கல்வியின் அவசியம்

கல்விப் புரட்சி

இலவசப் பள்ளிக் கல்வித் திட்டம்

வேத விக்ஞான் மகா வித்யா பீடம் 1981 ஆம் ஆண்டு ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர் அவர்களால் துவக்கப் பட்ட முதல் கிராமப் பள்ளியாகும். ஸ்ரீ ஸ்ரீ அவர்கள் வாழும் கலை மையத்திற்கு அருகில் சில உள்ளூர் சிறுவர்கள் புழுதியில் விளையாடிக் கொண்டிருந்ததைக் கவனித்து, கல்வி கற்கும் வாய்ப்பற்ற அவர்களுக்கு உதவும் எண்ணத்துடன் இப்பள்ளியைத் துவக்கினார்.

இக்குழந்தைகளைக் கவனித்துக் கொண்டு அவர்களுக்கு அடிப்படை சுகாதாரம்,கல்வி சார்ந்த விளையாட்டுக்கள், இவற்றைக் கற்பித்து, இலவச மதிய உணவு அளிப்பதற்கு ஓர் உள்ளூர் தன்னார்வத்தொண்டர் நியமிக்கப் பட்டார். இது குழந்தைகளுக்கும் அவர்களது பெற்றோர்களுக்கும் பெரும் கவர்ச்சியாகக் காட்சியளித்தது. இந்தப் பணி இன்று வரையில் தொடர்கின்றது. பள்ளி படிப்படியாக முன்னேறி ,ஒரு முறையான பாடத்திட்டம் ஏற்படுத்தப் பட்டு மாணவர் மற்றும் ஆசிரியர்களின் எண்ணிக்கை அதிகரித்தது.

இன்று இப்பள்ளியானது இந்தியாவில் கல்விப் புரட்சியினை ஏற்படுத்தி வரும் கிராம மற்றும் பழங்குடி பகுதிகளிலுள்ள இது போன்ற சுமார் 404 இலவசப் பள்ளிகளுக்கு முன்னுதாரணமாகத் திகழ்கின்றது.

முதல் தலைமுறை மாணவர்கள் :

அனேகமாக 90 சதவீதம் மாணவர்கள் முதல் தலைமுறையாகக் கல்வி கற்பவர்கள். மேலும் இப்பள்ளி 100 சதவீதம் தேர்ச்சி விகிதம் பெற்றுள்ளது.

"இந்த இளம் வயதில் என் மகள் வயல்களில் வேலை செய்து கொண்டிருந்திருப்பாள். அவளுக்கு இத்தகைய பள்ளிக் கல்வி கிடைக்குமென நாங்கள் கனவிலும் எதிர்பார்க்க வில்லை. அவள் பள்ளிக்குச் செல்வதைக் காணும்போது மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது" என்று கூறுகின்றார், திருமதி சாவித்திரி என்னும் தாய்.

மன அழுத்தமற்ற பள்ளி:

மாணவர்கள் பள்ளிக்குச் செல்ல தடையாக கருதப்படும் காரணிகளை நடுநிலைப் படுத்தும் பொருட்டு அவர்களுக்கு சீருடை, காலணிகள், புத்தகங்கள்,எழுது பொருட்கள், பேருந்து வசதி, பகலுணவு ஆகிய அனைத்தும் வழங்கப் படுகின்றன. மாணவர்கள் உடல் மற்றும் மன நலம் ஆகியவற்றை அடையும் பொருட்டு , யோகா தியானம், விளையாட்டுக்கள், நடனம், இசை, வரைதல் சித்திரம் தீட்டுதல் போன்ற நுண்கலைகள்,ஆகியவை பாடத்திட்டத்தின் முக்கிய பகுதியாக உருவாக்கப் பட்டுள்ளன.

குழந்தைகளுக்கான வாழும் கலைப் பயிற்சியாகிய ஆர்ட் எக்ஸ்செல் பயிற்சி சீராக மாணவர்களுக்கு நடத்தப் படுகின்றது. இப்பயிற்சி வீட்டில் எவ்விதமான எதிர்மறை பாதிப்புக்கள் இருந்தாலும் அவற்றைக் கையாளும் திறனை அவர்களுக்கு அளிக்கின்றது. வெளிப்புற மருத்துவ வசதியும், நடமாடும் மருந்தகமும் இவர்களுக்கு கிடைக்ககூடியவையாகும்.

மாணவர்கள் அரசியல் அமைப்பினைப் பற்றித் தெரிந்து கொள்ள வைக்கவும் அவர்களுடைய தலைமைப் பண்புகளை வளர்க்கவும் பள்ளியில் ஒரு தனி குழுவமைப்பு உள்ளது. பள்ளி மாணவர்களே இக்குழு உறுப்பினர்களைத் தேர்ந்தெடுக்கின்றார்கள். இதன் மூலம் குழந்தைகள் இந்திய ஜனநாயக அமைப்பினைப் பற்றியும் ஆட்சி பற்றியும் நடைமுறையில் தெரிந்து கொள்கின்றனர். இந்தக் குழு சிறிய வகுப்பு மாணவர்களின் பொறுப்பையும் பள்ளியினை நடத்துவதற்குத் தேவையான உதவியையும் செய்கின்றார்கள்.

வளரும் சமுதாயம்:

பெண் குழந்தைகளின் கல்வி பெண்கள் அதிகாரம், இவற்றினை வலியுறுத்தி, தொழில் கல்வியான தையல், கணினிப் பயிற்சி தச்சு வேலை ஆகியவை கற்பிக்கப் பட்டு உயர்நிலைக் கல்விக்குச் செல்லவும் ஊக்குவிக்கப் படுகின்றார்கள்.

முன்னாள் மாணவருக்கும் பள்ளிக்கும் இடையே பந்தத்தை காக்கும் பொருட்டு,முன்னாள் மாணவர் சந்திப்பு ஏற்பாடு செய்யப் படுகின்றது. முன்னாள் மாணவர் தங்கள் அனுபவங்களைப் பகிர்ந்து கொண்டு இப்போதுள்ள மாணவர்களை தங்களுடைய மேற்படிப்பைத் தொடரவும் நோக்கங்களை அடையவும் ஊக்குவிக்கின்றனர். முன்னாள் மாணவர் ,இந்நாள் மாணவரின் பெற்றோரையும் சீராகச் சந்தித்து, கல்வியின் முக்கியத்துவத்தைப் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துகின்றனர்.