மொழித்துறை சார்பாக 4/3/2020 அன்று கல்லூரிக் கருத்தரங்க அறையில் மொழித்துறை நிறைவு விழா கொண்டாடப்பட்டது. இதில், தமிழ், இந்தி, பிரெஞ்சுத் துறை மாணவிகள் பங்கேற்றனர். இவ்விழாவிற்குக் கல்லூரி முதல்வர் முனைவர். ஹனீபா கோஷ் அவர்கள் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்றார். இலக்கிய அறிவைக் குறித்த புரிதலை மாணவிகளுக்கு ஏற்படுத்தும் விதமாக சிறப்புரையாற்றினார். தன்னுடைய 40 ஆண்டுகால ஆசிரியர் பணி குறித்த அனுபவத்தின் மூலம் தான் மாணவிகளின் அன்பைப் பெற்றதை நெகியழ்ச்சியுடன் பகிர்ந்து கொண்டார். 2019 – 20 கல்வியாண்டில் வெற்றிப் பெற்ற மாணவிகளுக்குப் பரிசுகள் வழங்கி வாழ்த்து கூறினார். மொழித்துறை பேராசிரியர்களும் மாணவிகளும் இந்நிகழ்வில் கலந்துக் கொண்டனர்.
மொழித்துறையின் நிறைவு விழா
முதல்வருடன் மொழித்துறை ஆசிரியர்கள்
இயல்
தமிழ்மொழி பரந்து விரிந்த நெடிய வரலாற்றை உடையது. அதற்குச் சான்றாகவே இம்மொழி முத்தமிழாகவே திகழ்கிறது. எழுத்தில் பதிவு செய்யப்படுகின்ற உயரிய சிந்தனைகள் மொழி வளத்தைப் பெருக்கின்றது. அத்தகைய வளத்தை நிரம்ப பெற்றிருக்கின்ற காரணத்தினாலேயே தமிழ் மொழி என்றென்றும் செம்மொழியாகப் போற்றப்பட்டுக் கொண்டு இருக்கின்றது. எனவே நம் கல்லூரியின் தமிழ்த்துறை தமிழுக்கு முத்தமிழ் விழா கொண்டாடி வருகின்றது.
முத்தமிழின் முதன்மை தமிழாம் இயற்றமிழுக்குச் சிறப்பு விருந்தினர் முனைவர் நா. பிரவீண் குமார், உதவிப்பேராசிரியர், தமிழ்த்துறை, குருநானக் கல்லூரி கலந்து கொண்டார். இந்நிகழ்விற்கு சி.டி.டி.இ கல்வி அறக்கட்டளையின் தாளளார் மற்றும் செயலர் திரு. இல. பழமலை (இ.ஆ.ப – ஓய்வு) அவர்கள் தலைமையேற்றார். கல்லூரி துணை முதல்வர் முனைவர் இரா. மீனாட்சி அவர்கள் வாழ்த்துரை வழங்கினார். ‘தமிழ்க்கவிதையியல்’ என்னும் தலைப்பில் இயற்றமிழுக்கான அமர்வு அமைந்திருந்தது.
கவிதை குறித்த தேடல், கவிதையைப் புரிந்து கொள்ளும் திறன், கவிதையின் அழகியல், கவிதையின் ஆளுமை, கவிதையின் பயன் எனத் தமிழ்க் கவிதையின் நெடிய பாரம்பரியத்தை எளிதில் மாணவிகளுக்குப் புரிய வைத்தார் சிறப்பு விருந்தினர். தனி மனிதனின் அடையாளமாக மொழி திகழ்வதை தமிழ்க் கவிதை வழி எடுத்துரைத்தார். உயரிய சிந்தனைகள் சமூக மாற்றத்திற்கான எழுச்சியை ஏற்படுத்துவதை சங்கப்புலவர்கள் முதலாக புதுக்கவிஞர்கள் ஈறாக உள்ள கவிஞர்களின் வழி எடுத்துரைத்தார். இவ்வாறு முதல் அமர்வு இனிதே நிறைவுற்றது.
இசை
தமிழ்த்துறையின் தமிழ்த்தென்றல் பேரவை சார்பில் நடைபெற்ற முத்தமிழ் விழாவில் இசைத்தமிழுக்குச் சிறப்பு விருந்தினராகப் புதுச்சேரி, தாகூர் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் பேராசிரியர், முனைவர். ஜி. ஞானகுரு அவர்கள் கலந்து கொண்டு சிறப்புச் செய்தார். சிறுவயது முதலே இசையின் மீது அதிக ஆர்வம் உடையவராய் இருந்தார். புல்லாங்குழல் இசையை இசைக்கக் கற்றுக் கொண்டார். திரைப்பட இயக்குநர் திரு. ராம் அவர்களோடு இணைந்து பல நிகழ்ச்சிகளை நடத்தி வருகின்றார்.
விழாவில் இசைத்தமிழின் சிறப்பினைக் காலவரிசைப்படி எடுத்துக்கூறினார். தமிழிசையில் திரைஇசை, கிராமிய இசை மற்றும் பிற இசைகளின் பங்களிப்பையும் சிறப்பினையும் எடுத்துக்கூறி இசைத்தமிழ் குறித்த தெளிவான அறிவினை மாணவியருக்கு வழங்கினார். மேலும் குழலிசையை வாசித்துக் காட்டி மாணவிகளுக்கு இசைத்தமிழின் மீது ஆர்வத்தை ஏற்படுத்தினார். இசையோடு இயைந்த வாழ்க்கையை வாழ்ந்தவன் தமிழன் என்பதை தமது பேச்சாற்றலின் மூலம் வெளிப்படுத்தி அரங்கின் முழுக்கவனத்தையும் தன்பால் ஈர்த்தார் முனைவர் ஜி. ஞானகுரு அவர்கள்.
நாடகம் :
தமிழ்த் துறை நடத்திய முத்தமிழ் விழாவின் நிறைவாக நாடக விழா நடைபெற்றது. இவ்விழாவில் நாடகச்செயல்பாட்டாளர் திரு.கெ.எஸ். கருணாபிரசாத் அவர்கள் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டார். கூத்துப்பட்டறை என்ற கலைக்கூடத்தில் நடிப்புப் பயிற்சி பெற்ற இவர் மூன்றாம் அரங்கு என்ற நாடகக் குழுவின் இயக்குநராகவும் நிறுவனராகவும் செயல்பட்டு வருகிறார்.
காலவரிசை அடிப்படையில் நாடத்தின் வரலாற்றை மாணவிகளுக்கு எடுத்துக் கூறினார். அதோடு அவர் நடித்த நாடகத்தினூடாக நாடகம் நடிப்பதற்கான உத்திமுறைகளை மாணவிகளுக்குக் காட்சிப்படுத்தினார். தனி மனித உணர்வுகளை நடிப்பு நுட்பத்தின் மூலம் வெளிக் கொணர்ந்தார். இவரோடு வருகை புரிந்த நாடகவியலாளர் இரமேஷ் பாபு என்பவரோடு இணைந்து இவர் மாணவிகளுக்கு ஒரு நாடகத்தை நடித்துக் காட்டி மாணவிகளின் கவனத்தையும் கருத்தையும் கவர்ந்தார். மேலும் பதினைந்திற்கும் மேற்பட்ட நாடகங்களை இயக்கிய இவர் நம் மாணவிகளுக்கு மேடையிலேயே நாடகப் பயிற்சி கொடுத்துச் சிறு நாடகத்தை நடிக்க வைத்தது நாடகத் தமிழுக்கான முத்தாய்ப்பாய் அமைந்தது..
முத்தமிழ்விழாவினைக் கல்லூரி தாளாளர் மற்றும் செயலர் இல. பழமலை( இ.ஆ.ப) ஓய்வு அவர்கள் குத்துவிளக்கேற்றித் தொடங்கி வைத்தார்.
முத்தமிழ் விழாவில் இசை- சிறப்பு விருந்தினர் முனைவர் ஜி.ஞானகுரு குத்து விளக்கேற்றுதல்
தமிழ்த்துறையின் முத்தமிழ் விழா
26.02.2020 அன்று ‘உன்னத் பாரத் அபியான்’ எனும் மத்திய அரசின் நலத் திட்டத்தின் கீழாகத் தமிழ்த்துறை சார்பில் தண்டலம் எனும் கிராமத்தில் சுகாதாராம் மற்றும் ஆரோக்கியம் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தப்பட்டது. அங்குள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளிக்குச் சென்று சுகாதாரம் மற்றும் ஆரோக்கியம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் விதமாகச் மாணவர்களுக்கு சுகாதாரத்தின் முக்கியத்துவம் அறிவுறுத்தப்பட்டது. மேலும் எளிதில் மாணவர்கள் புரிந்து கொள்ளும் விதமாக வீதி நாடகம், பேரணி நிகழ்த்தப்பட்டன.
உன்னத பாரத் அபியான திட்ட விழிப்புணர்வு நிகழ்வில் ‘வீதி நாடகம்’
சுற்றுச்சூழல் விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டி பதாகைகள் ஏந்தி சென்ற மாணவிகள்
சென்னை பெரம்பூரிலுள்ள செவாலியர் டி. தாமஸ் எலிசபெத் மகளிர் கல்லூரி உலகத் தாய்மொழி தினத்தை 21.02. 2020 அன்று கொண்டாடியது. தமிழ்த்துறை, உலகின் மூத்த மொழியாம் தமிழ்மொழியைச் சிறப்பிக்கும் பொருட்டு இந்நிகழ்வை நடத்தியது. ‘தமிழ் வாழ்க’ என்னும் சொல் அமைப்பில் மாணவிகள் அணிவகுத்து நின்றனர். தமிழ் மொழியின் சிறப்பை உணர்த்தும் வகையில் பதாகைகளை ஏந்தியபடி மாணவிகள் மொழிப்பற்றை வெளிப்படுத்தினர். தமிழ் மொழிக் குறித்த கவிதைகளை மாணவிகள் வாசித்தனர். தாய்மொழிப் பற்றை ஊட்டும் வகையில் தமிழ்மொழி பற்றிய பாடலைப் பாடி மகிழ்ந்தனர். இந்நிகழ்விற்குக் கல்லூரி முதல்வர் முனைவர்.திருமதி. ஹனீபா கோஃஷ் அவர்கள் தலைமையேற்று சிறப்பு செய்தார். தாய் மொழி உணர்வுடன் மாணவிகள் திகழ வேண்டும் என அறிவுறுத்தினார்.
இந்நிகழ்வை முன்னிட்டு தமிழ்த்துறை 19.02.2020 அன்று செம்மொழித் தமிழ் என்னும் தலைப்பில் கவியரங்கமும் நடத்தியது. அதில் மாணவிகள் தமிழ் மொழியின் சிறப்பை வெளிப்படுத்தும் வகையில் கவிதைகளை எழுதிப் படித்தனர். இதனூடாக மாணவிகளின் மொழி ஆளுமை அறியப்பட்டது.
உலகத்தாய்மொழிதினம்
உலகத்தாய்மொழி தினக் கொண்டாட்டத்தில் மாணவிகளின் பங்கு
தமிழ்த்துறை 27/9/2019 அன்று கருத்தரங்கை நடத்தியது. புலம்பெயர் வாழ் தமிழர்களின் உணர்வு நிலைகளை மாணவிகள் அறிந்து கொள்ளும் நோக்கில் இந்நிகழ்வு நடத்தபெற்றது. கல்லூரியின் துணை முதல்வர் முனைவர். இரா. மீனாட்சி அவர்கள் விழாவிற்குத் தலைமேற்றார். முனைவர் சந்திரிகா சுப்ரமணியன் (அரசு தலைமை வழக்கறிஞர், நியூ சௌத் வேல்ஸ், உச்ச நீதிமன்றம் மற்றும் ஆஸ்திரேலியா உயர்நீதி மன்றம், ஊடக ஆலோசகர், நெறியாளர் மற்றும் எழுத்தாளர்) அவர்கள் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்றார். புலம்பெயர் பெண்களும் போர் இலக்கியங்களும் எனும் தலைப்பில் இக்கருத்தரங்கம் அமைந்திருந்தது குறிப்பிடத்தக்கது. தமிழகத்தைப் பூர்வீகமாகக் கொண்ட இப்பேராசிரியர் ஆஸ்திரேலியாவில் புலம்பெயர்ந்தவர். எனவே அதற்கான வாழ்வியல் கருத்தாக்கத்தை முன் வைக்கும் வகையில் இவர்தம் உரை அமைந்திருந்தது.
புலம்பெயர் இலக்கியங்கள் வெளிக்கொணரும் வலி நிரம்பிய போராட்டம் ஒரு சமூக உருவாக்கத்தின் மனசாட்சியை நிலைப்படுத்தும் வெளிப்பாடாகும். அந்த வகையில் புலம்பெயர் இலக்கியங்களின் போக்குகள் என்பது தனிமனித ஏக்கங்களின் தவிப்பாகவே அமைகிறது. தமிழிலக்கிய மரபில் போர் இலக்கியங்களின் தோற்றுவாய் குறித்தும் புலம் பெயர்வதற்கான காரணங்கள் பற்றியும் எடுத்துரைத்தார் சிறப்பு விருந்தினர். குடியுரிமையை மீட்டெடுக்கும் முயற்சியாக எழுத்துப்பதிவாக விளங்கும் போர் இலக்கியங்களின் தாகத்தைத் தனது பேச்சில் முன் வைத்தார் பேராசிரியர். குறிப்பாக புலம்பெயர் பெண்கள் சந்திக்கும் சமூகக் கொடுமைகளையும் வாழ்வியல் சிக்கல்களையும் அடையாளப்படுத்தினார்.
இலக்கியங்களின் மற்றொரு பரிமாணத்தை இந்நிகழ்வு எடுத்துக் காட்டியது. தமிழ்த் துறைத் தலைவர் முனைவர். க. பிரீதா வரவேற்புரை வழங்க தமிழ்த்துறைப் பேராசிரியர் முனைவர். ஜ. வள்ளி நன்றியுரை நல்கினார்.
புலம்பெயர் பெண்களும் போர் இலக்கியங்களும், கருத்தரங்கில் சிறப்பு விருந்தினர் முனைவர் சந்திரிகா சுப்ரமணியன்
முனைவர் சந்திரிகா சுப்ரமணியன், ஆஸ்திரேலியா அவர்களின் சிறப்புரை
சி.டி.டி.இ மகளிர் கல்லூரியின் தமிழ்த்துறை, தமிழ்த்தென்றல் பேரவை எனும் அமைப்பின் மூலம் மாணவியர் திறன்வளர் செயல்பாடுகளை மேற்கொண்டு வருகிறது. அவ்வகையில் 2019-2020 ஆம் கல்வியாண்டிற்கான தமிழ்த்தென்றல் பேரவைத்தலைவராக கல்லூரி முதல்வர் முனைவர் திருமதி. ஹனீபாகோஷ் அவர்களும், துணைத்தலைவராகத் தமிழ்த்துறை உதவிப்பேராசிரியர் முனைவர் ஜ.வள்ளி அவர்களும், மாணவர் செயலாளராக ஏ.லேகாஸ்ரீ, இரண்டாமாண்டு கணிதவியல், இணைச்செயலாளராக த.தரணி, முதலாமாண்டு-வணிக நிர்வாகவியல் ஆகியோரும் பொறுப்பேற்றனர்.
பேரவை சார்பில் மாணவியர் தம் திறனை வெளிப்படுத்துவதற்கு ஏதுவாக, திறனறிதல் போட்டிகள் நடத்தப்பட்டன. கவிதை, இசை, தமிழ்முழக்கம் போன்ற தனிநபர் போட்டிகளும் திருக்குறள் ஒப்பித்தல், வினாடிவினா போன்ற குழுப்போட்டிகளும் அதற்கான விதிகளும் மாணவியர்க்கு முறையே அறிவிக்கப்பட்டு போட்டிகள் 18.9.2019 முதல் 24.9.2019 வரை நடத்தப்பட்டன. எண்ணற்ற மாணவியர் போட்டிகளில் ஆர்வத்துடன் பங்கேற்றனர். குறிப்பிட்ட நாட்களில் போட்டிகள் நடத்தப்பட்டு வெற்றியாளர் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.
தமிழ் மாதங்களின் பண்பாட்டுச் செய்திகளை மாணவிகள் உணரும் வகையில் தமிழ்த்துறையின் தமிழ்த் தென்றல் பேரவை சார்பாக 9/8/2019 அன்று ‘ஆடித் திருவிழா’ நடைபெற்றது. தமிழ் மரபில் ஆடி மாதம் என்பது மிகக் குறிப்பிடத்தக்க மாதமாகும். பருவ நிலை மாற்றத்திற்கு ஏற்ப தங்களது வாழ்க்கையை அமைத்துக் கொள்ளும் தமிழர்களின் நுண்மாண் புலமையை ஆடி மாத கொண்டாட்டங்கள் மூலம் அறியலாம்.
ஆடி மாதம் என்பதே அம்மன் வழிப்பாட்டுகுரிய மாதமாகும். ஆடி அமாவாசை, ஆடிக் கிருத்திகை, ஆடிப்பூரம், ஆடி பதினெட்டாம் பெருக்கு, ஆடி வெள்ளி என இம்மாதம் முழுக்கத் தமிழ்ப் பண்பாட்டின் அடையாளங்களை விளக்குவதற்கான விழாக்கள் ஏராளம். இந்த விழாக்களில் பயன்படுத்தப்படும் கம்பங்கூழ், முருங்கைக் கீரை, கொழுக்கட்டை, வேப்ப இலை, பச்சரிசி மாவு உருண்டை என இவை அனைத்தும் தமிழர்களின் பாரம்பரிய உணவு வகைகளாகும்.
மாணவிகள் இவையனைத்தையும் தயார் செய்து வந்து அம்மன் வழிப்பாட்டுப் பாடல்கள் பாடி ஆடிமாத விழாவைக் கொண்டாடினர்.
மாணவிகளுக்கு’அம்மன் வழிப்பாட்டுப் பாடல்கள்’ எனும் தலைப்பில் பாட்டுப் போட்டியும் ‘ஆடிமாதச் சிறப்புகள்’ எனும் தலைப்பில் பேச்சுப் போட்டியும் மேற்கண்ட தலைப்பிலேயே படத் தொகுப்புப் போட்டியும் நடத்தப்பட்டன.
இதனூடாக ஆடிமாதச் சடங்குகளின் நோக்கத்தினையும் பண்பாட்டு முறைகளையும் மாணவிகளால் உணர முடிந்தது.
தமிழ்த்துறையின் ஆடித்திருவிழாக் கொண்டாட்டம்
கல்லூரி முதல்வருக்கு மாணவிகள் வளையல் வழங்கினர்.
ஆடித்திருவிழாவில் மாணவிகளின் பங்கு
செவாலியர் டி . தாமஸ் எலிசபெத் மகளிர் கல்லூரியில் 31.7.2019 அன்று அரசு பொதுத்தேர்வு எழுதும் பத்தாம் வகுப்பு மற்றும் பன்னிரண்டாம் வகுப்பிற்கு இலக்கணப் பயிலரங்கம் நடைபெற்றது. இப்பயிலரங்கில் தமிழ்த்துறையின் தலைவர்.முனைவர் க.பிரிதா அவர்கள் வரவேற்புரை வழங்கினார். கல்லூரியின் முதல்வர் .முனைவர் ஹனீபாகோஷ் அவர்கள் தலைமையுரையாற்றினார். ஆங்கிலத்துறையின் பேராசியர் முனைவர்.ஸ்ரீ தேவி அவர்கள் வாழ்த்துரை வழங்கினார் .
முகமது சதக் கல்வியியல் கல்லூரியின் பேராசிரியர் ம.பாலகுருசாமி அவர்கள் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு இலக்கணப் பயிற்சி வகுப்புக்களை இரண்டு அமர்வுகளிலும் தொடர்ந்தார். இப்பயிலரங்கில் பல்வேறு பள்ளிகளில் இருந்து 600 க்கும் மேற்பட்ட மாணவர்கள் பங்கேற்றனர். மொழியைக் கட்டமைக்கின்ற இலக்கண அமைப்பு முறை , மொழியினுடைய அடையாளமாக விளங்குவதை எடுத்துக்காட்டினார். பத்தாம் வகுப்பு மற்றும் பன்னிரெண்டாம் வகுப்பு பாடத்திட்டத்தின் அடிப்படையில் நுட்பமாகவும் ஆழமாகவும் தமிழ் இலக்கணப் பயிற்சி முறைகளை அவர் உரைத்த போது மாணவர்கள் ஒருமுகமாகக் கவனித்தனர்.
தேர்வுக்கு ஏற்ற முறையில் மாணவர்களுக்கு இலக்கணத்தை எளிமையாக்கி புரிய வைத்ததோடு இலக்கணத்தின் தேவையையும் அவர் அறிவுறுத்தினார். தமிழ்த்துறையின் உதவிப்பேராசிரியர் முனைவர்.தோ. எழிலரசி அவர்கள் நன்றியுரை வழங்க இப்பயிலரங்கம் இனிதே நிறையுற்றது.
தமிழ் இலக்கணப் பயிலரங்கம் சிறப்பு விருந்தினர் பேராசிரியர் ம.பாலகுருசாமிக்கு சிறப்புச்செய்தல்
பேராசிரியர் ம. பாலகுருசாமி மாணவர்களுக்கு இலக்கணப் பயிற்சி வழங்குதல்