2215. 'என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்''
''(முன்காலத்தில்) மூன்று மனிதர்கள் நடந்து சென்றனர். அப்போது மழை பொழிந்தது. அவர்கள் மலையில் உள்ள குகையில் நுழைந்தனர். ஒரு பெரிய பாறை உருண்டு வந்து குகை வாசலை அடைத்தது. அப்போது அவர்கள் தமக்குள், 'நீங்கள் செய்த நல்லறங்களில் மிகச் சிறந்ததைக் கூறி அல்லாஹ்விடம் பிரார்த்தியுங்கள்' என்றனர்.
அவர்களில் ஒருவர், 'இறைவா எனக்கு வயது முதிர்ந்த பெற்றோர் இருந்தனர்; நான் ஆடு மேய்க்க வெளியே சென்றுவிட்டுப் பிறகு வந்து, பால் கறந்து, பால் பாத்திரத்தைப் பெற்றோர்களிடம் கொண்டு வருவேன். அவர்கள் அருந்துவார்கள். பிறகு குழந்தைகளுக்கும் குடும்பத்தாருக்கும் என் மனைவிக்கும் கொடுப்பேன். ஓர் இரவு தாமதமாக வந்தேன். பெற்றோர் உறங்கிவிட்டனர். அவர்களை எழுப்புவதை நான் விரும்பவில்லை. குழந்தை பசியால் என் காலடியில் அழுதனர். விடியும்வரை இதே நிலை நீடித்தது. இறைவா! நான் இதை உன்னுடைய திருப்தியை நாடிச் செய்திருப்பதாக நீ அறிந்தால் நாங்கள் வானததைப் பார்க்கும் வகையில் ஓரிடை வெளியை ஏற்படுத்து' எனக் கூறினார். அவ்வாறு (பாறை விலகி) இடைவெளி உண்டானது.
மற்றொருவர், 'இறைவா! என்னுடைய தந்தையின் உடன் பிறந்தாரின் மகளை எந்த ஆணும் எந்தப் பெண்ணையும் விரும்புவதைவிட அதிகமாக விரும்பினேன் என்பதை நீ அறிவாய். அவள் தனக்கு நூறு தீனார் தரும்வரை தன்னை அடையமுடியாது என்றாள். நான் உழைத்து நூறு தீனாரைத் திரட்டினேன். அவளுடைய இரண்டு கால்களுக்கிடையே (தவறு செய்ய) நான் அமர்ந்தபோது, ‘அல்லாஹ்வை அஞ்சிக்கொள்! முத்திரையை அதற்குரிய (சட்டப்பூர்வ) உரிமை(யான திருமணம்) இல்லாமல் உடைத்துவிடாதே! என்று அவள் கூறினாள். உடனே அவளைவிட்டு நான் எழுந்து விட்டேன். இதை உன்னுடைய திருப்தியை நாடி நான் செய்திருப்பதாக நீ அறிந்தால் இந்தச் சிரமத்தைவிட்டு நீக்கு' எனக் கூறினார். அல்லாஹ் அவர்களைவிட்டும் மூன்றில் இரண்டு மடங்கு (சிரமத்தை) நீக்கினான்.
மற்றொருவர், 'இறைவா நான் மூன்று ஸாவு கேழ்வரகு கூலிக்கு ஒரு வேலையாளை அமர்த்தினேன். கூலியை நான் கொடுத்தபோது அதை அவர் மறுத்துவிட்டார். அந்தக் கேழ்வரகைப் பயிர் செய்தேன். அதன் வருமானத்தில் மாடுகளையும் அதை மேய்ப்பவரையும் விலைக்கு வாங்கினேன். பிறகு அவர் வந்து, அல்லாஹ்வின் அடிமையே! என்னுடைய கூலியைக் கொடு! என்றார். இந்த மாடுகள், அதை மேய்ப்பவர்கள் எல்லாம் உமக்குரியவை; எடுத்துச் செல்லும் என்று கூறினேன். அதற்கவர் என்னைக் கேலி செய்கிறீரா? என்று கேட்டார். நான் உம்மைக் கேலி செய்யவில்லை; இவை உமக்குரியவைதான் எனக் கூறினேன். இறைவா! இதை நான் உன்னுடைய திருப்தியை நாடிச் செய்திருப்பதாக நீ அறிந்தால் எங்களைவிட்டு இந்தச் சிரமத்தை நீக்கு' எனக் கூறினார். முழுமையாகச் சிரமம் விலகியது.''
என இப்னு உமர்(ரலி) அறிவித்தார்.
50. 'நபி(ஸல்) அவர்கள் ஒரு நாள் மக்களுக்கிடையில் இருந்தபோது ஒருவர் அவர்களிடம் வந்து 'ஈமான் என்றால் என்ன?' என்று கேட்டதற்கு 'ஈமான் என்பது அல்லாஹ்வையும் அவனுடைய வானவர்களையும் அவனுடைய சந்திப்பையும் அவனுடைய தூதர்களையும் நீர் நம்புவது. மேலும், மரணத்திற்குப் பின் எழுப்பப்படுவதையும் நீர் நம்புவது. மேலும், மரணத்திற்குப் பின் எழுப்பப்படுவதையும் நீர் நம்புவது' எனக் கூறினார்கள். அடுத்து 'இஸ்லாம் என்றால் என்ன?' என்று கேட்டதற்குவர்கள் கூறினார்கள். 'இஸ்லாம் என்பது அல்லாஹ்வுக்கு (எதனையும்) நீர் இணையாகக் கருதாத நிலையில் அவனை நீர் வணங்குவதும் தொழுகையை நிலை நிறுத்தி வருவதும் கடமையாக்கப்பட்ட ஸகாத்தை நீர் வழங்கி வருவதும் ரமலான் மாதம் நீர் நோன்பு நோற்பதுமாகும்'' என்று கூறினார்கள்.
அடுத்து 'இஹ்ஸான் என்றால் என்ன?' என்று அவர் கேட்டதற்குவர்கள் கூறினார்கள்: '(இஹ்ஸான் என்பது) அல்லாஹ்வை (நேரில்) காண்பதைப் போன்று நீர் வணங்குவதாகும். நீர் அவனைப் பார்க்காவிட்டாலும் நிச்சயமாக அவன் உம்மைப் பார்த்துக் கொண்டே இருக்கிறான் என்றார்கள்' அடுத்து 'மறுமை நாள் எப்போது?' என்று அம்மனிதர் கேட்டதற்கு இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்: 'அதைப் பற்றிக் கேட்கப்பட்டவர் (நான்) அதைப் பற்றிக் கேட்கிற உம்மை விட மிக்க அறிந்தவரல்லர். (வேண்டுமானார்) அதன் (சில) அடையாளங்களைப் பற்றி உமக்குச் சொல்கிறேன். அவை, ஓர் அடிமைப் பெண் தனக்கு எஜமானாகப் போகிறவனை ஈன்றெடுத்தல் மேலும் கறுப்பு நிற ஒட்டகங்களை மேய்த்துக் கொண்டிருந்த மக்கள் உயர்ந்த கட்டிடங்கள் கட்டித் தமக்குள் பெருமையடித்துக் கொள்ளல். ஐந்து விஷயங்களை அல்லாஹ்வைத் தவிர யாரும் அறியமாட்டார்'' என்று கூறிவிட்டு, பின்வரும் வசனத்தை ஓதிக் காட்டினார்கள். 'மறுமை நாளைப் பற்றிய ஞானம் அல்லாஹ்விடமே உள்ளது.'' (திருக்குர்ஆன் 31:34) பின்னர் அம்மனிதர் திரும்பிச் சென்றார். 'அவரை அழைத்து வாருங்கள்'' என்றார்கள். சென்று பார்த்தபோது அவரைக் காணவில்லை. அப்போது, 'இவர்தான் ஜிப்ரீல். மக்களுக்கு அவர்களின் மார்க்கத்தைக் கற்றுக் கொடுக்க வந்திருக்கிறார்' என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்'' என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.
ஜிப்ரீல்(அலை) அவர்களின் கேள்விகளுக்கு நபி(ஸல்) அவர்கள் அளித்த பதில்கள் அனைத்தும் நம்பிக்கையைச் சேர்ந்தது என்று புகாரி ஆகிய நான் கூறுகிறேன்.
3464. ' என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்''
பனூ இஸ்ராயீல் குலத்தாரில் மூன்று பேர்: (ஒருவர்) தொழு நோய் பிடித்தவராகவும் (மற்றொருவர்) வழுக்கைத் தலையராகவும் (இன்னொருவர்) குருடராகவும் இருந்தனர். அல்லாஹ் அவர்களை சோதிக்க நாடி வானவர் ஒருவரை அவர்களிடம் அனுப்பினான். அவர் தொழு நோயாளியிடம் வந்து, 'உனக்கு மிகவும் விருப்பமானது எது?' என்று கேட்க அவர், 'நல்ல நிறம், நல்ல தோல் (தான் எனக்கு மிகவும் விருப்பமானவை.) மக்கள் (என் வியாதியின் காரணத்தால்) என்னை அருவருக்கிறார்கள்'' என்று கூறினார். உடனே அவ்வானவர் அவரை (தம் கரங்களால்) தடவ அந்த வியாதி அவரைவிட்டுச் சென்றுவிட்டது. அவருக்கு அழகிய நிறமும் அழகிய தோலும் தரப்பட்டன. பிறகு அவ்வானவர், 'எச்செல்வம் உங்களுக்கு மிகவும் விருப்பமானது?' என்று கேட்க அவர், 'ஒட்டகம் தான்... (என்றோ) அல்லது மாடு தான்... (எனக்கு மிகவும் விருப்பமானதாகும்)'' என்று பதிலளித்தார். கருத்தரித்த ஒட்டகம் அவருக்கு கொடுக்கப்பட்டது. அவ்வானவர், 'இதில் உனக்கு பரக்கத் (வளர்ச்சி) வழங்கப்படும்'' என்று கூறினார். பிறகு அவ்வானவர் வழுக்கைத் தலையரிடம் சென்றார். 'உனக்கு மிகவும் விருப்பமானது எது?' என்று கேட்டார். அவர், 'அழகான முடியும் இந்த வழுக்கை என்னைவிட்டுப் போய் விடுவதும் தான் (எனக்கு மிகவும் விருப்பமானது.) மக்கள் என்னை அருவருத்து (ஒதுக்கி வைத்து)விட்டார்கள்'' என்று கூறினார். உடனே அவ்வானவர், அவரின் தலையைத் தடவிக் கொடுக்க, அவருக்கு அழகான முடி வழங்கப்பட்டது. அவ்வானவர், 'எச்செல்வம் உனக்கு விருப்பமானது?' என்று கேட்டார். அவர், 'மாடு தான் எனக்கு மிக விருப்பமான செல்வம்'' என்று கூறினார். உடனே வானவர் அந்த வழுக்கைத் தலையருக்கு கர்ப்பமான மாடு ஒன்றைக் கொடுத்து, 'இதில் உனக்கு வளர்ச்சி வழங்கப்படும்'' என்று கூறினார். பிறகு, அவ்வானவர் குருடரிடம் சென்று, 'உனக்கு மிகவும் விருப்பமானது எது?' என்று கேட்டார். அவர், 'அல்லாஹ் என் பார்வையை எனக்குத் திரும்பச் செய்வதும் அதைக் கொண்டு மக்களை நான் பார்ப்பதும் தான் (எனக்கு மிகவும் விருப்பமானது)'' என்று பதிலளித்தார். அவ்வானவர் அவரைத் தடவிட, அல்லாஹ் அவருக்கு அவரின் பார்வையைத் திருப்பித் தந்தான். அவ்வானவர், 'உனக்கு எச்செல்வம் விருப்பமானது?' என்று கேட்க அவர், 'ஆடு தான் (எனக்கு மிகவும் விருப்பமானது)'' என்று பதில் அளித்தார். உடனே, அவ்வானவர் அவருக்குக் கருவுற்ற ஆடு ஒன்றைக் கொடுத்தார். அந்த இருவரும் (-ஒட்டகம் வழங்கப்பட்டவரும் மாடு வழங்கப்பட்டவரும்-) நிறைய குட்டிகள் ஈந்திடப் பெற்றனர். இவர் (-ஆடு வழங்கப்பட்டவர்-) நிறையக் குட்டிகள் பெற்றார். தொழு நோயாளியாய் இருந்தவருக்கு ஒரு கணவாய் நிரம்ப ஒட்டகங்களும் வழுக்கைத் தலையராய் இருந்தவருக்கு ஒரு கணவாய் நிரம்ப மாடுகளும், குருடராக இருந்தவருக்கு ஒரு கணவாய் நிரம்ப ஆடுகளும் (பெருமளவில்) கிடைத்தன. பிறகு அவ்வானவர் தொழு நோயாளியாய் இருந்தவரிடம் தம் பழைய தோற்றத்திலும் அமைப்பிலும் சென்று, 'நான் ஓர் ஏழை மனிதன். என் பயணத்தில் என் வாழ்வாதாரம் அறுபட்டுவிட்டது. (செலவுக்குப் பணம் தீர்ந்து போய்விட்டது) இன்று உதவிக்கான வழி வகை (எனக்கு) அல்லாஹ்வையும் பிறகு உன்னையும் தவிர வேறெவருமில்லை. உனக்கு அழகிய நிறத்தையும் அழகிய தோலையும் செல்வத்தையும் கொடுத்த (இறை) வனின் பெயரால் உன்னிடம் ஓர் ஒட்டகத்தைக் கேட்கிறேன். அதன் வாயிலாகப் பயணத்தில் நான் போக வேண்டிய இடத்தைச் சென்றடைவேன்'' என்று கூறினார். அதற்கு அந்த மனிதர், '(எனக்குக்) கடமைகள் நிறைய இருக்கின்றன. (எனவே, என்னால் நீ கேட்டதைத் தர முடியாது)'' என்றார். உடனே அவ்வானவர், 'உன்னை எனக்குத் தெரியும் போலுள்ளதே. மக்கள் அருவருக்கிற தொழு நோயாளியாக நீ இருக்கவில்லையா? நீ ஏழையாக இருக்கவில்லையா? பிறகு அல்லாஹ் உனக்கு (செல்வத்தைக்) கொடுத்தான் அல்லவா?' என்று கேட்டதற்கு அவன், '(இல்லையே; நான் இந்த அழகான நிறத்தையும் தோலையும் மற்றும் திரண்ட இச்செல்வத்தையும்) வாழையடி வாழையாக (என் முன்னோர்களிடமிருந்து) வாரிசாகப் பெற்றேன்'' என்று பதிலளித்தான். உடனே அவ்வானவர், 'நீ (இக்கூற்றில்) பொய்யனாயிருந்தால் நீ முன்பு எப்படி இருந்தாயோ அப்படியே உன்னை அல்லாஹ் மாற்றி விடட்டும்'' என்று கூறினார். பிறகு வழுக்கைத் தலையாரிடம் தம் (பழைய) தோற்றத்திலும் அமைப்பிலும் வந்து முன்பு இவரிடம் (தொழு நோயாளியிடம்) சொன்னதைப் போன்றே கூறினார். அவனும் முதலாமவன் அவருக்கு பதிலளித்தைப் போன்றே பதிலளித்தான். வானவரும், 'நீ (உன் கூற்றில்) பொய்யனாயிருந்தால் நீ முன்பு எப்படியிருந்தாயோ அப்படியே உன்னை அல்லாஹ் மாற்றி விடட்டும்'' என்று கூறினார். பிறகு (இறுதியாக), குருடரிடம் தம் தோற்றத்திலும் அமைப்பிலும் வந்து, 'நான் ஓர் ஏழை மனிதன்; வழிப்போக்கன். என் வாழ்வாதாரம் (வழிச் செலவுக்கான என் வாழ்வதாதாரம் (வழிச் செலவுக்கான பணம்) தீர்ந்து போய்விட்டது. இன்று உதவிக்கான வழிவகை (எனக்கு) அல்லாஹ்வையும், பிறகு உன்னையும் தவிர வேறெவருமில்லை. என் பயணத்தில் என் தேவையைத் தீர்த்துக் கொள்ள உதவும் ஆடு ஒன்றைத் தரும்படி உனக்குப் பார்வையைத் திரும்பத் தந்தவன் பெயரால் கேட்கிறேன்'' என்று சொன்னார். (குருடராயிருந்து பார்வை பெற்ற) அந்த மனிதர் வானவரிடம், 'நான் குருடனாகத் தான் இருந்தேன். அல்லாஹ் என் பார்வையைத் திருப்பித் தந்தான். நான் ஏழையாக இருந்தேன்; என்னைச் சொல்வந்தனாக்கினான். எனவே, நீ விரும்புவதை எடுத்துக்கொள். அல்லாஹ்வின் மீதாணையாக! நான் இன்று நீ எடுக்கிற எந்தப் பொருளையும் திருப்பித் தரும்படி அல்லாஹ்விற்காக சிரமப்படுத்த மாட்டேன்'' என்று கூறினார். உடனே அவ்வானவர், 'உன் செல்வத்தை நீயே வைத்துக் கொள். இது உங்களைச் சோதிப்பதற்காகத் தான். அல்லாஹ் உன்னைக் குறித்து திருப்தியடைந்தான். உன் இரண்டு தோழர்கள் (தொழு நோயாளி) மற்றும் (வழுக்கைத் தலையன்) மீது கோபமுற்றான்'' என்று கூறினார்.
என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.