மாலையின் வண்ணம்
இலைகளின் ஊடே சூரியத்துளி
விளக்குச்சுடரென ஒளிரும் ஒளி
எங்கும் பரவிய ம்ஞ்சள் வண்ணம்
மாலையாம் ஓவியனின் கைவண்ணம்
தங்கத்தட்டென கதிரவன் ஒளிர
சிவந்த மலர்களாம் மேகங்கள் சூழ
காணும் காட்சி மாறி ஆதவன் மறைய
விரிந்து சூழ்ந்ததோர் கருநீலவண்ணம்
வெண்ணை விழுங்கிய கண்ணன முகமோ
தவழ்ந்த மதி அவன் அழகு முறுவலோ
மின்னும் தாரகை தாமரைக்கண்களோ
என என் மனம் மயங்குவதென்ன மாயமோ
4.இயற்கைச்சூழல்
புத்தம் புதிய மலரின் நறுமணம்
கவர்ந்திழுக்கும் வணடைத்தேனுண்ண
தென்றலில் தவழ்ந்து வரும் வண்டுகளின் ரீங்காரம்
கானக்குயிலிசையில் இரண்டறக்கலந்ததே
வீசும் காற்றில் மலர்ந்து சிரிக்கும்
மலர்களின் அழகு மனதைக்கவர
ஓடித்திரிந்து விளையாடும் அணில்கள்
நம்பிக்கை எனும் உணர்வைத்தூண்ட
இளம்தளிர்கள் அசைந்து நடனமாட
பறவைகள் பண் பாடி வானெங்கும் திரிய
இயற்கை மகிழ்ந்து புன்னகை பூக்க
மனிதன் மட்டும் மகிழ்வைத்தொலைத்ததேன்?
கற்பனை உலகு
கற்பனை உலகினில் ஏக்கம் ஒன்றில்லை
பிரிவுத்துயரம் இல்லை தொலையாத தூரம் இல்லை
எண்ணங்களின் அரியாசனம் அமர்ந்த உருவம்
என்றும் என்னருகில் என்ற பெருமிதம்
உள்ளத்தின் உள்ளே உள்ளவனைக்காண
வெளியில் அலைவது பேதமை அன்றோ
எப்போதும் முகிழ்க்கும் மகிழ்வுணர்வொன்றே
அவன் அகத்தில் உறைவதற்கோர் அடையாளம்
எழுதாதகவிதை
அலைகடலில் அலை எழும்பி பொங்குவதில் ஓர் சுகம்
இதமான எண்ணங்களினின்று பெருகிவரும் இன்பம்
சுகமான சுமைகளை தாங்குவது அன்பு மனம்
எழுதாத கவிதையினை பாடுவதும் பரவசம்
வடிக்காத ஓவியத்தைக்கண்டால் கலி தீருமே
கேட்காத ஒலியினை கேட்க விழையும் நெஞ்சம்
சொல்லாதசொல்லின் சுவையை உணர்ந்த அனுபவம்
சொல்லில் அடங்காப்பெருமையுடைத்தன்றோ
இலக்கிய இன்பம்
இலக்கியச்சோலையின் எழில் கண்டு
உலவிடும் இன்பம் சொல்லவும் அரிதே
மொழி எதுவாயினும் கற்பனை ஒன்றே
கவிஞ்னின் உள்ளம் கடவுளின் இல்லம்
அறிஞன் ஒரு சிற்பி
கல்லைச்செதுக்கினால் சிற்பம்
எண்ணங்களை செதுக்கினால் இன்பம்
கல்லினுள் இருப்பது அழகு
அதை வெளிப்பட செய்பவன் சிற்பி
உள்ளத்தில் இருப்பது தெய்வம்
அதை தெளிவாய் காண்பவன் அறிஞன்
மனம்
1.மனம் படுத்தும் பாடு
நடப்பதெல்லாம் நாராயணன் செயல்
நடவாதது நம் செயல் என்பர்
ஆயினும் நடக்குமொ என்றேங்கும்
மனத்தைத்தேற்றுவது எங்ஙனம்?
பற்றுக பற்றற்றான் பற்றினை
மற்ற பற்று விடற்கு என்ற கூற்று
உண்மை ஆயினும் பேதை உள்ளம்
ஒன்றை மட்டும் பற்றி அல்லலுற்றதே!
2.மாயவன் லீலை
உன்னை மட்டுமே நினைக்கும் உள்ளம்
உன் உருவையே காணும் கண்கள்
உன் குரல் மட்டுமே கேட்கும் செவிகள்
உன் நாமமே நவிலும் நாவும் கேட்டேன்
உன் மாயையுள் திரும்பவும் சிக்க வைத்தாய்
உண்மையை அறியும் நாள் என்றோ?
உலகளந்த உத்தமனே எல்லாம் உன் லீலை
உன் அலகிலா விளையாட்டை எங்ஙனம் அறிவோம்!
3.மனமே கேள்
அவாவினை ஒழித்து அவன் செயல் என்றிரு
நடவாதென நினைத்ததும் நடக்கலாம்
எவ்வாறு நடப்பினும் நன்மையே என்க்கருதி
மாதவன் கழலிணை நினை என் மனமே.
4.மாயத்திரை விலகல்
கணம்தனில் மாயத்திரை விலகக்கண்டாய்
கண்ணனே சகலமும் என்த்தெளிந்தாய்
உள்ளது உள்ளபடி விளஙகக்கண்டாய்
எல்லாம் அவன் செயல் எனத்துணிந்தாய்
உய்ந்தாய் மனமே உய்ர்குறிக்கோளாய்
உயர்ந்த அன்பையே கொண்டு எங்கும்
உருவமாய் நிற்கும் உத்தமன் புகழை
உணர்ந்து என்றும் பெறுக இன்பமே.
5.நம்பிக்கை
தீவினை என எண்ணி வருந்தல் வேண்டா
கருமம் தொலைகின்ற்தென எண்ணுக
தீயதிலும் நன்மை செய்யும் மாயவன் கருணை
நம்பினார் கெடுவதில்லை நான்குமறைதீர்ப்பு
6.மனம் அடங்க
பாரதப்போர் நித்தம் நித்தம் நிகழ்வது
நல்ல, தீய உணர்வுகளிடை நம் மனத்தினுள்
தீயவை பலவாயினும் மாதவன் உதவியால்
நற்பண்பு வெல்லும் எனக்கூறும் காவியம்
இன்பமும் துன்பமும் இயற்கை அன்று
தன்னிலை அறியாத மனதின் மயக்கம்
அன்புடன் மனதை நல்வழிப்படுத்தினால்
எந்நிலை வரினும் இனபுறலாமே
பொறிகளின் பின்னெ மனதை ஓடவிட்டு
தறி கெட்டு ஓடுதென்று அயர்வதில் பயனென்?
அறிவினால் கட்டுண்ட மனமெனும் மதயானை
தறியி்ல் கட்டிய கரியென ஏவலைச்செய்யும்
7.மனம் என்னும் பறவை
எணண்ங்களாம் சிறகுகள் விரித்து
வானில் பறந்திடும் மனம் என்னும் பறவை
கண்ணன் என்ற கார்முகிலைக்கண்டு
தொகை விரித்தாடும் மயில் ஆனதம்மா
ஆன்மீகம்
ஆன்மீகம் என்ற ந்தியின் ஓட்டம்
சீராகச்செல்ல அமைந்த கரைகள்
ஞானம் பக்தி என இரண்டாகும்
கரை உடைந்து வெள்ளம் வராமல்
தடுக்கும் அணையே ஆசாரியன்
பக்தி மட்டும் இருக்க கரை புரளும் வெள்ளம்
ஞானம் மட்டுமே இருக்கத்தடைபடும் வேகம்
இருகரையும் சீராயின் நதி கடலைச்சேரும்
இறைவன் அருள்
1.இறைவனைக்காணல்
ஒருவரில் சிலர்காண்பார்
இறைவனின் உண்மை வடிவம்
பளிங்குபோல் உள்ளத்தில் தெய்வம்
பால் போல் விளங்குமன்றோ
எல்லோருள்ளும் உறையும் இறைவனை
எல்லோரும் அறிவது அறிது
ஒருவரிடமேனும் அவனைக்காண்பது
கிடைத்தற்கரிய பேறன்றோ.!
2. நான், எனது, அவன்
நான் எனது என்பது
பற்றின் பற்றுக்கோடு
எல்லாம் அவன் என்பது
அப்பற்றினை அழிக்கும் கோடு.
நிலை அற்ற வாழ்வில் நிலையானதென்?
இன்று இங்கு நாளை எங்கோ
எங்கு சென்றாலும் உடன் வரும்
இறைவன் அருள் இருக்க பயமேன்?
இடுக்கண் வருங்கால் நகுக அவை
இறைவன் செய்யும் அறுவை சிகிச்சை
அதை நம்பித்துணிந்து எடுக்கும் முடிவே
இதற்கு மனிதன் செய்யும் அவசர சிகிச்சை
எல்லாம் உன் செயல் என் செயல் ஏதுமில்லை
ஒன்றுமறியாப்பாமரமென நின்ற எமை
வழிகாட்டி நடத்திச்சென்றாய்
நின் அருள் இருக்க குறைவேது
எண்ணம் யாவும் நின் திருவுள்ளம்
செய்கை யாவும் நின் கட்டளை
சொல்லுவதெல்லாம் நின் வாய்மொழி
என்ற நிலை எனக்குத்தருவாய்
ஆண்டவன் சோதிப்பது நல்லிதயம் படைத்தோரை
ஆனால் அவன் தண்டிப்பது தீய உள்ளம் கொண்டோரை
3.இறையருள் என்னும் ஊற்று
கிடைத்தற்கறிய பெரிய பேறு
கிடைத்தவரை நிறைவுறு மனமே
அடைந்தது சில் துளிகள் ஆயினும்
அது அடைதற்கறிய அமுதமன்றோ
இறைவன் திருவருள் நிரம்பப்பெறின்
இறைக்க இறைக்க ஊறும் ஊற்றென
குறையாத ந்ன்மை வந்து சேரும்
நிறைந்த அன்பு மனம் ஒன்றிருந்தால்
கண்ணன் என் தெய்வம்
1. கண்ணனைக்காண்பதெப்போது
கண்களால் உன் உருவம் மன்தில் வரைந்தேன்
பண்ணிசைத்து உன் நினவில் அமிழ்ந்தேன்
விண்மீன்களிடையே உன்னைத்தேடினேன்
கண்ணா உன்னை நான் காண்பதெப்போது?
கருவுடை மேகங்களிடை மறைந்தாயோ
தருவடர்ந்த வனத்தினிடை ஒளிந்தாயோ
இருண்ட கு்கையெனும் மன்த்தினுள் இருந்தாயோ
அருவமாய் உலகினில் கரந்து உறைந்தாயோ
எங்கென்று தேடுவேன் யாரிடம் போய் உரைப்பேன்
பித்தம் பிடித்ததென்று பிறரும் சிரியாரோ
ஒளிந்து விளையாடவோ அன்றெனை வயப்படுத்தி
மயக்கமுறச்செய்து இன்று மறைந்தாய் நீ?
கண்ணா உன்னை உள்ளபடி காண
இயலாது என்னால் இம்மண்ணுலகில்
காணும் உருவமே உனதாய் தோன்றும்
மாயம் உந்தன் திருவுள்ளமோ!
2. நினைவெல்லாம் நாராயணன்
நாவினில் நாராயணன் நாமம்
மனதினில் மாதவன் நினைவு
கண்களில் கேசவன் உருவம்
செவிகளில் ஸ்ரீதரன் குழலிசை
சொல் செயல் எண்ணம் யாவுமே
அரிமுகன் அச்சுதன் தனக்கென
அவன் வயப்பட்டு நிற்றல் அன்றி
வேறொன்றும் வேண்டேன் பராபரமே
3.ஒன்றே பலவாகும்
வெண்ணிலா என்றும் ஒன்றே
அதன் பிரதிபிம்பம் பலவேயாம்
பிரதிபலித்த பொருளின் குணம்
நிலவிற்கு ஒட்டுமோ
கண்ணன் ஒருவனே ஆயினும்
பலவாகி நின்றான் பாவையர் மனதில்
கண்ணன் எனக்கே சொந்தம் என
எண்ணிப்பேதையர் மயங்கினரே
4.கரியவன் கருணை
ஏறு போல் நடையினால் உன்
வீரம் விளங்கக்கண்டோம்
சீரிய சிங்கம் போல் உன்
மேன்மை துலங்கவந்தாய்
வேழமென உன்னைக்கம்பன்
கூறினான் கவிநயத்துடன்
கைத்தலம் பற்றிய உன்னை
களிறெனக்கண்டாள் கோதை
மென்மையும் வலிமையும் சேர்ந்த
கரியவன் உன் கருணை ஒன்றே
அடியவர் கரம் பற்றித்தூக்கி
உயரிய இடம் சேர்க்கும் அன்றோ
மற்றவை
1. நேரத்தின் அருமை
நேரம் காலம் இன்றி வருவோர் சிலர்
நேரத்தைப் பேசிப்பேசியே வீணடிப்பர்
நேரத்தின் அருமை தெரியாத மூடர்
நேரில் வந்திடினென்னதான் செய்வது ?
அரிதாம் நேரம் கிடைப்பதெனினும்
அரியதோர் நட்பு மிகும் மேலோர்
அளிக்கும் சில மணித்துளிகள்
அரியவாம் முத்துக்களை ஒக்கும்
2. மேடை ஏறும் ஆசை
மேடையில் பாடுவதொன்றே சங்கீதம் அல்ல
இசை வல்லுநர் மட்டுமே மேடைக்கிசைந்தவர்
இறைவனைப்பாடும் இசை எங்கும் இனியது
ஏன் இந்த மாயை யாவரும் மயங்குவதேன்?
தன் திறன் உணர்ந்தவன் தனிப்பெரும் கலைஞன்
இறைவன் ரசிப்பான் பக்தி ஓங்கிய இசையை
தன் குறை அறியாமல் பலர் கேட்கப்பாடவேண்டும்
என ஆசை வயப்பட்டு மேடையேறுவதறியாமை
3.எதிர்பாராத நற்செய்தி
மேகம் கருத்து வானம் இருண்டால்
மழை பெய்து மண் குளிர்வதியற்கை
அவாவென்னும் சூரியனை தடை எனும் மேகம்
மறைத்தாலும் மண்போல் பொறுத்த மனதில்
முளைத்த பயிர் போல் மகிழ்வைத்தரும்
நாமுவக்கும் ந்ற்செய்தி வந்தடைந்திடுமே
4.நட்பின் பெருமை
உயரிய நட்பு உயிரினும் மேலாம்
காரிய நட்பு கவைக்குதவாது;
ஒத்த மனமுடையோர் நட்பு
பூத்துக்குலுங்கும் மலர்க்கொடி;
தூய உள்ளங்களைச்சார்ந்து
நித்தம் படரும் இன்ப எழில்.
5.மதங்கள் பல ; ஈசன் ஒருவனே
மதங்கள் மதம் கொள்வதற்கல்ல
இதம் தருவதற்கு இன்னலுற்றோற்கு
தீதகற்றி மனிதநேயம் வளர்ப்பீர்
நாதன் ஒருவனே பெயர், உரு பலவாம்
தாயர் பலராயினும் தாய்மை ஒன்றே
சேய்கள் கணக்கில; அன்பு ஒன்றே
தாயாகித்தந்தையாகி எல்லாமாய் ஆன
மெய்ப்பொருள் ஒன்றே அதனைத்தொழுமின்.
6.தனம் தரும் கல்வி
தனம் தரும் கல்வியையே நாடும் இயல்பை
இனம் காட்டி இளைய தலைமுறைக்குத்தந்து
மன்ம் குறுகி வளமான வாழ்வே குறியாய்
தினம் ஓடி அயர்க்கும் நிலை வந்தது யாரால்?
தேவைகளைப்பெருக்கி மனிதநேயம் மறந்து
பணம் ஒன்றே பெரிதென ஆசையை வளர்த்து
போட்டி போட உந்தும் மன்ப்பாங்கை ஊட்டிய
கொள்கை அற்ற பண்பற்ற முந்திய தலைமுறையே
கவிதை இன்பம்
அச்சில் ஏறுவதுதான் கவிதையா? அல்ல
உள்ள்த்தில் ஊறும் எண்ணங்களை எல்லாம்
மொழியால் வடிப்பதே கவிதை; அதன் பரிசு
கவிதை உள்ளத்தின் இன்பம் ஒன்றே.
சொற்கள் அச்சில் ஏறினால் பெருமையே
ஆயின் சொற்களை வடிக்கும் இன்பம் அந்தப்
பெருமையைக்காட்டிலும் பெரிதன்றோ
மதலையின் பெருமை தாய்க்கன்றி பிறர்க்கோ?
©2006
©2006