நாயகனாய் நின்ற நந்தகோபன் உடைய
கோயில் காப்பானே! கொடி தோன்றும் தோரண
வாயில் காப்பானே! மணிக்கதவம் தாள்திறவாய்
ஆயர் சிறுமியரோமுக்கு அறைபறை
மாயன் மணிவண்ணன் நென்னலே வாய்நேர்ந்தான்
தூயோமாய் வந்தோம் துயில்எழப் பாடுவான்
வாயால் முன்னம் முன்னம் மாற்றாதே அம்மா! நீ
நேய நிலைக்கதவம் நீக்கேலோர் எம்பாவாய்.
“ இப்போது என் மாளிகை வாயில் காப்பானை கதவைத் திறக்குமாறு வேண்டிக்கொள்கிறாயாக்கும் “ என்றான் கண்ணன்.
அதற்கு கோதை விடையளித்தாள். “ துவாரகையில் உன் மாளிகைக்கதவுகள் திறந்தே இருக்கும். உன்னைப் பார்க்க வந்த குசேலர் நேராக உள்ளே வந்தாரே . ஆனால் ஆயர்பாடியில் நீ செல்லப் பிள்ளை அல்லவா அதனால் உன் பெற்றோர் கதவை மூடியே வைத்திருப்பார்கள். அதனால் வாயில்காப்போனை வேண்டவேண்டியதாயிற்று. “
“ உன் வாயில் காப்போன் கோயில் காப்போனாகவும் இருப்பதால் இலகுவில் எங்களை அனுமதிக்கவில்லை . அவனை நாயகனாய் நின்றவனே. கொடி பறக்கும் தோரண வாயில் காப்பவனே என்று முகஸ்துதி பண்ண வேண்டியதாயிற்று . “
“ த்வார பாலகர்களை திருப்தி செய்துதானே எல்லா இடங்களுக்குள்ளும் செல்ல வேண்டியதாய் இருக்கிறது. ஆனால் உன் த்வார பாலகர்கள் உன் பாகவதோத்தமர்கள். அதனால் அவர்கள் முதலில் ஆராதிக்கப்பட வேண்டியவர்கள். “ என்றாள் ஆண்டாள்.
“பிறகு என்ன சொல்லி உள்ளே வந்தீர்கள் ? “ என்றான் கண்ணன்.
“ நாங்கள் ஆயர் சிறுமியர் . எங்களால் ஒன்றும் ஆபத்தில்லை .தூயோமாய் வந்தோம் கண்ணன் துயில் எழப் பாடுவதற்கு என்று கூறினோம். “
“அப்போதும் உங்களை அவன் அனுமதிக்கவில்லை அல்லவா? “ என்ற கண்ணனிடம் ,
“நீதான் மாயன் மணிவண்ணன் ஆயிற்றே, உன் திருவுள்ளம் இன்றி எது நடக்கும்? ஆனாலும் வைகுண்டத்தில் உன் தவாரபாலகர்களுக்கு நேர்ந்த கதியை நினைத்தோ என்னவோ கதவைத் திறந்துவிட்டான். ஆனாலும் கொஞ்சம் அழ வைத்தான். அதனால் வாயால் முன்னம் முன்னம் மாற்றாதே அம்மா என்று அவனைக் கெஞ்ச வேண்டியதாயிற்று. பின்னர் கண்ணன் எங்களுக்கு நென்னலே வாய் நேர்ந்தான், முன்னமே அனுமதி அளித்துள்ளான் என்ற பிறகுதான் அந்த நேய நிலைக்கதவம் திறந்தது.”
“ நான் எப்போது அனுமதி அளித்தேன் ?” என்றவனிடம்,
“ என்னை நாடிவந்தவரை நான் கைவிடமாட்டேன் என்று கீதையில் கூறினாய், ராமனாக செய்து காண்பித்தாய். அதனால் இப்போது கிருஷ்ணனான உன்னை சரணமடைந்தோம். என்றாள் ஆண்டாள்,
“இவ்வளவுதானா இல்லை வேறு ஏதாவது அர்த்தம் உள்ளதா?” என்றான் கண்ணன்.
அதற்கு ஆண்டாள் கூறினாள்,
“இந்த பாசுரம் ரஹஸ்ய த்ரயம் என்று சொல்லப்படும் மூன்று மந்திரங்களையும் குறிப்பிடுகிறது. முதல் இரண்டு வரிகள் மூல மந்திரமான் ஓம் நமோ நாராயணாய என்பதைக் குறிக்கும்.
நாயகனாய் என்றது உலகநாயகனாகிய உன்னை.நந்த கோபன் என்பது ஆனந்தத்தை கொடுப்பதனாலும் , கோபன் அதாவது ரக்ஷிப்பவனாக இருப்பதாலும்.கோயில் என்றது ப்ரணவம். ஆனந்தம் ப்ரபத்தியின் மூலமாகவே கிடைப்பதால் நம என்ற சப்தமும் இதில் அடங்கி விட்டது.
கொடித்தோன்றும் தோரணவாயில் காப்பானே என்றது த்வய மந்திரத்தை சுட்டுகிறது. கொடித்தோன்றும் தோரணவாயில் என்பது வைகுண்டத்தில் நீ திருமகளுடன் தோன்றுவது. காப்பான் என்பது சரணமடைந்தவர்களை நீ காப்பதைக் குறிக்கிறது.
ஆயர்சிறுமியரோமுக்கு அறைபறை நென்னலே வாய் நேர்ந்தான் என்பது சரமச்லோகம். அதாவது ஸர்வதர்மான் பரித்யஜ்ய மாம் ஏகம் சரணம் வ்ரஜ என்று சரணம் அடைய பக்தி ஒன்றே போதும் குலமோ கல்வியோ ஒரு பொருட்டில்லை என்பதைக் காட்டுகிறது.
நேய நிலைக் கதவம் என்பது, மூன்று மந்திரங்களிலும் உள்ள இரு பாகங்கள். ஓம்,மற்றும் நமோ நாராயணாய, த்வயத்தின் இரு பாகங்கள் சரமஸ்லோக்த்தின் இரு வரிகள்.
இந்தக் கதவுகள் திறக்க வேண்டுமானால் வாயில் காப்போனாகிய ஆசார்யன் கிருபை வேண்டும்.” என்ற ஆண்டாளை கைகொட்டிப் பாராட்டினான் கண்ணன்.
அம்பரமே தண்ணீரே சோறே அறம் செய்யும்
எம்பெருமான்! நந்தகோபாலா! எழுந்திராய்!
கொம்பனார்க்கு எல்லாம் கொழுந்தே! குல விளக்கே!
எம்பெருமாட்டி யசோதாய்! அறிவுறாய்
அம்பரம் ஊடறுத்து ஓங்கி உளகளந்த
உம்பர் கோமானே! உறங்காது எழுந்திராய்
செம்பொற் கழலடிச் செல்வா! பலதேவா!
உம்பியும் நீயும் உறங்கேலோர் எம்பாவாய்.
“ரொம்ப சாமர்த்தியம்தான் ,”.
“முதலில் உன் மாமனார் மாமியாரை வேண்டிக்கொண்டு அப்புறம் என்னிடம் வருவதைச் சொன்னேன்.” என்றான் கண்ணன்
கோதை கூறினாள் “ நான் உன் பள்ளியறையில் முதலில் உன் பெற்றோரைத்த்தான் கண்டேன். உடனே உன் தந்தையின் தாராளகுணம் நினைவுக்கு வந்தது. அவர் அம்பரம் , தண்ணீர் , சோறு, அதாவது உடுக்க உடை, பருக நீர், உண்ண உணவு, வாரி வாரித்தந்தவர் ஆயிற்றே. அதனால்தானே வேதாந்த தேசிகர் , யாதவாப்யுதயம் என்னும் காவியத்தில், நீ பிறந்தவுடன் நந்தகோபர் கொடையில் கல்பதருவையும் மிஞ்சிவிட்டார் என்றார். ?” என்றாள் ஆண்டாள்.
“ ஆம். யாதவாப்யுதயம் என் சரிதத்தை மிகவும் அழகாகக் கூறுகிறது. தேசிகரின் அறிவார்ந்த புலமைக்கு ஈடு இணை உண்டோ?”
“அடுத்தது உன் அன்னையைக் கண்டேன். கொம்பனார்க்கெல்லாம்கொழுந்து என்றதன் மூலம் அவளுடைய கொடிபோன்ற மேனி படைத்த் எல்லா மாதரிலும் சிறந்தவள் என்றேன். மேலும் அவள் யாதவகுல விளக்குஅல்லவா. “
“உண்ணும் சோறு, பருகும் நீர் எல்லாம் கண்ணன் என்று நாங்கள் உணர உன்னை எங்களுக்கு அளித்தனால் நந்தகோபர் எம்பெருமான் ஆகிறார்,. யசோதை எம்பெருமாட்டி. மேலும் யச: என்றால் பிரம்மம் என்கிறது வேதம் அந்த பிரம்மத்தை ஒரு குழந்தையாக உலகுக்கு தந்தவள் , யச: ததாதி இதி யசோதா.” என்ற ஆண்டாளிடம் கண்ணன் கேட்டான்.
“அத்புதமான விளக்கம் . அது சரி. நீ படுத்திருக்கும் வரிசைக்க்ரமத்தில் எழுப்பி வந்தவள் எனக்கு முன்னாள் படுத்திருந்த அண்ணனை விட்டுவிட்டு என்னை முதலில் எழுப்பக் காரணம் ?
“ ஆண்டாள் கூறினாள். “ அதுவா, பலராமன் காலில் இருந்த செம்பொற் கழலைப்பார்த்து நீ என்று நினைத்தேன் . அதனால் உன்னை முதலில் எழுப்ப முயற்சித்தேன். பிறகுதான் உண்மை தெரிந்தது அதனால் அவனை மகிழ்விக்க உம்பியும் நீயும் உறங்கேலாரெம்பாவாய் என்றேன். , உன் சயனமாகிய ஆதிசேஷன் ஆயிற்றே, அவன் எழுந்தால் நீ எழுந்துதானே ஆகவேண்டும்?”
“ நல்ல சாதுர்யம் “ என்ற கண்ணன் “அன்னை அருகில் இங்கு சாதுவாகப் படுத்து உறங்கும் என்னை உலகளந்தானாக பாவிக்க ஏதும் விசேஷ காரணம் உண்டோ” என்றான்.
“நல்ல சாதுப்பிள்ளை “ என்ற ஆண்டாள்,
‘அம்பரம் அதாவது ஆகாயத்தை ஊடறுத்து, பிளந்து ஓங்கி உலகளந்தவன் நீ. உனக்கு உறங்குவதற்கு ஏது இடம் என்று பொருள். “ என்றாள் கோதை.
“ எல்லோரையும் திருப்திப் படுத்தி விட்டாய்,” என்ற கண்ணனைப் பார்த்து கோதை கூறினாள்.
“ நாங்கள் எல்லோரிடமும் உன்னையே காண்கிறோம் அல்லவா? நந்த கோபாலன் என்றது உன்னைத்தான். நந்தம் அல்லது ஆனந்தம் என்பது நீதான், கோ அதாவது, பூமி, வாக்கு, ஆவினம், இந்த்ரியங்கள் முதலிய எல்லாவற்றிற்கும் பாலன், காப்பாற்றுகிறவன் நீதானே.” அம்பரம், வஸ்திரம் திரௌபதிக்குக் கொடுத்தாய் . பாரத யுத்தத்தில் தேரோட்டியாகி களைத்த குதிரைகளுக்கு உன் கையால் நீர் கொடுத்தாய்., சோறு அதாவது உணவு, வற்றின அக்ஷயபாத்திரத்தில் இருந்து துர்வாசர் முதலியோருக்கு உணவளித்தாய்.” என்றாள் கோதை. “ நன்று. நீ செம்பொற்கழல் என்று சொன்னது என் அண்ணனின் காலில் இருந்த வீரக்கழல்.,அவன் வீரச்செயல்களை அறிவாயல்லவா? அவமதித்த கௌரவருக்கு புத்தி புகட்ட தன கோடரியால் ஹஸ்தினாபுரத்தையே கங்கையில் தள்ளவில்லையா? ஒருசமயம் யமுனையை தான் இருக்கும் இடத்திற்கு இழுத்தானே.” என்றான் கண்ணன்.
“ அது மட்டுமா? ஆதிசேஷனான அவன் ஏழு குழந்தைகளை இழந்த பின்னர் உன் தாயான தேவகியின் கர்ப்பத்தில் புகுந்து சர்ப்ப தோஷ நிவாரணம் செய்பவன் போல அதை சுத்தமாக்கி உன் பிறப்புக்கு வழிவகுத்தவன் அல்லவா? “என்றாள் கோதை.
“ நீ சொல்வது உண்மை, சென்றால் குடையாம், இருந்தால் சிங்காசனமாம் என்று எங்கும் என்னைத் தொடர்பவன் அல்லவா? “ என்றான் கண்ணன்.
“சேஷனாகியவனும், சேஷியாகிய நீயும் ஒன்றே. வால்மீகி ஆதிசேஷனின் அவதாரமான லக்ஷ்மணனை ராமனாகிய உன் உடலுக்கு வெளியே உள்ள உயிர், பஹிர்கதபிராண: என்றல்லவா கூறுகிறார்?’ என்ற கோதையிடம் கண்ணன் கூறினான்.
“எம்பெருமான் நந்த கோபாலன் என்பது, எம்பெருமானார் என்று அழைக்கப்பட்ட ராமானுஜரை நினைவூட்டுகிறது. எல்லோருக்கும் பக்தியை ஊட்டி ஆனந்தத்தை அளித்தததனால் அவரும் நந்த கோபாலனாகிறார். “ என்ற கண்ணிடம் ஆண்டாள் கூறினாள்.
“ உன் அருளால் வரும் எல்லா சொற்களும் எந்த காலத்திற்கும் ஓட்டிவரும் அல்லவா? அம்பரம் என்பது உன் அருள். தண்ணீர் அதனால் பெருகும் பக்தி. சோறு என்றால் பகவத்கைங்கர்யம். இது எல்லாம் ஆசார்யன் அருளால் வருவது.”
“மேலும் அவர் என் பிரியமான அண்ணன் ஆயிற்றே. நான் நேர்ந்து கொண்ட நூறு தடாவில் வெண்ணையும் அக்கறை வடிசிலும் திருமாலிருன்சொலையில் உள்ள உனக்குக் கொடுப்பேன் என்றதை நிறைவேற்றினவர் அல்லவா !” என்றாள் ஆண்டாள்.
“ஆம். அடுத்த பாசுரம் திருப்பாவை ஜீயர் என்று அழைக்கப்பட்ட அவருக்கு உகந்ததாயிற்றே!” என்றான் கண்ணன்.
உந்துமத களிற்றன் ஓடாத தோள்வலியன்
நந்த கோபாலன் மருமகளே! நப்பின்னாய்!
கந்தம் கமழும் குழலி! கடைதிறவாய்
வந்துஎங்கும் கோழி அழைத்தன காண் மாதவிப்
பந்தல்மேல் பல்கால் குயிலினங்கள் கூவினகாண்
பந்தார் விரலி!உன் மைத்துனன் பேர்பாடச்
செந்தாமரைக் கையால் சீரார் வளை ஒலிப்ப
வந்து திறவாய் மகிழ்ந்தேலோர் எம்பாவாய்.
“இந்தப்பாசுரத்தில் நீ நப்பின்னையை வந்து தாழ் திறக்கும்படி வேண்டுகிறாய். நப்பின்னை கிருஷ்ணாவதாரத்தில் என் தந்தையான நந்தகோபரின் மருமகள். அவள் நீளா தேவியின் அவதாரமாகவும் கருதப்படுகிறாள். அதனால் நந்தகோபாலன் மருமகள் என்று நீ சொன்ன இரு அர்த்தத்திலும் சரியாகப் படுகிறது. “ என்றான் கண்ணன்.
“ நந்தகோபாலன் மருமகள் என்று நான் சொன்னது ஏனென்றால் ஒரு பெண்ணை விவாகம் ஆகுமுன் அவள் இன்னாரின் பெண் என்று சொல்வது போல விவாகம் ஆனதும் இன்னாரின் மருமகள் என்று சொல்வதுதானே சிறப்பு?.சீதை தன்னை ராவணனிடமும் அனுமனிடம் ‘ஸ்னுஷா தசரதஸ்யாஹம்,’ நான் தசரதருடைய மருமகள் என்றுதானே அறிமுகப் படுத்திக் கொள்கிறாள்?’
“அவள் மேலும் ‘ப்ருதிவ்யாம் ராஜசிம்ஹானாம் முக்யஸ்ய ‘ இந்த மண்ணுலகில் சிம்ஹம் போன்ற அரசர்களுக்குள் முக்கியமான தசரதர் ‘ என்று சொன்னது போல் நான் ‘உந்துமதகளிற்றன் ஓடாத தோள் வலியன் நந்த கோபாலன் என்றேன். மத்த கஜம் போல் வலிவுடையவன் அல்லது மத்தகஜம் போன்ற உன்னை உடையவன் , உனக்குத் தீங்கு இழைப்போரைக் கண்டு பயப்படாமல் எதிர்த்து நிற்பவன் என்ற அர்த்தத்தில்.”
“ ஆனால் உண்மையில் நாங்கள் புருஷகார பூதையான திருமகளை எழுப்புகிறோம். ஏனென்றால் நீ கண்ணனாக வந்தாலும் எங்களுக்கு.நாராயணன்தானே. அவள் உன் மார்பில் மருவைப் போல் இருப்பதால் மருமகள். நப்பின்னை என்ற சொல் நல்+ பின்னை, உன் அவதாரங்களில் உன்னைத் தொடர்ந்து வருபவள் என்ற பொருளில்.” என்றாள் ஆண்டாள்.
“ அப்படியானால் பந்தார் விரலி, கைகளில் பந்தை வைத்துக் கொண்டிருப்பவள் , உன் மைத்துனன் பேர் பாட, என்ற சொற்களுக்கு என்ன பொருள்? “ என்றான் கண்ணன்.
“எல்லா ஜீவர்களும் உங்கள் இருவருடைய லீலாவிநோதம் என்ற கைப்பந்து போலத்தானே. ஆனால் அந்த பந்து எப்போதும் திருமகளின் கைகளில்தான் முடிவில் இருக்கும். ஏனென்றால் உன் கருணையை எங்கள் மேல் வீசிக் காப்பது அவள் அல்லவா? “
“ மைத்துனன் என்பது மைதுனம், ஒன்றாக இணைவது, என்ற கருத்தில் ஸ்ரீதேவியின் இணையான உன்னைக் குறிப்பிடுவதாகும்.”
“கந்தம் கமழும் குழலி என்பது திருமகள் கேசத்தின் இயற்கை வாசம்,செந்தாமரைக்கையால் என்றது அவள்கையில் எப்போதும் உள்ள தாமரை.. ஆக, இது திருமகளைக் குறிக்கும் பாசுரம்.
“ நன்று. வந்தெங்கும் கோழி அழைத்தன காண், மாதவிப்பந்தல் மேல் பல்கால் குயிலினங்கள் கூவின காண் ,’ என்ற வரிகளுக்கும் விளக்கம் தந்துவிடு,” என்றான் கண்ணன்.
கோதை கூறினாள், “நேரிடைப் பொருள் கோழிகள் கூவுவதும் குயில்கள் மாதவிக் கொடிகளில் கூவுவதும் தான் என்று இருந்தாலும், கோழி என்பது பகவ்த்பக்தி இல்லாதோர். குயில்கள் பக்தர்கள். எங்கும் காணப் படும் கோழியின் குரல் எப்போதும் உரக்க இருக்கும். குயில்களின் குரல் இனிமையானது. பக்தி இல்லாதவர்கள் எழுந்து அவரவர் வேலையைப் பார்க்கச் சென்று விட்டனர். இதன் நடுவில் பக்தர்களின் இனிய நாமசங்கீர்த்தனம் கேட்பதில்லை. “
“உலகப்பற்றைக் குறிக்கும் விஷயங்கள் எங்கும் உள்ள கோழியின் கூவலைப் போல் நாடெங்கும் இறைந்து கிடக்கின்றன. பகவத்விஷயமான வாக்குகள் , குயில் கூவிவதைப் போல் இனிமையானவை. மாதவிப்பந்தல் என்பது திருமகளின் கேள்வனாகிய உன்னைக் குறிக்கும்.”
“கூஜந்தம் ராமராமேதி மதுரம் மதுராக்ஷரம் ஆருஹ்ய கவிதா சாகாம் வந்தே வால்மீகி கோகிலம்” என்றபடி,, உன் நிழலில் கவிதை என்னும் கிளையில் இருந்துகொண்டு வால்மீகி , வ்யாசர் போன்ற குயில்கள் மதுரமாக உன் பெருமையை இசைக்கின்றன. அவைகளை தேடிப் போகவேண்டும்.” என்றாள்.“இந்தப் பாசுரம் இன்னொரு விதத்திலும் மேன்மை வாய்ந்தது. ராமானுஜர் உகந்த பாசுரம். திருப்பாவை சொல்லிக்கொண்டே பிக்ஷைக்குப் போகும்போது, அவர் குருவான பெரியநம்பியின் வீட்டு வாசலில் அவர் மகள் அத்துழாய் பிக்ஷைபோட வெளியில் வந்தாள். இந்தப பாசுரத்தில் லயித்த ராமானுஜர் அவளை ஸ்ரீதேவியாகவே கண்டு உணர்ச்சிவசப்பட்டார்.” என்ற கண்ணன் ,
“இன்னொரு சிறப்பையும் நான் இந்தப பாசுரத்தில் காண்கிறேன். இது பதினெட்டாவது பாசுரம் .” என்றான்.
கோதை கூறினாள், “ ஆம் திருமகளைப் பற்றிய இந்தப பாசுரம் அப்படி அமைந்தது எனக்கும் வியப்பைத் தருகிறது. ஏன் தெரியுமா? ஒன்று , எட்டு இவ்விரண்டின் கூட்டுத்தொகை ஒன்பது. அது ஒரு தெய்வீக எண். அதோடு எந்த எண்ணைக் கூட்டினாலும் கழித்தாலும் பெருக்கினாலும் வரும் எண்ணின் கூட்டுத்தொகை ஒன்பதாகவே இருக்கும். அதுபோல ஸ்ரீதேவி என்றும் மாறாத கருணை உடையவள். மேலும், பதினெட்டு என்ற எண் உன்னோடு சம்பந்தப்பட்டது. நீ கூறிய பகவத் கீதை பதினெட்டு அத்தியாயம் கொண்டது, உன் மகிமையைக் கூறும் பகவத் புராணத்தில் பதினெட்டாயிரம் ஸ்லோகங்கள். உன் கிருஷ்ணாவதாரத்தின் முக்கிய நோக்கமான் பூபாரம் தீர்க்க நீ நடத்திய பாரத யுத்தமும் பதினெட்டு நாள் நடந்தது.” என்றாள் கோதை.
கண்ணன் கூறினான். “ கருணையில் இருந்து என்றும் மாறாதவள் என்று நீ கூறியதைக் கேட்கையில், எனக்கு ஒரு சம்பவம் நினைவுக்கு வருகிறது. திருவரங்கத்தில் நான் மோகினி அலங்காரத்தில் இருக்கையில் திருமகளைப் போல் அழகாக இருக்கிறேனா என்று ஒரு பக்தரிடம் கேட்க அவர் ஆம் ஆனால் அவள் கண்களில் உள்ள கருணை என்னிடம் குறைகிறது என்றார்.”
ஆண்டாள் சிரித்து, “ அது உண்மைதான். நான் ஒரு நூற்று நாற்பத்து மூன்று பாசுரங்கள் பாடியும் நீ இரங்கவில்லையே?” என்றாள்.
“ அது உன் தீஞ்சுவைத் தமிழமுதம் பருகவே.” என்றான்.
ஆண்டாள் கூறினாள். “ அதனால் எவ்வளவு மன வேதனை அனுபவித்தேன் என்று உணர்வாயோ? “என்றாள்.
:”அது உன் பக்தியை உலகறியச் செய்வதற்கே ,” என்ற கண்ணன் “ நான் உன் உள்ளத்தில் எப்போதும் இருக்கிறேனே, என்னை எங்கு சென்று தேட வேண்டும். “ என்றான்.
19. குத்து விளக்கெரிய
குத்து விளக்கெரிய கோட்டுக்கால் கட்டில்மேல்
மெத்தென்ற பஞ்ச சயனத்தின் மேலேறிக்
கொத்தலர் பூங்குழல் நப்பினை கொங்கைமேல்
வைத்துக் கிடந்த மலர்மார்பா! வாய்திறவாய்
மைத்தடங் கண்ணினாய்! நீஉன் மணாளனை
எத்தனை போதும் துயிலெழ ஒட்டாய்காண்
எத்தனை யேலும் பிரிவாற்றகில்லாயால்
தத்துவம் அன்று தகவேலோர் எம்பாவாய்.
“பதினேழாவது பாசுரத்தில் உன்னை எழுப்ப முனைந்தோம். புருஷகார பூதையான தாயாரை முன்னிட்டுத்தான் உன்னை ஆராதிக்க வேண்டும் என்ற முறையில் போன பாசுரம் அமைந்தது. இது அவளையும் உன்னையும் சேர்த்துக் கூறுவது. அன்னை உன்னைக் கேட்காமலேயே கருணை காட்டும் இயல்புடையவள். ஆனால் தண்டிப்பது மட்டும் உன் ஆணையின்றி செய்ய மாட்டாள். “ என்ற ஆண்டாளிடம் கண்ணன் “அப்படியா?” என்றான்.
“ஆம் ஹனுமானுக்கு வாலில் நெருப்பு வைத்தபோது அது சுடாமலிருக்க ‘சீதோ பவ ஹநூமத: , குளிர்ந்திருப்பாயாக’ என்று அக்னிதேவனுக்கு ஆணையிட்டாள். ஹனுமனின் கோபத்தில் இருந்து ராக்ஷசிகளை ‘ ந கச்சித் ந அபராத்ய்தி?’ யார்தான் தவறு செய்யவில்லை? ‘ என்றுகூறிக் காப்பாற்றினாள். ஆனால் ‘ராமரின் ஆணையில்லாதனால் உன்னை விடுகிறேன் இல்லையென்றால் பஸ்மமாக்கிவிடுவேன்’ என்று ராவணனிடம்கூறினாளே.” என்றாள் கோதை.
“தியாகராஜரின் சொற்கள் நினைவுக்கு வருகின்றன.. மாஜானகி சட்டபெட்டகா என்ற க்ருதியில் சீதைக்கு ராவணனை அழிக்க எல்லா சக்தியும் இருந்தது. ஆனால் ‘ஸ்ரீநாயக யசமு நீகே கல்க,’ உன் புகழுக்கு மாசு ஏறபடக்கூடாது என்று அப்படிச் செய்யவில்லை என்கிறார்.”
“ ஏக லக்ஷ்யம்தயாயா:’என்று தேசிகர் ஸ்ரீ ஸ்திதியில் சொல்வது போல உங்கள் இருவருக்கும் ஒரே நோக்கம் கருணை காட்டுவதுதானே,” என்றஆண்டாளிடம் கண்ணன் ,
“இப்போது பாசுரத்திற்குப் போவோம். கு’த்து விளக்கெரிய கோட்டுக்கால் கட்டில்மேல் மெத்தென்ற பஞ்ச சயனத்தின் மேலேறிக் கொத்தலர் பூங்குழல் நப்பினை கொங்கைமேல் வைத்துக் கிடந்த மலர்மார்பா ‘ என்று அழகாக நான் சயனித்திருப்பதை வர்ணித்தாய் . அப்படிப்பட்ட நிலையில் ‘வாய் திறவாய்’ என்றால் என்னால் எப்படி முடியும்? “ என்றான் குறும்புப் புன்னகையுடன்.
“ உன் வாக் சாதுர்யத்தை என்னிடம் காட்ட வேண்டாம். குத்துவிளக்கு எனப்படுவது ஞான தீபம்.உன் பஞ்ச சயனம் ஆதிசேஷன். பஞ்ச சயனம் என்றால் அதற்கு. மிருதுத் தன்மை , வெண்மை ,நல்ல வாசனை, குளிர்ந்து இருத்தல், அழகு என்ற ஐந்து குணங்கள் இருக்க வேண்டும். இது ஆதிசேஷனுக்கு இருக்கிறது. “ என்ற ஆண்டாளைப் பார்த்து, கோகுலத்தில் நான் ஆதிசேஷனுக்கு எங்கே போவேன்?” என்றான் கண்ணன்.
“ இந்தக் கதையெல்லாம் வேண்டாம். ஒரு பிரபு எங்காவது போவதென்றால் அவன் மெத்தை முன்னால் அனுப்பப்படும். அது போல நீ வருமுன்பே ஆதிசேஷனை அனுப்பி விடுகிறாயே. அதனால் தானே விஸ்வாமித்ரர் காட்டில் தரையில் படுத்துறங்கும் உன்னை ஆதிசேஷன் மேல் சயனித்துள்ளதாகக் கண்டார்?” என்றால் கோதை.
“ ஸ்ரீதேவியும் உன்னை விட்டு எங்கும் போவதில்லை. அதனால்தானே நீ ‘அகலகில்லேன் இறையும் என அலர்மேல் மங்கை உறை மார்பா ‘ என்று அழைக்கப் படுகிறாய். இதுதான் நப்பினை கொங்கை மேல் வைத்துக் கிடந்த மலர்மார்பா என்பதன் பொருள்.
“.சரி. அவளை எல்லையில்லாக் கருணை உடையவள் என்று சொல்லிவிட்டு இப்போது ‘மைத்தடங் கண்ணினாய்! நீஉன் மணாளனை எத்தனை போதும் துயிலெழ ஒட்டாய்காண்,’ என்பது ஒட்டவில்லையே ? “ என்றான் கண்ணன்.
“ அவளுக்கு உன்னை எப்படி எப்போது எழுப்ப வேண்டும் என்று தெரியும் உன்னை உடனே எழுப்ப மாட்டாள். ஏனென்றால் அவசரமாக எழுந்தாயானால் எங்கள் குற்றங்கள் உன் கண்ணில் படும். நீ எப்படி எழுந்திருக்க வேண்டும் என்று பிறகு சொல்கிறேன்.”என்றாள் கோதை.
“ நான் உண்மையில் உறங்கவில்லை . உன்னுடைய தேனினும் இனிய சொற்களைக் கேட்கவே தாமதித்தேன்.” என்றான் கண்ணன்.
“எனக்குத் தெரியும் அதனால்தான் தத்துவம் அன்று. தகவேல் என்றேன்.
தத் கேட்டும் வாளாவிருபப்து த்வம் அன்று உன் ஸ்வபாவம் இல்லை. தகவேல்- இரங்க வேண்டும் என்று பொருள்.
மேலும் தத் த்வம்(அஸி), என்று உன்னோடு பிரிவில்லாமல் இருப்பது தகவு அல்லது உன் அருள் இன்றேல் சித்திக்காது. அதற்காகத்தான் பிராட்டியின் கருணை வேண்டும்." என்றாள் ஆண்டாள்.
முப்பத்து மூவர் அமரர்க்கு முன்சென்று
கப்பம் தவிர்க்கும் கலியே! துயிலெழாய்
செப்பம் உடையாய் திறலுடையாய் செற்றார்க்குவெப்பம் கொடுக்கும் விமலா! துயிலெழாய்
செப்பென்ன மென்முலைச் செவ்வாய்ச் சிறு மருங்குல்
நப்பின்னை நங்காய்! திருவே! துயிலெழாய்
உக்கமும் தட்டொளியும் தந்துஉன் மணாளனை
இப்போதே எம்மை நீராட்டேலோர் எம்பாவாய்
“போன பாசுரத்தைக் கேட்டும் நீ எழுந்திருக்க வில்லை. நப்பின்னை நங்காய் திருவே என்று நாங்கள் கூப்பிட்ட்தும் அவள் எழுந்து வந்து விட்டாள் ஆனால் அவளால் உன்னை எழுப்ப முடியவில்லை அல்லவா?> தூங்குகிறவனைத்தானே எழுப்ப முடியும்.” என்றாள் ஆண்டாள்.
“ அவள் உங்களுக்கு அருள் புரியத் திருவுள்ளம் கொண்டுவிட்ட பின் நான் வேறு என்ன செய்வது. . எழுந்திருக்கத்தானே வேண்டும், என்ற கண்ணனிடம் ஆனால் நீ உடனே வந்தாயா? சாவகாசமாகத்தானே வந்தாய்?” என்றாள் ஆண்டாள்.
“அதனால்தானே இன்னும் சில பாசுரங்களைக் கேட்க முடிந்தது. இந்தப் பாசுரத்தில் ஒரே புகழ் மாலையாக இருக்கிறதே ? “ என்றான் கண்ணன்.
“ முப்பத்துமூவர் அமரர்க்கும் முன்சென்று கப்பம் தவிர்க்கும் கலியே என்று ஏன் கூறினேன் தெரியுமா? முப்பதுமுக்கோடி தேவர்களுக்கும் ஏதாவது ஆபத்து என்றால் அதை வருமுன்பே காப்பதில் நாட்டம் உடையவன் நீ. அதுமட்டுமா செப்பம் உடையாய் அதாவது நேர்மை உடையவன் , திறலுடையாய் , சாமர்த்தியம் உடையவன். “
“ ஏலாப் பொய்களுரைப்பான் என்று சொன்னதும் நீதானே இப்போது நேர்மையுடையவன் ஆகிவிட்டேனா? “ என்றான் கண்ணன்.
“நேர்மை அல்லது ஆர்ஜவம் என்பது சாமர்த்தியத்துடன் சேர்ந்து இருந்தால் தான் பலன். உன்னுடைய செய்கைகள் ஏமாற்றுவது போல் தெரிந்தாலும் அது நல்லவர்களைக் காக்கவே .பாரத யுத்தத்தின் போது அமாவாசையை ஒரு நாள் முன்பாக வரவழைத்தது போலும் ஜயத்ரதனை அழிக்க சூரியனை மறைத்தது போலும். அங்கு ஆர்ஜவம் பயன்படாது. கேடுதான் விளைவிக்கும்.”
“ மற்றும் செற்றார்க்கு வெப்பம் கொடுக்கும் என்றது, உன் அன்பர்களுக்கு தீங்கு விளைவிப்பவரைத் தீயாய் சுடுவாய் என்று பொருள்.”
“ அதெல்லாம் சரிதான் , அதென்ன உக்கம் தட்டொளி நீ கேட்டது? உக்கம் என்றால் விசிறி தட்டொளி என்றால் கண்ணாடி. இதனால் உனக்கு என்ன பயன்? “ என்றான் கண்ணன்.
. “ உக்கம், விசிறி என்பது தான் எனற மமதையை அகற்றுவது. தட்டொளியாவது ஆத்மஸ்வரூபத்தை கண்ணாடிபோல் காண்பிக்க.அதற்காக தாயாரின் அருளை வேண்டினேன். “ என்றாள் கோதை.