மாலைப் பொழுதினிலே

மாலைப் பொழுதினிலே ஒருநாள் ,

மலர்ப் பொழிலினிலே

கோலக் கிளிகளுடன் குயில்கள்

கொஞ்சிடும் வேளையிலே

மாலைக் குலவும் மகள் மருகன்

, மாமதி போல் முகத்தான்

வேலொன்று கையிலேந்தி என்னையே

விழுங்குவான் போல் விழித்தான். ( செஞ்சுருட்டி)

------------------------------------------------------------------------------------------------------

நீலத் திரைக்கடல் போல் என்நெஞ்சம்

நிமிர்ந்து பொங்கிடவும்

நான் அப்புறம் நோக்கி நாணி நான்

யாரிங்கு வந்ததென்றேன்

ஆலிலை மேல் துயின்று புவனம்

அனைத்துமே அளிக்கும்

மாலின் மருமகன் யான் எனையே

வேலன் முருகன் என்பார். (பெஹாக் )

----------------------------------------------------------------------------------------------------

சந்திரன் வெண்புறும் உன் முகத்தில் ,

சஞ்சலம் தோன்றுவதேன் ?

சொந்தம் இல்லாதவளோ ? புதிதாய்

தொடர்ந்திடும் உறவோ?

முந்தைப் பிறவிகளில் உன்னை நான் ,

முறையினில் மணந்தேன்!

எந்தன் உயிரல்லவோ கண்மணி

ஏன் இந்த ஜாலம் என்றான்! (ஸிந்துபைரவி )

-------------------------------------------------------------------------------------------------

உள்ளம் உருகிடினும் உவகை

ஊற்றுப் பெருகிடினும்

கள்ளத் தனமாகக் கண்களில்

கனல் எழ விழித்தேன்.

புள்ளி மயில் வீரன் மோகனப்

புன்னகை தான் புரிந்தான்.

துள்ளி அருகில் வந்தான் ,என்கரம்

மெல்லத் தொடவும் செய்தான் ( மோஹனம் .)

----------------------------------------------------------------------------------------------------

பெண்மதிப் பேதமையால் அவன் கை

பற்றிடவும் துணிந்தேன்

கண் விழித்தே எழுந்தேன் துயரக்

கடலிலே விழுந்தேன்

வண்ண மயிலேறும் பெருமான்

வஞ்சனை ஏனோ செய்தான்

கண்கள் உறங்காவோ அத்துணைக்

கனவைக் கண்டிடேனோ! (நாதநாமக்ரியா )

****************************************************************************************