தேமதுர தமிழோசை உலகமெல்லாம்
பரவும் வகை செய்தல் வேண்டும்
- பாரதியார்
செழுமையும் தொன்மையும் நிறைந்த தமிழ் என்னும் ஆலமரத்தின் விழுதுகள் பாரெங்கும் பரவி இருக்க, அதில் ஒரு விழுதாக வேரூன்றியது தான் இரிச்மண்ட் தமிழ்ப் பள்ளி. பதினைந்து ஆண்டுகளுக்கும் மேலாக தம் தமிழ் கற்பிற்கும் பணியினை செவ்வனே செய்து வருகிறது. சிறிய குழுவை அமைத்து அதன் மூலம் தமிழ் மொழியை கற்று தந்த எங்களுக்கு அமெரிக்க தமிழ் கல்வி கழகம் ஒரு சிறந்த வழித் துணையாக இருந்தது.
கடந்த பத்து ஆண்டுகளாக அமெரிக்கத் தமிழ்க் கல்விக்கழகத்தின் பாட புத்தகங்களை பயன்படுத்தி வருகிறது. ஆரம்ப காலத்தில் 20 - 30 மாணவர்களையும், 4 - 5 ஆசிரியர்களையும் கொண்டு தொடங்கிய இப்பள்ளி, இன்று மழலை வகுப்பு முதல் நிலை 8 வகுப்புகள் வரை, 183 மாணவர்கள் மற்றும் 19 ஆசிரியர்கள் என விரிவடைந்துள்ளது.
ஆசிரியர்கள் : ஆசிரியர்களின் உன்னதமான சேவை இங்கே மறக்க முடியாத ஒன்றாகும். தமிழை குழந்தைகளுக்கு புகட்டும் பாசமும், அறிவு சார்ந்த வழிகளும்
அவர்களின் தனித் திறமை. இதனால் மாணவர்கள் சேர்க்கை அதிகரிக்க தொடங்கியது, மேலும் பெற்றார்களின் பங்கேற்பும் அதிகரித்தது.
மாணவர்கள் மென்மேலும் வளர எங்கள் பள்ளி புதிய முறைகளில் போட்டிகள் வைக்க தொடங்கியது. மாணவர்கள் வெகு உற்சாகத்துடனும் கலந்து கொண்டனர். அது ATA நடத்திய தமிழ் போட்டிகளில் பங்கு பெற முக்கிய காரணம். எங்கள் பள்ளி மாணவர்கள் தேசிய அளவில் போட்டிகளில் கலந்து விருதுகளை வென்று வருகின்றனர்.
தன்னார்வலர்கள்: எங்கள் பள்ளி ஆசிரியர்கள் தங்கள் பணியை தடையின்றி செய்வதற்கு பக்கபலமாகவும், உறுதுணையாகவும் இருக்கும் தன்னார்வலர்கள் உதவி குறிப்பிடத்தக்கது. இவர்கள் தங்கள் நேரத்தை ஒதுக்கி ஆண்டு முழுவதும் துணை ஆசிரியை, வீட்டுப்பாடம் சரிபார்ப்பது மற்றும் நிகழ்ச்சி ஒருங்கிணைப்பு, தேர்வு நேர உதவி என்று மிக சிறப்பாக உதவிகள் செய்து வருகிறார்கள்.
பள்ளியின் சாதனைகள்:
முத்தமிழ் என்னும் இயற்தமிழ், இசைத்தமிழ், நாடகத்தமிழ் ஆகிய மூன்றையும் மாணவர்கள் வெளிப்படுத்தும் வகையில் நமது பள்ளியின் முயற்சிகள் கீழ் வருமாறு:
இது கொரோனா பேரிடர் காலம் என்பதால் மெய்நிகர் வகுப்புகள் நடைபெறுவது அனைவரும் அறிந்ததே. இக்காலத்திலும் மாணவர்கள் தம் தமிழ் திறமையை வளர்க்கவும், வெளிப்படுத்தும் வகையில் மார்ச் மாதம், 2021 ஆம் ஆண்டு ஆத்திச்சூடி, திருக்குறள், நாட்டுப்பற்றுப் பாடல், பேச்சுப் போட்டி ஆகிய போட்டிகளை மெய்நிகர் முறையில் சிறப்பாக நடத்தியது. வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகளும் சான்றிதழ்களும் அனுப்பி வைக்கப்பட்டது. இந்த நிகழ்வு மாணவரிடத்தும் பெற்றோரிடத்தும் மிகுந்த வரவேற்பைப் பெற்றது குறிப்பிடத்தக்கது.
இரிச்மண்ட் தமிழ் சங்கத்தின் மாத இதழ் "கதம்பம்" இதழில் தமிழ் மாணவர்கள் என்னும் பகுதியில் மாதம் ஒரு வகுப்பு ஒரு தலைப்பு என்ற அடிப்படையில் தமிழ் ஆசிரியர்கள் அறிவுரையின் படி கதை, கட்டுரை, ஓவியம், மாறு வேடம் என பல்வேறு தலைப்புகளில் பள்ளி மாணவர்களின் பங்களிப்பு வெளியாகிறது.
பீட்ஸ் ரேடியோ நடத்திய சிறுவர்களுக்கான ஒரு நிமிட சவால் என்ற தமிழ் நிகழ்ச்சியில் நம் பள்ளியின் மாணவ மாணவியர் கதை, பாடல், திருக்குறள் ஒப்புவித்தல் என சிறப்பாக பங்களித்தது ஒலிபரப்பாகியது.
அமெரிக்காவின் பல்வேறு மாகாணங்களில் நடைபெற்ற பல போட்டிகளிலும் நம் பள்ளி மாணவ மணிகள் பங்குபெற்றதும் வெற்றி பெற்றதும் பெருமைக்குரியது.
தமிழ் வளர்ப்பு என்பது நம் அடுத்த தலைமுறைக்கு தமிழைக் கொண்டு சேர்ப்பதுவே ஆகும். எக்கண்டம் சென்றாலும் எந்நாட்டில் வாழ்ந்தாலும் நம் தாய் தமிழ் மறவாத தமிழ் உள்ளங்களின் ஆதரவோடும், மாணவ மணிகளின் முயற்சியோடும், ஆசிரிய பெருமக்களின் ஆற்றலோடும் இரிச்மண்ட் தமிழ்ப் பள்ளி நம் தாய் தமிழை அடுத்தடுத்த தலைமுறைக்கு கொண்டு சேர்க்கும் பணியினை காலம் கடந்து என்றும் செவ்வனே செய்வதே பள்ளியின் நோக்கம்.
தமிழன் என்றொரு இனமுண்டு
அவனுக்குத் தனியொரு குணமுண்டு
அமிழ்தம் அவந்தம் மொழியாகும்
அன்பே அவனது வழியாகும்
- கவிஞர் நாமக்கல் இராமலிங்கம்