பன்னெடுங் காலத்திற்கு முன்பே தமிழகத்தின் ஆற்றோரங்களில் திராவிடர் குடியேறி ஆறுகளுக்குக் கரைகள் கண்டு காட்டை அழித்து நாடாக்கிக் குளங்கள் வெட்டி ஆறுகளிலிருந்து கால்வாய்கள் அமைத்து அவற்றின் மூலம் ஆற்று நீரைக் குளங்களில் நிரப்பி நிலங்களை வெட்டிக் கொத்தி சமப்படுத்தி வரப்புகள் அமைத்து வயல்களாக்கி குளங்களிலிருந்து வாய்க்கால்கள் மூலம் வயல்களுக்கு நீரைப் பாய்ச்சி உழுது பக்குவப்படுத்தி அவற்றில் நெல் நாற்றுக்களை நட்டுப் பயிராக்கியும், கரும்பு, வாழை, மஞ்சள், பருத்தி முதலிய வாழ்க்கைக்கு இன்றியமையாத பொருள்களை விளைவித்தும், ஊர்கள், நகரங்கள் அமைத்தும், அரசுகளைத் தோற்றுவித்தனர் என் முன்னர் பேசப்பட்டுள்ளது நினைவிற்குரியது. இந்த சேர, சோழ, பாண்டிய அரசுகளைத் தோற்றுவித்த அந்தப் பெருங்குடியினர் இன்றையத் தமிழகத்தில் உள்ள பல்வேறு மக்கள் பிரிவினரில் யாராய் இருப்பர்? இன்று தமிழைத் தாய் மொழியாகக் கொண்டு வாழும் சில குறிப்பிட்ட வகுப்பினர் தங்கள் முன்னோர்தான் தமிழகத்தில் அரசுகளை முதன் முதல் தோற்றுவித்தவர் என எழுதியும், பேசியும் வருகின்றனர். இன்று வேளாளர் வெள்ளாளர் என்று கூறி வருபவர் அப்பெயர்கள் வேள் - ஆளர் - விருப்பத்தை ஆள்பவர் - பூமியை ஆள்பவர் வெள்ளம் - ஆளர் - வெள்ளத்தை அடக்கி ஆள்பவர் என்ற பொருள்களை உணர்த்துவதைக் கொண்டு, தங்கள் முன்னோர்தான் தமிழகத்தில் முதன் முதலில் குடியேறி நாகரீகத்தைத் தோற்றுவித்த திராவிடர்-பழந்தமிழர் என்று உரிமை பாராட்டி வருகின்றனர். இவர்கள் இக்காலத்தில் சமூக நிலையில் பார்ப்பனருக்கு அடுத்த இடம் வகித்து வருவதைத் தங்கள் கூற்றுக்குச் சான்றாகக் காட்டுவர். இவருக்கு அடுத்தப்படியாகத் தென் மாவட்டங்களில் காணப்படும் கள்ளர், மறவர், அகம்படியர் என்ற மூன்று வகுப்புகளுள் ஒரு சாரார் தேவர் என்ற குலப்பட்டத்தைத் தரித்து வருவதைக் கொண்டும், மறவருள் சிலர் அண்மைக் காலம் வரை சமீன்தார்களாக இருந்ததையும் சான்று காட்டி, தங்கள் முன்னோர்தான் பண்டையத் தமிழ் அரசுகளைத் தோற்றுவித்தவர் என்பர். இவர்களில் குறிப்பாக இராமநாதபுரம், மதுரை, திருநெல்வேலி மாவட்டங்களில் காணப்படும் மறவரின் தலைவர்கள் பாண்டியன் என்ற பட்டம் தரித்து வருவதையும், தஞ்சை மாவட்டத்தில் காணப்படும் கள்ளர் தமிழ்
அரசர்களோடு குறிப்பாகச் சோழ அரசரோடு தொடர்புடைய பல விருதுப் பட்டங்களைத் தாங்கி வருவதைக் கொண்டு தஞ்சை மாவட்ட சமீன்தார்களும், புதுக்கோட்டைத் தொண்டைமான் தங்கள் இனத்தவர் என்றும் அதனால் மறவர் பாண்டியர் என்றும், கள்ளர் சோழர் என்றும் பேசியும், எழுதியும் வருவது கண்கூடு ஆனால் உண்மையில் இவர்கள் அப்படி இல்லை .
இன்று நெல்லை, இராமநாதபுரம் மாவட்டங்களில் வாழும் சாணார் - நாடார் இன்று அடைந்திருக்கும் அரசியல், கல்வி, பொருளாதார முன்னேற்றத்தைக் கருத்திற்கொண்டு தங்கள் முன்னோர்தான் பாண்டிய நாட்டை ஏற்கனவே ஆட்சி செய்தனர் என உரிமை பாராட்டி வருகின்றனர். இவருள் பலர் பாண்டியன் என்ற பட்டத்தையும் பூண்டு வருகின்றனர். இவர்கள் ஒருபுறம் இருக்க, நெசவுத் தொழிலில் ஈடுபட்டுவரும் கைக்கோளர், செங்குந்தர் என்பவர் தங்கள் முன்னோர் தமிழ்வேந்தரின் கைக்கோள் படை, செங்குந்தப்படை வீரர்களாகப் பணிபுரிந்தனர் என்று கூறிப் பெருமிதம் கொள்கின்றனர். கொடிக்கால் வேலை, நெசவுத் தொழில் இவற்றில் ஈடுபடுபவரும் பிள்ளை , செட்டியார், ' முதலியார், மூப்பன் இலை வாணியன் என்ற குலப்பட்டங்களைத் தரித்து வரும் சேனைத்தலைவன் சேனைக்குடையான் வகுப்பார் தங்களின் முன்னோர்தான் தமிழ் வேந்தர் படைகளின் சேனைத் தலைவர்களாகப் பணியாற்றி தமிழகத்திற்குப் பெருமை தேடித் தந்தவர் என்று பெருமிதம் கொள்வர். இவற்றின் உண்மை அறிய மூவேந்தரா மரபு என்பது பற்றி வெளிவந்துள்ள
கருத்துக்களைக் கீழே காண்போம்..
1) V. கனகசபை பிள்ளை கூறுவதாவது : 'தமிழ் வேந்தர் மற்றுமுள்ள குறுநில மன்னர் வெள்ளாள மரபினர் ஆவர்' (V. கனகசபை பிள்ளை
பளை. 1800 ஆண்டுகளுக்கு முன)
2) மறைமலை அடிகள் கூறுவதாவது : கரிகாற் சோழன் நாங்கூர்வேள் என்னும் வேளாளனிடத்தும், கரிகாற்சோழன் தந்தையாகிய இளஞ்சேட் சென்னி என்னும் மன்னன் அழுந்தூர்வேள் என்னும் வேளாளனிடமிருந்தும் மகட் கொடை கொண்டதாலும், பண்டை நாளிலிருந்து சிறந்த சோழ அரசர்களும் வேளாள வகுப்பினரேயாதல் நன்கு தெளியப்படும், (மறைமலையடிகள். வேளாளர் நாகரீகம். பக்கம் 11)
3) ந.சி.கந்தையாபிள்ளை கூறுவதாவது: சேர, சோழ பாண்டிய அரசர், வேளாளர் மரபில் தோன்றியவர்களே (ந.சி. கந்தையாபிள்ளை . திராவிட இந்தியா. பக்கம் 69)
4) சாமி சிதம்பரனார் கூறுவதாவது: மருத நிலத்தின் தெய்வம் வேந்தன் என்று தொல்காப்பியம் கூறுகின்றது. இதனால் தமிழகத்தில் மருத நிலத்தில் அரசன் இருந்தான் என அறியலாம். பயிர்களைச் சேதமில்லாமல் காக்கத் தோன்றிய வீரர் பரம்பரையினரே பிற்காலத்தில் அரசராயினர்; வேந்தர்களாயினர் (சாமி சிதம்பரனார். பழந்தமிழர் வாழ்வும் வளர்ச்சியும்)
5) பர்னெட் கூறுவதாவது :- தமிழகத்தின் அதிபர்கள் தமிழர் என அறியப்படும் படையெடுத்து வந்த புரோட்டோ திராவிடரின் வழித்தோன்றல்கள் ஆவர். இவரும் இவரது ஆளுமைக்குட்பட்ட குழுவினரும் சேர, சோழ, பாண்டிய அரசுகளைத் தோற்றுவித்தனர். இவர் உழவுத் தொழிலில் ஈடுபட்டிருந்த வெள்ளாள மரபினரே ஆம். பாண்டியர் தம்மை மாறன் வழிவந்தவர் என்பர், அவர் வழிவந்தோரில் ஒரு முக்கிய பிரிவினர் கன்னியாகுமரிக்கு அருகில் உள்ள பொதிய மலையில் மோகூரைத் தலைநகராகக் கொண்டு பழையன் மாறன் என்ற பட்டத்துடன் வெகுகாலம் ஆண்டு வந்தனர். சோழர் திரையர் மரபு - அதாவது கடல் மார்க்கமாய் வந்தவர் ஆவர். கரிகாலன் காலத்தில் இன்னொரு முக்கிய அரச மரபினர் காஞ்சீபுரத்தில் ஆண்டு வந்தனர். சேரர் தம்மை வானவர் என்பர்.
L.D. Barnet says : 'The Overlords of Tamilagam were the descendants of the proto Dravidian invaders, the Tamils in the strict sense of the term. They with the races subject to them formed the three kingdoms of the Pandiyas, cholas and cheras where the ruling elements were the land tilling class or Vellalas, at the head of whom were the kings. The Pandiya kings claimed descent from a tribe styled Maran which however had for many years another important representative in the prince bearing the title Palayan Maran (the ancient Marans) whose capital was Mogur near Podiga Hills not far from cape commarin. The chola kings were alleged to belong to the tribe of Thirayar or men of the sea. Another main dynasty was reigning at conjeevaram in the time of Karikala cholan, The chera kings in their turn were said to be of Vanavar tribe (S. Thaninayagain, The Tamil culture and Civilization. Page 129)
6) J.H. நெல்சன் கூறுவதாவது :- “இந்துக்களின் சில குறிப்புகளிலிருந்து பாண்டியர் அயோத்தியிலிருந்து வந்தவர் எனத் தெரிகிறது. ஆனால் இதைச் செவிவழிச் செய்தியாகக் கொள்வதற்கில்லை. பாண்டியர் திங்கள் மரபைச் சேர்ந்த சத்திரியர் எனப் பொதுவாக நம்பப்படுகிறது. அதனால் இவர் வெள்ளாளர் அல்லது வேளாளரோ அல்ல” (J.H. Nelson. Madura Manual. Page 44).
7) மெக்கன்சி கைப்பிரதிகளில் கண்டிருப்பதாவது : “வடதேசத்திலுள்ள பாண்டியனாகிய வெள்ளாளனிந்த இராமேசுர யாத்திரைக்குப் புறப்பட்டு வந்தான். இப்படியான அரசன் பாண்டியன் பெயர் மதுரநாயகப்பாண்டியன். அவன் முதலுண்டு பண்ணின பட்டணத்துக்குத் தன் பேரைத் தானே வைத்து மதுராபுரியென்றும், மதுரை நகரென்றும் பேரிட்டு பின்னுமனேக் பட்டணங்களை உண்டு பண்ணினான். சோழ அரசை ஏற்படுத்தியவன் தேய்மான் நள்ளியும் ஒரு வெள்ளாளன்
எனப்பட்டான்” (William Mackenzie Collections. Tamil Local History No. 4. William Taylor Vol III G.Oppert. The original inhabitants of India. pages 102 & 103.)
8) P.T. சீனிவாச அய்யங்கார் கூறுவதாவது : சோழர் காவிரிப் பள்ளத்தாக்கில் வேளாண்மைத் தொழிலில் ஈடுபட்டு வந்த வேளாளர். சேரர் குறிஞ்சி நிலவாழ் குறவர், பாண்டியர் நெய்தல் நில வாழ் பரதவர்
ஆவர்.
P.T. Srinivasa Iyangar says : 'The Cholas were agricultural tribes (Vellalas) who lived in the Valley of Kaveri and had the athi. The Cheras are Koravas of the Kurinji region. The Pandyas were the coast people - Paradavar' (P.T. Srinivasa Iyangar. History of the Tamils fron the earliest times to 600 AD. Page 139)
9) V.R. இராமச்சந்திரதீட்சதர் கூறுவதாவது : தமிழ் அரசுகள் முல்லை நிலத்தில் வாழ்ந்த மக்கள் குழுவிலிருந்து தோன்றியவை என நன்கு புலப்படுகின்றது. மன்னர் தரித்திருந்த பட்டங்களுள் கோ அல்லது கோன் என்பதுவும் ஒன்று. இப்பட்டத்தை ஆயரும் பூண்டிருந்தனர். ஆயருக்குக் கால்நடைகள்தான் உடைமையாய் இருந்தன. அதைத்தான் அவர்கள் தங்களின் வழி வந்தோருக்குப் பகிர்ந்தளித்தனர். பண்டைக் காலத்தில் மக்களுக்கு உடைமையாய் இருந்தவற்றில் கால் நடைகளும் ஒன்று என்பது நாம் அறிந்ததே. ஆதனால் கோன் என்பது கால் நடைகளை உடைமையாகக் கொண்டிருந்த தலைவனைச் சுட்டும். ஆயர் மரபிலிருந்து பாண்டியர் -மரபு தோன்றியது என்பது
"வாடாச்சீர்த் தென்னவன்
தொல் இசை நட்ட குடியோடு தோன்றிய
நல்லினத்தாயா” (கலி 104; 4-6)
"அரைசுபடக் கடந்து அட்டு ஆற்றின் தந்த -
....
வீவு இல் குடிப்பின் இருங்குடி ஆயரும்” (கலி 105 ; 1-7)
என்ற மேற்கோளிலிருந்து அறியப்படுகிறது. இதே நிலைதான் மருத நிலத்தில் அரசன் உருவானதற்கு வேளாண்மைத் தொழில் அடிப்படையாய் அமைந்து, மக்களின் உயிர்நாடியாகவும் மட்டுமின்றி, அது சமூக மேம்பாட்டிற்கு இன்றியமையாததாகவும் இருந்து வந்தது.
(VR. Rainachandra Ditchadar. Studies of the Tamil literature and History: Pages 178 & 179.)
10) A.C. பானல் கூறுவதாவது; பாண்டியரும் சோழரும் இன்று கீழ் சாதியாகக் கருதப்படும் கள்ளர் அல்லது திருடர் மரபைச் சேர்ந்தவர் ஆவர். [The Cholas and Pandyas were merely Kallar or robber a low caste at the Present time.] [A.C. Burnel, Elements of South Indian Paleography. Page 36]
11) ந.மு.வெங்கடசாமி நாட்டார் கூறுவதாவது : அகநானூற்றில் கள்வர் பெருமகன் தென்னவன்' என மதுரைக்கணக்காயனார் எனும் புலவர் ஒரு பாண்டியனைப் பற்றிக் குறித்துள்ளார். இவற்றால் சங்க காலடத்தில் கள்வர் குலத்தவர் அரசராயிருந்தனர் என்று தெரிகிறது. விசயாலயன் எனும் சோழ அரசன் தஞ்சையைப் பிடித்து சோழ ஆட்சியை நிலைநிறுத்துவதற்கு முன் முத்தரையர் ஆண்டனர். முத்தரையர் கள்ளர். முத்திரியர் வேறு. செந்தலைக் கல்வெட்டில் தஞ்சைக்கோன் கள்வர் கள்வன் பெரும்பிடுகு முத்தரையன்' என்று கண்டிருக்கிறது. வல்லத்தரசு, தஞ்சைராயர், செம்பிய முத்தரையர் என்னும் பட்டமுள்ள கள்ளர் குலத்தவர் தஞ்சையைச் சூழ்ந்த இடங்களில் இருக்கின்றனர். கி.பி. 7-8 ஆம் நூற்றாண்டுகளில் பலம் பெற்ற கள்வர் மரபினர் குறுநில
மன்னராயிருந்தனர் என்று அகநானூற்றில் காணப்படும் 'கோமான் புல்லி', கள்வர் கோமான் தென்னவன்' என்னும் மேற்கோள்களால் அறியலாம். பானலும், வெங்கிடசாமிராவும் சோழர் கள்ளர், பாண்டியர் மறவர் என்று கூறுவர். கனகசபை பிள்ளை சேர, சோழ, பாண்டியர் வெள்ளாள் மரபினர் என்று கூறுவது தவறு. (ந. மு. வெங்கடசாமி நாட்டார். கள்ளர் சரித்திரம். பக். 17]. இந்திரன் அகலிகை பால் விருப்பம் கொண்டதையறிந்த இந்திராணி தன் சாயலாய் அகலிகை போலும் அழகுடைய மோகனாங்கி என்பவளைப் படைத்திட, இந்திரன் அவளைச் சேர்ந்து கள்ளர், மறவர், அகம்படியர் என்னும் பூவிந்திரர் மூவரைப் பெற்றாளென்றும், அவர்கள் தமிழ்நாடு மூன்றுக்கும் அரசராயினார் என்றும் அப்புராணங்கள் (பூவிந்திரபுராணம், கள்ள கேசரி புராணம்) கூறும். இவையும் இந்திரகுலம் என்னும் பெயர் வழக்கிலிருந்து தோன்றியவை என்பது கூற வேண்டியதில்லை. இவைகளிலிருந்து கள்ளர், மறவர், அகம்படியர் என்னும் மூன்று வகுப்பினரும் நெருங்கிய சம்பந்தமுடையவராய் இந்திர குலத்தினரென வழங்கப்பெற்று வந்திருக்கின்றனர் என்ற அளவு உண்மையெனக் கொள்ளலாம்.
இனி ஏறக்குறைய ஆயிரத்தெண்னூறு ஆண்டுகளுக்கு முன்பே இந்திரகுலம் என்னும் வழக்குண்மை வெளியாகின்றது. சாவக நாட்டிலே நாகபுரத்தில் இருந்து அரசு புரிந்த பூமி சந்திரன், புண்ணியராசன் என்னும் நாக அரசர்களை இந்திர குலத்தவர் என மணிமேகலை கூறுகின்றது. சூரிய சந்திர வம்சங்களைக் காட்டுவதற்கும் மணிமேகலையிலும் பழமையான சான்று தமிழில் இல்லை. இங்ஙனம் மிகப்பழமையான நாளிலே இந்திரகுலத்தினரெனப்பட்ட நாகாது வழியிலே அல்லது நாகராயப்பல்லவர் வழியிலே வந்தமையால் கள்ளர்கள் இந்திரகுலத்தின ரென்று வழங்கப்பட்டனராதல் வேண்டும். அன்றி சோழர்களை இந்திரன் வழியினரென்பது ஒரு சாரார் கொள்கை. இந்திரன் ஆரியர் வழிபட்ட கடவுள் என வடமொழி நூல்களில் பெறப்படுமேனும் தமிழரது தெய்வம் என்று சிலர் கருதுகின்றனர். சோழர் தம் குல முதல்வனாகிய வேந்தனைத் தெய்வமாகக் கொண்டு வழிபட்டன் ரென்றும் கூறுவர். பழைய நாளில் சோழர் இந்திரனுக்குப் பெருஞ்சிறப்புடன் திருவிழாச் செய்து போந்தமை சிலப்பதிகாரம் முதலியவற்றால் வெளிப்படை. சாரதிராசன் முதலாவது சோழன் எனக் கலிங்கத்துப் பரணி கூறுகின்றது. இவற்றிலிருந்து சோழர் இந்திர குலத்தாரென்பது பெறப்படுமேல் அவர் வழியினராகிய கள்ளர்
இந்திர குலத்தினர் எனப்படுவது அதனாலே அமையும். தேவர் எனும் பெயர் இராசராச தேவர், இராசேந்திர தேவர், குலோத்துங்கச் சோழ தேவர் எனச் சோழ மன்னருக்கு வழங்கியிருப்பதுவும் கள்ளர். மறவர், அகம்படியர் என்னும் இவ்வகுப்பாரும் தேவர் என வழங்கப்படுவதும் இங்கு அறியற்பாலது. (ந. மு. வெங்கடசாமி நாட்டார். கள்ளர் சரித்திரம். மூன்றாம் பதிப்பு . பக். 43-44).
12) டாக்டர் K.K. பிள்ளை கூறுவதாவது: 'தென் மாவட்டங்களில் மறவர் அதிக எண்ணிக்கையில் உள்ளனர். பாண்டிய அரசில் அவர் செல்வாக்குப் பெற்றிருந்தனர் எனத் தெரிகிறது. உண்மையில் பாண்டியர் மறவா என்றே நம்பப்படுகிறது.
Dr. K.K. Pillai says : “The maravas are found in the largest number in the southern districts. In the political sphere they seem to have wielded considerable influence under the Pandyas. Infact the Pandyas are believed to have themselves belonged to the Marava Caste!” [Dr. K.K. Pillai. Studies in Indian History with special reference to Tamil Nadu. Page. 332]
13) இராமலிங்க குருக்கள், குமரய்யா நாடார் இருவரும் கூறுவதாவது : சாணார் என்பது சான்றோர் என்பதன் திரிபு. நாடான் என்பது நாடன் என்பதன் திரிபு நாடான், சான்றோன் என்பவர் சத்திரிய மரபினர். நாயக்கருக்கு முன்னால் இவர் தமிழகத்தை ஆட்சி செய்த முடியுடை மூவேந்த மரபினர் நாயக்கர் மதுரையைக் கைப்பற்றிய உடன் பாண்டிய மரபினராகிய சான்றோர் குலமக்கள் பின்வாங்கி நெல்லை மாவட்டத்தின் தென் பகுதியில் குடியேறினர். நாயக்கருடன் போரில் தோற்றதன் காரணமாய் பாண்டிய மரபினராகிய சான்றோர் அடக்கி ஒடுக்கப்பட்டு, காலப் போக்கில் தாழ்த்தப்பட்டேர் நிலையை அடைந்தனர். (இராமலிங்க குருக்கள். V.A. குமரய்யா நாடார் - நாடார் மக்களும் நாயக்க மன்னரும்.)
14) பேராசிரியர் இலங்குளம் குஞ்சன் பிள்ளை கூறுவதாவது : சேரமன்னர்கள் செருமாராயிருக்கலாம் என்பது கே.பி. பத்மனாபமேனன் கருத்து. பி.தி. சீனிவாசய்யங்கார் அவர்களைக் குறவர் என்கிறார். அவர் வில்லவராக (நாடாராக) இருக்கலாம் என்று நான் கூறியிருக்கின்றேன். கொடகுபதியில் பதனீர் இறக்கும் தொழில் செய்யும் நாடார் சாதியினரை வில்லவர் என்று இப்போதும் அழைக்கின்றனர். சேர மன்னரிடம்
காவிதிகளாக இருந்தவர் நாடார்களின் நாவிதர்களாயிருப்பதும், வில்லவர், சான்றோன் முதலிய வழக்குகளும், சின்னம் பனம் பூவாயிருந்ததுவும் என் கருத்துக்கு ஆதாரங்கள் (இலங்குளம் குஞ்சன் பிள்ளை. பண்டையக் கேரளம். பக். 197)
மேலே கண்ட அறிஞர்களில் V. கனகசபை பிள்ளை , மறைமலையடிகள், ந.சி. கந்தையாபிள்ளை இவர்கள் வேளாளர்தான் தமிழரசுகளைத் தோற்றுவித்தனர் என்கின்றனர். மெக்கன்சி கைப்பிரதியிலும் வேளாளர்தான் அரசுகளைத் தோற்றுவித்ததாகக் கண்டுள்ளது. பர்னெட் சேர, சோழ, பாண்டிய அரசுகளைத் தோற்றுவித்தவர் திராவிடர்களாகிய வெள்ளாளர் என்றும், அவர் உழவுத் தொழில் செய்தனர் என்றும் கூறுகின்றார். சாமி சிதம்பரனார் மருதநில மக்கள் தான் அரசுகளைத் தோற்றுவித்தனர் என்கிறார். நெல்சன் பாண்டியர் சத்திரியர் மரபு என்றும், அவர் வேளாளர் அல்ல என்றும் கூறுவார். V.R. இராமச்சந்திர தீட்சதர் பாண்டியர் ஆயர் மரபிலிருந்து தோன்றியவர் என்று கூறுபவர். மருதநிலமே அரசுகள் தோன்றுவதற்கு நிலக்களமாய் இருந்ததென்கிறார். ந. மு. வெங்கடசாமி நாட்டார் கள்ளர், மறவர், அகம்படியர் என்று முக்குலத்தோர் தான் தமிழக அரசுகளைத் தோற்றுவித்த மூவேந்த மரபினர் என்கிறார். டாக்டர் K.K. பிள்ளை பாண்டியர் மறவர் என்கிறார். A.பானல் சோழர் கள்ளர் என்கின்றார். இராமலிங்க குருக்களும், V.A. குமாய்யா நாடாரும் சாணார் நாடார் மூவேந்த மரபினர் என்றும், குறிப்பாக அவர்கள் பாண்டிய மரபு என்றும் வாதிக்கின்றனர். இலங்குளம் குஞ்சன் பிள்ளை நாடார் சேரர் வழித்தோன்றல் என்பார். P.T. சீனிவாச அய்யங்கார் சேரர் குறவர் என்றும், சோழர் வேளாளர் என்றும், பாண்டியர் பரதவர் என்றும் கூறுவாராவர்.
ஆக மேலே கண்ட கூற்றுக்களின்படி இன்றைய மக்கள் பிரிவில் வேளாளர், கள்ளர், மறவர், அகம்படியர், இடையர், நாடார் (சாணார்) குறவர் மருதநில மக்கள் (பெயர் குறிப்பிடப்படவில்லை ) உழவுத்தொழில் செய்த வெள்ளாளராகிய திராவிடர் தமிழகத்தில் அரசுகளைத் தோற்றுவித்தவர் ஆவர். இந்தக் கூற்றுக்களில் ஏற்புடையத்தக்கது யாது? என்பது பற்றி நாம் ஆராயவேண்டியுள்ளோம்.
பண்டைய நாளில் நாட்டில் பல்வேறு இனங்கள் இருந்திருக் கின்றன. இது பற்றி அறிஞர் பலர் கூறும் கருத்துக்களைக் காண்போம்.
B.D. பானர்ஜி கூறுவதாவது “தமிழகத்தில் இன்று காணப்படும் பல் வேறு மக்கள் பிரிவினர் கலப்புற்ற நீ கரிட்டோ , மீன்பிடி தொழிலாளர், ஆஸ்ட்ராயிட் வேட்டையாடுவோர், திராவிடர் வழித் தோன்றல்கள் உள்ளடக்கியது.”
B.D. Banerji.says : 'The different races of People living in the country (Tamil Nadu) were a mixture of the descendants of Negrito fishermen, Austroid bowsmen and the Dravidians. (B.D. Banerji M.A.A Student history of India Pre-historic ancient and Hindu India. Page 120]
M. சீனிவாச அய்யங்கார் கூறுவதாவது: 'பழங்காலத்தில் தமிழகத்தில் மூன்று இனங்கள் இருந்ததாக அறிகிறோம். ஒன்று பழங்குடிகள் . (Aborigins) இவரைத்தான் புரோட்டோ நீக்ரிட்டோ ஆஸ்ட்ராய்ட் என்றும் கூறுவர். இரண்டாவது இனம் திராவிடர். (தமிழர்) திராவிடரை அடுத்துக்குடியேறியவர் ஆரியர் ஆவர். பழங்குடிகள் திராவிடர் இவர்களுக்குள் பெருமளவு கலப்பு ஏற்பட்டது. திராவிடர் ஆரியருக்குள் ஓரளவு கலப்பு ஏற்பட்டது. எனினும் இந்த மூன்று இனங்களும் நாட்டில் இருந்து வருவதைக் காணலாம்.'
M. Srinivasa Ayyangar says "The facts clearly prove that there were three distinct races namely the aborigins, the Dravidians (Tamils) and the Aryan immigrants. Though there was a free intermixture of the Aborigins and the Dravidians and though isolated instances of the second and the third are noticeable, the existence of three types is clear.' [M. Srinivasa Ayyangar. Tamil studies. Page 10]"
தமிழக அரசால் நியமிக்கப்பட்ட வரலாற்றுக்குழுவினரால் தயாரிக்கப்பட்டு, தமிழக அரசால் 1975-ல் வெளியிடப்பட்ட தொல் பழங்காலம் என்ற நூல் பக்கம் 83-ல் தமிழகத்தில் வாழ்ந்த பண்டைய இனங்கள் பற்றிக் கண்டிருப்பதாவது: இந்திய இனப்பாகுபாட்டைச் சற்று கூர்ந்து நோக்கினால் தமிழகத்தில் மூவகை இனங்கள் தொல் பழங்கால முதல் வாழ்ந்து வருவது எளிதில் புலனாகும். 1) நீகரிட்டோ இனம் 2) ஆஸ்திரிக் மக்களின் மூதாதையர் 3) திராவிடர். இந்த மூன்று இனங்களும் ஆரியர் இந்திய நாட்டில் குடியேறுவதற்கு முன் இருந்தவையாம். நீக்ரிட்டோ இனமும் ஆஸ்டிரிக் இனமும் திராவிடருக்கு முற்பட்டவை.
தமிழகத்தில் ஏன் ? இந்திய நாட்டில் திராவிடர் குடியேறிய பின்னரே வேளாண்மைத் தொழிலும், அரசும் ஏற்பட்டது எனப்பல அறிஞரும் கருதுகின்றனர். இது பற்றிப் பல அறிஞரும் கூறியுள்ள கருத்துக்களைக் காண்போம்.
டாக்டர் கில்பர்ட் சீலேட்டர் கூறுவதாவது: 'நெல் விளைவே திராவிடர் நாகரிகத்தின் பொருளியல் அடிப்படை என்பது தெளிவு. நெல்லுடன் கூடிய பலவகைப்பட்ட கூளங்கள் விளைவிக்கப்படவே செய்கின்றன. ஆனால் இவை இரண்டாந்தரத் தேர்வுகளாகவே செய்யப்படுகின்றன.' டாக்டர் கில்பர்ட்சிலேட்டர் இந்திய நாகரிகத்தில் திராவிடர் பண்பு. பக்கம். 108]
R.C. மஜும்தார் கூறுவதாவது : ஆரியர் வருவதற்கு முன்பே நாகரிகத்தில் திராவிடர்கள் நன்கு முதிர்ச்சியுற்றிருந்தனர். திராவிடர்க்கு முற்பட்டவர் என்று சொல்லப்படும் ஆஸ்திரேலியப் பழங்குடி மக்களின் மூதாதையரைக் காட்டிலும் திராவிடர்கள் சிந்தனைத் திறனிலும், பண்பாட்டு வளர்ச்சியிலும் சிறந்த முறையில் முன்னேற்றம் அடைந்திருந்தனர். ஆஸ்டிரிக் மக்களுடையது சிற்றூரைச் சார்ந்த பண்படாத வாழ்க்கையாக அமைந்திருந்தது. ஆனால் திராவிடருடைய நாகரிகம் நகரத்தை மருதநிலத்தை மையமாகக் கொண்டிருந்து மாட்சியுற்றது.' (தமிழ்நாட்டு வரலாறு. தொல் பழங்காலம். தமிழ்நாட்டு அரசு வெளியீடு, பக்கம் 128)
டாக்டர் R. கால்டுவெல் கூறுவதாவது: திராவிடரைக் காட்டு மாக்களாகவோ , கீழ்ப்பட்டவர்களாகவோ எவ்வகையிலும் கருதுவதற் கில்லை, காட்டுப்பழங்குடி மக்கள் நாகரிக நிலையாதாயினும் திராவிட மக்களைப் பற்றிய வரை அவர்கள் ஆரியர் வருமுன்னரேயே, நாகரிகத்தின் நறுமணத்தை நுகர்ந்து வாழ்ந்தனர்.' (தமிழ் நாட்டு வரலாறு தொல் பழங்காலம். தமிழக அரசு வெளியீடு. பக்கம் 120-ல் கண்டபடி)
PT. சீனிவாச அய்யங்கார் கூறுவதாவது: திராவிடருடைய அரசர் வலிமைமிக்க அரண்களில் வாழ்ந்து வந்தனர். உழவும் போரும்
அவருடைய அன்றாட வாழ்க்கைத் தொழில் (தமிழ்நாட்டு வரலாறு. தொல் பழங்காலம், தமிழக அரசு வெளியீடு பக்கம் 130-ல் கண்டபடி)
ஹார்னெல் ஜேம்ஸ் கூறுவதாவது: திராவிடர் உள் நாட்டில் அல்லது ஆற்று வெளியினில் வாழ்வதில் பெரிதும் நாட்டம் கொண்டிருந்தனர். இதனால் நீர்ப்பாசன முறையிலமைந்த வேளாண்மைத் தொழிலில் சிறப்புமிக்க தேர்ச்சியைப் பெற்றிருந்தனர். வரலாற்றுக் காலம் நெடுக இந்தியர் பெற்றிருக்கும் சிறப்பிற்கெல்லாம் மூல காரணமாக இருந்து வந்தவர் திராவிடரே ஆவர்.' தமிழ் நாட்டு வரலாறு : தொல் பழங்காலம் ; பக்கம். 130ல் கண்டபடி
டாக்டர் K.K. பிள்ளை கூறுவதாவது :- “சாதவாகனர் தக்காணத்தை ஆண்டு வந்த காலத்தில் தென் கோடியில் சேர, சோழ, பாண்டிய மன்னர் அரசு புரிந்தனர். அவர்கள் குறித்து முதன் முதல் பாரதத்தில் கூறப்பட்டிருப்பதைக் காண்கிறோம். அந்த மூன்று மரபினரும் தாம் பாரதப் போரில் தொடர்பு கொண்டிருந்த செய்தியை வழிவழியே போற்றி வந்துள்ளனர். திராவிடக்குடிகளின் தலைவரான அவ்வேந்தர்கள் வடக்கே இருந்து வந்திருக்க வேண்டும். தென் இந்திய வரலாறு. பழனியப்பா பிரதர்ஸ் முதற் பகுதி. பக். 59).
S.D. பர்னெட்டும் திராவிடர்தான் தமிழக அரசுகளைத் தோற்றுவித்தனர் எனக்கூறியிருப்பது நினைவிருக்கத் தக்கது.
இன்று அறிஞர் சிலர் சில குறிப்பிட்ட வகுப்பினரைத் தமிழக அரசுகளைத் தோற்றுவித்தவர் என்று கூறும்போது அவரைத் திராவிடர் என அவர்கள் கருதுவதாயுள். ஏற்கனவே கூறியபடி பார்ப்பனர். தாழ்த்தப்பட்டோர் தவிர்த்து மற்ற இடைப்பட்ட எல்லா வகுப்பாரையும் திராவிடர் எனப் பலரும் பேசியும், எழுதியும் வருகின்றனர். ஏன்? திராவிடர் கழகம், திராவிட முன்னேற்றக்கழகம் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் எல்லாம் இந்த அடிப்படையிலேயே தோன்றியவை ஆம். ஆனால் இன்றையத் தமிழருள் திராவிடர் யார்? என்பது பற்றி அறிய ஆங்கிலேயர் ஆட்சியின் போது முயற்சிகள் மேற்கொள்ளப் பட்டிருக்கின்றன.
முதன் முதலாக 1891ல் நடைபெற்ற மக்கள் குடிக்கணக்கெடுப் பில் இப்பொருள் பற்றி ஆய்வு நடைபெற்றுள்ளது. அதில் கண்டுள்ள முடிவின்படி வேளாளர் மட்டும் திராவிடர் ஆவர். வேடன், வேட்டுவன், இருளள், குறவன் இன்னும் மற்றமுள்ள மலைவாழ் மக்கள் கலப்பற்ற நாகர் இனத்தைச் சேர்ந்தவர். புரோட்டோ ஆஸ்ட்ராயிட் நீக்ரோயிட்) வலையன், செம்படவன், பள்ளன், சாணான், இடையன், மறவன்,அகம்படியன், பறையன், கைக்கோளன்; கம்மாளன், பள்ளி (படையாச்சி - வன்னியன்) கள்ளன், முத்திரியன், அம்பலகாரன் இவர்கள் எல்லோரும் கலப்பு நாகர் (திராவிடர் பழங்குடியினர் கலப்பு) [1891 Censues Report - Madras Presidency).
.
M. சீனிவாச அய்யங்காரும் 1891 மக்கள் குடிக்கணக்கு அடிப்படையில் வேளிர் அல்லது வேளாளரே திராவிடர் என்பார். இவர் கூறுவதாவது: பண்டைக்காலத்தில் ஆரியரல்லாத தமிழ் மக்களைத் திணைநிலைப்பாகு பாடாய் பிரித்துக் காட்டுவதில் வேளாளர் இடம் பெறவில்லை . அவர் தூய திராவிடர் ஆவர். வேளாளர் தவிர்த்த மற்ற வகுப்புகள் திராவிடருக்கு முற்பட்டவர்கள். விஸ்வப்பிராமணர், (கம்மாளர்) திராவிடச் சத்திரியர் இவர்கள் திணைநிலை மக்களுள் இடம் பெறாதது குறிப்பிடத்தக்கது.
M. Srinivasa Ayyangar says: “The original classification of the non-Aryan Tamil tribes is conspicuous by the absence of Vellala caste:It must therefore refer to the Pre. Dravidian tribes. The Velier or Vellalas alone are pure Dravidians. The Viswa Brahmins and Dravida Kshtriyas had no place in the system” [M. Srinivasa Ayyangar-Tamil Studies. Page 381.]
டாக்டர் R. கால்டுவெல்லும் வேளாளர்தான் திராவிடர் என்ற கருத்துடையவராயுள்ளார். அவர் கூறுவதாவது:
வேளாளர் தமிழகத்தில் குடியேறுவதற்கு முன்பு அங்கு பள்ளர், பறையர் ஏற்கனவே வேட்டுவர் போன்று வேட்டை யாடியும், சிறிது புஞ்சைத் தானியம் விளைவித்தும் வாழ்க்கை நடத்தியிருப்பர். வேளாளர் குடியேறின் பின்னரே நெற்பயிர் விளைவிக்கப் பட்டிருக்க வேண்டும். நீரின்றி நெற் பயிர் சாகுபடி செய்ய முடியாது. எனவே நீராகிய வெள்ளத்தை அடக்கி ஆளக்கூடிய வெள்ளாளரால் தான் அது சாத்தியமாயிருக்க முடியும். வெள்ளம், வெள்ளாளன் என்ற இரு சொற்களுக்கும் நீரைக்குறிக்கும் வெள்" என்ற வேர்ச்சொல் ஒன்றாயிருப்பது இதற்குச் சான்றாகும்.
Dr. R. Caldwell says: 'If they (Parayan and Pallan) were really the oldest tribes that settled in the district (Tinnevelly) they must have subsisted mainly by the chase like the rude tribes commonly called vettuvar and partly by the cultivation of dry grains. The cultivation of rice by means of irrigation would seem from etymological reasons to have been specially of the vellalas-Vel-the root of vellala seems to be identical with the root of Vellam-water used for irrigationi. [Dr.R. Caldwell. History of Tinnevelly District. Page 4.]
ஆக இதுவரை நாம கண்டவைகளிலிருந்து திராவிடர் தான் இங்கு முதன் முதல் பயிர்த்தொழிலைத் தோற்றுவித்துத் தமிழக அரசுகளை ஏற்படுத்தியவர் என்றும், அவர் இன்று வேளாளர், வெள்ளாளர் என வழங்குபவர் என்றும் அறிகிறோம். இம்முடிவு ஏற்புடையது தானா?
பழங்காலத்தில் நிக்ரிட்டோ ஆஸ்டராயிட் மக்கள் இருந்தனர் என்றும், அதன்பின் திராவிடர் வந்ததாகவும், அதன்பின் ஆரியர் குடியேறினதாகவும், நிக்ரிட்டோ ஆஸ்ட்ராயிட் இனங்களுக்கும் திராவிடருக்கும் இடையே பெருமளவு கலப்பு ஏற்பட்ட தென்றும், திராவிடருக்கும் ஆரியருக்கும் இடையே ஓரளவு கலப்பு ஏற்பட்டதென்றும் அறிஞர் கூறியிருப்பதை ஏற்கனவே கண்டோம். ஆக எல்லா இனங்களும் கலந்திருக்கின்றன என்றும், ஒருவரும் கலப்பற்றவர் என்று இன்றைய நிலையில் கூற முடியாது என்றும் கருதுவதாயுள்ளது. இன்றையப் பார்ப்பணர் கலப்பற்ற தூய ஆரியர் என்று கொள்வதற்கு இடம் இல்லை எனச் சில அறிஞர்கள் கூறிப்போந்துள்ளனர். இது பற்றி எட்கர் தர்ஸ்டன் கூறுவதாவது : 1891 ஆம் ஆண்டு மக்கள் குடிக்கணக்கில் H.A. ஸ்டூவர்ட் இன்றையப் பார்ப்பனர் திராவிடருடன் கலந்த ஒரு கலப்பினம் என்றும், அவர் கலபற்ற தூய ஆரியர் அல்ல என்றும், அவர் திராவிடர் கலப்பினால் தோன்றியவர் வழித்தோன்றல்களே ஆவர் என்பது பொது மக்களின் நம்பகமான கருத்தாகும் என்கிறார். இன்று போல் பண்டைக் காலத்தில் சாதி வேறுபாடு இறுக்கமாய் இருந்ததில்லை. வேறு குலத்தைச் சேர்ந்தவர் பிராமணத் தத்துவத்திற்கு வேண்டிய அறிவுத்திறனையும், வழிபாட்டு முறையையும் கடைப்பிடித்தால் பிரமணராக மாறலாம், கேரளாவில் இந்நாளில் நம்பூதிரிப் பிராமணர் நாயர் பெண்களுடன் உறவு வைத்து வருவது குறிப்பிடத்தக்கது.
Edger Thurston says: 'In Madras Census report of 1891, Mr. Stuart saysthat it has been the general belief that the brahmins of South India are not purt Aryans but are amixture of Arya-Dravidian race. In earliest times caste distinctions were much less rigid than now.and a person of another caste became a brahmin by acquiring the brahminical standsards of knowledge and assuming the brahminical functions and we see the Nambudri brahmins even at the present day contacting alliances with the Nayar.' [Edgar Thurston. castes and tribes of South India 1909. Introduction]
எட்கர் தர்ஸ்டன் மேலும் கூறுவதாவது: இடைக்காலத்தில் பெரும் எண்ணிக்கையில் பிராமணரல்லாதாரைப் பிராமணராக மாற்றியிருக் கின்றனர். அக்காலத்தில் அரசர்கள் கிரமமாகவோ அல்லது பாபநிவர்த்திக் காகவோ நடத்தும் சமயச்சடங்குகளின் போது லட்சக்கணக்கான பிராமணரை உண்பித்து திருப்திப்படுத்த வேண்டியதாயிருந்தது. அதற்காகப் போதிய பிராமணர் இல்லாததால் அரசரின் ஆணைப்படி பிற வகுப்புகளிலிருந்து ஏராளமான நபர்களைப் பிராமணராக மாற்றினர் எனச் செவி வழிச்செய்திகள் மூலம் தெரியவருகின்றது.
Edger Thurston says : 'Popular Traditions allude wholesale conversion of non-brahmins into brahmins. According to such tradition Rajas used to feed very large number of brahmins (a lakh of brahmins) inexpiation of some sins or to gain religious merits. To make up, large number of non-brahmins is said to have been made brahmins at the bidding of the Raja' [Edger Thurston Castes & Tribes of South India. Vol. I Introduction]
டாக்டர் K.K. பிள்ளை கூறுவதாவது: இன்றுள்ள பெரும்பாலான பிராமணர் திராவிட இனத்தைச் சேர்ந்தவர் ஆவர். ஜம்பது ஆண்டுகளுக்கு முன் நான் இராச முந்திரி அரசுக் கல்லூரியில் பணியாற்றி வந்தபோது என்னுடன் பணியாற்றி வந்த அப்பாராவ் என்ற பிராமணர் தன்னைத் திராவிடப்பிராமணர் என்று கூறினார். பெரும்பாலான பிராமாச்சரணம் பிரிவைச் சேர்ந்த பிராமணர் ஆரியர் அல்ல என்றே கருதவேண்டியுள்ளது. தக்காணத்தில் கி.பி. 5 அல்லது. 6. ஆம் நூற்றாண்டுக்கு முன்னால் ஆரிய நான்கு வகுப்பு பற்றிய பேச்சுக்கள் எழவில்லை. அதற்குப் பின்னரே அப்பாகுபாடு தோன்றியது எனலாம். இந்நாளிலும் கூட ஆந்திராவில் சில பிராமணர் தங்களைத் திராவிடப்பிராமணர் என்று கூறி வருகின்றனர். மேலும் பிராமணர்(ஆரியர்) சத்திரியர் (திராவிடர்) இவர் இருவரிடையே இரத்தக் கலப்பில் நீக்குப்போக்கு இருந்து வந்தது. ஏன்? பிராமணருக்கும், வைசியர்,சூத்திரருக்கும் இடையே கூடக் கலப்பு ஏற்பட்டது.
Dr. K. K. Pillay Says: “I venture to state that many brahmins of today are Dravidans. When I was serving in the government college at Rajamundry nearly fifty years ago an erstwhile colleague Mr. Appo Rao said that he belonged to the community of Dravidian Brahmins. It is more than likely that those Brahmins said to belong to Brahmacharna are non-Aryans. It was not until the 5th or 6th century A.D. that the four fold classification took shape in the Decan. It is noticeable that even at present some Brahmins in Andra Desa describe themselves as Dravida Brahmins. Further there was a great deal of flexibility between the Brahmins and Kshtriyas (Dravidias) and even between Vysias and Sudras” [Dr. K.K. Pillay South Indian History congress 1980. Inaguration address. Page. 8]
ஈண்டு சைவசமயப் பெரியார்கள் மூவர் முதலிகளில் ஒருவராகிய திருஞானசம்பந்தர் திராவிடசிசு என வழங்கியது குறிப்பிடத்தக்கது.
இடைக்காலத்தில் சோழர் ஆட்சியின் போது வைணவ சமயப் பெரியார் இராமானுசர் ஏராளமான பார்ப்பனரல்லாதாரை வைணவ சமயத்தில் ஈர்ப்பதற்காகச் சமயச் சடங்குகள் செய்து, அவர்களுக்குப் பூணூல் அணிவித்து வைணவப் பிராமணராக மாற்றினார் என வரலாறு கூறும். இவர்களுள், பெரும்பாலோர் இடையர் வகுப்பைச் சேர்ந்தவர் எனக் கருத ஏதுவாகிறது. கிருஷ்ணன் ஆயர்பாடியில் வளர்ந்த கதையை மேற்கொள் காட்டி இடையரை வைணவ சமயத்திற்கு ஈர்த்து, அவருள் கல்வி கற்றவரைப் பிராமணராக மாற்றியிருப்பது சாத்தியமே. தமிழ் நிகண்டுகளில் ஆரியர் என்பதற்கு மிலேச்சர் என்று பொருள் கண்டுள்ளது அறியத்தக்கது. தென்னகத்துப் பிராமணரை வட இந்தியப் பிராமணர் மட்டமானவராகக் கருதுவதாக ஆராய்ச்சியாளர் கூறுவர். அதற்குக் காரணம் அவர்கள் கலப்பற்ற சுத்த ஆரியர் அன்று என்பதாம். தென் இந்தியப் பிராமணருடைய பிரமசாத்தா (மத்தியானப் பறையர்) என்ற ஒரு பிரிவு இருப்பதுவும் குறிப்பிடத்தக்கது. M. சீனிவாச அய்யங்கார் ஆரியர் திராவிடரிடையே கலப்பு நிகழ்ந்தது என்று கூறியுள்ளது ஈண்டு நினைவிருக்கத்தக்கது ஆம். தமிழ் இலக்கியங்களில் அந்தணர், பார்ப்பனர் என வருபவர் தமிழ் திராவிட மரபினரே. வடக்கேயிருந்து பிழைப்புக்காகவும், சமயப் பிரச்சாரத்திற்காகவும் வந்த ஆரியர், தென்னக அந்தணர் பார்ப்பனரோடு கலந்திருப்பது சாத்தியமே. ஏன்? வடநாட்டிலும் ஆரியருக்கும் திராவிடருக்கும் இடையே கலப்பு ஏற்பட்டது என்பது ஆராய்ச்சியாளர் முடிவாகும். ஆக வட நாட்டிலிருந்து தென்னகம் வந்த ஆரியரையும் தூய ஆரியர் எனக் கொள்வதற்கில்லை . ஆரியர் என்ற சொல்லுக்கு காலத்திற்குக் காலம் வெவ்வேறு பொருள் வழங்கி வந்திருக்கின்றது என்பது ஈண்டு குறிப்பிடத்தக்கது. ஆரம்பகாலத்தில் ஆரியன்' என்பதற்கு வெளியே இருந்து வந்தவன்' வேற்றாள், வெளிநாட்டான்' என்று பொருள்பட்டது. இச்சொல்பற்றி கொ. அ. அன்தோனவா - கி.ம. போன்காரத் லேவின் கூறுவதாவது: 'ஆரிய மக்கள் என்று கருதக்கூடியவர்கள் பண்டைய ஈரானியர்களும், இந்தோ ஆரியர்களும்தான். அவர்களே தங்களை ஆரியர்கள் என்று அழைத்துக்கொண்டார்கள். தாங்கள் வசித்த பிரதேசங்களை ஆரியவர்த்தம் அல்லது ஆரியபூமி என்று அழைத்தார்கள். ஆரிய என்ற சொல் அரி என்ற சொல்லுடன் தொடர்புள்ளது. வேதகாலத்தில் இந்தச் சொல்லுக்கு வெளிநாட்டான்' 'வேற்றான் என்று பொருள், ஆரியன் என்ற சொல் வேற்றாருடன் இணைந்தவன் - அவர்களுக்கு இணக்கமானவன் என்று பொருள்பட்டது. பிற்காலத்தில் 'நல்குடிபிறந்தவன்' என்று பொருள் இச்சொல்லுக்கு ஏற்பட்டது. (கொ.அ . அன்தோனவா-மி. போன்காரத் லேவின். இந்தியாவின் வரலாறு. 1987 முன்னேற்றப்பதிப்பகம் மாஸ்கோ பக்கம் 43].... மொழியியல் தொல்பொருள் இயல் சான்றுகளைக் கொண்டு பார்க்கும் போது, பஞ்சாபில் இந்தோ ஆரியர்கள் முதன்மையாகத் திராவிட இனக்குழக்களுடன் கலந்து பழகத் தொடங்கினார்கள். முன்னர் மிக உயர்த்த நிலையிலிருந்த பண்பாட்டின் ஒரு சில மரபுகள் அநேக வட்டாரங்களில் இன்று எஞ்சி இருந்தமையால் இந்தோ ஆரியர்கள் வட்டார மக்களுடன் நெருங்கிய தொடர்பு கொண்டார்கள்... திராவிட மொழிகள் இந்தோ ஆரிய மொழிகள் மீது குறிப்பிடத்தக்க செல்வாக்கு செலுத்தின என்று ரிக்வேத மற்றும் பிற வேத சப்ஹிதைகளின் மொழிஇயல் பகுப்பாய்வு காட்டியது. (கொ. அ. அன்தோனதா கி.ம. போன்காரத் லேவின் இந்தியாவின் வரலாறு. முன்னேற்றப்பதிப்பகம், மாஸ்கோ , 1987. பக்கம் 47] தமிழ், தெலுங்கு, கன்னடம், மராத்தி, குஜராத்தி மொழிகளைத் தாய்மொழியாகக் கொண்ட பார்ப்பனர் பஞ்சதிராவிடர் என வழங்கினர் என்பதும் ஈண்டு குறிப்பிடத்தக்கது. (Edger Thurston Caste & Tribes of South India. Voli)
ஆக இதுவரை நாம் பார்த்ததிலிருந்து இன்று தமிழகத்தில் உள்ள பிராமணரைச் சுத்த ஆரியர் என்று கொள்வதற்கில்லை. மாறாக அவர் ஆரியர் திராவிடர் மற்றும் பழங்குடிகள் கலப்பு ஆவர்.
அடுத்த படியாக இன்றைய வேளாளரை எடுத்துக் கொள்வோம். இவர்கள் திராவிடர் எனக் கொள்வதற்கு இவர் ஏர்த்தொழிலும், போர்த்தொழிலும் செய்பவராக இருக்க வேண்டும். ஆனால் இவர் இன்று இந்த இரு தொழில்களையும் நேரிடையாய்ச் செய்பவராகத் தோன்றவில்லை. வேளாளர்களுள் உயர்ந்தவர் எனப் பாராட்டி வரும் கார் காத்த வேளாளர் பற்றிப் பார்ப்போம்': இவர் பற்றி W. பிரான்சிஸ் கூறுவதாவது பாண்டிய வேளாளர் என்பவர் இரு பிரிவுகளையுடையவர் ஆவர். அவருள் ஒரு பிரிவினர் காரைக் காட்டார் அல்லது காரைக்கட்டு வேளாளர் என வழங்குவர். இவர் தோற்றம் பற்றி புராணக்கதைகளைச் சான்று காட்டினாலும் இப்பெயர் உண்மையில் காரைக்காடு என்ற ஒரு நிலப்பகுதியைச் சுட்டுவதாக நாம் கருத வேண்டியுள்ளது.
W. Francis. says :- “The Pandya vellalas are sub-divided into Karaikkattu or Karaikkattus who are probably a territoria sub-division named after a place called Karaikkadu” [W. Francies. The Madras census Report 1901]
குறிப்பு : நெல்லை மாவட்டத்தில் இவரைக் காரைக் கட்டுப் பிள்ளைமார் என்றே வழங்குவர். பெண்கள் கழுத்தில் காரை' என்ற ஆபரணத்தை அணிவதால் காரைக்கட்டுப் பிள்ளைமார் என வழங்கலாயினர் எனக்கொள்வாருமுளர்.
பாண்டிய வேளாளர் சங்க இலக்கியத்தில் பேசப்படும் பாணர் வகுப்பைச் சேர்ந்தவர் எனத் தெரிகிறது. இவர் வேளாளர் என வழங்குவதற்குப் பயிர்த் தொழிலை மேற் கொண்டிருக்கவேண்டும். ஆனால் இவர் தையல் வேலையைக் குலத்தொழிலாகக் கொண்டுள்ளனர். ஊர்ப்புறங்களில் இவரைப் பறையர் அல்லது பாண மேஸ்திரி என்று தான் கூறுவர். இவரது இல்லத்தில் செக்கார், வண்ணார், நாவிதர் உணவு உட்கொள்வதில்லை. நெல்லை மாவட்டம் செங்கோட்டை மற்றும் கன்னியாகுமரி மாவட்டம் இங்கெல்லாம் இவர் செடியூல் வகுப்பினராகக் கணக்கிடப்பட்டுள்ளனர். இவர் வேளாளரே அல்ல. குல உயர்வுக்காகத் தம்மைப் பாண்டிய வேளாளர் என்று கூறிவருகின்றனர். (இரா. தேவ. ஆசீர்வாதம். வேளாளர் யார்? 1981 பக்கம் 361)
அடுத்து நாஞ்சில் நாட்டு வேளாளர் பற்றிப் பார்ப்போம். இவர் தேவரடியார் வழிவந்தவர் என்றே தெரிகிறது. இவர் பற்றி எட்கர் தர்ஸ்டன் கூறுவார்: “தேவரடியார் வழி வந்தவர் தம்மை நாஞ்சில் நாட்டு வேளாளர் என்பர்” [Nanjil Nattu Vellalas are the offspring of Devadasis. E. Thurston. Castes & tribes of South India. Vol il. Page 140] நாயர் போன்று இவர் மறு மக்கத்தாய முறையைப் பின்பற்றி வருபவர் ஆவர்.
சோழ நாட்டிலுள்ள சோழிய வேளாளரை எடுத்துக் கொள்வோம், பர் தோற்றம் சந்தேகத்திற்கிடமானதென்றும், சோழநாட்டில் பல்வேறு பாப்பாரும் போலிக்குல உயர்வுக்காகத் தம்மைச் சோழிய வேளாளர் என்று கூறுவர். 'Edgar Thurston says: 'The Solias (Cholias) are numerous and uniquitous. They are generally regarded as of doubtful descent since paravenus who wish to be considered as Vellalas usually claim to belong to this sub-division' [E. Thurston. Castes and tribes of South India. Vol VII. Page 386]. . .
சங்க இலக்கியத்தில் வரும் பாணர், விறலியர், பரத்தையர் வகுப் பாருள் ஒரு சிறுபான்மை தேவரடியார் தவிர்த்து, பெரும்பாலோர் இன்று சோழ நாட்டில் காணப்படுவதில்லை என்பது ஈண்டு குறிப்பிடத்தக்கது. இக்கூட்டத்தினர்தான் இன்று சோழிய வேளாளர் என்று கூறிவருகின்றனர் என்றால் அதை ஒருவரும் மறுக்க இயலாது. சோழியன் குடுமி சும்மா ஆடுமா? என்ற பழமொழி நினைவிருக்கத்தக்கது.
அடுத்து தொண்டை மண்டலத்திற்கு வருவோம். இங்கு தொண்டை மண்டல வேளாளர், தொண்டை மண்டல முதலியார் என்று குலப்பட்டம் பூண்டு வருபவர் கலப்பினம் என்றே கருதப்படுகின்றனர். இவர் விசயநகரம் மற்றும் தெலுங்கு நாயக்கர் ஆட்சியில் தோற்றமும், ஏற்றமும் பெற்றவர் ஆவர். M.A . செரிங் இவர் பற்றிக்கூறுவதாவது: முதலி என்ற பட்டம் தரித்து விவசாயத் தொழிலில் ஈடுபட்டு வரும் வகுப்பார் ஆரியர், ஆரியரல்லாதார் இனக் கலப்பால் ஏற்பட்டவர் ஆவர். இவரது கறுப்பு நிறமும், உடற்கட்டும் பெரும்பாலும் இவரைத் திராவிடர்க்கு முற்பட்ட பழங்குடியினர் என்பதைக் காட்டுவதாயுள்ளது.
M.A.Sherring says: “Madali the agricultural tribe are partly of Aryan and Partly of non-Aryan origin. The darkness of the Complexion and Particularly the features of some of them point to the supposition that they are largely connected with the aboriginal tribes
(M.A. Sherring. The tribes and Castes of Madras Presidency. page 116)
அடுத்து கொங்கு வேளாளர் பற்றிப் பார்ப்போம். எட்கர் தர்ஸ்டன் இவர் பற்றிக் கூறுவதாவது: கொங்கு வேளாளர் பெயர் அளவிலன்றி வேறு ஒருவிதத்திலும் மற்ற வேளாளர் பிரிவினருடன் ஒத்திருப்பதாகத் தெரியவில்லை . இவர் சமூகத்தில் கீழாக மதிக்கப்படுகின்றனர். Edgar Thurston says : "Kongu Vellalas have little in Common with other Vellalas except the name and appear to have a lower Position in society' [Edgar Thurston. Castes and tribes of south India. Vol. vil Page 417)
இன்றைய வேளாளர் பற்றி 1901 ஆம் ஆண்டு மக்கள் குடிக்கணக்கில் கண்டிருப்பதாவது: வேளாளர் என வழங்குவோர் பயிர்த்தொழில் செய்யும் பல்வேறு வகுப்பார் மட்டுமின்றிக் குல உயர்வுக்காக செம்படவர் முதல் வளையற்காரர் ஈறாகப் பல்வேறு பிரிவினரும் உள்ள டக்கிய தாகும்'. Vellalacaste includesawide Varlety of agricultural Communities plus many aspirants from fishermen to banglemen who had adopted the samellame' [Census of India 1901. Madras Presidency. Vol. I. Page 184).
இன்று வேளாளர், வெள்ளாளர் என்று கூறி வரும் பிள்ளைமார் தோற்றம் பற்றி இளங்காப்பியன் கூறுவதாவது : சங்ககாலத்தில் பெண்ணுக்கு ஒத்த வயதுடைய தோழியாக நியமிக்கப்பட்டு, பெண் திருமணமாகும் போது தோழியும் சீதனமாகக் கொடுக்கப்படுவாள். மனைவி கர்ப்ப முற்றிருக்கும் போது பணிப்பெண் மனைவியின் இடத்தைப் பெற்று குழந்தைகளுக்குத் தாயாவாள். இவ்வாறு தோழிகள் மூலம் பிறந்தவருக்குச் சொத்தில் பங்கு இல்லை. ஆனால் வேறு எல்லாவகைச் சலுகைகளும் இருந்தது. இந்தத் தோழியின் வழித் தோன்றல்கள் தான் இன்றையப் பிள்ளைமார் என்ற பிரிவினர் என்பது மறைமலையடிகள் கருத்து (இளங்காப்பியன் வரலாற்றுப் பாலம் பக். 81)
பண்டைக்காலத்தில் தோழிகள் தங்கள் தலைவியரின் கணவருடன் கூடிக்குழந்தைகள் பெற்றனர் என்பதற்கு விவிலியம் பழைய ஆகமம் (Bible. Old Testement) ஆதியாகமம் அதிகாரம் 16-ல் சான்று உள்ளது என்பது ஈண்டு குறிப்பிடத்தக்கது.
ஆக இதுவரை நாம் பார்த்ததிலிருந்து இன்று வேளாளர், வெள்ளாளர் என்று கூறி வருபவர் உண்மையில் வேளாளரோ, வெள்ளாளரோ அல்ல என்றும், அவர்கள் பல்வேறு பிரிவுகளிலிருந்து போலிக்குல உயர்வுக்காக அப்பெயர்களைப் பூண்டு வருகின்றனர் என்றும், பெரும்பாலும் அவர் கலப்பினம் என்றும் அறிகிறோம். ஆனால் M. சீனிவாச அய்யங்கார் வேளிர் அல்லது வெள்ளாளரே திராவிடர் என்றும், வேளாளர் தவிர்த்த மற்ற மரபினர் பழைய நாக மரபு வழிவந்தவர் என்று கூறுவார். M. Srinivasa Ayyangar says : 'The numerous. Tamil castes with the exception of a handful of Vellalas have grown out of of territorial tribes of Nagas. The Velir or Vellalas were alone Dravidians': [M. Srinivasa Ayyangar. Tamil Studies. Page 381]..
இவர் (M. சீனிவாச அய்யங்கார்) இன்றைய வேளாளர், வெள்ளாளரை எல்லாம் திராவிடர் என்று கருதுவதை ஏற்பதற்கில்லை. மூவேந்தர் மரபு பற்றிக்கூறும்போது அவர் மூவேந்தர் வழித் தோன்றல்கள், அனேகமாய்க் கலப்பற்ற வேளாளருடன் கலந்தனர் என்று கொள்கிறார். கலப்பற்ற என்ற சொல்லுக்கு அவர் கூறும் விளக்கமாவது 'ஏன் கலப்பற்ற வெள்ளாளருடன் தமிழ் வேந்தர் வழித்தோன்றல்கள் கலந்தனர் என்று கூறுகிறேன் எனில், நாளடைவில் பல்வேறு பிரிவினரும் வேளாளர் என வழங்க முற்பட்டிருக்கின்றனர். இதற்கு வேட்டுவருள் கரியனான மருதங்க வேளான் சான்றாக அமையும். (S.11 Vol. II Page 45) பெரும்பாலான கொங்கு வேளாளர் ஏற்கனவே வேட்டுவ வகுப்பைச் சேர்ந்தவர் ஆவர். கோயம்புத்தூர் மாவட்டத்தில் நியதிக்கு மாறாக பெரும்பாலோர் தம்மை வேளாளர் என வழங்கி வருவதை மேலே கண்ட கல்வெட்டைக் கொண்டு பார்த்தால் இவர் உண்மையில் கலப்பற்ற திராவிடர், வெள்ளாள மரபினராக இருக்கமுடியுமா? என்ற ஐயப்பாடு எழும்.' M. Srinivasa Ayyangarsays: 'No traces of the Tamil Kings are to be found in the country and it is highly probable that they should have merged with the pure Vellala Caste. We say pure because the Vellala Çaste has been receiving additions from tiem to time from other tribes as the following extracts will show (வேட்டுவரில் வேளாளன் கரியனான மருதங்க வேளான் S 11 Vol. III page 45). Most of the Kongu Vellalas were formerly Vettuvas. The Preceding statement will show that coimbatore district contains a large number of Vellalas a fact which casts a serous doubt on their Dravidian Origin. (M. Srinivasa Ayyangar. TamilStudies. page 62).
(குறிப்பு : கொங்கு நாட்டில் இடையர் எண்ணிக்கை மிகவும் குறைவு என்பது ஈண்டு குறிப்பிடத்தக்கது.)
M. சீனிவாச அய்யங்கார் சிறுபான்மையினரான வெள்ளாளர் தான் திராவிடர் என்றும், பெரும்பான்மையான வெள்ளாளர் இடைக்காலத்தில் திராவிடருக்கு முற்பட்ட பழங்குடியிலிருந்து வந்தவர் என்றும் கூறுபவர் கலப்பற்ற வேளாளராகிய திராவிடர் இன்றைய வேளாளருள் எந்த பிரிவைச் சேர்ந்தவர் என்பதை அடையாளம் காட்டவில்லை. இவர் வேளாளர், திராவிடச் சத்திரியர் இருவரும் திணைநிலை மக்களில் இடம் பெறவில்லை என்று கூறுவதாக ஏற்கனவே கண்டோம். ஆனால் இவரது இந்தக் கூற்று ஏற்புடைத்தக்கதன்று. ஏனெனில் பண்டைய நாளில் வேளாளர், வெள்ளாளர் என்ற பெயருடைய ஒரு வகுப்பு தமிழகத்தில் இருந்ததில்லை . பின்னாளில் மருதநில உழவர் குடியினர் கொடைப் பண்பைச் சிறப்பிக்க அப்பெயர்கள் ஏற்பட்டன. இக்கால வேளாளர், வெள்ளாளர் மிகவும் பிற்காலத்தில் பல்வேறு பிரிவு களிலிருந்து தோன்றிய கலப்பினம் ஆவர். (Accretion from various Castes, இரா. தேவ ஆசீர்வாதம் வேளாளர் யார் ? 1981) சாமி சிதம்பரனார் மருதநிலத்தில் தான் அரசர்கள் தோன்றினர் என்று கூறுவதுவும் ஈண்டு நினைவிருக்கத் தக்கது. V. கனகசபைபிள்ளை , மறைமலை யடிகள், ந.சி. கந்தையாபிள்ளை, பர்னட் முதலானோர் வேளாளர், வெள்ளாளர் என்று குறிப்பிடுவர் மருதநில் உழவர் குடிக்கே பொருந்துமே ஒழிய, உழவுத் தொழில் தவிர்த்து வேறுபல தொழில்கள் செய்து பிழைப்பு நடத்தி வரும் இன்றைய வேளாளர், வெள்ளாளருக்கு அவை முற்றிலும் பொருந்தாது ஆம் சாமி சிதம்பரனார் மருதநிலத் தெய்வம் வேந்தன் என்று கூறி இருப்பதுவும் மனதிற் கொள்ளத்தக்கது. ஆக மக்கள் குடிக்கணக்கில் வேளாளர்தான் திராவிடர் என்று கண்டிருப் பதுவும், M. சீனிவாச அய்யங்கார் கலப்பற்ற வேளாளர் தான் திராவிடர் என்று கூறுவதுவும் இன்று வேளாளர், வெள்ளாளர், என்று பாராட்டி வருபவர்களுக்கு முற்றிலும் பொருந்தாது ஆம். அவற்றிற்கு உரியவர் மருதநில உழவர் குடியினராய்த் தான் இருக்கமுடியும். இந்த முடிவு கொண்டு இன்றையத் தமிழகத்தில் உள்ள பல்வேறு மக்கள் பிரிவுகளுள் திராவிடர் என்ற பெயருக்கு உரிய உழவர் குடியினர் யாராய் இருப்பர்? என்பதை நாம் அடுத்து ஆராய்வோம்.