பாடாங்கில் தேசிய தின உணர்வு, கம்பீரம், மிடுக்கு, பெருமிதம், உற்சாகம், ஊக்கம்... வது தேசிய தினம் எழுச்சி குறையாத அணிவகுப்பு
சிங்கப்பூர், கொவிட்-19 சூழ்நிலையில் தன்னுடைய 55வது தேசிய தினத்தை, கடுகு சிறுத்தாலும் காரம் குறையாது என்பதை மெய்ப்பிக்கும் வகையில் கொண்டாடியது.
தேசிய தினம் என்றாலே மக்களுக்கு பாடாங் நினைவுதான் வரும். தேசிய தின வரலாற்றுச் சிறப்புமிக்க அந்த இடத்தில் இந்த ஆண்டின் கொண்டாட்டம் வேறுபட்டு காணப்பட்டது.
3வது சார்ஜண்ட் லிம் யு ஜி, அங்கு முற்பகல் 10.30 மணிக்குத் தேசிய கொடியை ஏற்றினார். நாடு முழுவதும் கொண்டாட்டங்கள் தொடங்கின. இரவு வரை அவை நீடித்தன.
கொவிட்-19 காரணமாக இந்த ஆண்டின் தேசிய தின அணிவகுப்புக் கொண்டாட்டம் இரண்டு பகுதிகளாக நடந்தது.
மற்ற நிகழ்ச்சிகளுடன் சேர்ந்து மாலையில்தான் அணிவகுப்பு நடக்கும். ஆனால் இந்த ஆண்டில் அது காலையில் நடந்தது. 150 பேர்தான் பார்வையாளர்களாகக் கலந்துகொண்டனர்.
வழக்கமாக 38 அணிகள் அணிவகுத்துச் செல்லும். ஆனால் இந்த ஆண்டில் நான்கு அணிகள்தான் இடம்பெற்றன.
இவற்றில் சிங்கப்பூர் ஆயுதப்படை, போலிஸ் படையைச் சேர்ந்த 200 பேரே பங்கெடுத்தனர்.
அணிவகுப்பில் கலந்துகொண்ட வர்களும் பார்வையாளர்களும் முகக்கவசங்களுடன் பாதுகாப்பு இடைவெளியைக் கடைப்பிடித்தனர்.
அளவில் சிறியதாக இருந்தாலும் அணிவகுப்பு எடுப்பாக, கம்பீரமாக, பெருமைப்படத்தக்கதாக, கண்ணியமிக்கதாக, எழுச்சியுடன் தேசிய உணர்வு மிளிர்ந்ததாக இருந்தது.
தேசிய கீதம் இசைக்கையில் வானில் தேசிய கொடியுடன் ஹெலிகாப்டர்கள் வானில் பறந்து சென்றன. போர் விமானங்களின் சாகசக் காட்சியும் சிறப்பாக இடம்பெற்றது.
மரியாதை காவல் அணியைப் பார்வையிட்டு அவர்களின் மரியாதையை அதிபர் ஹலிமா யாக்கோப் ஏற்றுக்கொண்ட அங்கமும் இடம்பெற்றது.
கொவிட்-19 மிரட்டலைச் சமாளித்து மீண்டு வருவதற்குத் தேவையான மீள்திறன் சிங்கப்பூரிடம் இருக்கிறது என்பதை வெளிச்சம் போட்டுக் காட்டுவதற்கான பல அம்சங்களும் இடம்பெற்றன.
பாடாங்கில் அணிவகுத்த அணிகளின் எண்ணிக்கை குறைவாக இருந்ததால் பாடாங் திடலுக்குள் நான்கு பீரங்கிகள் 21 குண்டுகளை முழங்கி அதிபருக்கு வீர வணக்கம் செலுத்தின. இத்தயை ஓர் அம்சம், இதுவரை பாடாங் காணாத ஒரு புதுமையாகவும் இருந்தது.
சிங்கப்பூர் சுதந்திரம் அடைந்தது முதல் இதுவரை இப்படி நடந்ததில்லை.
இந்த ஆண்டு அணிவகுப்பில் மிக முக்கியமான ஓர் அங்கமும் இடம்பெற்றது.
அணிவகுப்பு தளபதியின் உத்தரவுக்கு இணங்க அணிவகுப்பில் கலந்துகொண்டவர்கள் முன்களப் பணியாளர்களுக்குச் சிறப்பு வீரவணக்கம் செலுத்தினார்கள்.
கொவிட்-19 கிருமிப் பரவலைத் தடுப்பதற்கு அரும்பாடுபட்டு வரும் அந்தப் பணியாளர்கள் தங்களுடைய உயிரையும் பொருட்படுத்தாமல் ஆற்றிவரும் சேவைகளை இந்த ஆண்டு அணிவகுப்பு அங்கீ கரித்து பாராட்டி சிறப்பித்தது.
அணிவகுப்பு நாளான நேற்று மழை இல்லை. பாடாங்கில் தேசிய உணர்வில் திளைத்திருந்த அதேநேரத்தில், சிங்கப்பூரர்கள் தங்களுடைய வீடுகளில் இருந்தபடி தொலைக்காட்சியில் தேசிய தினக் கொண்டாட்டங்களைக் கண்டு அவற்றில் தங்களை ஈடுபடுத்திக் கொண்டனர்.
கொவிட்-19 சூழலில் சிறிய அளவில் ஏற்பாடு செய்யப்பட்டு நடந்திருந்தாலும் பல சிறப்பு அம்சங்களுடன் நடந்த இந்த ஆண்டின் அணிவகுப்பு மக்களின் மனதில் என்றென்றும் நினைவோடு நிலைத்திருக்கும் என்பது திண்ணம்.
உலக நாடுகளில் தென்படும் விரக்தி மனப்பான்மையைக் கைவிட மூத்த அமைச்சர் தர்மன் அறைகூவல்
உலகப் பொருளியல் சரிவை சிங்கப்பூரால் தடுக்க முடியாது.ஆனால், அது உலகின் பல நாடுகளில் தெரியும் சமூக ஒற்றுைமயின்மை, ஒடுங்கும் போக்கு, விரக்தி மனப்பான்மை ஆகியவற்றை முழுமையாகத் எதிர்த்து செயல்பட சிங்கப்பூரர்களுக்கு அறைகூவல் விடுத்துள்ளார் மூத்த அமைச்சர் தர்மன் சண்முகரத்னம்.
உலகப் பொருளியலை கொரோனா கிருமித்தொற்று ஆட்டிப்படைக்கும் இந்த வேளையில், சிங்கப்பூரர்கள் தங்களிடையேயான ஒற்றுமையை வலுப்படுத்த வேண்டும்.
இதில், அவர்கள் வேலையிழந்தோருக்கு வேலை தேடித்தர, சமுதாயத்தில் ஒருவர் மேல்நிலைக்குச் செல்ல உதவும் வாய்ப்புகளை ஏற்படுத்தவும், சிரமங்கள் ஏற்படும்போது உதவி கிடைத்திடும் என்ற நம்பிக்கையை அவர்களுக்கு ஊட்டவும் வேண்டும் என்று அவர் கூறினார்.
தொடர்ந்து பேசிய திரு தர்மன், மூத்த ஊழியர்கள் வேலை கிைடக்க சிறப்பு உதவி பெறுவர் என்று உறுதியளித்தார்.
இதன் பயனாக, வயது காரணமாக முதலாளிகள் ஒருவருக்கு வேலையை மறுக்கும் நிலை தோன்றாது என்று அவர் விளக்கினார்.
ஜூரோங் ஈஸ்ட்டில் உள்ள தேவன் நாயர் வேலைவாய்ப்பு, வேலைத்திறன் கழகத்தில் நேற்று பேசிய திரு தர்மன், கொரோனா கொள்ளைநோய் உலகில் சமூகப் பிளவை ஏற்படுத்தியுள்ளதாகத் தெரிவித்தார்.
சில பிரிவினரிடையே வேலையிழப்பு அதிக பாதிப்பை ஏற்படுத்தியுள்ளதாகக் கூறிய மூத்த அமைச்சர், பள்ளி செல்லும், குறிப்பாக வசதிகுறைந்த குடும்பங்களைச் சேர்ந்த மாணவர்களுக்கு கற்றல் பயணத்தில் இடையூறு ஏற்பட்டுள்ளதாக சொன்னார்.
“இவை யாவும், செய்வதறியாது தவிக்கும் நிலையை மோசமாக்கி உள்ளதுடன், உலக அளவில் ஏற்கெனவே பாதிக்கப்பட்டுள்ளோர் இடையே சமுதாயக் கட்டமைப்பு தங்களுக்கு எதிராக நிலைபெற்றுள்ளதாக ஒரு எண்ணத்தைத் தோற்றுவித்துள்ளது.
“இது, இன ரீதியாக, தாங்கள் அநீதிக்கு ஆளாக்கப்பட்டுள்ளதாக கொண்டு உள்ள எண்ணங்களுக்கு வலுவூட்டியுள்ளன,” என்று மூத்த அமைச்சர் தர்மன் தெரிவித்தார்.
இதுபோன்ற எண்ணப்போக்கு சிங்கப்பூரில் நிலைகொண்டு விடாது என்று யாரும் எண்ணிவிட வேண்டாம் என்று அவர் எச்சரித்தார்.
“ஆசியாவிலும், மேலை நாடுகளிலும் ஒற்றுமையாகத் திகழ்ந்த பல சமுதாயங்கள் இன்று சிதறுண்டு கிடக்கின்றன. ஆனால், பல நாடுகளில் தென்படும் சமூக ஒற்றுைமயின்மை, தனியே ஒடுங்கிப் போகும் போக்கு, விரக்தி மனப்பான்மை ஆகியவற்றை முழுமையாகத் எதிர்த்து சிங்கப்பூரர்கள் செயல்பட வேண்டும்,” என்று அவர் விளக்கினார்.
வேலையிழந்தோர் மீண்டும் வேலைக்குச் செல்வதை உறுதி செய்வதே அரசாங்கத்தின் தலையாய பணி என்று கூறிய திரு தர்மன், இதைச் சந்தை நிலவரத்துக்கு விட்டுவிட முடியாது என்று கூறினார்.
“உலகப் பொருளியலில் நிச்சயமற்ற நிலை தொடரும் வரை, உலக வர்த்தகமும் பயணங்களும் முடங்கியிருக்கும் வரை, சிங்கப்பூரில் வேலையிழப்புகளைவிட புதிய வேலைகள் உருவாவது குறைவாகவே இருக்கும்,” என அவர் எச்சரித்தார்.
வேலையில்லாதவர்களுக்கு படித்தொகையை வழங்குவதைவிட, வேலைவாய்ப்புகளுக்கு நிதியுதவி வழங்குவதன் மூலம் அரசாங்கத்தின் ஆதரவு கூடுதல் உதவியாக இருக்கும் என்று அவர் சொன்னார்.
எனவேதான், இந்த நெருக்கடியான காலகட்டத்தில், தற்காலிக வேலைகள், வேலைப் பயிற்சித் திட்டங்கள் ஆகியவற்றின் மூலம் சிங்கப்பூரர்களை வேலையில் சேர்த்துக்கொள்ள ஊக்குவிக்கும் வகையில், ஒவ்வொரு துறையைச் சார்ந்த நிறுவனங்களுடன் அரசாங்கம் பணியாற்றி வருவதாக திரு தர்மன் சொன்னார்.
தேசிய ஒளிபரப்புத் தொடரில் கடைசியாக துணைப் பிரதமர் ஹெங் சுவீ கியட்டின் ஆங்கில உரை நாளை மறுதினம் சனிக்கிழமை இரவு 7.30 மணிக்கு ஒளிபரப்பாகும்.