சிற்பமும் ஓவியமும் மாறி மாறி என் உணர்வுகளை அலைகழிக்க
என் செய்வேன் என்று தெரியாமல் நானும் ஒரு மூங்கில் காட்டிற்குள் நுழைய
ஓங்கி வளர்ந்த மூங்கிலை கண்டு நானும் வியப்பில் ஆழ்ந்து நிற்க
இடைச்சிறுவன் ஒருவன் சிரித்துக் கொண்டே ஒரு மூங்கில் குழாயை என் கையில் திணிக்க
என் இனிமையான இசைக்கு அகத்தூய்மையேக் காரணம் என்று புல்லாங்குழலும் தத்துவம் பேச
அறியாமையின் விளிம்பில் இருக்கும் நான் ஒன்றும் புரியாமல் நடந்தேன் அவன் நினைவாக
புல்லாங்குழலும் என் உடைமைகளுடன் சேர்ந்து சுமையைக் கூட்ட
போதாதென்று காட்டுப்பூக்களை ஆசையுடன் நான் பறித்து மாலையாக்க
எப்படி எடுத்து செல்வது இந்த மாலையை என்று விழித்து நானும் நிற்க
மூளையின் ஓரத்தில் பொறித்தட்டி அந்த மாலையை நானே சூட
அடுத்து என்ன என்று புரியாமல் கண்களும் கால்களும் கெஞ்சிக் கேட்க
இனி ஒரு அடி வைக்க இயலாத நிலையில் தடுமாறினேன் களைப்பாக
இந்த நிலையிலே பசிக்காதை அடைத்தது
தாகத்திலே நாவும் வறண்டது
தூக்கமின்மையால் கண்கள் எரிந்தன
முட்கள் பதம் பார்த்ததால் கால்களில் இரத்தம் வழிந்தது
என் மென்மையான கரங்களும் சிவந்தன
கைகள் தூக்கி வந்த களைப்பால் வலித்தன
தலை கனத்தன தோள்கள் கெஞ்சின
முதுகோ படுக்க தூண்டியது
கண்ணீர் முத்துக்கள் தெறித்தன
துக்கம் தொண்டையை அடைத்தது
அனைத்தும் அறிந்தவன் பண்பிலே உயர்ந்தவன்
அழகிலே நிகரற்றவன் வார்த்தையிலே வல்லவன்
பிறர் துன்பம் துடைக்க வருபவன் என்றார்களே
அனைவரும் பொய்யர்களோ
அவன் நெஞ்சம் கல்லால் ஆனதோ
-பத்மஜா