Post date: Jun 14, 2016 6:28:25 AM
மனம் என்பது
ஆசை, பற்று, எண்ணம் ஆகிய முன்றுதான்.
எவ்வாறு ஆசை, பற்று , எண்ணம் ஆகியவற்றை முறையாக புரிந்துகொண்டு மனமற்ற தன்மையை அடையமுடியும்.
ஆசைக்கு ஆதாரம் அறியாமை
ஆசை
இதன் முழு விளக்கம் அறிந்துகொள்வோம்
ஆசை இருவகைப்படும்.
ஆசை நிறைவேறினால்தான் இன்பம் என்ற நிபந்தனையுடன் கூடியது பந்தப்படுத்தும் ஆசை.
முழுமையான வைராக்கியம் உள்ளவர்களின் ஆசை பந்தப்படுத்தாத ஆசை. தங்களின் விருப்பு-வெறுப்புக்களின் அடிப்படையிலும் உலக நன்மைக்காகவும் இவர்கள் மற்றவர்களைப்போல் பொருள்கள் மீது ஆசைகொண்டு அதைப்பெற பிரயத்தனம் செய்யலாம். அந்த முயற்சி வெற்றிபெற்றாலும் தோல்வியடைந்தாலும் இவர்கள் பாதிக்கப்படமாட்டார்கள்.
ஆசைகள் உருவாக காரணம் என்ன?
ஆனந்தம் நம்முடைய இயல்பான சொரூபம் என்பதை அறியாமல் உலகத்தில் உள்ள பொருள்கள்தான் நமக்கு இன்பத்தை தருகின்றன என்று நாம் நினைத்துக் கொண்டிருப்பதால்தான் ஆசைகள் ஏற்படுகின்றன.
நம்முடைய தற்போதைய நிறைவேறாத ஆசை ஒன்றை எடுத்து ஆராய்ந்தால் உலகம் எவ்வித இன்பத்தையும் தருவதில்லை என்பதை புரிந்து கொள்ளலாம்.
வெள்ளிக்கிழமை வெளியிடப்படும் ஒரு பெரிய நடிகரின் திரைப்படத்தை முதல் காட்சியில் நாம் பார்க்கவிரும்புவதாக வைத்துக்கொள்வோம். திரைப்படத்தை முதல் காட்சியில் பார்ப்பது இன்பம் அளிக்கும் அனுபவம் என்று நாம் நினைத்துக்கொண்டிருப்பதுதான் இந்த ஆசைக்கு காரணம். எவ்வளவோ முயன்றும் டிக்கெட் கிடைக்காமல் ஏமாற்றத்துடனும் சோர்வுடனும் இருக்கும்பொழுது நம் நெருங்கிய நண்பர் ஒருவர் ‘என்னிடம் ஒரு டிக்கெட் அதிகமாக இருக்கிறது, நீ என்னுடன் வருகிறாயா’ என்று கேட்டால் நமக்கு ஏற்படும் இன்பத்திற்கு அளவே இல்லை. திரைப்படத்தை இன்னும் பார்க்கவில்லை. அதற்குள் எப்படி நமக்கு இன்பம் ஏற்பட்டது என்று ஆராய்ந்தோமானால் ‘டிக்கெட் கிடைக்கவில்லை, கிடைத்தால் நன்றாக இருக்கும், ப்ளாக்கில் டிக்கெட் வாங்குவது எப்படி’ என்பது போன்ற எண்ணங்கள் நமது மனதை ஆக்ரமித்திருந்ததால் மனம் நம் இயற்கையான ஆனந்தத்தை பிரதிபலிக்காமல் நம்மை சோகத்தினுள் ஆழ்த்தியிருந்தது என்றும் ‘டிக்கெட் தருகிறேன்’ என்று நண்பர் சொன்னதும் கவலை தந்துகொண்டிருந்த அனைத்து எண்ணங்களும் ஒரு நொடியில் நம் மனதிலிருந்து மறைந்து விட இயல்பான ஆனந்தத்தை அனுபவிக்க துவங்கிவிட்டோம் என்றும் நமக்கு தெரியவரும்.
இந்த உண்மையை புரிந்து கொள்ளாமல் திரைப்படத்தை பார்ப்பதுதான் நமக்கு இன்பத்தை தரும் என்று நாம் தவறாக நினைத்துகொண்டிருந்தோம். எனவே ஆசைகள் உருவாவதற்கு காரணம் அறியாமை மட்டுமே.
சரியான மாற்றம்
உலகம் தொடர்ந்து மாறிக்கொண்டிருக்கிறது. இதில் நிலையானவை என்று எதுவுமில்லை. இந்த நிலையில்லாத உலகை நிலையானது என்று ஒருநாளும் நம் புலன்கள் நம்மிடம் சொல்வதில்லை. ‘இது ஒரு மலர்’ என்று பொருளின் தற்போதைய நிலையை மட்டும்தான் கண் நமக்கு தெரிவிக்கும். சற்று முன் வரை அது ஒரு மொட்டாக இருந்தது என்பதையோ இன்னும் சில நொடிகளில் அது கசக்கப்பட்டு குப்பையாக மாறிவிடும் என்பதையோ புரிந்து கொள்ளவேண்டிய வேலை நமது புத்தியை சேர்ந்தது.
இந்த இடத்தில்தான் பெரும்பான்மையான மக்கள் தவறு செய்து தங்கள் வாழ்க்கையை தாங்களே நரகமாக்கிகொண்டிருக்கிறார்கள். ஒன்று, மாறுவதை புரிந்து கொள்வதில்லை. அல்லது, மாறுவது தங்களின் விருப்பபடிதான் மாறவேண்டும் என்று எதிர்பார்க்கிறார்கள். இந்த எதிர்பார்ப்பு எப்பொழுதும் நிறைவேறுவதில்லை. ஒவ்வொரு நாள் முடிவடையும் பொழுதும் நம் வயது ஒரு நாள் அதிகரிக்கிறது என்று தெரிந்தாலும் என்றும் இளமையுடன் இருக்கும் ஆசை நம்மை விட்டுபோவதில்லை. இது இவ்வாறு இல்லாமல் வேறு மாதிரியாக இருந்தால் நன்றாக இருக்கும் என்ற எதிர்பார்ப்பு பந்தபடுத்தும் ஆசையாக மாறி நம்மை நம் இயல்பான ஆனந்தத்தை அனுபவிக்க தடையாய் உள்ளது.
*எது நடந்ததோ, அது நன்றாகவே நடந்தது.
எது நடக்கிறதோ, அது நன்றாகவே நடக்கிறது.
எது நடக்க இருக்கிறதோ, அதுவும் நன்றாகவே நடக்கும்.
எதுவும் வேறுமாதிரி இருக்க வேண்டிய அவசியமேயில்லை.
நமக்கு பிடித்தபடி மாற்றத்தை ஏற்படுத்துவதற்காக
நாம் முயற்சி எடுக்கலாமே தவிர
முடிவு செய்யும் அதிகாரம்
கடவுளிடம் மட்டும்தான் இருக்கிறது
என்பதை புரிந்து கொண்டால்
துன்பபடாமல் என்றும் இன்பமாக இருக்கலாம்.*
ஆழ்ந்த உறக்கத்தில் இந்த உலகத்துடன் எவ்வகையிலும் உறவு கொள்ளாமலேயே நாம் இன்பமாக இருக்க முடிவதால் விழித்தெழுந்த பின்னும் உலகத்துடன் பல விவகாரங்களில் ஈடுபடும் காலங்களில் கூட நம்மால் அதே இன்பத்தை தொடர்ந்து வாழ முடியவேண்டும். ஆனால் வாழ்வு இன்பமும் துன்பமும் கலந்தது என்று நம் அனுபவம் சொல்கிறது. இதற்கு காரணம் நம்மை பந்தபடுத்தும் ஆசைகள்தான்.
பின்வரும் செயல்களை செய்வதன் மூலம் நாம் என்றும் குறைவில்லாத இன்பத்துடன் வாழலாம்.
1. ஆனந்தம் நமது இயல்பான நிலை, வந்து போகும் உணர்ச்சி அல்ல என்று தெரிந்து கொள்ள வேண்டும்.
2. மனிதர்கள், மற்ற உயிரினங்கள், பொருள்கள், நிகழ்வுகள் ஆகிய எவற்றிற்கும் நமக்கு இன்பம் தரும் சக்தியில்லை என்பதை புரிந்து கொள்ள வேண்டும்.
3. மேற்கூறப்பட்ட இரு தகவல்களை நமது அறிவாக மாற்றிக்கொள்ள வேதாந்தத்தை முறையாக படித்த ஆசிரியர் ஒருவரிடம் சரணடைந்து உபநிஷதங்களையும் கீதையையும் முறையாக படிக்கவேண்டும்.
4. நிறைய பணம் சம்பாதிக்க வேண்டும் என்று ஆசை படுவதில் தவறில்லை. ஆனால் பணத்துக்கும் இன்பத்திற்கும் எவ்வித சம்பந்தமும் இல்லை என்பதை அறிந்து கொண்ட பின் பணம் சம்பாதிக்க தேவையான செயல்களில் ஈடுபடவேண்டும்.
5. உலகம் தொடர்ந்து மாறிக்கொண்டேயிருக்கும். வாழ்வின் நிகழ்வுகளை நம் விருப்பபடி மாற்ற நம்மாலான அனைத்து முயற்சிகளையும் தர்மமான முறையில் செய்வதில் தவறில்லை.
6. முயற்சி செய்வது மட்டும்தான் நம் கையில் இருக்கிறதே தவிர பலன் கொடுப்பது இறைவனின் வேலை என்பதை உணர்ந்து நாம் செய்யும் அனைத்து செயல்களையும் கடவுளுக்கு அர்ப்பணித்து பலன் கிடைக்கும்பொழுது அதை கடவுளின் பிரசாதமாக ஏற்றுக்கொள்ள வேண்டும்.
7. ஒரு செயலை செய்யும் பொழுது முழுமனதின் ஈடுபாட்டுடன் தன்னை மறந்து ஆனந்தமாக வேலை செய்ய வேண்டும். நான் விரும்பிய வகையில் பலன் கிடைத்த பின்தான் மகிழ்ச்சி, அதுவரை உழைக்க வேண்டிய கட்டாயம் இருப்பதால் கஷ்டப்பட்டு உழைக்கிறேன் என்பது தவறு. இன்பமாக வேலை செய்ய முடிந்தால் செய்யவேண்டும். இல்லையென்றால் அந்த வேலையை செய்வதால் எவ்வித பலனும் இருக்காது.
8. ஆசை நம் செயல்களுக்கு ஆதாரம். ஆசையில்லாமல் எவ்வித வேலையையும் நாம்மால் செய்ய முடியாது. ஆனால் ஆசைக்கும் இன்பத்திற்கும் எவ்வித சம்பந்தமும் இல்லை என்பதை அறிந்து கொள்வது அவசியம். பொருளாதார அடிப்படையில் முன்னேற்றம், குடும்ப வாழ்வில் செழிப்பு, உறுதியான உறவுமுறைகள் ஆகியவை வேண்டும் என்ற ஆசையுடன் நாம் செயலில் ஈடுபடலாம். இது போன்ற ஆசைகள் நிறைவேறுவதால் சுகமான வாழ்வும் நல்ல நண்பர்களும் கிடைக்குமே தவிர ஆனந்தம் கிடைக்கும் என்ற எதிர்பார்ப்பு தவறு.
9. ஆசை நிறைவேறினால்தான் மகிழ்ச்சி என்ற அறியாமைதான் ஆசை துன்பத்திற்கு காரணம் என்ற தவறான செய்திக்கு அடிப்படை காரணம். ஆசை நிறைவேறினாலும் நிறைவேறாவிட்டாலும் என்னுடைய இயல்பான ஆனந்தம் எந்த விதத்திலும் பாதிக்கப்படுவதில்லை என்ற அறிவு ஏற்பட்டுவிட்டால் நம் அனைத்து ஆசைகளும் பந்தபடுத்தாத ஆசைகளாக மாறும். இது போன்ற ஆசைகளால் நமக்கு எவ்வித பாதிப்பும் இல்லை. மாறாக இவை நமக்கும் நம்மை சுற்றியிருப்போருக்கும் மிகுந்த நன்மை பயக்கும்.
வைராக்கியம் இருப்பவர்களுக்கு பொருள்களின் மீது பற்று இருக்காது என்பதால் ஆசை இருக்காது என்று முடிவு செய்யகூடாது.
ஆசை இருவகைப்படும்.
ஆசை நிறைவேறினால்தான் இன்பம் என்ற நிபந்தனையுடன் கூடியது பந்தப்படுத்தும் ஆசை.
முழுமையான வைராக்கியம் உள்ளவர்களின் ஆசை பந்தப்படுத்தாத ஆசை. தங்களின் விருப்பு-வெறுப்புக்களின் அடிப்படையிலும் உலக நன்மைக்காகவும் இவர்கள் மற்றவர்களைப்போல் பொருள்கள் மீது ஆசைகொண்டு அதைப்பெற பிரயத்தனம் செய்யலாம். அந்த முயற்சி வெற்றிபெற்றாலும் தோல்வியடைந்தாலும் இவர்கள் பாதிக்கப்படமாட்டார்கள்.
துன்பத்திற்கு காரணம் பற்று மட்டும்தான்.
பொதுவாக மக்களின் ஆசை பற்றோடு கூடிய ஆசை என்பதால்
மக்களுக்கு புரியும் வகையில் புத்தர் ஆசையே துன்பத்திற்கு காரணம் என்றார்.
முழுவைராக்கியம் இருப்பவர்களுக்கு எதன் மீதும் பற்று இருக்காது.
எனவே இவர்கள் எவ்வித கவலையும் இல்லாமல் பொருள்களின் மேல் ஆசை கொள்வது,
புலன் இன்பங்களை அனுபவிப்பது,
மற்றவர்களின் அன்பு செலுத்தி அவர்களின் உயர்வுக்கு உழைப்பது
போன்ற சாதாரண செயல்களை மற்றவர்களைப்போல் செய்வார்கள்.
உணர்ச்சி வயப்படாமல் அறிவு பூர்வமாக ஆலோசித்து செவ்வனே செயல் படும் திறமை வைராக்கியம் உள்ளவர்களுக்கு மட்டுமே இருக்கும். தன் மகன் என்ற பற்று கைகளில் நடுக்கத்தை ஏற்படுத்துவதால் திறமை மிக்க அறுவை சிகிச்சை நிபுணர் தன் மகனின் அறுவைசிகிச்சைக்கு வேறு ஒரு மருத்துவரின் உதவியை நாடுகிறார். வைராக்கியம் உள்ளவர்களுக்கு மற்றவர்களின் நலனில் அக்கறை இருக்குமே தவிர பற்று இருக்காது. செய்யவேண்டியதை செய்வது அக்கறை. செய்யமுடியாததை நினைத்து கவலை கொள்வது பற்று. உணர்ச்சி வசப்படாமல் அறிவு பூர்வமாக செயலாற்றுவது மற்றும் பற்றில்லாத அக்கறை கொள்வது ஆகியவை முழுமையான வைராக்கியம் கொண்டவர்களால் மட்டுமே முடியும்.