தமிழக அரசானது பள்ளிக்கல்வித்துறை கீழ் பார்வையற்றவர்களும் கல்வி கற்க வேண்டும், இவர்களுக்கு வழங்கப்படும் கல்வியானது இவர்களின் வருங்கால வாழ்கை சிக்கல்களை சமாளிப்பதற்கு ஏற்றாற்போல் சிறப்பான முறையில் அமைய வேண்டும் என்பதற்க்காக, புதுக்கோட்டை மாவட்டத்தில் பார்வையற்றோர்க்கு தனிப்பிரிவாக ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பு வரை சிறப்பு பள்ளி தமிழக அரசால் 1975 - 1976 ஆம் கல்வி ஆண்டில் தொடங்கப்பட்டது.
பார்வையற்றோருக்கான சிறப்பு பள்ளியானது அந்த காலகட்டத்தில் வாடகை கட்டிடத்தில் தொடங்கப்பட்டதால், நிலையான தன்மை இல்லாமல் இடம் விட்டு இடம் மாறிக்கொண்டே பார்வையற்றோருக்கான சிறப்பு பள்ளி செயல்பட்டு வந்தது.
வாடகை கட்டிடத்தில் செயல்பட்டு வந்த பார்வையற்றோருக்கான தொடக்கப்பள்ளிக்கு புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் மூலம் சொந்த இடம்பெறப்பட்டு, 02.09.2014 அன்று தமிழக அரசு தன் அரசாணை எண் 54 மாற்றுத்திறனாளிகள் நலத்துறை மூலமாக, பார்வையற்றோர்க்கான பள்ளிக்கு ஒதுக்கப்பட்ட சொந்த இடத்தில் தொண்ணுறு லட்சம் ரூபாய் செலவில் கட்டிடம் கட்டுவதற்கு அதிகாரப்பூர்வமாக அறிவித்தது, சொந்த கட்டிடம் கட்டி முடிக்கப்பட்டது.
16.05.2017 அன்று, தமிழக அரசு தன் அரசாணை எண் 18 மாற்றுத்திறனாளிகள் நலத்துறை மூலமாக தொடக்கப்பள்ளியாக செயல்பட்டு வந்த புதுக்கோட்டை பார்வையற்றோருக்கான சிறப்புப்பள்ளியானது, இப்பள்ளியில் பணிபுரியும் தொடக்கப்பள்ளி அளவிலான பணியாளர்களைக் கொண்டு நடுநிலைப் பள்ளியாக தரம் உயர்த்தப்பட்டு நடுநிலைப் பள்ளியாக செயல்படும் என்று அதிகாரப்பூர்வமாக அறிவித்தது. 2017 - 20218 ஆம் கல்வி ஆண்டில் பார்வையற்றோருக்கான சிறப்புப்பள்ளியானது தரம் உயர்த்தப்பட்டு நடுநிலைப் பள்ளியாக செயல்பட்டு வருகிறது.
பார்வைத்திறன் குறையுடையோருக்கான அரசு நடுநிலைப்பள்ளியில் 40 சதவீதம் முதல் 100 சதவீதம் வரை பார்வை குறைபாடு உடைய பள்ளிப்பருவ மாணவர்கள் இலவசமாக விடுதியில் தங்கி கல்வி கற்கலாம்.
நம்பள்ளியில் படித்து இன்று பலர் அரசு துறைகளில் கல்லூரி பேராசிரியர்களாகவும், பள்ளி தலைமை ஆசிரியர்களாகவும், ஆசிரியர்களாகவும், அரசு அலுவலர்களாகவும் இருக்கிறார்கள் மேலும் தனியார் துறைகளிலும் பணிபுரிகிறார்கள் என்பது நம் பள்ளிக்கு பெருமை,
இந்த சிறப்பு பள்ளியில் ஒன்றாம் வகுப்பு முதல் எட்டாம் வகுப்பு வரை உள்ளது. உங்கள் அருகில் உள்ள பார்வையில் குறைபாடு உடைய மாணவர்களை பார்வை குறைபாடு உடையவர்களுக்காகவே செயல்படும் இந்த சிறப்பு பள்ளியில் சேர்க்க உதவி செய்யுங்கள்.