மன அழுத்தம் மற்றும் மனத்தளர்ச்சியின் நரம்பியல்புகள்
ஆய்வுக்குறிக்கோள்
நாம் தினசரி வாழ்வில் எதிர்கொள்ளும் அனுபவங்கள் மூளையில் பல்வேறுபட்ட மாற்றங்களை உண்டாக்குகிறது. எங்களது ஆய்வுகள் பின்வரும் இயல்புகளை விரிவாக ஆய்வுக்குட்படுத்த கோருகிறது (1) பல்வேறு உணர்வு நிலைகளின் நரம்பியல் அடிப்படைகள் (2) இந்த நரம்பியல் அடிப்படைகளை சராசரி வாழ்க்கை அனுபவங்கள் மற்றும் மனநிலை பாதிக்கும் வேதி மூலக்கூறுகள் (மனச்சோர்வு நீக்கி (antidepressant) மற்றும் செரோடோனின் (serotonin) அமைப்பில் பங்காற்றும் போதை வஸ்துக்கள்(serotonergic psychedelics) எப்படி பாதிக்கின்றன (3) பதட்டம் (anxiety) மற்றும் மனத்தளர்ச்சி நிலைகள் (depression) இந்த நரம்பியல் அடிப்படைகளை எவ்வாறு பாதிக்கின்றன. பதட்டம் மற்றும் மனத்தளர்ச்சி உண்டாக்கும் விலங்கு மாதிரிகளைக் கொண்டு இந்த நோய்நிலைகளின் (குறிப்பாக குழந்தைப்பருவத்து பிரச்சினைகள் மூளை வளர்ச்சியில் உண்டாக்கும் மாற்றங்கள்) மூலக்கூறு அடிப்படைகள், நரம்பு அமைப்புகள், அவற்றின் ஆற்றல் நிலைகள் மற்றும் செயல்களை எவ்வாறு பாதிக்கின்றன என்றும் இவை எவ்வாறு ஒருவரது இயல்பு, நடத்தையில் மாற்றத்தை ஏற்படுத்துகின்றன என்பதையும் நாங்கள் ஆய்வுக்குட்படுத்தி புரிந்துகொள்ள முயல்கிறோம். சூழல் காரணிகள், மருந்தியல் கருவிகள் (pharmacological), மரபணு (genetic), மரபணுமருந்தியல் (pharmacogenetic) கருவிகளைக் கொண்டு ஆரம்பகால மூளை வளர்ச்சி நிலைகள் எவ்வாறு ஒருவரது ஆளுமையை எவ்வாறு பாதிக்கின்றன என்பதையும் நாங்கள் ஆய்வுக்கு உட்படுத்துகிறோம். பிரதானமாக, உணர்ச்சிகளை உணரும் நரம்பு அமைப்புகள் அவற்றின் குழந்தை பருவத்து வளர்ச்சி நிலையில் எவ்வாறு மனஅழுத்தம் மற்றும் பல காரணிகளால் பாதிக்கப்படுகின்றன என்றும், அவை எப்படி வயதுவந்தோரின் ஆளுமையை, குறிப்பாக வாழ்க்கை பிரச்சினைகளை துணிந்து எதிர்கொள்ளும் அல்லது அத்தகையதோர் திராணியற்ற மனநிலையை ஏற்படுத்துகின்றன என்பதையும் கேள்விக்கு உட்படுத்த விழைகிறோம். குறிப்பாக செரோடோனின் மூலக்கூறு மற்றும் அதன் புரதஏற்பி 2ஆ (5HT2A receptor) ஆகியவை எவ்வாறு ஒருவரது நடத்தை மற்றும் பதட்டம், மனத்தளர்ச்சி விலங்கு மாதிரிகளில் காணும் நரம்பியல் மாற்றங்களை உண்டாக்குகின்றன என்பதையும் பரிசோதிக்கிறோம். நரம்பு செல்கள் மற்றும் அமைப்புகளின் அடிப்படை ஆற்றல் நிலைகள் எவ்வாறு ஒருவரது மனநிலையை மாற்றியமைக்கும் வல்லமை படைத்தவை என்றும், குறிப்பாக செல்களின் நுண்ணுறுப்பு, ஆற்றல் மையம் மைட்டோகாண்ட்ரியா (mitochondria) எவ்வாறு மனநோய் நிலைகளில் மாறுபடுகிறது என்றும் நோய் தோற்றுவிப்பதில் எவ்வாறு பங்காற்றுகின்றன என்றும் வினவுகிறோம். எங்கள் ஆய்வுகள் மூளை வளர்ச்சி நிலைகளில் எதிர்கொள்ளும் பிரச்சினைகள், நரம்பியல் அழற்சி (inflammation), மைட்டோகாண்ட்ரியா செயல்கள் மற்றும் குறைபாடுகள் எவ்வாறு மனநோய்சிதையில் பங்காற்றுகின்றன என்றும் எவ்வாறு வயது மூப்பில் மூளையில் ஏற்படும் மாற்றங்களையும் ஊக்கப்படுத்துகின்றன என்பதையும் புரிந்து கொள்ள உதவும். இவையல்லாது நாள்பட்ட மனச்சோர்வுநீக்கி மருந்துப் பயன்பாடு எவ்வாறு மூலக்கூறு மற்றும் நரம்பு செல் அடிப்படைகளை மாற்றியமைக்கின்றன என்பதிலும் கவனம் கொள்கிறோம். நரம்பியல் குருத்தணுக்கள் (neural stem cells) மற்றும் நரம்பு அமைப்புகளின் நெகிழ்வுத்தன்மை எவ்வாறு மனநிலை மாற்றங்களில் பங்காற்றுகின்றன என்பதையும் ஆய்வுக்கு உள்ளாக்குகிறோம்.
Credits: Dr. Balaganesh Janakiraman