Free Physiotherapy Consultancy R.Rajkumar MPT sports Physiotherapist Simmakkal Madurai
R.ராஜ்குமார் BPT,MPT (Sports)
R.ராஜ்குமார் BPT,MPT (Sports)
இயங்குனர் மருத்துவம் அல்லது இயன்முறை மருத்துவம் அல்லது இயக்குமருத்துவம் அல்லது உடற்கூற்று மருத்துவம் (Physical Medicine அல்லது PM & R) இது முற்றிலுமாக மருத்துவத்துறை சார்ந்த சிறப்பு மருத்துவ பிரிவு ஆகும். இயன்முறை மருத்துவம் என்பது உடல்நலம் பேணும் தொழில்களில் தனிநபர்கள் வாழ்நாள் முழுமையும் தங்கள் உறுப்புகளின் இயக்கத்தையும் பயன்பாட்டையும் மீட்கவும், பராமரிக்கவும், மேம்படுத்தவும் உதவுகின்ற மருத்துவத்துறையாகும். வயது, காயம், விபத்து அல்லது சூழல் காரணமாக உறுப்புகளின் இயக்கமும் பயன்பாடும் பாதிக்கப்படும்போது அளிக்கப்படும் மருத்துவ முறைகளைக் கொண்டது.
இம்மருத்துவம் வாழ்வின் தரத்தை அறியவும் கூடுதலாக்கவும் ஆய்வு செய்கிறது. இயக்கத்தை மேம்படுத்த, காயங்களை தவிர்த்திட, அடிபடும்போது காயத்தின் தீவிரத்தைக் குறைத்தல், ஊனத்தைச் சரிசெய்ய மற்றும் ஊனமுற்றவர் மீளவும் தமது வாழ்க்கைத்தரத்தை பெற்றிட வேண்டிய மருத்துவமுறைகளை குறித்து இம்மருத்துவம் அமைந்துள்ளது. அப்போது எழும் உடல் மற்றும் உளவியல், சமூகநலம் குறித்தும் கவனத்தில் கொள்கிறது. இம்மருத்துவமுறையில் இயங்கு மருத்துவர்கள், நோயாளிகள்/வாடிக்கையாளர்கள், பிற மருத்துவர்கள், குடும்பங்கள், நலம்விரும்பிகள் மற்றும் சூழ்ந்துள்ள சமூகம் முதன்மை பங்கு வகிக்கின்றனர்.[1] இயன்முறை மருத்துவம் [2] (ஆங்கிலம்-Physical Medicine-) என்பது நவீன உலகில் வளர்ந்து வரும் ஒரு சிறந்த சிறப்பு மருத்தவ துறை & மருத்துவ முறையாகும்.
இன்றைக்கு மருத்துவத்தில் தவிர்க்கவே முடியாத ஒன்றாகிவிட்டது `இயன்முறை மருத்துவம்’ எனப்படும் பிசியோதெரபி (Physiotherapy). `பாட்டிக்கு முதுகுவலி. ஒரு வாரம் பிசியோதெரபி எடுத்துக்கிட்டோம். இப்போ பரவாயில்லை’ போன்ற வசனங்களை சர்வ சாதாரணமாகக் கேட்க முடிகிறது. சிற்றூர்களில்கூட `பிசியோதெரபி மையங்கள்’ முளைத்துவிட்டன. சரி, அது என்ன பிசியோதெரபி? எலும்பு மூட்டு, தசைகளின் இயக்கம் பாதிக்கப்பட்டால், அவற்றைச் சரிசெய்யவும், பராமரிக்கவும், மேம்படுத்தவும் உதவும் சிகிச்சை. ஊசி, மருந்துகளைப் பயன்படுத்தாமல் உடற்பயிற்சி, தெரபியூடிக் மசாஜ் (Therapeutic Massage), வெப்ப சிகிச்சை, மின் சிகிச்சை ஆகியவற்றின் மூலம் பிரச்னைகளுக்குத் தீர்வுகாணும் ஒரு வழிமுறை. உடலில் அடிபட்டால் காயத்தின் தீவிரத்தைக் குறைக்கவும், பாதிப்பிலிருந்து மீளவும் இது உதவும்.
எலும்பு முறிவு
உடலில் எலும்பு முறிவு ஏற்பட்டால், எலும்பு முறிவு மருத்துவர் (Orthopedician), அறுவை சிகிச்சை அல்லது மாவுக்கட்டு போட பரிந்துரைப்பார். அதன் பிறகுதான் பிசியோதெரபிஸ்ட்டின் பணி தொடங்குகிறது. மாவுக்கட்டைப் பிரித்த பிறகு, தசைகளில் ஏற்படும் பிடிப்புகளைச் சரிசெய்யவும், அறுவை சிகிச்சைக்குப் பிறகு தசைகள் இழந்த இயக்கம் மற்றும் வலிமையைத் திரும்பப் பெறவும் பிசியோதெரபி துணைபுரிகிறது.
எலும்புத் தேய்மானம்
வயோதிகம் மற்றும் அதிக இயக்கம் காரணமாக எலும்பு, மூட்டுகள் தேய்மானம் அடையும். அதனால் ஏற்படும் வலியைப் போக்கவும், தேய்மானத்தைச் சரிசெய்யவும் பிசியோதெரபி அவசியம். இந்தச் சிகிச்சையைத் தொடர்ந்து அளித்தால்தான் பாதிக்கப்பட்ட மூட்டுகளை மீண்டும் செயல்படவைக்க முடியும்.
தசை மற்றும் தசைநார்
உடலில் தசைப் பிடிப்பு, சுளுக்கு மற்றும் தசைநார் பாதிப்புகளைச் சரிசெய்யவும், வலியைக் குறைக்கவும் பிசியோதெரபியில் ஐஎஃப்டி சிகிச்சை (Ultrasound Therapy and Interferential Therapy (IFT)) அளிக்கப்படுகிறது. இந்த முறையில் சிகிச்சையளிப்பதன் மூலம் பாதிக்கப்பட்ட தசை மற்றும் தசைநார்களை மீண்டும் அதே வலிமையுடன் செயல்பட வைக்கலாம்.
எலும்பு மற்றும் தசைநார் பிரச்னைகள் வராமல் தடுக்க...
எலும்புத் தேய்மானத்தைத் தவிர்க்க கால்சியம் மற்றும் வைட்டமின் டி நிறைந்த உணவுகளை அதிகம் உட்கொள்ள வேண்டும். சூரிய வெளிச்சத்தில் உடல்படும்படி நடக்க வேண்டும்.
* உடற்பயிற்சி மேற்கொள்ள வேண்டும்.
* கீழே விழுந்துவிடாமல் கவனமாக இருக்க வேண்டும்.
நரம்பியல் பிசியோதெரபி (Neuro Physiotherapy)
* பிறவி சார்ந்த நரம்பியல் பிரச்னைகள் (Congenital Disorders)
* விபத்தால் ஏற்படும் நரம்பியல் பிரச்னைகள்
* மூப்பு காரணமாக ஏற்படும் நரம்பியல் பிரச்னைகள் ஆகியவற்றுக்கு அளிக்கப்படும் சிகிச்சை.
நரம்பு சார்ந்து ஏற்படும் நோய்கள்
மூளை முடக்குவாதம், தசைநார் தேய்வு (Muscular Dystrophy) போன்ற நரம்பு தொடர்பான பிரச்னைகள் பிறவியிலேயே ஏற்பட வாய்ப்பிருக்கிறது. மூளைக்குச் சரிவர ரத்தம் செல்லாவிட்டால், `C.B.A’ எனப்படும்
Cerebrovascular Accident ஏற்படும். இதன் தொடர்ச்சியாக பக்கவாதம் ஏற்படும்.
விபத்து மற்றும் காசநோயால் தண்டுவடம் கடுமையாக பாதிக்கப்படும்போது, இரண்டு கால்களும் செயலிழந்துவிடும்; உடலிலிருக்கும் குறிப்பிட்ட சில நரம்புகள் பாதிக்கப்படும் அபாயமும் இருக்கிறது. அப்படி பாதிக்கப்படும் சூழலில் முகப் பக்கவாதம் ஏற்படும். மூப்படைவதால் நரம்புத் தளர்ச்சி, நரம்புத் தேய்மானம் போன்றவை ஏற்பட்டு, `டிமென்ஷியா (Dementia) எனப்படும் ஞாபகமறதி, அல்சீமர் (Alzheimer’s Disease) மற்றும் பார்கின்சன் நோய் (Parkinson’s Disease) போன்றவை ஏற்படும்.
சிகிச்சைகள்
* சமநிலைப் பயிற்சி (Balance Training)
* நடைத்திறன் பயிற்சி (Gait Training)
* ஒருங்கிணைப்புப் பயிற்சி (Co-Ordination Training)
நரம்பு சார்ந்த நோய்கள் ஏற்படும்போது, நோய் பாதிப்பின் நிலையைப் பொறுத்து உடற்பயிற்சிகள் மூலமாகவும், சாதனங்கள் உதவியுடனும் தொடர் சிகிச்சையளிக்கப்படும். வலுவிழந்த தசைகளையும் நரம்புகளையும் மீண்டும் வலுவடையவைப்பது, அவற்றின் செயல்திறனை அதிகரிக்கச் செய்வது ஆகியவைதான் பிசியோதெரபியின் முக்கிய வேலை. நரம்பு சார்ந்த பாதிப்புகள் முதியோருக்கு வராமலிருக்க சுடோகு, செஸ், குறுக்கெழுத்து போன்ற விளையாட்டுகளை விளையாடுவதுடன், மூளையை எப்போதும் ஏதாவதொரு செயலில் ஈடுபடுத்த வேண்டும். இந்த முறைக்குப் பெயர் `பிரெய்ன் ஜிம்’ (Brain Gym). மூளையின் நினைவுத்திறனை அதிகப்படுத்த நமக்கு நாமே கேள்விகளைக் கேட்டு, பதிலளிக்க வேண்டும். இப்படி தொடர்ச்சியாகச் செய்வதன் மூலம் ஞாபகமறதியிலிருந்து விடுபடலாம்.
இதயம் மற்றும் சுவாச பிசியோதெரபி (Cardio Respiratory Physiotherapy)
கார்டியோ ரெஸ்பிரேட்டரி துறையில், பிசியோதெரபியின் பங்கு இன்றியமையாதது. இதை இரண்டு வகைகளாகப் பிரிக்கலாம்.
* ஆஸ்துமா, எம்பைசீமா (Emphysema) போன்ற நோய்களால் பாதிக்கப்படுபவர்கள் மூச்சுவிட சிரமப்படுவார்கள். அவர்களுக்கு இருமல் அதிகமாக இருக்கும். இந்த நிலையில் அவர்களுக்கு மூச்சுப்பயிற்சி, உடற்பயிற்சிகளைப் பயிற்றுவித்து, அவர்களது பலவீனமான தோள்பட்டை மற்றும் தசைகளை வலுப்படுத்தி, அறுவை சிகிச்சை செய்யாமலேயே மூச்சுவிடும் திறனை மேம்படுத்துவார்கள்.
* இதயம் மற்றும் மார்புப் பகுதியில் பெரிய அளவில் அறுவை சிகிச்சை மேற்கொள்ளும்போது இதயம், நுரையீரலின் செயல்திறனை மேம்படுத்துவதில் பிசியோதெரபியின் பங்கு மகத்தானது. அறுவை சிகிச்சை முடிந்ததும், மார்புப் பகுதியில் சளி கட்டக் கூடாது. இதய அறுவை சிகிச்சை செய்யும் மருத்துவருடன் இணைந்து பிசியோதெரபி மருத்துவர் செயல்பட்டு மார்புச்சளியைத் தொடர்ந்து வெளியேற்றுவார். அறுவை சிகிச்சை முடிந்ததும், நடை பழக்கவும் (Gait
Training), பலவீனமான தசைகளை வலுவூட்டவும் பயிற்சியளிப்பார்.
குழந்தைகளுக்கான பிசியோதெரபி (Pediatrics Physiotherapy)
* பிறவிக் குறைபாடுகள் (Congenital)
* வளரும் பருவத்தில் குழந்தைக்கு ஏற்படும் பிரச்னைகள் ஆகியவற்றுக்கான சிகிச்சை இது.
சில குழந்தைகளுக்குப் பிறவியிலேயே ஏற்படும் நோய், மூளை முடக்குவாதம். இதனால் பாதிக்கப்படும் குழந்தைகளுக்கு இயல்பான மனப் பக்குவமும் மூளை வளர்ச்சியும் இருக்காது. அவர்களின் உடல் தசைகள் பலவீனமடைந்து காணப்படும். இத்தகைய குழந்தைகளுக்கு `நியூரோ டெவலப்மென்ட் தெரபி’ (Nuero Development Therapy), `மோட்டார் ரீலேர்னிங் புரோகிராம் மற்றும் போபாத் டெக்னிக்’ (Motor Relearning Program and Bobath Technique) போன்ற பயிற்சிகளை அளித்தால், அவர்களுடைய பலவீனமான தசைகள் வலுப்படும். இந்தப் பயிற்சிகளின் மூலம் அவர்களை நிற்க, நடக்கவைக்க முடியும்.
குழந்தைகள் விபத்துக்குள்ளாகும்போது அவர்களின் உடல் தசைகளும் எலும்புகளும் கடுமையாக பாதிக்கப்படும். அதிலிருந்து அவர்கள் மீளவும், நோய் பாதிப்புகள் மற்றும் `ஹெமிப்லெஜிக் ஸ்ட்ரோக்’ (Hemiplegic Stroke) போன்ற பாதிப்புகளிலிருந்து மீளவும் பிசியோதெரபி கைகொடுக்கும். வளரும் வயதில் ஏற்படும் பாதிப்புகளிலிருந்து குழந்தைகளின் வாழ்க்கைத்திறனை மேம்படுத்த பிசியோதெரபி உதவும்.
குறிப்பு: மாறிவிட்ட வாழ்க்கைமுறை, சிறு வயதில் ஓடியாடி விளையாடாமல் ஒரே இடத்தில் இருப்பது போன்றவற்றால் குழந்தைகளுக்கு அதிகளவில் `ஜுவைனைல் டயாபடிஸ்’ (Juvenile Diabetes), `ஜுவைனைல் ஒபிசிட்டி’ (Juvenile Obesity) போன்ற பாதிப்புகள் ஏற்படுகின்றன. இந்த பாதிப்புகள் ஏற்படாமலிருக்க வேண்டுமென்றால், குழந்தைகள் `ஜங்க் ஃபுட்ஸ்’ (Junk Foods) அதிகம் உண்பதைத் தவிர்த்துவிட்டு, சத்தான காய்கறிகளை உண்ண வேண்டும். அதேபோல் செல்போன்களில் நேரத்தைச் செலவிடுவதற்கு பதில், ஓடியாடி விளையாட வேண்டும்.
விளையாட்டு பிசியோதெரபி (Sports Physiotherapy)
விளையாட்டு வீரர்களுக்குத் தசை மற்றும் தசைநார்க் காயங்கள் ஏற்பட அதிகளவு வாய்ப்பிருக்கிறது. அண்மைக்காலமாக, கிரிக்கெட், ஹாக்கி, கால்பந்து போன்ற விளையாட்டுகளில் ஈடுபடுவோருக்கு ஏற்படும் பிரச்னைகளைக் களைய, `ஆன் ஃபீல்டு’, `ஆஃப் ஃபீல்டு’ என இரண்டுவிதமான பிசியோதெரபிகள் இருக்கின்றன.
விளையாட்டு வீரர்களுக்கு மைதானத்தில் காயம் ஏற்படும்போது உடனடியாக முதலுதவியளித்து, அவர்களைத் தயார்படுத்தி, விளையாட வைப்பது `ஆன் ஃபீல்டு ட்ரீட்மென்ட்.’ மைதானத்தில் காயம்பட்ட வீரருக்குச் சிகிச்சையளித்து, அந்தக் காயத்தை முழுமையாக ஆறச்செய்து, இழந்த தசை மற்றும் தசைநார்களின் வலிமையை மீண்டும் பெறவைப்பது `ஆஃப் ஃபீல்டு ட்ரீட்மென்ட்.’
கவனிக்கவும்!
விளையாட்டு வீரர்கள் தகுந்த பிசியோதெரபிஸ்ட்டின் துணையுடன் `வார்ம் அப்’ (Warm Up) மற்றும் `கூல் டவுண்’ (Cool Down) பயிற்சிகளைச் செய்வார்கள். ஆனால், பொழுதுபோக்குக்காக விளையாடுபவர்கள் அப்படிச் செய்வதில்லை. அதனால் திடீரென்று கடினமான விளையாட்டுகளை விளையாடும்போது, கால் தசைநார்கள் பாதிக்கப்படலாம். அவை குணமாக நீண்ட நாள்கள் ஆகும். எனவே, அவர்கள் எச்சரிக்கையுடனும் கவனத்துடனும் இருக்கவேண்டியது அவசியம்.
மகப்பேறியல் பிசியோதெரபி (Obs tetrics and Gynaecology Physiotherapy)
அண்மைக்காலமாக வளர்ந்துவரும் துறை இது. பிரசவத்துக்கு முன்னரும், பிரசவத்துக்குப் பின்னரும் கடைப்பிடிக்கவேண்டிய இந்தப் பயிற்சிகள் பிசியோதெரபிஸ்ட்டால் சொல்லித் தரப்படும். கருவுற்ற பெண், சுகப்பிரசவம் காண எந்தெந்தப் பயிற்சிகளை மேற்கொள்ள வேண்டும், எப்படிப்பட்ட வாழ்க்கைமுறையை மேற்கொள்ள வேண்டும் போன்ற வழிமுறைகளைப் பயிற்றுவிப்பது `ப்ரீநேட்டல் கேர்’ (Prenatal Care) என்னும் பிசியோதெரபி. பிரசவத்துக்குப் பிறகு இடுப்புப் பகுதியில் தசைகள் தளர்ந்துவிடும். சிலருக்கு முதுகுவலி ஏற்படும். தளர்ந்த தசைகளை இயல்புநிலைக்கு மாற்றி, வலியைப் போக்கும் உடற்பயிற்சிகள், உடல் எடையைக் கட்டுக்குள்வைத்திருப்பது, தாய்ப்பால் கொடுக்கும் முறை என பிரசவத்துக்குப் பிறகு செய்யவேண்டிய பயிற்சிகளை அளிப்பது `போஸ்ட்நேட்டல் கேர்’ (Postnatal Care) சிகிச்சை.
பெண்கள் தங்களது வயிற்றுப் பகுதித் தசைகள் (Abdominal Muscles) மற்றும் முதுகுத்தண்டுவட தசைகளை (Back Muscles) வலுவாக வைத்திருக்கவேண்டியது அவசியம். இது கருவுற்ற காலத்திலும், பிரசவத்துக்குப் பிறகும் அவர்களுக்குப் பேருதவியாக இருக்கும்.
கைகளுக்கான பிசியோதெரபி (Hand Physiotherapy)
இந்தத் துறை பற்றி பலருக்கும் தெரியாது. ஆனால், மிகவும் இன்றியமையாத துறை. தொழிற்சாலை விபத்துகளில் கைகள் நசுங்குவது, சாலை விபத்துகளில் கையில் கடுமையாகக் காயம் ஏற்படுவது போன்ற சூழலில் தொழில்முறை மருத்துவர் அல்லது அறுவை சிகிச்சை நிபுணர் தகுந்து சிகிச்சையளித்து கட்டுப் போடுவார். பிறகு பிசியோதெரபிஸ்ட் அளிக்கும் தொடர் பயிற்சிகள் மற்றும் சிகிச்சைகள்தாம் அந்தத் தசை மற்றும் நரம்புகளை மீண்டும் வலிமையாக்கி, அடிபட்ட கையை மீண்டும் பழையபடி செயல்படவைக்கும். தொழிற்சாலைகளில் பணிபுரிபவர்கள் `PPE’ (Personal Protective Equipment) எனப்படும் தற்காப்புச் சாதனங்களுடன் பணிபுரிய வேண்டும். சிலருக்கு கை விரல்களில் முடக்குவாதம் ஏற்பட்டிருக்கும். முடக்குவாதம் வந்தவர்களால் விரல்களை அசைக்க முடியாது. கல் உப்பை வெந்நீரில் போட்டு, கையை அதில் நனைத்து, பஞ்சு போன்ற பந்தை கைக்குள் வைத்து நன்றாக அமுக்க வேண்டும். தினமும் இதுபோல இரண்டு தடவை செய்தால், கை விரல்களின் அசைவுகள் மேம்படும்.
சமுதாயத்துக்கான பிசியோதெரபி (Community Physiotherapy)
ஒரு நோயோ அல்லது குறைபாடோ வரும் முன்னரே போதுமான விழிப்புஉணர்வை ஏற்படுத்தி முன்னெச்சரிக்கைப் பயிற்சியளிப்பதுதான் இந்தச் சிகிச்சையின் நோக்கம். கிராமப்புறங்களில் என்ன நோய் என்று தெரியாமலேயே, தங்களுக்குத் தெரிந்த சிகிச்சையைச் சிலர் செய்துகொள்வார்கள். அவர்களுக்குப் போதிய விழிப்புஉணர்வு மற்றும் புரிந்துணர்வை ஏற்படுத்துவதே சமுதாயம் சார்ந்த பிசியோதெரபி.
முதியோருக்கான பிசியோதெரபி (Geriatric Physiotherapy)
முதுமையால் ஏற்படும் நோய்கள் மற்றும் உடல்நலக் குறைபாடுகள் தொடர்பான பிசியோதெரபிப் பிரிவு இது. வயதானோருக்கு இதயம், சுவாசம், தசை, மூட்டு மற்றும் நரம்பு சார்ந்த பல்வேறு நோய்கள் ஏற்பட வாய்ப்புகள் அதிகம். அந்தப் பிரச்னைகள் மற்றும் நோய்களிலிருந்து காத்துக்கொள்ளவும், அவற்றிலிருந்து விடுபடவும் இந்தச் சிகிச்சை தரப்படும்.
வயது மூப்பு காரணமாக ஞாபகமறதி, கவனச் சிதைவு, கண் பாதிப்புகள், பார்வைத்திறன் குறைவதால் நடக்கும் திறன் பாதிப்பு, மூட்டுத் தேய்மானம், முதுகுத்தண்டுவட பாதிப்பு, ஆண்களுக்கு புரோஸ்டேட் (Prostate) புற்றுநோய், பெண்களுக்கு மார்பகப் புற்றுநோய் போன்றவை ஏற்படும். இந்த நோய்களின் தாக்கத்தைக் குறைக்க, வயதானவர்களுக்கு சிகிச்சையளிக்கப்படும்.
முதியோரை கஷ்டப்படுத்தாமல், அவர்களால் செய்ய முடிந்த சிறு சிறு உடற்பயிற்சிகளைக்கொண்டு அவர்களின் செயல்திறன் மேம்படுத்தப்படும். படுத்த படுக்கையாக இருப்பவர்களுக்கு படுக்கைப்புண் ஏற்படாதபடி சிகிச்சையளிக்கப்படும். சுவாசப்பயிற்சி தருவதன் மூலம் சுவாசத்தை மேம்படுத்தலாம்; பயன்படுத்தப்படாத தசைகள் செயலிழக்காமல் தவிர்க்க, போதுமான அசைவுகள் அளிக்கப்படும். மேலும் அவர்களை முழு கவனத்துடன் நடக்கவைக்கவும் கீழே விழாமல் இருக்கவும் போதுமான பயிற்சிகள் அளிக்கப்படும். இதனால், முதியோரின் வாழ்க்கைமுறை மேம்படுத்தப்படும்.
உடல் இயக்கவியல் (Biomechanics)
நம் உடலின் ஒவ்வொரு செயலுக்கும் குறிப்பிட்ட தசைத் தொகுதி காரணமாக இருக்கிறது. அந்தத் தசைகளை எப்படி வலிமையடையச் செய்வது, மேம்படுத்துவது என்பது குறித்த பிசியோதெரபி இது. ஒரு செயலை எப்படிச் செய்தால் எளிமையாகவும் சிறப்பாகவும் செய்ய முடியும் என்று இந்த முறையில் கற்றுக்கொடுக்கப்படுகிறது. தசை அசையும் திறனை மேம்படுத்துவது, உடல் அமைப்பைத் தக்கவைத்துக்கொள்ள உதவுது ஆகியவைதான் இந்தச் சிகிச்சையின் நோக்கம். இதன் மூலம் வலி இல்லாமல் ஒரு செயலை எளிதாகவும் சிறப்பாகவும் செய்ய முடியும். இந்தத் துறையில் வளர்ந்துவரும் ஒரு பிரிவுதான் `பணிச் சூழலியல்’ (Ergonomics). பணியிடங்களில் ஒரு வேலையை எப்படிச் செய்ய வேண்டும் என்று கற்றுக் கொடுக்கும் ஒரு வழிமுறை. மூப்படைவதற்கு முன்னரே பணிச்சூழல் காரணமாக முதுகுவலி, மூட்டுவலி, கழுத்துவலி போன்றவை பலருக்கும் ஏற்படுகின்றன. நம்மை வருத்திக்கொள்ளாமல் எப்படி வேலை செய்வது என்று கற்றுக்கொடுக்கிறது இந்த சிகிச்சை முறை.
மறுவாழ்வு பிசியோதெரபி (Rehabilitation Physiotherapy)
பிறவி ஊனமுற்றோர், விபத்து மூலம் உடல் உறுப்புகளை இழந்தவர்கள், உடல் அசைவுக் குறைபாடு உள்ளவர்களின் மறுவாழ்வுக்காக அளிக்கப்படும் சிகிச்சை இது. உதாரணமாக, விபத்தில் காலிழந்த ஒருவருக்குச் செயற்கைக் கால் பொருத்தி, அதன் மூலம் அவர் இயல்பாக நடக்கவும், அதை அவரது வாழ்வின் ஓர் அங்கமாக மாற்றவும் போதுமான பயிற்சி அளிப்பதுதான் இந்த பிசியோதெரபியின் முக்கியப் பணி.
சிகிச்சை முறைகள்
எலெக்ட்ரோ தெரபி (Electro Therapy)
உபகரணங்கள் மூலம் அளிக்கப்படும் சிகிச்சை முறை இது. பெரும்பாலும் வலியைப் போக்கத்தான் மின் சாதனங்களின் துணையுடன் இந்தச் சிகிச்சை அளிக்கப்படுகிறது.
மேனுவல் மற்றும் இயந்திர முறை தெரபி (Manual and Mechanical Therapy)
பிசியோதெரபிஸ்ட் தன் கைகளைக்கொண்டே நோயாளியின் தசைகள் மற்றும் மூட்டுகளை அசைத்து பயிற்சியளிப்பார்.
உடற்பயிற்சி தெரபி (Exercise Therapy)
குறிப்பிட்ட உடல் அசைவுகளைச் செய்யவைப்பது மற்றும் உடற்பயிற்சிகள் மூலம் சிகிச்சையளித்தல்.
பிசியோதெரபி சாதனங்கள்
வெப்ப சாதனங்கள் (Thermal Based Equipments)
பாதிக்கப்பட்ட தசைகளுக்கு கருவிகள் மூலம் வெப்பம் செலுத்தப்படும். அந்த வெப்பத்தால் ரத்த ஓட்டம் அதிகமாகும். இதனால் வலி குறைந்து, தசைகளின் இயக்கம் சீராகும்.
* ஷார்ட்வேவ் டயாதெர்மி (Shortwave Diathermy)
* மைக்ரோவேவ் டயாதெர்மி (Microwave Diathermy)
* இன்ஃப்ராரெட் ரேடியேஷன் (Infrared Radiation)
* அல்ட்ரா சவுண்ட் (Ultrasound)
* க்ரையோதெரபி (Cryotherapy)
* வாக்ஸ் தெரபி (Wax Therapy)
* ஹைட்ரோ கொலேட்டர் தெரபி (Hydro Collator Therapy)
போட்டோகெமிக்கல் சாதனங்கள் (Photochemical Based Equipments)
வலி இருக்கும் தசைகள் மற்றும் தசைநார்களுக்குள் லேசர் மற்றும் அகச்சிவப்புக் கதிர்களைச் செலுத்தி செய்யப்படும் தெரபி இது. இந்தக் கதிர்கள் சருமநோய்களைச் சரிசெய்யவும் பயன்படுத்தப்படுகின்றன.
* லேசர் தெரபி (Laser Therapy)
* அகச்சிவப்புக் கதிர் தெரபி (UVR Therapy)
மின் சாதனங்கள் (Electric Current Based Equipment)
கீழ்க்கண்ட கருவிகள் மூலம் மின்சாரத்தைச் செலுத்தும்போது தசைகள் சுருங்கி விரியும். இதனால் அந்த இடத்தில் ரத்த ஓட்டம் அதிகமாகி வலி குறையும்.
* டிரான்ஸ்குடேனியஸ் எலெக்ட்ரிகல் நெர்வ் ஸ்டிமுலேட்டர் (Transcutaneous Electrical Nerve Stimulator - TENS)
* மசில் ஸ்டிமுலேடர் (Muscle Stimulator)
* இன்டர்ஃபெரன்ஷியல் தெரபி (Interferential Therapy)
* ஃபங்ஷனல் எலெக்ட்ரிகல் ஸ்டிமுலேடர் (Functional Electrical Stimulator)
* வேக்வம் தெரபி (Vacuum Therapy).
இயந்திர சாதனங்கள் (Mechanical Based Therapy)
பாதிக்கப்பட்ட தசைகளில் சில கருவிகளின் வழியாக வெளிப்புறத்திலிருந்து விசைகளைச் செலுத்தி, உடல் பாகத்தைச் சுருங்கி விரியச் செய்யும் சிகிச்சை இது.
* இன்டர்மிட்டென்ட் செர்விகல் ட்ராக்ஷன் தெரபி (Intermittent Cervical Traction Therapy)
* இன்டர்மிட்டென்ட் பெல்விக் ட்ராக்ஷன் தெரபி (Intermittent Pelvic Traction Therapy)
* கம்ப்ரெஷன் தெரபி (Compression Therapy)
* ஹைட்ரோ தெரபி (Hydro Therapy).
பிசியோதெரபியில் லேட்டஸ்ட் தொழில்நுட்ப முன்னேற்றங்கள்
* ஷாக்வேவ் டயாதெர்மி (Shockwave Diathermy)
* காம்பினேஷன் வேவ் டயாதெர்மி (Combination Wave Diathermy)
* லாங்வேவ் டயாதெர்மி (Longwave Diathermy)
* மேக்னெடோ தெரபி (Magneto Therapy).
மேனுவல் சிகிச்சை (Manual Therapy)
மேனுவல் தெரபி என்பது எந்தச் சாதனமும் இல்லாமல், பிசியோதெரபிஸ்ட் தன் கைகளால் நோயாளியின் தசைகளை அசைத்துச் செய்யும் சிகிச்சை.
* ஜாயின்ட் மொபிலைசேஷன் (Joint Mobilization)
* மசில் எனர்ஜி டெக்னிக் (Muscle Energy Technique)
வழக்கமான உடல் பயிற்சி செய்வதினால் நமக்கு கிடைக்கும் நன்மைகள் :-
# உடல் பயிற்சி செய்வதினால் உங்கள் ஒட்டுமொத்த ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது.
# இதய நோய், நீரிழிவு மற்றும் சில புற்றுநோய்கள் உட்பட பல நாள்பட்ட நிலைமைகள் உங்கள் ஆபத்தையும் உடற்பயிற்சி மேற்கொள்ளும்போது நோயின் தன்மை குறைக்கிறது.
இது உங்கள் இரத்த அழுத்தம் குறைக்கிறது மற்றும் ஆரோக்கியமான வீச்சு உங்கள் கொழுப்பு வைத்திருக்கிறது.
# உடல் பயிற்சி செய்வதினால் உங்கள் தசைகள் மற்றும் எலும்புகள் உறுதிப்படுத்துகிறது.
# உடல் பயிற்சி செய்வதினால் நல்ல தூக்கத்தை ஊக்குவிக்கிறது.
# உடல் பயிற்சி செய்வதினால் மன அழுத்தத்தை குறைக்கிறது மற்றும் ஓய்வெடுக்க உதவுகிறது.
# உடல் பயிற்சி செய்வதினால் உங்களின் சுய மரியாதையும் மற்றும் மனநலமும் மேம்படுத்துகிறது.
# பிசியோதெரபி பயிற்சி மூலம் உடல் எடை, ரத்த அழுத்தம் மற்றும் நீரிழிவு நோயை கட்டுப்பாட்டில் வைத்துக் கொள்ள உதவுகிறது.
# உடல் பயிற்சி செய்வதினால் நுரையீரல் செயல்பாடுகளை முறைப்படுத்தலாம்.
# உடல் பயிற்சி செய்வதினால் தொற்றுநோய்களை பரவ விடாமல் தடுக்கிறது.
இதனால் உடல் ஆரோக்கியம் மற்றும் அழகும் பெறுகிறது.
முதுகெலும்பு
வழி முறைகள்
உலகம் கம்ப்யூட்டர் பின்னால் என்று செல்ல தொடங்கியதோ அன்றில் இருந்து மனிதன் நிறைய நோய்களுக்கு வழி வகுத்து விட்டான். இந்த உண்மையை யாராலும் மறுக்க முடியாது. கம்ப்யூட்டர் புரட்சி நாட்டில் ஏற்படுத்திய மாற்றங்களை ஏற்று கொண்டதை போல இந்த சில மாற்றங்களையும் நாம் ஏற்று கொண்டு வாழப் பழகி விட்டோம், முப்போகம் நெல் விளைந்த நிலங்கள் இன்று வசிப்பிடங்களாக மாற்றப்பட்டு கம்ப்யூட்டர் புழுவாய் மனிதன் வாழப் பழகி விட்டான். கம்ப்யூட்டர் முன் நீண்ட நேரம் பணி புரிவதால் ஏற்படும் வியாதிகள் பல, அதில் ஒன்றான முதுகு வலி பற்றியும், அதை நம்மால் எப்படி தவிர்க்க முடியும் என்பதைப் பற்றியும் இங்கே அறிந்து கொள்ளலாம்.
தண்டு வடம் ஒரு நுண்ணிய பாதுகாப்பான வடிவமைப்பு. நம் உடலில் 33 முதுகு எலும்புகள் உள்ளன. உங்கள் முதுகின் நடுவில் உள்ள கோட்டில் நீங்கள் மெல்ல அழுத்தி உணரும் போது இந்த முதுகு எலும்புகளை உங்கள் கை விரல்களால் உணர முடியும். நாம் தொடர்ந்து கணிபொறி முன் அமர்ந்து பணி புரியும் போது முதுகெலும்பு உள்ள நாம் அந்த எலும்புகளை அழுத்தத்திற்கு உள்ளாக்குகின்றோம். என்ன பாதிப்புகள் இதனால் ஏற்பட வாய்ப்பு உள்ளது.
ஒரு குறிப்பிட்ட அழுத்தம் வரை தாங்கி கொள்ளும் நம் முதுகெலும்பு, அழுத்தம் தொடர்ந்து அதிகமாகும் போது முதலில் அதன் வலு தன்மையை கொஞ்சம் கொஞ்சமாக இழக்கிறது.
அதன் வலு தன்மை இழக்கும் போது அதன் வடிவமைப்பு சிறிது சிறிதாக மாறத் தொடங்குகிறது.
அழுத்தம் அதிகரித்து தன் நிலை மாறிய எலும்புகள், பின்னர் மெதுவாக காலப்போக்கில் தேய ஆரம்பிக்கறது. இதை மருத்துவர்கள் முதுகு எலும்புத் தேய்மானம் என்று சொல்கிறார்கள். (spondylosis/spondylolysis)
முதல் இரண்டு நிலைகளும் நம்மால் கட்டுபடுத்தி சரி செய்யும் நிலை. இதனை மருத்துவர்கள் prevention better than cure என்பார்கள். ஆனால் நாம் இந்த நிலையில் இருந்து மூன்றாவது நிலைக்குச் சென்ற பின்பே மருத்துவரை நாடுகிறோம். இது மனித இயல்பு குறை கூற ஒன்றும் இல்லை.
படுத்து கொண்டு மிக நீண்ட நேரம் internet வலம் வருவதை முற்றிலும் தவிருங்கள்.
உங்கள் கணினி உங்கள் உயரத்திற்கு சரியாக அமைவது மிக முக்கியம்.
நீங்கள் உட்கார்ந்து பணி புரியப் போகும் நாற்காலி சரியான உயரமும், நல்ல வசதியுடையதாக உள்ளதாகவும் இருப்பதை உறுதிப்படுத்துங்கள்.
நாற்காலியில் உங்கள் முதுகைத் தாங்கும் பகுதி சரியான உயரத்துடனும், மிருதுவாகும் இருக்க வேண்டும்.
உங்கள் கால் பாதம் எப்பொழுதும் தரையை தொடும் படியான உயரம் உள்ள நாற்காலிகளை உபயோகிப்பது மிக நல்லது.
மிக நீண்ட நேரம் தொடர்ந்து கணினி முன் அமர்வதை தவிர்க்கலாம். இரண்டு மணி நேரத்திற்கு ஒரு முறை எழுந்து தண்ணீர் குடிக்க இடம் பெயருங்கள். எழுந்து நடப்பதால் உங்கள் ரத்த ஓட்டம் புதுபிக்கப்படும்.
இது உங்கள் முதுகெலும்புகளை அழுத்தில் இருந்து சிறிது நேரம் மீட்டு எடுக்கும்.
கணினி திரையை வேலைப் பளுவால் உற்று நோக்க ஆரம்பித்து விடுகிறோம் மிக விரைவாக இதனை தவிருங்கள், முடிந்த வரை உங்கள் கண்களை 45 நிமிடங்களுக்கு ஒரு முறை இடது வலது புறம் திரும்பி பார்வைக் கோட்டை அகலப்படுத்தி விட்டு மீண்டும் திரையில் முழுகலாமே.
முதுகுப் பகுதியை சிறிது வலப்புறம், இடப்புறம் திருப்பி வளைத்து சிறிய உடற்பயற்சி செய்து விட்டு மீண்டும் அமரலாம்.
உங்கள் முதுகெலும்பு முடிந்த வரை நேர்கோட்டில் செங்குத்தாக இருப்பது நலம், ஆனால் இதனை நம்மால் செய்ய முடியாது, இதற்காகத்தான் நாற்காலிகள் இதனை கருத்தில் கொண்டு நவீன வடிமைப்புடன் வருகின்றன. அதற்காகப் பிரத்தியோகமாக வடிமைத்த நாற்காலிகள் வாங்கி பயன்படுத்துங்கள்! முடிந்தவரை முதுகைக் காப்பாற்றுங்கள்.
சவ்வு மிட்டாய் அறிந்த நமக்கு சவ்வுக்கு விளக்கம் அதிகம் தேவையில்லை. உங்களில் சிலர் இந்த வார்த்தைகளை கடந்து அல்லது நண்பர்களுக்கோ உறவினர்களுக்கோ ஏற்பட்டதாக அறிந்து இருப்பீர்கள். இந்த சவ்வு போன்ற பகுதியை ஆங்கிலத்தில் Ligament என்று அழைப்பர். இது போன்ற வார்த்தைகளை சொல்லி வலியின் உச்சத்தில் இருக்கும் ஒருவரை மீண்டும் புரியாத ஒரு வார்த்தையைச் சொல்லி துன்பப்படுத்த வேண்டாம் என்ற எண்ணத்தில் மருத்துவர் பொதுவாகக் கூறும் ஒரு விளக்கம் சவ்வு விலகல் அல்லது தேய்மானம்.
மருத்துவர் உங்களுக்கு எல்லாவற்றையும் விளக்க ஆரம்பித்தால் சிலர் இவர் ரொம்ப பயமுறுத்துகிறார் என்று ஆளை மாற்றி விடுவார்கள். இதனால் அனைத்து மருத்துவர்களும் தரும் பொதுவான விளக்கம் சவ்வு விலகல், சவ்வு தேய்மானம். உண்மையில் இந்த சவ்வுத் தேய்மானம் போன்றவற்றிற்கு நிறைய மாறுபாடுகள் உள்ளன.
உடம்பில் நமக்குப் பொதுவாக தெரிந்த உள் உறுப்புக்கள் சில, தெரியாதவை பல, இந்தத் தெரியாத பலவற்றில் ஒன்று தான் இந்த சவ்வு. சவ்வு என்பதற்கு உங்கள் அனைவருக்கும் விளக்கம் தெரிந்து இருக்கும். இழுத்து விடும்போது மீண்டும் தன்னிலைக்கு அதாவது ஆரம்ப நிலைக்கு மீண்டும் வந்தடையும் எதையும் சவ்வு எனலாம். இதை ஆங்கிலத்தில் சொல்ல வேண்டும் என்றால் Rubber Band மாதிரியான ஒரு பகுதி.
இது உடம்பில் உள்ள அனைத்து மூட்டு பகுதிகளிலும் அமைந்துள்ளது. இது மூட்டுகள் வலுவாக எந்த தடையும் இல்லாமல் இயங்குவதற்கு உதவுகிறது. அதேபோல், இதன் முக்கிய வேலைகள் மூட்டுகளின் உள் கட்டமைப்பைத் தாங்கி பிடித்துக் கொள்கிறது. இதை ஆங்கிலத்தில் intra articular stability என்பார்கள். முன் கூறியது போல இது ரப்பர் போன்றது என்பதால் இரண்டு எலும்புகள் அதாவது மூட்டு இயங்கும் போது முன் பின் செல்லும் எலும்புகளை வழி நடத்துகிறது. இதை ஆங்கிலத்தில் Dynamic Stability என்பார்கள்.
பொதுவாக இந்த சவ்வு நார்க்கற்றைகளால் ஆன பகுதி. இதன் இயக்கம் மிக முக்கியமான் ஒன்றாகும். குறிப்பாக, மூட்டுகள் சரியாக இயங்குவதற்கு இன்றியமையாதது. ஒருவர் தன் மூட்டுகளை அதிகமாக இயக்கும் போது இந்த சவ்வு போன்ற பகுதிகள் தனது பழைய நிலைக்கு திரும்பும் பண்பை கொஞ்சம் கொஞ்சமாக இழந்து விடுகின்றன. ஒரு சவ்வு இந்தப் பண்பை இழக்கும் போது வலிகளைத் தர ஆரம்பிக்கிறது. இது பொதுவாக விளையாட்டு வீரர்களுக்கும், வயதானவர்களுக்கும் மற்றும் போதிய உடற்பயற்சி இல்லாமல் விளையாடும் யாருக்கு வேண்டுமாலும் சவ்வு விலகுதல் அல்லது கிழிந்து போகுதல் ஏற்படலாம்.
மிக அதிக நேரம் இயங்கும் போதோ அல்லது விளையாடும் போதோ ரப்பர் போன்ற இந்த சவ்வு கடுமையான இயக்கங்களை சந்திக்கும் போது, சில நேரங்களில், உள்ளே உள்ள சில நார்கற்றைகள் கிழிந்தோ அல்லது காயம் ஏற்பட்டோ வலிகளை ஏற்படுத்தும். இதனை ஆங்கிலத்தில் Sprain என்பார்கள். மருத்துவர்கள் நமக்கு விளக்கும் போது இதனை சவ்வு விலகல் என்று பொதுவான வார்த்தையை கூறி புரியவைக்கலாம்.
நம் உடலில் சுமாராக 600 க்கும் மேற்ப்பட்ட தசைகள் அமைந்துள்ளன. பொதுவாக தசைகள் உடல் இயக்கத்திற்கு உதவுகின்றன. நாம் செய்யும் அனைத்து வேலைகளுக்கும் தசைகள் உறுதுணையாக இருக்கின்றன. மனிதன் உடம்பு முழுவதும் தசைகள் அமைந்து நம் உடலுக்கு ஒரு அழகான வடிவமைப்பைத் தருகிறது. தசைகளும் அது செய்யும் வேலைக்கேற்ப அவற்றை இரண்டு வகையாகப் பிரிக்கலாம்.
அதாவது; நம் இதயம் தொடர்ந்து துடித்துக் கொண்டே இருப்பதற்கு காரணம் நம் இருதயத்தை சுற்றி அமைந்துள்ள தசைகள் தொடர்ந்து இயங்கிக் கொண்டே இருப்பதே.
நாம் நடப்பதற்கு, சாப்பிட, ஓட, நடக்க என்று நம்அனைத்து வேலைகளுக்கும் நம் தசைகள் இயக்கம் மிக முக்கியம். நாம் தொடர்ந்து இயங்கிக் கொண்டே இருப்பதால் உடல் சோர்வடைகிறோம் சில நேரங்களில். அதே போல் நாம் தொடர்ந்து இயங்கும் போது, நம் தசைகளும் தசை நார்களும் சோர்வடைகிறது. இதனை ஆங்கிலத்தில் fatigue என்று கூறுவார்கள். இதற்குப் பல்வேறு காரணங்கள் இருக்கின்றன. இங்கே நாம் முன் தொடை தசைக்கும் மூட்டுவலிக்கும் என்ன உறவு என்று பார்க்கலாம்.
முன் தொடையில் அமைந்துள்ள தசையை quadriceps என்று கூறுவார்கள். இது மொத்தம் நான்கு தசைகளால் ஆனது, அதனால் தான் இதனை quadri என்ற பெயர் கொண்டு அழைக்கின்றனர். உடலில் உள்ள பல்வேறு வலுவான தசைகளில் இதுவும் ஒன்று. இந்தத் தசை மிகுந்த வலுவுடன் இருந்தால் நமக்கு பிற்காலத்தில் வரப்போகும் மூட்டுவலியை அறவே தவிர்க்கலாம்.
நீங்கள் நடக்கும் போது பல்வேறு விசைகள் உடல் இயக்கத்திற்கு உதவுகின்றன. அதில் முக்கியமான ஒன்று புவிஈர்ப்பு விசை. இந்த விசை நம் உடலில் இயங்கவில்லை என்றால் நாம் ஆகாயத்தில் மிதந்து கொண்டு இருப்போம். இந்த விசை பல்வேறு வகையில் மனிதனுக்கு உதவினாலும் சில சமயங்களில் பிரச்னையையும் ஏற்படுத்துகின்றன. அதாவது, நாம் நடக்கும் போது, நம் முழங்கால் மூட்டு முன்னும் பின்னும் இயங்கி, நம் உடலை முன்னே கொண்டு செல்ல உதவுகின்றன. தொடை எலும்பும் கெண்டைக்கால் எலும்பும் மடங்கி விரிவதை கட்டுப்படுத்தும் தசைதான் நம் முன் தொடையில் அமைந்துள்ள quadriceps . நாம் நடக்கும் போதும், ஓடும் போதும், நிற்கும் போதும் மூட்டுகளுக்கு உள்ளே ஏற்படும் உராய்வை மிக நேர்த்தியாக கட்டுப்படுத்தும் இந்தத் தசையை நாம் ஒழுங்காகக் கவனிப்பதில்லை. 10 அல்லது 15 வருடங்களுக்கு முன் நாம் மிதிவண்டி மிதித்துக் கொண்டிருந்தது இந்த தசைகள் வலுவாக இருக்க உதவியது. இந்த அவசர உலகில் நாம் எவரும் மிதிவண்டி மிதிக்கத் தயாராக இல்லை. இது போன்ற உடற்பயிற்சிகள் மிகுந்த வேலையை நாம் அறவே தவிர்த்து விட்ட சூழ்நிலையில் மூட்டுத் தேய்மானம் என்பது ஒரு பொதுவான பிரச்சனையாகி விட்டது. இந்தத் தசை வலுவை இழந்து தொய்வடையும் போது மூட்டு தேய்மானமாகத் தொடங்குகிறது. நாம் நடக்கும் போது, தரையில் இருந்து மூட்டுக்கு பரவும் உராய்வு இந்த தசைகள் மூட்டுக்குள் பரவாமல் தாங்கி பிடித்து மூட்டுக்களில் ஏற்படும் தேய்மானத்தை தடுக்கிறது.
முன் தொடைத் தசை வலுவிழக்கும் போது மிக அதிகமான விசைகள் மூட்டுக்களை தாக்கத் தொடங்கும். இதனால் மூட்டு எலும்புகள் சிறிது சிறிதாகத் தேயத் தொடங்குகின்றன. இதனைப் பொதுவாக மருத்துவர்கள் மூட்டுத் தேய்மானம் ஆகிவிட்டது, இனி ஒன்றும் பண்ண முடியாது என்று கூறுவார்கள்.
ஆனால் நாம் இதனைத் தடுக்க முடியும், ஒரே வழி தகுந்த சக்தியுடன் அதாவது போதிய வலுவுடன் முன்தொடைத் தசையை வைத்து இருந்தால் நாம் இந்த மூட்டு வலியை தவிர்க்கலாம். இந்தத் தசையை வலுவாக வைப்பது எப்படி என்பதற்கான உடற்பயிற்சி குறித்த தகவல்களைப் படத்துடன் இங்கே காணலாம்.
முதலில் நீங்கள் தரையிலோ அல்லது படுக்கையிலோ கால் நீட்டியவாக்கில் அமர்ந்து கொள்ளுங்கள்.
உங்கள் முழங்கால் மூட்டுக்கு பின்புறம் உங்கள் உள்ளங்கை முஷ்டி அளவுக்கு துண்டை (துணி) மடித்து வைத்துக் கொள்ளுங்கள்.
பிறகு உங்கள் முழங்கால் தசையை இறுக்கி, உங்கள் முழங்காலைக் கீழ் நோக்கி அதாவது காலுக்கு அடியில் உள்ள துண்டை அழுத்துங்கள்.
நீங்கள் துண்டை அழுத்தும் போது உங்கள் முன்தொடை தசை இறுகுவதை நீங்கள் உணர முடியும்.
இறுக்கிப் பிடித்து ஒன்றில் இருந்து பதினைத்து வரை எண்ணிக் கொண்டு பிறகு மெதுவாக இறுக்கத்தைத் தளர்த்துங்கள்.
இதே போல் தொடர்ந்து இருபது முறை காலையிலும்,மாலையிலும் செய்து வாருங்கள்.
உங்கள் மூட்டுவலி மெல்ல குறைவதை நிச்சயமாக உணர முடியும்.