மாலே! மணிவண்ணா! மார்கழி நீராடுவான்
மேலையார் செய்வனகள் வேண்டுவன கேட்டியேல்
ஞாலத்தையெல்லாம் நடுங்க முரல்வன
பாலன்ன வண்ணத்து உன் பாஞ்சசன்னியமே
போல்வன சங்கங்கள் போய்ப்பாடுடையனவே
சாலப்பெரும் பறையே பல்லாண்டிசைப்பாரே
கோல விளக்கே கொடியே விதானமே
ஆலினிலையாய்! அருளேலோர் எம்பாவாய்.
“நீங்கள் வேண்டுவது என்ன என்று கேட்டாயல்லவா? பதில் கூறிவிட்டேன், “ என்ற ஆண்டாளைப் பார்த்து கண்ணன் “ ஏது பெரிய பட்டியலாக இருக்கிறதே?”என்றான்.
“ எங்கள் மூத்தோர் கூறியபடி பாவை நோன்பு செய்வதற்கு வேண்டிய சாமக்ரியைகள் இவை.” என்ற ஆண்டாளைப்பார்த்து,
“நீ கூறியவை தருவதில் ஒரு சங்கடம் இருக்கிறதே. உலகமே நடுங்கும் ஓசை கொண்ட என் பாஞ்சஜன்யம் போன்ற சங்கங்கள் பால் போல் வெண்மையானவை வேண்டும் என்றாய். பாஞ்ச ஜன்யத்தைப் போலே இன்னொரு சங்கம் ஏது? இதை உனக்கு கொடுத்துவிட்டு நான் என் செய்ய?” என்றான்.
“ உன் வாக் சாதுர்யத்தை என்னிடம் காண்பிக்கிறாய். நான் என்ன கேட்கிறேன் என்பது உனக்குத் தெரியாதா? பாலன்ன வண்ணம் என்று சொன்னது வெண்மையான சங்கம் தான் அதிக ஓசை எழுப்பும் என்பதனால். இங்கு வெண்மை என்பது சத்துவ குணம்.அது மனதில் பக்தி என்னும் பெரிய ஓசை எழுப்பி ரஜஸ் தமஸ் இவற்றை போக்கிவிடும்.
“ மேலும் உன்னை ஆலின் இலையாய் என்று குறிப்பிட்ட காரணம் பாற்கடலில் ஆதிசேஷன் மேல் துயின்ற நீ ஒரு ஆலிலை மேல் பாலகனாக தோன்றினாயே உன்னால் ஒன்று என்ன, ஆயிரம் வெண்சங்கங்களை உண்டாக்க முடியாதா?”
“ உன் பாஞ்ச ஜன்யத்தின் ஒலியாலேயே உலகத்தை உருவாக்க முடியும். ஏனென்றால் அது பிரணவமல்லவா. நீ பாஞ்சஜன்யத்தை ஞாலம் எல்லாம் நடுங்க முழங்கினபோதே அத்தனை கௌரவர்களும் அழிந்தனர். யுத்தம் என்பது ஒரு நாடகம். அதனால் கன்னத்தைத் தடவப் பெற்ற துருவன் ஞானத்தைப் பெற்றானே.”
“ஒரு தர்ப்பைப்புல்லை ப்ரும்மாஸ்திரமாக்கினாய். கடல் ஒரு கால்வாய் போல கடந்தாய். குரங்கு சேனையுடன் சென்று ராவணனை ஒரு கொசுவை அடிப்பது போல அழித்தாய். மேலும் கிருஷ்ணாவதாரத்தில் நீ செய்யாத அத்புதமா? என்றாள் ஆண்டாள்.
கண்ணன் கூறினான் . “அது சரி. பாஞ்ச ஜன்யத்தின் உனக்கு மிகவும் ஈடுபாடு இருப்பதாகத் தோன்றுகிறது. அதற்கு மூன்று வரிகளை கொடுத்திருக்கிறாயே?”
“மூன்று வரிதானா ? உன் அதரத்தில் அமரும் பாக்கியம் பெற்ற அதற்கு பத்து பாசுரங்கள் அல்லவா அளித்திருக்கிறேன் “ என்ற ஆண்டாள் மேலும் கூறினாள்.
“இங்கு மூன்றுவரிகள் அமைக்கக் காரணம் பஞ்சஜன்யத்தின் த்வனி ஓம்காரம். அதற்கு அ, உ, ம் என்று மூன்று மாத்திரைகள் . அது மட்டுமா. பாஞ்சஜன்யம் கடலில் பிறந்து அசுரன் உடலில் வளர்ந்து உன் கரத்தை அடைந்தது என்ற மூன்று நிலை. அதே போல நீயும் மதுரையில் பிறந்து, கோகுலத்தில் வளர்ந்து துவாரகையில் குடியேறினாய் அல்லவா?”
“அபாரம்,” என்ற கண்ணன் சங்கத்தைப் போல மற்றவைகளுக்கும் என்ன உண்மையான பொருள் என்று கூறவேண்டியதுதானே ?” என்றான்.
ஆண்டாள் விடையளித்தாள்.
“சாலப்பெரும்பறை பறை வாத்தியம் அல்ல. உன் நாமசங்கீர்த்தனம்.அது எங்கும் முழங்கி மற்ற சப்தங்களை விலக்க வேண்டும். பல்லாண்டிசைப்பாரென்றது உன் பக்தர்களை . அவர்களின் சத்சங்கத்தால் உலக விஷயங்கள் மீது பற்று விலகும்.”
கோலவிளக்கு உன்னைப்பற்றிய ஞானமாகிய தீபம். கொடி, உன் புகழ் பரப்பும் பக்தி என்ற த்வஜம், விதானம் உன் அருள் என்கிற பந்தல்.”
கண்ணன் கூறினான்.
“ இது 26 ஆவது பாசுரம்.. இது அஷ்டாக்ஷரத்தையும் த்வய மந்திரத்தையும் குறிப்பதாக அடியார்கள் கூறுகின்றனர். 2+6 =8, அஷ்டாக்ஷரம். ,2 த்வயமந்த்ரம்.6 என்பது அதன் ஆறு பாதங்களைக் குறிக்கிறது என்று கூறுவர். “
கூடாரை வெல்லும் சீர் கோவிந்தா! உன்தன்னைப்
பாடிப்பறை கொண்டு யாம் பெறும் சம்மானம்
நாடுபுகழும் பரிசினால் நன்றாக
சூடகமே தோள் வளையே தோடேசெவிப் பூவே
பாடகமே யென்றனைய பல்கலனும் யாமணிவோம்
ஆடையுடுப்போம் அதன் பின்னே பாற்சோறு
மூடநெய் பெய்து முழங்கை வழிவாரக்
கூடியிருந்து குளிர்ந்தேலோ ரெம்பாவாய்.
“இப்போது கோவிந்த நாம சங்கீர்த்தனமா? “என்ற கண்ணன் , ஆனால் அது எனக்கு மிகவும் பிடித்த நாமம். “ என்றான்,
“ இது உன் பக்தரகளுக்கும் பிடித்த நாமம் ஆயிற்றே. ஒருமுறை அல்ல மூன்றுமுறை இந்த நாமத்தால் உன்னை அழைக்கிறேன். அது பற்றிய விளக்கம் என் அடுத்த பாசுரத்தில் வரும்.:” என்ற ஆண்டாள்’
“நீ உன்னை நினையாதவரையும் உன் அன்பினாலும் குணங்களினாலும் தடுத்தாட்கொள்பவன் . அதனால் கூடாரை வெல்லும் சீர் கோவிந்தன் என்றேன். ஆனால் உன்னிடம் அன்புள்ளவர்களால் நீ வெல்லப்படுகிறாய். உன்னை முதலில் நிந்தித்த வாலி பின்னர் புகழவில்லையா? தாராவும் மண்டோதரியும் அவர்கள் கணவர்களைக் கொன்ற உன்னைப புகழ்ந்தார்களே. அவர்கள் உன் குணத்தால் வெல்லப்பட்டார்கள். ராவணன் உன் வீரத்தாலும் சூர்பனகை உன் அழகினாலும், விபீஷணன் உன் கருணையினாலும் வெல்லப்படவில்லையா? “ என்றாள்.
“நீங்கள் கேட்டதைத் தந்தேன். இப்போது உங்கள் அடுத்த நடவடிக்கையைக் காண ஆவல் கொண்டுள்ளேன்.” என்ற கண்ணனிடம்,
ஆண்டாள் கூறினாள்.
“எங்களுடைய கோரிக்கை உன்னுடன் சேர்வதே. நீ அதைத் தர சம்மதித்ததால் நாங்கள் மையிட்டேழுதோம் , மலரிட்டு முடியோம் என்று அன்று சொன்னதன் மாறாக,சூடகம்- வளை, தோள்வளை , தோடு, செவிப்பூ என்னும் ஆபரணம் , பாடகம்- கால் கொலுசு முதலியவை அணிவோம். புத்தாடை அணிவோம். ஏனென்றால் அரசர்க்கரசனான உன் முன் நிற்கத் தகுதி வேண்டும் அல்லவா.”
“நெய்யுண்ணோம் பால் உண்ணோம் என்று அன்று சொன்னோம். இன்று சர்க்கரைப் பொங்கல் மூட நெய் பெய்து முழங்கை வழியாக ஓடும்படி உண்போம்.” என்றாள்.
கண்ணன் கேட்டான். “ அதென்ன முழங்கை வழி வார, நெய்யை ஓடவிடுவானேன். அதை சாப்பிட வேண்டியது தானே ? “ என்றான்.’
“ அது ஏன் என்றால் உனக்கு பால்சோறு அதாவது அக்காரவடிசில் நைவேத்யம் செய்து விட்டு உன் முகத்தையே பார்த்துக் கொண்டு அதை சாப்பிட மறந்து விடுவோம்.” என்றாள்.
“நெய்யிடை சோறும் நியதமும் அத்தாணிச்சேவகமும்
கையிடைக்காயும் கழுத்துக்குப்பூனோடு காதுக்குக் குண்டலமும்
மெய்யிடை சாந்தமும் தந்து எம்மை வெள்ளுயிராக்கவல்ல
பையுடை நாகப்பகைக் கொடியானுக்குப் பல்லாண்டு கூறுவனே
என்று பாடிய பெரியாழ்வார் பெற்ற பெண்பிள்ளை அல்லவா நீ? “ உன்னிடமிருந்து இந்த சொற்கள் வருவதில் வியப்பென்ன? “என்றான் கண்ணன்.
“உண்மையில் நாங்கள் அணியும் பல்கலன் அஷ்டாக்ஷர மந்த்ரம், த்வய மந்த்ரம் , சரம ஸ்லோகம் இவையே . உன்னோடு சேர்ந்து இருக்கும்போது, உண்டாகும் ஆனந்தமே உன் அருளாகிற நெய் ஒழுகும் சர்க்கரைப் பொங்கல். புத்தாடை என்பது உன் கைங்கர்யம்.” என்ற ஆண்டாளைப் பார்த்து, “ உன் முகத்தைப் பார்த்தால் இன்னும் ஏதோ சொல்ல வருவது போல் தெரிகிறதே?” என்றான் கண்ணன்.
“ஆய்ப்பாடி செல்வச்சிறுமீர்காள் என்றது நீ இருக்கும் அதே பூமியில் இருப்பது. சாலோக்யம். உன் மாளிகை வருவது சாமீப்யம், உன் அருகாமை. இதற்கு முந்தைய பாசுரத்தில் நாங்கள் கேட்டவை உன்னோடு ஒத்துப்போகும் தன்மை அதாவது சாரூப்யம்.இந்த பாசுரத்தில் கேட்பது உன்னோடு கலத்தல் , சாயுஜ்யம். உன்னோடு கூடியிருந்து அடையும் ஆனந்தமே பாற்சோறு.
கறவைகள் பின்சென்று கானம் சேர்ந்துண்போம்
அறிவொன்று மில்லாத ஆய்குலத்து உன்தன்னை
பிறவிப் பெருந்துணை புண்ணியம் யாமுடையோம்;
குறைவொன்று மில்லாத கோவிந்தா! உன்தன்னோடு
உறவேல் நமக்கு இங்கு ஒழிக்க ஒழியாது
அறியாத பிள்ளைகளோம் அன்பினால் உன்தன்னைச்
சிறுபே ரழைத்தனவும் சீறியருளாதே;
இறைவா! நீ தாராய் பறையேலோ ரெம்பாவாய்.
போன பாசுரத்திற்குப் பிறகு தன்னை ஆயர்பாடியில் இருப்பதாகவே கற்பனை செய்துகொண்ட ஆண்டாள் கூறினாள்.
“உன்னுடன் இணையும் ஆனந்தம் கிடைக்க வேண்டும் என்று கேட்டோம் நீயும் தந்தேன் என்றாய் . ஆனால் எங்களுக்கு அதற்கு தகுதி உண்டா என்று தெரியவில்லை.”
“ ஏன் இந்த திடீர் சந்தேகம்? “ என்றான் கண்ணன்.
“ ஆண்டாள் கூறினாள்.” நீ குறைவொன்றும் இல்லாத கோவிந்தன், நான் இப்போது உன்னை எங்கும் நிறைந்தவனாகக் காண்கிறேன்.
நாங்கள் பசுக்கள் பின்னால் சென்று கானகத்தில் உணவு உண்ணும் அறிவொன்றும் இல்லாத ஆய்க்குலம். நீ பிறந்து இங்கு வந்தது நாங்கள் செய்த புண்ணியம். அறியாத பிள்ளைகளாகிய உன் பெருமை தெரியாமல் உன்னை எங்களுக்கு இணையனானவன் போல கண்ணா கோபாலா என்று சிறு பேரால் அழைக்கிறோம். நீ சீறினால் என்ன செய்வது என்ற பயம் வந்து விட்டது. ஆனாலும் உன்னை விட்டுவிட்டு எங்களால் இருக்க முடியாது ஆதலால் அருள வேண்டும்.” என்றாள்.
கண்ணன் கூறினான் .”கண்ணா கோபாலா என்பது சிறு பேறல்ல. நான் இங்கு கிருஷ்ணனாக இருக்கையில் என்னை நாராயணா, என்று அழைத்தால்தான் சிறுபேர்,. வேஷத்திற்கேற்ற பெயர் சொல்லித்தானே கூப்பிடவேண்டும். நாடகத்தில் நடிக்கும் ஒருவனை அவன் இயற்பெயர் சொல்லி அழைப்பார்களா? “
“நான் இந்த இடைக்குலத்திற்கு ஏன் வந்தேன் தெரியுமா? நீங்கள் செய்த புண்ணியம் கோஸம்ரக்ஷணம். பசுவின் தேஹத்தில் பதினான்கு லோகங்களும் இருக்கின்றன. ஆதலால் பசுவை மூன்று தரம் சுற்றி வருவது இந்த பிரபஞ்சத்தை சுற்றி வருவதாகும்.”
“ஆமா அறிவேன். அதனால்தானே கௌதமர் காமதேனுவைச் சுற்றி வந்து அஹல்யையை அடைந்தார். “ என்றால் ஆண்டாள்.
“ நீ அறிவொன்றும் இல்லாத ஆய்க்குலம் என்றாயே , நான் பக்தியை மட்டுமே பெரிதாகக் கருதுகிறேன். சாஸ்த்ர அறிவையோ யாகம் தவம் இவைகளையோ அல்ல. ‘நாஹம் வேதைர்ந தபஸா ந தானேன ந ச இஜ்யயா, பக்த்யா து அனந்யயா லப்ய: என்று அன்று பார்த்தனுக்குக் கூறியபடி பக்தியால் மட்டுமே என்னை அடைய முடியும் . தவத்தினாலோ தானதர்மங்கள் செய்வதாலோ யாகங்கள் செய்வதாலோ அல்ல” என்றான் கண்ணன். .
“ ஆம் அறிவேன். சபரியும் குஹனும் உன் அருள் பெறவில்லையா.? ஆனால் சபரி குருவின் அருளால் அவள் கொடுத்த பழங்களை நீ உண்ணும் பாக்கியம் பெற்றாள். குஹனுக்கு அது கிடைக்கவில்லையே. ஆயர் சிறுமியர் குருவுக்கு எங்கே போவது? “ என்றாள் ஆண்டாள்.
“ஆயர்களுக்கு அவர்கள் சேவை செய்யும் பசுக்களே குருமார்கள். திலீபன் நந்தினிக்கு சேவை செய்து அருள் பெற்றது போல.”
“உண்மை அறிவு என்பது என்னை அறிவது மற்றதெல்லாம் அறியாமையே, “ என்ற கண்ணன் , இந்த பாசுரத்தில் கோவிந்தன் என்ற சொல்லுக்கு விளக்கம் கூறுவதாக உரைத்தாயே.” என்றான்.
.” சொல்கிறேன், என்ற கோதை,
“கோ என்றால் மோக்ஷம் அல்லது சுவர்க்கம். அதைக்கொடுப்பதால் நீ கோவிந்தன்..
கோ என்றால் அஸ்த்ர சஸ்த்ரம். அதை நீ விச்வாமித்ரரிடம் இருந்து பெற்றதால் கோவிந்தன்.
கோ, பசுக்கள் அவற்றை அறிந்தவன் அதாவது அவைகள் தண்டகாரண்ய ரிஷிகள் என்று அறிந்தவன்.
கோ என்றால் வேதம் நீ வேதத்தால் அறியப்படுபவன்..
கோ என்றால் வஜ்ராயுதம் அதை இந்திரன் பெற வழிகாட்டியவன்.
உன்னை வேதம் சஹஸ்ராக்ஷ: என்று சொல்கிறது கோ என்றால் கண் என்றும் பொருள்.
கோ என்றால் நெருப்புஜ்வாலை. நீ சூர்யமண்டல மத்ய வர்த்தி என்று கூறுகிறது வேதம்.
கோ என்றால் பூமி. ஜலம், வேதம், இந்த்ரியங்கள் என்றும் பொருள். நீ வராஹமாக பூமியை வெளிக்கொணர்ந்தாய், மத்ஸ்யமாகவும் கூர்மமாகவும் நீரில் சஞ்சரித்தாய், வேதங்களின் உட்பொருள் ஆனாய். இந்த்ரியங்களைக் கட்டுப்படுத்துபவன் , ஹ்ருஷீகேசன்,
“ஆச்சரியமான விளக்கம், “ என்ற கண்ணன் , “ எனக்கே மறந்துவிட்ட பல அர்த்தங்களைக் கூறினாய். அதனால் தான் நீ பிறந்த இந்த ஸ்ரீவில்லிபுத்தூரை கோவிந்தன் வாழுமூர் என்று சொல்கிறார்களோ. “ என்ற கண்ணன் , முக்கியமான அர்த்தத்தை மறந்து விட்டாயோ? ‘ என்றான்.
“இல்லை மறக்கவில்லை . கோவர்தனத்தைத் தாங்கியதால் உனக்கு கோவிந்த பட்டாபிஷேகம் நடந்ததல்லவா? கோ என்றால் மலை என்றும் அர்த்தம் கோ வர்தனம் என்ற பெயர் கோ அதாவது பசுக்களை வர்தனம், செழிக்கச் செய்வதால் அதற்கு கோவர்தனம் என்ற பெயர் பொருத்தமே,’ என்ற ஆண்டாள், உன் கோவிந்த பட்டாபிஷேகம் நீ ராமனாக பட்டாபிஷேகம் செய்துகொண்டதை விட உயர்ந்தது என்று கூறுகிறார்களே , ஏன் தெரியுமா?” என்ற ஆண்டாளைப் பார்த்து
“‘சொன்னால் தானே தெரியும் என்றான்,” அந்த குறும்புக்காரன் கள்ளப் புன்னகையுடன்.
“ வால்மீகி கூறுகிறார் ராமருக்கு வசிஷ்டர் பட்டாபிஷேகம் செய்தது, ‘வஸவோ வாஸவம் யதா’ தேவர்கள் இந்திரனுக்கு செய்தது போல் இருந்தது, என்று. கோவிந்த பட்டாபிஷேகம் அந்த இந்திரனே உனக்கு செய்தானே!” என்றாள் ஆண்டாள்.
“ கோவிந்தா என்று என்னை அழைப்பவர் யாராயினும் அவரை உடனே வந்து காக்கக் கடமைப்பட்டுள்ளேன், த்ரௌபதி கோவிந்தா என்று கூவியவுடன் காத்தது போல. அதனால் எனக்கும் கோவிந்தன் என்பது மிகவும் பிடித்த பெயர். என்றான் கண்ணன்.
சிற்றஞ் சிறுகாலே வந்துன்னை சேவித்துன்
பொற்றா மரையடியே போற்றும் பொருள் கேளாய்
பெற்றம்மேய்த் துண்ணும் குலத்தில் பிறந்து நீ
குற்றேவல் எங்களைக் கொள்ளாமல் போகாது
இற்றைப் பறைகொள்வான் அன்றுகாண் கோவிந்தா!
எற்றைக்கும் ஏழேழ் பிறவிக்கும் உன்தன்னோடு
உற்றோமே ஆவோம் உனக்கே நாம் ஆட்செய்வோம்
மற்றைநம் காமங்கள் மாற்றேலோ ரெம்பாவாய்
“சிற்றம் சிறு காலே, அதிகாலையில் வந்து கோவிந்தா என்று கூறி உன்னை சேவித்து உன் பொற்றாமரை அடியைப் போற்றும் காரணம் சொல்கிறேன் கேளாய் . சற்றுத் தாமதமாக வந்தால் நீ மாடு மேய்க்கப போய்விடுவாய். மேலும். உன்னுடைய சிற்று அம் சிறுகால் உன் கட்டிலில் இருந்து வெளித்தெரிவதை காண்பது எத்தனை இன்பம்! உன் அந்த பொற்றாமரை அடிதான் எங்களை இங்கு இழுத்து வந்தது.அதைப் போற்றவே வந்தோம்.”
“ என்னைக் கூப்பிட்டால் நானே வந்திருப்பேனே. பனித்தலை வீழ நீங்கள் இவ்வளவு காலையில் வந்திருக்க வேண்டாமே ?” என்ற கண்ணனிடம்,
‘நாங்கள் கூப்பிட்டால் நீ வருவதற்கு நாங்கள் என்ன கஜேந்த்ரனா இல்லை திரௌபதியா? நாங்கள் அவ்வளவு புண்ணியம் செய்தவர்கள்: அல்ல. ஆயினும் பெற்றம் மேய்த்துண்ணும் ஆயர்குலத்தில் உதித்த நீ எங்களைக் கைவிடமாட்டாய் , எங்கள் குற்றேவலை ஏற்றுக்கொள்வாய் என்ற நம்பிக்கையில் வந்தோம் . என்றாள் ஆண்டாள்.
“மேலும் சிற்றம் சிறு காலை என்பது பிராம்ம முஹூர்த்தம். முனிவர்களும் யோகிகளும் மெல்ல எழுந்து ஹரி என்ற பேரரவம் செய்யும் வேளை. பேரரரவம் என்றால் அவர்கள் த்யானிக்கும் உன் ஸ்வரூபம் ஒன்றாகச் சேர்ந்து விஸ்வரூபம் எடுத்தது போல. அப்போது உன்னை வழிபடுவது சிறந்தது. ஏனென்றால் இந்த உலக வ்யவஹாரத்தின் சபலம் தூண்டுமுன் உன்னை நினைப்பது சுலபம்.”
“ஆன்மீகப் பொருளாவது, சிற்றம் சிறுகாலை என்பது பகவத் விஷயமான அறிவு ஏற்படுவது. அதற்கு முன் அறியாமை என்ற இரவில் தூங்கிக் கொண்டிருக்கிறோம். “
“என்னைப் போற்றும் பொருள் என்ன என்பதை இன்னும் சொல்லவில்லையே? “ என்றான் கண்ணன்.
ஆண்டாள் கூறினாள். “இற்றைப் பறைகொள்வான் அன்று , எங்களுக்கு இந்த உலகத்தின் பொருள் எதுவும் வேண்டாம். கோவிந்தா எனக் கூறி வந்து அன்று விபீஷணன் ‘த்யக்த்வா புத்ராம்ஸ்ச தாராம்ஸ்ச ராகவம் சரணம் கத:’ என்று உற்றார் உறவினர் எல்லோரையும் விடுத்து வந்தது போல் உன்னையே சரண் எனப்புகுந்தோம். “
எங்களுக்கு வேண்டியதெல்லாம் இற்றைக்கும் ஏழேழுபிறவிக்கும் உன்னோடு உற்றோராக இருக்க வேண்டும்.உனக்கே ஆட்செய்ய வேண்டும். இனி வரும் பிறவிகளிலும் உன் அடியவர்களாகி உன் சேவையில் ஈடுபடவேண்டும். “ மற்றை காமங்கள் மாற்றி எங்களை ஆட்கொள்வாயாக.:” என்றாள் ஆண்டாள்
“ இன்னும் ஏழேழு பிறவி என்றால் முக்தியை நீங்கள் விரும்பவில்லையா? “ என்றான் கண்ணன்.”
ஆண்டாள் கூறினாள். உன் கைங்கர்யத்தில் ஈடுபட்டிருந்தால் ஏழேழு பிறவியும் ஒரே பிறவி போலத்தான் இருக்கும். முக்தி என்பதில் அக்கறை இல்லை. நீ ஒருவன்தான் எல்லாப் பிறவிகளிலும் எங்கள் பந்து. மற்ற பந்துக்கள் இந்தப் பிறவியோடு சரி. “
“ அதாவது மாதா ச லக்ஷ்மீ தேவி பிதா தேவோ நாராயண:, பாந்தவா விஷ்ணுபக்தா: ச வசுதைவ குடும்பகம் “ என்ற வாழ்க்கை வேண்டும் என்கிறாய்”., என்ற கண்ணன் “உன் பாசுரங்கள் மூலம் சரணாகதிதத்துவத்தை நிலைநாட்டிவிட்டாய்.” என்றான்.
ஆண்டாள் கூறினாள். “எவரிடம் சரணாக்தி அடைகிறோம் என்பது முக்கியம். யாரிடம் சக்தி, காருண்யம் இவை உள்ளதோ அவரே சரணம் அடையத் தகுந்தவர். த்வய மந்திரமான ஸ்ரீமன் நாராயண சரணௌசரணம் ப்ரபத்யே ஸ்ரீமதே நாராயணாய நம: , பிராட்டியுடன் கூடிய உன்னை சரணம் அடைவதைக் கூறுகிறது. லக்ஷ்மணன் சீதையுடன் நீ இருக்கும்போது காலில் விழுந்தான் தன்னை வனதுக்கு அழைத்துப்போகக் கோரி. சீதையை விட்டு உன்னை மட்டும் கோரிய சூர்பனகை காது மூக்கு இழந்தாள். உன்னை விட்டு சீதையை மட்டும் கவர்ந்த ராவணன் அழிந்தான்.
அதே சமயம் சக்தியற்றவரை சரணம் அடைவது பயனற்றது என்று நீ சமுத்ரராஜனை சரணம் என்று கூறியது காட்டுகிறது. ஏனென்றால் அவன் அஸமர்த்தன்.உன்னைவிட சக்திபடைத்தவன் அல்ல. எனவே ஸமர்த்தனாகவும் காருண்யனாகவும் பிராட்டியுடன் கூடியனாகவும் உள்ள உன்னை சரணம் அடைந்தோம்.” என்றாள் ஆண்டாள்.
மேலும் கூறினாள்.
சரணாகதி என்பது ஒரு யக்ஞம். ஆத்மாதான் ஹவிஸ். அச்சுதனாகிய நீ யாகத்தீ. பிரணவம் என்பது வில். ஆத்மா அம்பு. ஆத்மாவை பிரணவத்தில் பூட்டி பிரம்மமாகிய உன்னைக் குறிவைக்க வேண்டும். “
“கண்ணன் கூறினான்.
“ஆம். உன்னுடைய திருப்பாவை ஆத்ம சமர்ப்பணம் என்ற ஒரு மகாயக்ஞம்.”
வங்கக் கடல் கடைந்த மாதவனைக் கேசவனை
திங்கள் திருமுகத்து சேயிழையார் சென்றிறைஞ்சி
அங்கப் பறைகொண்ட ஆற்றை அணிபுதுவை
பைங்கமலத் தண்தெரியல் பட்டர்பிரான் கோதை சொன்ன
சங்கத் தமிழ் மாலை முப்பதும் தப்பாமே
இங்கிப் பரிசுரைப்பார் ஈரிரண்டு மால்வரைத் தோள்
செங்கண் திருமுகத்து செல்வத்திருமாலால்
எங்கும் திருவருள் பெற்று இன்புறுவ ரெம்பாவாய்
இந்தப பதிவு ஆரம்பத்தில் ஸ்ரீவில்லிபுத்தூரில் திருப்பாவை சாற்றுமுறை நடக்கையில் அரங்கனும் ஆண்டாளும் வந்து கலந்து கொண்டனர். இப்போது இவர் இருவர் சந்நிதியிலும் அன்பர்கள் பலஸ்ருதி ரூபத்தில் உள்ள இந்த பாசுரத்தைக் கூறி சேவிக்கிறார்கள்.
வங்கக்கடல் கடைந்த மாதவன் மற்றும் கேசவன். அவனை திங்கள் திருமுகத்துச் சேயிழையார் , கோதை தலைமையில் அழகிய முகம் கொண்ட பெண்கள் சென்று, அவன் மாளிகைக்குச்சென்று, இறைஞ்சி, ப்ரார்த்தித்த, பட்டர்பிரான் மகளான் கோதையின் இந்த முப்பது சங்கத்தமிழ் மாலையை எவர் ஈரிரண்டுமால்வரைத் தோள் கொண்ட திருமாலுக்கு சமர்ப்பிக்கிறார்களோ அவர்கள் என்றும் இன்புற்று வாழ்வார் என்பது இதன் சாராம்சம்.இப்போது பாசுரத்தைப் பார்க்கலாம்.
வங்கக்கடல் என்றால் வங்காள விரிகுடாக்கடல் என்று சிலர் நினைக்கலாம் ! மாதவன் கடைந்தது திருப்பாற்கடல். ஏன் வங்க க்கடல் என்று கூறினாள்? வங்க என்றால் அழகிய என்று பொருள். பாற்கடல் அச்சுதன் குடிகொண்டதால் அழகியது. மேலும் அழகே உருவான திருமகளைத் தந்ததாலும் அமுதம் தந்ததாலும் அது அழகியது. வங்க என்ற சொல்லுக்கு அலைகள் நிரம்பிய என்றும் பொருள்.
கடைந்த மாதவன் – இங்கு மாதவன் என்ற பெயர் பொருத்தம் .ஏனென்றால் மாயா: தவ: மாதவ: . மா என்றால் லக்ஷ்மி தவ என்றால் பதி. கடலைக் கடைந்ததனால் லக்ஷ்மீபதியான அவனை இங்கு மாதவன் என்று சொல்கிறாள்.கடைந்தது மட்டும் அல்லாமல் முதலிலிருந்து கடைசி வரை, அவன் உதவினான் அல்லவா?
யாமுனாசார்யர் ஸ்தோத்ரரத்தினத்தில் கூறுகிறார் ,” யதர்த்தம் அம்போதி: அமந்தி அபந்தி ச ,” யார் பொருட்டு கடல் கடையப்பட்டதோ கட்டப்பட்டதோ என்று. அதாவது திருமகளை அடைய கடலைக் கடைந்தான் , திருமகள் அவதாரமான சீதையை அடையக் கடலைக் கட்டினான்.என்கிறார்.
இதை ஆராய்ந்து பார்க்கையில், திருமகளை அடையவே அவ்வளவு ஸ்ரமம் எடுத்துக்கொண்டான் என்று வைத்துக் கொண்டாலும், அவளைத்தன் திருமார்பில் வைத்து அவன் ஹ்ருதயத்தை தயைக்கு இருப்பிடமாகக் கொள்வதற்கே என்று அறியலாம். ஆகையால் அவன் உலகக்ஷேமத்துக்காகவே திருமகளை அடைய விரும்பினான் என்று விளங்குகிறது.
பாற்கடலைக் கடைந்தவன் கோகுலத்தில் தயிர்கடலையும் கடைந்தான் கோபியர் உள்ளத்தையும் கடைந்தான், இது பின்னர் மகாபாரதம் என்ற ரணக்கடலைக் கடைவதற்கோ என்று தோன்றுகிறது.
கேசவன் என்ற சொல் அழகிய கேசத்தை உடையவன் , கேசி என்ற அசுரனைக் கொன்றவன், நாராயணன் என்கிற பரப்ரம்மஸ்வரூபம் க என்ற பிரம்மாவையும் ஈஸ என்னும் சிவனையும் வசத்தில் கொண்டது என்றும் பொருள் கொள்ளலாம். கேசவன் மார்கழி மாதத்தின் அதிஷ்டான தெய்வம், இந்த பாசுரம் கடைசி ஆதலால் அடிபாடி என்று தொடங்கி கேசவன் என்று கேசத்தைக் குறிப்பதாக உள்ளதால் இது பாதாதி கேசாந்த ஸ்தோத்திரம் ஆகிறது.
அடுத்து பைங்கமலத்தண்தெரியல் பட்டர்பிரான் என்றதன் பொருள், விஷ்ணுசித்தர் அதாவது பெரியாழ்வார் தாமரை மற்றும் துளசி அணிவாராம்.தாமரை ஸ்ரீதேவியையும் துளசி நாராயணனையும் குறிப்பது.
கோதையின் பாசுரங்கள் மேன்மையில் சங்கத்தமிழை ஒத்தது. அதனால் சங்கத்தமிழ் மாலை என்பது பொருத்தமே.சங்கம் என்றால் சேர்வது. பல பக்தர்கள் கூடி இதை அனுபவிக்கிறார்கள்.
ஈரிரண்டு மால்வரைத்தோள் செங்கண் திருமுகத்துச் செல்வத்திருமால். மால் போல் அதாவது மலை போன்ற நான்கு தோள்களை உடையவன், தாமரைச்செங்கண் கொண்டவன். இதுவரை சரி. அதென்ன செல்வத்திருமால்?
இதற்குப் பல பொருள் கூறுகிறார்கள்.
திருமால் என்பது ஸ்ரீனிவாசன் திருமகளுடன் சேர்ந்து செல்வத்திருமால் ஆகிறான்.
எண்ணற்ற பக்தகோடிகள்ஆகிய செல்வம் உடையவன்.
ஆண்டாள் சூடிக்கொடுத்த பூமாலை, பாடிக்கொடுத்த பாமாலை என்ற செல்வம் உடையவன்.
நம்மாழ்வார் அவனை செல்வநாரணன் என்று குறிப்பிடுகிறார்.
ராமானுஜரால் செல்வப்பிள்ளாய் என்று அழைக்கப் பட்டவன்.
இந்த திருப்பாவையை அறிந்து திருமாலை வணங்குபவர் எங்கும், இகலோகம் பரலோகம் இரண்டிலும் திருவருள் பெற்று இன்புறுவர்,
இவ்வாறாக இந்த திருப்பாவை பற்றிய பதிவு நிறைவு பெறுகிறது.
‘