அரங்கன் திருவரங்கத்தை விட்டு ஸ்ரீ வில்லிபுத்தூர் வந்தான். திருப்பாவை எல்லா இடத்திலும் ஒலிக்கிறதே அதற்கு ஏன் ஸ்ரீவில்லிபுத்தூர் போக வேண்டும் என்று கேட்டாள் அவனுடன் கலந்து ஒன்றாக இருக்கும் ஆண்டாள். அதற்கு அவன் கூறினான். “ எப்போதும் விளைநிலத்திலேயே போய் விளைந்ததை வாங்குவது வாங்குவது விசேஷம் அல்லவா? ஆகையால் திருப்பாவையை அது விளைந்த நிலமாகிய ஸ்ரீவில்லிபுத்தூரிலேயே கேட்டு ரசிக்க வேண்டும் என்று எனக்கு ஆவல். நான் வடபத்ரசாயியாக அங்கு இருக்கிறேன் நீயும் அங்கு கோயில் கொண்டுள்ளாய் அல்லவா. இருவருமாக உன் தீஞ்சுவைத் தேன் ஆகிய பாசுரங்களை ரசிப்போம். “ என்றான்.
இடம் ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் சந்நிதியில் திருப்பாவை சாற்றுமுறை நடந்து கொண்டிருக்கிறது.
மார்கழித் திங்கள் மதிநிறைந்த நன்னாளால்
நீராடப் போதுவீர் போதுமினோ நேரிழையீர்
சீர் மல்கும் ஆய்ப்பாடி செல்வச்சிறுமீர்காள்
கூர்வேல் கொடுந்தொழிலன் நந்தகோபன் குமரன்
ஏரார்ந்த கண்ணி யசோதை இளம் சிங்கம்
கார்மேனிச் செங்கண் கதிர்மதியம் போல் முகத்தான்
நாராயணனே நமக்கே பறை தருவான்
பாரோர் புகழ படிந்தேலோ ரெம்பாவாய்
அரங்கன் கேட்டான் “ கோதை , நீ என் மார்கழி மாதத்தை தேர்ந்தெடுத்தாய்?” என்று.
கோதை கூறினாள். “ மாதங்களில் நான் மார்கழி என்று கூறிவிட்டு ஒன்றும் அறியாதவர் போல் இந்தக் கேள்வி ஏன்? அது மட்டும் அல்ல. உங்கள் நாமங்களில் கேசவன் என்ற நாமம் மார்கழி மாதத்திற்கு உரியது அல்லவா? அதில் என்ன விசேஷம் என்றால் ‘க’ என்றால் பிரம்மா, ‘ஈச’ என்றால் சிவன். நாராயணன் ஆகிய பரப்ரம்மத்தின் வசம் இருவரும் என்ற பொருள் ‘வ’ என்னும் சொல்லாகும். “
ஒன்றும் அறியாதவன் போல் “அப்படியா” என்ற அரங்கன், மேலும் மார்கழி தேவர்களின் விடியற்காலை அல்லவா? “ என்றான்.
“ அதுமட்டுமா. இந்த மாதம் ஒரு வருடத்தில் பெய்யும் மழையின் வித்தைக் கொண்டது. இந்த பல காரணங்களால் இந்த மாதம் புண்ணிய மாதமாகக்கருதப்படுகிறது. அதனால் இந்த மாதத்தில் செய்யும் புண்ணிய காரியங்கள் நற்பயனை அளிக்கின்றன.” என்றாள் ஆண்டாள்.
அரங்கன் சிரித்து, “ நீ பூமாதேவி என்பதை நிரூபித்துவிட்டாய் . அதுசரி, மதி நிறைந்த நன்னாள் என்று கூறியுள்ளாயே, மாதம் பௌர்ணமி அல்லாத நாளில் பிறந்தால் இது சரிவராதே ?” என்றான்.
“நீ இதயத்தில், வரும் நாள் மதி நிறைந்த நாள் அல்லவா?”என்றாள் கோதை.
“ஆஹா, உன் வார்த்தைகள் எனக்கு என் பிரிய சகோதரியைக் குறித்து அபிராமி பட்டர் கூறியது நினைவுக்கு வருகிறது. அமாவாசை அன்று அவர் பௌர்ணமி இன்று எனக்கூற அவர் வார்த்தையை மெய்ப்பிக்க அவள் அருளால் முழு நிலா வந்ததே !” என்றான் அந்த மாயவன்.
“ ஆம் அவளும் பெரிய மாயக்காரி அல்லவா? உன் மறுபக்கம் தானே அவள்?” “ என்றாள் கோதை.
“இந்த மார்கழியில் எல்லா பெண்களையும் கூட்டிக்கொண்டு நீராடச் சென்றாய், “ என்ற அரங்கனை இடை மறித்து கோதை கூறினாள். “நீராடுவது என்பது உண்மையில் உன்னை அடைவது என்று பொருள்.”
“ஸ்ரீவில்லிபுத்தூரில் விஷ்ணுசித்தர் மகளான நீ ஆய்ப்பாடி செல்வச் சிறுமீர்களை அழைக்கக் காரணம்? , என்ற அரங்கனைப் பார்த்து கோதை,
“எங்கே பிறந்தால் என்ன ? நீ உள்ளத்தே இருக்கையில் நாங்கள் செல்வமுடையோர் , செல்வச் சிறுமீர். அப்சர ஸ்திரீகள் கோபியர்களாக மாறலாம், நாங்கள் மாறக்கூடாதா? “ என்றாள்.
“நீ கிருஷ்ணனானால் நாங்கள் எல்லோரும் கோபியர்தான் , “ என்று ஆண்டாள் சொன்னவுடன் அரங்கன் கிருஷ்ணனாக மாறிவிட்டான்.
கண்ணனாகக் கேட்டான், “ என் தந்தை நந்தகோபர் ஒரு உயிருக்கும் தீங்கிழைக்காத சாதுவானவர். அவரைப் போய் கூர்வேல் கொடுந்தொழிலன் என்று கூறியது நியாயமா?”
ஆண்டாள் கூறினாள். சாதுப் பிராணியான பசுவும் தன் கன்றைக் காக்க புலியையும் எதிர்ப்பதில்லையா ? அது போல உனக்கு தீங்கு நினைப்பவரை எதிர்க்கும் திறன் கொண்டவரஅல்லவோ உன் தந்தை? “
“ஆனாலும் என் தாய் ஏரார்ந்தகண்ணி,அழகிய கண்ணை உடையவள் என்று சொன்னது சரிதான் என்ற கண்ணனிடம்,
”அந்த கண்ணுக்கு அழகு எப்படி வந்தது தெரியுமா? உன்னைப் பார்த்துக் கொண்டே இருந்ததனால்தான்.” என்ற கோதை , “இந்த வார்த்தை உன்னையும் நினைவுபடுத்தியது, ஏரார்ந்தகண்ணி என்றபோது உன் மார்பில் விளங்கும் வைஜயந்தி மாலை நினைவுக்கு வந்ததும் உன் அழகில் ஆழ்ந்துவிட்டேன். அதனால் உன்னை யசோதை இளம் சிங்கம்,கார்மேனிச் செங்கண் கதிர்மதியம் போல் முகத்தான் என்று வர்ணிக்கத்தோன்றியது” என்றாள்.
கண்ணன் முறுவல் செய்து, “ முதலில் நந்தகோபன் குமரன் , பிறகு யசோதை இளம் சிங்கம், “ என்றவனிடம் ,’ ஆம் உன் தந்தையுடன் இருக்கும்போது தந்தைக்கடங்கின இளம் பிள்ளை. ஆனால் தாயிடம் ஒரு இளம் சிங்கம் போல் இருப்பாய். செல்லப்பிள்ளை அல்லவா? “
“ உன்னை கார்மேனிச் செங்கண் என்று ஏன் வர்ணித்தேன் தெரியுமா? அன்பர்களுக்கு கருணை என்ற மழையைப பொழிவதால். மழை மேகம் போன்று வண்ணம் கொண்டவன் நீ. பக்தர்களைக் கண்டு ஆனந்த மிகுதியால் உன் கண் செந்நிறம் கொண்டது.”
“ கதிர்மதியம் போல் முகத்தான் என்றது உன் கண்கள் பக்தர்களுக்கு தீங்கு இழைப்பவரை நோக்கும்போது கதிரவனைப் போல் தீவிழிக்கும் . பக்தரை நோக்கையில் மதியைப் போல் குளிர்ந்திருக்கும் அல்லவா?” என்றாள் ஆண்டாள்.
“ ஆனால் இடைச்சிறுவனைப்போல் நீ போட்ட வேஷம் எங்களுக்குத் தெரியாதென நினைத்தாயா? நீதான் நாராயணன் என்றறிவோம்,. அதனால்தான் ‘நாராயணனே நமக்கே பறை தருவான் ,’ என்றேன் “ என்ற கோதையைப் பார்த்து கண்ணன் ,
“கோதையே , இந்த உலகம்தான் ஆயர்பாடி . சுலப பக்தியால் என்னை அடையலாம் என்று ஒரு ஆச்சார்ய ஸ்தானத்தில் இருந்து வழி காட்டினாய். நீ காட்டிய பாதை ஒரு மார்க்க சீர்ஷம், தலையான பாதை. இதை மார்கசீர்ஷம் என்னும் இந்த மார்கழியில் கூறியது பொருத்தமே. “ என்றான்.
வையத்து வாழ்வீர்காள் நாங்கள் நம் பாவைக்கு
செய்யும் கிரிசைகள் கேளீரோ பாற்கடலுள்
பைய துயின்ற பரமனடிபாடி
நெய்யுண்ணோம் பாலுண்ணோம் நாட்காலே நீராடி
மையிட்டேழுதோம் மலரிட்டு நாம் முடியோம்
செய்யாதனசெய்யோம் தீக்குறளை சென்றோதோம்
ஐயமும் பிச்சையும் ஆம்தனையும் கைகாட்டி
உய்யும் ஆறெண்ணி உறங்கேலோரெம்பாவாய்
“மிகவும் கடுமையான விரதம்தான் அதுவும் உலகத்தில் உள்ளோர் எல்லோருக்கும் “ என்றான் கண்ணன் இந்தப் பாசுரத்தைக் கேட்டு.
“ ஆம். வையத்து வாழ்வீர்காள் என்று எல்லோரையும் ஏன் கூவி அழைக்கிறேன் தெரியுமா? இந்த மண்ணுலகம் மற்ற உலகங்களைக் காட்டிலும் சிறந்தது. ஏனென்றால் இங்குதான் உன்னை பக்தியுடன் அடைய முடியும். அதனால் தானே பராசர பட்டர் அரங்கனாகிய உன்னை இங்கிருந்து பக்தி செய்வதை விட்டு பரமபதமானாலும் வேண்டாம் என்றார். என்றாள் ஆண்டாள்.
“ அது சரி ஆயினும் உன்னுடைய சட்டதிட்டங்கள் மிகவும் கடுமையானதாகத் தோன்றுகிறது. நான் இப்படி எல்லாமா இருக்கச் சொல்கிறேன்? “ என்ற கண்ணனிடம், “ நீ பக்தவத்சலன். ‘பத்ரம் புஷ்பம் பலம் தோயம் யோ மே பக்த்யா ப்ரயச்சதி ததஹம் பக்த்யுப்ஹ்ருதம் அச்னாமி பிரயதாத்மன: ‘ என்று ஒரு இலை பூ பழம் அல்லது வெறும் நீர் எதுவானாலும் பக்தியுடன் தருவதை ஏற்கிறேன் என்றாய் . “
“ஆனால் இந்த மனிதர்கள் ஒரு கட்டுப்பாடு இல்லாவிட்டால் நீ ‘பக்தியுடன்’ என்றதையே மறந்து ஒன்றுமே செய்யாமல் சும்மா இருந்துவிடுவார்கள். எல்லோரும் கோபியர் அல்லவே. உலகத்தில் உள்ள இன்பங்களில் ஈடுபட்டு உன்னை மறந்து விடுவார்கள்.அதனால் உடல் உள்ளம் இவைகளுக்கு ஒரு ஒழுக்க நெறியை விதிக்க வேண்டும். அதனால் உன்னையே நினைக்கும் பக்குவம் வரும் “ என்றாள் ஆண்டாள்.
நெய்யுண்ணோம் பாலுண்ணோம் என்றது கர்மேந்த்ரியங்களை கட்டுப்படுத்த.. மையிட்டெழுதோம் மலரிட்டு நாம் முடியோம் என்றது உடல் பற்றை அகற்ற.” என்ற ஆண்டாளைப் பார்த்து கண்ணன் நீங்கள் ஒரு அலங்காரமுமே செய்து கொள்ளாமல் வந்தால் உங்களை யார் பார்ப்பது?” என்று நகைத்தான்.
“ நாங்கள் உன்னை அலங்காரம் செய்வதில் இன்பம் காண்கிறோமே தவிர எங்கள் உடலை அல்ங்கரிப்பதில் அல்ல. ஆனாலும் பரமனடிபாடி என்று உன் நாமசங்கீர்த்தனம் செய்து வரும் எங்களை பார்க்காமல் இருப்பாயா? ‘மத்பக்தா யத்ர காயந்தி தத்ர திஷ்டாமி நாரத’, என் பக்தர்கள் நாமசங்கீர்த்தனம் செய்யும் இடத்திலெல்லாம் நான் இருக்கிறேன் என்று சொன்னவன் ஆயிற்றே” என்றால் ஆண்டாள்.
“ வாயைக்கொடுத்து மாட்டிக்கொள்வது என்பது இதுதான் ,” என்ற கண்ணனிடம் “ நீ இந்த நோன்பு முடியும்போது நாங்கள் கேட்டதை கொடுப்பயல்லவா, அது வரை நாங்கள் நெய்யுண்ணோம் பாலுண்ணோம் மையிட்டெழுதோம் மலரிட்டு முடியோம், பிறகு எல்லா அலங்காரமும் செய்து கொள்வோம் சுவையான பாற்சோறு சாப்பிடுவோம் “ என்ற ஆண்டாளிடம் கண்ணன் குறும்புப் புன்னகையுடன் கூறினான்,
“ இது எனக்கு போன அவதாரத்தில் கைகேயியை நினைவூட்டுகிறது .” என்று.
அதற்கு ஆண்டாள் கூறினாள். அவள் உன் பிரிவை விரும்பினாள். நாங்கள் உன் சேர்க்கையை அல்லவா விரும்புகிறோம்? “
“ எங்கள் விரதம் எப்படி வேறுபட்டது என்றால் மனம் திரிந்த கைகேயி போல் இல்லாமல் மனத்தூய்மையை மேற்கொள்ளும் விரதம் இது.
“செய்யாதனசெய்யோம் என்றால் இரண்டு வகையான காரியங்கள் செய்ய மாட்டோம். அதாவது க்ருத்ய அகரணம், செய்யவேண்டியதை செய்யாமல் இருப்பது அதாவது உன் வழி பாடு எங்கள் நித்ய கடமைகள் முதலியவை. இன்னொன்று அக்ரருத்ய கரணம் செய்யக்கூடாததை செய்வது. இதில் தீக்குறளை சென்றோதோம் என்பது அடங்கும் . தீக்குறளை அதாவது கடும் சொற்கள் கூறுதல் , பிறரை இழித்துரைக்கல் முதலியன, என்று சொன்னவளை இடைமறித்து கண்ணன் கேட்டான் , “அதென்ன சென்றோதோம் , எங்கு சென்று இவைகளை செய்வீர்கள்.?என்றான். ஆண்டாள் கூறினாள், பிறரை பற்றி அவதூறு சொல்பவர்கள் அவரிருக்கும் இடம் சென்றோ அல்லது மற்றவர் இருக்கும் இடம் சென்றோ இதே வேலையை செய்வார்கள் அல்லவா., அதைக் குறிப்பிட்டேன். “
“செய்யாதன செய்யோம், என்று கூறி விட்டாய் . எதை செய்வோம் என்று கூறவில்லையே?’என்ற கண்ணனை நோக்கி அடுத்து என்ன கூறினேன் என்று பார்க்கவில்லையா ? ஐயமும் பிச்சையும் ஆம்தனையும் கைகாட்டி , இவையெல்லாம் செய்ய வேண்டியவை. “
“இதற்கும் விளக்கம் சொல்லிவிடேன் “என்றான் கண்ணன்.
“ ஐயம் என்பது கேட்காமலேயே கொடுப்பது, பிச்சை கேட்டபின் கொடுப்பது , ஆம்தனையும் கைகாட்டி என்றால் இயன்ற அளவு கொடுப்பது. கேட்காமலேயே கொடுப்பவன் நீ., கேட்டபிறகு கொடுத்தவன் மகாபலி. அவனுக்கு இயலாத அளவு த்ரிவிக்ரமனாய் நின்றவன் நீ” என்ற ஆண்டாளிடம் “ இதைத்தான் எதிர்பார்த்தேன் “ என்று சிரித்தான் அக்கள்ளன்.
“ ஆனால் இந்த விதிமுறை எல்லாம் கடுமையாகத் தோன்றுகிறதே தவிர உன்னை மனதில் கொண்ட எங்களுக்கு , உடல் பற்றோ, பசியோ தோன்றுமா என்ன ? உன் நாம்சங்ககீர்த்தனம் என்னும் அமுதம் நாவில் இருக்க வேறு எந்தச் சுவை வேண்டும், உய்யும் ஆறு எண்ணி உகந்திருக்கையில்?” என்ற கோதையிடம். “அதென்ன ஆறு எண்ணி,” என்றான் கண்ணன்.
ஆண்டாள் கூறினாள். “ பகவானாகிய உன் குணங்கள் ஆறு, பிரபத்தியின் அங்கங்கள் ஆறு, அன்று நீ வரதனாக திருக்கச்சிநம்பிகளுக்கு ராமானுஜரின் பொருட்டு கூறிய வார்த்தைகள் ஆறு , த்வயமந்த்ரத்தின் பதங்கள் ஆறு,”
“ அடேயப்பா, அதற்கு மேல் ஆறாகப் பெருகும் உன் பக்தி கடலாகிய என்னை அடைந்துவிட்டது அல்லவா? என்ற கண்ணன் ,
“ நான் பாற்கடலில் பையத் துயின்றவன் என்றாயே அதற்கு என்ன அர்த்தம் ? “ என்றான்
“ அதாவது நீ துயில்கின்றாய் என்று நாங்கள் ஒருபோதும் ஏமாறவில்லை என்று அர்த்தம்” என்ற கோதை, அதனால் தான் பையத்துயின்ற பரமன் என்றேன். நீ பரம்பொருள் , உண்மையில் துயின்றால் உலகம் அழிந்துவிடுமே? ஒரு தந்தை தூங்குவதுபோல் குழந்தைகளை கண் காணிப்பது போலவும் ஒரு குடியானவன் தன் பயிரைக் காக்க வீட்டை விட்டு வந்து வயலில் துயில்வது போலவும், நீ உன் பரமபதத்தை விட்டு எங்களைக் காக்க பாற்கடலில் துயில் கொண்டவன் போல் இருக்கிறாய். ஒரு ஆபத்து என்றால் துள்ளி எழுந்து விடுவாய் என்று எங்களுக்குத் தெரியாதா? அதனால் தான் நாங்களும் இந்த உலகில் நிம்மதியாக இருக்கிறோம். என்றாள் ஆண்டாள்.
கண்ணனின் மயக்கும் புன்னகையே இதற்கு பதிலாக அமைந்தது.
ஓங்கி உலகளந்த உத்தமன் பேர் பாடி
நாங்கள் நம்பாவைக்கு சாற்றி நீராடினால்
தீங்கின்றி நாடெல்லாம் திங்கள் மும்மாரி பெய்து
ஓங்கு பெரும் செந்நெல் ஊடு கயலுகள
பூங்குவளைப்போதில் பொறிவண்டு கண்படுப்ப
நீகாதே புக்கிருந்து சீர்த்த முலை பற்றி
வாங்கக் குடம் நிறைக்கும் வள்ளல் பெரும்பசுக்கள்
நீங்காத செல்வம் நிறைந்தேலோரெம்பாவாய்
கண்ணன் கூறினான்.
“கோதை, முதலில் என்னை நந்தகோபன் குமரன் என்றும், யசோதை இளம் சிங்கம் என்றும் கூறினாய். பிறகு பாற்கடலில் துயில்பவனாகக் காட்டினாய் . இப்போது என்னை ஒருகாலில் நிற்க வைத்து விட்டாய் “ என்றான்.
அதற்கு கோதை பதிலளித்தாள். “ ஒரு முறை அல்ல மூன்று முறை உன் த்ரிவிக்ரமாவதாரத்தை திருப்பாவையில் சொல்லி இருக்கிறேன். ஏன் தெரியுமா? இந்த அவதாரம் எல்லாவற்றிலும் சிறப்பு வாய்ந்தது. ஏனென்றால் அது உன்னுடைய பராக்கிரமம் கருணை இரண்டையும் காட்டிற்று அல்லவா!”
“ ஆனால் சிலர் நான் மகாபலியை வஞ்சித்து விட்டேன் என்று சொல்கிறார்களே? ஒரு வாமனனாய் வந்து அவனை ஏமாற்றிப் பிறகு உலகளந்தானாக மாறியது வஞ்சகம் என்று சொல்கிறார்கள்.”
“விஷயம் தெரியாதவர்கள் ஏதோ கூறிவிட்டுப் போகட்டும். நீ வந்தது அவனை தண்டிக்க அல்ல. அவனுடைய இகலோக சாம்ராஜ்யத்தை எடுத்து விட்டு பக்தி சாம்ராஜ்யத்தைக் கொடுக்க அல்லவா? வாமனனாக வந்தாய் என்றால் அது உன் மாயை. எந்த அவதாரத்தில் நீ மாயம் செய்யாமல் இருந்தாய் ?” என்றாள் கோதை.
அதுவும் அல்லாமல் எல்லாமே உன்னுடையது அதை எடுத்துக்கொள்வது எப்படி வஞ்சகம் ஆகும்? மகாபலியுடன் உன் கருணை முடிந்துவிட்டதா? இல்லையே . உன் பாதகமலத்தில் இருந்து உற்பத்தியான கங்கை உலகம் முழுவதையும் புனிதப் படுத்தவில்லையா? அதனால் தான் ஓங்கி உலகளந்த உத்தமன் என்றேன். என்றாள் ஆண்டாள்.
“மூன்றடி மண் கேட்ட உனக்கு மகாபலி கொடுத்தது ஓரடி மண்தானே . இதை நான் சொல்லவில்லை . நம்மாழ்வார் கூறுகிறார். ஓரடியால் உலகம் முழுதும் வ்யாபித்தான். இரண்டாவது அடிக்கு எங்கே இடம்? என்கிறார். “ என்ற கோதையிடம், “இந்த விரதத்தால் நீவேண்டுவது என்ன?” என்றான் கண்ணன் .
“வேறு என்ன உன்னை அடைவதுதான்’” என்றவளிடம், “ஆனால் இந்த பாசுரத்தில் நீ வேண்டுவது வேறாக உள்ளதே?
1.தீங்கின்றி நாடெல்லாம் திங்கள் மும்மாரி பெய்து,
2.ஓங்கு பெரும் செந்நெலூடு கயலுகள
3. பூங்குவளைப்போதில் பொறிவண்டு கண்படுப்ப
4.வள்ளல் பெரும் பசுக்கள்
5. இவைகளால் நீங்காத செல்வம்
இவைதானே நீ கேட்பது என்றான்.
ஆண்டாள் கூறினாள். “இவை என் வேண்டுகோள் அல்ல.உன் நாமத்தின் பெருமையை எடுத்துரைத்தேன். ஓங்கி உலகளந்த உத்தமனாகிய உன் பேர் பாடினால் இவை எல்லாம் கிடைக்கும் என்றும் நாமம் நாமியை விட உயர்ந்தது என்று காட்டவும்தான். திரௌபதியையும் கஜேந்திரனையும் காத்தது உன் நாமம் அல்லவா? “
“நீராடல் என்பது உடல் மற்றும் உள்ளத்தூய்மை. சாற்றி நீராடுவது என்றால் எந்தச் செயலையும் உன் கைங்கர்யமாகச் செய்வது “.
இதைச் சொல்கையில் நான் கோகுலத்திற்கே சென்று விட்டேன்.,” என்றாள் ஆண்டாள்.
“ அப்படியானால் மற்ற வரிகள் கோகுலத்தை வர்ணிப்பனவா? என்றான் கண்ணன் .
“ஆம். நீ வந்த பிறகு கோகுலத்தில் மாதம் மும்மாரி மழை பொழிந்தது, தீங்கின்றி , அதாவது அளவாக. அதன் விளைவாக நெற்பயிர்கள் ஓங்கி வளர்ந்தன. நீர்ப் பெருக்கினால் நிறைந்த வயல்களில் மீன்கள் விளையாடின. குவளை மலர்களில் தேன் உண்ட வண்டுகள் வயிறு நிரம்பியதால் அங்கேயே கண் வளர்ந்தன. “ என்றால் ஆண்டாள்.
அதற்கு கண்ணன் “ எனக்கும் கோகுலத்தில் இருப்பதுபோல் இருக்கிறது.” என்றான்,.
“ஆனால் என் மனதில் தோன்றிய காட்சி வேறு. .” என்றாள் ஆண்டாள். “ ஓங்கு பெரும் செந்நெல் ஊடு கயல் உகள “ என்றபோது அந்த ஓங்கிய பயிர்கள் உன் பக்தர்களின் மனத்தை ஒத்திருந்தன .அதனூடே சென்று விளையாடிய மீன் எது தெரியுமா? பக்தர்கள் மனம் புகுந்து விளையாடும் மகா மத்ஸ்யமான நீயே. அவர்கள் இதயமான் குவளை மலரில் புகுந்து ஆனந்தமாகக் கண்வளர்ந்த பொறிவண்டும் நீயே. என்றாள் கோதை.”
“என் பிரியமான ஆவினத்தைக் கண்முன் கொண்டு நிறுத்திவிட்டாய். ‘தேங்காதே புக்கிருந்து சீர்த்த முலை பற்றி வாங்கக் குடம் நிறைக்கும் வள்ளல் பெரும்பசுக்கள்’ என்று கூறி. உண்மை. பக்கத்தில் வந்து கை வைக்கும்போதே பாலை சொரிந்து குடம் நிறைத்தவை அவை “ என்ற கண்ணனிப் பார்த்து,
கோதை கூறினாள், “ அவை பெரும் பசுக்களாக இருந்ததற்கும் கை வைத்தவுடன் பாலை சொரிந்ததற்கும் அவை உன்மேல் கொண்ட அன்பல்லவா காரணம் ?”
“நீ சொல்வது முற்றும் உண்மை. கோகுலத்தில் நான் பெற்ற ஆனந்தம் வைகுண்டத்திலும் எனக்கு ஏற்படவில்லை .” கோபாலன்.
“உன்னிடம் வருவோர்க்கெல்லாம வாரி வழங்கும் வள்ளல் பெரும் பசு நீயே அல்லவா? எங்கள் சிறுமதியால் உன்னிடம் குடத்துடன் வருவதற்கு பதில் ஒரு சிறு கோப்பையுடன் வருகிறோம்.. . உன்னையே தரத்தயாராக இருக்கும் உன்னிடம் அல்ப உலக சுகங்களைக் கேட்கிறோம். அது எங்கள் மதியீனமே தவிர உன் கருணையின் குறை அல்ல.” என்றாள் ஆண்டாள்.
ஆழி மழைக்கண்ணா ஒன்று நீ கைகரவேல்
ஆழியுள் புக்கு முகர்ந்துகொடார்த்தேறி
ஊழிமுதல்வன் உருவம் போல் மெய் கருத்து
பாழியன் தோலுடை பற்பநாபன் கையில்
ஆழிபோல் மின்னி வலம்புரிபோல் நின்றதிர்ந்து
தாழாதே சார்ங்கம் உதைத்த சரமழை போல்
வாழ் உலகினில் பெய்திடாய் நாங்களும்
மார்கழி நீராட மகிழ்ந்தேலோரெம்பாவாய்
ஆண்டாளும் கண்ணனும் பேசிக்கொண்டிருக்கையில் மேகமூட்டம் காணப்பட்டது. அதைக்க்கண்டு ஆண்டாள் கூறினாள்.
“ கண்ணா உன்னை நான் ஓங்கி உலகளந்த உத்தமன் என்று கூறியதைக் கேட்டு மேகங்கள் நீ எங்கே கங்கைபெருக்கை உண்டாகியது போல் மழையையும் உண்டாக்கி அவைகளை பயனற்றவையாக செய்துவிடுவாயோ என்று பயந்து விட்டன போலும்.தாமாகவே வந்து நின்றுவிட்டன. “ என்றாள்.
“அல்ல. ஆழிமழைக்கண்ணா என்ற உன் பாசுரத்தைக் கேட்டு கீழ்ப்படிந்து வந்து விட்டன. பஞ்ச பூதங்களும் என் பக்தர்களின் ஆணைக்குக் கட்டுப்பட்டுத்தானே ஆகவேண்டும். “ என்றான் கண்ணன்.
அதற்கு ஆண்டாள், “ அது சரி. ஆனால் நான் ஆழிமழைக்கண்ணன் என்றது உன்னையல்லவா? எல்லாவற்றிலும் உள்ளே இருந்து இயக்குபவன் நீதானே? கருணையாகிற மழை பொழியும் மேகம் நீயல்லவா? அதனால் ஒன்று நீ கை கரவேல் என்றது பாரபட்சம் இல்லாமல் எங்கும் மழை பொழியட்டும் என்ற பொருள் காணப்பட்டாலும், என் குழந்தைகளான இந்த பூமியில் உள்ள எல்லா உயிர்கட்கும் உன் கருணை மழையைப் பொழிவாயாக என்று உன்னை வேண்டிக்கொள்கிறேன்.” என்றாள்.
“மேகங்கள் நான் அவைகளைத்தான் சொல்கிறேன் என்று வந்து நின்று விட்டதால் அவைகளுக்கு ‘ஆழியுள் புக்கு’ என்று கடலின் உள் புகுந்து நீர் மட்டும் அல்ல, மற்ற முத்து ரத்தினங்கள் இவற்றையும் எடுத்துக்கொண்டு, ‘முகர்ந்து கொடு ஆர்த்தேறி,’ உயரச்சென்று , நடுவில் எங்கும் பெய்து விடாமல் எல்லா உயிர்களும் நன்மை அடையுமாறு , ‘வாழ உலகினில் பெய்திடாய்’ என்றேன், என்ற ஆண்டாள்,
“அந்த மேகங்களைப் பார்த்ததும் உன் கார்மேக வண்ணம்தான் நினைவுக்கு வந்தது. அதனால் ஊழி முதல்வன் போல் ‘மெய்கறுத்து,’ என்றேன்.
கண்ணன் கேட்டான் அதென்ன ‘ஊழிமுதல்வன் போல் ‘?
ஆண்டாள் கூறினாள்,” பிரளயத்திற்குப் பின் படைப்புக்கு முன் கருணையினால் கறுத்த உன் மேனி எல்லா உயிர்களையும் உள்ளே அடக்கினதால் நீருண்ட மேகம்போல் உள்ளதல்லவா? ஆனால் மேகம் மழையைப் பொழிந்த பின்னர் வெண்மை நிறம் கொண்டதாகி விடுகிறது. ஆனால் உன் கருணை என்ற மேகம் எவ்வளவு பொழிந்த போதிலும் நிறம் இழப்பதில்லை. வற்றா நீருள்ள கடலைப்போல. “.
“ஊழிக்காலம் என்றவுடன் அடுத்து வரும் சிருஷ்டி நினைவுக்கு வந்தது போலும். அதனால் என்னை பத்மநாபன் என்றாய் இல்லையா ?” என்றான் கண்ணன்.
“ஆம். பத்மநாபன் என்றபோது உன் நாபியில் உள்ள பிரம்மாவும் நினைவுக்கு வருகிறார் அல்லவா? அதன்பின், சிருஷ்டிக்குப் பிறகு உன் கருணையை வெளிப்படுத்தும் செயல்கள் நினைவுக்கு வந்ததில் என்ன அதிசயம்? ‘ஆழிபோல் மின்னி வலம்புரி போல் நின்றதிர்ந்து ‘ என்றது உன் துஷ்ட நிக்ரஹம்சிஷ்ட பரிபாலனம் இவற்றைக் குறிக்கும் சொற்கள். மின்னல் போல மின்னி தீயோர்க்கு பயத்தை விளைவிக்க, சங்கம் இடிபோல் அவர்களை நடுங்க வைக்கிறது. “ என்றாள் கோதை. “
“ இந்திரன் ஆணைப்படி கோகுலத்தில் பெய்த மழை ஆயர்களை இப்படித்தான் நடுங்க வைத்தது , என்றான் கண்ணன்.
“ஆனால் உன் கருணை என்ற மலை அவர்களைக் காத்ததே? “ என்ற கோதை, “உன் ஆயுதங்களும் உலகைக் காக்கவே. ‘சார்ங்கம் உதித்த சரமழை ,’ என்றது உன்னை சரண் புகுந்த முனிவர்களைக் காக்க ராமாவதாரத்தில் உன் வில்லிலிருந்து புறப்பட்ட சரமழை. மகாபாரதப் போரில் நீ சங்கம் எடுத்து ஊதியவுடன் கௌரவர் மனதில் நடுக்கம் ஏற்பட்டது என்றாரே வியாசர். “ என்றாள் கோதை.
“ இந்த உவமை எனக்கு வேறொரு மேகத்தை நினைவூட்டுகிறது. நம்மாழ்வார் என்ற மேகம் நானாகிய கடலில் இருந்து என் அருளாகிய நீரை எடுத்து நாதமுனியாகிய மலை மேல் வர்ஷிக்க , அது உய்யக்கொண்டார் ராமமிச்ரர் என்கிற அருவிகள் மூலம் ஆளவந்தார் ஆகிய நதியை அடைந்து கடைசியில் ராமானுஜர் ஆகிய ஏரியில் எல்லோரும் நலம் பெறுமாறு தங்கியது. “என்ற கண்ணனிடம் ,
“அந்த நீர் ஆழ்வார்கள் என்ற பல ஊற்றுகளாகவும் பரிணமித்து மக்களுக்கு நன்மை செய்தது. “ என்றால் கோதை.
“ ஆமாம் அந்த ஊற்றுகளில் பேரூற்று நீதானே என்று நகைத்தான் கண்ணன்.
மாயனை மன்னு வட மதுரை மைந்தனை
தூய பெருநீர் யமுனைத் துறைவனை
ஆயர்குலத்தினில் தோன்றும் அணிவிளக்கை
தாயைக் குடல் விளக்கம் செய்த தாமோதரனை
தூயோமாய் வந்து நாம் தூமலர் தூவித்தொழுது
வாயினால் பாடி மனதினால் சிந்திக்க
போய பிழையும் புகுதருவான் நின்றனவும்
தீயினில் தூசாகும் செப்பேலோரெம்பாவாய்
“ கோகுலத்தில் ஆரம்பித்து நந்த கோபன் குமரன், யசோதை இளம் சிங்கம் என்று சொல்லிப் பிறகு, நாராயணன், பையத்துயின்ற பரமன், ஓங்கி உலகளந்த உத்தமன், பத்ம நாபன் என்றாய். இப்போது மறுபடி புறப்பட்ட இடத்திற்கே வந்துவிட்டாய் போலும். நான் இப்போது மதுரை மைந்தன், யமுனைத் துறைவன் ஆகிவிட்டேன் . “ என்றான் கண்ணன்.
“ நான் உன்னை மாயன் என்றேன். ஏன் தெரியுமா? உன் கிருஷ்ணாவதாரம் முழுதும் விளக்க முடியாத மாயம். மதுரையில் பிறந்தாய் ஆகையால் மதுரை மைந்தன். கோகுலம் வந்து ஆயர்குலத்து அணி விளக்காக ஆனாய். தூய பெருநீர் யமுனைத் துறையில் நீ செய்த மாயங்கள் கொஞ்சமா? , “என்ற ஆண்டாளிடம்,
“அதென்ன தூய பெருநீர் யமுனை ? “ என்றான் கண்ணன்.
“ஆம், யமுனையின் தூய்மை கங்கையிலும் மேலானது. ஏனென்றால் நீ புகுந்து விளையாடியதால். மேலும் வசுதேவர் உன்னைச் சுமந்து வரும்போது கம்சனுக்கு பயப்படாமல் வழி விட்டாள் அல்லவா? கோதாவரியைப்போல் அல்லாமல்? “ என்றால் கோதை.
“ஏன் கோதாவரியுடன் ஒப்பிடுகிறாய்? “ என்ற கண்ணனிடம் கோதை, “ “ராமனாக நீ சீதை எங்கே என்று கேட்ட போது ராவணனுக்கு பயந்து கோதாவரி பதிலுரைக்கவில்லை அல்லவா?’ என்றாள்.
கண்ணன் கூறினான். “ஆனால் வேதாந்த தேசிகர் . சொல்கிறார். ‘ப்ராயேண தேவி பவதீவ்யபதேச யோகாத் கோதாவரி ஜகதிதம் பயஸா புநீதே,’ கோதாவரி நதி கோதா என்ற உன் பெயரை தன்னுள் கொண்டதால் தன் நீரால் இந்த உலகை புனிதமாக்குகிறது என்று.”
அதைக்கேட்டு நாணத்தால் தலை குனிந்த கோதையை பார்த்து , “அதிருக்கட்டும் , தாயைக்குடல் விளக்கம் செய்த தாமோதரன் என்று நான் உரலில் கட்டுப்பட்டதைத்தானே சொல்கிறாய்? “ என்றான்.
“ ஆம். நவநீத சோரனாய் எல்லோர் உள்ளத்தையும் கவர்ந்தாய். உரலில் கட்டுப்பட்டு தாமோதரன் என்று பெயர் பெற்றாய். உன் தாய் உன்னைக் கட்ட எந்தக் கயிறு எடுத்தாலும் அது இரண்டு அங்குலம் குறைவாக இருக்கக் கண்டு அயர்ச்சியுற அப்போது அவ்ளுக்கிறங்கி கட்டுப்பட்டாய். அதை நினைவு கூர்ந்த நம்மாழ்வார் ‘எத்திறம்’ என்று அதிசயித்து ஆறுமாதம் உணர்ச்சிப்பெருக்கால் நினைவற்று இருந்தார் அல்லவா?”
கண்ணன் “ ஆம். அந்த அடையாளத்தை இப்போதும் அரங்கனான என் உந்தியில் காணலாம். என் தாயின் நினைவாக அதை இன்னும் சுமக்கிறேன்.” என்றான் கண்ணன்.
“தாயைக் குடல் விளக்கம் செய்தவன் அல்லவா, தாமோதரன், உதரத்தில் கயிறால் கட்டுப்பட்டவன், என்று சொல்லும்போதே உன் தாய் நினைவும் கூட வருகிறதே அத்துடன் இந்த மாயமும் வாய் திறந்து உலகம் காட்டிய மாயமும் நினைவுக்கு வருகிறது. அதனால் தான் தாயைக் குடல் விளக்கம் செய்தவன் என்றேன். அதாவது அவளுக்கு புகழ் அளித்தவன். “
“அதுவும் உன் மாய லீலை. நலகூபுரர்களின் சாபத்தைத் தீர்க்க. “ என்றவளிடம் கண்ணன் கூறினான்.
“அதனால் தான் வேதாந்த தேசிகர் என்னை உரலில் கட்டுப்பட்டவனாக யார் நினைக்கிறார்களோ அவர்கள் மறுபடி சம்சாரம் என்ற கட்டுக்குள் புக மாட்டார்கள் என்று சொல்லி, அந்த உரலை என் ,மேனி சம்பந்தம் பெற புண்ணியம் செய்த உரல் என்கிறார்.”
“ மிகுதியுள்ள வரிகளைப் பார்க்கலாமா? “ என்ற கண்ணிடம் கோதை கூறினாள்.
“தூயோமாய் வந்து தூமலர் தூவித்தொழுது வாயினால் பாடி மனதினால் சிந்திக்க. ‘மலர் தூவித் தொழுவது , உடல் தூய்மை, வாயினால் பாடி என்பது வாக்குத்தூய்மை, உன்னை சிந்திப்பது மனத்தூய்மை. இதனால் என்ன பயன்?
“போய பிழையும் புகுதருவான் நின்றனவும் தீயினில் தூசாகும். போய பிழை என்பது இதுவரை பயன் கொடுக்காத ஆனால் வரப்போகும் ஜன்மங்களில் பயன் கொடுக்கும் கர்மம். சஞ்சித கர்மா. புகுதருவான் என்பது இந்த ஜன்மத்தில் செய்யும் கர்மம் இனிமேல் பலனளிக்கக் கூடியது, ஆகாமி கர்மா. நின்றனவும் என்பது இப்போது அனுபவிக்கும் கர்ம பலன் பிராரப்த கர்மா. இம்மூன்றும் தீயிலிட்ட தூசிபோல் அழிந்துவிடும்.”
“ இனி மற்றவரை எழுப்பி பாகவதானுபவத்தில் திளைக்கச் செய்யும் உன் இனிய பாசுரங்களைக் கேட்க ஆவலாக உள்ளேன் என்றான் கண்ணன்.