1419. அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.
ஒருவர் நபி(ஸல்) அவர்களிடம் வந்து, 'இறைத்தூதர் அவர்களே! அதிக நன்மையுள்ள தர்மம் எது?' எனக் கேட்டார். 'நீர், ஆரோக்கியமுள்ளவராகவும் பொருள் தேவை உடையவராகவும், வறுமையைப் பயப்படுபவராகவும் செல்வத்தில் ஆசை உள்ளவராகவும் இருக்கும் நிலையில் தர்மம் செய்வதே அதிக நன்மையுள்ளதாகும். எனவே (தர்மம் செய்வதை) உயிர் தொண்டைக் குழியை நெருங்கும் வரை தாமதப்படுத்த வேண்டாம். அந்நிலையில் இன்னாருக்கு இவ்வளவு இன்னாருக்கு இவ்வளவு என்று கூறுவதிலும் அர்த்தமில்லை. ஏனெனில் அப்போது உம்முடைய பொருள்கள் மற்றவர்களுக்கென்று ஆகிவிட்டிருக்குமே!' என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்.
2989. ' என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்''
மக்கள் தம் மூட்டுகள் ஒவ்வொன்றுக்காகவும் சூரியன் உதிக்கிற ஒவ்வொரு நாளிலும் தருமம் செய்வது அவர்களின் மீது கடமையாகும். இருவருக்கிடையே நீதி செலுத்துவதும் தருமமாகும்; அல்லது அவரின் பயணச் சுமைகளை அதில் ஏற்றி விடுவதும் தருமமாகும். நல்ல (இனிய) சொல்லும் ஒரு தருமமாகும். ஒருவர் தொழுகைக்குச் செல்ல எடுத்து வைக்கும் ஒவ்வோர் அடியும் தருமமாகும். தீங்கு தரும் பொருளைப் பாதையிலிந்து அகற்றுவதும் ஒரு தருமமேயாகும். 110
என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.
6021. 'எல்லா நற்செயலும் தர்மமே' என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள். 38 என ஜாபிர் இப்னு அப்தில்லாஹ்(ரலி) அறிவித்தார்.
2320. ' என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்''
முஸ்லிம் ஒருவர் ஒரு மரத்தை நட்டு அல்லது விதைவிதைத்து விவசாயம் செய்து, அதிலிருந்து (அதன் விளைச்சலை அல்லது காய்கனிகளை) ஒரு பறவையோ, ஒரு மனிதனோ அல்லது ஒரு பிராணியோ உண்டால் அதன் காரணத்தால் ஒரு தர்மம் செய்ததற்கான பிரதிபலன் அவருக்குக் கிடைக்கும்.
என அனஸ் இப்னு மாலிக்(ரலி) அறிவித்தார்.
6023 அதீ இப்னு ஹாத்திம்(ரலி) கூறினார்
(ஒரு முறை) நபி(ஸல்) அவர்கள் நரகத்தைப் பற்றிக் குறிப்பிட்டார்கள். அப்போது அதனைவிட்டு அல்லாஹ்விடம் பாதுகாப்புக் கோரினார்கள். அப்போது தம் முகத்தைத் திருப்பிக்கொண்டார்கள்.
பிறகும் நரகத்தைப் பற்றிக் குறிப்பிட்டார்கள். அப்போதும் அதனைவிட்டு அல்லாஹ்விடம் பாதுகாப்புக் கோரினார்கள். அப்போதும் தம் முகத்தைத் திருப்பினார்கள்.
பிறகு, 'பேரீச்சம் பழத்தின் ஒரு துண்டைத் தர்மம் செய்தேனும் நரகத்திலிருந்து உங்களைக் காப்பாற்றிக் கொள்ளுங்கள். அதுவும் இல்லையானால் இன் கொலைக் கொண்டாவது (காப்பாற்றிக் கொள்ளுங்கள்)'' என்றார்கள்.
அறிவிப்பாளர் ஷுஅபா(ரஹ்) '(நபியவர்கள் நரகத்தைப் பற்றி) இரண்டு முறை (குறிப்பிட்டார்கள்) என்பதில் சந்தேகமில்லை. (மூன்றாவது முறை குறிப்பிட்டார்களா என்பதில் தான் சந்தேகம் உள்ளது)'' என்று கூறினார்கள்.
1445. அபூ மூஸா(ரலி) அறிவித்தார்.
''தர்மம் செய்வது ஒவ்வொரு முஸ்லிமுக்கும் கடமையாகும்'' என்று நபி(ஸல்) அவர்கள் கூறியதும். தோழர்கள், 'இறைத்தூதர் அவர்களே! (தர்மம் செய்வதற்கான பொருள்) ஏதும் கிடைக்காவிட்டால்...?' எனக் கேட்டனர். அதற்கு நபி(ஸல்), 'ஏதேனும் கைத்தொழில் செய்து, தாமும் அதன் மூலம் பலனடைந்து, தர்மமும் செய்ய வேண்டும்'' என்றனர். தோழர்கள், 'அதுவும் முடியவில்லையாயின்' எனக் கேட்டதற்கு, 'பாதிக்கப்பட்ட தேவையாளிக்கு அவர் உதவ வேண்டும்'' என்று பதிலளித்தார்கள். தோழர்கள், 'அதுவும் இயலாவில்லையாயின்'' என்றதும் 'நற்காரியத்தைச் செய்து தீமையிலிருந்து தம்மைத் தடுத்துக் கொள்ள வேண்டும். இதுவே அவர் செய்யும் தர்மமாகும்!'' எனக் கூறினார்கள்.