போட்டித்தேர்வு, நுழைவுத்தேர்வுக்கு தயாராவோருக்கு ஞாபக சக்தி என்பது ரொம்ப முக்கியமானது. சில பேருக்க எவ்வளவு முட்டி மோதி படித்தாலும், அவை ஞாபகத்தில் நிற்பதில்லை. இதற்கு பல காரணங்கள் சொல்லப்படுகிறது. படிக்கும் முறையில் இருந்து, எப்போது படிக்கின்றோம், எப்படி படிக்கின்றோம், எந்தவிதமான உணவுகளை எடுத்துக்கொள்கிறோம் உள்ளிட்ட அனைத்து விஷயங்களையும் சார்ந்தது. இவற்றில் மிக முக்கியமான 5 விஷயங்களை இங்கு பார்ப்போம். போட்டித் தேர்வுக்கு தயாராவோர் இந்த பழக்க வழக்கங்களை பின்பற்றினால், முடிந்த வரையில் படித்தவற்றை ஞாபகத்தில் வைத்துக் கொள்ள முடியும்.
முதலில் நாம் என்ன படிக்க வேண்டும் என்பதை திட்டமிடுதல் அவசியம். போட்டித்தேர்வாகினும், பொதுத்தேர்வாகினும் சரி, அனைத்திலும் உள்ள பாடத்திட்டத்தை முதலில் பார்த்து புரிந்து கொள்ள வேண்டும். அவற்றை ஒரு முறைக்கு இரு முறை முழுமையாக வாசிக்கவும், அதே போல், மதிப்பெண் பங்கீடு முறையும் பார்க்க வேண்டும்.
பாடத்திட்டம் மற்றும் மதிப்பெண் முறை, எளிமையான பாடம், கடினமான பாடம் என நீங்களே உங்களுக்கான படிக்கும் வசதியை ஏற்படுத்திக் கொள்ளுங்கள். இயல்பாக ஒவ்வொருவருக்கும் குறிப்பிட்ட பாடங்களில் அதீத ஆர்வம், அறிவு இருக்கும். அவற்றை பார்க்க வேண்டும்.
மனப்பாடம் செய்வது என்பது ஒரளவுக்கு, தற்காலிக பலனாக மட்டுமே அமையும். பொதுவாக மனப்பாடம் செய்து படித்தால், அது எக்காலத்துக்கும் பயன்படாது. சில பாடங்கள், பகுதிகள் மட்டும் நேர மேலாண்மையை கருத்தில் கொண்டு மனப்பாடம் செய்யலாம். உதாரணமாக கணித சூத்திரங்கள், வரலாறு காலக்கோடு போன்ற பகுதிகள் மனப்பாடம் செய்யலாம். உண்மையில் இவைகளை புரிந்து படித்தால் மென்மேலும் சிறப்பாக இருக்கும். ஆனால், தேர்வு நெருங்கும் நேரத்தில் கணித சூத்திரங்கள் எப்படி வந்தது, அதன் வரலாறு என்ன என்று பார்த்துக் கொண்டே போனால், நமக்கு நேர விரயம் தான் ஏற்படும். எனவே, நேரத்துக்கு தகுந்தாற்போல் படிக்க வேண்டும்.
எப்போது படிக்க வேண்டும். காலையில் படிக்கலாமா, பகலில், இரவில் படிக்கலாமா என்ற சந்தேகம் பலருக்கு ஏற்படும். இதற்கான பதில் அவர்களிடத்திலேயே தான் உண்டு. ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு நேரத்தில் படித்தால் மட்டுமே நினைவில் இருக்கும். சிலருக்கு இரவுக்கு மேல் படிப்பது உகந்த நேரமாக இருக்கும், இன்னும் சிலருக்கு அதிகாலை நேரத்தில் படிப்பது பிடிக்கும். பொதுவாக அதிகாலை நேரம், அதாவது காலை 4.30 மணிக்கு எழுந்து படித்தால், அப்போது என்ன படித்தோமோ அது நீண்ட காலத்துக்கு நினைவில் நிற்கும் என்பது பொதுவான கருத்து.
பாடத்திட்டத்தின்படி நமக்கு எந்த பாடத்தில் ஆர்வம் உள்ளது, எந்த பாடம் கடினமாக உள்ளது என்பதை முடிவு செய்ய வேண்டும். சிலர் ஆர்வ கோளாறு காரணமாக, பிடித்த பாடத்தையே திரும்ப திரும்ப படிப்பர். நேரம் காலத்தை உணர வேண்டும்.
பிடித்த பாடத்தோடு நின்று விடாமல், கடினமான பாடத்தையும் படிப்பதற்கு முயற்சி செய்ய வேண்டும். படிப்பது பிடித்து படிக்க வேண்டும். ஆர்வத்தோடு படிக்க வேண்டும். பாடங்கள் புரியவில்லை என்றால், அந்த பாடம் நன்கு தெரிந்த ஒருவரிடமோ, நண்பர்களிடத்திலோ தயங்காமல் கேட்கலாம்.
யோகா, தியானம் செய்வது நூறு சதவீதம் நினைவுத் திறனை அதிகரிக்கும். எனவே, அடிப்படை யோகா மற்றும் தியானத்தை கற்றுக்கொண்டு, நாள்தோறும் காலை, மாலை இருவேளையிலும் செய்ய வேண்டும். ஒரு நாளைக்கு குறைந்தபட்சம் 15 நிமிடங்களாவது தியானம் செய்ய வேண்டும். ஒவ்வொரு முறையும் படிப்பதற்கு முன்பாக 5 நிமிடங்கள் தியானம், பிராணயாமம், மூச்சுப்பயிற்சியில் செய்து விட்டு படிக்க வேண்டும். இது உண்மையில் நல்ல பலன்களை கொடுக்கும்.
யோகா, தியானம் செய்ய அதிக காசு கொடுத்து பயிற்சி மையங்களில் சேர வேண்டும் என்ற அவசியம் இல்லை. அடிப்படை யோகா மட்டும் கற்றுக்கொண்டாலே போதுமானது.
உணவு முறையானது நினைவுத் திறனை அதிகரிக்கச் செய்வதில் முக்கிய பங்காற்றுகிறது. தேர்வு நேரத்தில் சாப்பிடக்கூடாத உணவு பொருள்கள் என்று பெரிய பட்டியலே உண்டு. எனவே, உணவு பழக்கவழக்கத்தில் கடும் கட்டுக்கோப்பாக இருக்க வேண்டும்.
நல்ல டேஸ்டாக உள்ளது என்று விரும்பி கேடு விளைவுக்கும் உணவுகளை, திண்பண்டங்களை தவிர்க்க வேண்டும். குறைந்த பட்சம், தேர்வு முடியும் வரையிலாவது அத்தகைய உணவுகளை தவிர்த்து விட்டு, ஆரோக்கியமான உணவு பழக்கத்துக்கு மாறலாம்.
பள்ளி மற்றும் கல்லூரிகளில் பாடங்களுக்கான நேர அட்டவணை இருப்பதுபோல வீட்டிலும் படிக்கும் பாடங்களுக்கான அட்டவணை இருப்பது முக்கியம்.
ஏனெனில் பள்ளியில் பாடங்களை கூர்ந்து கவனிப்பது எந்தளவிற்கு அவசியமோ, அதேஅளவு அந்தப் பாடங்களை வீட்டில் வந்து படித்து, நம் நினைவில் வைப்பதும் நிச்சயம் தேவையான ஒன்று. பள்ளியிலும், வீட்டிலும் சூழல் நிறைய மாறுபடுகிறது. பள்ளியில் சக மாணவர்களோடும், ஆசிரியர்களோடும் இருந்துவிட்டு, வீட்டிற்குள் வந்தவுடன் அமைதியும், தனிமை உணர்வும் ஏற்படுகிறது.
அந்த சூழலில்தான் நமது படிப்பிற்கான திட்டமிடுதலை தொடங்க வேண்டியுள்ளது.மேலும் அரசு தேர்வுகள் நெருங்கும் இந்த நேரத்தில் அதிகமாக விடுமுறைகள் இருக்கும். படிப்பதற்கென்றே விடப்படும் அந்த விடுமுறை நாட்களை படிப்பில் சரியான முறையில் செலவழிப்பதற்கு நாம் முறையான திட்டமிடுதல்களை செய்ய வேண்டும்.
* பல பெற்றோர்கள் தங்களின் பிள்ளைகள் அதிக நேரம் தொடர்ந்து படிக்க வேண்டும் என்று ஆசைப்படுகின்றனர். அவ்வாறு படித்தால்தான் சிறப்பாக படிக்க முடியும் என்றும் நம்புகின்றனர். தங்களின் பிள்ளைகள் அதிக நேரம் தொடர்ந்து படிப்பதை பெருமையாகவும் கருதுகின்றனர். ஆனால் இது மிகவும் தவறான ஒரு நம்பிக்கை. இதனால் மாணவர்கள் சோர்ந்துபோய் விடுவார்கள். ஒரு மணிநேரத்திற்கு ஒருமுறை நாம் 10 நிமிடங்கள் இடைவெளி எடுத்தாலும்கூட, தொடர்ச்சியாக 4 மணிநேரங்களுக்கும் மேலாக ஒருவர் படிப்பது நல்லதல்ல. இதனால் மூளையின் ரசாயன செயல்பாடுகள் பாதிக்கப்பட்டு, நாம் படிப்பது நினைவில் நிற்காமல் போகலாம்.
ஒவ்வொரு பணியுமே முறையான இடைவெளியை கொண்டதாக இருக்க வேண்டும். நீண்டநேரம் தொடர்ந்து படிப்பதன்மூலம் மாணவர்களின் மூளை ஏற்புத்திறன் குறைந்து, படிப்பதை உள்வாங்கும் செயல்பாடு பாதிக்கப்படுகிறது. எனவே ஒரு செயல்பாடானது சரிசமமான இடைவெளியைக் கொண்டதாக இருக்க வேண்டும். அப்போதுதான் மூளை நன்கு செயல்படும்.
* படிப்பின்போதான சிறிதுநேர ஓய்விற்குப் பிறகு மீண்டும் உடனேயே படிப்பை தொடங்க வேண்டும் என்ற அவசியம் இல்லை. அதற்கு பதிலாக படிப்போடு சம்பந்தப்பட்ட வேறு சில நடவடிக்கைகளை செய்யலாம். அந்த நடவடிக்கைகளை படிப்பிற்கு திட்டமிடும்போதே முடிவுசெய்து வைத்துக்கொள்ள வேண்டும்.
* ஒரு குறிப்பிட்ட பாடத்தை தொடர்ச்சியாக உள்வாங்கும் திறன் ஒரு மாணவரின் மூளைக்கு சுமார் 40 முதல் 45 நிமிடங்கள் வரை மட்டுமே இருக்கிறது. இதன் அடிப்படையில்தான் பள்ளிகளில் ஒவ்வொரு முக்கால் மணி நேரத்திற்கும் ஒரு ஆசிரியர் மாறி, பாடங்களும் மாறுகிறது. வீட்டில் அதிகபட்சம் ஒரு பாடத்தை ஒரே நேரத்தில் ஒருவர் ஒரு மணிநேரம் படிக்கலாம். பின்னர் சிறிது இடைவெளி நிச்சயம் தேவை. அந்த நேரத்தில் தண்ணீரோ, தேநீர் அல்லது காபியோ அருந்தலாம்.
ஆனால் அந்த இடைவெளியானது விளையாடுவதற்கோ, டி.வி. பார்ப்பதற்கோ செலவிடப்படக்கூடாது. ஏனெனில் அதன்பிறகு மீண்டும் படிப்பிற்கு திரும்புவது சிரமமாகிவிடும். அதேசமயம் இதுபோன்ற நடவடிக்கைகளுக்கு தனியாக நேரம் ஒதுக்கப்பட வேண்டும். படிப்பின்போது இடைவெளி விடுவதற்கான முக்கிய நோக்கமே கண்களுக்கும், திசுக்களுக்கும் ஓய்வு கொடுக்க வேண்டும் என்பதற்காகத்தான். ஒரே முறையில் உட்கார்ந்து படிப்பதால் ஒரு மாணவர் விரைவில் சோர்வடைந்து, அதன்மூலம் மன அழுத்தமும் அதிகமாகிறது.
* ஒரு நாள் முழுவதும் படிக்கையில், பாடத்தை மாற்றி மாற்றி படித்தால் சோர்வை தவிர்க்கலாம். உதாரணமாக நீங்கள் வரலாற்றுப் பாடத்தை படித்துவிட்டு, பின்னர் இயற்பியலைப் படிக்கலாம். இதைத்தவிர வேறுசில வழிமுறைகளும் உள்ளன. நீங்கள் பாட சம்பந்தமாக எழுதும் வேலையை செய்துகொண்டிருந்தால், அதைமுடித்துவிட்டு படிக்கும் வேலையை தொடங்கலாம். மேலும் அறிவியல் பாடங்களில் உள்ள படங்களையும் வரைந்து பார்க்கலாம். இதன்மூலம் உங்களின் மூளை விரைவில் சோர்வடையாமல் தவிர்த்து, பாடத்தை நன்றாக நினைவில் பதிய வைக்கலாம்.
* படிப்பதில், மேலே சொன்னதைப் போன்ற மாற்று நடவடிக்கைகள் சிறந்த பலனளிப்பதாக இருந்தாலும், இந்த செயல்முறை அனைவருக்கும் ஒரேமாதிரியாக ஒத்துவரும் என்று சொல்லிவிட முடியாது. ஒவ்வொருவரும் தங்களின் மனோநிலை மற்றும் விருப்பத்திற்கேற்ப திட்டங்களை மாற்றிக்கொள்ள வேண்டும். படிக்கும் செயல்முறையில் நாம் வகுக்கும் திட்டமானது, முறையாக பின்பற்றக்கூடியதாகவும், நமக்கு ஒத்துவரக்கூடியதாகவும் இருக்க வேண்டும் என்பதை நினைவில் வைத்துக்கொள்ள வேண்டும். இதன்மூலம்தான் நாம் அதிகமான பலன்களைப் பெறமுடியும்.