தேசிய மாணவர் படை (N. C. C.)
1. குறிக்கோள்:
அ. இளைஞர்களிடையே நற்குணங்கள் வீரம், தோழமையுணர்வு, கட்டுப்பாடு, தலைமை ஏற்று நடத்தும் திறன், விளையாட்டுகளில் ஆர்வம், தன்னலமற்ற சேவையுணர்வு முதலியவற்றை வளர்த்து பயனுள்ள குடிமக்களை உருவாக்குவது.
ஆ. ஒழுங்கமைதியுடைய பயிற்சி பெற்ற நோக்கம் கொண்ட இளைஞர்களுக்கு முப்படைகள் உள்ளிட்ட வாழ்வின் எல்லா நிலைகளிலும் தலைமையேற்று நடத்தும் திறமை அளித்து நாட்டுப் பணிக்கு அவர்கள் எப்பொழுதும் தயாராக இருக்கும்படியான மனித வாய்ப்பு வளத்தை உண்டாக்குகிறது.
2. பயன்கள்
மாணவர்கள் இதில் சேர்வதன் மூலம் படைப் பயிற்சி பெறுவதோடன்றி தொழிற் கல்லூரிகளில் (பொறியியல், மருத்துவக் கல்லூரி) சேர வாய்ப்பு அளிக்கப்படுகின்றது. தொழிற்சாலைகளிலும், அலுவலகங்களிலும் சிறப்பான வாய்ப்பு அளிக்கப்படுகின்றது. தேசிய மாணவர் படையில் சான்றிதழுடன் பட்டமும் பெற்றிருந்தால் மைய தேர்வாணைக்குழு தேர்வு எழுதாமலேயே இராணுவ அதிகாரிகளாகத் தேர்ந்தெடுக்கப்படுகின்றனர்.
3. பயிற்சி
தேசிய மாணவர் படை கட்டாயமானது அல்ல. விருப்பத்தின்பாற்பட்டது. ஆனால் சேர்ந்த பிறகு அதன் சட்ட திட்டங்களுக்குக் கட்டுப்பட்டு நடக்கவேண்டும். அலுவலர் அல்லது மற்ற மாணவரின் ஆணைகளுக்கு உடனடியாகக் கட்டுப்படவேண்டும். வாரத்தில் 4 மணி நேரப் பயிற்சி, ஒரு வருடத்தில் 86 மணி நேரப் பயிற்சி கற்றுக் கொடுக்கப்படும். பயிற்சி நாட்களில் பயிற்சிக்குப் லிறகு சிற்றுண்டி வழங்கப்படும்.
4. பயிற்சி முகாம்
தேர்ந்தெடுக்கப்பட்ட மாணவர்கள் கன்னியாகுமரியிலிருந்து காஷ்மீர் வரை எந்த இடத்திலும் பயிற்சி முகாமிற்கு அனுப்பப்படுவார்கள். பயிற்சி முகாம் பெரும்பாலும் படிப்புப் பாதிக்காவாறு விடுமுறை நாட்களில் நடத்தப்படும்.
5. தேர்வுகள்
தேசிய மாணவர் படையின் மாணவர்கள் 2 ஆண்டுகள் பயிற்சி முடித்தால் பி தேர்வும், 3 ஆண்டுகள் பயிற்சி முடித்தால் சி தேர்வும் எழுதத் தகுதி உடையவர்கள். ஒவ்வொரு ஆண்டும் குறைந்தபட்சமாக 75% வருகைப்பதிவு இருக்கவேண்டும்.
6. உடை
தேசிய மாணவர் படை மாணவர்களுக்குப் பயிற்சி உடை பயிற்சிக் காலத்தில் இலவசமாக வழங்கப்படும். சலவை செய்ய மாதம் ரூ.200 வீதம் 6 மாதங்களுக்கு வழங்கப்படும். பயிற்சி முடிந்தவுடன் ஆடைகளைத் திருப்பித் தரவேண்டும்.
தேசிய மாணவர் படை மாணவர்கள் தாங்கள் ஒழுங்காகவும், கட்டுப்பாடாகவும் இருப்பதோடல்லாமல் தம்முடன் பயிலும் பிற மாணவ நண்பர்களையும் அவ்வழியே நடத்திச் செல்ல கடமைப்பட்டவர்கள்.