SRI.V.GOVINDAN-NADACHI

தியாகராஜர், இந்த கீர்த்தனையில், இறைவனை எவ்விடத்தில் தேடினால் கிடைப்பான்

என்று தெரிவிக்கின்றார். தீர்த்த யாத்திரை செய்வதனால் - புண்ணிய ஸ்தலங்களுக்குச் செல்வதனால்

மட்டும் இறைவனைக் காண இயலாது.

இவையெல்லாம் ஆரம்ப கட்டமே. இறைவன் உள்ள இடம் நமது இதயத்திலே.

எடுத்த எடுப்பிலேயே இறைவன் உள்ளே இருக்கின்றான் என்று பாமரர்களுக்குக் கூறினால்

அவர்களுக்கு அது விளங்காது. அது மட்டுமல்ல,

அதனையே மக்கள் தவறாகப் பொருள் கொண்டு,

இறைவன் வேறெங்குமில்லை, என்னுள்ளேயே இருக்கின்றான்,

நான் என்ன வேண்டுமானாலும் செய்யலாம் என்ற அசுர எண்ணங்கள் தோன்ற வாய்ப்புண்டு.

ஆகவே, நமது முன்னோர்கள் 'சத்யம் வத, தர்மம் சர' - 'உண்மை பேசு, அறவழி நட' என்றார்கள் - அறஞ்செய விரும்பு என்பது குழந்தைகளுக்குப் படிப்பிக்கும் ஆத்திச்சூடி வசனம். அதன் பின் கோவிலுக்குச் செல்லுதல், உண்ணும் உணவை இறைவனுக்கு நைவேத்தியம் செய்தல், பூஜைகள் செய்தல் ஆகிய வழக்கங்களை மேற்கொள்கின்றோம். ஆனால்,

இந்த நடவடிக்கைகளை ஏன் செய்கின்றோம் என்று அறிந்துகொள்வதற்கு நாம் சிறிதாவது

முற்படவேண்டும்.

நம் அன்றாட வாழ்க்கை வெறும் சடங்குகளாக மாறிவிடக்கூடாது.

அதன் உட்பொருள் அறிய வேண்டும்.

அப்போதுதான் நாம் செய்யும் காரியங்களின் உண்மைப் பொருளும், நோக்கமும் விளங்கும்.

ஆனால் பொதுமக்கள் வாழ்நாள் முழுதுமே இப்படிப்பட்ட சடங்குகளிலே கழித்துவிடுகின்றனர்.

சிலர் அற்ப அறிவு பெற்று, முற்றுமுணர்ந்தவர் போன்று வேடமிடுகின்றனர்.

இவர்கள் எல்லோருக்கும் ஒரு சாட்டையடியாக, தியாகராஜர் இந்தப் பாடலை இயற்றியுள்ளார். இறைவன் இதயத்திலுள்ளான் என்பதை உபநிடதங்களும்,

உபநிடத சாரமான கீதையும், மற்றும் நமது முன்னோரும்,

துறவிகளும் ரிஷிகளும் தெள்ளத்தெளிவாகக் கூறியுள்ளனர்.

இறைவனுக்கு அந்தர்யாமி என்று பெயர் - அதாவது உள்ளியங்குவோன் என்று.

அந்த இயக்கம் எப்படிப்பட்டது என்று அறியவேண்டுமானால் சான்றோரின் அண்மை அவசியம்.

அல்லது புத்தகங்கள் மூலமும் ஓரளவுக்கு உண்மையை நாம் அறிந்துகொள்ளலாம். பரமான்மா எனப்படும் வஸ்து பூரணம் என்று அழைக்கப்படும்.

இதற்கு ஆங்கிலத்தில் சரியான மொழிபெயர்ப்பில்லை.

Infinity என்ற சொல் ஓரளவுக்கு இதனைச் சுட்டுகின்றது.

இந்த பூரணம் எங்கும் பரிணமித்துள்ளது.

அதுதான் இந்த அண்டங்களாகவும், நட்சத்திரங்களாகவும், சூரிய மண்டலமாகவும், பூமியாகவும்,

ஐம்பெரும் தத்துவங்களாகவும் -

ஆகாயம், நெருப்பு, நீர், காற்று, பூமி - விரிந்து அதனின்று தோன்றிய

அசைவன மற்றும் அசையாத பொருள்களாகவும் பரிணமித்துள்ளது.

அந்த வகையில் மனிதப்பிறவியும் அந்த பூரணத்தின் பரிணாமமே. மனிதனுக்கு ஆறாவது அறிவுள்ளது.

அந்த அறிவு அவனை கேள்வி கேட்கவைக்கின்றது.

அந்தக் கேள்வியினால் பிறந்ததுதான் இறைவன் என்பது.

கேள்வி கேட்பவன், கேட்கும் கேள்விகளையெல்லாம் கேட்டுவிட்டு,

கேள்வி கேட்பவன் யார் என்று ஒரு கேள்வியும் கேட்பானேயாகில்

அவனுடையே கேள்விக்கு விடை கிடைக்கும்.

இதைத்தான் ரமண மகரிஷி, 'நான் என்றால் யார்' என்று தேடு என்கின்றார். இந்த 'நான்' எனப்படும் ஆன்மாதான் அந்த பூரணத்தின் உறைவிடம்.

ஆனால் அதனை உடல் என்று பலர் பொருள் கொள்கின்றனர்.

அது மிகவும் தவறு.

உடல், மனம், அறிவு இவற்றைத் தாண்டி,

வெறும் பிரக்ஞை consciousness வடிவமாக உள்ள அந்த ஆன்மாவும்,

பூரணம் எனப்படும் பரமான்மாவும் ஒன்றே.

அந்த உணர்வுதான் முக்தி என்றும் வீடு என்றும்,

realisation என்றும் கூறப்படும்.

இது ஒரு நிலையல்ல (status).

எப்படி சிறையிலிடப்பட்டவன் விடுதலைப்பட்டால் உணர்வானோ அத்தகைய உணர்வுதான்.

பூரணத்திற்கு எந்தத் தளையுமில்லை.

அதுபோன்றே இந்த ஆன்மாவுக்கும் எந்தத்தளையுமில்லை.

ஆனால் எதுவரைக்கும் நமக்கு ego எனப்படும் உடலுணர்வு இருக்கின்றதோ

அதுவரை நாம் சிறையிலிருப்பது போன்றதே. கீர்த்தனைக்கு வருவோம்.

தியாகராஜருக்கு ராமன்தான் பரமான்மா.

அவன் பிறந்த இடம் அயோத்தியா.

வைணவர்கள் அதனை வைகுண்டம் என்பர்.

சைவர்கள் கயிலாயம் என்பர்.

அயோத்தியா, ராமன் பிறந்ததனால் ஒரு புண்ணிய ஸ்தலம்.

ஆனால் அயோத்திக்குச் சென்றால் ராமனைக் காணமுடியுமா என்று கேட்கின்றார். ஐயா, பல காத தூரம் நடந்து நடந்து அயோத்திக்குச் சென்றீரே,

ராமனைக் கண்டீரோ என்று கேட்கின்றார் பல்லவியில். எதற்காக அயோத்திக்குச் செல்லவேண்டும் -

இறைவனுடன் கூடுவதற்கு -

இறைவன் அங்கிருந்தால்தானே அவனுடன் கூடமுடியும் -

அந்தப் பூரணன், ஆன்மா எனும் ராமனாக இங்கு -

நமது இதயத்திலல்லவோ இருக்கின்றான்

என்கின்றார் அனுபல்லவியில். சரணத்தில்

தியானயோகம் பயில்வோரைக் கிண்டல் செய்கின்றார்.

தியானம் செய்வது குரங்கு மனதைக் கட்டுப்படுத்துவதற்கு.

ஆனால் அப்படி கட்டுப்பாடு செய்வதன் தாத்பர்யம் -

உண்மைப் பொருள் - அறியாது போனால் தூக்கம்தான் வரும்.

எனவே, தியானத்தில் நாம் இறைவனைத் தேடுகின்றோம்.

ஆனால் லலிதா சகஸ்ரநாமத்தில் தாயாருக்கு

'த்யான-த்யாத்ரு-த்யேய' என்று பெயருண்டு -

அதாவது - தியானிக்கப்படும் பொருள் - தியானமெனும் செயல் -

தியானிப்பவன் இவை மூன்றுமே இறைவியென்ற பொருள்.

ஆக, தியானம் செய்வது ஒரு சடங்காகிவிடக்கூடாது.

பிறப்பு இறப்பற்ற இடம் அந்த ஆன்ம உணர்வுதான். தியாகராஜர் பக்தி மார்க்கம் ஒன்றே

எளிதான முறையில் இறைவனிடம் கூடும் முறை

என்பதனை சரணத்திலே வலியுறுத்துகின்றார்.

சரணத்தின் முதலிரண்டு வரிகளும்

தியான முறையை சடங்காக செய்பவரும்,

அத்தகைய வேடமணிபவரையும் குறிக்கும்.

இறைவன் கண்ணெதிரே இருக்கின்றான் -

நமது மனச்சாட்சியாக -

உலகத்தில் காணும் பொருள் யாவும் இறைவனின் பரிணாமமே -

காண்பவன், காட்சி, காணும் செயலாக உள்ள

இறைவனை பக்தி மார்க்கத்தினால்

சுலபமாக அடையலாம் என்பது சரணத்தின் பொருள்.