Free Physiotherapy Consultancy R.Rajkumar MPT sports Physiotherapist Simmakkal Madurai
நான் மிகவும் நேசிக்கும் ஜென் கதை ஒன்று உள்ளது. நண்பர்கள் மூவர் காலைநேரத்தில் உலாவ சென்றிருந்தினர். அப்போது அவர்கள் திடீரென மலையில் ஜென் துறவி ஒருவர் நின்றிருப்பதை கண்டனர்.
அந்த மூன்று நண்பர்களில் ஒருவன், “அவர் அவருடைய நண்பர்களுடன் வந்திருக்க வேண்டும், இவர் அவர்களை விட முன்னால் வந்திருக்க வேண்டும். அதனால் இவர் அவர்களுக்காக காத்திருக்கிறார் என்று நான் நினைக்கிறேன்” என்று கூறினான்.
இன்னொருவன், “நீ கூறுவதை என்னால் ஒப்புக் கொள்ள முடியாது. ஏனெனில் அந்த மனிதரை பார்க்கும் போது ஒரு விஷயத்தை என்னால் நிச்சயமாக கூற முடியும். அவர் யாரோ ஒருவருக்காக காத்திருக்கவில்லை என்பதே அது. ஏனெனில் அவர் ஒருபோதும் பின்னால் திரும்பி பார்க்கவில்லை. அவர் வெறுமனே ஒரு சிலையைப் போல நின்று கொண்டிருக்கிறார். தனியாக விடப்பட்டு மற்றவர்களுக்காக காத்துக் கொண்டிருக்கும் யாராக இருந்தாலும் சிறிது நேரத்திற்கு ஒருமுறை அந்த நபர் வந்துவிட்டாரா இல்லையா என்று பார்ப்பார்கள். ஆனால் இவர் நகரவே இல்லை.
அவர் எந்த நண்பனுக்காகவும் காத்துக் கொண்டிருக்கவில்லை. இந்த துறவியை நான் அறிவேன். அவரிடம் ஒரு பசுமாடு இருக்க வேண்டும், அந்த பசு இந்த அடர்த்தியான காட்டிற்க்குள் தொலைந்து போயிருக்க வேண்டும். இதுதான் இருப்பதிலேயே மிகவும் உயரமான இடம், எனவே அங்கிருந்து அவரால் இந்த காடு முழுவதையும் பார்த்து அந்த பசு எங்கிருக்கிறது என்று கண்டறிய முடியும் என்று அவர் அங்கிருந்து பார்த்துக் கொண்டிருக்கிறார் ” என்றான்.
மூன்றாவது நபர், “ உன்னுடைய சொந்த வாதத்தை நீயே மறுத்துவிட்டாய். அவர் பசுவை தேடிக் கொண்டிருந்தால் அவர் சுற்றிலும் பார்த்துக் கொண்டிருப்பார், அவர் ஒரு திசையை பார்த்தபடி வெறுமனே ஒரு சிலையைப் போல அங்கு நின்று கொண்டிருக்கமாட்டார். தொலைந்து போன பசுவை தேடும் வழி இதுவல்ல “ என்று கூறினான். அவன், “ எனக்கு தெரிந்த வகையில் அவர் அவருடைய காலை நேர தியானத்தை செய்து கொண்டிருக்கிறார் “ எனக் கூறினான்.
ஆனால் மற்ற இருவரும், “ ஜென்னின் அடிப்படை தத்துவமே நீ எங்கு வேண்டுமானாலும் தியானம் செய்யலாம், எதை செய்து கொண்டிருந்த போதிலும் தியானம் செய்யலாம் என்பது தானே. எனவே அந்த மலைக்கு அதிகாலையில் குளிரில் சென்று நின்று கொண்டு தியானம் செய்ய வேண்டிய அவசியம் என்ன?” என்று கேட்டார்கள். “ அவர் அவருடைய கதகதப்பான மடாலயத்தில் அவர்களுடைய தனிச்சிறப்பு வாய்ந்த தியான ஆலயத்தில் தியானம் செய்திருக்க முடியும். அவர் அங்கு இருந்திருக்கலாம் – மலைக்கு செல்ல வேண்டிய தேவை என்ன ? இல்லை இதை நாங்கள் ஒத்துக் கொள்ள முடியாது “ என்று கூறினார்கள்.
அவர்கள் விவாதித்தனர். முடிவில் அவர்கள் நாம் மலைக்கு செல்வதுதான் சிறந்ததாக இருக்கும். அது நேரத்தை வீணடிப்பதாக இருக்கலாம், ஆனால் அவர் என்ன செய்கிறார் என்று முடிவு செய்ய இதைத் தவிர வேறு எந்த வழியும் இல்லை என்று கூறினார்கள்.
மனதின் ஆர்வம் அத்தகையது – மிகவும் குரங்குத்தனமானது எதற்காக நீ இப்போது உன்னை சிரமப்படுத்திக் கொள்கிறாய் ? அவர் செய்வது என்னவாக இருந்தாலும் செய்துவிட்டு போகட்டும். அவர் ஒருவேளை அவருடைய பசுவை தேடிக் கொண்டிருந்தால் அது அவருடைய பிரச்னை. ஒருவேளை அவர் அவருடைய நண்பருக்காக காத்துக் கொண்டிருந்தால் அது அவருடைய விருப்பம். ஒருவேளை அவர் தியானித்துக் கொண்டிருந்தால் அது அவருடைய சொந்த விஷயம் – நீ எதற்காக உன்னுடைய மூக்கை அதற்குள் நுழைக்கிறாய் ? ஆனால் மக்கள் அப்படித்தான் இருக்கிறார்கள்.
ஒருவருக்கொருவர் விவாதம் செய்ததில் மிகவும் உற்சாகமடைந்து அவர்கள் நாம் மேலே சென்றாக வேண்டும் என்று முடிவு செய்தனர். அவர்கள் வெறும் சிறிய காலை நேர உலாவலுக்குத்தான் வந்தனர் என்பதை மறந்து விட்டனர். மேலும் மலைக்கு செல்வதற்கு பல மணி நேரம் ஆகும் என்பது மட்டுமல்ல மலையிலிருந்து கீழே இறங்கி வரும்போது சூரியன் கிட்டத்தட்ட உச்சியில் இருப்பான் என்றாலும் கூட கேள்வி……… அவர்கள் ஒரு முடிவுக்கு வந்தாக வேண்டும். அது மட்டுமல்ல, உண்மையில் அவர்கள் தாங்கள்தான் சரி என்று நிரூபிக்க விரும்பினார்கள்.
ஒவ்வொருவரும் நான்தான் சரி என்பதை நிரூபிக்க விரும்பினார்கள். இப்போது அதனை முடிவு செய்யக்கூடிய ஒரே மனிதன் அந்த துறவிதான்.
அவர்கள் மூச்சு வாங்கிக் கொண்டு அங்கு அடைந்தனர். துறவி அரைக் கண்ணை மூடிக்கொண்டு அங்கு நின்றிருந்தார். அது புத்த மத வழி – நீ தியானம் செய்யும்பொழுது, கண்களை பாதி மூடிக் கொள்வது — ஏனெனில் ஒருவேளை நீ கண்களை முழுவதுமாக மூடிவிட்டால் நீ தூக்கத்தில் விழுந்துவிடக்கூடும். அப்போது தியானத்தில் செல்வதை விட தூக்கத்தில் விழ அதிக சாத்தியக்கூறு உள்ளது. நீ ஒருவேளை உன்னுடைய கண்களை முழுவதுமாக திறந்திருந்தால் நீ ஆயிரத்தோரு விஷயங்களில் ஆர்வம் கொள்வாய். ஒரு அழகான பெண் கடந்து செல்கிறாள், அப்போது தியானம் தொலைந்து விடுகிறது. எது வேண்டுமானாலும் தொல்லை கொடுக்கலாம். எனவே கண்களை பாதி மூடிக் கொண்டிருந்தால் நீ வெளியில் என்ன நடக்கிறது என்று சரியாக பார்க்கமாட்டாய், நீ பாதி கண்களை திறந்து வைத்திருக்க வேண்டும் எனவே நீ தூக்கத்தில் விழுந்து விட மாட்டாய்.
முதல் மனிதன் கேட்டான், “குருவே, நாங்கள் உங்களைப்பற்றி கேள்விப்பட்டிருக்கிறோம், ஆனால் நாங்கள் உங்கள் மடாலயத்திற்கு வரும் வாய்ப்பை பெற்றதில்லை. காலை நேர நடைக்காக வந்த நாங்கள் அதிர்ஷ்டவசமாக உங்களைக் கண்டோம். எங்களுக்கு ஒரு கேள்வி உள்ளது. அதற்கு நீங்கள் விடையளிக்க வேண்டும் என நாங்கள் விரும்புகிறோம். நீங்கள் நண்பருக்காக காத்திருக்கிறீர்களா ?”
அரைகண் மூடிய நிலையில் அந்த துறவி, “ எனக்கு யாரும் இல்லை, நான் தனியாக உள்ளேன். நான் தனியாக பிறந்தேன், நான் தனியாகத்தான் இறப்பேன், மற்றும் இந்த இரு தனிமைகளுக்கிடையில் என்னுடன் யாரோ இருக்கிறார்கள் என்று என்னை நானே முட்டாளாக்கிக் கொள்ள முயற்சி செய்யவில்லை. நான் தனியாக உள்ளேன், மேலும் நான் யாருக்காகவும் காத்திருக்கவில்லை “ என்று கூறினார்.
இரண்டாவது மனிதன் மகிழ்ச்சியோடு, “ அப்படியானால் நிச்சயமாக உங்களுடைய பசு இந்த அடர்த்தியான காட்டில் தொலைந்திருக்க வேண்டும், நீங்கள் கண்டிப்பாக அதனைத்தானே தேடிக் கொண்டிருக்கிறீர்கள்? என்று கேட்டான்,
துறவி, “ வித்தியாசமான அடி முட்டாள்கள்தான் இங்கு வருவார்கள் போலத் தெரிகிறது. என்னிடம் ஒரு பொருளும் இல்லை. என்னிடம் எந்த பசுவும் இல்லை, மடாலயத்தில்தான் அது உள்ளது, அது என்னுடைய வேலை அல்ல, அதனால் நான் எதற்காக பசுவைத் தேடி என்னுடைய நேரத்தை வீணடிக்கவேண்டும் ? என்று கூறினார்.
மூன்றாவது மனிதன் மிகவும் மகிழ்ச்சியடைந்தான். அவன், “ இப்போது நீங்கள் மறுக்கமுடியாது. நீங்கள் கண்டிப்பாக தியானம் செய்து கொண்டிருக்கவேண்டும். அப்படித்தானே நீங்கள் உங்களுடைய காலை நேர தியானத்தை செய்து கொண்டிருக்கிறீர்கள்தானே ?” என்று கூறினான்.
துறவி சிரித்தார். அவர் “ நீதான் மூவரில் மோசமான முட்டாள். தியானம் செய்யப்படுவதல்ல, அது ஒரு செயலல்ல. நீ தியானத்தில் இருக்கலாம். ஆனால் அதை நீ செய்ய முடியாது. அது ஒரு நிலை. எனவே நிச்சயமாக நான் தியானம் செய்து கொண்டிருக்கவில்லை. நான் தியானத்தில் இருக்கிறேன், ஆனால் அதற்காக இந்த மலைக்கு வர வேண்டியதில்லை, எங்கு இருந்தாலும் நான் தியானத்தில் இருக்கிறேன். தியானம் எனது தன்னுணர்வு.
எனவே நீங்கள் அனைவரும் சென்று விடுங்கள். மேலும் அரைக் கண்ணை மூடியபடி இருக்கும் யாரையும் ஒருபோதும் தயவுசெய்து தொந்தரவு செய்யாதீர்கள். அதை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள் “ என்று கூறினார்.
அப்போது அவர்கள் மூவரும் மன்னித்துவிடுங்கள்….. நாங்கள் முட்டாள்தனமாக நடந்து கொண்டுவிட்டோம், நிச்சயமாக மைல்கணக்கில் கடந்து வந்து உங்களிடம் இப்படிப்பட்ட……. எங்களுக்கு அவமானமாக உள்ளது. நாங்கள் முட்டாள்கள்தான், ஆனால் இப்போது எங்கள் மூவரிடம் இருந்தும் தனித்தனியாக இல்லாமல் ஒரே கேள்விதான். பிறகு நீங்கள் என்ன செய்து கொண்டிருக்கிறீர்கள் என்று கேட்டனர்.
அப்போது அந்த துறவி ஏதும் சொல்லவில்லை. அந்த ஏதும் அற்ற தன்மையே சாட்சிபாவம்.
நீ சாட்சிபாவமாக இருக்கும் பொழுது, நீ ஆச்சரியமடைவாய். அதாவது சலிப்பு. சோகம், ஆனந்தம், பரவசம் – எதுவாக இருந்தாலும் அது உன்னை விட்டு விலகி செல்லத் தொடங்குகிறது. உன்னுடைய சாட்சிபாவத்தன்மை ஆழமாக மாற மாற, சக்தி மிக்கதாக ஆகும்போது, அதிக ஒருமை தன்மை கொண்டதாக மாற மாற எந்த அனுபவமாக இருந்தாலும் – நல்லது அல்லது கெட்டது அழகானது அல்லது அசிங்கமானது – அது மறைந்து விடுகிறது. அங்கு தூய்மையான ஏதும் அற்ற தன்மை உன்னை சுற்றி நிலவுகிறது. சாட்சிபாவம் ஒன்று மட்டுமே உன்னைச் சுற்றியுள்ள அளவிடமுடியாத ஏதும் அற்ற தன்மையை குறித்த உணர்வை உனக்கு ஏற்படுத்தும். மேலும் அந்த அளவிடமுடியாத ஏதும் அற்ற தன்மையில்……அது காலியானது அல்ல, நினைவில் கொள். புத்தமத வார்த்தையான சூன்யதா என்பதை மொழி பெயர்க்க ஆங்கிலத்தில் வேறு எந்த வார்த்தையும் இல்லை. அந்த ஏதும் அற்ற தன்மையில்….. அது காலியானது அல்ல, அது உன்னுடைய சாட்சிபாவத்தால் நிரம்பியுள்ளது, உன்னுடைய சாட்சிபாவத்தன்மையால் நிறைந்துள்ளது, உன்னுடைய சாட்சிபாவத்தின் ஒளியால் நிறைந்துள்ளது.
புத்தருக்கு 600 ஆண்டுகளுக்குப் பிறகு போதி தர்மர் சீனா போய் சேர்ந்த பொழுது அங்கு ஏற்கனவே 30,000 புத்தமத கோவில்களும் மடாலயங்களும் மேலும் 2,00,000 புத்த பிட்சுக்களும் சீனாவிலிருந்தனர். இரண்டு லட்சம் புத்த பிட்சுக்கள் எனபது சிறிய எண்ணிக்கையல்ல. அது சீனாவின் மொத்த மக்கள் தொகையில் 5 சதவிகிதம்.
பிரயக்தாரா, போதிதர்மருடைய குரு, அவரை சீனாவுக்கு அனுப்பினாள், ஏனெனில் அவருக்கு முன்பு சீனாவுக்கு சென்ற மக்கள் ஞானமடைந்தவர்களாக இல்லாத போதிலும் ஒரு சிறந்த தாக்கத்தை ஏற்படுத்தியிருந்தனர். அவர்கள் சிறந்த பண்டிதர்கள், மிகவும் கட்டுக்கோப்பான மக்கள், மிகவும் அன்பானவர்கள், அமைதியானவர்கள், கருணை கொண்டவர்கள் ஆனால் யாரும் ஞானமடைந்தவர்களல்ல. மேலும் இப்போது சீனாவுக்கு இன்னொரு கௌளதமபுத்தர் தேவைப்பட்டார், நிலம் தயாராயிருந்தது. சீனாவை சென்றடைந்த முதல் ஞானமடைந்த மனிதர் போதிதர்மர்தான்.
நான் தெளிவாக்க விரும்பும் விஷயம் என்னவென்றால் கௌளதமபுத்தர் அவருடைய சங்கத்தில் பெண்களுக்கு தீட்சையளிக்க அச்சப்பட்டார். போதிதர்மர் கௌளதமபுத்தரின் பாதையில் வந்த போதிலும் ஒரு பெண்ணால் தீட்சை பெறும் அளவுக்கு தைரியமுடையவராயிருந்தார். அங்கு மற்ற ஞானமடைந்த மக்கள் இருந்தனர். ஆனால் அவர் ஒரு குறிப்பிட்ட காரணத்திற்காக ஒரு பெண்ணை தேர்ந்தெடுத்தார். இந்த காரணம் என்னவென்றால் ஒரு பெண்ணாலும் ஞானமடைய முடியும், அது மட்டுமல்ல, அவளுடைய சீடர்களும் ஞானமடைய முடியும் என்பதை காட்டுவதற்காகவே. எல்லா புத்தமத ஞானமடைந்த மக்களுக்கிடையிலும் போதிதர்மர் பெயர் தனித்து நிற்கிறது. அது கௌளதமபுத்தருக்கு அடுத்ததாக இருக்கிறது. இந்த மனிதரைப்பற்றி பல செவிவழி செய்திகள் உள்ளன. அவை அனைத்திலும் ஏதோ ஒரு முக்கியத்துவம் உள்ளது.
முதல் செவிவழி செய்தி : அவர் சீனாவை அடைந்தபோது – சீனாவை சென்றடைய அவருக்கு மூன்றாண்டுகள் ஆயின. – அவரை வரவேற்க சீனப்பேரரசர் வூ வந்திருந்தார். போதிதர்மருடைய புகழ் அவருக்கு முன்பாக அங்கு சென்றடைந்திருந்தது. பேரரசர் கௌதமபுத்தருடைய தத்துவத்திற்கு சிறந்த சேவை செய்திருந்தார். ஆயிரக்கணக்கான பண்டிதர்கள், புத்தமத புத்தகங்களை பாலிமொழியிலிருந்து சீனமொழிக்கு மொழிபெயர்த்துக் கொண்டிருந்தனர், மேலும் பேரரசர் மொழிபெயர்ப்புகளுக்கு ஒரு சிறந்த காவலராக விளங்கினார். அவர் ஆயிரக்கணக்கான கோவில்கள் மற்றும் மடாலயங்களை கட்டியிருந்தார். மேலும் அவர் ஆயிரக்கணக்கான பிட்சுக்களுக்கு உணவளித்துக் கொண்டிருந்தார். அவர் அவருடைய முழு பொக்கிஷத்தையும் கௌதமபுத்தரின் சேவைக்காக செலவழித்துக் கொண்டிருந்தார். அதனால் போதிதர்மருக்கு முன்பு அங்கு சென்ற புத்தபிட்சுக்கள் அனைவரும் பேரரசரிடம் அவர் பெரிய புண்ணியத்தை சம்பாதித்துக் கொண்டிருப்பதாகவும், அவர் சொர்க்கத்தில் ஒரு கடவுளாக அவதரிப்பார் எனவும் சொல்லி வந்திருந்தனர்.
எனவே அவர் போதிதர்மரிடம் கேட்ட முதல் கேள்வியே, “நான் பல மடாலயங்களை கட்டியுள்ளேன், பல பண்டிதர்களுக்கு உணவளித்து வருகிறேன், புத்த தத்துவங்களை படிப்பதற்காக நான் ஒரு பல்கலைகழகத்தையே நிறுவியுள்ளேன், நான் இந்த முழு பேரரசையும் அதன் பொக்கிஷங்களையும் கௌதமபுத்தரின் சேவைகளுக்காக அர்ப்பணித்துள்ளேன். அதற்குப் பரிசாக எனக்கு என்ன கிடைக்கும்?” என்பதாக இருந்தது.
போதிதர்மரைப் பார்த்து அவருக்கு சிறிது அதிர்ச்சியாகவே இருந்தது. மனிதர் இப்படி இருப்பார் என அவர் நினைக்கவேயில்லை. போதிதர்மர் மிகவும் கோபக்காரராக காட்சியளித்தார். அவர் மிகப்பெரிய கண்களை கொண்டிருந்தார். ஆனால் அவர் ஒரு மென்மையான மலர் போன்ற இதயத்தை – ஒரு தாமரை மலரை போன்ற இதயத்தை – கொண்டிருந்தார். ஆனால் அவருடைய முகம் உன்னால் எவ்வளவு அபாயகரமாக கற்பனை செய்ய முடியுமோ அவ்வளவு கடுமையானதாக காட்சியளித்தது. ஒரு கண்ணாடி போட்டிருந்தால் அவர் ஒரு மாபியாகும்பல்காரரைப் போல இருந்திருப்பார்.
மிகுந்த அச்சத்துடன் பேரரசர் வூ அந்த கேள்வியை கேட்டார். அதற்கு போதிதர்மர், “எதுவுமில்லை, எந்த பரிசுமில்லை அதற்கு பதிலாக நீ ஏழாவது நரகத்தில் விழ தயாராக இரு” என்று கூறினார். பேரரசர், “நான் எந்த தவறும் செய்யவில்லையே? எதற்காக ஏழாவது நரகம்? புத்த பிட்சுக்கள் கூறும் எல்லாவிஷயங்களையும் நான் செய்து வருகிறேனே” என்று கேட்டார். அதற்கு போதிதர்மர், “நீ உன்னுடைய சொந்த குரலை கேட்கத் தொடங்கும்வரை உனக்கு யாரும் உதவ முடியாது. அது புத்த மதத்தை சேர்ந்தவர்களாயினும் சரி, சேராதவர்களாயினும் சரி. மேலும் நீ இன்னும் உனது உள் குரலை கேட்கவில்லை. நீ அதைக் கேட்டிருந்தால் நீ இப்படி முட்டாள்தனமான கேள்வியை கேட்டிருக்க மாட்டாய்.
கௌதமபுத்தரின் பாதையில் எந்த வெகுமதியும் கிடையாது. ஏனெனில் வெகுமதிக்கான ஆசையே ஒரு பேராசையாக மனதிலிருந்துதான் வருகிறது. கௌதமபுத்தரின் முழு கற்பித்தலும் ஆசையற்ற தன்மையே. மேலும் புண்ணிய செயல்கள் என்று கூறப்படும் கோவில்கள் மற்றும் மடாலயங்கள் கட்டுதல், ஆயிரக்கணக்கான துறவிகளுக்கு உணவிடுதல் போன்ற எல்லா செயல்களும் உள் மனதில் ஒரு ஆசையோடு நீ செய்திருந்தால் நீ நரகத்தை நோக்கிச் செல்லும் உனது பாதையை தயார் படுத்துகிறாய். நீ இந்த செயல்களை உனது ஆனந்தத்தின் விளைவாக, உனது ஆனந்தத்தை முழு பேரரசுடன் பகிர்ந்து கொள்ளும் விதமாக செய்தால், எந்த வெகுமதிக்குரிய ஒரு சிறு ஆசைகூட உனக்கு இல்லாமல் இருந்தால் அந்த செயலே அந்த செயலின் வெகுமதியாகும். இல்லாவிடில் நீ முழுவிஷயத்தையும் தவறவிட்டுவிடுகிறாய். என்றார்.
பேரரசர் வூ, “என் மனது எண்ணங்களால் நிரம்பி வழிகிறது. நான் எனது மனதை அமைதிபடுத்த முயன்று வருகிறேன், ஆனால் நான் தோற்றுவிடுகிறேன். இந்த எண்ணங்களாலும் அதன் சத்தத்தின் காரணமாகவும் நீங்கள் உள்குரல் என்று கூறும் விஷயத்தை என்னால் கேட்க முடியவில்லை. எனக்கு அதைப்பற்றி எதுவும் தெரியாது. “ என்று கூறினார்.
போதிதர்மர், “அப்படியென்றால் நாளை அதிகாலை 4 மணிக்கு நான் மலையில் தங்கப்போகும் இடத்திற்க்கு எந்த மெய்க்காப்பாளனும் இல்லாமல் தனியாக வா. அங்கு நான் உனது மனதை எப்போதும் அமைதியோடு இருப்பதாக ஆக்கிவிடுகிறேன்“ என்று கூறினார்.
பேரரசர் இந்த மனிதர் உண்மையிலேயே வரம்புமீறிய மூர்க்கத்தனமானவர் என்று எண்ணினார். அவர் ஏராளமான பிட்சுக்களை சந்தித்திருக்கிறார். அவர்கள் மிகவும் பரிவு காட்டுபவர்கள். ஆனால் இவரோ ஒரு பெரிய தேசத்தின் பேரரசர் என்று கூட கவலைப்படவில்லை. மேலும் அதிகாலை இருட்டில் 4 மணிக்கு அவரிடம் செல்வது என்பது…………… மேலும் இந்த மனிதன் ஆபத்தானவனாக தோன்றுகிறான். போதிதருமர் எப்போதும் தன்னுடன் ஒரு கைத்தடியை வைத்திருப்பார். பேரரசர் முழு இரவும் தூங்கவில்லை. “போவதா? வேண்டாமா? இந்த மனிதன் என்ன வேன்டுமானாலும் செய்யக்கூடும், அவர் நம்பமுடியாத மனிதராக தோன்றுகிறார்” மற்றும் இன்னொரு பக்கம் அவரது இதயத்தின் ஆழத்தில் அவர் போதிதருமருடைய நேர்மையை உணர்ந்தார். அவர் நடிப்பவரல்ல, அவர் நீ ஒரு அரசர், தான் ஒரு புத்தபிட்சு என்பதைப்பற்றி ஒரு துளிகூட கவலைப்படவில்லை. அவர் தான் ஒரு பேரரசர் போலவும் அவருக்கு முன்பு நீ ஒரு பிச்சைக்காரன் என்பது போலவும் நடந்து கொள்கிறார். நான் உனது மனதை எப்போதும் அமைதியாக இருக்கும்படி செய்துவிடுகிறேன் என்று சொன்ன விதமும்……
பேரரசருக்கு புதிராயிருக்கிறது, ஏனெனில் “இந்தியாவிலிருந்து வரும் ஞானவான்களை கேட்டு வருகிறேன். அவர்கள் அனைவரும் எனக்கு யுக்திகளையும் வழிமுறைகளையும் அளித்தனர், அவற்றை நான் பயிற்சி செய்து வருகிறேன், ஆனால் எதுவும் நடைபெறவில்லை. ஆனால் இந்த புதிய மனிதன் கிட்டத்தட்ட ஒரு கிறுக்கனைப்போல, மது அருந்தியவனைப்போல, அவ்வளவு பெரிய கண்களையுடைய, பயத்தை உருவாக்கக்கூடிய ஒரு வித்தியாசமான முகத்தைக் கொண்டவராக இருக்கிறார். ஆனால் அவர் நேர்மையானவராகவும் தோன்றுகிறார். அவர் ஒரு காட்டுத்தனமான மனிதன். ஆனால் இந்த அபாயம் தகுதியுடையதே.! அவர் என்ன செய்யக்கூடும், அதிகபட்சம் அவர் என்னைக் கொல்ல முடியும்” என்று எண்ணினார். முடிவில் அவரால் ஆர்வத்தை அடக்க முடியவில்லை. ஏனெனில் ‘அந்த மனிதன் நான் உனது மனதை எப்போதும் அமைதியாக இருக்கும்படி செய்துவிடுகிறேன்’ என்று வாக்களித்துள்ளார்.
பேரரசர் வூ அதிகாலை 4 மணிக்கு தனியாக இருளில் அவரது இடத்தைச் சென்றடைந்தார். அந்த கோவில் படிகளில் போதிதர்மர் அவருடைய தடியுடன் நின்று கொண்டிருந்தார், அவர், “இரவு முழுவதும் போவதா வேண்டாமா என்று குழம்பினாலும் நீ வருவாய் என எனக்குத் தெரியும். ஒரு ஏழை பிட்சுவைப் பார்த்து, ஒரு ஏழை பிச்சைக்காரனைப்பார்த்து, இந்த உலகத்தில் ஒரு தடியைத் தவிர ஏதும் இல்லாதவனைப் பார்த்து இவ்வளவு பயப்படும் நீ எப்படிப்பட்ட பேரரசன் ? நான் இந்த தடியை வைத்து உனது மனதை அமைதியாக்கப் போகிறேன். “ என்று கூறினார்.
பேரரசர், “கடவுளே ஒரு தடியை வைத்து மனதை அமைதிபடுத்துவதை யாராவது எப்போதாவது கேள்விபட்டதுண்டா? அவனை முடித்துவிடலாம், தலையில் ஓங்கி அடிக்கலாம், பிறகு முழு மனிதனும் அமைதியாகிவிடுவான். ஆனால் மனம் அமைதி அடையாதே. ஆனால் இப்போது திரும்பி போவது என்பது முடியாத காரியம்” என எண்ணினார்.
போதிதர்மர், “இங்கே கோவில் வராண்டாவில் உட்கார், சுற்றிலும் ஒரு மனிதன் கூட இல்லை, கண்களை மூடிக்கொள், உனக்கு முன்னால் நான் எனது தடியுடன் உட்கார்ந்து கொள்கிறேன். மனதை பிடிப்பதே உனது வேலை. வெறுமனே உனது கண்களை மூடிக்கொண்டு உள்ளே சென்று அது எங்கே இருக்கிறதென்று தேடு. நீ அதனை பிடிக்கிற நொடியில் வெறுமனே எனக்கு அது இங்கே இருக்கிறதென்று கூறு, மற்றதை எனது தடி பார்த்துக்கொள்ளும்” என்று கூறினார்.
உண்மையை, அமைதியை, மௌனத்தை தேடும் தேடுதலையுடையவன் அடையக்கூடிய, அடைந்த அனுபவங்களிலேயே மிகவும் வித்தியாசமான அனுபவம் அது. பேரரசர் வூக்கு இப்போது வேறு வழியில்லை. கண்களை மூடி அங்கே அமர்ந்தார். போதிதர்மர் சொல்வதை செய்யக்கூடியவர் என்பதை பேரரசர் நன்றாக உணர்ந்தார். அவர் தன்னுள்ளே எல்லாபக்கமும் தேடினார், அங்கு மனமில்லை. அந்த தடி அதன் வேலையை செய்துவிட்டது.
முதன்முறையாக அவர் அப்படி ஒரு சூழலில் இருந்தார். செய்தாகவேண்டும்
…… நீ மனதை ஒருவேளை கண்டுபிடித்தால், இந்த மனிதன் அவருடைய தடியை வைத்து என்ன செய்யப்போகிறார் என்று உனக்குத் தெரியாது. மேலும் அந்த மௌனமான மலைப்பகுதியில், போதிதர்மருடைய இருப்பில்…. அவருக்கென ஒரு சக்தி வட்டமிருந்தது……. பல ஞானமடைந்த மக்கள் இருந்திருக்கிறார்கள், ஆனால் போதிதர்மர் தனியாக எதிலும் ஒட்டாமல் எவரெஸ்ட் சிகரம் போல தனித்து நிற்கிறார். அவருடைய ஒவ்வொரு செயலும் தனித்துவமானது மற்றும் ஆணித்தரமானது. அவருடைய ஒவ்வொரு அசைவும் அவருடைய சொந்த கையெழுத்தைக் கொண்டது, அது கடன் வாங்கப்பட்டதல்ல.
பேரரசர் மனதை கடுமையாகத் தேடினார், ஆனால் முதன்முறையாக அவரால் அதை கண்டுபிடிக்க முடியவில்லை. அது ஒரு சிறிய தந்திரம். நீ ஒருபோதும் உன் மனதை தேடாததால் மட்டுமே அது அங்கே இருக்கிறது. நீ ஒருபோதும் அதைப்பற்றிய விழிப்புணர்வோடு இருப்பதில்லை என்பதாலேயே அது அங்கே இருக்கிறது. நீ அதைத் தேடும்போது, நீ அதைப்பற்றிய விழிப்புணர்வோடு இருக்கும்போது விழிப்புணர்வு நிச்சயமாக அதனை முழுமையாக கொன்று விடுகிறது.
மணிநேரங்கள் கடந்துவிட்டன. சூரியன் மௌனமாக மலைகளின் மீது, ஒரு குளிர்ந்த தென்றலுடன் உதயமாகிக்கொண்டிருக்கிறான். போதிதர்மரால் பேரரசர் வூ வின் முகத்தில் அப்படி ஒரு அமைதியையும், அப்படியொரு மௌனத்தையும், அப்படியொரு அசைவற்ற தன்மையையும் அவர் ஒரு சிலையைப் போல இருப்பதையும் பார்க்க முடிந்தது. போதிதர்மர் வூ வை உலுக்கி, நிறைய நேரமாகிவிட்டது. நீ மனதை கண்டுபிடித்துவிட்டாயா?” என்று கேட்டார்.
பேரரசர் வூ, “உங்களது தடியை உபயோகிக்காமலேயே நீங்கள் எனது மனதை முழுமையாக அமைதிபடுத்திவிட்டீர்கள். எனக்கு எந்த மனமுமில்லை, நீங்கள் கூறிய உள் குரலை நான் கேட்டேன். இப்போது நீங்கள் கூறியது சரி என்று நான் உணர்கிறேன். எதையும் செய்யாமலேயே நீங்கள் என்னை நிலை மாற்றமடையச் செய்துவிட்டீர்கள். இப்போது எல்லா செயல்களுக்கும் அதைச் செய்வதே அதன் வெகுமதியாக இருக்க வேண்டும், இல்லாவிடில் அதனை செய்ய வேண்டியதில்லை என்று நான் உணர்ந்து கொண்டேன். உனக்கு வெகுமதியளிக்க அங்கு யார் இருக்கிறார்கள்? இது ஒரு குழந்தைதனமான சிந்தனை, அங்கு தண்டனை கொடுக்க யார் இருக்கிறார்கள்? உன்னுடைய செயலே தண்டனை. உன்னுடைய செயலே வெகுமதி. நீ சென்றடையும் இடத்தை தீர்மானிக்கும் அதிகாரம் உன்னிடமே உள்ளது என்பதை நான் அறிவேன் இப்போது.” என்று கூறினார்.
போதிதர்மர், “நீ ஒரு அபூர்வமான சீடன். வெறும் ஒரு அமர்தலிலேயே மனதின் எல்லா இருட்டும் மறைந்துவிடும் அளவிற்கு விழிப்புணர்வையும் மிகுந்த ஒளியைக் கொண்டுவரும் துணிச்சலும் உள்ள மனிதனாக இருக்கிறாய். நான் உன்மீது அன்பு செலுத்துகிறேன், நான் உன்னை மதிக்கிறேன், ஆனால் ஒரு பேரரசனாக அல்ல.” என்று கூறினார்.
வூ அவரை அரண்மனைக்கு வருமாறு வற்புறுத்தினார். போதிதர்மர், “அது என்னுடைய இடமல்ல, நான் காட்டுத்தனமானவன். நான் என்ன செய்வேன் என்று எனக்கேத் தெரியாது என்பதை நீ பார்க்கலாம். நான் நொடிக்கு நொடி இயல்பாக வாழ்கிறேன். நான் மிகவும் கணிக்க இயலாதவன். நான் தேவையில்லாமல் உனக்கும் உனது சபைக்கும் உன்னைச் சேர்ந்தவர்களுக்கும் பிரச்னைகளை உருவாக்கலாம். நான் அரண்மனைகளுக்காக ஆக்கப்பட்டவனல்ல. என்னை என்னுடைய காட்டுத்தனத்தில் வாழவிடு.” என்று கூறினார்.
இரண்டாவது செவிவழி செய்தி என்னவென்றால் டாய் என்ற பெயர் கொண்ட இந்த மலையில் வசித்த போதிதர்மர்தான் தேநீரை உருவாக்கிய முதல் மனிதர் என்பதாகும். டீ என்னும் பெயர் டாய் என்னும் பெயரிலிருந்து வந்ததாகும். ஏனெனில் அது டாய் என்னும் மலையில் உருவாக்கப்பட்டது. எல்லா மொழியிலும் உள்ள தேநீரை குறிக்கும் சொற்கள் ஒரே மூலத்திலிருந்தே வந்துள்ளன. ஆங்கிலத்தில் அது டீ, ஹிந்தியில் அது சாய், சைனீஸ் வார்த்தை ச்சா என்றும் கூறப்படுகிறது. மராத்தியில் அது ச்சா என்றழைக்கப்படுகிறது.
போதிதர்மர் தேநீரை உருவாக்கிய விதம் சரித்திரபூர்வ உண்மையாக இருக்க முடியாது. ஆனால் அது முக்கியத்துவமானது. அவர் கிட்டதட்ட எல்லா நேரங்களிலும் தியானம் செய்து கொண்டிருந்தார். ஆனால் இரவில் சில நேரங்களில் தூங்கத் தொடங்கி விடுவார். எனவே தூங்காமல் இருப்பதற்காக, அவருடைய கண்களுக்கு ஒரு பாடத்தை கற்றுக் கொடுப்பதற்காக அவரது கண் இமைகளின் முடிகள் அனைத்தையும் பிடுங்கி அவர் கோவில் நிலத்தில் எறிந்து விட்டார். கதை என்னவென்றால் இந்த கண் இமைகளிலிருந்துதான் தேநீர் செடி வளர்ந்தது. அவைதான் முதல் தேநீர் செடிகள். அதனால்தான் தேநீரை குடித்தபிறகு உன்னால் தூங்க முடியாது. மேலும் புத்த மதத்தில் தியானத்திற்காக தேநீர் அருந்துவது பழக்கமாகி விட்டது. தேநீர் மிகவும் உதவி புரியக் கூடியது. எனவே முழு புத்த உலகமும் தியானத்தின் ஒரு பகுதியாக தேநீர் அருந்துகிறது. ஏனெனில் அது உன்னை சுறுசுறுப்புடனும் விழிப்புடனும் வைத்திருக்கிறது. இரண்டு லட்சம் புத்த மத பிட்சுக்கள் சீனாவிலிருந்தாலும் கூட போதிதர்மர் தனது சீடர்களாக ஏற்றுக் கொள்ள தகுதியுடையவர்களாக நான்கு பேரை மட்டுமே கண்டு பிடிக்க முடிந்தது. அவர் உண்மையாகவே மிகவும் குறிப்பாக தேர்ந்தெடுத்தார். அவரது முதல் சீடரான ஹூய்கோவை கண்டுபிடிக்க அவருக்கு கிட்டதட்ட ஒன்பது ஆண்டுகள் பிடித்தது. இது ஒரு சரித்திர உண்மை. ஏனெனில் மிகவும் பழமையான குறிப்புகள் உள்ளன.
கிட்டதட்ட போதிதர்மருடைய காலத்திய குறிப்புகள் எல்லாவற்றிலும் இது குறிப்பிடப்பட்டுள்ளது. மற்றவை குறிப்பிட படா விட்டாலும் வூ வை அரண்மனைக்கு திருப்பி அனுப்பிய பிறகு அவர் கோவில் சுவற்றைப் பாரத்தபடி அமர்ந்திருந்தார் என்பது குறிப்பிடப்படுள்ளது. அவர் அதனை ஒரு சிறந்த தியானமாக ஆக்கிக் கொண்டார். அவர் வெறுமனே எளிமையாக சுவற்றை பார்த்துக் கொண்டே இருப்பார். அதிகநேரம் நீ சுவற்றை பார்த்துக் கொண்டேயிருந்தால் உன்னால் யோசிக்க முடியாது. மெதுமெதுவாக அந்த சுவற்றைப் போலவே உனது மனதின் திரையும் காலியாகி விடுகிறது.
மேலும் அதற்கு இரண்டாவது காரணமும் இருந்தது. என்னுடைய சீடனாக இருக்கும் தகுதியுடைய யாராவது ஒருவர் வரும்வரை நான் யாரையும் பார்க்க மாட்டேன் என அவர் அறிவித்தார். மக்கள் வருவார்கள், அவருக்கு பின் அமர்வார்கள். அது ஒரு வித்தியாசமான சூழ்நிலை. இந்த முறையில் யாரும் பேசியதில்லை. அவர் சுவற்றிடம் பேசுவார். மக்கள் அவருக்கு பின் அமர்ந்திருப்பார்கள். ஆனால் அவர் வருபவர்களை பார்க்க மாட்டார். ஏனெனில் அவர் வருபவர்கள் என்னை அதிகமாக காயப்படுத்துகிறார்கள். அவர்கள் வெறும் சுவறைப் போல இருக்கிறார்கள். யாரும் புரிந்து கொள்வதில்லை. இப்படிப்பட்ட ஒரு அறியாமை நிலையில் மக்களைப் பார்ப்பது ஆழமான வலியை ஏற்படுத்துகிறது. ஆனால் உண்மையான ஒரு சுவறைப் பார்ப்பது கேள்வியேயில்லை. ஒரு சுவர் எப்படியிருந்தாலும் அது சுவரே. அது கேட்க முடியாது. எனவே காயப்பட தேவையில்லை. யாராவதொருவர் அவருடைய செயலின் மூலம் அவர் எனது சீடராக தயாராக இருக்கிறார் என்று நீரூபித்தால் மட்டுமே நான் வருபவர்களைப்பார்த்து திரும்புவேன் என்று கூறினார், ஒன்பது வருடங்கள் கடந்து விட்டன. மக்களுக்கு என்ன செய்வதென்றே தெரியவில்லை. எந்த செயல் அவருக்கு திருபதியளிக்கும் என்று அவர்களால் கண்டறிய முடியவில்லை. பிறகு அந்த இளைஞன் ஹூய்கோ வந்தான். அவன் அவனுடைய கைகளில் ஒன்றை வாளால் வெட்டி அந்தக் கையை போதிதர்மர் முன் வீசிவிட்டு, இது ஆரம்பம்தான். நீங்கள் திரும்புங்கள் அல்லது என் தலை உங்கள் முன் உருளும். நான் எனது தலையையும் வெட்டப்போகிறேன் என்றான்.
போதிதர்மர் திரும்பி, நீ எனக்கு சீடனாக தகுதியுடைய மனிதன். தலையை வெட்ட வேண்டியதில்லை. நாம் அதனை உபயோகப்படுத்த வேண்டும் என்று கூறினார். இந்த மனிதன் ஹூய்கோதான் அவரது முதல் சீடர். முடிவில் போதிதர்மர் சீனாவை விட்டு செல்லும்போது அவர் ஹூய்கோவிற்குப்பிறகு மேலும் மூன்று சீடர்களை சேர்த்திருந்தார். அவர் சீனாவை விட்டு செல்ல முடிவெடுத்த பிறகு தனது நான்கு சீடர்களையும் அழைத்து, எளிமையான வார்த்தைகளில், சிறிய வாக்கியங்களில், தந்தி முறையில் என்னுடைய போதனைகளின் மூலத்தைக் கூறுங்கள். நாளைக்காலையில் நான் இமயமலைக்கு திரும்பிச் செல்ல முடிவெடுத்துள்ளேன். அதனால் உங்கள் நால்வரில் ஒருவரை வாரிசாக தேர்ந்தெடுக்க விரும்புகிறேன். என்றார்.
முதலாமவன், மனதை தாண்டிச் செல்வது, முற்றிலும் மௌனமாக இருப்பது, அதன்பிறகு அனைத்தும் தானாகவே நடக்கிறது எனக் கூறினான். போதிதர்மர், நீ கூறியது தவறல்ல, ஆனால் நீ என்னை திருப்திபடுத்தவில்லை. உன்னிடம் எனது தோல் உள்ளது என்றார்.
இரண்டாமவன், நான் இல்லை, பிரபஞ்சம் மட்டுமே உள்ளது, என்பதை அறிந்து கொள்வதே உங்களது அடிப்படையான போதனை என்றான்.
போதிதர்மர், சிறிது பரவாயில்லை, ஆனால் அது எனது தகுதியளவிற்கில்லை. உன்னிடம் எனது எலும்புகள் உள்ளன. என்றார்.
மூன்றாவது மனிதன், அதைப்பற்றி ஏதும் சொல்ல முடியாது. எந்த வார்த்தையும் அதை கூறும் சக்தியற்றது என்றான். போதிதர்மர், நன்று, ஆனால் நீ ஏற்கனவே அதைப் பற்றி ஏதோ ஒன்றைக் கூறிவிட்டாய் உனக்கு நீயே முரண்பட்டு விட்டாய் வெறுமனே உட்கார். உன்னிடம் எனது சதை உள்ளது என்றார்
நான்காவதாக அவரது முதல் சீடன் ஹூய்கோ அவரது காலில் விழுந்தான். அவனது கண்களில் இருந்து கண்ணீர் வழிந்து கொண்டிருந்தது. போதிதர்மர், நீ அதை சொல்லிவிட்டாய். நீதான் எனது வாரிசாகப் போகிறாய் என்றார்.
ஆனால் இரவில் ஏதோ ஒரு சீடன் அவன் வாரிசாக தேர்ந்தெடுக்கப்படவில்லை என்பதற்காக அவருக்கு விஷமளித்துவிட்டான்.
எனவே அவர்கள் அவரை புதைத்தனர். ஆனால் வித்தியாசமான மூன்றாவது செவிவழி செய்தி என்னவென்றால் ஒரு அரசாங்க அதிகாரி மூன்று வருடங்களுக்குப் பிறகு சீனாவிற்கு வெளியே இமயமலையை நோக்கி போதிதர்மர் நடந்துபோய்க் கொண்டிருப்பதை பார்த்தார். போதிதர்மருடைய கையில் அவருடைய தடியிருந்தது. மேலும் அவருடைய செருப்பு அந்த தடியிலிருந்து தொங்கிக் கொண்டிருந்தது. மேலும் அவர் வெறும் காலில் நடந்து கொண்டிருந்தார். அந்த அதிகாரிக்கு அவரைத் தெரியும். அந்த அதிகாரி அவரிடம் பலமுறை வந்திருக்கிறார். அவர் ஒருமாதிரி இருந்தாலும்கூட போதிதர்மர் மீது அந்த அதிகாரி அன்பு செலுத்தினார். அதிகாரி அவரிடம் இந்த தடிக்கும் இதில் ஒரு செருப்பு தொங்குவதற்கும் என்ன அர்த்தம் என்று கேட்டார். போதிதர்மர் விரைவில் நீ அறிந்து கொள்வாய். நீ எனது மக்களை சந்தித்தால் வெறுமனே அவர்களிடம் நான் ஒரேடியாக இமயமலைக்கு செல்கிறேன் என்று கூறிவிடு என்று கூறினார்.
அதிகாரி, அவரால் எவ்வளவு முடியுமோ அவ்வளவு விரைவாக போதிதர்மர் வாழ்ந்து கொண்டிருந்த மலையில் இருக்கும் மடாலயத்திற்கு சென்றார். அங்கு அவர் போதிதர்மருக்கு விஷம் வைக்கப்பட்டதையும் அவர் இறந்து விட்டதையும் கேள்விப்பட்டார். அங்கு அவரது சமாதியிருந்தது. அதிகாரி பேரரசரின் எல்லைப்பகுதியில் நியமிக்கப்பட்ட காரணத்தால் இதைப்பற்றி கேள்விப்பட வில்லை. அவர், கடவுளே, நான் அவரைப் பார்த்தேன். நான் ஏமாந்திருக்க முடியாது. ஏனெனில் நான் முன்பே அவரை பலமுறை பார்த்திருக்கிறேன். அவர் அதே மனிதன்தான். அதே கோபக்கண்கள், அதே தீப்போன்ற காட்டுத்தனமான உருவம், மேலும் உச்சக்கட்டமாக அவர் அவருடைய தடியில் அவருடைய ஒரு செருப்பை சுமந்திருந்தார் என்று கூறினார்.
சீடர்களால் அவர்களது ஆர்வத்தை கட்டுப்படுத்த முடியவில்லை. அவரது சமாதியைத் திறந்தனர். அவர்கள் அங்கு கண்டதெல்லாம் ஒரே ஒரு செருப்பு மட்டுமே. அந்த காரணத்தை விரைவில் நீ அறிந்து கொள்வாய் என்று போதிதர்மர் ஏன் கூறினார் என்று அந்த அதிகாரி புரிந்து கொண்டார்.
நாம் யேசுவின் உயிர்த்தெழுதல் பற்றி மிகவும் கேள்விப்பட்டிருக்கிறோம். ஆனால் யாரும் அதிகமாக போதிதர்மரின் உயிர்த்தெழுந்தது பற்றி பேசுவதில்லை. ஒருவேளை அவர்கள் அவரை புதைத்தபோது அவர் கோமாவில் இருந்திருக்கலாம், அவர் சுயநினைவுக்கு வந்தவுடன் சமாதியிலிருந்து வெளியே வந்து ஒரு செருப்பை அங்கேயே விட்டுவிட்டு இன்னொரு செருப்பை அவரது தடியில் கட்டிக் கொண்டு திட்டமிட்டப்படி அவர் சென்று விட்டார்.
அவர் அழிவற்ற இமயமலையின் பனிக்கட்டிகளில் இறக்க விரும்பினார். அவர் அவரைக் குறித்து எந்த சமாதியும், எந்த சிலையும் இருக்கக்கூடாது என விரும்பினார். அவர் அவருக்கு பின்பு தொழுவதற்கு எந்த காலடி தடத்தையும் விட்டு வைக்கவில்லை. அவரை நேசிப்பவர்கள் அவரது சொந்த இருப்பினுள் நுழைய வேண்டும். நான் தொழப் போவதில்லை மற்றும் அவர் கிட்டதட்ட காற்றில் மறைந்துவிட்டார். என்ன நடந்தது, எங்கு அவர் இறந்தார் என்பது குறித்து யாரும் எதையும் கேள்விப்படவில்லை. அவர் கண்டிப்பாக இமயமலையின் அழிவற்ற பனிகளில் எங்கோ புதைந்திருக்கவேண்டும்.
ஒரு பெண்ணின் கணவன் இறந்து விட்டான். அவளுக்கு இளம் வயது, ஒரே ஒரு குழந்தை இருந்தது. அவள் தனது கணவனுடன் சிதையில் குதித்து உடன்கட்டை ஏற விரும்பினாள். ஆனால் இந்த சின்ன குழந்தை அதை தடுத்து நிறுத்தி விட்டது. அவள் அந்த குழந்தைக்காக வாழ்ந்தாக வேண்டும்.
ஆனால் பின் இந்த சின்ன குழந்தையும் இறந்துவிட்டது. இப்போது பாதிப்பு அதிகமாகி விட்டது. அவள் கிட்டத்தட்ட பைத்தியமாகி விட்டாள். “என்னுடைய குழந்தையை திரும்பவும் உயிர்ப்பித்து தரக் கூடிய மருத்துவர் யாரேனும் இங்கு உண்டா”
நான் அவனுக்காகவே வாழ்ந்தேன். ஆனால் இப்போது எனக்கு எனது முழு வாழ்வும் இருளாகி விட்டது.” என்று கேட்டு அலைந்து திரிந்தாள்.
இந்தியாவில் நீ மறுமணம் செய்து கொள்ள முடியாது. அதிலும் குறிப்பாக அந்த காலத்தில் அது சாத்தியமே இல்லாத ஒன்று. ஒரு பெண் மறுமணம் செய்து கொள்ள முடியாது. ஆணின் ஆளுமை வெறி அத்தகையது. ‘ நான் இறந்து விட்டாலும்கூட………. நீ சிரமபட்டாலும் சரி, ஆனால் நீ வேறு யாரையும் மறுமணம் செய்து கொள்ளக் கூடாது.’ அப்படிப்பட்ட பொறாமை…. இதுதான் ‘இந்தியாவின் பாரம்பரியம்’ என்று அழைக்கப்படுகிறது.
அப்போது புத்தர் அந்த நகரத்தின் வழியே வந்தார். அதனால் மக்கள் அவளிடம், “எங்களுக்கு எந்த மருத்துவரையும் தெரியாது. ஆனால் புத்தர் வருகிறார். இது ஒரு சிறந்த தருணம். நீ உனது குழந்தையை தூக்கிக் கொண்டு புத்தரிடம் செல். நீ இந்த குழந்தைக்காவே உயிர் வாழ்ந்தாய் என்பதைக் கூறி இப்போது இது இறந்துவிட்டது என் மேல் கருணை காட்டுங்கள். இவனை உயிர்பித்து தாருங்கள் நீங்கள் ஞானமடைந்தவர் என்று கேள்.” என்றனர்.
ஆகவே அவள் புத்தரிடம் சென்றாள். இறந்த குழந்தையின் உடலை புத்தரின் காலடியில் கிடத்தி, “இவனை உயிர்பித்து தாருங்கள். உங்களுக்கு வாழ்வின் அனைத்து மர்மங்களும் தெரியும். நீங்கள் பிரபஞ்சத்தின் உச்சியை தொட்டு விட்டீர்கள். இந்த ஏழை பெண்ணுக்காக ஒரு சிறிய அற்புதத்தை நீங்கள் செய்யக் கூடாதா?” என்று வேண்டினாள்.
புத்தர், “நான் செய்கிறேன், ஆனால் ஒரு நிபந்தனை!” என்றார்.
அவள், “அது எதுவானாலும் நான் செய்கிறேன்” என்றாள்.
புத்தர், “அப்படியென்றால் சரி.! நிபந்தனை இதுதான். இந்த நகரத்தைச் சுற்றி வந்து யார் வீட்டில் இது வரை சாவு எதுவும் நடக்கவில்லையோ அந்த வீட்டிலிருந்து கொஞ்சம் கடுகு விதைகள் வாங்கி வா.” என்றார். அந்த கிராமத்தில் கடுகு பயிர் அறுவடை செய்து வந்தனர். எனவே புத்தர் அவளிடம், “இந்த நகரத்தை சுற்றி வந்து…………. என்றார்.
அந்த பெண்ணால் இதை புரிந்து கொள்ள முடிய வில்லை. அவள் ஒரு வீட்டிற்கு சென்று கேட்டாள். அவர்கள், “கொஞ்சம் கடுகென்ன? புத்தரால் உனது குழந்தைக்கு உயிர் தர முடியுமென்றால் ஒரு மாட்டு வண்டி நிறைய கடுகு வேண்டுமானாலும் தருகிறோம். ஆனால் எங்களது குடும்பத்தில் ஒருவர் அல்ல, ஏகப்பட்ட பேர் இறந்து போயிருக்கின்றனர். காலங்காலமாக நாங்கள் இங்கிருக்கிறோம். தாத்தாவுக்கு தாத்தா, தாத்தாவுக்கு பாட்டி, தாத்தாவின் அப்பா, தாத்தாவின் அம்மா, தாத்தா, பாட்டி என எல்லோரும் இறந்து விட்டிருக்கின்றனர். நாங்கள் பலர் இந்த குடும்பத்தில் சாவதை பார்த்திருக்கிறோம். ஆதலால் இந்த கடுகினால் பயன் இல்லை. ‘எந்த குடும்பத்தில் இது வரை சாவு விழ வில்லையோ’ என்பதுதானே புத்தரின் நிபந்தனை.” என்றனர்.
அது ஒரு சிறிய கிராமம். அவள் ஒவ்வொரு வீட்டிற்க்கும் சென்று கேட்டாள். அந்த கிராமத்தில் உள்ள எல்லோரும் கடுகு தர தயாராக இருந்தனர். “எவ்வளவு கடுகு வேண்டும் உனக்கு?” ஆனால் அந்த நிபந்தனை அதுதான் சாத்தியமற்றதாக இருந்தது. எங்களுடைய குடும்பத்தில் பலர் இறந்திருக்கின்றனர்.”
மாலையில் அவள் புத்தரின் நடவடிக்கை பற்றி உணர்ந்தாள். மேலும் அவளுக்கு உண்மையையும் புரிந்தது. பிறக்கும் யாவரும் இறந்தே தீருவர் என்பது அவளுக்கு புரிந்தது. குழந்தையை திரும்ப உயிர்பித்து என்ன பயன் அவனும் ஒருநாள் இறந்தே தீருவான். அதற்கு பதிலாக எது இறப்பதும் பிறப்பதும் இல்லையோ அந்த அழிவற்றதை நானே தேட வேண்டியதுதானே. என்பதை உணர்ந்தாள்.
மாலையில் அவள் வெறும் கையுடன் திரும்பி வந்தாள். புத்தர், “எங்கே கடுகு?” என்று கேட்டார். அவள் சிரித்தாள். காலையில் அவள் அழுதவண்ணம் வந்தாள், இப்போது சிரித்தாள். அவள், “நீங்கள் தந்திரம் செய்து விட்டீர்கள், பிறக்கும் யாரும் இறக்கத்தான் வேண்டும். இந்த கிராமத்தில் மட்டுமல்ல, இந்த உலகத்திலேயே யாரும் இறக்காத குடும்பமே கிடையாது. அதனால் நான் எனது மகனை உயிர்பித்துத் தர கேட்கப் போவதில்லை, என்ன பயன்? – சில தினங்களுக்குப் பிறகு, அல்லது சில நாட்களுக்குப் பிறகு, அல்லது சில வருடங்களுக்குப் பிறகு அவன் திரும்பவும் இறந்துவிடுவான். வாழும் அத்தனை வருடங்களும் அவன் துயரத்திலும் துன்பத்திலும் எல்லா விதமான
வேதனைகளிலும் இருப்பான். அவனை திரும்பவும் வாழ்வுக்கு கொண்டு வராத உங்களது கருணை மிகவும் பெரியது.
குழந்தையை மறந்து விடுங்கள். எனக்கு தீட்சை கொடுங்கள். பிறப்பும் இறப்பும் நிகழாத அழிவற்ற, அந்த உலகத்திற்கு நான் செல்ல எனக்கு தியானமென்னும் வழி காட்டுங்கள்,” என்றாள்.
புத்தர், “நீ மிகவும் புத்திசாலியான பெண். நீ அதை உடனே புரிந்து கொண்டு விட்டாய்.” என்றார்.
நான் இதைத்தான் அதிசயம் என்றழைப்பேன், ஜீஸஸ் லசாரஸை உயிர்பித்ததை நான் அதிசயம் என்று கூற மாட்டேன். அது பார்ப்பதற்கு அதிசயம் போல தோன்றலாம், ஆனால் தோன்றுவதெல்லாம் உண்மை அல்ல. நான் புத்தரின் நடவடிக்கையைத் தான் அதிசயம் என்று கூறுவேன். எல்லோரும் இறந்து போகத் தான் போகிறார்கள். அதில் எந்த வித்தியாசமும் இல்லை. பிறப்பிலிருந்தும் இறப்பிலிருந்தும் ஒருவர் வெளியே
வர வேண்டும்.
புத்தர் அந்த பெண்ணிற்கு தீட்சை கொடுத்தார். அவள் புத்தரின் ஞானமடைந்த
சீடர்களில் ஒருவராக விளங்கினாள். அவளது தேடுதல் அத்தகையது….. அவளுக்கு என்னுடைய கணவன் இறந்து விட்டான், என்னுடைய குழந்தை இறந்து விட்டது, இப்போது என்னுடைய முறை, எந்த கணமும் நான் இறப்புக்கு பலியாகி விடலாம். நேரமில்லை, எந்த நேரம் மரணம் வரும் என்று எனக்குத் தெரியாது. எனவே நான் முழுமையாக இந்த தேடுதலில் ஈடுபடவேண்டும், புத்தர் என்னிடம், ‘உள்ளே செல். உன்னுடைய இருப்பின் மையத்திற்குச் செல், நீ பிறப்பையும் இறப்பையும் தாண்டி செல்வாய்.’ என்று கூறியுள்ள படியால் நான் தேடி சென்றடைய வேண்டும் என்பதை அவள் அறிந்திருந்தாள்.
இதைதான் நான் ஆணித்தரமான தேடுதல் என்றழைக்கிறேன். எல்லா பிரச்சனைகளையும் வேரறுத்து விடுவது.
மிக மிக அழகான விஷயங்கள் இருக்கின்றன. அதில் பல்வேறு விதங்கள் உண்டு. இசையும் நடனமும் மிகவும் உடல் சார்ந்த விஷயங்கள். அவற்றோடு செல்லும்போது அவை அழகானவை, ஆனால் ஒருவர் அதோடு நின்று விடக் கூடாது, அவற்றால் தடை பட்டுவிடக் கூடாது. அவை மேலும் உயர்ந்த நிலை செல்லும் வாயிலை திறந்து விடும்.
உதாரணமாக, நீ இசையை நேசித்தால் விரைவில் இசை கரைந்து நீ மௌனத்தில் ஆழ்ந்து விடுவாய். நீ நடனத்தில் மிகவும் ஆர்வமாக இருந்தால் விரைவில் நடனம் மறைய வேண்டும், அப்போதுதான் உன்னால் இருப்பு நிலையின் அசையாத தன்மையினுள் இருக்க முடியும்.
சைனாவில் ஒரு பழமையான கதை ஒன்று உண்டு. ஒருவன் தன்னைத் தானே மிகவும் சிறந்த வில்வீரனாக கூறிக் கொண்டான். அவன் அரசரிடம் சென்று, “நான் யாருடைய சவாலையும் ஏற்கத் தயார். நான் வில்வித்தையை முப்பது வருடங்களாக பயிற்சி செய்து வருகிறேன். இந்த ராஜ்ஜியம் முழுவதிலும் எனக்கு இணையாக போட்டியிடக்கூடிய யாரும் இல்லை எனபது எனக்குத் தெரியும். ஆனால் இது அறிவிக்கப்பட வேண்டும்……. ஒரு குறிப்பிட்ட கால அவகாசம் தரப்படும். அதற்க்குள் யாராவது என்னுடன் போட்டியிட வந்தால் நான் தயார். அப்படி யாரும் வராவிடில் அல்லது வந்து என்னால் தோற்கடிக்கப்பட்டுவிட்டால், இந்த ராஜ்ஜியத்தின் பிரதான வில்லாளனாக, சிறந்த வில் வித்தையாளனாக என்னை நீங்கள் அறிவிக்க வேண்டும்” என்று கேட்டான்.
அவன் கூறுவது யாவும் உண்மையே, எதுவும் மிகையாக கூறப்பட்டதல்ல என்று அரசருக்குத் தெரியும். அவர் பார்த்ததிலேயே மிகவும் சிறப்பான வில்வித்தையாளன் அவன். அந்த அரசிலேயே அவனுக்கு நெருக்கமாக வரக்கூடிய அளவில் கூட யாரும் இல்லை. அவன் அந்த கலையை மிகவும் ஆழமாக பயின்றிருந்தான். அரசரிடம் ஒரு வயதான வேலைக்காரன் இருந்தான். அவன் எப்போதும் அரசருடன் இருப்பான். ஏனெனில் அரசரின் தந்தை அரசரின் சிறு வயதிலேயே இறந்துவிட்டதால் இவன்தான்
தந்தை போல கூடவே இருந்து அவரை கவனித்து வளர்த்து ஆளாக்கி பயிற்சி கொடுத்து பாதுகாத்து அவரை அரியணையில் அமர்த்தி அரசராக்கினான். ஆகவே அரசர் எப்போதும் அவனுக்கு தந்தை போல மரியாதை கொடுப்பார்.
இப்போது அரியணையின் கீழே அமர்ந்திருந்த அவன் சிரித்தான்.
அரசர், “ஏன் சிரிக்கிறாய்? அவன் கூறியது உண்மைதானே. எனக்கு இவரையும் இவரது வில்வித்தையையும் தெரியும். கண்களை கட்டிக் கொண்டு கூட இவர் குறி பார்த்து அம்பு விடுவார். கண்களை கட்டிக் கொண்டு பறக்கும் ஒரு பறவையைக் கூட இவர் வீழ்த்திவிடுவார். இவர்க்கு எந்த வகையிலும் ஈடு இணையே கிடையாது.” என்றார்.
அதற்கு அந்த வேலைக்காரன், “நீங்கள் வயதில் இளையவர். எனக்கு தெரிந்த ஒருவர் முன் இவர் ஒரு கத்துக்குட்டி. அவர் மிகவும் வயதானவர். கிழவர். என்னைவிடவும் வயதானவர். அவர் மலை பள்ளத்தாக்கில் வசிக்கிறார். இவரை நீங்கள் சிறப்பானவன் என்று அறிவிப்பதற்கு முன்னால் இவர் போய் அவரை சந்தித்துவிட்டு வரட்டும். அவரை பார்ப்பது மட்டுமே போதும். போட்டி என்பது தேவையேயில்லை.” என்றான்.
இது ஒரு மிகபெரிய சவால். ‘அவரை பார்ப்பது மட்டுமே போதுமா? போட்டி எதுவும் தேவையில்லையா’ என்ற போது “அவர் ஒரு குரு, அவருடன் போட்டியிட முடியாது” என்று கூறிய வயதானவன் அந்த கிழவர் இருக்கும் குகைக்கு செல்லும் வழியை கூறினான்.
இதைக்கேட்டு அந்த வில்வீரன் மலையில் மைல்கணக்கில் சென்று இறுதியில் அந்த குகையை கண்டு பிடித்தான். அங்கே பார்த்தவுடன் அவன் சிரித்தான். ஏனெனில் ஒரு கிழவன் மட்டுமே அங்கிருந்தான். அந்த குகையில் அம்பும் இல்லை, வில்லும் இல்லை. ‘என்ன விதமான வில்லாளன் இவர்.?’ மிகவும் வயதாகி விட்டிருந்தது. தொண்ணுறு, தொண்ணுறு ஐந்து, அதற்கு மேலும் இருக்கக் கூடும். அவரால் குறி பார்த்து அம்பு எய்ய
முடியாது, அவரது கைகள் நடுங்கும். அவர் மிகவும் வயதானவர்.
“அரசர் உங்களை சந்திக்க என்னை அனுப்பினார்” என்று கூறினான்.
அந்த கிழவன், “அரசரிடமிருந்து எனக்கு தகவல் வந்தது. ஆனால் உனக்கு ஒரு சிறிய பரிசோதனை செய்த பின் தான் எதையும் முடிவு செய்ய முடியும். நான் எல்லோரையும் சந்திப்பதில்லை. குறைந்த பட்சம் நீ வில்லாளனாக இருக்கிறாய். அதனால் ஒரு சிறிய பரீட்சை வைக்க வேண்டும்.
‘சிறந்த வில்லாளனாக இருப்பது அப்புறம். முதலில் அவர் இவனுக்கு வில்வித்தையில் ஏதாவது திறமை இருக்கிறதா, ஏதாவது ஆற்றல் இருக்கிறதா, ஏதாவது கூர்மை இருக்கிறதா’ என்று பரிசோதிக்க விரும்புகிறார்.
கிழவன் அந்த இளைஞனை தன்னுடன் அழைத்துக் கொண்டு குகையை விட்டு
வெளியே வந்தார். “நீ உன்னுடைய அம்பையும் வில்லையும் உன்னுடன் எடுத்துக் கொண்டு வரும்போதே நீ கத்துக்குட்டி என்று கண்டேன். ஏனெனில் சிறந்த வில்லாளனுக்கு எதுவும் தேவையில்லை. ஒருவர் தனது திறமையின் இறுதி நிலையை எட்டும்போது அவர் வில்லாளனாக இருந்தால் தனது வில்லையும் அம்பையும் வீசி விடுவார், அவர் இசைக் கலைஞனாக இருந்தால் தனது இசைக் கருவியை வீசியெறிந்து விடுவார். அவர் ஓவியராக இருந்தால் தனது பிரஷ்ஷையும் பலகையையும் வீசி விடுவார் என்ற மூதுரையை கேள்விப்பட்டதில்லையா?” என்று கேட்டார். அதற்கு இவன், “கேள்விப்பட்டிருக்கிறேன். ஆனால் புரிந்ததில்லை.” என்றான்.
“இப்போது நீ புரிந்து கொள்ளக் கூடிய இடத்திற்குத்தான் வந்திருக்கிறாய். என்னுடன் வா.” என்றான் கிழவன். அங்கே ஒரு பாறை ஒரு இடத்தில் மிகவும் வெளியே நீட்டிக்கொண்டிருந்தது. அதன் கீழே ஆயிரக்கணக்கான அடிகள் ஆழமான கிடுகிடு பள்ளம். கீழே விழுந்தால் எலும்பு கூட மிஞ்சாது. உயிர் வாழ வாய்ப்பே இல்லை. அந்த அளவு அபாயகரமான பள்ளத்தாக்கு. அந்த பாறைக்குச் சென்றான் அந்த கிழவன். இளைஞன் நடுங்கிக் கொண்டு இருந்தான். அவன் அந்த பாறைக்கு கூட செல்லவில்லை. கிழவன் சென்றான், ஆனால் இவன் செல்லவில்லை. நடுங்கிகொண்டே நின்று கொண்டிருந்தான். கிழவன், “நடுக்கத்தை நிறுத்து. இது வில்லாளனுக்கு அழகல்ல.” என்றான். மேலும் அந்த கிழவன் அந்த பாறையின் முனைக்கு சென்றான். பாறையின் நுனியில் பாதி பாதம் வெளியே இருக்குமாறு நின்றான். அங்கே இருந்தவாறே இளைஞனை அழைத்து, “வந்து என் அருகில் நில்” என்று அழைத்தான்.
இளைஞன் ஒரு அடி எடுத்து வைத்தான், இரண்டாவது அடி எடுத்து வைத்தான். பின் கீழே படுத்து விட்டான். நடுங்கி வியர்த்து விருவிருத்து வெலவெலத்து போனான்.
“என்னை மன்னித்து விடுங்கள். என்னால் நீங்கள் நிற்க்கும் இடத்திற்கு வர முடியாது. ஒரு சிறிது தப்படி எடுத்து வைத்தாலும், ஒரு காற்று பலமாக அடித்தாலும், ஒரு வினாடி மறந்து விட்டாலும் போதும் நாம் முடிந்தோம். நான் உங்களை இங்கே பார்க்கத்தான் வந்தேனே தவிர தற்கொலை செய்து கொள்ள வரவில்லை. நீங்கள் அங்கு நிற்கிறீர்கள் என்பதையே என்னால் நம்பமுடியவில்லை.” என்றான்.
கிழவன், “வில்வித்தை ஒரு மனிதனுக்கு தருவது அசையாத உள்ளம், நடுங்காத இதயம். இப்போது எனக்கு வில்லும் அம்பும் தேவையில்லை. நீ என் குகையை சுற்றி பார்த்ததையும் வில்லும் அம்பும் அங்கில்லாததால் இவர் எப்படி ஒரு வில்லாளனாக இருக்க முடியும் என்று நினைத்து புன்னகை செய்ததையும் நான் அறிவேன். இப்போது நான் என் வில்திறமையை உனக்கு காட்டப் போகிறேன்.” என்றார்.
அவர் மேலே பார்த்தார். மேலே ஒன்பது பறவைகள் பறந்து கொண்டிருந்தன. அவர் அந்த ஒன்பது பறவைகளையும் கூர்ந்து பார்த்தார். அந்த ஒன்பது பறவைகளும் கீழே இறந்து விழுந்தன. அவர், “நீ உள்ளே அசையாமல் இருந்தால் பார்வையே போதும். அம்புகள் தேவையில்லை. ஆகவே திரும்பி சென்று வில்வித்தையை பயிற்சி செய். பட்டம் எல்லாம் பிறகு பார்த்துக் கொள்ளலாம். நான் உயிரோடு இருக்கும்வரை பட்டம் என்பதை நினைத்துக் கூட பார்க்காதே. நான் போட்டியாளன் அல்ல தான். நீ உன்னை சிறப்பானவன் என்று அறிவித்துக் கொண்டால்கூட நான் கவலைப்பட போவதில்லை.
யாருக்கு வேண்டும்? உங்களுடைய பட்டம், பதவி, சிறப்பானவன் என்ற பாராட்டு என்பதெல்லாம் என்னைப் பொறுத்தவரை குழந்தைகளின் விளையாட்டு.
ஆனால் அரண்மனையில் இருக்கும் அவனுக்கு என்னைத் தெரியும். அதனால் நான் இருக்கும் வரை உன்னை வெற்றியாளன் என்று அறிவிப்பது நடக்காது. நீ உண்மையாக வில்வித்தையில் ஆழ்ந்து சென்று பயிற்சி செய்தால் நீ வெற்றியாளன் ஆகலாம். மேலும் நான்தான் உன்னை வெற்றியாளன் ஆக்க முடியும். அரசர் அல்ல. அவருக்கு வில்வித்தையைப் பற்றி என்ன தெரியும். அதனால் அவரிடம் சொல்லிவிடு. ‘உங்களுக்கு எந்த அதிகாரமும் கிடையாது’ என்று கூறி விடு. சரியான சமயத்தில் நான் உயிரோடு இருந்தால் நானே வருவேன். நான் இறந்துவிட்டால் வேறு யாரையாவது அனுப்புவேன், அல்லது வேறு ஏதாவது ஏற்பாடு செய்வேன். என்றார்.
பத்து வருடங்கள் கடந்து விட்டன. அந்த கிழவன் இறந்து கொண்டிருந்தார். அவர் சமவெளியில் வசித்து வந்த தனது மகனை அழைத்து – அவருக்கும் வயதாகியிருந்தது – அவரிடம் அந்த வில்லாளனைப் பற்றிக் கூறி, “சென்று அவரைப் பார்த்து நிலைமை என்னவென்று வந்து கூறு” என்றார்.
மகன் அங்கே சென்றார். அந்த வில்லாளன் கிழவர் இன்னும் தன்னை நினைவில் வைத்திருந்து மகனை அனுப்பியதைக் குறித்து மிகவும் சந்தோஷமும் மகிழ்ச்சியும் அடைந்தார். மகன் ஒரு பெரிய வில் சுவரில் தொங்கிக் கொண்டிருப்பதைக் கண்டார்.
அவர் “இது என்ன?” என்று கேட்டார்.
அதற்கு வில்லாளன் “அது எனக்குத் தெரிந்த ஏதோவொன்றாகத்தான் இருந்திருக்க வேண்டும். ஆனால் இப்போது எனக்குத் தெரியாது. நான் கேட்க வேண்டும், யாருக்காவது தெரிந்திருக்கலாம்” என்றார்.
அதற்கு மகன், “நீங்கள் ஒரு வில்லாளன் என்று கேள்விப்பட்டேன்.” என்றார்.
அவர், “என் இள வயதில் இருந்தேன், ஆனால் எல்லோரும் இளவயதில் முட்டாளாக இருப்பது இயல்புதானே. நானும் அப்படித்தான் இருந்தேன். ஆனால் உன் தந்தைதான் என்னை எனக்கு புரிய வைத்தார்.” என்றார்.
அந்த வில்லாளன் வில் என்ற பெயரையே மறந்து விட்டார் என்பது அந்த கிழவனிடம் கூறப்பட்டது. அதற்கு அந்த கிழவர், “அவன் தான் யார் என்று நிரூபித்து விட்டான் என்பது தெரிகிறது. நான் இறப்பதற்கு முன் கீழே சென்று அவன் வெற்றியாளன், வில்வித்தையில் நிபுணன் என்பதை அறிவிக்க வேண்டும்” என்றார்.
இப்போது அவனும் பார்த்த மாத்திரத்திலேயே பறவையை வீழ்த்தும் திறன்
கொண்டவனாகிவிட்டான். அவனது இருப்பு அசையாத தன்மை கொண்டு விட்ட படியால் அவனது இரண்டு கண்களில் இருந்து புறப்படும் பார்வையே போதும், அவையே அம்புகளாகி விடும். அவன், “ஒரு இசைக்கலைஞன் இசையில் மிகவும் தேர்ச்சி பெற்று விட்டால் அவன் தனது இசைக் கருவியை உடைத்துவிடுவான் என்று சொல்லப்படும் பழமொழியின் பொருள் எனக்கு இப்போது புரிகிறது. அப்போது கருவியால் என்ன பயன் ஏனெனில் அவை இன்னும் இந்த சத்தம் சார்ந்த உலகின் பாகம்தான். உண்மையான இசை மௌனம்தான்” என்றான்.
நீ இசையை கேட்கும்போது கூட உண்மையிலேயே உனது இதயத்தை தொடுவது அந்த ஒலி அல்ல, அந்த இரண்டு ஒலிகளுக்கு இடையே இருக்கும் மௌனம்தான், இடைவெளிதான். அந்த மௌனத்தை உனது இதயத்துக்கு கொண்டு வருவது எப்படி என்பதுதான் இசையெனும் கலையே. ஆனால் ஒரு மனிதன் அந்த மௌனத்தை தன்னுடைய இருப்பில் கொண்டு வர முடிந்தால், அப்போது நீ ஆழமான மௌனத்தில் ஆழ்கிறாய், அப்போது உனக்கு உண்மையான இசை என்பது என்னவென்று தெரியும்.
அப்போது இசை என்று நாம் இதுவரை நினைத்துக் கொண்டிருந்தது ஆரம்ப பாடம் என்பது உனக்குப் புரியும். இதுவே நடனத்திற்க்கும் பொருந்தும், மற்றும் எல்லா படைப்பு திறன் கொண்ட கலைகளுக்கும் பொருந்தும். தோன்றும் எதுவும் உண்மையல்ல. அது ஒரு கருவி. அதன்மூலம் நீ மறைந்திருக்கும், கடந்த, அறியாத ஒன்றைப் பற்றி விழிப்பு கொள்வாய்.
ஆகவே இசையை ரசிப்பது நல்லது, நடனத்தை ரசிப்பது நல்லது, இசையை வாசிப்பது நல்லது, நடனமாடுவது நல்லது – நினைவில் கொள் – அது இறுதியல்ல. நீ இன்னும் தூரம் சென்றாக வேண்டும் – இசையிலிருந்து, நடனத்திலிருந்து – அந்த கலையைப் பற்றி புரிய நீ அதில் ஆழமாக செல்ல வேண்டும். ஒவ்வொரு படைப்புக் கலையும் உன்னை உன் உள் மையத்திற்கு – எங்கே அமைதியும் மௌனமும் சாந்தமும் உள்ளதோ அங்கே – கொண்டு சேர்க்கும்.
பின் உன்னால் “நான் கேட்க இயலாததை கேட்டேன், பார்க்க இயலாததை பார்த்தேன்” என்று சொல்ல முடியும்.
தன்னுணர்வை நீ எடை போடவே முடியாது. தன்னுணர்வு கண்ணாடி போன்றது. கண்ணாடி பிரதிபலிக்கும், ஆனால் அது எடை போடாது. ஒரு அழகான பெண்ணோஅசிங்கமான பெண்ணோ யார் எதிரில் நின்றாலும் அது பிரதிபலிக்கும். எந்த விதபாகுபாடும் இல்லாமல் அது பிரதிபலிக்கும். அதற்கு விருப்பு வெறுப்பு கிடையாது. அதன் வேலை அதன் எதிரில் நிற்பது பாவியோ, ஞானியோ யாராக இருந்தாலும் எதுவாக இருந்தாலும் சரி, அதை அப்படியே அசலாக பிரதிபலிக்கும்.
தன்னுணர்வு வெறுமனே பிரதிபலிக்கும் – ஆகவேதான் தன்னுணர்வு உள்ள மக்களை விழிப்புணர்வுள்ள மனிதனை உன்னால் புரிந்து கொள்ளவே முடியாது.
கௌதம புத்தர் வாழ்ந்த காலகட்டத்தில் ஒரு மனிதன் இருந்தான், அவன் மிகவும்கோபக்காரனாகவும் வன்முறையாளனாகவும் இருந்தான். எந்த காரணத்தினாலேயோ அவன் கொலைகாரனாகி ஆயிரம் பேரை கொன்று அவர்கள் தலைகளை வெட்டுவேன் என்று சபதம் எடுத்திருந்தான். எத்தனை பேரை கொன்றோம் என்ற எண்ணிக்கை தெரிவதற்காக அவன் தான் கொன்ற மனிதனின் கட்டை விரலை வெட்டி விடுவான்.
அப்படி வெட்டப்பட்ட விரல்களை மாலையாக்கி கழுத்தில் அணிந்திருந்தான். அவன் படிப்பறிவில்லாதவன், எனவே எண்ணிக்கை தெரிவதற்காக அவன் கழுத்தில் அணிந்திருந்தான். ஆயிரம் என்பது பெரிய எண் அல்லவா? மேலும் ஆயிரம் பேரை கொல்வதற்க்கு பல ஆண்டுகள் பிடித்தன.
அவன் அந்த ஊரை விட்டு வெளியே போயும் பல பேரை கொன்றான். அவன் கிட்டத்தட்ட 999 பேரை கொன்று விட்டான். அவனது பெயரே அங்குலிமால் – விரல்களை மாலையாய் அணிந்திருப்பவன் – என்று மாறி விட்டது.
அவனைப்பற்றிய பயம் மிகவும் அதிகமாகி விட்டதால் அவன் இருக்கும் பாதையே வெறிச்சோடி விட்டது. யாரும் அந்த பாதையை பயன்படுத்துவதேயில்லை. அவன் இருக்கும் திசைக்கே யாரும் வருவதில்லை. அரசர்கள் கூட தங்களது படை செல்லக் கூட அந்த பாதையை பயன்படுத்துவதில்லை. ஒரு தனி மனிதன் அந்த அரசையே நடுங்க வைத்துக் கொண்டிருந்தான்.
அவன் ராஜா பிரஜென்ஜீதாவின் அரசினுள் இருந்தான். கௌதம புத்தர் பிரஜென்ஜீதாவின் ராஜ்ஜியத்தினுள் இருந்து வேறொரு அரசிற்கு செல்ல வேண்டி பயணப்பட்டார். மிக அழகான பாதையொன்று வெறிச்சோடிக் கிடப்பதைப் பார்த்த அவர் அந்த பாதையை பயணம் செய்ய தேர்ந்தெடுத்தார்.
அவரது சீடர்கள், “நீங்கள் என்ன செய்கிறீர்கள்? அங்குலிமாலைப் பற்றி கேள்விப்பட்டதில்லையா? அவனை எப்போதும் வந்து பார்த்து விட்டு போகும்.
அவனது சொந்த தாய் கூட பயந்து கொண்டு அவனை பார்க்க வருவதில்லை.
அவனுக்கு அவனது மாலையை பூர்த்தி செய்ய இன்னும் ஒரே ஒரு விரல் தான் வேண்டும். அவன் தனது தாயாக இருந்தாலும் கூட தலையை வெட்ட தயங்காத ஆள் அவன். ஆகவே அவனது தாய் கூட அவனை பார்க்க செல்வதில்லை. ஆகவே போக வேண்டாம்.” என்று கூறினார்கள்.
கௌதம புத்தர், “நீங்கள் என்னிடம் இதை சொல்லியிருக்காவிட்டால் நான் பாதையை மாற்றி போயிருக்க கூடும். ஆனால் இப்போது அது சாத்தியமில்லை. ஏனெனில் அந்த மனிதனுக்கு இன்னும் ஒரே ஒரு விரல்தான் வேண்டும், இன்னும் ஒரே ஒரு தலையை தான் வெட்ட வேண்டும். ஆனால் யாரும் கிடைக்காமல் சிரமப் பட்டுக் கொண்டிருக்கிறான். என்னிடம் ஒரு தலை உள்ளது, பத்து விரல்கள் இருக்கிறது. இப்படி யாருமே இந்த வழியில் போகாமல் இருந்தால் பாவம் அவனால் எப்படி தனது சபதத்தை பூர்த்தி செய்ய முடியும்? நான் போகப் போகிறேன். நானே போக வில்லையென்றால் வேறு யார் போவார்கள்?” என்றார்.
சீடர்களால் அவர் கூறுவதை புரிந்து கொள்ள முடிய வில்லை. தானே தன் தலையை கொண்டு போய் மரணத்தின் வாயில் வைப்பதா……..
ஆனால் கௌதம புத்தர் போவேன் என்று கூறும்போது வேறு வழியில்லை, அவர்கள் பின் தொடர்ந்து போய்தானாக வேண்டும். எப்போதும் சீடர்களிடையே யார் புத்தரின் அருகில் நடந்து செல்வது என்பதில் போட்டியிருக்கும், ஆனால் இன்று அது தலைகீழ். யார் கடைசியாக வருகிறார்கள் என்பதில்தான் போட்டி இருந்தது. ஆகவே முன்பு எப்போதும் இல்லாத அளவு புத்தருக்கும் சீடர்களுக்கும் இடையே இடைவெளி இருந்தது.
அங்குலிமால் தனது கத்தியை மிகவும் கூராக்கி வைத்துக் கொண்டான். பல நாட்களாக யாருமே இந்த பாதையில் வரவில்லை, இன்று தூரத்தில் யாரோ வருவதை பார்த்தவுடன் அவன் கத்தியை பாறையில் கல்லில் தேய்த்து தயாரித்துக் கொண்டான்.
அவன் தயாராக இருந்தான். இன்று அவனது ஆசை பூர்த்தியடையப் போவதை நினைத்து அவன் மிகவும் மகிழ்ந்தான். ஆனால் கௌதம புத்தர் சிறிது தொலைவில் நெருங்கி வந்த போது, அவன் அவரை பார்த்தான். அவனால் அவரது அழகை, அவரது அமைதியை, அவரது அன்பை, அவரது கருணையை பார்க்க முடிந்தது.
எந்தவிதமான கவலையுமின்றி 999 பேரை கொன்ற மனிதன் கூட ஒரு கணம் தயங்கினான். ‘இந்த மனிதனைக் கொல்லக் கூடாது, இந்த உலகத்திற்கு இது போன்ற மனிதர்கள்தான் மேலும் மேலும் அதிக அளவில் தேவை. நான் ஒரு பாவிதான், கொலைகாரன்தான். ஆனாலும் இது போன்ற ஒரு அப்பாவியான மனிதனை கொல்லக் கூடிய அளவிற்கு நான் தரையிறங்க மாட்டேன்.’ என்று நினைத்துக் கொண்டான்.
ஆகவே அவன் கௌதம புத்தரை பார்த்து, “என்னை நோக்கி இன்னும் ஒரு அடி கூட எடுத்து வைக்க கூடாது. திரும்பி போங்கள். ஒருவரை உயிரோடு நான் திரும்பி போக சொல்வது இதுதான் முதன் முறை. உங்களுக்கு என்னைப் பற்றி எதுவும் தெரியாமல் இருக்கலாம். என் பெயரே அங்குலி மால். விரல்கள் என் கழுத்தில் மாலையாக கிடப்பதைப் பாருங்கள். நான் இது வரை 999 பேரை கொன்றிருக்கிறேன். இன்னும் ஒரு அடி முன்னால் வந்தால் கூட நீங்கள் யாரென்பதைப் பற்றி சிறிதும் கவலைப் பட மாட்டேன். நீங்கள் சாதாரணமானவர் இல்லை என்பதை என்னால் பார்க்க முடிகிறது.
நான் பல அரசர்களை கூட கொன்றிருக்கிறேன். ஆனால் யாரிடமும் இத்தகைய அழகையும் ஜொலிப்பையும் நான் கண்டதில்லை. இப்படி ஊடுருவக் கூடிய கண்கள் யாரிடமும் இருந்து நான் பார்த்ததில்லை. நீங்கள் தனித்துவமானவர். தயவுசெய்து நான் சொல்வதை கேளுங்கள், திரும்பி போய் விடுங்கள். உங்களை கொலை செய்ய என்னை தூண்டாதீர்கள்.” என்று கத்தினான்.
கௌதம புத்தர், “அங்குலிமால், நீ தவறாக புரிந்து கொண்டிருக்கிறாய். நான் முப்பது வருடங்களுக்கு முன்பே நகர்வதை நிறுத்தி விட்டேன். என்னுடைய மனம் நகர்வதை நிறுத்திய அந்த கணமே எனது அசைவுகள் அனைத்தும் நின்று விட்டன. ஆசை தான் மக்களை ஆட்டுவிக்கிறது. என்னிடம் எந்த ஆசையும் கிடையாது. என்னால் எப்படி நகர முடியும்? நான் நகர்வதில்லை அங்குலிமால், நீதான் நகர்ந்து கொண்டிருக்கிறாய்.
உன்னுடைய மனதில் ஏகப்பட்ட ஆசைகள், எண்ணங்கள் இருக்கின்றன. அதனால் நீதான் தூக்கத்தில் கூட நகர்ந்து கொண்டே இருக்கிறாய். ஆகவே நீதான் நிற்க வேண்டும். நான் நிறுத்தப் போவதில்லை,. ஏனெனில் முப்பது வருடங்களுக்கு முன்பே நான் நிறுத்தி விட்டேன். நீதான் நிறுத்த வேண்டும்.” என்றார்.
அங்குலிமால், “நீங்கள் வெறும் அழகான அப்பாவி மட்டுமல்ல, ஒரு தனிசிறப்பானவரும் கூட. மேலும் பைத்தியகாரனும் கூட. நான் நின்று கொண்டிருக்கிறேன், நீங்கள் நகர்ந்து வந்து கொண்டிருக்கிறீர்கள். ஆனால் நீங்கள் நின்று கொண்டிருப்பதாகவும் நான் நகர்ந்து கொண்டிருப்பதாகவும் நீங்கள் கூறுகிறீர்கள்.” என்றான்.
புத்தர், “ஆனால் இது கேலியல்ல. இதை நீ சரியாக புரிந்து கொள்ள வேண்டும்”. என்றார்.
அங்குலிமால், “என் கையில் உள்ள வாள் சூரிய ஒளியில் பளபளப்பதை காண்கிறாயா? இது விரைவில் உனது தலையை வெட்டிவிடும். நான் சொல்வதை கேள்.” என்று கத்தினான்.
புத்தர், “என்னால் எதுவும் செய்ய முடியாது. ஒருவர் இரண்டு முறை நிற்க முடியாது. நீ என்னை மன்னித்து விடு. எல்லாமும் நின்று விட்டது. காலம் நின்று விட்டது, மனம் நின்று விட்டது. என்னைப் பொறுத்தவரை எல்லாமும் நின்று விட்டது. முப்பது வருடங்களாக என்னிடம் எந்த அசைவும் இல்லை.” என்றார்.
மேலும் அவர் அங்குலிமாலை நெருங்கி வந்து கொண்டே இருந்தார். இறுதியில் அவர் அவன் முன்னால் வந்து நின்று அங்குலிமாலிடம், “நீ எனது தலையை வெட்ட விரும்பினால் வெட்டிக் கொள். உண்மையில் நான் உனக்காகவே வந்தேன். ஒரே ஒரு தலையை வெட்டுவதற்காக நீ வருடக்கணக்கில் காத்துக் கொண்டிருக்கிறாய் என கேள்விப்பட்டேன். இது மிகவும் அதிகம். யாராவது உன்னிடம் கருணை காட்ட வேண்டும். நான் இந்த தலையை உபயோகிப்பதில்லை, இந்த உடலால் வாழவில்லை.
என்னால் இந்த உடல் இன்றியும் வாழ முடியும். நீ இந்த தலையை எடுத்துக் கொள். என்னுடைய விரலை வெட்டிக் கொள். என்ன வேண்டுமானாலும் செய்து கொள்………
ஆனால் அதை செய்வதற்கு முன் இறக்கப்போகும் மனிதனின் கடைசி ஆசையை நிறைவேற்றி வைப்பாயா?” என்று கேட்டார்.
அங்குலிமால், “சரி, நான் யார் கேட்பதையும் நிறைவேற்றி வைப்பதில்லை. ஆனால் நீ மிகவும் தைரியசாலியாக இருக்கிறாய். நீ என்னைக் கூட பயமுறுத்தி விட்டாய். உன்னுடைய விருப்பம் எதுவாக இருந்தாலும் நான் அதை நிறைவேற்றிவைக்கிறேன்.” என்றான்.
கௌதம புத்தர், “நாம் நிற்கும் இந்த மரத்தின் இந்த கிளையை வெட்டு.” என்றார்.
அங்குலிமால் உடனடியாக அந்த கிளையை வெட்டி விட்டு, புத்தரிடம், “மறுபடி மறுபடி நீ வித்தியாசமானவன் என்பதை நிரூபிக்கிறாய். என்ன ஆசை இது?” என்று கேட்டான்.
புத்தர், “இது ஆசையின் ஒரு பாதி தான், மறு பாதி திரும்பவும் அதை அந்த மரத்திலேயே ஒட்ட வைத்து விடு.” என்றார்.
அங்குலிமால், “கடவுளே, இவன் ஒரு பைத்தியகாரனாக இருக்கிறானே, எப்படி ஒட்ட வைக்க முடியும்?” என்று கேட்டான்.
புத்தர், “உன்னால் ஒட்ட வைக்க முடியாது எனும்போது வெட்ட உனக்கு என்ன உரிமை இருக்கிறது? இரண்டாவது வெட்டுவதால் நீ உன்னை மிகச் சிறந்த வீரனாக நினைத்துக் கொண்டிருக்கிறாயா? குழந்தை கூட அதை செய்து விடும். உனக்கு ஏதாவது துணிச்சலும் புத்திசாலித்தனமும் இருக்குமானால் அதை ஒட்ட வை. அதுதான் உன்னை நிரூபிக்கும். வெட்டுவது அல்ல” என்றார்.
அங்குலிமால், “அது இயலாத காரியம்” என்றான்.
அப்போது புத்தர், “அப்படியானால் இந்த 999 விரல் மாலையை வீசியெறி. அதை விட்டுவிடு. வாளையும் எறிந்து விடு. இவை தைரியசாலிகளுக்கானவை அல்ல, இவை கோழைகள் தங்களது கோழைத்தனத்தை மறைக்க உபயோகப்படுத்துபவை. நான் உன்னை உண்மையான வீரனாக மாற்றுகிறேன்.” என்றார்.
அங்குலிமால், “இதை என்னால் புரிந்து கொள்ள முடிகிறது. நான் பார்த்ததிலேயே இவ்வளவு தைரியமுள்ள மனிதன் நீங்கள் தான்.” என்றான்.
அவன் வாளையும் அந்த விரல் மாலையையும் விட்டெறிந்து விட்டு, புத்தரின் காலடியில் விழுந்து, “எனக்கு தீட்சை கொடுங்கள். நீங்கள் கௌதம புத்தரைத் தவிர வேறு யாராகவும் இருக்க முடியாது. நான் கௌதம புத்தரைப் பற்றி கேள்விப்பட்டேன். என் எதிரில் நிற்பது கௌதம புத்தர்தான் என்பதை என்னால் பார்க்க முடிகிறது.”என்றான்.
புத்தர் அங்குலிமாலுக்கு தீட்சை கொடுத்தார்.
இதைத்தான் நான் விழிப்புணர்வு கொண்ட மனிதன் என்று கூறுகிறேன். அவருக்கு எந்த வரையறையும் கிடையாது. அவர், “நீ ஒரு பாவி. நீ தன்னந்தனியாக இத்தனை மனிதர்களை கொன்று குவித்திருக்கிறாய். மனித குல வரலாற்றிலேயே தனியனாக வேறு யாரும் உன்னுடன் போட்டியிட முடியாத அளவு கொலை செய்திருக்கிறாய். இப்போது நீ துறவியாக விரும்புகிறாயா?” என்று அவர் கேள்வி கேட்க வில்லை.
அவர் அவனுக்கு தீட்சை கொடுத்தார்.
இவர் இப்படி செய்வார் என்று அவரது சீடர்களாலேயே நம்ப முடிய வில்லை. அவர் மிகப் பெரிய பண்டிதர்களை, அறிவாளிகளை, தீட்சை கொடுக்காமல் திருப்பி அனுப்பியிருக்கிறார். ஆனால் ஒரு கொலைகாரனுக்கு மறுக்கவில்லை.
மிகவும் காலதாமதமாகிவிட்ட படியால் அவர்கள் திரும்பவும் பிரஜென்ஜீதாவின் அரசிற்கே திரும்பி வந்தனர். அரசன் நடந்தவற்றை கேள்விப்பட்டான். அவனே அங்குலிமாலுக்கு பயந்து கொண்டு அந்த வழியே போவதை நிறுத்திவிட்டிருந்தான்.அங்குலிமால் ஒரு கிறுக்கன், அவன் அரண்மனைக்கு அருகில் இருப்பது ஆபத்தானது என அரசன் கவலைப்பட்டான்.
பிரஜென்ஜீதா அடுத்த நாள் புத்தரைப் பார்க்க வந்தான். அவன் எப்போதும் அவரை மிகவும் மதிப்பவன். ஆகவே அவர் சொற்பொழிவுகளை கேட்க தினமும் வருவான்.
ஆனால் முதல்தடவையாக அவன் புத்தரை பார்க்க தனது உடைவாளுடன் வந்தான். நீ ஞானமடைந்த ஒருவரின் சொற்பொழிவை கேட்க உடைவாளுடன் வர வேண்டிய அவசியமில்லை.
ஆனால் பிரஜென்ஜீதா, “என்னை மன்னித்து விடுங்கள். நீங்கள் அங்குலிமாலுக்கு தீட்சை கொடுத்திருக்கிறீர்கள் என்பதை கேள்விப்பட்டதால் நான் வாளுடன் வந்தேன்.” என்றான். அவன் மிகவும் பதட்டத்தோடு காணப்பட்டான். அவனுக்கு வேர்த்துக் கொட்டியது.
புத்தர், “ஆம், ஆனால் வாளுக்கு இங்கே வேலையில்லை. அங்குலிமால் இப்போது ஒரு சன்னியாசி, புத்தபிக்கு, அவனைப் பார்த்து நீங்கள் பயப்பட வேண்டிய அவசியமில்லை.” என்றார்.
ஆனால் அரசன், “அதெல்லாம் சரிதான். எங்கே அவன்? நான் அவன் முகத்தை பார்க்க வேண்டும். என்னுடைய வாழ்வில் அவன் ஒரு அச்சுறுத்தலாகவே இருந்திருக்கிறான்.” என்றான்.
அங்குலிமால் புத்தரின் அருகில்தான் அமர்ந்திருந்தான். புத்தர், அவனைக் காட்டி, “இதோ பார் – இவன்தான் அங்குலிமால்!” என்றார்.
அங்குலிமால் என்ற பெயரைக் கேட்டு அவனைப் பார்த்தவுடனே பிரஜென்ஜீதா தனது வாளை உருவினான். அவனது பெயரே குலைநடுங்கச் செய்வதாக இருந்தது.
புத்தர் சிரித்தார், அங்குலிமாலும் சிரித்தான். அவன் அரசனிடம், “உனது வாளை உறையினுள் வை. நீ இப்பேற்பட்ட வாள்வீரனாக இருந்தால் நான் அங்குலிமாலாக இருந்த போது வந்திருக்க வேண்டும். நான் இப்போது ஒரு சன்னியாசி. வாளை உறையினுள் வை.” என்றான்.
அவன் சொன்ன முறையை கேட்ட பிரஜென்ஜீதா அப்படியே செய்தான். அங்குலிமால் எங்கே இருந்தாலும் அங்குலிமால்தான். அரசன் கூட அவன் சொன்னதை கேட்டாக வேண்டும்.
புத்தர், “அங்குலிமால்! நீ உனது தொனியை மாற்றிக் கொண்டாக வேண்டும். நீ உனது வழிமுறைகளை மாற்றிக் கொள்ள வேண்டும். நீ இப்போது ஒரு சன்னியாசி. நீ இன்று பிச்சையெடுக்கப் போகும்போது எது வேண்டுமானாலும் நடக்கலாம். ஏனெனில் இந்த முழு அரசும் உன்னைக் கண்டு பயந்து நடுங்கிக் கொண்டிருக்கிறது. நீ பிச்சை எடுக்கப் போகும்போது உனக்காக எந்த கதவும் திறக்காமல் போகலாம். பயத்தினால்…..
எதிர்க்காதே. இந்த எளிய மக்களால் உன்னுடைய மாறுதலை பார்க்க முடியாது. அவர்கள் பழி தீர்க்கக் கூட செய்யலாம். ஆனால் நீ ஒரு சன்னியாசி என்பதை நீதான் நிரூபிக்க வேண்டும்” என்றார்.
அங்குலிமால் சென்றான். புத்தர் என்ன நடக்கப் போகிறதென்று அறிந்துகொள்ள அவன் பின்னே சென்றார். அவர் சொன்னதுதான் நடந்தது – கதவுகள் எதுவும் திறக்கவில்லை, அவனுக்கு சாப்பிட யாரும் எதுவும் கொடுக்க வில்லை.
மக்கள் தங்களது வீட்டின் மாடியில், கூரையில் நின்று கொண்டு அவன் மேல் கற்களை வீசினார்கள். – நெருங்கி வர பயந்து கொண்டு தூரத்தில் இருந்த படியே மாடியில் கூரையில் நின்றபடி அவன் மேல் கற்களை மழையாக பொழிந்தனர். இறுதியில் அங்குலிமால் தெருவில் வீழ்ந்த பின்னும் அவர்கள் அவன் மேல் கற்களை வீசிக் கொண்டே இருந்தனர். அவன் உடல் முழுவதும் ரத்தகாயமாக இருந்தது.
புத்தர் அவனை நெருங்கி வந்த போது அவன் கற்களால் மூடப் பட்டு ரத்த வெள்ளத்தில் கிடந்தான். அவனை அந்த கற்களிலிருந்து வெளியே இழுத்த போது அவன் தனது கடைசி நிமிடங்களில் இருந்தான். புத்தர், “அங்குலிமால், நீ ஒரு சன்னியாசி என்பதை நிரூபித்து விட்டாய். ஒரு வினாடியில் ஒரு பாவி துறவியாக முடியும் என்பதை நீ நிரூபித்து விட்டாய். நீ ஒரு பாவியாக வாழ்ந்தாய். ஆனால் ஒரு துறவியாக இறக்கிறாய்” என்றார்.
அங்குலிமால் புத்தரின் பாதங்களை தொட்டவண்ணம் உயிரை விட்டான்.
நான் மிகவும் அழகான யூத கதையைப் பற்றி கேள்விபட்டிருக்கிறேன்
அது மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது – அது ஒரு மனிதனைப் பற்றிய கதை.
அவன் எப்போதும் தூக்க கலக்கத்தில் இருந்தான். எல்லா இடங்களிலும் எப்போதும் தூங்குவதற்கு தயாராக இருந்தான். பெரிய பொது கூட்டங்களிலும், எல்லா இசை நிகழ்ச்சிகளிலும், எல்லா முக்கிய ஆலோசனை கூட்டங்களிலும், அவன் அமர்ந்து தூங்கிகொண்டிருப்பதை பார்க்கமுடியும்.
உனக்கு கண்டிப்பாக அந்த மனிதனை தெரிந்திருக்கும் ஏனெனில் நீதான் அது. நீ அந்த மனிதனை பலமுறை கடந்திருப்பாய், ஏனெனில் அவனை நீ எப்படி ஒதுக்க முடியும்? — அது நீ.
நினைத்து பார்க்ககூடிய நினைத்து பார்க்க முடியாத அனைத்து நிலைகளிலும் அவன் தூங்கினான். அவன் தனது முழங்கையை காற்றில் மடித்து தனது கைகளை தனது தலைக்கு பின்னால் வைத்துக்கொண்டு தூங்கினான். அவன் நின்றுகொண்டு, விழாமல் இருப்பதற்காக சாய்ந்துகொண்டு தூங்கினான். அவன் திரை அரங்கத்திலும், தெருக்களிலும், மசூதிகளிலும் தூங்கினான். அவன் எங்கே சென்றாலும் அவனுடைய கண்கள் தூக்க மயக்கத்திலேயே இருக்கும்.
அவன் இந்துவாக இருந்திருந்தால் அவன் தலைகீழாக நின்றுகொண்டு
சிரசாசனத்தில் கூட தூங்கியிருப்பான். நான் இந்துக்கள் அவ்வாறு தூங்குவதை பார்த்திருக்கிறேன். பல யோகிகள் தலைகீழாக நின்றுகொண்டு தூங்குவதில் திறமைசாலிகள். அது கடினம், கஷ்டமான காரியம், அதற்கு மிக பயிற்சி தேவை – ஆனால் அது நடக்கிறது.
அவன் ஏற்கனவே ஏழு பெரிய அக்னிகளை தூங்கி கடந்துவிட்டதாக பக்கத்து வீட்டுகாரர்கள் கூறுவார்கள், ஒருமுறை ஒரு பெரிய தீ விபத்தில் அவனை படுக்கையில் இருந்து தூக்கி பக்கத்து சந்தில் வைத்துவிட்டனர், அவன் இன்னமும் தூங்கிகொண்டிருந்தான். ரோந்து வந்தவர்கள் அவனை கூட்டிசெல்லும் வரை அவன் சில மணிநேரங்கள் அந்த சந்தில் தூங்கிகொண்டிருந்தான்.
அவன் கல்யாணத்தில் மந்திரம் சொல்லும் போது பாதியில் தூங்கிவிட்டான் அவனுடைய தலையில் பலமணிநேரம் அடித்து அவனை எழுப்பினார்கள். அவன் மெதுவாக அடுத்த வார்த்தையை சொல்லிவிட்டு திரும்பவும் தூங்கிவிட்டான்.
நீ தாலி கட்டியதை நினைத்துப் பார். உன்னுடைய தேன் நிலவை நினைத்துப் பார். உன்னுடைய கல்யாணத்தை நினைத்துப் பார். எப்போதாவது விழித்துகொண்டுள்ளாயா? நீ எப்போதாவது தூங்ககூடிய வாய்ப்பை தவறவிட்டுள்ளாயா? நீ எப்போதும் தூங்கிகொண்டேயிருக்கிறாய்!
நம்முடைய கதாநாயகனை பற்றி சொல்லபோகும் கதையை நீ நம்புவாய் என்பதற்காகவே இவ்வளவும் சொல்கிறேன்.
ஒருமுறை, அவன் தூங்கிவிட்டான், அவன் தூங்கினான், தூங்கினான், தூங்கிகொண்டேயிருந்தான், ஆனால் தூக்கத்தில் வெளியே தெருக்களில் இடிஇடிப்பது போல சத்தம் கேட்பதாக பட்டது, அவனுடைய படுக்கையும் லேசாக ஆடியது, எனவே அவன் அவனுடைய தூக்கத்தில் வெளியே மழை பெய்கிறது என நினைத்துக்கொண்டான், அதன் காரணமாக அவனுடைய தூக்கம் இன்னும் இனிமையானதாக மாறியது. அவன் போர்வையிலும், அதனுடைய இதமான சூட்டிலும் தன்னை சுருட்டிக்கொண்டான்.
தூக்கத்தில் எத்தனை முறை விஷயங்களை எப்படியெல்லாம் அர்த்தபடுத்தியுள்ளாய் என நினைவு இருக்கிறதா? சில சமயங்களில் நீ அலாரம் வைத்திருப்பாய், அது சத்தம் போடும்போது நீ சர்ச்சில் இருப்பதாகவும் அங்கு மணிகள் சத்தமிடுவதாகவும் கனவு காணத் தொடங்குவாய். அலாரத்தை ஒதுக்குவதற்கான, அலாரம் உண்டாக்கும் தொந்திரவை ஒதுக்குவதற்கான மனதின் ஒரு சாதுரியம்.
அவன் எழுந்தபோது அவன் ஒரு ஆச்சரியகரமான சூனியத்தை கண்டான், அவனுடைய மனைவி இல்லை, அவனுடைய படுக்கை இல்லை, அவனுடைய போர்வை இல்லை. அவன் ஜன்னல் வழியாக பார்க்க விரும்பினான், ஆனால் பார்ப்பதற்கு அங்கு ஜன்னல் இல்லை. அவன் மூன்று மாடிகள் கீழே ஓடி உதவி என கத்த விரும்பினான் ஆனால் ஓடுவதற்கு படிகளும் இல்லை கத்துவதற்கு காற்றும் இல்லை. அவன் வெறுமனே வெளியே செல்ல விரும்பியபோது, வெளியே என்று ஏதுமில்லை என்பதை அவன் கண்டான். அனைத்தும் காணாமல் போய்விட்டது
சிறிது நேரம் என்ன நடந்துள்ளது என்பதை கிரகிக்கமுடியாமல் குழப்பத்தில் அங்கேயே நின்றான். ஆனால் பிறகு அவனுக்கு அவனே நினைத்துக்கொண்டான், நான் தூங்கபோகிறேன். ஆனால் அப்படித் தூங்குவதற்கு இனி எந்த பூமியும் இல்லை என்பதை அவன் கண்டான்.பிறகுதான் அவன் இரண்டு விரல்களை நெற்றியில்
வைத்துக்கொண்டு யோசிக்க தொடங்கினான். உலகத்தின் முடிவு வரை தூங்கிவிட்டேன் என்பது தெளிவாகிறது. இது, “நான் என்ன செய்திருக்கிறேன் பார்!” என்று கர்வப்பட்டுக்கொள்ளப்படவேண்டிய ஒன்றுதான்.
ஆனாலும் அவன் சோகத்தில் ஆழ்ந்தான். இனி உலகம் இல்லை, அவன், உலகமில்லாமல் நான் என்ன செய்வேன், நான் எங்கு வேலைக்கு செல்வேன், நான் எவ்வாறு வாழ்வை மேற்கொள்வேன், முக்கியமாக இப்போது தினசரி செலவினங்கள் மிக அதிகமாகிவிட்டன, ஒரு டஜன் முட்டை விலை இருபது டாலராகிவிட்டது. அவை புதியனவா என்பது யாருக்கும் தெரியாது, அது தவிர கேஸ் கம்பெனி எனக்கு தர வேண்டிய ஐந்து டாலர்கள் என்னவாவது? என்னுடைய மனைவி எங்கே சென்றிருக்கிறாள்? அவளும் இந்த உலகத்தோடு நான் பாக்கெட்டில் வைத்திருந்த முப்பது டாலர் பணத்தோடு மறைந்திருக்ககூடிய வாய்ப்பு உண்டா? அவள் மறைந்துபோகக்கூடிய குணமுடையவள் அல்ல, என்று அவனே அவனுக்குள் நினைத்துக்கொண்டான்.
திடீரென உலகம் மறைந்துவிட்டால் நீயும் இவ்வாறே நினைப்பாய். உனக்கு வேறெதுவும் நினைக்கத் தெரியாது. நீ முட்டையின் விலையைப் பற்றியும், அலுவலகத்தை பற்றியும், மனைவி மற்றும் பணம் குறித்தும் நினைத்துக்கொள்வாய். வேறெதைபற்றியும் சிந்திக்க உனக்குத் தெரியாது. முழு உலகமும் மறைந்துவிட்டது – ஆனால் நீ உன்னுடைய சிந்தனையில் இயந்திரத்தனமாகிவிட்டாய்.
நான் தூங்க நினைத்தால் என்ன செய்வது? உலகம் இல்லாவிட்டால் நான் எதில் படுப்பேன்? என்னுடைய முதுகு வலித்தால்?, கடையில் இருக்கும் வேலைகளை யார் முடிப்பது? எனக்கு மால்ட் வேண்டுமென்றால் எங்கு கிடைக்கும்?. ஒரு மனிதன் தூங்கும்போது உலகம் அவன் தலைக்கடியில் இருந்தது ஆனால் எழும்போது உலகம் இல்லை என்பதை போல எங்காவது பார்த்திருக்கிறீர்களா? என்று அவன் நினைத்துக்கொண்டான்.
இது ஒருநாள் இல்லை ஒருநாள் நடக்கப்போகிறது – சாகும்போது ஒவ்வொரு மனிதனுக்கும் இதுதான் நடக்கிறது. திடீரென முழு உலகமும் மறைந்துவிடுகிறது. தீடீரென அவன் இந்த உலகத்தின் பகுதியல்ல. திடீரென அவன் இன்னொரு பரிமாணத்தில் இருக்கிறான். இது இறக்கும் எல்லோருக்கும் நடக்கிறது, ஏனெனில் நீ அறிந்தவை எல்லாம் மேலோட்டமானவையே. நீ இறக்கும் பொழுது, திடீரென உனது மேல்தளம் மறைந்துவிடுகிறது – நீ உனது மையத்தை நோக்கி தூக்கி எறியப்படுகிறாய். உனக்கு அந்த மொழி தெரியாது. உனக்கு மையத்தை குறித்து எதுவும் தெரியாது. அது சூனியத்தை போல, வெறுமையாக காட்சியளிக்கிறது. வெற்றிடமாக, ஏதுமின்றி இருப்பது போல தெரிகிறது.
நமது கதாநாயகன் உள்ளாடையுடன் நின்று என்ன செய்வது என யோசித்துகொண்டிருந்தபொழுது, அவனுக்கு ஒரு யோசனை தோன்றியது. போனால் போகட்டும், எந்த உலகமும் இல்லை, அது யாருக்கு வேண்டும்?
மறைந்தது மறைந்துவிட்டது – நான் திரைப்படத்துக்கு சென்று நேரத்தை கழிக்கிறேன். ஆனால் அவன் ஆச்சரியபடும்படி உலகத்தோடு திரையரங்குகளும் மறைந்துவிட்டன என்பதைக் கண்டான்.
மிகவும் குழப்பத்தை உண்டாக்கிக் கொண்டுவிட்டேன், என நினைத்துக்கொண்டே நமது கதாநாயகன் மீசையை தடவத் தொடங்கினான். தூங்கியதன் மூலம் மிகப்பெரிய குழப்பத்தை உண்டாக்கிவிட்டேன் நான் ஆழ்ந்து தூங்காமல் இருந்திருந்தால் எல்லாவற்றோடும் நானும் மறைந்திருப்பேன் என அவனை அவனே திட்டிக்கொண்டான். அப்படி பார்த்தால் நான் அதிர்ஷ்டம் இல்லாதவன், எனக்கு மால்ட் எங்கு கிடைக்கும் காலையில் அதை குடிக்க எனக்கு பிடிக்கும். என்னுடைய மனைவி? அவள் யாரோடு மறைந்தாள் என யாருக்கு தெரியும்? அது மேல்தளத்தில் இருக்கும் அந்த துணி தேய்ப்பவனாக இருந்தால், நான் அவளை கொன்றுவிடுவேன். கடவுளே எனக்கு உதவி செய்.
எவ்வளவு நேரம் கடந்துவிட்டது என்று யாருக்கு தெரியும்?
இந்த வார்த்தைகளை கூறியபடியே நமது கதாநாயகன் அவனுடைய கைகடிகாரத்தை பார்க்க விரும்பினான் ஆனால் அது எங்கே என்று தெரியவில்லை. அவன் இரு கைகளாலும் முடிவில்லாத வெற்றிடத்தில் வலது இடது பைகள் இருக்குமிடங்களில் தேடினான் ஆனால் தொடுவதற்கு எதையும் கண்டுபிடிக்க முடியவில்லை.
நான் இப்போதுதான் கடிகாரத்திற்கு இரண்டு டாலர்கள் கொடுத்துள்ளேன் இதோ அது ஏற்கனவே மறைந்துவிட்டது, என அவனுக்கு அவனே நினைத்துக்கொண்டான். சரி உலகம் பாதாளத்திற்கு போயிருந்தாலும், அது பாதாளத்திற்கு போய்விட்டது. அதைப்பற்றி எனக்கு கவலையில்லை. அது எனது உலகமல்ல. ஆனால் கடிகாரம்! ஆனால் என்னுடைய கடிகாரம் ஏன் பாதாளம் போகவேண்டும்? புதிய கடிகாரம். இரண்டு டாலர்கள். அது காயப்படாதது. மால்ட் எனக்கு எங்கு கிடைக்கும் காலையில் மால்ட்டை விட சிறந்தது வேறு ஒன்றுமில்லை. யாருக்கு தெரியும் ஒருவேளை என்னுடைய மனைவி…. மோசமான அழிவின் போது தூங்கியிருக்கிறேன், எனக்கு மோசமானதுதான் நடக்கும். உதவி, உதவி, உ-த-வி! என்னுடைய மூளை எங்கே? முன்பே என் மூளை எங்கு போயிற்று? உலகத்தையும் என்னுடைய மனைவியையும், அவள் இளமையாக இருக்கும் போதே பார்த்துக்கொள்ளவில்லை, நான் ஏன் அவைகளை மறைந்து போக விட்டுவிட்டேன்?
நமது கதாநாயகன் சூனியத்தில் தலையை முட்டிக்கொள்ள தொடங்கினான், ஆனால் சூனியம் மிகவும் லேசாக இருந்த காரணத்தால் அது அவனை காயப்படுத்தவில்லை, அதனால் அவன் இக்கதையை சொல்வதற்கு உயிரோடு இருந்தான்.
இது மனித மனத்தின் கதை. நீ உன்னைச் சுற்றி கற்பனை உலகத்தை உருவாக்கியுள்ளாய். நீ சாகும்போது உன்னுடன் வரமுடியாத பொருட்கள் மீது பற்று வைத்துக்கொண்டே செல்கிறாய். உன்னிடம் இருந்து எடுத்துகொள்ளபடக்கூடிய பொருட்களோடு உன்னை நீ அடையாளபடுத்திக் கொள்கிறாய்.
ஓரு பிரபல திபெத்திய கதை……..
ஓரு மனிதன் ஓரு வயதான குருவுக்குத் தினமும் சேவை புரிந்து வந்தான். உணவு தருவது, கிணற்றிலிருந்து நீர் இறைப்பது, கால்களை அமுக்கிவிடுவது போன்ற சேவைகள். வயதான குருவோ, “ஏன் உன் நேரத்தை வீண் செய்கிறாய்“ என்று கூறுவது வழக்கம். ஏனெனில் அந்த குருவுக்கு இந்த சேவையின் நோக்கம் ஏதோ ஆசைதான் என்பது தெளிவாகப் புரிந்திருந்தது.
முடிவில் ஓரு நாள் அந்த மனிதன், “நான் உங்களுக்கு சேவை புரியக் காரணம் – எனக்கு ஏதாவது ஓர் அதிசயம் – ஒரே ஒரு அதிசயமாவது செய்ய கற்றுக் தர வேண்டும்” என்றான்.
அதற்கு அந்த வயதான குரு, “ஆனால் எனக்கு எந்த அதிசயமும் செய்யத் தெரியாது. நீ உன் நேரத்தை தேவையின்றி வீண் செய்து விட்டாய். நீ வேறு யாராவது அதிசயங்கள் செய்ய தெரிந்தவரைப் போய் பார்” என்று கூறினார்.
ஆனால் அந்த மனிதனோ, ”உங்களுக்கு அதிசயம் செய்யத் தெரியாது என்று எப்போதும் நீங்கள் மறுத்து வருகிறீர்கள் என்று எனக்குத் தெரியும். ஆனால் நீங்கள் எப்போதும் அதிசயங்களை நடத்திதான் வருகிறீர்கள். பிறர் என்னிடம் கூறியுள்ளார்கள் – நீ அவர் கூறுவதைக் கேட்காதே. அவருக்கு சேவை செய்துகொண்டே வா. ஓருநாள் அவர் உனக்கு ஏதாவது ரகசியம் கூறுவார். ஆனால் அதற்கு நீ ஏற்றவனாக இருக்கிறாயா என்று பார்த்துவிட்டுத்தான் கூறுவார் என்று கூறியுள்ளனர். ஓருவேளை நான் இன்னும் அதற்குத் தக்கவாறு கனியவில்லையோ என்னவோ” என்று கூறினான்.
சில நாட்கள் கழித்து, அந்த வயதான குரு, இந்த மனிதன் இன்னும் தேவையேயின்றி வேலை செய்து வருவதைக் கண்டார். யாரோ இவன் மனதில் நான் அதிசயம் புரிபவன் என்ற எண்ணத்தை விதைத்து விட்டனர். “ஒருவேளை அதிசயங்கள் நடக்கலாம். ஆனால் அவை தாமாகவே நடப்பவை. நான் அவற்றை செய்வதில்லை.”
உயர்ந்த தன்னுணர்வு நிலை அடைந்த மனிதர்களிடம், இப்படிப் பல விஷயங்கள் தானாகவே நடக்கும். எப்படி சூரியன் உதிக்கும்போது பறவைகள் பாடுகின்றனவோ அப்படித்தான். சூரியன் இந்த அதிசயத்தை செய்வதில்லை. மலர்கள் தங்கள் இதழ்களை தாமாகவே திறக்கின்றன. சூரியன் இந்த அதிசயத்தை புரிவதில்லை. சூரியன் இருந்தால் போதும், இந்த அதிசயங்கள் தாமே நடக்கும். இப்படி தன்னுணர்வு நிலையில் விழிப்பு பெற்ற ஓரு மனிதனின் இருப்பே பல மலர்கள் இதழ் மலரவும், பல பறவைகள் கானம் பாடவும் போதுமானதாக இருக்கும்.
அந்த வயதான குரு, “நான் உனக்கு ஏதாவது ரகசியத்தைக் கூறினால் அன்றி நீ என்னை விட்டுப் போகமாட்டாய் போலிருக்கிறதே” என்றார். அந்த மனிதன், “அது உண்மைதான்” என்றான். ஆகவே குரு “நான் உனக்கு ஓரு ரகசிய மந்திரம் கூறுகிறேன். ஓரு சிறு மந்திரம். திபெத்திய மந்திரம் “ஓம் மணி பத்மீ ஹம்” என்பதை எழுதித்தருகிறேன்” என்றார். ஓம் என்பது வாழ்விருப்பின் நிரந்தர ஓசை, மணி பத்மீ ஹம் என்றால் தாமரைப் பூவில் இருக்கும் வைரமணி. மணி என்றால் வைரம், பத்மம் என்றால் தாமரை. ஆக அதன் அர்த்தம் நிரந்தர ஓசையும், தாமரை பூவுக்குள் இருக்கும் வைரமும் என்பதாகும். இது முக்தி நிலை என்பதன் அர்த்தமாகும். எங்கும் பரந்து உள்ள நிரந்தர ஓசையும், தாமரையின் அழகும், மேலும் தாமரையின் உள்ளிருக்கும் வைரத்தின் ஓளியும். ஓரு சின்ன மந்திரத்திற்குள் அவர்கள் முக்தி அனுபவத்தின் முழுமையையும் சுருக்கி விவரித்துள்ளனர்.
அந்த வயதான குரு, “இந்த மந்திரத்தை எடுத்துச் சென்று, இதை ஐந்து முறை, வெறும் ஐந்தே ஐந்து முறை கூறு. முதலில் குளி. புத்தாடைகளை உடுத்திக்கொள். கதவுகளை மூடிக்கொண்டு தனியே ஓரிடத்தில் அமர்ந்து இந்த மந்திரத்தை ஐந்தே ஐந்து முறை கூறு. பிறகு நீ எந்த அதிசயம் வேண்டுமானாலும் செய்யலாம்” என்று கூறினார்.
அந்த மனிதன் வேகமாக வெளியேறத் துவங்கினான். அவன் தன் நன்றி உணர்வைக் காட்டக்கூட முயலவில்லை. நன்றி என்று கூறக்கூட முயலவில்லை. உடனே கோயில் படிகளில் இறங்கி ஓடி விட்டான். அவன் பாதிதூரம் போனபோது, அந்த குரு, “நில்! ஓன்றைக் கூற மறந்து விட்டேன். இந்த மந்திரத்தைக் கூறும்போது ஒன்று நினைவிருக்கட்டும். குரங்கைப் பற்றி நினைக்கவே கூடாது!“ என்று சத்தமாகக் கூறினார்.
அந்த மனிதன், “நான் ஏன் குரங்கைப் பற்றி நினைக்கப் போகிறேன், என் வாழ்வில் இதுவரை நான் நினைத்ததே இல்லை” என்றான். குரு, “சரிதான், ஆனால் நினைவிருக்கட்டும்! குரங்கு மட்டும் கூடவே கூடாது. குரங்கின் நினைவு வந்தால் நீ மறுபடி ஐந்து தடவை மந்திரம் கூற வேண்டும்” என்றார்.
அந்த மனிதன் “குரங்கு எதற்காக வரும்?” என்றான். குரு, “எனக்குத் தெரியாது. நான் உனக்கு இரகசியத்தைக் கூறிவிட்டேன். இதுதான் எனது குரு எனக்குக் கூறிய இரகசியமாகும்.” என்றார்.
ஆனால் அவன் படிகளில் இறங்கத் துவங்கும் முன்பே குரங்குகளைப் பற்றி நினைக்கத் துவங்கி விட்டான். அவன், “அடக் கடவுளே நான் இன்னும் மந்திரம் கூறக் கூட ஆரம்பிக்கவில்லை. ஆனால் குரங்குகள் வந்துவிட்டனவே!” என்று கூறினான். அவன் கண்களை மூடியபோதும் குரங்குகள். குரங்குகள் இளித்துக் கொண்டு, அவனைப் பார்த்து மூஞ்சியைக் காட்டின. அவன், “இது ஓரு விநோத மந்திரம்தான். நான் இன்னும் துவங்கவேயில்லை, அதற்குள்ளா?” என்றான்.
அவன் வீட்டைச் சென்றடைந்தபோது குரங்குகளால் சூழப்பட்டிருந்தான். அவன் எங்குப் பார்த்தாலும் குரங்கைத்தான் கண்டான். உள்ளே சென்று குளித்தான். ஆனால் அதனால் எந்தப் பயனுமில்லை. குளியலறையில் மூடிய கதவிற்குப்பின் குரங்குகள் சுற்றி அமர்ந்திருந்தன. அவன், “அந்தக் கிழவன் ஓரு முட்டாள். இந்தக் குரங்குதான் பிரச்னை என்றால் அவன் இதைப் பற்றி குறிப்பிட்டிருக்கவே கூடாது. யானைகள் வரவில்லை. ஓட்டகங்கள் வரவில்லை. சிங்கங்களும் வரவில்லை. குரங்கைக் தவிர வேறெதுவுமே வரவில்லை.” என்று நினைத்தான்.
பிறகு அவன் கால்களை மடித்து பத்மாசன நிலையில் அமர்ந்து கண்களை மூடிக் கொண்டான். ஆனால் அதற்கு எந்த பயனுமில்லை. குரங்குகள் அவனை இடித்தன. குரங்குகள் மடியில் உட்கார்ந்து கொண்டன. சுற்றிலும் ஓரே குரங்குக் கும்பல்தான். அவனுக்கு மிகவும் கவலையாகி விட்டது. அவன் மனைவி அவனை கடந்து சென்றபோது அவன் பார்த்தான். அப்போது அவளும் கூட ஓரு குரங்கு போல….. இல்லை, இல்லை, அவள் என் மனைவி. அவன் தந்தை கடந்து போனார். பார்த்தால் கிழக் குரங்குபோல…… சிலமுறை அவன் தந்தைபோலத் தெரிந்தார். அந்த மனிதன், “ஐயோ நான் பைத்தியமாகி விடுவேன்” என்று நினைத்துக் கொண்டான்.
ஐந்து தடவை என்பது மிக அதிகம். அந்த மந்திரமான ஓம் மணி பத்மீ ஹம்என்ற நான்கு வார்த்தைகளை ஓரு முறை கூட முடிக்கவிட வில்லை. அத்தனை குரங்குகள். அன்றிரவு முழுவதும் அவன் முயன்றான். நிறைய முறை குளித்தான். ஒருவேளை அவனது உடுப்புகள் போதுமான அளவு தூய்மையாக இல்லையோ என நினைத்துக் கொண்டு நடு இரவில், அந்த குளிர்காலத்தில் அவன் நிர்வாணமாக நின்றான். இப்போது அழுக்கு துணிகள் பற்றியோ, அல்லது வேறு எது பற்றியோ எந்தக் கேள்வியும் இல்லை. ஆனால் குரங்குகளும் சுற்றிலும் காலை மடித்துகொண்டு பத்மாசனம் போட்டு அமர்ந்திருக்கின்றன. அவன் அவற்றைப் பார்த்துச் சப்தமிட்டான். அவை சிரித்தன.
காலையில் அவன் கிட்டதட்ட பைத்தியமாகிவிட்டான். “அந்த கிழவன் தந்திரக்காரன். எத்தனை வருடங்களாக நான் சேவை செய்தேன். முடிவில் அவன் எனக்கு இரகசியத்தையும் தந்து, கூடவே இந்தக் குரங்குகளையும் தந்து அந்த இரகசிய மந்திரத்தை நாசமாக்கி விட்டானே!” என்றான் அவன்.
அவன் அந்த குருவிடம் திரும்பிச் சென்று, அந்த மந்திரத்தை திருப்பி தந்துவிட்டு, “நீங்களே வைத்துக் கொள்ளுங்கள். ஏனெனில் அந்தக் குரங்குகள்……” என்றான்.
அந்தக் குரு, “அவை உன்னிடம் வரவே வராது என்றாயே” என்றார். அவன், “நான் இதுவரை என் வாழ்வில் ஓரு குரங்கைப் பற்றிக்கூட எண்ணியதோ, கனவில் கண்டதோ நேரில் கூட கண்டதோ கிடையாது. இலட்சக்கணக்கான விலங்குகளைப் பற்றி நான் யோசித்ததேயில்லை, அவசியமுமில்லை. நீங்கள் அந்த வார்த்தையைக் கூறாமலிருந்திருந்தால் என்னால் அதிசயங்களை நிகழ்த்தி இருக்க முடியும். ஆனால் அது இப்போது நடவாத காரியமாகி விட்டது.” என்றான்.
குரு. “நான் என்ன செய்வது? குரங்கு அந்த மந்திரத்துடன் இணைந்து வரும். குரங்கு இல்லையேல் அந்த மந்திரம் பயனில்லை. குரங்கைத் தவிர்க்கும் வழி தெரியாவிட்டால் உன்னால் அதிசயங்களை நிகழ்த்த முடியாது.” என்றார்.
அந்த மனிதன், “நான் எல்லா அதிசயங்களை பற்றியும் மறந்தே போய்விட்டேன். இந்த மந்திரத்தைத் திருப்பி எடுத்துக் கொண்டு என்னை குரங்குகளிடமிருந்து விடுவியுங்கள். ஏனெனில் எனக்கு மந்திரம் போனாலும் குரங்குகள் போகாதோ என்று பயமாக இருக்கிறது. எனக்கு மனைவியும் வயதான தகப்பனாரும், சிறு குழந்தைகளும் உள்ளனர். நான் அவர்களை கவனித்தாக வேண்டும். என்னால் இரவும் பகலும் அந்த குரங்குகளுடன் சண்டையிட முடியாது.” என்று வேண்டினான்.
குரு, “அந்த மந்திரத்தை நீ என்னிடம் திருப்பி தந்து விட்டதால் இனிமேல் குரங்குகள் வராது. அவை மிகவும் நேர்மையான பக்திமான்கள்.” என்றார்.
அந்த மனிதன் சென்று நாலாபக்கமும் பார்த்தபோது எங்குமே குரங்குகள் தென்படவில்லை. அவன் ஆச்சரியமடைந்தான். வீடு சென்று பார்த்தபோது மனைவி மனைவியாகவே தோற்றமளித்தாள். தகப்பனார் தகப்பனாராகவே தோன்றினார். குழந்தைகள் குழந்தைகளாகவே இருந்தனர். அவன் இது விநோதம்தான் என்று குளித்தான். குளியலறை காலியாகவே இருந்தது! “அந்த மந்திரம் சிறியதுதான், குரு எழுதிக்கொடுத்த மந்திரத்தை நான் திருப்பித் தந்து விட்டாலும் கூட, அதை இரவு முழுவதும் கூறியபடியிருந்ததால் எனக்கு அது நினைவிருக்கிறது. இப்போது எந்த ஆபத்துமில்லை…. நான் கூறிப் பார்க்கிறேன்.” என்று நினைத்தான்.
அவன் ஓம் என்று துவங்கிய கணமே, ஓரு குரங்கு தோன்றிவிட்டது. கூடவே இரண்டு குரங்குகள் சுற்றி அமர்ந்து ஓம் என்றன. அந்த எண்ணம் முழுவதையும் கைவிட்டுவிட்டான். அவன் நான் கடைக்குப் போய் என் வேலையைப் பார்க்கிறேன். இந்த அதிசயங்களை நிகழ்த்தும் எண்ணம் இனிமேல் சரியாக வராது என்று போய்விட்டான்.
ஆதி காலத்தில் அயோத்தி நாட்டை இசுவாகு குலத்தைச் சேர்ந்த சகரர் எனும் மன்னன் ஆண்டு வந்தான். அவனுக்கு சுமதி, கேசினி என்ற 2 மனைவிகள் இருந்தனர்.
mahalaya amavasya pitru tharpanam
அவர்கள் இருவருக்கும் நீண்ட நாட்களாக குழந்தை பிறக்க வில்லை. இதனால் சகரர் இறைவனை நோக்கி தவம் இருந்தார். அதன் பயனாக சுமதிக்கு 60 ஆயிரம் குழந்தைகள் பிறந்தனர். கேசினிக்கு ஒரே ஒரு குழந்தை பிறந்தது.
இதைத் தொடர்ந்து அரசர் சகரர் நாடு பிடிக்கும் ஆசையில் அசுவமேத யாகம் நடத்தினார். அவர் அனுப்பிய குதிரை திடீரென மாயமாகி விட்டது. அந்த குதிரையைத் தேடி சுமதயின் 60 ஆயிரம் மகன்களும் புறப்பட்டுச் சென்றனர். ஒரு குகை அருகில் குதிரை நிற்பதைக் கண்டனர். அந்த குகை அருகில் தவம் செய்து கொண்டிருந்த கபில முனிவர்தான் குதிரையை கடத்தி வந்து விட்டதாக தவறாக புரிந்து கொண்டனர்.
கபில முனிவரின் தவத்தை கலைத்து சண்டைக்கு சென்றனர். இதனால் வெகுண்ட கபிலமுனிவர், 60 ஆயிரம் பிள்ளைகளையும் சாம்பலாகப் போகும்படி சாபமிட்டார். உடனே சுமதியின் 60 பிள்ளைகளும் சாம்பலாகிப் போனார்கள். கேசினின் ஒரே ஒரு மகன் அரசுரிமைக்கு வந் தான். அவனது மகன் பகீரதன்.
பகீரதன் அரச பதவிக்கு வந்தபோது பல்வேறு தடைகள் ஏற்பட்டன. அப்போது அவனுக்கு தன் மூதாதையர்கள் 60 ஆயிரம் பேர் சாம்பலாகிப் போனதும், அவர்களுக்கு தர்ப்பணம், சிரார்த்தம் எதுவும் செய்யப்படவில்லை என்பதும் தெரிய வந்தது.
உடனே பகீரதன் தன் முன்னோர்கள் 60 ஆயிரம் பேருக்கும் தர்ப்பணம் கொடுத்து பித்ரு வழிபாடு செய்ய முடிவு செய்தான். இதற்காக காடுகள், மலைகளில் அலைந்து திரிந்து முன்னோர்களின் எலும்பு சாம்பலை சேகரித்தார். ஆனால் பித்ரு வழிபாடு செய்வதற்கு பகீரனுக்கு தண்ணீர் கிடைக்கிவல்லை. உடனே அவன் சிவபெரு மானை நோக்கி தண்ணீருக்காக தவம் இருந்தான்.
அவனது தவ வலிமையை மெய்ச்சிய சிவபெரு மான், தன் தலையில் வைத்திருந்த கங்கையை பூமிக்குச் செல்ல உத்தரவிட்டார். அதன்படி கங்கை நதியானது, பாகீரதி, அலக்நந்தா, ஜானவி, மந்தாகினி, பிண்டார், பதமா, பிரம்மாபுத்திரா ஆகிய 7 நதிகளாகப் பிரிந்து தரையில் ஓடியது. கங்கை நதி வங்கக் கடலில் கலக்கும் இடமான சாகர் எனுமிடத்தில் அமர்ந்து பகீரதன் பித்ரு பூஜைகளை செய்தான். புண்ணிய நதியான, புனித நதியான கங்கையின் தண்ணீரால் பகீரதனின் பித்ரு வழிபாடுகள் நிறைவு பெற்றன.
அதன்பிறகு வட மாநிலம் முழுவதும் பாயும் வகையில் கங்கை மாறியது. பகீரதன் அன்று தொடங்கி வைத்த கங்கை நதியின் புனிதத் தன்மை இன்றும் தொடர்கிறது. கங்கை தண்ணீரை கைகளில் ஏந்தி முன்னோர் களை நினைத்து நீர் விடும்போது பித்ரு பூஜைக்கு தனி மகத்துவமே கிடைத்து விடுகிறது. எனவே வாழ்வில் ஒரு தடவையாவது கங்கையின் புனித தலங்களில் ஏதாவது ஒரு இடத்துக்கு சென்று பித்ரு பூஜை செய்ய வேண்டும்.
பித்ரு பூஜைக்காகவே கங்கை பூமிக்கு வந்தது என்பதை என்றென்றும் நினைவில் கொள்ள வேண்டும்.