அறிமுகம்

ஶ்ரீரமண ஶர்மா ஶ்ரீ காஞ்சீ காமகோடி பீடத்தின் நெரூரில் உள்ள ஶ்ரீ ஶங்கர மடத்தில் தங்கி அக்னிஹோத்ரம் செய்துவருகிறார். நெரூர் என்பது தமிழ்நாட்டு கரூர் மாவட்டத்தில் காவேரி தீரத்தில் ஶ்ரீ ஸதாஶிவ ப்ரஹ்மேந்த்ரரின் அதிஷ்டானம் இருக்கும் இடமாகும்.

இவர் ஸம்ப்ரதாய ஶாஸ்த்ர விஷயத்தில், வித்வான் மஹாபலேஶ்வர பட்டரிடம் வ்யாகரணமும் ப்ரஹ்மஶ்ரீ மணி த்ராவிட ஶாஸ்த்ரிகளிடம் மீமாம்ஸையும் பயின்றுள்ளார். ப்ரஹ்மஶ்ரீ ஸுந்தரராம வாஜபேயிகளிடம் ஶுல்ப ஸூத்ரமும் கற்றுள்ளார். வேதாங்களில், குறிப்பாக ஶிக்ஷை மற்றும் ஜ்யௌதிஷத்தில், ஆழ்ந்த ஆராய்ச்சி ஆர்வம் கொண்டவர்.

ஜ்யௌதிஷ ஆர்வம் மற்றும் மீமாம்ஸா அத்யயனம் காரணமாக காமகோடி பீடத்தின் வருடாந்தர பஞ்சாங்க ஸதஸ்ஸின் ஒருங்கிணைப்பாளராக பணியாற்றி வருகிறார். இதில் ஶுபக்ருத் வருடத்தில் ஶ்ரீ ஶங்கராசார்ய ஸ்வாமிகள் இவரை “நக்ஷத்ர தர்ஶர்” என்ற பட்டமளித்து கருணையுடன் ஆசீர்வதித்தார்கள்.

மேலும் காமகோடி பீடத்தின் அக்னிஹோத்ர ஸதஸ், அத்வைத ஸபா மற்றும் வேத பாஷ்ய ஸதஸ்ஸிலும் கலந்துகொள்பவர் இவர்.

நவீன பட்டப்படிப்பில் ஸம்ஸ்க்ருதம் மற்றும் மொழியியலில் முதுகலைப்பட்டமும் பூர்வ மீமாம்ஸையில் முனைவர் பட்டமும் பெற்றுள்ளார்.

பாரதீய தேவைகளுக்கேற்ப தொழில்நுட்பத்தை வளர்ப்பதில் அக்கறை உள்ளவர். பாரதீய லிபிகளுக்கு பலவேறு செயலிகளை உருவாக்கியுள்ளார். இது விஷயமாக பாரதீய அரசாங்கம், தமிழ்நாட்டு அரசாங்கம், மற்றும் ஒருங்குறி (யூனிக்கோடு) தொழில்நுட்பக் குழுவின் கூட்டங்களில் கலந்துகொண்டு பல அபூர்வமான எழுத்துகளை சரியான முறையில் வரையறுக்க ஆவன செய்துள்ளார்.

க்ரந்த லிபி மற்றும் பழைய தமிழ் மற்றும் மலையாள பின்னங்களும் சின்னங்களும் ஒருங்குறி (யூனிக்கோடு) குறியேற்றம் செய்யப்படுவதில் முக்கிய பங்கு வகித்தார். தமது தொண்டுக்காக ஒருங்குறி சேர்த்தியத்தால் யூனிக்கோடு புல்டாக் என்ற விருது அளிக்கப்பெற்றார்.

திறமைமிக்க கவியான இவர் ஸம்ஸ்க்ருதத்தில் புலமை நிறைந்த செய்யுள் கவிதைகளையும் கீதங்களையும் இயற்றியுள்ளார்.