1. இயேசுவின் திருத்தூதுப் பொழிவு
அறுவடை மிகுதி; வேலையாள்களோ குறைவு கலிலேயா கிபி 31
இயேசு, நகர்கள், சிற்றூர்கள் எல்லாம் சுற்றிவந்தார். எங்கும், அவர்களுடைய தொழுகைக்கூடங்களில் கற்பித்தார்; விண்ணரசைப்பற்றிய நற்செய்தியைப் பறைசாற்றினார்; நோய்-நொடிகள் அனைத்தையும் குணமாக்கினார். திரண்டிருந்த மக்களை அவர் கண்டபோது, அவர்கள்மேல் பரிவுகொண்டார்; அவர்கள், ஆயர்இல்லா ஆடுகளைப்போல அலைக்கழிக்கப்பட்டு, சோர்ந்து காணப்பட்டார்கள்.
அப்பொழுது, அவர் தம் சீடரை நோக்கி, ’அறுவடை மிகுதி; வேலையாள்களோ குறைவு. ஆகையால், தேவையான வேலையாள்களைத் தமது அறுவடைக்கு அனுப்பும்படி, அறுவடையின் உரிமையாளரிடம் மன்றாடுங்கள்’ என்றார்.
பன்னிருவரை அனுப்பினார்
இயேசு, தம் சீடர் பன்னிருவரையும் தம்மிடம் வரவழைத்தார். தீயஆவிகளை ஓட்டவும், பிணிகளைப் போக்கவும், வல்லமையும் அதிகாரமும் அவர்களுக்குக் கொடுத்தார். இறையாட்சி-பற்றிப் பறைசாற்றவும், உடல்நலம் குன்றியோரின் பிணிதீர்க்கவும், அவர்களை இருவர்-இருவராக அனுப்பத்தொடங்கினார்.
அந்த திருத்தூதர் பன்னிருவரின் பெயர் பின்வருமாறு: முதலாவது பேதுரு என்னும் சீமோன், அடுத்து அவருடைய சகோதரர் அந்திரேயா, செபதேயுவின் மகன் யாக்கோபு, அவருடைய சகோதரர் யோவான், பிலிப்பு, பர்த்தலமேயு, தோமா, வரிதண்டினவராகிய மத்தேயு, அல்பேயுவின் மகன் யாக்கோபு, ததேயு, தீவிரவாதியாய் இருந்த சீமோன், இயேசுவைக் காட்டிக் கொடுத்த யூதாசு இஸ்காரியோத்து.
நற்செய்தியை அறிவிக்கும் சீடர்களுக்கு இயேசுவின் அறிவுரை
இயேசு இந்தப் பன்னிருவரையும் அனுப்பியபோது அவர்களுக்கு அறிவுரையாகக் கூறியது: ’’பிற இனத்தாரின் எப்பகுதிக்கும் செல்ல வேண்டாம். சமாரியாவின் நகர் எதிலும் நுழைய வேண்டாம். மாறாக, வழி தவறிப்போன ஆடுகளான இஸ்ரயேல் மக்களிடமே செல்லுங்கள். அப்படிச் செல்லும்போது, ’விண்ணரசு நெருங்கி வந்துவிட்டது’ எனப் பறைசாற்றுங்கள். நலம் குன்றியவர்களைக் குணமாக்குங்கள்; இறந்தோரை உயிர் பெற்றெழச் செய்யுங்கள்; தொழுநோயாளரை நலமாக்குங்கள்; பேய்களை ஓட்டுங்கள்; கொடையாகப் பெற்றீர்கள்; கொடையாகவே வழங்குங்கள்.
உங்களை ஏற்பவர் வீட்டில் தங்குங்கள்
பயணத்திற்காகப் பையோ, உணவோ, பணமோ, கைத்தடியோ எடுத்துக்கொண்டு போக வேண்டாம். ஒர் அங்கி போதும். ஏனெனில், வேலையாள் தம் உணவுக்கு உரிமை உடையவரே. ஆனால், மிதியடி போட்டுக் கொள்ளலாம்;’ என்று அவர்களுக்குக் கட்டளையிட்டார்.்.
நீங்கள் எந்த நகருக்கோ, ஊருக்கோ சென்றாலும், அங்கே உங்களை ஏற்கத் தகுதியுடையவர் யாரெனக் கேட்டறியுங்கள். அங்கிருந்து புறப்படும்வரை அவரோடு தங்கியிருங்கள். அந்த வீட்டுக்குள் செல்லும்பொழுதே, வீட்டாருக்கு வாழ்த்துக் கூறுங்கள். வீட்டார் தகுதி உள்ளவராய் இருந்தால், நீங்கள் வாழ்த்திக் கூறிய அமைதி அவர்கள்மேல் தங்கட்டும்; அவர்கள் தகுதியற்றவர்களாயிருந்தால் அது உங்களிடமே திரும்பி வரட்டும்.
ஏற்றுக்கொள்ளாதவர்களை விட்டுவிடுங்கள்
உங்களை எவராவது ஏற்றுக் கொள்ளாமலோ, நீங்கள் அறிவித்தவற்றுக்குச் செவிசாய்க்காமலோ இருந்தால், அவரது வீட்டை அல்லது நகரைவிட்டு வெளியேறும்பொழுது, உங்கள் கால்களில் படிந்துள்ள தூசியை உதறிவிடுங்கள். இதுவே அவர்களுக்கு எதிரான சான்றாகும். தீர்ப்பு நாளில், சோதோம்-கொமோரா பகுதிகளுக்குக் கிடைக்கும் தண்டனையைவிட, அந்நகருக்குக் கிடைக்கும் தண்டனை கடினமாகவே இருக்கும் என, நான் உறுதியாக உங்களுக்குச் சொல்கிறேன்.
முன்மதியும் கபடற்றவர்களுமாய் இருங்கள்
’இதோ! ஓநாய்களிடையே ஆடுகளை அனுப்புவதைப்போல, நான் உங்களை அனுப்புகிறேன். எனவே, பாம்புகளைப்போல முன்மதி உடையவர்களாகவும், புறாக்களைப்போலக் கபடு அற்றவர்களாகவும் இருங்கள். எச்சரிக்கையாக இருங்கள்.
ஏனெனில், மனிதர்கள் உங்களை யூதச் சங்கங்களிடம் ஒப்புவிப்பார்கள். தங்கள் தொழுகைக்கூடங்களில் உங்களைச் சாட்டையால் அடிப்பார்கள். என்பொருட்டு ஆளுநர்களிடமும், அரசர்களிடமும் உங்களை இழுத்துச்செல்வார்கள். இவ்வாறு, யூதர்கள் முன்னும், பிற-இனத்தவர் முன்னும் சான்று பகர்வீர்கள்.
பேசுபவர் ஆவியானவரே
இப்படி அவர்கள் உங்களை ஒப்புவிக்கும்பொழுது, ‘என்ன பேசுவது, எப்படிப் பேசுவது’ என நீங்கள் கவலைப்பட வேண்டாம். நீங்கள் என்ன பேச வேண்டும் என்பது, அந்நேரத்தில் உங்களுக்கு அருளப்படும். ஏனெனில், பேசுபவர் நீங்கள் அல்ல. மாறாக, உங்கள் தந்தையின் ஆவியாரே உங்கள் வழியாய்ப் பேசுவார்.
துன்பத்திலும் உறுதியுடன் இருங்கள்
சகோதரர்-சகோதரிகள், தம் உடன் சகோதரர்-சகோதரிகளையும், தந்தையர், பிள்ளைகளையும் கொல்வதற்கென ஒப்புவிப்பார்கள். பிள்ளைகள் பெற்றோர்க்கு எதிராக எழுந்து, அவர்களைக் கொல்வார்கள். என் பெயரின் பொருட்டு, உங்களை எல்லாரும் வெறுப்பர். இறுதிவரை மன உறுதியுடன் இருப்போரே மீட்கப்படுவர்.
அவர்கள் உங்களை ஒரு நகரில் துன்புறுத்தினால், வேறொரு நகருக்கு ஓடிப்போங்கள். மானிடமகனின் வருகைக்குமுன், நீங்கள் இஸ்ரயேலின் எல்லா நகர்களையும் சுற்றி முடித்திருக்க மாட்டீர்கள் என, உறுதியாகவே உங்களுக்குச் சொல்கிறேன்.
எதுவும் மறைக்கப்படவில்லை
சீடர் குருவைவிடப் பெரியவர் அல்ல. பணியாளரும் தம் தலைவரைவிடப் பெரியவர் அல்ல. சீடர் தம் குருவைப்போல் ஆகட்டும்; பணியாளர் தம் தலைவரைப்போல் ஆகட்டும். அதுவே போதும். வீட்டுத் தலைவரையே பெயல்செபூல் என அழைப்பவர்கள், வீட்டாரைப்பற்றி இன்னும் தரக்குறைவாகப் பேசமாட்டார்களா? எனவே, அவர்களுக்கு அஞ்சவேண்டாம். ஏனெனில், வெளிப்படாதவாறு மூடப்பட்டிருப்பது ஒன்றும் இல்லை; அறியமுடியாதவாறு மறைந்திருப்பதும் ஒன்றும் இல்லை.
கடவுளுக்கு மட்டும் அஞ்சுங்கள்
நான் உங்களுக்கு இருளில் சொல்வதை, நீங்கள் ஒளியில் கூறுங்கள். காதோடு காதாய்க் கேட்பதை, வீட்டின் மேல்தளத்திலிருந்து அறிவியுங்கள். ஆன்மாவைக் கொல்ல இயலாமல். உடலை மட்டும் கொல்பவர்களுக்கு அஞ்சவேண்டாம். ஆன்மாவையும் உடலையும் நரகத்தில் அழிக்க-வல்லவருக்கே அஞ்சுங்கள். காசுக்கு இரண்டு சிட்டுக்குருவிகள் விற்பதில்லையா? எனினும், அவற்றுள் ஒன்றுகூட உங்கள் தந்தையின் விருப்பமின்றித் தரையில் விழாது. உங்கள் தலைமுடியெல்லாம் எண்ணப்பட்டிருக்கின்றது. சிட்டுக்குருவிகள் பலவற்றைவிட நீங்கள் மேலானவர்கள். எனவே அஞ்சாதிருங்கள்.
தம் உயிரைக் காப்பாற்ற விரும்புவோர் அதை இழந்துவிடுவர்
’மக்கள் முன்னிலையில் என்னை ஏற்றுக்கொள்பவரை, விண்ணுலகில் இருக்கும் என் தந்தையின் முன்னிலையில், நானும் ஏற்றுக்கொள்வேன். மக்கள் முன்னிலையில் என்னை மறுதலிப்பவர் எவரையும், விண்ணுலகில் இருக்கிற என் தந்தையின் முன்னிலையில், நானும் மறுதலிப்பேன்.
என்னைப் பின்பற்றுவோருக்கு துன்பம் உண்டு
’நான் உலகிற்கு அமைதி-கொணர வந்தேன் என எண்ண வேண்டாம். அமைதியை அல்ல, வாளையே கொணர வந்தேன். தந்தைக்கு எதிராக மகனையும், தாய்க்கு எதிராக மகளையும், மாமியாருக்கு எதிராக மருமகளையும் நான் பிரிக்க வந்தேன். ஒருவருடைய பகைவர் அவரது வீட்டில் உள்ளவரே ஆவர்.
என்னைவிடத் தம் தந்தையிடமோ, தாயிடமோ மிகுந்த அன்பு-கொண்டுள்ளோர், என்னுடையோர் என கருதப்படத் தகுதியற்றோர். என்னைவிடத் தம் மகனிடமோ, மகளிடமோ மிகுதியாய் அன்பு கொண்டுள்ளோரும், என்னுடையோர் எனக் கருதப்படத் தகுதியற்றோர்.
தம் சிலுவையைச் சுமக்காமல் என்னைப் பின்பற்றி வருவோர் என்னுடையோர் எனக் கருதப்படத் தகுதியற்றோர். தம் உயிரைக் காக்க விரும்புவோர் அதை இழந்து விடுவர். என் பொருட்டுத் தம் உயிரை இழப்போரோ அதைக் காத்துக் கொள்வர்.
சீடர்களை ஏற்றுக்கொள்வோருக்குக் கிடைக்கும் கைம்மாறு
’உங்களை ஏற்றுக்கொள்பவர் என்னை ஏற்றுக்கொள்கிறார். என்னை ஏற்றுக்கொள்பவரோ, என்னை அனுப்பினவரையே ஏற்றுக்கொள்கிறார். இறைவாக்கினர் ஒருவரை, அவர் இறைவாக்கினர் என்பதால் ஏற்றுக் கொள்பவர், இறைவாக்கினருக்குரிய கைம்மாறு பெறுவார். நேர்மையாளர் ஒருவரை, அவர் நேர்மையாளர் என்பதால் ஏற்றுக்கொள்பவர், நேர்மையாளருக்குரிய கைம்மாறு பெறுவார்.
இச்சிறியோருள் ஒருவருக்கு, அவர் என் சீடர் என்பதால், ஒரு கிண்ணம் குளிர்ந்த நீராவது கொடுப்பவரும் தம் கைம்மாறு பெறாமல் போகார் என உறுதியாக உங்களுக்குச் சொல்கிறேன்.’
இயேசு தம் பன்னிரு சீடருக்கும் அறிவுரை கொடுத்து முடித்ததும், பக்கத்து ஊர்களில் கற்பிக்கவும், நற்செய்தியை அறிவிக்கவும், அவ்விடம் விட்டு அகன்றார். அப்படியே, அவர்கள் புறப்பட்டு, ஊர் ஊராகச் சென்று, நற்செய்தியை அறிவித்து, மக்கள் மனம்மாறவேண்டுமென்று பறைசாற்றினார்கள்; பல பேய்களை ஓட்டினார்கள்; உடல்-நலமற்றோர் பலரை, எண்ணெய் பூசிக் குணப்படுத்தினார்கள்.
2. யோவானின் தலையை எனக்குக் கொடும்
திருமுழுக்கு யோவானின் மரணம் திபெரியா கிபி 32
ஏரோது, தன் சகோதரனான பிலிப்பின் மனைவி ஏரோதியாவை, மனைவியாக்கிக் கொண்டிருந்தான்; அவள் பொருட்டு ஆளனுப்பி, யோவானைப் பிடித்துக் கட்டிச் சிறையில் அடைத்திருந்தான். ஏனெனில், யோவான் ஏரோதிடம், ’உம் சகோதரர் மனைவியை நீர் வைத்திருப்பது முறை அல்ல’ எனச் சொல்லிவந்தார். ஏரோது அவரைக் கொலைசெய்ய விரும்பினான்; ஆயினும், மக்கள் கூட்டத்தினர் அவரை ஓர் இறைவாக்கினர் எனக் கருதியதால், அவர்களுக்கு அஞ்சினான்.
அப்போது, ஏரோதியா யோவான்மீது காழ்ப்புணர்வு கொண்டு,அவரைக் கொலை செய்ய விரும்பினாள்; ஆனால், அவளால் இயலவில்லை. ஏனெனில், யோவான் நேர்மையும் தூய்மையும் உள்ளவர் என்பதை ஏரோது அறிந்து, அஞ்சி, அவருக்குப் பாதுகாப்பு அளித்து வந்தான். அவர் சொல்லைக் கேட்டு மிகக் குழப்பமுற்ற போதிலும், அவருக்கு மனமுவந்து செவிசாய்த்தான்.
ஒருநாள் ஏரோதியாவுக்கு நல்ல வாய்ப்பு ஒன்று கிடைத்தது.
ஏரோது, தன் பிறந்த நாளில், அரசவையினருக்கும், ஆயிரத்தவர் தலைவர்களுக்கும், கலிலேய முதன்மைக் குடிமக்களுக்கும் ஒரு விருந்து படைத்தான். அப்போது, ஏரோதியாவின் மகள் உள்ளே வந்து, அவையினர் நடுவில் நடனமாடி, ஏரோதையும் விருந்தினரையும் அகமகிழச் செய்தாள்.
அதனால், அரசன் அச்சிறுமியிடம், ’உனக்கு என்ன வேண்டுமானாலும் கேள், தருகிறேன்’ என்றான். ’நீ என்னிடம் எது கேட்டாலும், ஏன் என் அரசில் பாதியையே கேட்டாலும் உனக்குத் தருகிறேன்’ என்றும் ஆணையிட்டுக் கூறினான். அவள் வெளியே சென்று, ’நான் என்ன கேட்கலாம்?’ என்று தன் தாயை வினவினாள். அவள், 'திருமுழுக்கு யோவானின் தலையைக் கேள்’ என்றாள்.
உடனே சிறுமி அரசனிடம் விரைந்து வந்து, தன் தாய் சொல்லிக்கொடுத்தபடியே, ’திருமுழுக்கு யோவானின் தலையை ஒரு தட்டில் வைத்து, இப்போதே இங்கேயே எனக்குக் கொடும்’ என்று கேட்டாள்.
இதைக் கேட்ட அரசன் மிக வருந்தினான். ஆனாலும் விருந்தினர்முன் தான் ஆணையிட்டதால், அவளுக்கு அதை மறுக்க விரும்பவில்லை. உடனே அரசன், ஒரு காவலனை அனுப்பி, யோவானுடைய தலையைக் கொண்டுவருமாறு பணித்தான்.
அவன் சென்று, சிறையில் அவருடைய தலையை வெட்டி, அதை ஒரு தட்டில் வைத்துக் கொண்டுவந்து அச்சிறுமியிடம் கொடுத்தான். அவளும் அதைத் தன் தாயிடம் கொண்டு சென்றாள்.
இதைக் கேள்வியுற்ற யோவானுடைய சீடர்கள் வந்து, அவருடைய உடலை எடுத்துச் சென்று, ஒரு கல்லறையில் அடக்கம் செய்தனர்; பின்னர், இந்நிகழ்ச்சியினை இயேசுவிடம் போய் அறிவித்தனர். இதைக் கேள்வியுற்ற இயேசு பாலைநிலத்திலுள்ள தனிமையான ஓர் இடத்திற்குப் புறப்பட்டார்..
இயேசு தனிமையான இடத்திற்கு சென்றார் பெத்செய்தா அருகில் கிபி 32
திருத்தூதர்கள் திரும்பி வந்து, தாங்கள் செய்தவை கற்பித்தவை யாவற்றையும் இயேசுவிடம் எடுத்துக் கூறினார்கள். அவர் அவர்களிடம், "நீங்கள் பாலைநிலத்திலுள்ள தனிமையான ஓர் இடத்திற்குச் சென்று, சற்று ஓய்வெடுங்கள்" என்றார். ஏனெனில், பலர் வருவதும் போவதுமாய் இருந்ததால், உண்பதற்குக்கூட அவர்களுக்கு நேரம் கிடைக்கவில்லை.
3. ஐந்து அப்பம், இரண்டு மீன், ஐயாயிரம் பேர்
பெத்செய்தா கிபி 32
இயேசு படகேறி, கலிலேயக் கடலை கடந்து, மறுகரைக்குச் சென்றார். அதற்குத் திபேரியக் கடல் என்றும் பெயர் உண்டு. தம் சீடர்களை மட்டும் கூட்டக்கொண்டு, அவர் தனித்திருப்பதற்காகப் பெத்சாய்தா என்னும் நகருக்குச் சென்றார்
அவர்கள் புறப்பட்டுப் போவதை மக்கள் பார்த்தார்கள். பலர் அவர்களை இன்னாரென்று தெரிந்து கொண்டு, எல்லா நகர்களிலிருந்தும் கால்நடையாகவே கூட்டமாய் ஓடி, அவர்களுக்குமுன் அங்கு வந்து சேர்ந்தனர்.
அவர் கரையில் இறங்கியபோது, பெருந்திரளான மக்களைக் கண்டார். உடல்-நலமற்றோருக்கு அவர் செய்துவந்த அரும்-அடையாளங்களைக் கண்டு, மக்கள் பெருந்திரளாய் அவரைப் பின்தொடர்ந்தனர். அவர்கள் ஆயரில்லா ஆடுகளைப்போல் இருந்ததால், அவர்கள் மீது பரிவு கொண்டு, அவர்களை வரவேற்று, இறையாட்சியைப்பற்றி அவர்களோடு பேசி, அவர்களிடையே உடல் நலமற்றிருந்தோரைக் குணப்படுத்தினார்.
பாஸ்கா
இயேசு மலைமேல் ஏறித் தம் சீடரோடு அமர்ந்தார். யூதருடைய பாஸ்கா விழா அண்மையில் நிகழவிருந்தது.
நீங்களே உணவு கொடுங்கள்
பொழுதுசாயத் தொடங்கவே, பன்னிருவரும் அவரிடம் வந்து, "இவ்விடம் பாலைநிலம் ஆயிற்றே; ஏற்கனவே நெடுநேரம் ஆகிவிட்டது. சுற்றிலுமுள்ள ஊர்களுக்கும், பட்டிகளுக்கும் சென்று தங்கவும், உணவு வாங்கிக்கொள்ளவும், மக்கள் கூட்டத்தை அனுப்பிவிடும் என்றனர்.
இயேசு அவர்களிடம், ’அவர்கள் செல்லவேண்டியதில்லை; நீங்களே அவர்களுக்கு உணவு கொடுங்கள்’ என்று பதிலளித்தார்.
இயேசு நிமிர்ந்து பார்த்து, மக்கள் பெருந்திரளாய் அவரிடம் வருவதைக் கண்டு, "இவர்கள் உண்பதற்கு நாம் எங்கிருந்து அப்பம் வாங்கலாம்?" என்று பிலிப்பிடம் கேட்டார். தாம் செய்யப்போவதை அறிந்திருந்தும் அவரைச் சோதிப்பதற்காகவே இக்கேள்வியைக் கேட்டார்.
பிலிப்பு மறுமொழியாக, "இருநூறு தெனாரியத்திற்கு அப்பம் வாங்கினாலும், ஆளுக்கு ஒரு சிறு-துண்டும் கிடைக்காதே என்றார்.
ஐந்து அப்பம் இரண்டு மீன்
அப்பொழுது அவர், "உங்களிடம் எத்தனை அப்பங்கள் இருக்கின்றன? போய்ப் பாருங்கள் என்றார். அவருடைய சீடருள் ஒருவரும், சீமோன் பேதுருவின் சகோதரருமான அந்திரேயா, "இங்கே சிறுவன் ஒருவன் இருக்கிறான். அவனிடம் ஐந்து வாற்கோதுமை அப்பங்களும், இரண்டு மீன்களும் உள்ளன. ஆனால், இத்தனை பேருக்கு இவை எப்படிப் போதும்?" என்றார். ஏனெனில், ஏறக்குறைய ஐயாயிரம் ஆண்கள் அங்கு இருந்தனர்.
இயேசு, "மக்களை ஐம்பது-ஐம்பது பேராகப் பந்தியில் அமரச் செய்யுங்கள்" என்றார்.அப்பகுதி முழுவதும் புல்தரையாய் இருந்தது. அவர் சொன்னபடியே, அவர்கள், அனைவரையும் பந்தியில் வரிசையாக அமரச் செய்தார்கள்.
அவர் அந்த ஐந்து அப்பங்களையும், இரண்டு மீன்களையும் எடுத்து, வானத்தை அண்ணாந்து பார்த்து, கடவுளுக்கு நன்றி செலுத்தி, அப்பங்களைப் பிட்டு, அவர்களுக்குப் பரிமாறுவதற்காகத் தம் சீடரிடம் கொடுத்தார். அவ்வாறே, அந்த இரு மீன்களையும் எல்லாருக்கும் பகிர்ந்தளித்தார். அவர்களுக்கு வேண்டியமட்டும் கிடைத்தது.
அவர்கள் வயிறார உண்டபின், "ஒன்றும் வீணாகாதபடி, எஞ்சிய துண்டுகளைச் சேர்த்து வையுங்கள்" என்று தம் சீடரிடம் கூறினார். மக்கள் உண்டபின், ஐந்து வாற்கோதுமை அப்பங்களிலிருந்து எஞ்சிய துண்டுகளைச் சேர்த்துச் சீடர்கள் பன்னிரண்டு கூடைகளில் நிரப்பினார்கள்.
பெண்களும் சிறு-பிள்ளைகளும் நீங்கலாக, உணவுண்ட ஆண்களின் தொகை ஏறத்தாழ ஐயாயிரம்.
மாலைவேளையானதும், இயேசு கூட்டத்தினரை அவ்விடத்திலிருந்து அனுப்பிக் கொண்டிருந்தார். அப்பொழுது, சீடரையும், உடனே படகேறித் தமக்குமுன் அக்கரைக்குச் செல்லுமாறு அவர் கட்டாயப்படுத்தினார்.
இயேசு செய்த இந்த அரும்-அடையாளத்தைக் கண்ட மக்கள், ’உலகிற்கு வரவிருந்த இறைவாக்கினர் உண்மையில் இவரே’ என்றார்கள். அவர்கள் வந்து, தம்மைப் பிடித்துக் கொண்டுபோய் அரசராக்கப் போகிறார்கள் என்பதை உணர்ந்து, இயேசு மீண்டும் தனியாய் மலைக்குச் சென்றார்.
இயேசுவின் சீடர்கள் கடற்கரைக்கு வந்து, படகேறி, மறுகரையிலுள்ள கப்பர்நாகுமுக்குப் புறப்பட்டார்கள்.
ஆண்டவரே என்னைக் காப்பாற்றும் கலிலேயக் கடல் கிபி 32
பொழுது சாய்ந்த பிறகும், அங்கே இயேசு தனியே இருந்தார். அதற்குள் படகு கரையிலிருந்து நெடுந்தொலை சென்றுவிட்டது. அப்போது பெருங்காற்று வீசிற்று; கடல் பொங்கி எழுந்தது. மேலும், எதிர்க்காற்று அடித்துக்கொண்டிருந்ததால் அலைகளால் படகு அலைக்கழிக்கப்பட்டது.
அவர்கள் ஐந்து அல்லது ஆறு கிலோமீட்டர் தொலைவுக்குப் படகு-ஓட்டியபின், சீடர்கள் தண்டுவலிக்கப் பெரிதும் வருந்துவதைக் கண்ட அவர், கடல்மீது நடந்து, அவர்களை நோக்கி வந்தார்; அவர்களைக் கடந்து செல்ல விரும்பினார். அப்போது ஏறக்குறைய நான்காம் காவல்வேளை.
இயேசு கடல்மீது நடந்து படகருகில் வருவதைக் கண்டு, சீடர்கள் அஞ்சினார்கள். "ஐயோ, பேய்" என அச்சத்தினால் அலறினர். இயேசு அவர்களிடம், "துணிவோடிருங்கள், நான்தான் அஞ்சாதீர்கள்" என்றார்.
பேதுரு அவருக்கு மறுமொழியாக, "ஆண்டவரே, நீர்தாம் என்றால், நானும் கடல்மீது நடந்து உம்மிடம்வர ஆணையிடும்" என்றார். அவர், "வா" என்றார். பேதுருவும் படகிலிருந்து இறங்கி, இயேசுவை நோக்கிக் கடல்மீது நடந்து சென்றார்.
அப்பொழுது பெருங்காற்று வீசியதைக் கண்டு அஞ்சி, அவர் மூழ்கும்போது, "ஆண்டவரே, என்னைக் காப்பாற்றும்" என்று கத்தினார். இயேசு, உடனே தம் கையை நீட்டி, அவரைப் பிடித்து, "நம்பிக்கை குன்றியவனே, ஏன் ஐயம் கொண்டாய்?" என்றார்.
அவர்கள் படகில் ஏறியதும் காற்று அடங்கியது. படகில் இருந்தோர் இயேசுவைப் பணிந்து, "உண்மையாகவே நீர் இறைமகன்" என்றனர். அவர்கள் மிக மிக மலைத்துப்போனார்கள். ஏனெனில், அப்பங்கள்பற்றிய நிகழ்ச்சியை அவர்கள் புரிந்துகொள்ளவில்லை. அவர்கள் உள்ளம் மழுங்கிப்போயிருந்தது. படகு, உடனே அவர்கள் சேரவேண்டிய இடம்போய்ச் சேர்ந்துவிட்டது.
தொட்ட அனைவரும் நலமடைந்தனர் கெனசரேத் கிபி 32
அவர்கள் மறு-கரைக்குச் சென்று, கெனசரேத்துப் பகுதியை அடைந்து, படகைக் கட்டி நிறுத்தினார்கள். அவர்கள் படகைவிட்டு இறங்கிய உடனே, மக்கள் இயேசுவை இன்னார் என்று கண்டுணர்ந்து, அந்தச் சுற்றுப்பகுதி எங்கும் ஓடிச்சென்று, அவர் இருப்பதாகக் கேள்விப்பட்ட இடங்களுக்கெல்லாம் நோயாளர்களைப் படுக்கையில் கொண்டுவரத் தொடங்கினார்கள்.
மேலும், அவர் சென்ற ஊர்கள், நகர்கள், பட்டிகள் அனைத்திலும், உடல்நலம் குன்றியோரைப் பொதுவிடங்களில் கிடத்தி, அவருடைய மேலுடையின் ஓரத்தையாவது அவர்கள் தொட அனுமதிக்குமாறு அவரை வேண்டினார்கள். அவரைத் தொட்ட அனைவரும் நலமடைந்தனர்.
ஏரோதுவின் குழப்பம்
இயேசுவின் பெயர் எங்கும் பரவியது. சிலர், ’இறந்த திருமுழுக்கு யோவான் உயிருடன் எழுப்பப்பட்டு விட்டார்; இதனால்தான் இந்த வல்ல-செயல்கள் இவரால் ஆற்றப்படுகின்றன’ என்றனர். வேறு சிலர், ‘எலியா தோன்றியிருக்கிறார்’ என்றனர். மற்றும் சிலர், ’முற்காலத்து இறைவாக்கினருள் ஒருவர் உயிர்த்தெழுந்துள்ளார்’ என்றனர்.
நிகழ்ந்தவற்றையெல்லாம் குறுநில மன்னன் ஏரோது கேள்வியுற்று மனம் குழம்பினான். அவன் தன் ஊழியரிடம் “இவர் திருமுழுக்கு யோவான்தான். அவர் தலையை நான் வெட்டச் செய்தேன். இறந்த யோவானைக் கடவுள் உயிர்பெற்றெழச் செய்தார். இதனால்தான் இந்த வல்ல செயல்களை இவர் செய்கிறார், இவர் யாரோ? இவரைப் பற்றி இவ்வாறெல்லாம் கேள்விப்படுகிறேனே!’ என்று சொல்லி இயேசுவைக் காண வாய்ப்புத் தேடிக்கொண்டிருந்தான்.
4. இயேசு தம் புதிய உடன்படிக்கையை அறிவித்தார்
அப்பத்துக்காகவே இயேசுவைத் தேடிச்சென்ற மக்கள் கப்பர்நாகும் கிபி 32
சீடர்கள் புறப்பட்ட கரையிலேயே, மறு நாளும், மக்கள் கூட்டமாய் நின்றுகொண்டிருந்தார்கள். முந்தின நாள், ஒரு படகைத்தவிர வேறு படகு எதுவும் அங்கு இல்லை என்பதையும், அதில் இயேசுவின் சீடர்கள்மட்டும் போனார்களே அன்றி, இயேசு அவர்களோடு அப்படகில் ஏறவில்லை என்பதையும், அவர்கள் கண்கூடாகப் பார்த்திருந்தார்கள்.
அப்போது, கடவுளுக்கு நன்றிசெலுத்தி, இயேசு கொடுத்த அப்பத்தை மக்கள் உண்ட இடத்திற்கு அருகில், திபேரியாவிலிருந்து படகுகள் வந்து சேர்ந்தன. இயேசுவும் அவருடைய சீடரும் அங்கு இல்லை என்பதைக் கண்ட மக்கள், கூட்டமாய் அப்படகுகளில் ஏறி, இயேசுவைத் தேடிக் கப்பர்நாகுமுக்குச் சென்றனர்.
கப்பர்நாகும் தொழுகைக்கூடம் கிபி 32
அங்கு கடற்கரையில் அவர்கள் அவரைக் கண்டு, ’ரபி, எப்போது இங்கு வந்தீர்?’ என்ற கேட்டார்கள்.
உலக வாழ்வுக்காக அல்ல, நிலைவாழ்வுக்கே உழையுங்கள்
இயேசு மறுமொழியாக, ’நீங்கள் அரும் அடையாளங்களைக் கண்டதால் அல்ல, மாறாக, அப்பங்களை வயிறார உண்டதால்தான் என்னைத் தேடுகிறீர்கள் என உறுதியாக உங்களுக்குச் சொல்கிறேன்.
அழிந்துபோகும் உணவுக்காக உழைக்க வேண்டாம். நிலைவாழ்வு தரும் அழியாத உணவுக்காகவே உழையுங்கள். அவ்வுணவை மானிடமகன் உங்களுக்குக் கொடுப்பார். ஏனெனில், தந்தையாகிய கடவுள் அவருக்கே தம் அதிகாரத்தை அளித்துள்ளார்’ என்றார்.
அவர்கள் அவரை நோக்கி, ‘ எங்கள் செயல்கள் கடவுளுக்கு ஏற்றவையாக இருப்பதற்கு நாங்கள் என்ன செய்ய வேண்டும்?’ என்று கேட்டார்கள். இயேசு அவர்களைப் பார்த்து, ’கடவுள் அனுப்பியவரை நம்பவதே கடவுளுக்கேற்ற செயல் 'என்றார்.
அவர்கள், ’நாங்கள் கண்டு உம்மை நம்பும் வகையில் நீர் என்ன அரும் அடையாளம் காட்டுகிறீர்? அதற்காக என்ன அரும் செயல் செய்கிறீர்? எங்கள் முன்னோர் பாலை நிலத்தில் மன்னாவை உண்டனரே!’ அவர்கள் உண்பதற்கு வானிலிருந்து உணவு அருளினார்’ என்று மறைநூலிலும் எழுதப்பட்டுள்ளது அல்லவா!’ என்றனர்.
நிலைவாழ்வை அளிக்கும் உணவு நானே
இயேசு அவர்களிடம், ’உறுதியாக உங்களுக்குச் சொல்கிறேன்; வானிலிருந்து உங்களுக்கு உணவு அருளியவர் மோசே அல்ல; வானிலிருந்து உங்களுக்கு உண்மையான உணவு அருள்பவர் என் தந்தையே. கடவுள் தரும் உணவு வானிலிருந்து இறங்கிவந்து உலகுக்கு வாழ்வு அளிக்கிறது’ என்றார்.
அவர்கள், ’ஐயா, இவ்வுணவை எங்களுக்கு எப்போதும் தாரும்’ என்று கேட்டுக்கொண்டார்கள்.
இயேசு அவர்களிடம், ’வாழ்வு தரும் உணவு நானே. என்னிடம் வருபவருக்குப் பசியே இராது; என்னிடம் நம்பிக்கை கொண்டிருப்பவருக்கு என்றுமே தாகம் இராது. ஆனால், நான் உங்களுக்குச் சொன்னவாறே நீங்கள் என்னைக் கண்டிருந்தும் நம்பவில்லை. தந்தை என்னிடம் ஒப்படைக்கும் அனைவரும் வந்து சேருவர். என்னிடம் வருபவரை நான் புறம்பே தள்ளிவிடமாட்டேன். ஏனெனில், என் சொந்த விருப்பத்தை நிறைவேற்ற அல்ல, என்னை அனுப்பியவரின் விருப்பத்தை நிறைவேற்றவே நான் விண்ணகத்திலிருந்து இறங்கி வந்தேன்.’
அவர் என்னிடம் ஒப்படைக்கும் எவரையும், நான் அழியவிடாமல், இறுதி நாளில் அனைவரையும் உயிர்த்தெழச் செய்யவேண்டும். இதுவே என்னை அனுப்பியவரின் திருவுளம். மகனைக் கண்டு, அவரிடம் நம்பிக்கை கொள்ளும் அனைவரும் நிலைவாழ்வு பெறவேண்டும் என்பதே என் தந்தையின் திருவுளம். நானும், இறுதி நாளில் அவர்களை உயிர்த்தெழச் செய்வேன்’ என்று கூறினார்.
யூதர்களின் தடுமாற்றம்
’விண்ணகத்திலிருந்து இறங்கி வந்த உணவு நானே’ என்று இயேசு கூறியதால் யூதர்கள் அவருக்கு எதிராக முணுமுணுத்தார்கள். ’இவர் யோசேப்பின் மகனாகிய இயேசு அல்லவா? இவருடைய தாயும் தந்தையும் நமக்குத் தெரியாதவர்களா? அப்படியிருக்க, ″ நான் விண்ணகத்திலிருந்து இறங்கி வந்தேன் ″ என இவர் எப்படி சொல்லலாம்?’ என்று பேசிக்கொண்டார்கள்.
கடவுளைக் கண்டவர் ஒருவரே
இயேசு அவர்களைப் பார்த்துக் கூறியது: ’உங்களிடையே முணுமுணுக்க வேண்டாம். என்னை அனுப்பிய தந்தை ஈர்த்தாலொழிய, எவரும் என்னிடம் வர இயலாது. என்னிடம் வருபவரை, நானும் இறுதிநாளில் உயிர்த்தெழச் செய்வேன். ″கடவுள்தாமே அனைவருக்கும் கற்றுத்தருவார்″ என இறைவாக்கு நூல்களில் எழுதியுள்ளது. தந்தைக்குச் செவிசாய்த்து, அவரிடமிருந்து கற்றுக்கொண்ட அனைவரும் என்னிடம் வருவர். கடவுள்தாமே கற்றுத்தருவார் என்பதிலிருந்து, தந்தையை எவராவது கண்டுள்ளார் என்று பொருள் கொள்ளக்கூடாது. கடவுளிடமிருந்து வந்துள்ளவர் மட்டுமே கடவுளைக் கண்டுள்ளார்.
என் சதையை அர்ப்பண பலியாகக் கொடுக்கிறேன் (புதிய உடன்படிக்கை)
உறுதியாக உங்களுக்குச் சொல்கிறேன்: என்னை நம்புவோர் நிலைவாழ்வைக் கொண்டுள்ளனர். வாழ்வுதரும் உணவு நானே. உங்கள் முன்னோர் பாலைநிலத்தில் மன்னாவை உண்டபோதிலும் இறந்தனர். உண்பவரை இறவாமல்-இருக்கச் செய்யும் உணவு, விண்ணகத்திலிருந்து இறங்கிவந்த இந்த உணவே.
இயேசுவின் அர்ப்பண பலி
’விண்ணகத்திலிருந்து இறங்கிவந்த வாழ்வுதரும்-உணவு நானே. இந்த உணவை எவராவது உண்டால், அவர் என்றுமே வாழ்வார். எனது சதையை உணவாகக் கொடுக்கிறேன். அதை உலகு வாழ்வதற்காகவே கொடுக்கிறேன்.’
’நாம் உண்பதற்கு இவர் தமது சதையை எப்படிக் கொடுக்க இயலும்?’ என்ற வாக்குவாதம் அவர்களிடையே எழுந்தது.
என்னை உண்போர் என்றும் வாழ்வர்
இயேசு அவர்களிடம், ’உறுதியாக உங்களுக்குச் சொல்கிறேன்: மானிடமகனுடைய சதையை உண்டு, அவருடைய இரத்தத்தைக் குடித்தாலொழிய நீங்கள் வாழ்வடையமாட்டீர்கள். எனது சதையை உண்டு, என் இரத்தத்தைக் குடிப்பவர் நிலைவாழ்வைக் கொண்டுள்ளார். நானும் அவரை இறுதிநாளில் உயிர்த்தெழச் செய்வேன். எனது சதை உண்மையான உணவு. எனது இரத்தம் உண்மையான பானம். எனது சதையை உண்டு எனது இரத்தத்தைக் குடிப்போர் என்னோடு இணைந்திருப்பர், நானும் அவர்களோடு இணைந்திருப்பேன்.
வாழும் தந்தை என்னை அனுப்பினார். நானும் அவரால் வாழ்கிறேன். அதுபோல், என்னை உண்போரும் என்னால் வாழ்வர். விண்ணகத்திலிருந்து இறங்கிவந்த உணவு இதுவே; இது நம் முன்னோர் உண்ட உணவு போன்றது அல்ல. அதை உண்டவர்கள் இறந்து போனார்கள். இவ்வுணவை உண்போர் என்றும் வாழ்வர்.’
இதை ஏற்றுக்கொள்வது மிகக் கடினம்
இயேசு கப்பர்நாகுமிலுள்ள தொழுகைக்கூடத்தில் இவ்வாறு கற்பித்தார். அவருடைய சீடர்-பலர் இதைக் கேட்டு, ’இதை ஏற்றுக் கொள்வது மிகக் கடினம்; இப்பேச்சை இன்னும் கேட்டுக்கொண்டிருக்க முடியுமா?’ என்று பேசிக் கொண்டனர்.
சிலுவையின் மரணம்
இதுபற்றித் தம் சீடர் முணுமுணுப்பதை இயேசு உணர்ந்து, அவர்களிடம், ’நீங்கள் நம்புவதற்கு இது தடையாய் இருக்கிறதா? அப்படியானால், மானிடமகன் தாம் முன்பு இருந்த இடத்திற்கு ஏறிச் செல்வதை நீங்கள் கண்டால் அது உங்களுக்கு எப்படி இருக்கும்? வாழ்வு தருவது தூயஆவியே; ஊனியல்பு ஒன்றுக்கும் உதவாது. நான் கூறிய வார்த்தைகள் வாழ்வுதரும் ஆவியைக் கொடுக்கின்றன. அப்படியிருந்தும் உங்களுள் சிலர் என்னை நம்பவில்லை’ என்றார்.
நம்பாதோர் யார் யார் என்பதும், தம்மைக் காட்டிக் கொடுப்பவன் யார் என்பதும் இயேசுவுக்குத் தொடக்கத்திலிருந்தே தெரிந்திருந்தது.
மேலும் அவர், ’இதன் காரணமாகத்தான் ″என் தந்தை அருள்கூர்ந்தால் அன்றி, யாரும் என்னிடம் வர இயலாது″ என்று உங்களுக்குக் கூறினேன்’ என்றார்.
சீடர் பலர் விலகினர்
அன்றே இயேசுவின் சீடருள் பலர் அவரைவிட்டு விலகினர். அன்றுமுதல் அவர்கள் அவரோடு சேர்ந்து செல்லவில்லை.
இயேசு பன்னிரு சீடரிடம், ’நீங்களும் போய்விட நினைக்கிறீர்களா?’ என்று கேட்டார்.
சீமோன் பேதுரு மறுமொழியாக, ’ஆண்டவரே, நாங்கள் யாரிடம் போவோம்? நிலைவாழ்வு அளிக்கும் வார்த்தைகள் உம்மிடம்தானே உள்ளன. நீரே கடவுளுக்கு அர்ப்பணமானவர் என்பதை நாங்கள் அறிந்து கொண்டோம். அதை நம்புகிறோம்’ என்றார்.
இயேசு அவர்களைப் பார்த்து, ’பன்னிருவராகிய உங்களை நான் தேர்ந்துகொண்டேன் அல்லவா? ஆயினும், உங்களுள் ஒருவன் அலகையாய் இருக்கிறான்’ என்றார். அவர் சீமோன் இஸ்காரியோத்தின் மகனாகிய யூதாசைப் பற்றியே இப்படிச் சொன்னார். ஏனெனில், பன்னிருவருள் ஒருவனாகிய அவன், அவரைக் காட்டிக்கொடுக்க இருந்தான்.
5. உடலை அல்ல உள்ளத்தை முதலில் சுத்தம் செய்வீர்
புதிய உடன்படிக்கை
கலிலேயா கிபி 32
ஒருநாள், பரிசேயரும், எருசலேமிலிருந்து வந்திருந்த மறைநூல்-அறிஞர் சிலரும் இயேசுவிடம் வந்து கூடினர். அவருடைய சீடருள் சிலர் தீட்டான, அதாவது, கழுவாத கைகளால் உண்பதை அவர்கள் கண்டார்கள்.
வெளிப்புறத்தைமட்டும் சுத்தம்செய்த குருட்டு வழிகாட்டிகள்
பரிசேயரும், ஏன் யூதர் அனைவருமே, தம் மூதாதையர் மரபைப் பின்பற்றி, கைகளை முறைப்படி கழுவாமல் உண்பதில்லை; சந்தையிலிருந்து வாங்கியவற்றைக் கழுவிய-பின்னரே உண்பர். அவ்வாறே, கிண்ணங்கள், பரணிகள், செம்புகள் ஆகியவற்றைக் கழுவுதல் போன்று, அவர்கள் கடைப்பிடிக்கவேண்டிய மரபுகள் இன்னும் பல இருந்தன.
ஆகவே, பரிசேயரும் மறைநூல்-அறிஞரும் அவரை நோக்கி, ’உம் சீடர் மூதாதையரின் மரபை மீறுவதேன்? உணவு அருந்துமுன், அவர்கள் தங்கள் கைகளைக் கழுவுவதில்லையே. தீட்டான கைகளால் உணவு அருந்துவதேன்?’ என்று கேட்டனர்.
பரிசேயரின் உள்ளமோ தீட்டால் நிறைந்திருக்கிறது
அவர் அவர்களுக்கு மறுமொழியாக, "நீங்கள், உங்கள் மரபின்-பொருட்டுக் கடவுளின் கட்டளையை மீறுவது ஏன்? வெளிவேடக்காரர்களாகிய உங்களைப்பற்றி எசாயா பொருத்தமாக இறைவாக்கு உரைத்திருக்கிறார். 'இம்மக்கள் உதட்டினால் என்னைப் போற்றுகின்றனர்; இவர்கள் உள்ளமோ என்னைவிட்டு வெகுதொலையில் இருக்கிறது. மனிதக் கட்டளைகளைக் கோட்பாடுகளாகக் கற்பிக்கின்றனர். இவர்கள் என்னை வழிபடுவது வீண்' என்று அவர் எழுதியுள்ளார். நீங்கள் கடவுளின் கட்டளைகளைக் கைவிட்டு, மனித மரபைப் பின்பற்றி வருகிறவர்கள்" என்று அவர்களிடம் கூறினார்.
கடவுளின் கட்டளையைப் பயனற்றதாக்கிய பரிசேயர்
மேலும் அவர், "உங்கள் மரபை நிலைநாட்டக் கடவுளின் கட்டளைகளை வெகு திறமையாகப் புறக்கணித்து விட்டீர்கள்.
'உன் தந்தையையும் தாயையும் மதித்து நட' என்றும், தந்தையையோ தாயையோ சபிப்போர் கொல்லப்படவேண்டும் என்றும் மோசே உரைத்திருக்கிறார் அல்லவா. ஆனால், ஒருவர், தம் தாயையோ தந்தையையோ பார்த்து, 'நான் உமக்குத் தரக் கடமைப்பட்டிருக்கிறது 'கொர்பான்' ஆயிற்று; அதாவது கடவுளுக்குக் காணிக்கையாயிற்று' என்றால், அதன்பின் அவர், தம் தாய் தந்தைக்கு எந்த உதவியும் செய்ய நீங்கள் அனுமதிப்பதில்லை.
இவ்வாறு நீங்கள் பெற்றுக்கொண்ட மரபின் பொருட்டுக் கடவுளின் வார்த்தையைப் பயனற்றதாக்கி விடுகிறீர்கள். இதுபோல நீங்கள் பலவற்றைச் செய்கிறீர்கள்" என்று அவர்களிடம் கூறினார்.
வெளிப்புறத்தை அல்ல, உள்ளத்தை முதலில் தூய்மை செய்விர்
இயேசு மக்கள்-கூட்டத்தை மீண்டும் தம்மிடம் வரவழைத்து, அவர்களை நோக்கி, நான் சொல்வதை அனைவரும் கேட்டுப் புரிந்துகொள்ளுங்கள். வெளியேயிருந்து மனிதருக்குள்ளே சென்று, அவர்களைத் தீட்டுப்படுத்தக்கூடியது ஒன்றுமில்லை. மனிதருக்கு உள்ளேயிருந்து வெளியே வருபவையே அவர்களைத் தீட்டுப் படுத்தும். [ கேட்கச் செவியுள்ளோர் கேட்கட்டும்" ] என்று கூறினார்.
அவர், மக்கள்-கூட்டத்தை விட்டு, வீட்டிற்குள் வந்தபோது, பேதுருவும் சீடர்களும் அவரை நோக்கி, "நீர் சொன்ன உவமையை எங்களுக்கு விளக்கும்" என்று கேட்டார்கள்.
அவர் அவர்களிடம், "நீங்களுமா இந்த அளவுக்குப் புரிந்துகொள்ளாமல் இருக்கிறீர்கள்? வெளியேயிருந்து மனிதருக்குள்ளே செல்லும் எதுவும் அவர்களைத் தீட்டுப்படுத்த முடியாது என உங்களுக்குத் தெரியாதா? ஏனென்றால், அது அவர்களுடைய உள்ளத்தில் நுழையாமல், வயிற்றுக்குச் சென்று, கழிப்பிடத்திற்குப் போய்விடுகிறது" என்றார். இவ்வாறு, அவர், எல்லா உணவுப் பொருள்களும் தூயனவென்று குறிப்பிட்டார்.
உள்ளத்தின் தீய எண்ணங்களே மனிதரைத் தீட்டுப்படுத்தும்
மேலும், "மனிதருக்கு உள்ளேயிருந்து வருவதே அவர்களைத் தீட்டுப்படுத்தும். ஏனெனில், மனித உள்ளத்திலிருந்தே பரத்தைமை, களவு, கொலை, விபசாரம், பேராசை, தீச்செயல், வஞ்சகம், காமவெறி, பொறாமை, பழிப்புரை, செருக்கு, மதிகேடு ஆகியவற்றைச் செய்யத்தூண்டும் தீய எண்ணங்கள் வெளிவருகின்றன.
தீயனவாகிய இவை அனைத்தும் உள்ளத்திலிருந்து வந்து மனிதரைத் தீட்டுப்படுத்துகின்றன.
கை கழுவாமல் உண்ணுவது மனிதரைத் தீட்டுப்படுத்தாது" என்றார்.
குருட்டு வழிகாட்டிகளைப் பின்பற்றாதீர்
பின்பு சீடர் அவரை அணுகி, "பரிசேயர் உம் வார்த்தையைக் கேட்டு மனவேதனை அடைந்தனர் என்பது உமக்குத் தெரியுமா?" என்றனர்.
இயேசு மறுமொழியாக, "என் விண்ணகத் தந்தை நடாத எந்த நாற்றும் வேரோடு பிடுங்கப்படும்.
பார்வையற்ற ஒருவர் பார்வையற்ற வேறொருவரை வழிநடத்தினால், இருவரும் குழியில் விழுவர்" என்றார்.
6. கானானியப் பெண்ணின் நம்பிக்கை
தீர், சீதோன் கிபி 32
இயேசு அங்கிருந்து புறப்பட்டுத் தீர், சீதோன் ஆகிய பகுதிகளை நோக்கிச் சென்றார். அங்கே அவர் ஒரு வீட்டிற்குள் போனார்; தாம் அங்கிருப்பது எவருக்கும் தெரியாதிருக்க வேண்டுமென்று விரும்பியும் அதை மறைக்க இயலவில்லை.
அவற்றின் எல்லைப்பகுதியில் வாழ்ந்துவந்த கானானியப் பெண் ஒருவர் அவரைப்பற்றிக் கேள்விப்பட்டு, உள்ளே வந்து, அவர் காலில் விழுந்தார். அவர் ஒரு கிரேக்கப் பெண்; சிரிய-பெனிசிய இனத்தைச் சேர்ந்தவர். அவருடைய மகளைத் தீயஆவி பிடித்திருந்தது.
அவரிடம் வந்து, ’ஐயா, தாவீதின் மகனே, எனக்கு இரங்கும்; என் மகள் பேய்பிடித்துக் கொடுமைக்குள்ளாகி இருக்கிறாள்’ எனக் கதறினார். அவர், தம் மகளிடமிருந்து பேயை ஓட்டிவிடுமாறு அவரை வேண்டினார். ஆனால் இயேசு அவரிடம் ஒரு வார்த்தைகூட மறுமொழியாகச் சொல்லவில்லை.
இஸ்ரயேலில் காணாமற்போன ஆடுகளையே தேடிவந்தேன்
சீடர்கள் அவரை அணுகி, ’நமக்குப் பின்னால் கத்திக்கொண்டு வருகிறாரே, இவரை அனுப்பிவிடும்’ என வேண்டினர்.
அவரோ மறுமொழியாக, ’இஸ்ரயேல் குலத்தாருள் காணாமற்போன ஆடுகளாய் இருப்போரிடமே நான் அனுப்பப்பட்டேன்’ என்றார்.
கானானியப் பெண்ணின் பணிவு
ஆனால், அப்பெண் அவர்முன் வந்து பணிந்து, ’ஐயா, எனக்கு உதவியருளும்’ என்றார். இயேசு அவரைப் பார்த்து, ’முதலில் பிள்ளைகள் வயிறார உண்ணட்டும். பிள்ளைகளுக்குரிய உணவை எடுத்து நாய்க் குட்டிகளுக்குப் போடுவது முறையல்ல’ என்றார்.
அதற்கு அப்பெண், ’ஆம் ஐயா, ஆனாலும், தங்கள் உரிமையாளரின் மேசையின் கீழிருக்கும் நாய்க்குட்டிகள், சிறுபிள்ளைகள் சிந்தும் சிறுதுண்டுகளைத் தின்னுமே’ என்று பதிலளித்தார்.
அப்பொழுது இயேசு அவரிடம், ’’அம்மா, உமது நம்பிக்கை பெரிது. நீர் சொன்னதால் போகலாம்; நீர் விரும்பியவாறே உமக்கு நிகழட்டும். பேய் உம்மகளை விட்டு நீங்கிற்று’ என்றார்.
அந்நேரம் அவர் மகளின் பிணி நீங்கியது. அப்பெண் தம் வீடு திரும்பியதும், தம் பிள்ளை கட்டிலில் படுத்திருக்கிறதையும், பேய் ஓடிவிட்டதையும் கண்டார்
இயேசு பலவகை நோயாளர்களுக்குக் குணமளித்தார் தெக்கப்பொலி
மீண்டும் இயேசு, தீர் பகுதியை விட்டு, சீதோன் வழியாகச் சென்று, தெக்கப்பொலி பகுதி நடுவே வந்து, கலிலேயக் கடற்கரை வழியாகச் சென்று, அங்கே ஒரு மலையின் மீது ஏறி அமர்ந்தார்.
அப்பொழுது பெருந்திரளான மக்கள் அவரிடம் வந்தனர். அவர்கள் தங்களோடு கால்-ஊனமுற்றோர், பார்வையற்றோர், உடல்-ஊனமுற்றோர், பேச்சற்றோர், மற்றும் பிற நோயாளர் பலரையும் அவர் காலடியில் கொண்டுவந்து சேர்த்தனர். அவர்களை அவர் குணமாக்கினார்.
காதுகேளாதவர் நலம் பெறுதல்
காது கேளாதவரும், திக்கிப் பேசுபவருமான ஒருவரைச் சிலர் அவரிடம் கொண்டுவந்து, அவர்மீது கைவைத்துக் குணமாக்குமாறு அவரை வேண்டிக்கொண்டனர்.
இயேசு அவரைக் கூட்டத்திலிருந்து தனியே அழைத்துச்சென்று, தம் விரல்களை அவர் காதுகளில் இட்டு, உமிழ்நீரால் அவர் நாவைத் தொட்டார். பிறகு வானத்தை அண்ணாந்து பார்த்து, பெருமூச்சு விட்டு, அவரை நோக்கி "எப்பத்தா" அதாவது "திறக்கப்படு" என்றார். உடனே அவருடைய காதுகள் திறக்கப்பட்டன; நாவும் கட்டவிழ்ந்தது. அவர் தெளிவாகப் பேசினார்.
இதை எவருக்கும் சொல்லவேண்டாமென்று அவர்களுக்கு அவர் கட்டளையிட்டார். அவரது கட்டளைக்கு நேர்மாறாக, இன்னும் மிகுதியாய் அவர்கள் அதை அறிவித்து வந்தார்கள். அவர்கள் அளவுகடந்த வியப்பில் ஆழ்ந்தவர்களாய், "இவர் எத்துணை நன்றாக யாவற்றையும் செய்துவருகிறார். காதுகேளாதோர் கேட்கவும், பேச்சற்றோர் பேசவும் செய்கிறாரே!" என்று பேசிக்கொண்டார்கள்.
பேச்சற்றோர் பேசுவதையும், உடல்-ஊனமுற்றோர் நலமடைவதையும், பார்வையற்றோர் பார்க்கிறதையும் கண்டு, மக்கள்கூட்டத்தினர் வியந்து, இஸ்ரயேலின் கடவுளைப் போற்றிப் புகழ்ந்தனர்.
7. தவறான போதனையே புளிப்புமாவு
தெக்கப்பொலி கிபி 32
அந்நாள்களில் மீண்டும் பெருந்திரளான மக்கள் கூடியிருந்தார்கள். உண்பதற்கு அவர்களிடம் ஒன்றுமில்லை.
இயேசு தம் சீடரை வரவழைத்து, "நான் இம்மக்கள் கூட்டத்தின்மீது பரிவு கொள்கிறேன். ஏற்கெனவே மூன்று நாள்களாக இவர்கள் என்னுடன் இருக்கிறார்கள். உண்பதற்கும் இவர்களிடம் எதுவும் இல்லை; நான் இவர்களைப் பட்டினியாக வீட்டிற்கு அனுப்பிவிட்டால் வழியில் தளர்ச்சி அடைவார்கள். இவர்களுள் சிலர் நெடுந்தொலையிலிருந்து வந்துள்ளனர்’ என்று கூறினார்.
அதற்குச் சீடர்கள் அவரிடம், ’இவ்வளவு திரளான மக்களுக்கு அளிக்கப் போதுமான உணவு நமக்குப் பாலைநிலத்தில் எங்கிருந்து கிடைக்கும்?’ என்று கேட்டார்கள்.
ஏழு அப்பங்களும் நாலாயிரம் பேரும்
இயேசு அவர்களைப் பார்த்து, ’உங்களிடம் எத்தனை அப்பங்கள் உள்ளன?’ என்று கேட்டார். அவர்கள், ’ஏழு அப்பங்கள் உள்ளன; சில மீன்களும் இருக்கின்றன’ என்றார்கள்.
தரையில் அமருமாறு மக்களுக்கு அவர் கட்டளையிட்டார். பின்பு, அந்த ஏழு அப்பங்களையும் மீன்களையும் எடுத்து, கடவுளுக்கு நன்றிசெலுத்தி, பிட்டு, சீடர்களிடம் கொடுக்க, அவர்களும் மக்களுக்குக் கொடுத்தார்கள்.
அனைவரும் வயிறார உண்டனர். மீதியாய் இருந்த துண்டுகளை ஏழு கூடைகள் நிறைய எடுத்தனர். பெண்களும் சிறு-பிள்ளைகளும் நீங்கலாக, நாலாயிரம் ஆண்கள் உண்டனர்.
பின்பு, அவர் மக்கள் கூட்டத்தினரை அனுப்பிவிட்டு, உடனடியாகப் படகேறி, மகதநாட்டு எல்லைக்குள், தல்மனுத்தா பகுதிக்குச் சென்றார்.
வானத்திலிருந்து அடையாளம்
பரிசேயரும் சதுசேயரும் இயேசுவோடு வாதாடத் தொடங்கினர். இயேசுவைச் சோதிக்கும் நோக்குடன், அவரிடம் வானத்திலிருந்து அடையாளம் ஒன்றைத் தங்களுக்குக் காட்டும்படி கேட்டனர்.
யோனாவின் அடையாளம்
(’மாலை வேளையாகும்போது வானம் சிவந்திருந்தால் ’வானிலை நன்றாக இருக்கிறது’ என நீங்கள் சொல்வீர்கள். காலை வேளையில், வானம் சிவந்து மந்தாரமாயிருந்தால், 'இன்று காற்றுடன் கூடிய மழை இருக்கும்’ என்பீர்கள். வானத்தின் தோற்றத்தைப் பகுத்துணர நீங்கள் அறிந்திருக்கிறீர்கள். ஆனால் காலத்தின் அறிகுறிகளை அறிய உங்களால் முடியாதா?’)
அவர் பெருமூச்சுவிட்டு, அவர்களிடம் மறுமொழியாக, ”இந்தத் தீய, விபசாரத் தலைமுறையினர் அடையாளம் கேட்பதேன்? இத்தலைமுறையினருக்கு யோனாவின் அடையாளமேயன்றி வேறு எந்த அடையாளமும் கொடுக்கப்படமாட்டாது என உறுதியாக உங்களுக்குச் சொல்கிறேன்’ என்றார். அவர்களை விட்டு அகன்று, மீண்டும் படகேறி அவர் மறுகரைக்குச் சென்றார்.
பரிசேயர், ஏரோதியரின் புளிப்புமாவு என்ன?
சீடர்கள் மறுகரைக்குச் சென்றபோது, தங்களுக்குத் தேவையான அப்பங்களை எடுத்துச்செல்ல மறந்துவிட்டார்கள் . படகில் அவர்களிடம் ஓர் அப்பம் மட்டுமே இருந்தது.
அப்பொழுது இயேசு அவர்களிடம், ’பரிசேயர், ஏரோதியர் சதுசேயரின் புளிப்பு மாவைக்குறித்து மிகவும் கவனத்தோடும் எச்சரிக்கையோடும் இருங்கள்’ என்று அவர்களுக்குக் கட்டளையிட்டார்
அவர்களோ, நாம் அப்பங்களை எடுத்து வராததால்தான் அவர் இப்படிச் சொன்னார்’ எனத் தங்களிடையே அவர்கள் பேசிக்கொண்டார்கள்
இதை அறிந்த இயேசு அவர்களை நோக்கி, ‘நம்பிக்கை குன்றியவர்களே, உங்களிடம் அப்பம் இல்லை என நீங்கள் ஏன் பேசிக் கொள்ளுகிறீர்கள்? இன்னுமா உணராமலும் புரிந்துகொள்ளாமலும் இருக்கிறீர்கள்? உங்கள் உள்ளம் மழுங்கியா போயிற்று? கண்ணிருந்தும் நீங்கள் காண்பதில்லையா? காதிருந்தும் நீங்கள் கேட்பதில்லையா?
ஏன், உங்களுக்கு நினைவில்லையா? நான் ஐயாயிரம் பேருக்குப் பகிர்ந்தளித்த ஐந்து அப்பங்களைப் பற்றி நினைவில்லையா? அப்போது, எத்தனை கூடைகள் மீதியாக எடுத்தீர்கள்? என்று அவர் கேட்க, அவர்கள் ’பன்னிரண்டு’ என்றார்கள்.
நாலாயிரம் பேருக்கு நான் பகிர்ந்தளித்த ஏழு அப்பங்களைப்பற்றி நினைவில்லையா? அப்போது, எத்தனை கூடைகள் மீதியாக எடுத்தீர்கள்? என்று கேட்க, அவர்கள், ’ஏழு’ என்றார்கள்.
போதகர்களின் போதனையே புளிப்பு மாவு
மேலும் அவர், அவர்களை நோக்கி, ’நான் உங்களிடம் கூறியது அப்பங்களைப் பற்றியல்ல என்பதை நீங்கள் புரிந்துகொள்ளாதது எப்படி? பரிசேயர், சதுசேயர் ஆகியோரின் புளிப்பு மாவைப்பற்றி எச்சரிக்கையாய் இருங்கள்’ என்றார்..
அப்பொழுதுதான், அப்பத்திற்கான புளிப்பு மாவைப்பற்றி அவர் சொல்லவில்லை; மாறாக, பரிசேயர், சதுசேயர், ஏரோதியர் ஆகியோரின் போதனையைப்பற்றி எச்சரிக்கையாய் இருக்கவே அவர் சொன்னார் என்பதை அவர்கள் புரிந்துகொண்டார்கள்.
பார்வையற்ற ஒருவர் படிப்படியாக நலமடைந்தார்
அவர்கள் பெத்சாய்தா வந்தடைந்தார்கள். அப்பொழுது, பார்வையற்ற ஒருவரை சிலர் இயேசுவிடம் கொண்டுவந்து, அவரைத் தொடும்படி வேண்டினர்.
பார்வையற்றவரது கையை அவர் பிடித்து, ஊருக்கு வெளியே அழைத்துச் சென்றார். அவருடைய விழிகளில் உமிழ்ந்து, கைகளை அவர்மேல் வைத்து, ’ஏதாவது தெரிகிறதா?’ என்று கேட்டார்.
அவர் நிமிர்ந்து பார்த்து, ’மனிதரைப் பார்க்கிறேன். அவர்கள் மரங்களைப் போலத் தோன்றுகிறார்கள். ஆனால் நடக்கிறார்கள்’ என்று சொன்னார்.
இயேசு, மீண்டும் தம் கைகளை அவருடைய கண்களின்மீது வைத்தார். அப்போது அவர் நலமடைந்து, முழுப் பார்வை பெற்று, அனைத்தையும் தெளிவாகக் கண்டார். இயேசு அவரிடம், ’ஊரில் நுழைய வேண்டாம்’ என்று கூறி அவரை, அவருடைய வீட்டிற்கு அனுப்பிவிட்டார்.
8. உலக வாழ்வுக்காக நிலைவாழ்வை இழந்துவிடாதீர்
நான் யார்? பிலிப்பு செசரியா கிபி 32
இயேசு தம் சீடருடன் பிலிப்புச் செசரியாவைச் சார்ந்த ஊர்களுக்குப் புறப்பட்டுச் சென்றார். வழியில், இயேசு தனித்து இறைவனிடம் வேண்டிக்கொண்டு இருந்தபோது, சீடர் மட்டும் அவரோடு இருந்தனர். அவர் தம் சீடரை நோக்கி, ’நான் யார் என மக்கள் சொல்கிறார்கள்? 'என்று கேட்டார்
அதற்கு அவர்கள், ’சிலர் திருமுழுக்கு யோவான் எனவும், வேறு சிலர் எலியா எனவும், மற்றும் சிலர் எரேமியா அல்லது முற்காலத்து இறைவாக்கினருள் ஒருவர் உயிர்த்தெழுந்துள்ளார் எனவும் சொல்கின்றனர்’ என்றார்கள்.
’’ஆனால், நீங்கள், என்னை யார் எனச் சொல்கிறீர்கள்?’ என்று அவர் கேட்டார். சீமோன் பேதுரு மறுமொழியாக, ’நீர் மெசியா, வாழும் கடவுளின் மகன்’ என்று உரைத்தார்.
அதற்கு இயேசு, ’யோனாவின் மகனான சீமோனே, நீ பேறு-பெற்றவன். ஏனெனில், எந்த மனிதரும் இதை உனக்கு வெளிப்படுத்தவில்லை; மாறாக, விண்ணகத்திலுள்ள என் தந்தையே வெளிப்படுத்தியுள்ளார்.
எனவே நான் உனக்குக் கூறுகிறேன்; உன் பெயர் பேதுரு; இந்தப் பாறையின்மேல் என் திருச்சபையைக் கட்டுவேன். பாதாளத்தின் வாயில்கள் அதன்மேல் வெற்றி கொள்ளா.
விண்ணரசின் திறவுகோல்களை நான் உன்னிடம் தருவேன். மண்ணுலகில் நீ தடைசெய்வது விண்ணுலகிலும் தடைசெய்யப்படும். மண்ணுலகில் நீ அனுமதிப்பது விண்ணுலகிலும் அனுமதிக்கப்படும்’ என்றார்.
பின்னர், தாம் மெசியா என்பதை எவரிடமும் சொல்லவேண்டாம் என்று, இயேசு சீடரிடம் கண்டிப்பாய்க் கூறினார்.
இயேசு, தம் சாவை முதன்முறை முன்னறிவித்தார்
மேலும் இயேசு, மானிடமகன் பலவாறு துன்பப்படவும், தாம் எருசலேமுக்குப் போய், மூப்பர்கள், தலைமைக் குருக்கள், மறைநூல்-அறிஞர்கள் ஆகியோரால் உதறித் தள்ளப்பட்டுக் கொலைசெய்யப்படவும், மூன்றாம் நாள் உயிருடன் எழுப்பப்படவும் வேண்டும் என்பதைத் தம் சீடருக்கு அந்நேரம்முதல் எடுத்துரைக்கத் தொடங்கினார். இதையெல்லாம் அவர் வெளிப்படையாகவே சொன்னார்.
பேதுரு அவரைத் தனியே அழைத்துக் கடிந்து கொண்டார், ’ஆண்டவரே, இது வேண்டாம். இப்படி உமக்கு நடக்கவே கூடாது’ என்றார்.
ஆனால், இயேசு தம் சீடர்கள் பக்கம் திரும்பிப் பார்த்து, பேதுருவிடம், ’என் கண்முன் நில்லாதே சாத்தானே, நீ எனக்குத் தடையாய் இருக்கிறாய்; ஏனெனில் நீ கடவுளுக்கு ஏற்றவை பற்றி எண்ணாமல், மனிதருக்கு ஏற்றவை பற்றியே எண்ணுகிறாய்’ என்று கடிந்துகொண்டார்
நற்செய்தியின் பொருட்டு வரும் துன்பம்
பின்பு, அவர் மக்கள் கூட்டத்தையும் சீடரையும் தம்மிடம் வரவழைத்து, ’என்னைப் பின்பற்ற விரும்பும் எவரும் தன்னலம் துறந்து, தம் சிலுவையை நாள்தோறும் தூக்கிக்கொண்டு என்னைப் பின்பற்றட்டும். ஏனெனில், தம் உயிரைக் காத்துக்கொள்ள விரும்பும் எவரும் அதை இழந்து விடுவார்; மாறாக, என் பொருட்டும், நற்செய்தியின் பொருட்டும், தம் உயிரை இழக்கும் எவரும் அதைக் காத்துக் கொள்வார்.
உலக வாழ்வுக்காக நிலைவாழ்வை இழந்துவிடாதீர்
ஒருவர் உலகம் முழுவதையும் தமதாக்கிக் கொண்டாலும், தம் வாழ்வையே இழப்பாரெனில் அவருக்குக் கிடைக்கும் பயன் என்ன? அவர் தம் வாழ்வுக்கு ஈடாக எதைக் கொடுப்பார்?
மானிடமகன் தம் தந்தையின் மாட்சியோடு தம் வான தூதர்களுடன் வரப்போகிறார்; அப்பொழுது ஒவ்வொருவருக்கும் அவரவர் செயலுக்கேற்பக் கைம்மாறு அளிப்பார். பாவத்தில் உழலும் இவ்விபசாரத் தலைமுறையினருள், என்னைக் குறித்தும் என் வார்த்தைகளைக் குறித்தும் வெட்கப்படும் ஒவ்வொருவரையும் பற்றி மானிட மகனும் தம்முடைய தந்தையின் மாட்சியோடு தூய வானதூதருடன் வரும்போது வெட்கப்படுவார்’ என்றார்.
மேலும் அவர் அவர்களிடம், ’இங்கே இருப்பவர்களுள் சிலர் இறையாட்சி வல்லமையோடு வந்துள்ளதைக் காண்பதற்குமுன் சாகமாட்டார்கள் என உறுதியாக உங்களுக்குச் சொல்கிறேன்’ என்றார்.
9. இயேசு தோற்றம் மாறினார்
உயர்ந்த மலை?
இவற்றையெல்லாம் சொல்லி ஏறக்குறைய எட்டு நாள்கள் ஆனபிறகு, இறைவனிடம் வேண்டுவதற்காக, இயேசு பேதுருவையும், யாக்கோபையும், அவர் சகோதரரான யோவானையும் ஓர் உயர்ந்த மலைக்குத் தனிமையாகக் கூட்டிக்கொண்டு போனார்.
அவர் வேண்டிக்கொண்டிருந்தபோது, அங்கே அவர்கள்முன் அவர் தோற்றம் மாறினார். அவரது முகம் கதிரவனைப் போல் ஒளிர்ந்தது. அவருடைய ஆடைகள், இவ்வுலகில் எந்த சலவைக்காரரும் வெளுக்க முடியாத அளவுக்கு வெள்ளை வெளேரென ஒளிவீசின.
அப்போது எலியாவும் மோசேயும் அவர்களுக்குத் தோன்றினர். இருவரும் இயேசுவோடு உரையாடிக் கொண்டிருந்தார்கள். மாட்சியுடன் தோன்றிய அவர்கள், எருசலேமில் நிறைவேறவிருந்த அவருடைய இறப்பைப் பற்றிப் பேசிக் கொண்டிருந்தார்கள்.
பேதுருவும், அவரோடு இருந்தவர்களும் தூக்கக் கலக்கமாய் இருந்தார்கள். பேதுரு இயேசுவைப் பார்த்து, ’ஆண்டவரே, நாம் இங்கேயே இருப்பது நல்லது. உமக்கு ஒன்றும், மோசேக்கு ஒன்றும், எலியாவுக்கு ஒன்றுமாக மூன்று கூடாரங்களை அமைக்கட்டுமா? இது உமக்கு விருப்பமா?’ என்றார். தாம் சொல்வது என்னவென்று அவருக்குத் தெரியவில்லை. ஏனெனில், அவர்கள் மிகுந்த அச்சம் கொண்டிருந்தார்கள்
என் அன்பார்ந்த மைந்தர் இவரே
அவர் தொடர்ந்து பேசிக்கொண்டிருந்தபோது, ஒளிமயமான மேகம் ஒன்று அவர்கள்மேல் நிழலிட்டது. அம்மேகம் அவர்களைக் சூழ்ந்தபோது அவர்கள் அஞ்சினார்கள். அந்த மேகத்தினின்று, ‘என் அன்பார்ந்த மைந்தர் இவரே, நான் தேர்ந்து கொண்டவர் இவரே, இவர்பொருட்டு நான் பூரிப்படைகிறேன், இவருக்குச் செவிசாயுங்கள்’ என்று ஒரு குரல் ஒலித்தது.
அதைக் கேட்டதும், சீடர்கள் மிகவும் அஞ்சி, முகங்குப்புற விழுந்தார்கள். இயேசு அவர்களிடம் வந்து, அவர்களைத் தொட்டு, ’எழுந்திருங்கள், அஞ்சாதீர்கள்' என்றார். உடனடியாக அவர்கள் நிமிர்ந்து, சுற்றுமுற்றும் பார்த்தார்கள். தங்கள் அருகில் இயேசு ஒருவரைத் தவிர, வேறு எவரையும் காணவில்லை.
இறந்து உயிர்தெழுதல் என்றால் என்ன?
அவர்கள் மலையிலிருந்து இறங்கி வந்துகொண்டிருந்தபோது, அவர், ’மானிடமகன் இறந்து உயிர்த்தெழும்வரை, நீங்கள் கண்டதை எவருக்கும் எடுத்துரைக்கக்கூடாது’ என்று, அவர்களுக்குக் கட்டளையிட்டார். அவர்கள், இவ்வார்த்தையை அப்படியே மனத்தில் இருத்தி, ’இறந்து உயிர்த்தெழுதல்’ என்றால் என்னவென்று, ஒருவரோடு ஒருவர் பேசிக்கொண்டார்கள்.
அப்பொழுது சீடர்கள் அவரிடம், ‘ எலியாதான் முதலில் வரவேண்டும் என்று மறைநூல்-அறிஞர்கள் கூறுகிறார்களே, அது எப்படி?’ என்று கேட்டார்கள்.
அவர் மறுமொழியாக, ’எலியா வந்து எல்லாவற்றையும் சீர்ப்படுத்தப்போகிறார்’ என்று கூறுவது உண்மையே. ஆனால், மானிடமகன் பல துன்பங்கள் படவும், இகழ்ந்து தள்ளப்படவும் வேண்டுமென்று, அவரைக் குறித்து எழுதப்பட்டுள்ளதே, அது எப்படி?
ஆகவே, நான் உங்களுக்குச் சொல்கிறேன்: ″ எலியா ஏற்கெனவே வந்துவிட்டார். அவரை மக்கள் கண்டுணரவில்லை. மாறாக, தாங்கள் விரும்பியவாறெல்லாம் அவருக்குச் செய்தார்கள். அவரைக் குறித்து மறைநூலில் எழுதியுள்ளவாறே, அவை நிகழ்ந்தன. அவ்வாறே, மானிடமகனையும் அவர்கள் துன்புறுத்துவார்கள்’ என்றார்.
திருமுழுக்கு யோவானைப் பற்றியே அவர் தங்களோடு பேசினார் என்பதை, அப்பொழுது சீடர்கள் புரிந்து கொண்டார்கள். தாங்கள் கண்டவற்றில் எதையும் அவர்கள் அந்நாள்களில் யாருக்கும் சொல்லாமல் அமைதி காத்தார்கள்.
தீயஆவி பிடித்த சிறுவனும் அவனுடைய தந்தையும்
செசரியா பிலிப்பி கிபி 32
மறுநாள், அவர்கள் மலையிலிருந்து இறங்கி, மற்ற சீடரிடம் வந்தபொழுது, பெருந்திரளான மக்கள் அவர்களைச் சூழ்ந்திருப்பதையும், மறைநூல்-அறிஞர் அவர்களுடன் வாதாடுவதையும் கண்டனர்.
மக்கள் அனைவரும் இயேசுவைக் கண்ட உடனே, மிக வியப்புற்று, அவரிடம் ஓடிப்போய் அவரை வாழ்த்தினர். அவர் அவர்களை நோக்கி, ’நீங்கள் இவர்களோடு எதைப்பற்றி வாதாடுகிறீர்கள்?’ என்று கேட்டார்.
அப்போது, கூட்டத்திலிருந்து ஒருவர் அவரை அணுகி, அவர்முன் முழந்தாள் படியிட்டு, ’‘போதகரே, என் மகன்மீது அருள்கூர வேண்டும் என உம்மிடம் மன்றாடுகிறேன். அவன் எனக்கு ஒரே மகன். ஓர் ஆவி அவனைப் பிடித்துக்கொள்கிறது; உடனே அவன் அலறுகிறான்; வலிப்பு உண்டாகி, வாயில் நுரை-தள்ளுகிறான்; பற்களை நெரிக்கிறான்; உடம்பும் விறைத்துப்போகிறது. அது, அவனை நொறுக்கிவிடுகிறது; அவனைவிட்டு எளிதாகப் போவதில்லை.
தீயஆவி பிடித்துப் பேச்சிழந்த என் மகனை, உம்மிடம் கொண்டுவந்தேன். அதை ஓட்டிவிடும்படி, நான் உம் சீடரிடம் கேட்டேன்; அவர்களால் இயலவில்லை’ என்று உரக்கக் கூறினார்.
அதற்கு இயேசு அவர்களிடம், ’நம்பிக்கையற்ற, சீரழிந்த தலைமுறையினரே. எவ்வளவு காலம் நான் உங்களோடு இருக்க இயலும்? எவ்வளவு காலம் நான் உங்களைப் பொறுத்துக்கொள்ள இயலும்? என்றார். ’உம் மகனை இங்கே கொண்டுவாரும்’ என்று அம்மனிதரிடம் கூறினார்.
அவர்கள் அவனை அவரிடம் கொண்டுவந்தார்கள். அவரைக் கண்டவுடன், அந்த ஆவி அவனுக்கு வலிப்பு உண்டாக்க, அவன் தரையில் விழுந்து புரண்டான்; வாயில் நுரை தள்ளியது.
அவர், அவனுடைய தந்தையைப் பார்த்து, ’இது இவனுக்குவந்து எவ்வளவு காலமாயிற்று?’ என்று கேட்டார்.
அதற்கு அவர், ’குழந்தைப் பருவத்திலிருந்து இது இருந்துவருகிறது. இவனை ஒழித்துவிடத் தீயிலும், தண்ணீரிலும், பலமுறை அந்த ஆவி இவனைத் தள்ளியதுண்டு. உம்மால் ஏதாவது செய்ய இயலுமானால், எங்கள்மீது பரிவு கொண்டு, எங்களுக்கு உதவி செய்யும்’ என்றார்.
நம்புகிறவருக்கு எல்லாம் நிகழும்
இயேசு அவரை நோக்கி, ’இயலுமானாலா? நம்புகிறவருக்கு எல்லாம் நிகழும்’ என்றார். உடனே, அச்சிறுவனின் தந்தை, ’நான் நம்புகிறேன். என் நம்பிக்கையின்மை நீங்க உதவும்’ என்று கதறினார்.
அப்போது, மக்கள் கூட்டம் தம்மிடம் ஓடிவருவதை இயேசு கண்டு, அந்தத் தீயஆவியை அதட்டி, ’ஊமைச் செவிட்டு ஆவியே, உனக்குக் கட்டளையிடுகிறேன்; இவனை விட்டுப் போ; இனி இவனுள் நுழையாதே’ என்றார்.
அது அலறி, அவனுக்கு மிகுந்த வலிப்பு உண்டாக்கி, வெளியேறியது. அச்சிறுவன் செத்தவன் போலானான். ஆகவே, அவர்களுள் பலர் ’அவன் இறந்துவிட்டான்’ என்றனர். இயேசு, அவன் கையைப் பிடித்துத் தூக்கிவிட்டார். அவனும் எழுந்தான். அவனுடைய தந்தையிடம் அவனை ஒப்படைத்தார்.
எல்லாரும் கடவுளின் மாண்பைக் கண்டு, மலைத்து நின்றார்கள். இயேசு செய்த யாவற்றையும் பார்த்து, அனைவரும் வியப்படைந்தனர்.
கடுகளவு நம்பிக்கையும் உங்களிடம் இல்லை
அவர் வீட்டில் நுழைந்ததும், அவருடைய சீடர் அவரிடம் தனிமையாக வந்து, ’அதை ஏன் எங்களால் ஓட்ட இயலவில்லை?’ என்று கேட்டனர்.
இயேசு அவர்களைப் பார்த்து, 'உங்கள் நம்பிக்கைக் குறைவுதான் காரணம். உங்களுக்குக் கடுகளவு நம்பிக்கை இருந்தால், நீங்கள் இம்மலையைப் பார்த்து, 'இங்கிருந்து பெயர்ந்து அங்குப் போ’ எனக் கூறினால், அது பெயர்ந்து போகும். உங்களால் முடியாதது ஒன்றும் இராது என நான் உங்களுக்குச் சொல்லுகிறேன்’ 'இவ்வகைப் பேய் இறைவேண்டலினாலும் (நோன்பினாலும்) அன்றி, வேறு எதனாலும் வெளியேறாது’ என்றார்.
இயேசு தம் சாவை இரண்டாம்முறை முன்னறிவித்தார் கலிலேயா
அவர்கள் அங்கிருந்து புறப்பட்டுக் கலிலேயா வழியாகச் சென்றார்கள். அது யாருக்கும் தெரியக்கூடாது என்று இயேசு விரும்பினார்.
கலிலேயாவில் சீடர்கள் ஒன்று திரண்டிருக்கும்போது, இயேசு அவர்களிடம், ’’நான் சொல்வதைக் கேட்டு, மனத்தில் வைத்துக்கொள்ளுங்கள். மானிடமகன் மக்களின் கையில் ஒப்புவிக்கப்படவிருக்கிறார்; அவர்கள், அவரைக் கொலை செய்வார்கள். கொல்லப்பட்ட மூன்று நாள்களுக்குப்பின், அவர் உயிர்த்தெழுவார்’ என்று, தம் சீடருக்குக் கற்பித்துக் கொண்டிருந்தார்.
அப்போது, அவர்கள் மிகவும் துயரடைந்தார்கள். அவர் சொன்னது அவர்களுக்கு விளங்கவில்லை. அவர்கள் அதை உணர்ந்துகொள்ளாதவாறு, அது அவர்களுக்கு மறைவாயிருந்தது. ஆயினும், அவர் சொன்னதுபற்றி, அவரிடம் விளக்கம் கேட்கவும் அவர்கள் அஞ்சினார்கள்.
இயேசு வரி செலுத்தினார் கப்பர்நாகும் கிபி 32
அவர்கள் கப்பர்நாகுமுக்கு வந்தபோது, தண்டுவோர் பேதுருவிடம் வந்து, 'உங்கள் போதகர் கோவில் வரியாக இரண்டு திராக்மா வரியைச் செலுத்துவதில்லையா?’ என்று கேட்டனர். அவர், ’ஆம், செலுத்துகிறார்’ என்றார்.
பின்பு வீட்டிற்குள் வந்து, பேதுரு பேசத் தொடங்குவதற்கு முன்பே, இயேசு, ’சீமோனே, உனக்கு எப்படித் தோன்றுகிறது? இவ்வுலக அரசர்கள் சுங்கவரியையோ தலைவரியையோ யாரிடமிருந்து பெறுகின்றார்கள்? தங்களுடைய மக்களிடமிருந்தா? மற்றவரிடமிருந்தா?’ என்று கேட்டார்.
’மற்றவரிடமிருந்துதான்’ என்று பேதுரு பதிலளித்தார்.
இயேசு அவரிடம், ’அப்படியானால், குடிமக்கள் இதற்குக் கட்டுப்பட்டவரல்ல. ஆயினும், நாம் அவர்களுக்கு தடையாய் இருக்கக் கூடாது. எனவே, நீ போய்க் கடலில் தூண்டில் போடு; முதலில் அகப்படும் மீனை எடுத்து, அதன் வாயைத் திறந்து பார்த்தால், ஸ்தாத்தேர் நாணயத்தைக் காண்பாய். அதை எடுத்து, உன் சார்பாகவும், என் சார்பாகவும், அவர்களிடம் செலுத்து’ என்றார்.
இயேசுவின் பெயரால் பேய் ஓட்டியவர்
அப்பொழுது யோவான் இயேசுவிடம், ’போதகரே, ஒருவர் உமது பெயரால் பேய்கள் ஓட்டுவதைக் கண்டு, நாங்கள் அவரைத் தடுக்கப் பார்த்தோம். ஏனெனில் அவர் நம்மைச் சாராதவர்’ என்றார்.
அதற்கு இயேசு கூறியது: ’தடுக்க வேண்டாம். ஏனெனில், என் பெயரால் வல்லசெயல் புரிபவர், அவ்வளவு எளிதாக என்னைக்குறித்து இகழ்ந்து பேசமாட்டார். ஏனெனில், நமக்கு எதிராக இராதவர், நம் சார்பாக இருக்கிறார். நீங்கள் கிறிஸ்துவைச் சார்ந்தவர்கள் என்பதால், உங்களுக்கு ஒரு கிண்ணம் தண்ணீர் கொடுப்பவர், கைம்மாறு பெறாமல் போகார் என உறுதியாக உங்களுக்குச் சொல்கிறேன்.’
10. புதிய உடன்படிக்கை - உலகில் சிறியவரே விண்ணரசில் பெரியவர்
நம்மில் பெரியவர் யார்? கப்பர்நாகும் கிபி 32
அவர்கள் கப்பர்நாகுமுக்கு வந்து. வீட்டில் இருந்த பொழுது, இயேசு, ’வழியில் நீங்கள் எதைப்பற்றி வாதாடிக் கொண்டிருந்தீர்கள்?’ என்று அவர்களிடம் கேட்டார்.
அவர்கள் பேசாதிருந்தார்கள். ஏனெனில் ‘தங்களுள் பெரியவர் யார்’ என்பதைப்பற்றி, வழியில், ஒருவரோடு-ஒருவர் வாதாடிக்கொண்டு வந்தார்கள்.
உங்கள் எல்லாரிலும் சிறியவரே விண்ணரசில் பெரியவர்
அப்பொழுது அவர் அமர்ந்து, பன்னிருவரையும் கூப்பிட்டு, அவர்களிடம், ’ஒருவர் முதல்வராக இருக்க விரும்பினால், அவர் அனைவரிலும் கடைசியானவராகவும், அனைவருக்கும் தொண்டராகவும் இருக்கட்டும்’ என்றார்.
பிறகு, அவர் ஒரு சிறு பிள்ளையை அழைத்து, அவர்கள் நடுவில் நிறுத்தி, அதை அரவணைத்துக் கொண்டு பின்வருமாறு கூறினார்: ’நீங்கள் மனந்திரும்பிச் சிறுபிள்ளைகளைப்போல் ஆகாவிட்டால், விண்ணரசில் புகமாட்டீர்கள் என, உறுதியாக உங்களுக்குச் சொல்கிறேன். இந்தச் சிறுபிள்ளையைப்போலத் தம்மைத் தாழ்த்திக்கொள்பவரே விண்ணரசில் மிகப்பெரியவர்.
இத்தகைய சிறுபிள்ளை ஒன்றை, என் பெயரால் ஏற்றுக்கொள்பவர் எவரும் என்னையே ஏற்றுக்கொள்கிறார். என்னை ஏற்றுக்கொள்பவர், என்னைமட்டும் அல்ல, என்னை அனுப்பினவரையே ஏற்றுக்கொள்கிறார். உங்கள் எல்லாரிலும் சிறியவரே பெரியவர் ஆவார்’ என்றார்.
’இச்சிறியோருள் ஒருவரையும் நீங்கள் இழிவாகக் கருதவேண்டாம்; கவனமாயிருங்கள்! இவர்களுடைய வானதூதர்கள் என் விண்ணகத் தந்தையின் திருமுன் எப்பொழுதும் இருக்கின்றார்கள் என நான் உங்களுக்குச் சொல்லுகிறேன்.
எவரையும் பாவத்திற்கு வழிநடத்தாதீர்
’என்மீது நம்பிக்கை கொண்டுள்ள இச்சிறியோருள் எவரையாவது பாவத்தில் விழச்செய்வோருடைய கழுத்தில், எந்திரக்கல்லைக் கட்டித் தொங்கவிட்டு, ஆழ்கடலில் அமிழ்த்துவது அவர்களுக்கு நல்லது.
ஐயோ! பாவத்தில்-விழச்செய்யும் உலகுக்குக் கேடு! பாவத்தில் விழுவதைத் தவிர்க்க முடியாது. ஆனால் ஐயோ! அதற்குக் காரணமாய் இருப்போருக்குக் கேடு!
உங்கள் கை, உங்களைப் பாவத்தில் விழச்செய்தால், அதை வெட்டிவிடுங்கள். நீங்கள் இரு-கையுடையவராய் அணையாத நெருப்புள்ள நரகத்துக்குள் தள்ளப்படுவதைவிட, கை-ஊனமுற்றவராய் நிலைவாழ்வில் புகுவது உங்களுக்கு நல்லது.
உங்கள் கால், உங்களைப் பாவத்தில் விழச் செய்தால், அதை வெட்டிவிடுங்கள். நீங்கள், இரு காலுடையவராய் நரகத்தில் தள்ளப்படுவதைவிட, கால் ஊனமுற்றவராய் வாழ்வில் புகுவது உங்களுக்கு நல்லது.
உங்கள் கண், உங்களைப் பாவத்தில் விழச்செய்தால், அதைப் பிடுங்கி எறிந்துவிடுங்கள். நீங்கள் இரு-கண்ணுடையவராய் நரகத்தில் தள்ளப்படுவதைவிட, ஒற்றைக் கண்ணராய் இறையாட்சிக்கு உட்படுவது உங்களுக்கு நல்லது.
நரகத்திலோ அவர்களைத் தின்னும் புழு சாகாது; நெருப்பும் அவியாது. ஏனெனில் பலிப்பொருள் உப்பால் தூய்மையாக்கப்படுவதுபோல் ஒவ்வொருவரும் நெருப்பால் தூய்மையாக்கப்படுவர்.
உப்பு நல்லது. ஆனால் அது உவர்ப்பற்றுப் போனால் எதைக்கொண்டு அதை உவர்ப்புள்ளதாக்குவீர்கள்? நீங்கள் உப்பின் தன்மை கொண்டிருங்கள். ஒருவரோடு ஒருவர் அமைதியுடன் வாழுங்கள்.’
காணாமற்போன ஆடு உவமை- சிறியோரைத் தேடிவந்த இயேசு
( ஏனெனில் மானிட மகன் நெறிதவறியோரை மீட்கவே வந்தார். ) இந்த நிகழ்ச்சியைப்பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்? ஒருவரிடம் இருக்கும் நூறு ஆடுகளுள் ஒன்று வழிதவறி அலைந்தால், அவர் தொண்ணூற்றொன்பது ஆடுகளையும் மலைப்பகுதியில் விட்டுவிட்டு, வழிதவறி அலையும் ஆட்டைத் தேடிச் செல்வார் அல்லவா?
அவர் அதைக் கண்டுபிடித்தால், வழிதவறி அலையாத தொண்ணூற்றொன்பது ஆடுகளையும்பற்றி மகிழ்ச்சியடைவதைவிட, வழி தவறிய அந்த ஓர் ஆட்டைப்பற்றியே மிகவும் மகிழ்ச்சியடைவார் என உறுதியாக உங்களுக்குச் சொல்லுகிறேன்.
அவ்வாறே, இச்சிறியோருள் ஒருவர்கூட நெறி தவறிப் போகக்கூடாது என்பதே உங்கள் விண்ணகத் தந்தையின் திருவுளம்.
பாவம் செய்யும் சகோதரரின் உறவு
’உங்கள் சகோதரர் சகோதரிகளுள் ஒருவர் உங்களுக்கு எதிராகப் பாவம் செய்தால் நீங்களும் அவரும் தனித்திருக்கும்போது அவரது குற்றத்தை எடுத்துக்காட்டுங்கள். அவர் உங்களுக்குச் செவிசாய்த்தால் நல்லது; உங்கள் உறவு தொடரும்.
இல்லையென்றால் ’இரண்டு அல்லது மூன்று சாட்சிகளுடைய வாக்குமூலத்தால் அனைத்தும் உறுதி செய்யப்படும்’ என்னும் மறைநூல் மொழிக்கு ஏற்ப உங்களோடு ஒன்றிரண்டு பேரைக் கூட்டிக் கொண்டு போங்கள். அவர்களுக்கும் செவிசாய்க்காவிடில் திருச்சபையிடம் கூறுங்கள். திருச்சபைக்கும் செவிசாய்க்காவிடில் அவர் உங்களுக்கு வேற்று இனத்தவர் போலவும் வரிதண்டுபவர் போலவும் இருக்கட்டும்.
இரண்டு அல்லது மூவர் கூடி முடிவெடுங்கள்
மண்ணுலகில் நீங்கள் தடைசெய்பவை அனைத்தும் விண்ணுலகிலும் தடைசெய்யப்படும்; மண்ணுலகில் நீங்கள் அனுமதிப்பவை அனைத்தும் விண்ணுலகிலும் அனுமதிக்கப்படும் என நான் உறுதியாக உங்களுக்குச் சொல்கிறேன்.
உங்களுள் இருவர் மண்ணுலகில் தாங்கள் வேண்டும் எதைக் குறித்தும் மனமொத்திருந்தால் விண்ணுலகில் இருக்கும் என் தந்தை அதை அவர்களுக்கு அருள்வார். ஏனெனில் இரண்டு அல்லது மூன்று பேர் என் பெயரின் பொருட்டு எங்கே ஒன்றாகக் கூடியிருக்கின்றார்களோ அங்கே அவர்களிடையே நான் இருக்கிறேன் என உறுதியாக உங்களுக்குச் சொல்கிறேன்.’
11. புதிய உடன்படிக்கை – சகோதரரை மன்னிப்போரே கடவுளின் மன்னிப்பை பெறுவர்
பின்பு பேதுரு இயேசுவை அணுகி, ’ஆண்டவரே, என் சகோதரர் சகோதரிகளுள் ஒருவர் எனக்கு எதிராகப் பாவம் செய்துவந்தால் நான் எத்தனை முறை அவரை மன்னிக்க வேண்டும்? ஏழு முறை மட்டுமா? எனக் கேட்டார்.
அதற்கு இயேசு அவரிடம் கூறியது: ’ஏழு முறை மட்டுமல்ல; எழுபது தடவை ஏழுமுறை என நான் உனக்குச் சொல்கிறேன்.
விண்ணரசைப் பின்வரும் நிகழ்ச்சிக்கு ஒப்பிடலாம்: ஓர் அரசர் தம் பணியாளர்களிடம் கணக்குக் கேட்க விரும்பினார்.
கடவுளுக்கு எதிராக மனிதர் செய்யும் பாவங்கள்
அவர் கணக்குப் பார்க்கத் தொடங்கியபொழுது, அவரிடம் பத்தாயிரம் தாலந்து கடன்பட்ட ஒருவனைக் கொண்டு வந்தனர். அவன் பணத்தைத் திருப்பிக் கொடுக்க இயலாத நிலையில் இருந்தான். தலைவரோ, அவனையும், அவன் மனைவி மக்களோடு அவனுக்குரிய உடைமைகள் யாவற்றையும் விற்றுப் பணத்தைத் திருப்பி அடைக்க ஆணையிட்டார்.
உடனே அப்பணியாள் அவர் காலில் விழுந்து பணிந்து, ‘என்னைப் பொறுத்தருள்க; எல்லாவற்றையும் உமக்குத் திருப்பித் தந்து விடுகிறேன்’ என்றான்.
அப்பணியாளின் தலைவர் பரிவு கொண்டு அவனை விடுவித்து அவனது கடன் முழுவதையும் தள்ளுபடி செய்தார்.
( மனிதர் அனைவரும் கடவுளுக்கு எதிராகவும், மனிதர்களுக்கு எதிராகவும் பாவம் செய்கிறோம். அதை அறிக்கையிடும்போது, இயேசு சிலுவையில் நம் பாவங்கள் அனைத்தையும் ஏற்றுக்கொண்டார்)
மனிதருக்கு எதிராக மனிதர் செய்யும் பாவங்கள்
அப்பணியாள் வெளியே சென்றதும், தன்னிடம் நூறு தெனாரியம் கடன்பட்டிருந்த உடன் பணியாளர் ஒருவரைக் கண்டு, 'நீ பட்ட கடனைத் திருப்பித் தா’ எனக்கூறி அவரைப் பிடித்துக் கழுத்தை நெரித்தான்.
உடனே அவனுடைய உடன் பணியாளர், அவர் காலில் விழுந்து, என்னைப் பொறுத்தருள்க; நான் திருப்பிக் கொடுத்துவிடுகிறேன்’ என்று அவனைக் கெஞ்சிக் கேட்டார். ஆனால் அவன் அதற்கு இசையாது, கடனைத் திருப்பி அடைக்கும்வரை அவரைச் சிறையிலடைத்தான்.
(நமக்கு எதிராக மனிதர் செய்யும் பாவங்களை நாம் மன்னிக்க முடியும். ஆனால், நாம் மன்னிக்க விரும்புவதில்லை.)
அவருடைய உடன் பணியாளர்கள் நடந்ததைக் கண்டபோது மிகவும் வருந்தித் தலைவரிடம் போய் நடந்தவற்றையெல்லாம் விளக்கிக் கூறினார்கள்.
தீர்ப்புநாள் - சகோதரரை மன்னிக்காதவர் கடவுளின் மன்னிப்பையும் இழப்பார்
அப்போது தலைவர் அவனை வரவழைத்து, ’பொல்லாதவனே, நீ என்னை வேண்டிக் கொண்டதால் அந்தக் கடன் முழுவதையும் உனக்குத் தள்ளுபடி செய்தேன். நான் உனக்கு இரக்கம் காட்டியதுபோல நீயும் உன் உடன்பணியாளருக்கு இரக்கம் காட்டியிருக்க வேண்டும் அல்லவா? என்று கேட்டார்.
அத்தலைவர் சினங் கொண்டவராய், அனைத்துக் கடனையும் அவன் அடைக்கும்வரை அவனை வதைப்போரிடம் ஒப்படைத்தார்.
உங்களுள் ஒவ்வொருவரும் தம் சகோதரர் சகோதரிகளை மனமார மன்னிக்காவிட்டால் விண்ணுலகில் இருக்கும் என் தந்தையும் உங்களை மன்னிக்க மாட்டார்.’
( இயேசுவின் மன்னிப்பை பெறுவதற்கு வழி இந்த உவமையில் அறிவிக்கப்படுகிறது. நம் சகோதரர் நமக்கு எதிராகச் செய்யும் குற்றங்களை நாம் மன்னித்தால், இயேசுவின் மன்னிப்பையும் பெறமுடியும்)