1. இயேசுவுக்கு தைலம் பூசிய மரியா
எருசலேம் கிபி 33 சனி
யூதர்களுடைய பாஸ்கா விழா அண்மையில் நிகழவிருந்தது. விழாவுக்குமுன், பலர், தங்கள் தூய்மைச் சடங்குகளை நிறைவேற்ற, நாட்டுப்புறங்களிலிருந்து எருசலேமுக்குச் சென்றனர்.
அங்கே, அவர்கள் இயேசுவைத் தேடினார்கள். ’அவர் திருவிழாவுக்கு வரவே மாட்டாரா? நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்?’ என்று, கோவிலில் நின்றுகொண்டிருந்தவர்கள் தங்களிடையே பேசிக்கொண்டார்கள். ஏனெனில், தலைமைக் குருக்களும், பரிசேயர்களும் இயேசுவைப் பிடிக்க எண்ணி, அவர் இருக்கும் இடம் யாருக்காவது தெரிந்தால், தங்களிடம் வந்து அறிவிக்க வேண்டும் என்று கட்டளையிட்டிருந்தார்கள்.
இயேசுவுக்கு தைலம் பூசுதல் பெத்தானியா கிபி 33 சனி
பாஸ்கா விழாவுக்கு ஆறு நாள்களுக்கு முன்பு, இயேசு பெத்தானியாவுக்குச் சென்றார். அங்குதான் இயேசு இலாசரை உயிர்த்தெழச் செய்தார்.
இயேசு பெத்தானியாவில், தொழுநோயாளர் சீமோன் இல்லத்தில் இருந்தார். அங்கு அவருக்கு விருந்து அளிக்கப்பட்டது. மார்த்தா உணவு பரிமாறினார். இயேசுவோடு பந்தியில் அமர்ந்திருந்தவர்களுடன் இலாசரும் இருந்தார்.
அங்கு இயேசு பந்தியில் அமர்ந்திருந்தபோது, மரியா, இலாமிச்சை என்னும் நறுமணத்தைலம் ஏறக்குறைய முந்நூற்று இருபது கிராம் கொண்ட படிகச்சிமிழுடன் வந்தார். அந்தத் தைலம் கலப்பற்றது, விலையுயர்ந்தது.
அவர், அந்தப் படிகச்சிமிழை உடைத்து, இயேசுவின் தலையிலும் காலடிகளிலும் பூசி, அதனைத் தமது கூந்தலால் துடைத்தார். தைலத்தின் நறுமணம் வீடெங்கும் கமழ்ந்தது.
யூதாசின் பொருளாசை
ஆனால் அங்கிருந்த சிலர் கோபமடைந்து, ’இந்தத் தைலத்தை இவ்வாறு வீணாக்குவதேன்?’ என்று தங்களுக்குள் பேசிக்கொண்டனர். அப்பெண் மீதும் சீறி எழுந்தனர்.
இயேசுவின் சீடருள் ஒருவனும், அவரைக் காட்டிக்கொடுக்க இருந்தவனுமான யூதாசு இஸ்காரியோத்து, ’இந்தத் தைலத்தை முந்நூறு தெனாரியத்துக்கு விற்று, அப்பணத்தை ஏழைகளுக்குக் கொடுத்திருக்கக்கூடாதா?’ என்று கேட்டான்.
ஏழைகள்பால் கொண்டிருந்த அக்கறையினால் அல்ல, மாறாக, அவன் ஒரு திருடனாய் இருந்ததால்தான் இப்படிக் கேட்டான். பணப்பை அவனிடம் இருந்தது. அதில் போடப்பட்ட பணத்திலிருந்து அவன் எடுத்துக்கொள்வதுண்டு.
மரியா நினைவுகூரப்படுவார்
அப்போது இயேசு, ’ஏன் இந்தப் பெண்ணுக்குத் தொல்லை கொடுக்கிறீர்கள்? மரியாவைத் தடுக்காதீர்கள். அவர் எனக்குச் செய்தது முறையான செயலே.
ஏனெனில், ஏழைகள் எப்போதுமே உங்களோடு இருக்கின்றார்கள். நீங்கள் விரும்பும்போதெல்லாம் அவர்களுக்கு நன்மை செய்யமுடியும். ஆனால், நான் எப்போதும் உங்களோடு இருக்கப்போவதில்லை. இவர் தம்மால் இயன்றதைச் செய்தார். இவர் இந்த நறுமணத் தைலத்தை எனது உடல்மீது ஊற்றி, என் அடக்கத்திற்காக, முன்னதாகவே, என் உடலுக்குத் தைலம் பூசிவிட்டார்.
உலகம் முழுவதும் எங்கெல்லாம் இந்நற்செய்தி அறிவிக்கப்படுமோ, அங்கெல்லாம் இப்பெண் செய்ததும் எடுத்துக்கூறப்படும்; இவரும் நினைவுகூரப்படுவார் என்று நான் உறுதியாக உங்களுக்குச் சொல்கிறேன்’ என்று கூறினார்
இலாசரின் காரணமாக, பலர் இயேசுவை நம்பினார்கள்
இயேசு அங்கு இருப்பதை அறிந்த யூதர்கள் பெருந்திரளாய் வந்தார்கள். அவர்கள் இயேசுவை முன்னிட்டு மட்டும் அல்ல, அவர் உயிர்த்தெழச்செய்திருந்த இலாசரைக் காண்பதற்காகவும் வந்தார்கள். ஆதலால், தலைமைக் குருக்கள் இலாசரையும் கொன்றுவிடத் திட்டமிட்டார்கள். ஏனெனில், இலாசரின் காரணமாக, யூதர்களிடமிருந்து பலர் விலகி, இயேசுவிடம் நம்பிக்கை கொண்டனர்.
2. தாவீதின் மகனுக்கு ஓசன்னா
பெத்பகு கிபி 33 ஞாயிறு
பிறகு, இயேசு தம் சீடரோடு எருசலேமுக்குப் புறப்பட்டுச் சென்றார். ஒலிவமலை அருகிலுள்ள பெத்பகு என்னும் ஊரை நெருங்கிவந்தபோது, இரு சீடர்களை அனுப்பினார்.
அப்போது அவர் அவர்களிடம், நீங்கள் உங்களுக்கு எதிரேஇருக்கும் ஊருக்குள் போங்கள்; அதில் நுழைந்தவுடன், இதுவரை யாரும் அமராத ஒரு கழுதைக்குட்டி கட்டியிருப்பதைக் காண்பீர்கள். அதை அவிழ்த்துக் கொண்டுவாருங்கள். யாராவது உங்களிடம், ’ஏன் அவிழ்க்கிறீர்கள்?‘ என்று கேட்டால், ’இது ஆண்டவருக்குத் தேவை, இதை அவர் உடனே திருப்பி இங்கு அனுப்பிவிடுவார்’ எனச் சொல்லுங்கள்″ என்றார்.
சீடர்கள் சென்று, ஒரு வீட்டுவாயிலுக்கு வெளியே, தெருவில், ஒரு கழுதைக் குட்டியைக் கட்டிவைத்திருப்பதைக் கண்டார்கள். அவர்கள் அதை அவிழ்த்துக் கொண்டிருந்தபோது, அங்கே நின்றுகொண்டிருந்த கழுதையின் உரிமையாளர்கள், ’கழுதையை ஏன் அவிழ்க்கிறீர்கள்?’ என்று அவர்களிடம் கேட்டார்கள். அவர்கள், ’இது ஆண்டவருக்குத் தேவை’ என்றார்கள். அங்கு நின்றவர்களும் போகவிட்டனர்.
இயேசு கழுதையின் மேல் அமர்ந்தார் எருசலேம் கிபி 33 ஞாயிறு
பின்பு அதை இயேசுவிடம் ஓட்டிவந்தார்கள். அக்கழுதையின்மேல் தங்கள் மேலுடைகளைப் போட்டு, இயேசுவை அதன்மேல் ஏற்றிவைத்தார்கள். அவர் அதன்மீது அமர்ந்தார்.
’மகள் சீயோனிடம் சொல்லுங்கள்: ’அஞ்சாதே, இதோ உன் அரசர் உன்னிடம் வருகிறார்; அவர் எளிமையுள்ளவர்; கழுதையின்மேல் ஏறி வருகிறார்; கழுதைக்குட்டியாகிய மறியின்மேல் அமர்ந்து வருகிறார்’ என்று மறைநூலில் எழுதியுள்ளதற்கேற்ப அவர் இவ்வாறு செய்தார்.
அந்நேரத்தில், அவருடைய சீடர்கள் இச்செயல்களின் பொருளைப் புரிந்து கொள்ளவில்லை. அவரைப்பற்றி மறைநூலில் எழுதப்பட்டிருந்தவாறே இவையனைத்தும் நிகழ்ந்தன என்பது, இயேசு மாட்சிபெற்ற பிறகே அவர்கள் நினைவுக்கு வந்தது.
இயேசுவுக்கு வரவேற்பு
அவர் போய்க்கொண்டிருந்தபோது, பெருந்திரளான மக்கள் தங்கள் மேலுடைகளை வழியில் விரித்துக்கொண்டே சென்றார்கள். வேறு சிலர், மரங்களிலிருந்து வெட்டிய கிளைகளையும், வயல்வெளிகளில் வெட்டிய இலை-தழைகளையும் வழியில் பரப்பினர்.
இயேசு ஒலிவமலைச் சரிவை நெருங்கினார். அப்போது, திரண்டிருந்த சீடர் அனைவரும், தாங்கள் கண்ட எல்லா வல்ல செயல்களுக்காகவும், உரத்தக் குரலில், மகிழ்ச்சியோடு கடவுளைப் புகழத் தொடங்கினர்;
அப்போது, கூட்டத்தில் இருந்த பரிசேயர்களுள் சிலர் அவரை நோக்கி, ’போதகரே, உம் சீடர்களைக் கடிந்து கொள்ளும்’ என்றனர். அதற்கு அவர் மறுமொழியாக, ’இவர்கள் பேசாதிருந்தால், கற்களே கத்தும் என நான் உங்களுக்குச் சொல்கிறேன்’ என்றார்.
இயேசு, எருசலேம் நகரைப் பார்த்து அழுதார்
இயேசு, எருசலேம் நகரை நெருங்கி வந்ததும், அதைப் பார்த்து அழுதார்.
’இந்த நாளிலாவது அமைதிக்குரிய வழியை நீ அறிந்திருக்கக்கூடாதா? ஆனால் இப்போது அது உன் கண்களுக்கு மறைக்கப்பட்டுள்ளது. ஒரு காலம் வரும். அப்போது, உன் பகைவர்கள் உன்னைச் சுற்றி அரண் எழுப்பி, உன்னை முற்றுகையிடுவார்கள்; உன்னையும் உன்னிடத்திலுள்ள உன் மக்களையும் எப்பக்கத்திலுமிருந்து நெருக்கி அழித்து, உன்னைத் தரைமட்டமாக்குவார்கள்; மேலும், உன்னிடம் கற்கள் ஒன்றின்மீது ஒன்று இராதபடி செய்வார்கள். ஏனெனில், கடவுள் உன்னைத் தேடி வந்த காலத்தை நீ அறிந்து கொள்ளவில்லை’ என்றார்.
தாவீதின் மகனுக்கு ஒசன்னா
அவர் எருசலேமுக்குள் சென்றபோது, நகரம் முழுவதும் பரபரப்படைய, ’இவர் யார்?’ என்னும் கேள்வி எழுந்தது. அதற்குக் கூட்டத்தினர், ’இவர் இறைவாக்கினர் இயேசு; கலிலேயாவிலுள்ள நாசரேத்தைச் சேர்ந்தவர்’ என்று பதிலளித்தனர்.
திருவிழாவுக்குப் பெருந்திரளாய் வந்திருந்த மக்கள், இயேசு எருசலேமுக்கு வருகிறார் என்று கேள்வியுற்று, குருத்தோலைகளைப் பிடித்துக்கொண்டு அவருக்கு எதிர்கொண்டுபோய், ''தாவீதின் மகனுக்கு ஓசன்னா! ஆண்டவரின் பெயரால் அரசராய் வருகிறவர் போற்றப்பெறுக! இஸ்ரயேலின் அரசர் போற்றப்பெறுக! விண்ணகத்தில் அமைதியும் மாட்சியும் உண்டாகுக, உன்னதத்தில் ஓசன்னா!’ என்று சொல்லி ஆர்ப்பரித்தனர்
இலாசரைக் குறித்துச் சான்று
இறந்து, கல்லறையில் வைக்கப்பட்டிருந்த இலாசாரை, இயேசு கூப்பிட்டு உயிர்த்தெழச் செய்தபோது அவரோடு இருந்த மக்கள், நடந்ததைக் குறித்துச் சான்று பகர்ந்தனர். இயேசு இந்த அரும்-அடையாளத்தைச் செய்தார் என்று கேள்வியுற்றதால், மக்கள் திரளாய் அவரை எதிர்கொண்டு சென்றார்கள்.
இதைக் கண்ட பரிசேயர், ’பார்த்தீர்களா! நம் திட்டம் எதுவும் பயனளிக்கவில்லை. உலகமே அவன் பின்னே போய்விட்டது’ என்று தங்களிடையே பேசிக்கொண்டார்கள்.
குருக்களின் கோபம்
அவர் எருசலேமுக்குள் சென்று கோவிலில் நுழைந்தார். பின்பு பார்வையற்றோரும், கால்-ஊனமுற்றோரும் கோவிலுக்குள் இருந்த அவரை அணுகினர். இயேசு அவர்களைக் குணமாக்கினார்.
அவர் வியத்தகு செயல்கள் செய்வதையும், ’தாவீதின் மகனுக்கு ஓசன்னா’ என்று கோவிலுக்குள் சிறுபிள்ளைகள் ஆர்ப்பரிப்பதையும் கண்டு, தலைமைக் குருக்களும், மறைநூல்-அறிஞர்களும் கோபம் அடைந்தனர். அவர்கள் அவரிடம், ’இவர்கள் சொல்வது கேட்கிறதா?’ என்றார்கள்.
இயேசு அவர்களிடம், ’ஆம்! ’பாலகரின் மழலையிலும், குழந்தைகளின் மொழியிலும் உம்மைப் புகழ ஏற்பாடுசெய்தீர்’ என்று ஒருபோதும் மறைநூலில் படித்ததில்லையா?’ என்று கேட்டார்.
அவர் அனைத்தையும் சுற்றிப் பார்த்துவிட்டு, ஏற்கெனவே மாலை-வேளையாகிவிட்டதால், அவர்களை விட்டு அகன்று, பன்னிருவருடன், நகரத்திற்கு வெளியே உள்ள பெத்தானியாவுக்குச் சென்று, அன்றிரவு அங்குத் தங்கினார்.
3. கோவிலைக் கள்வர்குகை ஆக்கினீர்
எருசலேம் கிபி 33 திங்கள்
இஸ்ரயேலே, இனி நீ கனிகொடுக்கவே மாட்டாய்
மறுநாள் காலையில் பெத்தானியாவை விட்டு அவர்கள் நகரத்திற்குத் திரும்பியபொழுது, இயேசுவுக்குப் பசி உண்டாயிற்று.
வழியோரத்தில், இலையடர்ந்த ஓர் அத்திமரத்தை அவர் தொலையிலிருந்து கண்டு, அதில் ஏதாவது கிடைக்குமா என்று, அதன் அருகில் சென்றார். சென்றபோது, இலைகளைத்தவிர வேறு எதையும் அவர் காணவில்லை. ஏனெனில், அது அத்திப்பழக்காலம் அல்ல.
அவர் அதைப் பார்த்து, ’இனி, நீ கனிகொடுக்கவே மாட்டாய், இனி, உன் கனியை யாரும் உண்ணவே கூடாது’ என்றார். அவருடைய சீடர்கள் இதைக் கேட்டுக்கொண்டிருந்தார்கள்.
எருசலேம் கோவில் கிபி 33 திங்கள்
நீங்கள் கோவிலைக் கள்வர்-குகையாக்கிவிட்டீர்கள்
அவர்கள் எருசலேமுக்கு வந்தார்கள். கோவிலுக்குள் சென்றதும், இயேசு, அங்கு கோவிலுக்குள்ளேயே விற்பவர்களையும் வாங்குபவர்களையும் வெளியே துரத்தத் தொடங்கினார்; நாணயம்-மாற்றுவோரின் மேசைகளையும், புறா-விற்பவர்களின் இருக்கைகளையும் கவிழ்த்துப்போட்டார். கோவில் வழியாக எந்தப் பொருளையும் எடுத்துச்செல்ல அவர் விடவில்லை.
″’என் இல்லம், மக்களினங்கள் அனைத்திற்கும் உரிய இறைவேண்டலின் வீடு என அழைக்கப்படும்’ என்று மறைநூலில் எழுதியுள்ளது″ என்று அவர்களுக்குக் கற்பித்தார்;
’ஆனால், நீங்கள் இதைக் கள்வர்-குகையாக்கிவிட்டீர்கள்’' என்று அவர்களிடம் சொன்னார்.
’ஆனால், நீங்கள் இதைக் கள்வர்-’' என்று அவர்களிடம் சொன்னார்.
ஒவ்வொருநாளும் கற்பித்தார்
இயேசு ஒவ்வொரு நாளும் கோவிலில் கற்பித்துவந்தார், தலைமைக் குருக்களும், மறைநூல்-அறிஞர்களும், மக்களின் தலைவர்களும் இதைக் கேட்டு, அவரை எப்படி ஒழித்துவிடலாம் என்று வழிதேடினார்கள். ஆனால், என்ன செய்வது என்று யாருக்கும் தெரியவில்லை. ஏனென்றால், கூட்டத்தினர் அனைவரும் அவரது போதனையில் ஆழ்ந்து வியந்திருந்ததால், அவர்கள் அவருக்கு அஞ்சினார்கள்.
மாலைவேளை ஆனதும், இயேசுவும் சீடர்களும் நகரத்திலிருந்து வெளியேறினார்கள்.
4. ’வரிதண்டுவோரும் விலைமகளிரும் உங்களைவிட முன்பாகவே இறையாட்சிக்கு உட்படுவர்
பெத்தானியா கிபி 33 செவ்வாய்
காய்ந்துபோன அத்திமரம் தரும் பாடம்
காலையில், அவர்கள் அவ்வழியே சென்றபோது, அந்த அத்திமரம் வேரோடு காய்ந்துபோயிருந்ததைக் கண்டார்கள். இதனைக் கண்ட சீடர்கள் வியப்புற்று, ’இந்த அத்திமரம் எப்படி உடனே காய்ந்துபோயிற்று?’ என்று கேட்டார்கள்.
அப்போது, பேதுரு நடந்ததை நினைவுகூர்ந்து, அவரை நோக்கி, ’ரபி, அதோ நீர் சபித்த அத்திமரம் காய்ந்துபோயிற்று’ என்றார்.
வேண்டுவதை பெற்றுவிட்டோம் என்று ஐயமின்றி நம்புங்கள்
இயேசு அவர்களைப் பார்த்து, ’கடவுள்மீது நம்பிக்கை கொள்ளுங்கள். உறுதியாக உங்களுக்குச் சொல்கிறேன்; நீங்கள் ஐயம் எதுவுமின்றி நம்பிக்கையுடன் இருந்தால், அத்திமரத்துக்கு நான் செய்ததை நீங்களும் செய்வீர்கள். அதுமட்டுமல்ல, எவராவது, இந்த மலையைப் பார்த்து, ’பெயர்ந்து கடலில் விழு’ எனத் தம் உள்ளத்தில் ஐயம் எதுவுமின்றி, நம்பிக்கையுடன் கூறினால், அவர் சொன்னவாறே நடக்கும்.
ஆகவே உங்களுக்குச் சொல்கிறேன்; நீங்கள் இறைவனிடம் வேண்டும்போது எவற்றையெல்லாம் கேட்பீர்களோ, அவற்றைப் பெற்றுவிட்டீர்கள் என நம்புங்கள்; நீங்கள் கேட்டபடியே நடக்கும்.
நீங்கள் வேண்டுதல்செய்ய நிற்கும்போது, யார் மேலாவது நீங்கள் மனத்தாங்கல் கொண்டிருந்தால், மன்னித்துவிடுங்கள். அப்போது, உங்கள் விண்ணகத் தந்தையும் உங்கள் குற்றங்களை மன்னிப்பார்' என்று கூறினார்.
எருசலேம் கிபி 33 செவ்வாய்
அவர்கள் மீண்டும் எருசலேமுக்கு வந்தார்கள். இயேசு கோவிலில் மக்களுக்குக் கற்பித்துக்கொண்டிருந்தார். அவர் நற்செய்தியை அறிவித்துக் கொண்டிருக்கும்போது, தலைமைக் குருக்களும், மறைநூல்-அறிஞர்களும், மூப்பர்களும் அங்கு வந்தார்கள்.
அவர்கள் அவரை நோக்கி, ’எந்த அதிகாரத்தால் நீர் இவற்றைச் செய்கிறீர்? இவற்றைச் செய்ய உமக்கு அதிகாரம் கொடுத்தவர் யார்? எங்களுக்குச் சொல்லும்’ என்றார்கள்.
அவர் அவர்களுக்கு மறுமொழியாக, ’நானும் உங்களிடம் ஒரு கேள்வி கேட்கிறேன்; நீங்கள் மறுமொழி கூறுங்கள். அப்போது எந்த அதிகாரத்தால் இவற்றைச் செய்கிறேன் என நான் உங்களுக்குச் சொல்வேன்.
திருமுழுக்கு-அளிக்கும் அதிகாரம் யோவானுக்கு விண்ணகத்திலிருந்து வந்ததா? அல்லது மனிதரிடமிருந்து வந்ததா? எனக்குப் பதில் சொல்லுங்கள்’ என்று கேட்டார்.
யூதத் தலைவர்களின் வெளிவேடம்
அவர்கள் "'விண்ணகத்திலிருந்து வந்தது' என்போமானால், 'ஏன் நீங்கள் அவரை நம்பவில்லை?' எனக் கேட்பார்; 'மனிதரிடமிருந்து வந்தது' என்போமானால் மக்கள் அனைவரும் நம்மீது கல் எறிவர்" என்று தங்களிடையே சொல்லிக் கொண்டார்கள். ஏனெனில் மக்கள், யோவானை இறைவாக்கினர் என்று உறுதியாய் நம்பியிருந்தனர்.
எனவே அவர்கள், "எங்கிருந்து வந்தது எனத் தெரியாது" என்று பதிலுரைத்தார்கள்.
இயேசுவும் அவர்களிடம், "எந்த அதிகாரத்தால் இவற்றைச் செய்கிறேன் என நானும் உங்களுக்குக் கூறமாட்டேன்" என்றார்.
இரு புதல்வர்கள் உவமை - பழைய உடன்படிக்கையின் தீர்ப்பு
மேலும் இயேசு, ’இந்த நிகழ்ச்சியைப் பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்?
ஒரு மனிதருக்கு இரு புதல்வர்கள் இருந்தார்கள். (வரிதண்டுவோரும் விலைமகளிரும் கடவுளின் மூத்த மகன். யூதர்களும், பரிசேயரும் மறைநூல்-அறிஞரும் மூப்பர்களும் இளைய மகன்)
அவர் மூத்தவரிடம் போய், ’மகனே, நீ இன்று திராட்சைத் தோட்டத்திற்குச் சென்று வேலைசெய்’ என்றார். அவர் மறுமொழியாக, ’நான் போகவிரும்பவில்லை’ என்றார். ஆனால், பிறகு, தம் எண்ணத்தை மாற்றிக்கொண்டு, போய் வேலை செய்தார்.
அவர் அடுத்த மகனிடமும்போய் அப்படியே சொன்னார். அவர் மறுமொழியாக, ’நான் போகிறேன் ஐயா!’ என்றார்; ஆனால் போகவில்லை.
இவ்விருவருள் எவர் தந்தையின் விருப்பப்படி செயல்பட்டவர்?’ என்று கேட்டார்.
அவர்கள் ’மூத்தவரே’ என்று விடையளித்தனர்.
இயேசு அவர்களிடம், ’வரிதண்டுவோரும் விலைமகளிரும் உங்களைவிட முன்பாகவே இறையாட்சிக்கு உட்படுவர் என உறுதியாக உங்களுக்குச் சொல்கிறேன்.
ஏனெனில், யோவான் நீதிநெறியைக் காட்ட உங்களிடம் வந்தார். நீங்களோ அவரை நம்பவில்லை. மாறாக, வரிதண்டுவோரும் விலைமகளிரும் அவரை நம்பினர். அவர்களைப் பார்த்தபின்பும், நீங்கள் உங்கள் எண்ணத்தை மாற்றிக்கொள்ளவுமில்லை, அவரை நம்பவுமில்லை என்றார்.
5. கட்டுவோர் புறக்கணித்த மூலைக்கல் - இறையாட்சி இஸ்ரயேலரைவிட்டு நீக்கப்பட்டது
எருசலேம் கோவில் கிபி 33 செவ்வாய்
பின்பு இயேசு அவர்களையும், மக்களை நோக்கி இந்த உவமையைச் சொல்லத் தொடங்கினார்:
பழைய உடன்படிக்கையையும், புதிய உடன்படிக்கையையும் புறக்கணித்த இஸ்ரயேலர் (கொடிய குத்தகைக்காரர் உவமை)
"நிலக்கிழார் ஒருவர் ஒரு திராட்சைத்தோட்டம் போட்டு, சுற்றிலும் வேலிஅடைத்து, அதில் பிழிவுக்குழி வெட்டி, ஒரு காவல்-மாடமும் கட்டினார்; பின்பு, தோட்டத் தொழிலாளர்களிடம் அதைக் குத்தகைக்கு விட்டுவிட்டு நீண்டகாலம் நெடும்பயணம் மேற்கொண்டார். (இறையாட்சியை வளர்ப்பதற்காக, இஸ்ரயேலருக்கு திருச்சட்டமும் இறைவாக்குகளும் இறைவனால் கொடுக்கப்பட்டு பழைய உடன்படிக்கை செய்யப்பட்டது)
பழம் பறிக்கும் பருவகாலம் நெருங்கி வந்த போது, அவர் தமக்குச் சேர வேண்டிய பழங்களைப் பெற்று வரும்படி ஒரு பணியாளரை அத்தோட்டத் தொழிலாளர்களிடம் அனுப்பினார். ஆனால் தோட்டத் தொழிலாளர்கள் அவரை நையப்புடைத்து வெறுங்கையராய் அனுப்பினார்கள். (கடவுள் விரும்பிய ஆவியின் கனிகள் இஸ்ரயேலரிடம் இல்லை)
மீண்டும் அவர் வேறு ஒரு பணியாளரை அனுப்பி வைத்தார். அவர்கள் அவரையும் நையப்புடைத்து அவமதித்து வெறுங்கையராய் அனுப்பினார்கள்.
மூன்றாம் முறையாக மீண்டும் அவர் முதலில் அனுப்பியவர்களைவிட மிகுதியான வேறு சில பணியாளர்களை அனுப்பினார். ஒருவரை நையப் புடைத்தார்கள்; ஒருவரைக் கொலை செய்தார்கள்; ஒருவரைக் கல்லால் எறிந்தார்கள். (ஆபேல் முதல் சக்கரியாவரை, மட்டுமின்றி, கடைசியாக வந்த யோவானும் கொல்லப்பட்டார்)
இறைமகன் இயேசுவின் புதிய உடன்படிக்கை
இன்னும் எஞ்சியிருந்தவர் ஒருவரே. அவர் அவருடைய அன்பு மகன். பின்பு திராட்சைத் தோட்ட உரிமையாளர், 'நான் என்ன செய்வேன்? என் அன்பு மகனை அனுப்புவேன். ஒருவேளை அவனை அவர்கள் மதிப்பார்கள்' என்று சொல்லிக்கொண்டார். இறுதியாக அவரை அவர்களிடம் அனுப்பினார். (இறைமகன் இயேசு திருச்சட்டத்தை நிறைவேற்றி, பாவமன்னிப்பின் புதிய உடன்படிக்கையை அறிவித்தார்)
தோட்டத் தொழிலாளர்கள் அவருடைய மகனைக் கண்டதும், 'இவன்தான் சொத்துக்கு உரியவன்; நாம் இவனைக் கொன்றுபோடுவோம். அப்போது சொத்து நம்முடையதாகும்' என்று ஒருவரோடு ஒருவர் பேசிக் கொண்டார்கள்.
எனவே அவர்கள் அவரைத் திராட்சைத் தோட்டத்திற்கு வெளியே தள்ளிக் கொன்று போட்டார்கள். (இறைமகன் இயேசுவையும் அவர்கள் எருசலேமுக்கு வெளியே கொல்வார்கள் என்று இயேசு அறிவித்தார்)
அப்படியானால் திராட்சைத் தோட்ட உரிமையாளர் அவர்களை என்ன செய்வார்? என இயேசு கேட்டார்.
இஸ்ரயேலரிடமிருந்து இறையாட்சி நீக்கப்பட்டது
அவர்கள் அவரிடம், "அத்தீயோரை ஈவிரக்கமின்றி ஒழித்து விடுவார்; உரிய காலத்தில் தமக்கு சேரவேண்டிய பங்கைக் கொடுக்க முன்வரும் வேறு தோட்டத் தொழிலாளர்களுக்கு அத்திராட்சைத் தோட்டத்தைக் குத்தகைக்கு விடுவார்" என்றார்கள்.
இறையாட்சி நீக்கப்பட்டது
இயேசு அவர்களிடம் "எனவே உங்களிடமிருந்து இறையாட்சி அகற்றப்படும்; அவ்வாட்சிக்கு ஏற்ற முறையில் செயல்படும் ஒரு மக்களினத்தார் அதற்கு உட்படுவர் என நான் உங்களுக்குச் சொல்கிறேன்" என்றார். (இறையாட்சி இஸ்ரயேலரிடமிருந்து நீக்ப்பட்டு,, புதிய உடன்படிக்கையின்படி பிறஇனத்து மக்களுக்கு அளிக்கப்படும்)
அப்போது அதைக் கேட்டுக்கொண்டிருந்தவர்கள், "ஐயோ! அப்படி நடக்கக் கூடாது". என்றார்கள்
கட்டுவோர் புறக்கணித்த மூலைக்கல்
ஆனால், இயேசு அவர்களைக் கூர்ந்து நோக்கி, 'கட்டுவோர் புறக்கணித்த கல்லே கட்டடத்துக்கு மூலைக்கல் ஆயிற்று' ஆண்டவரால் இது நிகழ்ந்துள்ளது; நம் கண்களுக்கு இது வியப்பாயிற்று!" என்று நீங்கள் மறைநூலில் ஒருபோதும் வாசித்தது இல்லையா? இதன் பொருள் என்ன? அந்தக் கல்லின்மேல் விழுகிற எவரும் நொறுங்கிப்போவார்; அது யார்மேல் விழுமோ அவரும் நசுங்கிப்போவார்" என்றார். (இஸ்ரயேலரால் புறக்கணிக்கப்பட்ட, இயேசுவே புதிய உடன்படிக்கையின் மூலைக்கல்லாக இருக்கிறார். இஸ்ரயேலர் இயேசுவின் தாழ்மையில் தடுக்கிவிழுந்து இறையாட்சியை இழந்தனர். மற்றவர்கள் இயேசுவின் நற்செய்தியால் தீர்ப்பளிக்கப்படுவார்கள்)
மறைநூல்-அறிஞர்களும் தலைமைக் குருக்களும் அவருடைய உவமைகளைக் கேட்டபோது, தங்களைக் குறித்தே அவர் இந்த உவமையைச் சொன்னார் என்பதை உணர்ந்து கொண்டு, அந்நேரமே இயேசுவைப் பிடிக்க வழிதேடினார்கள்;
ஆனால், மக்கள் கூட்டத்தினர் அவரை இறைவாக்கினர் என்று கருதியதால், அவர்களுக்கு அஞ்சினார்கள். ஆகவே அவரை விட்டு அகன்றார்கள்.
6. அழைப்புப் பெற்றவர்கள் பலர், தெரிந்தெடுக்கப்பட்டவர்களோ சிலர்
எருசலேம் கோவில் கிபி 33 செவ்வாய்
திருமண விருந்து (இயேசுவின் இறையாட்சி) உவமை
இயேசு மீண்டும் அவர்களைப் பார்த்து உவமைகள் வாயிலாகப் பேசியது: ’விண்ணரசைப் பின்வரும் நிகழ்ச்சிக்கு ஒப்பிடலாம்: அரசர் ஒருவர் தம் மகனுக்குத் திருமணம் நடத்தினார். ( இயேசுவே மணமகன், இறையாட்சியே திருமண விருந்து)
திருமணத்திற்கு அழைப்புப் பெற்றவர்களைக் கூட்டிக்கொண்டு வருமாறு அவர் தம் பணியாளர்களை அனுப்பினார். அவர்களோ வர விரும்பவில்லை. (அழைப்புப் பெற்ற இஸ்ரயேலருக்கு இயேசுவின் நற்செய்தியை ஏற்க்வில்லை. )
மீண்டும் அவர் வேறு பணியாளர்களிடம், ’நான் விருந்து ஏற்பாடு செய்திருக்கிறேன். காளைகளையும் கொழுத்த கன்றுகளையும் அடித்துச் சமையல் எல்லாம் தயாராயுள்ளது. திருமணத்திற்கு வாருங்கள்’ என அழைப்புப் பெற்றவர்களுக்குக் கூறுங்கள் என்று சொல்லி அனுப்பினார். (இயேசுவின் புதிய உடன்படிக்கையால் கிடைக்கும் பாவமன்னிப்பே திருமண விருந்து. இயேசுவின் சீடர்கள் அதை இஸ்ரயேலருக்கு அறிவித்தார்கள்.)
அழைப்புப் பெற்றவர்களோ அதைப் பொருட்படுத்தவில்லை. ஒருவர் தம் வயலுக்குச் சென்றார்; வேறு ஒருவர் தம் கடைக்குச் சென்றார். இயேசுவின் புதிய உடன்படிக்கையை பரிசேயரும், மறைநூல் அறிஞரும், மூப்பரும், தலைவர்களும் கேட்கவோ, ஏற்றுக்கொள்ளவோ விரும்பவில்லை
மற்றவர்களோ அவருடைய பணியாளர்களைப் பிடித்து இழிவுபடுத்திக் கொலை செய்தார்கள். (இஸ்ரயேலர்கள் இயேசுவையும் சீடர்களையும் கொலைசெய்தார்கள்)
அப்பொழுது அரசர் சினமுற்றுத் தம் படையை அனுப்பி அக்கொலையாளிகளைக் கொன்றொழித்தார். அவர்களுடைய நகரத்தையும் தீக்கிரையாக்கினார். (கிபி 70 ஆண்டு, எருசலேம் உரோமர்களால் அழிக்கப்பட்டது)
பிற இனத்தாருக்கு அழைப்பு
பின்னர் தம் பணியாளர்களிடம், ’திருமண விருந்து ஏற்பாடாகி உள்ளது. அழைக்கப் பெற்றவர்களோ தகுதியற்றுப் போனார்கள்.
எனவே நீங்கள் போய்ச் சாலையோரங்களில் காணும் எல்லாரையும் திருமண விருந்துக்கு அழைத்து வாருங்கள்’ என்றார். அந்தப் பணியாளர்கள் வெளியே சென்று, வழியில் கண்ட நல்லோர், தீயோர் யாவரையும் கூட்டி வந்தனர். (இயேசுவின் புதிய உடன்படிக்கை உலகிலுள்ள பிறஇனத்தார் அனைவருக்கும் அறிவிக்கப்பட்டது)
திருமண மண்டபம் விருந்தினரால் நிரம்பியது. (இயேசுவின் தீர்ப்புநாள்)
அரசர் விருந்தினரைப் பார்க்க வந்த போது அங்கே திருமண ஆடை அணியாத ஒருவனைக் கண்டார். அரசர் அவனைப் பார்த்து, ’தோழா, திருமண ஆடையின்றி எவ்வாறு உள்ளே வந்தாய்?’ என்று கேட்டார். அவனோ வாயடைத்து நின்றான். (இயேசுவின் புதிய உடன்படிக்கையை அறியாமலும், மனம்மாறாமலும் இருக்கும் வெளிவேடக்காரர் தீர்ப்புநாளில் திகைப்பார்கள்)
அப்போது அரசர் தம் பணியாளர்களிடம், ’அவனுடைய காலையும் கையையும் கட்டிப் புறம்பே உள்ள இருளில் தள்ளுங்கள். அங்கே அழுகையும் அங்கலாய்ப்பும் இருக்கும்’ என்றார். இவ்வாறு அழைப்புப் பெற்றவர்கள் பலர், ஆனால் தெரிந்தெடுக்கப்பட்டவர்களோ சிலர். (வெளிவேடக்காரர் நிலைவாழ்வை இழப்பர்.)
7. இயேசுவைக் கொல்ல பரிசேயரின் சூழ்ச்சி
எருசலேம் கோவில் கிபி 33 செவ்வாய்
சீசருக்கு நாம் கப்பம் கட்டுவது முறையா?
பின்பு பரிசேயர்கள் போய், எப்படி இயேசுவைப் பேச்சில் சிக்கவைக்கலாமெனச் சூழ்ச்சி செய்தார்கள். ஆகவே அவர்கள் இயேசுவைக் கூர்ந்து கவனித்துக்கொண்டே இருந்தார்கள்; அவரை ஆளுநரின் ஆட்சிஅதிகாரத்திற்கு ஒப்புவிப்பதே அவர்கள் நோக்கமாய் இருந்தது.
நேர்மையாளர்போன்று நடித்து, பேச்சில் இயேசுவைச் சிக்கவைக்க, ஏரோதியர் சிலரை தங்கள் சீடருடன் ஒற்றர்களாக அனுப்பி வைத்தார்கள்;
ஒற்றர்கள் அவரிடம், "போதகரே, நீர் சொல்வதும் கற்பிப்பதும் சரியே. நீர் ஆள்பார்த்துச் செயல்படாதவர்; கடவுளின் நெறியை உண்மைக்குஏற்பக் கற்பிப்பவர் என்பது எங்களுக்குத் தெரியும். சீசருக்கு நாம் கப்பம் கட்டுவது முறையா இல்லையா? நாங்கள் செலுத்தவா, வேண்டாமா?" நீர் என்ன நினைக்கிறீர் என எங்களுக்குச் சொல்லும்" என்று கேட்டார்கள்;
இயேசு அவர்களுடைய சூழ்ச்சியையும் தீய நோக்கத்தையும் தெளிவாகப் புரிந்துகொண்டு அவர்களிடம், "வெளிவேடக்காரரே, ஏன் என்னைச் சோதிக்கிறீர்கள்? வரிகொடுப்பதற்கான நாணயம் ஒன்றை எனக்குக் காட்டுங்கள்" என்றார்.
அவர்கள் ஒரு தெனாரியத்தை அவரிடம் கொண்டுவந்தார்கள்.
இயேசு அவர்களிடம், இதில் பொறிக்கப்பட்டுள்ள உருவமும் எழுத்தும் யாருடையவை?" என்று கேட்டார். அவர்கள், "சீசருடையவை" என்றார்கள்.
அவர் அவர்களை நோக்கி, "அப்படியானால், சீசருக்கு உரியவற்றைச் சீசருக்கும், கடவுளுக்கு உரியவற்றைக் கடவுளுக்கும் கொடுங்கள்" என்று சொன்னார்.
இதைக்கேட்ட அவர்கள் வியப்புற்றுப் பேசாதிருந்தார்கள். மக்கள் முன்னிலையில் இயேசுவின் பேச்சில் அவர்களால் குற்றம் காண இயலவில்லை; அவரை விட்டுப் போய்விட்டார்கள்.
எழுவருள் யாருக்கு அவள் மனைவி?
அதே நாளில், உயிர்த்தெழுதலை மறுக்கும் சில சதுசேயர் இயேசுவை அணுகி, "போதகரே, மணமான ஒருவர் மகப்பேறின்றி இறந்துபோனால், அவர் மனைவியைக் கொழுந்தனே மனைவியாக ஏற்றுக்கொண்டு, தம் சகோதரருக்கு வழிமரபு உருவாக்கவேண்டும் என்று மோசே எழுதி வைத்துள்ளார்.
இங்கு எங்களிடையே சகோதரர் எழுவர் இருந்தனர். மூத்தவர் ஒரு பெண்ணை மணந்து மகப்பேறின்றி இறந்தார். இரண்டாமவர் அவரை மணந்து அவரும் மகப்பேறின்றி இறந்ததார், மூன்றாமவருக்கும் அவ்வாறே நிகழ்ந்தது. இவ்வாறே எழுவரும் மகப்பேறின்றி இறந்தனர்; கடைசியாக அப்பெண்ணும் இறந்தார்.
அப்படியானால் உயிர்த்தெழும்போது அவர் அவர்களுள் யாருக்கு மனைவி ஆவார்? ஏனெனில் எழுவரும் அவரை மனைவியாகக் கொண்டிருந்தனரே?" என்று கேட்டனர்.
அதற்கு இயேசு அவர்களிடம், "உங்களுக்கு மறைநூலும் தெரியாது, கடவுளின் வல்லமையும் தெரியாது. இதனால்தான் தவறான கருத்தைக் கொண்டிருக்கிறீர்கள்.
"இக்கால வாழ்வில் மக்கள் திருமணம் செய்துகொள்கின்றனர். ஆனால் வருங்கால வாழ்வைப்பெறத் தகுதிபெற்ற யாரும், இறந்து உயிர்த்தெழும்போது திருமணம் செய்துகொள்வதில்லை. இனி அவர்கள் சாகமுடியாது; அவர்கள் வானதூதரைப்போல் இருப்பார்கள். உயிர்த்தெழுந்த மக்களாய் இருப்பதால் அவர்கள் கடவுளின் மக்களே.
இறந்தோர் உயிருடன் எழுப்பப்படுவதைப்பற்றி மோசே முட்புதர் பற்றிய பகுதியில் எடுத்துக் கூறியிருக்கிறாரே, அங்கு அவர், ஆண்டவரை, 'ஆபிரகாமின் கடவுள், ஈசாக்கின் கடவுள், யாக்கோபின் கடவுள்' என்று கூறியிருக்கிறார். அவர் இறந்தோரின் கடவுள் அல்ல; மாறாக, வாழ்வோரின் கடவுள். ஏனெனில் அவரைப் பொறுத்தமட்டில் அனைவரும் உயிருள்ளவர்களே" என்றார்.
மறைநூல்அறிஞருள் சிலர் அவரைப் பார்த்து, "போதகரே, நன்றாகச் சொன்னீர்" என்றனர். அவருடைய போதனையைக் கேட்ட கூட்டத்தினர் வியப்பில் ஆழ்ந்து போயினர்.
அனைத்திலும் முதன்மையான கட்டளை எது?
இயேசு சதுசேயரை வாயடைக்கச் செய்தார் என்பதைக் கேள்விப்பட்ட பரிசேயர் ஒன்றுகூடி, அவரிடம் வந்தனர். அவர்களிடையே இருந்த மறைநூல்-அறிஞருள் ஒருவர், அவர்கள் வாதாடிக்கொண்டிருப்பதைக் கேட்டுக்கொண்டிருந்தார்.
இயேசு அவர்களுக்கு நன்கு பதில் கூறிக்கொண்டிருந்ததைக் கண்டு, அவரைச் சோதிக்கும் நோக்கத்துடன், ’போதகரே, திருச்சட்டநூலில், ’அனைத்திலும் முதன்மையான கட்டளை எது?’ என்று கேட்டார்.
அனைத்திற்கும் மேலான கட்டளை
அதற்கு இயேசு, ’இஸ்ரயேலே கேள். நம் ஆண்டவராகிய கடவுள் ஒருவரே ஆண்டவர். உன் முழு இதயத்தோடும், முழு உள்ளத்தோடும், முழு மனத்தோடும், முழு ஆற்றலோடும் உன் ஆண்டவராகிய கடவுளிடம் அன்புகூர்வாயாக’ என்பது தலைசிறந்த முதன்மையான கட்டளை.
’உன்மீது நீ அன்புகூர்வதுபோல் உனக்கு அடுத்திருப்பவர் மீதும் அன்புகூர்வாயாக’ என்பது இதற்கு இணையான இரண்டாவது கட்டளை. திருச்சட்டநூல் முழுமைக்கும், இறைவாக்கு நூல்களுக்கும் இவ்விரு கட்டளைகளே அடிப்படையாக அமைகின்றன. இவற்றைவிட மேலான கட்டளை வேறு எதுவும் இல்லை’ என்றார்.’
அதற்கு மறைநூல்அறிஞர் அவரிடம், ’நன்று போதகரே, ’கடவுள் ஒருவரே; அவரைத்தவிர வேறு ஒரு கடவுள் இல்லை’ என்று நீர் கூறியது உண்மையே. அவரிடம் முழு இதயத்தோடும், முழு அறிவோடும், முழு ஆற்றலோடும் அன்பு செலுத்துவதும், தன்னிடம் அன்புகொள்வதுபோல் அடுத்திருப்பவரிடம் அன்புசெலுத்தவதும் எரிபலிகளையும், வேறுபலிகளையும்விட மேலானது’ என்று கூறினார்.
அவர் அறிவுத்திறனோடு பதிலளித்ததைக் கண்ட இயேசு அவரிடம், ’நீர் இறையாட்சியினின்று தொலையில் இல்லை’ என்றார். அதன்பின் எவரும் அவரிடம் எதையும் கேட்கத் துணியவில்லை.
தாவீதின் தலைவரே தாவீதின் மகனாக வந்த இயேசு
பரிசேயர் ஒன்றுகூடி வந்தபோது, இயேசுவும் அவர்களைப் பார்த்து கேள்வி கேட்கத் தொடங்கினார். அவர், ’மெசியாவைப்பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்? அவர் யாருடைய மகன்?’ என்று கேட்டார்.
அவர்கள், ’தாவீதின் மகன்’ என்று பதிலளித்தார்கள்.
இயேசு அவர்களிடம், ’அப்படியானால் தாவீது, தூயஆவியின் தூண்டுதலால், அவரைத் தலைவர் என அழைப்பது எப்படி? ஏனென்றால், திருப்பாடல்கள் நூலில், ’ஆண்டவர் என் தலைவரிடம், ’நான் உம் பகைவரை உமக்கு அடிபணிய வைக்கும்வரை நீர் என் வலப்பக்கம் வீற்றிரும்!’ என்று உரைத்தார் என, அவரே கூறியுள்ளார் அல்லவா!
எனவே, தாவீது அவரைத் தலைவர் என அழைப்பதால், அவர் அவருக்கே மகனாய் இருப்பது எப்படி?' என்று கேட்டார்.
அப்போது பெருந்திரளான மக்கள் இயேசு கூறியவற்றை மனமுவந்து கேட்டுக்கொண்டிருந்தார்கள். அதற்கு எவரும் ஒரு வார்த்தைகூட மறுமொழியாகக் கூற இயலவில்லை.
அந்நாள்முதல் அவரிடம் எவரும் எதுவும் கேட்கத் துணியவில்லை.
8. வெளிவேடக்காரரே, ஐயோ! உங்களுக்குக் கேடு
பரிசேயரின் நடிப்பு எருசலேம் கோவில் கிபி 33 செவ்வாய்
பின்பு இயேசு மக்கள் கூட்டத்தையும் தம் சீடரையும் பார்த்துக் கூறியது: ’மறைநூல் அறிஞரும் பரிசேயரும் மோசேயின் அதிகாரத்தைக் கொண்டிருக்கின்றனர். ஆகவே, அவர்கள் என்னென்ன செய்யும்படி உங்களிடம் கூறுகிறார்களோ அவற்றையெல்லாம் கடைப்பிடித்து நடந்துவாருங்கள். ஆனால் அவர்கள் செய்வதுபோல நீங்கள் செய்யாதீர்கள். ஏனெனில், அவர்கள் சொல்வார்கள்; செயலில் காட்டமாட்டார்கள்.
சுமத்தற்கரிய பளுவான சுமைகளைக் கட்டி மக்களின் தோளில் அவர்கள் வைக்கிறார்கள்; ஆனால், அவர்கள் தங்கள் விரலால் தொட்டு அசைக்கக்கூட முன்வரமாட்டார்கள்.
தாங்கள் செய்வதெல்லாம் மக்கள் பார்க்கவேண்டும் என்றே அவர்கள் செய்கிறார்கள்; அவர்கள் தொங்கல்ஆடை அணிந்து நடமாடுவதை விரும்புகிறார்கள்; தங்கள் மறைநூல்வாசகப் பட்டைகளை அகலமாக்குகிறார்கள்; அங்கியின் குஞ்சங்களைப் பெரிதாக்குகிறார்கள்.
விருந்துகளில் முதன்மையான இடங்களையும், தொழுகைக் கூடங்களில் முதன்மையான இருக்கைகளையும் விரும்புகின்றார்கள்; நீண்டநேரம் இறைவனிடம் வேண்டுவதுபோல் நடிக்கிறார்கள். கைம்பெண்களின் வீடுகளைப் பிடுங்கிக்கொள்கிறார்கள்;
சந்தைவெளிகளில் மக்கள் தங்களுக்கு வணக்கம் செலுத்துவதையும், ’ரபி’ என அழைப்பதையும் விரும்புகிறார்கள். கடுந்தண்டனைத் தீர்ப்புக்கு ஆளாகவிருப்பவர்கள் அவர்களே’ என்றார்.
நீங்கள் போதகரென்றும், ஆசிரியரென்றும் அழைக்கப்படாதீர்
ஆனால், நீங்கள் ’ரபி’ என அழைக்கப்பட வேண்டாம். ஏனெனில் உங்களுக்குப் போதகர் ஒருவரே. நீங்கள் யாவரும் சகோதரர், சகோதரிகள்.
இம்மண்ணுலகில் உள்ள எவரையும் தந்தைஎன நீங்கள் அழைக்கவேண்டாம். ஏனெனில், உங்கள் தந்தை ஒருவரே. அவர் விண்ணகத்தில் இருக்கிறார்.
நீங்கள் ஆசிரியர் எனவும் அழைக்கப்பட வேண்டாம். ஏனெனில் கிறிஸ்து ஒருவரே உங்கள் ஆசிரியர்.
உங்களுள் பெரியவர் உங்களுக்குத் தொண்டராக இருக்கவேண்டும். தம்மைத்தாமே உயர்த்துகிறவர் எவரும் தாழ்த்தப்பெறுவர். தம்மைத்தாமே தாழ்த்துகிறவர் எவரும் உயர்த்தப்பெறுவர். ’
விண்ணக வாயிலை அடைத்துவிடுகிறீர்கள்
வெளிவேடக்கார மறைநூல் அறிஞரே, பரிசேயரே, ஐயோ! உங்களுக்குக் கேடு!
மக்கள் நுழையாதவாறு, அவர்கள் முன்பாக விண்ணகவாயிலை அடைத்துவிடுகிறீர்கள்; நீங்கள் நுழைவதில்லை, நுழைவோரையும் விடுவதில்லை;
புதியவரையும் கெடுத்துவிடுகிறீர்
’வெளிவேடக்கார மறைநூல் அறிஞரே, பரிசேயரே, ஐயோ! உங்களுக்குக் கேடு! ஒருவரையாவது உங்கள் சமயத்தில் சேர்ப்பதற்கு, நாடு-என்றும் கடல்-என்றும் பாராது சுற்றி அலைகின்றீர்கள்; அவ்வாறு சேர்த்தபின், அவரை உங்களைவிட இருமடங்கு நரகத் தண்டனைக்கு ஆளாக்குகிறீர்கள்.
பொன்னே உங்கள் கடவுள்
’குருட்டு வழிகாட்டிகளே, ஐயோ! உங்களுக்குக் கேடு! யாராவது திருக்கோவிலின்மீது ஆணையிட்டால் ஒன்றுமில்லை; ஆனால், அவர் கோவிலின் பொன்மீது ஆணையிட்டால், அதை நிறைவேற்றக் கடமைப்பட்டவர் என்கிறீர்கள். குருட்டு மடையரே! எது சிறந்தது? பொன்னா? பொன்னைத் தூயதாக்கும் திருக்கோவிலா?
காணிக்கையே உங்களுக்கு பெரிது
யாராவது பலிபீடத்தின்மீது ஆணையிட்டால் ஒன்றுமில்லை; ஆனால், அவர் அதில்படைக்கப்பட்ட காணிக்கையின்மீது ஆணையிட்டால் அதை நிறைவேற்றக் கடமைப்பட்டவர் என்கிறீர்கள். குருடரே! எது சிறந்தது? காணிக்கையா? காணிக்கையைத் தூயதாக்கும் பலிபீடமா?
எனவே, பலிபீடத்தின்மீது ஆணையிடுகிறவர், அதன்மீதும், அதன்மேலுள்ள அனைத்தின்மீதும் ஆணையிடுகிறார். திருக்கோவிலின்மீது ஆணையிடுகிறவர், அதன்மீதும், அதில் குடிகொண்டிருக்கிறவர்மீதும் ஆணையிடுகிறார். வானத்தின் மீது ஆணையிடுகிறவர், கடவுளின் அரியணைமீதும், அதில் வீற்றிருக்கிற கடவுள்மீதும் ஆணையிடுகிறார்.
கொசுவை வடிகட்டிவிட்டு ஒட்டகத்தையோ விழுங்குகிறீர்
’வெளிவேடக்கார மறைநூல் அறிஞரே, பரிசேயரே, ஐயோ! உங்களுக்குக் கேடு! நீங்கள் புதினா, சோம்பு, சீரகம் ஆகியவற்றில் பத்தில் ஒரு பங்கைப் படைக்கிறீர்கள். ஆனால், திருச்சட்டத்தின் முக்கிய போதனைகளாகிய நீதி, இரக்கம், நம்பிக்கை ஆகியவற்றைக் கடைப்பிடிக்காமல் விட்டுவிடுகிறீர்கள். இவற்றைக் கண்டிப்பாய்க் கடைப்பிடிக்க வேண்டும். அவற்றையும் விட்டுவிடக்கூடாது.
குருட்டு வழிகாட்டிகளே! நீங்கள் பருகும்போது கொசுவை வடிகட்டி அகற்றுகிறீர்கள். ஆனால், ஒட்டகத்தையோ விழுங்கிவிடுகிறீர்கள்.
உடல் சுத்தம், உள்ளமோ கேடு
’வெளிவேடக்கார மறைநூல் அறிஞரே, பரிசேயரே, ஐயோ! உங்களுக்குக் கேடு! ஏனெனில், நீங்கள் கிண்ணத்தையும் தட்டையும் வெளிப்புறத்தில் தூய்மையாக்குகிறீர்கள். ஆனால், அவற்றின் உட்புறத்தையோ கொள்ளைப் பொருள்களாலும், தன்னல விருப்புகளாலும் நிரப்புகிறீர்கள். குருட்டுப் பரிசேயரே, முதலில் கிண்ணத்தின் உட்புறத்தைத் தூய்மையாக்குங்கள். அப்பொழுது அதன் வெளிப்புறமும் தூய்மையாகும்.
வெளிவேடக்கார மறைநூல் அறிஞரே, பரிசேயரே, ஐயோ! உங்களுக்குக் கேடு! ஏனெனில், நீங்கள் வெள்ளையடித்த கல்லறைகளுக்கு ஒப்பானவர்கள். அவை புறம்பே அழகாகத் தோற்றமளிக்கின்றன; அவற்றின் உள்ளேயோ இறந்தவர்களின் எலும்புகளும், எல்லாவகையான அழுக்குகளும் நிறைந்திருக்கின்றன. அவ்வாறே, நீங்களும், வெளியே மக்களுக்கு நேர்மையாளராய்த் தோற்றமளிக்கிறீர்கள். ஆனால் உள்ளேயோ போலித்தனமும், நெறிகேடும் நிறைந்தவர்களாய் இருக்கிறீர்கள்.
கொல்வதும் பின்னர் கும்பிடுவதுமே உங்கள் வழக்கம்
’வெளிவேடக்கார மறைநூல் அறிஞரே, பரிசேயரே, ஐயோ! உங்களுக்குக் கேடு! ஏனெனில், நீங்கள் இறைவாக்கினர்களின் கல்லறைகளைக் கட்டுகிறீர்கள்; நேர்மையாளரின் நினைவுச் சின்னங்களை அழகுப்படுத்துகிறீர்கள்; ’எங்கள் மூதாதையர் காலத்தில் நாங்கள் இருந்திருந்தால் இறைவாக்கினர்களின் கொலைக்கு உடந்தையாக இருந்திருக்க மாட்டோம்’ என்கிறீர்கள். இவ்வாறு, நீங்கள் இறைவாக்கினரைக் கொன்றவர்களின் வழிமரபினர் என்பதற்கு நீங்களே சாட்சிகள். உங்கள் மூதாதையர் செய்த கொடுமையின் அளவுக்கு நீங்களும் செய்துமுடியுங்கள்.
நேர்மையாளரின் இரத்தப்பழி
பாம்புகளே, விரியன் பாம்புக் குட்டிகளே, நரகத் தண்டனையிலிருந்து நீங்கள் எப்படித் தப்பித்துக்கொள்வீர்கள்? எனவே இதைக் கேளுங்கள். நான் உங்களிடையே இறைவாக்கினரையும், ஞானிகளையும், மறைநூல் அறிஞர்களையும் அனுப்புகிறேன். இவர்களுள் சிலரை நீங்கள் கொல்வீர்கள்; சிலரைச் சிலுவையில் அறைவீர்கள்; சிலரை உங்கள் தொழுகைக்கூடங்களில் சாட்டையால் அடிப்பீர்கள்; நகரங்கள்தோறும் அவர்களைத் துரத்தித் துன்புறுத்துவீர்கள்.
இவ்வாறு, நேர்மையாளரான ஆபேலின் இரத்தம்முதல், திருக்கோவிலுக்கும் பலிபீடத்திற்கும் நடுவே நீங்கள் கொன்ற பரக்கியாவின் மகன் சக்கரியாவின் இரத்தம்வரை, இம்மண்ணில் சிந்தப்பட்ட நேர்மையாளர் அனைவரின் இரத்தப்பழியும் உங்கள்மேல் வந்துசேரும். இத்தலைமுறையினரே இத் தண்டனைகள் அனைத்தையும் அடைவர் என உறுதியாக உங்களுக்குச் சொல்கிறேன்.
எருசலேம் பாழடையும்
’எருசலேமே, எருசலேமே, இறைவாக்கினரைக் கொல்லும் நகரே, உன்னிடம் அனுப்பப்பட்டோரைக் கல்லால் எறிகிறாயே.
கோழி, தன் குஞ்சுகளைத் தன் இறக்கைக்குள் கூட்டிச்சேர்ப்பதுபோல, நானும் உன் மக்களை அரவணைத்துக்கொள்ள எத்தனையோமுறை விரும்பினேன். உனக்கு விருப்பமில்லையே!
இதோ! உங்கள் இறைஇல்லம் கைவிடப்பட்டுப் பாழடையும். எனவே, இதுமுதல், ’ஆண்டவரின் பெயரால் வருபவர் ஆசிபெற்றவர்!’ என நீங்கள் கூறும்வரை என்னைக் காணமாட்டீர்கள் என்று நான் உங்களுக்குச் சொல்கிறேன்.
9. ஏழைக் கைம்பெண்ணின் காணிக்கை
எருசலேம் கோவில் கிபி 33 செவ்வாய்
இயேசு காணிக்கைப்பெட்டிக்கு எதிராக அமர்ந்துகொண்டு, மக்கள் அதில் செப்புக்காசு போடுவதை உற்று நோக்கிக்கொண்டிருந்தார். இயேசு நிமிர்ந்து பார்த்தபோது, செல்வர்கள் பலர் மிகுதியாகத் தங்கள் காணிக்கைகளைக் காணிக்கைப் பெட்டிக்குள் போடுவதைக் கண்டார்.
வறுமையில் வாடிய ஓர் ஏழைக் கைம்பெண், ஒரு கொதிராந்துக்கு இணையான இரண்டு காசுகளை அதில் போட்டார். அப்பொழுது, அவர் தம் சீடரை வரவழைத்து, ’இந்த ஏழைக் கைம்பெண், காணிக்கைப் பெட்டியில் காசுபோட்ட மற்ற எல்லாரையும்விட, மிகுதியாகப் போட்டிருக்கிறார் என உறுதியாக உங்களுக்குச் சொல்கிறேன்.
ஏனெனில், அவர்கள் அனைவரும், தங்களுக்கு இருந்த மிகுதியான செல்வத்திலிருந்து காணிக்கை போட்டனர்.
இவரோ, தமக்குப் பற்றாக்குறை இருந்தும், தம்மிடம் இருந்த அனைத்தையுமே, ஏன், தம் பிழைப்புக்காக வைத்திருந்த எல்லாவற்றையுமே போட்டுவிட்டார்' என்று அவர்களிடம் கூறினார்.
10. எருசலேம் மிதிக்கப்படும்
எருசலேம் கோவிலின் அழிவு
இயேசு கோவிலைவிட்டு வெளியே சென்றுகொண்டிருந்தபோது, அவருடைய சீடர்கள், கோவில் கட்டடங்களை அவருக்குக் காட்ட, அவரை அணுகிவந்தார்கள்.
கவின்மிகு கற்களாலும், நேர்ச்சைப் பொருள்களாலும் கோவில் அழகுபடுத்தப்பட்டிருக்கிறது என்று சிலர் பேசிக்கொண்டிருந்தனர்.
அவருடைய சீடருள் ஒருவர், ’போதகரே, எத்தகைய கற்கள்! எத்தகைய கட்டடங்கள்! பாரும்’ என்று அவரிடம் சொல்ல, இயேசு அவரை நோக்கி, ’இந்த மாபெரும் கட்டடங்களைப் பார்க்கிறீர் அல்லவா. ஒரு காலம் வரும்; அப்போது இங்கே கற்கள் ஒன்றின் மேல் ஒன்று இராதபடி இவையெல்லாம் இடிக்கப்படும் என உறுதியாக உங்களுக்குச் சொல்கிறேன்’ என்றார்.
சீடர்களின் கேள்வி
இயேசு, கோவிலுக்கு எதிராக உள்ள ஒலிவமலைமீது அமர்ந்திருந்தபோது, பேதுரு, யாக்கோபு, யோவான், அந்திரேயா ஆகிய இயேசுவின் சீடர்கள், அவரிடம் தனியாக வந்து, ’போதகரே, நீர் கூறியவை எப்போது நிகழும்?
‘இவையனைத்தும் நிறைவேறப்போகும் காலத்திற்கான அறிகுறி என்ன?
உமது வருகைக்கும் உலக முடிவுக்கும் அறிகுறி என்ன? எங்களுக்குச் சொல்லும்’ என்று கேட்டார்கள்.
எருசலேம் அழிவு முன்னறிவிப்பு
அதற்கு இயேசு கூறியது: ‘எருசலேமைப் படைகள் சூழ்ந்திருப்பதை நீங்கள் காணும்போது, அதன் அழிவு நெருங்கி வந்துவிட்டது என அறிந்துகொள்ளுங்கள். இறைவாக்கினர் தானியேல் உரைத்த, 'நடுங்கவைக்கும் தீட்டு’ நிற்கக்கூடாத இடத்தில், திருவிடத்தில், நிற்பதை நீங்கள் காண்பீர்கள். அப்பொழுது, இதைப்படிப்பவர் புரிந்துகொள்ளட்டும்’.
அப்போது யூதேயாவில் உள்ளவர்கள் மலைகளுக்குத் தப்பி ஓடட்டும். நகரத்தின் நடுவில் உள்ளவர்கள் வெளியேறட்டும்; நாட்டுப்புறங்களில் இருப்பவர்கள் நகரத்துக்குள்ளே வரவேண்டாம். வயலில் இருப்பவர் தம் மேலுடையை எடுக்கத் திரும்பி வரவேண்டாம். வீட்டின் மேல்தளத்தில் இருப்பவர் கீழே இறங்க வேண்டாம்; தம் வீட்டினின்று எதையும் எடுக்க அதில் நுழையவும் வேண்டாம்.
ஏனெனில், மண்ணுலகின்மீது பேரிடரும், அம்மக்கள் மீது கடவுளின் சினமும் வரும். ஏனெனில், அவை பழிவாங்கும் நாள்கள். அப்போது, மறைநூலில் எழுதியுள்ள யாவும் நிறைவேறும். அந்நாள்களில் கருவுற்றிருப்போர், பாலூட்டுவோர் ஆகியோரின் நிலைமை அந்தோ பரிதாபம்!
அந்நாள்கள் குறைக்கப்படாவிட்டால் எவரும் தப்பிப் பிழைக்கமுடியாது. ஆனால், தாம் தேர்ந்துகொண்டவர்களின் பொருட்டு கடவுள் அந்நாள்களைக் குறைத்திருக்கிறார்.
குளிர்காலத்திலோ, ஓய்வு நாளிலோ நீங்கள் ஓடவேண்டிய நிலை ஏற்படாதிருக்க இறைவனிடம் வேண்டுங்கள். ஏனெனில், அப்போது பெரும் வேதனை உண்டாகும். உலகத் தோற்றமுதல் இந்நாள்வரை இத்தகைய துன்பம் உண்டானதில்லை; இனிமேலும் உண்டாகப்போவதில்லை.
அவர்கள் கூரான வாளால் வீழ்த்தப்படுவார்கள்; எல்லா நாடுகளுக்கும் சிறைப்பிடித்துச் செல்லப்படுவார்கள்; பிறஇனத்தார் காலம் நிறைவு பெறும்வரை எருசலேம் அவர்களால் மிதிக்கப்படும்.
11. உலக முடிவு - மானிடமகனின் வருகை
நிறைவுகாலப் பொழிவு ஒலிவமலை கிபி 33 செவ்வாய்
போலி இறைவாக்கினர்கள்
இயேசு சீடரிடம், "நீங்கள் ஏமாறாதவாறும், உங்களை யாரும் நெறிதவறச் செய்யாதவாறும் பார்த்துக்கொள்ளுங்கள்; ஏனெனில் போலிமெசியாக்களும், போலிஇறைவாக்கினர்களும் தோன்றி, தேர்ந்து கொள்ளப்பட்டவர்களையே நெறிதவறச் செய்ய, பெரும் அடையாளங்களையும் அருஞ்செயல்களையும் செய்வார்கள். நெறிகேடு பெருகுவதால் பலருடைய அன்பு தணிந்துபோகும். நீங்களோ கவனமாயிருங்கள்.அவர்கள் பின்னே போகாதீர்கள்.
ஆகையால் எவராவது உங்களிடம் வந்து, ’அதோ, பாலைநிலத்தில் இருக்கிறார்’ என்றால், அங்கே போகாதீர்கள்; ’இதோ, உள்ளறையில் இருக்கிறார்’ என்றால், நம்பாதீர்கள். ஏனெனில், மின்னல் கிழக்கில்தோன்றி மேற்குவரை ஒளிர்வதுபோல மானிடமகனின் வருகையும் இருக்கும். பிணம் எங்கேயோ அங்கே கழுகுகள் கூடும்.
மேலும் அவர் அவர்களிடம் தொடர்ந்து கூறியது: நாட்டை எதிர்த்து நாடும், அரசை எதிர்த்து அரசும் எழும். பெரிய நிலநடுக்கங்களும், பல இடங்களில் பஞ்சமும் கொள்ளை நோயும் ஏற்படும்; அச்சுறுத்தக்கூடிய பெரிய அடையாளங்களும் வானில் தோன்றும். இவையனைத்தும் பேறுகால வேதனைகளின் தொடக்கமே. திகிலுறாதீர்கள் ஏனெனில், இவை முதலில் நிகழத்தான் வேண்டும். ஆனால், உடனே முடிவு வராது" என்றார்.
மன உறுதியுடன் வாழ்வைக் காத்துக்கொள்ளுங்கள்
இவை அனைத்தும் நடந்தேறுமுன், அவர்கள் உங்களைப் பிடித்துத் துன்புறுத்துவார்கள்; யூதச் சங்கங்களிடம் ஒப்புவிப்பார்கள்; தொழுகைக்கூடங்களுக்குக் கொண்டுசென்று உங்களை நையப் புடைப்பார்கள்;; சிறையில் அடைப்பார்கள்; என் பெயரின்பொருட்டு அரசரிடமும், ஆளுநரிடமும் இழுத்துச் செல்வார்கள். எனக்குச் சான்றுபகர இவை உங்களுக்கு வாய்ப்பளிக்கும்.
அப்போது என்ன பதில் அளிப்பது? என முன்னதாகவே நீங்கள் கவலைப்பட வேண்டாம். இதை உங்கள் மனத்தில் வைத்துக்கொள்ளுங்கள். ஏனெனில், நானே உங்களுக்கு நாவன்மையையும் ஞானத்தையும் கொடுப்பேன்; உங்கள் எதிரில் எவராலும் உங்களை எதிர்த்து நிற்கவும், எதிர்த்துப் பேசவும் முடியாது.
ஆனால், உங்கள் பெற்றோரும், சகோதரர் சகோதரிகளும், உறவினர்களும், நண்பர்களும் உங்களைக் காட்டிக்கொடுப்பார்கள்; உங்களுள் சிலரைக் கொல்வார்கள். என்பெயரின் பொருட்டு, எல்லாரும் உங்களை வெறுப்பார்கள். அப்பொழுது பலர் நம்பிக்கையை இழந்துவிடுவர்.
இருப்பினும், உங்கள் தலைமுடி ஒன்றுகூட விழவே விழாது. நீங்கள் மனஉறுதியோடு இருந்து உங்கள் வாழ்வைக் காத்துக்கொள்ளுங்கள். இறுதிவரை மனஉறுதியுடன் இருப்பவரே மீட்புப் பெறுவர்.
உலகமெங்கும் உள்ள எல்லா மக்களினத்தாரும் ஏற்றுக்கொள்ளுமாறு விண்ணரசைப்பற்றிய இந்நற்செய்தி உலகமெங்கும் அறிவிக்கப்படும். அதன் பின்பு முடிவு வரும்.
மானிடமகனின் வருகை ஒலிவமலை கிபி 33 செவ்வாய்
"துன்பநாள்கள் முடிந்தஉடனே, கதிரவனிலும், நிலாவிலும், விண்மீன்களிலும் அடையாளங்கள் தென்படும். கதிரவன் இருண்டுவிடும்; நிலா ஒளிகொடாது. விண்மீன்கள் வானத்திலிருந்து விழுந்தவண்ணமிருக்கும்.
மண்ணுலகிலுள்ள மக்களினங்கள், கடலின் கொந்தளிப்பின் முழக்கத்தினால் கலங்கி, என்ன செய்வதென்று தெரியாது குழப்பம் அடைவார்கள். உலகிற்கு என்ன நேருமோ என எண்ணி, மனிதர் அச்சத்தினால் மயக்கமுறுவர். ஏனெனில், வான்வெளிக் கோள்கள் அதிரும்.
அப்போது, மிகுந்த வல்லமையோடும், மாட்சியோடும், மானிடமகன் மேகங்கள்மீது வருவதை அவர்கள் காண்பார்கள். பின்பு, அவர் தம் தூதரைப் பெரிய எக்காளத்துடன் அனுப்புவார். அவர்கள், உலகின் ஒருகோடியிலிருந்து, மறுகோடிவரை, நான்கு திசைகளிலிருந்தும், தேர்ந்துகொள்ளப்பட்டவர்களைக் கூட்டிச் சேர்ப்பார்.
இவை நிகழத் தொடங்கும்போது, நீங்கள் தலைநிமிர்ந்து நில்லுங்கள்; ஏனெனில் உங்கள் மீட்பு நெருங்கி வருகின்றது."
அத்தி மர உவமை
இயேசு அவர்களுக்கு மேலும் ஓர் உவமை சொன்னார்: "அத்தி மரத்தையும், வேறு எந்த மரத்தையும் பாருங்கள். அவை தளிர்விடும்போது, அதைப் பார்க்கும் நீங்களே கோடைக்காலம் நெருங்கிவிட்டது என அறிந்துகொள்கிறீர்கள். அவ்வாறே, இவை நிகழ்வதைக் காணும்போது, மானிடமகன் கதவை நெருங்கி வந்துவிட்டார் என்பதையும், இறையாட்சி நெருங்கி வந்துவிட்டது என்பதையும் நீங்கள் அறிந்து கொள்ளுங்கள்.
இவை அனைத்தும் நிகழும்வரை, இத்தலைமுறை ஒழிந்து போகாது என நான் உறுதியாக உங்களுக்குச் சொல்கிறேன். விண்ணும் மண்ணும் ஒழிந்துபோகும். ஆனால் என் வார்த்தைகள் ஒழியவே மாட்டா.
12. விழிப்பாயிருங்கள் - நினையாத நேரத்தில் மானிடமகன் வருவார்
கவனமாயிருங்கள்
ஆனால், மானிடமகன் வரும் நாளையும், வேளையையும் பற்றித் தந்தைக்குத் தவிர, வேறு எவருக்கும் தெரியாது; விண்ணகத்திலுள்ள தூதருக்கோ, மகனுக்கோ-கூடத் தெரியாது. கவனமாயிருங்கள், விழிப்பாயிருங்கள்.
நோவாவின் காலத்தில் இருந்ததுபோலவே மானிடமகன் வருகையின்போதும் இருக்கும். வெள்ளப்பெருக்குக்கு முந்தைய காலத்தில், நோவா பேழைக்குள் சென்ற நாள்வரை, எல்லாரும் திருமணம் செய்துகொண்டும், உண்டும் குடித்தும் வந்தார்கள். வெள்ளப்பெருக்கு வந்து அனைவரையும் அடித்துச் செல்லும்வரை, அவர்கள் எதையும் அறியாதிருந்தார்கள்.
அப்படியே, மானிடமகன் வருகையின்போதும் இருக்கும்.
ஆயத்தமாய் இருங்கள்
இருவர் வயலில் இருப்பர். ஒருவர் எடுத்துக் கொள்ளப்படுவார்; மற்றவர் விட்டுவிடப்படுவார். இருவர் திரிகையில் மாவரைத்துக்கொண்டிருப்பர். ஒருவர் எடுத்துக் கொள்ளப்படுவார்; மற்றவர் விட்டுவிடப்படுவார்.
விழிப்பாயிருங்கள்; ஏனெனில் உங்கள் ஆண்டவர் எந்த நாளில் வருவார் என உங்களுக்குத் தெரியாது. இரவில், எந்தக் காவல் வேளையில் திருடன் வருவான் என்று வீட்டு-உரிமையாளருக்குத் தெரிந்திருந்தால், அவர் விழித்திருந்து தம் வீட்டில் கன்னமிடவிடமாட்டார் என்பதை அறிவீர்கள்.
எனவே நீங்களும் ஆயத்தமாய் இருங்கள். ஏனெனில், நீங்கள் நினையாத நேரத்தில் மானிடமகன் வருவார்.
விழிப்பாயிருங்கள்
நெடும்பயணம் செல்லவிருக்கும் ஒருவர், தம் வீட்டைவிட்டு வெளியேறும்போது, தம் பணியாளர் ஒவ்வொருவரையும் அவரவர் பணிக்குப் பொறுப்பாளராக்கி, விழிப்பாயிருக்கும்படி வாயில்-காவலருக்குக் கட்டளையிடுவார்.
அதுபோலவே நீங்களும் விழிப்பாயிருங்கள். ஏனெனில் வீட்டுத்தலைவர் மாலையிலோ, நள்ளிரவிலோ, சேவல்-கூவும் வேளையிலோ, காலையிலோ, எப்போது வருவார் என உங்களுக்குத் தெரியாது. அவர் திடீரென்று வந்து, நீங்கள் தூங்குவதைக் காணக்கூடாது. நான் உங்களுக்குச் சொல்லுவதை எல்லாருக்குமே சொல்கிறேன்:
நம்பிக்கைக்குரிய அறிவாளியுமான பணியாளர்
"தம் வீட்டு-வேலையாள்களுக்கு வேளாவேளை உணவு பரிமாறத் தலைவர் அமர்த்திய, நம்பிக்கைக்கு உரியவரும், அறிவாளியுமான பணியாளர் யார்? தலைவர் வந்து பார்க்கும்போது, தம் பணியைச் செய்துகொண்டிருப்பவரே அப்பணியாளர். அவர் பேறு-பெற்றவர். அவரைத் தம் உடைமைகளுக்கெல்லாம் அதிகாரியாக அவர் அமர்த்துவார் என உறுதியாக உங்களுக்குச் சொல்கிறேன்.
பொல்லாத பணியாளர்
அப்பணியாள் பொல்லாதவனாய் இருந்தால், தன் தலைவர் வரக் காலந்தாழ்த்துவார் எனத் தன் உள்ளத்தில் சொல்லிக்கொண்டு, தன் உடன்-பணியாளரை அடிக்கவும், குடிகாரருடன் உண்ணவும், குடிக்கவும் தொடங்குவான். அப்பணியாள் எதிர்பாராத நாளில், அறியாத நேரத்தில், அவனுடைய தலைவர் வருவார். அவர். அவனைக் கண்டந்துண்டமாய் வெட்டி, வெளிவேடக்காரருக்கு உரிய இடத்திற்குத் தள்ளுவார். அங்கே அழுகையும் அங்கலாய்ப்பும் இருக்கும்.
அனைவருக்கும் இயேசுவின் எச்சரிக்கை
மேலும் இயேசு, "உங்கள் உள்ளங்கள், குடிவெறி களியாட்டத்தாலும், இவ்வுலக வாழ்க்கைக்குரிய கவலையினாலும் மந்தம் அடையாதவாறும், அந்நாள் திடீரென வந்து, ஒரு கண்ணியைப்போல் உங்களைச் சிக்க-வைக்காதவாறும் எச்சரிக்கையாய் இருங்கள்.
மண்ணுலகு எங்கும் குடியிருக்கும் எல்லார்மீதும் அந்நாள் வந்தே தீரும். ஆகையால், நிகழப்போகும் அனைத்திலிருந்தும் தப்புவதற்கும், மானிடமகன் முன்னிலையில் நிற்க வல்லவராவதற்கும், எப்பொழுதும் விழிப்பாயிருந்து மன்றாடுங்கள்" என்றார்.
13. தீர்ப்புநாள் உவமைகள்
ஒலிவமலை கிபி 33 செவ்வாய்
i) பத்துத் தோழியர் உவமை- இறையாட்சியை அறிந்தோரும் வெளிவேடக்காரரும்
’அந்நாளில் விண்ணரசு எவ்வாறு இருக்கும்? என்பதைப் பின்வரும் நிகழ்ச்சி வாயிலாக விளக்கலாம்: மணமகனை எதிர்கொள்ள, மணமகளின் தோழியர் பத்துப்பேர், தங்கள் விளக்குகளை எடுத்துக்கொண்டு புறப்பட்டுச் சென்றார்கள். அவர்களுள் ஐந்து-பேர் அறிவிலிகள்; ஐந்து-பேர் முன்மதி உடையவர்கள்.
தூயஆவி உள்ளவரும் வெளிவேடக்காரரும்
அறிவிலிகள் ஐவரும் தங்கள் விளக்குகளை எடுத்துச் சென்றார்கள்; ஆனால், தங்களோடு எண்ணெய் எடுத்துச் செல்லவில்லை. முன்மதியுடையோர், தங்கள் விளக்குகளுடன், கலங்களில் எண்ணெயும் எடுத்துச் சென்றனர்.
( எண்ணெயே என்பது புதிய உடன்படிக்கையின் தூய ஆவியாகும். அதன்மூலம், அன்பு, பரிவு, பொறுமை, தன்னடக்கம் போன்ற ஒளி முன்மதியோரிடம் இருந்தது. ஒளியற்ற விளக்கு பழைய உடன்படிக்கையின் வெளிவேடக்காரருக்கு அடையாளம் )
மணமகன் வரக் காலந்தாழ்த்தவே, அனைவரும் தூக்க மயக்கத்தால் உறங்கிவிட்டனர். (உலக ஆசைகளும், கவலைகளுமே தூக்க மயக்கம்.)
நள்ளிரவில், ’இதோ மணமகன் வருகிறார். அவரை எதிர்கொள்ள வாருங்கள்’ என்ற உரத்த குரல் ஒலித்தது. மணமகளின் தோழியர் எல்லாரும் எழுந்து, தங்கள் விளக்குகளை ஒழுங்குபடுத்தினர். (இயேசுவின் இரண்டாம் வருகை, தீர்ப்புநாள்)
அப்போது அறிவிலிகள் முன்மதியுடையோரைப் பார்த்து, ‘எங்கள் விளக்குகள் அணைந்துகொண்டிருக்கின்றன; உங்கள் எண்ணெயில் எங்களுக்கும் கொடுங்கள்’ என்றார்கள். முன்மதி-உடையவர்கள் மறுமொழியாக, ’உங்களுக்கும் எங்களுக்கும் எண்ணெய் போதுமான-அளவு இராமல் போகலாம். எனவே, வணிகரிடம் போய் நீங்களே வாங்கிக்கொள்வதுதான் நல்லது’ என்றார்கள். அவர்களும் வாங்கப் புறப்பட்டுச் சென்றார்கள். (புதிய உடன்படிக்கையின் தூயஆவியே எண்ணெய். அதை மனம்மாறாமல் பெறமுடியாது)
அப்போது மணமகன் வந்து விட்டார். ஆயத்தமாயிருந்தவர்கள் அவரோடு திருமண-மண்டபத்துக்குள் புகுந்தார்கள். கதவும் அடைக்கப்பட்டது.
பிறகு, மற்றத் தோழிகளும் வந்து, ’ஐயா, ஐயா, எங்களுக்குக் கதவைத் திறந்துவிடும்’ என்றார்கள்.’ அவர் மறுமொழியாக, ’உறுதியாக உங்களுக்குச் சொல்லுகிறேன்; எனக்கு உங்களைத் தெரியாது’ என்றார். (மனம்மாறி தூயஆவியின் கனிகள் இல்லாதோர் நிலைவாழ்வை இழப்பர்)
எனவே விழிப்பாயிருங்கள்; ஏனெனில், அவர் வரும் நாளோ, வேளையோ உங்களுக்குத் தெரியாது.
ii) பயனற்ற உழியக்காரர்கள் - தாலந்து உவமை
’விண்ணரசைப் பின்வரும் நிகழ்ச்சி வாயிலாகவும் விளக்கலாம்: நெடும்பயணம் செல்லவிருந்த ஒருவர், தம் பணியாளர்களை அழைத்து, அவர்களிடம் தம் உடைமைகளை ஒப்படைத்தார். அவரவர் திறமைக்கு ஏற்ப ஒருவருக்கு ஐந்து தாலந்தும், வேறொருவருக்கு இரண்டு தாலந்தும், இன்னொருவருக்கு ஒரு தாலந்தும் கொடுத்துவிட்டு, நெடும்பயணம் மேற்கொண்டார். (இயேசுவே தலைவர். இயேசுவின் சீடர்களும், இஸ்ரயேல் தலைவர்களும் பணியாளர். இறையாட்சியின் நற்செய்தியே தாலந்து..)
ஐந்து தாலந்தைப் பெற்றவர், போய், அவற்றைக்கொண்டு வாணிகம் செய்து, வேறு ஐந்து தாலந்து ஈட்டினார். அவ்வாறே, இரண்டு தாலந்து பெற்றவர், மேலும் இரண்டு தாலந்து ஈட்டினார். (இயேசுவின் சீடர்கள் நற்செய்தியைக் கைக்கொண்டு, தம் சொல்லாலும் நற்செயல்களாலும் இறையாட்சியை மக்களிடையே வளர்த்தனர்.)
பரிசேயர்களும், குருக்களும்
ஒரு தாலந்து பெற்றவரோ, போய், நிலத்தைத் தோண்டித் தம் தலைவரின் பணத்தைப் புதைத்து வைத்தார். (பரிசேயர்களும், மறைநூல்அறிஞர்களும், குருக்களும், வெளிவேடக்காரர்களும் இறையாட்சியின் நற்செய்தியைக் காதால் கேட்டாலும், அதை அறிந்துகொள்ளவோ பிறருக்கு அறிவிக்கவோ விரும்பவில்லை)
நெடுங்காலத்திற்குப் பின், அந்தப் பணியாளர்களின் தலைவர் வந்து, அவர்களிடம் கணக்குக் கேட்டார். (இயேசுவின் தீர்ப்புநாள்)
ஐந்து தாலந்து பெற்றவர் அவரை அணுகி, வேறு ஐந்து தாலந்தைக் கொண்டுவந்து, ’ஐயா, ஐந்து தாலந்தை என்னிடம் ஒப்படைத்தீர்; இதோ பாரும், இன்னும் ஐந்து தாலந்தை ஈட்டியுள்ளேன்’ என்றார்.
அதற்கு அவருடைய தலைவர் அவரிடம், ’நன்று, நம்பிக்கைக்குரிய நல்ல பணியாளரே, சிறிய பொறுப்புகளில் நம்பிக்கைக்கு உரியவராய் இருந்தீர். எனவே பெரிய பொறுப்புகளில் உம்மை அமர்த்துவேன். உம் தலைவனாகிய என் மகிழ்ச்சியில், நீரும் வந்து பங்குகொள்ளும்’ என்றார்.
இரண்டு தாலந்து பெற்றவரும் அவரை அணுகி, ’ஐயா, நீர் என்னிடம் இரண்டு தாலந்து ஒப்படைத்தீர். இதோ பாரும், வேறு இரண்டு தாலந்து ஈட்டியுள்ளேன்’ என்றார். அவருடைய தலைவர் அவரிடம், ’நன்று, நம்பிக்கைக்குரிய நல்ல பணியாளரே, சிறிய பொறுப்புகளில் நம்பிக்கைக்குரியவராய் இருந்தீர். எனவே, பெரிய பொறுப்புகளில் உம்மை அமர்த்துவேன். உம் தலைவனாகிய என் மகிழ்ச்சியில், நீரும் வந்து பங்குகொள்ளும்’ என்றார். ( ஐந்து மற்றும் இரண்டு தாலந்தைப் பெற்ற இயேசுவின் சீடர்கள், தம் திறமைக்கேற்ப, இறையாட்சியை தம் சொல்லாலும் செயலாலும் உலகில் வளர்த்தார்கள். மிகுதியாக கொடுக்கப்பட்டவரிடம் மிகுதியாகவே கேட்கப்படும் என்பதும்,. ஆர்வம் உள்ளவருக்கு மிகுதியாகக் கொடுக்கப்படும் என்பதும் நறைவேறியது)
ஒரு தாலந்தைப் பெற்றுக்கொண்டவரும் அவரையணுகி, ’ஐயா, நீர் கடின உள்ளத்தினர்; நீர் விதைக்காத இடத்திலும் போய் அறுவடை செய்பவர்; நீர் தூவாத இடத்திலும் விளைச்சலைச் சேகரிப்பவர் என்பதை அறிவேன். உமக்கு அஞ்சியதால், நான் போய், உம்முடைய தாலந்தை நிலத்தில் புதைத்து-வைத்தேன். இதோ, பாரும், உம்முடையது’ என்றார். (ஒரு தாலந்தைப் பெற்றவர், பழைய உடன்படிக்கையை கைக்கொள்ளவே விரும்பினார்கள். எனவே, இயேசுவின் இறையாட்சியை அறிந்துகொள்ளவோ, அதை மக்களுக்கு அறிவிக்கவோ விரும்பவில்லை.)
அதற்கு, அவருடைய தலைவர், ’சோம்பேறியே! பொல்லாத பணியாளனே, நான் விதைக்காத இடத்திலும் போய் அறுவடை செய்பவன், நான் தூவாத இடத்திலும் போய் சேகரிப்பவன் என்பது உனக்குத் தெரிந்திருந்தது அல்லவா? அப்படியானால், என் பணத்தை நீ வட்டிக் கடையில் கொடுத்து வைத்திருக்கவேண்டும். நான் வரும்போது, எனக்கு வரவேண்டியதை, வட்டியோடு திரும்பப் பெற்றிருப்பேன்’ என்று கூறினார். (மனிதர் வழியாகவே கடவுள் தம் இறையாட்சியை அறிவிக்கிறார். ஆனால், உண்மையை தாங்களும் அறியாமல், பிறருக்கும் அறிவிக்காமல் நடிப்பது தவறு. அவர்கள் இருளில் தள்ளப்படுவார்கள்).
’எனவே, அந்தத் தாலந்தை அவனிடமிருந்து எடுத்துப் பத்துத் தாலந்து உடையவரிடம் கொடுங்கள். பயனற்ற இந்தப் பணியாளைப் புறம்பேயுள்ள இருளில் தள்ளுங்கள். அங்கே அழுகையும் அங்கலாய்ப்பும் இருக்கும்’ ஏனெனில், உள்ளவர் எவருக்கும் கொடுக்கப்படும். அவர்கள் நிறைவாகப் பெறுவர். இல்லாதோரிடமிருந்து அவரிடமுள்ளதும் எடுக்கப்படும். என்று அவர் கூறினார். (ஆர்வம் உள்ளவர் உண்மையை நிறைவாக அறிவார்கள். ஆர்வம் இல்லாதவரிடமிருந்து அவரிடமுள்ளதும் எடுக்கப்படும்.)
iii) காணமுடியாத இயேசுவுக்கு நாம் உதவிசெய்வது எப்படி?
வானதூதர் அனைவரும் புடைசூழ, மானிடமகன் மாட்சியுடன் வரும்போது, தம் மாட்சிமிகு அரியணையில் வீற்றிருப்பார். எல்லா மக்களினத்தாரும் அவர் முன்னிலையில் ஒன்றுகூட்டப்படுவர்.
ஓர் ஆயர் செம்மறியாடுகளையும் வெள்ளாடுகளையும் வெவ்வேறாகப் பிரித்துச் செம்மறியாடுகளை வலப்பக்கத்திலும், வெள்ளாடுகளை இடப்பக்கத்திலும் நிறுத்துவதுபோல், அம்மக்களை, அவர் வெவ்வேறாகப் பிரித்து நிறுத்துவார். (இயேசுவுக்கு உதவி-செய்தவர்களே செம்மறி ஆடு. உதவி-செய்யாதவர்கள் வெள்ளாடு)
இயேசுவுக்கு உதவி செய்வது எப்படி என்று உங்களுக்குத் தெரியுமா?
பின்பு, அரியணையில் வீற்றிருக்கும் அரசர், தம் வலப்பக்கத்தில் உள்ளோரைப் பார்த்து, ‘என் தந்தையிடமிருந்து ஆசி பெற்றவர்களே, வாருங்கள்; உலகம் தோன்றியதுமுதல், உங்களுக்காக ஏற்பாடு செய்யப்பட்டிருக்கும் ஆட்சியை உரிமைப்பேறாகப் பெற்றுக்கொள்ளுங்கள்.
ஏனெனில், நான் பசியாய் இருந்தேன், நீங்கள் உணவு கொடுத்தீர்கள்; தாகமாய் இருந்தேன், என் தாகத்தைத் தணித்தீர்கள்; அன்னியனாக இருந்தேன், என்னை ஏற்றுக்கொண்டீர்கள்; நான் ஆடையின்றி இருந்தேன், நீங்கள் எனக்கு ஆடை அணிவித்தீர்கள்; நோயுற்றிருந்தேன், என்னைக் கவனித்துக்கொண்டீர்கள்; சிறையில் இருந்தேன், என்னைத் தேடிவந்தீர்கள்’ என்பார்.
அதற்கு நேர்மையாளர்கள், ’ஆண்டவரே, எப்பொழுது உம்மைப் பசியுள்ளவராகக் கண்டு உணவளித்தோம், அல்லது, தாகமுள்ளவராகக் கண்டு, உமது தாகத்தைத் தணித்தோம்? எப்பொழுது உம்மை அன்னியராகக் கண்டு ஏற்றுக்கொண்டோம்? அல்லது, ஆடை-இல்லாதவராகக் கண்டு ஆடை-அணிவித்தோம்? எப்பொழுது நோயுற்றவராக அல்லது சிறையில் இருக்கக் கண்டு, உம்மைத் தேடிவந்தோம்?’ என்று கேட்பார்கள்.
அதற்கு அரசர், ’மிகச் சிறியோராகிய என் சகோதரர் சகோதரிகளுள் ஒருவருக்கு நீங்கள் செய்ததையெல்லாம், எனக்கே செய்தீர்கள் என, உறுதியாக உங்களுக்குச் சொல்லுகிறேன்’ எனப் பதிலளிப்பார். (உலகில் நாம் பெற்ற செல்வங்கள் அனைத்தும் இறைவனுக்குரியது. அவற்றால் எளியோருக்கு உதவும்போது இயேசுவுக்கே உதவிசெய்கிறோம். அப்போது, நம்மிடமுள்ள் உலகச் செல்வம் விண்ணகச் செலவமாக மாறுகிறது.)
ஏழைக்கு உதவிசெய்யாதவர்கள் இயேசுவுக்கே உதவிசெய்யவில்லை
பின்பு, இடப்பக்கத்தில் உள்ளோரைப் பார்த்து, ’சபிக்கப்பட்டவர்களே, என்னிடமிருந்து அகன்று போங்கள். அலகைக்கும், அதன் தூதருக்கும் ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிற என்றும்-அணையாத நெருப்புக்குள் செல்லுங்கள்.
ஏனெனில், நான் பசியாய் இருந்தேன், நீங்கள் எனக்கு உணவு கொடுக்கவில்லை; தாகமாயிருந்தேன், என் தாகத்தைத் தணிக்கவில்லை. நான் அன்னியனாய் இருந்தேன், நீங்கள் என்னை ஏற்றுக்கொள்ளவில்லை. ஆடையின்றி இருந்தேன், நீங்கள் எனக்கு ஆடை அளிக்கவில்லை. நோயுற்றிருந்தேன், சிறையிலிருந்தேன், என்னைக் கவனித்துக்கொள்ளவில்லை’ என்பார்.
அதற்கு அவர்கள், ’ஆண்டவரே, எப்பொழுது நீர் பசியாகவோ, தாகமாகவோ, அன்னியராகவோ, ஆடையின்றியோ, நோயுற்றோ, சிறையிலோ இருக்கக் கண்டு, உமக்குத் தொண்டு செய்யாதிருந்தோம்?’ எனக் கேட்பார்கள்.
அப்பொழுது அவர், ’மிகச் சிறியோராகிய இவர்களுள் ஒருவருக்கு, நீங்கள் எதையெல்லாம் செய்யவில்லையோ, அதை எனக்கும் என உறுதியாக உங்களுக்குச் சொல்கிறேன்’ எனப் பதிலளிப்பார்.
(இறைவன் நமக்களித்த உடைமைகளையும் திறமைகளையும் நம்முடையது என்று எண்ணித் தன்னலத்துடன் சிலர் வாழ்கிறோம். ஏழைகளுக்கு உதவி செய்யாதபடியால்,, நம்மை விண்ணுலகில் ஏற்றுக்கொள்ள நண்பர்கள் இல்லை.)இவர்கள் முடிவில்லாத் தண்டனை அடையவும், நேர்மையாளர்கள், நிலைவாழ்வு பெறவும் செல்வார்கள்.’
இயேசு, பகல் நேரங்களில் கோவிலில் கற்பித்துவந்தார். இரவு நேரங்களிலோ, ஒலிவம் என்று வழங்கப்பட்ட மலைக்குச் சென்று தங்கிவந்தார். எல்லா மக்களும், கோவிலில் அவர் சொல்வதைக் கேட்கக் காலையிலேயே அவரிடம் வருவார்கள்.
14. இயேசுவின் மரணமே இயேசுவின் மாட்சி
எருசலேம் கோவில் கிபி 33 புதன்
இயேசுவைக் காணவிரும்பிய கிரேக்கர்
வழிபாட்டுக்காகத் திருவிழாவுக்கு வந்தோருள், கிரேக்கர் சிலரும் இருந்தனர். இவர்கள், கலிலேயாவிலுள்ள பெத்சாய்தா ஊரைச் சேர்ந்த பிலிப்பிடம் வந்து, ’ஐயா, இயேசுவைக் காண விரும்புகிறோம்’ என்று கேட்டுக்கொண்டார்கள். பிலிப்பு, அந்திரேயாவிடம் வந்து அதுபற்றிச் சொன்னார்; அந்திரேயாவும் பிலிப்பும் இயேசுவிடம் சென்று, அதைத் தெரிவித்தனர்.
கோதுமை மணி மடிந்தால்தான் மிகுந்த விளைச்சலை அளிக்கும்
இயேசு அவர்களைப் பார்த்து, ’மானிடமகன், மாட்சிபெறவேண்டிய நேரம் வந்துவிட்டது. கோதுமை-மணி, மண்ணில் விழுந்து மடியாவிட்டால், அது அப்படியே இருக்கும். அது மடிந்தால்தான், மிகுந்த விளைச்சலை அளிக்கும் என உறுதியாக உங்களுக்குச் சொல்கிறேன். தமக்கென்றே வாழ்வோர், தம் வாழ்வை இழந்து விடுவர். இவ்வுலகில், தம் வாழ்வைப் பொருட்டாகக் கருதாதோர், நிலைவாழ்வுக்குத் தம்மை உரியவராக்குவர்.
எனக்குக் தொண்டுசெய்வோர் என்னைப் பின்பற்றட்டும். நான் இருக்கும் இடத்தில், என் தொண்டரும் இருப்பர். எனக்குத் தொண்டு செய்வோருக்குத் தந்தை மதிப்பளிக்கிறார்’ என்றார்.
இயேசுவின் மாட்சி
மேலும் இயேசு, ’இப்போது என் உள்ளம் கலக்கமுற்றுள்ளது. நான் என்ன சொல்வேன்? ’தந்தையே, இந்த நேரத்திலிருந்து என்னைக் காப்பாற்றும்’ என்பேனோ? இல்லை! இதற்காகத்தானே இந்நேரம்வரை வாழ்ந்திருக்கிறேன். தந்தையே, உம் பெயரை மாட்சிப்படுத்தும்’ என்றார்.
அப்போது வானிலிருந்து ஒரு குரல், ’மாட்சிப்படுத்தினேன்; மீண்டும் மாட்சிப்படுத்துவேன்’ என்று ஒலித்தது.
அங்குக் கூட்டமாய் நின்று கொண்டிருந்த மக்கள் அதைக் கேட்டு, ’அது இடிமுழக்கம்’ என்றனர். வேறு சிலர், ’அது வானதூதர் ஒருவர் அவரோடு பேசிய பேச்சு’ என்றனர்.
இயேசுவின் மரணத்தால் அருளப்படும் மீட்பு
இயேசு அவர்களைப் பார்த்து, ’இக்குரல் என்பொருட்டு அல்ல, உங்கள்பொருட்டே ஒலித்தது. இப்போதே இவ்வுலகு தீர்ப்புக்குள்ளாகிறது; இவ்வுலகின் தலைவன் வெளியே துரத்தப்படுவான். நான் மண்ணிலிருந்து உயர்த்தப்படும்போது அனைவரையும் என்பால் ஈர்த்துக்கொள்வேன்’ என்றார். தாம் எவ்வாறு இறக்கப்போகிறார் என்பதைக் குறிப்பிட்டே இப்படிச் சொன்னார்.
மக்கள் கூட்டத்தினர் அவரைப் பார்த்து, ’மெசியா என்றும் நிலைத்திருப்பார் எனத் திருச்சட்ட நூலில் கூறியுள்ளதை நாங்கள் கேட்டிருக்கிறோம். அப்படியிருக்க, மானிடமகன் உயர்த்தப்பட வேண்டும் என நீர் எப்படிச் சொல்லலாம்? யார் இந்த மானிடமகன்?’ என்று கேட்டனர்.
ஒளியை ஏற்றுக்கொள்ளுங்கள்
இயேசு அவர்களிடம், ’இன்னும் சிறிதுகாலமே ஒளி உங்களோடு இருக்கும். இருள் உங்கள்மேல் வெற்றி கொள்ளாதவாறு, ஒளி உங்களோடு இருக்கும்போதே நடந்து செல்லுங்கள். இருளில் நடப்பவர் எங்கே செல்கிறார் என்பது அவருக்குத் தெரியாது. ஒளி உங்களோடு இருக்கும்போதே ஒளியை ஏற்றுக்கொள்ளுங்கள். அப்போது ஒளியைச் சார்ந்தவர்கள் ஆவீர்கள்’ என்றார்
இயேசு உரத்தகுரலில் கூறியது: ’என்னிடம் நம்பிக்கை கொள்பவர், என்னிடம் மட்டும் அல்ல, என்னை அனுப்பியவரிடமே நம்பிக்கை கொள்கிறார். என்னைக் காண்பவரும், என்னை அனுப்பியவரையே காண்கிறார். என்னிடம் நம்பிக்கை கொள்பவர் இருளில் இராதபடி, நான் ஒளியாக உலகிற்கு வந்தேன்.
தீர்ப்பு அளிப்பது என் வார்த்தையே
'நான் கூறும் வார்த்தைகளைக் கேட்டும், அவற்றைக் கடைப்பிடியாதவருக்குத் தண்டனைத் தீர்ப்பு வழங்குபவன் நானல்ல. ஏனெனில், நான் உலகிற்குத் தீர்ப்பு வழங்க வரவில்லை; மாறாக அதை மீட்கவே வந்தேன்.
என்னைப் புறக்கணித்து நான் சொல்வதை ஏற்றுக்கொள்ளாதவருக்குத் தீர்ப்பளிக்கும் ஒன்று உண்டு; என் வார்த்தையே அது. இறுதி நாளில் அவர்களுக்கு அது தண்டனைத் தீர்ப்பு அளிக்கும். ஏனெனில், நானாக எதையும் பேசவில்லை; என்னை அனுப்பிய தந்தையே நான் என்ன சொல்லவேண்டும், என்ன பேசவேண்டும் என்பது பற்றி எனக்குக் கட்டளை கொடுத்துள்ளார். அவருடைய கட்டளை நிலைவாழ்வு தருகிறது என்பது எனக்குத் தெரியும். எனவே நான் சொல்பவற்றையெல்லாம் தந்தை என்னிடம் கூறியவாறே சொல்கிறேன்.'
இப்படிச் சொன்னபின் இயேசு அவர்களிடமிருந்து மறைவாகப் போய்விட்டார்.
ஏன் இயேசுவை மக்கள் நம்பவில்லை?
அவர்கள்முன், இயேசு இத்தனை அரும் அடையாளங்களைச் செய்திருந்தும், அவர்கள் அவரிடம் நம்பிக்கை கொள்ளவில்லை. ’ஆண்டவரே, நாங்கள் அறிவித்ததை நம்பியவர் யார்? ஆண்டவரின் ஆற்றல் யாருக்கு வெளிப்படுத்தப்பட்டது?’ என்ற இறைவாக்கினர் எசாயாவின் கூற்று இவ்வாறு நிறைவேறியது.
’அவர்கள் கண்ணால் காணாமலும், உள்ளத்தால் உணராமலும், மனம்மாறிக் குணமாகாமலும் இருக்கும்படி அவர்களுடைய கண்ணை மூடச்செய்தார். உள்ளத்தை மழுங்கச்செய்தார்’ என்பது அவர்களால் நம்பமுடியாத காரணத்தை விளக்கும் எசாயாவின் இன்னொரு கூற்று. எசாயா, மெசியாவின் மாட்சியைக் கண்டதால்தான் அவரைப்பற்றி இவ்வாறு கூறினார்.
எனினும் தலைவர்களில்கூடப் பலர் இயேசுவிடம் நம்பிக்கை கொண்டனர். ஆனால் பரிசேயருக்கு அஞ்சி அவர்கள் அதை வெளிப்படையாக ஒப்புக்கொள்ளவில்லை. அப்படி ஒப்புகொண்டால் அவர்கள் தொழுகைக் கூடத்திலிருந்து விலக்கி வைக்கப்படுவார்கள். அவர்கள் கடவுள் அளிக்கும் பெருமையைவிட மனிதர் அளிக்கும் பெருமையையே விரும்பினார்கள்.
15. இயேசுவைக் கொலைசெய்யத் திட்டம்
எருசலேம் கிபி 33 புதன்
பாஸ்கா என்னும் புளிப்பற்ற-அப்ப விழா நிகழ இன்னும் இரண்டு நாள்கள் இருந்தன. இயேசு, தம் சீடரிடம், ’பாஸ்கா விழா இரண்டு நாள்களில் வரவிருக்கிறது என்பது உங்களுக்குத் தெரியும். அப்பொழுது, மானிடமகன் சிலுவையில் அறையப்படுவதற்கெனக் காட்டிக்கொடுக்கப்படுவார்’ என்றார்.
அதே நேரத்தில், தலைமைக் குருக்களும், மக்களின் மூப்பர்களும், மறைநூல் அறிஞரும், கயபா என்னும் தலைமைக்குருவின் மாளிகை-முற்றத்தில் ஒன்றுகூடினார்கள். இயேசுவைச் சூழ்ச்சியாய்ப் பிடித்துக் கொலைசெய்ய அவர்கள் கலந்து ஆலோசித்தார்கள். ’’ஆயினும், விழாவின்போது வேண்டாம்; ஒருவேளை மக்களிடையே கலகம் ஏற்படக்கூடும்’ என்று அவர்கள் பேசிக்கொண்டார்கள். ஏனெனில் மக்களுக்கு அஞ்சினர்
இயேசுவைக் காட்டிக்கொடுக்க யூதாசு உடன்படுதல்
அந்நேரத்தில், பன்னிருவருள் ஒருவனான யூதாசு எனப்படும் இஸ்காரியோத்துக்குள் சாத்தான் புகுந்தான். யூதாசு இஸ்காரியோத்து, இயேசுவைக் காட்டிக்கொடுக்கும் நோக்கத்தோடு, தலைமைக் குருக்களிடமும் காவல் தலைவர்களிடமும் சென்று, இயேசுவைக் காட்டிக்கொடுப்பதுபற்றிக் கலந்து பேசினான். ’இயேசுவை உங்களுக்கு நான் காட்டிக்கொடுத்தால் எனக்கு என்ன தருவீர்கள்?’ என்று கேட்டான்.
அவர்கள் மகிழ்ச்சியுற்று முப்பது வெள்ளிக் காசுகளை எண்ணி, அவனுக்குக் கொடுத்தார்கள். அவனும் அதற்கு ஒத்துக்கொண்டு, மக்கள்கூட்டம் இல்லாதபோது, அவரைக் காட்டிக் கொடுப்பதற்கு வாய்ப்புத் தேடிக்கொண்டிருந்தான்.