புள்ளும் சிலம்பின காண் புள்ளரையன் கோவிலில்
வெள்ளை விளிச்சங்கின் பேரரவம் கேட்டிலையோ
பிள்ளாய் எழுந்திராய் பேய் முலை நஞ்சுண்டு
கள்ளச்சகடம் கலக்கழிய காலோச்சி
வெள்ளத்து அரவில் துயிலமர்ந்த வித்தினை
உள்ளத்து கொண்டு முனிவர்களும் யோகிகளும்
மெல்ல எழுந்து ஹரி என்ற பேரரவம்
உள்ளம் புகுந்து குளிர்ந்தேலோ ரெம்பாவாய்
கண்ணன் இதைக் கேட்டுவிட்டு கூறினான்.
கோதையாக வந்த உன் நோக்கம் பக்தி ஒன்றே என்னை அடைய எளிதான வழி என்பதைக் காண்பிக்கவே என்று அறிவேன். இந்தப் பாவை நோன்பைத் தொடங்கி இளம் கன்னியரை அதிகாலையில் எழுந்து உன்னுடன் நாம சங்கீர்த்தனம் செய்து அதன் மூலம் அதைக் காண்போர் மனதில் பக்தியை ஊட்டுவது என்பது நல்ல முடிவு. ஆனால் உன் சொற்கள் ஆயர்பாடி சிறுமியரை அல்லவா நினைவூட்டுகின்றன? “ என்றான்.
“ஆம் . என்னை ஒரு கோபியாக பாவித்து மற்ற என் தோழிகளையும் அவ்வாறே கற்பனை செய்தேன். இந்த பாவை நோன்பு வியாசரால் பாகவதத்தில் கோபியர் செய்ததாகத்தானே சித்தரிக்கப் பட்டுள்ளது? “ என்றாள் கோதை.
“முடிவில் என்னைக் கண்டு உங்கள் கோரிக்கையை முன்வைக்கத்தான் கூட்டமாக வந்தீர்களாக்கும் . அப்போது நான் கொடுத்துத்தானே ஆகவேண்டும்? என்றான் கண்ணன்.
“நாங்கள் கூட்டமாக வந்ததன் காரணம் என்னவென்றால், தனியாக வந்தால் உன்னைக் கண்டதும் உலகமே மறந்து விடும்.அப்புறம் எப்படி வேண்டுவன கேட்பது? அதற்குத்தான் சேர்ந்து வந்தோம். ஒருவருக்கொருவர் தைரியம் சேர்க்க,” என்ற கோதை, மேலும் கூறலுற்றாள்.
“ ஒரு மனதிற்கினிய நிகழ்வு மற்றவருடன் சேர்ந்து அனுபவித்தால் அதிகம் சந்தோஷத்தைக் கொடுக்கிறது. நல்லதை நாலுபேருடன் பகிந்துகொள்ள வேண்டும் அல்லவா? பரதன் கௌசல்யையிடம் தனக்கு ராமன் காட்டுக்குப் போவதைப் பற்றி முன்னமே தெரிந்திருந்தால் என்னென்ன பாவத்தின் பலனை அனுபவிப்பான் என்று கூறும்போது, ஒரு இனிய பண்டத்தை யாருக்கும் கொடுக்காமல் உண்ணும் பாவத்தையும் செர்த்த்குக் கொள்கிறான் அல்லவா? எங்களுக்கு உன்னை விட இனியது எது?” என்றாள்.
புள்ளினம் கூவும் , சங்கம் ஒலிக்கும் கோவில் புள்ளரையன் கோவில் என்றாயே அது கருடனைத்தானே குறிக்கும் ? என்ற கண்ணனிடம் ,
“புள்ளரையன் கோவில் என்றது உன் கோவிலை. புள்ளரையன் என்பது கருடன் தான் பட்சிகளுக்கு அரசன் என்ற அர்த்தத்தில்ஆனால். அந்தப் புள்ளரையனின் கோ, நீதானே. உன் இல் அல்லது இல்லம் தானே கோவில். “
“ அங்கு ஒலிக்கும் சங்கு உன் அன்பர்களின் மனதில் புகுந்து உன்னை நினைவூட்டுகிறது. அதனால் அதன் ஓசை பேரரவம் ஆகிறது. “
கண்ணன் கூறினான். “பூதனை சகடாசுரன் இவர்களைப் பற்றி சொல்ல விசேஷ காரணம் ஏதும் உளதோ?”
“ஆம், சிறு குழந்தையாய் இருந்தபோதே நீ செய்த அற்புதச் செயல்கள் அல்லவா அவை? “ என்றாள் ஆண்டாள்.
“ நீ பூதனயிடம் ஸ்தன்யபானம் செய்தபோது கண்ணை மூடிக்கொண்டாயாமே அவள் உன் கடாக்ஷம் பட்டால் அவளை கொள்ள முடியாது என்றா? “ என்ற கோதையைப் பார்த்து சிரித்த கண்ணன் “ ஆம் அப்படித்தான் என் பக்தர்கள் கற்பனை செய்து கொள்கிறார்கள். நாராயண பட்டாத்ரி என் கால் பட்டு உடைந்த சகடத்தின் ஒரு துகள் கூட காணப்படவில்லை என்று கூறின மாதிரி.” என்றான்.
“ ஆமா அவர்களுக்கு நீ ஆயர் குல சேய் அல்ல , வெள்ளத்து அரவில் துயிலமர்ந்த வித்து என்பது தெரியாதல்லவா? என்றாள் கோதை.
“உலகத்தின் வித்தாகிய நீ பாற்கடலில் பாம்பணை மேல் பள்ளி கொள்ள உன்னை முனிவர்களும் யோகிகளும் உள்ளத்தில் கொண்டு மெல்ல எழுந்திருக்கிறார்கள் தங்கள் த்யானத்தில் இருந்து. ஏன்தெரியுமா ? உன் துயில் கலையக்கூடாதாம். அப்போதுதானே அவர்கள் வந்து உனக்கு திருப்பள்ளி எழுச்சி பாடமுடியும்? “
“அப்படியானால் ஹரி என்ற பேரரவம் எங்கிருந்து வந்தது என்றான்” கண்ணன்.
“அப்படிக்கேள் , நீ உறங்கினால் அல்லவா உன்னை எழுப்ப முடியும்? உன்னைக் கண்டவுடனே மெய்ம்மறந்து ஹரி ஹரி என்று பேரரவம் செய்தார்கள். ‘ என்றாள் ஆண்டாள்.
“வெள்ளத்து அரவில் துயிலமர்ந்த வித்தினை உள்ளத்து கொண்டு,” என்ற சொற்கள் எனக்கு உன் தந்தையான பெரியாழ்வாரையே சொல்வது போல் இருக்கிறது. அவர்தானே ‘ அரவத்தமளியினோடும் அழகிய பாற்கடலோடும் அரவிந்தப்பாவையும் தானும் அகம்படி வந்து புகுந்து ‘ என்று நான் அவர் உள்ளத்தில் எவ்வாறு ஆதிசேஷனுடனும் பாற்கடலுடனும் , லக்ஷ்மி யோடும் வந்து புகுந்தேன் என்று பாடினாரே!” என்றான் கண்ணன்.
அதற்குக் கோதை “ அவர் மட்டும் அல்ல, உன் பக்தர்கள் அனைவரும் முனிவர்களும் எல்லோரும் உன் நாமத்தைச் சொல்ல அதுவே பேரரவம் ஆயிற்று.” என்றாள்.
‘ஆம். அந்த பக்தி வெள்ளத்தில் நானும் மூழ்கினேன்.” என்றான் கண்ணன்.
“உண்மையில் சொல்லப்போனால் பாற்கடல் எது? பாலைப்போல் தூயதாக உள்ள உள்ளமே அல்லவா? அதில் அரவு என்னும் ஆயிரம் தலை நாகம் அதாவது உலக இச்சைகள் எல்லாம் அடங்கி அதில் நீ மட்டுமே துயில் கொள்கிறாய். மற்ற இச்சைகள் அடங்கி உள்ளம் பால்போல் தூயதாக ஆகுமேயானால் இறைவனாகிய நீ தானாகவே வந்து வாசம் செய்கிறாய் என்று அர்த்தம்.” என்று சொன்ன கோதையிடம் “நன்று நன்று” என்றான் அந்த ரங்கசாயி.
கீசு கீசு என்றெங்கும் ஆனைச்சாத்தன் கலந்து
பேசின பேச்சரவம் கேட்டிலையோ பேய்ப் பெண்ணே
காசும் பிறப்பும் கலகலப்ப கைபேர்த்து
வாச நறுங்குழல் ஆய்ச்சியர் மத்தினால்
ஓசைப்படுத்த தயிர் அரவம் கேட்டிலையோ
நாயகப் பெண்பிள்ளாய் நாராயணன் மூர்த்தி
கேசவனைப் பாடவும் நீ கேட்டே கிடத்தியோ
தேசம் உடையாய் திறவேலோரெம்பாவாய்
கண்ணன் கூறினான். “ விடியற்காலையைப் பற்றி ஒரு அழகான வர்ணனை. ஆனைச்சாத்தன் என்ற வலியன் குருவி கீச் கீச் என்று ஒன்றோடுஒன்று கலந்து பேசும் அரவம், ஆய்ச்சியர் தயிர் கடையும் அரவம். இதுதான் எனக்குப் பிடித்தது. வெண்ணை கிடைக்கும் அல்லவா?”
“ தயிர் கடையும் அரவம்ஆயர்பாடியில் ஏன் உரக்கக் கேட்கிறது தெரியுமா? நீ வந்தபின்னர் பால் மிகுந்த ஆடையுடன் இருக்க தயிர் பாறைபோல் கெட்டியாக ஆகிவிட்டது. அதை மிகுந்த பிரயாசையுடன் கடையும்போது , காசும் பிறப்பும் என்னும் அவர்கள் கழுத்தில் உள்ள ஆரம் சப்தம் செய்தது.” என்ற ஆண்டாளைப் பார்த்து,
“வாச நறும் குழல் என்றாயே , நக்கீரர் காதில் விழப்போகிறது. பெண்களின் கூந்தலுக்கு இயற்கை மணம் கிடையாது என்று கூறிக்கொண்டு வரப் போகிறார், “ என்று நகைத்தான் கண்ணன்.அதற்கு கோதை பதில் கூறினாள்.
“அவர்கள் யார்? அப்சரஸ்திரீகள் தானே கோபியராக வந்தனர். அவர்கள் கூந்தலில் நறுமணம் வீசுவதில் வியப்பென்ன?”
“நான் பேசின பேச்சரவம் என்று கூறியது பட்சிகளின் பேச்சை அல்ல. ஒரு யானையைக் கொன்று மற்றொரு யானைக்கு அபயம் அளித்ததால் ஆனைச்சாத்தன் என்றது உன்னை. கலந்து பேசின பேச்சரவம் நீயும் திருமகளும் பக்தர்களைக் காக்க நிகழ்த்திய சம்பாஷணை. உங்களைப் பற்றி நினைவே இல்லாமல், நாங்கள் நாராயணன் மூர்த்தி கேசவன் ஆகிய உன்னைப் பாடுவது கேட்டும் மஞ்சத்தில் கிடந்தவளை பேய்ப்பெண்ணே என்றேன்.” என்றால் ஆண்டாள்.
அப்போது கண்ணன் கேட்டான். “உடனே நாயகப் பெண்பிள்ளாய் என்றாயே , அவள் கோபித்துக் கொள்வாள் என்றா?”
“ இல்லை. அவள் நாங்கள் கூப்பிட்ட உடனே வந்து சேர்ந்து நாமசங்கீர்த்தனத்தில் கலந்து கொண்டதால் நாயகப் பெண்பிள்ளாய் என்றேன்.
“உன் சொற்களுக்கு சில அன்பர்கள் வேறு உள் அர்த்தம் கொள்கிறார்கள். காசு பிறப்பு என்பது ஸ்ருதியும் ஸ்ம்ருதியும். கலகலப்ப என்றால் அவை சேர்ந்து ,என் புகழ் பாடுவது. வேதத்தை நன்கு கற்றுணர்ந்த, வாச நறும் குழல் ஆய்ச்சியர், பக்தி என்னும் மணம் வீசும் ஆசார்யர்கள், கை பேர்த்து, உயர்ந்த கைகளுடன் என் பெருமையைக் கூறுகிறார்கள், என்று பொருள் எனக் கூறுகிறார்கள்.
“அது நான் செய்த பாக்கியம், உன் திருவருள்,” என்ற கோதை, தயிர் கடைவது என்பது பக்தி என்ற மத்தினால் மனத்தைக் கடைவது என்று வைத்துக் கொண்டால் நீ வெண்ணை என உன்னை வெளிப்படுத்துவாய். “ என்றாள்.
கீழ்வானம் வெள்ளென்று எருமை சிறுவீடு
மேய்வான் பரந்தன காண் மிக்குள்ள பிள்ளைகளும்
போவான் போகின்றாரை போகாமல் காத்துன்னை
கூவுவான் வந்து நின்றோம் கோது கலமுடைய
பாவை எழுந்திராய் பாடிப்பறை கொண்ட
மாவாய் பிளந்தானை மல்லரை மாட்டிய
தேவாதி தேவனை சென்று நாம் சேவித்தால்
ஆவாவென்று ஆராய்ந்து அருளேலோரெம்பாவாய்
“ கீழ் வானம் வெள்ளென்று அதாவது கிழக்கு வெளுக்க, நீராடப் போகும் மிக்குள்ள பிள்ளைகளை போகாமல் காத்து இந்தப் பெண்ணை எழுப்புகின்றாய். சரி. எருமை சிறு வீடு மேய்வான் என்றாயே அது எதற்கு.” என்ற கண்ணனிடம்,
பொழுது விடிந்ததும் முதலில் எருமைகளை மேய்ச்சலுக்கு விடுவார்கள் பிறகுதான் பசுக்களை மேய்ச்சலுக்கு அழைத்துப்போவது என்று கேள்விப்பட்டிருக்கிறேன். அது ஏன் என்று கோபாலனாகிய உன்னையன்றி வேறு யார் அறிவார்? “ என்றால் ஆண்டாள்.
“ ஆம். அதைக் கூறவே இந்தக் கேள்வி, “ என்ற கண்ணன் , விடியல்காலையில், புற்கள் மீது பனி படர்ந்திருக்கும்.இது பசுக்களுக்கு ஒவ்வாதது. ஆனால் எருமைகள் அந்தப்புல்லைத் தின்று அதிகமாக பால் கறக்கும் இயல்புடையவை.,.” என்றான் .
"கோதுகலமுடைய பாவை என்றால் அது கௌதூஹலம் என்ற வடமொழிச்சொல்லின் திரிபா "என்றவனிடம் ஆண்டாள் கூறினாள்.
"அப்படியும் எடுத்துக்க்கொள்ளலாம். இது உனக்குப பிரியமான பக்தரைக் குறிக்கிறது. பாவை என்றால் பதுமை போல உன்னையே நினைத்து அசைவற்றிருப்பவர்.
"கோதா என்ற பெயருக்கேற்ப சொல்லின் சக்தியால் பக்தியை ஊட்டும் உன்னை விடவா எனக்கு பிரியமானவர் ஒருவர் இருக்க முடியும்."
“ சரி, அடுத்த வரிகளைப் விளக்குகிறாயா? “ என்றான் கண்ணன்.
“மாவாய் பிளந்தான் என்பது நீ கேசி என்ற குதிரை வடிவில் வந்த அரக்கனை வாய் பிளந்து அழித்தது. மல்லரை மாட்டிய, என்பது கம்சனால் ஏவப்பட்ட மல்லரை வீழ்த்தியது.”
“அப்படிப்பட்ட உன்னை சென்று நாம் சேவித்தால், ஆவாவென்று ஆராய்ந்து, நம் பக்தியை உள்ளபடி அறிந்து அருள்வாய் என்று கூறினேன்.” என்றாள் ஆண்டாள்.
“நான் ஆராய்ந்தா அருளுகிறேன்? என் பக்தர்கள் யாவரும் எனக்கு ஒன்றுதானே? “என்றான் கண்ணன்.
“ஆம் உண்மை. ஆனால் முதல் அடி நாங்கள் எடுத்து வைக்க வேண்டும் அல்லவா? அதனால்தான் சென்று நாம் சேவித்தால் நம் பக்தியை உணர்ந்து கேட்டதெல்லாம் அருள்வான் என்றேன்.” என்றாள் கோதை.
“கோதா என்ற பெயர் படைத்தவளான உன் வாக்கிலிருந்து வரும் சொற்கள் எல்லாம் உயரிய அர்த்தம் வாய்ந்தவை. இநத பாசுரத்தை என் அன்பர்கள் எப்படி எல்லாம் வர்ணிக்கிறார்கள் தெரியுமா? “ என்ற கண்ணன் மேலும் கூறினான்.
“மாவாய் பிளந்தான் என்பது இந்த்ரியங்களாகிய குதிரைகளை அடக்கி , மல்லரை மாட்டிய அதாவது எதிர்வாதம் செய்தவர்களை ஜெயித்து உலகில் பக்தியை நிலைநாட்டிய ராமானுஜர் போன்ற ஆசார்யர்களைக் குறிக்கிறது. .”
“போவான் போகின்றாரை போகாமல் காத்துன்னை கூவுவான் என்பது இந்த்ரியங்களின் வழியில் போகின்றவர்களை காத்து நல்வழிபடுத்தும் ஆசார்யர்கள். “
கோதை , “எல்லாம் உன் திருவுள்ளமே அல்லவா? என் வாக்கில் வந்த வார்த்தைகள் நீ தந்ததுதானே?” என்றாள்.
தூ மணி மாடத்து சுற்றும் விளக்கெரிய
தூபம் கமழ துயிலணை மேல் கண்வளரும்
மாமன் மகளே மணிக்கதவம் தாள் திறவாய்
மாமீர் அவளை எழுப்பீரோ நும் மகள்தான்
ஊமையோ அன்றி செவிடோ அனந்தலோ
எமப்பெரும் துயில் மந்திரப்பட்டாளோ
மாமாயன் மாதவன் வைகுந்தன் என்றென்றும்
நாமம் பலவும் நவின்றேலோரெம்பாவாய்
“தூமணி மாடம் என்றதும் எனக்கு கோகுலம் நினைவுக்கு வருகிறது. அங்குள்ள எல்லா மாளிகைகளிலும் ரத்தினங்கள் பதிக்கப் பட்டு தூமணி மாடங்களுடன் ஜகஜ்ஜோதியாக விளங்கும் .ஒரு சம்ப்ரதாயத்திற்காகத்தான் அங்கு விளக்கு ஏற்றுவது வழக்கம்.” என்றான் கண்ணன்.
“நானும் கோகுலத்திற்கே போய்விட்டேன் கற்பனையில், அதனால் தான் அந்த மாளிகையில் உறங்கும் பெண்ணை மாமன்மகளே என்றேன். “
“உண்மையில் பக்தர்களுக்கு பகவத்ஸம்பந்தம் உடையோர்தான் பந்துக்கள். அல்லாதார் பிறப்பினால் உற்றார் ஆனாலும் மற்றாரே. மாதவா வைகுந்தா என்று உள்ளத்தில் பக்தியை பிறப்பிப்போரே உண்மையான பெற்றோர்.” என்ற கோதையிடம் “ என்னை மறுபடியும் மாமாயன் என்று கூறிவிட்டாயே?” என்றான் கண்ணன்.
“மாமாயன் என்றால் மா அதாவது லக்ஷ்மியின் பதி , மாதவன் என்று பொருள். ஆனாலும் நீ மாமாயன்தானே. உன் மாயை என்பது ஒரு கறுப்புக் கண்ணாடிக் கதவு. அதன் மூலம் நீ எங்களைப் பார்க்கிறாய் ஆனால் அது உன்னை எங்களுக்கு மறைக்கிறது. “
“விராதன் கூறினானே, ‘பசு அதன் கன்றை எங்கு இருந்தாலும் அடையாளம் கண்டு கொள்ளும். அதுபோல எங்களை நீ அறிவாய் . ஆனால் உன் திருவுள்ளம் அன்றி நாங்கள் உன்னை அறிய முடியாது.; என்று. இந்திரன் முதலிய தேவர்களாலேயே உன்னை இனம் கண்டுகொள்ள முடியாமல் உன் மாயை மறைத்தல்லவா?” என்றாள் கோதை.
“‘அமைவுடை நாரணன் மாயையை அறிவார் யாரே ,’ என்று நம்மாழ்வார் கூறினபடி உன் மாயையை யாரால் அறிய முடியும்? என்ற ஆண்டாளிடம் , “ம்ம், அப்புறம்? “ என்றான் அந்த மாயவன்.
“உன் மாய லீலைகளுக்கு ஒரு எல்லை உண்டா என்ன ? வராஹாவதாரத்தில் சமுத்திரம் உன் கணுக்கால் வரை தான் இருந்தது . ஆனால் கிருஷ்ணாவதாரத்தில் உன் தாய் ஒரு கை ஜலத்தால் உன்னை நீராட்டினாள். அதுமட்டுமா? ‘மாம் ஏகம் சரணம் வ்ரஜ,’ என்பாதத்தை சரணமடை,’ என்று சொன்னவன் தாய் நீராட்டும்போது அவள் கால்களை கெட்டியாகப் பிடித்துக் கொண்டாயே!” என்றாள் கோதை.
“இப்போது மற்ற வரிகளைக் காண்போமா? “ என்றான் கண்ணன்.“தூமணி என்றது வேதங்கள் ஸத்யஸ்ய ஸத்யம் என்ற உன்னைத்தான் .நீ இருக்கும் உள்ளமே மாடம். சுற்றும் சுருதி ஸ்ம்ருதி புராணம் என்ற விளக்குகள் உன்னைப்பற்றிய அறிவை விளக்குகின்றன. உன்னில் ஆழ்ந்து இருப்பதே துயிலணை மேல் கண் வளர்வது, அந்த நிலையில் உள்ளவன் இந்த்ரியங்கள் வெளிப்பார்வை அற்று ஊமையைப் போலவும் , செவிடைப் போலவும், அனந்தல், அதாவது பித்தனைப் போலவும் தோற்றம் அளிக்கிறான். உலக சிந்தனை அற்று ஏமப் பெருந்துயில் கொண்டவன் போல் காணப் படுகிறான் . அப்படி உள்ளவர்கள் வெளிப்போந்து மற்றவர்க்கு வழி காட்டுவதென்பதே மணிக்கதவம் தாள் திறப்பது.அது நீ திருவுள்ளம் கொண்டால் தான் இயலும் . அதற்குத்தான் மாமீர் என்று புருஷகாரபூதையான திருமகளை அழைக்கிறோம். “ என்றாள்.
“அடேயப்பா, நான் ஏதோ பெரிய மாளிகையில் சுகமான பஞ்சணையில் தூங்கும் பெண்ணை எழுப்புகிற வரிகள் என்று நினைத்தேன்.” என்றான் கண்ணன்.
“ ஒரு பகவதனுபவத்தில் ஈடுபட்ட ஒருவரை உருவகப்படுத்தியதுதான் அந்தப் பெண்ணைப பற்றிய வர்ணனை. “ என்றால் கோதை.
“உன் அடுத்த பாசுரத்திற்காக நான் வேறு வேடம் அணிகிறேன் “ என்று நகைத்தான் கண்ணன்.
“ஆம் வில்லேந்தி வரவேண்டும்.” என்றாள் கோதை.
நோற்றுச்சுவர்க்கம் புகுகின்ற அம்மனாய்
மாற்றமும் தாராரோ வாசல் திறவாதார்
நாற்றத்துழாய் முடி நாராயணன் நம்மால்
போற்றப்பறை தரும் புண்ணியனால் பண்டு ஒருநாள்
கூற்றத்தின் வாய் வீழ்ந்த கும்பகருணனும்
தோற்றும் உனக்கே பெரும் துயில்தான் தந்தானோ
ஆற்ற அனந்தல் உடையாய் அரும் கலமே
தேற்றமாய் வந்து திறவேலோரெம்பாவாய்
“நீ கும்பகர்ணனை சொல்லப்போவதால் நான் ராமனாகிவிட்டேன் .”என்றான் கண்ணன்.
“இந்தப் பெண் உன்னை அடைவதே சுவர்க்கம் என்ற எண்ணத்தை உடையவள். ஆனால் அதை மறந்து இங்கே தூங்குகிறாள். கதவையும் திறக்கவில்லை , மறுமொழியும் தரவில்லை.அதனால் தான் கும்பகர்ணன் என்றேன்.” என்ற கோதை,
உண்மையில் எங்களுக்கு சுவர்க்கம் என்பது உன்னை அடைவதுதான். நோற்று என்றால் பக்தி மூலம் அடைவது. புகுகின்ற அம்மனார் என்பது உன்னை சேர்கின்ற பக்தர்கள்.”
“ வாசல் திறவாதார் யார் ? உன்னை சேரவொட்டாமல் தடுக்கும் த்வாரபாலகர்களான இருவினைகள் . அவை மாற்றமும் தாராரோ, அதாவது புண்ணியமாக மாறி விடாவோ?’
“உனக்கு சர்வ நிச்சயமாக பக்தர்களுக்கு எந்தத்தடையும் ஏற்படாது என்று தெரியுமா?” என்றான் கண்ணன்.
“ஆம், ஏனென்றால் நீ நாராயணன் ஆனாலும் நம் மால் , பக்தர்களை இனவேறுபாடில்லாமல் ஏற்றுக் கொள்பவன். போற்றப் பறை தரும் புண்ணியன். ஜடாயு சபரி இவர்கள் நினவு வந்ததால் ராமனாக உன்னைக் காண்கிறேன் “ என்றாள்.
”அது சரி, அவர்களுடன் கும்பகர்ணனும் நினைவுக்கு வந்தானோ ?” என்று குறும்புப் புன்னகை புரிந்தான் ராமனாக நின்ற கண்ணன்.
ஆண்டாள் கூறினாள். “ முக்திக்கு முக்கிய இடையூறுகள் , உன்னைப் பற்றிய அறிவின்மை, அதனால் உலக இன்பங்களில் ஈடுபாடு. கும்பகர்ணன் இந்த்ரிய சுகங்களில் ஈடுபடாத சமயங்களில் உறங்குவான். இதுதான் கூற்றத்தின் வாய் வீழ்வது,.மரணம், ஜனனம், மரணம் என்ற சுழலில் அகப்படுவது. அவன் ராமனான உன்னால் வீழ்ந்தான் அந்தப பெரும் துயிலை கலியில் மக்களுக்கு அளித்துவிட்டு. அதைத்தான் கூற முயன்றேன். “ என்றாள்.
“அதெல்லாம் சரி. திடீரென்று ராமனாக என்னைக் காண விரும்பியது ஏன்.”
“ சொல்கிறேன் . ராமனான நீ புண்ணியன் , ‘ராமோ விக்ரஹவான் தர்ம:’ என்றபடி. மேலும் சரணாகத ரக்ஷகன், ‘அபயம் சர்வபூதானாம் ததாமி இதி ஏதத் வ்ரதம் மம, என்னை சரணம் புகுந்தவன் யாரானாலும் ராவணனே ஆயினும் அவனைக் காப்பாற்றுவேன் என்ற விரதம் பூண்டவன் அதனால் போற்றப்பறை தரும் புண்ணியன் என்றவுடன் உன் ராம ஸ்வரூபம் மனக்கண்முன் தோன்றியது. “ என்றாள் கோதை.
“ஆற்ற அனந்தல் உடையாய் என்பது பரம ஏகாந்தியாக உன்னையே நினைத்திருப்பவர். அவர் அருங்கலமாக எல்லோருக்கும் ஒரு தீபத்தைப் போல் வழி காட்டுகிறார். “ என்ற கோதையிடம் , “நான் வேஷத்தைக் கலைத்துவிடவா ,”என்றவனை “இரு, இரு, இன்னும் ஒரு பாசுரம் ஆகட்டும் அப்புறம் மறுபடி இவ்விதமே வரவேண்டி இருக்கும்.” என்றால் கோதை.