நமது சமூகத்தில் குடும்ப சுப நிகழ்ச்சிகளில் முக்கிய இடம் வகிப்பது உணவுகளே. அவ்வுணவுகளின் மதிப்பறியாமல் நாம் அன்றாடம் அவற்றை வீணடிக்கிறோம். அவ்வாறு உண்ணத் தகுந்த உணவுகளை வீணாக்காமல் குறிப்பிட்ட காலநேரத்தில் எடுத்துச்சென்று பசியால் வாடுபவர்களுக்குப் பகிர்ந்தளிப்பதே NO FOOD WASTE அமைப்பின் செயல்பாடாகும். இல்ல நிகழ்ச்சிகள் மட்டுமின்றி உணவகங்கள், மண்டபங்கள், பள்ளி விடுதிகள் போன்ற இடங்களில் இந்த அமைப்பின் சேவைத் தொடர்ந்துகொண்டே இருக்கின்றது.
90877 90877 என்ற எண்ணுக்குத் தொடர்புகொண்டால் அவ்விடத்துக்க்கு அமைப்பின் தன்னார்வலர்கள் செல்வார்கள். அதன் பின்னர் உணவுகளைச் சேகரிக்கும் இடங்களிலேயே அவ்வுணவு உண்ணத் தகுந்ததா என்பதைப் பரிசோதனை செய்தபின்னரே அவ்வுணவை அமைப்பின் தன்னார்வலர்கள் எடுத்துச் செல்கின்றனர். இந்த அமைப்பானது கோவையை தலைமையிடமாகக் கொண்டு தர்மபுரி, சேலம், திருச்சி, சென்னை, ஈரோடு, திருப்பூர், திருநெல்வேலி, ஆந்திராவின் தடேபள்ளிகுடேம் ஆகிய நகரங்களில் தற்போது செயல்படுகின்றன.
2014 ஆண்டு முதல் தற்போது வரை சுமார் 267 டன் உணவுகள் வீணாக்காமல் பசியால் வாடுபவர்களுக்கு பகிர்ந்தளிக்கப்பட்டுள்ளது. NO FOOD WASTE அமைப்பின் செயல்பாடுகளே `கூட்டத்தில் ஒருவன்' திரைப்படத்தில் க்ளைமாக்ஸ் காட்சியில் இடம்பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
உலகில் 80 கோடி பேர் பட்டினியால் பாதிக்கப்பட்டுள்ளனர். இது உலக மக்கள் தொகையில் சுமார் 11% ஆகும். ஊட்டச்சத்து குறைவால் ஆண்டுதோறும் 30 லட்சம் குழந்தைகள் ஐந்து வயதுக்குள் இறக்கின்றனர். நிகழ்ச்சிகளில் சமைக்கும் உணவுகளில் மூன்றில் ஒரு பங்கு உணவு வீணாக்கப்படுகின்றது. இதுபோன்ற மனவேதனையான செய்திகள் நெஞ்சைப் பதற வைக்கிறது. எனவே, மக்கள் உணவகங்களுக்குச் செல்லும்போது தேவையான அளவு உணவை மட்டும் வாங்கி உண்ணும் பழக்கத்தை ஏற்படுத்திக்கொள்ள வேண்டும். நமது இல்லங்களிலே குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் உணவை வீணாக்காமல் அவற்றின் மதிப்பறிந்து தட்டிக்கழிப்பதை பழகுதல் வேண்டும். நாம் அனைவரும் தன்னார்வலர்களை மட்டும் நம்பியிராமல் நாமே தேவைக்கு அதிகமான உணவை வீணாக்காமல் அவற்றை தங்கள் அருகிலுள்ள பசியால் வாடுபவர்களுக்குப் பகிர்ந்தளிக்கும் பழக்கத்தை ஏற்படுத்திக்கொள்ள வேண்டும்.
பகிர்ந்தளிப்போம் - பசியை ஒழிப்போம்.