பண்பாட்டுச் சிறப்பு மிக்க நமது இந்தியாவிற்கு நெடிய வரலாறு உண்டு . இந்த வரலாற்றில் காலத்தால் பதிவு செய்யப்பட்டவர்கள் பலர். சிறந்த குறிக்கோளையும் அறம் சார்ந்த வாழ்வியல் நெறிமுறைகளையும் கொண்ட தலைவர்கள் உருவாகியதே நமது இந்திய நாட்டின் சிறப்புக்குக்காரணம். இத்தகைய தலைவர்களை போற்றுவது நமது நாட்டின் மரபு. அந்த வகையில் இந்தியாவின் “இரும்பு மனிதர்” என்று புகழப்பட்ட சர்தார் வல்லபாய் பட்டேல் அவர்களின்145 ஆவது பிறந்தநாள் அக்டோபர் 31 அன்று இந்தியாவெங்கும் “ தேசிய ஒற்றுமைநாளாக “கொண்டாடப்படுகின்றது.
ஆங்கிலேய ஆட்சியில் சிதறிக்கிடந்த இந்தியாவின் 596 சமஸ்தானங்களைத் தனது இரும்புக்கரம் கொண்டு திரட்டி “ஒருங்கிணைந்த இந்தியா” என்று வலிமை பெறச் செய்தார் இந்த மாமனிதர். மனதளவில் மக்கள் அனைவரும் ஒன்றுபட்டு வாழ வேண்டும் என்ற உயரிய கொள்கையை நிறைவேற்றிக் காட்டியசுதந்திரப் போராட்ட வீரர் இவர். சுதந்திர இந்தியாவின் முதல் துணைபிரதமராகவும் முதல் உள்துறை அமைச்சராகவும் விளங்கிய இவர் தம்பிறந்த நாள் “தேசிய ஒற்றுமை நாள் “ எனச் சிறப்பிக்கப்படுவது நமக்கு எல்லாம் பெருமை தரக்கூடியது.
மாணவர்களுக்கு ஒற்றுமை உணர்வை ஊட்ட வேண்டி நம் கல்லூரியிலும் 31/ 10 /2020 அன்று தேசிய ஒற்றுமைநாள் கொண்டாடப்பட்டது. மொழித்துறை, உளவியல் துறை மற்றும் கல்லூரியின் அகத்தர மதிப்பீட்டுக் குழுவும் இணைந்துஇந்நிகழ்ச்சியை நடத்தின. G.யுவராணி, கணிதவியல் இரண்டாம் ஆண்டு மாணவி தமிழில் சர்தார் வல்லபாய் பட்டேல் அவர்களின் பெருமைகளை எடுத்துரைத்தார், V.ஜெனிஃபர், இயற்பியல் இரண்டாமாண்டு மாணவி தமிழில் கவிதை படித்தார். நிஷிபிரியா, உளவியல் இரண்டாம் ஆண்டு மாணவி ஆங்கிலத்திலும் சையத்சாகியா, உளவியல் முதலாம் ஆண்டு மாணவி இந்தியிலும் பட்டேல் அவர்களின் பெருமைகளைப் பறைசாற்றினார்கள்.
மொழித்துறைத் தலைவர் முனைவர் க.பிரீதா தேசிய ஒற்றுமை நாள் உறுதிமொழி கூற மாணவிகள் உறுதிமொழி எடுத்துக் கொண்டார்கள்.உளவியல் துறை தலைவர் பேரா. அலிமா ஜகிரா நிகழ்ச்சியை ஒருங்கிணைக்க 50 மாணவிகள் இதில் கலந்து கொண்டனர்.
மாணவ சமுதாயத்தின் மீது அளப்பரிய அன்பு வைத்திருந்த நமது முன்னாள் இந்தியக் குடியரசு தலைவர் மாண்புமிகு A.P.J. அப்துல்கலாம் அவர்களின் பிறந்தநாள் அக்டோபர் 15 அன்று இந்தியாவெங்கும் கொண்டாடப் படுகிறது. தனது வாழ்நாள் முழுக்க இளைஞர்களுக்கும் மாணவர்களுக்கும் ஊக்கம் தரக்கூடிய எழுச்சிமிக்க உரைகளை ஆற்றி வந்தார் இந்த ஏவுகணை நாயகன். மக்கள் குடியரசு தலைவர் என்று போற்றப்பட்ட இவர்தம் பிறந்தநாள் இளைஞர் எழுச்சி நாள் (YOUTH AWAKENING DAY) என்று நமது இந்திய அரசாங்கத்தால் அனுசரிக்கப்பட்டு வருகின்றது. தன்னம்பிக்கை மிக்க வார்த்தைகளாலும், அறம் நிறைந்த செயல்களாலும் இளைய தலைமுறையினர்க்கு எப்போதும் வழிகாட்டியாகத் திகழ்பவர் கலாம் அவர்கள். எனவே அவர்தம் பிறந்தநாள் இளைஞர் எழுச்சிநாளாகக் கொண்டாடப்படுவதில் வியப்பில்லை.
அன்பையும் அறப்பண்புகளையும் மாணவர்கள் மத்தியில் விதைத்தவர் கலாம். வலிமையான இளைஞர்களை வைத்து பாரதத்தை வல்லரசாக்க முடியும் என்று நம்பிக்கை கொண்டவர் இந்த மாமேதை. அக்கினிச்சிறகுகளால் வானம் அளக்க இளைய சமுதாயத்துக்கு அழைப்பு விடுத்த மாமனிதரின் பிறந்தநாளைக் கொண்டாடும் நோக்கில் நம் கல்லூரியின் மொழித்துறையும் (Language Department) அகத்தர உறுதி மதிப்பீட்டுக் குழுவும் (IQAC) இணைந்து 13-10-2020 அன்று இணையவழி பேச்சுப்போட்டி மற்றும் கட்டுரைப்போட்டிகளை நடத்தின.
‘எனதுபார்வையில்அப்துல்கலாம்’ என்ற தலைப்பில் நடைபெற்ற பேச்சுப்போட்டியில் 24 மாணவிகள் கலந்து கொண்டு கலாம் அவர்களைப் பற்றிய வீராவேசப் பேச்சுகளைப் பதிவு செய்தனர்.
‘இலக்கு 2020 அடைந்தவை/ அடையத்தவறியவை’ என்னும் தலைப்பில் நடைபெற்ற கட்டுரைப்போட்டியில் 67 மாணவிகள் கலந்து கொண்டு தங்களது ஆத்மார்த்தமான கருத்துகளை வெளிப்படுத்தியிருந்தனர். முன்னதாக மொழித்துறைத் தலைவர் முனைவர் க. பிரீதா அவர்கள் இந்நிகழ்விற்குச் சிறப்புரை வழங்கினார். மொழித்துறைப் பேராசிரியர்கள் இப்போட்டிகளை மதிப்பீடு செய்தனர்.
மாணவிகள் ஆர்வமுடன் போட்டிகளில் பங்கு கொண்டது இந்நிகழ்வின் முத்தாய்ப்பாக அமைந்தது.
செவாலியர் டி. தாமஸ் எலிசபெத் மகளிர் கல்லூரியின் மொழித்துறையும் , அகமதிப்பீட்டுத் தரக் குழுவும் (IQAC) இணைந்து 02/10/2020 அன்று காலை ஒன்பது மணி முதல் பதினொருமணிவரை இந்திய தேசத் தந்தை மகாத்மா காந்திடியடிகளின் நூற்று ஐம்பத்தோராம் ஆண்டு பிறந்தநாளை இணைய வழியில் கொண்டாடியது. இந்நிகழ்ச்சியில் கலந்துக் கொள்ள தொண்ணூற்றுக்கும் மேற்பட்ட மாணவியர் பதிவு செய்திருந்தனர். நிகழ்ச்சிக்குச் சிறப்பு விருந்தினராகச் சென்னை, தலைமைப் பண்புக்கல்வி சேவை மையத்தின் ஆசிரியர் திருமதி. காஞ்சனா சடகோபன் அவர்கள் வருகைப் புரிந்தார். நிகழ்வில் இருபதுக்கும் மேற்பட்ட மாணவியர் கலந்துக் கொண்டனர். நிகழ்ச்சி தமிழ்த்தாய் வாழ்த்துடன் தொடங்கியது.
நிகழ்ச்சிக்குச் செவாலியர் டி. தாமஸ் எலிசபெத் மகளிர் கல்லூரியின் தமிழ்த்துறை உதவிப் பேராசிரியர் முனைவர் அ. கஸ்தூரி வரவேற்புரை வழங்கினார். அதனைத் தொடர்ந்து ‘இன்றைய சூழலில் காந்தியத்தின் தேவை’/Gandhian ideologies – The Need the hour என்ற தலைப்பில் மாணவியர்களுக்கானப் பேச்சுப் போட்டி தொடங்கியது. பேச்சுப் போட்டியின் நடுவராக சிறப்பு விருந்தினர் ஆசிரியர் காஞ்சனா சடகோபன் அவர்கள் தலைமைத் தாங்கினார். போட்டியில் வெவ்வேறு துறைகளைச் சார்ந்த பதினாறு மாணவியர் கலந்துக் கொண்டனர். போட்டி தமிழ் மற்றும் ஆங்கிலம் என இரண்டு மொழிகளிலும் நடத்தப் பட்டது.
பேச்சுப் போட்டியைத் தொடர்ந்து சிறப்பு விருந்தினர் ஆசிரியர் காஞ்சனா சடகோபன் அவர்கள் சிறப்புரை ஆற்றத் தொடங்கினார். பதினொரு காந்தியக் கொள்கைகளை எளிய நடையில் எடுத்துரைத்து மாணவியர் மனதில் காந்தியக் கொள்கைகளை அவர் பதிய வைத்தது அனைவரையும் வெகுவாகக் கவர்ந்தது. தம் சிறப்புரையை முடித்தவுடன் பேச்சுப்போட்டியில் முதல் நான்கு இடங்களைப் பெற்று பரிசு வென்ற மாணவியர்களின் பெயர்களை அறிவித்தார். இறுதியாக இந்திப் பேராசிரியர் முனைவர் S. தஸ்லீம் பானு நன்றியுரை வழங்க நாட்டுப்பண்ணுடன் நிகழ்ச்சி இனிதே நிறைவடைந்தது.
பன்னாட்டு பயிலரங்கம்
செவாலியர் டி. தாமஸ் எலிசபெத் மகளிர் கல்லூரியின் தமிழ்த்துறையும் மலேசியா நாட்டின் கூகுள் கல்விக் குழுமமும் இணைந்து “விரல் நுனியில் தகவல் தொழில் நுட்பம் “ எனும் பன்னாட்டுப் பயிலரங்கை 15.08.2020 அன்று நடத்தின.
இப்பயிலரங்கின் முதல் நாள் நிகழ்வில் மலேசியா கூகுள் கல்விக் குழுமத்தின் தலைவர் திருமதி. பிரேமலதா செல்வராஜ் அவர்கள் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டார். மற்றும் INSPIREMY அமைப்பின் முதன்மை மேலாண்மை அலுவலர் திரு.ரூபன் ஆறுமுகம் அவர்கள் வாழ்த்துரை வழங்கினார். EDUSPEC அமைப்பின் முதன்மை மேலாண்மை அலுவலர் திரு லிட் என் ஹாங் அவர்கள் இதில் பங்கேற்றார்.
கல்வி சார் தளத்தில் எப்போதும் அறிவுத் தேடலோடு இயங்குவது தமிழ்ச் சமூகம். கால மாற்றத்திற்கு ஏற்ப தனது சிந்தனை மரபில் புதுமையோடு பயணித்துக் கொண்டிருப்பது தமிழ்மொழி. இன்றைய சூழலில் உலகையே இணைத்துக் கொண்டிருக்கும் தகவல் தொழில் நுட்பத் துறையில் தன்னைப் பொருத்திக் கொண்டு பல தளங்களில் வளர்ச்சியை நோக்கிச் சென்று கொண்டிருப்பது நமது தமிழ் மொழி. அத்தகைய தமிழ் மொழியில் தகவல் தொழில் நுட்பங்களைப் பயிற்றுவிப்பதே இப்பயிலரங்கத்தின் நோக்கமாக அமைகின்றது. 15/08/2020 அன்று தொடங்கி 03/10/2020 வரை ஒவ்வொரு சனிக்கிழமையும் பிற்பகல் 12.30 மணி முதல் 2 மணி வரை (இந்திய நேரப்படி) மொத்தம் 8 வகுப்புகள் நடைபெற உள்ளன.
இன்றைய நிகழ்வில் தமிழ்த்துறைத் தலைவர் முனைவர் க. பிரீதா அவர்கள் வரவேற்புரையாற்றினார். இந்த அரிய நிகழ்விற்கு வாழ்த்துரை வழங்கிச் சிறப்பித்தார் கல்லூரி முதல்வர்(பொ) பேராசிரியர் முனைவர். இரா. மீனாட்சி அவர்கள்.
கூகுள் கல்வியாளர் குழுமம் 2014 ஆம் ஆண்டு உலகளவில் அறிமுகம் ஆனது எனவும் மலேசியாவில் 2015 ஆம் ஆண்டு நடைமுறைப்படுத்தப்பட்டது என்றும் கருத்துத் தெரிவித்தார் சிறப்பு விருந்தினர். கூகுள் கல்விக் குழுமத்தை உருவாக்கி அதனைச் செயல்படுத்துவதற்கான நெறிமுறைகளையும் விளக்கிக் கூறினார். அதனைத் தொடர்ந்து கூகுள் வகுப்பறையில் பாடம் நடத்துவதற்குத் தேவையான Google Extention பற்றி விரிவாக எடுத்துரைத்தார்.
கூகுள் மீட் வகுப்பறையில் படங்கள் IMAGE வழி செய்திகளை நேரடியாகப் பதிவிட NOD என்ற நீட்சி (Extention) பயன்படுத்தப்படுகிறது. மாணவர்கள் வகுப்பறையில் இணையும் போது கணினியின் ஒலிப்பெருக்கியை (Mike) இயக்கவும் அணைக்கவும் நமது கட்டுப்பாட்டுக்குள் வைப்பதற்கு Push and Talk என்ற நீட்சிப் பயன்படுகிறது.
கணினியின் திரையை இரண்டாகப் பிரித்து ஒரு திரையின் வழியே பாடம் நடத்தவும் மற்றொரு திரையின் வழியே மாணவர்களைக் கவனிக்கவும் -Dualess என்ற நீட்சி உதவுகிறது.மாணவர்களின் வருகையைப் பதிவு செய்வதற்கும் ஒன்று அல்லது இரண்டு பக்கங்களில் பதிவைச் சேமிப்பதற்கும் Meet Attendance என்ற நீட்சி உருவாக்கப்பட்டுள்ளது.
மாணவர்களோடு இணைய வழி கலந்துரையாட கேள்வி – பதில் நிகழ்வாகவும் பங்கேற்கும் போது கருத்துக்களைப் பதிவிட Emoji keyboard என்னும் நீட்சி பயனுள்ளதாகிறது. கூகுள் வகுப்பறையில் நாம் கற்பிக்கும் கருத்துக்கள் ஒலி வடிவில் பதிவு செய்யப்படுவதற்கும் முக நூலில் பதிவிடவும் Talk and Comment என்ற நீட்சி உதவுகிறது.
பாடம் சம்பந்தப்பட்ட காட்சிகளோடு கருத்துக்களைப் பதிவு செய்து கூகுள் வகுப்பறையில் மாணவர்களுக்குப் பகிர்வது Screen castify எனும் நீட்சியாகும். பாடங்களின் முக்கியப் பகுதிகளை குறிப்பிட்டுக் காட்டுவதற்கும் சொற்களைக் கோடிட்டுக் காட்டவும் Page Marker எனும் நீட்சி பயன்படுகிறது. மாணவர்களிடமிருந்து வரப்பெற்ற பதில்களைத் திருத்தம் செய்ய பாடப்பகுதிகளை நிறமிட்டுக் காட்டKami எனும் நீட்சி உதவுகிறது.
நடத்துகின்ற பாடங்களின் சொற்களின் பொருளை அறிய மற்றும் அதன் உச்சரிப்பைத் தெரிந்து கொள்ள Google Dictionary எனும் நீட்சி விளக்குகின்றது. ஒரு மொழியிலிருந்து மற்றொரு மொழிக்கு மொழிபெயர்ப்புச் செய்வதற்கு Google Translate என்ற நீட்சி பயன் அளிக்கிறது. மற்றும் கணிதத்துறை சார்ந்த வினாக்களைத் தயாரிக்கவும் ஆய்வு மாணவர்களுக்கான தரவுகளைச் சேகரிக்கவும் தேவையற்ற செய்திகளைத் தவிர்க்கவும் பயன்படுத்தப்படும் செயலிகள் பற்றியும் விரிவாகப் பேசப்பட்டது.
இவ்வாறாக பயனுள்ள நல்ல தகவல்களைத் தெரிவித்து இணைய வழிக் கற்பித்தலுக்கான ஆளுமையை மேன்மைப்படுத்திக் கொள்ள வழிவகை செய்தார் நம் சிறப்பு விருந்தினர். நிறைவாக கூகுள் கல்விக் குழுமத்தின் ஆசிரியரான திரு. சுப்பிரமணியம் கிருஷ்ணசாமி அவர்கள் நன்றியறிதலைத் தெரிவித்தார். முன்னதாகத் தமிழ்த்துறை சார்பில் உதவிப் பேராசிரியர் முனைவர். ஜ. வள்ளி அவர்கள் நன்றியுரை நவிலப் பயிலரங்கம் நிறைவுப் பெற்றது
பயிலரங்கத் தலைப்பு: விரல் நுனியில் தகவல் தொழில்நுட்பம்
நாள்: 22/08/2020
நேரம்: இந்திய நேரப்படி பகல்12.30 – 2.00
சென்னை – பெரம்பூர், செவாலியர் டி. தாமஸ் எலிசபெத் மகளிர் கல்லூரியின் தமிழ்த்துறையும் மலேசியா நாட்டின் கூகுள் கல்விக் குழுமமும் (GEG – SPS) இணைந்து நடத்தும் ‘விரல் நுனியில் தகவல் தொழில்நுட்பம்’ எனும் இணயவழிப் பன்னாட்டுப் பயிலரங்கை 15 /08/2020 அன்று தொடங்கி வாரந்தோறும் சனிக்கிழமை நடத்தி வருகின்றன. இப்பயிலரங்கின் இரண்டாம் நிகழ்வு தமிழ் உள்ளீட்டு முறைகள் , குரல் தட்டச்சு, எழுத்துருக்கள், தமிழா இ கலப்பை, முரசு அஞ்சல், மென்தமிழ் எனும் பொருண்மையில் 22.08.2020 அன்று நடைபெற்றது.
இப்பயிலரங்கைத் தமிழ்த்துறை உதவிப்பேராசிரியர் முனைவர் ஜ. வள்ளி வரவேற்புரை ஆற்றி தொடங்கி வைத்தார். கூகுள் கல்விக் குழுமத்தின் தலைவர் திருமதி. பிரேமலதா செல்வராஜ் அவர்கள் தலைமை உரையாற்றி சிறப்பித்தார். கூகுள் கல்விக் குழுமத்தின் ஆசிரியர் மேகவர்ணன் ஜெகதீசன் அவர்கள் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டார்.
மொழியின் இயங்குதளமாக அமைவது எழுத்து மற்றும் பேச்சாகும். கணினியில் தமிழ்மொழியின் பயன்பாட்டை அதிகப்படுத்த எழுத்துக்களை உள்ளீடு செய்வது அவசியமாகிறது. எனவே அதற்கான விளக்கங்களைத் தெளிவுபடுத்தும் விதமாக இந்நிகழ்வு அமைந்தது. தமிழா இ - கலப்பை எனும் மென்பொருள் தமிழ் மொழி வழியே கணினியில் செயல்படுவதற்குப் பயன்படுகிறது. அவ்வாறே மென்தமிழ் மற்றும் முரசு அஞ்சல் போன்றவையும் கணினியில் தமிழ்மொழியின் வளர்ச்சிக்குப் பெரிதும் பங்கு வகிக்கின்றன. அதிலும் குறிப்பாக, சென்னைப் பல்கலைக்கழகப் பேராசிரியர் ந. தெய்வ சுந்தரம் அவர்கள் அறிமுகப்படுத்திய மென்தமிழ் என்னும் சொற்செயலி தமிழில், சந்திப்பிழை, ஒற்றுப்பிழை நீக்கி எழுதுவதற்குத் துணைபுரிகின்றது. மேலும் Microsoft, Google உள்ளீட்டு முறைகள் குறித்தும் பல்வேறான எழுத்துருக்கள், பற்றியும் விளக்கம் அளித்தார் சிறப்பு விருந்தினர்.
தமிழ்-இந்தியா எழுத்துருவில் குரல் தட்டச்சு செய்வது பற்றியும் தமிழிலிருந்து பிறமொழிகளுக்கு மொழி பெயர்ப்பு செய்யும் முறைகளையும் எடுத்துக் கூறினார். மேலும் கணினியில் தமிழ் மொழியின் பயன்பாட்டைச் செயல்படுத்தவும் அதிகரிக்கவும் அறிவுறுத்தினார். இவ்வாறாகச் சிறப்பான வழிகாட்டுதல்களுடன் இந்நிகழ்வு அமைந்திருந்தது. நிறைவாக தமிழ்த் துறை உதவிப் பேராசிரியர் முனைவர். ஜ. வள்ளி அவர்கள் நன்றியுரை கூறினார்.
பயிலரங்கத் தலைப்பு: விரல் நுனியில் தகவல் தொழில்நுட்பம்
நாள்: 29/08/2020
நேரம்: இந்திய நேரப்படி பகல்12.30 – 2.00
சென்னை – பெரம்பூர்,செவாலியர் டி. தாமஸ் எலிசபெத் மகளிர் கல்லூரியின் தமிழ்த்துறையும் மலேசியாவின் தென்பிராங் பிறை கூகுள் கல்வி குழுமமும் இணைந்து நடத்தும் ‘விரல் நுனியில் தகவல் தொழில்நுட்பம்’ என்ற தலைப்பிலான இணையவழி மூன்றாம் நாள் பயிலரங்கு 29/08/2020 சனிக்கிழமை பகல் 12.30 மணி முதல் 2 மணி வரை நடந்தேறியது.
இப்பயிலரங்கின் பயிற்றுநராக மலேசிய தேசியப் பள்ளி தமிழாசிரியரும், மலேசிய தென்பிராங் பிறை கூகுள் கல்விக் குழுமத்தின் தகவல் தொழில் நுட்ப ஆசிரியருமான திரு. நாகலிங்கம் அழகேந்திரன் அவர்கள் பங்கேற்றார். பயிலரங்கிற்கு செவாலியர் டி. தாமஸ் எலிசபெத் மகளிர் கல்லூரியின் தமிழ்த்துறை உதவிப் பேராசிரியர் முனைவர் தோ. எழிலரசி அவர்கள் வரவேற்புரை வழங்கினார். பயிலரங்கத்தின் சிறப்புகள் குறித்தும் நெறிமுறைகள் பற்றியும் மலேசிய தென்பிராங் பிறை கூகுள் கல்விக் குழுமத்தின் தலைவர் திருமதி. பிரேமலதா செல்வராஜ் அவர்கள் எடுத்துரைத்தார்.
பயிலரங்கில் கற்றல் கற்பித்தலின் போது கணினியில் திரையைப் பதிவு செய்தல்(SCREEN RECORD), அசைவூட்டம் உருவாக்குதல் (ANIMATION), காணொளி சீர்திருத்தம் செய்தல்(VIDEO EDITING) ஆகியன பற்றி விளக்கமாகவும், எளிமையாகவும் பயிற்றுநரால் எடுத்துரைக்கப்பட்டன. இப்பயிலரங்கில் மலேசியா மற்றும் இந்தியாவைச் சேர்ந்த ஆசிரியர்களும், மாணவர்களும் ஆர்வத்துடன் கலந்துக் கொண்டனர். இறுதியாகப் பயிலரங்கின் ஒருங்கிணைப்பாளரும் செவாலியர் டி. தாமஸ் எலிசபெத் மகளிர் கல்லூரியின் தமிழ்த்துறை உதவிப் பேராசிரியருமான முனைவர் ஜ. வள்ளி அவர்கள் நன்றியுரை வழங்கி பயிலரங்கை நிறைவு செய்தார்.
பன்னாட்டு பயிலரங்கம்
பயிலரங்கத் தலைப்பு: விரல் நுனியில் தகவல் தொழில்நுட்பம்
நாள்: 05/09/2020
நேரம்: இந்திய நேரப்படி பகல்12.30 – 2.00
சென்னை – பெரம்பூர்,செவாலியர் டி. தாமஸ் எலிசபெத் மகளிர் கல்லூரியின் தமிழ்த்துறையும் மலேசியா நாட்டின் கூகுள் கல்விக் குழுமமும் (GEG – SPS) இணைந்து நடத்தும் ‘விரல் நுனியில் தகவல் தொழில்நுட்பம்’ எனும் இணயவழிப் பன்னாட்டுப் பயிலரங்கை 15 /08/2020 அன்று தொடங்கி வாரந்தோறும் சனிக்கிழமை நடத்தி வருகின்றன. இப்பயிலரங்கின் நான்காம் நிகழ்வில் கூகுள் சிலைடு ஓர் அறிமுகம், கூகுள் சிலைடில் இலக்கண இலக்கியப் பயன்பாடு உத்திகள் எனும் தொழில் நுட்பத்தை விளக்கியுரைக்கும் வகையில் பன்னாட்டுப் பயிலரங்கம் 05/09/2020 அன்று நடைபெற்றது.
இப்பயிலரங்கைத் தமிழ்த் துறை உதவிப்பேராசிரியர் முனைவர் அ. கஸ்தூரி வரவேற்புரை ஆற்றி தொடங்கி வைத்தார். கூகுள் கல்விக் குழுமத்தின் தலைவர் திருமதி. பிரேமலதா செல்வராஜ் அவர்கள் தலைமை உரையாற்றி சிறப்பித்தார். கூகுள் கல்விக் குழுமத்தின் ஆசிரியர், மலேசிய தேசியப் பள்ளியில் தமிழ் மொழி மற்றும் தகவல் தொழில் நுட்ப ஆசிரியராகப் பணிபுரிந்து வரும் பயிற்றுநர் திரு. எஸ். சுந்தரசண்முகம் அவர்கள் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு தொழில் நுட்பம் குறித்த விளக்கங்களை அளித்தார்.
கூகுள் சிலைடு (GOOGLE SLIDES) வழி படைப்பாற்றலை மேலும் சுவாரசியமாக மாற்ற தேவையான உத்திமுறைகளைக் கூறினார். Slidesmania.com எனும் பகுதியில் சென்று நமக்குத் தேவையான சிலேடை பதிவிறக்கம் செய்து அதை மாணவர்களை ஈர்க்கும் வகையில் எவ்வாறு வடிவமைப்பது என்பதைக் குறித்து விளக்கம் அளிக்கப்பட்டது. வடிவமைத்த சிலைடை(Slides) நேரலை வலையொலியிலும்(Youtube live), இணையவழி வகுப்பின் போதும் (Online)பிறருக்கு அனுப்பவும் ஒரே நேரத்தில் பலரும் காணும் வகையில் அதில் எவ்வாறு திருத்தம் செய்வது, மாற்றி அமைப்பது போன்ற பல முறைகள் விளக்கியுரைக்கப்பட்டன.
Add ons இல் வரும் ஒவ்வொரு பகுதியும் எவ்வாறு பயன்படுகிறது , அதன் மூலம் உருவாக்கப்படும் சிலைடு எவ்வாறு மாணவர்களுக்கு ஆர்வத்தை ஊட்டும் விதமாக அமைகிறது என்பதையும் இதைப் பயன்படுத்துவதால் அடையும் நன்மைகள் குறித்தும் ஸ்லைடோ(Slido) எனும் எடுத்துகாட்டுடன் தெளிவாக எடுத்துரைத்தார். மேலும் சிலைடோ (Slido) என்ற அகப்பக்கத்தில் சென்று கேள்விகளைத் தேர்ந்தெடுத்து எளிய முறையில் வினாக்களை அமைத்து மாணவர்களுக்கு இணைய வழி தேர்வினை வைத்து மதிப்பீடு செய்ய இயலும் என்பதை உதாரணங்களுடன் தெளிவாக எடுத்துரைத்தார்.
இவ்வாறாக சிறப்பான வழிகாட்டுதல்களுடன் இந்நிகழ்வு அமைந்திருந்தது.
பயிலரங்கத் தலைப்பு: விரல் நுனியில் தகவல் தொழில்நுட்பம்
நாள்: 12/09/2020
நேரம்: இந்திய நேரப்படி பகல்12.30 – 2.00
சென்னை – பெரம்பூர், செவாலியர் டி. தாமஸ் எலிசபெத் மகளிர் கல்லூரியின் தமிழ்த்துறையும் மலேசியாவின் தென்பிராங் பிறை கூகுள் கல்வி குழுமமும் இணைந்து நடத்தும் ‘விரல் நுனியில் தகவல் தொழில்நுட்பம்’ என்ற தலைப்பிலான இணைய வழி ஐந்தாம் நாள் பயிலரங்கு 12/09/2020 சனிக்கிழமை பகல் 12.30 மணி முதல் 2 மணி வரை நடந்தேறியது.
இப்பயிலரங்கின் சிறப்பு விருந்தினராக மலேசியாவைச் சேர்ந்த Guru ICT , Certified educator -ராகிய ஆசிரியர் சுப்ரமணியம் கிருஷ்ணசாமி அவர்கள் பொழிவு ஆற்றினார். இப்பயிலரங்கிற்குச் செவாலியர் டி. தாமஸ் எலிசபெத் மகளிர் கல்லூரியின் தமிழ்த்துறை உதவிப் பேராசிரியர் முனைவர் பா. அனிதா அவர்கள் வரவேற்புரை வழங்கினார். பயிலரங்கத்தின் சிறப்புகள் குறித்தும் நெறிமுறைகள் பற்றியும் சிறப்பு விருந்தினர் அவர்கள் எடுத்துரைத்தார்.
இப்பயிலரங்கத்தில் கூகுள்போர்மில் ஓர் அறிமுகம் , கூகுள்போர்மில் கேள்விகளைத் தயாரித்தல் மற்றும் மதிப்பீடு செய்தல் போன்ற நுணுக்கங்களைப் பற்றி விளக்கமாகவும், எளிமையாகவும் சிறப்பு விருந்தினர் எடுத்துரைத்தார். இப்பயிலரங்கில் மலேசியா மற்றும் இந்தியாவைச் சேர்ந்த பேராசிரியர்களும், மாணவர்களும் ஆர்வத்துடன் கலந்து கொண்டனர்.
பயிலரங்கத் தலைப்பு: விரல் நுனியில் தகவல் தொழில்நுட்பம்
நாள்: 19/09/2020
நேரம்: இந்திய நேரப்படி பகல்12.30 – 2.00
சென்னை – பெரம்பூர், செவாலியர் டி. தாமஸ் எலிசபெத் மகளிர் கல்லூரியின் தமிழ்த்துறையும் மலேசியாவின் தென்செபராங் பிறை கூகுள் கல்வி குழுமமும் இணைந்து நடத்தும் ‘விரல் நுனியில் தகவல் தொழில்நுட்பம்’ என்ற தலைப்பிலான இணையவழி ஆறாம் நாள் பயிலரங்கு 19/09/2020 சனிக்கிழமை பகல் 12.30 மணி முதல் 2 மணி வரை நடந்தேறியது.
பயிலரங்கிற்குச் செவாலியர் டி. தாமஸ் எலிசபெத் மகளிர் கல்லூரியின் தமிழ்த்துறை உதவிப் பேராசிரியரும், பயிலரங்கின் ஒருங்கிணைப்பாளருமான முனைவர் ஜ.வள்ளி அவர்கள் வரவேற்புரை வழங்கினார். பயிலரங்கத்தின் சிறப்புகள் குறித்தும் நெறிமுறைகள் பற்றியும் மலேசிய தென்செபராங் பிறை கூகுள் கல்விக் குழுமத்தின் தலைவர் திருமதி. பிரேமலதா செல்வராஜ் அவர்கள் எடுத்துரைத்தார் பயிலரங்கின் பயிற்றுநராக மலேசியாவைச் சேர்ந்த ஆசிரியர் திருமதி. லீனா இலட்சுமணன் அவர்கள் பங்கேற்றார். பயிலரங்கில் மெய்நிகர் வகுப்பு ஓர் அறிமுகம் (VIRTUAL CLASSROOM), கற்றலில் கேள்வி மற்றும் மதிப்பீடு ஆகியன குறித்து விளக்கமாகப் பயிற்றுவிக்கப்பட்டன. பயிலரங்கில் இந்தியா மற்றும் மலேசியாவைச் சேர்ந்த ஆசிரியர்கள், மாணவர்கள், தமிழ் ஆர்வலர்கள் ஆர்வத்துடன் கலந்துக் கொண்டனர். இறுதியாகப் பயிலரங்கின் ஒருங்கிணைப்பாளரும் செவாலியர் டி.தாமஸ் எலிசபெத் மகளிர் கல்லூரியின் தமிழ்த்துறை உதவிப் பேராசிரியருமான முனைவர் ஜ. வள்ளி அவர்கள் பயிலரங்கை நிறைவு செய்தார்.
பயிலரங்கத் தலைப்பு: விரல் நுனியில் தகவல் தொழில்நுட்பம்
நாள்: 26/09/2020
நேரம்: இந்திய நேரப்படி பகல் 12.30 – 2.00 மணி வரை
சென்னை – பெரம்பூர், செவாலியர் டி. தாமஸ் எலிசபெத் மகளிர் கல்லூரியின் தமிழ்த்துறையும் மலேசியாவின் தென்செபராங் பிறை கூகுள் கல்வி குழுமமும் இணைந்து நடத்தும் ‘விரல் நுனியில் தகவல் தொழில்நுட்பம்’ என்ற தலைப்பிலான இணையவழி ஏழாம் நாள் பயிலரங்கம் 26/09/2020 சனிக்கிழமை பகல் 12.30 மணி முதல் 2 மணி வரை நடந்தேறியது.
பயிலரங்கிற்குச் செவாலியர் டி. தாமஸ் எலிசபெத் மகளிர் கல்லூரியின் தமிழ்த்துறை உதவிப் பேராசிரியரும், பயிலரங்கின் ஒருங்கிணைப்பாளருமான முனைவர் ஜ.வள்ளி அவர்கள் வரவேற்புரை வழங்கினார். பயிலரங்கத்தின் சிறப்புகள் குறித்தும் நெறிமுறைகள் பற்றியும் மலேசிய தென்செபராங் பிறை கூகுள் கல்விக் குழுமத்தின் தலைவர் திருமதி. பிரேமலதா செல்வராஜ் அவர்கள் எடுத்துரைத்தார். பயிலரங்கின் பயிற்றுநராக மலேசியாவைச் சேர்ந்த கூகுள் கல்வி குழுமத்தின் சான்றிதழ் பெற்ற பயிற்சியாளரான ஆசிரியர் திருமதி. உமாதேவி கிருஷ்ணன் அவர்கள் பங்கேற்றார். பயிலரங்கில் கூகிள் சைட் அறிமுகம், கூகிள் சைட் – ஐப் பயன்படுத்தி ஓர் அகப்பக்கத்தை எப்படி உருவாக்குதல், கூகுள் டிரைவின் பயன்பாடு போன்றவற்றை நிரல்நிறையாகத் தெள்ளத் தெளிவாகவும் விளக்கமாகவும் எடுத்துரைத்தார். புதிதாகக் கற்றுக் கொள்பவர்கள் தாங்களாகவே கூகுள் சைட்டை உருவாக்கிப் பயன்படுத்தும் வகையில் உரிய படங்களுடனும் செயல்முறை ஆவணங்களுடனும் பயிற்சி அளித்தார். மேலும் பங்கேற்பாளர்களின் ஐயங்களையும் தெளிவுபடுத்தினார். பயிலரங்கில் இந்தியா மற்றும் மலேசியாவைச் சேர்ந்த ஆசிரியர்கள், மாணவர்கள், தமிழ் ஆர்வலர்கள் ஆர்வத்துடன் கலந்துக் கொண்டனர். இறுதியாக மலேசிய தென்செபராங் பிறை கூகுள் கல்விக் குழுமத்தின் தலைவர் திருமதி. பிரேமலதா செல்வராஜ் அவர்கள் பயிலரங்கை நிறைவு செய்தார்.
பயிலரங்கத் தலைப்பு: விரல் நுனியில் தகவல் தொழில்நுட்பம்
நாள்: 03/10/2020
செவாலியர் டி. தாமஸ் எலிசபெத் மகளிர் கல்லூரியின் தமிழ்த்துறையும் மலேசியாவின் தென்செபராங் பிறை கூகுள் கல்வி குழுமமும் இணைந்து நடத்தும் ‘விரல் நுனியில் தகவல் தொழில்நுட்பம்’ என்ற தலைப்பிலான இணையவழி எட்டாம் நாள் இறுதிப் பயிலரங்கம் 03.10.2020 சனிக்கிழமை பகல் 12.30 மணி முதல் 2 மணி வரை நடந்தேறியது.
பயிலரங்கிற்குச் செவாலியர் டி. தாமஸ் எலிசபெத் மகளிர் கல்லூரியின் தமிழ்த்துறை உதவிப் பேராசிரியரும், பயிலரங்கின் ஒருங்கிணைப்பாளருமான முனைவர் ஜ.வள்ளி அவர்கள் வரவேற்புரை வழங்கினார். பயிலரங்கத்தின் சிறப்புகள் குறித்தும் நெறிமுறைகள் பற்றியும் மலேசிய தென்செபராங் பிறை கூகுள் கல்விக் குழுமத்தின் தலைவர் திருமதி. பிரேமலதா செல்வராஜ் அவர்கள் எடுத்துரைத்தார். எட்டு வாரங்களாகப் பயிலரங்கத்திற்கு கல்லூரிப் பேராசிரியர்கள், மாணாவர்கள், தமிழ் ஆர்வலர்கள் அளித்த பங்களிப்பிற்கு நன்றி தெரிவித்தார்.
பயிலரங்கின் பயிற்றுநராக மலேசியாவைச் சேர்ந்த ஆசிரியர் செம்மல் திரு . ரூபன் ஆறுமுகம் அவர்கள் பங்கேற்றார். பயிலரங்கில் கூகுள் வகுப்பறை ஓர் அறிமுகம், பயன்பாடு, கற்றல்& மாணவர்கள் பயன்படுத்தும் முறைமை போன்றவற்றைத் தெளிவாகவும் விளக்கமாகவும் எடுத்துரைத்தார்.
கூகுள் வகுப்பறையைப் பயன்படுத்துவதற்குக் கூகுள் மின்னஞ்சல் முகவரியை உருவாக்கி அதைப் பயன்படுத்தி மாணவர்களை வகுப்பறையில் எவ்வாறு ஒன்று சேர்க்க முடியும் என்பதையும், பல புதிய வகுப்பறைகளை ஆசிரியர்கள் எவ்வாறு உருவாக்குவது என்பதையும் தெளிவுப்படுத்தினார்.
வகுப்பறையில் வகுப்புக் குறியீட்டைப் பயன்படுத்தி மாணவர்கள் எவ்வாறு இணைய வேண்டும் என்பதைச் செய்முறை விளக்கங்களோடு சிறப்பு விருந்தினர் தெளிவாக எடுத்துரைத்தார். STREAM,CLASSWORK, PEOPLE,GRADE என் வகுப்பறையில் இருக்கும் நான்கு பிரிவுகளைப் பற்றி தெளிவுப்படுத்தினார். ஆசிரியர்கள், மாணவர்களுக்கு அனுப்ப வேண்டிய ஒப்படை, பாடப்பகுதிகள், வினாத்தாள்கள் வினாடி வினா போன்றவற்றை அனுப்பும் முறை குறித்தும் விளக்கியுரைக்கப்பட்டது.
கோவிட் 19 சூழலில் ஆசிரியர்கள், மாணவர்க அனைவராலும் அதிகமாகப் பயன்படுத்தும் நிலையில் கூகுள் வகுப்பறை உள்ளது என்பதைப் பயிற்றுநர் சுட்டிக் காட்டினார்.மாணவர்களால் அனுப்பப்படும் விடைத்தாள்கள், ஒப்படைப்புகள் போன்றவற்றை எவ்வாறு பார்த்து திருத்தம் செய்து மதிப்பெண் இட்டு அனுப்புவது என்பதையும் தெளிவுப்படுத்தினார். தொடர்ந்து எட்டு வாரங்களாக பன்னாட்டுப் பயிலரங்கமாக நடைபெற்ற இந்நிகழ்விற்கு முனைவர் ஜ. வள்ளி நன்றியுரை கூறி நிகழ்வை நிறைவு செய்தார்.
முன்னாள் பாரதப் பிரதமர் மறைந்த மாண்புமிகு ராஜீவ் காந்தி அவர்களின் பிறந்த நாள் ஆகஸ்ட் 20 அன்று கொண்டாடப்பட்டு வருகின்றது. நமது இந்திய நாட்டில் மத நல்லிணக்க நாளாகவும் இந்நாள் கடைபிடிக்கப்பட்டு வருகின்றது. அதனையொட்டி நம் கல்லூரியின் தமிழ்த் துறையும் அகத்தர உறுதி அமைப்புக் குழுவும் (IQAC) இணைந்து 20/8/2020 அன்று ஒன்று பரம்பொருள் நாம் அதன் மக்கள் என்னும் தலைப்பில் கட்டுரைப் போட்டி நடத்தின. அப்போட்டியில் நம் கல்லூரியைச் சேர்ந்த 32 மாணவிகள் கலந்து கொண்டனர்.
மதத்தின் பெயரால் வேறுபட்டு நிற்காமல் மக்கள் அனைவரும் ஒன்றே எனும் மனிதத்தை மாணவர்களுக்கு வலியுறுத்தும் நோக்கில் இப்போட்டி நடத்தப் பெற்றது. சக உயிர்களிடம் அன்புப் பாராட்டி வாழ்வதே ஒற்றுமையான வாழ்க்கைக்கு வழி வகுக்கும். இந்த உயரிய சிந்தனையை மாணவர்கள் உணர்ந்து தமது கட்டுரைகளை வழங்கி இப்போட்டியில் கலந்து கொண்டனர். அடுத்த கட்ட தலைமுறை ஏற்றத்தாழ்வின்றி வாழ்வதற்கும் மனித நேயத்துடன் உருவாகவும் இத்தகைய செயல்பாடுகளைத் தமிழ்த்துறை முன்னெடுக்கிறது.
இப்போட்டியில் கலந்து கொண்டு பரிசுப் பெற்ற மாணவியர் விவரம்
ஜெனிபர் கேத்ரின் - கணினி அறிவியல், இரண்டாமாண்டு
ஜி. யுவராணி - கணிதவியல், இரண்டாமாண்டு
ஆர். ரூபவாகினி - உளவியல், இரண்டாமாண்டு
நம் கல்லூரியின் தமிழ்த்துறை சார்பாக இணையவழிக் கருத்தரங்கம் 9/8/2020 அன்று “தமிழர் மரபில் இயற்கை மருத்துவப் பதிவுகள்” எனும் தலைப்பில் நடைபெற்றது. இக்கருத்தரங்கில் சிறப்பு விருந்தினராக முனைவர். மு. தேவராஜ், (உதவிப்பேராசிரியர், தமிழ்த்துறை, குருநானக் கல்லூரி) கலந்து கொண்டார்
தமிழரின் இயற்கை மருத்துவப் புரிதலை அடுத்த தலைமுறைக்குக் கொண்டு செல்லும் நோக்கில் இக்கருத்தரங்கம் நடத்தப்பட்டது. திணை சார்ந்த வாழ்வியல் முறையில் இயற்கையோடு தன்னைப் பொருத்திக் கொண்ட தமிழரின் மரபு பற்றி விரிவாக எடுத்துரைத்தார் சிறப்பு விருந்தினர். வரலாற்று ஆவணங்களாகத் திகழக்கூடிய ஓலைச்சுவடி, கல்வெட்டு, செப்பேடு ஆகியவற்றிலுள்ள மருத்துவப் பதிவுகள் விளக்கப்பட்டன. முதல் நூற்றாண்டு தொடங்கி இருபத்தோராம் நூற்றாண்டு வரையிலான இலக்கிய இலக்கணப் பதிவுகள் தொகுத்துரைக்கப்பட்டன.
மூலிகைச்செடி, மரம், வேர், ஆகியவற்றின் மருத்துவ குணங்களைத் தமிழர்கள் அறிந்திருந்தனர் எனவும் அவற்றைக் கையாளும் மருத்துவ முறைகளையும் உணர்ந்திருந்தனர் எனவும் விளக்கியுரைத்தார்.
உள்ளத்தையும் உடலையும் பேணுவதற்குத் தமிழரின் சித்த மருத்துவ மரபு பெரிதும் பயன்பட்டது. இதனூடாக ‘வரும் முன் காப்போம்’ மற்றும் ‘உணவே மருந்து’ என்ற நோயற்ற வாழ்வின் பண்பாட்டுக் கட்டமைப்பு தமிழ் மரபில் உருவாக்கப்பட்ட சூழலை எடுத்துக்காட்டினார் பேராசிரியர்.
இந்நிகழ்வில் பிற கல்லூரிகளைச் சேர்ந்த ஆசிரியர்களும் மற்றும் மாணவர்களும் கலந்து கொண்டனர். இந்நிகழ்விற்குக் கல்லூரி முதல்வர் (பொ) பேராசிரியர் இரா. மீனாட்சி அவர்கள் தலைமையேற்க துறைத்தலைவர் பேராசிரியர் க. பிரீதா வரவேற்புரை வழங்கினார். இறுதியாக, தமிழ்த்துறை பேராசிரியர் ஜ. வள்ளி நன்றியுரை நல்கினார்.