உதட்டிற்கு சாயம் பூசிமுகத்திற்கு முலாம் இட்டு
பட்டால் உடலைப் போர்த்தி பகட்டால் பிறரை வீழ்த்தி
வாழும் வேடதாரியா நான்
சேயாய் அன்னைக்குப் பிறந்து தாயாய் உயர்வு அடைந்து
நட்பாய் சிரித்து மகிழ்ந்து
பல முகங்களை வெளிப்படுத்தி
வாழும் வேடதாரியா நான்
சிரித்துக்கொண்டே உள்ளே அழுது
தெரியாததை தெரிந்ததாய் காட்டி
விருப்பமின்றி அலுவல் புரிந்து
கருணையின்றி சேவை செய்து
வாழும் வேடதாரியா நான்
அறிவினால் அகந்தைப் பெற்று
சுயநலமாய் அன்பை ஈந்து
எதிர்ப்பார்ப்பை சிரித்து மழுப்பி
பொய்யை உண்மையாய் காட்டி
வாழும் வேடதாரியா நான்
அண்டத்தின் ரகசியம் தெரியாமல்
உடலின் அழிவை உணராமல்
உயிரின் தனிமை புரியாமல்
உத்வேக உணர்வுகளின் மயக்கத்தில்
வாழும் வேடதாரியா நான்
-பத்மஜா