இதுவரை வெளிவந்த படங்களிலேயே, மிகத்திறமையான, கடினமான, வியக்க வைக்கும் திரைக்கதை கொண்ட படம் எது என்றால், யோசிக்காமல் சொல்லலாம் Memento என்று...இரண்டாம் இடத்தில் என்ன படம் இருந்தாலும் இதன் பக்கத்தில் கூட நெருங்க முடியாது...
இதை மெமெண்டோ பத்தின போஸ்ட்ல சொல்லியிருந்தேன்... அதைக் கொஞ்சம் மாத்திக்குங்க...மெமெண்டோவை அலேக்காக தூக்கி ரெண்டாவ்து இடத்துக்குப் போட ஒரு படம் வந்தாச்சு...படம் பார்த்தவங்களுக்கு எல்லாம் ஃபோன் பண்ணி மூணு மணி நேரம் விவாதிச்சு, இன்னும் ஆச்சரியத்துல பேயடிச்ச மாதிரி உட்கார்ந்து இருக்கேன்... அப்படி ஒரு படம்...
அரை மணி நேரம் உட்கார்ந்து கதை எழுதிட்டு, அதை 10 வருஷமா கிராஃபிக்ஸ் பண்ணற அவதார் மாதிரி படங்களுக்கு நடுவுல, 10 வருஷமா யோசிச்சு ஒரு கதை ரெடி பண்ணி இருக்காருநோலன்... அந்த உழைப்பு ஒவ்வொரு வசனத்திலும் தெரியுது... மேட்ரிக்ஸ் கான்செப்ட் சூப்பர் மேட்ரிக்ஸ் கான்செப்ட் சூப்பர்-னு பத்து வருஷமா சொல்லிகிட்டு இருந்தோமே... அதெல்லாம் இனி சும்மா... மெமெண்டோவுல ஞாபகங்களைப் பத்தி ஆராய்ச்சி பண்ணினவரு, இதுலகனவுலகத்தைப் பத்தி Ph.D. பண்ணற அளவுக்கு கான்செப்ட் சொல்லி இருக்காரு...
அது என்னான்னா... ஒரு கனவுலகத்தை கம்யூட்டர்லேயே டிஸைன் பண்ணிட்டு, உங்களுக்கு மயக்க மருந்து குடுத்து தூங்க வச்சுட்டு, உங்களை அந்த கனவுலகத்துக்கு ஒயர் வச்சு கனெக்ட் பண்ணிகிட்டு, நம்ம ஹீரோவும் (டி காப்ரியோ) அதே கனவுலகத்துக்கு வந்துடுவாரு... கனவுலயே உங்ககிட்ட இருந்து ஒரு ரகசியத்தை தெரிஞ்சுகிட்டு, சத்தமில்லாம கனவை முடிச்சுகிட்டு போயிடுவாங்க... உங்ககிட்டயோ, என்கிட்டயோ ரகசியம் தெரிஞ்சு ஒன்னும் ஆகப்போறதில்லை... அதுவே பெரிய பிசினஸ்மேன்கிட்ட இருந்து அவங்களோட ப்ளான் எல்லாம் கறந்துட்டா?? அந்த ஐடியா திருட்டு வேலைதான் ஹீரோவோட தொழில்...
ஆனா, ஏதோ ஒரு காரணத்துக்காக அமெரிக்க அரசாங்கம் அவரைத் தேடிகிட்டு இருக்கு... அதுனால அமெரிக்காவுல இருந்து தப்பிக்கறவர், திரும்ப அங்க போகவேமுடியாது.. அங்க போகணும்னு அவருக்கு ஆசை... ஏன்னா, அமெரிக்காவுலதான் அவரோட ரெண்டு சின்ன குழந்தைகள் பாட்டியோட தங்கி இருக்காங்க... பாட்டியோடவா? அப்ப மனைவி? அவங்க தற்கொலை பண்ணிகிட்டாங்க... ஏன்? சொல்றேன்... சொல்றேன்... அந்த தற்கொலைக்கு காரணம் இவர்தான்னு நினைச்சு அமெரிக்க அரசாங்கம் இவரைத் தேடுது...
உலகின் பெரும்பணக்காரர் ஒருத்தர் ஹீரோவுக்கு ஒரு வேலை தர்றாரு... அந்த வேலையை முடிச்சுத் தந்தா, ஹீரோ அமெரிக்கா போறதுக்கு அவரு வழிபண்ணறேன்னு சொல்லறாரு... என்ன வேலை பண்ணணும்னா, அவரோட போட்டி போடற இன்னொரு பணக்காரரோட (Fischer) கனவுல போயி, அவர் மனசுல ஒரு ஐடியாவை பதிச்சுட்டு வந்தா, போட்டிக்காரனோட பிசினஸ் காலியாயிடும்... இதுக்காக, ஹீரோவும் அவரோட அஞ்சு ஆட்களும் 10 மணி நேரம் Fischer–ரோட விமானத்துல போயி, அவருக்கு மயக்க மருந்து குடுத்து கனவுல இறங்குறாங்க... அதுல அவர் மனசை மாத்தறது அவ்வளவு சுலபமில்ல... அது கனவுன்னு அவருக்குத் தெரியாம இருக்கறதுக்காக, கனவுக்குள்ள இன்னொரு கனவு, அதுக்குள்ள இன்னொரு கனவுன்னு மூணு கனவுலகங்கள் ஒரே நேரத்துல... சிலர் ஒன்னுல தூங்கறாங்க... அதே நேரத்துல இன்னொன்னுல சண்டை போடறாங்க... இன்னொன்னுல அடிபட்டு சாகறாங்க... ஒன்னு கார்ல, ஒன்னு ஹோட்டல்ல, இன்னொன்னு பனிமலையிலன்னு எல்லாம் மாத்தி மாத்தி வருது...
ஒவ்வொரு கனவும் ஒவ்வொரு ஆளுடையது... அவங்க விருப்பப்படி பல விஷயங்கள் அதுல நடக்கும்... கனவுல இருக்கப்போ எழுப்பிட்டா, கனவு கலைஞ்சு எல்லாம் பாழயிடும்.. அதுக்காக மயக்க மருந்து போடறாங்க... உலுக்கி எழுப்ப ஒரு டெக்னிக் வச்சுருக்காங்க... திடீர்னு கனவுல கீழே விழற மாதிரி இருந்து முழிச்சுடுவோமே... அப்படி...
நாம தூங்கறப்போ அலாரம் அடிச்சாலும், அது கனவுல நமக்கு ஸ்கூல் பெல் மாதிரி கேக்குமே... அதுமாதிரி, ஒரு கனவுல கீழே விழுந்தா, அது இன்னொன்னுல ஈர்ப்பு சக்தி குறைவான மாதிரி தெரியுது... ஒன்னுல பாம் வெடிச்சா, அது இன்னொன்னுல பனிப்புயலா உணரப்படுது...
கனவுல இருந்து வெளியே வரணும்னா, ஒன்னு யாரவது தூக்கத்துல இருந்து எழுப்பணும், இல்லைன்னா கனவுல நாம சாகணும்... அப்பதான் அதிர்ச்சியில முழிப்பு வரும்... அதுக்காக கனவுல இருந்து வெளியே வரணும்னா, தற்கொலை பண்ணிக்கறாங்க...!!
சரி... கனவெது நிஜமெதுன்னு எப்படி தெரியும்? கனவுல இருக்க வரைக்கும் அது உண்மை மாதிரிதானே தெரியும்... அதுக்காக ஒவ்வொருத்தரும் ஒரு பொம்மை, பம்பரம் இப்படி ஏதாவது ஒன்னு வச்சுருக்காங்க... ஹீரோ அந்த பம்பரத்தை உருட்டி விட்டா நிஜ உலகத்துல சில நொடிகள் சுத்திட்டு நின்னுடும்... அதுவே கனவுன்னா, ரொம்ப நேரம் சுத்தவோ, சுத்திட்டே இருக்கவோ வாய்ப்பு இருக்கு... அதை வச்சுதான் எது கனவு, எது நிஜம்னு கண்டுபிடிக்கறாரு.. இப்படி படம் முழுக்க ஏகப்பட்ட டெக்னிக்...
இன்னொன்னு கவனிச்சு இருக்கீங்களா? பத்து நிமிஷம் தூங்கினாலும், கனவுல ரெண்டு மணி நேரம் இருந்தா மாதிரி இருக்கும்... ஏன்னா கொஞ்ச நேர கனவுலயே, நாம ரொம்ப வேகமா பல விஷயங்களை யோசிக்கறோம்.. அதுனால நமக்கு ரொம்ப நேரம் கனவுல இருந்த மாதிரி தோணுது... அதுவே கனவுக்குள்ள கனவுன்னு, மூணு நாலு கனவு உள்ள போயிட்டா, பத்து நிமிஷ தூக்கம், முதல் கனவுல ஒரு மணி நேரமாவும், அதுக்குள்ள வர்ற ரெண்டாவது கனவுல சில நாட்களாவும், மூணாவது கனவுல சில வருஷமாவும் இருக்க மாதிரி தோணும்...
கனவுல செத்துப்போயி, ஆனா நிஜத்துல மயக்கத்துல இருந்தா, எங்க போறதுன்னே தெரியாம, ஒரு விசித்திரமான கனவுலகத்துல பல வருஷங்கள் இருக்க வேண்டியிருக்கும்... (அதாவது நிஜத்துல சில நிமிஷங்களே, கனவுல சில வருஷங்கள் மாதிரி தோணும்...) முன்னாடி ஒரு தடவை அப்படி மாட்டிகிட்ட ஹீரோவும் அவர் மனைவியும், 50 வருஷம் கனவுலயே வாழ்ந்து இருக்காங்க...!! அதுல இருந்து வெளியே வர கனவுல தற்கொலையும் பண்ணிக்கறாங்க... ஆனா, நிஜ உலகத்துக்கு வந்தும், அதுவும் கனவா இருக்கலாம்னு நினைக்கிற மனைவி, அதுலேயும் தற்கொலை பண்ணிக்கறாங்க...!! செத்துப்போன மனைவியோட ஞாபகமாகவும், அதுக்கு தான்தான் காரணம்னு ஒரு குற்ற உணர்ச்சியோடயும் அலையறாரு ஹீரோ... அவர் கனவுலத்துல சீரியஸான வேலை பார்த்துகிட்டு இருக்கப்போ, அவர் மனைவி வந்து காரியத்தை கெடுத்துடறாங்க... அவங்கதான் செத்துட்டாங்களே?? அப்பறம் எப்படி கனவுலகத்துக்கு வரமுடியும்..? அதாவது, அவர் மனைவியோட ஞாபகம் வந்து அவரை திசை திருப்பறதா அவரே நினைச்சுக்கறாரு... (இருக்குற குழப்பம் பத்தாதுன்னு, ஸ்ப்ளிட் பர்சனாலிட்டி ரேஞ்சுக்கு இது வேற...) அவர் மனைவியோட ஞாபகங்கள்தான் கிட்டத்தட்ட வில்லன் மாதிரி... அதாவது, அவர் மனைவியின் ஞாப்கத்துக்கு ஒரு சீக்ரெட் தெரியக்கூடாதுன்னா, அதை ஹீரோவுக்கே தெரியாம வச்சுருக்கணும்...!!
இதுவரைக்கும் கான்செப்ட் மட்டும்தாங்க சொல்லியிருக்கேன்... கதை இன்னும் நிறைய இருக்கு... அதெல்லாம் நீங்களே பாருங்க... ரெண்டரை மணி நேரம் போறதே தெரியலை... காலி பாப்கார்ன் பாக்கெட்டை கீழே வைக்கிறதுக்கு கூட கவனத்தை திருப்பமுடியலை... அவ்வளவு வேகம், விறுவிறுப்பு... ஆறு நாடுல படமெடுத்தாங்க, படம் முழுக்க ஆக்ஷன்தான், இசை பரபரன்னு இருக்கு, டி காப்ரியோ பின்னியிருக்காரு, ஏகப்பட்ட திருப்பங்கள் இருக்கு அப்படின்னு எல்லாம் ஆயிரத்தெட்டு விஷயங்கள் இருக்கு... அதெல்லாம் சொல்லணும்னா மெமெண்டோ மாதிரி பொறுமையா தொடர்பதிவு எழுதணும்...
அந்த பணக்காரனோட மனசுல ஒரு ஐடியாவை பதிக்கணும்ன் சொல்லி, கடைசில படம் முடியும்போது நம்ம மனசுலேயே ஒரு ஐடியாவை பதிச்சுட்டு போயிடறாங்க... ஹீரோ அந்த பணக்காரன்கிட்ட பண்ணற “இன்செப்ஷன்” திட்டம் மாதிரி, இந்த படமே நோலன் நம்மகிட்ட பண்ணற ”இன்செப்ஷன்”-ன்னு தோணுது...
சிக்ஸ்த் சென்ஸ் ரேஞ்சுக்கு ஒரு க்ளைமாக்ஸை எல்லாம் அலட்டாம சாதாரணமா சொல்லிட்டுப் போயிருக்காங்க... படம் முடியறப்போ, தியேட்டர்ல “ஹோ....” அப்படின்னு ஒரு ஆச்சர்ய சத்தத்தை இப்பதான் முதல் முறையா கேக்கறேன்... ஆனா ஒன்னு, அந்த க்ளைமாக்ஸை சீரியஸா எடுத்துகிட்டு ரொம்ப யோசிச்சு யாரும் தற்கொலை பண்ணிகிட்டா, அதுக்கெல்லாம் நான் பொறுப்பில்லை...
இயக்குனர் நோலன்... குப்ரிக்கோட புதுமையையும், ஸ்பீல்பெர்க்கின் வியாபார திறமையையும் கலந்துகட்டி 32 அடி பாயறாரு... Capra, Kubrick, Coppola மாதிரி இயக்குனர்களும், Casablanca, Vertigo, 2001 Space Odyssey, Shining மாதிரி படங்களும் முதல்ல பல வருஷங்கள் யாருமே கண்டுக்காம இருந்து, நாளாக ஆக, இப்பதான் தலையில தூக்கி வச்சு கொண்டாடறாங்க... அதுமாதிரி இன்னும் 50 வருஷம் ஆனாலும், இந்தப்படம் சினிமா வரலாற்றின் முக்கிய படமாக இருக்கும்... இது இன்னுமொரு கமர்ஷியல் ஆக்ஷன் குப்பையில்லை... புத்திசாலித்தனமான சினிமாவின் உச்சகட்டம்...