தமிழ்த்துறை சார்பாகப் பள்ளி மாணவர்களுக்கான வழிகாட்டும் வகுப்பு மார்ச் 21 முதல் மார்ச் 25 வரை நடத்தப்பட்டது. கல்லூரியைச் சுற்றியுள்ள அரசு பள்ளிகளில் பயிலும் 10 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்களின் தனிமனித ஆளுமைத்திறனை மேம்படுத்தவும், அறிவுத்திறனை ஊக்கப்படுத்தவும் இம்முயற்சி மேற்கொள்ளப்பட்டது. மொழியினூடாக மாணவர்கள் தங்களை அடையாளப்படுத்துவதன் அவசியம் இந்நிகழ்வின் மூலம் உணர்த்தப்பட்டது. சிறந்த சிந்தனை ஆக்கங்களே தமிழ் மரபின் விழுமியங்களாகக் காணப்படுகின்றன. அந்த வகையில் மாணவர்களின் தனித்தமிழ்க் குறித்த திறனையும் தமிழ் மரபார்ந்த பழமொழி மற்றும் விடுகதைகளையும் அறியும் பொருட்டு இந்நிகழ்வு அமைந்தது. இதன் மூலம் தாய்மொழியில் பேசும் அனுபவத்தை மாணவர்கள் உணர்ந்தனர். ஏப்ரல் 22 வரை பல பிரிவுகளில் நடத்தப்பட்ட இந்நிகழ்வில் 1000 க்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்து கொண்டு பயனடைந்தனர். தனித்தமிழில் பேசிய மாணவர்களுக்குச் சிறப்புப் பரிசு அளிக்கப்பட்டது, இந்நிகழ்வின் முத்தாய்ப்பாக அமைந்தது.
செவாலியர் டி.தாமஸ் எலிசபெத் மகளிர் கல்லூரியின் தமிழ்த்துறை சார்பாக மேனாள் குடியரசு தலைவர் ஏ.பி.ஜே அப்துல்கலாம் அவர்களின் பிறந்த நாள் கொண்டாடப்பட்டது. அதனையொட்டி13.10.2021 அன்று சிறப்பு ஆய்வரங்கம் நடத்தப்பட்டது. அப்துல்கலாம் அவர்களின் ஆளுமையை மாணவர்கள் தங்களுக்குள் உருவாக்கிக் கொள்ள வேண்டும் என்பதை நோக்கமாகக் கொண்டது இந்நிகழ்வு. வருங்கால சமுதாயம் ஒப்புயர்வற்ற உயரிய இலட்சியத்தோடு செயல்பட வேண்டிய தேவையுள்ளது. அதன் பொருட்டு இப்படியான நிகழ்வுகள் முனைப்போடு செயல்படுத்தப்படுகின்றன. “எதிர்கால இந்தியாவில் கலாமின் சிந்தனைகள்” என்ற தலைப்பில் நடத்தப்பட்ட ஆய்வரங்கில் 3 ஆய்வுக்கட்டுரைகள் வாசிக்கப்பட்டன.
பாஷினி – ஆங்கில இலக்கியம், மூன்றாமாண்டு
ஆர். யுவஸ்ரீ – வேதியியல், மூன்றாமாண்டு
இசட். சுகைனா பேகம் – வணிகவியல், இரண்டாமாண்டு
ஆகியோர் முற்றிலும் மாறுபட்ட தளத்தில் தொலைநோக்குச் சிந்தனையோடு ஆய்வுரைகளை வழங்கினர். இந்நிகழ்வில் 50 க்கும் மேற்பட்ட மாணவியர் கலந்து கொண்டனர். கலாம் அவர்களின் விழுமியச் சிந்தனைகளை மாணவிகள் அறிந்து கொண்டனர். ஆய்வுக் கட்டுரைகளைப் படித்த மாணவிகளைத் தமிழ்த்துறைத் தலைவர் முனைவர் க. பிரீதா பாராட்டி வாழ்த்து தெரிவித்தார்.
நம் இந்தியத் திருநாட்டின் விடுதலை வரலாறு ஒரு சகாப்தம். எத்தனையோ விடுதலை வீரர்கள் கண்ணீரும் செந்நீரும் சிந்திய வரலாறு நம் பாரதத்தின் சுதந்திர வரலாறு. விடுதலைக்காகத் தங்கள் உடல், பொருள், ஆவி அனைத்தையும் தியாகம் செய்த வீரர்களில் முக்கியமானவர் திருப்பூர் குமரன். இவருடைய பிறந்த நாளான அக்டோபர் 4 – இல் அவருடைய வீரச் செயலை நினைத்துப் பார்க்கும் விதமாகக் கல்லூரியின் காலை இறை வழிபாட்டினைத் தொடர்ந்து இயற்பியல் இரண்டாமாண்டு மாணவி து. துளசி திருப்பூர் குமரனின் வாழ்க்கை வரலாறு குறித்து தமிழில் சிறப்புரை ஆற்றினார். மாணவி தம்முடைய சிறப்புரையில் “1932 ஆம் ஆண்டு சட்ட மறுப்பு இயக்கத்தினை எதிர்த்து நாடெங்கிலும் அறப்போராட்டம் நடத்தபெற்றது. திருப்பூர் குமரன் தேசபந்து இளைஞர் மன்ற உறுப்பினர்கள் நடத்திய மறியல் போராட்டத்தில் தீவிரமாகப் பங்கேற்றார். 1932 ஜனவரி 10 – ஆம் நாள் கையில் தேசியக் கொடியினை ஏந்தி தொண்டர் படைக்குத் தலைமை ஏற்று அணிவகுத்துச் சென்றபோது காவலர்களால் தாக்கப்பட்டு கையில் இந்திய தேசியக் கொடியை ஏந்தியபடி மயங்கி விழுந்தார். பின்னர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு ஜனவரி 11 ஆம் உயிர் துறந்தார். இதனால் இவர் கொடிகாத்த குமரன் என்று போற்றப்படுகிறார்.” என்பதைச் சுட்டிக் காட்டியது அனைவரின் விழிகளையும் சற்று நேரம் ஈரமாக்கியது. மாணவி நிறைவாக ‘ஜெய்ஹிந்த்’ என்று சொல்லி தம் உரையை நிறைவு செய்த போது அனைவருக்குள்ளும் தேசப்பற்று மேலோங்கியது. இச்சிறப்புரையைக் காலை இறைவணக்கத்தில் கலந்துக் கொண்ட கல்லூரி முதல்வர், பேராசிரியர்கள், மாணவியர் உட்பட சுமார் 200 பேர் கேட்டு பயன்பெற்றனர்
02.10.2021 அன்று கர்மவீரர் காமராஜர் நினைவுநாளை முன்னிட்டு அவரின் வாழ்க்கை வரலாற்றை விளக்கும் காணொளி, 8.10 2021 அன்று எம் கல்லூரியின் இரண்டாமாண்டு மாணவியருக்குத் தமிழ் வகுப்பு நேரத்தில் இணையவழியில் காண்பிக்கப்பட்டது. நூற்றைம்பதிற்கும் மேற்பட்ட மாணவியர் அக்காணொளி கண்டு கர்மவீரர் காமராஜரின் சமுகத்தொண்டினை நினைவுகூர்ந்தனர்.
மறைந்த அன்னைதெரெசா அவர்களின் நினைவு நாளை[ 05.09.2021] ஒட்டி .07.09.2021 அன்று இந்நிகழ்வு கொண்டாடப்பட்டது. மூன்றாமாண்டு,உளவியல்துறையைச் சேர்ந்த மாணவி நிஷி பிரியா அவர்கள் , அன்னைதெரெசா அவர்களின் வாழ்வியல் சாதனைகள் பற்றி உரையாற்றியதோடு அன்னாரைப் பற்றிய கருத்துக்களையும் எடுத்துரைத்தார்.
அன்னை தெரெசா குறித்த தரவுகளையும் அவரின் தியாகச் செயல்பாடுகள் குறித்தும் அவரின் தனித்தன்மைகள் குறித்தும் உரையாற்றினார். இந்நிகழ்வு கல்லூரியில் காலையில் நடைபெற்ற இறைவழிபாட்டுக்கூட்டத்தில் இனிதே நடைபெற்றது
17.9.2021 அன்று தந்தை பெரியாரின் 143 ஆவது பிறந்தநாளை முன்னிட்டு அவரின் வாழ்க்கை வரலாற்றை விளக்கும் காணொளி தயாரிக்கப்பட்டு கல்லூரியில் அனைத்து மாணவியருக்கும் காண்பிக்கப்பட்டது. மூன்றாமாண்டு வணிகவியல் மாணவி செல்வி. ராஜகாளிஸ்வரி இக்காணொளியைத் தயாரித்தார்.தமிழ்த்துறை உதவிப்பேராசிரியர் முனைவர் ஜ. வள்ளி ஒருங்கிணைப்பாளராகச் செயல்பட்டார்.
வலையொளி இணைப்பு (Youtube link) - https://youtu.be/pLEjOaw9bC0
அறிவுப் பெட்டகம், எதையும் தாங்கும் இதயம். பேச்சாற்றல் பிரம்மா என்ற பெருமைகளுக்குரிய அறிஞர் அண்ணாவின் பிறந்த தினமான செப்டம்பர் 15 ஆம் நாளை கொண்டாடும் வகையில் 15/09/2021 அன்று இரண்டாமாண்டு இயற்பியல் மாணவி து, துளசி ‘அறிஞர் அண்ணாவின் சிறப்புகள்’ குறித்து கல்லூரியின் காலை வழிபாட்டினைத் தொடர்ந்து சிறப்புரையாற்றினார். அண்ணாவின் பிறப்பு முதல் அவரின் இறுதிக் காலம் வரை அவர் ஆற்றிய தொண்டுகள் குறித்து மாணவி தெளிவாக எடுத்துரைத்தார். காஞ்சிபுரத்தில் நெசவாளர் குடும்பத்தில் பிறந்த அண்ணாதுரை அவர்கள் தமிழ்நாட்டின் முதலமைச்சராகி சாதனைப் படைத்ததன் மூலம் அவரின் கடின உழைப்பும் நேர்மையும் வெளிப்படுவதை மாணவி சுட்டிக் காட்டினார். ‘எதையும் தாங்கும் இதயம் வேண்டும்; என்ற அண்ணாவின் பொன்மொழி ஒன்றே தன்னம்பிக்கை இழந்த எத்தனையோ உள்ளங்களைத் தட்டி எழுப்பியிருக்கின்றது என்று மாணவி பேசியவிதம் சிறப்புரையைக் கேட்ட அனைவருக்குள்ளும் தன்னம்பிக்கை எண்ணத்தை வளர்த்திருக்கும் என்பது உறுதி. இச்சிறப்புரையைப் பேராசிரியர்கள், மாணவியர்கள் உட்பட இருநூறு பேர் கேட்டு பயன்பெற்றனர். அறிஞர் அண்ணா குறித்து சிறப்புரையாற்றுவதற்கு மாணவி து. துளசியைத் தமிழ்த்துறை உதவிப் பேராசிரியர் முனைவர் அ. கஸ்தூரி அவர்கள் நெறிப்படுத்தினார்.
செவாலியர் டி. தாமஸ் எலிசபெத் மகளிர் கல்லூரியின், தமிழ்த்துறை 25/08/2021 அன்று மாலை 12.30 – 1:30 மணியளவில், பன்னாட்டு இணையவழிக் கருத்தரங்கை நடத்தியது, 'அப்பர் சம்பந்தரின் ஆன்மிகப்பயணம்' எனும் தலைப்பில் நடைபெற்ற இந்நிகழ்வில், சிட்னி தமிழ் வளர்ச்சி மன்றத்தின் நிறுவனர், சிவஞானச்சுடர் திரு. அன்புஜெயா அவர்கள் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார், இதில் சைவ இலக்கியத்தின் தொன்மை, மற்றும் செழுமை குறித்து மாணவிகளுக்கு எடுத்துரைத்தார். 63 நாயன்மார்களுள் சைவசமயக் குரவர்களான அப்பர் சம்பந்தர் ஆற்றிய சமயத்தொண்டினையும் நாளும் தமிழால் இறைநெறி பரப்பியப் பாங்கினையும் சிறப்புற விளக்கினார். இதன்மூலம் அப்பர் சம்பந்தரின் பக்திச் சிறப்பினையும் தமிழ் இலக்கியங்களில் பக்தி இலக்கியங்களின் இன்றியமையாமையையும் மாணவிகள் அறிந்து கொண்டனர். சிறப்புரையின் நிறைவாக திரு. அன்புஜெயா அவர்கள் மாணவிகளின் ஐயங்களுக்குப் பதிலளித்துக் கலந்துரையாடினார். முன்னதாக மொழித்துறைத்தலைவர் முனைவர் க.பிரிதா அவர்கள் தலைமையுரை நல்க, தமிழ்த்துறை உதவிப்பேராசிரியர் முனைவர் ஜ.வள்ளி, இந்நிகழ்வை ஒருங்கிணைத்து வரவேற்புரை வழங்கினார். இரண்டாமாண்டு, கூட்டுச்செயலாண்மையியல் ஆ பிரிவு மாணவி தென்றல்ஜெசிகா நன்றியுரை கூற நிகழ்வு இனிதே நடந்தேறியது. இரண்டாமாண்டு மாணவிகள் இந்நிகழ்வில் கலந்து கொண்டு பயனுற்றனர்.
செவாலியர் டி.தாமஸ் எலிசபெத் மகளிர் கல்லூரியின் தமிழ்த்துறை சார்பாக, 75 வது சுதந்திர தினத்தை முன்னிட்டு, 75வது சுதந்திர தினப்போட்டிகள் நடத்த பெற்றன. மாணவிகளிடையே நாட்டுப்பற்றையும், விடுதலையின் முக்கியத்துவத்தையும் உணர்த்தும் வகையில் இப்போட்டிகள் தமிழ்த்துறையால் முன்னெடுக்கப்பட்டன. அதனோடு கூட விடுதலைப் போராட்டத் தலைவர்களின் வரலாறுகளையும் நவீன இந்தியாவின் எதிர்காலக் கடமைகளையும் ஏற்படுத்த வேண்டி, இப்படியான திறனறி போட்டிகள் அவசியமாகின்றன. அதனடிப்படையில் பேச்சுப்போட்டி, கவிதைப்போட்டி, கட்டுரைப்போட்டி ஆகியனவற்றில் மாணவிகள் பங்கேற்றனர்.