2025 - செயற்குழு தேர்தல்
2025 - செயற்குழு தேர்தல்
கீழ்காணும் யாவும் ஒரு வழிகாட்டுதலேயன்றி இவைகள் மட்டுமே மன்ற விதிகள் அல்ல. மொழியாக்கத்தினால் ஏதேனும் பொருள் குழப்பம் வருமேயானால் விதிகளின் ஆங்கில மூலம் இங்கே உள்ளது. மூலமே இறுதியானதும் உண்மைத்தன்மையை நிலைநாட்டுவதும் ஆகும்.
ஒரு பொறுப்பிற்கு மட்டும்: ஒவ்வொரு வேட்பாளரும் தங்கள் வேட்புமனுவை செயற்குழுவின் ஒரு குறிப்பிட்ட பொறுப்பிற்கு மட்டுமே சமர்ப்பிக்க வேண்டும். ஒன்றுக்குமேற்பட்ட பொறுப்புகளுக்கு வேட்புமனுவை தாக்கல் செய்ய கூடாது.
உறுப்பினரின் நடப்பு நிலை: வேட்பாளர் நடப்பு மன்ற உறுப்பினராயிருத்தல் என்பது தேர்தலில் பங்கேற்பதற்கு மட்டுமல்ல, தேர்ந்தெடுக்கப்பட்ட பொறுப்புகாலம் முழுவதும் தொடர்ந்து நீடிக்க வேண்டிய ஒரு முக்கியமான நிபந்தனை. இது மன்றத்தின் மீதான உண்மையான அர்ப்பணிப்பை எடுத்துக்காட்டுகிறது.
தலைவர் பொறுப்பிற்கான தனிச்சிறப்பு: தலைவர் பொறுப்பிற்கு போட்டியிட முந்தைய செயற்குழுவில் பணியாற்றிய அனுபவம் அவசியம். குறைந்தபட்சம் ஒரு முழு ஆண்டு செயற்குழு உறுப்பினராக பணியாற்றியிருக்க வேண்டும். வேறு தகுதியான வேட்பாளர்கள் இல்லாத பட்சத்தில், இலாப நோக்கற்ற அமைப்புகளில் தலைமைப் பொறுப்புகள் வகித்த அனுபவத்திற்கு முன்னுரிமை அளிக்கப்படும்.
போட்டி சமநிலை எய்துமாயின்: வாக்குகள் சமநிலையில் முடிந்தால், ஒரு நாணய சுழற்சி மூலம் வெற்றியாளர் தீர்மானிக்கப்படுவார். வேட்பாளரின் கடைசி பெயர் அகரவரிசையில் "A" என்ற எழுத்திற்கு மிக நெருக்கமாக இருப்பவர் நாணயத்தின் "தலை" எனக் கருதப்படுவார். மேலும் காண்க
தேர்தல் பற்றிய தொடர்புகளுக்கு: தேர்தல் அலுவலகம் மின்னஞ்சல் மூலமான எழுத்துப்பூர்வ தொடர்புகளை விரும்புகிறது. இது, கவனச்சிதறல்கள் இல்லாமல் தெளிவான மற்றும் ஆழ்ந்த தெளிந்த பதில்களை அனுப்ப ஏதுவாகும். தொலைபேசி அழைப்புகள் ஊக்குவிக்கப்படுவதில்லை.
வேட்பாளர்களுடனான சந்திப்புகள்: தேவைக்கேற்ப வேட்பாளர்களுடன் சந்திப்புகளை ஏற்பாடு செய்யும் உரிமையை தேர்தல் அலுவலகம் கொண்டுள்ளது. இது தேர்தல் செயல்முறை முழுவதும் வெளிப்படைத்தன்மையையும் மனம்திறந்த உரையாடலையும் ஊக்குவிக்கிறது.
சுருக்கமான பரப்புரை தகவல்கள்: வேட்பாளர்கள் தங்கள் பரப்புரை/அறிமுக தகவல்களை 200 சொற்களுக்கு மிகாமல் அளிக்க வேண்டும், மேலும் ஒரு புகைப்படத்துடன் கூடிய இந்த தரவுகளை விரைவில் தேர்தல் அலுவலருக்கு சமர்ப்பிக்க வேண்டும்.
வேட்புமனு படிவத்தின் முக்கியத்துவம்: வேட்புமனு படிவம் ஒரு சட்டப்பூர்வ ஆவணமாகக் கருதப்படுகிறது.எந்தவொரு மாற்றமும், அது எவ்வளவு சிறியதாக இருந்தாலும், வேட்புமனுவை தகுதியற்றதாக்கும்.
தேர்தல் முடிவுகளின் இறுதித்தன்மை: தேர்தல் அலுவலகத்தால் அறிவிக்கப்படும் தேர்தல் முடிவுகள் இறுதியானவை. தேர்தல் இணையதள உதவியுடன் நடைபெறுவதால் எழுத்து அல்லது தரவு பிழைகள் ஏற்பட வாய்ப்புகள் குறைவு, எனினும் முடிவுகள் அறிவிக்கும் போதோ அல்லது தேர்தல் சம்மந்தமான அறிவிப்புகளில் ஏதேனும் கவனப்பிசகினால் பிழைகள் நேர்ந்தால் அதை சரிசெய்ய தேர்தல் அலுவலகத்திற்கு உரிமை உண்டு.
ஆக்கபூர்வமான கருத்தாடல்கள்: வேட்பாளர்கள் தாங்கள் போட்டியிடும் பொறுப்புகளுக்கான கருத்தாடல்களில் பங்கேற்கவும், தங்கள் பொதுப்பணி மற்றும் ஆளுமைத் திறன்களை மன்ற சமூகத்திற்கு வெளிப்படுத்த தயாராக இருக்க வேண்டும்.
கண்ணியமான பரப்புரை: நேர்மறை மற்றும் மாண்புக்குரிய பரப்புரையை மேற்கொள்வது அவசியம். எதிர்மறையான பரப்புரை, தனிப்பட்ட தாக்குதல்கள் அல்லது மன்றம், மற்றும் அதன் செயற்குழு அல்லது தேர்தல் அலுவலகத்தின் நற்பெயருக்கு தீங்கு விளைவிக்கும் எந்தவொரு நடவடிக்கையும் அனுமதிக்கப்படாது.
மன்றத்தின் மாண்பு பாதுகாக்கப்படவேண்டும்: வேட்பாளர்களும் அவர்களின் ஆதரவாளர்களும் பரப்புரை நோக்கங்களுக்காக மன்றத்தின் அதிகாரப்பூர்வ தளங்கள், சமூக ஊடகங்கள், இலச்சினைகள் அல்லது அறிவுசார் சொத்துக்களை செயற்குழுவின்/தேர்தல் அலுவலகத்தின் ஒப்புதல் இன்றி பயன்படுத்தக் கூடாது.
நடப்பு செயற்குழு உறுப்பினர்களின் நடுநிலைமை: தற்போதைய செயற்குழு உறுப்பினர்கள் தேர்தலில் போட்டியிட்டால், அவர்கள் செயற்குழுவின் அனைத்து செயல்பாடுகளிலிருந்தும் தேர்தல் முடிவு வரும்வரை விலகிக் கொள்ள வேண்டும். இது அனைத்து வேட்பாளர்களுக்கும் சமமான வாய்ப்பை உறுதி செய்கிறது.
உறுப்பினர்களின் தனியுரிமை காத்தல்: மன்ற உறுப்பினர்களின் தொடர்புத் தகவல் பொதுவில் கிடைக்கும் பட்சத்தில் மட்டுமே, பரப்புரை நோக்கங்களுக்காக அவர்களை நேரடியாகத் தொடர்பு கொள்ள வேட்பாளர்கள் அனுமதிக்கப்படுகிறார்கள். இது தனிநபர் சம்மந்தப்பட்ட தகவல் பாதுகாப்பையும், மாண்புடன் தேர்தல் நடத்த ஏதுவான சூழலையும் உறுதி செய்கிறது.
மன்ற விதிகளைப் பற்றிய புரிதல்: மன்றத்தின் விதிகளைப் பற்றிய ஆழமான புரிதல், குறிப்பாக செயற்குழு உறுப்பினர்களின் பொறுப்புகள் மற்றும் கடமைகள் பற்றிய தெளிவான அறிவு, அனைத்து வேட்பாளர்களுக்கும் அவசியம். அத்துடன், அவர்கள் மன்றத்தின் நடப்பு உறுப்பினராக இருக்க வேண்டும் மற்றும் மன்ற விதிகளைப் பின்பற்றுவதாக உறுதியளிக்க வேண்டும்.
பொறுப்பேற்கும் மனப்பான்மை: தேர்ந்தெடுக்கப்பட்ட வேட்பாளர்கள் தங்கள் பொறுப்புகளை ஏற்று, அதற்குண்டான கடமைகளை நிறைவேற்ற தயாராக இருக்க வேண்டும். மேலும், இந்தப் பொறுப்பு சார்ந்து எழக்கூடிய எல்லா முரண்நலன்களையும் வெளிப்படையாக அறிவிக்க வேண்டும்.
செயற்குழு உறுப்பினர் என்பது ஒரு சிறப்புரிமை: செயற்குழு உறுப்பினர் பொறுப்பு வெறும் மன்ற உறுப்பினர் என்பதாலேயே கிடைப்பதல்ல, மாறாக மன்றத்திற்கு சேவை செய்யும் திறன், அர்ப்பணிப்பு மற்றும் பொது நல தொண்டாற்றும் வேட்கை ஆகியவற்றை வெளிப்படுத்துபவர்களுக்கு மன்ற உறுப்பினர்களால் வழங்கப்படும் ஒரு சிறப்புரிமை. இதை கவனத்தில் கொண்டு செயலாற்றவேண்டும்.
மன்றத்தின் நலன்: தேர்ந்தெடுக்கப்பட்ட செயற்குழு உறுப்பினர்கள் எப்போதும் மன்றத்தின் நலன்களை முன்னிறுத்தி செயல்பட வேண்டும். மன்றத்தின் நற்பெயர், மற்ற நிறுவனங்களுடனான அதன் உறவுகள் அல்லது நிலைப்பாட்டை பாதிக்கும் எந்தவொரு செயலையும் தவிர்க்க வேண்டும்.
நேர மண்டலம்: தேர்தல் தொடர்பான அனைத்து தேதிகளும் நேரங்களும் பசிபிக் நேர மண்டலத்தை பின்பற்றி அமையும்.