புரியாமல் விழித்த என்னைப் பார்த்து விளித்தான்
அறியாமையில் மூழ்கி தவிக்கும் அன்புப் பெண்ணே!
என்னை தோழனாக ஏற்றுக் கொண்டுள்ள சகியே!
காதலில் தினமும் உருகி உன்னையே மறக்கும் என் காதலியே!
என் உருவத்தில் மயங்கி உண்மையை மறந்த பேதையே!
நானும் நீயும் யாரென்று அறிய முயற்சி செய்
என் அழகும் வெளித் தோற்றமும் உன் கற்பனையே
உன் ஐம்புலன்களும் இவ்வுலகமும் என் திருவிளையாட்டே
உன் உடலும் உள்ளமும் வெறும் மாயையே
உன் சொந்தமும் பந்தமும் புறக்கண்களுக்கே
உன் அறிவும் அகந்தையும் நான் கொடுத்த பொய்மையே
என் ஆராதனையும் அவதாரமும் உன் சாதனைக்கே
இதை உணர்ந்து உடனே விழித்துக் கொள்
நானும் நீயும் அன்பைத் தவிர வேறில்லை
ஆன்மாவான உனக்கு உருவம் என்று ஒன்றில்லை
இதை புரிந்துக் கொண்டு பிறகு என்னை அழைப்பாய்
என்று கூறி விட்டு என் கண்ணன் மறைந்தே விட்டான்
நான் எங்கு சென்று அவனைத் தேடுவேன்
அவன் கூறிய உபதேசம் என் காதில் விழவில்லையே
அவனையல்லவோ நான் பார்த்துக் கொண்டிருந்தேன்
பல பெண்களை பித்தனாக்கிய எத்தனல்லவோ அவன்
இருப்பினும் என் மனம் அவனுக்காகவே ஏங்குகிறதே
என்ன கல் நெஞ்சம் அவனுக்கு என்னை தவிக்க விட்டு செல்ல
பொன் வேண்டேன் பொருள் வேண்டேன்
அழகு வேண்டேன் அறிவும் வேண்டேன்
சுற்றம் வேண்டேன் சுகம் வேண்டேன்
பேச்சும் வேண்டேன் மூச்சும் வேண்டேன்
தத்துவம் வேண்டேன் உண்மையும் வேண்டேன்
உயிரும் வேண்டேன் ஒன்றும் வேண்டேன்
ஆயிரத்தில் ஒருத்தியாக நான் இருந்தாலும்
என் மனம் அவனைத் தவிர வேறொன்றும் விரும்பவில்லை
எனக்கு அவனைத் தவிர வேறெதிலும் நாட்டமில்லை
ஒரு முறை என் அன்பிற்கு அடி பணிந்தவன்
வேறு பெண்களின் அழைப்பில் பறந்து சென்றானோ
இல்லை என்னை மறந்து தான் விட்டானோ
அவன் தத்துவமும் புரியவில்லை
அவனையும் புரிந்துக் கொள்ள முடியவில்லையே
என் கண்ணனை கண்டீரோ யாரேனும்
என் மாயக் கண்ணனைத்தான் கண்டீரோ
என் கண்ணனைதான் கண்டீரோ எங்கேனும்
என் இதயக் கண்ணனைத்தான் கண்டீரோ
-பத்மஜா