது விடியும்வேளையில் எழுந்து, தனிமையான ஓர் இடத்திற்குப் புறப்பட்டுச் சென்றார். அங்கே அவர் இறைவனிடம் வேண்டிக்கொண்டிருந்தார். சீமோனும், அவருடன் இருந்தவர்களும் அவரைத் தேடிச் சென்றார்கள். அவரைக் கண்டதும், "எல்லாரும் உம்மைத் தேடிக்கொண்டிருக்கிறார்கள்" என்றார்கள். திரளான மக்கள் அவரைத் தேடிச்சென்றனர்; அவரிடம் வந்து சேர்ந்ததும், தங்களைவிட்டுப் போகாதவாறு அவரைத் தடுத்து நிறுத்தப் பார்த்தனர்.
அதற்கு அவர், "நாம் அடுத்த ஊர்களுக்குப் போவோம், வாருங்கள். அங்கும் நான் இறையாட்சியைப்பற்றிய நற்செய்தியைப் பறைசாற்ற வேண்டும்; ஏனெனில், இதற்காகவே நான் வந்திருக்கிறேன்" என்று சொன்னார்.
ஊர்கள்தோறும் நற்செய்தி முழக்கம்
அவர் கலிலேயப்பகுதி முழுவதும் சுற்றிவந்தார்; அவர்களுடைய தொழுகைக்கூடங்களில் கற்பித்தார்; விண்ணரசு-பற்றிய நற்செய்தியைப் பறைசாற்றினார்; மக்களிடையே இருந்த நோய்-நொடிகள் அனைத்தையும் குணமாக்கினார்.
அவரைப்பற்றிய பேச்சு சிரியா நாடு முழுவதும் பரவியது. பல்வேறு பிணிகளாலும் வாதைகளாலும் வருந்திய நோயாளர், பேய்-பிடித்தோர், மதிமயங்கியோர், முடக்குவாதமுற்றோர் ஆகிய அனைவரும் அவரிடம் அழைத்துவரப்பட்டனர். அவர் அவர்களைக் குணமாக்கினார். பின்பு, அவர் யூதேயாவிலுள்ள தொழுகைக்கூடங்களில் நற்செய்தியைப் பறைசாற்றிவந்தார்.
ஆகவே, கலிலேயா, தெக்கப்பொலி, எருசலேம், யூதேயா, யோர்தானுக்கு அக்கரைப்பகுதி ஆகிய இடங்களிலிருந்து வந்த மக்கள், பெருந்திரளாய் அவரைப் பின்தொடர்ந்தனர்.
5. தொழுநோயாளரும் முடக்குவாதமுற்றவரும்
தொழுநோய் நீங்கிற்று
இயேசு ஓர் ஊரில் இருந்தபோது, உடலெல்லாம் தொழுநோயால் பாதிக்கப்பட்டிருந்த ஒருவர் வந்தார். அவர் இயேசுவைக் கண்டு, அவர் காலில் விழுந்து, 'ஆண்டவரே, நீர் விரும்பினால் எனது நோயை நீக்க உம்மால் முடியும்’ என முழந்தாள்-படியிட்டு மன்றாடினார்.
இயேசு அவர்மீது பரிவுகொண்டு, தமது கையை நீட்டி, அவரைத் தொட்டு, 'நான் விரும்புகிறேன், உமது நோய் நீங்குக!’ என்றார். உடனே தொழுநோய் அவரைவிட்டு நீங்கிற்று.
இயேசு அவரிடம், 'இதை யாருக்கும் சொல்ல வேண்டாம். கவனமாய் இரும். ஆனால், நீர் போய், உம்மைக் குருவிடம் காட்டி, நோய் நீங்கியதற்காக, மோசே கட்டளையிட்டுள்ள காணிக்கையைச் செலுத்தும். நீர் நலமடைந்துள்ளீர் என்பதற்கு அது சான்றாகும்’ என்று, மிகக் கண்டிப்பாகக் கூறி, உடனடியாக அவரை அனுப்பி விட்டார்.
ஆனால், அவர் புறப்பட்டுச் சென்று, இந்தச் செய்தியை எங்கும் அறிவித்துப் பரப்பிவந்தார். அதனால், இயேசுவைப்பற்றிய செய்தி இன்னும் மிகுதியாகப் பரவிற்று. அவரது சொல்லைக் கேட்கவும், தங்கள் நோய்கள்-நீங்கி நலம் பெறவும், பெருந்திரளான மக்கள் அவரிடம் கூடிவந்துகொண்டிருந்தார்கள்.
அதனால் இயேசு எந்த நகருக்குள்ளும் வெளிப்படையாய்ச் செல்ல முடியவில்லை; வெளியே, ஆள்-நடமாட்டம் இல்லாத தனிமையான இடங்களுக்குச் சென்று, தனித்திருந்து இறைவனிடம் வேண்டிவந்தார். எனினும், எல்லா இடங்களிலிருந்தும் மக்கள் அவரிடம் வந்துகொண்டிருந்தார்கள்
முடக்குவாதமுற்றவர் நடந்தார் கப்பர்நாகும்.கிபி 30
சில நாள்களுக்குப்பின், இயேசு படகேறி, தம் சொந்தநகரான கப்பர்நாகுமுக்கு மீண்டும் சென்றார். அவர் வீட்டில் இருக்கிறார் என்னும் செய்தி பரவிற்று. கலிலேய, யூதேயப் பகுதிகளிலுள்ள எல்லா ஊர்களிலிருந்தும், எருசலேமிலிருந்தும் வந்திருந்த பரிசேயரும் திருச்சட்ட ஆசிரியர்களும் அமர்ந்திருந்தார்கள். அவர் அவர்களுக்கு இறைவார்த்தையை எடுத்துரைத்துக் கொண்டிருந்தார். பிணி-தீர்ப்பதற்கான ஆண்டவரின் வல்லமையை அவர் கொண்டிருந்தார். பலர் வந்து கூடியதால், வீட்டு வாயிலருகிலும் இடமில்லாமல் போயிற்று.
அப்போது, முடக்குவாதமுற்ற ஒருவரை, நால்வர், கட்டிலோடு சுமந்து, அவரிடம் கொண்டுவந்தனர். அவரை உள்ளே கொண்டுபோய், இயேசுவின்முன் வைக்க வழிதேடினர். மக்கள் திரண்டிருந்த காரணத்தால், உள்ளே கொண்டுபோக அவர்களால் முடியவில்லை. எனவே, கூரைமேல் ஏறி, அவர் இருந்த இடத்திற்கு மேலே ஓடுகளைப் பிரித்துத் திறப்பு உண்டாக்கினர். அவ்வழியாய் முடக்குவாதமுற்றவரைக் கட்டிலோடு இயேசுவுக்குமுன் கீழே இறக்கினர்.
இயேசு அவர்களுடைய நம்பிக்கையைக் கண்டு, முடக்குவாதமுற்றவரிடம், 'மகனே, துணிவோடிரு, உன் பாவங்கள் மன்னிக்கப்பட்டன’ என்றார். இதனைக் கேட்ட மறைநூல்-அறிஞரும் பரிசேயரும், 'கடவுளைப் பழித்துரைக்கும் இவன் யார்? கடவுள் ஒருவரே அன்றிப் பாவங்களை மன்னிக்க யாரால் இயலும்?’ என்று உள்ளத்தில் எண்ணிக்கொண்டனர்.
அவர்களின் எண்ணங்களை உய்த்துணர்ந்த இயேசு, அவர்களைப் பார்த்து, 'உங்கள் உள்ளங்களில் நீங்கள் தீயன சிந்திப்பதேன்? முடக்குவாதமுற்ற இவரிடம் 'உம் பாவங்கள் உமக்கு மன்னிக்கப்பட்டன’ என்பதா, அல்லது 'எழுந்து நடக்கவும்’ என்பதா, எது எளிது? மண்ணுலகில், பாவங்களை மன்னிக்க மானிடமகனுக்கு அதிகாரம் உண்டு என்பதை நீங்கள் அறிந்துகொள்ள வேண்டும்’ என்றார்.
பின்பு, அவர் முடக்குவாதமுற்றவரை நோக்கி, 'நான் உமக்குச் சொல்கிறேன்; நீர் எழுந்து, உம்முடைய கட்டிலைத் தூக்கிக்கொண்டு, உமது வீட்டுக்குப் போம்’ என்றார். உடனே அவர், அவர்கள் முன்பாக எழுந்து, தாம் படுத்திருந்த கட்டிலைத் தூக்கிக்கொண்டு, கடவுளைப் போற்றிப் புகழ்ந்தவாறே, தமது வீட்டுக்குப் போனார்.
இதனால் அனைவரும் மலைத்துப்போய், 'இதைப்போல நாம் ஒருபோதும் கண்டதில்லையே’ என்று கூறிக் கடவுளைப் போற்றிப்புகழ்ந்தனர். அவர்கள் அச்சம் நிறைந்தவராய், 'இன்று புதுமையானவற்றைக் கண்டோம்’ என்று பேசிக் கொண்டார்கள்.
இதனால் அனைவரும் மலைத்துப்போய், 'இதைப்போல நாம் ஒருபோதும் கண்டதில்லையே என்று கூறிக் கடவுளைப் போற்றிப் புகழ்ந்தனர். அவர்கள் அச்சம் நிறைந்தவராய், 'இன்று புதுமையானவற்றைக் கண்டோம்!’ என்று பேசிக் கொண்டார்கள்.
6. நேர்மையாளரை அல்ல, பாவிகளையே மனம்மாற அழைக்கவந்தேன்
மத்தேயு இயேசுவை பின்பற்றினார் கப்பர்நாகும் கிபி30
இயேசு மீண்டும் கடலோரம் சென்றார். மக்கள் கூட்டத்தினர் எல்லாரும் அவரிடம் வரவே, அவர் அவர்களுக்குக் கற்பித்தார். பின்பு அங்கிருந்து அவர் சென்றபோது, அல்பேயுவின் மகன், லேவி என்ற மத்தேயு, வரிதண்டுபவராகச் சுங்கச்சாவடியில் அமர்ந்திருந்ததைக் கண்டார்; அவரிடம், 'என்னைப் பின்பற்றி வா’ என்றார். அவர் அனைத்தையும் விட்டுவிட்டு, எழுந்து, இயேசுவைப் பின்பற்றிச் சென்றார்.
வரிதண்டுவோரும் பாவிகளும் இயேசுவை பின்பற்றினர்
பின்பு, இந்த லேவி தம் வீட்டில் அவருக்கு ஒரு பெரியவிருந்து அளித்தார். அவருடைய வீட்டில், பந்தியில் அமர்ந்திருந்தபோது, வரிதண்டுபவர்கள், பாவிகள் ஆகிய பலர் பெருந்திரளாய் வந்து, இயேசுவோடும் அவருடைய சீடரோடும் விருந்துண்டனர். ஏனெனில், இவர்களுள் பலர் இயேசுவைப் பின்பற்றியவர்கள்.
பிறரை குறைகூறும் வெளிவேடப் பரிசேயர்கள்
இதைக்கண்ட பரிசேயர்களும் அவர்களைச் சேர்ந்த மறைநூல்-அறிஞர்களும் முணுமுணுத்து, இயேசுவின் சீடரிடம், 'உங்கள் போதகர் வரிதண்டுபவர்களோடும் பாவிகளோடும் சேர்ந்து உண்பதும் குடிப்பதும் ஏன்?’ என்று கேட்டனர்.
வெளிவேடக்காரரை அல்ல பாவிகளையை அழைக்கவந்தேன்
இயேசு இதைக் கேட்டவுடன், 'நோயற்றவர்க்கு அல்ல, நோயுற்றவர்க்கே மருத்துவர் தேவை. 'பலியை அல்ல, இரக்கத்தையே விரும்புகிறேன்’ என்பதன் கருத்தை நீங்கள் போய்க் கற்றுக் கொள்ளுங்கள். ஏனெனில் நேர்மையாளர்களை அல்ல, பாவிகளையே மனம் மாற அழைக்க வந்தேன்’ என்றார்.
இது நோன்பின் காலமல்ல, புதிய உடன்படிக்கையின் காலம்
யோவானுடைய சீடரும், பரிசேயரும் நோன்பு இருந்து வந்தனர். அவர்கள் இயேசுவை நோக்கி, 'யோவானுடைய சீடர்கள் அடிக்கடி நோன்பிருந்து மன்றாடி வருகிறார்கள்; பரிசேயர்களின் சீடரும் அவ்வாறே செய்கின்றனர். உம்முடைய சீடரோ உண்பதும் குடிப்பதுமாக இருக்கின்றனரே. உம்முடைய சீடர்கள் ஏன் நோன்பிருப்பதில்லை?" என்றார்கள்.
இயேசு அவர்களை நோக்கி, 'மணமகன் தங்களோடு இருக்கும்வரை மணவிருந்தினர்கள் துக்கம் கொண்டாட முடியுமா? அவர்களை நோன்பு இருக்கச் செய்யலாமா? மணமகன் அவர்களோடு இருக்கும் காலமெல்லாம் அவர்கள் நோன்பிருக்க முடியாது. ஆனால் மணமகன் அவர்களைவிட்டுப் பிரியவேண்டிய காலம் வரும். அப்போது அவர்களும் நோன்பு இருப்பார்கள்’ என்றார்
பழைய உடன்படிக்கையும் புதிய உடன்படிக்கையும் உவமை
அவர் அவர்களுக்கு ஓர் உவமையையும் கூறினார்: 'எவரும் புதிய ஆடையிலிருந்து ஒரு துண்டைக் கிழித்து, அதைப் பழைய ஆடையோடு ஒட்டுப் போடுவதில்லை. அவ்வாறு ஒட்டுப் போட்டால் புதிய ஆடையும் கிழியும்; புதிய துண்டும் பழையதோடு பொருந்தாது. அந்த ஒட்டு பழைய ஆடையை கிழித்துவிடும் கிழிசலும் பெரிதாகும்’. ( இயேசுவின் புதிய உடன்படிக்கையையும் மோசேயின் பழைய உடன்படிக்கையையும் இணைத்தால் இரண்டும் பாழாகும்)
இயேசுவின் நற்செய்தி புதிய மது, நமது உள்ளமே தோற்பை
அதுபோலப் பழைய தோற்பைகளில் எவரும் புதிய திராட்சை மதுவை ஊற்றி வைப்பதில்லை; ஊற்றி வைத்தால் புதிய மது தோற்பைகளை வெடிக்கச் செய்யும். மதுவும் சிந்திப் போகும்; தோற்பைகளும் பாழாகும். (பாவத்தை அறிந்து மனம்மாறாதவர் இயேசுவின் புதிய உடன்படிக்கையை ஏற்கமுடியாது).
புதிய மது, புதிய தோற்பைகளுக்கே ஏற்றது. புதிய மதுவைப் புதிய தோற்பைகளில்தான் ஊற்றி வைக்க வேண்டும். அப்போது இரண்டும் வீணாய்ப் போகாது.(நற்செய்தியை அறிந்து மனம்மாறுவோர் புதிய உடன்படிக்கையை ஏற்றுக்கொண்டு அழியாத நிலைவாழ்வைப் பெறுவர்)
பழைய திராட்சை மதுவைக் குடித்தவர் எவரும் புதியதை விரும்பமாட்டார்; ஏனெனில் 'பழையதே நல்லது’ என்பது அவர் கருத்து’ என்றார். (பழைய உடன்படிக்கையை கைக்கொள்வோர் இயேசுவின் நற்செய்தியை கைக்கொள்ள விரும்புவதில்லை)
பின்பு அவர் யூதேயாவிலுள்ள தொழுகைக்கூடங்களில்நற்செய்தியைப் பறைசாற்றிவந்தார்.
7. வாழ்வு-அளிப்பவரும், தீர்ப்பு-அளிப்பவரும் இயேசுவே
நலம்பெற விரும்புகிறீரா? எருசலேம் கிபி 31
யூதர்களின் திருவிழா ஒன்று வந்தது. இயேசுவும் எருசலேமுக்குச் சென்றார். எருசலேமில் ஆட்டு-வாயிலுக்கு அருகில் ஐந்து மண்டபங்கள்-கொண்ட குளம் ஒன்று உண்டு. எபிரேய மொழியில் பெதச்தா என்பது அதன் பெயர். இம்மண்டபங்களில் உடல்நலமற்றோர், பார்வையற்றோர், கால்-ஊனமுற்றோர், முடக்குவாதமுற்றோர் ஆகியோர் திரளாய்ப் படுத்துக்கிடப்பர்.
(இவர்கள். குளத்து-நீர் கலங்குவதற்காகக் காத்திருப்பார்கள். ஏனெனில் ஆண்டவரின் தூதர், சிலவேளைகளில், அக்குளத்தினுள் இறங்கித் தண்ணீரைக் கலக்குவார். தண்ணீர் கலங்கியபின், முதலில் இறங்குபவர் எவ்வித நோயுற்றிருந்தாலும் நலமடைவார்.)
முப்பத்தெட்டு ஆண்டுகளாய் உடல்நலமற்றிருந்த ஒருவரும் அங்கு இருந்தார். இயேசு அவரைக் கண்டு, நெடுங்காலமாக அவர் அந்நிலையில் இருந்துள்ளதை அறிந்து, 'நலம்பெற விரும்புகிறீரா?’ என்று அவரிடம் கேட்டார்.
'ஐயா, தண்ணீர் கலங்கும்போது, என்னைக் குளத்தில் இறக்கிவிட ஆள் இல்லை. நான் போவதற்குமுன் வேறோருவர் இறங்கிவிடுகிறார்’ என்று உடல்நலமற்றவர் அவரிடம் கூறினார்.
இயேசு அவரிடம், 'எழுந்து உம்முடைய படுக்கையை எடுத்துக்கொண்டு நடந்து செல்லும்’ என்றார். உடனே அம்மனிதர் நலமடைந்து, தம்முடைய படுக்கையை எடுத்துக்கொண்டு நடந்தார். அன்று ஓய்வுநாள்.
பழைய உடன்படிக்கையின் வெளிவேடம்
யூதர்கள், குணமடைந்தவரிடம், 'ஓய்வுநாளாகிய இன்று, படுக்கையை எடுத்துச் செல்வது சட்டத்திற்கு எதிரான செயல்’ என்றார்கள். அவர் மறுமொழியாக, 'என்னை நலமாக்கியவரே, 'உம்முடைய படுக்கையை எடுத்துக்கொண்டு நடந்துசெல்லும்’ என்று என்னிடம் கூறினார்’ என்றார்.
'படுக்கையை எடுத்துக்கொண்டு நடந்துசெல்லும்’ என்று உம்மிடம் கூறியவர் யார்?’ என்று அவர்கள் கேட்டார்கள். ஆனால், நலமடைந்தவருக்கு அவர் யாரெனத் தெரியவில்லை. ஏனெனில், அவ்விடத்தில் மக்கள் கூட்டமாய் இருந்ததால், இயேசு அங்கிருந்து நழுவிப் போய்விட்டார்.
நோய்களைவிடப் பாவமே மிகக் கேடானது
பின்னர் இயேசு, நலமடைந்தவரைக் கோவிலில் கண்டு, 'இதோ பாரும், நீர் நலமடைந்துள்ளீர்; இதைவிடக் கேடானது எதுவும் உமக்கு நிகழாதிருக்க, இனிப் பாவம் செய்யாதீர்’ என்றார். அவர் போய், தம்மை நலமாக்கியவர் இயேசு என்று யூதர்களுக்கு அறிவித்தார்.
யூதர்கள் இயேசுவைக் கொல்ல முயற்சி
ஓய்வுநாளில் இயேசு இதைச் செய்ததால், யூதர்கள் அவரைத் துன்புறுத்தினார்கள். இயேசு அவர்களிடம், 'என் தந்தை இன்றும் செயலாற்றுகிறார்; நானும் செயலாற்றுகிறேன்’ என்றார். இவ்வாறு, அவர் ஓய்வுநாள்-சட்டத்தை மீறியதோடு நில்லாமல், கடவுளைத் தம் சொந்தத் தந்தை என்று கூறி, தம்மையே கடவுளுக்கு இணையாக்கியதால், யூதர்கள் அவரைக்கொல்ல இன்னும் மிகுந்த முயற்சி செய்தார்கள்.
இயேசு தம்மை இறைமகன் என்று அறிவித்தார் எருசலேம் கிபி 31
இயேசு யூதர்களைப் பார்த்துக் கூறியது: 'மகன் தாமாக எதையும் செய்ய இயலாது; தந்தையிடம் தாம் காணும் செயல்களையே செய்ய இயலும். தந்தை செய்பவற்றை மகனும் அவ்வாறே செய்கிறார் என, நான் உறுதியாக உங்களுக்குச் சொல்கிறேன். தந்தை, மகன்மேல் அன்புகொண்டு, தாம் செய்யும் அனைத்தையும் அவருக்குக் காட்டுகிறார்; இவற்றைவிடப் பெரிய செயல்களையும் அவருக்குக் காட்டுவார். நீங்களும் வியப்புறுவீர்கள்.
வாழ்வு-அளிப்பவரும், தீர்ப்பு-அளிப்பவரும் இயேசுவே
தந்தை, இறந்தோரை எழுப்பி அவர்களை வாழவைப்பதுபோல, மகனும், தாம் விரும்பியவர்களை வாழவைக்கிறார். தந்தை யாருக்கும் தீர்ப்பு-அளிப்பதில்லை. தமக்கு எல்லாரும் மதிப்புக்கொடுப்பதுபோல, மகனுக்கும் மதிப்புக்கொடுக்க வேண்டுமென, தீர்ப்புஅளிக்கும் அதிகாரம் முழுவதையும், அவர், மகனுக்கு அளித்துள்ளார். மகனை மதியாதவர், அவரை அனுப்பிய தந்தையையும் மதிப்பது இல்லை.
இயேசுவின் குரலைக் கேட்போர் வாழ்வைப் பெறுவார்
என் வார்த்தையைக் கேட்டு, என்னை அனுப்பியவரை நம்புவோர் நிலை வாழ்வைக் கொண்டுள்ளனர். அவர்கள் தண்டனைத் தீர்ப்புக்கு உள்ளாக மாட்டார்கள்; ஏற்கெனவே சாவைக் கடந்து, வாழ்வுக்கு வந்துவிட்டார்கள் என உறுதியாக உங்களுக்குச் சொல்கிறேன். காலம் வருகிறது; ஏன், வந்தே விட்டது. அப்போது, இறைமகனின் குரலை இறந்தோர் கேட்பர்; அதைக் கேட்போர் வாழ்வர் என உறுதியாக உங்களுக்குச் சொல்கிறேன். தந்தை, தாம் வாழ்வின் ஊற்றாய் இருப்பதுபோல, மகனும் வாழ்வின் ஊற்றாய் இருக்குமாறு செய்துள்ளார்.
பாவமில்லா மனிதராக வாழ்ந்த இயேசுவே உலகின் நீதிபதி
அவர் மானிடமகனாய் இருப்பதால், தீர்ப்பு வழங்கும் அதிகாரத்தையும் தந்தை அவருக்கு அளித்துள்ளார். இதுபற்றி நீங்கள் வியப்புற வேண்டாம். காலம் வருகிறது; அப்போது, கல்லறைகளில் உள்ளோர் அனைவரும் அவரது குரலைக் கேட்டு வெளியே வருவர். நல்லன-செய்தோர் வாழ்வுபெற உயிர்த்தெழுவர்; தீயன-செய்தோர் தண்டனைத் தீர்ப்புப்பெற உயிர்த்தெழுவர்.
நானாக எதுவும் செய்ய இயலாது. தந்தை சொற்படியே நான் தீர்ப்பிடுகிறேன். நான் அளிக்கும் தீர்ப்பு நீதியானது. ஏனெனில் என் விருப்பத்தை நாடாமல் என்னை அனுப்பியவரின் விருப்பத்தையே நாடுகிறேன்.
இயேசுவே இறைமகன் என்பதற்கான சான்றுகள்
'என்னைப்பற்றி நானே சான்று பகர்ந்தால், என் சான்று செல்லாது. என்னைப்பற்றி சான்றுபகர வேறு ஒருவர் இருக்கிறார். என்னைப் பற்றி அவர் கூறும் சான்று செல்லும் என எனக்குத் தெரியும்.
1. யோவானிடம் ஆளனுப்பி நீங்கள் கேட்டபோது அவரும் உண்மைக்குச் சான்று பகர்ந்தார். மனிதர் தரும் சான்று எனக்குத் தேவை என்பதற்காக அல்ல; நீங்கள் மீட்புப் பெறுவதற்காகவே இதைச் சொல்கிறேன். யோவான், எரிந்து சுடர்விடும் விளக்கு. நீங்கள் சிறிது நேரமே அவரது ஒளியில் களிகூர விரும்பினீர்கள்.
2. யோவான் பகர்ந்த சான்றைவிட மேலான சான்று எனக்கு உண்டு. நான் செய்து முடிக்குமாறு தந்தை என்னிடம் ஒப்படைத்துள்ள செயல்களே அச்சான்று. நான் செய்துவரும் அச்செயல்களே தந்தை என்னை அனுப்பியுள்ளார் என்பதற்கான சான்றாகும்.
3. என்னை அனுப்பிய தந்தையும் எனக்குச் சான்று பகர்ந்துள்ளார். நீங்கள் ஒருபோதும் அவரது குரலைக் கேட்டதுமில்லை; அவரது உருவைக் கண்டதுமில்லை. அவரது வார்த்தையும் உங்களுக்குள் நிலைத்திருக்கவில்லை; ஏனெனில், அவர் அனுப்பியவரை நீங்கள் நம்பவில்லை.
4. மறைநூல் வழியாக நிலைவாழ்வு கிடைக்கும் என எண்ணி, அதனைத் துருவித் துருவி ஆய்ந்து பார்க்கிறீர்களே! அம் மறைநூலும் எனக்குச் சான்று பகர்கிறது. வாழ்வு பெறுமாறு என்னிடம் வர உங்களுக்கு விருப்பம் இல்லை.
தற்பெருமையால் இறையாட்சியை இழந்த யூதர்கள்
'மனிதர் தரும் பெருமை எனக்குத் தேவையில்லை. உங்களை எனக்குத் தெரியும். உங்களிடம் இறையன்பு இல்லை. நான் என் தந்தையின் பெயரால் வந்துள்ளேன். ஆனால் என்னை நீங்கள் ஏற்றுக்கொள்ளவில்லை. வேறொருவர் தம் சொந்தப் பெயரால் வருவாரானால் அவரை நீங்கள் ஏற்றுக் கொள்வீர்கள்.
கடவுள் ஒருவரே. அவர் தரும் பெருமையை நாடாது, ஒருவர் மற்றவரிடமிருந்து பெருமை தேடிக்கொள்கிறீர்களே! உங்களால் எப்படி என்னை நம்ப இயலும்?
தந்தையின் முன்னிலையில் உங்கள் மேல் குற்றம் சுமத்தப்போகிறவன் நான் என நினைக்காதீர்கள். உங்கள் சார்பாக நிற்பார் என நீங்கள் எதிர்பார்க்கும் மோசேயே உங்கள் மேல் குற்றம் சுமத்துவார்.
நீங்கள் மோசேயை நம்பியிருந்தால் என்னையும் நம்பியிருப்பீர்கள். ஏனெனில் அவர் என்னைப்பற்றித் தான் எழுதினார். அவர் எழுதியவற்றை நீங்கள் நம்பவில்லை என்றால் நான் சொல்பவற்றை எவ்வாறு நம்பப் போகிறீர்கள்?’
8. ஆராதனையை அல்ல, மனமாற்றத்தையே விரும்புகிறேன்
ஓய்வநாளுக்காக மனிதர் உண்டாக்கப்படவில்லை கலிலேயா கிபி 31
ஓய்வுநாள் ஒன்றில் இயேசு வயல்வழியே செல்ல நேர்ந்தது. பசியாயிருந்ததால் அவருடைய சீடர் கதிர்களைக் கொய்து, கைகளினால் கசக்கித் தின்றனர். பரிசேயர்கள் இதைப் பார்த்து இயேசுவிடம், 'பாரும், ஓய்வுநாளில் செய்யக்கூடாததை உம் சீடர்கள் ஏன் செய்கிறார்கள்’ என்று கேட்டனர்.
அதற்கு இயேசு மறுமொழியாக, 'தாமும் தம்முடன் இருந்தவர்களும் உணவின்றிப் பசியாய் இருந்தபோது, தாவீது என்ன செய்தார் என்பதை நீங்கள் வாசித்தது இல்லையா? அபியத்தார் தலைமைக் குருவாய் இருந்தபோது, தாவீது இறைஇல்லத்திற்குள் சென்று, குருக்களைத்தவிர வேறு எவரும் உண்ணக்கூடாத அர்ப்பண அப்பங்களை எடுத்து, தாம் உண்டதுமன்றித் தம்மோடு இருந்தவர்களுக்கும் கொடுத்தார் அல்லவா?’.
மேலும், ஓய்வுநாள்களில் குருக்கள் கோவிலில் பணியாற்றுவது ஓய்வுநாளை மீறும் குற்றமாகாது என நீங்கள் திருச்சட்டத்தில் வாசித்ததில்லையா?
மேலும் அவர் அவர்களை நோக்கி, 'ஓய்வுநாள் மனிதருக்காக உண்டாக்கப்பட்டது; மனிதர் ஓய்வுநாளுக்காக உண்டாக்கப்படவில்லை. கோவிலைவிடப் பெரியவர் இங்கே இருக்கிறார் என நான் உங்களுக்குச் சொல்லுகிறேன். 'பலியை அல்ல, இரக்கத்தையே விரும்புகிறேன்’ என்பதன் கருத்தை நீங்கள் அறிந்திருந்தால் குற்றமற்ற இவர்களைக் கண்டனம் செய்திருக்கமாட்டீர்கள்.’ ஆம், ஓய்வுநாளும் மானிடமகனுக்குக் கட்டுப்பட்டதே’ என்று கூறினார்.
ஓய்வுநாளில் நன்மை செய்வீர்
மற்றோர் ஓய்வுநாளில் இயேசு தொழுகைக்கூடத்திற்குள் சென்று கற்பித்தார். சிலர் இயேசுவின்மேல் குற்றம்சுமத்தும் நோக்குடன் அவரிடம், ’ஓய்வுநாளில் குணமாக்குவது முறையா?’ என்று கேட்டனர்.
அவர் அவர்களிடம், ’தம் ஒரே ஆடு ஓய்வு நாளில் குழியில் விழுந்துவிட்டால், உங்களுள் எவரும் அதைப் பிடித்துத் தூக்கி விடாமல் இருப்பாரா? ஆட்டைவிட மனிதர் எவ்வளவோ மேலானவர். ஆகவே ஓய்வுநாளில் மனிதருக்கு நன்மை செய்வதே முறை’ என்றார்.
அங்கே வலக்கை சூம்பியவர் ஒருவர் இருந்தார். ஓய்வுநாளில் இயேசு அவரைக் குணப்படுத்துவாரா என்று. மறைநூல்அறிஞரும் பரிசேயரும் குற்றம்காணும் நோக்குடன், இயேசுவைக் கூர்ந்து கவனித்துக்கொண்டே இருந்தனர்.
அவர்களுடைய எண்ணங்களை அறிந்த இயேசு, கை சூம்பியவரை நோக்கி, ’எழுந்து நடுவே நில்லும்!’ என்றார். அவர் எழுந்து நின்றார். இயேசு அவர்களை நோக்கி, ’உங்களிடம் ஒன்று கேட்கிறேன்; ஓய்வுநாளில் நன்மை செய்வதா, தீமை செய்வதா? உயிரைக் காப்பதா, அழிப்பதா? எது முறை?’ என்று கேட்டார். அவர்களோ பேசாதிருந்தார்கள்.
அவர் சினத்துடன் அவர்களைச் சுற்றிலும் திரும்பிப் பார்த்து, அவர்களது பிடிவாத உள்ளத்தைக் கண்டு வருந்தி, கை-சூம்பியவரை நோக்கி, ’உமது கையை நீட்டும்’ என்றார் . அவர் நீட்டினார். அது மறு-கையைப்போல் நலமடைந்தது.
உடனே, பரிசேயர் கோபவெறி கொண்டு, இயேசுவை என்ன செய்யலாம், எப்படி ஒழிக்கலாம் என்று, ஏரோதியரோடு சேர்ந்து, ஒருவரோடு ஒருவர் கலந்து பேசினர்.
இயேசு அதை அறிந்து, அங்கிருந்து புறப்பட்டுச் சென்றார். பலர் அவருக்குப்பின் சென்றனர். அவர்களெல்லாரையும் அவர் குணமாக்கினார். தம்மைக் குறித்து வெளிப்படையாகப் பேசவேண்டாம் என அவர்களிடம் அவர் கண்டிப்பாகச் சொன்னார்.
இறைவாக்கினராகிய எசாயா உரைத்த பின்வரும் வாக்குகள் இவ்வாறு நிறைவேறின: ’இதோ என் ஊழியர்; இவர் நான் தேர்ந்துகொண்டவர். இவரே என் அன்பர்; இவரால் என் நெஞ்சம் பூரிப்படைகிறது; இவருள் என் ஆவி தங்கும்படி செய்தேன்; இவர் மக்களினங்களுக்கு நீதியை அறிவிப்பார்.
இவர் சண்டை சச்சரவு செய்யமாட்டார்; கூக்குரலிடமாட்டார்; தம் குரலைத் தெருவில் எழுப்பவுமாட்டார்; நீதியை வெற்றிபெறச் செய்யும்வரை, நெரிந்த நாணலை முறியார்; புகையும் திரியை அணையார். எல்லா மக்களினங்களும் இவர் பெயரில் நம்பிக்கை கொள்வர்.'
திரளான மக்கள் பின்தொடர்ந்தனர்
இயேசு அங்கிருந்து புறப்பட்டுத் தம் சீடருடன் கடலோரம் சென்றார். கலிலேயாவிலிருந்து பெருந்திரளான மக்கள் அவரைப் பின்தொடர்ந்தனர். மேலும் யூதேயா, எருசலேம், இதுமேயா, யோர்தான் அக்கரைப்பகுதி, தீர், சீதோன் ஆகிய இடங்களிலிருந்தும் பெருந்திரளான மக்கள், அவர் செய்தவற்றையெல்லாம் கேள்வியுற்று, அவரிடம் வந்தனர்.
மக்கள்கூட்டம் தம்மை நெருக்கிவிடாதவாறு, தமக்காகப் படகு ஒன்றை முன்னேற்பாடாக வைத்திருக்குமாறு, அவர் சீடருக்குச் சொன்னார். ஏனெனில், பலரை அவர் குணமாக்கியதால், நோயுற்றோர் அனைவரும் அவரைத் தொடவேண்டுமென்று வந்து, அவர்மீது விழுந்துகொண்டிருந்தனர். தீயஆவிகளும், அவரைக் கண்டபோதே அவர்முன் விழுந்து, ’இறைமகன் நீரே’ என்று கத்தின. அவரோ, தம்மை வெளிப்படுத்தவேண்டாமென அவற்றிடம் மிகக் கண்டிப்பாய்ச் சொன்னார்.
திருத்தூதர் பன்னிருவர் கலிலேயா கிபி 31
அந்நாள்களில் அவர் வேண்டுவதற்காக ஒரு மலைக்குப் போனார். அங்குக் கடவுளிடம் வேண்டுதல் செய்வதில் இரவெல்லாம் செலவிட்டார். விடிந்ததும், அவர் தாம் விரும்பியவர்களைத் தம்மிடம் வரவழைத்தார். அவர்களும் அவரிடம் வந்தார்கள்
தம்மோடு இருக்கவும், நற்செய்தியைப் பறைசாற்ற அனுப்பப்படவும், பேய்களை ஓட்ட அதிகாரம் கொண்டிருக்கவும் அவர் பன்னிருவரை நியமித்தார்; அவர்களுக்குத் திருத்தூதர் என்றும் பெயரிட்டார்.
அவர்கள் முறையே, பேதுரு என்று அவர் பெயரிட்ட சீமோன், அவருடைய சகோதரர் அந்திரேயா, செபதேயுவின் மகன் யாக்கோபு, யாக்கோபின் சகோதரரான யோவான் – இவ்விருவருக்கும் ’இடியைப் போன்றோர்’ எனப் பொருள்படும் பொவனேர்க்கேசு என்று அவர் பெயரிட்டார்.
பிலிப்பு, பர்த்தலமேயு, மத்தேயு, தோமா, அல்பேயுவின் மகன் யாக்கோபு, தீவிரவாதியாய் இருந்த சீமோன், யாக்கோபின் மகன் யூதா (ததேயு), துரோகியாக மாறி இயேசுவைக் காட்டிக் கொடுத்த யூதாசு இஸ்காரியோத்து என்போர் ஆவர்.
9. இயேசுவின் மலைப்பொழிவு
கலிலேயா கி.பி 31
இயேசு சீடர்களுடன் இறங்கிவந்து சமவெளியான ஓரிடத்தில் நின்றார். பெருந்திரளான அவருடைய சீடர்களும், யூதேயா முழுவதிலிருந்தும் எருசலேமிலிருந்தும், தீர், சீதோன் கடற்கரைப் பகுதிகளிலிருந்தும் வந்த பெருந்திரளான மக்களும் அங்கே இருந்தார்கள். அவர் சொல்வதைக் கேட்கவும், தங்கள் பிணிகள் நீங்கி நலமடையவும் அவர்கள் வந்திருந்தார்கள். தீயஆவிகளால் தொல்லைக்கு உள்ளானவர்கள் குணமானார்கள். அவரிடமிருந்து வல்லமை வெளிப்பட்டு அனைவர் பிணியையும் போக்கியதால், அங்குத் திரண்டிருந்த மக்கள் யாவரும் அவரைத் தொட முயன்றனர்.
இயேசு மக்கள்-கூட்டத்தைக் கண்டு மலைமீது ஏறி அமர, அவருடைய சீடர் அவரருகே வந்தனர்.
I. விண்ணரசைப் பெற்றவர்
இயேசு, சீடர்மீது தம் பார்வையைப் பதித்துத் திருவாய்மலர்ந்து கற்பித்தவை:
ஏழையரின் உள்ளத்தோர் பேறுபெற்றோர், ஏனெனில் விண்ணரசு அவர்களுக்கு உரியது.
துயருறுவோர் பேறுபெற்றோர், ஏனெனில் அவர்கள் ஆறுதல் பெறுவர்.
கனிவுடையோர் பேறுபெற்றோர், ஏனெனில் அவர்கள் நாட்டை உரிமைச் சொத்தாக்கிக் கொள்வர்.
நீதிநிலைநாட்டும் வேட்கை கொண்டோர் பேறுபெற்றோர், ஏனெனில் அவர்கள் நிறைவு பெறுவர்.
இரக்கமுடையோர் பேறுபெற்றோர், ஏனெனில் அவர்கள் இரக்கம் பெறுவர்.
தூய்மையான உள்ளத்தோர் பேறுபெற்றோர், ஏனெனில் அவர்கள் கடவுளைக் காண்பர்.
அமைதி ஏற்படுத்துவோர் பேறுபெற்றோர், ஏனெனில் அவர்கள் கடவுளின் மக்கள் என அழைக்கப்படுவர்.
நீதியின்பொருட்டுத் துன்புறுத்தப்படுவோர் பேறுபெற்றோர், ஏனெனில் விண்ணரசு அவர்களுக்குரியது
விண்ணரசைப் பெற்றவர்
விண்ணரசை இழந்தவர்
ஏழைகளே, நீங்கள் பேறுபெற்றோர், ஏனெனில் இறையாட்சி உங்களுக்கு உரியதே
இப்பொழுது பட்டினியாய் இருப்போரே, நீங்கள் பேறு பெற்றோர், ஏனெனில் நீங்கள் நிறைவு பெறுவீர்கள்.
இப்பொழுது அழுதுகொண்டிருப்போரே, நீங்கள் பேறுபெற்றோர், ஏனெனில் நீங்கள் சிரித்து மகிழ்வீர்கள்.
மானிடமகன் பொருட்டு, மக்கள் உங்களை வெறுத்து, துன்புறுத்தி, ஒதுக்கிவைத்து, உங்களைப்பற்றி இல்லாதவை பொல்லாதவையெல்லாம் சொல்லும்போது நீங்கள் பேறுபெற்றோர். இவ்வாறே உங்களுக்கு முன்னிருந்த தீர்க்கத்தரிசிகளையும் அவர்கள் துன்புறுத்தினார்கள்.
அந்நாளில் துள்ளி மகிழ்ந்து கொண்டாடுங்கள், ஏனெனில், விண்ணுலகில் உங்களுக்குக் கிடைக்கும் கைம்மாறு மிகுதியாகும்.
செல்வர்களே, உங்களுக்குக் கேடு. ஏனெனில், நீங்கள் எல்லாம் அனுபவித்துவிட்டீர்கள்.
இப்போது உண்டு-கொழுத்திருப்போரே, ஐயோ உங்களுக்குக் கேடு. ஏனெனில், பட்டினி கிடப்பீர்கள்.
இப்போது சிரித்து இன்புறுவோரே, ஐயோ உங்களுக்குக் கேடு. ஏனெனில், துயருற்று அழுவீர்கள்
மக்கள் எல்லாரும் உங்களைப் புகழ்ந்து பேசும்போது, ஐயோ உங்களுக்குக் கேடு. ஏனெனில், அவர்களின் மூதாதையரும் போலி-இறைவாக்கினர்களுக்கு இவ்வாறே செய்தார்கள்
II. திருச்சட்டத்தை நிறைவேற்றவே நான் வந்தேன்
i) ஆனால் நான் உங்களுக்குச் சொல்கிறேன் -
சினங்கொள்வதும் தவறே
’கொலை செய்யாதே; கொலை செய்கிறவர் எவரும் தண்டனைத் தீர்ப்புக்கு ஆளாவர்’ என்று முற்காலத்தவர்க்குக் கூறப்பட்டிருப்பதைக் கேள்விப்பட்டிருக்கிறீர்கள்.
ஆனால் நான் உங்களுக்குச் சொல்கிறேன்; ’தம் சகோதரர் சகோதரிகளிடம் சினங்கொள்கிறவர் தண்டனைத் தீர்ப்புக்கு ஆளாவார்;
தம் சகோதரரையோ சகோதரியையோ ’முட்டாளே’ என்பவர் தலைமைச் சங்கத் தீர்ப்புக்கு ஆளாவார்; ’அறிவிலியே’ என்பவர் எரிநரகத்துக்கு ஆளாவார்.
ஆகையால், நீங்கள் உங்கள் காணிக்கையைப் பலிபீடத்தில் செலுத்த வரும்பொழுது, உங்கள் சகோதரர் சகோதரிகள் எவருக்கும் உங்கள்மேல் ஏதோ மனத்தாங்கல் உண்டென அங்கே நினைவுற்றால், அங்கேயே, பலிபீடத்தின்முன், உங்கள் காணிக்கையை வைத்துவிட்டுப் போய், முதலில் அவரிடம் நல்லுறவு ஏற்படுத்திக் கொள்ளுங்கள். பின்பு வந்து, உங்கள் காணிக்கையைச் செலுத்துங்கள்.
உங்கள் எதிரி உங்களை நீதிமன்றத்துக்குக் கூட்டிச்செல்லும்போது, வழியிலேயே, அவருடன் விரைவாக உடன்பாடு செய்துகொள்ளுங்கள். இல்லையேல், உங்கள் எதிரி நடுவரிடம் உங்களை ஒப்படைப்பார். நடுவர் காவலரிடம் ஒப்படைக்க, நீங்கள் சிறையில் அடைக்கப்படுவீர்கள். கடைசிக் காசுவரை திருப்பிச் செலுத்தாமல் அங்கிருந்து வெளியேற மாட்டீர்கள் என உறுதியாக உங்களுக்கு சொல்கிறேன்.
ii) ஆனால் நான் உங்களுக்குச் சொல்கிறேன்-
இச்சையுடன் நோக்குவதும் தவறே
’விபசாரம் செய்யாதே’ எனக் கூறப்பட்டிருப்பதைக் கேள்விப்பட்டிருக்கிறீர்கள். ஆனால், நான் உங்களுக்குச் சொல்கிறேன்; ஒரு பெண்ணை, கண்ணால், இச்சையுடன் நோக்கும் எவரும் தம் உள்ளத்தால் ஏற்கெனவே அப்பெண்ணோடு விபசாரம் செய்தாயிற்று.
கண்தான் உடலுக்கு விளக்கு. கண் நலமாயிருந்தால், உங்கள் உடல் முழுவதும் ஒளி பெற்றிருக்கும். அது கெட்டுப் போனால், உங்கள் உடல் முழுவதும் இருளாய் இருக்கும். ஆகையால், உங்களுக்கு ஒளி தரவேண்டியது இருளாயிராதவாறு பார்த்துக் கொள்ளுங்கள்.
உங்கள் வலக்கண் உங்களைப் பாவத்தில் விழச்செய்தால், அதைப் பிடுங்கி எறிந்து விடுங்கள். உங்கள் உடல் முழுவதும் நரகத்தில் எறியப்படுவதைவிட, உங்கள் உறுப்புகளில் ஒன்றை நீங்கள் இழப்பதே நல்லது.
உங்கள் வலக்கை உங்களைப் பாவத்தில் விழச் செய்தால், அதையும் உங்களிடமிருந்து வெட்டி எறிந்து விடுங்கள். உங்கள் உடல் முழுவதும் நரகத்திற்குச் செல்வதைவிட, உங்கள் உறுப்புகளில் ஒன்றை நீங்கள் இழப்பதே நல்லது.
iii) ஆனால் நான் உங்களுக்குச் சொல்கிறேன் -
மணவிலக்குச் செய்யாதீர்
தன் மனைவியை விலக்கி விடுகிறவன் எவனும் மணவிலக்குச் சான்றிதழைக் கொடுக்கட்டும்’ எனக் கூறப்பட்டிருக்கிறது.
ஆனால் நான் உங்களுக்குச் சொல்கிறேன்; எவரும் தம் மனைவியைப் பரத்தைமைக்காக அன்றி, வேறு எந்தக் காரணத்திற்காகவும் விலக்கிவிடக் கூடாது. அப்படிச் செய்வோர் எவரும் அவரை விபசாரத்தில் ஈடுபடச் செய்கின்றனர். விலக்கப்பட்டோரை மணப்போரும் விபசாரம் செய்கின்றனர்.
iv) ஆனால் நான் உங்களுக்குச் சொல்கிறேன்-
எதன்மேலும் ஆணையிடாதீர் (அனைத்தும் இறைவனுடையது)
″பொய்யாணை இடாதீர். ஆணையிட்டு நேர்ந்துகொண்டதை ஆண்டவருக்குச் செலுத்துவீர்″ என்று முற்காலத்தவர்க்குக் கூறப்பட்டிருப்பதைக் கேள்விப்பட்டிருக்கிறீர்கள். ஆனால் நான் உங்களுக்குச் சொல்கிறேன்; ஆணையிடவே வேண்டாம்.
விண்ணுலகின்மேலும் ஆணையிட வேண்டாம்; ஏனென்றால், அது கடவுளின் அரியணை. மண்ணுலகின்மேலும் வேண்டாம்; ஏனெனில், அது அவரின் கால்மணை. எருசலேம்மேலும் வேண்டாம்; ஏனெனில், அது பேரரசரின் நகரம்.
உங்கள் தலைமுடியின்மேலும் ஆணையிட வேண்டாம்; ஏனெனில், உங்கள் தலைமுடி ஒன்றையேனும் வெள்ளையாக்கவோ கருப்பாக்கவோ உங்களால் இயலாது.
ஆகவே, நீங்கள் பேசும்போது, ’ஆம்’ என்றால் ’ஆம்’ எனவும், ’இல்லை’ என்றால் ’இல்லை’ எனவும் சொல்லுங்கள். இதைவிட மிகுதியாகச் சொல்வது எதுவும் தீயோனிடத்திலிருந்து வருகிறது.’
v) ஆனால் நான் உங்களுக்குச் சொல்கிறேன் -
பழிக்குப் பழிவாங்காதீர்
’″கண்ணுக்குக் கண்″, ″பல்லுக்குப் பல்″ என்று கூறப்பட்டிருப்பதைக் கேள்விப்பட்டிருக்கிறீர்கள்.
ஆனால் நான் உங்களுக்குச் சொல்கிறேன்; தீமை செய்பவரை எதிர்க்க வேண்டாம். மாறாக, உங்களை வலக் கன்னத்தில் அறைபவருக்கு மறு கன்னத்தையும் திருப்பிக் காட்டுங்கள்.
ஒருவர் உங்களுக்கு எதிராக வழக்குத் தொடுத்து, உங்கள் அங்கியை எடுத்துக்கொள்ள விரும்பினால், உங்கள் மேலுடையையும் அவர் எடுத்துக் கொள்ள விட்டுவிடுங்கள்.
எவராவது உங்களை ஒரு கல் தொலை வரும்படிக் கட்டாயப்படுத்தினால், அவரோடு இரு கல் தொலை செல்லுங்கள்.
உங்களிடம் கேட்கும் எவருக்கும் கொடுங்கள். உங்களுடைய பொருள்களை எடுத்துக் கொள்வோரிடமிருந்து அவற்றைத் திருப்பிக் கேட்காதீர்கள்.
vi) ஆனால் நான் உங்களுக்குச் சொல்கிறேன் -
பகைவரிடமும் அன்புகூருங்கள்
’″உனக்கு அடுத்திருப்பவரிடம் அன்பு கூர்வாயாக″, ″பகைவரிடம் வெறுப்புக் கொள்வாயாக″ எனக் கூறியிருப்பதைக் கேட்டிருக்கிறீர்கள்.
நான் சொல்வதைக் கேட்டுக்கொண்டிருக்கும் உங்களுக்குக் கூறுகிறேன், உங்கள் பகைவரிடமும் அன்புகூருங்கள், உங்களை வெறுப்போருக்கு நன்மை செய்யுங்கள்.
உங்களைச் சபிப்போருக்கு ஆசி கூறுங்கள். உங்களை இகழந்து பேசுவோருக்காகவும் உங்களைத் துன்புறுத்துவோருக்காகவும் இறைவனிடம் வேண்டுங்கள்.
உங்களிடத்தில் அன்பு செலுத்துவோரிடமே நீங்கள் அன்பு செலுத்துவீர்களானால் உங்களுக்கு என்ன கைம்மாறு கிடைக்கும்? பாவிகளும், வரிதண்டுவோரும் தங்களிடம் அன்பு செலுத்துவோரிடம் அன்பு செலுத்துகிறார்களே.
உங்களுக்கு நன்மை செய்பவர்களுக்கே நீங்கள் நன்மை செய்தால் உங்களுக்கு வரும் நன்மை என்ன? பாவிகளும் அவ்வாறு செய்கிறார்களே.
நீங்கள் உங்கள் சகோதரர் சகோதரிகளுக்குமட்டும் வாழ்த்துக் கூறுவீர்களானால், நீங்கள் மற்றவருக்கும்மேலாகச் செய்துவிடுவதென்ன? பிறஇனத்தவரும் இவ்வாறு செய்வதில்லையா?
திரும்பப் பெற்றுக்கொள்ளலாம் என எதிர்பார்த்து நீங்கள் கடன் கொடுத்தால், உங்களுக்கு வரும் நன்மை என்ன? ஏனெனில், முழுவதையும் திரும்பப் பெற்றுக்கொள்ளலாம் என்னும் நோக்குடன், பாவிகளும் பாவிகளுக்குக் கடன் கொடுக்கிறார்களே.
ஆனால் நான் உங்களுக்குச் சொல்கிறேன்; உங்கள் பகைவரிடமும் அன்புகூருங்கள்; அவர்களுக்கு நன்மை செய்யுங்கள். உங்களை துன்புறுத்துவோருக்காக இறைவனிடம் வேண்டுங்கள். திரும்பக் கிடைக்கும் என எதிர்பார்க்காமல் கடன் கொடுங்கள்.
அப்போது உங்கள் கைம்மாறு மிகுதியாக இருக்கும். நீங்கள் உங்கள் விண்ணகத் தந்தையின் மக்கள் ஆவீர்கள். உன்னத கடவுளின் பிள்ளைகளாய் இருப்பீர்கள்.
விண்ணகத் தந்தையைப்போல் மாறுங்கள்.
ஏனெனில் அவர் நன்றிகேட்டோருக்கும் பொல்லாதோருக்கும் நன்மை செய்கிறார்.
அவர் நல்லோர் மேலும் தீயோர் மேலும் தம் கதிரவனை உதித்தெழச் செய்கிறார்.
நேர்மையுள்ளோர் மேலும் நேர்மையற்றோர் மேலும் மழை பெய்யச் செய்கிறார்.
ஆதலால், உங்கள் விண்ணகத் தந்தை நிறைவுள்ளவராய் இருப்பதுபோல நீங்களும் நிறைவுள்ளவர்களாய் இருங்கள். உங்கள் தந்தை இரக்கமுள்ளவராய் இருப்பதுபோல நீங்களும் இரக்கம் உள்ளவர்களாய் இருங்கள்
.இயேசு திருச்சட்டத்தை நிறைவேற்றினார்
ஆகையால் பிறர் உங்களுக்குச் செய்யவேண்டும் என விரும்புகிறவற்றை எல்லாம் நீங்களும் அவர்களுக்குச் செய்யுங்கள். இறைவாக்குகளும் திருச்சட்டமும் கூறுவது இதுவே.
திருச்சட்டத்தையோ இறைவாக்குகளையோ நான் அழிக்க வந்தேன் என, நீங்கள் எண்ண வேண்டாம்; அவற்றை அழிப்பதற்கல்ல, நிறைவேற்றுவதற்கே வந்தேன். விண்ணும் மண்ணும் ஒழிந்து போகுமுன் திருச்சட்டம் யாவும் நிறைவேறும். அதன் ஒரு சிற்றெழுத்தோ, ஒரு புள்ளியோ ஒழியாது என உறுதியாக உங்களுக்குச் சொல்லுகிறேன்.
எனவே, இக்கட்டளைகளில் மிகச் சிறியது ஒன்றையேனும் மீறி, அவ்வாறே மக்களுக்கும் கற்பிக்கிறவர் விண்ணரசில் “மிகச் சிறியவர்” எனக் கருதப்படுவார். இவையனைத்தையும் கடைப்பிடித்துக் கற்பிக்கிறவரோ விண்ணரசில் “பெரியவர்” எனக் கருதப்படுவார்.
III. பரிசேயரின் நெறியைவிட உங்கள் நெறி சிறந்திருக்கட்டும்
மறைநூல் அறிஞர், பரிசேயர் ஆகியோரின் நெறியைவிட உங்கள் நெறி சிறந்திருக்கட்டும். இல்லையெனில், நீங்கள் விண்ணரசுக்குள் புக முடியாது என உங்களுக்குச் சொல்கிறேன்.
i ) பரிசேயரைப் போல், மக்கள் புகழ்வதற்காகவே அறச்செயல்களைச் செய்யாதீர்
மக்கள் பார்க்கவேண்டுமென்று அவர்கள்முன் உங்கள் அறச் செயல்களைச் செய்யாதீர்கள். இதைக்குறித்து நீங்கள் எச்சரிக்கையாய் இருங்கள். இல்லையென்றால் உங்கள் விண்ணகத் தந்தையிடமிருந்து உங்களுக்குக் கைம்மாறு கிடைக்காது.
நீங்கள் தர்மம் செய்யும்போது, உங்களைப்பற்றித் தம்பட்டம் அடிக்காதீர்கள். வெளிவேடக்காரர், மக்கள் புகழ வேண்டுமென்று, தொழுகைக் கூடங்களிலும் சந்துகளிலும் நின்று அவ்வாறு செய்வர். அவர்கள் தங்களுக்குரிய கைம்மாறு பெற்றுவிட்டார்கள் என உறுதியாக உங்களுக்குச் சொல்கிறேன்.
நீங்கள் தர்மம் செய்யும்போது, உங்கள் வலக்கை செய்வது இடக்கைக்குத் தெரியாதிருக்கட்டும். அப்பொழுது, நீங்கள் செய்யும் தர்மம் மறைவாயிருக்கும்; மறைவாய் உள்ளதைக் காணும் உங்கள் தந்தையும் உங்களுக்குக் கைம்மாறு அளிப்பார்.
ii) பரிசேயரைப்போல், மக்கள் காண்பதற்காகவே இறைவேண்டல் செய்யாதீர்
நீங்கள் இறைவனிடம் வேண்டும்பொழுது, வெளிவேடக்காரரைப்போல் இருக்க வேண்டாம். அவர்கள் தொழுகைக்கூடங்களிலும் வீதியோரங்களிலும் நின்றுகொண்டு, மக்கள் பார்க்கவேண்டுமென இறைவேண்டல் செய்ய விரும்புகிறார்கள். அவர்கள் தங்களுக்குரிய கைம்மாறு பெற்று விட்டார்கள் என உறுதியாக உங்களுக்குச் சொல்கிறேன்.
ஆனால், நீங்கள் இறைவனிடம் வேண்டும்பொழுது, உங்கள் உள்ளறைக்குச் சென்று, கதவை அடைத்துக் கொண்டு, மறைவாய்உள்ள உங்கள் தந்தையை நோக்கி வேண்டுங்கள். மறைவாய்உள்ளதைக் காணும் உங்கள் தந்தையும் உங்களுக்குக் கைம்மாறு அளிப்பார்.
iii) வேண்டுதல் செய்யும்போது, மிகுதியான வார்த்தைகளால் பிதற்றாதீர்
மேலும், நீங்கள் இறைவனிடம் வேண்டும்பொழுது, பிறஇனத்தவரைப் போலப் பிதற்றவேண்டாம்; மிகுதியான சொற்களை அடுக்கிக்கொண்டே போவதால், தங்கள் வேண்டுதல் கேட்கப்படும் என அவர்கள் நினைக்கிறார்கள்.
நீங்கள் அவர்களைப்போல் இருக்க வேண்டாம். ஏனெனில் நீங்கள் கேட்கும்முன்னரே உங்கள் தேவையை உங்கள் தந்தை அறிந்திருக்கிறார்.
வேண்டுதல் செய்வது எப்படி?
ஆகவே, நீங்கள் இவ்வாறு இறைவனிடம் வேண்டுங்கள்:
’விண்ணுலகிலிருக்கிற எங்கள் தந்தையே, உமது பெயர் தூயதெனப் போற்றப்பெறுக! உமது ஆட்சி வருக! உமது திருவுளம் விண்ணுலகில் நிறைவேறுவதுபோல மண்ணுலகிலும் நிறைவேறுக!
இன்று தேவையான உணவை எங்களுக்குத் தாரும். எங்களுக்கு எதிராகக் குற்றம் செய்தோரை நாங்கள் மன்னித்துள்ளதுபோல எங்கள் குற்றங்களை மன்னியும். எங்களைச் சோதனைக்கு உட்படுத்தாதேயும், தீயோனிடமிருந்து எங்களை விடுவியும்.
கடவுளின் மன்னிப்பைப் பெறுவது எப்படி?
மற்ற மனிதர் செய்யும் குற்றங்களை நீங்கள் மன்னிப்பீர்களானால் உங்கள் விண்ணகத் தந்தையும் உங்களை மன்னிப்பார். மற்ற மனிதரை நீங்கள் மன்னிக்காவிடில் உங்கள் தந்தையும் உங்கள் குற்றங்களை மன்னிக்க மாட்டார்.
iv) நோன்பு இருப்பதை பரிசேயரைப்போல் முகவாட்டத்தால் வெளிப்படுத்தாதீர்
மேலும், நீங்கள் நோன்பு இருக்கும்போது, வெளிவேடக்காரரைப்போல முகவாட்டமாய் இருக்க வேண்டாம்.
தாங்கள் நோன்பு இருப்பதை மக்கள் பார்க்கவேண்டுமென்றே, அவர்கள் தங்கள் முகங்களை விகாரப்படுத்திக் கொள்கிறார்கள். அவர்கள் தங்களுக்குரிய கைம்மாறு பெற்றுவிட்டார்கள் என உறுதியாக உங்களுக்குச் சொல்கிறேன்.
நீங்கள் நோன்பு இருக்கும்போது, உங்கள் தலையில் எண்ணெய் தேய்த்து, முகத்தைக் கழுவுங்கள். அப்பொழுது, நீங்கள் நோன்பு இருப்பது மனிதருக்குத் தெரியாது; மாறாக. மறைவாய் இருக்கிற உங்கள் தந்தைக்குமட்டும் தெரியும். மறைவாய் உள்ளதைக் காணும் உங்கள் தந்தையும் உங்களுக்கு ஏற்ற கைம்மாறு அளிப்பார்.
v) பரிசேயரைப்போல் பிறரை குறைசொல்லித் தீர்ப்பு அளிக்காதீர்
பிறர் குற்றவாளிகள் எனத் தீர்ப்பு அளிக்காதீர்கள்; அப்போதுதான் நீங்களும் தீர்ப்புக்கு உள்ளாக மாட்டீர்கள். மற்றவர்களைக் கண்டனம் செய்யாதீர்கள்; அப்போதுதான் நீங்களும் கண்டனத்துக்கு ஆளாக மாட்டீர்கள்.
நீங்கள் அளிக்கும் தீர்ப்பையே நீங்களும் பெறுவீர்கள். மன்னியுங்கள்; மன்னிப்புப் பெறுவீர்கள்.
கொடுங்கள்; உங்களுக்குக் கொடுக்கப்படும்; அமுக்கிக் குலுக்கிச் சரிந்து விழும்படி நன்றாய் அளந்து உங்கள் மடியில் போடுவார்கள். நீங்கள் எந்த அளவையால் அளக்கிறீர்களோ, அதே அளவையாலே உங்களுக்கும் அளக்கப்படும்.
மேலும் இயேசு அவர்களுக்கு உவமையாகக் கூறியது: "பார்வையற்ற ஒருவர் பார்வையற்ற வேறொருவருக்கு வழிகாட்ட இயலுமா? இருவரும் குழியில் விழுவாரல்லவா?
சீடர் குருவைவிட மேலானவர் அல்ல. ஆனால் தேர்ச்சி பெற்ற எவரும் தம் குருவைப் போலிருப்பர்.
உங்கள் கண்ணில் இருக்கும் மரக்கட்டையைப் பார்க்காமல் உங்கள் சகோதரர் அல்லது சகோதரியின் கண்ணில் இருக்கும் துரும்பை நீங்கள் கூர்ந்து கவனிப்பதேன்? அல்லது அவரிடம், "உங்கள் கண்ணிலிருந்து துரும்பை எடுக்கட்டுமா?" என்று எப்படிக் கேட்கலாம்? இதோ! உங்கள் கண்ணில்தான் மரக்கட்டை இருக்கிறதே!
வெளிவேடக்காரரே, முதலில் உங்கள் கண்ணிலிருந்து மரக்கட்டையை எடுத்தெறியுங்கள். அதன்பின் உங்கள் சகோதரர் அல்லது சகோதரியின் கண்ணிலிருந்து துரும்பை எடுக்க உங்களுக்குத் தெளிவாய்க் கண் தெரியும்.
தூய்மையானது எதையும் நாய்களுக்குக் கொடுக்க வேண்டாம். அவை திருப்பி உங்களைக் கடித்துக் குதறும். மேலும் உங்கள் முத்துகளைப் பன்றிகள் முன் எறிய வேண்டாம்; எறிந்தால் அவை தங்கள் கால்களால் அவற்றை மிதித்து விடும்.
ஆகவே, நீங்கள் இவ்வாறு இறைவனிடம் வேண்டுங்கள்: ’விண்ணுலகிலிருக்கிற எங்கள் தந்தையே, உமது பெயர் தூயதெனப் போற்றப்பெறுக. உமது ஆட்சி வருக. உமது திருவுளம் விண்ணுலகில் நிறைவேறுவதுபோல மண்ணுலகிலும் நிறைவேறுக. இன்று தேவையான உணவை எங்களுக்குத் தாரும். எங்களுக்கு எதிராகக் குற்றம் செய்தோரை நாங்கள் மன்னித்துள்ளதுபோல எங்கள் குற்றங்களை மன்னியும். எங்களைச் சோதனைக்கு உட்படுத்தாதேயும், தீயோனிடமிருந்து எங்களை விடுவியும். ஆட்சியும் வல்லமையும் மாட்சியும் என்றென்றும் உமக்கே. ஆமென்.
இயேசு கூறிய இந்த வேண்டுதலை வாயால் கூறுவதால் பயனில்லை. அதன்படி செயல்படவேண்டும். எனவே, இந்த வேண்டுதலின் விளக்கத்தையும் இயேசு தம் மலைப்பொழிவில் அறிவித்தார்.
மறைநூலில் எழுதியுள்ளவாறு உங்களால் கடவுளின் பெயர் பிற இனத்தாரிடையே இகழப்படுகின்றது என்றார் திருத்தூதர் பவுல் (உரோமர் 2 24).
எனவே, நாம் உலகுக்கு உப்பாகவும் ஒளிவீசும் விளக்காகவும் இருந்தால் தந்தையின் பெயர் போற்றப்படும் என்று இயேசு அறிவித்தார்.
தந்தையின் பெயர் போற்றப்பெறுவது எப்படி? உங்கள் ஒளி மனிதர்முன் ஒளிர்க. அப்பொழுது அவர்கள், உங்கள் நற்செயல்களைக் கண்டு, உங்கள் விண்ணகத் தந்தையைப் போற்றிப் புகழ்வார்கள் என்றார் இயேசு,
நாம் உலகிற்கு உவர்ப்புள்ள உப்பாய் இருக்கவேண்டும்
நீங்கள் மண்ணுலகிற்கு உப்பாய் இருக்கிறீர்கள். உப்பு நல்லது, ஆனால். உப்பு உவர்ப்பற்றுப்போனால் எதைக்கொண்டு அதை உவர்ப்புள்ளதாக்க முடியும்? அது, வேறுஒன்றுக்கும் உதவாது. அது, வெளியில் கொட்டப்பட்டு மனிதரால் மிதிபடும்.
நாம் தண்டின்மீது வைத்த விளக்கைப்போல் ஒளி தரவேண்டும்
நீங்கள் உலகிற்கு ஒளியாய் இருக்கிறீர்கள். மலைமேல் இருக்கும் நகர் மறைவாயிருக்க முடியாது. எவரும் விளக்கை ஏற்றி, மரக்காலுக்குள் வைப்பதில்லை, மாறாக, விளக்குத் தண்டின்மீதே வைப்பர். அப்பொழுதுதான் அது வீட்டிலுள்ள அனைவருக்கும் ஒளி தரும்.
நம் நற்செயல்களால் விண்ணகத் தந்தை போற்றப்படுவார்
இவ்வாறே, உங்கள் ஒளி மனிதர்முன் ஒளிர்க. அப்பொழுது அவர்கள், உங்கள் நற்செயல்களைக் கண்டு, உங்கள் விண்ணகத் தந்தையைப் போற்றிப் புகழ்வார்கள்.
விண்ணரசு விண்ணில் இல்லை, அது நம் உள்ளத்தில் செயல்படுகிறது
.எனது ஆட்சி இவ்வுலக ஆட்சி போன்றது அல்ல என்று இயேசு ஆளுநர் பிலாத்திடம் கூறினார். (யோவான் 18 16). எனெனில், இயேசு உலகில் ஆட்சிசெய்ய வரவில்லை. மக்களின் உள்ளத்தில் ஆட்சிசெய்யவே வந்தார்.
நான் கடவுளின் ஆவியைக் கொண்டே பேய்களை ஓட்டுகிறேன் என்றால் இறையாட்சி உங்களிடம் வந்துள்ளது அல்லவா?. என்றார் இயேசு (மத்தேயு 12 28) இறையாட்சி கண்களுக்கு புலப்படும்வகையில் வராது. இதோ, இங்கே, அல்லது அதோ, அங்கே எனச் சொல்லமுடியாது; எனெனில், இறையாட்சி உங்கள் நடுவேயே செயல்படுகிறதே என்றார் (லூக்கா 17 21).. எனவே, மனம்மாறி, தந்தையே உமது ஆட்சி வருக என்று கேட்பவரின் உள்ளத்தில் மட்டுமே இறையாட்சி வருகிறது.. .
எனவே, விண்ணரசு என்பது விண்ணில் இல்லை. விண்ணரசு, இறையாட்சி, தந்தையின் ஆட்சி, கடவுளின் ஆட்சி அனைத்தும் ஒன்றே. தம் பாவங்ளை அறிந்து. மனம்மாறுவோரின் உள்ளத்தில் கடவுளின் ஆட்சி செயல்படுகிறது.
இறையாட்சி என்பது நாம் உண்பதையும் குடிப்பதையும் அடிப்படையாகக் கொண்டதல்ல, மாறாகத் தூய ஆவி அருளும் நீதி, அமைதி, மகிழ்ச்சி ஆகியவற்றையே அடிப்படையாகக் கொண்டது என்றார் திருத்தூதர் பவுல் (உரோமர் 14 17)
என்னை நோக்கி, "ஆண்டவரே, ஆண்டவரே" எனச் சொல்பவரெல்லாம் விண்ணரசுக்குள் செல்வதில்லை. மாறாக, விண்ணுலகிலுள்ள என் தந்தையின் திருவுளத்தின்படி செயல்படுபவரே செல்வர் என்றார் இயேசு இறையாட்சி பேச்சில் அல்ல, செயல்பாட்டில்தான் இருக்கிறது என்றார் திருத்தூதர் பவுல் (1 கொரிந்தியர் 4 20), எனவே, இயேசுவின் வார்த்தையை கேட்பவர் அல்ல, வார்த்தையின்படி, உலகில் செயல்படுபவரே மீட்பை பெறுவார்.
.
கடவுளின் திருவுளம் மண்ணுலகிலும் நிறைவேறுவது எப்படி?
மண்ணுலகில் உங்களுக்கெனச் செல்வத்தைச் சேமித்துவைக்க வேண்டாம். இங்கே பூச்சியும் துருவும் அழித்துவிடும், திருடரும் அதைக் கன்னமிட்டுத் திருடுவர். (மண்ணுலகில் செல்வத்தை மிகுதியாகச் சேமிப்பது கடவுளின் திருவுளமல்ல. பேராசை உடையவர்கள் விண்ணரசை இழப்பார்கள்)
விண்ணுலகில் செல்வத்தைச் சேமிப்போர் விண்ணரசைப் பெறுவர்
ஆனால், விண்ணுலகில் உங்கள் செல்வத்தைச் சேமித்து வையுங்கள். அங்கே பூச்சியோ துருவோ அழிப்பதில்லை, திருடரும் கன்னமிட்டுத் திருடுவதில்லை. (விண்ணுலகில் செல்வத்தை சேமிக்கும்போது, விண்ணரசு அவர்களுடைய உள்ளத்தில் வருகிறது.)
விண்ணுலகில் செல்வத்தை சேமிப்பது எப்படி?
சிறு மந்தையாகிய நீங்கள் அஞ்ச வேண்டாம் உங்கள் தந்தை உங்களைத் தம் ஆட்சிக்கு உட்படுத்தத் திருவுளம் கொண்டுள்ளார்.
உங்கள் உடைமைகளை விற்றுத் தர்மம் செய்யுங்கள் இற்றுப்போகாத பணப்பைகளையும், விண்ணுலகில் குறையாத செல்வத்தையும் தேடிக் கொள்ளுங்கள் அங்கே திருடன் நெருங்குவதில்லை. பூச்சியும் இருப்பது இல்லை. (உலகில் ஒவ்வொருவரும் தம்மால் முடிந்த உதவியை மற்றவர்களுக்குச் செய்யும்போது, விண்ணுலகில் அவருக்கு, நண்பர்களும் செல்வமும் கிடைக்கிறது )
விண்ணுலகில் செல்வம் சேமிக்கும்போது விண்ணரசு உங்கள் உள்ளத்தில் வருகிறது
உங்கள் செல்வம் எங்கு உள்ளதோ அங்கே உங்கள் உள்ளமும் இருக்கும் (மண்ணுலக வாழ்வை விரும்புவோர் மண்ணுலகில் செல்வத்தை சேமிப்பார். இயேசுவின் நற்செய்தியைக் கேட்டு மனம்மாறுவோர் விண்ணுலகில் செல்வத்தை சேமிப்பார். அவரே மீட்பை பெறுகிறார் )
விண்ணுலகிலும் மண்ணுலகிலும் செல்வத்தை தேடிக்கொள்ள முயல்வோர் வெளிவேடக்காரரே
எவரும் இரு தலைவர்களுக்குப் பணிவிடை செய்ய முடியாது. ஏனெனில், ஒருவரை வெறுத்து மற்றவரிடம் அவர் அன்பு கொள்வார், அல்லது ஒருவரைச் சார்ந்து கொண்டு மற்றவரைப் புறக்கணிப்பார். நீங்கள் கடவுளுக்கும் செல்வத்துக்கும் பணிவிடை செய்ய முடியாது (விண்ணுலகிலும் மண்ணுலகிலும் செல்வத்தைச் சேர்க்க எவராலும் இயலாது பரிசேயரைப் போன்ற வெளிவேடக்காரரே அவ்வாறு முயற்சிசெய்வர்கள்,)
4) இன்று தேவையான உணவை எங்களுக்குத் தாரும்
உலக வாழ்வுக்காக கவலை கொள்ளாதீர்
ஆகவே நான் உங்களுக்குச் சொல்கிறேன், உயிர்வாழ எதை உண்பது, எதைக் குடிப்பது என்றோ, உடலுக்கு எதை உடுத்துவது என்றோ நீங்கள் கவலை கொள்ளாதீர்கள். உணவைவிட உயிரும் உடையைவிட உடலும் உயர்ந்தவை அல்லவா?’
பறவைகள் உணவை சேர்த்துவைப்பதில்லையே
வானத்துப் பறவைகளை நோக்குங்கள் அவை விதைப்பதுமில்லை, அறுப்பதுமில்லை, களஞ்சியத்தில் சேர்த்து வைப்பதுமில்லை. உங்கள் விண்ணகத் தந்தை அவற்றுக்கும் உணவு அளிக்கிறார். அவற்றைவிட நீங்கள் மேலானவர்கள் அல்லவா.
கவலைப்படுவதால் உங்களுள் எவர் தமது உயரத்தோடு ஒரு முழம் கூட்ட முடியும்? ஆதலால் மிகச் சிறிய ஒரு செயலைக் கூடச் செய்யமுடியாத நீங்கள் மற்றவை பற்றி ஏன் கவலைப்படுகிறீர்கள்?
காட்டுச் செடிகளுக்கும் கடவுள் உடை உடுத்துகிறார்
உடைக்காக நீங்கள் ஏன் கவலைப்படுகிறீர்கள்? காட்டுமலர்ச் செடிகள் எப்படி வளருகின்றன எனக் கவனியுங்கள், அவை உழைப்பதுமில்லை, நூற்பதுமில்லை. ஆனால் சாலமோன்கூடத் தம் மேன்மையில்எல்லாம் அவற்றில் ஒன்றைப் போலவும் அணிந்திருந்ததில்லை என நான் உங்களுக்குச் சொல்கிறேன்.
நம்பிக்கை குன்றியவர்களே, இன்றைக்கு இருந்து நாளைக்கு அடுப்பில் எறியப்படும் காட்டுப்புல்லுக்குக் கடவுள் இவ்வாறு அணிசெய்கிறார் என்றால் உங்களுக்கு இன்னும் அதிகமாகச் செய்யமாட்டாரா?
பிற இனத்தவரைப்போல் செல்வத்தை நாடித் தேடாதீர்
ஆதலால் எதை உண்போம்? எதைக் குடிப்போம்? எதை அணிவோம்? எனக் கவலை கொள்ளாதீர்கள். ஏனெனில் உலகு சார்ந்த பிற இனத்தவரே இவற்றையெல்லாம் நாடுவர். உங்களுக்கு இவை தேவையென உங்கள் தந்தைக்குத் தெரியும்.
ஆகவே அனைத்திற்கும் மேலாக கடவுளின் ஆட்சியையும் அவருக்கு ஏற்புடையவற்றையும் நாடுங்கள். அப்போது இவை அனைத்தும் உங்களுக்குச் சேர்த்துக் கொடுக்கப்படும்.
ஆகையால் நாளைக்காகக் கவலைப்படாதீர்கள். ஏனெனில் நாளையக் கவலையைப் போக்க நாளை வழி பிறக்கும். அந்தந்த நாளுக்கு, அன்றன்றுள்ள தொல்லையே போதும்..
5) எங்களுக்கு எதிராகக் குற்றம் செய்தோரை நாங்கள் மன்னித்துள்ளதுபோல எங்கள் குற்றங்களை மன்னியும்.
மற்ற மனிதர் செய்யும் குற்றங்களை நீங்கள் மன்னிப்பீர்களானால் உங்கள் விண்ணகத் தந்தையும் உங்களை மன்னிப்பார். மற்ற மனிதரை நீங்கள் மன்னிக்காவிடில் உங்கள் தந்தையும் உங்கள் குற்றங்களை மன்னிக்க மாட்டார்.
6) எங்களைச் சோதனைக்கு உட்படுத்தாதேயும், தீயோனிடமிருந்து எங்களை விடுவியும்.
போலி இறைவாக்கினரை அறிந்து விலகுங்கள்
போலி இறைவாக்கினரைக் குறித்து எச்சரிக்கையாயிருங்கள், அவர்கள் ஆட்டுத்தோலைப் போர்த்துக்கொண்டு உங்களிடத்தில் வருவார்கள். உள்ளத்திலோ அவர்கள் பட்சிக்கிற ஓநாய்கள்.
ஒவ்வொரு மரமும் அதனதன் கனியாலே அறியப்படும் நல்ல மரம் கெட்ட கனிகளைக் கொடுக்கமாட்டாது, கெட்ட மரம் நல்ல கனிகளைக் கொடுக்கமாட்டாது. ஏனென்றால் முட்செடிகளில் அத்திப் பழங்களைப் பறிப்பாருமில்லை. முட்புதர்களில் திராட்சைக் குலைகளை அறுத்துச் சேர்ப்பாருமில்லை. நல்ல மரமெல்லாம் நல்ல கனிகளைக் கொடுக்கும்; கெட்ட மரம் கெட்ட கனிகளைக் கொடுக்கும்.
அவ்வாறே, நல்லவர் தம் உள்ளமாகிய நல்ல கருவூலத்திலிருந்து நல்லவற்றை எடுத்துக்கொடுப்பர். தீயவரோ தீயதினின்று தீயவற்றை எடுத்துக் கொடுப்பர். உள்ளத்தின் நிறைவையே வாய் பேசும்.
இவ்வாறு போலி இறைவாக்கினர் யாரென அவர்களுடைய செயல்களைக் கொண்டே இனங்கண்டு கொள்வீர்கள். .நல்ல கனி கொடாத மரங்களெல்லாம் வெட்டப்பட்டு நெருப்பில் எறியப்படும்.
V. கேளுங்கள், தேடுங்கள், தட்டுங்கள்
மேலும் நான் உங்களுக்குச் சொல்கிறேன்
"கேளுங்கள், உங்களுக்குக் கொடுக்கப்படும்,
தேடுங்கள், நீங்கள் கண்டடைவீர்கள்,
தட்டுங்கள், உங்களுக்குத் திறக்கப்படும்.
ஏனெனில், கேட்போர் எல்லாரும் பெற்றுக் கொள்கின்றனர், தேடுவோர் கண்டடைகின்றனர், தட்டுவோருக்குத் திறக்கப்படும்.
1) தூய ஆவியைக் கேளுங்கள்,
ஏனெனில், கேட்போர் எல்லாரும் பெற்றுக் கொள்கின்றனர்
உங்களுள் எவராவது ஒருவர், அப்பத்தைக் கேட்கும் தம் பிள்ளைக்குக் கல்லைக் கொடுப்பாரா? அல்லது, பிள்ளை, மீன் கேட்டால் பாம்பைக் கொடுப்பாரா? முட்டையைக் கேட்டால் அவர் தேளைக் கொடுப்பாரா? தீயோர்களாகிய நீங்களே உங்கள் பிள்ளைகளுக்கு நற்கொடைகள் அளிக்க அறிந்திருக்கிறீர்கள்.
அப்படியானால், விண்ணுலகில் உள்ள உங்கள் தந்தை தம்மிடம் கேட்போருக்கு இன்னும் மிகுதியாக நன்மைகள் அளிப்பார் அல்லவா. தம்மிடம் கேட்போருக்குத் தூய ஆவியைக் கொடுப்பது எத்துணை உறுதி.
2) வாழ்வுக்குச் செல்லும் வாயில் இடுக்கமானது தேடுங்கள், அப்போது கண்டடைவீர்கள்
இடுக்கமான வாயிலின் வழியே நுழையுங்கள், ஏனெனில் அழிவுக்குச் செல்லும் வாயில் அகன்றது, வழியும் விரிவானது, அதன் வழியே செல்வோர் பலர்.
வாழ்வுக்குச் செல்லும் வாயில் மிகவும் இடுக்கமானது, வழியும் மிகக் குறுகலானது, இதைக் கண்டுபிடிப்போர் சிலரே.
3. தட்டுங்கள், உங்களுக்கு விண்ணரசு திறக்கப்படும்
ஆண்டவரே ஆண்டவரே எனச் சொல்பவர், விண்ணரசுக்குள் செல்வதில்லை
நான் சொல்பவற்றைச் செய்யாது என்னை, "ஆண்டவரே, ஆண்டவரே" என ஏன் கூப்பிடுகிறீர்கள்?
என்னை நோக்கி, "ஆண்டவரே, ஆண்டவரே" எனச் சொல்பவரெல்லாம் விண்ணரசுக்குள் செல்வதில்லை. மாறாக, விண்ணுலகிலுள்ள என் தந்தையின் திருவுளத்தின்படி செயல்படுபவரே செல்வர்.
அந்நாளில் பலர் என்னை நோக்கி: ஆண்டவரே, ஆண்டவரே! உம் பெயரால் நாங்கள் இறைவாக்கு உரைத்தோம் அல்லவா? உம் பெயரால் பிசாசுகளைத் துரத்தினோம் அல்லவா? உமது பெயரால் வல்ல செயல்கள் பல செய்யவில்லையா? என்பர்.
அதற்கு நான் அவர்களிடம், "உங்களை எனக்குத் தெரியவே தெரியாது. நெறிகேடாகச் செயல்படுவோரே, என்னைவிட்டு அகன்று போங்கள்" என வெளிப்படையாக அறிவிப்பேன்.
இயேசுவின் வார்த்தையை கேட்டு, அவற்றின்படி செயல்படுவோரே விண்ணரசுக்குள் செல்வார்
தட்டுவோருக்குத் திறக்கப்படும்
என்னிடம் வந்து, என் வார்த்தைகளைக் கேட்டு, அவற்றின்படி செயல்படும் எவரும் யாருக்கு ஒப்பாவார் என உங்களுக்கு எடுத்துக்காட்டுகிறேன்.
ஆழமாய்த் தோண்டி, பாறை மீது தம் வீட்டைக் கட்டிய அறிவாளிக்கு அவர் ஒப்பாவார். மழை பெய்தது ஆறு பெருக்கெடுத்து ஓடியது பெருங்காற்று வீசியது அவை அவ்வீட்டின் மேல் மோதியும் அது விழவில்லை. ஏனெனில் பாறையின்மீது அதன் அடித்தளம் இடப்பட்டிருந்தது.
இயேசுவின் வார்த்தையை கேட்டும்,
அவற்றின்படி செயல்படாதவர் விண்ணரசை இழப்பார்
நான் சொல்லும் இந்த வார்த்தைகளைக் கேட்டு இவற்றின்படி செயல்படாத எவரும் மணல்மீது தம் வீட்டைக் கட்டிய அறிவிலிக்கு ஒப்பாவார். மழை பெய்தது ஆறு பெருக்கெடுத்து ஓடியத பெருங் காற்று வீசியது அவை அவ்வீட்டைத் தாக்க, அது விழுந்தது இவ்வாறு பேரழிவு நேர்ந்தது.
இயேசு இவ்வாறு உரையாற்றி முடித்தபோது அவரது போதனையைக் கேட்ட மக்கள் கூட்டத்தினர்வியப்பில் ஆழ்ந்தனர். ஏனெனில் அவர்கள்தம் மறைநூல் அறிஞரைப் போலன்றி, அதிகாரத்தோடு அவர்களுக்கு அவர் கற்பித்தார்.
10. கிழக்கிலும் மேற்கிலுமிருந்து பலர் வந்து, விண்ணரசின் பந்தியில் அமர்வர்
நூற்றுவர் தலைவரின் பணியாளர் குணமடைந்தார் கப்பர்நாகும் கிபி 31
இயேசு இவற்றை எல்லா மக்களுக்கும் சொல்லி முடித்த பின்பு, கப்பர்நாகுமுக்குச் சென்றார். அங்கே நூற்றுவர்-தலைவர் ஒருவரின் பணியாளர் ஒருவர் முடக்குவாதத்தால் நோயுற்றுச் சாகும்தறுவாயில் இருந்தார். அவர்மீது தலைவர் மதிப்பு வைத்திருந்தார். அவர் இயேசுவைப்பற்றிக் கேள்விப்பட்டு, யூதரின் மூப்பர்களை அவரிடம் அனுப்பி, தம் பணியாளரைக் காப்பாற்ற-வருமாறு வேண்டினார்.
அவர்கள் இயேசுவிடம் வந்து, ’நீர் இவ்வுதவியைச் செய்வதற்கு அவர் தகுதியுள்ளவரே. நம் மக்கள் மீது அவர் அன்புள்ளவர்; எங்களுக்கு ஒரு தொழுகைக்கூடமும் கட்டித் தந்திருக்கிறார்’ என்று சொல்லி, அவரை ஆர்வமாய் அழைத்தார்கள்.
இயேசு அவர்களிடம், ’நான் வந்து அவரைக் குணமாக்குவேன்’ என்றார். இயேசு அவர்களோடு சென்றார்.
வீட்டுக்குச் சற்றுத் தொலையில் வந்துகொண்டிருந்தபோதே, நூற்றுவர்-தலைவர் தம் நண்பர்கள் சிலரை அனுப்பிப் பின்வருமாறு கூறச் சொன்னார்: ’ஐயா, உமக்குத் தொந்தரவு வேண்டாம்; நீர் என் வீட்டிற்குள் அடியெடுத்து வைக்க நான் தகுதியற்றவன். உம்மிடம் வரவும் என்னைத் தகுதியுள்ளவனாக நான் கருதவில்லை. ஆனால் ஒரு வார்த்தை சொல்லும்; என் ஊழியர் நலமடைவார்.
நான் அதிகாரத்துக்கு உட்பட்டவன். என் அதிகாரத்துக்கு உட்பட்ட படை வீரரும் உள்ளனர். நான் ஒருவரிடம் ’செல்க’ என்றால் அவர் செல்கிறார்; வேறு ஒருவரிடம் ’வருக’ என்றால் அவர் வருகிறார். என் பணியாளரைப் பார்த்து ’இதைச் செய்க’ என்றால் அவர் செய்கிறார்’ என்றார்.
இஸரயேலரிடத்திலும் இத்தகைய நம்பிக்கை இல்லையே
இவற்றைக் கேட்ட இயேசு அவரைக்குறித்து வியப்புற்றார். தம்மைப் பின்தொடரும் மக்கள்கூட்டத்தினரைத் திரும்பிப் பார்த்து, ’உறுதியாக உங்களுக்குச் சொல்கிறேன், இஸ்ரயேலரிடத்திலும் இத்தகைய நம்பிக்கையை நான் கண்டதில்லை.
கிழக்கிலும் மேற்கிலுமிருந்து பலர் வந்து, ஆபிரகாம், ஈசாக்கு, யாக்கோபு ஆகியோருடன் விண்ணரசின் பந்தியில் அமர்வர். அரசுக்கு உரியவர்களோ புறம்பாக உள்ள இருளில் தள்ளப்படுவார்கள். அங்கே அழுகையும் அங்கலாய்ப்பும் இருக்கும்’ என்றார். .
பின்னர் இயேசு அவர்களை நோக்கி, "நீர் போகலாம், நீர் நம்பியவண்ணமே உமக்கு நிகழும் என்றார். அனுப்பப்பட்டவர்கள் வீட்டுக்குத் திரும்பி வந்தபோது அப்பணியாளர் நலமுற்றிருப்பதைக் கண்டார்கள்.
நயீன் ஊர்க் கைம்பெண் மகன் உயிர்பெறுதல்
அதன்பின் இயேசு நயீன் என்னும் ஊருக்குச் சென்றார். அவருடைய சீடரும் பெருந்திரளான மக்களும் அவருடன் சென்றனர். அவர், அவ்வூர் வாயிலை நெருங்கி வந்தபோது, இறந்த ஒருவரைச் சிலர் தூக்கி வந்தனர். தாய்க்கு அவர் ஒரே மகன்; அத்தாயோ கைம்பெண். அவ்வூரைச் சேர்ந்த பெருந்திரளான மக்களும் அவரோடு இருந்தனர்.
அவரைக் கண்ட ஆண்டவர், அவர்மீது பரிவுகொண்டு, ’அழாதீர்' என்றார். அருகில் சென்று பாடையைத் தொட்டார். அதைத் தூக்கிச் சென்றவர்கள் நின்றார்கள். அப்பொழுது அவர், ’இளைஞனே, நான் உனக்குச் சொல்கிறேன், எழுந்திடு’ என்றார். இறந்தவர் எழுந்து உட்கார்ந்து பேசத் தொடங்கினார்.இயேசு அவரை அவர் தாயிடம் ஒப்படைத்தார்.
அனைவரும் அச்சமுற்று, ’நம்மிடையே பெரிய இறைவாக்கினர் ஒருவர் தோன்றியிருக்கிறார். கடவுள் தம் மக்களைத் தேடி வந்திருக்கிறார்’ என்று சொல்லிக் கடவுளைப் போற்றிப் புகழ்ந்தனர். அவரைப்பற்றிய இந்தச் செய்தி, யூதேயா நாடு முழுவதிலும், சுற்றியுள்ள பகுதிகளிலும் பரவியது.
11. யோவானைப்பற்றி இயேசுவின் சான்று
யோவான் சிறையிலிருந்தபோது மெசியாவின் செயல்களைப்பற்றிக் கேள்வியுற்றார். யோவானுடைய சீடர் இவற்றையெல்லாம் அவருக்கு அறிவித்தனர். யோவான் தம் சீடருள் இருவரை வரவழைத்து, ’வரவிருப்பவர் நீர்தாமா? அல்லது வேறொருவரை எதிர்பார்க்க வேண்டுமா?’ எனக் கேட்க ஆண்டவரிடம் அனுப்பினார்.
அவர்கள் அவரிடம் வந்து, ’″வர இருப்பவர் நீர்தாமா? அல்லது வேறொருவரை எதிர்பார்க்க வேண்டுமா?″ எனக் கேட்கத் திருமுழுக்கு யோவான் எங்களை உம்மிடம் அனுப்பினார்’ என்று சொன்னார்கள்.
அந்நேரத்தில் பிணிகளையும் நோய்களையும் பொல்லாத ஆவிகளையும் கொண்டிருந்த பலரை இயேசு குணமாக்கினார்; பார்வையற்ற பலருக்குப் பார்வை அருளினார்.
அதற்கு இயேசு மறுமொழியாக, ’நீங்கள் கேட்பவற்றையும் காண்பவற்றையும் யோவானிடம் போய் அறிவியுங்கள். பார்வையற்றோர் பார்வை பெறுகின்றனர்; கால் ஊனமுற்றோர் நடக்கின்றனர்; தொழுநோயாளர் நலமடைகின்றனர்; காது கேளாதோர் கேட்கின்றனர்; இறந்தோர் உயிர்பெற்று எழுகின்றனர்; ஏழைகளுக்கு நற்செய்தி அறிவிக்கப்படுகிறது. என்னைத் தயக்கம் இன்றி ஏற்றுக்கொள்வோர் பேறுபெற்றோர்’ என்றார்.
எலியா இவரே
யோவானிடமிருந்து வந்த தூதர்கள் திரும்பிச் சென்றபிறகு, இயேசு மக்கள் கூட்டத்திடம் யோவானைப்பற்றிப் பேசத் தொடங்கினார்: ’நீங்கள் எதைப் பார்க்கப் பாலைநிலத்திற்குப் போனீர்கள்? காற்றினால் அசையும் நாணலையா? இல்லையேல் யாரைப் பார்க்கப் போனீர்கள்? மெல்லிய ஆடையணிந்த ஒரு மனிதரையா? இதோ, பளிச்சிடும் மெல்லிய ஆடையணிந்து, செல்வச் செழிப்பில் வாழ்வோர் அரசமாளிகையில் அல்லவா இருக்கின்றனர்.
பின்னர் யாரைத்தான் பார்க்கப் போனீர்கள்? இறைவாக்கினரையா? ஆம், இறைவாக்கினரைவிட மேலானவரையே என நான் உங்களுக்குச் சொல்கிறேன். ’இதோ! நான் என் தூதனை உமக்குமுன் அனுப்புகிறேன். அவர் உமக்குமுன் உமது வழியை ஆயத்தம் செய்வார்’ என்று இவரைப்பற்றித்தான் மறைநூலில் எழுதப்பட்டுள்ளது.
பழைய உடன்படிக்கை யோவானோடு முடிந்தது
திருச்சட்டமும், எல்லா இறைவாக்கு நூல்களும் யோவான் வரும்வரை இறைவாக்குரைத்தன. உங்களுக்கு விருப்பம் இருந்தால், வரவேண்டிய எலியா இவரே என ஏற்றுக்கொள்வீர்கள். கேட்கச் செவியுள்ளோர் கேட்கட்டும்.
இயேசுவின் புதிய உடன்படிக்கையின் மேன்மை
திருமுழுக்கு யோவானின் காலமுதல் இந்நாள்வரையிலும் விண்ணரசு வன்மையாகத் தாக்கப்படுகின்றது. தாக்குகின்றவர்கள் அதைக் கைப்பற்றிக் கொள்கின்றனர்.’
மனிதராய்ப் பிறந்தவர்களுள் திருமுழுக்கு யோவானைவிடப் பெரியவர் எவரும் தோன்றியதில்லை. ஆயினும் இறையாட்சிக்கு உட்பட்டோருள் மிகச் சிறியவரும் அவரினும் பெரியவரே என நான் உறுதியாக உங்களுக்குச் சொல்கிறேன்.
யோவானையும் (பழைய உடன்படிக்கை) இயேசுவையும் (புதிய உடன்படிக்கை) புறக்கணித்த பரிசேயர்கள்
திரண்டிருந்த மக்கள் அனைவரும், வரிதண்டுவோரும் இதைக் கேட்டு, கடவுளுடைய நீதிநெறியை ஏற்று, யோவானிடமிருந்து திருமுழுக்கு பெற்றனர். ஆனால் பரிசேயரும் திருச்சட்ட அறிஞரும் அவர் கொடுத்த திருமுழுக்கைப் பெறாது, தங்களுக்கென்று கடவுள் வகுத்திருந்த திட்டத்தைப் புறக்கணித்தார்கள்.
பின்னர் இயேசு, ’இத்தலைமுறையின் மக்களை யாருக்கு ஒப்பிடுவேன்? இவர்கள் சந்தை வெளியில் உட்கார்ந்து மறு அணியினரைக் கூப்பிட்டு, ’நாங்கள் குழல் ஊதினோம்; நீங்கள் கூத்தாடவில்லை. நாங்கள் ஒப்பாரி வைத்தோம்; நீங்கள் மாரடித்துப் புலம்பவில்லை’ என்று கூறி விளையாடும் சிறுபிள்ளைகளுக்கு ஒப்பானவர்கள்.
எப்படியெனில், திருமுழுக்கு யோவான் வந்தார்; அவர் உணவு அருந்தவுமில்லை; திராட்சை மது குடிக்கவுமில்லை;. இவர்களோ அவரை, ’பேய் பிடித்தவன்’ என்கிறார்கள். மானிட மகன் வந்துள்ளார்; அவர் உண்கிறார்; குடிக்கிறார். இவர்களோ, ’இம் மனிதன் பெருந்தீனிக்காரன், குடிகாரன், வரி தண்டுபவர்களுக்கும் பாவிகளுக்கும் நண்பன்’ என்கிறார்கள். எனினும் ஞானம் மெய்யானது என்பதற்கு அதை ஏற்றுக் கொண்டோரின் செயல்களே சான்று’ என்றார்.
12. புதிய உடன்படிக்கையின் மன்னிப்பைப் பெறுபவர் யார்? நேர்மையாளரா? பாவியா?
பரிசேயருள் ஒருவர் இயேசுவைத் தம்மோடு உண்பதற்கு அழைத்திருந்தார். அவரும் அந்தப் பரிசேயருடைய வீட்டிற்குப் போய்ப் பந்தியில் அமர்ந்தார்.
அந்நகரில் பாவியான பெண் ஒருவர் இருந்தார். பரிசேயருடைய வீட்டில் இயேசு உணவு அருந்தப் போகிறார் என்பது அவருக்குத் தெரியவந்தது. உடனே நறுமணத் தைலம் கொண்ட படிகச் சிமிழைக் கொண்டு வந்தார். இயேசுவுக்குப் பின்னால், கால்மாட்டில் வந்து, அவர் அழுதுகொண்டே நின்றார்; அவருடைய காலடிகளைத் தம் கண்ணீரால் நனைத்து, தம் கூந்தலால் துடைத்து, தொடர்ந்து முத்தமிட்டு, அக்காலடிகளில் நறுமணத் தைலம் பூசினார்.
அவரை அழைத்த பரிசேயர் இதைக் கண்டு, ’இவர் ஓர் இறைவாக்கினர் என்றால், தம்மைத் தொடுகிற இவள் யார், எத்தகையவள் என்று அறிந்திருப்பார்; இவள் பாவியாயிற்றே’ என்று தமக்குள்ளே சொல்லிக்கொண்டார்.
இயேசு அவரைப் பார்த்து, ’சீமோனே, நான் உமக்கு ஒன்று சொல்லவேண்டும்’ என்றார். அதற்கு அவர், ’போதகரே, சொல்லும்’ என்றார்.
கடன்பட்ட இருவர் உவமை
அப்பொழுது அவர், 'கடன்-கொடுப்பவரிடம், ஒருவர் ஐந்நூறு தெனாரியமும், மற்றவர் ஐம்பது தெனாரியமுமாக, இருவர் கடன்பட்டிருந்தனர். கடனைத் தீர்க்க அவர்களால் முடியாமற்போகவே, இருவர் கடனையும் அவர் தள்ளுபடி செய்துவிட்டார். இவர்களுள் யார் அவரிடம் மிகுந்த அன்பு செலுத்துவார்?’ என்று கேட்டார்.
சீமோன் மறுமொழியாக, ’யாருக்கு அதிகக் கடனை தள்ளுபடி செய்தாரோ, அவரே என நினைக்கிறேன்’ என்றார். இயேசு அவரிடம், ’நீர் சொன்னது சரியே' என்றார்.
(தம் பாவங்கள் மிகுதி என்று அறிந்த அப்பெண் முழுமையாக மன்னிக்கப்பட்டார். தம் பாவங்களை அறியாமல், தம்மை நேர்மையாளர் என்று தற்பெருமைகொண்ட பரிசேயர் இயேசுவின்மன்னிப்பை இழந்தார்)
பின்பு அப்பெண்ணின் பக்கம் அவர் திரும்பி, சீமோனிடம், ’இவரைப் பார்த்தீரா? நான் உம்முடைய வீட்டிற்குள் வந்தபோது, நீர் என் காலடிகளைக் கழுவத் தண்ணீர் தரவில்லை; இவரோ தம் கண்ணீரால் என் காலடிகளை நனைத்து அவற்றைத் தமது கூந்தலால் துடைத்தார். நீர் எனக்கு முத்தம் கொடுக்கவில்லை; இவரோ நான் உள்ளே வந்ததுமுதல் என் காலடிகளை ஓயாமல் முத்தமிட்டுக்கொண்டே இருக்கிறார். நீர் எனது தலையில் எண்ணெய் பூசவில்லை; இவரோ என் காலடிகளில் நறுமணத்தைலம் பூசினார்.
ஆகவே நான் உமக்குச் சொல்கிறேன்; இவர் செய்த பல பாவங்கள் மன்னிக்கப்பட்டன. ஏனெனில் இவர் மிகுதியாக அன்புகூர்ந்தார். குறைவாக மன்னிப்புப் பெறுவோர் குறைவாக அன்பு செலுத்துவோர் ஆவர்’ என்றார். பின்பு அப்பெண்ணைப் பார்த்து, ’உம் பாவங்கள் மன்னிக்கப்பட்டன’ என்றார்.
’பாவங்களையும் மன்னிக்கும் இவர் யார்?’ என்று அவரோடு பந்தியில் அமர்ந்திருந்தவர்கள் தங்களுக்குள் சொல்லிக்கொண்டார்கள்.
இயேசு அப்பெண்ணை நோக்கி, ’உமது நம்பிக்கை உம்மை மீட்டது; அமைதியுடன் செல்க' என்றார்.
1) விண்ணுலகில் இருக்கிற எங்கள் தந்தையே,
உமது பெயர் தூயதெனப் போற்றப்பெறுக.
மறைநூலில் எழுதியுள்ளவாறு உங்களால் கடவுளின் பெயர் பிற இனத்தாரிடையே இகழப்படுகின்றது என்றார் திருத்தூதர் பவுல் (உரோமர் 2 24).
எனவே, நாம் உலகுக்கு உப்பாகவும் ஒளிவீசும் விளக்காகவும் இருந்தால் தந்தையின் பெயர் போற்றப்படும் என்று இயேசு அறிவித்தார்.
தந்தையின் பெயர் போற்றப்பெறுவது எப்படி? உங்கள் ஒளி மனிதர்முன் ஒளிர்க. அப்பொழுது அவர்கள், உங்கள் நற்செயல்களைக் கண்டு, உங்கள் விண்ணகத் தந்தையைப் போற்றிப் புகழ்வார்கள் என்றார் இயேசு,
நாம் உலகிற்கு உவர்ப்புள்ள உப்பாய் இருக்கவேண்டும்
நீங்கள் மண்ணுலகிற்கு உப்பாய் இருக்கிறீர்கள். உப்பு நல்லது, ஆனால். உப்பு உவர்ப்பற்றுப்போனால் எதைக்கொண்டு அதை உவர்ப்புள்ளதாக்க முடியும்? அது, வேறுஒன்றுக்கும் உதவாது. அது, வெளியில் கொட்டப்பட்டு மனிதரால் மிதிபடும்.
நாம் தண்டின்மீது வைத்த விளக்கைப்போல் ஒளி தரவேண்டும்
நீங்கள் உலகிற்கு ஒளியாய் இருக்கிறீர்கள். மலைமேல் இருக்கும் நகர் மறைவாயிருக்க முடியாது. எவரும் விளக்கை ஏற்றி, மரக்காலுக்குள் வைப்பதில்லை, மாறாக, விளக்குத் தண்டின்மீதே வைப்பர். அப்பொழுதுதான் அது வீட்டிலுள்ள அனைவருக்கும் ஒளி தரும்.
நம் நற்செயல்களால் விண்ணகத் தந்தை போற்றப்படுவார்
இவ்வாறே, உங்கள் ஒளி மனிதர்முன் ஒளிர்க. அப்பொழுது அவர்கள், உங்கள் நற்செயல்களைக் கண்டு, உங்கள் விண்ணகத் தந்தையைப் போற்றிப் புகழ்வார்கள்.
2) உமது ஆட்சி வருக.
(மனமாற்றம்)
மனம் மாறுங்கள், ஏனெனில் விண்ணரசு நெருங்கி வந்துவிட்டது என்றார் இயேசு. இந்த வார்த்தையின் உண்மையை பலர் அறியவில்லை.
மனம்மாறுங்கள்
குதிரையை குளத்திற்கு அருகில் கூட்டிசெல்லமுடியும். ஆனால், தாகமுள்ள குதிரையே தண்ணீரைக் குடிக்கும். தாகமில்லாத குதிரையை எவரும் குடிக்கவைக்க முடியாது. அதுபோலவே, மலைப்பொழிவின் மூலம், விண்ணரசை மனிதர்களின் அருகில் இயேசு கொண்டுவந்தார். ஏராளமான மக்கள் அதைக் கேட்டார்கள். ஆனால், அதை ஏற்றுக்கொள்வதும் தள்ளிவிடுவதும் மனிதர்களின் விருப்பமே. எனவே மனம் மாறுங்கள் என்பதை இயேசு முதலில் கூறினர்.. எனெனில் தம் பாவங்களை அறிந்தவரே மனம்மாறி விண்ணரை ஏற்றுக்கொள்வார்கள்.
இயேசுவின் மலைப்பொழிவை கைக்கொண்டு. மனம்மாறும்போது, அவர்களின் உள்ளத்தில் விண்ணரசு வருகிறது. மனந்திரும்பாமல், உம்முடைய ஆட்சி வருக என்று வாயால் கூறுவோர் உள்ளத்தில் இறையாட்சி வருவதில்லை..
விண்ணரசு நெருங்கி வந்துவிட்டது
பழைய உடன்படிக்கையின் காலத்தில் தந்தையின் திருவுளம் முழுமையாக அறியப்படவில்லை. பலர் வெளிவேடக்காரராகவே இருந்தார்கள். காணிக்கை, பலி, சடங்குகள் போன்றவையே இறையாட்சி என்று. மக்கள் எண்ணினார்கள். செல்வர்களே நேர்மையாளர் என்றும், எளியோரும் நோயாளிகளும் பாவிகள் என்றும் நம்பினார்கள். இவ்வாறு, விண்ணரசு மக்களிடமிருந்து வெகு தொலைவில் இருந்தது..
இயேசு தம் நற்செய்தியின் மூலம் விண்ணரசை மக்களுக்கு அருகில் கொண்டுவந்தார். தம் மலைப்பொழிவில் திருச்சட்டத்தை நிறைவுசெய்தார் பரிசேயரின் வெளிவேடத்தை கண்டித்தார். தந்தையின் திருவுளத்தை மக்களுக்கு வெளிப்படுத்தினார் புதிய உடன்படிக்கையை ஏற்படுத்தினார் மனம்மாறியவரின் பாவங்களைத் தம்மீது ஏற்றுக்கொண்டார். இவ்வாறு விண்ணரசு மக்களுக்கு மிக நெருங்கி வந்துவிட்டது