தமிழகமானது இந்தியத் துணைக் கண்டத்தின் தென்கோடியில் உள்ளது. அது வடக்கே வேங்கட மலையையும், தெற்கே இந்து மகா சமுத்திரத்தையும், கிழக்கே வங்காள விரிகுடாவையும், மேற்கே மேற்குத் தொடர்ச்சி மலையையும் எல்லைகளாகக் கொண்டது ஆகும். ஆனால் சில நூற்றாண்டுகளுக்கு முன்னர் மேற்குத் தொடர்ச்சி மலைக்கும், அரபிக் கடலுக்கும் இடைப்பட்ட இன்றையக் கோளம் தமிழகத்தின் ஒரு பகுதியாக சேரநாடு என வழங்கியது. பண்டையத் தமிழகம் பற்றிய பனம்பாரனார் என்னும் புலவர் தொல்காப்பிய சிறப்புப்பாயிரத்தில்
"வட வேங்கடம் தென் குமரி ஆயிடைத்
தமிழ் கூறும் நல்லுலகத்து"
என்று கூறியுள்ளார்.
குறுங்கோழியூர் கிழார் என்னும் புலவர்
"தென்குமரி வட பெருங்கடல்
குணகுட கடலா வெல்லை " (புறம் 17/1.2)
என்று கூறுவார்.
வரலாற்றுக் காலத்திற்கு முற்பட்ட தமிழகம், தெற்கே இந்துமகா சமுத்திரத்தில் ஆழ்ந்து போன லெமூரியாக்கண்டத்தில் ஓடிய பஃறுளியாற்றுக்கும், வடபெண்ணையாற்றுக்கும் இடைப்பட்ட தாயிருந்தது என்றும், பின்னர் பஃறுளி ஆறு கடல் கோளால் அமிழ, அது குமரியாற்றுக்கும், வேங்கடத்திற்கும் இடைப்பட்டதாயிற்று என்றும் அறிஞர் கூறுவர். பஃறுளி ஆறும், குமரி ஆறும் கடல் கோளால் அழியப் பாண்டியன் வடக்கே வந்து இமயம், கங்கை இவற்றைக் கைப்பற்றி, அதன் தெற்கேயுள்ள நிலப்பரப்பு முழுவதையும் ஆண்டான் என்பர். இதுபற்றி இளங்கோ அடிகள் கூறுவதாவது:
"பஃறுளியாற்றுடன் பன்மலையடுக்கத்துக்
குமரிக் கோடும் கொங்கடல் கொள்ள
வடதிசைக் கங்கையும் இமயமும் கொண்டு
தென் திசையாண்ட தென்னவன் வாழி"
(சிலம்பு 11/19-22)
ஒரு காலத்தில் இந்திய நாடு முழுவதும் தமிழ் வேந்தர் ஆளுகையின் கீழ் இருந்ததென்பதற்கு, இந்திய நாட்டின் பல பகுதிகளில் தமிழுடன் தொடர்புடைய திராவிட மொழியின் பல கிளை மொழிகள் இன்று வழக்கில் உள்ளது சான்றாகும். பஃறுளி ஆறு மூழ்கிய பின் குமரி பெரியாறாயிருந்ததென்பது;
"தெனா அது உரு கெழுகுமரியின் தெற்கும்" (புறம் 62)
"குமரி அம்பெருந்துறை அயிரை மாந்தி” (புறம் 67/6)
என்ற சங்க இலக்கிய மேற்கோள்களால் புலனாகும். நிற்க . கடைச் சங்ககாலத்தில் தமிழகத்தின் வட எல்லையாகிய வேங்கடத்திற்கு வடக்கே வேற்று மொழி பேசப்பட்டு வந்ததாக அறிகிறோம். இது மொழி பெயர் தேயம் என வழங்கியது. இதற்கு
“பனிபடு சோலை வேங்கடத் தும்பர்
மொழி பெயர் தேயத்து ஆயினும் நல்குவர்" (அகம் 211/7-8)
"பல் வேற்காட்டி நன்னாட்டும்பர்
மொழி பெயர் தேயத்து ஆயினும் நல்குவர்" (குறுந் 11/6-7)
என்ற சங்க இலக்கிய மேற்கோள்கள் சான்றாகும்.
தமிழகத்தை அக்காலத்தில் சேர சோழ பாண்டியர் என்ற மூவேந்தர் ஆண்டனர் என்பதுவும், அவர் தமிழர் என்பதுவும்
"மண்திணிக் கிடக்கைத் தண் தமிழ்க் கிழவர்
முரசு முழங்கு தாளை மூவர் உள்ளும்” (புறம் 35/3,4)
"தமிழ் கெழுமூவர் காக்கும்" (அகம் 31,14)
"வண் புகழ் மூவர் தண்பொழில் வரைப்பின்”(தொல் பொருள் செ. இயல் 75-3)
என்ற இலக்கிய மேற்கோள்களால் தேற்றம்.
இந்த மூன்று மன்னர்க்கும் வரையறுக்கப்பட்ட எல்லைகளுடைய தனித்தனி நாடுகள் இருந்தன. சேரன் முதலில் காவிரி, அமராவதி ஆறுகள் இணையும் இடத்திலுள்ள கருவூர் என்ற வஞ்சியைத் தலைநகராகக் கொண்டு ஆண்டதாகவும், பின்னர் மேற்கேயுள்ள அரபிக்கடல் பின் வாங்கிச் செல்ல தரை தென்படவும், அரபிக்கடலில் கலக்கும் பொருநையாற்றங்கரையிலுள்ள வஞ்சியைத் தலைநகராகக் கொண்டு ஆட்சி செய்ததாகவும், வரலாற்று வல்லுநர் கூறுவர். பிற்காலத்தில் மேற்குத் தொடர்ச்சி மலைக்குக் கிழக்கேயுள்ள நிலப்பகுதி கொங்குநாடு எனப்பிரிந்தது. பாண்டியன் ஏற்கனவே அமிழ்ந்து போன பஃறுளி ஆற்றங்கரையிலுள்ள கபாடபுரத்திலும், முறையே முதற்சங்கம், இடைச்சங்கம் இவற்றை நிறுவி, தக்க புலவர்களைக் கொண்டு தமிழை ஆய்வு செய்தான் என்றும், கபாடபுரமும் கடல் கோளால் அழிய, தாமிரபரணி என்னும், பொருநை ஆற்றின் கரையிலுள்ள கொற்கை என்னும் துறைமுகப்பட்டினத்தில் தலைநகரை அமைத்து ஆண்டான் என்றும், பிறகு மணலூரையும், அதன் பின் கூடல் என்ற மதுரையையும் தலைநகராகக் கொண்டு, அங்கு மூன்றாம் தமிழ்ச் சங்கத்தை நிறுவினன் என்றும், சோழன் காவிரிக் கரையிலுள்ள உறையூரில் தலைநகரை அமைத்து ஆண்டான் என்றும், கரிகாலன் தன் காலத்தில் தலைநகரை உறையூரிலிருந்து காவிரி கடலோடு கலக்கும் புகார் என்ற காவிரிப் பூம்பட்டினத்திற்கு மாற்றினான் என்றும், இடைக்காலத்தில், சோழர் தலைநகர் பழையாறை, தஞ்சாவூர், கங்கை கொண்ட சோழபுரம் இங்கெல்லாம் மாற்றப்பட்டது என்றும் வரலாறு கூறும்.
தமிழ் வேந்தர் ஆட்சி ஏற்பட்ட காலத்தில், பல்வேறு இனக்குழுக்கள் நாட்டில் இருந்திருக்கின்றன. அன்றிருந்த மக்களுள் எயினர் வேட்டையாடியும், சூறையாடியும், பசுக்களையும், எருதுகளையும் கவர்ந்து அவற்றைக் கள்ளுக்கு விற்று. அல்லது அவற்றைக் கொன்று ஊனைத் தின்று வாழ்க்கை நடத்தி வந்தனர். மழவர் பசு ஊனைத் தின்றனர் என்பது
"கொழுப்பு ஆதின்ற கூர்ம படை மழவர்
செருப்புடை அடியர் தெண்சுனை மண்டும்
அருஞ்சுரம் அரிய வல்ல ; வார்கொல்"
(அகம் 129/12/14)
“பல் பூங்கானத்து அல்கு நிழல் இசை இத்
தோகைத் தூவித் தொடைத்தார் மழவர்
நாகு ஆவீழ்த்து திற்றி தின்ற”
(அகம் 249/11-13)
என்ற மேற்கோள்களால் புலனாகும்.
அக்காலத்தில் காட்டு வாணர் பச்சை ஊனைத் தின்றனர் என்பது
“நிறுத்த ஆயம் தலைச்சென்று உண்டு
பச்சூன் தின்று பைந்நிணம் பெருத்த” (புறம் 258/3,4)
என்ற மேற்கோளால் விளங்கும்,
அக்கால மக்களுள் சிலர் கூட்டுணவு உண்டனர். இதற்கு
“அதர் கூட்டுண்ணும் அணங்குடைப் பகழிக்
- கொடுவில் ஆடவர் படுபகை வெரீஇ” (அகம் 167/8,9)
“'கொடுஞ்சிலை மறவர் கட்று கூட்டுண்ணும்
சூல் மகள் மாறா மறம் பூண் வாழ்க்கை” (குறுந் 331/3)
“வரிக் கூட்டுணவின் வாட்குடிப்பிறந்த” (பெரும் 136,37)
என்பவை சான்றாகும்.
மகளிர் தழை உடை அணிந்திருந்தனர் என்பது
“தழை அணி அல்குல் தாங்கல் செல்லா” (குறுந் 159-1)
“தழை அணி அல்குல் மகளிருள்ளும்” (குறுந் 125-3)
“தழை தாழ் அல்குல் இவள் புலம்பு அகல” (குறுந் 3454)
“கொண்டைக் கூழைத் தண்டழைக் கடைசியர்” (புறம் 61/1)
என்ற மேற்கோள்களால் விளங்கும்.
மாங்குடி மங்கையர் தங்கள் அரையைச் சுற்றிக் கட்டிய கயிற்றில் மாட்டப்பட்ட தழைக் கொத்துகளை அணிந்திருந்தனர். இதற்கு
“பட்ட பைவிரி அல்குல் கொய்தழைதைஇ” (குறிஞ்சி பாட்டு 100)
என்ற செய்யுள் சான்றாகும்.
பாண் மகளிரும் விறலியரும் மன்னரிடம் பரிசுகள் பெறச் செல்லும் போது, உடை அணியாமல் இருந்தனர் என்பது
“அணங்கு என உருத்த சுணங்கு அணி ஆகத்து
ஈர்க்கு இடைபோகா ஏர் இளவன முலை
நீர்ப்பெயர்ச்சுழியின் நிறைந்த கொப்பூழ்
உண்டு என உணரா உயவும் நடுவின்
வண்டு இருப்பு அன்ன பல்காழ் அல்குல் நடுவின்” (பொருநர் 35-39)
என்ற மேற்கோளால் தெளிவு.
ஆடல் மகளிர் அணிந்த மெல்லிய மம்மல் ஆடை அரையிலிருந்து இடை நடு வரைக்கும் மூடின, அதுவும் நெரியதாய் இருந்ததால் அது மேனியை முற்றிலும் மறைக்கவில்லை . (சிலம்பு 131 88) நாட்டில் பல மொழி பேசுவோர் இருந்தனர். அவருள் குறிப்பிடத்தக்கவர் நாகர், ஒளியர், அருவாளர், எயினர், குறும்பர் முதலியோர் ஆவர். அன்று தமிழை நன்றாய் - அறிந்தவர், அறியாதவர் இருந்தனர். தமிழை அறியாதவர் பெரும்பான்மையினர் என்று கூற வேண்டும். அவர் பேசிய பேச்சானது விரவுமொழி, தழுவு மொழி, வழுவுச்சொல், சேரிமொழி என வழங்கின.
தமிழ் தெரியாத மக்கள் நாட்டில் மிகுதியாய் இருந்ததால், தமிழ் வேந்தர், குறிப்பாகப் பாண்டியர் அதை நாட்டில் பரப்பப் பெரும் முயற்சி எடுக்க வேண்டியதாயிருந்தது. தளவாய்புரம் செப்பேட்டில் பாண்டியன்
“அகத்தியனோடு தமிழாராய்ந்தும்,
மண்ணதிரா வகை வென்று தென்மதுரா புரஞ் செய்தும்
அங்கதனில் அருந்தமிழ் நற் சங்கம் இரீ இத்
தமிழ் வளர்த்தும்”
எனவும்,
“சின்னமரைர் செப்பேட்டில்
தென் தமிழ் கரை கண்டும்
உளமிக்க மதியனா லொண்டமிழும் வடமொழியும்
பழுதறத் தானாராய்ந்தும் பண்டிதரின் மெந்தோன்றியும்”
எனவும் கண்டுள்ளது. இதற்குச் சான்றாக அமையும். பாண்டியர் மதுரையில் சங்கம் அமைத்துத் தமிழை வளர்த்தனர் என்பதற்கு -
"தமிழ் கெழுகூடல் தண்கோல் வேந்தே” (புறம் 58/13)
"தமிழ்நிலை பெற்ற தாங் கரு மரபின் மகிழ்நனை மருகின் மதுரையும் வறிதே" (சிறுபாண் 66-67)
என்ற மேற்கோள்கள் சான்றாகும். பாண்டிய நாடு செந்தமிழ் நாடு எனவும், மற்றவை கொடுந்தமிழ் நாடு எனவும் வழங்கின் என்பதுவும் குறிப்பிடத்தக்கது . ஒளவையார் பாண்டியன் ஒருவனைப்பற்றிப் பேசும்போது “நின்னாடு நல்ல தமிழுடைத்து” என்று கூறியதுவும், பாண்டியன் “தமிழ் நாடன்” என வழங்கியதுவும் அறியத்தக்கது. தமிழரை அண்டித் தொழுது தொழில் கற்று வாழ்ந்த மக்கள் தமிழைக் கற்று சுத்தத்தமிழ் பேசியவர் ஒரு புறம் இருக்க, தமிழரை அண்டாமலும், தமிழை அறைகுறையாகக் கற்று நன்கு அதை உச்சரித்துப் பேசத் தெரியாதவர்களும் அந்நாளில் நாட்டில் இருந்தனர். இத்தகையோர் பேசிய பேச்சுக்கள் தான் சேரிமொழி, வழுவுச்சொல், விரவுமொழி, தழுவுமொழி எனப் பலவாறு வழங்கின எனலாம். இக்காலத்திலும் கூடத் தமிழை நன்றாய்ப் பேசத்தெரியாத சில வகுப்பார்
தமிழகத்தில் இருந்து வருகின்றனர் என்பதுவும் குறிப்பிடத்தக்கது. மதுரை மாவட்டம் பிற மலைக்கள்ளர் பேசும் தமிழ் அப்பகுதிவாழ் பிற மரபினர் புரிந்து கொள்ள முடியாதவாறு உள்ளதாகத் தெரிகிறது. (ப.மு. அஜ்மல்கான். பிறமலைக்கள்ளர் சமுதாய மொழியியல்) ஏன்? புதுக்கோட்டைப் பகுதி வாழ் கள்ளர் பேசும் தமிழ் அங்குள்ள மற்ற மரபினர் புரிந்து கொள்ள முடியாத ஒன்றாய் உள்ளது என் மொழியியல் ஆராய்ச்சியாளர் கூறுவர். 'பறையன் பேச்சு அரைப்பேச்சு, (Paraya talk is half talk') என்ற பழமொழியும் நினைவு கூரத்தக்கது “தமிழரென்போர்' பறையர் தவிர்த்த மற்றவர்” என்று சென்னைப் பல்கலைக் கழகத் தமிழ் அகராதியில் கண்டுள்ளது இதனாலே போலும். தமிழைத் தாய் மொழியாகக் கொண்டவருள் ஒரு சாராரைப் பழந்தமிழர் என்று தனிமைப் படுத்தும்போது தமிழைப் புதிதாய்த் தாய்மொழியாகக் கொண்டவர் உள்ளனர் என்பது சொல்லாமலே விளங்கும். ஆங்கிலேயரிடம் இந்திய நாடு அடிமைப்பட்டபோது, அவர் ஆங்கிலத்தை ஆட்சி மொழியாகக் கொள்ளுமுகத்தான், அதை நாட்டில் விரைவில் பரப்ப ஆங்காங்கு பள்ளிகள் நிறுவி, இந்தியருக்கு ஆங்கில மொழியைக் கற்பிக்க வகை செய்தனர். அதே போன்று இந்திய நாடு ஆங்கிலேயரிடமிருந்து விடுதலை அடைந்து சுயாட்சி பெற்றபின், இந்தி மொழி இந்நாட்டின் பொது மொழிகளில் ஒன்றாக ஏற்பட்டதன் விளைவாய், அதை இந்திய நாடு முழுவதும் பரப்பும் முகத்தான் மத்திய அரசு முயற்சி எடுத்து வருவதுவும் நாம் அறிந்ததே. சோழ நாட்டிற்கு வடக்கே அருவாநாடு. அருவா வடதலை நாடு இருந்ததென அறிகிறோம். இப்பகுதியில் குறும்பர், ஒளியர் , அருவாளர், எயினர் முதலிய பல இனமக்கள் இருந்ததாகத் தமிழ் இலக்கியங்கள் கூறுகின்றன. ஆனால் தற்காலத்தில் அவர்களில் சிறுபான்மை குறும்பர் தவிர்த்து மற்றப்பிரிவினர் இருப்பதாகத் தெரியவில்லை. மாறாக இன்று இங்கு பள்ளி (படையாட்சி, வன்னியர்) பறையர் ஆகிய இரு வகுப்பினரும் எண்ணிக்கையில் பெரும்பான்மையினராய் இருந்து வரக்காண்கிறோம். இவர்கள் பண்டைய ஒளியர், அருவாளர், எயினர் மரபினரா? இது ஆய்வுக்குரியது. அக்காலத்தில் ஆறுகளுக்குக் கரைகள் இல்லாததால், அவை கட்டுப்பாடின்றி காட்டாறுகளாய் எதேச்சையாய் ஓடிக்கொண்டிருந்தன. காட்டுவாணர் அவற்றின் நீரைப் பயன்படுத்திப் பயிர்த்தொழில் செய்யும் அறிவுத் திறன் பெற்றிருக்கவில்லை எனத் தெரிகிறது. ஆகத் தமிழர் இங்கு குடியேறின பிறகுதான் ஆறுகளுக்குக் கரைகள் கண்டு கால்வாய்கள் அமைத்து, குளங்கள் வெட்டி அவற்றில் நீரைத்தேக்கி காடுகளை அழித்து, நிலத்தை வெட்டிக் கொத்தி சமப்படுத்தி, அவைகளைச் சுற்றி வரப்புகள் அமைத்து வயல்களாக்கி, நீரின் உதவியால் நெல், கரும்பு, வாழை, மஞ்சள், பருத்தி முதலிய வாழ்க்கைக்கு இன்றியமையாத பொருள்களை உற்பத்தி செய்து ஊர், நகரங்கள் அமைத்து வாழ்ந்ததாகச் சங்க இலக்கியங்கள் பேசுகின்றன. இதன் காரணமாகவே மூவேந்தரின் தலைநகரங்கள் தமிழகத்தின் முக்கிய ஆறுகளின் கரைகளிலேயே அமைந்தன எனலாம். காவிரிப்பகுதியை வளப்படுத்திய பின் சோழமன்னன் கரிகாலனும், சோழ இளவரசன் இளந்திரையனும் தொண்டை நாட்டிலிலுள்ள பாலாற்றுப் பகுதியில், அங்கிருந்த குறும்பர், ஒளியர், அருவாளர், எயினர் முதலிய மரபினரை வென்று அடக்கி அப்பகுதியில் தமிழ் மரபினரைக் குடியேற்றி பயிர்த் தொழிலை அங்கு தோற்றுவித்து. நாட்டை வளப்படுத்தினர் என்பர். இதற்குச் சங்க இலக்கியங்களாகிய பட்டினப்பாலை, பெரும்பாணாற்றுப் படை சான்றாக அமையும். நாட்டில் மழையின்றிப் பஞ்சம் ஏற்பட்டு மக்கள் வறுமையால் அல்லலுற, மூவேந்தரும் தேவலோகம் சென்று, தேவேந்திரனிடம் மழை வரம் வேண்டியதாகத் திருவிளையாடல் புராணம் கூறும், பாண்டியன் உக்கிரப் பெருவழுதிதேவலோகத்திலிருந்து தேவ கன்னியர் மக்களில் நான்கு குடும்பத்தாரைச் சென்னெல், கன்னெல், கதலி, பனை முதலிய வித்துக்களுடன் ரிஷபம், சாவி இவற்றுடன் அழைத்து வந்து, நாட்டில் கிணறுகள் தோண்டி, வேளாண்மை கண்டு நாட்டை செழிக்கச் செய்து, மக்களின் பசிப்பிணியைப் போக்கியதாகக் கரிவலம் வந்த நல்லூர் (ARE 432/1914)சீவிலிபுத்தூர் (ARE 588/1926) கல்வெட்டுகள் கூறுகின்றன.
சூரவாதித்த சோழன் வெற்றிலையை மலேயாவிலிருந்து கொண்டு வந்து சோழ நாட்டில் பயிரிட்டதாகச் செவ்வந்திப் புராணமும், உறையூர்ப் புராணமும் கூறுகின்றன. புராண மரபுச் சோழன்காந்தமன் குடகு மலையைப் பிளந்து காவிரியைச் சோழ நாட்டில் ஓடச் செய்ததாகப் பழஞ் செய்தி மூலம் அறிகிறோம். சோழன் கரிகாலன் காவிரி ஆற்றுக்குக் கரை கட்டினான் என்பது பொன்னிக்குக் கரை கண்ட பூபதியே, என மூவரு லாவில் ஒட்டக்கூத்தர் கூறுவதன் மூலம் அறிகிறோம். மூவேந்தரும் ஒரே தாயின் சேய்கள் எனவும், ஒரு காலத்தில் மூவரும் கொற்கையில் தங்கியிருந்ததாகவும், அவருள் மூத்தவனாகிய பாண்டியன் அங்கேயே தங்கிவிடச் சேரனும் சோழனும் பாண்டியனைவிட்டுப் பிரிந்து வடக்கு நோக்கி வந்து சேரன் வஞ்சியிலும், சோழன் உறையூரிலும் தலைநகரை அமைத்து அப்பகுதிகளை ஆண்டு வந்தனர் எனவும் செவிவழிச் செய்தியாக அறிகிறோம்.
மூவேந்தரின் தொன்மை பற்றிய
“வழங்குவதுள் வீழ்த்த கண்ணும் பழங்குடி
பண்பின் தலைப் பிரிதல் இன்று” (குறள் 955)
என்ற செய்யுளுக்கு உரைகண்ட பரிமேலழகர் “பழங்குடி” என்ற சொல்லுக்கு சேர, சோழ, பாண்டியர் என்றார்ப் போலப் படைப்புக்காலந்தொட்டு மேம்பட்டு வரும் குடி' என்று பொருள் கூறுவார். இளங்கோ அடிகள் பதி எழில் அறியாப் பழங்குடி கெழி இய (சிலம்பு ; மங் 15) என்பார். இரண்ய முட்டத்துய பெருங்குன்றூர்ப் பெருங்கௌசிகனார் இவரைப் பதியெழில் அறியாப் பழங்குடி கெழி இ என்று கூறுகின்றார். (மலைபடு 479). ஐயாரிதனார் இவரைக் கல் தோன்றி மண்தோன்றாக் காலத்தே வாளோடு முன் தோன்றி மூத்தகுடி” (பு. பெர். வெ. 35) என்பார். இந்த சேர, சோழ, பாண்டிய நாடுகளில் பாண்டிய நாடே பழைமையான தென் வரலாறு கூறும். மாணிக்கவாசகர் பாண்டிய நாடே பழம்பதி' என்று கூறுவதுவும் இதனாலே யாம். எனவே மூவேந்தருள் பாண்டியரே மிகவும் பழமையானவர் என்றும் சேரனும் சோழனும் அரசுகளைத் தோற்றுவிப்பதற்கு வெகுகாலத்திற்கு முன்பே பாண்டியன் அரசைத் தோற்றுவித்தான் என்றும் கருதவேண்டியுள்ளது. இதன் காரணமாகவே ஏற்கனவே கூறியதுபோல் பாண்டியன் நாட்டில் தமிழைப் பரப்ப தமிழ்ச்சங்களை நிறுவ வேண்டியதாயிற்று எனலாம். பாண்டியன் என்ற சொல் பண்டு, பாண்டு என்ற சொற்களிலிருந்து பிறந்ததர்கத் தெரிகிறது. பழமை, பழையோன், பழமையானவன், பண்டையோன் என்ற சொற்களையும் உற்று நோக்குக . தமிழ் மூவேந்தரும் ஒரே குடியைச் சேர்ந்தவர் என்பதுவும், அக்குடி பெருங்குடி என்பதுவும் பெருநில முழுதாளும் பெருமகன் தலைவைத்த ஒரு தனிக்குடி” என இளங்கோ அடிகள் கூற்றால் நன்கு புலனாகும் (சிலம்பு 1-31).
மூவேந்தருக்கும் தனித்தனி நாடுகள் இருந்தது போன்று, தனித்தனிப் படை, கொடி, குடை, குடி, முரசு, களிறு, தேர், தார், முடி இவை ஒன்பதும் உண்டு என்பது.
"படையுங் கொடியுங் குடையும் முரசும் நடை நவில் புரவியும் களிறும் தேரும் - - தாரும் முடியும் நேர்பன பிறவும்
தெரிவு கொள் செங்கோல் அரசர்க்குரிய" (தொ; பொ; 616)
என்ற மேற்கோளால் விளங்கும்.
படையில் காலாட்படை, குதிரைப்படை, யானைப்படை, தேர்ப் படை இவற்றோடு சோழருக்குக் கடற்படையும் இருந்ததென்பர் தமிழறிஞர் சேரருக்கு விற்கொடியும், சோழருக்கு புலிக்கொடியும், பாண்டியருக்கு மீனக்கொடியும் ஏற்பட்டிருந்தது. அடையாள மாலையாகச் சேரருக்குப் பனம் பூவும், சோழருக்கு அத்திப்பூவும், பாண்டியருக்கு வேப்பம் பூவும் ஏற்பட்டிருந்ததென்பது.
"போந்தை வேம்பே ஆரென வரூஉம்” (தொ; பொ; புற 63)
என்பதால் தேற்றம்.
மூன்று நாடுகளும் வெவ்வேறு விதத்தில் சிறப்புடையவை. சேரநாடு மலைவளம் மிகுந்து யானைகளுக்குப் பேர் பெற்றது. சோழநாடு வயல்வளம் மிகுந்தது. அங்கு நெல், கரும்பு, வாழை முதலிய உணவுப் பொருள்கள் மிகுதியாய் விளைவிக்கப்பட்டன. பாண்டிய நாடு குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல் என்ற நானிலங்களையும் உள்ளடக்கியது என்பர். இந்நாடு முத்துக்குப் பேர் பெற்றது. இதன் கடலில் இருந்து முத்துக்கள் எடுத்து அவற்றைக் கடல் கடந்த நாடுகளுக்கு ஏற்றுமதி செய்தனர். இந்த மூன்று நாடுகளின் சிறப்பைப்பற்றி ஒளவையார் கூறுவதாவது:
"வேழமுடைத்து மலைநாடு மேதக்க சோழவளநாடு சோறுடைத்து - பூழியர்கோன் நின்னாடு நல்ல முத்துடைத்து"
சங்ககால மன்னருள் சேரன் செங்குட்டுவன், தலையாலங் கானத்துச் செருவென்ற பாண்டியன் நெடுஞ்செழியன், சோழன் கரிகாலன் ஆகிய மூவரும் பிரசித்தி பெற்றவர் என அறிஞர் கூறுவர்.
சங்ககாலத் தமிழர் உயர்ந்த பண்பாடு, நாகரிகம், கொடை, வீரம் இவற்றில் சிறந்து யாதும் ஊரே யாவரும் கேளிர்' எனப் பரந்த நோக்குடன் வாழ்ந்தனர். தம்மை அண்டி வந்தவர்க்கெல்லாம் வாரி வழங்கி வாழ்வளித்தனர். தங்கள் வாழ்க்கையில் புகழ் பெற வேண்டும் என்பதே அவரது முக்கிய குறிக்கோள் ஆகும். போரிலும் அறத்தையே கடைப்பிடித்தனர். அதற்கென விதிமுறைகளையும் வகுத்திருந்தனர். நிராயுதபாணிகள் வலி குன்றியவர், புறமுதுகு காட்டி ஓடுபவர், பெண்டிர், குழந்தைகள், முதியோர், அறவோர் இவர்களுக்குத் தீங்கிழையார். கால்நடைகளுக்கும் சேதம் விளைவிக்கார். அக்காலத்தில் பெண்களில் பலர் பெரும் புலவர்களாகத் திகழ்ந்தனர். அமுதமே கிடைப்பதாயினும் அவற்றை அன்றையத் தமிழர் தனித்து உண்பதில்லை. அனாவசியமாய் ஒருவரிடம் சினங்கொள்ள மாட்டார். பிறர் அஞ்சுவதற்குத் தாமும் அஞ்சி வாழாது சோம்பி இருக்க மாட்டார். புகழ்தரும் செயலுக்காகத் தம் உயிரைப் பெரிது எனக்கருதி விலகியிருக்கமாட்டார். மாறாக அதைச் துச்சமாகக் கருதி உயிரை விடுவர். உலகம் முழுவதுவும் பெறுவதாயினும் தீச்செயலை செய்யார். அயர்வு அற்றவர், மாட்சிமைப்பட்டவராகவே வாழ்பவர். தமக்கென அவர் யாதும் செய்யாது , பிறர்க்கென வாழும் உண்மையான இயல்புடையவர். இம்மாதிரியான சிறப்பியல்புகளை அன்றையத் தமிழர் கொண்டிருந்ததனாலேயே அந்நாளில் உலகம் சிறப்புற்றிருந்தது என்பர். இச்சிறப்பு இயல்புகளைப் பற்றிக் கடலுள் மாய்ந்த பாண்டியன் இளம்பெருவழுதி கூறுவதாவது: -
"உண்டால் அம்ம இவ்வுலகம்; இந்திரர்
- அமிழ்தம் இயைவதாயினும் இனிது எனத்
தமியர் உண்டலும் இலரே, முனிவிலர்
துஞ்சலும் இலர்; பிறர் அஞ்சுவது அஞ்சி
புகழ் எனின் உயிருங் கொடுக்குவர்; பழி எனின்
உலகுடன் பெறினும் கொள்ளலர்; அயர்விலா
அன்னமாட்சி அனையராகித்
தமக்கென முயலா நோன்தாள்
பிறர்க்கென முயலுநர் உண்மையானே"
(புறம் 182)
சங்க காலத்தில் நிலவிய மக்கள் பழக்க வழக்கம், நாகரிகம், பண்பாடு, ஆட்சிமுறை, மன்னர்கள் நடத்திய போர் இவைகள் பற்றி சங்க இலக்கியங்கள் விரிவாகப் பேசுகின்றன. அந்த இலக்கியங்கள் எட்டுத்தொகை, பத்துப்பாட்டு, பதினெண்கீழ்க்கணக்கு எனப்படும். தமிழ் எழுத்து, சொல், பொருள் பற்றித் தொல்காப்பியம் என்ற இலக்கண் நூலும் சங்க காலத்தில் இயற்றப்பட்டுள்ள தென்பர் ஆராய்ச்சியாளர். இத்தொல்காப்பியம் இடைச்சங்க காலத்தில் இயற்றப்பட்ட தென்பர் சில தமிழறிஞர். வையாபுரிப்பிள்ளை போன்றோர் அது மிகவும் பிற்காலத்தில் தோன்றியதென்பர். தொல்காப்பியத்திற்கு முன்னர் அகத்தியம் என்ற இலக்கண நூல் இருந்ததென்றும், தொல் காப்பியர் அகத்தியர் மாணாக்கருள் ஒருவர் என்றும் கூறுவதுண்டு. நிற்க.
கி.பி மூன்றாம் நூற்றாண்டின் இறுதியில் களப்பிரர் என்ற ஒரு இனத்தார் கருநாடகம் வழியாகத் தமிழகத்திற்குள் புகுந்து குழப்பம் விளைவித்ததால், மூவேந்தர் அரசும் நிலை குலைந்து மதுரையில் நடந்து வந்த மூன்றாவது தமிழ்ச் சங்கமும் அத்துடன் முடிந்து விட்டதென்பர். களப்பிரர் நாட்டில் புகுந்தபின், தமிழகத்தில் நடந்த செய்திகள் பற்றி ஒன்றும் சரியாய் அறிவதற்கில்லை . களப்பிரர் யார்? என்று ஒருவரும் திட்டவட்டமாகக் கூறக்காணோம். கி.பி. 4 ஆம் நூற்றாண்டின் இறுதியில் வடக்கே பல்லவர் காஞ்சியைக் கைப்பற்றி தொண்டை மண்டலப் பகுதியை ஆளத் தொடங்கினர் என்பர். கி.பி. 7 ஆம் நூற்றாண்டில் இவரது ஆட்சி சோழ நாட்டையும் உள்ளடக்கித் தெற்கே புதுக்கோட்டை வரைப் பரவியிருந்ததென்பர் வரலாற்றிஞர். கி.பி. 6 ஆம் நூற்றாண்டு மத்தியில் பாண்டியன் கடுங்கோன் தோன்றி, களப்பிரருடன் பொருதி அவரை வெற்றி கண்டு பாண்டிய அரசை மீண்டும் மதுரையில் தோற்றுவித்தான். இச்சொய்தி வேள்விக்குடி தளவாய்புரம் செப்பேடுகள் மூலம் அறிய முடிகிறது. மூன்றாம் தமிழ்ச் சங்கம் முடிவுற்று, பாண்டியன் கடுங்கோன் களப்பிரரை வென்று. மதுரையை மீட்கும் வரையிலுள்ள காலப்பகுதியை இருண்ட காலம் என்று வரலாற்றறிஞர் கூறுவர். கி.பி. 6ம் நூற்றாண்டின் இறுதியில் பல்லவ மன்னன் சிம்ம விஷ்ணு சோழனை வென்று அவன் நாட்டைக் கைப்பற்றியதாக வேலூர்ப் பாளையம், காசாக்குடி செப்பேடுகள் கூறுகின்றன. இக்காலத்தில் சோழ மன்னர் வலுவிழந்து கும்பகோணம் அருகிலுள்ள பழையாரையிலிருந்து வந்ததாகப் பெரிய புராணத்திலிருந்து தெரிகிறது. சமண சமயத்தை விட்டுச் சைவ சமயத்தைத் தழுவிய பாண்டியன் நெடுமாறன் என்ற கூன் பாண்டியனின் தேவி மங்கையர்க்கரசி சோழ இளவரசி என்பதுவும் குறிப்பிடத்தக்கது. பல்லவர் சோழ நாட்டின் மீது ஆதிக்கம் செலுத்திய போது பாண்டியர் வலுப்பெற்று பல்லவரோடு பொருதி சோழநாட்டின் சில பகுதிகளைக் கைப்பற்றி காவிரி வரை தமது ஆட்சி எல்லையை விரிவுபடுத்தியிருக்கின்றனர். இதற்காகப் பாண்டியர் பல்லவர் இடையே பல போர்கள் நிகழ்ந்திருக்கின்றன. கி.பி. 9 ஆம் நூற்றாண்டின் மையப்பகுதியில் சோழர் மரபில் விசயாலயன் தோன்றி அப்போது தஞ்சையை ஆண்டு வந்த முத்தரையரை வென்று சோழ அரசை தஞ்சையில் நிறுவினான். இதற்குச் செந்தலைக் கல்வெட்டு சான்றாகும். இம்மன்னன் முத்தரையரோடு நடத்திய போர்களில் அவனது உடம்பில் 96 காயங்கள் ஏற்பட்டதென வரலாறு கூறும். சங்க காலத்திற்குப் பிறகு சேர அரசு எந்நிலை எய்தியது என்பது பற்றி அறிய சரியான வரலாறு எழுதப்பட்டிருப்பதாகத் தெரியவில்லை . சேரமான் பெருமாளும் அவனது மரபினரும் கி.பி. 8 ஆம் நூற்றாண்டிலிருந்து சேர நாட்டை நம்பூதிரிகளின் கைப்பாவையாக இருந்து ஆண்டு வந்ததாகச் சில வரலாற்றறிஞர் கூறுவர். நாளாக ஆக சோழ அரசு வலுப்பெற்று வந்தது. அதேசமயம் பல்லவ அரசும், பாண்டிய அரசும் வலுவிழந்து அவை சோழரின் மேலாதிக்கத்திற்குட்பட்ட நிலையை எய்தின. சேரநாடும் சோழர் ஆட்சிக்குட்பட்டது. சோழ அரசின் எல்லை வடக்கே துங்கப்பத்திரை நதிவரை விரிவடையலாயிற்று. இக்காலத்தில் இந்திய நாட்டிலேயே சோழ அரசு ஒரு பெரிய வல்லரசாகத் திகழ்ந்தது என வரலாற்றறிஞர் கூறுவர். இடைக்காலச் சோழ அரசர்களில் முதலாம் இராசராசன், அவன் மகன் இராசேந்திரன் இருவரும் பிரசித்தி பெற்றவர் ஆவர். இராசேந்திரனுக்குப் பிறகு அவனது மைந்தர்கள் இராசாதிராசா 1, - இராசேந்திர II, வீர இராசேந்திரா, வீர ராசேந்திராவிற்குப் பிறகு அவனது மைந்தன் அதி இராசேந்திராவும் ஆட்சி செய்தனர். அதன்பிறகு முதலாம் இராசேந்திரனின் மகள் வயிற்றுப் பேரனும், சாளுக்கிய மன்னனான முதலாம் குலோத்துங்கனும், அவனுக்குப் பிறகு அவனது வழிவந்தோரும் சோழ நாட்டு மன்னர்களாக ஆட்சிக்கு வந்தனர். சாளுக்கியரும் சோழர் போன்று சூரிய குலம் என்பர். எனவே இவர் உறவினர் ஆவர். சோழ அரசு சுமார் நானூறு ஆண்டுகளாக ஒரு பெரிய வல்லரசாகத் திகழ்ந்தது. கி.பி. 12 ஆம் நூற்றாண்டின் இறுதியில் பாண்டிய நாட்டில் குலசேகர பாண்டியனுக்கும், வீரபாண்டியனுக்கும் இடையே அரசுப் பதவிப் போட்டி காரணமாய் உள்நாட்டுக் கலகம் ஏற்பட்டது. குலசேகர பாண்டியன் இறந்தபின், அவன் மகன் விக்கிரம பாண்டியன் இப்போர்களில் ஈடுபட்டான். சோழமன்னரும், இலங்கை மன்னன் பராக்கிர பாகுவும் எதிர் தரப்பில் இப்போர்களில் கலந்து கொண்டனர். சிங்களப் படைகள் பாண்டிய நாட்டின் கீழ் பகுதியில் சில ஊர்களைப் பிடித்தன. இராமேசுவரம் இதன் கைவசமாகி விட்டது. இப்படை நீண்ட காலமாய் இராமேசுவரம் பகுதியில் நிறுத்தப்பட்டிருந்ததாகத் தெரிகிறது. கடைசியாக, இது தமிழகத்தின் கீழ் பகுதியிலேயே நிலைத்து விட்டதாகத் தெரிகிறது. கி.பி. 13 ஆம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் சோழ அரசு வலி குன்றியது. இந்நிலையில் வடக்கேயுள்ள குறுநில மன்னர் சோழர் ஆட்சியிலிருந்து தங்களை விடுவித்துக் கொண்டு தங்கள் தங்கள் ஆளுகைக்கு பட்ட பகுதிகளை தன்னுரிமையுடன் ஆளத் தொடங்கினர். அதே போன்று பாண்டியரும், சோரும் வலுப்பெற்று தங்கள் தங்கள் நாடுகளைச் சோழர் ஆதிக்கத்திலிருந்து மீட்டு சுயேட்சையுடன் ஆளத் தொடங்கினர். அதோடு மட்டுமின்றிப் பாண்டிய அரசு வலுப்பெற்று ஒரு பெரிய வல்லரசு நிலையை எய்தியது. பாண்டியன் சடாவர்மன் சுந்தரபாண்டியன் சோழநாட்டின் மீது படையெடுத்து சோழனை வென்று அவனைப் பாண்டியருக்குத் திறை செலுத்தும் சிற்றரசனாக்கினான். சோழன் பாண்டிய அரசுக்கு விரோதமான செயல்களில் ஈடுபட்டதால் சடாவர்மன் சுந்தரபாண்டியன் இரண்டாவது முறை சோழ நாட்டின் மீது படையெடுத்தான். அப்படை எடுப்பில் அவன் சோழநாட்டில் பல பகுதிகளை அழித்தான். தஞ்சையைத் தணல் கொண்டு கொழுத்தினான்' என அவனது மெய்க்கீர்த்தி கூறுகின்றது. காவிரிப் பூம்பட்டினத்தில் கரிகாலன் முன்னிலையில் பட்டினப்பாலை அரங்கேற்றத்திற்கு அமைக்கப்பட்ட பதினாறுகால் மண்டபம் மட்டும் இடிக்கப்படாமல் விடுபட்டது என்பர் ஆராய்ச்சியாளர். சுந்தர பாண்டியன் சோழநாட்டின் அனேக பகுதிகளைத் தனக்கு உதவியவர்களுக்கும், வைதீகர்களுக்கும், கோயில்களுக்கும் பங்கிட்டு கொடுத்திருக்கிறான். அருப்புக்கோட்டை முதலிய ஊர்களிலுள்ள கல்வெட்டுகள் இதற்குச் சான்று பகரும். மூன்றாம் குலோத்துங்கச் சோழன் காலத்தில் பாண்டியன் சோழன் செய்த உதவியை மறந்து சிங்களப்படையுடன் சேர்ந்து கொண்டு சோழநாட்டிற்கு விரோதமான செயல்களில் ஈடுபட்டதினால் மதுரை நகரைச் சோழரின் படைகள் அழித்தான். அத்துடன் மூன்றாம் குலோத்துங்கன் பாண்டியனை மிகவும் அவமானப்படுத்தினான். பின்னாளில் இதை மனத்திற்கொண்ட சுந்தரபாண்டியன் சோழ நாட்டைத் தணல் கொண்டு கொழுத்தினான் என்பர். பாண்டியப் பேரரசு ஒரு நூற்றாண்டு புகழுடன் விளங்கியது. அக்காலத்தில் இங்கு வந்து போன மேனாட்டு அறிஞன் மார்க்கப்போலோ பாண்டிய நாட்டின் செல்வச் செழிப்பு மற்றம் சிறப்புகள் பற்றி வெகுவாகப் புகழ்ந்திருக் கின்றான்.
கி.பி. 14 ஆம் நூற்றாண்டில் பாண்டிய அரசு வலு விழந்தது. முகமதியர் அடிக்கடி தமிழகத்திற்குள் புகுந்து ஆலயங்களை இடித்து அவைகளிலுள்ள பொன்னாபரணங்களையும், விலையுயர்ந்த பொருள்களையும் கொள்ளையடித்து ஊர்களைக் கொழுத்தி, மக்களைக் கொன்று குவித்திருக்கின்றனர். ஒரு சில வரலாற்றாசிரியர் குலசேகரபாண்டியன் தன் பட்டத் தரசி மகன் சுந்தரபாண்டியனுக்குப் பட்டம் சூட்டாமல், தன் காதற்கிழத்தி மகன் வீரபாண்டியனுக்குப் பட்டம் சூட்டியதாகவும், அதனால் சுந்தரபாண்டியன் வெகுண்டு தன் தந்தை குலசேகர பாண்டியனைக் கொலை செய்து விட்டதாகவும், அவனே மாலிக்கபூரைப் பாண்டிய நாட்டின் மீது படை எடுக்க அழைத்து வந்ததாகவும் கூறுவர். ஆனால் இக்கூற்றுக்களை குடந்தை N. சேதுராமன் மறுக்கிறார். இவர் சுந்தரபாண்டியன் தன் தந்தையைக் கொலை
செய்யவில்லை என்றும், மாலிக் கபூரைப் பாண்டிய நாட்டின் மீது படை எடுக்க அழைத்து வரவில்லை என்றும், குலசேகர பாண்டியன் மாலிக்கபூர் படை எடுப்பிற்குப் பின் பல ஆண்டுகள் உயிர் வாழ்ந்திருந்ததாகவும், அவன் இயற்கை மரணம் எய்தியதாகவும், வீரபாண்டியனும் அவன் தம்பி சுந்தரபாண்டியனும் சேர்ந்தே மாலிக்கபூரை எதிர்த்துப் போரிட்டதாகவும், மாலிக்கபூரை அழைத்தவன் இராசேந்திர பாண்டியன் என்றும், அவன் குலசேகரபாண்டியன் தம்பி மகனாய் இருக்கலாம் என்றும், பின்னாளில் அவன் தன் தவறை உணர்ந்து சுல்தான் உறவை கத்தரித்துக் கொண்டு தன் சகோதரர்களான வீரபாண்டியன், சுந்தரபாண்டியன் இவர்களோடு சேர்ந்து கொண்டதாகவும் கூறுவார். (குடந்தை N. சேதுராமன் பாண்டியர் வரலாறு பக். 145).
கி.பி. 14 ஆம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் மாலிக்கபூர் பாண்டிய நாட்டில் புகுந்து கொலை, கொள்ளைகள் பல நடத்தித் திரண்ட செல்வத்தை யானைகள், வண்டிகள் இவற்றில் ஏற்றி டில்லிக்கு எடுத்துச் சென்றிருக்கிறான். பாண்டியர் படையில் துருக்கர் 20,000 பேர் இருந்தனர் என்றும், மாலிக்கபூர் படை எடுப்பின் போது அவர்கள் பாண்டியனுக்கு எதிராக மாலிக்கபூருடன் சேர்ந்து கொண்டதாகவும் சில வரலாற்றாசிரியர் கூறுவர். இவரது துரோகச் செயலின் காரணமாய்ப் பாண்டியர் படை வலுவிழந்து மாலிக்கபூரை விரட்டியடிக்க முடியாது போய் விட்டது போலும். இக்காலக் கட்டத்தில் பாண்டியர் கீழிருந்த குறுநில மன்னர் பாண்டியர் ஆட்சியிலிருந்து தங்களை விடுவித்துக் கொண்டு சுயாட்சி நிலை எய்தினர். இச்சமயத்தில் சேர மன்னன் பாண்டிய நாட்டின் மீது படை எடுத்து அதன் வடக்கிலுள்ள சில பகுதிகளைக் கைப்பற்றிக் கொண்டான். மதுரையை முகமதியத் தலைவன் ஜமாலுதீன் கைப்பற்றியதன் விளைவாய்ப் பாண்டியர் மதுரையைக் கைவிட்டு வெளியேற வேண்டிய நிலை எழுந்தது. துருக்கர் மதுரையில் 40 ஆண்டுகள் ஆட்சி நடத்தினர். இக்காலத்தில் அவர்கள் நடத்திய ' அட்டூழியங்கள் கொஞ்ச நஞ்சமல்ல. கி.பி. 14 ஆம் நூற்றாண்டின் இறுதியில் விசய்நகர அரசின் படைத்தலைவர்களில் ஒருவனாகிய குமாரகம்பண்ணன் மதுரை வந்து துருக்கருடன் பொருதி அவரைத் துரத்தி விட்டுத் தானே மதுரையில் இருந்து ஆட்சி புரிந்தான். துருக்கர்களை மதுரையை விட்டுத் துரத்துவதற்குப் பாண்டியர் உதவி புரிந்தனர். ஆனால் குமார்கம்பண்ணன் ஆட்சியைப் பாண்டியரிடம் ஒப்படைக்காமல் அதைத் தானே வைத்துக் கொண்டான் என அறிகிறோம். குமாரகம்பண்ண னுக்குப் பின் அவன் மகனும், அதன் பின்னர் அவனது (குமாரகம்பண்ணன்) மருமகனும் ஆட்சி செய்தனர். அதன் பிறகு இலக்கண நாயக்கரும், மதன நாயக்கரும் மதுரைப் பகுதியை ஆண்டனர். இலக்கண நாயக்கர் பாண்டிய மன்னனுடைய வைப்பாட்டி, காளையார் கோவில் தாசி அபிராமி என்பவளின் மக்களாகிய சுந்தரத்தோள் மாவலி வாணாதிராயர், காளையார்சோமனார், அஞ்சாத பெருமாள் , முத்தரசர் இவர்களை மதுரைக்கு அழைத்து வந்து பாண்டியனுக்குப் பிறந்த பிள்ளைகள் என்று பட்டம் கட்டி மதுரையை ஆண்டு வரச் செய்ததாகத் தெரிகிறது. இவர்கள் கி.பி. 1428 முதல் 1477 வரை ஆட்சி செய்தனர் என்பர். பழைய பாண்டியர் வழி வந்தோர் இக்காலத்தில் மதுரையை விட்டுத் தெற்கே சென்றனர்.
முகமதியர் படையெடுப்பும், அதைத் தொடர்ந்து விசய நகர ஆட்சி தமிழகத்தில் ஏற்பட்டதன் விளைவாய் நாட்டில் குழப்பங்கள் மலிந்தன. பாண்டியர் வலிகுன்றி சிறுசிறு இடங்களைக் குறுநில மன்னர் நிலையில் ஆட்சி செய்து வந்தனர் சோழ பாண்டிய நாடுகள் மீது வடுகர் பல தடவை தாக்குதல்கள் நடத்திப் பொருள்களைக் கொள்ளையடித்துச் சென்றுள்ளனர். நரச நாயக்கன் தமிழகத்திற்குள் புகுந்து ஏராளமான பொருள்களைக் கொள்ளையடித்துச் சென்றுள்ளான். இக்காலத்தில் சேர மன்னருக்கும் பாண்டிய மன்னருக்கும் இடையே பல போர்கள் நிகழ்ந்திருக்கின்றன. விசய நகர அரசு கி.பி. 1565ல் முகமதியரால் தோற்கடிக்கப்பட, அது வலிகுன்றியது. தமிழகத்தில் செஞ்சி, தஞ்சை, மதுரை முதலிய இடங்களில் விசய நகர அரசுப் பிரதிநிதிகளாய் இருந்த தெலுங்கு நாயக்கர் தன்னுரிமை பெற்றனர். இக்காலத்தில் தெலுங்கர் பெருவாரியாகத் தமிழகத்தில் குடியேற்றப்பட்டு அரசு பதவிகளில் அமர்த்தப்பட்டிருக்கின்றனர். இதற்கு இடையே மதுரையில் விசய நகர ஆட்சிக்குத் திறை செலுத்தி வந்த சந்திரசேகர பாண்டியனை வீரசேகர சோழன் வென்று, பாண்டிய அரசையும் தன் வசப்படுத்திக் கொண்டான். இது பற்றி சந்திர சேகரப் பாண்டியன் விசயநகர அரசனிடம் முறையிட, அவன் நாகம்மன் என்ற படைத்தலைவனைத் தெற்கே அனுப்பிவைத்தான். இவன் வீரசேகரனை வென்று ஆட்சியை சந்திரசேகரபாண்டியனிடம் ஒப்புவிக்காமல் அதைத் தானே வைத்துக் கொண்டான். இங்கு கூறப்படும் வீரசேகர சோழன் தெலுங்குச் சோழன் எனக் கருதவேண்டியுள்ளது. ஏனெனில் சோழநாடு விசயநகர ஆட்சிக்கு உட்பட்ட போது, சோழ அரசவம்சம் முற்றிலும் மறைந்து விட்டதென்பர் வரலாற்றிஞர். நாகம்மன் செய்கை பற்றி சந்திரசேகர பாண்டியன் விசயநகர மன்னனிடம் முறையிட நாகம்மநாயக்கன் மகன் விசுவநாதன்
மதுரைக்கு அனுப்பப்பட்டான். இவன் தன் தந்தையை அடக்கி, அவனைக் கைதியாக விசயநகர அரசனிடம் அழைத்துப்போய் ஒப்பு வித்தான். விசயநகர மன்னன் விசுவநாதனின் வீரச்செயலைப் பாராட்டி அவனையே மதுரையில் தனது பிரதிநிதியாக இருந்து ஆளும்படி செய்தான். கி.பி. 16 ஆம் நூற்றாண்டில் சந்திரசேகர பாண்டியனோடு பொருதிய வீரசேகர சோழனைத் தவிர, இன்னுமொரு சோழ இளவரசன் கூடலூர்ப் பள்ளத்தாக்கில் நாயக்கர் ஆட்சியை எதிர்த்துப் போர் தொடுத்திருக்கின்றான். மதுரையை விட்டுத்தெற்கே சென்ற பாண்டியர் கொற்கை, திருநெல்வேலி, தென்காசி, கரிவலம் வந்த நல்லூர் முதலிய 4 இடங்களிலிருந்து ஆட்சி செய்து வந்திருக்கின்றனர். நாயக்கர் ஆட்சியை எதிர்த்துத் தமிழ் மன்னர் குறிப்பாகப் பாண்டியர் பல போர்கள் நடத்தியிருக்கின்றனர். இக்காலத்தில் கன்னடியர், தெலுங்கர், பார்ப்பனர் இவர்களைத்தவிர தொண்டை மண்டலத்திலிருந்து பலர் வரவழைக்கப் பட்டு சோழ பாண்டிய நாடுகளில் அரசு பணிகளில் அமர்த்தப்பட்டிருக் கின்றனர். படைத்தொழில், வரிவசூல், கணக்கெழுதுதல் முதலிய பணிகள் இவர்களுக்கு அளிக்கப்பட்டிருக்கின்றன.
தெலுங்கருக்கும், தமிழ் வேந்தருக்கும் இடையே பல போர்கள் நடைபெற்றதென ஏற்கனவே குறிப்பிட்டது நினைவிருக்கத்தக்கது. தென்பாண்டி நாட்டில் தான் பாண்டியர் தெலுங்கரை நீண்டகாலம் எதிர்த்து வந்துள்ளனர் என அறிகிறோம். கயத்தாற்றில் பஞ்ச பாண்டியராகிய ஐவர் இராசாக்களுக்கும், நாயக்கருக்கும் இடையே நீண்ட காலம் போர் நடந்திருக்கின்றது. பஞ்சபாண்டியர் படையை எதிர்க்க நாயக்கர் தரப்பில் அரியநாதன் படைத்தளபதியாக அனுப்பப்பட்டான். பஞ்சபாண்டியரோடு நடத்திய போரில் அவன் (அரியநாதன்) வெற்றிபெற முடியாது போய்விட்டதால், விசுவநாத நாயக்கன் தனது தலைமையில் புதுப்படையுடன் வந்து பஞ்சபாண்டியரை எதிர்க்க முற்பட்டான். பஞ்சபாண்டியர் படை வலிமையுடையதாய் இருந்ததால் நேருக்கு நேர் போரிட்டு வெற்றி காண முடியாது என நினைத்த விசுவநாதன் அதைக் சூழ்ச்சி மூலம் வெல்லத் திட்டமிட்டான். நாயக்கர் பாண்டியர் இருவர்படைகளும் பொருதினால் இருதரப்பிற்கும் ஏராளமாய் ஆள்சேதம் ஏற்பட நேரிடுமென்றும், அதனால் இருப்படைகளும் நேருக்கு நேர் மோதாமல் இருதரப்பிலும் ஒருவர் மட்டும் போரிடலாமென்றும், அப்போரில் இருதரப்பில் யார் வெற்றி பெற்றாலும் அதை அத்தரப்பு வெற்றியாக ஏற்றுக்கொண்டு, படைகளைக் கலைத்துவிட்டுப் போரை நிறுத்திவிட வேண்டுமென்றும் பஞ்சபாண்டியரோடு அவன் (விசுவநாதநாயக்கன்) ஒரு ஒப்பந்தத்திற்கு ஏற்பாடு செய்தான். இத்திட்டத்திற்குப் பஞ்சபாண்டியரும் ஒப்புக் கொண்டனர். நாயக்கர் தரப்பில் விசுவநாத நாயக்கனே போரிட முன்வந்தான். பஞ்சபாண்டியர் தரப்பில் வீமன் பாண்டியன் முன்வந்தான். இருவருக்கும் இடையே கடுமையான போர் நடந்தது. இதில் விசுவநாத நாயக்கன் பலத்த காயம் அடைந்து கீழே விழுந்தான். அவன் தரையில் குற்றுயிராய்க் கிடப்பதைப் போல் பாசாங்கு செய்ய வீமன்பாண்டியன் குற்றுயிராய்க் கிடக்கும் எதிரியைத் தாக்குவது போர்மறத்திற்குப் புறம்பானது என்று கருதி வாளாமல் நிற்கும்போது, விசுவநாத நாயக்கன் திடீரென எழுந்து தனது ஈட்டியால் வீமன்பாண்டியன் வயிற்றில் குத்தினான். எதிர்பாராத நேரத்தில் விசுவநாதன் தாக்கியதால் வீமன் பாண்டியன் குடல் சரிந்து கீழே விழுந்து உயிர் நீத்தான். பண்டைத்தமிழர் பண்பாட்டுக் கொப்ப பாண்டியர் ஒப்பந்தப்படி வீமன்பாண்டியன் மரணத்தைத் தங்கள் தோல்வியாக ஏற்றுக்கொண்டு போரை உடனே நிறுத்திவிட்டுத் தமது படைகளைக் கலைத்தனர். இப்போருக்குப் பிறகும் கொற்கை, திருநெல்வேலி, தென்காசி, கரிவலம்வந்தநல்லூர் முதலிய இடங்களில் சிறுசிறு பகுதிகளைப் பாண்டியர் ஆட்சி செய்ததாகத் தெரிகிறது. விசயநகர மற்றும் நாயக்கர் ஆட்சியின் போது தென்பாண்டி நாட்டில் இருந்து ஆட்சி செய்த பாண்டியர்களுள் குறிப்பிடத்தக்கவர்கள் வருமாறு:
சடையவர்மன் பராக்கிரம பாண்டியன் கி.பி. 1411 முதல் 1463 வரையில் அரசாண்டான். தமிழ் மொழி, வடமொழி இவற்றில் நன்கு தேர்ச்சியுடையவன். தென்காசிக் கோயிலை இவன் எடுப்பித்தான். விஸ்வநாதப் பேரேரியையும் இவன் வெட்டுவித்தான். சடாவர்மன் குலசேகரபாண்டியன் கி.பி. 1429 முதல் 1473 வரை ஆட்சி புரிந்துள்ளான். இவன் பராக்கிரம பாண்டியன் தம்பியாவன். அண்ணனோடு சேர்ந்து இவன் ஆட்சி புரிந்துள்ளான். அழகன் பெருமாள் பராக்கிரம பாண்டியன், சடையவர்மன் குலசேகரபாண்டியன் மைந்தன். இவன் கி.பி. 1473 முதல் 1506 வரை ஆட்சி செய்துள்ளான். சடையவர்மன் சீவல்லபாண்டியன் கி.பி. 1534 முதல் 1543 வரை ஆட்சி செய்துள்ளான். சடையவர்மன் பராக்கிரமகுலசேகர பாண்டியன் கி.பி. 1543 முதல் 1552 வரை ஆட்சி செய்ததாகக் கல்வெட்டுகள் குறிப்பிடுவதாகக் கூறுவர். நெல்வேலிமாறன் கி.பி. 1552 முதல் 1564 வரை ஆட்சி புரிந்துள்ளான். இவனுக்கு வீர பாண்டியன், குலசேகரபாண்டியன், பொன்னின் பாண்டியன் தர்மப் பெருமாள், அழகன் பெருமாள் என்ற வேறு பெயர்களுமுண்டு சடையவர்மன் அதிவீரராம பாண்டியன் கி.பி. 1564 முதல் 1604 வரை ஆட்சி செய்தான். இவன் தென்காசியில் தன் தந்தை நெல்வேலி மாறன் நினைவாகக் குலசேகரமுடையார் ஆலயம் ஒன்றைக் கட்டினான். இவன் ஒரு சிறந்த தமிழ்ப் புலவன் நைடதத்தை வடமொழியிலிருந்து தமிழில் மொழிபெயர்த்தான். இவன் கூர்ம புராணம், வாயு சங்கிதை, காசிகாண்டம், இலிங்க புராணம், நறுந்தொகை முதலிய நூல்களை இயற்றினான். வரதுங்கராம பாண்டியன் பராக்கிரமபாண்டியனின் இரண்டாவது மகன். இவன் கி.பி. 1588 ல் முடி சூட்டப் பெற்றுள்ளான். அதிவீர ராம் பாண்டியன் காலத்தில் கரிவலம் வந்த நல்லூரில் இருந்து தென்பாண்டி நாட்டில் ஒரு பகுதியை இவன் ஆட்சி புரிந்துள்ளான். இவனும் தமிழில் - புலமையுடையவன். பிரமோத்த காண்டம், கருவைத் துறையந்தாதி, கருவைப்பத்தந்தாதி, கருவை வெண்பா அந்தாதி முதலிய நூல்களை இயற்றினான். வரகுணராமகுலசேகரபாண்டியன் கி.பி. 1613ல் முடி சூடியவன். இவன் முந்தைய பாண்டியர்க்கு எவ்விதத்தில் உறவினன் என்பது தெரியவில்லை. இவன் வேதவிதிப்படி வேள்வி புரிந்துள்ளான். அதனால் குலசேகரசோமாசியார் என அழைக்கப்பட்டான். கி.பி. 1788ல் ஒரு பாண்டியன் வரகுணராம பாண்டிய குலசேகர தீட்சிதர் என்று தன்னை அழைத்துக் கொண்டுள்ளான். பாண்டிய மன்னர் காலப்போக்கில் குறுநில மன்னராகி சமீன்தார் நிலையை எய்தி இறுதியில் தென்பாண்டி நாட்டில் ஒரு ஊரில் இருந்து வந்ததாக வரலாற்றாசிரியர் சதாசிவப் பண்டாரத்தார் கூறுவார். (I.V. சதாசிவப் பண்டாரத்தார் பாண்டியர் வரலாறு பக். 130) பாண்டியர் இறுதிக்காலம் பற்றி பேராசிரியர் அ. இராமசாமி கூறுவதைக் காண்போம் : பிற்காலப் பாண்டியர் தங்களை சோமாசியார், தீட்சிதர் என்று பெருமையுடன் அழைத்துக் கொண்டனர். வீழ்ச்சியின் விழியில் தொங்கிக் கொண்டிருந்த இவர்கள் தங்கள் புகழ் மிக்க முன்னோர்கள் உடையார், தேவர் என்று பெருமையுடன் அழைத்துக் கொண்ட மரபை விட சோமாசியார், தீட்சிதர் என்று அழைத்துக் கொள்வதில் பெருமை கொண்டனர். (அ. இராமசாமி, எம். ஏ. சி.ஏப் தமிழ்ப் பேரரசுகளின் சரிவும் வீழ்ச்சியும் பக். 365)
பாண்டியர் மறைவு பற்றி குடந்தை N. சேதுராமன் கூறுவதாவது: 'மகாபாரதக் காலத்திலிருந்து அசோகன் காலம், சங்ககாலம், தேவாரகாலங்களில் மகோன்னத நிலையில் இருந்த பாண்டியவம்சம் கி.பி. 17 ஆம் நூற்றாண்டின் மத்தியில் காற்றோடு கலந்து மறைந்து போயிற்று. ஆனால் அவர்கள் விட்டுச்சென்ற கோயில்களும், கல்வெட்டுகளும், பாண்டிய வம்சத்தை நமக்கு எப்போதும் நினைவூட்டு கின்றன.' (குடந்தை N. சேதுராமன் பாண்டியர் வரலாறு பக். 248) TV. சதாசிவ பண்டாரத்தார் பாண்டியர் மறைவு பற்றிக் கூறுவதாவது: 'நம் தமிழகத்தின் தென்பகுதி தம் பெயரால் என்றும் நின்று நிலவுமாறு சரித்திரகாலத்திற்கு முன் தொடங்கிப் பதினேழாம் நூற்றாண்டின் பிற்பகுதி வரையில் ஆட்சி புரிந்து வந்த தமிழ் வேந்தர்களான பாண்டியர்கள் தம் நாட்டை இழந்து சிறுமையுற்றுச் சீர்குலைந்தமை கால வேறுபாட்டினால் நிகழ்ந்த மாறுதலேயாம் !' [T. V.சதாசிவ பண்டாரத்தார் பாண்டியர் வரலாறு பக். 130]
சங்க காலத்தில் ஆட்சி செய்த அதே மரபினர்தான் களப்பிரர் இடையூட்டுக்குப் பின்னும் தமிழகத்தில் ஆட்சி செய்தனரா? என்பது பற்றிப் பார்ப்போம். வேள்விக்குடி செப்பேட்டில் பாண்டியன் நெடுஞ் சடையன் பராந்தகன் முன்னோரைப் பற்றி -
“கொல் யானை பல வோட்டிக் கூடா மன்னர் குழாந்தவிர்த்த பல்யானை முது குடுமிப் பெருவழுதியெனும் பாண்டியாதிராசனால்”
எனவரும் அடிகளும், தளவாய்புரம் செப்பேட்டில் சடையவர்மன் பராந்தகப்பாண்டியன் முன்னோரைப்பற்றி
“அகத்தியனோடு தமிழாராய்ந்தும்
மண்ணதிரா வகைவென்று தென்மதுராபுரஞ்செய்தும்
அங்கதனில் அருந்தமிழ் நற்சங்கம் இரஇத் தமிழ் வளர்த்தும்”
எனவரும் அடிகளும், மூன்றாம் இராசசிங்கபாண்டியன் முன்னோரைப் பற்றிச் சின்னமனூர் செப்பேட்டில்
“தென் தமிழ் கரைகண்டும்
வெம்முனை வேலொன்றுவிட்டும்
விரைவரவிற் கடன் மீட்டும்
பூழியனெனப் பெயரெய்தியும்
போர்க்குன்றாயிரம் வீசியும்
பாழியம் பாயிலினி மீர்ந்தும்
பஞ்சவ னெனப் பெயர் நீறி இயும்
வளமதுரை நகர் கண்டும்
மற்றதற்கு மதில் வகுத்தும்
உளமிக்க மதியனாலொண்டமிழும் வடமொழியும்,
பழுதறத்தானாராய்ந்து பண்டிதரின் மெந்தோன்றியும்”
எனவரும் அடிகளும் கூறுகின்றன.
நெடுஞ்சடையன் சடையவர்மன், இராசசிங்கபாண்டியன் இவர்கள் கி.பி. 6ஆம் நூற்றாண்டில் களப்பிரரை அடக்கி வெற்றி கண்டு மதுரையில் பாண்டிய அரசை மீண்டும் தோற்றுவித்த கடுங்கோன் வழித்தோன்றல் ஆவர். வேள்விக் குடிச் செப்பேட்டில் காணும் முது குடுமிப் பெருவழுதி சங்ககாலப் பாண்டியருள் ஒருவன். தளவாய்புரம், சின்னமனூர் செப்பேடுகளில் புராண காலப்பாண்டியரைப் பற்றிய செய்திகளும் பேசப்படுகின்றன. ஆக இச்செப்பேடுகள் இடைக்காலப் பாண்டியர் சங்ககாலப்பாண்டியர் வழித்தோன்றல்கள் என்பதை மெய்ப்பிப்பதாக உள்ளன.
அடுத்து சோழர் மரபு பற்றிப் பார்ப்போம். இடைக்காலத்தில் சோழமன்னருள் சிலரின் வெற்றிச் சிறப்புகளைப் பற்றி பரணி, உலா எனச் சில இலக்கியங்கள் தோன்றியுள்ளன. அவைகளில் குறிப்பிடத்தக்கவை கலிங்கத்துப்பரணி, விக்கிரம சோழனுலா, இராசராச சோழனுலா, குலோத்துங்கச் சோழனுலா, சங்கர சோழனுலா என்பவையாம். கலிங்கத்துப் பரணி முதற் குலோத்துங்கச் சோழனது படைகள் கருணாகரத் தொண்டைமான் தலைமையில் கலிங்கத்தின் மீது படை எடுத்துப் பெற்ற வெற்றிச் சிறப்பைப் பற்றி பாடப்பட்டது ஆம். முதற்குலோத்துங்கச் சோழன் முதலாம் இராசராச சோழன் மகனாகிய, இராசேந்திர சோழனின் மகள் அம்மங்கைக்கும், கீழைச்சாளுக்கிய மன்னன் இராசராசனுக்கும் பிறந்தவன். சாளுக்கிய மன்னன் இராசராசன் முதலாம் இராசராசனின் மகளாகிய குந்தவை வயிற்றில் பிறந்தவன். முதலாம் குலோத்துங்கள் தன் தாயார் பிறந்த சோழர் மரபையே தனக்கு உரித்தாக்கிக் கொண்டான். குலோத்துங்கன் மரபைத் திருமாலின் உந்தியினின்றும் தோன்றியதாகக் கலிங்கத்துப் பரணி பாடிய செயங்கொண்டார் கூறுவார். அதாவது - செந்தாமரை மலர் திருமாலின் உந்தியினின்று தோன்றியது; அதிலிருந்து நான்முகன் தோன்றினான்; அவனிடமிருந்து மரீசி தோன்றினான்; மரீசியிடமிருந்து காசிபன் பிறந்தான்; காசிபன் சூரியனைப் பெற்றான்; சூரியனிடமிருந்து மனு பிறந்தான். இவன்தான் மனுநீதிச் சோழன் என வழங்கினான். இவன் வழியில் பல புராண மரபுச் சோழா தோன்றினர். வரலாற்றுக் காலமாகிய சங்ககாலத்தில் சோழநாட்டை ஆண்ட கிள்ளிவளவன் , இளஞ்சேட் சென்னி, கரிகாலன், பின்னர் இடைக்காலத்தில் சோழ அரசைத் தோற்று வித்த விசயாலயன், அவன் பேரன் முதலாம் பராந்தகன் முதலான மன்னர் இவற்றில் இடம் பெற்றுள்ளனர்.
கலிங்கத்துப் பரணியில்
“ஆதிமால் அமல நாபிகமலத்து அயன் உதித்து அயன்மரீசி எனும் அண்ண லை அளித்த பரிசும் காதல் கூர்தரு மரீசி மகன் ஆகி வளரும்
காசியன் கதிர் அருக்கனை அளித்த பரிசும்” (செய் 187)
என்பதிலிருந்து
“இப்புறத்து இமயமால் வரையின் மார்பின் அகலத்து எழுதினான், எழுதுதற்கு அரிய வேதம் எழுதி
ஒப்புறத் தனது தொல் மரபும், அம்மரபின்மேல்
உரை செய் பல் புகழும் ஒன்றும் ஒழியாத பரிசே” (செய் 209)
என்பது வரையுள்ள பகுதி சோழர்கள் வம்சாவழியை எடுத்து இயம்புவது காண்க . நாரதர் சோழர் வரலாற்றைக் கூறினதாகவும், அதைக் கேட்ட சோழன் கரிகாலன் அவற்றை இமயமலையின் தென் திசைப்பகுதியில் உள்ள நடுவிடத்தில் ஒன்றும் விடாமல் எழுதியதாகவும் செயங் கொண்டார் கூறுகிறார். மூவருலா என்பது முதற் குலோத்துங்கச் சோழன் மகன் விக்கிரம சோழன், அவன் மகன் இரண்டாம் குலோத்துங்கன், அவன் மகன் இரண்டாம் இராசராசன் பற்றிப் பாடப்பட்டவை. விக்கிரம சோழன் உலாவில் அவனது வம்சாவழியையும் முதற் குலோத்துங்கனைப் பற்றிக் கூறியது போன்று திருமாலிலிருந்து ஆரம்பித்து முதற் குலோத்துங்கன் முடியக் கூறுகின்றது. (வரிகள் 1-46) இதே போன்று குலோத்துங்கச் சோழனுலா (வரிகள் 1-32) இராசராச சோழனுலா (வரிகள் 1-40) இவற்றிலும் மேலே கண்ட பிரகாரம் சோழரின் வம்சாவழி கூறப்பட் டுள்ள து.
இடைக்காலச் சோழர், சங்க காலச் சோழர் வழிவந்தோர் என்பதற்குக் கல்வெட்டுச் சான்றுகளும் இல்லாமல் இல்லை. ஆக மேலே கண்ட மேற்கோள்களிலிருந்து சங்க காலப் பாண்டியரும் சோழரும், பிற்காலப் பாண்டியரும் சோழரும் ஒரே மரபினர் என்பது புலனாகும். இடைக்காலச் சேர மன்னரும் சங்ககாலச் சேர மன்னர் வழித்தோன்றல்களே என்பதை ஒருவரும் மறுப்பதற்கில்லை . இந்தச் சேர, சோழ, பாண்டியர் மரபினர் இன்றையத் தமிழகத்தில் காணப்படும் பல்வேறு மக்கள் பிரிவினரில் யாராய் இருப்பர்? தமிழ் வேந்தர் ஆட்சி முடியவும், இவர் தடமற் அழிந்து மறைந்துவிட்டனரா? அல்லது போரினாலும், அடக்கு முறை யினாலும் மற்றும் பல காரணங்களினாலும் மாண்டவர் போக, எஞ்சியவர் யாராவது தமிழகத்தில் இன்று இருக்கின்றனரா? இவ்வினாக்களுக்கு அடுத்து வரும் பக்கங்களில் விடை காண முயல்வோம்.