கற்றுக் கறவைக் கணங்கள் பல கறந்து
செற்றார் திறலழிய சென்று செருச்செய்யும்
குற்றமொன்றில்லாத கோவலர் தம் பொற்கொடியே
புற்றரவல்குல் புனமயிலே போதராய்
சுற்றத்துத் தோழிமார் யாவரும் வந்து நின்
முற்றம் புகுந்து முகில் வண்ணன் பேர் பாட
சிற்றாதே பேசாதே செல்வப் பெண்டாட்டி நீ
எற்றுக்குறங்கும் பொருள் ஏலோரெம்பாவாய்
“ இப்போது பசுக்களை கறக்கும் நேரம் வந்துவிட்டதாக்கும்.” என்ற கோபாலன் ,” கற்றுக் கறவைக் கணங்கள் பல கறந்து என்று நீ சொல்வது மிகவும் சரியானதே. ஆயர்பாடியில் கணக்கிலாத பசுக்கள். பால் ஏராளமாக இருந்த போதிலும் அவைகளின் மடிக்கனத்தைக் குறைப்பதற்காகவே கறப்பது வழக்கம். அதுவும் ஒரு தேகப் பயிற்சியாகவே யாதவர்கள் செய்வார்கள். ஏனென்றால் நீ கூறியுள்ளபடி செற்றார் திறலழிய சென்று செருச்செய்பவர்கள் அல்லவா? எதிர்ப்பவர்களை வெல்ல பலம் வேண்டுமே” என்றான் கண்ணன்.
“ ஆனால் ஆயர்களுக்கு யார் எதிரிகள்? உனக்கும் உன் அன்பர்களுக்கும் கெடுதல் நினைப்போரே. ஏனென்றால் அவர்கள் குற்றம் ஒன்றில்லாத கோவலர்கள் அல்லவா?” என்றாள் கோதை.
“ நீ எழுப்ப நினைக்கும் பெண் அப்படி ஒருவர் பெண்ணல்லவா? பொற்கொடி, அழகான பொற்கொடியைப்போன்றவள் , புற்றரவு அல்குல், புற்றில் இருந்து வெளிப்படும் பாம்பைப் போன்ற அளகபாரம் உடையவள், புன்மயில், ஆடும் மயில் என்று வர்ணித்தாயே , பாம்பும் மயிலும் எங்காவது ஒரே இடத்தில் இருக்குமா? “ என்றான் கண்ணன்.
“ பொற்கொடி என்றால் கோல் தேடி ஓடும் கொழுந்தே போல் மால் தேடி ஓடும் மனம் படைத்த பக்தர் , பத்தரை மாற்றுத் தங்கம் போன்றவர். போன்றவர். புற்றரவல்குல் என்றால் ஊருக்குள் இருக்கும் பாம்பு போன்ற பரம ஏகாந்தி. தன் பெருமையை மறைத்துக் கொள்பவர். அதே சமயம் முகில் வண்ணனாகிய உன்னைக் கண்டபோது மேகத்தைக்கண்ட மயில்போல் ஆனந்தம் அடைபவர். “
“அப்படிப்பட்டவர் உன்னுடைய செல்வப்பெண்டாட்டி போன்றவர். உன்னையே நினைந்து சிற்றாதே , அசைவின்றி, பேசாதே , பேச்சின்றி, எற்றுக்கு உறங்கும், , உறங்குவது போல் உன்னில் ஆழ்ந்திருப்பர். “ என்றாள் கோதை.
“ அப்படியானால் முதல் இரு வரிகளின் பொருள் என்ன” என்றான் , கோவிந்தன்.
ஆண்டாள் கூறினாள்.
“கற்றுக் கறவைகணங்கள் என்பது வேதம் உபநிஷத் எல்லாம்.அதை கறந்து பாலை எல்லோருக்கும் கீதை மூலம் வாரி வழங்கியவன் நீ. ‘ஸர்வோபநிஷதோ காவோ தோக்தா கோபாலநந்தன: ,’ என்று சொல்வர் பெரியோர், உபநிஷத் என்ற பசுக்களிடம் இருந்து பாலைக் கரந்தவன் , என்று உன்னை.”
செற்றார் திறல் அழிய சென்று செருச்செய்பவனும் நீயே . பக்தர்களுக்கு ஓர் இடையூறு செய்பவர்களை உடனே சென்று அழிக்கவில்லையா.? கஜேந்திரனுக்கு ஓடி வந்து அபயம் அளித்தாய். பாண்டவர்களுக்கு கெடுதலே செய்துவந்த கௌரவர்களை குருக்ஷேத்ரம் சென்று அழித்தாய்.. ஆகவே குற்றம் ஒன்றில்லாத கோவலன் உனக்கு செல்வப் பெண்டாட்டி போல உள்ள பக்தர்கள் எதற்கு கவலைப்பட வேண்டும்? “ என்றாள்.
“ என்னைசரண் அடைந்தவர்களைக் காப்பது என் கடன்.” என்றான் கோவிந்தன்.
கனைத்து இளம் கற்றெருமை கன்றுக்கு இரங்கி
நினைத்து முலை வழியே நின்று பால்சோர
நனைத்து இல்லம் சேறாக்கும் நற்செல்வன் தங்காய்
பனித்தலை வீழநின் வாசற்கடை பற்றிச்
சினத்தினால் தென்இலங்கைக் கோமானைச் செற்ற
மனத்துக்கு இனியானைப் பாடவும்நீ வாய் திறவாய்
இனித்தான் எழுந்திராய் ஈதென்ன பேர்உறக்கம்!
அனைத்து இல்லத்தாரும் அறிந்தேலோர் எம்பாவாய்.
“கும்பகர்ணன் வதத்திற்குப் பிறகு இப்போது ராவண வதமா? நான் இன்னும் ராமனாகவே காத்துக்கொண்டிருக்கிறேன் என்றான் கண்ணன்.”’
“ சினந்திங்கு தென்னிலங்கைக் கோமானைச் செற்ற , என்ற வரியின் பொருள் ராவண வதம் மட்டும் அல்ல, “ என்ற கோதையை வியப்புடன் பார்த்து நின்றவனிடம் அவள் கூறினாள்.
‘நோற்றுச்சுவர்க்கம் ‘ என்ற பாசுரத்தில் ‘சென்று செருச்செய்யும் குற்றமொன்றில்லாத கோவலன் ‘ என்று உன்னைக் குறிப்பிட்டதன் பொருள், நீ எப்போதும் மக்களை விட்டு விலகிச் சென்றுதான் போர் புரிவாய். மதுரை மக்களுக்கு இடையூறு நேராத வண்ணம் ஜராசந்தனை வெளியிலே சந்தித்து அவனை நீ ஓடுவதாக ஏமாற்றி த்வாரகைக்கு மக்களையும் அழைத்துச் சென்று விட்டாய். மஹாபாரதப போரும் ஹஸ்தினாபுரத்தில் இருந்து தூரத்தில் குருக்ஷேத்ரத்தில்தான் நடந்தது. ராமாவதாரத்திலும் இலங்கைக்கு வெளியேதான் போர் புரிந்தாய் “ என்ற கோதையைப் பார்த்து, இலங்கையை நான் ஏற்கெனவே விபீஷணனுக்குக் கொடுத்துவிட்டேனே, அதைக் காப்பாற்ற வேண்டாமா என்றான் கண்ணன்.
“அதனால்தான் சினந்து இங்கு தென்னிலங்கைக் கோமானை செற்ற , இலங்கை அரசனைத்தான் அழித்தாயே தவிர இலங்கையை அல்ல , என்ற பொருளில் கூறினேன்.” என்றாள்.
மேலும் கோதை கூறினாள். அதிருக்கட்டும். ராவணனேயானாலும் சரண் அடைந்தவனைக் காப்பேன் என்றாயே, இலங்கையை விபீஷணனுக்கு கொடுத்த பின்பு ராவணன் சரண் அடைந்தால் நீ கொடுத்த வாக்கு என்ன ஆவது?” என்றாள் .
“உன்னையே இழந்தாலும் லக்ஷ்மணனையே இழந்தாலும் கொடுத்த் வாக்கைக் காப்பேன் , என்று நான் சீதையிடம் கூறியதை வைத்துக்கொண்டு என்னை மடக்குகிறாயாக்கும். ராவண யுத்தத்தின்போது என் பதினான்கு வருட வனவாசம் முடியும் தருணம் அல்லவா? அப்போது அயோத்தி என் வசம்தானே? அதை கொடுத்திருப்பேன், என்று சொன்னதும் கோதை, “அய்யய்யோ” என்றாள்.
“பயப்படாதே . அது என் சரணாகதரக்ஷகன் என்ற பெயரை நிலை நாட்டவே. ராவணன் சரணடைய மாட்டான் என்பது எனக்கு மட்டும் தெரிந்த தேவ ரகசியம். அதனால்தான் விபீஷணனுக்கு ‘இந்தா விபீஷணா லங்காபுரி ராஜ்ஜியம்’ என்று கொடுத்தேன்.” என்றான் கண்ணன்.
“ நீ ராமன் வேடத்தில் இருந்தாலும் மாயக் கண்ணன்தான் என்பதை நிரூபித்துவிட்டாய்,” என்ற கோதை,
“அதனால்தான் உன்னை மனத்துக்கினியான் என்று குறிப்பிட்டேன். உன்னை வால்மீகி ‘ஸோமவத் பிரியதர்சன: ‘, உன் தரிசனம் சந்திரனைக் கண்டது போல் ஆனந்தம் அளிக்கிறது என்று கூறினார்.
எருமை தன் கன்றை நினைத்த மாத்திரத்தில் கனைத்து முலைவழியே பால் சோர நிற்பது போல நீ எங்களை நினைத்து உன் அருளாகிய பாலை சொரிந்துகொண்டே இருக்கிறாய், “ என்ற கோதையைப் பார்த்து, “ ஆம் பசுவுக்கு கன்றைப் பார்த்தால்தான் பால் சுரக்கும். பசுக்களைக் கற்க நேரம் ஆனால் அதற்குள் எருமைகள் கன்றை நினைத்து பால் சுரக்கும்,” என்ற கண்ணன் குறும்புடன் கூறினான்.
“ நந்தகோபன் குமரன், யசோதை இளம் சிங்கம் ஆக இருந்த நான் இப்போது எருமை ஆகிவிட்டேனே.”
கோதை அவனுக்கு சளைத்தவளா? “ நீ மட்டும் அல்ல , உன் துணைவியும் கூட.” என்றாள்.
“அப்படியானால் சரி. ஒரு மகிஷத்தின் துணைவியும் மகிஷியாக இருப்பதுதானே நியாயம் “ என்றான் கண்ணன்.
‘ந கச்சித் நாபராத்யதி,’ யார்தான் தவரிழைக்கவில்லை என்று கூறிய சீதா பிராட்டி தன் கன்றை நினைத்துக் கருணைப்பால் சொரியும் மகிஷி , பெண் எருமை போல.அதோடு மட்டும் அல்ல . அவள் உனக்கே கருணையை உபதேசித்தவள், ராவணனுக்கும் ஹிதோபதேசம் செய்தவள்.
நற்செல்வன் தங்காய் என்ற சொல்லும் ஸ்ரீதேவியையே குறிக்கும். தங்காய் என்றது அவள் பொன் வண்ண உருவம். அவள் நற்செல்வனாகிய உனக்கே உரியவள் அல்லவா? செல்வத்திருமகளை அடைந்ததால் நீயும் நற்செல்வன் ஆகிறாய். “ என்ற ஆண்டாளைப் பார்த்து,
“அவளைப் போலவே பூதேவியான உன்னையும் ஆடைந்ததுதான் என்னுடைய பெரும் செல்வம். அவளைப்போலவே நீயும் உன் குழந்தைகளைப் பற்றியே சிந்தித்துக் கொண்டு என்னிடம் அவர்களுக்கு அருளும்படி யாசிக்கிறாய் அல்லவா? அதற்காகத்தானே இங்கு அவர்களை நல்வழிப் படுத்த ஆண்டாளாகவும் வந்திருக்கிறாய். “ என்ற கண்ணன் ,
“எனக்கு இந்தப்பாசுரத்தில் ‘அனைத்தில்லம் சேறாக்கும்’, ‘பனித்தலை வீழ நின் வாசல் கடை பற்றி ‘ என்ற வர்ணனை பிடித்திருக்கிறது. இதற்கும் எதாவது விசேஷ விளக்கம் சொல்லப்போகிறாயா” என்றான்.
“ஆம். தலைக்குமேல் நீர்வண்ணம் , அதாவது நீ, கீழே பால்வண்ணம் பாலாக ஓடும் எங்கள் பக்தி, உன்னையே நினைந்து மால்வண்ணம் கொண்ட நாங்கள் அன்பு வெள்ளத்தில் அடித்துக் கொண்டு போய் நாங்கள் வந்த காரியத்தை மறந்து விடாமல் இருக்க இந்த உடல் உணர்வு என்ற வாசற்படியை விடாமல் பிடித்துக்கொள்ள வேண்டியதாகிறது.
பேருறக்கம் என்பது பகவத் சிந்தனை இன்றி இத்தனை ஜன்மம் கழித்தோமே அதுதான். .” என்றாள்.
புள்ளின் வாய் கீண்டானைப் பொல்லா அரக்கனைக்
கிள்ளிக் களைந்தானைக் கீர்த்திமை பாடிப்போய்ப்
பிள்ளைகள் எல்லாரும் பாவைக் களம்புக்கார்
வெள்ளி எழுந்து வியாழம் உறங்கிற்று
புள்ளும் சிலம்பின காண் போதரிக் கண்ணினாய்!
குள்ளக் குளிரக் குடைந்து நீராடாதே
பள்ளிக் கிடத்தியோ? பாவாய்!நீ நன் நாளால்
கள்ளம் தவிர்ந்து கலந்தேலோர் எம்பாவாய்.
“இந்தப் பாசுரத்தில் என்னுடைய எந்த ரூபத்தை வர்ணிக்கிறாய் என்று தெரியவில்லையே ? கிருஷ்ணனாகவா, ராமனாகவா அல்லது நரசிம்ஹனாகவா?” என்றான் எல்லாம் அறிந்தவன் ஒன்றும் அறியாதவன் போல்.
ஆண்டாள் கூறினாள். “ என் வாக்கிலிருந்து வரும் எல்லா சொற்களுமே உன் சங்கல்பத்தினால் வருவது. உனக்குத் தெரியாதாக்கும். என் வாயிலாகக் கேட்கவேண்டும் என்பது உன் விருப்பம். சொல்கிறேன்.
“ உண்மையில் மூன்று அவதாரங்களையும் குறிப்பிடுவதாகவும் கொள்ளலாம்.
புள்ளின் வாய் கீண்டானைப் பொல்லா அரக்கனைக்
கிள்ளிக் களைந்தானை என்பதைப் பிரித்து அர்த்தம் கொண்டால்,புள்ளின் வாய் கீண்டான் என்பது நீ கிருஷ்ணனாக நாரை வடிவில் வந்த பகாசுரனைக் கொன்றது. பொல்லா அரக்கன் என்பது ராவணனையும் குறிக்கும் ஆதலால் அது உன் ராமாவதாரத்தையும் சொன்னதாக ஆகிறது. கிள்ளிக்களைநதானை என்பது உன் நரசிம்ஹாவதாரத்தைக் குறிக்கும் , இரணியனை நகத்தால் கிள்ளி அழித்ததால். பிரிக்காமல் ஒரே தொடராகக் கொண்டால், புள்ளின்வாய் கீண்டான், அதாவது ஜடாயுவைக் கொன்ற பொல்லா அரக்கன் ராவணனைக் கிள்ளிக் களைந்தானை, அதாவது ராமனை என்று பொருள்கொள்ளலாம்.”
“பிரமாதம்” என்ற கண்ணன் , “ஆனால் ஒரு சின்ன சந்தேகம். அரக்கன் என்றால் ராக்ஷசன். ஹிரண்ய கசிபு அசுரன் அல்லவா , சுரர்களின் அதாவது தேவர்களின் மாற்றாந்தாய் மக்கள்,” என்ற கண்ணனைப் பார்த்து, “ராமன் என்றதும் கம்ப ராமாயணம் நினைவுக்கு வந்துவிட்டதாக்கும்.. அதையும் என் வாயால் கேட்கவேண்டுமாக்கும் . .கம்ப ராமாயண அரங்கேற்றத்தில் திருவரங்கத்தில் இரணியவதைப் படலத்தின் போது நரசிங்கமாக ஆர்ப்பரித்ததை நானும் கேட்டேனே, “ என்ற ஆண்டாள் கூறினாள்.
“ கம்பன் சொற்படி, “இரக்கம் என்று ஒரு பொருள் இல்லாத நெஞ்சினார், அரக்கர் என்று உளர் அறத்தின் நீங்கினார்.” இந்த முறையில் இரணியனும் அரக்கன் ஆகிறான். பெற்ற பிள்ளை என்று கூடப பாராமல் ப்ரஹ்லாதனைக் கொல்ல முயற்சித்தான் அல்லவா?”
“அருமையாகச் சொன்னாய் “ என்றான் கண்ணன்.
“கீர்த்திமை பாடிப்போய் பிள்ளைகள் எல்லாரும் பாவைக்களம் புக்கார் , எல்லாப்பெண்களும் உன் புகழ் பாடிக்கொண்டு பாவை நோன்புக்காக வந்து விட்டார்கள். வர மனமிருந்தாலும் எழுந்திருக்க மனமில்லாமல் பள்ளிகொண்டு இருப்பவளைப பற்றிய பாட்டு இது. ‘. போதரிக்கண்ணினாய் என்பது தாமரைக்கண் என்ற பொருளில் சொல்லப்பட்டாலும், அரி அல்லது மனம் என்ற வண்டு, போது அல்லது இந்த்ரியங்களாகிய மலருக்குள் சிறைப்பட்டுக்கிடக்கின்றது. . அதனால் கள்ளம் தவிர்ந்து , கள்ளத்தூக்கத்தை விட்டு வந்து கலந்து கொள் என்று பொருள்,” என்ற ஆண்டாளைப்பார்த்து ,
“அழகான விளக்கம் “ என்ற கண்ணன் கேட்டான், “ஆமாம் நீராடுவது சரி. அதென்ன குள்ளக்குளிர குடைந்து நீராட்டம்? “
ஆண்டாள் கூறினாள், “ நீராட்டம் என்பது உன்னை நினைப்பது. குடைந்து நீராடுவது, உன்னை அர்ச்சாவதாரமாக வழிபடுவது., குளிர நீராட்டம் உன் அவதார ரூபத்தை வழிபடுவது. குள்ளக்க்குளிர நீராடுவது உன்னை வைகுண்டத்தில் தரிசிப்பது. முதல் இரண்டும் மூன்றாவதற்கு வழி வகுக்கும்,.”
“ ஒன்று சொன்னாய் அதுவும் நன்று சொன்னாய் “ என்றான் கண்ணன்.
உங்கள் புழக்கடைத் தோட்டத்து வாவியுள்
செங்கழுநீர் வாய் நெகிழ்ந்து ஆம்பல்வாய் கூம்பினகாண்
செங்கற் பொடிக் கூரை வெண்பல் தவத்தவர்
தங்கள் திருக்கோயில் சங்கிடுவான் போதந்தார்
எங்களை முன்னம் எழுப்புவான் வாய்பேசும்
நங்காய்! எழுந்திராய் நாணாதாய்! நாவுடையாய்!
சங்கோடு சக்கரம் ஏந்தும் தடக்கையன்
பங்கயக் கண்ணானைப் பாடேலோர் எம்பாவாய்.
“சங்கோடு சக்கரம் ஏந்தும் தடக்கையன் என்று என்னை நாராயணனாகக் காண்கிறாய் அல்லவா இப்போது?” என்றான் கண்ணன்.
“இல்லை , இன்னும் உன்னை கண்ணனாகவே காண்கிறேன். நீ கண்ணனாக அவதாரம் செய்தபோது உன் பெற்றோருக்கு இப்படித்தானே தோன்றினாய்? மேலும் உன்னை பங்கயக்கண்ணன் என்றேனே, எந்த அவதாரம் எடுத்தாலும் நீ உன் தாமரைக் கண்களைக் கொண்டு உன்னை அறிந்துகொள்வோம். ஏனமாய் வந்தாலும் சீயமாய் வந்தாலும் உன் கமலக்கண் உன்னைக் காட்டிக்கொடுக்குமே. “ என்றாள் ஆண்டாள்.
“இந்தப் பாசுரத்தில் உங்களை முன்னம் வந்து எழுப்புவதாகச் சொன்ன பெண்ணை நாணாதாய் நாவுடையாய் என்று எழுப்புகிறாய் போலும்.செங்கழுநீர்ப்பூ மலர்ந்து ஆம்பல் குவிந்தது என்றால் சூரிய உதயம் ஆகிவிட்டது என்று பொருள் அல்லவா? செங்கழுநீர் மலர்வதை வாய் நெகிழ்ந்து என்று கூறினதன் பொருள்? என்ற கண்ணனுக்கு கோதை மறுமொழி கூறினாள்.
“ஏனென்றால் அது வாய் திறந்து சிரிப்பது போல் உள்ளது சூரிய உதயத்தினால் அல்ல. உன் கோவில் திறப்பதை உணர்த்தும் சங்கொலி கேட்டு, உன்னை தான் அலங்கரிக்கப் போவதை உணர்ந்த மகிழ்ச்சியால். அதே காரணத்தால் ஆம்பல் வாய் கூம்பி வருத்தத்தை தெரிவிக்கிறது.”
“செங்கல் பொடிக்கூரை வெண்பல் தவத்தவர் என்பது எனக்கு திருப்பாவை ஜீயரான ராமானுஜரை நினைவுபடுத்துகிறது. திருவரங்கத்தில் செங்கல் வண்ண வஸ்திரம் அணிந்து முதலில் தரிசனத்திற்கு வரும் அவரை மனக்கண்முன் காண்கிறேன். “ என்றான் கண்ணன்.
“நினைவுக்கு வருகிறதா? உன் அடியாரை நீ மறந்தால் அல்லவா நினைவுக்கு வருவதற்கு ?” என்றாள் ஆண்டாள்.
“இந்தப் பாசுரத்தில் உங்களை முன்னம் வந்து எழுப்புவதாகச் சொன்ன பெண்ணை நாணாதாய் நாவுடையாய் என்று எழுப்புகிறாய் போலும், செங்கழுநீர் மலர்கள் எங்கும் மலர்ந்திருக்க ‘உங்கள் புழக்கடை தோட்டத்து வாவி என்று சொல்லகாரணம்?” என்றான் கண்ணன் அவள் வாய்மூலம் தத்துவ விளக்கம் வேண்டி,.
“ மேலெழுந்த வாரியாகப் பார்த்தால் அதுதான் பொருள். ஆனால் உங்கள் புழக்கடை என்றால் அது சம்சாரம்.அதில் உள்ள தோட்டம் சரீரம். செங்கழுநீர் என்பது ஆத்மகுணங்களான அஹிம்சை, இந்திரிய நிக்ரஹம், ஜீவ காருண்யம், பொறுமை, ஞானம், தவம், தியானம் , சத்யம் இவையாகும். அவை உன் நினைவு என்ற சூரியன் உதிக்கும் போது மனதில் மலர்கின்றன. காமக்ரோதம் முதலிய ஆம்பல்கள் கூம்பி விடுகின்றன.”
“நாணாதாய் என்றால் நாமசங்கீர்த்தனம் செய்ய தயக்கம் தேவையில்லை என்பதைக் குறிக்கிறது. உன் நாமம் சொல்பவர்தான் நாவுடையவர்கள் . மற்றவர்களின் நாவு உண்பதற்கு மட்டுமே. பிற விஷயங்களைப் பற்றி பேசும் நாவு ஒரு வேண்டாத உபயோகமற்ற அங்கம்.” என்ற ஆண்டாளைப் பார்த்து கண்ணன் கூறினான்.‘கோதை, நீ மக்களை நல்வழிப்படுத்த படாத படுகிறாய். . ஆனால் எவ்வளவு தூரம் அது பலனைக் கொடுக்கும் என்பதை பொறுத்திருந்துதான் காண வேண்டும். ஏனென்றால் ‘இந்த்ரியாணி ப்ரமாதீனி ஹரந்தி பிரஸபம் மன’: , இந்த்ரியங்கள் பலம் வாய்ந்தவை மனத்தை பலவந்தமாக இழுத்து விடுகின்றன, என்று நான் அன்று அர்ஜுனனுக்கு சொன்னது போல மனித மனம் சஞ்சலிக்கும் சுபாவம் கொண்டது. அதை அடக்குவது மிகவும் கடினம்.” என்றான்.
அதற்கு கோதை, அப்படிச் சொன்ன நீயே ‘ அப்யாஸேன து கௌந்தேய வைராக்யேன ச கிருஹ்யதே ‘ என்றுஅதற்கு ஒரு வழியும் கூறினாய் அல்லவா? அதனால் நான் அப்யாஸம், அதாவது முயற்சி, வைராக்கியம், பற்றை விடுவது ஆகிய வழிமுறைகளை உபதேசிக்க முயலுகிறேன். ஒரு சிறு சதவிகிதம் மக்கள் இதைப பின்பற்றினாலும் என் முயற்சி வெற்றி பெற்றதாகக் கருதுவேன்” என்றாள் நம்மை எல்லாம் உய்விக்க வந்த பூமி பிராட்டியான கோதை.
‘எந்த உருவில் நீ வந்தாலும் உன் கமலக்கண் உன்னை காட்டிக் கொடுக்கும்” என்ற கோதையின் வார்த்தைகளை மனதில் கொண்டு எழுந்த பாடல்: ஒரு பக்தன் பகவானை நோக்கிப் பாடும் வகையில் அமைந்தது.
மாயம் எத்தனை செய்தாலென்ன உன் ஜாலம் நானறிவேன்
மறைபொருளாய் நின்று (மாயம் )
சீயமாய் வந்தாலும் ஏனமாய் வந்தாலும் உன்
கமலநயனம் உன்னைக் காட்டிகொடுத்ததே ( மாயம்)
வாமனனாய் வந்து மூவுலகளந்தாய்
வாய் திற என்ற தாய்க்கு புவனம் காட்டினாய்
ஆமையாய் வந்து மலை தாங்கி அமுதம் தந்த
நாடகத்தின் ஊடே நாரணன் உனை அறிந்தேன் ( மாயம்)
எல்லே! இளம்கிளியே இன்னம் உறங்குதியோ?
சில்என்று அழையேன்மின் நங்கைமீர்! போதர்கின்றேன்
வல்லைஉன் கட்டுரைகள் பண்டேஉன் வாய்அறிதும்
வல்லீர்கள் நீங்களே நானே தான்ஆயிடுக
ஒல்லைநீ போதாய் உனக்கென்ன வேறுடையை
எல்லாரும் போந்தாரோ? போந்தார் போந்து எண்ணிக்கொள்
வல்லானை கொன்றானை மாற்றாரை மாற்றழிக்க
வல்லானை மாயனைப் பாடேலோர் எம்பாவாய்.
“இது ஒரு புதுமாதிரியாகக் காணப்படுகிறது. வாய்ச்சொல்லில் உனக்கு இணையான பெண்ணாக இருக்கிறாள்.” என்றான் கண்ணன்.
“ஆம் அப்படித்தான் தோன்றுகிறது. எல்லே இளம்கிளியே என்றது எல்லோரையும் விட வயதில் குறைந்தவள் என்ற அர்த்தத்தில் இருந்தாலும் உலகப்பற்று என்ற தங்கக் கூண்டில் உள்ள கிளியைப்போல் பகவத் தியானம் இல்லாமல் இருப்பது உறங்குவதுபோல. பால அல்லது இளம் வயதினர் என்ற சொல் வடமொழியில் ‘ஒன்றும் அறியாத’ என்ற பொருளில் பயன்படுத்தப் படுகிறது அல்லவா?”
“அறியாமை என்ற உறக்கத்தில் ஆழ்ந்தவர்கள் அதிலிருந்து எழுந்திருக்க விரும்புவதில்லை. இன்னம் உறங்குதியோ, என்று எழுப்ப முயற்சி செய்பவர்களையும் நிந்திக்கிறார்கள்..”
:” சில்லென்றழைக்காதீர் , நானே வருவேன் உரிய காலத்தில் என்று சொல்கிறார்கள். “ என்ற ஆண்டாளிடம்
“உரிய காலம் என்றால் ? என்றான் கண்ணன்..
கோதை கூறினாள்.”உரிய காலம் என்றால் இந்த உலக இன்பத்தை அனுபவித்து முடித்த பிறகு என்று அர்த்தம் .”
“அது எப்போது வரும்? அது யயாதிக்கு வரவே இல்லையே .” என்றான் கண்ணன்.
“ இது சங்கரரின் வாக்கை நினைவூட்டுகிறது,
பாலஸ்தாவத் க்ரீடாஸக்த: , குழந்தைப் பருவத்தில் விளயாட்டில் நாட்டம், தருணஸ்தாவத் தருணீஸக்த:, யுவனாக இருக்கையில் பெண்கள் மீது நாட்டம். வ்ருத்தஸ் தாவத் சிந்தா ஸக்த: முதுமையில் தான் அனுபவித்த இப்போது அனுபவிக்க முடியாததை எண்ணி கவலை. ஆனால் எந்த வயதிலும் பகவத் ஸ்மரணம் வருவதில்லை என்று கூறி ‘பஜகோவிந்தம்’ என்றாரே? “
“ஆனால் நீ இந்த மக்களை பகவ்த்பக்தியில் ஈடுபடுத்தியே தீருவது என்று கங்கணம் கட்டிக்கொண்டிருக்கிறாய். அதைத்தான் வல்லை உன்கட்டுரைகள் பண்டே உன் வாயறிதும் என்றாய் அல்லவா? “ என்றான் கண்ணன்.
“ஆம். உன்னை அடைய விருப்பம் இல்லாதவர் ஆயிரம் வாதங்கள் செய்வார். வல்லீர்கள் நீங்களே , நீங்கள்தான் விதண்டா வாதம் செய்கிறீர்கள் என்று நம்மையே குற்றம் சாட்டுவார்’ பிறகு கொஞ்சம் அறிவு வந்த பின் , சரி சரி என் மேல் தான் தவறு என்று கூறி அப்போதும் வரமாட்டார். நாள் கடத்துவார். “ அதைத்தான் ஒல்லை நீ போதாய் உனக்கென்ன வேறுடையை என்றேன்.”
“ வேறுடையை என்றால் தன்னை தயார் செய்து கொண்டு வருகிறேன் என்று தானே பொருள்? என்றான் கண்ணன்.
“ஆம் ஆனால் உன்னை நினைக்கவும் உன்னைப் பாடவும் எதற்காக தயார் செய்து கொள்ள வேண்டும். நான் இன்னும் அந்த நிலைக்கு தயாராகவில்லை என்று ஒருவர் சொன்னால் அது அவர் எந்த நிலையிலும் தயாராக மாட்டார் என்று அர்த்தம்.”
“எப்போது உலகப்பற்று விடும்? நாம்தான் அதை விட வேண்டும்.. கடைசியாக எல்லோரும் போந்தாரோ என்று எல்லோருமா பகவத்த்யானத்தில் ஈடுபட்டு இருக்கிறார்கள்? என்ற கேள்விக்கு போந்தார் போந்தெண்ணிகொள் என்ற பதில் ஒருவர் பகவத் தியானத்தில் ஈடுபட்டுவிட்டால் பக்தர்களைத்தவ்ற வேறு யாரையும் காண மாட்டார்கள் என்பது. “என்ற ஆண்டாளைப் பார்த்து,
“வல்லானை கொன்றானை மாற்றானை மாற்றழிக்க என்றது கஜேந்த்ரனைப் பற்றிய மேற்கோள்தானே ?’என்றான் கண்ணன்.
“வல்லானையாவது குவலயாபீடம் . அதைக் கொன்றவன் நீ. அதற்கு மாற்றாக இருந்த இன்னொரு யானை கஜேந்திரன். அதற்கு மாற்று எதிரியாக வந்த முதலையை அழித்தவன் என்று பொருள் கொள்ளலாம்---- “என்று இன்னும் ஏதோ சொல்ல வருபவள் போல இருக்கும் கோதையைப் பார்த்து கண்ணன்,
“ம்ம் சொல்லு என்றான்.”
“மாறனை மாற்று அழிக்க வல்லான் என்பதற்கு இன்னொரு பொருள் நீ மாற்றான் அதாவது விரோதியை அழிக்காமல் அவனுடைய மாற்று , விரோதத்தை மட்டும் அழிக்க முயல்பவன் என்பது.”
“ அப்படியா ?” என்றான் அந்த மாயன் அவள் வாயிலிருந்தே அதைக் குறித்து கேட்கும் ஆவலில்.
ஆண்டாள் கூறினாள்.
“ ஆம். நீ அவ்வாறு பல சமயங்களில் செய்து இருக்கிறாயே. இரணியனுக்கு கடைசி வரை திருந்த வாய்ப்புக் கொடுத்தாய். ராவணனுக்கு ‘இன்று போய் நாளை வா என்றாய். மகாபலியின் கருவத்தை மாத்திரம் அழித்தாய். இந்திரன் பிரமன் இவர்களின் அகந்தையையும் அழித்தாய்..
அதனால் நீ வல்லான் , எல்லா விரோதிகளையும் அழிக்க வல்லவன் ஆயினும் அவர்களுக்கு கடைசி வரை கருணை காட்டுபவன். ஆனால் மாயன் , மாயைதனை படைப்பாய் மாயையும் துடைப்பாய். “
கண்ணன் கூறினான். “ இப்போது என் மாளிகை வரை வந்தாகிவிட்டது இனிமேல் நேருக்கு நேர் கலந்துரையாடல் தான்”
அதற்கு ஆண்டாள் கூறினாள். “ நீ மாயன் என்பதை இது மூலமே நிரூபித்து விட்டாய். நேருக்கு நேர் உரையாடலா? நான் தானே பேசிக்கொண்டிருந்தேன். நீ எங்கே மறுமொழி கூறினாய் ? “ என்றாள்
“அதற்குத்தான் இப்போது வந்திருக்கிறேனே ,” என்று நகைத்தான் கண்ணன்