தக்ஷிணாயன புண்ய காலம்

தக்ஷிணாயன புண்ய காலமும்,
வேத தர்ம சாஸ்த்ர மேற்கோள்களும்

வித்வான் ஶ்ரீரமண ஶர்மா

5125 ஶோபன ௵ ஆனி ௴ 6 ௳, 2023-ஜூன்-20

முன்பு வெளியிடப்பட்ட உத்தராயண கட்டுரை

ஆறு மாதங்கள் முன்பு “மகர ஸங்க்ராந்தியைப் போலவே (ஸாயன) உத்தராயணமும் சிறந்த புண்ய காலம்” என்ற தலைப்பில் ஒரு கட்டுரையை வெளியிட்டிருந்தேன் -  அதை முன்பு படித்துவிட்டே இந்த கட்டுரையைப் படித்தல் நலம். அதிலுள்ளதன் ஸாராம்ஶமாவது கீழ்க்கண்டவாறு -

இவ்வாறு நிரூபித்து உத்தராயண ஸூர்ய பூஜையை முன்பாகவே அனுஷ்டிப்பது உசிதமாகும் என்று தெரிவித்தோம்.

உத்தராயண புண்ய கால ஶ்ராத்தம்/தர்ப்பணம்

இதையடுத்து பல ஆஸ்திகர்கள் “அப்படியானால் உத்தராயண புண்ய கால ஶ்ராத்த/தர்ப்பணங்களை எப்போது செய்ய வேண்டும்?” என்று கேட்டார்கள். அக்கட்டுரையிலேயே “இந்த புண்ய காலங்களில் ஸ்நானம், ஶ்ராத்தம்/தர்ப்பணம், ஜபம், தானம் முதலியவற்றைச் அவசியம் செய்ய வேண்டும் என்று ஶாஸ்த்ரம் சொல்கிறது” என்று ப்ரமாண வசனத்துடன் எழுதியிருந்தோம். அப்ரஸித்தமான விஷயத்தை கொஞ்சம் கொஞ்சமாக தெரியப்படுத்தலாம் என்ற எண்ணத்தில் கட்டுரை முடியும் இடத்தில் ஶ்ராத்த/தர்ப்பணங்கள் பற்றி எழுதியிருக்கவில்லை. 

இருப்பினும் வாசகர்கள் விஷயத்தைப் புரிந்துகொண்டு ௸ கேள்வியைக் கேட்டது சந்தோஷமாக இருந்தது.

ஆகவே சமூக வலைத்தளத்தின் மூலமாகவே ௸ ஶாஸ்த்ரத்தின்படி “மார்கழி 7 அதாவது 2022-டிச-22 கண்ணுக்கு ப்ரத்யக்ஷமான உத்தராயணம் ஆகையால் அன்றே செய்வது தகும்” என்றும் ஆனால் “தை 1 அதாவது 2023-ஜன-15 அன்று மகர ஸங்க்ரமணத்திற்கும் ஶ்ராத்த/தர்ப்பணங்கள் உண்டு” என்று பதில் சொல்லியிருந்தோம்.

தக்ஷிணாயன புண்ய கால ஶ்ராத்தம்/தர்ப்பணம்

அவ்வாறே தக்ஷிணாயன புண்ய காலத்திற்கும் ஸ்நானம், ஶ்ராத்தம்/தர்ப்பணம், ஜபம், தானம் ஆகியவை உண்டு. 

நிகழும் ஶோபன வருடத்தில் -

தக்ஷிணாயன ஸங்க்ரமணம் -

ஆனி 7, 2023-ஜூன்-21, இரவு 20:27

புண்ய கால தினம் (முந்தைய பகல்) - ஆனி 7, 2023-ஜூன்-21

கடக ஸங்க்ரமணம்

ஆனி 32, 2023-ஜூலை-16 (நாட்காட்டிபடி 17), பின்னிரவு 4:42

புண்ய கால தினம் (முந்தைய பகல்) - ஆனி 32, 2023-ஜூலை-16

இது ப்ரத்யக்ஷ துல்யமான நவீன கணிதப்படி. பழங்காலத்திய வாக்ய கணிதப்படியோ ஆடி 1, 2023-ஜூலை-17 16:16 உஜ்ஜயினி மத்திம நாழிகைக்கு கடக ஸங்க்ரமணம் என்றும் பகலில் ஸங்க்ரமணம் ஆகையால் அன்றே புண்ய காலம் என்றும் கொடுத்துள்ளார்கள்.

மேலும் தர்ம ஶாஸ்த்ர ப்ரமாணங்கள்

இவ்வாறு தனித்தனி புண்ய காலங்கள் இருப்பது குறித்து ஜ்யௌதிஷ நூல்கள் மட்டுமின்றி தர்ம ஶாஸ்த்ர நூல்களிலும் அங்கீகாரம் உள்ளது. இதைக் குறித்து ஸூசகமாக மட்டுமே முந்தைய கட்டுரையில் சொல்லியிருந்தோம். இப்போது ஸாயன புண்ய காலம் குறித்து ஆஸ்திகர்களின் ஆவல் மேலிட்டுள்ளதால் விரிவாக கூறுவோம்.

தமிழ்நாட்டில் ப்ரஸித்தமாக உள்ள வைத்யநாத தீக்ஷிதீயம் எனப்படும் ஸ்ம்ருதி முக்தாபலம் என்ற நூலில் ஸாயன ஸங்க்ரமணம் குறித்து இல்லை. ஆனால் ப்ரத்யக்ஷமாக ஸூர்யன் முன்பே நகருவதை எந்த நாட்டினரானாலும் மறுக்கவியலாது. ஆகவே புண்ய காலம் உண்டு என்பதில் ஐயமில்லை.

இதற்கு மேலும் காரணம் என்னவென்றால் தீக்ஷிதீயத்தின் கால விசாரங்களுக்கு மூலமாகக் கருதப்படும் கால மாதவம் என்ற நூலில் 5வது ப்ரகரணத்தில் मेषादि-सङ्क्रान्तयो यस्मिन् दिने भवन्ति तस्माद् दिनात् पूर्वेभ्यः एकादशभ्यो दिनेभ्यः प्राचीने दिने… என்பதாக “மேஷாதி ஸங்க்ரமணங்கள் ஏற்படும் நாளுக்கு முந்தைய 11 நாட்கள் தவிர்த்து அதற்கும் முந்தைய நாள்” அதாவது 12 நாட்களுக்கு முன்பு ஸாயன ஸங்க்ரமணங்கள் ஏற்படுவதாக கூறி அதிலும் ஸ்நானாதிகளுக்கு புண்ய காலம் உண்டு என்பதற்கு ஜாபாலி ருஷியின் வசனத்தைக் காட்டுகிறார் - सङ्क्रान्तिषु यथा कालस्तदीयेऽप्ययने तथा என்று.

நிர்ணய ஸிந்துவிலும் முதல் பரிச்சேதத்தில் द्वादशादिदिनैः अर्वाग् अयनांशप्रवृत्तावपि पुण्यम् என்று “பன்னிரண்டுக்கும் மேற்பட்ட நாட்களுக்கு முன்பு” என்று உள்ளது. 

ஆனால் இதை மேற்கோள் காட்டி ஜயஸிம்ஹ கல்பத்ருமம் என்ற நூலில் ஸங்க்ராந்தி நிர்ணயத்தில் यत्तु पूर्वैः उक्तं सङ्क्रान्तेः अर्वाग् द्वादशभिः दिनैः अयनसङ्क्रान्तिः इति तद् धनद्वादशायनांशकाले। इदानीं तु धनाष्टादशांशाः उपचिताः सन्ति। तद्दिनानि स्थूलतया अष्टादश भवन्ति। गालवः - अयनांशकतुल्येन कालेनैव स्फुटं भवेत् । मृगकर्कादिगे सूर्ये याम्योदगयनं भवेत् । तत्तत्सङ्क्रान्तिकाले स्युः उक्तविष्णुपदादयः ॥ 

அதாவது “12 நாட்களுக்கு முன் ஸாயன ஸங்க்ராந்தி ஏற்படுவது என்று சிலர் சொல்வது 12 பாகை (டிகிரி) அயனாம்சம் இருந்த காலத்தில். ஆனால் இப்போதோ அயனாம்சம் 18 பாகை என்பதாக வளர்ந்துள்ளது. ஆகவே இப்போது சுமார் 18 நாட்கள். ருஷி காலவர் சொல்கிறார் - அயனாம்சத்திற்கேற்ப மகரம் கடகம் முதலியவற்றுக்கு முன்பே உத்தராயண தக்ஷிணாயனங்களும் விஷ்ணுபதீ முதலியவையும் ஏற்படுகின்றன.” என்று கூறுகிறார்.

தர்ம ஸிந்துவிலோ முதல் பரிச்சேதத்தில் “अयनांशाः ज्योतिःशास्त्रे प्रसिद्धाः। ते च इदानीं १७१२ सङ्ख्याके शालिवाहनशके एकविंशतिः अयनांशाः। एकविंशतितमे दिने पूर्वम् अयनांशपर्वकालः इति पर्यवसितोऽर्थः” என்றுள்ளது. அதாவது “இப்போது 1712 சாலிவாஹன சகத்தில் (கதகலி 4891, பொயு 1790) அயனாம்சம் 21 பாகை. ஆகவே 21 நாட்களுக்கு முன்பு ஸாயன புண்ய காலம் என்று தீர்மானம்”.

இப்படியாக படிப்படியாக தர்ம சாஸ்த்ர நூல்களிலேயே 12, 18, 21 என்பதாக அயனாம்சம் வளர வளர அத்தனை நாட்கள் முன்னதாகவே உத்தராயணம் தக்ஷிணாயனங்கள் உள்பட ஸாயன புண்ய காலங்கள் ஏற்படுவதாக சொல்லியுள்ளார்கள். ஆகவே தற்சமயம் உள்ள 24 பாகை அயனாம்சத்திற்கு ஏற்ப 24 நாட்களுக்கு முன்பே ஸாயன புண்ய காலங்கள் ஏற்படும் என்பதில் ஐயம் தேவையில்லை.

இன்னும் போகப்போக அதிகரிக்கும். 2440 லௌகிக வருடம் அளவில் 30 நாட்களுக்கு முன்பாக ஏற்படும். அதாவது தை மாதப்பிறப்பில் ஏற்படுவதாக கருதப்பட்ட உத்தராயணம், தற்சமயம் மார்கழி 6/7 தேதி அளவில் ஏற்படுவது, படிப்படியாக முன்பு நகர்ந்து கார்த்திகை கடைசிக்குள் நுழைந்து இன்னும் முன்பு செல்லும்.

இவ்வாறே ஆடி மாதப்பிறப்பில் ஏற்படுவதாக கருதப்பட்ட தக்ஷிணாயனம் தற்சமயம் ஆனி 6/7 தேதி அளவில் ஏற்பட்டு வைகாசிக்குள் நுழைந்து இன்னும் முன்பு செல்லும்.

புத்திசாலிகளான நமது வாசகர்கள் இதே போல் சித்திரை ஐப்பசி மாதப்பிறப்புகளில் ஏற்படுவதாக கருதப்பட்ட விஷுவ ஸங்க்ரமணங்கள் தற்சமயம் முறையே பங்குனி மற்றும் புரட்டாசி 6/7 தேதி அளவில் ஏற்பட்டு முறையே மாசி மற்றும் ஆவணிக்குள் நகர்ந்து இன்னும் முன்பு செல்லும் என்பதையும் நாம் சொல்லாமல் தாமே ஊஹித்திருப்பார்கள்!

வேத ப்ரமாணங்கள்

இப்படி இது முன்னதாகவே ஏற்படுகிறது என்றால் இது குறித்த வசனங்கள் நமது வேதம் முதலிய மூல நூல்களில் இல்லையா என்று சில ஆஸ்திகர்கள் கேட்டார்கள். வேதத்தில் ஸ்நானாதி புண்ய காலங்களைப் பற்றி பேசக்கூடிய பகுதிகள் கிடைக்காவிடினும் வானவியல் விஞ்ஞான குறிப்புகள் இருக்கவே செய்கின்றன. ஆனால் அவற்றைப் புரிந்து கொள்வதில் சற்று சிரமம் இருக்கலாம் என்பதால் முந்தைய கட்டுரையில் கொடுக்கவில்லை.

ஶுக்ல யஜுர்வேத ஶதபத ப்ராஹ்மணத்தில் (ஏகபாத் காண்டம் 1/2/3) க்ருத்திகா நக்ஷத்ரம் சரியான கிழக்கில் தான் உதிக்கும் என்று சொல்லப்படுகிறது. அப்படியானால் க்ருத்திகா நக்ஷத்ரத்தைக் கொண்ட வ்ருஷப ராசியில் ஸூர்யன் ஸஞ்சரிக்கும்போது, அதாவது வைகாசி மாதத்தில் அவரும் சரியான கிழக்கில் உதயம் ஆவதாகிய விஷுவம் ஏற்பட்டதாகத் தெரிகிறது.

இவ்வாறே ஸிம்ஹ ராசியின் தொடக்கத்தில் இருக்கும் மகா நக்ஷத்ரத்தில் அயனம் (தக்ஷிணாயனம்) இருந்ததாக அதர்வ வேதத்தைச் சேர்ந்த நக்ஷத்ர ஸூக்தத்தில் (ஶௌநக ஸம்ஹிதை 19/7/2) உள்ளது. அதாவது ஆவணி மாத தொடக்கத்தில் தக்ஷிணாயனம் ஏற்பட்டது என்று.

இதையும் சொல்லி கும்ப ராசியின் தொடக்கத்தில் உள்ள ஶ்ரவிஷ்டா நக்ஷத்ரத்தில் ஸூர்யன் ஸஞ்சரிக்கும்போது அதாவது மாசி மாதத் தொடக்கத்தில் உத்தராயணம் ஏற்படுவதாகவும் மைத்ராயணீய ஆரண்யகத்தில் (6/14) உள்ளது.

இவ்வாறே க்ருத்திகையைக் கொண்ட வ்ருஷப=வைகாசி மாதத் தொடக்கத்தில் ஒரு விஷுவமும் அனுராதாவைக் கொண்ட வ்ருஶ்சிக=கார்த்திகை மாதத் தொடக்கத்தில் மற்றொரு விஷுவமும் ஏற்படுவதாக தைத்திரீய ப்ராஹ்மணத்தில் (1/5/2) குறிக்கப்படுகிறது.

இந்த வசனங்களை மனதில் கொண்டு தான் ஆசார்யர் வராஹமிஹரர் தமது ப்ருஹத் ஸம்ஹிதையில் (3/1) नूनं कदाचिद् आसीद् येनोक्तं पूर्वशास्त्रेषु “பண்டைய சாஸ்த்ரங்களில் சொல்லப்பட்டிருப்பதால் இவ்வாறு ஒரு காலத்தில் கண்டிப்பாக இருந்திருக்க வேண்டும்” என்று கூறுகிறார். அதாவது சித்திரை = விஷுவம், ஆடி = அயனம், ஐப்பசி = விஷுவம், தை = அயனம் என்ற சமன்பாட்டுக்கு பதில் முறையே வைகாசி, ஆவணி, கார்த்திகை, மாசி என்ற மாதங்களின் பிறப்பை ஒட்டி இவை ஏற்பட்டிருக்க வேண்டும்.

லகத ஜ்யௌதிஷம் (ருக்வேத பாடம் 6வது செய்யுள், யஜுர்வேத பாடம் 7வது செய்யுள்) எனப்படும் ஸூர்ய ஸித்தாந்தம் முதலியவற்றைக் காட்டிலும் மிகப்பழைய வேதாங்க ஜ்யௌதிஷ நூலில் மைத்ராயணீயத்தில் உள்ளதற்கு அருகாமையில் ஆனால் தெளிவான மாறுதலுடன், அதாவது தை மாத பின்பகுதியில் ஶ்ரவிஷ்டாவின் தொடக்கத்தில் உத்தராயணமும், ஆடி மாத பின்பகுதியில் ஆஶ்ரேஷா நக்ஷத்ரத்தில் தக்ஷிணாயனமும் சொல்லப்பட்டுள்ளன.

பிற்காலத்திய நூல்களில் இவற்றுக்கு ஒரு ராசிக்கு முன்பாக சித்திரை முதலியவற்றில் ஏற்படுவதாக சொல்லப்பட்டுள்ளன என்பதை அறிவோம். இதனாலேயே நாளடைவில் இவை மாதங்களை ஒப்பிடுகையில் முன்பு சென்றுகொண்டிருக்கின்றன என்பது நன்கு தெரிகிறது. தற்சமயமோ சித்திரை முதலியவற்றுக்கும் முன்பே ஏற்படுகின்றன, மேலும் முன்பு செல்லும் என்பதை முன்பே சொல்லிவிட்டோம்.

இந்த ஸாயன சக்ரம் மாறுவதால் ஏற்படும் த்ருவ நக்ஷத்ர மாற்றத்தையும் மைத்ராயணீய ஆரண்யகம் (1/4) குறிப்பிடுகிறது. 

பள்ளிக்கூடம், நவீன விஞ்ஞானம், சாஸ்த்ரம்

உலகம் முழுதும், பாரதத்திலும் கூட, அனைத்து மொழிகளிலும், பள்ளிக்கூடக் கல்வியில் 6ம் வகுப்பிலேயே புவியியல் பாடப் புத்தகங்களில் மார்ச் 21, ஜூன் 21, செப்டம்பர் 23, டிசம்பர் 22 ஆகிய தேதிகளில் (சுமாராக) அயனங்களும் விஷுவங்களும் ஏற்படுகின்றன என்பது நாம் அனைவரும் படித்திருக்கக்கூடிய ஒன்றே. அப்போது ஏப்ரல், ஜூலை, அக்டோபர், ஜனவரி மாதங்களின் நடுவில் ஏற்படக்கூடிய நிரயண ஸங்க்ரமணங்களை விஷுவம் அயனம் என்று சொல்வது எப்படி?

முன்பு நாம் காட்டியபடி நவீன விஞ்ஞானத்தின் இந்த கூற்றை சாஸ்த்ரமும் ஆமோதிக்கத்தான் செய்கிறது. ஆகவே இதனைப் பின்பற்றுவதால் எந்த சாஸ்த்ர ஸம்ப்ரதாயங்களையும் மீறுவதாக ஆகாது. ஏனெனில் மேஷாதி நிரயண மாதப்பிறப்பு அனுஷ்டானங்கள் தனியாக இருக்கவே செய்கின்றன. அவற்றை நாம் நிராகரிக்கவில்லை.

ஆனால் சாஸ்த்ரத்தை, குறிப்பாக ஸித்தாந்த ஜ்யௌதிஷத்தை சரியாக விரிவாக பரிசீலிக்காததால் இன்னும் பழையபடி சித்திரை பிறந்தால் விஷுவம் இத்யாதிகளைச் சொல்லிக்கொண்டு இருக்கிறோம். இதை என்றோ திருத்திக்கொண்டிருக்க வேண்டும். இன்றாவது திருத்திக் கொள்வோம்!

*

குறிப்பு:

மிகவும் தாமதமாக இந்த கட்டுரையை வெளியிடுவதாக மக்களுக்கு தோன்றலாம். ஆனால் இருக்கும் காரிய பளுவினிடையே இயன்றவரை செய்து வருகிறோம். இம்முறை அனுஷ்டானம் செய்வதற்கு மக்களுக்கு முன்றிவிப்பு இல்லாவிட்டாலும் விழிப்புணர்ச்சியை உருவாக்குவது இந்த கட்டுரை பயன்படும். கூடிய விரைவில் இவ்விஷயத்திற்கு பிடிப்பு ஏற்படும் என்று நம்புகிறோம்.

வருங்காலத்தில் முழு வருடத்திற்கான ஸங்க்ரமண புண்ய காலங்கள் கொண்ட கோப்பைத் தொடர்ந்து வெளியிடும் உத்தேசம் உள்ளது. அதன் மூலமாக இந்த அனுஷ்டானத்தைச் செய்ய விரும்புபவருக்கு லாபமாக இருக்கும். அது நடைமுறைப்பட பகவான் நமக்கு அருளும்படி ப்ரார்த்திப்போம்.

- * - * -