5705. ஆமிர் அஷ்ஷஅபீ (ரஹ்) கூறினார்
இம்ரான் இப்னு ஹுஸைன்(ரலி) 'கண்ணேறு, அல்லது விஷக்கடி தவிர வேறெதற்காகவும் ஓதிப்பார்த்த(லி)ல் (சிறப்பு) கிடையாது'' என்று கூறினார்கள்.
(அறிவிப்பாளர் ஹுஸைன் இப்னு அப்திர் ரஹ்மான்(ரஹ்) கூறினார்:)
நான் இதை ஸயீத் இப்னு ஜுபைர்(ரஹ்) அவர்களிடம் எடுத்துரைத்தேன். அப்போது அவர்கள் தமக்கு இப்னு அப்பாஸ்(ரலி) (பின்வருமாறு) அறிவித்தார்கள். என்று கூறினார்கள்.
(ஒரு நாள்) இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்: (மிஅராஜ் எனும் விண்ணுலகப் பயணத்தின்போது) எனக்குப் பல சமுதாயத்தார் எடுத்துக் காட்டப்பட்டனர். அப்போது இறைத்தூதர்களில் ஓரிருவருடன் (அவர்களின் சமுதாயத்தாரில் பத்துக்குட்பட்ட) ஒரு சிறு கூட்டமே கடந்து செல்லலாயினர். ஓர் இறைத்தூதர் தம்முடன் ஒருவருமில்லாத நிலையில் கடந்து சென்றார். பின்னர் எனக்கு ஒரு பெரும் கூட்டம் காட்டப்பட்டது. நான், 'இது எந்தச் சமுதாயம்? இது என் சமுதாயமா?' என்று கேட்டேன். அப்போது, 'அல்ல. இது (இறைத் தூதர்) மூஸாவும் அவரின் சமுதாயமும்'' என்று எனக்குச் சொல்லப்பட்டது. 28 அப்போது 'அடிவானத்தைப் பாருங்கள்'' என்று என்னிடம் கூறப்பட்டது. அங்கு அடி வானத்தையே அடைந்திருந்த ஏராளமான மக்கள் திரளை பார்த்தேன். பிறகு என்னிடம், 'அடிவானங்களில் இங்கும் இங்கும் பாருங்கள்'' எனச் சொல்லப்பட்டது. அப்போது நான் அடிவானங்களை அடைத்திருந்த ஏராளமான மக்கள் திரளைக் கண்டேன். 'இது உங்கள் சமுதாயம். விசாரணையின்றி சொர்க்கம் செல்லும் எழுபதாயிரம் பேரும் இவர்களில் அடங்குவர்'' என்று எனக்குச் சொல்லப்பட்டது.
(விசாரணையின்றி சொர்க்கம் செல்லும் அந்த எழுபதாயிரம் பேர் யார் என்பதை) தோழர்களுக்கு விளக்காமலேயே நபி(ஸல்) அவர்கள் (தம் வீட்டுக்குள்) நுழைந்துவிட்டார்கள். (அது தொடர்பாக) மக்கள் விவாதிக்கத் தொடங்கினார்கள். 'நாம் தாம் அவர்கள். (ஏனெனில்,) நாமே அல்லாஹ்வை நம்பிக்கை கொண்டு அவனுடைய தூதரைப் பின்பற்றினோம்; அல்லது நம் பிள்ளைகள் தாம் அவர்கள். (ஏனெனில்) அவர்கள் இஸ்லாத்தில் பிறந்தவர்கள். நாமோ அறியாமைக் காலத்தில் பிறந்தோம்'' என்று கூறினார்கள். இச்செய்தி நபி(ஸல்) அவர்களுக்கு எட்டியது. எனவே, அவர்கள் புறப்பட்டு வந்து, '(விசாரணையின்றி சொர்க்கம் செல்லவுள்ள) அவர்கள் யாரெனில், அவர்கள் ஓதிப்பார்க்கமாட்டார்கள்; பறவைகளை வைத்து சகுனம் பார்க்க மாட்டார்கள்; (நோய்க்காக) சூடிட்டுக் கொள்ளமாட்டார்கள். தம் இறைவனையே சார்ந்திருப்பார்கள்'' என்று கூறினார்கள். அப்போது உக்காஷா இப்னு மிஹ்ஸன்(ரலி) எழுந்து, 'அவர்களில் நானும் ஒருவனா? இறைத்தூதர் அவர்களே!'' என்று கேட்க, நபி(ஸல்) அவர்கள், 'ஆம்'' என்று பதிலளித்தார்கள். மற்றொருவர் எழுந்து நின்று, 'அவர்களில் நானும் ஒருவனா?' என்று கேட்க, நபி(ஸல்) அவர்கள் 'இவ்விஷயத்தில் உக்காஷா உம்மை முந்திக்கொண்டுவிட்டார்'' என்று கூறினார்கள்.
6412. ' என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்''
மனிதர்களில் அதிகமானோர் இரண்டு அருட் செல்வங்களின் விஷயத்தில் (ஏமாற்றப்பட்டு) இழப்புக்குள்ளாகி விடுகின்றனர். 1. ஆரோக்கியம். 2. ஓய்வு 2
என இப்னு அப்பாஸ்(ரலி) அறிவித்தார்.
இதே ஹதீஸ் இப்னு அப்பாஸ்(ரலி) அவர்களிடமிருந்தே மற்றோர் அறிவிப்பாளர் தொடர் வழியாகவும் வந்துள்ளது.
2790. அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.
''அல்லாஹ்வின் மீதும் அவனுடைய தூதரின் மீதும் நம்பிக்கை கொண்டு, தொழுகையை நிலை நிறுத்தி, ரமளானில் நோன்பும் நோற்ற மனிதரை சொர்க்கத்தில் புகச் செய்வது அல்லாஹ்வின் மீது கடமையாகிவிட்டது; அவர் இறைவழியில் அறப்போர் புரிந்தாலும் சரி; அல்லது அவர் பறந்த பூமியில் உட்கார்ந்து கொண்டாலும் சரி'' என்று கூறினார்கள். 'இறைத்தூதர் அவர்களே! நாங்கள் மக்களுக்கு இந்த நற்செய்தியை அறிவிக்கலாமா?' என்று (நபித் தோழர்கள்) கேட்டதற்கு அவர்கள், 'சொர்க்கத்தில் நூறு படித்தரங்கள் உள்ளன. அவற்றை அல்லாஹ்? தன் பாதையில் அறப்போர் புரிபவர்களுக்காகத் தயார்படுத்தி வைத்துள்ளான். இரண்டு படித்தரங்களுக்கிடையே வானத்திற்கும் பூமிக்கும் இடையிலுள்ளது போன்ற தொலைவு உள்ளது. நீங்கள் அல்லாஹ்விடம் கேட்டால், ஃபிர்தவ்ஸ் என்னும் (சொர்க்கத்தின்) படித்தரத்தையே கேளுங்கள்; ஏனெனில், அதுவே சொர்க்கத்தின் மிகச் சிறந்த படித்தரமும் மிக உயர்ந்த படித்தரமும் ஆகும்'' என்று கூறினார்கள். (அறிவிப்பாளரான யஹ்யா இப்னு சாலிஹ்(ரஹ்) கூறினார்:
மேலும், 'அதற்கு மேலே கருணையாள(னான இறைவ)னின் அர்ஷு - சிம்மாசனம் இருக்கிறது. இன்னும், அதிலிருந்தே சொர்க்கத்தின் ஆறுகள் பாய்கின்றன'' என்றும் இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள் எனக் கருதுகிறேன்.
மற்றோர் அறிவிப்பாளரான முஹம்மத் இப்னு ஃபுலைஹ்(ரஹ்), தம் தந்தையிடமிருந்து, 'அதற்கு மேலே ரஹ்மானின் அர்ஷு இருக்கிறது'' என்று (இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள் என சந்தேகத்தொனியின்றி) அறிவித்தார்.
6514 ' என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்''
இறந்தவரை மூன்று பொருள்கள் பின்தொடர்ந்து செல்கின்றன. (அவற்றில்) இரண்டு திரும்பிவிடுகின்றன. ஒன்று மட்டுமே அவருடன் தங்கிவிடுகிறது. அவரை அவரின் குடும்பமும் செல்வமும் அவர் செய்த செயல்களும் பின்தொடர்ந்து செல்கின்றன. (அவற்றில்) அவரின் குடும்பமும் செல்வமும் திரும்பிவிடுகின்றன. அவரின் செயல்கள் மட்டுமே அவருடன் தங்கிவிடும்.
என அனஸ் இப்னு மாலிக்(ரலி) அறிவித்தார்.
2996. ' என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்''
அடியான் ஆரோக்கியமானவனாய், ஊரிலிருக்கும்போது செய்யும் நற்செயல்களுக்குக் கிடைப்பது போன்ற (அதே) நற்பலன் அவன் நோயுற்று விடும்போது அல்லது பயணத்தில் இருக்கும்போது (அவன் பாவம் எதுவும் செய்யாமலிருக்கும் வரை) அவனுக்கு எழுதப்படும்.
இதை அறிவித்த அபூ புர்தா(ரஹ்), 'இதைப் பலமுறை (என் தந்தை) அபூ மூஸா அஷ்அரீ(ரலி) சொல்ல நான் செவியுற்றிருக்கிறேன்'' என்று தம்முடன் பயணத்தில் நோன்பு நோற்றுக் கொண்டு வந்த யஸீத் இப்னு அபீ கப்ஷா(ரஹ்) அவர்களிடம் கூறினார்கள்.
1610. அஸ்லம் அறிவித்தார்.
ஹஜருல் அஸ்வத் (எனும் கருப்பு நிறக்) கல்லை உமர்(ரலி) முத்தமிடுவதை பார்த்தேன். அப்பொழுது அவர்கள், 'நபி(ஸல்) அவர்கள் உன்னை முத்தமிடுவதை நான் கண்டிராவிட்டால், நான் உன்னை முத்தமிட்டிருக்க மாட்டேன்!'' என்று கூறினார்கள்.
2493. ' என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்''
அல்லாஹ்வின் (சட்ட) வரம்புகளுக்குக் கட்டுப்பட்டு நடப்பவனுக்கும் அவற்றை மீறி நடப்பவனுக்கும் உவமை - ஒரு சமுதாயத்தைப் போன்றதாகும். அவர்கள் கப்பலில் (தங்களுக்கு இடம் பிடிப்பதற்காகச்) சீட்டுக் குலுக்கிப் போட்டார்கள். (அதன்படி) அவர்களில் சிலருக்குக் கப்பலின் மேல் தளத்திலும் சிலருக்குக் கீழ்த் தளத்தில் இருந்தவர்களுக்குத் தண்ணீர் தேவைப்பட்டபோது (அதைக் கொண்டு வர) அவர்கள் மேல் தளத்தில் இருப்பவர்களைக் கடந்து செல்ல வேண்டியிருந்தது. (அதனால் மேலே இருந்தவர்களுக்குச் சிரமம் ஏற்பட்டது). அப்போது, கீழ்த் தளத்தில் இருந்தவர்கள் (தமக்குள்) 'நாம் (தண்ணீருக்காக) நம்முடைய பங்கில் (கீழ்த் தளத்தில்) ஓட்டையிட்டுக் கொள்வோம்; நமக்கு மேலே இருப்பவர்களைத் தொந்தரவு செய்யாமலிருப்போம்' என்று பேசிக் கொண்டார்கள். அவர்கள் விரும்பியபடி செய்து கொள்ள அவர்களை மேல் தளத்தில் உள்ளவர்கள் விட்டுவிட்டால் (கப்பலில் இருப்பவர்கள்) அனைவரும் அழிந்து போவார்கள். (ஓட்டையிட விடாமல்) அவர்களின் கரத்தைப் பிடித்துக் கொள்வார்களாயின் அவர்களும் தப்பிப் பிழைத்துக் கொள்வார்கள். (அவர்களுடன் மற்ற) அனைவரும் தப்பிப் பிழைத்துக் கொள்வார்கள்.
என நுஃமான் இப்னு பஷீர்(ரலி) அறிவித்தார்.
6011 'என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்''
ஒருவருக்கொருவர் கருணைபுரிவதிலும், அன்பு செலுத்துவதிலும், இரக்கம் காட்டுவதிலும் (உண்மையான) இறைநம்பிக்கையாளர்களை ஓர் உடலைப் போன்று நீ காண்பாய். (உடலின்) ஓர் உறுப்பு சுகவீனமடைந்தால் அதனுடன் மற்ற உறுப்புகளும் (சேர்ந்து கொண்டு) உறங்காமல் விழித்துக் கொண்டிருக்கின்றன. அத்துடன் (உடல் முழுதும்) காய்ச்சலும் கண்டுவிடுகிறது.
இதை நுஅமான் இப்னு பஷீர்(ரலி) அறிவித்தார்.
6026 அபூ மூஸா அல்அஷ்அரீ(ரலி) அறிவித்தார்
''இறைநம்பிக்கையாளர்கள் ஒருவருக்கொருவர் (ஒத்துழைக்கும் விஷயத்தில்) ஒரு கட்டடத்தைப் போன்றவர்கள் ஆவர். கட்டடத்தின் ஒரு பகுதி மற்றொரு பகுதிக்கு வலு சேர்க்கிறது' என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள். பிறகு தம் கை விரல்களை ஒன்றோடொன்று கோத்துக் காண்பித்தார்கள்.42
1966. அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.
''தொடர் நோன்பு வைப்பது குறித்து உங்களை எச்சரிக்கிறேன்'' என்று நபி(ஸல்) அவர்கள் இரண்டு முறை கூறினார்கள். 'நீங்கள் தொடர் நோன்பு நோற்கிறீர்களே?' என்று அவர்களிடம் கேட்கப்பட்டது. அதற்கவர்கள், 'என் இறைவன் எனக்கு உண்ணருவும் பருகவும் தரக்கூடிய நிலையில் நான் இரவைக் கழிக்கிறேன்; எனவே நீங்கள் அமல்களில் உங்கள் சக்திக்கு உட்பட்டுச் சிரமம் எடுத்துக் கொள்ளுங்கள்'' என்று விடையளித்தார்கள்.
2442. ' என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்''
ஒரு முஸ்லிம் மற்றொரு முஸ்லிமின் சகோதரன் ஆவான். அவனுக்கு அநீதியிழைக்கவும் மாட்டான்; அவனை (பிறரின் அநீதிக்கு ஆளாகும்படி) கைவிட்டு விடவும் மாட்டான். தன் சகோதரனின் தேவையை நிறைவு செய்வதில் ஈடுபட்டிருக்கிறவரின் தேவையை நிறைவு செய்வதில் அல்லாஹ்வும் ஈடுபட்டிருக்கிறான். ஒரு முஸ்லிமின் ஒரு துன்பத்தை நீக்குகிறவரைவிட்டு அல்லாஹ்வும் மறுமை நாளின் துன்பங்களில் ஒரு துன்பத்தை நீக்குகிறான். ஒரு முஸ்லிமின் குறைகளை மறைக்கிறவரின் குறைகளை மறுமை நாளில் அல்லாஹ்வும் மறைக்கின்றன.
என அப்துல்லாஹ் இப்னு உமர்(ரலி) அறிவித்தார்.
1142. இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்.
''உங்களில் ஒருவர் உறங்கும்போது பிடரியில் ஷைத்தான் மூன்று முடிச்சுகளைப் போடுகிறான். ஒவ்வொரு முடிச்சின் போதும் இரவு இன்னும் இருக்கிறது, உறங்கு என்று கூறுகிறான். அவர் விழித்து அல்லாஹ்வை நினைவு கூர்ந்தால் ஒரு முடிச்சு அவிழ்கிறது. அவர் உளுச் செய்தால் இன்னொரு முடிச்சு அவிழ்கிறது. அவர் தொழுதால் மற்றொரு முடிச்சும் அவிழ்கிறது. அவர் மகிழ்வுடனும் மன அமைதியுடனும் காலைப் பொழுதை அடைகிறார். இல்லையெனில் அமைதியற்றவராக, சோம்பல் நிறைந்தவராகக் காலைப் பொழுதை அடைகிறார்'.
என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.